புவிக்கோளின் நான்கு வடமுனைகள்

This entry is part 1 of 7 in the series பூமிக்கோள்

முகவுரை

ககனப் பெருவெளியில் கைப்பந்துபோல் உருண்டு செல்லும் பூமிக்கோளின் வட / தென் முனைகள், இயற்பியல் கல்விக்கூட பூமி உருண்டை மாடலில் தெரிவது போன்ற தெளிவான புள்ளிகள் அல்ல. சுழல் அச்சு, அச்சாணி எல்லாம் மேஜை மாடலுக்குத்தான் உண்டு. பூமிப் பந்தைப் பொறுத்தவரை அவை அனைத்தும் கற்பிதங்கள். புவிக்கோள் தோராயமாகக் கோள வடிவில் இருப்பதையும் அதன் வட / தென் முனைகள் சிறிதளவு தட்டையாக இருப்பதையும் அறிவீர்கள். புவிசார் (geographic) வடமுனை அல்லது புவிக்குரிய (terrestrial) வடமுனை அல்லது இயல்பாக வட துருவம் என்ற பெயர்களில் குறிப்பிடப்படுவது, புவியின் சுழற்சியச்சு வட அரைக்கோளத்தின் மேற்பரப்பைச் சந்திக்கும் புள்ளிதான் மெய்யான வடமுனை என்று விக்கிபீடியா வரையறுக்கிறது. அதுவே புவிக்கோளத்தின் அட்சக்கோடு 90° வடக்கு குறிக்கும் புள்ளி மற்றும் இந்தப் புள்ளியில் எல்லாத் திசைகளும் தெற்கு நோக்கி இருக்கின்றன. இவ்வளவு தெளிவான வரையறைக்குட்பட்ட இடம் பற்றிய கருத்து வேறுபாடுகள் இருக்கமுடியாது.

நான்கு வடமுனைகள்

ஆனால் வெவ்வேறு வரையறுப்புகளின்படி வட அரைக்கோளத்திலுள்ள நான்கு இடங்கள் இந்தப் புராண காலத்து வட முனையை ஒத்திருக்கின்றன என்கிறார் கீழ்க்காணும் இணைப்பிலுள்ள கட்டுரையின் ஆசிரியர். அவற்றில் இரண்டு முனைகள் விளையாட்டுத்தனமான உரிமை கோரல்கள். நகைமூட்டுபவை. முதலில் அவை இரண்டையும் பற்றிய குறிப்புகளை அலசிவிட்டுப் பின்னர் கனமானவற்றை ஆராயலாம்.

https://www.discovermagazine.com/planet-earth/earth-actually-has-four-north-poles

பண்டிகைக் காலத்தில் வட முனையின் ஒற்றைக் குடிமகனாகப் பனிக் கலைமான்கள் இழுக்கும் சறுக்கு வண்டியில் பவனிவரும் பழம்பெரும் புனைவான சான்டா க்ளாஸ் (Santa Claus) அவர்களுள் ஒருவர். உலகக் குழந்தைகள் இவருக்குக் கடிதம் எழுதும் வசதிக்காக H0H 0H0 என்ற அஞ்சல் குறியீட்டெண்ணையும் கனடா அஞ்சல் துறை கொடுத்துள்ளது. முகவரிக்கென ஒரு மாவட்டம் அல்லது நிலப்பகுதியின் பெயரோ நிலப்பகுதியோ ஒதுக்கப்படாததால் இந்த வடமுனை வெறும் P.O. Box எண்ணாக இருக்கவேண்டும். வடமுனை என்னும் புள்ளி எந்த நாட்டு எல்லைக்குள்ளும் வராது என்கிறது நேஷனல் ஜியோகிராஃபிக். எனவே இந்த இடம் கனடாவில் இருக்க வாய்ப்பில்லை.

அடுத்த போட்டியாளர், வட அமெரிக்காவின் அலஸ்கா மாகாணத்தைச் சேர்ந்த ஃபேர்பாங்க்ஸ் (Fairbanks) என்னும் தன்னாட்சிப் பெருநகரின் புறநகரான வட முனை. (North Pole.) இது ஆண்டு முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாடும் சிற்றூர். இயல்பாகவே கிறுக்குத்தனம் கொண்ட elf என்ற சிறு தெய்வத்தின் ஆளுயரச் சிலையும் அங்கே அமைந்துள்ளது. ஊரின் பெயர்தான் பொருத்தமில்லாமல் இடிக்கிறது. இந்த அலாஸ்கா மாகாணச் சிற்றூர் ஆர்க்டிக் வட்டத்திற்கு வெளியில் தென் திசையில் 125 மைல் தூரத்தில் இருக்கிறது. இதுவும் ஒரு போலி வடமுனையே.

புவிசார் வடமுனை

எல்லா தீர்க்கரேகைகளும் குவிகின்ற புள்ளிதான் மெய்யான வடமுனை, புவிக்குரிய வடமுனை. புவிச் சுழற்சி அச்சின் வட முனை. அதாவது, புவிக்கோள் சுற்றும் கற்பனையான சுழல் அச்சின் வட முனை. உருண்டை வடிவில் புவிக்கோளின் மாதிரியாகத் தயாரிக்கப்பட்ட கோளங்களில் வரைந்துள்ள புள்ளிகள்போலத் வட / தென் முனைகள் நிலைப்புள்ளிகள் அல்ல. ஏனெனில் புவிக்கோள் துல்லியமான கோளம் அன்று. நீள்கோள (ellipsoid) வடிவம் கொண்டது. எனவே தற்சுழற்சியின்போது கொஞ்சம் தள்ளாட்டம் போடும். 1891-ல் ஸேத் கார்லோ சேண்ட்லெர் (Seth Carlo Chandler) என்னும் அமெரிக்க வானியலாளர் சுழற்சி ஒரே சீராக இல்லாமையை உறுதிசெய்தார். வெவ்வேறு காரணிகள், குறிப்பாகக் கடல் அடித்தள அழுத்த மாறுதல்கள், இடைவிடாது புவிக்கோளின் கோண உந்தத்தைப் (angular momentum) பாதிக்கின்றன. இந்தச் “சண்ட்லேர் தள்ளாடல்” காரணமாகப் புவியின் மேற்பரப்பும் அச்சும் வெட்டிக்கொள்ளும் துல்லியமான புள்ளி, சில மீட்டர்கள் வீச்செல்லைக்குள் ஆண்டுதோறும் திரிந்து வருகிறது.

புவியின் காந்தப் புலம்

புவியின் சுழற்சியால் அதன் காந்தப் புலம் உருவாகிறது. புவிக்கோளின் உள்ளகம் முழுவதும் இரும்பு மற்றும் நிக்கல் ஆகிய உலோகங்களால் நிரம்பியுள்ளது – அக உள்ளகம் திண்ம நிலையிலும் புற உள்ளகம் திரவ நிலையிலுமாக. அக மற்றும் புற உள்ளகங்கள் வெவ்வேறு வேகங்களில் சுழலுகின்றன; இவற்றின் இடையறாத இயக்கம் மின் உற்பத்தி நிலைய மின்னாக்கியைப்போல், சுயசார்புள்ள மின்காந்தப் புலத்தை உண்டாக்குகிறது. சுழலும் கோள், புவிசார் வட மற்றும் தென் முனைகளுக்கருகே காந்த முனைகளைக்கொண்ட சட்டக் காந்தம் (bar magnet) போலச் செயல்படுகிறது. புற உள்ளகத்துத் திரவ ஓட்டத்துக்கு உட்பட்டுக் காந்த முனைகள் துல்லியமாக இடம் மாறுகின்றன. இதன் விளைவாக புவிசார் வட முனையைச் சுற்றிலும் தோராயமாக 500 மைல்கள் தூரத்துக்குள் ஒழுங்கற்ற விதத்தில் இடம் மாற்றிக்கொண்டிருக்கிறது.

சட்டக் காந்தத்தின் இரு முனைகள் எதிரெதிர் முனைமை (polarity) கொண்டிருக்கும். காந்தப் புலம் (magnetic field) காந்த முனைகளில் மிகுந்தும் பிற இடங்களில் குறைவாகவும் இருக்கும். காந்தப் பாய்வு வரிகள் (magnetic flux lines), ஒரு முனையில் வெளிப்பட்டு வெளிப்பக்கமாக மறுமுனையை நோக்கித் திரும்பிப் பயணித்து மறுமுனைக்குள் நுழைகின்றன. பொதுவாகக் காந்தப் பாய்வு வரிகளின் ஓட்டதிசை காந்தத்தின் வட முனையிலிருந்து தென் முனையை நோக்கியே இருக்கும். அதாவது, காந்தப் பாய்வு வரிகளின் பாதை வட முனையில் வெளியேறித் தென் முனையில் நுழைந்துகொள்ளும் ஒரு முற்று வளையப் (closed loop) பாதை ஆகும்.

காந்த விசை வரிகள் வில்லாக வளைந்து புவியின் உள்ளகத்தினுள் நுழைவதற்குரிய புள்ளி புவியின் வடக்குக் காந்த முனைதான். காந்தத் திசை காட்டியைப் புவியின் வட முனைக்குக் கொண்டுசென்றால், திசை காட்டியின் காந்த ஊசியில் வடக்கு எனப் பொறிக்கப்பட்ட முனை கீழ்நோக்கி இழுக்கப்படுவதை உணரலாம். நாம் படித்த காந்த விசையின்படி, காந்தப் பாய்வு வரிகள் நுழையும் முனை அந்தக் காந்தத்தின் தென் முனையாகவும் அவை வெளியேறும் முனை வட முனையாகவும் இருக்கவேண்டும். அப்படியென்றால் நாம் புவிசார் காந்த வடக்கு முனையாகக் கருதுவதுவே உண்மையில் புவிக் காந்த இருமுனையத்தின் (dipole) தெற்கு முனை எனப் புலனாகிறது. அதுவும் இப்போதைக்குத்தான். ஏனெனில் முனைமைகளுக்கு இடம் மாற்றிக்கொள்ளும் தன்மை உண்டு. நிலவியல் பதிவுகளின்படி, புவிக்கோளின் நெடு வரலாற்றில் இதுவரை 183 முறை புவியின் காந்தப்புலம் தலைகீழாக மாறியிருக்கிறது; வெகு அண்மைய மாற்றம் சுமார் 780,000 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்டது. சூரியனின் காந்தப் புலத்திலும் இதைப்போன்ற தலைகீழ் மாற்றங்கள் நேர்வதுண்டு. எனவே இவற்றையெல்லாம் சீரற்ற தன்னிச்சையான நிகழ்வுகளாக எடுத்துக்கொள்ளலாம் எனத் தோன்றுகிறது. கடந்த சில நூற்றாண்டுகளாக புவியின் காந்தப்புலம் எளிதில் கவனத்தில் கொள்ளுமளவுக்கு நலிவடைந்து வருவதைக் காண்கையில், வரும் சில ஆயிரம் ஆண்டுகளில் புவி மற்றொரு காந்தப்புல மாற்றத்தை எதிர்கொள்ளக்கூடும் என்று தோன்றுகிறது.

புவிக்காந்த வட முனை

புவியின் உள்ளகக் கூறுகளின் சார்பியக்கங்களால் உருவாகும் காந்தப் புலம் கோள்களுக்கிடை வெளியில் வெகுதூரம் நீள்கிறது. புவி சூரியனை நோக்கும் திசையில் கிட்டத்தட்ட 64,000 கி.மீ. (10புவி ஆரங்கள்) தூரமும், பின்புற வெளியில் நூற்றுக்கணக்கான ஆரங்கள் தூரமும் நீண்டுள்ள இந்தக் காந்த மண்டலம் ஒரு நீள் கண்ணீர்த் துளிபோன்ற வடிவில் விண்ணில் பரவியுள்ளது. சூரியக் காற்று, அண்டக் கதிர் மற்றும் உச்சநிலை மின்னூட்டம்பெற்ற துகள்கள் பெருமளவில் புவியை அடைந்து மண்ணுலக வாழ்வைப் பூண்டோடு அழித்துவிடாமல், அவற்றைத் திசை திருப்பிப் பூமியைக் காத்து வருவது இந்தக் காந்த மண்டலம்தான்.

இந்த காந்தப் புலம் முழுநிறைவு பெற்ற இருமுனையம் அன்று. காந்த மண்டலம் விண்வெளியில் நீளும்போது அதைச் சூரியக் காற்று உருக்குலைத்து புவிக்கோளின் சுழற்சிக்கு 11° அளவில் சாய்ந்து போகச்செய்கிறது. காந்த மண்டலத்தின் அச்சு புவிக்கோளினுள் ஊடுருவிச்சென்று ஒப்பளவில் மாற்றமில்லாமல் பலகாலம் அதே நிலையில் இருக்கும் புள்ளிகளே புவியின் காந்த முனைகள் என்று குறிப்பிடப்படுகின்றன. பல ஆண்டுகளாக புவிக்காந்த வடமுனை பரந்தகன்ற நுனவுட் (Nunavut) பகுதியிலுள்ள எல்லெஸ்மெர் (Ellesmere) தீவில் நிலையாக இருந்துவருகிறது.

அணுக முடியாத வடமுனை

இயற்பியல் அல்லாமல் புவியியல் தீர்மானிக்கும் பொருத்தமற்ற வடமுனை ஒன்றும் புவிக்குச் சொந்தமானது. அதன் பெயர் அணுகமுடியாத வடமுனை (North Pole of Inaccessibility). அதன் அமைவிடம் 85°48´ வடக்கு அட்ச ரேகை; 176°9´ மேற்கு தீர்க்க ரேகை. உண்மையில் அதை அப்பாலுக்கு அப்பால் (middle of nowhere) என்று குறிப்பிடலாம்.

அணுக முடியாத முனைகள் அனைத்தும் மிக உயரமானவை, மிகத் தாழ்வானவை, மிகத் தொலைவானவை போன்ற இறுதி விடயங்களின் தேடலை எப்போதும் நெஞ்சில் சுமந்திருக்கும் புவியியலாளர்களின் வெளிப்பாடுகள். அவை நிலப் படங்கள் காட்டும் புள்ளிகள்; அங்கே போனால் நீங்கள் கடலோரத்திலிருந்து நிலத்திலோ, கடலிலோ யாரும் அணுகமுடியாத மிகத் தொலைவான இடத்தில் இருப்பீர்கள் போன்ற கண்டுபிடிப்புகள்; ஒவ்வொரு கண்டமும் ஒவ்வொரு பெருங்கடலும் சொந்த அணுகமுடியாத முனைகளைப் பெற்றுள்ளன.

அதேபோல், ஆர்க்டிக் பெருங்கடலின் ஓர் எளிய சிறு பகுதி, நிலப் பகுதியிலிருந்து மிக மிகத் தொலைவானது என்னும் தனிச் சிறப்பைப் பெறுகிறது. தோராயமாகக் கிழக்குச் சைபேரியன் கடலிலுள்ள எல்லெஸ்மெர் (Ellesmere) தீவு மற்றும் ஹென்ரியெடா (Henrietta) தீவுகளிலிருந்தும், ரஷியன் ஆர்க்டிக்கின் கோஸ்மொமொலெட்ஸ் (Kosmomolets) தீவிலிருந்தும் சம தூரத்தில், எந்தத் திசையிலும் கிட்டத்தட்ட1008 கி.மீ. தூரத்துக்குக் கடுங்குளிர் நீரும் உறை பனியும்கொண்ட பகுதி அது..

இந்த இடத்துக்கு மேன்மை அளிக்கப்பட்டிருப்பது மனம்போன போக்கிலானதாகத் தெரியலாம். ஆனால் நீங்கள் படைத்தவனின் இருப்பிடத்தை இன்னும் தேடிக்கொண்டிருப்பவர் என்றால் அதற்கான சிறந்த இடம் இதுதான். கிழவருக்கும் ஏகாந்தம் தேவைப்படும் அல்லவா?

Series Navigationபுவிக்கோளின் அடுக்குகளும் ஆய்வு முறைகளும் >>

3 Replies to “புவிக்கோளின் நான்கு வடமுனைகள்”

Leave a Reply to அய்யப்பன் நிலாதரன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.