இரு புறமும் சுழலும் கடிகாரங்கள்

மாலதி சிவா

அவள் தட்டாமாலை சுற்றினாள். நெடுக்குவாக்கில் நிறைய மடிப்புகளுடன் கூடிய  அந்த அழகிய வான் நீல நிற  நீண்ட பாவாடை அவளைச் சுற்றி நிறைய இதழ்கள் கொண்ட பெரிய நீல நிறப் பூ போல விரிந்தது.  கண்ணுக்குத் தெரியாத மாபெரும் ஒவியன் தன் பல வண்ணத் தூரிகைகளை பச்சை வண்ண ஓவியத் திரையில்  உதறியதைப் போல,  தொடு வானம் வரை நீண்ட பச்சைப் புல்வெளியில் அத்தனை வண்ணப்பூக்களின் சிதறல். கண்ணுக்கெட்டிய தூரம் வரை மலர்கள், மலர்கள்……………,  பல வண்ணங்களில், ஒவ்வொரு வண்ணத்தின் பல சாயல்களில். மாபெரும் பச்சைக்கடலில் வண்ண வண்ண அலைகள் என்று எண்ணிக்கொண்டாள். 

நேர் எதிரே பச்சைப் புல்வெளி மேடேறிச் சென்றது. இடது கைப் பக்கம் வெகு தூரத்தில் ஒரு காற்றாடி ஆலை. அதன் அருகில் இருந்த சிவப்பு நிற ஓட்டு வீட்டின் புகை போக்கியில் மெல்லிய இள நீலநிறப் புகை சுழன்று புடவை போல மேலேறியது.  ஹாலந்தின் ஏதோ ஒரு கிராமமோ? வலது பக்கம் வெகு தூரத்தில் நதி வளைந்து ஓடியது. நதிக்கு அந்த புறம் மலை.

பக்கத்தில் இருந்த இள ஆரஞ்சு நிறப் பூவை குனிந்து முகர்ந்தாள் மாயா.

“அம்மா! என்னம்மா பண்ற?” பின்னாலிருந்து சிரித்துக்கொண்டே மித்ரா    கேட்டான்.

“நீ எங்கடா இங்க வந்தே?’

“நீ என்னை நினைச்சுண்டயா இப்ப?”

அவள் யோசித்தாள். “ ம்…….எப்ப? நிறைய ஒண்ணு பின்னால ஒண்ணா சங்கிலி போல தொட்டு தொட்டு நினைவு.  ஆரம்பிச்ச இடத்துலேந்து ரொம்ப தூரம் போய், எப்படி ஆரமிச்சதுன்னு தெரியலையே? எப்ப நினைச்சேன்? ஆ…. இந்த பூவைப் பாக்கும்போது , நாம இமய மலை கிட்டல்லாம் போயிட்டு, மலர்களின் பள்ளத்தாக்கு பாக்காம வந்தமே! அப்ப நானும் நீயும் ரொம்ப ஏமாற்றமானோமே அதை நினைச்சேன் கொஞ்ச நேரம் முன்னாடி! அதுனால  நீ வந்தயா ? நல்லதா போச்சு!”

அவன் பதிலளிப்பதற்குள் அவளுக்கு சந்தேகம் வந்தது. அவள் ஐந்தரை அடி உயரம், அவன் ஆறடி உயரம். எப்போதும் கொஞ்சம் நிமிர்ந்து பார்த்துதான் பேசுவாள். “மித்ரா! இப்போ  நான் ரொம்ப நிமிர்ந்து பார்த்து பேசவேண்டியிருக்கே ஏண்டா? நீ உயரமாயிட்டயா,  இல்ல நான் குட்டையாயிட்டேனா?”

“அம்மா! உனக்கு இப்ப பத்து வயசு! அதான்! நீயே சொல்லியிருக்கயே, நீ  உன்னுடைய பதினைந்தாவது வயசிலேதான் ஐந்தரை அடி உயரமானன்னு. அப்போலேந்து அதே உயரந்தான்னு!”

 மாயா தன்னை ஒரு முறை பார்த்துக்கொண்டாள். “ஆமா! கரெக்ட்!  நான் பத்து வயசுலே இருந்த மாதிரிதான் இருக்கேன்! உனக்கு என்னை எப்படி அடையாளம் தெரிஞ்சது? எனக்கு உன் கடந்த கால  ‘நீ’ தெரியறது ஆச்சரியமில்லை , ஏன்னா நான் அதைப் பாத்திருக்கேன். நீ என்மிகப் பழைய கடந்த காலத்தின் பகுதி இல்லையே ! உனக்கு எப்படி என்னை தெரிஞ்சது?”

“அம்மா! நீ என் அம்மா, அதுனால நீ என்னவா இருந்தாலும் எனக்குத் தெரியும்மா! …… “ கொஞ்சம் இடைவெளி விட்டு சிரித்துக்கொண்டே “அப்படின்னு பொய் சொல்ல மாட்டேன்.!” என்றான்.

“இப்ப நீ பத்து வயசு பெண்ணா இருப்பேன்னு தெரியும். தவிர உன்னோட சின்ன வயசு ஃபோட்டோ பாத்திருக்கேனே! அதுனால தெரிஞ்சுது! “

“குனிடா” 

குனிந்தான். அவன் நெற்றியில் முத்தமிட்டு “சரி இப்ப நிமிந்துக்கோ! இது என்ன இடம்? நான் எப்படி வந்தேன்?”

“அம்மா! நீ ரண்டு உள்ளங்கைகளுக்கிடையிலே அந்த தாயக்கட்டையை வச்சு சும்மா உருட்டிக் கொண்டிருந்தே!  அம்மா! ஜாக்கிரதை! கீழ விழுந்துடப் போறதுன்னு நாங்க எல்லாரும் கத்தி சொல்லும்போதே உன் கை தவறி அது உருண்டு கீழ விழுந்துவிட்டது. நீ இந்த விளையாட்டுக்குள்ள வந்துட்டே!”

மாயா அவனைப் பார்த்துக்கொண்டே புல் தரையில்  சரிந்து மெல்ல உட்கார்ந்தாள்.

“இப்ப நான் என்ன பண்ணனும்?” குரல் மிக மெதுவாக ஆழத்திலிருந்து வந்தது. “எப்படி இந்த விளையாட்டுலேந்து வெளியில வர்றது? இது என்ன விளையாட்டு?” ஒரு சின்ன இலை நடு நடுங்கியபடி அவள் மடியில் விழுந்தது.

“அம்மா! பயப்படாதே!  இது பரம பதம் மாதிரியும் இருந்தது, அப்புறம் சில  போர்ட் கேம்ல இருக்கிற மாதிரி நிறைய சான்ஸ் கார்டும் இருந்தது. ஒவ்வொரு இடத்திலையும்  கிடைக்கிற க்ளூலேந்து நீ அடுத்த இடத்துக்குப் போக முடியும்”

“நீயும் விளையாடறயா? நீ எப்படி இதுக்குள்ள வந்தே?”

“இல்லம்மா! இந்த விளையாட்டுல உனக்கு மூன்று முறை  உதவி அழைப்புக்கான வாய்ப்பு இருக்கு. முதல் உதவியா நான் வந்திருக்கேன்! நீ  இந்த விளையாட்டு என்னன்னு தெரியாமலே வந்ததுனால நான் இங்க கொஞ்ச அதிக நேரம் அனுமதிக்கப் பட்டிருக்கிறேன்.”

“இந்த விளையாட்டின் இறுதி இலக்கு என்ன?“

“நீ உன்னுடைய   சரியான நிகழ்காலத்துக்கு வர வேண்டும் . நீ போகிற இடத்தில் அதற்கான குறிப்பு  இருக்கும். சரியாக உபயோகித்தால், அடுத்த  காலத்திற்கு  முன்னேறுவாய். தவறானால் அதிலிருந்து பின் காலத்திற்கு தள்ளப்படுவாய்..

உன் முன்னால் இருக்கிற எந்த இடத்தில் உனக்கான குறிப்பு இருக்கிறது என்பதையும் சரியாக ஊகிக்க வேண்டும். அதற்கான உதவியை நீ யாரையாவது அழைத்துப் பெறலாம். 

இந்த முறை அந்த க்ளூ இருக்கும் இடத்தைச் சொல்ல நான் வந்திருக்கிறேன்!”

“சொல்லு! எங்க போகணும்? ”

“ நேர் எதிர்ல தெரிகிற அந்த புல்வெளியாலான மேட்டிற்கு அந்த புறம் நீ போக வேண்டும் அங்க உன்னோட பத்தாவது வயசுல தல்லாகுளத்தில உங்க வீட்டுக்கு எதிர் சாரியில இருந்த அழகர் மண்டகப்படி மண்டபத்துல …” மித்ரா மண்டகப்படி என்ற வார்த்தையை கொஞ்சம் தடுமாறி சொன்னான்.

அவள் சிரித்துவிட்டு”ஆமா! அந்த அழகர் கோவில் ரோடு முழுக்க, .தல்லாகுளம் ஏரியா முழுக்க சித்திரை திருவிழாம் போது அழகர் தங்கற, சேவார்த்திகள்  தங்கற மண்டகப்படி மண்டபங்கள் நிறைய இருக்கு. அதில எது?” எனக்கேட்டாள்.

“உனக்குத் தெரிஞ்ச ஒரு அக்கா! சாந்தா அக்கான்னு……………………”

“ஐய்யோ! தெரியலயேடா! யாரு?”

“உனக்கு ரொம்ப பழக்கம்னு சொல்ல முடியாது, ஆனா அவங்க வீட்டுக்கு நீ சில தடவை போயிருக்க”

சில தடவை மட்டுமே பார்த்த அக்கா…. எப்படி கண்டிபிடிப்பது? தலையைப் பிடித்துக்கொண்டு யோசித்தாள்.

“எங்க இருந்த மண்டபம்? எங்க வீட்டுக்கு எதிர்சாரி…… அழகர் கோவில் ரோடுக்கு அந்த பக்கம்…… வேற ஏதாவது அடையாளம்?”

“வாசலில் பெரிய புளிய மரம். அந்த புளிய மர  நிழலில் இருக்கற செட்டியார் கடையில  நீ உங்க அம்மாவுக்கு அடிக்கடி தேங்காய் சில்லு வாங்கி கொடுத்திருக்கிற “

“இரு ! இரு ! யோசிக்கறேன்! பத்து வயசுல சில தடவை பார்த்த அக்கா, அழகர் மண்டபம்!  செட்டியார் கடை பக்கத்தில!  கொஞ்சம் கொஞ்சம் ஞாபகம் வரது!  ம்………………. வந்து….அந்த அக்காக்கு பல்லு கூட கொஞ்சம் துருத்திண்டு  இருக்கும்! சரி ! சொல்லு! என்ன பண்ணனும்?”

“அந்த அக்கா கிட்டதான் உன்னோட அடுத்த க்ளூ இருக்கு !”

“அந்த அக்கா கூட நான் நிறைய பேசினது கூட இல்லையே! என்ன சொல்லணும்? எப்படி கேட்கணும்”

“ நீ பேச ஆரம்பிச்சா உனக்கே தெரியும். கவலைப் படாதே!அப்புறம் இன்னுமொரு முக்கியமான விஷயம்! ஒவ்வொரு இடத்திலும் நீ குறிப்பிட்ட கால அளவுதான் தங்க முடியும். அதுக்கு மேல் தங்கினால், அதை விட்டு வெளியே போவதற்கான எல்லா பாதைகளும் மூடப் பட்டுவிடும்!”

“சரி! வா போகலாம்!”

“அம்மா! கொஞ்சம் ஓட வேண்டும் என நினைக்கிறேன்! தூரத்தில் இடது வலது புறங்களை கூர்ந்து நோக்கினால்,  சுவர் இரு புறங்களிலும் மெதுவாக வளர்ந்து வருவது தெரிகிறது! வா! ஓடலாம்!”

இருவரும் ஓடத் துவங்கினர்.

“பயப்படாதே அம்மா! நீ அந்த அக்காவைக் கண்டுபிடித்துவிடுவாய்! நீ சொல்ல வேண்டியதை சொன்னதும், அவர்கள் உனக்கு வேண்டிய க்ளூவைக்கொடுப்பார். அத விடுவிக்கிற புத்திசாலித்தனமும் உனக்கு இருக்கிறது! தைரியமாகப் போ! உதவி தேவைப்படும் பொழுது நீ நினைப்பவர் வருவார். இன்னும் நேரில் வரும் உதவி இரண்டும், குரல் வழி உதவி இரண்டும் உனக்கு இருக்கின்றன. தவிர நீ விளையாடுகிற விதத்தைப் பொறுத்து  உனக்கு வெகுமதிகள் கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டு. சீக்கிரம் வெளியே வந்து விடலாம்!” அவன் ஓடிக்கொண்டே பேசினான்.

“பரவாயில்லை அம்மா! நீ நன்றாக வேகமாக ஓடுகிறாய் !”

சுவர் இரு புறங்களிலும் வளர்ந்து வந்து கொண்டிருந்தது. இரண்டு பக்க சுவர்களின் இடைவெளி குறைந்து கொண்டே வந்தது.

மூச்சை இழுத்துக்கொண்டு இருவரும் வேகத்தைக் கூட்டினர்.

சுவர் அருகில் வந்து சேர்ந்தனர். தலைக்கு மேல் வெகு உயரத்தில் சுவர்களின் மேல்பாகம் சிறுத்து நெருங்கித் தெரிந்தது .அவள் இடைவெளியில் கால் வைத்து அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“நீ?”

 “எனக்கான நேரம் இப்போது முடியும். நான் திரும்பி நம்முடைய இடத்துக்குப் போய்விடுவேன்!”

இடை வெளியைக் கடந்து அந்தப் புறம் சென்றாள். இப்போது இடைவெளி நான்கு அடி ஆனது. மித்ரா அங்கிருந்து அவளைப்பார்த்து தைரியம் கொடுப்பது போல  லேசாகச் சிரித்து கையை அசைத்தான். பார்க்க பார்க்க மறைந்து போனான். சுவரும் இடை வெளி இன்றி மூடிக்கொண்டது.

அவள் புல்வெளியின் மறுபக்கம் சரிந்த பாதையில் நடக்கத் தொடங்கினாள்.

கோணலும் மாணலுமாக தெருக்கள். பார்க்க பார்க்க எந்த இடம் என்ற குழப்பம் மிஞ்சியது. எல்லா தெரிந்த இடங்களும் போல இருந்தது. உன்னிப்பாக கவனித்ததில் அவள்  பத்து வயதில் போயிருந்த  எல்லா வீடுகளும் என்ற தெளிவு வந்தது. 

ஒரு தெருவில்    அவளுடைய பத்து வயதில்  ஒரு விடுமுறைக்குப் போன முசிறி மாமா வீடு இருந்தது. இன்னொரு தெருவில் சோழவந்தான் பெரியப்பா வீடு. அங்கிருந்துகொஞ்சதூரம் நடந்து பல இடங்களில் திரும்பினால் நல்லமாங்குடியில் தாத்தா பாட்டி வீடு. கொல்லையிலிருந்து தாத்தா கை நிறைய செம்பருத்திப்பூக்களுடன் வந்து கொண்டிருந்தார். அவளுக்கு உடனே உள்ளே போய் தாத்தா பாட்டியைப் பார்க்கவேண்டும் போல இருந்தது. கண்ணீரையும் ஆசையையும் அடக்கிக்கொண்டு மற்றொரு தெருவிற்கு விரைந்தாள். அங்கு அப்பாவின் சித்தப்பா , அவள் சின்ன தாத்தா வீடு திருச்சி தில்லை நகரில்!! 

இந்த குறுக்கு மறுக்கில் எப்படி மதுரை தல்லாகுளம் வீட்டைக் கண்டுபிடிப்பது?நின்று மூச்சை இழுத்து சுற்றும் முற்றும் பார்த்தாள். இது சின்ன சொக்கிகுளம் நூலகம் அல்லவா? எத்தனை பகல் பொழுதுகள் இங்கு ஆன்ந்தமாக கழிந்திருக்கின்றன? கடவுளே! நன்றி! நன்றி! இங்கிருந்து அழகர் கோவில் ரோடு கண்டுபிடிப்பது சுலபம்! நிதானம்! நிதானம்! அவசரப்படாதே! மெதுவாக சரியாக பார்த்துக்கொண்டே போ! மாயா தன்னை ஆசுவாசப் படுத்திக்கொண்டாள்.

வழக்கம்போல சாந்தா அக்கா மண்டபத்தின்  கம்பிகிராதி கதவுக்கு முன்னால் இருந்த பெரிய நீண்ட கல் படியில் உட்கார்ந்திருந்தாள்.

இவளைப் பார்த்ததும் பெரிதாக சிரித்து, வீட்டு முன்னால் இருந்த மண் தரையைக் கடந்து இவளருகில் வந்தாள். எடுப்பாக இருந்த முன்பற்கள் இரண்டும் அந்த சிரிப்பை இன்னும் பெரிதாக காட்டின.

“வா! வா! மாயா! எத்தனை நாள் ஆச்சு? ஃப்ரண்ட் வீட்டுக்குப் போயிட்டு வரயா? உள்ளே வா!” கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு போனாள். 

அவள் எப்பொழுது அந்த மண்டபத்தைக் கடந்து போனாலும் அந்தப் பக்கம் திரும்பாமல் வேக வேகமாக கடக்க முயலுவாள். அந்த அக்காவும், சர்மாஜி மாமா என்ற  வினோத பேரால் அழைக்கப்பட்ட அந்த தாத்தாவும், எத்தனை முறை பார்த்தாலும் ஒரே மாதிரியான நான்கு கேள்விகளைக் கேட்பார்கள். அந்த நான்கு கேள்விகளுக்கு அப்புறம் பேச ஒன்றும் இல்லாமல் இவள்  விழித்துக்கொண்டிருப்பாள். கிளம்ப எத்தனிக்கும் போது அக்கா” என்ன அவசரம்? இரேன் பேசிட்டுப் போலாம்” என்பாள்.

“ அம்மா, அப்பா சௌக்யமா? முதல் கேள்வி வந்து விட்டது.

“ம்”

“நீ இப்ப என்ன கிளாஸ் படிக்கறே?” இரண்டாவது.

“ஆறாவது அக்கா!”

அந்த வீட்டுக்குள் எப்போதும் இருக்கும் மெல்லிய குளிரான இருட்டு  இப்போதும் இருந்தது. ஒரு ஸ்பூனால் துண்டு போட்டால் அல்வா துண்டு போல அந்த இருட்டு மென்மையாய், மெல்லிய பளபளப்பாய் தள தளவென்று  துண்டு போட வரும் என்று அவளுக்குத்தோன்றியது. இத்தனைக்கும் ரொம்ப உயரமான மேற்கூரை , எடுத்துக்கட்டின மண்டபம்.

சர்மாஜி தாத்தா மெதுவாக சமையலறையிலிருந்து வந்தார். வயதோ, இருட்டோ, அவர் என்னைப்பார்த்து  “யாரு?” என்றார்.

“நம்ம போஸ்ட் மாஸ்டர் மாமாவோட பொண்ணுப்பா!” என்றாள் அக்கா சத்தமாக.

“அப்படியா! வாம்மா! அப்பா, அம்மா சௌக்யமா?’ மெல்லிய குரலில் கேட்டார்.

“சௌக்யம் தாத்தா!”

“என்ன படிக்கறே?”

“ஆறாவது தாத்தா”

“ நன்னா படி! சாந்தா! குழந்தைக்கு சாமி பிரசாதம் கொடு!”

தாத்தா பின்பக்கம் கிணற்றடிக்குப்போனார்.

அக்கா அந்த பெரிய கூடத்தை ஒட்டி இருந்த சின்ன சமையலறையிலிருந்த பூஜை அலமாரியிலிருந்து இரண்டு திராக்ஷையும் இரண்டு கல்கண்டும் கொண்டுவந்து கொடுத்தாள்.  அதோட சேர்த்து  க்ளூ கொடுக்கிறாளா என்று மாயா அவள் முகத்தைப்பார்த்தாள்.  அக்கா முகத்தில் மாற்றம் இல்லை. நைந்து போன பாயை  விரித்து தானும் உட்கார்ந்து அவளையும் உட்காரச் சொன்னாள்

“நல்ல  வெய்யில் இல்ல?”

“ம்.. ஆமாம்!”

“அம்மாவை பத்து நாளைக்கு முன்னால கோவில்ல பாத்தேன்! “

…………………. 

அக்கா வழக்கத்தைவிட ஏதோஅதிகம் சொல்ல வருகிறாற்போல்  தோன்றியது.

“அப்போ, எனக்கு யாரோ ஒரு நல்ல வரன் இருக்கிறதா சொன்னா! ஜாதகம் குடுக்கறேன்னு சொன்னா. மறந்து போயிட்டா போலிருக்கு! கொஞ்சம் ஞாபகப்படுத்தி குடுக்க சொல்லு!” சாதாரணமான குரலில் சாதாரண முக பாவத்தோடு சொல்லிக் கொண்டே  அவளைப்பார்த்தாள். பத்து வயதிற்குள் இருந்த அறுபத்தைந்துக்கு புரிந்தபோது கொஞ்சம் வலித்தது. 

“சொல்றேங்க்கா!”

அக்கா நல்ல சிவப்பு . வழக்கம்போல் ராமர் கலர் புடவையும், (அடிக்கடி இந்த புடவையில்தான் அக்காவைப் பார்த்திருக்கிறேன் என்று மாயா நினைத்தாள்) கறுப்பு சட்டையும் போட்டிருந்தாள். கழுத்தில் ஒரு கறுப்பு மணிமாலை, கையில் சிவப்பு கலர் ரப்பர் வளையல்கள்.

“ஞாபகமா சொல்லு என்ன?” . 

“சாரிக்கா! உங்களை நான்…. இல்ல உங்களைப் பத்தி… வந்து …… “ குற்ற உணர்வும், அவமானமும், தயக்கமும் தொண்டையை அடைத்தது.

“ஏண்டி என்ன ஆச்சு?”

சொல்ல வேண்டாம் என்று நினைத்ததை , சொல்லத்தேவையில்லாததை ஏன் சொல்கிறேன்  என்று அவளுக்குப் புரியவில்லை.

“அன்னிக்கு, விசாலம் மாமி, ஜானகி மாமி , சாலாச்சி பாட்டி எல்லாரும் உங்களைப் பத்திப் பேசிண்டிருந்தா, உங்களுக்கு கல்யாணம் ஆகலங்கறதைப் பத்தி…… நானும் பக்கத்தில நின்னுண்டு இருந்தேன். ’ஆமா சாந்தா அக்காக்கு பல்லு நீளமா இருக்கு அதான் கல்யாணம் ஆகலைன்னேன்’ எல்லாரும் சிரிச்சா! எல்லாரும் சிரிச்சவுடனே எனக்கு ஏன் சொன்னேன்னு கஷ்டமாயிடுத்துக்கா!  மன்னிச்சுக்கோங்கோ! “

அக்கா அவளையே சற்று நேரம் பார்த்தாள்.

“போனாப் போறது போ! பரவாயில்லை! நீ சின்னக் குழந்தைதானே! அவாள்ளாம் பெரியவா! அவாளுக்கே தெரியலை!! நீ பாவம், என்னத்தைக் கண்ட?” என்றாள் அக்கா

மாயாவிற்கு அழுகை வரும் போல இருந்தது.

“பல்லு நீளம்தான்! ஆனா கல்யாணம் ஆகாததற்கு அது மட்டும்  காரணம் இல்லை! பெரிய காரணம்  இதுதான்…” என்று அக்கா தன் பாசி மணி மாலையையும் , ரப்பர் வளையலையும் தொட்டுக் காண்பித்தாள்.

“சரி ! சரி! நீ வருத்தப்படாதே!” என்று புடவை நுனியில் முடிந்து வைத்திருந்த துண்டு கடுதாசை எடுத்து நீட்டினாள்.

“அடிக்கடி வா! என்ன?” 

  **********************************************************

அவளுக்கு கால் வலித்தது.  மலை சின்னதுதான், ஆனால் நெஞ்சேற்றமாக இருந்தது.சுற்றும் முற்றும் பார்த்தாள்.  சற்று தூரத்தில்  ஒரு சின்னப் பாறை தெரிந்தது.நல்ல வேளையாக ஒரு சின்ன மரம் அதன் அருகே கவிந்தாற்போல் நின்றுகொண்டிருந்தது. அப்பாடா! இந்த வெயிலுக்கு அதன் நிழல் குளிர்ச்சியாக இருந்தது.  வெயில் விழாத பாறை தண்ணென்று இருந்தது. பின்னால் சின்ன சர சரப்பு சத்தம்.  ஜாக்கிரதை உணர்ச்சியுடன் சட்டென்று எழுந்து நின்று சுற்றும் முற்றும் பார்த்தாள்!

 அப்பா!!!!!!!!!!!!! அப்பா தானே அது?

பாறையின் மறுபக்கத்திலிருந்த சின்ன ஒற்றையடிப் பாதையில் ஏறி வந்து கொண்டிருந்தார்.

இவளைப் பார்த்ததும் சட்டென்று சிரித்தார்.

“ மாயா……………! என்னடா கண்ணா! எப்பிடிம்மா இருக்கே? எத்தனை வருஷம் ஆச்சு உன்னைப்பார்த்து!”

பாறையைச் சுற்றிக்கொண்டு இவள் அருகில் வந்தார்.

“உக்காரு ! உக்காரு மாயா! காலு ரொம்ப வலிக்கிறதா?”

“அப்பா! அப்பா! எப்பிடிப்பா இருக்கேள்? நான் உங்களைப் பார்த்து  முப்பது  எட்டு வருஷம் ஆச்சுப்பா!” அவர் கைகளைப் பற்றிக்கொண்டாள். 

“ஆமா! மித்ரா பிறந்த வருஷம் உன்னைப் பார்த்தது. அடுத்த வருஷம் நான் செத்துப்போயிட்டேனே!” என்றார் அப்பா.

அவள் முதுகு சொடுக்கியது.

அப்பா கலங்கலாகத் தெரிந்தார்.

அவள் ஒரு கையை விடுவித்துக்கொண்டு கண்ணைத் துடைத்துக்கொண்டாள்.

“இப்ப உங்களுக்கு என்ன வயசுப்பா?”

 “இந்த விளையாட்டுக்கு வெளியில என் வயசுக்கு அர்த்தம் எனக்கும் இல்ல , உனக்கும் இல்ல! இந்த விளையாட்டுல எனக்கு நாற்பத்தி நாலு வயசு. நீயும் , நானும்  உனக்கு பி.யூ. சி  சேர பணம் கட்டப் போனோமே! அந்த நாளைத்தானே இந்த பாதையை , இந்த பாறையைப் பாத்து நினைச்சே! அந்த கல்லூரியோட மரங்களடர்ந்த நீண்ட பாதை , அதோட  கல்லூரி அலுவலகத்துக்குத் திரும்பற பாதையின் இடது பக்க வளைவுக்கருகில் கிடந்த பெரிய பாறை ! ஞாபகம் இருக்கா?’

“ஆமாப்பா! அந்த நாளைத்தான் இப்ப நினைச்சிட்டு இருந்தேன்!”

“அப்ப உன்னோட ஸ்கூல்ல படிச்ச பொண்ணு ஒருத்தியைப் பார்த்தோம். அவளும் அங்க சேர வந்திருந்தா! அவ கூட கேட்டாளே என்னைப் பார்த்து இது உங்க அண்ணாவான்னு?”

“அப்பா!”அவள் கூச்சலிட்டு அவர் தோளில் குத்தினாள். “அந்தப் பொய்யை இன்னுமா மெயின்டைன் பண்றீங்க? பொய்! அவ அப்படி கேட்கவேயில்லை! அப்பாவான்னுதான் கேட்டாள்!”  அவள் அந்த பதினாறு வயது பெண்ணானாள் அந்த கணத்தில்.

அப்பா சிரித்தார்.

“சரி ! உனக்கு இப்ப  ஐம்பைத்தந்து வயது இல்லையா? அப்ப நான் உனக்குத் தம்பி இப்போ”

“போங்கப்பா! நான் உங்களோட பேசப் போறதில்லை!”

“இல்லம்மா! நான் சும்மா விளையாட்டுக்குச் சொன்னேன்! கிடைச்சுருக்கிற கொஞ்ச நேரத்தை வீணாக்க வேண்டாம்! ஏம்மா ! இந்த வயசுக்குள்ளயே உனக்கு கால் வலிக்கிறது! கஷ்டப்படறேயே!”

“ஆமாப்பா! ஆர்த்தரைடிஸ்! அதை விடுங்கோ! நீங்க எப்படிப்பா இருக்கேள்?”

“இருக்கேம்மா!  ஒரு ப்ரச்சனையும் இல்ல!  அப்பப்ப  சந்தர்ப்பம் கிடைக்கும்பொழுது அங்கேருந்து உங்க எல்லாரையும் பாப்பேன்! இப்ப உனக்கான அடுத்த க்ளூ எங்க இருக்குன்னு சொல்ல வந்திருக்கேன்!”

“நீங்களா?”

அவள் கண்களை ஒரு கணம் பார்த்துவிட்டு பார்வையைத் திருப்பிக் கொண்டார்.

“புரியறதும்மா! வாழ்க்கையில எந்த முடிவையுமே நான் சரியா எடுத்ததில்லை! ஐ வாஸ் அ டோடல் ஃபைலியர்!” 

அப்பா அந்த ஃபைலியர் என்ற வார்த்தையை அமெரிக்க ஆங்கிலத்தில்தான் எப்பொழுதும் உச்சரிப்பார்.  அது அவளுக்கு ரொம்ப பிடிக்கும். இப்பொழுதும் அப்படித்தான் சொன்னார். அவருடைய பதின் பருவத்தில் பார்த்த அமெரிக்க படங்களின் தாக்கமாக இருக்கும் என்று அவள் எப்போதும் நினைப்பதுண்டு.

அப்பா எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்.

அவளுக்கு  மனசுக்கு கஷ்டமாக இருந்த்து.

“சாரிப்பா! ரொம்ப சாரிப்பா! நான் அந்த அர்த்தத்துல  சொல்லலப்பா!”

அப்பா சிரித்தார். பழைய குதூகலமான அப்பாவானார்.

“அப்படிச் சொன்னாலும் தப்பில்லையே! அது உண்மைதானே! என்னோட தவறான முடிவுகளால கஷ்டப்பட்டது, நாம எல்லாரும்தானே! ஆனா எனக்கு இரண்டு விஷயத்துக்கு நீ க்ரெடிட் குடுக்கலாம். ஒண்ணு நான் பொறுப்பில்லாதவனே தவிர புத்திசாலி! அதை நீ ஒப்புக்கொள்கிறாயா?”

அவள் ஆமாம் என்று தலையசைத்தாள்.  

“இரண்டாவது, வாழ்க்கையிலே தோத்தேனே தவிர விளையாட்டு எதுவா இருந்தாலும் ஜெயிக்கணும்ங்கிற எண்ணம், விடா முயற்சி , திறமை இருக்கறவன், அது லூடோவோ , செஸ்ஸோ, கேரமோ, டென்னிஸோ எதுவானாலும்! அதையும் ஒத்துக்கறயா?”

“நூறு சதவீதம் அப்பா!” திருப்பி அப்பாவின் இரு கரங்களையும் தன் உள்ளங்கைகளுக்குள் வைத்துக்கொண்டாள்.

“சரி! நீ இந்த மலையை விட்டு இறங்கினவுடனே பாதை மூணா பிரியும். அதுல இடது புறப் பாதையில போ!. அது உன்னை தஞ்சை அரண்மனையோட கோட்டையின் ரகசிய வாயிலில் கொண்டு சேர்க்கும். அது வழியா நீ பொக்கிஷ நிலவறைக்குள்ள போகணும். நந்தினி, பெரிய பழுவேட்டரையர்  இரண்டு பேரையும் வந்தியத்தேவன் ஒளிந்துகொண்டு பார்க்கிற நேரத்தில் நீ அங்கு போய் சேருவாய்!”

“நிஜமாவா?” அவள் உற்சாகத்தில் கிரீச்சிட்டாள். பின்ன? சின்ன வயது சாகஸ கதைக்குள் போகிற வாய்ப்பு எல்லாருக்கும் கிடைக்காதல்லவா?

“இரு ! இரு! வந்தியத்தேவனைப் பார்த்த உற்சாகத்தில நீ அங்க போன வேலையை மறக்கக் கூடாது. அந்த பொக்கிஷ குவியலில் ஒரு மண்டையோடு முன்னாடி இருக்கும். அதுல உன்னோட அடுத்த க்ளூ இருக்கும்! நீ அதை எடுக்கற வினாடி வந்தியத்தேவன் கூட திரும்பிப்பார்ப்பான், என்ன சத்தம் என்று. உனக்கான குறிப்பு கையில வந்தவுடன்  நீ அங்கிருந்து மறைந்து விடுவாய்!”

முகம் முழுக்க சிரிப்புடன் அப்பாவைப் பார்த்தாள்.

“அப்புறம் இன்னொண்ணு! அங்க முழு இருட்டா இருக்கும்! உனக்கு கண்ணு தெரியறது கஷ்டம்! இந்தா!” என்று கையை நீட்டினார்.

சிகரெட் லைட்டர்!! 

“நீ  எனக்கு குடுத்த பரிசுதான்!”

“அப்பா!  இன்னும் கொஞ்ச நேரம் இருங்கோ அப்பா! பேசலாம்! ப்ளீஸ்! ஏம்ப்பா அவ்வளவு சீக்கிரம்…….” செத்துப்போனீர்கள் என்ற வார்த்தையை சொல்ல முடியாமல் நிறுத்தினாள். 

அப்பா புரிந்து கொண்டார்.

“உன்னோட வாழ்க்கையில நான் உயிரோடிருந்த அப்பாவா இருந்த வருஷங்களைக்காட்டிலும் செத்துப் போன அப்பாவா இருக்கிற வருஷங்கள்தான் அதிகம்! அது எனக்கு எவ்வளவு சாதகமான விஷயம் பாரு! எண்பத்தைந்து , தொண்ணூறு வயசு அப்பாவா இருந்திருந்தேன்னா, ஒரு கிழட்டு நச்சா, தொண தொணங்கிற கிழமாதான் நான் உங்க எல்லார் நினைவிலயும் இருப்பேன். இப்ப நான் ஐம்பத்தைந்து வயசுல செத்துப் போயிட்டதாலே உன்னோட நினைவில , நான் மேலும் மேலும் மெருகேறி  நான் உண்மையில இருந்ததைக்காட்டிலும் ஒரு பெரிய ஹீ ரோவா உருவெடுத்திருக்கேன்.

சில இலட்சியவாத கோட்பாடுகளின் மேல் ஈடுபாடு கொண்டவனாக , சில உயரிய விழுமியங்களின் மேல் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டவனாக, வாழ்க்கையை அதன் மேல் கட்டமைத்தவனாக, இது எல்லாம் இருந்தும் , விளையாட்டும் , குதூகலமும் நிரம்பியவனாக ,உன் குழந்தைகள் மனதிலும் , பேரக்குழந்தைகள் மனதிலும் என்னைப்பற்றின பிம்பம் உருவாதற்கு காரணம் உன் மனதின் நினைவுகளில் வளர்ந்த “நான்” அல்லவா? அதனால் இது சந்தோஷப்படவேண்டிய விஷயம்தான்! வருத்தப் படாதே! வா! உன்னுடன் அந்தப் பாதை பிரியும் இடம் வரை  வருகிறேன்!”

மூன்றாக பிரிந்த பாதையில் இடது பக்கம் திரும்பி இரண்டு அடி எடுத்து வைத்துவிட்டு, அப்பாவைத் திரும்பிப் பார்த்தாள்.

அவர் சிரித்துக்கொண்டே அவருடைய  வழக்கமான விடை கொடுத்தல் போல, வலதுகையைத் தலைக்கு மேல் உயர்த்தி 

“பை!” என்றார்.

பொன்னியின் செல்வன்  முதல் பாகம்  

                                    நாற்பதொன்றாம் அத்தியாயம்

                                                      நிலவறை

கூத்து மேடையிலிருந்து மிகத்தொலைவில் உட்கார்ந்திருப்பவனுக்கு மேடையில்  தோன்றும் காட்சிகள் எப்படியிருக்குமோ அப்படியிருந்தது வந்தியத்தேவன் அப்போது கண்ட காட்சி. கூத்து மேடையின் ஒரு பக்கத்திலிருந்து ஒரு தீவர்த்தி வந்தது. இன்னொரு பக்கம் படுதாவை நீக்கிகொண்டு மற்றொரு தீவர்த்தி வந்தது. ஒரு பக்கம் கந்தமாறனும், ஒரு காவலனும். மறு பக்கம் பெரிய பழுவட்டரையரும், நந்தினி தேவியும். 

இரு கோஷ்டியினரும் தடுமாறித் தயங்கி நின்றதிலிருந்து இரு சாராருக்கும் அந்த சந்திப்பு வியப்பையும் , திகைப்பையுமளித்திருக்க வேண்டும் என்று தோன்றியது. பழுவேட்டரையர் கந்தமாறனைப் பார்த்து ஏதோ கேட்டார்., அதற்கு கந்தமாறன்  பணிவுடன் ஏதோ விடை சொன்னான். பிறகு பழுவேட்டரையர் கையினால் சமிக்ஞை செய்து சுரங்க வழியின் படிக்கட்டைச் சுட்டிக்காட்டினார். கந்தமாறன் வணங்கிவிட்டு படியிறங்கினான். அவனுக்குப் பின்னால் தீவர்த்தியுடன் சென்ற காவலனைப் பார்த்து  பழுவேட்டரையர்  ஏதோ சமிக்ஞை செய்தார். அவனும் மறு மொழி சொல்லாமல்  ஒரு கையினால் வாயைப் பொத்திக்கொண்டு வணங்கினான்.. பிறகு கந்தமாறனைத் தொடர்ந்து படிக்கட்டில் இறங்கினான்.

மாயா  ஒரு தூண் மறைவில் இருந்துஅதைப் பார்த்துக்கொண்டிருந்தாள்.   வந்தியத்தேவன் கந்த மாறனைப் பின் தொடர்ந்து போக முடிவடுத்து அவனைப் பின் தொடர ஆரம்பித்ததும், இதனால் வந்தியத் தேவனுக்கு தேவையில்லாத அபவாதமும், பெரிய ஆபத்தும் வந்து சேரும் என்று அவனை எச்சரிக்க நினைத்தாள், அடுத்த நிமிடமே சரித்திர நிகழ்ச்சியில் தான் தலையிடுவது குழப்பத்தை ஏற்படுத்த நேரிடும்,  தவிர கல்கி மறுபடி பிறந்துவந்து பொன்னியின் செல்வனை வேறு மாதிரியாக திருத்தி எழுத நேரிடும்  என்று தன்னை கஷ்டப்பட்டு தடுத்துக்கொண்டாள். இருந்தாலும் தன் பிரியத்துக்குகந்த வந்தியத்தேவனைப் பார்க்கக் கிடைத்த சந்தர்ப்பத்தில், காப்பாற்ற கிடைத்த சந்தர்ப்பத்தில் உதவ முடியவில்லயே  என்ற எரிச்சலில் காலைத் தரையில் உதைத்தாள்.   ஆர்த்தரைடீஸ் கால் வலித்தது. “ஸ்…. அப்பா! “என்று காலைப் பிடித்துக்கொண்டாள். 

காலருகில் கிடந்த பொருளில் பட்டு அது உருண்டது . ஓசையெழாமல் அத இறுகப் பிடித்து, சிகெரெட் லைட்டர் வெளிச்சத்தில் பார்த்தாள். 

மண்டையோடு!!!, அதனுள்ளிருந்து துண்டு சீட்டு விழுந்தது. தூரத்தில் போய்க்கொண்டிருந்த வந்தியத்தேவன் திரும்பிப் பார்த்தது போல  அவளுக்குத் தோன்றியது. கையில் சீட்டை எடுத்தாள். பரவாயில்லை, ஐம்பத்தைந்து வயதான தன்னை வந்தியத்தேவன் பார்க்காததே நல்லதுதான் என்று நினைத்தாள்.

                                        ******************************************

கோடைக் கால ஆறு மணல்வெளியாய் பரந்து கிடந்தது. மணல் படுகையின் மத்தியில் வெள்ளித்தகடாய் பளபளத்துக்கொண்டு தன் பழைய நினைவுகளின் எச்சமாக ஆறு சின்னதாக  முணுமுணுத்துக்கொண்டிருந்தது. தண்ணீரில் கால் வைத்த கணம் தன்னைத்தவிர யாரோ ஒருவர் அங்கிருக்கும் உணர்வை அடைந்தாள். வலது பக்கம் சற்று தூரத்தில் தண்ணீருக்குள் குனிந்து எதையோ தேடிக்கொண்டிருப்பது யார்?

நிமிர்ந்து அவளைப் பார்த்து   “பாட்டி! இதைப்பாரேன்! எவ்வளவு அழகான கல்லு”

என்று சொல்லிக்கொண்டே ஓடி வந்து அவளிடம்  தன் கைகளை நீட்டினான் வருண். மொழு மொழுவென்று அழகிய கூழாங்கற்கள் இரண்டு அவன் சின்னக் கைகளில்.

அவனக் கட்டிக்கொண்டு கன்னங்களிலும், நெற்றியிலும் முத்தம் கொடுத்துக்கொண்டே” கண்ணா!  எப்படிரா ராஜா இங்க வந்தே ! தங்கக் கட்டி ! செல்லக்குட்டி!” அவளுக்கு கொஞ்சி மாளவில்லை.

அவனின் வழக்கமான மரியாதையோடும் , பொறுமையோடும் அவள் கொஞ்சலை  ஏற்றுக்கொண்டு அழகிய சின்ன சிரிப்போடு “நீ எப்படி பாட்டி இருக்கே?” என்றான். 

அவன் நெற்றியில் விழுந்த சிகையை ஒதுக்கியபடி அவனின் அழகிய பெரிய விழிகளைப் பார்த்த வினாடி, இந்த இடத்தில் இருந்து தப்பிக்கவேண்டும் என்ற ஆசையும் , தப்பித்துவிடுவோம் என்ற நம்பிக்கையும் அவளுக்கு ஒருங்கே ஏற்பட்டன.

“ம்… நல்லா இருக்கேன்! கூழாங்கல்லைப் பாக்கெட்டில போட்டுக்கோ! கீழ விழுந்துடப்போறது”

கரையை ஒட்டிய படித்துறையில் மர நிழலில் இருவரும் அமர்ந்தனர்.

 அவளை நெருங்கி உட்கார்ந்து கொண்டு அவள் மடியில் கைகளை வைத்தபடி மெல்லிய  குரலில் “பாட்டி ! ஆர் யூ ஸ்கேர்ட்?” என்று அவள் கண்களுக்குள் பார்த்துக் கேட்டான். 

அவனைத் தன் வலது கையால்  இழுத்து அணைத்துக் கொண்டு மெதுவாக “கொஞ்சம்!” என்றாள்.

“பயப்படாதே பாட்டி!  நம்ம எல்லாரும் சேர்ந்து ஒர்க் பண்ணி நீ சுலபமா வெளியில வந்துடுவே! ஓ கே?” குரலில் கள்ளமற்ற தன்மையும் , நம்பிக்கையும், கரிசனமும். அவளுக்குள் கொஞ்சம் போல் தைரியம் வந்தது.

அவளிடமிருந்து லேசாக நகர்ந்து தன் பான்ட் பையில் கையை விட்டு அவள் பார்வைக்கோணத்தில் படாதவாறு சின்ன துண்டு சீட்டை  எடுத்து மறைத்துக்கொண்டுபடித்தான்.

அவளைப் பார்த்து மன்னிப்புக்கோரும் புன்னகையுடன் ”உங்களுக்கு அதைக்காட்டக்கூடாது என்பது நிபந்தனை! அதனால்தான்! சாரி!”

அவன் அவளிடம் ஆங்கிலத்திலேயே பேசுவதால், சில சமயம் யூ என்ற வார்த்த  ‘நீ’ மாதிரியும் , சில சமயம் ‘நீங்கள்’ என்பது மாதிரியும் அவளுக்குத் தொனித்தது.

“பரவாயில்லடா என் பெரிய மனுஷா!! உனக்கு வயசு ஏழா இல்ல எழுவதா?” அவள் சிரித்தாள்.

“ பாட்டி உங்களுக்குத் தெரியுமா! நீங்க போன சுற்றுல நல்லா விளையாடினதால நான் உங்களுக்கு போனஸ் பாய்ண்ட்களின் பரிசா இங்க வந்திருக்கேன்!” அவன் குரலின் உற்சாகம் அவளையும் சிரிக்க வைத்தது.

“சரி! நாம இப்ப என்ன பண்ணப் போறோம்?” ரகசிய குரலில் கேட்டாள்.   யாருக்கும் தெரியாமல் அவனோடு  சேர்ந்து விஷமம் செய்வதான பாவனையில் ஏற்படுகின்ற  உற்சாகமும், சவாலை எதிர் கொள்ளப் போவதில் இருக்கிற சாகசத் தன்மையும், அவனுடன் அந்த விளையாட்டை எதிர் கொள்ளப் போகிற தருணத்தை சந்தோஷமாக ஆக்கின.

“ பாட்டி, இப்ப நாம அந்த கரையை ஒட்டி இருக்கற பாதையோட கொஞ்ச தூரம்  போனா,   ஒரு கைகாட்டி மரம் , நிறைய இடங்களோட பெயர்ப் பலகைகளோட இருக்கும். அங்க போகலாம் வா!” அவள் கையைப் பற்றிக்கொண்டு நடக்க ஆரம்பித்தான்.

அந்த கைகாட்டி மரத்தைச் சுற்றி பல பாதைகள் பிரிந்து பிரிந்து பிரிந்து போய்க்கொண்டிருந்தன. கட்டப்பட்டிருந்த பலகைகளப் படிப்பதற்கே நேரம் ஆகும் போல இருக்கே என நினைத்தாள். 

“பாட்டி ! தமிழில் இருக்கற பலகையை மட்டும் நீங்கள்படியுங்கள்! இங்க்லீஷில் உள்ளதை நான் படிக்கறேன் ஓகே?” அவன்.

“அங்கோர்வாட்,   சென்ட்ரல் பார்க் ந்யூயார்க், “ வருண் படித்தான்.

“நாடார் கடை , பாட்டி வீடு”  அவள் படித்தாள்

“உங்க வீடா பாட்டி? நீங்கதானே பாட்டி?”

“இல்லை! என்னோட பாட்டி வீடு”

“மச்சு பிச்சு, ரோடெர்டாம்” 

ஒவ்வொரு பலகையும் சின்ன சின்ன பாகை வித்தியாசத்தில் நெருக்கி கட்டப்பட்டிருந்தது.

“நன்னிலம் ரயில்வே ஸ்டேஷன்,  பள்ளிக்கூடம்”

“ஏதோ ஓரிடம்”( ஆங்கிலத்தில் somewhere  என்று எழுதியிருந்ததைப் படித்தான்.)

“ருத்ர ப்ரயாக், தாரசுரம் கோவில் “-

“பாம்பெய்(Pompeii),  கொலாசியம்”

“ரயில் சந்தித்த இளைஞன் வீடு”

“யார்  வீடு பாட்டி?’ 

 யாரது என்று யோசித்தாள், தெரியலயே!  அவள் பார்த்துக்கொண்டிருக்கும் பொழுதே ஒரு சின்ன அம்புக்குறி சந்தித்த என்பதற்கும் இளைஞன் என்பதற்கும் இடையில் வங்காளி என்ற சொல்லைச் சேர்த்தது. அவள் லேசாக புன்னகைத்தாள். பொல்லாத போர்டாக இருக்கிறதே! 

“என்ன பாட்டி? யாரு” என்றான்.

அவள் “தெரியல! அதை விட்டுடலாம்” என்றாள்.

மாறி மாறி கிட்டத்தட்ட முப்பது ஊர் பெயர்ப் பலகையையும் படித்து முடித்தார்கள்.

“இப்ப என்ன பண்ணலாம்?”

“பாட்டி இந்த பாதை வழியா போங்கள்” என்று ‘எந்த இடமும் இல்லை’ (nowhere) என்ற பெயர்ப்பலகை காட்டும் திசையைக்காட்டினான் வருண்.

 “என்னடா! என்னை ஒரு இடமும் இல்லாத இடத்துக்கு ஏன் போகச் சொல்கிறாய்?” இந்த விளையாட்டை விட்டுப் போகப்போவதில்லை. இந்த குழந்தையை இனி பார்க்கப்போவதில்லை என்ற பயம் முதன்முதலாக வந்தது.

“பாட்டி! ப்ளீஸ்! ட்ரஸ்ட்  மீ!. இந்த கைகாட்டி மரத்தின் விஷயம் என்னவென்றால், எந்த ஊர்ப் பலகையுமே அதனுடைய சரியான திசையைக் காட்டவில்லை. எல்லாமே தவறு. அதனால் எந்த ஊர்ப் பலகையைத் தேர்ந்தெடுத்தாலும் அது நோவேர் ஆக இருக்க வாய்ப்பு இருக்கிறது. எனவே , நோவேர் பலகை மட்டும்தான் ஏதாவது உண்மையான இடத்துக்குப் போகக்கூடிய வாய்ப்பு இருக்கற பலகை “என்றான்.

அவள் சட்டென்று தரையில் அமர்ந்து அவனைக்கட்டிகொண்டாள். கண்கள் பொங்கி வந்தன. 

“பாட்டி! உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லவா?”

“ம்”

“நீ சீக்கிரம் இந்த விளயாட்டில இருந்து வெளியில வரப்போறே” 

அவன் கன்னத்தில் முத்தம் கொடுத்துவிட்டு அவனைத் திரும்பி திரும்பிப் பார்த்துக்கொண்டே அந்தப் பாதையில் நடந்தாள்.

அந்தப் பாதையில் பத்து நிமிஷங்கள் நடந்த பின் பளீரென்று அவள் கண்களையும் சித்தத்தையும் நிறைத்த அந்த மிகப் பெரிய  திறந்தவெளி அரங்கின் இருக்கைகளின் ஒன்றில் அவள் உட்கார்ந்திருந்ததை உணர்ந்தாள். நடுவில் இருந்த வட்ட வடிவ அரங்கைச் சுற்றி படிப்படியாக உயர்ந்த பல பொது மைய வட்டங்களாக படி மேடைகள். அதன்  இருக்கைகளில் அமர்ந்திருந்த ஆயிரக்கணக்கான மனிதர்களின் அடங்கிய பேச்சு சத்தம்  பல நூறு வண்டுகளின் ரீங்காரம் போல் ஒலித்தது. 

 “பாவம்! எவ்வளவு அழகாக இருக்கிறான்!” என்றாள் அவள் அருகில் உட்கார்ந்திருந்த நீளமான அங்கி போன்ற உடை அணிந்திருந்த பெண்மணி.

“ம்..?”

சொன்ன வினாடியே பார்த்துவிட்டாள், அந்த பெரிய அரங்கின் நடுவே நின்றிருந்த அவனை.  அரசனை குனிந்து வணங்கிவிட்டு, லேசாக தலையை நிமிர்த்தியபடி நின்றிருந்தான். அவன் எதிரே அரங்கின் உயர்ந்த பீடத்தில் அமர்ந்திருந்த அரசனைப் பார்க்கிற பாவனையில் தலை சற்று நிமிர்ந்திருந்தாலும்,  அதுதான் அவனுடைய வழக்கமான அவன் உடல் மொழி  என்பது அவனைப்பார்த்த மாத்திரத்தில் தெரிந்தது.

“எத்தனை இளமை , எத்தனை அழகு! எத்தனை கம்பீரம்! எல்லாம் வீணாகப் போகிறதே!” என்று பெருமூச்செறிந்தாள் பக்கத்து இருக்கைப் பெண்மணி.

அரசன், அவன்  அருகில் அமர்ந்திருந்த இளவரசி, அவர்கள் உட்கார்ந்திருந்த இடத்துக்கு நேர் எதிரே இரண்டு கதவுகள்! பார்த்ததுமே  தன்னை மறந்து கத்தி விட்டாள்.”1 த லேடி ஆர்  த டைகர்? பெண்ணா, புலியா கதையில் நான் இருக்கிறேனா? கடவுளே !” என்றாள்.

பக்கத்து இருக்கை “என்ன சொல்கிறாய்? புரியவில்லை?”என்றது. 

“ஒன்றும்  இல்லை! நீங்கள் சொல்வது போல பாவம்தான்!” என்றாள்.

 முன்னொரு காலத்தில், ஏதோ ராஜ்யத்தை, பண்பாடற்ற, சில விஷயங்களில்  குரூரமானவன் என்றே சொல்லத்தக்க ஓர் அரசன் ஆண்டு வந்தான்.தன் அரசாங்கத்தில் பெருங்குற்றம்  புரிந்தவர்கள் என்று கருதியவர்களுக்கு அவன் தண்டனை கொடுப்பதில் ஒரு வினோதமான , குரூரமான வழக்கத்தைக் கடைப்பிடித்தான். குற்றவாளியா நிரபராதியா என்பதை தீர்மானிப்பது அவன் செய்த குற்றமோ, குற்றமின்மையோ அல்ல. குற்றம் சாட்டப்பட்டவனின் சந்தர்ப்பவசம் அல்லது அதிர்ஷ்டம் அல்லது அவன் தலையெழுத்து, ஏதோவொன்றுதான் அதை தீர்மானித்தது. குற்றம் சாட்டப்பட்டவன் பெரிய திறந்த வெளி பொது அரங்கத்திற்கு கொண்டு செல்லப்படுவான். அரசன் , அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில் அவன் நிற்பான். அவன் எதிரில் மூடப்பட்ட இரண்டு  கனமான கதவுகள் இருக்கும். ஒன்றின் பின்னால் பல நாட்கள் பட்டினி போடப்பட்ட கொடிய புலி, மற்றொன்றின் பின்னால் அழகிய இளம் யுவதி அவனைக் கல்யாணம் செய்து கொள்ளத் தயாராக. அவன் திறக்கத் தேர்ந்தெடுத்த கதவைப் பொறுத்து அவன் குற்றவாளியா அல்லனா என்பது தீர்மனிக்கப்படும். 

அரசனுக்கு ஓர் அழகான மகள்.  அறிவும்,அப்பாவின் குரூரத்தின்  ஒரு சிறிய கீற்றும்  ஒருங்கே அமையப் பெற்றவள். அவள் அழகான, வீரமான ஆனால், ஒரு சாதாரண குடும்பத்தைச் சேர்ந்த ஓர் இளைஞனைக் காதலித்தாள். அரசன் அதை அறிந்துகொண்டான். அரசன் மகளை ஒரு சாதாரண பிரஜை காதலிப்பது மிகப் பெரும் ராஜத்துரோகக் குற்றம் அல்லவா?அதனால் அவனுடைய வழக்கமான  ‘இரண்டு கதவுகள்’   தீர்ப்பு விசாரணைக்கு உத்தரவிட்டான்.

இன்றுதான் அந்த விசாரணை நாள் போலிருக்கிறது. அவன் அரசனை நோக்கி நின்று கொண்டிருந்தாலும் அவன் கண்கள் இளவரசியை பார்ப்பது  அவள் உட்கார்ந்த இடத்திலிருந்து தெரிந்தது.  கதையை ஏற்கெனவே படித்திருந்ததால் அவள் இளவரசியை கூர்ந்து பார்த்தாள். மற்ற எல்லாரும் அந்த இளைஞனையே பார்த்துக்கொண்டிருந்தனர்.  இளவரசி மிக மிக லேசாக தன் கையை வலது பக்கம் அசைத்ததை அவளும் அந்த இளைஞனும் மட்டுமே பார்த்திருக்கக்கூடும்.

அந்த கதவுக்குப் பின்னிருந்த பெண்ணை இளவரசி நன்கு அறிவாள்.அரசவையைச் சேர்ந்த , இளவரசி மிகவும் வெறுத்த மிக அழகிய இளம்பெண் அவள். இளவரசியும் அந்த இளைஞனும் சந்தித்த தருணங்களில் அவனை ஆசையுடனும் வெட்கத்துடனும் அந்தப் பெண்பார்த்திருக்கிறாள். அல்லது அவள் அப்படிப் பார்த்தாக இளவரசி நினைத்தாள். அந்த இளம்பெண்ணின் ஆசைப்பார்வைகளுக்கு இளைஞன் பதில் பார்வையும் அளித்தான் அல்லது அப்படி அளித்ததாக இளவரசி நினைத்தாள். இளவரசி  அவளின் சக்தி, சாமர்த்தியம் ,சாகசம்,பணம் அனைத்தையும் உபயோகித்து எந்த கதவுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்பதை அறிந்து கொண்டாள். அவன் எந்த கதவைத் திறந்தாலும் , அவனை  இளவரசி இழந்தே தீருவாள். அது மட்டும் நிச்சயம்எப்படி இழக்கவேண்டும் என்று அவள் தீர்மானித்திருப்பாள்? இளைஞன் அந்த வலது பக்க கதவை நோக்கிப் போனான்

“அவன் திறக்கிற கதவுக்குப் பின்னால் என்ன இருக்கிறது என்று நீ சரியாக ஊகித்தால், இந்த விளையாட்டின் சுழற்சியிலிருந்து விடுபட்டு உன்  சரியான நிகழ்காலத்திற்கு, உன் சரியானஇடத்துக்குப் போகலாம்”

 என்று பக்கத்து இருக்கைப் பெண்மணி மெதுவாக ரகசியம் போல காதுக்குள் சொன்னாள். 

“கண்ணை மூடிக்கொண்டு விடையை நினை “ என்றாள்.

உலகம் முழுக்க இந்த கதை எழுதப்பட்ட  நூற்றி முப்பத்தேழு வருடங்களாக ஆயிரக்கணக்கானவர்கள் அதற்கான விடையை ஊகித்து அதற்கான காரணங்களையும் அடுக்கியிருக்கிறார்கள். நிச்சயம் புலி இருக்கும் கதவைத்தான் அவள் காட்டியிருப்பாள் , தனக்குக் கிடைக்காதது அவள் வெறுக்கும் இன்னொரு பெண்ணுக்குப் போகக்கூடாது என்று நினைத்திருப்பாள் என்று  பெரும்பாலானஒரு சாராரும், அவள் அவனை உண்மையிலேயே உருகி உருகி காதலித்தாள், அவன் எப்படியோ உயிரோடாவது இருக்கட்டும் என்றே நினைத்திருப்பாள் என்று மறு சாராரும்  இன்று வரை விவாதித்து வருகின்றனர்.

இந்தக் கதைக்கு மாயா வெகு நாட்களுக்கு முன்னரே ஒரு முடிவு யோசித்து வைத்திருந்தாள். அந்த முடிவு சரியா தப்பா என்று கண்டு பிடிக்கிற நேரம் ! தான் தப்புவோமா இல்லையா என்று கண்டுபிடிக்கிற நேரம்! அவள் இதயம் அடிக்கற சத்தம் அந்த அரங்கம் முழுக்க எதிரொலித்தமாதிரி அவளுக்குத் தோன்றியது. ‘நான் தப்பிப்பேனோ இல்லையோ இந்த புதிருக்கான விடை தெரிந்து விடும்’.

கண்ணை மூடிக்கொண்டு விடையை நினைத்தாள்.

அவளைச் சுற்றி பெருத்த ஆரவாரம் எழுந்தது.

                          ***************************************************************

1.https://www.eastoftheweb.com/short-stories/UBooks/LadyTige.shtml

6 Replies to “இரு புறமும் சுழலும் கடிகாரங்கள்”

  1. Just mind blowing, brilliant story delivery …
    What an imagination, cleverly bringing the sights , characters of our past , present life…

    Anyone who reads , will associate themselves, similar experience in their childhood life …
    Author’s, imagination, thought process, narration, charactersation…., brought out very well .
    Certainly it is a classic .

  2. மிக நன்றாக எழுதி இருக்கிறீர்கள்.. எல்ல மொழி இலக்கியங்களும் விரல் நுனியில் கிடைக்கும் இக்காலத்தில் வாசகரை இழுத்திப் பிடித்து படிக்க வைப்பது அப்படி ஒன்றும் சுலபமான வேலையில்லை.. உங்களின் ‘அணங்கு கொல்’ படித்து விட்டு இங்கு வந்தேன்.. வாழ்த்துகள்..

    1. அன்புள்ள மகேஷ்  அவர்களுக்கு,

      உங்களின் பாராட்டுதல்களுக்கு மிக்க நன்றி.
      எழுதுவதில் இருக்கிற ஆர்வத்தையும், சந்தோஷத்தையும் பல மடங்கு பெருக்குகிறது உங்களுடைய வாழ்த்துகள்.
      மீண்டும் நன்றி.

Leave a Reply to மாலதி சிவாCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.