பொன் சிறகு

கமலதேவி

இதென்ன சாவுஉறக்கம் என்று ராணி மங்கம்மாள் விழித்து எழுந்தபோது இருள் விலகாமலிருந்தது. அவிழ்ந்து கிடந்த நீண்ட நரைகலந்த கூந்தலை கொண்டையாக இடும்பொழுது, இன்னுமா மதுரா கமலத்தை எழுப்ப சூரியன் ஓடிவரவில்லை என்று நினைத்து புன்னகைத்தார். பொன்அகலின் திரி தீயும் கருகல் மணம் பரவுவதை நுகர்ந்து பொழுதுணர்ந்து மனம் திடுக்கிட்டு மெத்தையிலிருந்து இறங்கினார். 

சாளரம் இருக்கும் திசைக்கு பழக்கவாசத்தில் நடக்கும் போது கண்களை கசக்கிக்கொண்டார். அறுபதை நெருங்கும் வயதில் கண்களில் ஒளி குறையாமல் என்ன செய்யும் என்று நினைத்தவராக சாளரக்கதவுகளை தள்ளினார். அது திறக்கவில்லை. மனம் இரண்டாகப்பிரிந்து ராஜபாட்டையில் விரையும் குதிரைகளானது.

பலம் கொண்ட மட்டும் கதவுகளை சாளரங்களை மீண்டும் தள்ளினார். வாளேந்தி சந்திரகிரியை மீட்க நினைத்திருந்த கனவுகள் கலைந்ததும் கரங்களுக்கு அரண்மனை சாளரக்கதவையும் திறக்கமுடியவில்லை என்ற எண்ணத்துடன் கைகளை உதறிக்கொண்டார். துரத்திச் செல்ல கனவுகள் இல்லாமல் இருந்திருந்தால் வாழ்க்கை எத்தனைக்கு சூன்யமானது என்ற எண்ணத்துடன் அடுத்த சாளரத்தை நோக்கி நடக்கும்போது அனிச்சையாக ராஜவிழிப்பு மனம் சூழலை கணக்கிட்டுவிட்டது. மதுரையில் கொத்தளக்காவல் தவிர வேறுயாருமில்லை. தளவாய் உத்தப்பன் மலைக்கோட்டைக்கு சென்றிருக்கிறார் என்ற எண்ணம் வந்ததும் உடல்முழுவதும் அதிர்வுபரவி வியர்த்தது. 

இறுதியாக விஜயன் நினைத்தது இதுதானா என்று திடுக்கிட்டு அனைத்து சாளரங்களையும் கதவுகளையும் தோள்களால் மேல்கைகளால் இடித்துப் பார்த்தார். வெளியில் யாருமே இல்லையா …இதை எப்படி நிறைவேற்றியிருப்பார்கள் என்று நினைத்த கணம் பொன்அகல் அணைந்தது. பூரணஇருள் சூழ்ந்தது. 

அங்கும் இங்கும் நடந்து குரல்எழுப்பி சலித்து அமர்ந்தார். இருளில் நடந்த கால்கள் பதறிக்கொண்டேயிருந்தன. அகல் அணைந்த கணக்கை வைத்துப் பொழுதை கணித்தார். காலை உணவுப்பொழுது என்ற எண்ணம் வந்ததும் வயிறு பசியைக் காட்டியது. 

சுக்குநீர் குடிங்க அவ்வா…சந்தவம் பிடிக்குமே உங்களுக்கு…எப்ப அவ்வா நீங்களா வருவீங்க….ராணின்னா கூப்ட்டாதான் சோத்துக்கு வரணுமா என்று அன்னகாமூ சிரிப்பாள். ஐந்துஆண்டுகளுக்கு முன்னால் புராட்டாசி வேங்கட விரதத்தத்தின் முதல்கிழமையன்று சிறுமியைக் கடந்த இளம்பெண்ணாக சிற்றாடையை இழுத்துப்பிடித்தபடி வந்தாள். பரிமாறும் பொழுதே இங்கே இருந்துவிடுவாள் என்று தெரிந்துவிட்டது. 

“மகாராணி…வேங்கடச்சோத்து ருசி எதுக்கும் வராதுன்னு எங்கவ்வா சொல்லும்…”என்ற பின் உண்பதை வைத்து அடுத்ததை பரிமாறினாள். பெண்பிள்ளைகளுக்கு எப்படியோ உண்பவரின் பசியும் ருசியும் தெரிந்துவிடுகிறது. மலங்க மலங்கப் பார்க்கும் விழிகளும், சிறுநாசியு,ம் வெள்ளைப்புன்னகையும் இந்த உலகின் கசடுகளை அவளிருக்கும் இடத்திலிருந்து அப்பால் தூக்கி வைப்பவை.

அந்த ஆண்டு பாளையக்காரர்கள் கூட்டம் முடிந்து மதுரை அரண்மனையின் மண்டபத்தில் வெற்றிலைபோட்டுக்கொண்டிருக்கும் போது,  “மகாராணி சோற்றில் கவனம் வைக்கனும்…முகத்தில் அசந்தகுறி தெரியுது,” என்று துறையூர் பாளையக்காரர் நல்லப்பா சொன்னார். 

“வருஷம் கடந்து போகுதில்ல நல்லப்பரே…கள்ளம் அறியா கன்னி ஒருத்தி தினமும் அழைத்துத் தன் கைகளால் உணவளித்தால் தேவலை..ரெண்டுபிடி சோறு சேத்து எறங்கும்,” என்றபடி ராணி வெற்றிலையை வாயிலிட்டு குதப்பினார்.

உறவுக்காரர் போலப் பேசும் நல்லப்பரை பார்த்து ராயசம் நரசய்யா முகம் சுளித்தார். நல்லப்பர் மலையடிவாரக் காடு திருத்தி ஊரை நகர்த்திச் செல்லும் வெள்ளந்தி மனிதர். காட்டு மனிதர்களின் இயல்பான சுபாவம். பார்க்கும் மனிதர்களின் உடல்நலத்தை முகக்குறியைக் கொண்டு காணும் கண்படைத்த காட்டாளர்.

“உங்க கோட்டை வேலையெல்லாம் முடிச்சாச்சா நல்லப்பரே…”

“ உப்பிலியப்பன்கிட்ட குறிகேட்டா ஆனி வளர்பிறை காட்டுது…எத்தனையோ வருசத்துக்கு முன்னால கட்டுன கோட்டையில கை வைக்கிறதுக்குச் சுனங்குதும்மா…”

“கோட்டப்பாளையம் கோட்டை தெய்வம்…?”

“மேற்க எதுமலையான்…”

“மீசைமுறுக்கி குதிரை ஏறின பெருமாள்…ஊர்சுற்றி வருகிறவர். பூசையைத் தானா வந்து ஏத்துக்கறவர். பூசையை நிறைவா குடுத்துட்டுத் தயங்காம கோட்டையில கைவைங்க. முதல் ஆட்டத்திலயே சீர்பாத்துப் பிடிச்சு வைச்சிரனும் நல்லப்பரே…”

“உத்தரவு ராணி…”

“நீங்க திரும்பும்போது தேவையான தனமும்…தரம்பார்க்கும் ஆட்களும் உங்க கூட வருவாங்க,”

அது கடந்து சிலநாட்களில் துறையூர்பாளைக்காரர் நல்லப்பா அன்னகாமுவை அனுப்பிவைத்தார். நரசய்யாவும் சின்னப்பிள்ளைகள் மீது வாஞ்சை கொண்டவர் என்பதால் இங்கேயே நின்றுவிட்டாள்.

“இந்தாடி….அன்னகாமூ…ராணி…ராணின்னு தூரத்துல நிக்காதடீ…எனக்கு முந்தி அன்னப்பரீட்சை செஞ்சு அன்னம் வைக்கறவ நீ…அவ்வான்னு கூப்புடுடீ ..”

“மனசுல அதுதானே இருக்கு…எங்க பாளையத்து மனுஷ ஆடுமாடு தாகத்தை அறிஞ்சு தீத்தவுங்க அவ்வாதானே…”

“அதுமட்டுமில்லடீ… …விஸ்வநாத நாயக்க படையில வேவுவேலைக்குன்னு ராஜாவிசுவாச படை வடுகமண்ணுலருந்து வந்தாங்க.  உங்க வமிச கொள்ளுப் பாட்டனார் பெத்தவளையக்கார வடுகர் வரதர்…அந்தப்படைக்குத் தலைமை…”

“அப்பிடியா…பெத்ததாத்தய்யாவ உங்களுக்கு தெரியுமாவ்வா?”

“அது தெரியாம நீ எப்பிடிடீ இங்க வந்திருப்ப…வெவரங்கெட்டவளே…இப்படியே சிரிச்சுக்கிட்டு கூட இருக்கனும்,”என்று கையில் பிய்த்து வைத்திருந்த வெல்லஒப்புடுவை அவள் வாயில் வைத்தார்.

 மெதுவாகச் சென்று மெத்தையில் அமர்ந்தார். அன்னகாமூ என்னவானாள்? அவளை என்ன செய்தார்கள்?  தாகம் தொண்டையை வரட்டியது. இதுதான் இறுதியோ என்று எண்ணும்போதே உத்தப்பா எப்படியாவது வந்துவிடுவார் என்று மனம் நம்பியது. மனம் திசை தவறிய பறவை என நினைவுகளை தொட்டுத்தொட்டு எதையோ தேடியது.


அன்றொருநாள் அன்னகாமு ஒரு காவல் வீரனிடம் குறுவாளை நீட்டி பேசிக்கொண்டிருந்தாள். மாளிகை கைப்பிடி சிம்மத்திற்கு மேல்படியில் நின்றிருந்தாள். எதிரே மேல்மாடத்தில் நின்று ராணி பார்த்துக்கொண்டிருந்தார். அவன் அவளிடம் எதாவது இடக்கு பேசியிருக்க வேண்டும். அவன் பின்வாங்கினான்.

மேலிருந்து, “சாமுண்டி…இங்க வாடீ,”என்று அழைத்தார். பானகம் எடுத்துவர வேண்டும் என்பதை அறிந்த அவளின் தண்டை ஒலி பின்புறம் ஓடிமறைந்தது.

“ஏவ்வா…சாமுண்டின்னு கூப்புறீங்க. ஓடிவார வழியெல்லாம் அவனுங்க கண்ண விரிச்சு, நாக்க நீட்டி கேலி பண்றானுங்க…”

“சின்னப்பயக விளையாட்டுக்குப் பேசிட்டு போறானுங்க…”

“நீங்க என்னவ்வா…இம்புட்டு பெரிய மகாராணியா இருக்கீங்க. வெவரம் தெரியாம…”  என்றபடி தன் வேலையில் ஆழ்ந்தாள். எடுத்து வைத்த தண்ணீர்க்குடுவையை மீண்டும் எடுத்து அதே இடத்தில் வைத்தாள். சாளரக்கதவுகளை திறந்து திறந்து மூடினாள்.

“என்னடீ….சாமாயி மூஞ்சே சரியில்ல…”

 “அப்படி என்னடீ வெவரம்கண்டுட்ட நீ. எனக்குத்தெரியாத விவரம். மைசூர்காரனை வெல்லறதுக்கு திட்டம் ஏதும் வச்சிருக்கியா…சொல்லுடீ. குமார கம்பண்ண மகாராஜா காலத்துல கங்காதேவி அவ்வா தலைமையில் பொம்பளைப் பிள்ளைகளுக்கான படை இருந்தது. நாமளும் உண்டாக்கனுன்னு சின்னப்பிள்ளையிலருந்து எனக்கு கனவுடீ…உன்னைய வச்சு நிறைவேத்திக்கறேன்,”என்று சிரித்தார்.

“உங்களுக்கு எப்பப்பாத்தாலும் நாடு,படை, வாள், கம்மாய், பாதை போடறது தான் நெனப்பு… என்னிக்கும் கரந்த பாலுவ்வா…ஒசரத்துல இருக்கறதால சின்னதெல்லாம் கண்ணுலருந்து மறைஞ்சிருமோ. இல்ல எப்பவுமே இப்படியான்னு மீனாட்சிக்குதான் வெளிச்சம்,”

“……” 

ராணி அவள் மாநிற முகத்தை, கல்மூக்குத்தி ஒளிரும் சிறுநாசியை, பக்கவாட்டுக் கழுத்தில் மென்வியர்வையில் ஒட்டியிருந்த குறுமுடிகளை பார்த்தவாறு இருந்தார். இப்படியான ஒருத்திதான் சந்திரகிரியில் ஓடியாடியபோது மனதில் உள்ளதையெல்லாம் பேசிய மங்கம்மாள்.


நான் சொக்கநாதரை மணக்கும் பொழுதே அத்தனை பேச்சுகள் காதில் விழுந்தன. அரசர் பகல்கனாக்காரராம். பார்க்கறது மாதிரி பேச்சு இருக்காதாம். பேச்சுமாதிரி செயல் இருக்காதாம் என்று எத்தனை பேச்சுக்கள். ஆம் அத்தனையும் ஒருவகையில் உண்மை.

அந்த அந்தியில் திருச்சிமாளிகையின் மேல்மாடமுகப்பில் வேங்கட்டப்பரின் வருகைக்காக காத்திருந்தேன்.  அரங்ககிருஷ்ணன் ஐந்தாம் அகவையில் அடியெடுத்து வைத்திருந்தான். வானத்திற்கு கீழே நிமிர்ந்து நின்ற மலைக்கோட்டையை பார்த்துக்கொண்டிருந்தேன். காற்று கடந்து சென்றதில் கண்கள் மூடிக்கொண்டன. கண்களைத் திறக்கும் போது சட்டென மாறிய அந்தியின் மணிவெளிச்சத்தில் அது பித்தனை எதிர்பார்த்து காத்திருக்கும் சக்தி என ஔிர்ந்தது.

“என்னம்மா…மலைக்கோட்டைய புதுசா பாக்கறப்பல…”என்றபடி முன்னாள் தளவாய் வேங்கடப்பர் வந்து நின்றார். திண்டுக்கல்லில் இருந்து தனியாளாக வந்திருக்கிறார்.

“ஆமாம்…புதுசாதான் தெரியறா.  நிமிர்ந்து பிள்ளையை மடியில் அமர்த்திய சக்தி…”

“நம்ம மதுரைமீனாட்சி மகளே…” என்ற அவர் கண்கலங்கியது. பின் மலைக்கோட்டையிலிருந்து கண்களை எடுக்காமல், “மனசுல அது இருக்கனும் ஒரு மகாராணிக்கு. நீ நிமிர்ந்து முன்னப்போம்மா. நாங்க பின்ன இருக்கோம். நம்மள நம்பி தூங்கறவங்க தூக்கத்துக் காவலா நிக்கறதுதான் நமக்கு தர்மம். அதை மனசிலவச்சி, அதை செய்ய நினைக்கிற நீ எங்களுக்கு பெத்தவளாக்கும்…”


காவிரி கரைகளை மீறி ஊர்களை நிரவி அள்ளி அரித்துச் சென்ற பெருவெள்ள காலத்தில் ராணி மங்கம்மாள் மலையுச்சி பிள்ளையார் கோவிலில் நின்றார். சிறுவயதில் சந்திரகிரி கோட்டை மாடங்களில் தாதிகள் சோறூட்டியபடி சொல்லிய கதைகளில் வரப்போவதாக சொல்லிய பிரளயம். எங்கிருந்தோ எழுந்த பெருங்கைகள் கடலை தேடிப்பிடிக்கும் ஆவேசத்திலிருந்தன. மங்கம்மாள் கண்களை மாற்றினார்.

தன் சிறகுகள் தவிக்க நீர்வழியும் மலைக்கோட்டைப் பாறைமீது கருப்பும் அடர்பழுப்புமான நிறத்தில் கோழி ஒன்று நின்றது. அதன் இருசிறகுகளைப் பார்த்துக் கொண்டிருந்த அந்த இளம் அன்னை கண்கள் பனிக்க மீண்டும் வெள்ளத்தைப் பார்த்தார். தானும் அப்படி இந்த மலையிலிருந்து இறக்கை விரித்து தன் மக்களை உள்ளடக்கிக்கொள்ள முடியாதா? என்ற வேகம் அவருள் எழுந்தது. 


சொக்கநாதர் மண்மறைந்த பின்னர் படையெடுப்புத் தொல்லைகள் தலைகாட்டியும், மறைந்தும் இருந்த நாட்களில் வேங்கடப்பரின் சஞ்சலங்களுக்கு பதில் ஓலை எழுதினார்.

தப்பனாருக்கு நிகரான தளவாய் வேங்கடப்பருக்கு நமஸ்காரங்கள்.

பருந்து தலைக்கு மேல் வட்டமிடுகிற வேளையில் எதிர்த்து நிற்பதைவிட மறைவு தேடி ஓடிப் பதுக்கி மக்களை காக்கவே தோன்றியது. மீறி வந்த பருந்துகளை விரட்டியும், தூரத்துப் பருந்தை ஏமாற்றியும் காக்க வேண்டிய வேலைகள் நமக்குள்ளன. அன்னை காப்பாள். காப்பவளே அன்னை.

அவ்வாக்களின் சௌக்கியம் என் பாக்கியம்.

                 வந்தனங்களுடன்

                      மங்கம்மா


ஒருநாள் மதிய உணவுநேரத்தில் ராணிக்கு விளம்பிய அன்னகாமூதான் பயந்து நடுங்கி வியர்த்து மூச்சுக்கட்ட முதலில் அதை சொன்னாள். 

“யாரையும் யார்க்கூடவும் வச்சு பேச யாருக்கு தயங்காதுவ்வா…அவ தெய்வமாயிருந்தாலும் இந்த விஷயத்துல நம்பிருவாங்க…அவ்வளவு எளப்பம்…” என்று படபடப்பானாள்.

வழக்கம் போல ரசத்தை கைகளில் வாங்கி உறிஞ்சிக்குடிக்கும் மங்கம்மாவின் கைகளில் ரசத்தை ஊற்றிய அன்னகாமூவின் கைகள் நடுங்கின.

“என்னடி அன்னம்…ஒடம்பு சரியில்லன்னா. படுத்து எந்திரி…”

“ஒடம்புக்கென்ன உத்திரமாட்டம். மனசுதான்…”என்று நிறுத்தினாள்.

“…..”

மங்கம்மா அவர் உணராமல் அவர் பின்னால் நடமாடும் முக்கியசெய்திக்காக காத்திருந்தார்.

வெங்கலக்கிண்ணியை கைக்கழுவுதற்காக எடுத்து வைத்து தண்ணீர் ஊற்றிக்கொண்டே கைகளை பார்த்து குனிந்தபடி அன்னகாமூ தொடங்கினாள்.

“உங்களை அவ்வான்னு கூப்பிடற வாய்க உங்களை புறம் பேசறது அதிகமாயிட்டுது.  அதுதெரியாம நீங்க எல்லாருக்கூடவும் மணிக்கணக்கா பேசிக்கிட்டு இருக்கீங்க…”

வெற்றிலையில் சிவந்த இதழ்களுக்கு வெளியே நூனிநாக்கை நீட்டிப்பார்ப்பது கிளிஅலகென நினைக்கச்செய்ய நாக்கை உள்ளிழுத்தபடி அவ்வா வாய்விட்டு சிரித்தாள். 

“ராயசம், தளவாய், பிரதானிக்கூட அரசன் அதிகமா பேசனும். அவங்க அரசநிழல் போல இருக்கனுன்னு சாணக்கியநீதி சொல்லுது. அதுவும் ஒரு ரத்தமும் சதையுமான பந்தம்டீ. அவங்க துரோகம் பண்ணக்கூடாது. அரசன் அவங்களை எந்த நிலையிலையும் அவமானப்படுத்தக் கூடாதுன்னு நிறைய. ஆனா காலங்காலமா அந்த தர்மம் அடிவாங்கிக்கிட்டுதான் இருக்கு. ராணி அவங்கக் கிட்ட பேசாம மதுரைக் கோவில் மணியாட்டிக்கிட்டையா பேசுவா…அவங்கக்கிட்டயும் பேசனும்தான். சொல்றதுக்கும் நம்புறதுக்கும் ஒரு நீதி வேணாமாடீ…” என்றப்பின் நெற்றியை சுருக்கி சிறிதுநேர அமைதிக்குப்பின்,

“கேக்றவங்க நம்புறாங்களாடீ…” என்றார்.

“உங்க குடும்பத்துல இருக்கவங்களே நம்புறாங்கன்னு பேச்சு…”

“இந்த விஷயதுக்கெல்லாம் புத்தி வேணாண்டீ இந்த ஒலகத்துக்கு….எதுக்கு இத்தனை நீதிசாஸ்த்ரம் எழுதியிருக்காங்க நம்ம முப்பாட்டனாருங்க. நீதிக்கு மேல கால்வச்சு அநீதி நிக்கறதுனால தானே…அந்தக் கால் சிரசுக்கு ஏறுனா இப்படிதான் தலைகீழா மாறும்,”என்று மீண்டும் இளம் பச்சைநிற வெற்றிலை நரம்பை உறித்து முன்னும் பின்னும் துடைத்தார். சிவந்த முகத்தில் ரேகைகள் படர்ந்தன.

கதவுகள், சாளரங்கள் அனைத்தும் திறக்கமுடியாதபடி நன்கு அடைக்கப்பட்டிருந்தை என்மனம் நன்கு உணர்ந்தது. பின் எட்டுத்திக்கிலும் பாய்ந்த மனம் அரங்ககிருஷ்ண முத்துவீரப்பனின் கடைசி நாட்களில் நின்றது. தாய்க்கு தோள் நின்றப்பிள்ளை. பெரியம்மை என்று யாரும் பார்க்காமல் பேசாமல் தனித்துச் சென்று சேர்ந்தவன். அவன் கனவுகளை சுமந்து நனவாக்க ஓடிக்கொண்டேயிருந்ததில் அவன் மகனை கைநழுவ விட்டுவிட்டேன். எனக்கும் அம்மை என்று பொய்யை பரப்பி சிறையிட்டிருக்க வேண்டும்.

 நான்குநாட்களுக்கு முன் மாபெரும் அரசவைக்கூடத்தில் காற்றுவரும் திசையில் நான் அமர்ந்திருந்த பீடத்தின் எதிரே கைக்கட்டி நின்ற கொண்டய்யா நெற்றிசுருக்கி சிந்தனையிலிருந்தான்.

“என்ன திண்டுக்கல் குதிரைவீரனே…மதுரையை வேறெங்கும் இடம் மாற்றலாம் என்ற சிந்தனையில் இருக்கிறாயா? குதிரை மீது வைத்து தூக்கி சென்றுவிட உத்தேசமா?”

குரலில் இருந்த கேலியை உணர்ந்து குனிந்து புன்னகைத்தான். சிறிது நாணம் கலந்த புன்னகை. சிறுபிள்ளைகளுக்குரியது.

“மதுரையை மாற்றலாம் அம்மா…பெரிய சிக்கலில்லை. விசுவநாத நாயக்கர் கட்டிய ரெண்டுகட்டு மதிலை ஒன்றும் செய்யமுடியாதம்மா,”

“என்றாலும் திருச்சி மலைக்கோட்டை மீது மோகம் கொண்டு மாறியவர்கள்தானே நாம்…”

“நம் கனவின் ஆழத்தில் இருப்பவை குன்றுகளும் மலைகளும்…அதை மாற்றமுடியாதம்மா,”

“சரி…சொல். மலைக்கோட்டைக்கு மாறிவிடலாமா? இங்கு ஏதோ அறியா நிழல்படிவதாக தோன்றுகிறது…மீண்டும் அந்த சக்தியின் பாதங்களுக்கு அடியில் சென்றுவிடுவோமா?”

“அதை நான் எப்படி கூறமுடியும் அம்மா…”

“நீ தளவாயானால் பதில் சொல்வாயா?”

இப்பொழுது பேசக்கூடாது என்பதை அவன் அறிந்திருந்தான்.

ராணி நிமிர்ந்தமர்ந்து புன்னகைத்தார். கொண்டய்யாவின் முகத்தை பார்த்துக்கொண்டிருந்தார். இளையவன். விஜயனின் வயதிருக்கும். உச்சிக்கொண்டையும் அகன்றகைகளும் நீண்ட பெரியபாதங்களுமாக கண்களில் இளமைக்குரிய கனவும் ஒளியுமாக நிற்கிறான். புத்தியுடன் வாய்த்துடுக்கு மிக்க இளைஞர்களே கண்முன் விளையாடும் சொக்கர் அழகர் என்று எல்லாதெய்வங்களும்.  சோர்வுடன் மங்கம்மா சாய்ந்தமர்ந்தார்.

“அம்மா…உங்கள் பெயரர் விஜயரங்க சொக்கநாதரை பக்கம் அமர்த்தி நீங்கள் பேசவேண்டும். அரசியாக அல்லாது அன்னையாக…”

“நீ இளையவன்…அறிந்திருக்க வாய்ப்பில்லை. அவன் தாயின் இறப்பிற்கு நான் காரணம் என்ற எண்ணம் யாராலோ அவனுக்குள் விதைக்கப்பட்டிருக்கிறது. நானும் தலைமேல் ஏற்ற பொறுப்புகளின் வழியே அவனிடமிருந்து விலகி நெடுந்தொலைவு வந்துவிட்டேன். பெற்றவர் இல்லாத பிள்ளை, சூழ பகைநிற்கும் ராஜ்ஜியம் இரண்டிற்கும் முன் நான் எளிய பெண்ணாக விரும்பவில்லை கொண்டய்யா ,”

“அழைத்துப் பேசுங்களம்மா…நீங்கள் சரியாகப் பேசாமலிருப்பது பலருக்கு வாய்ப்பு கொடுப்பது போலாகும். நீங்கள் அறியாததில்லை. உங்கள் குடும்ப சிடுக்குகள் நாளை நம் அரசின் சிடுக்குகளாக பேருருவம் கொள்ளும்.”

குடும்பம் என்ற சொல்லைக்கேட்டதும் சிவந்த உதடுகளை குவித்து கண்களை சிமிட்டியபடி மங்கம்மா வெற்றுப்புன்னகை புரிந்தார்.

 ராணி தலையுயர்த்தி அவன் விழிகளை நோக்கி நிதானமாக தீர்க்கமாக,“ஆறாம் புலன் மனம். அதைத் தொடவும்.. உணரவும் இயலாதவர்களிடம் பேசுவதைப்போல விரயம் வேறெதுவுமில்லை,”என்றார்.

கொண்டய்யா வேறெதும் சொல்லத் தெரியாமல் நின்றான். ராணியின் சிவந்த நெற்றியில் திருநிறு துலங்க வாள்முனை கண்களை ஒருமுறை நோக்கிய பின் திரும்பிக்கொண்டான்.


கொண்டய்யாவை எங்கு அனுப்பினார்கள்? கடைசியாகப் பேசியது மூன்றுநாட்களுக்கு முன். முன்பே இருந்த யோசனைப்படி அவனுக்கு ஐயம் எழவிடாது திண்டுக்கல் குதிரைப்படையை காரணம் காட்டி அனுப்பியிருக்கலாம்.

நேற்று தளவாய் உத்தப்பாவை மலைக்கோட்டைக்கு அனுப்பியது பிழை. அவர் செல்வதற்கு முன் ஆபத்து சூழ்ந்திருக்கிறது தாயே, என்று சொல்லிவிட்டுச் சென்றார். அவர் ஏற்பாடுகளெல்லாம் என்னவாயின என்று நினைத்த ராணி எங்கோ ஆழத்தில் குரல் கேட்டு கூர்ந்தார்.

அன்னகாமூவின் குரல்தான். அறையின் வடக்குபுறமிருந்து வருகிறது. ஆம் அங்கு ஒருவழி உண்டு. அதை திட்டமிட்ட நரசய்யா உயிருடன் இல்லை. உத்தப்பாவைத் தவிர யாரும் அறியாதது. எழுந்து காதுகளை சுவரில் வைத்துக் கேட்டார். இவ்வளவு தெளிவாகக்கேட்கிறது என்றால் மெல்லிய காரையை தட்டி எடுத்துவிட்டிருப்பாள்.

“அவ்வா…அவ்வா…”

அவள் குரலை உள்ளிழுத்து அடிவயிற்றிலிருந்து அழைக்கிறாள்.

“அவ்வா…நான் தான். அந்தப்பக்கமிருந்து ஒருதட்டு தட்டுங்கவ்வா…”

குரல் எழுவதற்கு முன் சற்றுதொலைவில் மெல்லிய தடதட ஓசைகள் கேட்டன. அவளை கண்டுகொண்டுவிட்டார்கள். வயிறு அதிர்ந்தது. என்னைச்சார்ந்த அனைத்தும் நாசம். படுக்கையில் படுத்துக்கொண்டார். உடல் நடுங்கத்தொடங்கியது. பசியும் தாகமும்  தீயென எரிய அந்தமாளிகையின் இருளில் தன்னந்தனியாக படுக்கையில் கிடந்தார். 

அறைமுழுதும் சுற்றி வந்தும் குடிநீர் பாத்திரத்தின் பீடத்தையும் காணவில்லை. விஜயனின் முகம் மனதில் வந்து சென்றது.

மெதுவாக உறக்கம் போல ஒரு மயக்கநிலையில் சரிந்தார். பொழுது எட்டுவைத்து நடந்தது.


சந்திரகிரி கோட்டையின் தென்புறம் விரிந்த பயிற்சிக்களத்தில் மங்கம்மா போர்முனையில் சாவை இம்மியளவும் எண்ணமாட்டேன் என்று வஞ்சினம் உறைத்து வாளெடுத்த கைகள் நடுக்கம் கொண்டன. பங்காரு மாரம்மாள் இருவருடனும் எப்பொழுதும் வாள்சண்டைதான். மற்றநேரங்களில் குதிரைகளில் சேர்ந்து மலைப்பாதைகளில் சுற்றுவார்கள். அந்த நீண்ட பாதைகள் வழியே எத்தனை கனவுத்திட்டங்கள்.

பயிற்சியளிக்க வரும் தளவாய் திம்மய்யா மூவரும் சேர்ந்து சென்றால் முகலாயதளபதிகள் கணவாய்கடந்து ஓடிவிடுவார்கள் என்பார். சந்திரகிரி கோட்டைகள் மின்னல் என நினைவில் வந்து வந்து மறைந்தன. கால்கள் மரத்துக்கொண்டிருந்தன. இரவுகள் வந்து கடந்துகொண்டிருக்க வேண்டும்.

மீண்டும் போதம் தெளிந்து உணர்வு வந்திருந்தது. காலையாகத்தான் இருக்க வேண்டும். உடலில் ஒரு தண்மை இருந்தது. படுக்கையிலேயே கிடந்தார். இனி எழப்போவதில்லை என்ற முடிவிற்கு வந்தப்பின் மனம் அலையடங்கி மௌனமாகியது. காலம் முன்பின்னாக கலங்கி கலங்கித் தெளிந்தது. எத்தனை முகங்கள். தெளிவில் ஒருமுகம் எழுந்து வந்தது. அம்மா என்று அழைத்து மார்பில் முகம் வைத்து சிரித்தது. அது கலங்கி மறைந்து அதனடியில் இருந்து மறுமுகம் எழுந்தது. 

பரவசமும், பரிதவிப்பும், ஒன்றுமில்லா வெறிப்பும் மாறி மாறி விழிகளில் எழ மடியில் தலைவைத்து படுத்திருக்கும் ஆலவாய்அழகன். நிமிர்ந்து எழுந்த திருவெள்ளறை கோபுரம் இரண்டாவது சுற்றிலேயே நின்றதைப் போல அவன் மனம் தயங்கி தயங்கி பின்வாங்கிக்கொண்டிருந்த காலம் அது. 

எங்கோ ஒருதுளி விழுந்து அலையெழுந்த அதிகாலைக் குளம் அவன். அந்த குளத்தில் முப்பொழுதும் அலைகள் நிற்காமலாயின. மனம் நிற்காதவரைப்போல் ஊழால் வஞ்சிக்கப்பட்டவர் எவருமிலர். அவர்கள் உலகிலிருந்து தெய்வங்களும் குற்றவுணர்வுடன் விலகிக்கொள்கின்றன. மடியில் உறங்கிய அவனின் பாரத்துடன், மார்பில் உறங்கியவனின் பாரத்தையும் சேர்த்தளித்த கங்கா என்னைப்பார்த்து புன்னகைத்தாள்.

அரங்கமுத்து கிருஷ்ணன் விண்நோக்கி எழுந்த பின் விரிந்த வெறுமையின் பரப்பில் கங்கா தோன்றி புன்னகைத்தாள். 

“ராணிகா மீ மனசுலோ எவுரு உன்னாரும்மா…”

“மீறு ஒக்கருவ்வா…”

“காதும்மா…நிஜம் செப்பு…”

“நிக்கு மேல…”

“லீ ம்மா மங்கா …” என்று கங்கா உறக்கச்சிரித்தாள்.

அவள் சொல்லின்படி எழுந்து, வெறுமையிலிருந்து, ஆற்றாமைக்கும் மாறி அதிலிருந்து எழுந்த நஞ்சைக்கண்டு மிரண்டுநின்றாள் மங்கா.

நஞ்சால் ஊர்ந்தது மனம். அந்த ஊர்தலின் அச்சம் அனைத்தையும் ஐயம் கொள்ள வைத்து பொழுதுகளைtஹ் தின்று கசப்பைச் சுவைத்தது. மெல்ல மெல்ல ஊர்ந்த நாட்களின் வெம்மை தாளாது மதுரை மீனாட்சி கோட்டையின் மேல்மாடத்தில் நின்று, நெஞ்சில் அறைந்துகொண்ட அந்தகாரத்தின் முனையில் கோழி ஒன்று கூவும் குரல் கேட்டு கண்ணீர் கட்டுக்கடங்காமல் பெருகிமுடித்தது. விடிமீன் கண்ட நேரத்தில் மங்கா தன் நஞ்சில் கண்ணீரை கலந்து தனக்கான சிறகுகளை நெய்திருந்தாள். அந்த சிறகுகள் நீர்த்த நஞ்சின் ஔெடதத்தன்மை கொண்டிருந்தன. அன்னையின் வலிமை என, கருணை என மாறிமாறி எழும் இருமை அது. 

அவர்கள் இருவரின் முகங்களை மனதில் எழுதியவள் அவள். பின் அது எந்தத்தீயிலும் அழிவதில்லை என்றான பின் அவளின் நஞ்சுகள்  பேதமின்றி பெய்யும் அமுதங்களாயின.

 அது அவள் அரண்மனையெங்கும் பெண்களின் கொழுசொலிகள் என, பேச்சரவம் என, மழலை மொழிகள் என, இடைசலங்கையின் ஓசைகள் என எங்கும் பரவியது. அந்த ஒலிகளே எங்கும் கேட்க அவள் சிறகை விரித்தெழுந்தாள்.

இன்று அடைத்து மூடப்பட்ட மதுரை மாளிகையில் அந்த இறகில் ஒன்று சிக்கிக்கொண்டு புதைந்தது. மற்றொரு மெல்லிய இறகு யார் கண்களுக்கும் தெரியாமல் எழுந்து பறந்தது. மதுரையிலிருந்து நீண்ட சாலையில் அது பறந்து பறந்து சென்று கொண்டேயிருக்க காலங்களின் மீது நீண்டு கிடந்தது அவள் சாலை.

2 Replies to “பொன் சிறகு”

  1. தன் முனைப்போடும் செயலூக்கத்துடனும் 15 ஆண்டுகள் மதுரையை ஆண்ட மதியூகியான ராணி மங்கம்மாவின் கடைசி நாட்களைச் சொல்லும் இந்த வரலாற்றுப் புனைவுச் சிறு கதை மிகவும் நேர்த்தியாக எழுதப் பட்டுள்ளது. தன் பாட்டியே தன் தாயின் மரணத்துக்கு காரணம் என்றும் தளவாய், பிரதானி, ராயசம் ஆகிய அதிகாரிகளுடன் சரசமாடுகிறாள் என்றும் நம்பிய பேரன் அவளை அம்மை நோயாளி என்று பிறருக்குச் சொல்லி விட்டு தனிமைச் சிறையில் சாக விட்டான் என்கிறார் ஆசிரியர். ஆட்சிப் பொறுப்பில் உள்ள பெண்கள் மீது எளிதில் இத்தகைய அவதூறுகளைப் பரப்பவிட முடிவது ஆண் மைய சமூகத்தில் நடக்கக் கூடியதே. கோழி என்னும் படிமம் கதை நெடுக வருவது ஆசிரியரின் தனிச்சிறப்பு. ஆசிரியருக்கு வாழ்த்துக்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.