காக்கைகளின் மாட்சிமை – காக்கை பாடினிகளின் சாட்சியம்

மைத்ரேயன்

[இந்தக் கட்டுரை தழுவி எழுதப்பட்டது. மூலக் கட்டுரை, ‘ஹார்பர்ஸ் மாகஸீன்’ பத்திரிகையின் ஏப்ரல் 2021 இதழில் வெளியான ‘த க்ரோ விஸ்பரர்’ என்பது. எழுதியவர் லொரென் மார்க்கம். ]

மூலக்கட்டுரை நகரங்கள் மீது படையெடுத்த விலங்குகளைப் பற்றிப் பேசத் துவங்கி, மனிதரும் மிருகங்களும் உரையாடுவது எப்படி என்பதை யோசிக்கிறது.

சமீபத்து கோவிட் நுண்கிருமித் தாக்குதலால் உலகின் பல மாநகரங்களின் மையங்களில் மக்கள் நடமாட்டம் அனேகமாக இல்லாமல் போயிருந்தது. ஆகவே நகரத்தின் குப்பைக் கூடைகள், மக்கள் எங்கும் விட்டுச் செல்லும் உணவுப் பொருட்களின் மிச்சம் மீதிகள் என்று தாம் உணவு தேடும் வாய்ப்புகள் கிடைக்காமல் போகவும், அவற்றை நம்பி வாழும் ஏராளமான உயிரினங்கள் புறநகரங்களில் மக்கள் வாழும் இடங்களைத் தேடிச் செல்ல ஆரம்பிக்கின்றன.

எலிகள், ராகூன்கள், வான் கோழிகள், காட்டு ஆடுகள், பன்றிகள், மான்கள் என்று பற்பல நகரங்களில் உலாவத் திரிகின்றன, ஏற்கனவே பல ஊர்களில் பல வருடங்களாக கரடிகள் உலவுவதை அவ்வப்போது செய்திகளில் படித்திருப்போம். இந்த வருடமும் அது நடக்கிறது.

உணவைத் தேடி. பல வீடுகளுக்குள்ளும் நுழையத் தொடங்குகின்றன. இதைப் பற்றி எழுத ஆரம்பிக்கும் லொரென் மார்க்கம், வேறுபல வினோதங்களையும் கவனிக்கிறார். பெரும் மக்கள் திரள் வேலை பார்க்கவென்று அலுவலகங்களுக்குப் போகாமல் வீட்டிலிருந்தபடி வேலை செய்யத் துவங்கவும், அம்மக்களில் பலர் தம் வீட்டுச் சூழலில் உள்ள இயற்கையைக் கவனிக்கத் துவங்குகிறார்கள். அப்போது மிருகங்கள் (இதர ஜீவராசிகள்) புழங்கும் உலகில் தாம் ஒரு சிறு பங்கு என்பதை அறிகிறார்கள். அது பலருக்கு தன்னடக்கத்தை மேற்கொள்வது அவசியம் என்பதைப் போதிக்கிறது. பல சம்பவங்களை முன்வைத்து லா. மார்க்கம் அதைப் பற்றி எழுதுகிறார்.

தம் வீடுகளிலும், வீட்டைச் சுற்றிய இடங்களிலும் ஜீவராசிகளுடன் ஏற்படும் சிறு புரசல்களைத் தீர்க்க வழி தேடும் மனிதர்கள், மற்றும் அமெரிக்காவில் பல ஊர்களில் மிருகங்களோடு தம்மால் தொடர்பு கொள்ள முடியும் என்று சொல்பவர்களைக் குறித்த தகவல்கள் லாரெனின் கவனத்தை ஈர்க்கின்றன. அவர்களைச் சந்தித்து அந்த நிகழ்ச்சிகள் பற்றியும் கட்டுரையில் எழுதுகிறார்.

 அவர்களில் ஒருவர் காக்கைகளுடன் தொடர்பு கொள்பவர். கட்டுரையின் பெயரில் உள்ள க்ரோ விஸ்பரர் என்ற சொல் அவரைத்தான் சுட்டுகிறது. க்ரோ விஸ்பரர் என்ற சொல் தற்காலச் சொற்புழக்கத்தால் உருவானது. ஹார்ஸ் விஸ்பரர், டாக் விஸ்பரர், லயன் விஸ்பரர், எலிஃபண்ட் விஸ்பரர் என்று பற்பலர்கள் திரைப்படங்கள், யு ட்யூப் விடியோக்கள், புத்தகங்களில் தோன்றி இருக்கிறார்கள்.

இந்தியாவில் மாவுத்தர்கள் என்று யானைகளை கட்டுக்குள் வைத்துத் தாம் சொல்வதைச் செய்ய வைப்பவர்களை நாம் பார்த்திருக்கிறோம். (யானைப் பாகர் என்றும் சொல்வார்கள்.) அப்படிப்பட்டவர்களை மேற்கில் இப்போது ‘விஸ்பரர்’ என்று அழைக்கத் துவங்கி இருக்கிறார்கள் போலிருக்கிறது.

***

கட்டுரையைத் துவங்கு முன் மூலக் கட்டுரையில் இல்லாத ஒரு குறிப்பைச் சேர்க்கிறேன். 60களில் இந்தியாவில் வாழ்ந்த ஜே.பி.எஸ். ஹால்டேன் என்ற பிரிட்டிஷ் அறிவியலாளர் பற்றி நமக்கு ஓரளவாவது தெரிந்திருக்கும். சமீபத்தில் இவரது வாழ்க்கைச் சரிதத்தை ஒரு இந்திய எழுத்தாளர் எழுதியிருக்கிறார். அந்தப் புத்தகத்தின் மதிப்புரை ஒன்றை இங்கே காணலாம்: https://www.nytimes.com/2020/07/28/books/review/a-dominant-character-haldane-samanth-subramanian.html

கொல்கத்தா மாநகரில் ஹால்டேனின் பெயரில் ஒரு வீதி இருப்பதாக வங்காள நண்பர்கள் தெரிவித்தனர். ஹால்டேன் கல்கத்தா நகரின் மக்களுடைய கலகக் குணம் பற்றிப் புகழ்ந்து எழுதி இருக்கிறார். அங்குள்ள இந்தியன் ஸ்டாடிஸ்டிகல் இன்ஸ்டிட்யூட் என்ற பெருமை பெற்ற கல்வி நிறுவனத்தில் ஆய்வாளராகப் பணியாற்றினார்.

பிறகு ஒரிஸ்ஸாவிற்குப் போகிறார். அங்கு சில ஆண்டுகள் புதிதாய் நிறுவப்பட்ட பயோமெட்ரி ஆய்வகத்தில் ஆய்வுகளில் ஈடுபடுகிறார். தான் ஓர் இந்தியக் குடிமகன் என்று அறியப்பட வேண்டும் என்று 1962 இல் ஒரு பேட்டியில் ஹால்டேன் குறிப்பிட்டிருக்கிறார்.[1]


அன்று ஹால்டேன், மிருகங்களும் ஜீவராசிகளும் அடங்கிய பேருலகில், மனிதகுலம் என்ன பங்கு வகித்தது என்பதைப் பற்றிச் சொன்னதை இன்று படிக்க நேர்ந்தது. அந்தக் குறிப்பின் மூலத்தை அடிக்குறிப்பில் பார்க்கலாம். இங்கு மொழிபெயர்ப்பைத் தருகிறேன்.[2]

இயற்கை உலகைப் பார்க்கையில், அதை உருவாக்கியவரின் மனதைப் (புத்தியை) பற்றி என்ன நினைப்பு வருகிறது என்று ஜே.பி.எஸ். ஹால்டேன் ஒரு முறை கேட்கப்பட்டார். அவருடைய பதில், “ வண்டுகளிடம் அளவற்ற பிரியம்.”  இந்தக் கவனிப்பைப் பலரும் பலவிதமாகப் புரிந்து கொள்கிறார்கள்.[3] கர்த்தர் தன் படைப்பு வேலையைச் செய்தபின் ஒரு சபாத் நாள் மாலையில் ஒரு யோசனையின் பல்வேறு விளைவுகளில் வீற்றுப்படுதல் மிகுதலைக் கண்டு குதூகலித்திருக்க வேண்டும்  என்று ஹால்டேன் சொல்வதாக நினைப்போர் உண்டு. (இந்தப் பூமி கிரகத்தில் நமக்குத் தெரிந்து உள்ள ஜீவராசிகள் அனைத்திலும் ஐந்தில் ஒரு பங்கு வண்டுகளே. அவை சுமார் மூன்றரை லட்சம் வகைகள்.) மாறாக மனிதகுலத்தின் மீது அவர் கவனம் அத்தனை மையம் கொண்டிருக்கவில்லை, இந்த ஜீவராசி தற்காலிகமானதுதான், இதற்குப் பிறகும் வாழப்போவது கரப்பான்கள்தான் என்ற மனிதச் செருக்கழித்த அணுகல் ஹால்டேனுடையது என்று எண்ணுவார் உண்டு.

கால இடவெளியில் உலகமெனும் பெரும் நாவாயில் பயணம் போகும் பல கோடி ஜீவராசிகளில் ஒன்றுதான் மனிதக் கூட்டம் என்பதை நாம் அனேகமாக ஒரு போதும் நினைவு கொள்வதில்லை. நம் கவனம், கருத்து, கலை, கல்வி, காட்சிப்படுத்தல், கூட்டம் சேர்தல், கொண்டாட்டங்கள், கோலாகலம் என்று என்ன நடவடிக்கையைப் பார்த்தாலும் அவை எல்லாம் அனேகமாக மனிதரையும் மனிதரின் விருப்பங்களையும் மட்டுமே மையத்தில் கொண்டு நடத்தப்படுவன.

எப்போதோ ஒரு பிற்சேர்க்கையாக நாம் ஜீவராசிகளை, மிருகங்களை,பூச்சி, புழுக்களை நினைத்துப் பார்க்கிறோம். அவற்றோடு சேர்ந்த நம் வாழ்க்கை என்னவாக உள்ளது என்பதைக் கவனிக்கிறோம்.

ஏதாவது பேரலையாக எழுந்து நம்மை அழிக்கப் போகிறது என்றால் மட்டும் நம் கவனம் அவற்றின் மீது முழுதாகத் திரும்புகிறது. (உதா: கோவிட் நுண்கிருமி. அதே போல முன்னொரு காலம் காலரா, பிளேக், அம்மை, போலியோ, எச் ஐ வி நோய்களைப் பேரலையாகக் கொணர்ந்த கிருமிகள் பற்றியும் நாம் அச்சம் கொண்டோம்.)

அபாயம் வந்தால் மட்டும் அவற்றை எண்ணுவது அத்தனை பயனுள்ள செயலாகத் தெரியவில்லை. ஏனெனில் வர்த்தகம் என்ற பெயரில் நுண்கிருமிகளை நம் பரம எதிரிகளாகப் பார்த்து, ஒரே வழி அவற்றை எல்லாம் அழிப்பது என்று பிரமாண்ட விளம்பரங்களோடு நாம் நமக்கே விற்கும் நாசினிகள் கிருமிகளை அழிக்கின்றனவோ இல்லையோ, நம்மை அழிப்பதைத் தம் தொலை நாள் செயல்திட்டமாகக் கொண்டு இயங்குவதாகத் தெரிகிறது. ஒரு புறம் தினம் கிருமிகள் பற்றிய அச்சத்தை விற்பனைக்கான தூண்டுதலாக வைத்துக் கொண்டே மறுபுறம் கிருமிகள் பற்றிய ஆழ்ந்த அஞ்ஞானத்தையும் விதைக்கிறோம்.

அபாயத்தையும் நாம் அப்படி ஒன்றும் தீர யோசித்து திட்டமிட்டுத் தவிர்ப்பதும் இல்லை. உதாரணமாக, நம் உடற்கூறு பழுதடைவதால் வருடந்தோறும் இறப்பவர்கள் பல மிலியன் நபர்கள். இதய நோய், புற்று நோய், காச நோய் என்று பழுதாகும் உடற்கூறு கொல்லும் நபர்கள் கோவிட் நுண்கிருமியில் இறந்தவர்களின் எண்ணிக்கையை விடப் பல மடங்கு கூடுதல். ஆனால் அவை குறித்து அபாய எச்சரிக்கைகளை நாம் அலட்சியம் செய்யக் கற்றுக் கொண்டு பல பத்தாண்டுகள் கூட ஆகி விட்டன. அந்நோய்களைத் தீர்த்து விடும் சிகிச்சைகளை அடைய நாம் தேவையான முதலீட்டை இன்னமும் செய்யத் தயாராக இல்லை. அரசாங்கங்களும் சரி, தனி மனிதர்களும் சரி, அறக்கட்டளை நிறுவனங்களும் சரி ஒரே போல அலட்சியப்படுத்தலையே சமாளிக்கும் முறையாகக் கைக்கொண்டிருக்கிறோம்.

நாம் கவனிக்கும் சில மிருகங்களைப் பொருத்து, வளர்ப்புப் பிராணிகள், நம் உணவாகப் போகும் பிராணிகள், சில சுற்றுலாப் பயணக் காட்சிப் பொருளான மிருகங்கள், நாம் வேட்டையாடச் செல்லும் மிருகங்கள்- என்று எல்லாம் நம் நுகர்வைச் சுற்றியே நம் கவனம் போகிறது.  இதற்கு விளக்கமாக சிலர் சொல்லக் கூடும்- மிருகங்களைப் பற்றிப் படிப்பது, ஆராய்வது போன்ற வேலைகளைச் சிலருக்கு சிறப்புத் தொழிலாக நாம் ஒதுக்கி விட்டிருக்கிறோம். அவர்கள் அந்தத் தகவல்களைச் சேகரிக்கத் தம் வாழ்நாட்கள் அத்தனையையும் செலவிடுகிறார்கள். இதர மனிதர்கள் அவரவரது தொழில் சார்ந்த துறைகளில் கவனம் செலுத்துகிறார்கள், இது மனித சமூகம் இன்று அமைக்கப்பட்டிருக்கும் விதத்தைச் சார்ந்த பிரச்சனை என்று விளக்கலாம்.

விளக்கங்கள் இப்படி இருந்தாலும், மையம் மனிதர் என்ற ஜீவராசிதான் என்பதுதான் இங்கு விமர்சனம். தன்னைத் தவிர்த்த கவனிப்புக்கு ஜீவராசிகளின் உலகம் இன்னும் பொருட்டாகக் கருதப்படவில்லை என்பது விமர்சனம்.

லொரென் மார்க்கம் தன் கட்டுரையை இந்தப் புள்ளியிலிருந்து துவங்கி எழுதுகிறார்.[4]

***

சென்ற மே மாதம்[5] கொரோனா சாவுகள் உயர்ந்து கொண்டே போகையில், நம் நகரங்களில் நம்மிடையே வாழும் பல மிருகங்களின் வாழ்வு திடீரெனப் புரட்டிப் போடப்பட்டது. அவை சாக்கடைகளில், மரங்களில், பூங்காக்களில், வீடுகளின் இண்டு இடுக்குகளில் என்று நமக்கு உடனடியாகத் தெரியாதபடி வாழும் மிருகங்கள். நகர மையங்கள் காலியாகி விட்டிருந்தன, பெரும் குப்பைத் தொட்டிகளில் உணவுப் பொருட்களின் மிச்சங்கள் கொட்டப்படவில்லை. சாலைகளில் ஓடும் வாகனங்கள் வெகுவாகக் குறைந்து விட்டிருந்தன. பேட்டைகளின் பூங்காக்கள் அனேகமாக ஆட்களே இல்லாத நிலையில். பள்ளிக்கூடங்கள், போக்குவரத்து மையங்கள், ரெஸ்டாரண்டுகள், டீக்கடைகள், மால்கள்- எல்லாம் காலி.

இதன் விளைவாக ஊர்களுக்கு வெளியே வாழும் விலங்குகள் நகரங்களுக்குள் படையெடுக்கின்றன. சமீபத்தியச் செய்தியில் ஆஸ்த்ரேலியாவில் சுண்டெலிகள் லட்சக்கணக்கில் நகரின் வீடுகளை நோக்கிப் படையெடுத்திருக்கின்றனவாம்.[6] இன்னொரு புறம் ஆஃப்ரிக்காவில் யானைகள் அவற்றின் வாழ் நிலம் அழிக்கப்படுவதாலும், அவை வேட்டையாடப்பட்டுக் கொல்லப்படுவதாலும் அழிவின் விளிம்பில் இருப்பதாகவும் செய்தி சொல்கிறது. இந்தியாவில் பல ஊர்களில் சிறுத்தைகள் ஊருக்குள் நுழைவதும், யானைகள் வயல்கள் தோட்டங்களில் புகுந்து உணவு தேடத் துவங்குவதையும் பற்றிய செய்திகள் அடிக்கடிப் பிரசுரமாகின்றன.

அமெரிக்காவின் ஓக்லாண்ட் மாநகரில் இந்தச் சமயத்தில் ஒரு வான்கோழி அங்கிருந்த மார்கம் ரோஸ் பூங்காவில் குடியேறியது. தன் துணை, குஞ்சுகளோடு புகுந்த அது மனிதர்களைக் கண்டால் தாக்குவதற்கு முனைந்தது. பிறாண்டியது, காயப்படுத்தியது, உணவுப் பொருட்களைத் திருடிப் போயிற்று, குழந்தைகளை அச்சுறுத்தியது, அங்கு பிக்னிக்கிற்கு வந்தவர்களை விரட்டியது. நகர ஊழியர்கள் அதைப் பிடித்து நகருக்கு வெளியே இருந்த மலைப்புறத்தில் கொண்டு விட்டனர். ஆனால் கொஞ்ச நாட்களில் அது திரும்பி வந்து விட்டது. நகர்ப் பூங்காக்களைப் பராமரிக்கும் இலாக்காவினர் அதைக் கொல்வதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பித்தனர்.

இதே சமயத்தில் ஓக்லாண்டில் வேறோர் இடத்தில் ஒரு மயில் தெருக்களில் அலறியபடி ஓடிக் கொண்டிருந்தது. அதன் கூவல் அத்தனை பெரியதாக இருந்ததால் வீடுகளுக்குள் கூட அதன் அலறல் எதிரொலித்தது. சான் ஃப்ரான்சிஸ்கோ நகரின் தெருக்களில் கயோட்டி ஓநாய்கள் ஓடின. அமெரிக்கக் கோமான்கள் புழங்கும் மார்த்தாஸ் வைன்யார்ட் என்ற ஊரில் வான்கோழிகள் காலியான வீடுகளின் கூரைகளைப் பிடித்துக் கொண்டன, விளைவு தெருக்களில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. பாரிஸ் நகரில் பெருங்கொம்புள்ள கலை மான்கள் நிழற்சாலைகளில் உலாப் போயின, துருக்கியில் மாநகரப் புறநகர்களில் காட்டுப் பன்றிகள் கூட்டங்களாக படையெடுத்தன. ஆஸ்த்ரேலியாவின் அடலெய்ட் மாநகரில் கங்காருகள் நகர் மையத்தில் குதித்தோடிக் கொண்டிருந்தன. வேல்ஸ் மாநிலத்தில் காட்டுச் செம்மறி ஆடுகள் கிராமப் புறங்களில் எங்கும் ஓடின. சிலே நாட்டின் சாண்டியாகோ நகர மையத்தில் சிறுத்தைகள் உலவின. அவை மயக்க ஊசிகளால் சுட்டுப் பிடிக்கப்பட்டு, காட்டுப் புறத்தில் கொண்டு விடப்பட்டன. இன்னொரு புறம் முன்னெப்போதும் இல்லாத அளவு தென் அமெரிக்காவின் அமேஸான் மழைக் காடுகளை மனிதர் அழிப்பது பெருகி, அங்கு பல நூறாண்டுகளாக இயற்கையோடு இசைந்து வாழும் பழங்குடியினர் ஒழித்துக் கட்டப்படுகிறார்கள். பெரும் நிலப்பரப்புகள் காடழித்து மாடு வளர்க்கும் வெற்றுப் பரப்புகளாக்கப்படுகின்றன.

2020 நெடுக இவை போன்ற மிருகப் படையெடுப்புச் செய்திகள் பற்பல ஊர்களில் செய்தித்தாள்களில் நிறையவே காணப்பட்டன .  கலிஃபோர்னியாவில் ஊரடங்குச் சட்டம் போடப்பட்டதால், மார்க்கமும் அவரது கணவரும் வீட்டில் இருந்து வேலை செய்யத் தொடங்கினர், அப்போது அவர்களுடைய வீட்டுப் பின் புறம் இருந்த சிறு தோட்டத்தில் பிர்ச் மரம் ஒன்றின் கீழ்க் கிளைகளில் இமிரிச் சிட்டு[7] ஒன்றின் கூட்டைக் காண்கின்றனர். தாழத் தொங்கும் கிளைகளாலும், ஏராளமான இலைகளாலும் நன்கு மறைவாகக் கட்டப்பட்டிருந்த அந்தக் கூட்டை இருவரும் தினம் காலை மெய்ம்மறந்து கவனிக்கிறார்கள். அந்தச் சிட்டு தன் முட்டைகளின் மீது அமர்ந்து அடை காக்கிறது. தாம் என்ன செய்யலாம் என்று இருவரும் யோசிக்கிறார்கள். அவர்களின் சக ஊழியர் ஒருவர் தன் தோட்டத்திலும் இதே போல இமிரிச் சிட்டு ஒன்று கூடு கட்டி இருப்பதைக் கண்டதாகச் சொல்கிறார். குறை நாட்களில் பல நண்பர்கள் இதே போலத் தம் வீட்டுப் புறங்களில் கூடுகளைக் காண்கிறார்கள். இதெல்லாம் அதிசயமான உடன் நிகழ்வுகளாக இருவருக்கும் தோன்றினாலும் எதார்த்தம் புரிந்திருக்கிறது மார்க்கமிற்கு. இந்தக் கூடுகள் எத்தனை காலமாக அந்தப் பகுதிகளில் இருந்தன என்று யாருக்குத் தெரியும். தாம்தான் இவற்றைக் கவனித்ததில்லையோ என்று வியக்கிறார்.

இங்கு தன் கதை சொல்லலை அடுத்த தளத்துக்குக் கொண்டு போகிறார் லொரென் மார்க்கம். அதாவது தன்னிலை அனுபவ வர்ணனையிலிருந்து புறநிலை எதார்த்தத்தைப் பற்றி யோசிக்கிறார். இந்த வகை மிருகப் படையெடுப்புகள் பற்றிய செய்திகள் இந்தக் காலகட்டத்தில் அதிகரித்திருப்பது ஏன் என்பது அவர் யோசனை. தற்காலத்தின் இரக்கமில்லாத சம்பவங்களான லட்சக்கணக்கானோரின் இறப்புக்கு நடுவில் இந்தப் படையெடுப்புச் செய்திகள் மேலும் எரிச்சலைக் கொணராமல், ஓரளவு அமைதியளிப்பனவாக இருக்கின்றன, நம் கவனத்தை மரிப்புகளிலிருந்து வாழ்வுக்கான போராட்டத்தில் மிருகங்களும் இருப்பதைப் பார்க்கும்படி மடை மாற்றுகின்றன என்று யோசிக்கிறார். இது மிருகங்களைக் கொல்லும் நோக்கத்திற்கு மனிதரைக் கொணராமல், அவை எத்தனை தூரம் தம் வாழ்வின் பின்னணியில் உள்ளன என்று கவனிக்கும்படி செய்கிறது என்று அறிகிறார்.

இதே காலகட்டத்தில் ஒரு நண்பர், ஆடம் ஃப்ளாரினும், அவர் மனைவி டானி ஃபிஷரும் தம் வீட்டில் நடந்த சில விசித்திர சம்பவங்களைப் பற்றி முகப்புத்தகத்தில் எழுதுகிறார்கள். இருவரும் கலிஃபோர்னியா மாநிலத்தில் ஓக்லாண்ட் நகரில் தம் வீட்டில் வசிப்பவர்கள். இரண்டு தினங்கள் முன்பு அவர்கள் வீட்டில் நிலைமை மோசமாக இருந்திருக்கிறது. காலையில் தமது நான்கு மாதமே ஆன குழந்தை, லீனாவை சிறு துயிலிலிருந்து எழுப்பிக் கொண்டிருக்கையில், தோட்டத்தில் பெரும் ஆரவாரம் கேட்டு ஜன்னல் வழியே எட்டிப் பார்க்கிறார்கள்.

தோட்டத்தின் மறு கோடியில் அவர்களது நாய் மோனாவைச் சுற்றி மேகம் போல காக்கைகளின் கூட்டம் கவிந்திருக்கிறது. நாய் சிறிய நாய் என்பதால் அவை அந்த நாயைத் தூக்கிக் கொண்டு கூடப் போய் விடுமோ, அல்லது கொன்று விடுமோ என்ற பயம் எழுந்து, டானி தோட்டத்துக்கு ஓடுகிறார்.  (இங்கிலிஷில் காக்கைகளின் கூட்டத்திற்கு, ‘கொலை’ என்று பெயர். ‘எ மர்டர் ஆஃப் க்ரோஸ்’ என்றால் காக்கைக் கூட்டம் என்று பொருள்படுத்திக் கொள்ள வேண்டும்.) டானி நினைத்தாராம், என்ன ஒரு பொருத்தமான பெயர்! அவர் கூக்குரலிட்டுக் கொண்டு ஓடி, மோனா என்கிற அந்த நாயைக் காக்கைகளிடமிருந்து மீட்டு வீட்டுக்குள் கொணர்கிறார்.

அதற்குப் பிறகு ஆடமோ, டானியோ வீட்டின் பின்புறத்தில் உள்ள மேடையில் நடந்தால், ஒரு காக்கை குரல் கொடுக்கிறது, அந்தக் காக்கைக் கூட்டம் உடனே அங்கே குழுமிப் போடுகிற இரைச்சலில் யார் பேசுவதும் காதில் விழுவதில்லை. நாய் மோனா சிறுநீர் கழிக்க வீட்டுக்கு வெளியே போனால், சில சமயம் காக்கைகள் சடேலென்று கீழிறங்கி மோனாவைக் கொத்துகின்றன. ஆடம் அந்த நாய்க்கு உடற்பயிற்சியாகத் தெருவில் நடத்தி அழைத்துப் போனால், அவை தாழப் பறந்து அவர்களைத் தொடர்கின்றன. வேறு தெருக்களுக்குப் போய் அங்கே நடக்க முயன்றால் காக்கைகள் அங்கும் அவர்களை அச்சுறுத்துகின்றன. தாம் தம் வீட்டிலேயே முற்றுகையிடப்பட்டாற்போல ஆடமும் டானியும் உணர்கிறார்கள். காக்கைகள் மாஃபியா குற்றக் கும்பல் போல இருக்கின்றன என்கிறார் டானி. குழந்தை லீனாவின் பாதுகாப்பு பற்றிய அச்சம் அவர்களுக்கு எழுகிறது.

தவிர கோவிட் தாக்கத்தால் ஊரடங்கு அமலில் இருப்பதால் அவர்களால் வீட்டை விட்டு வெளியேறி வேறெங்கும் ஓர் ஆறுதலுக்குக் கூடப் போக முடியவில்லை.

மோனா ஏன் தாக்கப்பட்டது என்பதற்கு அண்டை வீட்டுக்காரர் ஒருவரின் விவரணை சற்று உதவுகிறது. மோனாவின் வாயில் ஒரு காக்கைக் குஞ்சு இருப்பதைத் தான் பார்த்த நினைவு தனக்கு இருப்பதாக அவர் சொல்கிறார். மோனா எந்தப் பறவையையும் தாக்கி ஆடம், டானி இதற்கு முன் பார்த்ததில்லை. ஆடம் தகவல் சேகரித்துத் தெரிந்து கொண்டதன்படி, காக்கைகளுக்குத் தனி மனிதர்களை உறுதியாக அடையாளம் காணத் தெரியும், அந்த மனிதர்களின் நம்பகத்தன்மை குறித்து அவை ஒரு முடிவுக்கு வரக் கூடியவை, அந்த முடிவைப் பிற காக்கைகளுக்கு அவை தெரிவிக்கின்றன, அடுத்த தலைமுறைகளான காக்கைகளுக்குக் கூட இந்தத் தகவல் கடத்தப்படுகிறது என்று தெரிந்து கொள்கிறார். இது நீண்ட காலப் பிரச்சனையாகலாம் என்று உணர்கிறார்.  

எனவே ஆடம் வலைத்தளங்களில் இந்தப் பிரச்சனைக்கு முடிவு ஏதும் கிட்டுமா என்று தேடுகிறார். கிட்டத்தட்ட எல்லாப் பதிவுகளுமே அந்த வீட்டை விட்டு வேறு ஊருக்குக் குடி பெயரும்படி ஆலோசனை சொல்கின்றன.

முகப்புத்தகத்தில் ஆடம் தன் நண்பர், உறவினர்களிடம் கேட்கிறார், “காக்கைகளோடு மோதல் ஏற்பட்டால் அதை நல்ல முடிவுக்குக் கொணர என்ன வழி என்று உங்களுக்குத் தெரியுமா?” அவருடைய அம்மா “தண்ணீரைப் பீய்ச்சும் துப்பாக்கியைப் பயன்படுத்திப் பார்!” என்கிறார். சில அண்டை வீட்டுக்காரர்கள் சொல்கிறார்கள்: ஈவெட் ப்யூய்க் என்ற காக்கை வசியக்காரியோடு பேசுங்க.’

ஆடம் அவருக்கு ஒரு மடல் எழுதுகிறார், ஈவெட் நேரில் வருவதாகச் சொல்கிறார். ப்யூய்க் அடுத்த நாள் வீட்டுப் பின்புறத்தில் இறங்கியதும் காக்கைகள் கூட்டமாகப் பறந்து இறங்கி இரைச்சலாகக் கரைகின்றன. தான் செய்தவற்றை ப்யூய்க் பிற்பாடு மார்க்கத்திடம் விவரிக்கிறார். முதலில் காக்கைகளுக்கு ஒரு சிறு ‘காணிக்கை’யை அவர் சமர்ப்பிக்கிறார். ஆறுதலாகச் சில வார்த்தைகளைப் பேசுகிறார், அந்தப் பறவைகளுக்குத் தான் சமாதானமாக வந்திருப்பதாகச் சொற்களில்லாது செய்தி அனுப்புகிறார். தான் உதவ வந்திருப்பதாகத் தெரிவிக்கிறார். அவை உடனே அமைதியாகின்றன. ப்யூய்க் அந்தக் காக்கைகள் கூடி இருக்கிற இடத்தில் சற்று ஆராய்கிறார். ஆடமும் டானியும் அந்தப் பக்கம் போவதைத் தவிர்த்திருந்தனர். அங்கு ஒரு குஞ்சு புதர்களில் சிக்கி இருக்கிறதைக் காண்கிறார். அதன் இறகு பிய்ந்திருக்கிறது, உடலோடு சிறிதே நாண்களால் இணைந்திருக்கிறது. ரத்தம். அது பயத்தோடும், பசியோடும் கீச்சிடுகிறது. அதைப் பார்த்து, இன்னும் தன் மகள் சிறு குழந்தையாக உள்ள அனுபவம் கொண்ட ஆடம் கூடக் கண்களில் நீர் மல்குவதை உணர்கிறார்.

ப்யூய்க் அந்தக் குஞ்சுடன் மென்மையாக உரையாடுகிறார். அதைக் காக்கைக் கூட்டம் கவனிக்கிறது. அந்தக் குஞ்சு ப்யூய்க்கை நோக்கித் தள்ளாடியபடி தத்தி வருகிறது. அவர் தன் கையைத் தரையில் விரிக்கிறார், அந்தக் குஞ்சு அவர் கையில் ஏறுகிறது. சாப்பாட்டை வேண்டித் தன் அலகைத் திறக்கிறது. ப்யூய்க் அப்போது நினைத்தாராம், இது பிழைக்க வழி இல்லை.

ப்யூய்க் ஆடமிடம் இரண்டு தேர்வுகளை முன்வைக்கிறார். ஒரு மிருக வைத்தியரிடம் அந்தக் குஞ்சை எடுத்துப் போய், அதற்கு ‘கருணைச் சாவை’க் கொடுக்கலாம். அல்லது அதன் இறுதிக் கணங்களில் அதன் வாழ்வை எத்தனை நிம்மதியாக ஆக்க முடியும் என்று பார்த்து அப்படிச் செய்யலாம். ஆடம் பிந்தைய தேர்வை மேற்கொள்கிறார். ப்யூய்க் அவரை ஒரு சிறு கூடையில் அடியில் மென்மையான துண்டு ஒன்றைப் பரப்பி எடுத்து வரச் சொல்கிறார். அந்தக் குஞ்சை அந்தக் கூடையில் மிருதுவாக அமர்த்துகிறார். ஒரு சிறு கோப்பையில் அதற்கு நீரைக் கொடுக்கிறார். ப்யூய்க் பிறகு காக்கைகளிடம் தன் மன்னிப்பைச் சொல்லி விட்டு, அவற்றுக்கு நன்றி தெரிவித்து, மெதுவாகப் பின் வாங்கிப் போகிறார். அந்தக் குஞ்சு அந்தத் தற்காலிகச் சவப்பெட்டியில் இன்னும் இருக்கிறது.

சில மணி நேரம் கழித்து அந்தக் குஞ்சு அங்கே காணப்படுவதில்லை. ஏதோ ஒரு வேட்டைப் பறவை அதைத் தூக்கிப் போயிற்றா, அல்லது அதன் பெற்றோர் அதை மீட்டு எடுத்துப் போயினவா என்பது தெரியவில்லை. அவர்கள் அந்தக் காலியான கூடையைச் சுற்றி பறவைத் தீனியான பருப்புகளைத் தூவுகின்றனர். அந்தக் குஞ்சை அப்படியே விட்டுப் போனதற்காக அதன் பிறகும் மறுபடியும் தாம் தாக்கப்படலாம் என்ற அச்சம் அவர்களிடம் இருக்கிறது. ஆனால் அடுத்த நாள் அவர்கள் வெளியே புறப்படும்போது காக்கைக் கூட்டம் அவர்களை நோக்கிப் பறந்து வரவில்லை. அவர்கள் இப்போது வீட்டுப் பின்புற மேடையிலோ, மரங்களின் அடியிலோ நாற்காலிகளில் அமர முடிந்தது. ஏதோ மாறி விட்டிருந்தது.

***

மார்க்கம் ஒரு நாள் காலை ப்யூய்கிற்கு ஒரு செய்தியை அனுப்புகிறார். மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்களைச் சமாதானமாகத் தீர்ப்பது பற்றி அவரிடம் மேலும் தெரிந்து கொள்ளத் தனக்கு உள்ள விருப்பத்தைச் சொல்கிறார். ப்யூய்க் தன்னை அழைக்குமாறு சொல்கிறார், ‘இது என் வேலையோடுதான் தொடர்புள்ளது.’

ப்யூய்க் ஏதோ மாய வித்தைகளில் நம்பிக்கை கொண்ட மாற்றுப் போக்குள்ளவர் என்று மார்க்கம் நினைத்தது பொருந்தவில்லை. அவரோ நாற்பது வயதானாலும் ‘அடங்க மறுக்கும்’ ஒரு ரௌடியாக இருந்தார். மனத் தடையின்றி வசவுச் சொற்களைப் பொழிந்தபடி அவர் பல கதைகளைச் சொல்கிறார். வளர்ப்புப் பிராணிகளுக்குப் பயிற்சி கொடுப்பதோடு, மிருகங்களின் புத்தியை வளைக்கும் சிகிச்சைகளை அவற்றின் சொந்தக்காரர்களையும் அதில் சேர்த்துச் செய்பவராக இருந்தார். ஓர் ஓவியரும் கூட. வளர்ப்புப் பிராணிகள், ராட்சஸப் பேருருக்கள் மற்றும் காக்கைகளை அவர் ஓவியங்களில் வரைந்து கொண்டிருந்தார்.

தான் சிறு பிள்ளைப் பிராயத்திலிருந்தே மிருகங்களின்பால் மிகவும் கவரப்பட்டதாகச் சொல்கிறார். ஜனங்களை விட அவை மேலான நண்பர்கள் என்பது அவரின் கருத்து. தன் இருபதுகளில், ஓர் ஆண் நண்பரோடு யூடா மாநிலத்தில் நெடுக நடைப்பயணம் மேற்கொள்கிறார். அவர்கள் பின்னே அண்டங்காக்கைகள் தொடர்ந்து வருகின்றன, ஏதோ அவருடைய கவனத்தை அவை ஈர்க்க முயல்வது போல இருக்கிறது. ப்யூய்க் அவற்றோடு பேசத் துவங்குகிறார். அப்பறவைகளோடு அவருக்கு ஒரு வகை புரிதல் ஏற்படுவதாக உணர்கிறார். (அந்த ஆண் நண்பருக்கு இதெல்லாம் தாங்க முடியாததாக ஆவதால், அவர் தன் உறவை முறித்துக் கொண்டு போய் விடுகிறார்.) பல வருடங்களுக்குப் பிறகு, அவருடைய கணவர் இடம் தெரியாது அகப்பட்டுக் கொண்ட ஒரு காக்கைக் குஞ்சை நாய்களுக்கான பூங்காவில் கண்டெடுக்கிறார். அதை வீட்டுக்குக் கொணரும்படி சொல்கிற ப்யூய்க், அதற்கு ‘கார்ல்’ என்று பெயரிட்டு, அதைத் தேற்றி உடல் நலம் பெறும்படி செய்கிறார். அதற்கு உணவூட்டி, அதோடு பேசி, அந்த ஆண் காக்கையைப் பறக்கும்படி ஊக்குவிக்கிறார். அந்தக் காகம் இவர்களோடு ஒரு வருடம் போல வசிக்கிறது. தினசரி காலை விஸ்தாரமாக இவர்களோடு இருந்து முட்டைப் பொரியலைச் சாப்பிட்டு விட்டு, வீட்டுக்கு வெளியே இவர்கள் நிர்மாணிக்கும் ஒரு பறவைக் கூடாரத்தில் வசிக்கிறது.

கடைசியில் சுற்று வட்டாரத்துக் காகங்கள் இந்தக் காக்கையைக் காண்கின்றன. காலைகளில் இவர்களின் பின் தோட்டத்தில் சுற்றி வரத் தொடங்குகின்றன. கார்லும் தன் ஆர்வம் தூண்டப்பட்டதால் ஆகாயத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருக்கிறது. ஒரு நாள் கார்ல் பறந்து போகிறது. நான்கு நாட்கள் கழித்து தோட்டத்தில் இருந்த ப்யூய்கின் நெஞ்சில் வந்து மோதிக் கீழே விழுகிறது. அதன் தலையில் ஒரு கிழிப்பு, அது சில இறகுகளை இழந்திருந்தது. “அந்தப் பறவை ஏதோ நிஜமாகவே துடிப்பூட்டும் ரகளையில் கலந்து கொண்டு கோலாகலமான சில நாட்களைக் கழித்திருந்திருக்கிறது.’ என்கிறார் ப்யூய்க். ஆனால் அது வயதுக்கு வரும் இளைஞர்களின் அனுபவத்தைப் பெற்றிருக்கிறது என்று நினைக்கிறார். இருந்தாலும் அது, ‘என்னைத் திரும்ப எடுத்துக்க, நான் வந்துட்டேன், நான் இன்னும் இதுக்கெல்லாம் தயாரா இல்லை!’ என்று சொல்வது போலத் தோன்றியதாம். கார்ல் அவர்களோடு இன்னும் ஆறுமாதங்கள் கழிக்கிறது. அந்தக் காக்கைகளின் கூட்டம் மறுபடி திரும்பி வருகிறது. இந்தத் தடவை கார்ல் போனது போனதுதான். அதற்குப் பிறகு ப்யூய்க் சுற்று வட்டாரக் காக்கைகளின் அபிமானத்திற்கு ஆளாகிறார். கார்ல் அந்தக் காகங்களுக்கு இவர் ஒரு தோழி என்று தெரிவித்திருக்க வேண்டும்.

ப்யூய்க் தன்னை ஆவிகளோடு பேசுபவராகவோ, பிறர் உள்கிடக்கைகளை உய்த்தறிபவராகவோ கருதவில்லை. “நான் ஒரு பழைய ராக் இசைவாணி. எனக்குத் தற்செயலாக, மிருகங்களோடு உரையாட முடிகிறது.’ தன் சக்தி பற்றி அவருக்கே ஐயங்கள் உண்டு. ஒருகால் தான் செய்வது வெறும் பொதுப்புத்தி சார்ந்தவைதானோ , அல்லது ஆழ்ந்த உய்த்தறிதலோ என்று யோசிக்கிறார். தான் சிகிச்சை அளித்து வந்த குதிரைகளுக்கு, தன் சிகிச்சை யோசனைகளைப் பற்றிச் செய்தி அனுப்ப முயன்று, பல நூறு மைல்கள் தாண்டி இருந்த அந்தக் குதிரைகளோடு தொடர்பு ஏற்பட்டதாகத் தெரிந்ததைச் சொல்கிறார். தொலை தூரத்திலிருந்து தன் வளர்ப்பு நாயுடன் விளையாட்டாகப் பேச முயன்ற போது அதுவும் ஏதோ விதத்தில் பலித்ததாகத் தோன்றுகிறது என்கிறார். ‘சில நேரம் என் நாய் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறது என்று எனக்குத் தெளிவாகத் தெரிகிறது.’ என்கிறார்.

ப்யூய்க் எப்படி களத்தில் வேலை செய்கிறார் என்று கவனிக்க மார்க்கம் விழைகிறார். ப்யூய்க் சில தினங்கள் கழித்து அப்படி ஒரு இடத்துக்கு அழைக்கிறார். ஒரு கலிஃபோர்னியப் பள்ளத் தாக்கில் இருக்கும் நகரில் இருக்கிற வீட்டுக்கு மார்க்கம் அழைக்கப்படுகிறார். அங்கே போகையில் ப்யூய்க் முழுதும் கருப்பு நிற உடுப்புகள் அணிந்திருப்பதைப் பார்க்கிறார். உள்ளே எர்னி என்ற புல் டெரியர் வகை நாயும், அதன் சொந்தக்காரரான பாமெலா ஃபாங்கும் இருக்கிறார்கள். வீடு எர்னிக்காகத்தான் இருப்பதாக அதன் தோற்றம் தெரிவிக்கிறது. எங்கும் அந்த நாய்க்கான விளையாட்டுச் சாதனங்கள் இரைந்து கிடக்கின்றன. தவிர மாதா மாதம் சந்தா கட்டி மேலும் விளையாட்டுப் பொருட்களை வரவழைக்கும் முயற்சியும் நடப்பதாகத் தெரிகிறது. சுவர்களில் ப்யூய்க் வரைந்த பல புல் டெரியர் நாய்களின் ஓவியங்கள் தொங்குகின்றன.

ஃபாங்குடைய வீட்டுப் பின்புறம் உள்ள மர மேடையில் எல்லாரும் அமர்கிறார்கள். ப்யூய்க் ஒரு தோட்டத்து நாற்காலியில் அமர்கிறபோது எர்னி அவர் அருகே ஏறி அமர்கிறது. அவர் தன் கையை அதன் முதுகெலும்பின் மீது மெதுவாகத் தடவுகிறார். அதன் வாலை இப்படியும் அப்படியும் சிறிது வளைத்தபடியே இதைச் செய்கிறார். “இப்பப் பாரு, எல்லாத்தையும் வெளியில விடு.” என்று அதனிடம் சொல்கிறார். எர்னி ஒரு பெரிய கொட்டாவியை விடுகிறது, அல்லது வேதனை கலந்து உறுமுகிறது. அல்லது நீண்ட ஊளையை இடுகிறது. பிறகு தாவி எழுந்து இருந்த இடத்திலேயே ஒரு சுழல் சுழன்று விட்டு, மறுபடி மேலே ஏறி அமர்ந்து மேலும் ப்யூய்கின் தடவலை எதிர்பார்க்கிறது.

அது அவரோடு பேசுவது போலத்தான் தெரிகிறது, அவரும் அதன் உடலில் ஆழப் புதைந்த செய்திகளைப் பெறுவது போலத் தெரிகிறது. கொட்டாவிகளும், கத்தல்களும் உணர்ச்சி வெளிப்பாடுகள், தீவிர உடல் பிடிப்புச் சிகிச்சையின் போது மனிதர் வெளிப்படுத்தும் உணர்ச்சிகளைப் போன்றவையே என்று ப்யூய்க் விளக்குகிறார். ஆனால் ப்யூய்க் அந்த நாயை மிக இலேசாகத்தான் தொடுகிறார். இறுதியாக அவர் அந்த நாய்க்கு சிகிச்சை அளித்தபடி இருக்கையிலேயே அது ஆழ்ந்த, அசைக்க முடியாத உறக்கத்தில் ஆழ்கிறது. இன்னொரு முறை அதன் உடலைச் சரி செய்ய அசைத்த பின்னர், அது துள்ளி எழுந்து, ப்யூய்குக்குத் தனக்குப் போதும் என்று சைகை செய்கிறார் போல ஒரு சிறு குரைப்பைக் கொடுக்கிறது.

‘ஆச்சரியமாக இல்லையா?’ என்கிறார் ஃபாங். எர்னி அதற்கு முன்னர் இறுக்கமான நாயாக, நடக்கவே சிரமப்பட்டு, நொண்டுவதாகத் தெரிந்திருக்கிறது. என்ன மோசமாக நடந்து விடும் என்ற எண்ணத்தில் ப்யூய்க்கை சிகிச்சை செய்ய ஃபாங்  அழைக்கிறார். ‘இந்த ஜால வித்தைகளை எல்லாம் நான் நம்பத் தயாராக இருக்கவில்லை.’ என்கிறார் ஃபாங். ”ஆனால் நேராகப் பார்த்த போது, நமக்குத் தெரிகிறது, இவருக்கு ஏதோ ஒரு சக்தி இருக்கிறது என்பது.” எர்னி மறுபடியும் சிறு குட்டியைப் போல ஓடுகிறது, அது ஒன்றும் மாயை இல்லை. ப்யூய்க் ஏதும் பெரிதாக, பளபளப்பாகத் தெரிவதாகச் செய்யவில்லை. ஆனால் நடந்தது ஒரு அமைதியான அதிசய நிகழ்வாகவே தெரிகிறது.

அங்கே என்ன நடந்தது என்று விளக்கும்படி மார்க்கம் ப்யூய்கைக் கேட்கிறார். எர்னியின் முதுகெலும்பைத் தடவுகையில் என்ன ஆயிற்று? ப்யூய்க் அதை விளக்கச் சிரமப்படுகிறார். வேறொரு மொழியிலிருந்து புரிகிற மொழிக்கு மாற்றும் செயல்போலத் துன்பமாக இருக்கிறது அது. அந்த நாயின் உடல் சக்தியைத் தான் தொடர்ந்து போனதாகவும், அதில் இருந்த தூலமற்ற முடிச்சுகளையும், திருகல்களையும் தன்னால் உணர முடிந்ததாகவும், அவற்றை விடுவிக்க முற்பட்டதாகவும் சொல்கிறார். தான் சொல்வது அத்தனை தெளிவான விளக்கம் இல்லை என்பது அவருக்குத் தெரிகிறது. ஆனால் அதுதான் அவருக்குச் சொல்ல முடிவது. அவர் எதையோ உணர்கிறார்.

எந்திர மயமாதலுக்கும், நகரமயமாதலுக்கும் இட்டுச் சென்ற நவீன காலத்துக்கு முன்பு இருந்த மனிதர் மிருகங்களோடு தொடர்பு கொண்டிருந்தனர், அதை நாம் இழந்து விட்டோம் என்று இன்று மிருகங்களுடன் தொடர்பு ஏற்படுத்த முற்படும் பலர் கருதுகின்றனர். அன்று அது ஓரளவு அவசியமாகவும் இருந்தது: மிருகங்களைப் புரிந்து கொள்வது வனவிலங்குகளில் தாக்கும் மிருகங்களைத் தவிர்க்கவும், தமக்கு உணவாகக் கூடிய மிருகங்களை வேட்டையாடவும் அவசியமான கலைகளாக இருந்தன. அதைத் தவிர பண்ணைகளில் வளர்த்த மிருகங்களின் நலனைக் காக்கவும் அது தேவையாக இருந்தது. மனிதருக்கும், மனிதரல்லாத ஜீவராசிகளுக்கும் இடையேயான சமன்பாடு இழிந்தபின், மனிதருக்கு இயற்கையின் சமிக்ஞைகளை அறியும் திறன் குறைந்து விட்டது என்று இவர்கள் நினைக்கிறார்கள். அவற்றை மறுபடி மீட்டெடுக்க முடியாது என்றோ, அவற்றில் நாம் மறுபடி திறன் பெற முடியாதென்றோ சொல்ல வரவில்லை, ஆனால் ‘நாம் அமைதியாக இருந்தோமானால், அவற்றை நாம் கேட்க முடியும்,’ என்கிறார் ப்யூய்க்.

மில் பள்ளத்தாக்கில் வசிக்கும் மார்ஜி லீ பியர்ஸன் என்கிற மிருக சிகிச்சையாளர், விளக்கியது இது. “ஒவ்வொரு மனிதருக்கும் மிருகங்களுடன் தொடர்பு கொள்ளும் திறன் உண்டு. ஆனால் அனேக மனிதர்களுடைய புத்தி அத்தனை வேலைகளில் ஈடுபட்டிருக்கிறதால், அவர்கள் நின்று யோசிப்பதில்லை. எந்நேரமும் தொலைபேசிகள், கணினிகள், எந்திரங்கள் என்றே மூழ்கி இருக்கிறார்கள்.” லாரா ஸ்டிஞ்ச்ஃபீல்ட் என்ற மிருகத் தொடர்பாளர் மார்க்கமிடம் சொல்கிறார், “மனிதர் அமைதியடைந்து, மைய நிலையில் இருந்தாரானால், மிருகங்கள் என்ன உணர்கின்றன, அவை என்ன சொல்கின்றன என்பதை கச்சிதமாகப் பெறுவார்கள்.” ஸ்டிஞ்ச்ஃபீல்ட் தன்னை மிருக உணர்வுகளை உய்த்தறிபவர் என்று சொல்லிக் கொள்கிறார்.  அனிமல் ஸோன் என்கிற தொலைக்காட்சியில் அடிக்கடி வருகிறார். அதில் கலிஃபோர்னியா நெடுக பயணம் செய்து, வளர்ப்பு மிருகங்களுக்கும், அவற்றின் மனிதச் சொந்தக்காரர்களுக்குமிடையே உள்ள இழுபறிகளைத் தீர்த்து வைக்கிறார். மிருகங்களின் மனதை அறியும் தன் திறமையால் அந்த மிருக வளர்ப்புக்காரர்களை ஆச்சரியப்பட வைத்திருக்கிறார். “பரிவுணர்வு கொண்ட மனிதர்கள் இதை எல்லாக்காலங்களிலும் செய்து வருகின்றனர், அவர்கள் அதை அறிந்து கொள்வதுதான் இல்லை,” என்கிறார்.

கோவிட் தொற்று நோய் துவங்கியபோது மாயச் சிந்தனைகளின் மீது ஈடுபாடு எழுந்தது, ஆனால் அதே நேரம் அறிவியலின் தெளிவின் மீதும் மதிப்பு இருந்தது என்கிறார் மார்க்கம். அதனால் ஃப்ரான்ஸ் த வால் என்கிற குரங்கின அறிவியலில் முன்னணியில் இருப்பவர் பற்றித் தெரிந்து கொள்கிற மார்க்கம், அவருக்கு எழுதிக் கேட்கிறார், ப்யூய்கிற்கும், எர்னிக்கும் இடையே இருந்த உறவு போன்றவற்றைப் பற்றிப் பேச அவருக்கு விருப்பம் இருக்குமா? உடனடியாகப் பதில் கிட்டுகிறது. “மன்னியுங்கள், எனக்கு தூரத்திலிருந்து மற்றவர் உள்ளத்தை அறியும் திறனில் (டெலிபதி) நம்பிக்கை இல்லை.” ஆனால் மார்க்கம் அவரைத் தொடர்ந்து பேசி, தான் பார்த்தது என்னவாக இருக்கும் என்பதைப் பற்றி ஃப்ரான்ஸ் த வால் தன்னுடைய அபிப்பிராயத்தைச் சொல்ல ஒத்துக் கொள்ளச் செய்கிறார்.

த வால் மிருக நடத்தையியலில் நிபுணர். அதாவது மிருக நடத்தையின் உடற்கூறு சார்ந்த விளக்கங்களைத் தேடிப் பெறுபவர். இது 1930களில் எழுந்த ஒரு துறை. இது வெறும் நடத்தையியலிலிருந்து வேறுபட்டது. நடத்தையியல் மிருக பாவங்களை விளக்க ஊக்கமளித்தல், பரிசுகள், தண்டனைகள் போன்றனவே போதுமானவை என்று கருதுவது. ஆனால் உடற்கூறு சார் நடத்தையியல் (இதாலஜி)  மிருகங்கள் இயல்பாகவே புத்தியுள்ளவை, அவை வெறும் பயிற்சி அல்லது கற்றுக் கொண்ட செயல்திட்டங்களுக்கு ஏற்ப நடப்பவை அல்ல என்கிறது. சமீபத்தில்தான் இந்தத் துறை மைய அறிவியல் துறைகளில் ஒன்றாக ஏற்கப்பட்டிருக்கிறது. “மாணவனாக உயிரியல் அறிவியலில் நுழைந்தபோது மிருக நடத்தையை வெறும் ஊக்கம், பரிசு, தண்டனை ஆகியவற்றால் விளக்கி விட முடியும் என்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அந்தப் பார்வை, மிருகங்களைச் சொந்தச் செயல்திறன் இல்லாதவை போலப் பாவிக்கிறது. நான் அவற்றைத் தேடி அடையும் உயிர்களாக, விருப்பங்கள் உள்ளவையாக, சுயமாக யோசித்து முயற்சி மேற்கொள்ளக் கூடியவையாகப் பார்க்கிறேன்,” என்கிறார்.

மார்க்கம், ஆடம் மற்றும் டானியின் கதையைச் சொல்லி, அங்கு என்ன நடந்தது என்று த வாலிற்கு ஏதும் விளக்கம் இருக்குமா என்று கேட்கிறார். அவர் ரூபர்ட் ஷெல்ட்ரேக் என்ற ஆய்வாளரின் பரவலாக அறியப்பட்ட கோட்பாடுகளைப் பற்றிப் பேசுகிறார். ‘உருவங்களின் ரீங்கரிப்பு’ என்ற ஒரு பதத்தை அவர் பரவலாக்கி இருந்தார். அது மிருகங்களிடையே கால- இடவெளியூடே நடக்கும் உணர்ச்சி மற்றும் அறிவுப் பரிமாற்றம் என்ற கருத்தை கோட்பாடாகக் காட்டியது. இந்தக் கருத்துப்படி சில எலிகள் ஒரு சோதனையை வெற்றிகரமாக முடித்தன என்றால், அருகிலிருக்கும் இதர எலிகள் எல்லாம் அந்தச் சோதனையை எளிதாக முடித்து விடக் கூடும். நாய்களுக்கு அவற்றைப் பராமரிப்பவர்கள் வெளியேறியிருந்தாலும், எப்போது வாயில் கதவு வழியே மறுபடி திரும்புவார்கள் என்பது நிச்சயம் தெரியும், அப்படிப் பராமரிப்பவர்களின் கால அட்டவணை என்னவாக இருந்தாலும் இதில் பிழை இராது. புறாக்கள் தங்கள் வீடுகளோடு பார்வைக்குப் புலப்படாத ஏதோ ஒரு தொடர்பு இழையால் இணைக்கப்பட்டிருக்கின்றன.  இவற்றைப் பற்றி த வால் விளக்குகிறார்- இதர அறிவியலாளர்கள் இந்தக் கருத்துகளைப் பலவிதங்களில் சோதித்தனர். புறாக்களின் கூடுகளை ஒரு ட்ரக்கின் மீது அமைத்தனர். பிறகு புறாக்கள் பார்க்காத போது அந்த ட்ரக்கை வேறோர் இடத்துக்கு நகர்த்தினால், அந்தப் புறாக்களால் தம் கூட்டை அடைய முடியவில்லை. அவை தம் வீடுகளுக்குத் திரும்ப முடியாமல் தத்தளித்தன. “நமக்கு கட்டுப்படுத்தப்பட்ட சோதனைகள் தேவை,” என்கிறார் த வால். “அதை நீங்கள் செய்ய ஆரம்பித்த உடன், இத்தகைய கருத்துகள் நொறுங்கி விழுந்து விடுகின்றன.” என்கிறார்.

இதாலஜிஸ்டுகள், மிருகத் தொடர்பாளர்கள் சாமர்த்தியமாகத் தம் வாடிக்கையாளர்களை நம்ப வைத்து விடுகிறார்கள் என்று கருதுகிறார்கள். ஆனால் மிருக உயிரியலாளர்களும் கூட, மிருகத் தொடர்பாளர்களைப் போலவே, நாம் மிருகங்களின் அறிவுத் திறனை பெருமளவு குறைத்து மதிப்பிடுகிறோம் என்று நினைக்கிறார்கள். மிருகங்களின் உணர்வுலகை நாம் மிகவுமே குறைத்துப் பார்க்கிறோம்- அவை அழக் கூடியவை, நகைச்சுவை உணர்வு கொண்டவை (ஜோக் அடிக்கக் கூடியவை); பொறாமை கொள்ளவும், ஏகத் துணை மீது காதலோடு வாழவும் கூடியவை. கொண்டாட்டங்களையும், சவ அடக்கங்களையும் செய்யக் கூடியவை. பல மிருகங்களுக்கு நியாய/ அநியாய பாகுபாடுகள் புரியும். ( கூர்முகக் குரங்குகள் (பாபூன்கள்) தமக்கு கீரை இலை கொடுக்கப்பட்டால் மகிழ்வடையும், ஆனால் அதே நேரம் அவற்றின் நண்பரான குரங்கிற்கு மட்டும் திராட்சைகள் கொடுக்கப்பட்டால் அவை மகிழ்ச்சியை இழந்து விடுகின்றன.) ஜூலி என்கிற ஜிம்பாப்வே நாட்டுச் சிம்பன்ஸீ குரங்கு பொதுவாக மற்ற சிம்பன்ஸீக்களுக்கு ஒரு முன்மாதிரியாக இருந்த மிருகம்.  ஒருமுறை தன் காதில் ஒரு புல்லை அணிந்து அழகு பார்க்கிறது. அதன் கூட இருந்த குரங்குகளும் இந்த அலங்கரிப்பைத் தாமும் செய்து பார்க்கத் தொடங்கின. ஏதோ ஜூலி உயர்நிலைப்பள்ளியில் ஒரு பதின்ம வயது நட்சத்திரம் அங்கு நாகரீகத்தில் மாறுதலைக் கொணர்வது போன்ற நிலை அங்கு இருந்தது என்கிறார். ஆஸ்த்ரேலியாவின் பாவர் பேர்ட் எனப்படும் குருவிகள், தம் ‘வீடுகளை’ அலங்காரப் பொருட்களால் நிறைத்துத் துணையை அங்கு வரவழைக்க முயல்கின்றன. கற்களை நெல்லிச் சாறுகளால் வண்ணமூட்டி வைத்துக் கூட்டினருகே அழகுபடுத்துகின்றனவாம். டால்ஃபின்கள் ஒன்றை ஒன்று பெயர் சொல்லி அழைக்கின்றன, சிக்கடீ சிட்டுகளும், தரையடி வளைகளில் வாழும் ப்ரெய்ரீ ‘நாய்கள்’ என்றழைக்கப்படும் அணில் வகை மிருகங்களும் சிக்கலான சொற்களைப் பயன்படுத்தி உரையாடுகின்றன. காக்கைகள் தம் அன்புக்குரிய காக்கைகளின் பல மனச் சாய்வுகளை நன்கு அறிந்திருக்கின்றன. அவை தமக்கிழைக்கப்பட்ட தீமைகளுக்கு பழிக்குப் பழி வாங்கவும் துணிகின்றன என்பதை மார்க்கம் கூட அறிந்திருக்கிறார்.

மிருகங்கள் பலவிதமாகத் தம்முள் உரையாடுகின்றன, அவற்றில் சில பேச்சு மூலமும் பலதும் பேச்சில்லாத மொழியாகவும் நடத்தப்படுகின்றன. இவற்றை மனிதர்கள் கவனித்துப் பார்த்து அறிந்து கொள்ளுதல் சாத்தியம் என்கிறார் த வால். அதே போல மனிதர்களின் நடத்தைகளிலிருந்து துப்புகளைப் பெற்று மிருகங்கள் தம் பாதுகாப்பை நிலை நாட்டிக் கொள்கின்றன. நம் அன்பை அவை பெறுவது அத்தகைய ஒரு பாதுகாப்பு. “மிருக அறிதிறன் என்பது அதனளவிலேயே அசாதாரணமானது, எழில் வாய்ந்தது. நாம் அதற்குப் புனைகதைகளை எல்லாம் சேர்க்கத் தேவையில்லை. அவை ஏற்கனவே அதிசயங்களாகவே உள்ளன,” என்கிறார் அவர்.

இவர்கள் எல்லாருமே மிருகங்களோடு தொடர்பு கொள்ள நமக்கு ஆழ்ந்த, இடைவிடாத கவனிப்பு தேவை என்று வலியுறுத்துகிறார்கள். கோவிட் நோய் இத்தகைய கவனிப்பைச் செய்ய நமக்கு வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்திருக்கிறது. அத்தியாவசிய வேலைகளில் இல்லாதவர்களுக்குக் காலம் இப்போது மெள்ளமாகி இருக்கிறது. நம் ஜன்னல்கள் திடீரென்று மிக முக்கியமானவையாக ஆகி விட்டிருக்கின்றன. நாம் உலவும் வெளி உலகு மிகவும் குறுக்கப்பட்டு விட்டதால், நாம் வெளியே தெரியும் சிறு சட்டகக் காட்சிகளை உற்றுக் கவனிக்கிறோம்.  இதனால் இமிரிச் சிட்டுகள் பின்புறத் தோட்டத்தில் வசீகரக் காட்சிப் பொருட்களாக இருந்த நிலை மாறி இப்போது நம் துணைகளாகத் தெரிகின்றன. நம்மோடு உரையாடுவனவாகக் கூடத் தெரிகின்றன. மார்க்கம் இதை எல்லாம் எழுதி விட்டுச் சொல்கிறார், ஒருகால் நான் சரியான விதத்தில் மனதைக் குவிக்கக் கற்றால், என்னால் மிருகங்களிடம் தொடர்பு கொள்ள முடியலாம். அவர் தன் மனதை சாந்தப்படுத்திக் கொண்டு, தன் தோட்டத்திலிருந்த இமிரிச் சிட்டுடன் பேச முயல்கிறார்- நாங்கள் உன்னை நேசிக்கிறோம், ஆம், நேசிக்கிறோம் என்றும், இங்கே நீ இருப்பதை நாங்கள் வரவேற்கிறோம் என்றும் மனதுக்குள் உரக்கச் சொல்லிக் கொள்கிறார்.

பிற்பாடு மார்க்கம் வெளியே அன்றைய தட்பவெப்பநிலை நன்றாக இருந்தால் தோட்டத்து மேடையில் போய் தன் கணினியுடன் அமர்ந்து வேலை செய்ய முயல்கிறார். அங்கிருந்து சில அடி தூரத்தில் அந்த இமிரிச் சிட்டுடைய கூடு புதருக்குள்ளே இருக்கிறது. மார்க்கம் அங்கே போய் அமர்ந்த உடன், அந்தத் தாய்ப் பறவை கூட்டை விட்டு வெளியேறி இரை தேடப் போகிறது. அது எந்த நேரமானாலும் இப்படியே நடந்து கொள்கிறதைப் பார்த்து மார்க்கம் ஒன்றை அறிகிறார். அந்தச் சிட்டுக் குருவி எப்போதும் இவரிடமிருந்து சில அடிகள் தள்ளி காற்றில் நின்று இவரை நோக்கி விட்டுத்தான் பறந்து வெளியேறுகிறது. துவக்கத்தில் அந்தக் குருவி இது என் இடம், நீ அகன்று போ என்று சொல்வதாக நினைக்கிறார். ஆனால் சில நாட்கள் கழிந்து அந்தக் குருவி இவரிடம் தன் கூட்டைப் பாதுகாக்கச் சொல்லிக் கேட்டுக் கொண்டு விட்டுப் போகிறது என்று இவருக்குத் தோன்றுகிறது. குருவியோடு பேச தான் கொண்ட ஆசையால் இப்படி யோசனை எழுந்ததா, இல்லை ஏதோ மாய்மாலத்தால் குருவியின் மனம் தனக்குப் புரிந்ததா என்பதன் மேல், மார்க்கம் எந்த முடிவும் எடுக்க முடியவில்லை.

அடுத்த சில வாரங்களில் குஞ்சு இமிரிச் சிட்டுகள் உடலில் இறகுகள் முளைத்து முழுப் பறவை உருவை அடைகின்றன. அவை வளர வளர, தாய்ப்பறவை மேலும் அதிகமான உணவைத் தேட வேண்டியதாகிறது. அதனால் அது முன்னை விட பல நேரங்களில் கூட்டை விட்டுப் போக நேர்கிறது. ஒவ்வொரு முறையும் அந்தத் தாய்க் குருவி தன்னிடம் செய்தி கொடுத்து விட்டு, கூட்டைப் பாதுகாக்கச் சொல்லிப் போவதாக மார்க்கம் நினைக்கிறார்.

இதைப் பற்றி ப்யூய்கிடம் பேசுகிறார். ஒரு நாள் மார்க்கம் தன் வீட்டுப் பூனை இயல்பான குணத்தை விட்டு மாறி, சிடுசிடுப்பான மிருகமாக ஆனதைப் ப்யூய்கிடம் சொல்கிறார். ப்யூய்க் இவர் வீட்டுக்கு வருகிறார். கருப்பு நிற உடுப்புகள், கருப்பு முகமூடி, அகன்ற விளிம்புகள் கொண்ட கருப்புக் கண்ணாடி, தலையில் ஒரு கருப்புக் குல்லாயோடு தோன்றுகிறார். “பூனைகளைக் குணப்படுத்துவது கொஞ்சம் கடினமான வேலை,” என்கிறார். “ஏனெனில் அவை முழுக்க முழுக்கப் பூனையாலேயே ஆனவை.”

இருந்தாலும் மார்க்கம் வீட்டின் ‘போடி’ என்ற பூனை , ப்யூய்க் அதை அழைத்த உடன் அவருடைய மடிமீது தாவி ஏறிக் கொள்கிறது. அவர் அதை மேஜைமீது அமர்த்தி, அதன் கழுத்தில் தன் ஒரு கையை வைத்து, மறு கையை அதன் வாலில் வைத்தபடி, அதன் காதுகளுக்குள் ஏதோ சொல்கிறார். பிறகு மெதுவாக அதன் முதுகெலும்புப் பகுதியில் தடவிப் பார்க்கிறார். சூடான பகுதிகள் இருக்கிறதா என்று சோதிப்பதாகச் சொல்கிறார். அப்படி இருக்கும் பகுதிகள் வீக்கமோ, அல்லது வலியுள்ள இடங்களாகவோ இருக்கும். போடியின் இடுப்பெலும்பு இடம் மாறி இருப்பதாகத் தெரிவதாகச் சொல்கிறார். அங்கு தொட்டால் பூனை சீறுவதால் மார்க்கமும் அவர் கணவரும் அங்கே தொடாமல் கவனமாக இருந்திருக்கிறார்கள்.

அங்கே ஏதோ ஒரு பழைய காயம் இருந்திருக்கலாம், அல்லது அந்த இடம் பூனைக்கு ஏதோ புண்பட்ட உணர்ச்சியைச் சேமித்த இடமாக இருக்கலாம் என்பது ப்யூய்கின் கருத்து. அவர் போடியின் இடுப்பு, கழுத்துப் புறங்களை மெதுவாகத் தடவி விட்டு, அதன் முதுகெலும்பை சன்னமாக வளைத்து நீட்டுவதைச் சில முறை செய்கிறார்.

போடி கவனமாக இருக்கிறது, ஆனால் அசையாமல் அமர்ந்திருக்கிறது. அவ்வப்போது ‘சரியாயிடுத்து பார்,’ என்று அவர் சொல்வார், போடி ஒரு மியாவ் ஒலி எழுப்பும். அவருடைய பிடியிலிருந்து விடுவித்துக் கொண்டு தன்னை ஒரு முறை சிலிர்த்துக் கொள்ளும். ஆனால் சில நிமிடங்களில் ப்யூய்க் போடியை மறுபடி தன்னிடம் அழைக்க முடிகிறது, கடைசியில் போடி தனக்கு அது போதும் என்பது போல குதித்துப் போய் வேலியைத் தாண்டி ஓடுகிறது.

மார்க்கம், போடியும் இமிரிச் சிட்டும் பற்றிய சம்பவத்தை ப்யூய்க்கிடம் சொல்கிறார். போடி இமிரிச் சிட்டுடைய கூடு இருக்கும் புதர் அருகே ஒரு காலி பூந்தொட்டியில் சுருண்டு படுத்துக் கொண்டிருப்பதை மார்க்கம் காண்கிறார். தாய்ப்பறவை தன் கூட்டை விட்டு வந்து, மார்க்கம் அருகே பறந்து அவர் கவனத்தை ஈர்த்து விட்டு, பூனையிடமிருந்து ஒரு அடி தூரத்தில் நின்று பறந்து விட்டு, மறுபடி மார்க்கம் அருகே வந்து பறக்கிறது. ‘பார்த்துக்கோ, என் குழந்தைகளருகே இந்த மிருகம் உறங்குகிறது. காப்பாற்று’ என்று சொல்கிறதாகத் தான் உணர்ந்ததை மார்க்கம் விவரிக்கிறார்.

ப்யூய்க் அது சரிதான் என்று ஆமோதித்து விட்டுச் சொல்கிறார், “ ஆனால் எனக்கு என்ன வியப்பாக இருக்கிறது என்றால், இது புரிந்த பின்னும் நீங்கள் அந்தப் பூனையை அங்கே இருந்து உடனடியாக அகற்றவில்லை என்பதுதான். தெளிவாகவே அந்த இமிரிச் சிட்டு அதைத்தான் உங்களிடம் கேட்டிருக்கிறது, இல்லையா?”

மார்க்கம் உடனே கொஞ்சம் வெட்கமுறுகிறார். (இது கூடத் தனக்குத் தோன்றவில்லையே!)

சில நாட்களில் கூட்டிலிருந்த இமிரிக் குஞ்சுகள் பறந்து பழகுகின்றன. அவற்றில் இருப்பதில் பெரிய குஞ்சு ஒன்று, ‘பெரியண்ணன்’ என்று அழைக்கப்படுவது, முதலில் பறந்து போய் அருகில் உள்ள மரக்கிளையில் அமர்கிறது. பிறகு இன்னொரு குஞ்சு, அடுத்து வேறொரு குஞ்சு. அவற்றை எல்லாம் மார்க்கமும் கணவரும் ஊக்குவித்துப் பாராட்டுகிறார்கள். ஒருநாள் அந்தக் கூடு காலியாகி விடுகிறது. எதுவும் திரும்பி வருவதில்லை.

மார்க்கம் தன் உலகம் திடீரென்று வெறிச்சிடுவதாக உணர்கிறார். அவற்றைத் திரும்ப வரவழைப்பதற்காக ‘ஸ்நாப் ட்ராகன்’ என்ற பூச்செடியை நடுகிறார். (இமிரிச் சிட்டுகளுக்குப் பிடித்தமான செடி அது.[8]) சிறு நீரூற்று ஒன்றை அங்கே ஓட விடுகிறார் அவற்றுக்கு நீர் கிட்டும் விதமாக இருக்கட்டுமே. மேலும் பல பூச்செடிகளைத் தோட்டத்தில் நடுகிறார். போதாதென்று மேலும் மேலும் வாங்கி நடுகிறார். தினம் காலை கதவைத் திறக்கும்போது, ‘மறுபடி வாங்க’ என்று மௌனமாக அவற்றுக்கு அழைப்பு விடுக்கிறார். ஆனால் அத்தனை குறுகி விட்ட தன் உலகில் அருமையான ஜாலத்தைக் கொணர்ந்த அப்பறவைகள் திரும்பாதது தனக்குச் சோகத்தைக் கொடுப்பதாக அறிகிறார்.

அவை காணாமல் போய்ச் சில வாரங்கள் கழிந்த பின் ஒரு நாள் ஒரு இமிரிச் சிட்டு அந்த ஊற்றில் நீர் அருந்துவதைக் காண்கிறார். இவர் வெளியே போய் நோக்குகையில் அது ஓடி விடுகிறது. ஆனால் பிறகு இன்னொன்று அருகே இருந்த செடுக்கான கொடிகள் நடுவிருந்து ஊற்றில் நீர் அருந்துவதைப் பார்க்கிறார். பிறகு இன்னொன்று இவர் ஊற்றைச் சுற்றி அமைத்திருந்த பூஞ்செட்டிகளில் ஒன்றின் விளிம்பில் இருந்து நீர் பருகுவதைப் பார்க்கிறார். அவற்றைப் பார்க்கும்போதெல்லாம் தன் மனதுக்குள் ‘ஹலோ, ஹலோ’ என்று தான் அழைப்பதாக உணர்கிறார். அவை பிறகு மறுபடி மறுபடி வருகின்றன. பூஞ்செடிகளோ, நீரூற்றோ ஏதோ காரணமாக இருக்கலாம். ஆனால் தன்னால் விளக்க முடியாத ஏதோ மொழியால் அவற்றைத் தான் வரவேற்றதால் அவை வந்திருக்கின்றன என்று மார்க்கம் நினைக்கத் தொடங்குகிறார்.

ப்யூய்கிற்கு மார்க்கம் ஏன் இப்படி யோசிக்கிறார் என்பது புரிகிறது. அவர் தன்னுடைய ஓர் அனுபவத்தைச் சொல்கிறார்.

’பங்க் ராக்’ என்று சொல்லப்படும் ஒரு வகை இசை விழா ஒன்றில் பங்கெடுத்து விட்டு ப்யூய்க், பசித்ததால் தன் சைக்கிளில் வீட்டுக்குப் போய்ச் சாப்பிடலாம் என்று முடிவு கட்டுகிறார். சைகிள் நிறுத்துமிடத்துக்குப் போகிறபோது அங்கு ஒரு சிறு கூட்டம் நிற்பதைக் காண்கிறார். அவருடைய சைகிள் இருக்கை மீது கார்ல் என்னும் அந்தக் காக்கை அமர்ந்திருக்கிறது. இது நடக்கையில் கார்ல் வீட்டை விட்டுப் போய் ஆறு வாரங்களுக்கு மேல் ஆகி இருந்தது. அது ப்யூய்க்கைப் பார்த்ததும் நேராகப் பறந்து வந்து அவர் தோளில் அமர்கிறது. ப்யூய்க் அழத் தொடங்குகிறார். இதை அங்கிருந்த சில பார்வையாளர்கள் படமெடுக்கிறார்கள். ப்யூய்க் தன் பையில் துழாவி அதிலிருந்த ஒரு சத்து மாவுப் பண்டத்தை எடுத்து கார்லுக்குக் கொடுக்கிறார்.

“இவன் எத்தனை அழகு, இல்லையா?” என்று பார்வையாளர்களிடம் கேட்கிறார்.

”அது உங்கள் வளர்ப்புப் பிராணியா?” என்கிறார் ஒருவர்.

“இல்லை, அவன் என் வளர்ப்புப் பிராணி இல்லை. என் நண்பன்,” என்றாராம் ப்யூய்க்.

அன்று மாலை பூராவும் கார்ல் ப்யூய்குடன் செலவழிக்கிறது. விழாவின் இறுதிச் சுற்று பாட்டு மேடையில் நடக்கையில் ப்யூய்க் பார்வையாளர்களின் கூட்டத்தில் சேர்ந்து நடனமாடுகிறார். கார்ல் அவருடைய தோளில் அமர்ந்தபடி இருக்கிறது. அன்று அவர் வீட்டுக்கு சைகிளில் திரும்பும்போது, கார்ல் சில நேரம் அவருடைய தலை ஹெல்மெட்டில் அமர்கிறது, சில நேரம் உயர்ந்தெழுந்து அவருக்கு மேல் சில அடிகளில் மிதந்தபடி பறக்கிறது. பிறகு ப்யூய்கின் தோட்டத்தில் அவரோடு கொஞ்ச நேரம் இருக்கிறது. இறுதியில் கார்ல் தன் கூட்டை நோக்கிப் பறக்கிறது, ப்யூய்க் வீட்டுக்குள் செல்கிறார்.  

***

அந்த நவம்பர் மாதம் மார்க்கத்திற்கு டானியிடமிருந்து ஒரு செல் ஃபோன் செய்தி வருகிறது. அதில் அவர் வசவு போன்ற வியப்பை வெளிப்படுத்துகிறார். (’ஹோலி ஷிட்’)  அந்தச் செய்தியோடு ஒரு படம் இணைக்கப்பட்டிருக்கிறது. டானி/ ஆடம் வீட்டுப் பின் கதவருகே ஒரு தோலுரிக்கப்படாத நிலக்கடலை வைக்கப்பட்டிருக்கிறது. அது நிச்சயம் பறவைகளின் வேலை என்று டானி நினைக்கிறார்.

இன்னும் கடலை வேண்டும் என்ற வேண்டுகோளா? இல்லை பயமுறுத்தலா? சமாதானத் தூதா?

டானி ஆடம் அன்று வீடு திரும்பியதும், அவரை கடைக்குச் சென்று கடலைகளை வாங்கி வரும்படி அனுப்புகிறார். அவர் வாங்கி வந்ததும், பின் கதவருகே ஒரு சிறு குவியலை வைக்கிறார்கள். அது அந்தக் காக்கைக் கூட்டத்துக்குத் தாம் அளிக்கும் காணிக்கை, அன்பளிப்பு என்பது டானியின் எண்ணம். அவர்களுக்குக் காக்கைகளோடு பேசத் தெரியாமல் இருக்கலாம், ஆனால் அவற்றோடு எப்படி உடனொத்து வாழ்வது என்பது தெரிந்திருக்கிறது. அந்தப் பறவைகள் இதுவரை அமைதி காப்பதாகத் தெரிகிறது. அவற்றுக்குச் செய்தி கிட்டி விட்டது என்று முடிக்கிறார் மார்க்கம்.

சங்ககாலத்திலிருந்து இன்று வரை காக்கைகளுக்கு நன்றிக் கடன்பட்டவர்களாகத்தான் மனிதர் இருப்பதாகத் தோன்றுகிறது. அவற்றின் மாட்சிமையைப் பேசத்தான் எத்தனை கவிஞர்கள், எழுத்தாளர்கள், அறிவியலாளர்கள்! காக்கை பாடினிகளின் சுடர் விடும் புத்திக் கூர்மை கால இடைவெளிகளைச் சுருக்கியதால், உலகம் எத்தனை ஒளி பெறுகிறது!

***

தழுவல் கட்டுரை: மைத்ரேயன்/ மார்ச் 26, 2021

https://harpers.org/archive/2021/04/the-crow-whisperer-animal-communicators/


[1]  ஜே பி எஸ் ஹால்டேன் பற்றிய விக்கிபீடியா குறிப்பில் இது காணப்படுகிறது. அந்தக் குறிப்பில் உசாவல் குறிப்புகளில் 28 ஆவது குறிப்பில் இந்தத் தகவல் பெறப்பட்ட நூல் என்று இது சுட்டப்படுகிறது: India After Gandhi: The History of the World’s Largest Democracy, Ramachandra Guha, Pan Macmillan, 2008, pp. 769–770

[2] J.B.S. Haldane was asked once what the natural world suggested about the mind of its Creator, and he replied “an inordinate fondness for beetles.” This observation also plays differently for different listeners—a delight in diversity, perhaps, as if the Creator might have spent the first sabbath afternoon resting from his work by playfully exploring the possible ramifications of a single idea (beetles make up roughly one fifth of all known species on the planet, some 350,000 of them)—or a humbling (or humiliating?) lack of preoccupation with our own unique kind, which might prove to be a temporary afterthought, survived only by cockroaches.  இதை இந்தப் பக்கத்தில் காணலாம்: https://www.edge.org/response-detail/10578

[3] இந்தக் கேள்வி பதில்கள் கிருஸ்தவப் பண்பாட்டுப் பின்னணியில் நிகழ்ந்தவை. ஹால்டேன் அக்காலத்தில் நம்பிக்கை அற்றவரான அறிவியலாளராக இருந்தவர். எனினும் விளக்கங்கள் கிருஸ்தவ சம்ப்ரதாயங்களை ஒட்டி நிகழ்ந்தன என்பதை நாம் நினைவு கொள்ளலாம்.

[4] தழுவல் கட்டுரை என்பதால் மூலக்கட்டுரையின் அமைப்பை அப்படியே நகல் செய்யவில்லை. இங்கு நம் நோக்கம் சற்று மாறுபட்டது என்பதால் மூலக்கட்டுரையின் சில பகுதிகளை விட்டிருக்கிறேன்.

[5] மே, 2020

[6[] https://www.nbcnews.com/science/science-news/worst-mice-plague-ever-seen-millions-rodents-descend-eastern-australia-rcna513

[7] ஹம்மிங்பேர்ட் என்று இங்கிலிஷில் அழைக்கப்படுவது.

[8] https://latimesblogs.latimes.com/home_blog/2010/04/the-dry-garden-snapdragons-are-alluring-to-hummingbirds.html

One Reply to “காக்கைகளின் மாட்சிமை – காக்கை பாடினிகளின் சாட்சியம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.