தாய்மொழிகள்

எஸ். சியூயீ லு

தமிழாக்கம்: மைத்ரேயன் / இங்கிலிஷ் மூலம்: எஸ். சியூயீ லு

 “உங்களுக்கு மிகவும் நன்றி,” என்கிறாய், உன் நேர்ப்பேச்சு பரீட்சையை முடித்து விட்டு. தன் பொருட்களை எடுத்துக் கொள்கிறாய், பளிச்சென்று ஒளியூட்டப்பட்ட நடை வழியே வெளியே போகிறாய். சுவற்றில் ஒளிப்படங்கள் வரிசையாகத் தொங்குகின்றன: எஃபெல் கூம்புக் கோபுரம், சீனாவின் நெடுஞ்சுவர், மாச்சு பிச்சு[1] மலை உச்சிக் கோட்டம் ஆகியன. ஒவ்வொரு இடத்திலும் சூரிய ஒளி வீசுகிறது, அந்தப் பிம்பங்களில் அதிசயம் நிரம்பித் ததும்புகிறது. நீ கோல்டன் கேட் பாலத்தின் பிம்பத்துக்கு எதிரே சிறிது தயங்குகிறாய்.

“  右拐就到了,” அங்கிருக்கும் காவலர் சொல்கிறார். நீ மேலே பார்க்கிறாய். அவருடைய இளமஞ்சள் நிற முடி அவருடைய மாண்டரின் சீன மொழி போலவே சீரான தரமுள்ளதாக இருக்கிறது. அவருடைய சுருக்கமற்ற மேல்சட்டை போல, கழுத்துப் பட்டி போல அப்பழுக்கற்றதாக உள்ளது. நீ இங்கிலிஷில் தன் தேர்ச்சியை அப்போதுதான் நிரூபித்து விட்டு வந்திருக்கிறாய், ஆனால் மாண்டரின் சீன மொழி உன்னை உடனே நிம்மதியடைய வைக்கிறது, தாய் மொழிதான் இப்படி உடனே தேற்றக் கூடியது. நீ அந்த காப்பாளரைப் பார்த்துப் புன்னகை செய்கிறாய், நீ அந்த அறை வழியே வெளியே போகையில்,  அவருக்கு தாழ்ந்த குரலில் சுருக்கமாக நன்றி சொல்கிறாய்.

நீ வலது பக்கம் திரும்பி ஆலோசனை அறைக்குள் நுழைகிறாய். அந்த அறை சிறியது, ஆனால் நட்புணர்வும் வரவேற்பும் கொண்டிருக்கிறது, அந்த அறையில் பழுப்பும், பாலேட்டின் நிறமும் மர இருக்கைகளாலும், சுவர்களாலும் கொணரப்பட்ட அறையில், தொட்டிகளில் இருக்கும் செடிகள் பசுமைக் கீற்றைக் கொணர்கின்றன. தகவல் கையேடுகள் கொண்ட அலமாரி ஒரு புறம் இருக்கிறது, பற்பல மொழிகளிலும் தகவல் தரும் ஏடுகள் அதன் பல சிறு பிறைகளில் செருகப்பட்டிருக்கின்றன, அது குறியீடுகளும், படங்களும் கொண்ட பல்லடுக்கு அமைப்பாகத் தெரிகிறது. இங்கிலிஷில் உள்ள பகுதி மட்டுமே பற்பல கொடிகளால், பற்பல வகைகளான மொழிப் பாணிகளால் சித்திரிக்கப்பட்டிருக்கிறது: அமெரிக்கக் கூட்டமைப்பு இங்கிலிஷ்- பொது வகை. யு.கே இங்கிலிஷ்- பெறப்பட்ட உச்சரிப்பு. சிங்கப்பூரிய இங்கிலிஷ்- பொது வகை. நைஜீரிய இங்கிலிஷ்- பொது வகை. … ஒவ்வொரு கையேட்டிலும் அமெரிக்க மொழியியல் தரப்பாகுபாடு நிறுவனத்தின் இலச்சினை பொறிக்கப்பட்டிருக்கிறது. குரல் வளையைப் பக்கவாட்டில் காட்டும் தலையோடு உள்ள ஒரு வட்டமான அச்சு அது.

நீ ஒரு பொது அமெரிக்க இங்கிலிஷ் கையேட்டைப் பொறுக்குகிறாய், ஜன்னலுக்கு முன்னே இருக்கும் மலைவேம்பு[2] மரத்தாலான மேஜைக்கு எதிரே உள்ள நாற்காலி வரிசையில் நடுவில் உள்ள ஒன்றில் அமர்கிறாய். அந்தக் கையேடு பரீட்சையில் மதிப்பெண் போடும் முறையை விளக்குகிறது: உன் கண்கள் ‘ஏ’ தர மதிப்பெண்ணை விளக்கும் பகுதியில் பார்வையைக் குவிக்கின்றன. “பேசுபவர் பல வகைத் தலைப்புகளில் சுலபமாக உரையாடுகிறார். குரலியல்[3] ஏற்கப்பட்ட தரத்தில் உள்ளது; பேசுபவர் பரந்த அளவு வார்த்தைப் புழக்கம் கொண்டுள்ளார்….” நீ துரிதமாகத் தன் செல்ஃபோனில் உள்ள அகராதியில் ஒரு நோட்டம் விடுகிறாய். ஃபோனாலஜி- மொழியியல் ஒலிப்பு முறை என்று இருக்கிறது. நீ அந்தச் சொல்லை நினைவில் பொருத்தி, பிற்பாடு கவனிக்க என்று ஒத்தி வைக்கிறாய்.

கதவு திறக்கிறது. ஒரு மேல் அங்கியும், உடலொட்டிய பாவாடையும் அணிந்த ஒரு பெண் உள்ளே வருகிறாள், அவளுடைய உயர்ந்த குதி கொண்ட காலணி, அந்த கடினமான மரத் தரையில் டொக் டொக் என்று ஒலி எழுப்புகிறது, அவளுடைய நுனி வளைக்கப்பட்ட தலைமுடி ஒவ்வொரு காலெட்டுக்கும் உயர்ந்து அமர்கிறது. நீ எழுந்து வந்தவளை வரவேற்றபடி அவளுடைய வாசனைத் தைலத்தின் நெடியைச் சிறிது மூச்சுக்குள் வாங்குகிறாய்.

இவளுடைய கரத்தைக் குலுக்கியபடி, “டயானா மாஸ்,” வந்த பெண் தன் பெயரைச் சொல்கிறாள். அவளுடைய பெயரட்டை நீ செய்யும் வேலையைக் குறிக்கிறது: மொழித் தரகர்.

“சியாவென் லியோ,’ நீ பதில் சொல்கிறாய். டயானா இவளுக்கு எதிரில் உள்ள ஒரு இருக்கையில் அமர்கிறாள்; நீ அமர்கையில் உன் பாவாடையை சுருக்கம் இல்லாது நீவி, சட்டையின் கைகளை நீட்டிச் சரி செய்து கொள்கிறாய்.

“இங்கிலிஷில் பேசினால் பரவாயில்லையா?” டயானா கேட்கிறாள். “நீங்கள் மாண்டரின் சீன மொழியில் பேச விரும்பினால் நான் ஒரு மொழி பெயர்ப்பாளரைக் கூப்பிட முடியும்.”

“இங்கிலிஷ் ஈஸ் ஃபைன்,” நீ பதிலளிக்கிறாய். டயானாவின் கைக் கணினியைப் பார்த்தபடி கைகளை இணைத்துக் கொள்கிறாய். டயானா தன் திரையின் குறுக்கே விரலால் வழிக்கிறாள், சில இடங்களில் வரையும் குச்சியால் தட்டுகிறாள், அவளுடைய ரத்தச் சிவப்பு நகங்கள் அந்தக் குச்சியின் கருப்பு நிறத்துக்கு வலுவாக எதிராகத் தெரிகின்றன.

“அருமை,” என்கிறாள் டயானா. “நேரே விஷயத்துக்கு வந்துடலாம், பார்ப்போமா? இங்கே காட்டுகிறபடி, நீங்க அமெரிக்காவுக்கு வந்து, குறைஞ்சது பதினைஞ்சு வருஷங்களாகி விட்டன? அட, இது நடந்து நிறையத்தான் காலம் ஆகி இருக்கிறது.”

நீ தலையாட்டி ஆமோதிக்கிறாய். “ஆமாம்.”

“சீனாவில் இருக்கையில் நீங்க ஒரு பொருளாதாரப் பேராசிரியரா இருந்தீங்க, அது சரிதானா?”

நீ மறுபடி ஆமோதிக்கிறாய். “ஆமாம்.”

“பிரமாதம்,” டயானா சொல்கிறாள். “உங்களோட பரீட்சை முடிவுகளை நான் இங்கே கொண்டு வரேன்; உரையாடல் பகுதியோட முடிவுகள் வரதுக்கு எப்போதுமே கொஞ்சம் நேரம் ஆகும்.”

உன்னுடைய உள்ளங்கைகள் வியர்த்து ஈரமாயுள்ளன; டயானா தன் சுட்டுக்குச்சியை சுழற்றிக் கொண்டிருக்கிறாள், அதைப் பார்க்கையில் உனக்குக் கொஞ்சம் தலை சுற்றுவது போல இருக்கிறது. இறுதியாக டயானா, தன் கைப் பலகைக் கணினியை முட்டுக் கொடுத்து நிறுத்திவிட்டு, அதை உன்னை நோக்கித் திருப்புகிறாள்.

“உங்களுடைய இங்கிலிஷ் பரீட்சையில் நீங்கள் ‘சி- க்ரேட்’ வாங்கி இருப்பதை நான் மகிழ்ச்சியோடு சொல்கிறேன்,” சொல்கையில் அவள் பொதுவான சிரிப்போடு தெரிவிக்கிறாள்.

உன்னுடைய இதயம் விழுந்தது போல இருக்கிறது. நிச்சயமாக இதில் ஏதோ பிழை இருக்க வேண்டும், இல்லை, அந்த எழுத்து என்னவென்பதில் தவறில்லை: பளிச்சென்ற சிவப்பில் திரையில் தெரிகிறது, சுற்றிலும் அலங்கார வளைவுகளும், கீழே அடிக்கோடிட்ட இடங்களில் கையெழுத்துகளும் தெரிகின்றன. டயானாவின் வாசனைத் திரவியம் இப்போது மிகவும் தலையைக் கிறுகிறுக்க வைக்கிறது போலத் தெரிகிறது, குமட்டுகிற இனிப்பாக உணரவைக்கிறது; அறை மிகவும் பளிச்சென்று ஆகி விட்டிருக்கிறது, மூச்சுத் திணற வைப்பதாகவும் இருக்கிறது, அறையின் சுவர்கள் உன்னைச் சுற்றி நெருக்குவது போல உணர்கிறாய்.

“நான்….” நீ சொல்கிறாய், கொஞ்சம் மூச்சு இழுத்துக் கொள்கிறாய். “நான் இன்னும் மேலான முடிவை எதிர்பார்த்தேன்.”

“உங்களுக்கு இது உதவுமான்னு பாருங்க, எழுத்துத் திறமை, அலசிப் பார்க்கும் திறமை இரண்டு தேர்விலும் நீங்க பிரமாதமாச் செய்திருக்கீங்க. இங்கிலிஷே தாய்மொழியாக் கொண்ட அமெரிக்கர்கள் பலரையும் விட நீங்க உயர்வா செய்திருக்கிங்க.”

“அப்பொ, எதனாலே என்னோட மதிப்பெண் கீழே இறங்கித்து?”

“எங்களோட வாடிக்கையாளர்கள் ஒரு வகை…. வெளித் தோற்றத்தை இங்கிலிஷில் எதிர்பார்க்கிறாங்க,” டயானா சொல்கிறாள், அதில் மன்னிப்புக் கோரும் தொனி இருக்கிறது. “நீங்க மறுபடி பரீட்சையை எடுத்துக்க விரும்பினீங்கன்னா, உங்களுடைய உச்சரிப்பு முறையைத் திருத்திக் கொள்ள ஒரு பயிற்சி இருக்கு, அது பற்றி உங்களுக்கு நான் தகவல் தர முடியும்- இப்படி விற்க விரும்புவோர் பலர் இந்தப் பயிற்சியை எடுத்துக்கிட்ட பிறகு உயர்ந்த மதிப்பெண்களைப் பெற்று சான்றிதழ் வாங்கி இருக்காங்க.”

அவள் அந்த வகுப்புகளும், பயிற்சியும் எத்தனை செலவு வைக்கும் என்று சொல்லவில்லை, ஆனால் நீ ஏற்கனவே செய்திருக்கிற ஆராய்ச்சியில், தன்னால் எட்ட முடியாத தொகை அது என்பது உனக்குத் தெரியும்.

“மீஸ். லியோ?” டயானா அழைக்கிறாள். அவள் துடைக்கப் பயன்படும் ஒரு காகிதத் துண்டை நீட்டுகிறாள்: நீ அதை வாங்கிக் கொண்டு, தன் கண்களில் ஒற்றுகிறாய்.  “நீங்கள் என்ன செய்ய முயன்றீர்கள் என்று என்னிடம் சொல்லுங்களேன்! ஒருவேளை எங்களால் உதவ முடியலாம்.”

நீ நீண்ட மூச்சை உள்ளிழுத்துக் கொள்கிறாய், உள்ளங்கையில் அந்தக் காகிதத் துண்டை நசுக்குகிறாய். “என் மகள் லிலியன் சமீபத்தில் ஸ்டான்ஃபோர்டில் இடம் பிடித்திருக்கிறாள், துரித முடிவு அது.”

“வாழ்த்துகள்!”

“அது சரி. ஆனால் எங்களுக்கு அந்தச் செலவு செய்ய முடியாது.” இங்கிலிஷில் ‘சி’ தர மதிப்பை விற்க முயன்றால், ஏ-தர மதிப்பின் விலையில் ஒரு சிறு பங்குதான் கிடைக்கும்; அத்தனை குறைவான தொகைக்கு தன் இங்கிலிஷை விற்பதை விட அதை வைத்துக் கொள்வதையே நீ விரும்புவாய்.அந்தச் சிறு தொகை புத்தகங்கள், மற்றும் இதர சில்லறைச் செலவுகளுக்குக் கூடப் போதாதது, பின் அல்லவா கல்லூரிப் படிப்புக்குக் கட்டணம், மாணவர் விடுதிக் கட்டணம் எல்லாம் கவனிக்க?

“வேறு பாதைகளை நீங்கள் யோசிக்கலாமே.” டயானா மென்மையான குரலில் சொல்கிறாள். “உன்கள் மகள் ஒரு சமூகக் கல்லூரிக்குப் போகலாம். பிற்பாடு ஸ்டான்ஃபோர்டுக்கு மாற்றிக் கொள்ள முடியும்-”

நீ தலையை அசைத்து மறுக்கிறாய்.

“சான் கேப்ரியெல் பள்ளத்தாக்கில் உள்ள சமூகக் கல்லூரிகள் நாட்டில் உள்ள சிறந்த கல்லூரிகளுக்கு நிகரானவை,” டயானா தொடர்கிறாள். “அவற்றில் சேர சிறிதும் வெட்கப்பட வேண்டாம்.”

உனக்கு அது பற்றி நம்பிக்கை வரவில்லை. மகளால் ஸ்டான்ஃபோர்டுக்கு வரும் ஆண்டில் மாற்றிக் கொள்ள முடியவில்லை என்றால் என்னாகும்? நீயும், லிலியனும் அப்படி ஒரு ஆபத்தை ஏற்க முடியாது; சிறந்த பல்கலையில் நல்ல படிப்பைப் பெறுவது லிலியனின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக ஆக்க மிகவும் முக்கியமான ஒன்று. (ஒத்திப் போடுவது) கூடாது, இப்போது ஏற்கனவே அவளுக்குக் கொடுக்கப்பட்ட வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு அதோடு செல்வதுதான் சரி.

டயானா எழுந்து நிற்கிறாள், கையேடுகள் இருக்கிற அலமாரிக்குச் செல்கிறாள். சில கையேடுகளைப் புரட்டிப் பார்க்கிறாள்.

“உங்களுக்குத் தெரியுமா,” டயானா இவளை நோக்கித் திரும்பி வரும்போது சொல்கிறாள், “சீனா இப்போது மிகவும் விரும்பப்படுகிறது – அவர்களுடைய  புது திறந்த வாசல் கொள்கையால், ஏராளமான பேர்கள் (அடித்துப் பிடித்துக் கொண்டு?) அங்கே முதலீடு செய்யப் போகிறார்கள்; என்னைப் பல பேர்கள் தொடர்ந்து கூப்பிட்டுக் கொண்டே இருக்கிறார்கள், என்னிடம் ஏ- தரமான மாண்டரின் இருக்கிறதா என்று கேட்கிறார்கள்.”

அவள் ஒரு கையேட்டை மேஜையில் வைக்கிறாள், அதிகாரிக்கான நாற்காலியில் இவளுக்கு எதிரே அமர்கிறாள்.

“உங்களோட மாண்டரினை விற்பது பற்றி யோசித்திருக்கிறீர்களா?”

நீ அந்தக் கையேட்டின் மீது தன் கைகளால் தடவுகிறாய், அதில் ஓர் இலச்சினை காகிதத்திலிருந்து உயர்ந்து தெரியும்படி பொறிக்கப்பட்டிருக்கிறது. சீனாவின் கொடி, தொலை தூரத்திலிருந்து பெய்ஜிங்கைக் காட்டும் படம் ஒன்றின் கோட்டுரு மீது படர்ந்திருக்கிறது; கையேட்டில் அச்சாகியுள்ள எளிய சித்திர எழுத்துகளைப் படிக்கிறாய், உன் கண்கள் அவற்றின் மீது பயணிப்பது அவை இங்கிலிஷின் மீது செல்லும் வேகத்தை விடப் பல மடங்கு துரிதமாக உள்ளது.

“எவ்வளவு?” நீ கேட்கிறாய்.

டயானா முன்புறம் சரிவாகக் குனிகிறாள். “ஏ-தரமான மாண்டரின் இப்போது 800,000 டாலர்கள் வரை கூடப் போகிறது.”

உன் இதயம் ஒரு துடிப்பை இழந்து மறுபடி செயல்படுகிறது. அது லிலியனின் கல்லூரிச் செலவு மொத்தத்தையும் சமாளிக்கும், அதற்கு மேலும் கொஞ்சம் மிஞ்சும்- அது ஒரு கவர்ச்சிகரமான தொகை. ஆனால் மாண்டரின் இல்லாமல் வாழ்வது என்பது உனக்குக் கொஞ்சம் தயக்கத்தைக் கொடுக்கிறது: அதில்தான் நீ யோசிக்கிறாய், உன் மனதுக்கு அது நெருக்கமாக இருக்கிற அளவு இங்கிலிஷ் இராது; நீ யாரென்பதோடு அது அத்தனை பிணைந்தது, வேறெந்த அன்னிய மொழியும் அப்படி இருக்காது. இங்கிலிஷ் இல்லாமலே உன்னால் வாழ முடியும்- லிலியனின் மாண்டரின் போதுமான அளவு தேர்ந்தது, அவள் மொழிபெயர்த்துக் கொடுத்தே உன்னால் தேவைப்பட்டதைப் பெற்று வாழ்ந்து விட முடியும் – ஆனால் மாண்டரின் இல்லாமலா?

“நான்… எனக்கு தெளிவாகச் சொல்ல முடியவில்லை,” அந்தக் கையேட்டைக் கீழே வைக்கிறாய். “என்னோட மாண்டரினை விற்கிறதா…”

“நிச்சயமாக அது ஒரு பெரிய தீர்மானம்தான்,” டயானா சொல்கிறாள். அவள் ஒரு சிறிய வெள்ளி நிறப் பெட்டியை தன் மேல் அங்கியின் பையிலிருந்து உருவுகிறாள், அதை ஒரு க்ளிக் சப்தத்தோடு திறக்கிறாள். “ஆனால், நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொண்டால்…”

அவள் தன் அறிமுக அட்டையை மேஜை மீது உன்னை நோக்கி வழுக்கலில் தள்ளுகிறாள்.

“… கூப்பிடுங்க.”

நீ ஒரு வாரம் மாண்டரின் இல்லாமல் கழிக்க முடிவு செய்கிறாய், உன்னால் முடியுமா என்று பார்க்கும் முயற்சி. சில நேரம் இந்த மாறுதல் ஏதும் தடங்கல் இல்லாமல் போகிறது: சான் கேப்ரியல் பள்ளத்தாக்குப் பகுதியில் நிறைய மக்கள் இரண்டு மொழி பேசுபவர்கள்; இங்கிலிஷ் மட்டும் பேசியே உன்னால் நாளைக் கடத்த முடிகிறது. ஆனால் உள்ளூர் பொது நூலகத்தில் நூலகராக இருக்கும் உன் பணியிடத்தில் கொஞ்சம் இடறலாக இருக்கிறது; பயனாளர்களில் பெரும்பாலார் இங்கிலிஷ் பேசுகிறவர்கள், ஆனால் கொஞ்சம் பேர்கள் அப்படி இல்லை.

நீ தன் தலையை அசைத்து மறுத்து, மாண்டரின் மட்டும் பேசுவோரை இன்னொரு சக ஊழியரிடம் அனுப்புகிறாய், அவர் மாண்டரின் பேசுபவர். ஆனால் மதியச் சாப்பாட்டு நேரத்தில் ஓய்வெடுக்கும் அறையில் அருகில் அமர்கிறார், உன்னை நோக்கி விவரமறிய விரும்பும் பார்வையைச் செலுத்துகிறார்.

“为什么今天把顾客转给我?” அவர் கேட்கிறார்.

அவரிடம் உண்மையைச் சொல்வது நல்லது என்று நீ கருதுகிறாய்: “நான் என்னுடைய மாண்டரினை விற்க விரும்புகிறேன். அது இல்லாமல் வாழ்க்கை எப்படி இருக்கும் என்று பார்க்க முயல்கிறேன்.”

“卖你的普通话?” அவள் பதில் சொல்கிறாள்.  முகத்தில் நம்ப முடியாததைக் கேட்டது போன்ற ஒரு தோற்றம்: “神经病!”

கிறுக்கு என்று அழைக்கப்படுவதை நீ வெறுக்கிறாய், அதே நேரம் உனக்குள் ஓரளவு உன் முடிவு ஒருகால் முட்டாள்தனமானதோ என்ற ஐயம் இல்லாமல் இல்லை. ஆனாலும், அந்த வாரத்தின் மீதி நாட்களை நீ இங்கிலிஷை வைத்துக் கொண்டு கழிக்கிறாய். மாண்டரின் பேசுகிற வாடிக்கையாளர்கள் வரும்போது ஒத்தாசை செய்ய சக ஊழியர் இருக்கிறார், ஆனால் சில நேரம் உன்னுடைய தீர்மானத்தை ஒத்தி வைத்து விட்டு, மாண்டரினில் சில சுருக்கமான வாக்கியங்களை நீ வாடிக்கையாளரிடம் பேசுகிறாய். ஆனால் அனேகமாக, நீ முடிவில் வைராக்கியமாக இருக்கிறாய்.

உனக்கும் லிலியனுக்கும் இடையே உரையாடல் அனேகமாக சுலபமாகப் போகிறது. சாதாரணமாக, அவளோடு இங்கிலிஷும் மாண்டரினும் கலந்து பேசுகிறது வழக்கம், நீ அனேகமாக இங்கிலிஷில் பதில் சொல்வாய்; ஆனால் நீ இங்கிலீஷில் மட்டும் பேச ஆரம்பித்ததை லிலியன் கவனித்ததாகத் தெரியவில்லை. அவள் எப்போதாவது மாண்டரினில் உன்னிடம் பேசும்போது, நீ இங்கிலிஷில் பதில் சொல்கிறாய், உங்களின் வழக்கமான நிலைகள் இடம் மாறி விடுகின்றன.

வங்கி எந்திரங்களில் பணம் எடுக்கையில், நீ சீன மொழிக்குப் பதில் இங்கிலிஷைத் தேர்வு செய்கிறாய். சில வேலைகளுக்காக வெளியில் போகும்போது, “谢谢你” என்பதற்குப் பதில் “தாங்க் யூ” சொல்கிறாய். இது எல்லாம் வெள்ளிக்கிழமை வரைதான், அதுவரை அம்மாவுடம் மளிகைச் சாமான் வாங்கக் கடைக்குப் போகும்போது மட்டும்தான் மாண்டரினில் பேசாதது ஒரு பிரச்சனையாகிறது.

நீ சூபர்மார்க்கெட்டில் பொருட்களை வருணித்து எழுதப்படும் சீனமொழியின் சித்திர எழுத்துகளைக் கவனிக்காமல் இருக்க அரும்பாடுபடுகிறாய்: எத்தனையோ பொருட்களுடைய இங்கிலிஷ் பெயர்கள் இவளுக்கு அதுவரை தெரிந்திருக்கவில்லை. ஆனால் அவற்றைப் பார்த்துத் தெரிந்து கொள்கிறாய், அது போதுமானதாக இருக்கிறது; உனக்கு என்ன தேவையோ அதைப் பொறுக்கிக் கொண்டால் போதுமே. உன் கண்ணோரத்தால் பார்த்தாலோ, கொஞ்சம் கண்ணைக் குறுக்கிப் பார்த்தாலோ, சீன மொழி தெரியாத மாதிரி நடித்தபடி, மொழியைப் பயன்படுத்தாமல் பொருட்களை நினைவிலிருந்து மட்டும் கவனித்து வாங்கி விடலாம்.

உன்னுடைய அம்மாவிடமும் கொஞ்சம் ஏமாற்ற முடிகிறது: உனக்குக் காண்டொனீயச் சீன மொழி போதுமான அளவு தெரியும், அதில் அம்மாவுடன் சிறிது தட்டுக் கெட்டு பேசி விட முடிகிறது, அவளுக்கு காண்டொனீயமும், மாண்டரினும் தெரியும். ஆனால் வார்த்தைகளையும், அவற்றின் ஒலிப்புத் தொனிகளையும் நினைவூட்டிக் கொள்ள முயலும்போது, பேச்சில் சொற்களிடையே இடைவெளி நீள்கிறது என்பது இது எரிச்சலூட்டுகிறது.

“干吗今天说广东话?” உன் அம்மா மாண்டரினில் கேட்கிறாள். அவள் அந்தக் கடையின் தள்ளுவண்டியைத் தள்ளி வருகிறாள் – நீ அந்த வேலையைச் செய்ய வரும்போது அம்மா தான் அதைச் செய்யவேண்டும் என்று எடுத்துக் கொண்டிருக்கிறாள் – ஒரு சக்கரம் கிறீச்சிட்டுக் கொண்டு வருகிறது. அம்மா கைப்பிடியின் மேல் கூனிக் கொண்டிருக்கிறாள், ஆனால் அவளுடைய கண்கள் பளபளக்கின்றன.

“ஓ யூ ஷ்யுட் க்வொங்டொங்வா”[4] நீ காண்டோனியத்தில் பதில் சொல்கிறாய். ஆனால் காண்டொனியத்தில் நீ சரியாகச் சொல்ல விரும்பியது, அதுவல்ல என்று உனக்குத் தெரிந்திருக்கிறது; ஆனால் இதுதான் இப்போதைக்கு முடியும். உனக்கு நேர்கிற அனைத்தையும் காண்டோனிய சீன மொழியில் எப்படிப் பிடிப்பது என்று உனக்குத் தெரியவில்லை, ஆனால், இப்போதைக்கு அதுதான் உனக்குச் சாத்தியம். உன்னுடைய அம்மா உன்னை ஒரு தடவை பார்க்கிறாள், ஆனால் என்னவென்று குடைந்து கேட்காமல் இப்போதைக்கு உன்னை விட்டு விடுகிறாள். அம்மாவும் காண்டோனியத்தில் பேசியபடி இருக்க, இருவரும் சூப்பர்மார்கெட்டில் சுற்றி நடந்து வேண்டுகிற மாமிசம், மீன், மற்றப் பொருட்களால் தள்ளு வண்டியை நிரப்புகிறீர்கள்.

மளிகைப் பொருட்களைக் காரில் ஏற்றி விட்டு, அம்மா பயணி இருக்கையில் ஏறி அமர உதவுகிறாள். காரின் கண்ணாடிகளைச் சரியாகப் பொருத்துகையில் அம்மா மறுபடி பேசுகிறாள்.

“你在担心什么?” அம்மா கேட்கிறாள். திடுக்கிட்டு, நீ அம்மாவைப் பார்க்கிறாய். அம்மா உன்னை உற்று நோக்கிக் கொண்டிருக்கிறாள்: உன்னால் அம்மாவிடமிருந்து எதையும் மறைக்க முடிந்ததில்லை. அம்மாவால் உன் முகத்தில் உள்ள கவலையை, அமர்ந்திருக்கும் விதத்தில் உள்ள இறுக்கத்தை எல்லாம் உணர முடியும் என்பது தெளிவு; ஏதோ சரியாக இல்லை என்பது அவளுக்குத் தெரியாமல் இருக்காது.

 “ஓ யௌ சௌ யட் கோ ஹன் சுங்யூ டெக் குட்டிங்,’ [5]நீ பதிலளிக்கிறாய், நீ தாங்கும் சுமையை விளக்கும் விதமாக.

“什么决定?” அம்மா பதில் சொல்கிறாள்.

உனக்குத் தக்க பதிலளிக்க காண்டோனிய மொழியில் சொற்கள் புலப்படவில்லை. ஒவ்வொரு முறை சரியான ஒலிகளை அடையும்போதும், அவை மாண்டரினாகவே இருக்கின்றன. கடைசியில் சலிப்புற்று, மாண்டரினுக்கே மாறி, அதிலேயே பதில் சொல்கிறாய். 

  “我要用我的普通话来赚钱去送 லிலியன் 上大学。”

அம்மா உன்னைத் திட்டுவாள் என்று நீ எதிர்பார்க்கிறாய், உன்னுடைய பாரம்பரியம், அந்த மொழியின் முக்கியத்துவம் எல்லாவற்றையும் சொல்வாள் என்றும் எதிர்பார்க்கிறாள்- அம்மா எப்போதுமே தான் யாராக இருந்தோம், எங்கிருந்து வந்தவள் என்பதிலும் பெருமையோடு இருந்தவள்; உனக்குச் சொந்தப் பண்பாட்டைச் சொல்லித் தந்த முதல் நபராகவும் அவளே இருந்தவள் – ஆனால் அம்மாவின் முகபாவம் மென்மையடைகிறது, அவள் தன் கைகளை உன்னுடைய கைகளின் மேல் வைக்கிறாள், அவளுடைய சுருங்கிய தோல் உன்னுடைய தோல் மீது கதகதப்பாக இருக்கிறது.

“哎,嘉嘉,没有别的办法吗?”

இவளுடைய செல்லப் பெயரை நீ சொல்கையில் அத்தனை மிருதுவாக ஒலிக்கிறது. ஆனால் நீ மற்ற எல்லா வழிகளையும் பற்றி ஏற்கனவே யோசித்திருக்கிறாய்: லிலியன் கடன் வாங்கிப் படிப்பதை நீ விரும்பவில்லை, உன்னுடைய நண்பர்களின் வாரிசுகள் அப்படிப் படித்து முடித்து கடன் பளுவோடு வாழ்வதை நீ பார்த்திருக்கிறாய்; நீயே உன் கடன்களை இன்னும் அடைத்துக் கொண்டிருக்கிறபோது, அவள் தன் வாழ்நாள் பூராவும் கடனடைத்துக் கொண்டு துன்பப்படுவதை நீ விரும்பவில்லை. லிலியனின் அப்பா அவளுக்கு உதவுவார் என்று நம்ப உன்னால் முடியவில்லை, அதுவும், உன் குடும்பத்தை விட்டு ஓடிப் போனதோடு, உன்னிடம் இருந்த கொஞ்ச நஞ்சப் பணத்தையும் எடுத்துக் கொண்டு போனவனையா நம்ப முடியும். லிலியன் உபகாரச் சம்பளத்துக்கு விண்ணப்பம் அனுப்ப தன்னாலானதை எல்லாம் செய்கிறாள் என்றாலும், அதெல்லாம் போதாது.

நீ உன் தலையை அசைத்து மறுக்கிறாய்.

நீங்கள் இருவரும் மௌனமாக அமர்ந்திருக்கிறீர்கள், நீ காரைக் கிளப்பி, உன் அம்மாவின் வீட்டுக்குச் செல்கிறாய். உன் பின்புறம் மறையத் தொடங்கும் சூரியன், பூமியின் மீது அபாரமான பிரகாசத்தை வீசிக் கொண்டு, ஆகாயத்தின் ஆரஞ்சு நிறத்தை மெல்ல மெல்ல நீலமாக ஆக்கிக் கொண்டிருக்கிறது. சாலையின் மேட்டுப் பகுதியின் உச்சியை அடையும்போது, கீழே தூரத்தில் நகரத்தின் விளக்குகள் இருட்டில் மின்னத் தொடங்குகின்றன, அது லட்சக்கணக்கானவர்களின் வாழ்வுகளை, லட்சக்கணக்கான எதிர்பார்ப்புகளாக, கனவுகளாக உனக்குக் காட்டுகிறது.

உன் அம்மாவின் வீட்டை அடையும்போது, அவளிடம் கேட்க ஒரே ஒரு கேள்விதான் உன்னிடம் இருக்கிறது.

“如果你需要做同样的决定,” நீ சொல்கிறாய்,  “你也会这样做吗?”

நீ லிலியனின் இடத்தில் இருந்தால், உன் அம்மா உனக்கான ஒரு முடிவை, நீ இப்போது எடுக்கும் முடிவை எடுத்திருந்தால், அது உனக்கு எப்படி இருந்திருக்கும் என்று உனக்குத் தெரியவில்லை. ஆனால் உன் அம்மா உன்னைப் பார்த்து மெல்லச் சிரிக்கிறார், அவர் கண்களின் ஒளியில் சிறு சோகம் தெரிகிறது, அவருடைய உதடுகளின் வளைவில் அவர் உன்னைப் புரிந்து கொண்டிருக்கிறார் என்பது உனக்குப் புரிகிறது.

‘当然,’ அவர் சொல்கிறார்.

ஆமாம், வேறெப்படி.

காத்திருக்கும் அறை முன்பு நீ பார்த்த ஆலோசனை அறையை விடவும் சிக்கனமாக, இறுக்கமாகத் தெரிகிறது: இருக்கைகள் உட்கார வசதி குறைந்தவை, அறையின் உஷ்ணம் குறைந்து குளிர்கிறது; நீ மட்டும் அங்கிருக்கிறாய், ஒரு தொலைக்காட்சிப் பெட்டி உலகச் செய்தியை மட்டுப்பட்ட ஒலியோடு ஒளிபரப்புகிறது.

நீ அங்கிருக்கும் தகவல் காகிதங்களைப் படிக்கிறாய், அந்த நடைமுறை விளக்கங்களைப் புரிந்து கொள்ள உன்னால் முடிந்த மட்டில் முயல்கிறாய்- உன் இங்கிலிஷ் மீது உனக்கு அத்தனை பெருமிதம் இருந்த போதும், இன்னும் இந்தக் காகிதங்களில் உள்ள பல சொற்களை உன்னால் சரிவரப் புரிந்து கொள்ள முடியவில்லை.

இந்த நிறுவனத்தின் (தனிச் சொத்தான?) படிமுறைகள், (சுழல் செயலாற்றல்?) மூலம் கிட்டத்தட்ட முடிவிலி வாக்கிய (வரிசைப்படுத்தல்கள்?) வழியே ஒரு நரம்பு மண்டலச் சித்திரத்தை வகுந்தெடுக்கின்றன. இதனால் மூளையில் ஏற்படும் (அறிமுறை?) பளு, கட்டுப்பாட்டுக்குள் இருக்கும் ஒரு வகை அதிர்ச்சியை விண்ணப்பதாரருக்கு உணர்விக்கும், அதன் மூலம் விண்ணப்பதாரரின் நினைவில் இருக்கும் அந்த மொழி அழிக்கப்படும். பொதுவான பக்கவிளைவுகள், தற்காலிகமான குழப்பம், வாந்தி வரும் உணர்வு ஆகியன. அத்தனை அதிகம் காணப்படாத விளைவுகளில் இலக்காக இல்லாத வேறு மொழிகளில் பகுதி (பேச்சிழப்பு?) ஏற்படலாம், அதோடு (பின்னிட்ட?) நினைவு மறதியும் ஏற்படலாம். விண்ணப்பதாரர் இந்த நிறுவனம் அவற்றுக்குப் பொறுப்பேற்காது என்று ஒத்துக்கொள்கிறார்…..[6]

இந்த ஒப்பந்தத்தின் சீன மொழி வடிவை நோக்கித் திருப்புகிறாய், அதில் சில சொற்கள் உன்னுள் கொஞ்சம் கவலையைத் தூண்டினாலும், நீ ஏற்கனவே முடிவெடுத்தாயிற்று, இனி பின் செல்ல முடியாது. ஒப்பந்தத்தின் மீதப் பகுதியைத் துரிதமாகப் பார்வையிடுகிறாய், உன் பெயரை பக்கத்தின் அடிப்பகுதியில் கையெழுத்தாக இடுகிறாய்.

அந்த சோதனைக் கூடம் மருத்துவத் தன்மையோடு, நல்ல சீரமைப்புடனும் இருக்கிறது. அதில் பெரிய சிக்கலான வடிவமைப்போடு உள்ள ஒரு எந்திரம் அறையின் பெரும்பகுதியை ஆக்கிரமிக்கிறது. ஒரு கரும் பலகையில் மூளையின் ஒரு பிம்பம் எதிரே தோன்றுகிறது.

“நாம் ஆரம்பிக்கும் முன்,” அந்தப் பொறியாளர் சொல்கிறார், “உங்களுக்குக் கேட்க ஏதாவது கேள்விகள் இருக்கின்றனவா?”

உன் மருத்துவ மனையின் மேலங்கியைப் பிடித்து இழுத்தபடி சொல்கிறாய், “என்னால் மாண்டரின் மொழியை மறுபடி கற்க முடியுமா?”

“கற்க சாத்தியம் உண்டு. ஆனால் முதல் தடவை கற்றபோது இருந்த இயல்பான தன்மை, லாகவம் இப்போது கிடைக்காது. பொதுவாக மொழிகளைக் கற்பது இழப்பதை விடக் கடினம்.”

நீ உன் மனதின் இறுக்கத்தை விழுங்கிக் கொள்கிறாய். லிலியனுக்காகச் செய்.  “அந்த மொழியை அழிக்காமல், பிரதி ஒன்றை எடுக்கக் கூடாதா?”

அந்தப் பொறியாளர் வருத்தமும், பரிவும் கலந்து புன்னகைக்கிறார்.  “எங்களது தற்போதைய தொழில் நுட்பம் இருக்கிற தரத்தில், பிம்பம் எடுக்கும் வழிமுறை அது பிரதி செய்யும் நியூரான்களை ஒடுக்குகிறதாகத்தான் இருக்கிறது, இது துரதிருஷ்டமானதுதான்.”

நியூரான்களை ஒடுக்குவது என்பது செயற்கையாக போதாமை ஒன்றை உருவாக்கி, குறைந்த அளவு கிட்டும்படி ஆக்கி, தேவையை உயர்த்துவதற்காக இருக்குமோ என்று அவநம்பிக்கையோடு யோசிப்பதை உன்னால் தவிர்க்க முடியவில்லை. இந்தப் போதாமை லிலியனைப் பல்கலையில் படிக்க வைக்க உனக்கு உதவுமென்றால், அதை நீ ஏற்கத் தயாராக இருக்கிறாய்.

பொறியாளர் உன் தலையெங்கும் மின்கடத்திகளைப் பொருத்துகிறார்; ஒரு மெல்லிய ரீங்காரம் எழுகிறது, அது உன் பற்களைக் கூசச் செய்கிறது.

பொறியாளர் உன் தலையில் கடைசி மின் கடத்தியைப் பொருத்தும்போது, எதிரிலிருக்கும் பலகையில் தெரியும் மூளையில் சில பகுதிகள் ஒளியூட்டப்படுகின்றன, இறங்கி ஏறி ஓடிக் கொண்டிருக்கின்றன, பின்புறத்தில் ஒரு சிறு துண்டு இயக்கம் பெற்றுள்ளது; பல்கலையில் நீ படித்த உயிரியலிலிருந்து மூளையின் பகுதிகளுடைய பெயர்களை நினைவுபடுத்திக் கொள்ள நீ முயல்கிறாய், ஆனால், உன் மூளையின் பல பகுதிகளின் பிம்பம் எதிரே ஒளியூட்டப்படுக் கொண்டிருக்கையில் உனக்கு இன்னமும் அந்தப் பகுதிகளின் பெயர்கள் நினைவு வரவில்லை.

பொறியாளர் சில விசைகளை நிலை மாற்றிச் சொடுக்குகிறார், சில கட்டுப்பாட்டு ஆணைகளை தட்டச்சுகிறார். உன் மீது படரும் உணர்வு மின் அதிர்ச்சி போல இல்லை, மாறாக உன் தலை மேல் தோல் மீது ஒரு சிலிர்ப்புணர்வு பரவுகிறது. உன் புத்தியில் பல எண்ணங்கள் தெறித்தோடுகின்றன, அவை இன்னதென்று உன்னால் அறிய முடியாத வேகத்தில் உள்ளன; கண்காணிப்புத் திரையை நீ பார்க்கிறார்ய், பொறியாளர் சுட்டிக் காட்டிய பகுதிகளிடையே ஒளி சுடர் விட்டுப் பாய்வதைக் கவனிக்கிறாய், உன் மூளையூடே பாதைகள் வகுக்கப்படுகின்றன, முன்னும் பின்னும் ஓடுகின்றன. விளக்குகள் மின்னுவது மேன்மேலும் துரிதப்படுகிறது, கடைசியில் அது ஒற்றை உருத் தெளிவில்லாத ஒளியாகி விடுகிறது, நீ பார்த்துக் கொண்டிருக்கையில், உன் உலகம் வெண்மையாகிறது.

பொறியாளரும், ஒரு செவிலியும் உன்னை அந்த நிலையத்தில் சில மணிகள் தங்க வைக்கிறார்கள், பக்க விளைவுகளைக் கண்காணிக்கிறார்கள்: கொஞ்சம் நிலை தடுமாற்றம், ஆனால் நேரமாக ஆக அது குறைந்து மறைகிறது. உன்னை யாராவது அழைத்துப் போக வருவார்களா என்று கேட்கிறார்கள்; நீயாக பொது போக்குவரத்து வசதி ஒன்றில் போவதில் ஒன்றும் பிரச்சனை இல்லை என்று நீ வற்புறுத்திச் சொல்கிறாய், செவிலி இணங்குகிறாள். கணக்காளர் உனக்குக் கொடுக்கப்பட வேண்டிய தொகையின் முதல் தவணையைக் கொடுக்கிறார். விரைவில் நீ அந்த நிலையத்தின் மைய வாயில் கதவு தாண்டி படிக்கட்டுகளில் இறங்கிக் கொண்டிருக்கிறாய். உன் தலை முடி மீது குளிர்ந்த காற்று வலுவாக வீசுகிறது.

வீட்டுக்குப் போகும் பஸ் பயணம்.. வினோதமாகத் தெரிகிறது. லாஸ் ஏஞ்சலெஸ்ஸிலிருந்து சான் காப்ரியேல் பள்ளத்தாக்குக்குப் போகையில், இங்கிலிஷ் பிரதானமாக இருந்த பெயர்ப்பலகைகள் குறைந்து கொண்டு போய், சீன மொழியில் பெயர்ப்பலகைகள் அதிகரிக்கின்றன. உனக்கு அந்த எழுத்து வடிவுகளிடையே உள்ள உருவமைதி புரிகிறது, அவை பின்னே பார்க்கும் கண்ணாடியில் இடவலமாக மாறித் தெரிவது புரிகிறது- ஆனால் அவை இப்போது வெறும் வடிவங்கள் மட்டுமே: பழகியவையாகத் தெரிகின்றன, ஆனால் அவற்றின் அர்த்தம் உனக்குத் தெரியவில்லை. உள்மூச்சு ஒன்றை ஆழமாக இழுத்துக் கொள்கிறாய், உன் இதயத்தை அத்தனை வேகமாகத் துடிக்காமல் இருக்கும்படி நினைப்பால் கட்டுப்படுத்துகிறாய். இதற்கெல்லாம் சுதாரித்துக் கொள்ள நாட்கள் பிடிக்கும், முதலில் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்த போது இங்கிலிஷ் மட்டுமே இருந்த உலகுக்கு ஈடு கொடுக்கும்படி உன்னை ஆக்கிக் கொள்ள எத்தனை காலம் ஆயிற்று, அது போலத்தான் இதுவும்.

உன் பணப்பையிலிருந்து அந்தக் காசோலையின் ஒரு மூலை வெளியே தெரிகிறது.

நீ சரியாகவே இருக்கிறாய்.

உன் குடும்பம் சீனப் புத்தாண்டை இந்த வாரம் கொண்டாடுகிறது. லிலியனுடன் கார் ஓட்டிக் கொண்டு, உன் அம்மா இருக்கும் முதியோர் வாழும் அடுக்ககத்துக்குப் போகிறாய்; ஒரு பெரிய கூடை நிறையப் பழங்களோடு வாயிற் கதவு வழியே இடித்துக் கொண்டு நுழைகிறாய். அவள் தன் மிகச் சிறு சமையலறையில் சமைத்துக் கொண்டிருக்கிறாள், இருவருக்கு அந்த இடம் பற்றாதது. அவள் கொசுவங்கள் கொண்ட ஒரு நீலநிறத் தடுப்பு அங்கியை அணிந்திருக்கிறாள். அதில் பொம்மைக் கரடிகளின் உருக்கள் பின்னப்பட்டிருக்கின்றன, அங்கு கொதித்துக் கொண்டும், பொறிபட்டுக் கொண்டும் இருக்கும் அத்தனை பண்டங்களின் வாசனையையும் முகரும்போது உன்னால் புன்னகைக்காமல் இருக்க முடியவில்லை.

“பாங்மொங்?” நீ காண்டோனியச் சீனத்தில் கேட்கிறாய். உன்னால் நினைவு கூர முடிகிற சில காண்டோனியச் சொற்களில் அது ஒன்று- நாட்கள் கடந்த போது, உனக்குத் தெரிகிறது உன் காண்டோனியத்திலிருந்தும் பல சொற்கள் எடுத்துக் கொள்ளப்பட்டு விட்டன, அவற்றின் வேர்கள் மாண்டரீன் சீனத்தோடு பின்னியவை என்பதால், மாண்டரினோடு அவையும் வெட்டப்பட்டு விட்டன.

“(?????). (????????)” உன் அம்மா சொல்கிறாள், அங்கே உள்ள நீண்ட சாயும் இருக்கையை நோக்கிச் சைகை செய்கிறாள். நீயும், லிலியனும் உட்கார்கிறீர்கள். டெலிவிஷனில் ஒரு சரித்திர நாடகம் ஓடுகிறது. அதன் கீழ்ப் பகுதியில் உள்ள எழுத்து வரிகள் வேகமாக ஓடுவதால் உன்னால் ஒலிகளை எழுத்துக் குறியீடுகளோடு இணைத்துப் பார்க்க முடியவில்லை; லிலியன் தன் செல்பேசியில் ஏதோ கவனித்து எழுதிக் கொண்டிருக்கிறாள்.

சில கணங்கள் இப்படிக் கழிகின்றன, உன் பார்வை தொலைக்காட்சித் திரையில் குவிந்திருக்கிறது, ஏதாவது உன்னால் புரிந்து கொள்ள முடியுமா என்று நீ பார்க்கிறாய், எதானாலும் சரி; சில சமயம் ஒரு சொல் உன் நினைவில் எதையோ தூண்டுகிறது, ஆனால் அந்தச் சொல்லுக்கு என்ன அர்த்தம் என்று விளங்குமுன் அந்த ஒலிப்பும், பொருளும் எல்லாம் ஏற்கனவே கரைந்து விடுகின்றன.

“(?????)”

லிலியன் எழுந்திருக்கிறாள், நீயும் பின் தொடர்கிறாய். அந்தச் சிறு சாப்பாட்டு அறை மேஜையில் ஏகப்பட்ட உணவுப் பண்டங்கள் குவிக்கப்பட்டிருக்கின்றன: ரத்தினச் சிவப்பு சீன இறால், சிவக்க வதக்கப்பட்ட வெங்காயத் துண்டுகள்; பொரிக்கப்பட்டு, கொதிக்க வைத்த மீன்; தாமரைக் கிழங்குடன் வதக்கப்பட்ட பன்றி மாமிசம், கொஞ்சம் எண்ணெயில் புரட்டப்பட்டு வதக்கப்பட்ட காய்கள்… உன் அம்மாவிடம் இதெல்லாம் எத்தனை நன்றாகத் தெரிகின்றன என்று சொல்ல விரும்புகிறாய்; மாறாக உன்னால் அவளிடம் ஒரு சிரிப்பைத்தான் கொடுக்க முடிகிறது, அவள் புரிந்து கொள்வாள் என்று நம்புகிறாய்.

“(?????), (?????)” உன் அம்மா சொல்கிறாள்.

லிலியன் முழு வேகத்தோடு சாப்பாட்டில் இறங்குகிறாள், இறால்களைத் தன் சாப்ஸ்டிக்கால் பொறுக்கி எடுக்கிறாள்; நீ அவளைக் கண்டித்து, சாப்பிடும்போது மரியாதைகளைக் கடைபிடிக்கச் சொல்கிறாய்.

“ஆனால் (?????) சொன்னாரே நான் ஆரம்பிக்கலாம் என்று,” லிலியன் சொல்கிறாள்.

“ஆனாலும்,” நீ சொல்கிறாய். உன் அம்மாவின் தட்டில் கொஞ்சம் உணவை முதலில் வைக்கிறாய், பிறகு லிலியனின் தட்டில்; கடைசியில் உன் தட்டில் கொஞ்சம் உணவை வைத்துக் கொள்கிறாய். உன் அம்மா சாப்பிடத் தொடங்கிய பின்னரே நீ சாப்பிட ஆரம்பிக்கிறாய்.

லிலியன் உன் அம்மாவுடன் பேசுகிறாள்; அவளுடைய மாண்டரின் கொஞ்சம் தட்டுத் தடுமாறிச் செல்கிறது, ஆரம்பிக்கிறது, நிற்கிறது, அமெரிக்க உச்சரிப்பு அதில் தடிப்பாகப் படிந்திருக்கிறது, ஆனால் அவளுடைய உற்சாகம் உன்னைச் சூழ்ந்து பெருகும் உரையாடலில் நன்கு புலப்படுகிறது. நீ அமைதியாக இருக்கிறாய், உன் அம்மா சிரிக்கும்போதும், லிலியன் புன்னகைக்கும்போதும் நீ உனக்குள் ஒடுங்குகிறாய்.

நீ லிலியனுக்கும் உன் அம்மாவுக்கும் இடையில் அமர்ந்திருக்கிறாய்; மேஜைக்கு எதிர்ப் புறம் அமர்ந்தால் இடைவெளி மிக அதிகமாக இருந்திருக்கும், மூவரையும் மிகவும் கலைத்துப் போட்டிருக்கும். வார்த்தைகள் உன்னைச் சூழ பொழியும்போது, உனக்கும், அம்மாவுக்கும், உனக்கும் லிலியனுக்கும் இடையில் உள்ள வெளி வளர்ந்து கொண்டு பெரியதாகிக் கொண்டே போகிறது என்று உன்னால் உறுதியாகச் சொல்ல முடியும்.

சாப்பாட்டுக்குப் பிறகு, உன் அம்மா தட்டுகள், பாத்திரங்களைக் கழுவுகிறாள்- மறுபடி அவள் உன் உதவியை மறுக்கிறாள்- நீயும் லிலியனும் வசந்த விழா நடப்பதை தொலைக்காட்சித் திரையில் பார்க்கிறீர்கள். ஒரு அமெரிக்க பாப் பாடகர், மேடையில் இருக்கும் ஒரே ஒரு வெள்ளையர், மாண்டரினில் ஒரு பாட்டுப் பாடுகிறார். அவள் பாடுவது என்னவென்று உனக்குத் தெரியாத போதும், அவளுக்கு அமெரிக்க உச்சரிப்பு இல்லை என்பது உனக்குத் தெரிகிறது.

“அவள் தன் மாண்டரினை விலைக்கு வாங்கி இருக்கிறாள் என்று நான் பந்தயம் கட்டத் தயார்,” லிலியன் சொல்கிறாள். அது இலேசாகச் சொல்லப்பட்ட ஒன்று, ஆனால் அதில் ஏதாவது அருவருப்பு தென்படுகிறதா என்று பார்க்க நீ முயல்கிறாய்.

“அது என்ன மோசமானதா?” நீ கேட்கிறாய்.

“எனக்குத் தெரியாது; அது ஏதோ கொஞ்சம்… (தகாத வழியில் கவர்ந்தது) போல இருக்கு, உங்களுக்கு அது தெரியுமே.”

உனக்கு அது தெரிந்திருக்கவில்லை. ஆனால் லிலியனுக்கு இன்னும் தெரியாது. வீட்டுக்குத் திரும்பியதும் அவளிடம் சொல்ல வேண்டும் என்றுதான் நீ திட்டமிட்டிருந்தாய், ஆனால் அதை எப்படி ஆரம்பிப்பது என்று உனக்குத் தெரியவில்லை. இப்போதோ… நீ பலி கொடுத்ததை ரகசியமாக வைக்க விரும்புகிறாய், ஏனெனில் அது உன்னைப் பற்றியது இல்லை- அது எப்போதுமே உன்னைப் பற்றியதாக இருக்கவில்லை. ஆனால் எப்படியுமே லிலியன் கொஞ்ச நாட்களில் கண்டு பிடிக்கத்தான் போகிறாள்.

அவள் எப்படி அதை எடுத்துக் கொள்ளப் போகிறாள் என்று உனக்குத் தெரியவில்லை. அவள் புரிந்து கொள்வாளா?

லிலியன் தன் தலையை உன் தோள்மீது சாய்த்திருக்கிறாள். நீ அவளை கிட்டே இழுத்து அணைக்கிறாய், உன் சிறுமி இவ்வளவு வேகமாக வளர்ந்து விட்டாள். நீ அவளுக்காக எவ்வளவு வேண்டுமானாலும் செய்வாய்,அவளுக்கு நல்ல எதிர்காலம் அமையவேண்டும் என்பது எவ்வளவு முக்கியம், நீ அவளை எத்தனை நேசிக்கிறாய், அவளுக்குச் சிறப்பானவைதான் அமைய வேண்டும் என்று விரும்புகிறாய், என்று அவளிடம் சொல்ல விரும்புகிறாய்.

ஆனால் உன்னிடம் எஞ்சி இருப்பது மௌனம் மட்டுமே.

***

கதையின் இங்கிலிஷ் மூலத்தை இங்கே காணலாம்: http://clarkesworldmagazine.com/lu_02_19_reprint/

இதன் மறுபதிப்பு கிட்டுமிடம்: Science Fiction of the Year – edited by Neil Clarke

Published by Night Shade books, New York. 2019/ 599 pages.

Translator Maitreyan and Solvanam magazine thank Ms. Lu for permitting us to translate and publish this story in Solvanam.com.

இந்தக் கதை மூல ஆசிரியர் எஸ். சியூயீ லு அவர்களின் அனுமதியோடு மொழி பெயர்க்கப்பட்டிருக்கிறது. அவருக்கு என் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதைச் சொல்வனம் பத்திரிகையில் பிரசுரிக்க அவர் அனுமதித்திருக்கிறார் அதற்கு சொல்வனம் பத்திரிகை சார்பில் என் நன்றி.


[1] பெரு நாட்டில் உள்ள மலையுச்சிச் சிறு கோட்டை நகரம். தென் அமெரிக்கப் பழங்குடியினரான இங்க்காக்களின் சாம்ராஜ்யம் நடந்த காலத்தில் கட்டப்பட்ட கோட்டை இது. இன்று உலகத்தின் சில அதிசயக் கட்டடங்களில் ஒன்றாகப் பெயர் பெற்றிருக்கிறது.

[2] மலைவேம்பு= மஹாகனி மரம் – Mahogany

[3] குரலியல்= Phonology

[4] ”நான் காண்டோனியத்தில் பேச விரும்புகிறேன். ” என்று பொருள்.

[5]  “நான் ஒரு முக்கியமான முடிவை எடுக்கவிருக்கிறேன்.” என்று பொருள்.

[6] இங்கு தமிழில் கொடுக்கப்பட்டாலும் கதைப்படி இந்த வாக்கியங்கள் இங்கிலிஷில் உள்ளவை. மையப் பாத்திரம் சீன மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர். அதனால் அடைப்புக் குறிக்குள் கேள்விக்குறியோடு காணப்படும் சொற்கள் அவருக்குப் புரியாமல் இருப்பதைக் கதை சொல்கிறது. மூல வரிகள் பின்வருமாறு.

The company’s (proprietary?) algorithms (iterate?) through near-infinite (permutations?) of sentences, extracting a neural map. The (cognitive?) load on the brain will cause the Applicant to experience a controlled stroke, and the Applicant’s memory of the Language will be erased. Common side effects include: temporary disorientation, nausea. Less common side effects include partial (aphasia?) of nontarget Languages and (retrogade?) amnesia. Applicant agrees to hold the company harmless….

***

One Reply to “தாய்மொழிகள்”

  1. இன, மொழி, வர்த்தகம், அரசியல் அடி நாதத்துடன் படைக்கப்பட்ட அருமையான கதை. சில வருடங்களுக்கு முன்னர் உங்கள் இதழில் மூளை மாற்று அறுவைச் சிகிச்சையை மையமாகக் கொண்டு ஒரு சிறந்த கதை வெளியானது. இந்தப் புனைவு அதை நினைவிற்குக் கொண்டு வந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.