புணை

ரேச்சலின் ஃபோன் ரிங்டோனை அலட்சியம் செய்துவிட்டு என் மடிக்கணினியில் ஒரு முக்கியமான மின்னஞ்சலுக்கு பதில் அனுப்பிக் கொண்டிருந்தேன். ஹாலில் சார்ஜ் போட்டுவிட்டு தூங்கச் சென்று விட்டாள். அவளுக்கு வரும் அழைப்புகளை நான் எடுப்பதில்லை. எரிச்சலுடன் எழுந்து சென்று ஃபோனை எடுத்தேன். டொமினிக். ரேச்சலின் அண்ணன்.

“ரேச்சல், ஏன் போன் எடுக்க இவ்வளோ நேரம்.. அப்பாவுக்கு ஹார்ட் அட்டாக். ஹாஸ்பிடல் போறதுக்குள்ள உயிர் போயிடுச்சு.,” என்று பரபரப்புடன் சொல்லி முடித்தான்.

‘ஐயோ!!..நான் ரேச்சல் கிட்ட உடனே சொல்லிடுறேன். அவ தூங்க போயிட்டா. அதனால தான் போன் எடுக்க முடியல. அடுத்த பிளைட் எப்பன்னு பாத்துட்டு நாங்க உடனே கிளம்பி வர்றோம்”என்று சொல்லி வைத்தேன். ரேச்சலிடம் இதை எப்படி சொல்வது என்று ஒரு முறை ஒத்திகை பார்த்துக் கொண்டேன். ரேச்சல் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாள். பதினோரு மணிக்கு மேல் அவள் விழித்திருந்து கிடையாது. திருமணமாவதற்கு முன் அவள் இரவு ஒன்பது மணிக்கு தூங்குபவள். எங்கள் திருமணம் நிச்சயித்த பின் என் முதல் குறுஞ்செய்திக்கு மறுநாள் காலையில் தான் பதில் அளித்திருந்தாள். 

“ஏன் செல்லப் பெயரிட்டு அழைப்பதில்லை? நலம் விசாரிப்பதை தவிர அவள் தந்தையிடம் ஏன் பெரிதாக பேசுவதில்லை போன்ற எளிய கடிந்து கொள்ளல்களை தவிர எங்கள் உறவுக்குள் பிணக்கு என்று பெரிதாக எதுவும் வந்ததில்லை.

“அப்பா இறந்துட்டார்னு போன் வந்துச்சு” சொல்லிப் பார்த்துக் கொண்டேன். மிகத் தட்டையாக இருந்தது. எப்படி சொல்லலாம் என்று யோசித்துக் கொண்டே நின்றேன். என் இருப்பை உணர்ந்தவளாய் திடுக்கிட்டு எழுந்து கொண்டாள். 

“என்னாச்சு பா” ? என்றாள் .

“டொமினிக் போன் பண்ணிருந்தான்…” என்று இழுத்தேன். 

ஏதோ அசம்பாவிதம் நடந்து விட்டதை யூகித்து விட்டிருந்தாள்.

“ யாருக்கு என்ன ஆச்சு ? சொல்லி தொலையுங்க”

“அப்பாவுக்கு கார்டியாக் அர்ரெஸ்ட்னு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிருக்காங்க. பல்ஸ் இல்ல. இறந்துட்டார்னு சொல்லிட்டாங்க.”

‘ஐயோ ஐயோ’வென்று தலையில் அடித்துக் கொண்டு அழ ஆரம்பித்தாள். அவளை அணைத்துக் கொள்ளும் பொருட்டு அவளருகே சென்றேன்.

விலகிச் செல்லுமாறு என் கைகளை தட்டி விடுவதை போல் செய்கை செய்தவள் என்னை இறுக்கி அணைத்துக் கொண்டு கேவி அழ ஆரம்பித்தாள்.

அடுத்த நாள் அதிகாலை பிளைட் ஏறி சென்னை வந்து சேர்ந்தோம். புலரியின் குளிர் சற்று இதமாக இருந்தது. எங்களுக்காக காத்துக் கொண்டிருந்த காரில் ஏறினோம். வீடு வரும் வரை மௌனம் எங்களிடையே அருவமாக நிறைந்திருந்தது. அழுகையின் அடர்த்தி குறைந்திருந்த மரணவீடு,ரேச்சலின் வருகையால் பெருங்குரலெடுத்து ஊளையிடத் தொடங்கியது. குளிர்சாதனப் பெட்டியின் மோட்டார் சத்தம், அச்சூழலின் கசப்பை மேலும் ஸ்திரப்படுத்தியது. “நல்ல மனிதர்.எவ்வளவு அமைதியா தூங்குறாரு..அவர் முகத்த பாருங்க அக்கா. புனிதர் போல இருக்காரு” என்று யாரோ அத்தைக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள். நான் குளிர்சாதனப் பெட்டிக்குள் பார்த்தேன். புனிதர் போன்று இருக்கிறாரா எனத் தெரியவில்லை. ஆனால் முகத்தில் ஒருவித கனிவு குடியேறி இருந்தது. இறந்த பின் கனிவு வந்துவிடும் போல.

“அப்பாவ  குளிப்பாட்ட போறோம். ஒரு பத்து நிமிசம் வெளிய இருக்க பெஞ்சுல எல்லாரும் உட்காந்துக்கங்க” என்றான் டொமினிக். வந்திருந்தவர்கள் வெளியே சென்ற பின், டொமினிக்குடன் சேர்ந்து நானும் சிலரும் குளிர்சாதனப் பெட்டியில் இருந்த உடலை அருகில் இருந்த திவானில்  கிடத்தினோம். டொமினிக் மாமாவின் முகத்துக்கு சவரம் செய்ய ஆரம்பித்தான். இறுக்கமான சதையில் கத்தி வழுக்கிக் கொண்டே இருந்தது. பின் ஆடைகளை கலைத்து , சோப்பு தண்ணீரில் துணியை விட்டு உடலில் ஒத்தி எடுத்தான். அவரின் தளர்ந்து தாழ்ந்திருந்த ஆண்குறி  அவர்மேல் இரக்கமும் அசூயையும் கொள்ளச் செய்தது. ஜன்னல் பக்கம் திரும்பிக் கொண்டேன். அப்போது தான் அவளைப் பார்த்தேன். நீலநிற குர்தா அணிந்திருந்தாள். மையிட்டு எழுதிய கண்கள். சௌந்தர்யமான மூக்கு.பார்க்க பார்க்க வளர்ந்து கொண்டே போவது போலத் தோன்றும் மார்பகங்கள்.

“உள்ள வெச்சிடலாமா பிலிப்?” என்று டோமினிக் சொன்னதும் திடுக்கிட்டு திரும்பினேன். கோட் மாட்டி விட்டிருந்தான். ஈர முகத்தில் பவுடர் திட்டுதிட்டாக அப்பியிருந்தது. செபமாலை ஒன்றை விரல் இடுக்கில் சொருகி விட்டிருந்தான. நான் அங்கிருந்து வெளியேற தவித்துக் கொண்டிருந்தேன். அவளை பார்த்து விட வேண்டும். மரபெஞ்ச் ஒன்றில் அமர்ந்திருந்தாள். கால் நகங்களுக்கு ரத்த நிறப் பூச்சு போட்டிருந்தாள். அது எனக்கு ஒரு வித கிளர்ச்சியை கொடுத்தது. இவள் யார் சாயலோ கொண்டிருக்கிறாள். காலேஜில் நான் காதலித்த ஜனனியின் ஞாபகம் முழு வேகத்துடன் தலை தூக்கியது.

அக்காலகட்டத்தின் நினைவுகள் திரண்டு அவளின் வாசனையாக என்னை சூழ்ந்து கொண்டது. இவள் அனிதா அல்ல. நீல நிற குர்தா போட்டிருக்கும் நீலா என்றெண்ணி மெல்ல சிரித்துக் கொண்டேன். என்னை யாரும் கவனித்து விடக்கூடாது என்று அங்கே இருக்கும் நாற்காலிகளை வரிசை படுத்தினேன். நீலா யாரிடமோ ஃபோனில்  பேசிக் கொண்டிருந்தாள். இவள் ரேச்சலுக்கு உறவு முறை பெண்ணா?? 

எக்காலத்திலும் ரேச்சலிடம் கேட்க முடியாது. சமயம் வாய்த்தால் டொமினிக்கிடம் கேட்கலாம். அதற்குள் சர்ச் அன்பியத்தில் இருந்து செபம் செய்வதற்கு வந்திருந்தனர். எல்லாரும் கண்களை மூடி செபிக்கத் தொடங்கினோம். நான் ஜனனியிடம் பழகிய நாட்களை மனதில் வரித்துக் கொண்டேன். துயருற்ற தனிமை தருணங்களில் நான் அவளை நினைத்துக் கொள்வேன். 

“தீமையில் இருந்து ரட்சித்து அருளும்  ஆமென்.” விழிகளைத் திறந்து நீலாவைத் தேடினேன். தேநீர் கொடுத்துக் கொண்டிருந்தாள். நெருங்கிய உறவு முறையாக இருப்பாளோ ? என் திருமணத்தில் இவளை பார்த்த ஞாபகம் இல்லை. மரண வீட்டில் இது போன்ற வேலைகளை தன்னார்வத்தில் முன் வந்து செய்பவர்களே அதிகம். இப்போதைக்கு எதுவும் முடிவு செய்ய முடியாது. 

மூன்று மணிக்கு சர்ச்சில் திருப்பலி ஏற்பாடு செய்திருப்பதாக டொமினிக் பொதுவாக அறிவித்தான். சர்ச்சுக்கு செல்வதற்கு ஆயத்தமானோம். சிறு சிறு வேலைகளை செய்து கொண்டிருந்தேன். அவள் அங்கே தான் இருக்கிறாளா என ஊர்ஜிதப்படுத்திக் கொண்டேன். இந்தப் பெண் ஜனனிக்கு சொந்தமாக இருப்பாளா என்று யோசித்தேன். அவளிடம் ‘ஜனனியைத் தெரியுமா’ என்று கேட்கத் தோன்றியது. ஆனால் அது எனக்கு அபத்தமாகப் பட்டது. வந்திருந்த மக்கள் சிறு குழுக்களாக சர்ச்சுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார்கள். எல்லாரும் கிளம்பியபின் நானும்  சர்ச்சுக்கு கிளம்பி சென்றேன்.

ஆலயத்தின் வாசலில் உயிர்த்தெழுந்த ஆண்டவர் தேவதைகளும்  குழந்தைகளும்  சூழ விண்ணேற்றத்துக்கு ஆயத்தமாக இருந்தார். சவப்பெட்டியை ஆலய மைய பீடத்திற்கு எதிரே வைத்தார்கள். பீடத்தின் இடப்புறம் கன்னிமரியாளின் சொரூபம் பொன்னொளி சுடர பிரகாசித்துக் கொண்டிருந்தது. எனக்கு சட்டென்று நீலா நினைவுக்கு வந்தாள். ஒருவித கூச்சத்துடன் திருப்பலியில் கவனம் செலுத்துவது போல் பார்வையை மைய பீடத்திற்கு மாற்றினேன். சர்ச் வந்து சேரும் வரையில் அவளை நினைக்காதது ஆச்சரியமாக இருந்தது. அவள் சர்ச்சுக்கு வந்திருக்கிறாளா என்று இப்போது தேட முடியாது. திருவிருந்து சமயம் தெரிந்துவிடும் . மாலை பொது திருப்பலி நேரத்துக்குள் முடிப்பதற்காக ஃபாதர் சடங்குகளை  விரைவாக நடத்தினார். 

பாடல்களற்ற திருப்பலி உணர்வற்று தட்டையாக இருந்தது. லாசர் உயிர்த்தெழுந்த பகுதியை பைபிளில் இருந்து வாசித்து விட்டு மிகச் சுருக்கமாக பிரசங்கம் வைத்தார். காணிக்கைக்கு கொண்டு வந்திருந்த பழங்களை வாங்கிக் கொண்டு அதை எடுத்து வந்தவர்கள் நெற்றியில் சிலுவை குறியிட்டார். திருவிருந்து சடங்கு நெருங்கிக் கொண்டிருந்தது. அடிவயிற்றில் புறுபுறுவென ஏதோ பண்ணுவது போல உணர்ந்தேன்.  உலகின் பாவங்களை போக்கும் இறைவனின் செம்மறியின் விருந்தில் பங்கு கொள்ள ஃபாதர் அழைப்பு விடுத்தார். இயேசுவின் சரீரத்தை நாக்கில் வாங்க வரிசையில் நின்று கொண்டிருந்தனர். நீலா வரிசையில்  நிற்கிறாளா என நோட்டமிட்டேன். அவள் அங்கு இல்லை. இறுதி ஆசீர்வாத செபத்திற்கு எழுந்து நிற்குமாறு ஃபாதர் சொன்னார். இறந்த ஆத்மாவின் நித்திய இளைப்பாறலுக்கு பிராத்திக்குமாறு கேட்டுக்கொண்டார். மைய பீடத்தில் இருந்து இறங்கி சவப்பெட்டியின் அருகே வந்து புனித நீரை பிணத்தின் மேல் தெளித்தார். 

“மனிதனே நீ மண்ணாய் இருக்கின்றாய். மண்ணுக்கு திரும்புவாய், மறவாதே என்றும்”, பாடலை பாட ஆரம்பித்திருந்தார்கள். அப்பாடல் அச்சூழலை மேலும் கசப்பாக்கியது. ரேச்சல் ‘அப்பா அப்பா’ என்று அலறினாள். சவப்பெட்டியை கல்லறைக்கு எடுத்து செல்ல வேனில் ஏற்றினோம். நான் டொமினிக் பைக்கில் ஏறிக் கொண்டேன். வேன் வருவதற்குள் நானும் டொமினிக்கும் கல்லறையை அடைந்து விட்டிருந்தோம். பைக்கை பார்க் செய்துவிட்டு கல்லறை வாசலில் வண்டிக்காக காத்துக் கொண்டிருந்தோம். நீலா ஆட்டோவில் வந்து இறங்கினாள். என் விலாவில் ஈட்டி பாய்ந்தது. எங்களை நோக்கி நடந்து வந்தாள். பிண ஊர்தி இன்னும் வராததை அறிந்து கொண்டவளாய் எதிரே நின்று கொண்டாள். எங்கள் இருவரின் கண்களும் சந்தித்துக் கொண்டது போல் பட்டது. என் உள்ளம் கலைந்து கொண்டே இருந்தது. டொமினிக்கும் அவளை கண்டு கொண்டதாக தெரியவில்லை. நிச்சயமாக உறவினர் பெண் இல்லை என்று நினைத்துக் கொண்டேன்.

சீரற்ற பாதையினால் சவப்பெட்டியை கொண்டு வந்த வண்டி பாதி தூரம் வரை  தான் உள்ளே வர முடிந்தது. மையப் பாதையில் இருந்து குழி வெட்டப்பட்ட பகுதிக்கு செல்ல சிரமமாக இருந்தது. புதர்களின் முள்ளில் சிக்காமல், மண் புற்றின் மேல் கால் படாமல் கர்ம சிரத்தையுடன் சவப்பெட்டியை குழிக்கு பக்கத்தில் வைத்தோம். சவப்பெட்டியின் சந்தன மூடியை டொமினிக் வேனில் இருந்து எடுத்து வந்தான். யாரோ ஒருவர் சின்ன செபம் சொல்லி முடித்தார். ஒரு அமைதி நிலவியது. தூரத்து பறவைகளின் ஓசை மிகத் துல்லியமாகக்  கேட்டது. 

பெட்டியை மூடிவிடலாமா என குழி தோண்டும் ஆள் டொமினிக்கிடம் மெதுவாக கேட்டான். அது எல்லாருக்கும் கேட்டது. அத்தையும் ரேச்சலும் ‘ஐயோ…வேணாம் வேணாம். அவர நாங்க வீட்டுக்கு கூட்டிட்டு போறோம்,’ என்று அழுதனர். டொமினிக்கும் பெருங்குரல் எடுத்து அழத் தொடங்கினான். வழியனுப்பும் நேரம் நெருங்கி விட்டதை உணர்ந்த அத்தை மாமாவுக்கு முத்தம் கொடுத்துவிட்டு அருகில் இருக்கும் சிமெண்ட் கல்லில் சரிந்து அமர்ந்தாள். சவப்பெட்டியை மூடியதும் அதன் மேல் ஆணி அடித்தார்கள். இருமுனையிலும் கயிறு கொண்டு இழுத்து குழிக்குள் இறக்கினார்கள் . மண்ணை அள்ளி முதலில் அத்தை குழிக்குள் போட்டார். அச்செயலின் விசையில் உந்தப்பட்டது போல சுற்றி இருந்தவர்கள் அதையே செய்தார்கள். நானும் என் பங்குக்கு கைப்பிடி மண்ணை அள்ளி குழிக்குள் போட்டு சிலுவை குறி இட்டுக் கொண்டேன். என் மனம் அனிச்சையாக  நீலாவை தேடியது. கலைந்து கொண்டிருந்த கூட்டத்தோடு அவள் சென்று கொண்டிருந்தாள். கண்களில் இருந்து மறையும் வரை அவளை பார்த்துக் கொண்டிருந்தேன். 

வீடு திரும்பியதும் ரேச்சல் ஓரளவு சகஜமாகி விட்டிருந்தாள். கல்லறையில் இருந்து வீடு வரும் உறவினர்களுக்கு உணவு ஏற்பாடு செய்வது குறித்து டொமினிக்கிடம் பேசிக் கொண்டிருந்தாள். இரவு உணவை முடித்து விட்டு உறவினர்கள் கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறிக் கொண்டிருந்தார்கள்.  டொமினிக்கிடம் சேர்ந்து மற்ற வேலைகளை முடித்து விட்டு வெளியே வந்தேன். ரேச்சல் மரபெஞ்சில் அமர்ந்திருந்தாள். அவளருகே சென்றமர்ந்தேன்.தெருவிளக்கின் மேல் ஈசல்கள் முட்டிக்கொண்டிருந்தன.

“மாத்திரை போட்டியா?”

“ஒரு நாள் தான. போடலனா ஒன்னும் ஆகிடாது”என்றாள்.

தூரத்தில் எங்கோ வெறித்துப்  பார்த்துக் கொண்டிருந்தாள்.எதையோ நினைத்ததை போல்  என் பக்கம் திரும்பியவள்,

“நீ ஏன் பா அழவே இல்ல?” என்றாள். எனக்கு ஒன்றுமே சொல்லத் தோன்றவில்லை. அவளைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பின் பார்வையை விலக்கி சுவரில் சாய்ந்து கொண்டு நீலா இந்நேரம் தூங்கியிருப்பாளா என நினைத்துக் கொண்டேன்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.