மகாஸ்வேதா தேவியின் படைப்புலகம்

சரவணன் மாணிக்கவாசகம் 

1926ல் இப்போதைய பங்களாதேஷின் டாக்காவில் பிறந்தவர். இவரது பெற்றோர் இருவருமே எழுத்து, கவிதை, சமூகசேவை போன்றவற்றில் இணைந்திருந்ததால் இவரது இரத்த அணுக்களிலே இரண்டும் சேர்ந்துவிடுகிறது. சுதந்திரத்திற்குப் பிறகு மேற்குவங்கத்தில் குடிபுகுகிறார். தாகூரின் சாந்தினிகேதனில் படித்தவர், பின் மேற்கு வங்கத்தின் கல்கத்தா பல்கலையில் ஆங்கிலத்தில் முதுகலைப் படிப்பை முடிக்கிறார்.

1965ல் பீகாரில் பலாமு மாவட்டத்தில் கொத்தடிமைகளின் வாழ்க்கை நிலையைப் பார்த்தபின் அவர்கள் நலத்திற்கான இவரது போராட்டம் ஆரம்பிக்கிறது. இந்தியாவில் கொத்தடிமை முறையைக் கொண்டுவந்தது ஆங்கிலேயர்கள். 1986ல் மகாஸ்வேதா பழங்குடிகளுக்கான இயக்கத்தைத் தொடங்குகிறார். பெங்காலின் பல தினசரிகளில் பாதிக்கப்பட்டோருக்கு ஆதரவாக குரல் எழுப்பிக்கொண்டே இருந்தார். 

தேவி, நூறு நாவல்களையும் இருபதுக்கும் மேற்பட்ட சிறுகதைத் தொகுப்புகளையும் பெங்காலியில் வெளியிட்டிருக்கிறார். அவற்றில் வெகுசில தமிழிலும், ஆங்கிலத்திலும் வந்திருக்கின்றன. அதிகமாக எழுதியதுடன் பெரும்பாலான அவரது கதைகள், ஆதிவாசிகள், தலித், விளிம்புநிலை மனிதர்கள், பெண்களின் பிரச்சனைகள் முதலியவற்றில் மையம் கொண்டவை. அதனாலேயே பிரச்சார நெடியில் இவருடைய பாதிக்கு மேலான கதைகள் சிக்கிக் கொள்கின்றன. பெங்காலி தெரிந்த நல்ல இலக்கியம் அறிந்தோர் இவரது நல்ல சிறுகதைகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தால் மட்டுமே தேவியின் இலக்கியத்தின் முழுவீச்சு எல்லோருக்கும் தெரியவரும். கவிஞனின் மனைவி, காதல் கதை, விவாகரத்து போல தேர்ந்தெடுத்த கதைகள் ஒரு ஐம்பதைத் தனியாக எடுத்து வெளியிட்டால், இந்தியாவில் எந்த இலக்கிய ஆளுமைக்கும் இவர் குறைந்தவரில்லை என்பது தெரியும்.

தேவி, களத்தில் பார்த்தவை, கேட்டவைகளைக் கதையாக்கியிருக்கிறார். இவர் எழுதிய ஜான்சி ராணியின் வரலாறு கூட இவர் ஜான்சிக்கு சென்று, தகவல்கள் சேசகரித்து, நாட்டுப்பாடல்கள் சேகரித்து பின் எழுதியது. இருந்த இடத்தில் முழுக்கற்பனையில் புனைவு வடிப்பவர்களுக்கு இதன் பின் இருக்கும் சிரமம் புரியாது. தமிழில், ஆங்கிலத்தில் கிடைத்த இவரது நல்ல சிறுகதைகளை முதலில் பார்ப்போம்.

வேட்டை (The Hunt) ஒரு பரபரப்பான கதையைச் சொல்வது மட்டுமல்லாது, வெள்ளைக்காரர்கள் காட்டிலிருந்த இயற்கை செல்வத்தைக் கொள்ளையடிக்க பழங்குடியினரை விரட்டுதல், பழங்குடிப்பெண்ணிற்கு குழந்தை கொடுத்துவிட்டு சொல்லாமல் நாட்டை விட்டுப்போதல், அத்துடன் மதம்மாறிய மணம் கேவலமானது என்ற அப்போதிருந்த சமூகக்கருத்தையும் சொல்கிறது.

அபரிதமான டௌலோட்டி (Douloti the Bountiful) தாழ்த்தப்பட்ட இனம் என்று கருதப்பட்ட இனத்தைக் குடும்பத்துடன் கொத்தடிமையாக நடத்துவது, அவர்கள் வீட்டை எரிப்பது, கொடுக்காத பணத்திற்கு கொடுத்ததாக பத்திரத்தில் கையெழுத்து வாங்கி அவர்களை வாழ்நாள் முழுதும் அடிமையாக நடத்துவது என்று பலவித வன்கொடுமைகளைச் சொல்கிறது. ராமனின் சம்பூகவதத்தைத் துணைக்கு அழைத்துக் கொள்கிறார்கள். தீண்டாமை கடுமையாக இருக்கிறது. தாழ்ந்த இனப்பெண்ணை படுக்கையில் முகத்தைப் பார்ப்பது பாவம் என்னுமளவிற்கு. தான் பார்த்த பலவிசயங்களுக்கு இலக்கியமுகம் கொடுத்திருக்கிறார் இந்த குறுநாவலில். படிப்பதற்கு நம்மனதைக் கல்லாக்கிக் கொள்ள வேண்டும்.

Pterodactyl, Puran Sahay and Pirtha: புரன் என்னும் நல்ல மனிதனின் அலுவல் போராட்டத்திற்கும், தனிப்பட்ட வாழ்க்கையில் முடிவு எடுக்க முடியாத போராட்டத்தின் நடுவே பழங்குடியினருக்கு நேர்ந்த பஞ்சம், சுரண்டல், சுற்றுச்சூழல் பிரச்சினைகளை காலனித்துவம், உலகமயமாக்கல், சந்தைப்படுத்துதல் என்ற மூன்றின் மூலம் அலசுகிறார். புள்ளி விவரங்களால் நிறைந்திருந்தாலும் இந்தக் குறுநாவல் வேகம் குன்றாமல் போவதற்கு புரனின் கதை துணைபுரிகிறது. களப்பணியாளர் பலருக்கு கலைநுட்பம் எழுத்தில் வருவதில்லை. கலைநுட்பம் வாய்க்கப்பெற்ற பலர் மேசைவிளக்கு எழுத்தாளர்கள். அபூர்வமாகவே தேவி போல் சிலர் கிடைக்கிறார்கள்.

காதல் என்ற வார்த்தையைக் கதையில் எங்குமே உபயோகிக்காமல், விவாகரத்து, சண்டை, குழப்பம் எல்லாம் நிறைந்த ஒரு கதையில் ஆழமான ஒரு காதலைச் சொல்ல முடியுமா? விவாகரத்து (Divorce) கதையில் மகாஸ்வேதா சொல்லி இருக்கிறார். எந்த மதமும் காதலின் குறுக்கே வந்து நிற்க முடியாது.

Saga of Hagapoga ஒரு வித்தியாசமான கதை. நம் பிரச்சினைகளுக்கு வேறு ஒருவர் மேல் பழிபோடுதல் இந்தியத் திருமண உறவில் சகஜம். கற்பனை பாத்திரத்தைக் கண்டுபிடித்து அதன் மூலம் கணவன் மனைவி இருவரும் பேசிக்கொள்கிறார்கள். ஒருநாள் அதை மனைவி மீறி நேரடியாகப் பேசுகிறாள். அதன் விளைவு? உணர்வுபூர்வமான கதை மட்டுமல்ல கிராமத்தின் பல மனிதர்கள் குறித்த கோட்டோவியங்களும் கதையில் இடம்பெறுகிறது.

கவிஞனின் மனைவி இந்தியாவில் நடிக நடிகைகளுக்கு இருக்கும் ஏகோபித்த வரவேற்பு எழுத்தாளர்களுக்கு என்றும் இருந்ததில்லை. கதைக்கருவில் ஒரு புதுமையும் இல்லை. ஆனால் இந்தக் கதையை மிகச்சிறந்த கதையாக்க இவர் போல் சிலரால் தான் முடியும். ஏழ்மையின் நடுவே தாம்பத்தியத்தில் கையறுநிலையும், ஆழமான காதல் உணர்வும் எவ்வளவு அழகாகச் சொல்லப்பட்டிருக்கிறது. புதுமைப்பித்தனின் செல்லம்மாள் கதையில் வெளிப்படும் அதே உணர்வுகள்! தேர்ந்த சைத்ரீகனின் அவசரக்கோடுகள் கூட அழகான சித்திரமாய்த்தான் முடியும் போலிருக்கிறது.

இரண்டு துரதிருஷ்டசாலிகள் நட்பாக இருப்பதில் தவறில்லை, தினம் சந்திப்பதில் தவறில்லை, ஒருவருக்கொருவர் ஆறுதல் வார்த்தைகளை ஒரு தேநீரின் நடுவே பகிர்வதும் தவறில்லை ஆனால் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் இவை எல்லாமே தவறு. (He said, Pani. கணவனை விட்டுப்போன மனைவி, விற்காத மீனை மாமியாருக்குக் கொண்டுவந்து தருவது தேவியின் Special touch.

காதல் கதை (Love Story) other woman is always powerful என்ற மாயபிம்பத்தை உடைக்கிறது. முப்பது வருடம் ஒருவனுடன் வாழ்ந்தபிறகு, எல்லாவற்றையும் ஏன் தன்னையே கேள்விகேட்க வேண்டியதாகிறது. கிட்டத்தட்ட இந்தக்கதை வெளிவந்து முப்பது வருடங்கள் கழித்து Praba Khaitan அவருடைய சுயசரிதையை A Life Apart என்ற பெயரில் எழுதுகிறார். அந்த நூலின் முடிவும் இந்தக்கதையின் முடிவும் அப்படியே ஒன்று.

பழைய புராணக்கதைகளை Wikipediaவில் பார்த்து சிறுகதைகள் எழுதுவோர் கண்டிப்பாகப் படிக்க வேண்டிய கதை இது. எல்லோருக்கும் தெரிந்த கதையில் கோணத்தை மாற்றி மேஜிக் செய்திருக்கிறார். 

தவிர்க்க முடியாது மீண்டும் புதுமைப்பித்தனே, சாப விமோசனத்தின் மூலம் நினைவுக்கு வருகிறார். புராணக்கதைகளை மீட்டுருவாக்கம் செய்கையில் நமக்கு சொல்வதற்கு புதிதாக எதுவும் இல்லை என்றால் அந்தக்கதையைப் பிழைத்துப் போகட்டும் என்று விட்டுவிடுவது மேல். (குந்தியும் நிஷாதப்பெண்ணும்)

ஸம்ரஷன்(பாதுகாப்பு)- பழங்குடியினரை, காட்டை அழித்து, காட்டு விலங்குகளுக்கு இருக்க இருப்பிடமின்றி செய்து, செய்திகளில் மதம் பிடித்த யானை சுட்டுக்கொலை என்று கடக்கிறோம். யானைகளுக்குச் சமீபத்தில் நடந்த பலகொடூரங்களுக்குப் பிறகு இந்தக்கதை புதிய வெளிச்சம் தருகிறது.

ஆயுள்கைதி– பழங்குடியைச் சேர்ந்த ஒருவன் கொலைசெய்து நகரத்திற்கு வந்து அவனுக்கு ஏற்படும் அனுபவங்கள்.

ராய் மாக்ஸம்மின் உப்புவேலி படித்தவர்கள் உப்புப் பற்றாக்குறையால் இந்தியாவில் இறந்தவர் குறித்துத் தெளிவாக சொல்லும். உப்பு கதை அதையே சொல்கிறது. கூடுதலாக யானைகளிடம் இருந்து உப்புமண் திருடப்படுவதையும் சொல்கிறது.

ராங்நம்பர் உண்மையை எதிர்கொள்ள விரும்பாது, கற்பனை மயக்கத்தில் ஒருவர் வாழும் கதை.

தேவியின் பிரச்சாரக்கதைகளை மட்டும் படித்து அவரது இலக்கிய அந்தஸ்தை கேள்வி கேட்பவர்கள் மறந்த இரண்டு விசயங்கள், அவர் நாற்பதுகளின் இறுதியிலேயே ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அனுபவங்கள் அவரைத் தேடி வரவில்லை, அனுபவங்களைத் தேடி அவர் நாடுமுழுதும் சுற்றியவர். ஞானபீடம் உட்பட இந்தியாவின் எல்லா இலக்கிய விருதுகளையும் வென்றவர். அவருடைய In the name of Mother தொகுப்பு தாய்மையை மையப்படுத்திய கதைகள் கொண்ட தொகுப்பு.

அம்மா, அஸ்தமனத்தில் இருந்து உதயம் வரை (Ma, Dusk to dawn) கதை பகல்நேரத்தில் அருள்வாக்கு சொல்லும் அம்மாவிற்கும் மகனுக்குமான உறவு. சிந்துபாலா தன்னுடைய உடல்தேவையை பூர்த்தி செய்யாது தெய்வீகசிகிச்சை செய்யும் பெண்ணின் கதை. ஜமுனாபட்டியின் அம்மா மகளுக்கு விலையுயர்ந்த பொம்மையும், உடையும் வாங்கக் கனவுகாணும் பெண்ணின் கதை. கிரிபாலா தொகுப்பின் முக்கியமான கதை. தான் தன் சுகம் என்று வாழும் தகப்பனும், அவனது துரதிருஷ்டசாலி மகள்களும் பற்றிய கதை.

தேவியின் பல கதைகளில், பெண்கள் பழங்குடியினராக இருந்தாலும் சரி, உயர்தட்டுப் பெண்ணாக இருந்தாலும் சரி, குடும்ப, சமூகப் போலித்தனங்களில் மாட்டிக்கொண்டு அவதிப்படுகின்றனர். பெண்ணுடல் என்பது எப்போதும் நுகர்பொருளாகிறது. தேவியின் பெண் கதாபாத்திரங்கள், சமூகத்தடைகளை மீறுபவர்களாக, பெண்மை என்னும் முதுகுச்சுமையை சுமக்க மறுப்பவர்களாக வருகின்றனர். தேவியின் Breast stories என்ற தொகுப்பு பெண்ணிய நோக்கில் முக்கியமான தொகுப்பு.

திரௌபதி ஒரு முக்கியமான கதை. பெங்காலில் நக்சல்பாரி இயக்கம் பற்றிய கதை. புராண திரௌபதியின் கோபம் ஒருவகை. இந்த மலைவாழ் பழங்குடி திரௌபதியின் கோபம் வேறுவகை. எது பெண்களின் மிகப் பலவீனமான விசயமோ அதை தனது பலமாக மாற்றிக்காட்டுகிறாள். தேவியால் மட்டுமே இது போன்ற கதைகளை எழுதமுடியும். புனைவுக்காக இவர் கையாண்ட விசயம் இந்தியாவில் பிற்காலத்தில் உண்மையானது காலத்தின் முரண்நகை.

முலை தந்தவள் (Breast Giver) பின்காலனித்துவ இந்தியாவில் பெண்களின் இரண்டு எதிர்பட்ட நிலைகள் (கடவுளும், அடிமையும்) குறித்துப்பேசுகிறது. பாடிஸின் பின்னால் (Behind the bodice) ஒரு பெண் பாலியல் தொழிலுக்கு எப்படி தள்ளப்படுகிறாள் என்பதைச் சொல்கிறது. 

தொகுப்பின் மூன்று கதைகளுக்கும் மையப்பொருள் மார்பகம். அது எவ்வாறு சிதைக்கப்படுகிறது என்பதும் அதனால் தான் வீழ்ந்தோம் என்று நினைக்காத பெண்களையும் பற்றிய கதைகள் இம்மூன்றும்.

ருடாலி ரூபா கங்கூலியால் திரைப்படமாகவும் எடுக்கப்பட்ட புகழ்பெற்ற கதை. நம் கிராமங்களில் போன தலைமுறையில் கூலிக்கு மாரடிப்பது என்பார்கள். உறவினர்களுக்கு அழுகை வர வேண்டும் என்பதற்காக அழுகையுடன் பிலாக்கணப் பாடல்களைப் பாடும் இவர்களை பணம் கொடுத்து கூட்டி வருவார்கள். ருடாலி அப்படிப்பட்ட இரண்டு பெண்களின் கதை. இருவருமே தலித் பெண்கள். பெண்களின் மீதான அடக்குமுறைகள் தலித்பெண் என்றால் இன்னும் பலமடங்கு அதிகரிக்கின்றன. இந்தக் கதை தலித் இலக்கியம் வகையில் இந்தியா முழுதும் பேசப்படும் கதை. தலித் அல்லாத ஒருவர் எழுதிய தலித் இலக்கியம்.

1084ன் அம்மா (Mother of 1084) பெண்கள் எந்த நிலையில் இருந்தாலும் அடக்கியாளப்படுவதைச் சொல்வதோடு இறந்துபோன தன்னுடைய மகனைக் குறித்து அறியாத பலவும் அறிந்து கொள்ளும் ஒரு தாயின் பயணத்தைப் பற்றிய நாவல். 1084 என்பது பிணத்திற்கு மார்ச்சுவரியில் இடப்படும் எண். சுஜாதா பல இந்தியப்பெண்களின் பிரதிநிதி. நக்சல் இயக்கத்திற்கு எதிரான அரசின் இரும்புக்கர அடக்குமுறைகளும், மனிதாபமில்லாத நடவடிக்கைகளையும் பேசும் இந்த நாவல் நிச்சயமாக உண்மையில் நடந்த பல சம்பவங்களுடன் புனைவைக் கட்டமைத்து எழுதிய நூலாக இருக்கும்.

காட்டில் உரிமை நாவல், பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கெதிரான பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஆதிவாசிகள் நடத்திய போராட்டத்தின் வரலாற்றுத் தகவல்களை வைத்துக் கொண்டு புனைவாக எழுதிய நாவல்.

பெண்களின் எதிர்ப்புக்குரலை மிகச்சத்தமாக பதிவு செய்ததுடன், அவர்களது உடலின் மீது காலங்காலமாக நடந்து வரும் அத்துமீறல்களை அழுத்தமாகப் பதிவு செய்தவர் மகாஸ்வேதா தேவி. தேவியின் கதைகள் பாதிக்கப்பட்ட பெண்கள், ஆதிவாசிகள், விளிம்புநிலை மனிதர்கள் என்பதையே பெரும்பாலும் சுற்றி வந்துள்ளன என்பதால் தவிர்க்க இயலாத ஒரு பிரச்சாரநெடி அவரது பல கதைகளில் கலந்து விடுகிறது. அவரது இடதுசாரிக் கொள்கைகள் இந்தியாவில் பெரிய அளவில் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அவருடைய மிகச்சிறந்த கதைகள் மொத்தமாகத் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படவில்லை. அப்படி நேர்ந்திருக்குமாயின் உலக இலக்கியத்தில் தேவிக்கு உரித்தான இடம் கண்டிப்பாகக் கிடைத்திருக்கும். பெரும்பாலான மொழிபெயர்ப்புகள் பெங்காலியில் அவர் சொல்லவந்ததை சரியாகப் புரிந்து கொண்டு, வேறு மொழியினருக்கு அதனை அப்படியே கடத்தவில்லை என்று பெங்காலியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் குறை சொல்கிறார்கள். 

தமிழில் கவிஞனின் மனைவி தொகுப்பில் டால்ஸ்டாயின் கதைகளுடன் எம்.ஏ. சுசிலா தேர்வுசெய்த இவரது மூன்று கதைகள் மிகச்சிறப்பானவை. ஆனால் தமிழில் தற்போது கிடைக்கக்கூடிய காட்டில் உரிமை நாவலோ அல்லது மகாஸ்வேதா தேவி கதைகள் என்ற தொகுப்போ தேவியின் இலக்கியத்தின் முழுவீச்சை தமிழ் மட்டுமே படிக்கத் தெரிந்த வாசகர்களுக்கு தெரிவிக்கப் போவதில்லை. அதிகமாக எழுதியவற்றில் ரத்தினக்கற்களை மட்டும் பொறுக்கி எடுத்து மாலையாக்கும் பொறுமையோ, திறமையோ இதுவரை கிடைக்கப் பெறவில்லை. அன்னையைத் தவிர்த்து கிரேஸியா டெலடாவின் பல படைப்புகள் ஆங்கிலத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் படித்துப்பின் தேவியின் சிறந்த கதைகளைப் படித்தால், தேவிக்கு நேர்ந்த அநீதி என்ன என்பது எல்லோருக்கும் புரியும்.

உதவிய நூல்கள்:

1. Imaginary Maps- translated by Gayathri Chakravorti Spivak

2.Till Death Do us Part- translated by Vikrsm Iyengar

3. கவிஞனின் மனைவி – மொழிபெயர்ப்பு எம்.ஏ.சுசிலா.

4. மகாஸ்வேதா தேவி கதைகள்- தமிழில் புவனா நடராஜன்

5. In the name of the Mother- translated by Radha Chakravarthy.

6. Breast Stories- translated by Gayathri Chakravorti Spivak

7. Rudali- translated by Anjum Katyal

8. Mother of 1084- translated by Samik Bandyoadhyay

9. காட்டில் உரிமை- தமிழாக்கம்- சு.கிருஷ்ணமூர்த்தி

One Reply to “மகாஸ்வேதா தேவியின் படைப்புலகம்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.