சருமம், டாக்டர் மற்றும் முனைவர்

குளிர்காலத்தில் வழக்கமாகிவிட்டிருக்கும் சரும அழற்சியை நான் பொருட்படுத்தாமல் கொரோனாவைப்போலவே அதனுடனும் வாழப்பழகி விட்டிருந்தேன். உலர் சருமமுள்ளவர்களின் தீராப்பிரச்சனை இது.

ஆனாலும் இந்தமுறை தம்பி மனைவி கோவையில் மிகப்பிரபல, மிகச்சிறப்பான ஒரு சருமநோய் மருத்துவர் இருப்பதாகவும்  அவரை அவசியம் பார்க்க வேண்டும் என்றும் சொன்னதால் கடந்த வாரம் சென்றிருந்தேன்.  மேலதிக விவரமாக அந்த டாக்டரின் சிகிச்சைக்கான கட்டணம் சற்றே அதிகமென்றாலும்  டாக்டரம்மாவின் அழகு முகத்தை நேரில் சந்திக்கும்/தரிசிக்கும் சந்தர்ப்பத்திற்கே இன்னும் அதிகமாகவே கொடுக்கலாமென்று தோன்றும் என்றும் மீள மீள சொலலப்பட்டிருந்ததால் , சரி போகலாமே என்று போனேன்.

கட்டணம் ரூபாய் 300 ஆனால் கொரானாக்கால கெடுபிடிகள் 3000 ரூபாய்களுக்கானவை. செருப்புக்களை அந்த க்ளினிக் இருக்கும் தெருமுனையிலேயே விட்டுவிடவேண்டும் சிகிச்சை பெறுபவரைத்தவிர பிறர் அந்த வளாகத்துக்குள்ளேயே வரக்கூடாது, அங்கிருக்கும் ஒரு குழாயில் நன்றாக சோப்புப்போட்டு கைகால் தேய்த்துக் கழுவின பின்னர் சேனிடைசர்களையும் போட்டுக்கொண்டே உள்ளே வரவேண்டும்.

 வருபவர்கள் எத்தனை பாதுகாப்பான, முறையான முகக்கவசம் அணிந்திருந்தாலும் அங்கே அவர்கள் கொடுக்கும்  30 ரூபாய்க்கான   முகக்கவசத்தை  வாங்கி அணிந்துகொண்டாலே உள்ளே அனுமதி

 டாக்டர் சொல்லாமல் வாயை திறக்கவோ  முகக்கவசத்தை நீக்கவோ கூடாது. உடம்பு அசையலாமாவென்று எனக்கு சந்தேகமாக இருந்தது ஆனால் கேடக பயமாயிருந்ததால் கேட்கவில்லை. முகக்கவசத்தை மூக்குடன் சேர்த்து ஒரு பிளாஸ்திரியும் போட்டுவிட்டதால்  திணறலாக வேறு இருந்தது.

முக்கியமாக எந்தக்காரணத்தை முன்னிட்டும் டாக்டரின் அருகே செல்ல முயற்சிக்கவே கூடாது. அவராக கேட்டாலொழிய நாமாக பேசவும் முற்படக்கூடாது என்றார்கள் வரவேற்பாளினிகள்.  எனக்கென்னவோ பிரபல முன்னணி கதாநாயகியுடன் நடிக்கவிருக்கும் இளம் அறிமுக கதாநாயகனுக்கானவை பெரும்பாலான கட்டுப்பாடுகள் என்று தோன்றியது.

ஒருவழியாக உள்ளே அனுமதிக்கப்பட்டேன். மருத்துவர் தனது அறையில் நோயாளிகளை (சரும அழற்சியுளவர்களும் நோயாளிகள் தானாம்) சந்திக்காமல் திறந்த விரிந்த ஒரு ஹாலில் சந்தித்தார்.

சந்தித்தார் என்னும் சொல் நமக்கு வழக்கமாக கொடுக்கும் பொருளையும் மனச்சித்திரத்தையும்  இங்கு வெகுநிச்சயமாக மறுபரிசீலனை/மறு ஆய்வு செய்ய வேண்டும்.

டாக்டரம்மா (30 அல்லது 35 வயதுக்குள் தான் இருப்பாராக இருக்கும் எனினும் மரியாதை நிமித்தம் அம்மாவை சேர்த்திருக்கிறேன்) அமர்ந்திருக்கும் மேசைக்கு முன்னால் 10 அடி தூரத்தில் ஒரு நாற்காலி போடப்பட்டிருந்தது. அதில் நிமிர்ந்து நேராக பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் எடுக்கும்போது அமர வைக்கப்படுவதுபோல ஒரு இளம் பெண்ணால் அமர்த்தி வைக்கப்பட்டேன்.

பின்னர் மருத்துவர் தகுந்த பாதுகாப்புடன் உடற்கவசம், முகக்கவசம், முகத்தின் மேல் மற்றுமொரு வெல்டிங் செய்பவர்கள் அணிவது போன்ற  பாதுகாப்புக் கவசமென்று அணிந்து உயிரி ஆயுதங்கள் பயன்படுத்தப்படும் போரில் கலந்துகொள்ளும் வீராங்கனையைப்போலவும், தமிழ் சினிமாக்களில் வெடிகுண்டை செயலிழக்க வைக்கும் நிபுணரைப்போலவும் வந்து  இருக்கையில் அமர்ந்தார். இத்தனை தடுப்புக்களின் பின்னே, தொலைவில் இருந்ததால் அவரின் பேரழகின் அருகிருப்பை என்னால் உணரவோ தரிசிக்கவோ முடியாமற்போனது.

அத்தனை தொலைவிலிருக்கும்  டாக்டரின் முன்னால் இருபுறமும் காணக்கூடிய ஒரு கண்ணாடிச்சுவரும் பொருத்தப்பட்டிருந்தது. ஆங்கிலத் திரைப்படங்களில் சிறைக்கைதிகளை குடும்பத்தினர் சந்தித்து பேசும் காட்சிகள் நினைவுக்கு வந்தது,

முகக்கவசத்தை நீக்காமல் என்ன பிரச்சனையென்று சொல்லும்படி அவரால் அறிவுறுத்தப்பட்டதும் சொன்னேன். கேட்டபின்பு அவர் என்னருகில் வரவிருப்பதாகவும் அப்போது அவரைத்தொடவோ, நாற்காலியிலிருந்து எழவோ, அல்லது முகக்கவசத்தை நீக்கவோ அல்லது பேசவோ எக்காரணத்தைக் கொண்டும் முயற்சிக்க கூடாதென மீண்டும் தெள்ளத்தெளிவாக அறிவுறுத்தப்பட்டபின் என்னருகில் வந்தார்.  அருகிலென்றால்  அருகிலல்ல 2 அடி தொலைவில், தள்ளி நின்று என்னை உற்றுப்பார்த்து கழுத்து,  கை, தோள், முதுகெல்லாம் தூரப்பார்வையிலேயே கவனித்துவிட்டு மீண்டும் தன் இடத்திற்கே போய் அமர்ந்துகொண்டார்.

பொதுவாக சருமநோய் மருத்துவர்கள் உபயோகிக்கும் பூதக்கண்ணாடியையும் அவர் உபயோகப்படுத்தவில்லையாதலால் அவரின் நோய்கண்டறியும் திறன் குறித்து எனக்கு சந்தேகமாகவும், சற்றே அவநம்பிக்கையாகவும் இருந்தது. 

பின்னர் எங்களுக்கிடையில் நடந்த உரையாடல்;

’’பிளட் ஸூகர் இருந்தா இப்படி இருக்கும், உங்களுக்கு இருக்கா?

’’ இல்லையே’’!

’’குடும்பத்தில் ரத்த சர்க்கரை வரலாறு இருக்கா’’?

என் குடும்பத்தின் ஒரே சொல்லிக்கொள்ளும் படியான வரலாறு அதுதானென்பதால் மனமகிழ்ந்து , ’’அம்மாக்கு இருக்குங்க’’!

’’அப்போ உங்களுக்கும் இருக்கலாம்’’

’’ இல்லைங்க  நான் சமீபத்தில்தான் பார்த்தேன்’’

’’ சமீபத்திலன்னா’’?

’’கடந்த ஏப்ரலில்’’

’’மறுபடியும் பார்த்துருங்க’’ என்று சொல்லி அதற்கான பரிந்துரைகளை எழுதினார்

 ’’ பிரெஷர்’’?

’’இல்லைங்க’’

’’ தைராய்ட் பிரச்சனை  இருந்தாலும் இப்படி அழற்சி இருக்கும்’’

’’எனக்கு தைராய்ட் பிரச்சனையே இல்லையே டாக்டர்!’’

’’எப்படி தெரியும்? டெஸ்ட் பண்ணினீங்களா?’’

 எந்த பிரச்சனையும் வராமல் எதுக்கு தைராய்ட் பார்க்கனுமென குழம்பி , ‘’இல்லைங்களே!’’

’’கட்டாயமா அதையும் பார்த்துருங்க’’ அதற்கும் குறிப்புக்கள் எழுதப்பட்டது

’’எடையை கொஞ்சம் குறைச்சீங்கன்னா இந்தப்பிரச்சனையும் குறைய வாய்ப்பிருக்கு’’

’’என் உயரத்துக்கு தகுந்த எடையில்தான் நான் கடந்த 10 வருஷமா இருக்கேன், என் BMI சரியாத்தான் இருக்குங்க’’

’’ஏக்டிவாக இருக்கனும் பகல்ல துங்கக்கூடாது அப்படி துங்கினாதான் இப்படி வரும்’’ என்றார்.

’’சூப்பர் ஏக்டிவ்ங்க நான் எப்போதும், அதிகாலையிலிருந்து இரவு 10 மணிவரை வேலையிலேயேதான் இருப்பேன். உற்சாகமாகவும் இருப்பேன், பகலில் தூங்கற வழக்கமே இல்லை’’ என்றேன்.

என்னை நிமிர்ந்து பார்த்து’’ வேலைக்கு போறீங்களா?’’என்றார்

’’ஆமாங்க’’

சற்றே யோசித்துவிட்டு. ’’இந்த பிரச்சனையை உடனே சரிசெய்ய முடியாது , எதுக்கும்  2 ஆயின்மென்ட் கொடுக்கறேன் அதை 3 மாசம் தடவுங்க பார்க்கலாம். கொஞ்சம் விலை அதிகம், மேற்கு ஜெர்மனியிலிருந்து வருபவை ஆனாலும் வாங்கி உபயோகிக்க துவங்கிருங்க’’ என்றதும் நான் ’’இந்த மருந்துகள் என்ன செய்யும், என்  சருமப்பிரச்சனைக்கு எந்தவகையில் உதவுமென்று’’  ஆங்கிலத்தில் கேட்டேன்.

உடன் என்னை நிமிர்ந்து கூர்ந்து பார்த்து ’’என்ன வேலைக்கு போறீங்க?’’என்றார்

’’கல்லூரிப்பேராசிரியை’’

’’அதான் பிரச்சனை, உட்கார்ந்துட்டே இருக்கக்கூடாது அடிக்கடி எழுந்து நடக்கனும். அப்போதான் வியர்த்து சருமம் நல்லாருக்கும்’’

அயர்ந்து போன நான் ’’ இல்லை வகுப்பில் நின்றுகொண்டேதான் பாடமெடுப்பது வழக்கம் மேலும் உட்கார்ந்துட்டே இருக்கும்படியான பணிச்சூழலிலும் நான் இல்லை’’என்றேன்

’’சிலசமயங்களில் ஹீமோகுளோபின் குறைவானாலும் இது வரும்’’

’’எனக்கு 12 இருக்கே ஹீமோகுளோபின்’’என்றேன்

இப்போது டாக்டரம்மா அயர்ச்சியுடன் ’’எதுக்கும் நீங்க இதெல்லாம் தடவிட்டு எழுதியிருக்கறதெல்லாமே பரிசோதிச்சுட்டு முடிவுகளை எடுத்துகிட்டு 10 நாட்கள் கழித்து வாங்க, அப்போ  என்னசெய்யலாம்னு பார்க்கலாம்’’ என்றார்.

அந்த ஹாலில் இருந்தே பிரியும் ஒரு வாசலில் இருக்கும் மற்றொரு அறையில் மருந்துகளை வாங்கிவிட்டு, அந்த அறையிலிருந்துதான் வெளியேற வேண்டுமென்பதால் மருந்துகளை  வாங்காமல் தப்பிக்கும் வாய்ப்பும் இல்லை.

 கட்டணத்துடன்,சேர்த்து 3200 ரூபாய்களை செலுத்தியதும் இதயஅடைப்பு வந்துவிட்டது போலவே  வியர்த்து மூச்சுத்திணறியது.  இரண்டு சாக்பீஸ் நீளமேயிருந்த ஒரு anti aging க்ரீமின் விலை மட்டும் 1600 ரூபாய்கள். சாவா மூவா மருந்து கூட கேட்டிருந்தால் கிடைத்திருக்கும் போல.

சம்பளம் வாங்கியவுடனே டாக்டருக்கு பெரிதாக மொய் வைத்த வேதனையில் வந்த என்னிடம், வெளியில் காத்திருந்த தம்பி மனைவி ’’என்ன சொன்னாங்க? சரியாயிரும்தானே? நல்ல கைராசியான  டாக்டர் இவங்க’’ என்றபோது என்னால் புன்னகைக்க முடிந்ததின் சாத்தியத்தை எண்ணி எண்ணி இப்போதும் வியக்கிறேன்

இப்படியான சிகிச்சை மற்றும், நோய் கண்டறிதலை அல்லது இதனினும் மேம்பட்டதை  நானுமே செய்யமுடியும். பெயருக்கு முன்னால் ஒரு டாகடர் பட்டமும் இருக்கே!. தாவர மருத்துவம், பசுமை மருத்துவமென்று எதையாவது முயற்சிக்கலாம்

மேலும்  இப்படி ஒரு க்ளினிக் போட்டு நோயாளிகளுக்கு ஊசியும் போட்டால் என் மாமியாரும் 20 வருட மனக்குறை தீர்ந்து மகிழ்ந்துவிடுவார்கள், ஏன் மாமியாரை குறிப்பிட்டு சொல்கிறேனென்றால், திருமணமான புதிதில் அவர் அபுதாபிக்கு முன்னே சென்றுவிட  விசா வரும்வரை மாமியார் வீட்டில் நான் மட்டும் இருந்த சமயத்தில், தனது தோழிகள் இருவருடன் வந்த மாமியார் அதில் ஒருவருக்கு காய்ச்சலென்றும் ஒரு ஊசி போடும்படியும் கேட்டுக்கொண்டபோது என்ன விஷயமென்று புரிந்து கொள்ளவே எனக்கு சில நொடிகளானது. மெதுவாக ’’அத்தை, நான் ஊசி போடற டாக்டர் இல்லை’’யென்றேன் அப்போது அவர் முகத்தில் தென்பட்ட ஏமாற்றம் இன்னுமே எனக்கு நினைவிலிருக்கிறது.

தோழிகள் முன்னால் ஏமாற்றத்தை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் ’’அப்படீன்னா சித்தா டாக்டரா?  என்றார்.

பரிதாபமாக ‘’இல்ல அத்தை ‘’ என்றேன்

 ’’பின்ன, ஆயுர்வேதாவா? ஊசி போடாட்டி போகுது மருந்தெழுதிக்கொடு’’ என்றபோது எனக்கு கைகாலெல்லாம் வெலவெலத்து விட்டது. அடப்பாவமே! இப்படின்னா நினைத்துக்கொண்டு இருந்திருக்கிறார்கள் என்று

நான் படித்த பல்கலைக்கழக வராலாற்றிலேயே, இன்று வரை முறியடிக்கப்படாத சாதனையாக இருக்கும் 3 வருடங்களில் முனைவர் பட்டம் முடித்த பெருமைக்கோட்டை முற்றிலுமாக தகர்ந்த கணமது.

மெதுவாக நான் அறிவியலில் டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறேனென்றும்  மருத்துவம் பார்க்கும், மருந்தெழுதும், ஊசி போடும் டாக்டர் அல்லவே அல்லவென்றும் சொன்னேன்

முகமே மாறிப்போய் எழுந்து வெளியே நடந்த அவரை  மெளனமாக பின் தொடர்ந்த தோழிகளில் ஒருவர் மெதுவாக ’’ பொண்ணுப்பிள்ள டாக்டர்னாங்க, ஆனா  கருப்பா இருக்கேன்னு நான் அப்போவே நினைச்சேன்’’ என்றது காதில் கேட்டது

  சிவப்பு மற்றும் வெள்ளைத்தோல் மீதான  விருப்பம் கொங்கு வட்டாரமெங்கிலும் மிக அதிகம் பீடித்திருக்கிறது இன்னுமே.

அன்றிலிருந்தே இன்னொரு முனைவர் பட்டத்திற்கான ஆய்வை   ’’வெளுத்த சருமத்தின் மீதான  ஈரோடு மக்களுக்கிருக்கும்  அதீத பிரேமை மற்றும் வழிபடும் மனநிலை’’  என்னும் தலைப்பில் பண்ண உத்தேசித்திருந்தும் இன்னும் நேரம் கூடிவரவில்லை.

இதைக்கேள்விப்பட்ட என்னுடன் முனைவர் பட்ட ஆய்விலிருந்த தோழி ராஜி ‘’எனக்கு மட்டும் இப்படி ஒரு சந்தர்ப்பம் வந்திருந்தா, மாமியாருக்கும் சேர்த்து ஒரு ஊசி போட்டிருப்பேனே ‘’ என்று புலம்பியது கிளைக்கதை

தொட்டால் சிணுங்கி இலைகளை அரைத்தும், தேங்காயெண்ணையை குழைத்தும், குப்பைமேனியை பொடித்தும் தீர்க்கமுடியும் எண்ணற்ற சரும நோய்களுக்கு நானே சிகிச்சை அளிப்பதைக்குறித்து தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கிறேன். கொரோனா முழுசாக தீரட்டும் பார்க்கலாம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.