புவி எனும் நம் கோளின் தனிச் சிறப்புகள்

This entry is part 3 of 7 in the series பூமிக்கோள்

கோரா

புவிக்கோள் தனிமையான கோள் (lonely planet) என்கிறார்கள். ஏனெனில் இன்று வரை உயிர் தாங்கும் மற்றொரு கோள் கண்டுபிடிக்கப் பட வில்லை. இங்கு  நிகழ்ந்து வரும்  சில எரிமலை உமிழ்வுகள், பல  நில அதிர்வுகள், பருவ காலங்கள், சூறாவளி, பெரும்புயல், வறட்சி, பெருமழை, தட்ப வெப்ப மாற்றம் அனைத்தையும் கருத்தில் கொண்டால் இதைத்  தனிமையான செயலூக்கம் கொண்ட கோள் (lonely active planet) என்றே அழைக்கலாம். சூரிய மண்டலத்தின் 8 கோள்களில் ஒன்றாகத் தோன்றி அண்டைக் கோள்களைப் போல் வெறும் பாறைகளாய் நின்று போகாமல், தண்ணீரைத் தக்கவைத்து உயிர் எழும் வழி கண்டு வாழும் கோளாக மாறிய  வரலாற்றைக் கூறுகிறது இக் கட்டுரை.

கோள்கள் பற்பல என்றவருக்கு மரண தண்டனை:

 நம் சூரியக் குடும்பத்தில் ஒரு சூரியனைச் சுற்றிவரும் கோள்களைப் போன்றே அண்டவெளியில் பற்பல சூரியக் குடும்பங்களும் எண்ணற்ற சூரியன்களும் அவை ஒவ்வொன்றையும் சுற்றி வரும் கோள்களும் உள்ளன. மிகப் பெரிய ஒளிப் பிழம்புகளாக இருப்பதால் சூரியன்கள் நம் கண்களுக்குத் தெரிகின்றன. ஆனால் கோள்கள் சிறியனவாகவும் ஒளிவீசாமலும் இருப்பதால்  கண்ணுக்குத் தெரிவதில்லை… ….பேரண்டத்திலுள்ள அடையாளம் தரப்படாத உலகங்கள் அனைத்தும் தரவரிசையிலும் வடிவிலும் ஒரேமாதிரி; அதேபோல் அவற்றை இயக்கும் விசைகளுக்கும் விதிகளுக்கும் பொதுவானவை -என்றார் தத்துவாளரும், கணித விற்பன்னரும், மற்றும் விண்வெளி ஆய்வாளருமான ஜ்யார்டானோ ப்ரூனோ (Giordano Bruno-1584). “On the Infinite universe and Worlds” என்ற தன் நூலில அண்டவெளி உலகுகளைப் பற்றி,.கிருஸ்தவ சமய வழிக் கோட்பாட்டுக்களுக்கு முரணான கருத்தைத் தெரிவித்ததற்காக,  ரோம் மாநகரின் சமய நீதிமன்ற விசாரணையில் தண்டனை கொடுக்கப்பட்டு, பின் மரணக் கம்பத்தில் கட்டி எரிக்கப் பட்டார் (1600).

பிரபஞ்சத்தில் கோள்களின் எண்ணிக்கை:

 கிட்டத்தட்ட எல்லா விண்மீன்களுக்கும் (சூரியன் உள்ளிட்ட) கோளுக்குரிய அமைப்பு (planetary system) இருக்கிறது. நம் விண்மீன் மண்டலத்தில் (galaxy) உள்ள 400பில்லியன் விண்மீன்கள் ஒவ்வொன்றுக்கும் ஒரு  கோளுக்குரிய அமைப்பு இருக்கும். நாம் நோக்கி அறியக் கூடிய பிரபஞ்சத்தில் 100 பில்லியன் விண்மீன் மண்டலங்களில் 10 ட்ரில்லியன் (10^12) கோளுக்குரிய அமைப்புகள் இருக்கும். சூரிய மண்டலத்தின் கோள்களைத் தவிர பிற அனைத்தும் புறக் கோள்கள். (Exoplanet.)  

தொலை நோக்கி மூலம் புறக்கோள் பிறப்பு நேரடிக் காட்சி 

கடந்த 30 ஆண்டுகளில் மிகப் பெரிய தொலைநோக்கிகளின் உதவியுடன் ஆயிரக் கணக்கான சூரியக் குடும்பங்களும் புறக்கோள்கள்களும் (exoplanets) கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இன்றைய விண்வெளி ஆய்வாளரான யஸ் டி பூவர் (Jos de Boer), முற்றுப் பெறாத பிற சூரியக் குடும்பங்களில் புதுக் கோள்களின் பிறப்பை உற்று நோக்கி அதன் மூலம் தெளிவாகும் பொது விதிகளைக் கொண்டு நம் சொந்த சூரியக் குடும்பத்தின் அமைப்பை அறியலாம் என்கிறார். இவர் லெய்டன் வான் ஆய்வுக் கூடத்தில் மிகப் பெரிய தொலைநோக்கியைப் பயன்படுத்தி கோள்களின் மூதாதைத் தட்டு (Protoplanetary disk ) எனப்படும் மகவுக் கோள் பிறப்பிடத்தை ஆய்வு செய்து வருகிறார்.

புறக்கோள்களின் தோற்றம்:

கோள்களின் பிறப்பிடம், இளம் விண்மீன்களைச் சூழ்ந்திருக்கும் வாயு மற்றும் தூசு நிறைந்த அடர் வட்டு(disk ) என்று விண்வெளி ஆய்வாளர்கள் அறிந்துள்ளார்கள.  எல்லாக் கோள்களும் மயிரிழை அளவுக்கும் குறைந்த தடிமன் கொண்ட தூசுத் துணுக்காகவே ஆரம்பமாகின்றன.  இளம் விண்மீன்களை சூழ்ந்து கொள்ளும் மாபெரும் donut வடிவ வாயு மற்றும் தூசு வளையத்திலிருந்து அவை வெளிப்படுகின்றன. ஈர்ப்பு மற்றும் பிற விசைகள் வளையத்தினுள் இருக்கும் பொருண்மங்களை மோதிக் கொள்ளச் செய்கின்றன. மோதல்கள் கடுமை குறைந்துள்ள நிலையில் திண்மங்கள் உருகிக் கலந்து உருளும் உறைபனிப் பந்து போல் வளர்கின்றன. நாளடைவில் அவற்றுடன் தூசித் துணுக்குகள் கலந்து கூழாங்கல் அளவை அடைந்துப்பின்  மைல் நீளப் பாறைகளாகின்றன. இது நுண் கோள் (planetesimal) என்ற பெயருடன் விண்மீனை சுற்றி வருகிறது. வட்டமிடும் போது பாதையில் இருக்கும் திண்மங்கள் வெளியேற்றப் பட்டு தடம் காலியாகி அதைத் தூசிகள் நிறைக்கின்றன. அதே நேரம் விண்மீன் அருகிலுள்ள வாயுக்களை கபளீகரம் செய்து விட்டு தூரத்துத் திண்மங்களை வெகு தொலைவுக்குத் தள்ளி விடுகிறது. பல பில்லியன் ஆண்டுகளுக்குப் பின்னர் வளையம் முழுதுமாக மாறி அதன் பெரும் பகுதி ஒரு புதிய உலகமாகி விடுகிறது. சூரியக் கோள்கள் அனைத்தும் சூரியனின் இளமைக் காலத்தில் இவ்வாறு பிறந்தவையே.

சூரிய மண்டலம் தோற்றமும் படிமலர்ச்சியும் :

சுமார் 4.57 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு, அதாவது   சூரிய மண்டலம் ஒரு சூரியன், 8 கோள்கள், பற்பல நிலவுகள், பல குறுங்கோள்கள் மற்றும் திண்மங்கள் என்ற நேர்த்தியான வடிவைப் பெறுவதற்கு முன்பு, இன்றைய சூரிய மண்டலத்தின் ஒவ்வொரு துணுக்கும் அண்டவெளியில் மிதக்கும் ஒரு ராட்சத வான்புகையுருவின் (gigantic nebula) பகுதியாக இருந்தது. உண்மையில் அது நீரியம் (hydrogen ), பிற வாயுக்கள் மற்றும் தூசியையும் உள்ளடக்கி விண்மீன்களுக்கிடையேயுள்ள (interstellar) அண்ட வெளியில் மிதந்த மூலக்கூற்று மேகம் (molecular cloud ). இந்த மாபெரும் மூலக்கூற்று  மேகத்தின் சிறு பகுதியில் உள்ளுக்குள்ளே நிகழ்ந்த ஈர்ப்புவிசை முறிவால் (கிரேவிடேஷனல் collapse),  பனித்திரள் விளைவினைப் (snowball effect) போல், அதன் பொருள் திணிவு (mass) வெகு வேகமாக மையப் பகுதிக்கு ஈர்க்கப் பட்டு அதனால் மையப் பகுதி மேன்மேலும் திண்மம் அடைந்து அதுவே மேலதிக ஈர்ப்புக்கு காரணமாகி இறுதியில் மூலக்கூற்று மேகத்தின் 99.9% பொருள் திணிவும் மேலதிக வெப்பம், அடர்த்தியுள்ள மையம் கொண்ட சூரியன் உருவானது. அவ்வாறு தோன்றிய சூரியனின் மையப் பகுதி போதிய அளவு திண்மையும் வெப்பமும் அடைந்த பின் அங்கே தற்செயலாக அணுச்சேர்க்கை (nuclear fusion) தொடங்கியது. அதன் பின்னர் காண்புறு (visible) ஒளி சூரிய மண்டலத்தை நிறைத்தது. எஞ்சிய 0.1% திண்மம் சூரியனை சுற்றி வட்டமடித்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் சீரற்ற வடிவில் இருந்த  இந்த சொற்ப வாயு மேகம், பின்னர் கோள்களுக்குரிய மூலவுருவான வட்டத் தட்டு வடிவில் சூரியனை சுற்றி நிலைத்தது. கோள்களின் மூதாதைத் தட்டு (Protoplanetary disc ) என்றழைக்கப்படுகிற இதுவே கோள்கள், நிலவுகள், குறுங்கோள்கள் மற்றும் பிற சிறு சூரிய மண்டல திண்மங்கள் ஆகியவற்றின் மூலப்பொருளை உள்ளடக்கி இருந்தது.

புவிக்கோள்களின் தோற்றம் :

சூரியனைச் சுற்றி வந்த வட்டத்தட்டு குளிர்ச்சியடைந்து  வெவ்வேறு வித திண்மங்களாக உருவெடுத்தது. சூரியனுக்கு அருகில் இருந்தவை அதிக வெப்பம் காரணமாக கனிமங்கள் மற்றும் உலோகங்களாக உருவெடுத்தன. வெகு தொலைவில் இருந்தவை சூரிய வெப்பத்தின் தாக்கம் மிகக் குறைவாக இருந்ததால் எளிதில் ஆவியாகும் பனிக்கட்டி, அம்மோனியா திண்மங்களாக உருவெடுத்தன.  குளிர்ச்சியடைந்த போது சுழலும் திண்மங்கள் ஒட்டிக்கொண்டு ஒன்றாகி பெரும் பொருண்மைத் திரள்களாயின. எஞ்சியுள்ள அனைத்து தூசிகளின் சேர்க்கையால் மேன்மேலும் பெரிதாகி இன்று நாம் அறியும் கோள்களாக நிலைத்திருக்கின்றன. சூரிய மண்டலத்தின் மையப்பகுதியில் உள்ள அதிவெட்ப கற்பாறைப் பொருண்மங்கள் உலகின் உலோக உள்ளகம் கொண்ட  புதன் (mercury), வெள்ளி (venus), புவி மற்றும் செவ்வாய்க் கோள்களாக வடிக்கப் பட்டன. குளிர்ந்த விளிம்புகளில் சனி (saturn), வியாழன் (Jupiter), Neptune, Uranus ஆகிய வாயு மற்றும் பனி ஜாம்பவான்கள் பிறந்தன. கோள்களின் இழு விசைக்குள் வராத திண்மங்கள் விண்கற்களாக சூரியமண்டலத்தில் நிலைத்தன.

பாறைப் (rocky)  புவிக்கோள்களின் படிமலர்ச்சி: 

மிகச் சிறிய உலோக மற்றும் கனிமப் பாறைகளாகப் பிறந்த நான்கு புவிக்கோள்களும், இயற்கையான திரள் வளர்ச்சி (accretion) முறையில் ஈர்ப்பு விசையால் மேலும் சிறு துகள்களுடன் ஒன்றாகி கட்டியாகத் திரண்டு மேலும் மேலும் அதே முறையில் வளர்ந்து விண்கற்கள் (asteriod ) அளவில் முழுமை பெற்று  நுண்ணிய கோள்களாயின (planetesimal).

அதற்கு அடுத்த படிமலர்ச்சி கோளுக்குரிய கருமுளை (planetary embryo) ஆகும். இந்த நிலைக்கு மேல் வளராத கோளுக்குரிய கரு முளைகள் பல ஆரம்ப கட்ட சூரிய மண்டலத்தில் இருந்திருக்கக் கூடும். ஆனால் இன்றும் அவ்வகைக் கோளாகப் பிழைத்திருப்பது செவ்வாய்க் கோள் மட்டுமே. முழு வளர்ச்சி அடையாததால் அது புவி மற்றும் வெள்ளி போன்ற முழு வளர்ச்சியடைந்த கோள்களின் வரிசையில் சேராது. புதன் (mercury) பாறைக் கோளாக இருந்தாலும் சூரியனுக்கு வெகு அருகில் இருப்பதால் அதி வெப்பத்தால் மடிந்த கோளாகவே கருதப்படுகிறது.

புவிக்கோளின் வளர்ச்சி :

புவிக்கோளின் பிந்திய திரள் வளர்ச்சிக்கு  அளவிடமுடியாத சக்தியை வெளியிட்ட ஒரு மாபெரும் மோதல் காரணமானது. செவ்வாய்க்கோள் அளவிலான ஏதோ ஒரு கோளுக்குரிய கருமுளை, வளரும் புவியின் மீது மோதியதின் பக்க விளைவாக நிலவுப் பகுதி (moon) வெட்டப் பட்டு வெளியேற்றப் பட்டதோடு, புவியின் எஞ்சிய பகுதி கிட்டத் தட்ட முற்றிலுமாக உருகி விட்டது. மோதல் காரணமாக புவி முழுவதையும்  கற்குழம்புப் பெருங்கடல் (magma ocean ) எனப்படும் உருக்கிய பாறைகளின் உலகளாவிய கடல் நிறைத்தது. கற்குழம்புப் பெருங்கடலிலிருந்து கசிந்திருக்கக் கூடிய நீரியம் (hydrogen), கரிமம் (Carbon), உயிரியம் (Oxygen) மற்றும் நைட்ரஜன் ஆகிய வாயுக்களே புவியின் முதல் வளிமண்டலமாக உருவாகி இருக்கும்.

முதல் வளிமண்டலம் எத்தகையது? – ஆய்வுகள் 

கற்குழம்புப் பெருங்கடல் மற்றும் சூழ்ந்துள்ள வாயுக்களின் வெப்பம் தணிந்து வருகையில் வளிமண்டலத்தில் என்ன மாற்றங்கள் ஏற்பட்டிருக்கும்? முக்கியமாக, எவ்வாறு பிற தனிமங்கள் இணையும் என்பதைக் கட்டுப் படுத்தக் கூடிய ஒரே தனிமமான உயிரியம் (oxygen ) எந்த அளவில் இருந்தது என்று அறிய வேண்டும். உயிரியம் குறைவாக இருந்து விட்டால், வளிமண்டலத்தில் நீரியம் (H2), அம்மோனியா (NH3) மற்றும் Carbon Monoxide (CO) ஆகிய விரும்பப் படாத  வாயுக்கள் மிகுந்திருக்கும். உயிரியம் மிகுந்திருந்தால், வளிமண்டலம் தோழமையான  வாயுக்களின்

கலவையாக மாறி இருக்கும். அவை : கரிம வாயு (CO2), நீராவி (H2O) மற்றும் மூலக்கூற்று நைட்ரஜன் (N2)

கற்குழம்புப் பெருங்கடலில் உயிரியம் எவ்வகையான வேதிச் சேர்மமாக (Chemical Compound ) இருந்தது என்று அறிவது முக்கியம்.  அதற்கு எவ்வளவு உயிரியம் இரும்புத் தனிமத்துடன் வேதிப் பிணைப்பில் (chemically bonded) இருந்தது என்று கண்டுபிடிக்க வேண்டும். உயிரியம் அதிக அளவில் இருந்தால், பிணைப்பு விகிதம் 3:2 என்ற அளவில் இருக்கும். உயிரியம் குறைவாக இருந்தால் 1:1 என்ற விகிதத்தில் வேதிப் பிணைப்பு அமையும். நடைமுறையில் உள்ள விகிதம் இவ்விரு எல்லைகளுக்கு இடைப்பட்டதாக இருக்கும்.

இந்த  கற்குழம்புப் பெருங்கடல்  வெட்பம் தணிந்து  அது புவிக் கவசமாகி (mantle) நிலைத்தது.எனவே கற்குழம்புப் பெருங்கடல் கொண்டிருந்த உயிரியம் -இரும்பு பிணைப்பு விகிதம், இன்றைய புவிக் கவசத்தில் காணும் விகிதத்திற்கு சமமாகவே இருந்திருக்கும் என்பது ஆராய்ச்சியாளர்களின் கருது கோள். எரிமலை உமிழ்வுகள் வெளிக்கொணர்ந்த சிலவும்,புவியின் மேலோட்டு அசைவு அல்லது கட்டமைப்புக்குரிய நடைமுறையின் போது பிறவுமாக ஆராச்சியாளர்களுக்கு  கவசத்தின் பதக் கூறுகள் (samples) அதிக அளவில் கிடைக்கின்றன. இவற்றைக் கொண்டு ஆய்வுக் கூடத்தில் பொருத்தமான வேதிப் பொருட்களின் கலவையை முடிவு செய்து ஆய்வு மேற்கொள்ள முடிந்தது. ஆய்வின் முடிவில் அன்றைய புவியின்  வளிமண்டலம் கரிமவாயு (CO2) மற்றும் நீராவியால் அமைந்தது என்பது உறுதி செய்யப் பட்டது. நைட்ரஜன் நச்சு வாயுவான அம்மோனியா (NH3) வடிவில் இருந்திருப்பதைக் காட்டிலும் மூலக் கூற்று வடிவில் (N2) இருந்திருக்க அதிக வாய்ப்பு இருந்தது.

கற்குழம்புப் பெருங்கடல் வெப்பம் தணிந்து குளிர்ந்ததும் என்ன நடந்திருக்கும்? அப்போதைய புவி போதுமான அளவு குளிர்ந்து விட்டபடியால் வளிமண்டல நீராவி சுருங்கி திரவ நீராகி நாம் இன்று காணும் பெருங்கடல்கள் உருவாயின. நீராவி இல்லாத வளிமண்டலம், கரிம வாயு 97%, நைட்ரஜன் மூலக் கூறு 3% என்ற விழுக்காடுகளில் இருந்திருக்கும். அப்போதைய வளிமண்டலக் காற்றழுத்தம்  இன்றைய அழுத்தத்தை விட 70 மடங்கு அதிகமாக இருந்திருக்கும்.

வெள்ளிக் கோளின் தற்போதைய நிலவரம் :

மேல் பத்தியில் குறிப்பிட்டிருந்த CO2:N2 விகிதம் (97:3) பளிச்சிட்டுக் காட்டுவது இதே விகிதம் தான் வெள்ளிக் கோளின் தற்போதைய வளிமண்டலத்தில் நிலவுகிறது என்பதையே. எனவே புவி தப்பித்து விட்டபோதிலும் ஏன் வெள்ளிக் கோள் மட்டும் இன்று வரை அதே தாங்க முடியாத சுட்டெரிக்கும் நச்சு வளி மண்டலத்தை தக்கவைத்துள்ளது  என்ற கேள்வி எழுகிறது. சூரியனுடன் புவியை விட அதிக நெருக்கத்தில் இருப்பது வெள்ளிக் கோள் என்பதே  அதற்கு விடை.  ஒரு போதும் வளிமண்டலத்திலுள்ள நீராவியைக் குளிர்வித்து நீர்ப் பெருங்கடல் உருவாக்கும் அளவுக்கு அதன்  வெப்பம் தணியவில்லை. மாறாக அதிகரித்து வந்த சூரிய வெப்பத்தால் நீராவி வளிமண்டலத்திலேயே தங்கிப் பின்னர் மெதுவாகவும் தவிர்க்க முடியாதவாறும் அண்டவெளியில் தொலைந்து போனது.

புவிக்கோள் மீண்டது எப்படி?

மாபெரும் மோதலுக்குப் பின் கற்குழம்புக் கடலாகிக் குளிர்ந்து விட்ட பின்னரும் சாதகமான வளிமண்டலத்தைப் பெறாத புவிக்கோள் உயிர் தாங்கும் கோளாக மாறியது எப்படி? நீர் நிறைந்த பெருங்கடல்கள் வளிமண்டலக் கரிம வாயுவை மெதுவாக ஆனால் சீராக உறிஞ்சி பாறைகளுடனான வேதிவினைக்குப் பயன்படுத்திக் கொண்டதால்  இந்த மாற்றங்கள் ஏற்பட்டன என்கிறார் இயற்பிய வேதியலாளரும் (physical சயின்டிஸ்ட் ) 1934ஆம் ஆண்டுக்கான வேதியியல் நோபல் பெற்றவருமான Harold Urey.  கரிம வாயு கரைந்த சொற்ப அமிலத் தன்மை கொண்ட மழைநீர், கால்சியம் சிலிகேட் கனிமத்தை உள்ளடக்கிய புதிய எரிமலைப் பாறையை நனைக்கும் போது கீழ்க்காணும் வேதிச் சமன்பாட்டின் படி வேதிவினை நிகழ்ந்து பாறை சிதைவுறும் என்கிறார். இந்த வேதிவினை Urey’s equation என்ற பெயரிடப் பட்டது.

CO2  + CaSiO4—-> CaCO3 + SiO2

அவர் கருத்துப்படி, புவியின் வளிமண்டலத்தில் எவ்வளவு கரிம வாயு இருக்கவேண்டும் என்பது புவியின் நீர் இருப்பு முடிவு செய்கிறது. 70ஆண்டுகள் கழிந்த பின்னரும் இந்த வேதிவினை இன்னும் அறிவியல் சமூகத்தால் முழுதுமாக ஏற்றுக் கொள்ளப் படவில்லை.

97% கரிம வாயு எங்கே சென்றது?

முற்காலத்திய வளிமண்டலத்தை இன்றையதுடன் ஒப்பிட்டால் காற்றழுத்தம் வெகுவாகக் குறைந்திருப்பதும்  கரிம வாயு அநேகமாக வெளியேறி விட்டதும் தெளிவாகும். முற்காலத்துப் புவிக் காற்றில் 97% ஆக இருந்த கரிமவாயு எங்கே சென்று விட்டது என்ற கேள்வி எழுகிறது. அனைத்துமே புவிக்கு வந்து விட்டது இவ்வாறு:

  • புவியிலுள்ள தாவரங்கள், பாசிகள், மேலோடு தயாரிக்கும் உயிரினங்கள் பெருமளவில் கரிம வாயுவை திடப்பொருளாக்கி கார்பனேட் கனிமங்களாகவும் (சுண்ணாம்புப் பாறைகள் ) மற்றும் அங்ககப் பொருண்மங்களாகவும் (organic material)சேமித்து வைக்கின்றன.
  • படிம எரிபொருள்களான நிலக்கரி, கச்சா எண்ணை தயாரிப்புக்குத் தேவையான கரிமம், கரிம வாயுவிலிருந்து (CO2) உயிரியம் நீக்கப்படுவதால் கிடைக்கிறது. 

இவ்வாறாக வளிமண்டல கரிம வாயு முழுதும் புவியின் பயன்பாட்டுக்குப் போய்விடுகிறது. தாவரங்களின் ஒளிச் சேர்க்கை (photo synthesis) வளிமண்டலத்தில் உயிரியம் சேர்க்கிறது.  கரிம வாயு நீங்கிய வளிமண்டலம் இன்றையபுதிய கலவைக்கு மாறிவிட்டது. அதன் கூறுகள் :

  • பெரும் கூறுகள் : நைட்ரஜன் (N2) =78%, உயிரியம் (O2)=21%
  • சிறு கூறுகள் :ஆர்கன் (Argon)=0.9% பிற வாயுக்கள் (CO2 உட்பட)மிகச் சிறிய அளவில்.

முடிவுரை:

புவிக்கோளும் வெள்ளிக்கோளும் பிறப்பில் ஒத்திருந்தாலும், சூரியனின் அண்மை வெள்ளிக் கோளை பாதித்து இனிமையற்ற கோளாக்கியது. ஆனால் அதே சூரியன் அதிகத் தொலைவிலிருந்த புவிக்கோளுக்கு நன்னீர்,உயிர் தாங்கும் சூழல் தந்து உயிர்ப்பித்தது .

சுட்டிகள்:

https://theconversation.com/ancient-earth-had-a-thick-toxic-atmosphere-like-venus-until-it-cooled-off-and-became-liveable-150934

https://en.wikipedia.org/wiki/Formation_and_evolution_of_the_Solar_System#:~:text=The%20various%20planets%20are%20thought,orbit%20around%20the%20central%20protostar.

https://exoplanets.nasa.gov/faq/43/how-do-planets-form

https://www.nhm.ac.uk/discover/how-our-solar-system-was-born.html

https://www.eso.org/public/blog/witnessing-the-birth-of-planets/

http://earthguide.ucsd.edu/virtualmuseum/climatechange1/05_2.shtml

Series Navigation<< புவிக்கோளின் அடுக்குகளும் ஆய்வு முறைகளும்அணுக்கரு இணைவு – கதிரவனைப் படியெடுத்தல் >>

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.