எண்ணத்தின் விளை

புதிதாக அடிக்கப்பட்ட இளம் பச்சை வண்ணத்தில் பளீரிட்ட சுற்றுச் சுவரை தடவிப் பார்த்தார் கன்னய்யா. கையில் ஒட்டவில்லை. இவர் வீட்டுச் சுவரில் அடித்த சுண்ணாம்பெல்லாம், சட்டையில்லாமல் இவர் அமர்ந்தபோது முதுகில் ஒட்டியே கலைந்து போனது. இந்த வீடு சிதம்பரத்தினுடையது. சிதம்பரம், இருபத்தைந்து வருடங்கள் குடும்பத்தோடு பெங்களூரில் ரயில்வே காலனியில் வாழ்ந்தார். ரயில்வேயில் பங்களா பியூனாக சேர்ந்து கேங்க்மேனாக பணி ஓய்வு பெற்றார். ஆண்டு முழுவதும் ஞாயிறைத் தவிர்த்த பிற நாட்களில் காலை ஆறரை மணிக்கு சங்கு ஒலித்தவுடன் பணிமனைக்குள் நுழைந்து மாலை நான்கரை மணிக்கு சங்கு ஒலித்தவுடன்தான் வெளியில் வருவார். வேலை செய்தாலும் செய்யாவிட்டாலும் வேர்வையாக உடலின் சக்தியெல்லாம் வெளியேறிவிட உதிரும் இலை போலத்தான் வீட்டிற்கு வருவார்.

சிதம்பரத்தின் மனைவி செண்பகம்தான் குடும்பச் சக்கரம் சுழல்வதற்கான அச்சாணியாக இருந்தார். இவர்களின் ஒரே மகள் தெய்வானை. மாநிறத்தில், துலக்கிய விளக்குப் போல பார்க்கும் போது மனதிற்குள் ஒரு நிறைவு தோன்றச் செய்யும் தோற்றத்தில் இருந்தாள். வீட்டில் சும்மா இருந்து அம்மாவிடம் வசை வாங்க வேண்டாம் என்பதற்காக எதையாவது படிப்போமென பி.பி.ஏ. படித்தாள்.

பணி ஓய்வு பெற்ற பின்பும் அந்தப் பெரு நகரத்தில் வாழ சிதம்பரத்திற்கு மனதில்லை. பெங்களூர் நகரமே ஒரு பெரிய பணிமனைபோல இவருக்குத் தோன்றியது. பரபரப்பான நகரத்தில், மனதும் உடலும் கொதிகலனிற்குள் இருப்பதுபோல எப்போதும் ஒருவித இறுக்கத்துடன் இருந்தது. மென் காற்றின் சுவாசத்திற்கான ஏக்கம் தாகம்போல மனதில் இருந்துகொண்டே இருந்தது. இதனாலேயே ஊருக்கு வந்தே கடைசி காலத்தை கழிக்க வேண்டுமென முடிவு செய்தார். மகளும் மனைவியும் அவரின் தவிப்பை உணர்ந்ததால் இதற்கு ஒப்புக் கொண்டார்கள். மேலும், அவர்களுக்கும் அந்நகரின் மேல் பெரிய பிடிப்பு ஏதுமில்லை. பாசஞ்சர் வண்டிபோல மிக நிதானமாக இயங்கும் ரயில்வே காலனி வாழ்க்கையிலிருந்து வெளியே பார்க்கும்போது, நகரம் சதாப்தி வண்டிபோல உச்சவேகத்தில் பதட்டத்தோடு ஓடுவதாகத் தோன்றி, சற்று அச்சத்தையும் விலக்கத்தையுமே அளித்தது.

சிறுவயதிலேயே அப்பாவை இழந்த சிதம்பரம், மண்சுவரில் பனையோலையால் வேயப்பட்ட குடிசையில் இருந்துதான் படித்து முடித்தார். ஒன்றுவிட்ட மாமாவின் முயற்சியில் ரயில்வே அதிகாரியின் வீட்டுப் பணியாளராக சேர்ந்தார். அந்த அதிகாரி பெங்களூர் சென்றபோது இவரையும் அழைத்துச் சென்றார். சிதம்பரத்தின் நல்லூழால் இரண்டு வருடங்களில் ரயில்வே பணிமனைக்கு இவரை மாற்றினார். சிலர் ஐந்து வருடங்கள்வரை கூட வீட்டிலேயே அடிமையைப் போல வைத்திருப்பார்கள்.

இப்போது சொந்த ஊருக்கு வந்து அம்மாவிற்குப் பிறகு கரைந்து சிறு மண்மேடாக ஆகியிருந்த இடத்தை சீரமைத்து ஆறுமாதத்தில் வீட்டைக் கட்டி நிம்மதியான வாழ்க்கைக்கு தயாரானார் சிதம்பரம்.

கன்னய்யாவைக் கண்டதும் “வா மச்சான். வந்து உக்காரு” என்று அழைத்தார்.

கண்கள் மிளிர வீட்டை சுற்றி பார்வையை படரவிட்டபடியே அமர்ந்தார் கன்னய்யா.

“என்ன அத்தான் விசயம். நேத்து கம்மாய்க்கிட்ட பாத்தப்ப வீட்டுப்பக்கம் வரச் சொன்னீங்க” .

“ஒரு முக்கியமான விசயம் பேசத்தான் கூப்பிட்டேன்” என்று கூறியபடி வீட்டின் உள்ளே நோக்கி “செண்பகம் … கொஞ்சம் மோர் கொண்டு வா… உங்கண்ணன் வந்திருக்காரு” என்றார்.

உடன் பிறந்தவர் இல்லையாயினும் அண்ணன் முறைதான். சொம்பில் மோரை எடுத்துவந்த செண்பகம் “வாங்கண்ணே.. நல்லாருக்கிங்களா..”என்று கேட்டபடியே சொம்பை நீட்டினாள். வாங்கிக்கொண்ட கன்னய்யா

“அத்தான் நீங்க குடிச்சாச்சா” என்று சிதம்பரத்திடம் கேட்டார்.

“இப்பத்தான் மச்சான் குடிச்சேன். நீங்க குடிங்க” என்று அவர் கூறியவுடன் குடித்து முடித்து சொம்பை செண்பகத்திடம் நீட்டினார். செண்பகம் உள்ளே செல்வதற்காக காத்திருந்த சிதம்பரம் பேச ஆரம்பித்தார்.

“மேலக் காட்டுக் கொல்லையில போர் போட்டாச்சு. இலவசக் கரெண்டு கனெக்சன் அடுத்த வாரம் கொடுத்துருவாங்க. தெக்கூருணிக்கு பின்னால உள்ள நெலத்துல நெல்லுப் போடலாம்னு ராசுக் கோனாரு சொன்னாரு” என்று சொல்லிக் கொண்டிருத்தபோது இதையெல்லாம் எதற்காக தன்னிடம் கூறிக்கொண்டிருக்கிறார் எனப் புரியாதவராக சிரத்தையின்றி கேட்டுக் கொண்டிருந்தார் கன்னய்யா.

இவரின் முகத்தில் தெரிந்த சலிப்பை கண்டதும் புன்னகைத்த சிதம்பரம் “இதையெல்லாம் ஏன் தெரியுமா உங்கிட்ட சொல்றேன்” என்று கூர்ந்து பார்த்தார். தெரியவில்லை என்ற பாவனையுடன் இவர் தலையை ஆட்டினார்.

“எனக்கு இருக்கிறது ஒரே பொண்ணு. அதக் கட்டிக்கிறவனுக்குத்தானே என் சொத்தெல்லாமே. அது ஒம் மூத்த பையனுக்கு சேரலாம்னு நெனக்கிறேன்” என்று முடித்தபோது கன்னய்யா முகம் மலர்ந்தார். மலர்ச்சியை நீடிக்கவிடாமல் வேறொரு எண்ணம் தோன்றியதால் முகம் கூம்பியது.

“என்ன மச்சான், ஒரு நல்ல விசயம் சொல்றேன். மொகத்த உம்முனு வச்சுக்கிட்டிருக்க”

கன்னய்யாவின் வாரிசுகள் இரண்டு பையன்கள் இரண்டு பெண்கள் என மொத்தம் நான்கு. இவரின் மூத்த மகன் ராமனுக்கு தெய்வானையை மணம் முடிக்கலாம் என சிதம்பரம் எண்ணுவதை அறிந்தவுடன் மனம் மகிழ்ச்சியடைந்தது. ஆனால் வயதுக்கு வந்த பெண்ணை வீட்டில் வைத்துக் கொண்டு எப்படி அண்ணனுக்கு திருமணம் செய்வது என்ற எண்ணம் மகிழ்ச்சியை குன்றச் செய்தது. தன்னிடம் இருக்கும் இரண்டு குழி நிலத்தில் விவசாயம் பண்ணியும் எப்போதாவது கிடைக்கும் சில்லறை வேலைகளை வைத்தும்தான் கன்னய்யாவின் குடும்ப வாழ்க்கை நகர முடியாமல் நகர்கிறது. வெளியில் சொல்லிக் கொள்ள முடியாத இந்தச் சொத்தைத்தான் இரண்டு பையன்களுக்கும் பிரித்துக் கொடுக்கவேண்டும்.

“ஆனால் சிதம்பரத்திற்கு இராமனை மாப்பிள்ளை ஆக்கிவிட்டால்… அத்தனை சொத்தும் தன்னுடையதுதான். வருமானம் எல்லாம் தனக்குதான். தெய்வானப் பொண்ணும் ரொம்ப பதவிசுதான். எதுவும் கேட்டுக் கொள்ளாது. தன் ரெண்டு பொண்ணுகளுக்கும் கல்யாணத்த சிறப்பா பண்ணிடலாம். அண்ணன் சொத்திலேருந்து தம்பிக்கும் கொடுக்கலாம். அப்பாக்கிட்ட இருந்து இந்தத் தோளுக்கு மாறி இப்ப வரைக்கும் தோள்லயே கெடந்து அமுக்கிற தரித்தரத்த தூர தூக்கி வீசிடலாம். இதுவரை எவனுக்கிட்டயிருந்தும் கெடைக்காத மரியாத கொஞ்சமாச்சும் கெடைக்கும்” என்ற எண்ணங்கள் கன்னய்யாவின் மனதில் ஓடியது.

“ராமன் அழகான பையன்தான். குணமானவன்னு வேற சொல்றாங்க. சாப்பாட்டுக்கே திண்டாடுறவன் தெய்வானயக் கட்டிக்கிட்டான்னா சந்தோசமா வச்சுக்குவான். சொத்தோட வந்த பொண்ணுகூட எவனாச்சும் சண்ட போடுவானாயென்ன. எனக்கும் வயசாயிடுச்சு. வெவசாய வேலைகளை பாக்கத் தெரிஞ்சவனா இருந்தாத்தான் வேலைக்கு வர்றவனுக ஏமாத்தாம இருப்பானுங்க. வயசான காலத்தில கூட இருந்து கவனிச்சுப்பான். ஆனா வந்தவுடனே சொல்லிடனும், அந்தக் குடும்பத்தோட எந்த ஒறவும் இருக்கக்கூடாதுன்னு” என்று சிதம்பரத்தின் மனதில் எண்ணம் ஓடியது.

தங்கள் எண்ணங்களில் மூழ்கியிருந்தவர்கள் எதிரிலிருந்தவரின் மனவோட்டத்தைப் பற்றி எண்ணவில்லை. சிதம்பரம்தான் கன்னய்யாவை எண்ணங்களிலிருந்து வெளியே இழுத்து”என்ன மச்சான்… கேட்டதுக்கு பதிலே காணோம்” என்று கேட்டார்.

“அத்தான் சொல்ற விசயம் சந்தோசமானதுதான். இருந்தாலும் வீட்லயும் ஒரு வார்த்த கேட்டுட்டு சொல்லலாம்னு நெனக்கிறேன்”

“அதுக்கென்ன மச்சான். நல்லா கேட்டுட்டே சொல்லுங்க. தங்கச்சியென்ன மாட்டேன்னா சொல்லப் போகுது” என்றபடி எழுந்த சிதம்பரம் கன்னய்யாவின் தோளில் செல்லமாக தட்டினார். புன்னகையுடனேயே எழுந்த கன்னய்யா உள்பக்கம் பார்த்து செண்பகத்தை காணாமல் “வரேன் அத்தான். தங்கச்சிகிட்டயும் சொல்லிடுங்க” என்று கூறியபடி கிளம்பினார்.


செங்கல் சுவரின்மேல் பனைமரச் சட்டங்களை பொருத்தி அதன் மேல் நாட்டு ஓடு வேய்ந்த தன் வீட்டினுள் சற்று குனிந்து நுழைந்தார் கன்னய்யா. எவ்வளவுதான் கவனமாக இருந்தாலும் மாதத்திற்கு ஒருமுறையாவது வாசப்படியில் நெற்றியை இடித்துக்கொள்வார். நிமிர்ந்து வீட்டைச் சுற்றிப் பார்த்தார். பனங்கைகள் கறுத்து ஒட்டடை படிய கிடந்தன. ஓடுகள் போட்டபோது இருந்த சிவப்பு நிறம் கருப்பு நிறத்திற்குள் காணாமல் போயிருந்தது. சுவர்களுக்கு சுண்ணாம்பு அடித்து பல வருடங்கள் ஆகிவிட்டதால் அங்கங்கே உதிர்ந்து பள்ளமாக தெரிந்தது. கடைசியாக, வாத்தியார் அவர் மகளின் கல்யாணத்திற்காக அவர் வீட்டுக்கு அடித்ததில் மிஞ்சியது என்று கொடுத்ததை இவரும் இவர் மனைவி வேலாயியும் சேர்ந்து அடித்ததுதான். வாத்தியார் மகளுக்கு இப்போது மூன்றாவது வகுப்பில் படிக்கும் பையன் இருக்கிறான்.

விறகடுப்பில் புகைக்கு நடுவே சமைத்துக் கொண்டிருந்த வேலாயி வீட்டை புதிதாகப் பார்க்கும் கணவரை வினோதமாகப் பார்த்தாள். “என்னாச்சு… புதுப் பொண்டாட்டியப் பாக்குற மாதிரி வீட்ட வெறிச்சுப் பாக்குறீங்க”

“ஒன்னுமில்லடி.. இந்த சிதம்பரத்தான் வீட்டுக்குப் போயிட்டு வந்தேன். அந்த வீடு எவ்வளவு பளபளன்னு இருக்குது தெரியுமா. அந்த வீட்டப் பாத்துட்டு இங்க வந்து பாத்தா இதுலயா கிடக்குறோம்னு ஆத்தாமையா வருது. ம்ம்ஹூம்” என்று பெருமூச்சுடன் வேலாயிக்கு அருகிலேயே தூணில் சாய்ந்து அமர்ந்தார்.

உள்ளறையில் பெண்களின் பேச்சுகளோடு ஆணின் குரலும் கேட்டது.

“ராமு குரல் மாதிரியிருக்கு. எப்ப வந்தான்” என்று ஆச்சர்யத்துடன் கேட்டார்.

கன்னய்யாவின் மூத்த மகன் உள்ளூர் பள்ளியில் பத்தாவதுவரை படித்துவிட்டு திருச்சியில் உணவகத்தில் வேலை பார்க்கிறான். கிராமங்களிலிருந்து வேலைதேடி நகரங்களுக்கு செல்லும் ஆண்களில் பெரும்பாலானவர்கள் உணவகங்களை நாடிச் செல்வதற்கு முதன்மையான காரணம் வயிறாற உணவு கிடைப்பதுதான். மிஞ்சுவதுதான் கிடைக்கும். அதுவும் நேரம் கழித்துதான் கிடைக்கும் என்றாலும் சரிதான். கிராமத்து மக்களுக்கு உணவுதான் முதலில். சம்பளம் எல்லாம் அதற்குமேல் கூடுதலாக கிடைப்பதுதான்.

“இப்பதான் வந்தான். அவனுக்காகத்தான் கருவாடு பொறிக்கப் போறேன்” என்று கூறிவிட்டு சத்தமாக பெயர் சொல்லி ராமனை அழைத்தார் வேலாயி.

அறையிலிருந்து வெளிவந்த ராமன் தன் அப்பாவைப் பார்த்தவுடன் முகம் மலர “அப்பா” என்று அழைத்தபடி கன்னய்யாவை நெருங்கி வந்தான்.

“என்னப்பா ரொம்ப எளச்ச மாதிரி இருக்கீங்க… ஒடம்பப் பாத்துக்கங்கப்பா” என்றபடி அருகில் அமர்ந்தான்.

சின்னப் பிள்ளைகளாகவே நினைவிலிருக்கும் பிள்ளைகள் கல்யாணப் பேச்சு வரும் போதுதான் விழித்து கூர்ந்து பார்த்தால் பெரியவர்களாக வளர்ந்து நிற்பது தெரியும். தன்னைவிட உயரமாக, திடகாத்திரமாக, புன்னகை தங்கியுள்ள முகத்துடனிருக்கும் ராமனின் கரங்களைப் பற்றிக் கொண்டார் கன்னய்யா. உணவகங்களில் பணியாற்றுபவர்களுக்கு அதிலும் முக்கியமாக, பரிமாறுபவர்களின் முகத்தில் புன்னகை நிரந்தரமாக இருக்கும். தினமும் பயிற்சியாக புன்னகைக்க சொல்லிக் கொடுக்கப்படுவது, கொஞ்ச நாட்களில் வாடிக்கையாளர் வரும்போது இயல்பாக எழுந்து, ஒருகட்டத்தில் ஒரு அடையாளம்போல அப்படியே தங்கிவிடும். மகனைப் பற்றிய ஒரு பெருமிதம் கன்னய்யாவின் மனதை நிறைவுடன் விம்மச் செய்தது.

“ஒரு முக்கியமான முடிவு எடுக்கனும். சரியான நேரத்துலதான் நீயும் வந்திருக்க”

“எங்க ஓனரு குடும்பத்தோட பத்து நாளைக்கு வட இந்தியாவ சுத்திப்பாக்கப் போறாரு. அதான் கடையை பன்னென்டு நாளுக்கு லீவு விட்டிருக்காரு” என்ற ராமன் தந்தையை நிமிர்ந்து பார்த்தான்.

“நம்ம சிதம்பரம் மாமா என்னயக் கூப்பிட்டிராருன்னு அவங்க வீட்டுக்குப் போனேன். அவரு தன் பொண்ணு தெய்வானைய ஒனக்கு கொடுக்கலாம்னு சொல்றாரு”

இராமன் முகத்தில் மகிழ்ச்சியை எதிர்பார்த்தார் கன்னய்யா. ஆனால் அதில் அதிர்ச்சி தெரிந்தது. வேலாயியும் மகிழ்ச்சி வெளிப்பட்ட முகத்துடன் மகன் முகத்தை நோக்கினார்.

“ஏண்டா தம்பி முகம் இப்படி மாறிப்போச்சு” வேலாயிதான் முதலில் கேட்டாள்.

“இல்லம்மா. முன்ன ஒருதரம் அப்பா சொன்னாங்களே… கனகா அத்தையோட பொண்ணத்தான் எடுக்கனும்னு”

கனகா கன்னய்யாவின் ஒன்றுவிட்ட தங்கை. இரண்டாண்டுகளுக்கு முன் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு வந்திருந்தபோது சூட்டிகையான அவள் மகளைப் பார்த்து இவளையே மூத்தவனுக்கு எடுத்துக்கிடலாம் எனக் கூறியிருந்தார். நினைவின் ஆழத்தில் மறைந்து கிடந்ததை நினைவு கூர்ந்தவர் “ஏதோ ஒரு சமயத்துல சும்மா சொன்னதுப்பா அது. அதுக்கென்ன இப்ப” என்று கேட்டார்.

“நீங்க சொன்னதிலேர்ந்து அந்தப் பொண்ணத்தான் கட்டப் போறதா ஒரு எண்ணம். அந்தப் பொண்ணுக்குந்தான். நாலஞ்சு தடவ அவங்க வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற கடைக்குப் போன் பண்ணி அதுகூட பேசியிருக்கேன்”

கன்னய்யா வேலாயி இருவருமே திகைத்தார்கள். சாதாரணமாகச் சொன்னதை இந்தப் பிள்ளைகள் பிடித்துக் கொண்டனவே… என்ன சொல்லி சரி செய்வது” என்று இருவர் மனதிலுமே எண்ணம் ஓடியது. கனகாவை வேலாயிக்கு ஏனோ பிடிப்பதில்லை. அதுகூடப் பரவாயில்லை. வசதியில் இந்த வீட்டைப்போலத்தான், வரவையும் செலவையும் நேர் செய்வதிலேயே வாழ்க்கை கழியும்.

“தம்பி, சும்மா பேசிக்கிட்டீங்க அவ்ளோதானே… எத்தனையோ பொண்ணுககிட்ட பேசறதான” என வேலாயி ஆரம்பித்தாள்.

“என்னம்மா என்னப்பத்தி தெரிஞ்ச நீயே இப்படிப் பேசற. எந்தப் பொண்ணுக்கிட்டயும் நான் பேசறதில்லமா”

“அதுக்கில்லடா ராமா. தெய்வானைய கட்டிக்கிட்டா சிதம்பரம் மாமாகிட்ட இருக்கிற வசதியெல்லாம் ஒனக்குதான்டா. ஒனக்குங்கிறது இந்தக் குடும்பத்துக்குதானே. நம்ம வீட்லயும் ரெண்டு பொண்ணுங்க இருக்குதுக. அதுகள நல்ல எடத்துல கட்டிக் கொடுக்காட்டி நாம நிம்மதியா கஞ்சி குடிக்க முடியுமா” சொல்லிக் கொண்டிருந்த அப்பாவை நிமிர்ந்து பார்க்காமல் அவர் கூறியதை கேட்டுக் கொண்டிருந்தான் ராமன்.

“தெய்வானய கட்னா சிதம்பரம் மாமா உதவியோட ஒன் தங்கச்சிகளுக்கு வசதியான மாப்பிள்ளையா பாத்திடலாம். ஆனா, கனகா பொண்ணக் கட்டினா நம்ம நெலம இப்படியேதான் இருக்கும். எவனாவது பொண்ண கேட்டு வருவானான்னு நாம ஒருத்தர் மூஞ்சிய ஒருத்தர் பாத்துக்கிட்டு ஏங்கிக் கெடக்கனும். ஒருவேளை எவனும் வரலைனா கீழ வீட்டு குப்பன் பொண்ணு மாதிரி முப்பது வயசானாலும் கன்னியாத்தான் திரியனும்”

ஒரு கணம் ராமன் கற்பனையில் தன் தங்கைகளை அந்த விட்டேத்தியான முதியகோலத்தில் கண்டு உடல் பதறினான்.

“ஏப்பா இப்படியெல்லாம் பேசறீங்க”

“வேறென்னப்பா பண்றது. இது நானே எதிர்பாக்கல. அவரா வந்து கல்யாணம் பண்ணலாமான்னு கேக்கறாரு. வேண்டாம்னு சொன்னா வர்ற லட்சுமி மூஞ்சிலபட கதவ மூடற மாதிரியில்ல”

“இல்லப்பா… அந்தப் பொண்ணு பாவமில்லையா”

“இதுல என்னப்பா இருக்கு. எத்தனையோ கல்யாணம் தாலி கட்டப்போறப்ப நின்னதில்லையா. முறைப்படி எதுவும் நாம பேசிக்கலையே. பண்ணலாம்னு நெனச்சம் அவ்ளோதானே”

இந்த வார்த்தைகளை எதிர்பார்த்துதான் ராமன் தன் அப்பாவிடம் கேட்டான். கடந்தமுறை ஊருக்கு வந்தபோது கடந்து சென்ற தெய்வானையைப் பார்த்தான். கிராமங்களில் தூசியும் அழுக்குமாய் நிற்கும் செடிகள் போலிருக்கும் இவ்வூர் பெண்களைப் போலல்லாமல் பெருநகரத்து வீடுகளுக்குள் தினமும் நீரூற்றி பராமரிக்கப்பட்டு பசபசவென மதர்ப்பாக நிற்கும் செடியைப்போல இருந்தாள். இவள் போல பெண் கிடைத்தால் அதுவல்லவோ சொர்க்கம் என்ற எண்ணத்துடனேயே தனக்கு வாய்த்தது கனகா அத்தை பெத்ததுதான் என்ற எதார்த்தம் உறைக்க தலையை குனிந்தபடி கடந்தான். இப்போது கூடவே சிதம்பரத்தின் சொத்தும் வருகிறது என்று கூறியவுடன் இதை ஏற்றுக் கொள்ள முடிவு செய்துவிட்டான். ஆனால் தன் மனச்சாட்சியோ, அந்தப் பெண்ணோ கேட்டால் சொல்வதற்கு பதில் வேண்டுமென்பதற்காகத்தான் இவ்வளவு நேரம் காத்திருந்தான்.

“சரிப்பா, எப்ப பண்ணலாம்னு மாமா சொன்னாரு” எனக் கேட்டவனை ஆச்சர்யத்துடன் நோக்கினார்கள் வேலாயியும் கன்னய்யாவும்.

“குறிப்பா எப்பன்னு சொல்லலை. நான் வீட்ல கேட்டுட்டு சொல்றேன்னு சொல்லீருக்கேன்”

இவ்வளவு நேரம் அறை வாசலில் நின்று இவர்கள் பேசுவதை வெறுமே பார்த்துக்கொண்டிருந்த ராமனின் தங்கைகள் சுதா, ராணி இருவரின் முகத்திலுமே மகிழ்ச்சி பரவியிருந்தது.

“ஏங்க அவசரப் படாதீங்க. மொதல்ல பொண்ணு கல்யாணத்த முடிப்போம். அப்பறம் பையன் கல்யாணத்த பண்ணுவோம்” என்றார் வேலாயி.

வேலாயியின் வார்த்தைகளைக் கேட்டதும் சுதாவின் முகத்தில் ஒருவித பதட்டம் படர்ந்ததை ராணி கவனித்தாள்.

“ஏண்டி இப்படி சொல்ற”

“பையன் கல்யாணத்துக்கு நம்மகிட்ட இருக்கிறதெல்லாம் செலவு பண்ணீட்டா ரெண்டு வருசத்துக்கெடயே பொண்ணு கல்யாணத்தப் பத்தி நெனக்க முடியாது. ஒடனேயும் சம்மந்தி வீட்ல கேக்க முடியாது. பையன் கல்யாணம் பண்ணனும்னா நம்ம பொண்ணு கல்யாணத்தை முடிக்கனும்னு அவர்கிட்ட சொன்னா அவரு கொடுத்துதானே ஆகனும். நாமளும் நிம்மதியா பையன் கல்யாணத்தப் பண்ணலாம்ல” என்று நிறுத்தினார் வேலாயி.

வேலாயியிடமிருந்து இந்த யோசனையை எதிர்பார்க்காத அப்பாவும் மகனும் ஆச்சர்யத்தோடு பார்த்து

“எப்படிம்மா இப்படி”

“எங்கேடி வச்சிருந்த இந்த அறிவ” என்றும் ஒரே நேரத்தில் கூறினார்கள்.

ஒருவித பெருமிதம் அவர் முகத்தில் தோன்றினாலும் “என்னப் பாராட்டுனது போதும். மொதல்ல போயி ராசப்பாக்கிட்ட பேசுங்க” என்றார்.

இப்போது சுதாவின் முகம் வெக்கத்தில் சுருங்கி தலை குனிவதை புன்னகையுடன் பார்த்த ராணி அவளின் இடுப்பில் கைவைத்து அணைத்துக் கொண்டாள். அக்காளுக்கும் தங்கைக்கும் இரண்டு வயது வித்தியாசம் இருந்தாலும் ஒருவர் மனதை மற்றவர் உணர்ந்த தோழிகளாகவே இருந்தனர். சுதாவின் விழிகளில் இருந்து விழப்போன நீரை கையால் துடைத்தாள் ராணி.

இவர்களைக் கவனிக்காமல் ஆண்கள் இருவரும் வேலாயியை திகைப்புடன் பார்த்தார்கள். “ராசப்பாக்கிட்ட என்ன பேசணும்” இருவரின் கேள்வியை கன்னய்யாவே கேட்டார்.

ஒருகணம் ஓரக்கண்ணால் சுதாவைத் தொட்டு விலக்கிய பார்வையுடன் “நம்ம பொண்ண எப்பக் கட்டிக்கப்போறாருன்னுதான்”

“என்னம்மா சொல்ற”

“அதான் சொல்றேன்ல. போங்க போயி பேசி எவ்வளவு சீக்கிரம் முடிக்க முடியும்னு கேட்டுட்டு வாங்க”

அவரின் உறுதியான பேச்சால் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் திரும்பி சுதாவைப் பார்த்தார்கள். உற்சாகத்தில் குதிக்க முயன்ற உடலை கட்டுப்படுத்திக் கொண்டு தலையை குனிந்து நின்றாள். உள்ளத்தின் அந்தத் துடிப்பு உடலெங்கும் தெரிந்தது. இருவருக்கும் விவரம் புரிந்தது. கூடவே இதுவரை தெரியவில்லையே என்ற என்ற தாழ்வுணர்ச்சியும் தோன்றியது.


தன் முன்னால் நீண்டு விழுந்த தன் நிழலை மிதித்தபடியே கீழத் தெருவில் இருக்கும் ராசப்பாவின் வீட்டுக்கு வந்தார் கன்னய்யா. இவர் வீட்டைவிட நீளம் குறைவாக இருந்த வீட்டின் முன் பக்கம் ஒரு செவலைப் பசுவும் பால் குடிக்கும் கன்றும் தனித்தனியாக கட்டப்பட்டிருந்தது. அடுத்த பக்கம் மலர்ந்த பூக்களையும் இளங் காய்களையும் தாங்கியபடி ஒரு பேரன்னயைப்போல ஒரு முருங்கை மரம் நின்றது.

திறந்திருந்த வீட்டிற்குள் கன்னய்யா நுழைந்தார். மாலைச் சூரிய ஒளி வீட்டிற்குள் வெளிச்சத்தைப் பரப்பியிருந்தது.

“ஆத்தா…” என்று அழைத்தபடி தாழ்வாரத்தில் அமர்ந்தார். வலது பக்கச் சுவரில் மாட்டியிருந்த ராசப்பாவின் அப்பா கந்தனின் படத்திற்கு போட்டிருந்த மாலையில் பூ பெரும்பாலும் உதிர்ந்து வெறும் நார் மட்டுமாக தெரிந்தது.

குரல் கேட்டு அடுப்படியிலிருந்து வெளியே வந்த ராசப்பாவின் அம்மா சிவப்பி, அமர்ந்திருத்தவரை உற்றுப்பார்த்து, அடையாளம் புரிந்தவுடன் “தம்பீ… வாப்பா. காப்பி குடிக்கிறியா… இந்தா வர்றேன்” என்றபடி மீண்டும் அடுப்படிக்குள் நுழைந்து எவர்சில்வர் தம்ளரில் வரக்காப்பியுடன் வந்து இவரிடம் நீட்டினார்.

“கங்கா வந்துதான் பால் பீச்சுவா. அதுவரைக்கும் காப்பி குடிக்காம இருக்க முடியாது. அதுக்காகத்தான் வரக்காப்பி போட்டுக்கிட்டிருந்தேன். நீயும் சரியான நேரத்துலதான் வந்திருக்க” என்றபடி அருகில் அமர்ந்தார்.

கருப்புநிறக் காப்பியை குடித்தவாறே “ஆச்சி நீங்க வெளிய அதிகமா வர்றதில்லையா… பாத்தே பல நாளாயிடுச்சே” என்று கன்னய்யா கேட்டார்.

“ஒடம்புக்கு ஒண்ணும் முடியல. ஒங்கத்தான் எப்ப படுக்கையில விழுந்தாரோ அப்பவே நானும் வீட்டுக்குள்ளேயே முடங்க வேண்டியதாயிடுச்சு. போனவரு சும்மா போகாம எல்லாத்தயும் வழிச்சுக்கிட்டுல்ல போயிட்டாரு” ஆற்றாமையும் கோபமும் கலந்த வார்த்தைகளாக கூறினார்.

“மூத்த பொண்ணு நல்லாயிருக்குதா”

“அவளுக்க்ன்ன நல்லாத்தான் இருக்கா. அவளுக்கும் அவங்கப்பாவுக்கும் வாங்கின கடன்தான் இந்தக் குடும்பத்தப் போட்டு அழுத்துது. அப்படித்தான் நடக்கனும்னு இருந்தா நம்மால தடுக்கவா முடியும். சரி.. அவ மட்டுமாவது நல்லா இருக்காளேங்கிற சந்தோசந்தான் மிச்சம்”

“தம்பியும் கங்காவும் எங்க ஆச்சி”

“குப்பக்குழியில இருந்த குப்பய வண்டியில அள்ளிக்கிட்டு போனாங்க. பல தடவ கேட்டப்பொறகு மேலவீட்டுக்காரன் இன்னக்கிதான் வண்டியக் கொடுத்தான். வயல்ல கொட்டி, நெறவிட்டு வருவாங்க. மதியமே போனாங்க. இப்ப வந்திருவாங்க” என்று அவர் முடிக்கும் முன்னே வாசலில் பசுவின் “ம்மாஆ…” சத்தம் கேட்டது. அதைக் கேட்டவுடன் “வந்துட்டாங்க போல. கங்காவப் பாத்தாதான் பசு இப்படிக் கத்தும்” என்றார்.

கங்கா முன்னால் வர பின்னால் ராசப்பா வந்தான். இடுப்பில் லுங்கி கட்டியிருந்தான். தோளில் சாம்பல் நிறமாக மாறிய வெள்ளைத் துண்டை போட்டிருந்தான். கழுத்தில் தாயத்து மாட்டிய கறுப்புக் கயிறு தொங்கியது. கறுப்பு உடம்பில் வியர்வை துளிர்த்து ஒருவித மினுமினுப்பாக தெரிந்தது.

உள்ளே அமர்ந்திருந்த கன்னய்யாவைப் பார்த்ததும் ஒரு கணம் திகைத்து அடுத்த கணமே “வாங்க மாமா” என்று புன்னகையுடன் சொன்னார்கள். “பேசிக்கிட்டுருங்க இந்தா பாலப் பீச்சிக்கிட்டு வந்திடுறேன்” என்று உள்ளே சென்றவள், பசுவின் காலைக் கட்டுவதற்கான சிறிய கயிறையும் எண்ணெய் கிண்ணத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே சென்றாள்.

“நீங்களும் ஒக்காருங்க மாப்ள” என்று கன்னய்யா கூறிய போதும் ராசப்பா அமராமல் நின்றான். அவரின் கண்கள் இவனைத் துளைத்து விடுவதைப்போல பார்த்தது, இவன் உடலில் சிறிய கூச்சத்தை ஏற்படுத்தியது.

“பரவாயில்ல ஒக்காருங்க” என்று சொன்னதும் கொஞ்சம் இடைவெளிவிட்டு தள்ளி அமர்ந்தான்.

அம்மா பிள்ளை இருவரையும் ஒருமுறை நோக்கிவிட்டு “ஒரு முக்கியமான விசயம் பேசறதுக்காக வந்தேன்…”என்று ஆரம்பித்து சிதம்பரத்தின் விருப்பத்தையும் அதைக் கேட்டு வேலாயி செய்த முடிவையும் சுருக்கமாகக் கூறினார்.

இருவரின் முகமும் இறுக்கமானதாகவே இருந்தன. தான் சரியாக சொல்லவில்லையோ என்ற சந்தேகம் கன்னய்யாவிற்கு தோன்றியது. எனவே “நான் சொன்னது உங்களுக்கு புரியலைன்னு நெனக்கிறேன்..” என்று சொல்லத் தொடங்கியவரை கையைக் காட்டித் தடுத்த ராசப்பா “மாமா, நீங்க சொல்றது எங்களுக்குப் புரியுது… ஆனா எங்க நெலமதான் ஒங்களுக்குப் புரியல” என்றான்.

“செலவப் பத்தி நெனக்காதிங்க மாப்ள. அத நாங்க பாத்துக்குறோம். அதோட, சுதாவ உங்களுக்குப் பிடிக்கும்தானே”

“என்மேல பிரியமாயிருக்கிற சுதாவ கட்டிக்கிறதுல எனக்கு சந்தோசந்தான். இன்னொன்ன நீங்க கவனிக்கல”

கன்னய்யா குழப்பத்துடன் நிமிர்ந்து அவனைப் பார்த்தார்.

“அத்தை சொன்னது தங்கச்சிய வச்சிக்கிட்டு அண்ணனுக்கு பண்ணக்கூடாதுன்னு..” அவன் எதை நோக்கிப் போகிறான் என்று புரிந்ததும் இதை யோசிக்கவில்லையே என தன்னையே நொந்து கொண்டார்.

“…அக்கா கங்காவ வச்சுக்கிட்டு நானெப்படி மாமா கல்யாணம் பண்ணிக்க முடியும்” என்று முடித்தான்.

“தம்பி, மொதல்ல கங்காவுக்கு ஏதாவது ஒரு மாப்பிள்ள பாருப்பா… வெளியாளா இருந்தாலும் பரவாயில்ல. கங்காவுக்கு முடிச்சிட்டு இவனுக்குப் பண்ணினாத்தானே எல்லாருக்குமே நிம்மதியா இருக்கும்” என்றார் சிவப்பி.

இவர்கள் பேசிக்கொண்டிருந்ததை கேட்ட படியே கறந்துவந்த பாலில் டீ போட்டுக் கொண்டு வந்தாள் கங்கா.

யோசனையுடனேயே வாங்கிக் குடித்தவர் “சரி ஆச்சி சொல்லி வச்சு பாப்பம். நீங்க சொன்னபடியே பண்ணுவோம்” என்று கூறியபடி விடை பெற்றார்.


காணடுகாத்தான் பஞ்சு மில்லுக்கு போகும் சாலை இணையும் கூட்ரோட்டின் முனையிலிருந்த டீக்கடையில் காத்திருந்தார் கன்னய்யா. மாடு, நிலம் மற்றும் வரணுக்கும் தரகு வேலை பார்க்கும் சிகாமணி வரச்சொன்ன நேரத்திற்கு வந்து அரைமணி நேரமாயிற்று. கொஞ்சமாக பொறுமையிழந்து கொண்டிருந்தார்.

டீக்கடை, மூங்கில் கம்புகளை நட்டு தென்னங்கீற்றால் வேயப்பட்டிருந்தது. அமர்ந்து உண்பதற்கு இரண்டு டேபிள் போடப்பட்டிருந்தது. இட்லி, வடை, போண்டாவும் விற்றுக் கொண்டிருந்தார்கள். மில்லுக்கு போகிறவர்கள் சூடான வெங்காயப் போண்டாவை எடுத்துக் கடித்தபடி டீ சொல்லி, வந்தவுடன் உறிஞ்சியபடி தின்று முடிக்கவும் டீ காலியாகவும் சரியாக இருந்தது. மில் பணியாளர்களும் சாலையில் செல்பவர்களும் அருகில் வசிப்பவர்களுமாய் குறைந்தது பத்துப்பேர் கடையில் இருந்து கொண்டேயிருந்தார்கள்.

ராசப்பாவிடமும் சிவப்பி அம்மாவிடமும் கன்னய்யா பேசிவிட்டு வந்து இரண்டு மாதங்களாகிறது. அவர்களிடம் பேசிய மறுநாள் சிதம்பரத்தைப் பார்த்தார். விபரங்களைக் கேட்டவுடன் அவர் முகம் புன்னகை மறைந்து இறுக்கமானது. “தன் மகளின் கல்யாணத்தை செய்வதற்கு இன்னும் இரண்டு கல்யாணங்களை செய்ய வேண்டுமா… மற்ற இரு குடும்பங்களிலும் பணம் ஏதுமில்லை. செலவுகளெல்லாம் தான்தான் செய்யவேண்டும். நல்ல பையன் போலிருக்கிறானே… வீட்டோடு பிடித்துப் போடலாம் என நினைத்தால் இப்படி இழுவையாக இருக்கிறதே” என்று சிதம்பரம் மனதில் எணணங்கள் ஓடின.

“அத்தான் யோசிப்பதைப் பார்த்தால் பின்வாங்கிடுவார் போலிருக்கே. கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விடுமோ” என்று பரிதவித்தார் கன்னய்யா.

“ஏன் மச்சான் நீங்க எவ்வளவு வச்சிருக்கீங்க உங்க பொண்ண கல்யாணம் பண்றதுக்கு”

“எங்கே அத்தான் இருக்குது. அதைப் பத்தி நாங்க எதுவுமே யோசிக்கலையே. நீங்க சொன்னதுக்கு அப்புறம்தானே இந்த யோசனையெல்லாம் வருது”

சிறிது நேரம் யோசனையில் ஆழ்ந்த சிதம்பரம்

“சரி நான் ஒரு முடிவுக்கு வந்திருக்கேன். எம் பொண்ணுக்கு முப்பது பவுன் போடறதா இருந்தேன். அதிலேர்ந்து அஞ்சு பவுன ஒங்க பொண்ணுக்கு போட்டுடுடலாம். இன்னொரு பொண்ணு அது பேரென்ன…”

“கங்கா… கங்கா அத்தான்”

“ஆங் .. அந்தப் பொண்ணுக்கு ஒரு பவுன்ல தாலி மட்டும் செஞ்சிடுவோம்.. என்ன சொல்றீங்க. அதுக்கு மேல என்னால எதுவும் முடியாது. சரி வர்லைனா முதல்ல ஒங்கிட்ட சொன்ன என் முடிவ மறு பரிசீலன பண்ணவேண்டியிருக்கும்”

சிதம்பரம் உறுதியான குரலில் கூறினார்.

மற்ற இரண்டு கல்யாணங்கள் நடப்பதற்காக செய்யப்படும் கல்யாணம்தானே. சிறப்பாக என்றல்ல, எப்படியாவது செய்தாகவேண்டும் என மறு நாளிலிருந்து சுற்றியிருந்த ஊர்களுக்குச் சென்று விசாரிக்க ஆரம்பித்தார் கன்னய்யா. எவ்வளவு தகுதி குறைவான மாப்பிள்ளையானாலும் ஐந்து பவுனுக்குக் குறைந்து ஒப்புக் கொள்ளவில்லை. வேலையே இல்லாமல் சுற்றிக் கொண்டிருப்பவனும் கூட அதற்குக் கீழே ஒப்புக் கொள்வதை கௌரவக் குறைவாகக் கருதினான். தன் இலக்கிற்குள் பையன் கிடைக்காமல் தடுமாறிக் கொண்டிருக்கும் போது சிதம்பரம், “இன்னும் எத்தனை நாட்களாகும்” என்றும், ராமன் திருச்சியிலிருந்து போன் செய்து “என்னப்பா பண்ணிக்கிட்டு இருக்கீங்க” என்றும் கேட்டு மனதை மேலும் வெம்ப வைத்தார்கள். என்ன செய்வதென்று புரியாமல், உள்ளம் ஓய்ந்து நேற்று புதுப்பட்டியில் அமர்ந்திருந்த போதுதான் தரகர் சிகாமணியைப் பார்த்தார். அவர்தான் இவர் எதிர்பார்க்கும் மாப்பிள்ளையை காட்ட முடியுமென இந்த டீக்கடைக்கு வரச் சொன்னார்.

அப்போது, வாரப்படாத சுருட்டை முடியுடன் சிறிய மீசையை முறுக்கி விட்டிருந்த ஒல்லியான ஒருவன் தள்ளாடியபடி வேகமாக வந்தான். “டேய்ய்…” என்று கூறியபடி வந்தவனின் வேகத்தைப் பார்த்தே அங்கு குழுமியிருந்தவர்கள் ஒதுங்கினார்கள். நேராக கல்லா அருகில் சென்று அதன்மேல் கையால் வேகமாகத் தட்டினான். அலுமினிய டிரேயில் போண்டாவை நிரப்பி கல்லாமேல் வைத்திருந்தார்கள். இவன் தட்டிய வேகத்தில் மூன்று போண்டாக்கள் குதித்து தரையில் விழுந்து ஓடின. கல்லாவில் மீசைக்கு டை அடித்து நரைத்ததலையுடன்

அறுபது வயது மதிக்கத்தக்கவராக

இருந்தவர் பதறி “என்ன துரை, என்னாச்சு” என்று வந்தவனின் கையைப் பிடித்துக் கேட்டார்.

“என்ன என்னாச்சு… நொன்னாச்சு… எம் மாமங்கிட்ட என்ன சொன்ன”

“நா ஒண்ணும் சொல்லலையேப்பா”

“ஒண்ணத்தவிர வேறெவனும் சொல்லீருக்க மாட்டான். நீ ஒரு ஆள்தான் அப்பப்ப என் வழில குறுக்க வர்றவன்”

“நா உங்க மாமாவப் பாத்தே ரொம்ப நாளாயிடுச்சுப்பா. நா என்னப்பா சொல்லப்போறேன்”

“அப்ப நீ சொல்லலையா”

“இல்லப்பா… எம் பேத்தி மேல சத்தியமா நாஞ் சொல்லலப்பா”

“இவ்ளோ தூரம் சத்யம் பண்றதால போறேன். ஆனா சொன்னது நீதான்னு தெரிஞ்சா தொலைச்சுருவேன் பாத்துக்க” என்று கையை ஆட்டி ஆட்டி உறுமுவது போல சொல்லியவன் தன் அவிழ்ந்த வேட்டி விழுந்து விடாமல் பிடித்து, இறுக்கியபடி சென்றான்.

நடந்ததை வெறுமே வேடிக்கை பார்த்திருந்த கன்னய்யா தோளில் யாரோ தொடுவதை உணர்ந்து திரும்பினார். சிகாமணி புன்னகைத்தபடி நின்று கொண்டிருந்தார். இவரின் இறுக்கமான முகத்தைப் பார்த்து “கொஞ்சம் தாமதமாயிடுச்சு. அதுவும் நல்லதாப் போச்சு… மாப்பிள்ளைய பத்தி உங்களுக்கு நல்லா தெரிய வாய்ப்புக் கெடச்சிடுச்சே”

கன்னய்யா ஆச்சர்யத்துடன் “மாப்பிள்ளய நான் பார்த்தேனா.. யாருன்னு தெரியலையே”

“இப்ப அவுந்த லுங்கிய விழுந்திடாம புடச்சு கட்டிக்கிட்டுப் போனாரே அவர்தான்”

“என்னங்க சொல்றீங்க… இவருக்கு எப்படி பொண்ணக் கட்ட முடியும். அது பொண்ணோட வாழ்க்கைய சீரழிக்கிறதா ஆகாதா” என்று கோபத்தோடு கேட்டார்.

“சீரழிக்கிற மாதிரிதான். ஆனா நீங்க சொல்ற செலவுல கல்யாணம் பண்ணனும்னா இவருக்குதான் பண்ணமுடியும்”

ஒன்றும் பேசாமல் திகைத்திருந்த கன்னய்யாவைப் பார்த்து “இது மட்டுமில்ல மாப்பிள்ளயப் பத்தி முழுசா சொல்லிடுறேன். அப்பறம் முடிவு பண்ணிக்குங்க” என்று சிகாமணி ஆரம்பித்தபோது, இவரின் முகம் மேலும் திகிலடைந்தது.

“பையன் பேரு துரை. சின்ன வயசுலேயே ஒரு விபத்துல பெத்தவங்க ரெண்டு பேரும் போயிட்டாங்க. தன்னோட தாய் மாமா வீட்லதான் வளந்தாரு. அவரு லாரி டிரைவர். வீட்ல இருந்த அம்மாச்சி போயிச் சேந்தவுடனே பக்கத்தில திரிஞ்ச பயல்களோட சேர்ந்து எல்லாக் கெட்ட பழக்கமும் பழகிகிட்டான். அப்ப இவம் மாமா கல்யாணம் பண்ணிக்கிட்டாரு. அந்தப் பொண்ணும் அழகா இருக்கும். மாமா அடிக்கடி வெளியூருக்கு போயிடுவாரு. அந்த நேரத்துல இவனுக்கும் அந்தப் பொண்ணுக்கும் தொடுப்பாயிடுச்சு”

கண்கொட்டாமல் கேட்டுக் கொண்டிருந்தார் கன்னய்யா.

“அக்கம் பக்கம் லேசா தெரிய ஆரம்பிச்சுடுச்சு. யாராவது மாமாக்கிட்ட சொல்லீருவாங்களோன்னு பயம் வந்திடுச்சு. அதனாலதான் அப்பப்ப இது மாதிரி யாரையாவது மிரட்டுவான். இதுக்குப் பயந்து மாமாவுக்கு விசயம் தெரியாமப் பாத்துக்கலாம்னு இவன் நெனக்கிறான். ஆனா அந்தப் பொண்ணு வேற மாதிரி யோசிக்குது…”

கடைப் பையன் கொண்டுவந்த டீயை கையில் வாங்கி உறிஞ்சினார்.

“இவனுக்கு ஒரு கல்யாணத்தப் பண்ணிட்டா தங்களோட விசயத்தப் பத்தி பெருசா பேச மாட்டங்கன்னு அந்தப் பொண்ணு நெனக்கிது. அதுதான் பொண்ணு பாக்கச் சொன்னுச்சு. எல்லாச் செலவும் அது பாத்துக்கும். நீங்க ஒங்களால என்ன முடியுமோ அதச் செஞ்சா போதும்” என்று கூறிவிட்டு டீயை குடிப்பதை தொடர்ந்தார். இவர்கள் ஓரமாக போட்டிருந்த இருக்கைகளில் அமர்ந்திருந்ததால் யாரும் இவர்களைக் கவனிக்கவில்லை. கன்னய்யா டீக்கான பணத்தைக் கொடுத்துவிட்டு கலந்தாலோசித்த பின் சொல்வதாகக் கூறிவிட்டு கிளம்பினார்.


கன்னய்யா சிதம்பரத்திடம் சென்றார். விபரத்தை முழுவதும் கூறிவிட்டு என்ன செய்யலாம் எனக் கேட்டார். செலவில்லாமல் கல்யாணம் செய்வதற்கு இதைவிட்டால் வேறுவழி இல்லை என்பது இருவருக்குமே உறுதியாகத் தெரிந்தது. ஆனால் ஒரு பெண்ணின் வாழ்க்கை சம்பந்தப்பட்டது. மனிதர்களிடம் எதையாவது கூறி சமாளிக்கலாம், மனச் சாட்சியை சமாளிக்க சரியான விளக்கம் வேண்டுமே… இப்போது இவர்களுக்கு இதுமட்டும்தான் தேவைப்பட்டது. அன்று ராமன் ஊருக்கு வந்திருந்தான். அவனிடம் கேட்டார்கள். அவன் சற்று யோசித்தபின் “எத்தனையோ பெண்கள் திருமணம் ஆகாமலேயே இருக்கிறார்கள். ஆனால், இங்கே மாப்பிள்ளை பாத்து நம்ம செலவுல கல்யாணமும் பண்ணி வைக்கிறோம். இது புண்ணியமில்லையா… புண்ணியந்தான். நீங்க உடனே சிகாமணியப் பாத்து கல்யாணத்துக்கான ஏற்பாடுகளைப் பாருங்க” என்று கூறினான். அவர்கள் மறுபேச்சு பேசாமல் அடுத்து செய்யவேண்டிய வேலைகளை கவனிக்க ஆரம்பித்தார்கள்.

மூன்று திருமணங்களும் நான்கு மாத இடைவெளியில் நடைபெற்றன.


வாசித்துக் கொண்டிருந்த பெரியப்பாவின் நாட்குறிப்பின் அடுத்த பக்கத்தை திருப்பினான் சங்கர். அதில் எதுவும் எழுப்படாமல் வெறுமனே இருந்தது. இவனுக்கு கதை முடியாததுபோல குறையாக இருப்பதாகத் தோன்றியது.

வெளியே நாளிதழை பார்த்துக் கொண்டிருந்த பெரியப்பாவை அணுகினான்.

“பெரியப்பா… இந்தக் கதை சரியா முடியலையே” என்றான.

“எந்தக் கதை”

“மூன்று கல்யாணம் பண்ற கதைதான்”.

“ஆமா, சரியா முடியாததாலதான் டைரியிலேயே இருக்கு. சரியா இருந்திருந்தா புத்தகத்துல இருந்திருக்குமே”

“ஏன் அத முடிக்காம வச்சிருக்கீங்க”

“எழுத தொடங்கறப்ப வேறொன்ன நெனச்சேன். ஆனா போய் சேந்தது இன்னொரு இடம். அதுக்குமேல அத எழுத என்னால முடியல”

“ஏன் பெரியப்பா என்னாச்சு”

அவர் ஒன்றுப் சொல்லாமல் நாற்காலியில் சாய்ந்தமர்ந்து தனக்குள் ஆழ்ந்தார்.

“சொல்லுங்கப்பா” என்ற சங்கருக்கு பதினெட்டு வயது. பனிரெண்டாம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு விடுமுறைக்கு பெரியப்பா தவசிப் பிள்ளை வீட்டிற்கு வந்துள்ளான். அலமாரியில் பழைய நூல்களை தேடியபோது தென்பட்ட டைரியில்தான் அந்தக் கதை இருந்தது.

“அதுக்கப்பறம் பெரிய அழிவு இருந்துச்சு. அத எழுத என்னால முடியல. அதனாலதான் அப்படியே விட்டுட்டேன்”

“உண்மைக் கததானா… அதுக்கப்பறம் என்னாச்சுன்னு என்கிட்ட சொல்லுங்க” சங்கரின் குரலில் ஆர்வம் கொப்பளித்தது.

சற்று தயங்கி தவசிப் பிள்ளை நடந்ததைச் சொல்வதற்கென்ன என முடிவு செய்தவராக நிமிர்ந்து அமர்ந்தார்.

“கல்யாணங்களெல்லாம் முடிஞ்சு ஆறு மாசத்துக்கப்பறம் சிதம்பரமும் செண்பகமும் பென்சன் விசயமா கேக்க பெங்களூருக்குப் போனாங்க. ட்ரெயின்லேர்ந்து எறங்கி பஸ்ல ஏறும்போது எப்படியோ கால் தடுக்கி செண்பகம் கீழே விழுந்திட்டா. பஸ்ஸோட பின் சக்கரம் ஏறி அதே இடத்துல போயிட்டா”

“அய்ய்யோ” என்ற குரல் சங்கரின் வாயிலிருந்து எழுந்தது.

“ராமன் கடையில சாப்பாடு வடிக்கிறப்ப எப்படியோ கை நழுவி சுடு கஞ்சி அவம்மேல கொட்டிடுச்சு… வலதுகால் தோல் உறிஞ்சிடுச்சு. கெந்தி கெந்திதான் நடக்கிறான்”

“ச்ச்ச்சோ பாவம்”

“சுதாவுக்கு ரெண்டு பொண்ணு பொறந்துச்சு. மூத்தது மூள வளர்ச்சியில்லாம ஒடம்பு மட்டும் பெருசா வளந்திருக்கு”

“என்ன பெரியப்பா கொடுமையிது”

“இன்னும் ஒண்ணும் இருக்கு. புள்ளைகளுக்கு இப்படி ஆயிடுச்சுன்னு அதிர்ச்சியான வேலாயிக்கு பக்க வாதம் வந்து படுத்த படுக்கையாத்தான் கெடக்கா. கன்னய்யாதான் எல்லாம் பண்றாரு”

“நீங்க அழிவுன்னு சொன்னவுடனே கங்காவுக்குதான் ஏதோ நடந்திடுச்சுன்னு நெனச்சேன்”

“அவளுக்கென்ன மகராசியா இருக்கா. மாப்பிள்ளயப் பத்தி கேள்விப்பட்டத ஒருத்தர் வந்து சொன்னாரு. இருந்தாலும் பரவாயில்லையினு அவங்க வீட்ல இருந்து செவலப் பசுவயும் கன்னயும் மட்டும் கூட்டிக்கிட்டுப் போறேன்னு கேட்டுக்கிட்டு கூட்டிக்கிட்டுக் போனா. அவளுக்கு ஒரு பொண்ணும் ஒரு பையனும். துரை நல்ல மனுசனா பஞ்சு மில்லுல வேலைக்கு போறான். அவனுக்குத் தேவைப்பட்டது ஒரு பொண்ணோட அரவணைப்புதான் போல. அது கங்காகிட்டருந்து வத்தாம கெடச்ச பின்ன வேற ஒண்ணயும் அவன் தேடல. அவ வாழ்க்கை சந்தோசமா போகுது”

சங்கரின் முகத்தில் மகிழ்ச்சி தோன்றாமல் குழப்பம் தோன்றியது.

“கங்கா வாழ்க்கை மோசமா ஆகியிருந்தா இவங்களுக்கு நடந்தது நியாயம்னு ஏத்துக்கலாம். ஆனா அவங்க சந்தோசமா இருக்கிறப்ப இவங்க இப்படி துயரப்படுறது ஏன்னு புரியலையேப்பா”

“என்னாலயும் அதுக்கு விளக்கம் கொடுக்க முடியாது. ஆனா இதச் சொன்னா சரியா இருக்கும்னு நெனக்கிறேன். இதுவரைக்கும் இது தோணல. நீ இப்பக் கேட்டவுடனதான் இப்படி இருக்கலாமோன்னு தோணுது”

“என்னதுப்பா…”

“கல்யாணம் முடிவு பண்றப்ப அவங்களோட எண்ணம் என்னவா இருந்துச்சு…”

சங்கருக்கு ஏதோ புரிந்தது போல இருந்தது.

2 Replies to “எண்ணத்தின் விளை”

Leave a Reply to RajamaniCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.