நன்றி இந்தியா, நல்லிரவு (ப்ரிஸ்பேனிலிருந்து)

தமிழில் – சிவா கிருஷ்ணமூர்த்தி

இந்தியா, உமக்கு நன்றி சொல்கிறோம். நன்றிகள் பல…வேறு என்ன சொல்லமுடியும்?

ஒரு செம்மையான கிரிக்கெட் தொடரைத் தந்ததற்கு; அசாதாரண நாட்களைத் தந்ததற்கு நன்றி.

21 வயதேயான, முதல் முறையாக டெஸ்ட் கிரிக்கெட் ஆடும் வாஷிங்டன் சுந்தர், ஆஸ்திரேலியாவின் முதல் தரமான வேகப்பந்து வீச்சாளரின் பந்தை சிக்ஸருக்கு ஹூக் செய்து இந்த டெஸ்ட்டிற்கும் மொத்த தொடருக்கும் சேர்த்து ஒரு இறுதி ஆப்பு அடித்திருக்கும்போது வேறு என்ன சொல்வது?

சரியாக ஒரு மாதத்திற்கு முன்னர், அடிலெய்ட் டெஸ்ட் மாட்ச்சில் வெறும் 36 ரன்களுக்கு சுருட்டப்பட்டுப் பின்னர் ஆட்டக்காரர்களின் காயங்களால் பெருமளவு பாதிக்கப்பட்ட ஓர் அனுபவமற்ற அணி, பிரிஸ்பேன் மைதானத்தில் 1988லிருந்து தோற்கடிக்கப்படாத ஆஸ்திரேலியாவைத் தோற்கடித்ததற்கு, நன்றியைத் தவிர மேற்கொண்டு வேறு என்ன சொல்வது?

பிரிஸ்பேன் எனும் மாபெரும் கோட்டை ட்ரோஜன் குதிரையால் வீழ்த்தப்பட்டது.

சாத்தியமே இல்லாத ஒரு முடிவைச் சாத்தியமாக்கிய ஷூப்மன் கில்லிற்கு, அவரது தன்னம்பிக்கை மிகு 91 ஓட்டங்களுக்கு நன்றி.

நாங்கள் ஒரு காலத்தில் (ஆஸி அணித் தலைவர்) டிம் பெயினின் குழந்தைப் பராமரிப்பாளர் என கிண்டல் செய்த ரிஷப் பன்த்திற்கு, அவரது ஆட்டமிழக்காத 89 ஓட்டங்களுக்கு நன்றி. கடைசி டெஸ்ட், கடைசி நாள், கடைசி மணி நேரத்தில் தொட்டிலில் இடப்பட்டு ஆட்டப்பட வேண்டியது (படு வேகமாக), கடைசியில் டிம் பெயின்தான் என்று ஆகிவிட்டது.

நாள் முழுவதும் பந்துகளை மட்டையால் மட்டுமல்ல, உடலாலும் தடுத்து ஒரு முனையில் உறுதியாக நின்று ஆஸி பந்து வீச்சாளர்களைப் பலவீனப்படுத்தி, சோர்வடையச் செய்து, இறுதி செஷனில் அவர்களுக்கு புதுப்பந்து கிடைத்தும் அவற்றை மிட்டாய்களாக மட்டுமே தர வைத்த சேதேஷ்வர் புஜாராவிற்கு நன்றி.

ஷார்துல் டாகுர், வாஷிங்டன் சுந்தர், மொஹத் சிராஜ், நவ்தீப் சைனீ, டி நடராஜன் என்று பட்டியல் நீண்டு போய்கொண்டே இருக்கிறது. உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி. இல்லை, பொய்தான் சொல்கிறோம்! நீங்கள் எங்கள் விழிகளை விரியச்செய்தீர்கள். அவற்றில் கண்ணீர் மலரச்செய்தீர்கள்.

உண்மையில் இந்த இந்திய அணியைப் பொருத்தவரை, முதல் டெஸ்ட்டிலிருந்து இறுதி டெஸ்ட் வரை பெயர்களும் முடிவுகளையும் தவிர வேறு எதுவும் மாறவில்லை. அனுபவமில்லா இளைஞர்களைக் கொண்ட ஓர் அணி இந்த அளவிற்கு, அதுவும் வேற்று நாட்டு மண்ணில் இதற்கு முன் உத்வேக கிரிக்கெட் ஆடியதில்லை. இது போன்ற சாதனையை ஒரு போதும் செய்ததில்லை.

இன்னும் ஐந்து வருடங்களுக்குப்பின், நீங்கள் எங்கள் கரங்களிலிருந்து இது போன்று வெற்றியை பறித்துக்கொண்டு போனால் இம்மாதிரி நன்றி சொல்வோமா என்று தெரியாது! ஆனால் இப்போதைக்கு நன்றிகள்! ஏற்றுக்கொள்ளுங்கள்! இந்த தொடரின் முடிவில் சில ஆஸ்திரேலியர்கள் உங்கள் வெற்றியை அரை மனதாக முணுமுணுப்புடன் ஏற்றுக்கொண்டிருப்பார்கள்.

கோவிட் கட்டுப்பாடு வளையங்களுக்குள் நீங்கள் கடைப்பிடித்த பொறுமைக்கு நன்றி. மாறிக்கொண்டு இருந்த ஆட்ட அட்டவணைகளை பொறுத்துக்கொண்டதற்கும் நன்றிகள். ஒரு கட்டத்தில் இரு அணிகளுமே களைத்துப்போய்விடத்தான் போகின்றன என்று நாங்கள் அறிவோம். ஆனால் இறுதிவரை நீங்கள் அதனுடன் இயைந்துகொண்டீர்கள். உங்கள் கள உத்திகளை, நாங்கள் குறிப்பிடும் சில டென்னிஸ் வீரர்களுக்கு மின்னஞ்சல் செய்யலாம், உபயோகமாக இருக்கும்!

அஜிங்க்ய ரஹாணேயின் புன்னகைக்கு நன்றி. இந்த தொடரின் ஆன்மாவுடன் ஒன்றிணைந்த உருவகம் அது. ஆட்ட வர்ணணையாளர்கள் இடத்திலிருந்து ஆஸ்திரேலியாவின் ஆக்ரோஷத்தையும் முரட்டுத்தனத்தையும் குறித்து உரக்க குரல்கள் எழுந்துகொண்டிருந்த போது ரஹாணே வெறுமன புன்னகைத்தார். பின் வென்றார்.

கடைசி டெஸ்ட்டின் கடைசி நாள் ஆட்டத்தை மொத்த தொடரின் தொகுப்பாக வைத்துக்கொள்ளலாம். இந்தியா அடி வாங்கிய ஒவ்வொரு தருணத்திலும் மீண்டெழுந்து வாங்கியதைவிட அதிகமாக திருப்பிக்கொடுத்தார்கள். இந்தியாவிற்கு அதிர்ஷ்டம் துணையிருந்தது. கடைசிநாளின் முதல் அதிர்ஷ்டம், ஆடுகளத்தின் தன்மை.

முந்தின நாள் இருந்த ஒழுங்கற்ற துள்ளல் ஐந்தாவது நாளில் சுத்தமாக மறைந்து போய்விட்டது. அன்று காலை மெலிதாக சமனப்படுத்தப்பட்ட ஆடுகளம், நாங்கள் எதிர்பார்த்ததற்கு மாறாக, இந்தியாவிற்கான புதைகுழியாவதற்குப் பதிலாக, சீரான மேடையாக இருந்தது.

கில்-புஜாராவின் கூட்டு ஆட்டம், நல்ல துவக்கத்தை, உத்வேகத்தை அளித்தது. இவர்களின் ஆட்டத்தை எளிமையாகச் சொல்லிவிடலாம். புஜாரா அடி வாங்கினார்; கில் அடித்தார்.

ஐந்தாம் நாள் காலையில் ஆட்டம் ஆரம்பிக்கும் போது நம் முன் இருந்த சாத்தியங்களினுள் இருந்ததிலேயே மிக மெல்லிய சாத்திய முடிவை, சாத்தியமாக்கியது, இளம் கில்லின் துணிச்சலான ஆட்டம்.

இந்திய வெற்றி.

புஜாரா ஒரு பனிக்காலம்போல் வெகு நிதானமாக நிலை கொண்டார். இடுப்பில், கைகளில், விலா எலும்புகளில், தலையில் என கிட்டதட்ட பதினோரு முறைகள் அடி வாங்கினார், அதே சமயம் அவரே இந்திய ஆட்டத்தின் ஆதாரஅச்சு. ஒருவழியாக ஆஸ்திரேலியா, புதுப் பந்தை எடுத்த இரண்டாவது ஓவரில் ஆட்டமிழந்தார். அந்த பதினோரு அடிகளைவிட இதுதான் அவருக்கு அதிகம் வலித்திருக்கும். ஆனால் அவர் ஆட்டமிழந்து வெளியேறிய பின்பும் அவரது மரபு ஆடுகளத்திலியே நீடித்துக்கொண்டிந்தது. ஆஸி பந்து வீச்சாளர்கள் மிகவும் களைத்துப்போயினர்.

புஜாரா ஒரு முனையைக் காக்க, மற்ற இந்திய ஆட்டக்காரர்கள், எதிர் முனையில் அவர்கள் பாணியில் முன்னேறிக்கொண்டிருந்தார்கள். நேதன் லையனின் ஒரு சுழற்பந்து பாண்ட்டின் மட்டையைத் தாண்டி சுழன்று முதல் ஸ்லிப் வரைக்கும் சென்றது. பாண்ட் தடுமாறிப்போனாரா நிலைகுலைந்தாரா என்ன? தெரியவில்லை. ஆனால், அடுத்த சுழற்பந்தை, ஸிக்ஸருக்கு அடித்தார்.
நன்றி.

ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை, மின்னல் ஒரே இடத்தில் இருமுறை தாக்கியிருக்கிறது; அதுவும் இரண்டாவது முறை இன்னும் மோசமாக. சென்ற ஆஷஸ் தொடரில் பென் ஸ்டோக் ஆட்டத்தையாவது ஒரு நாள் அதிசயமாக எடுத்துக்கொண்டுவிடலாம். இதுவோ, ஆறு வார, நான்கு டெஸ்ட்கள் கொண்ட “தொடர்” அதிசயம்.

எல்லாரையும் விட அதிக வேதனை, டிம் பெயினுக்குத்தான் இருக்கும். கொடூரமாகக் குதித்து எழுந்து வந்த ஒரு ஸ்டெம்பிங் வாய்ப்பை தவறவிட்டதைத் தவிர, அவர் ஒன்றும் அதீதமாகத் தவறு செய்துவிடவில்லை; இங்கிலாந்து ஆட்டத்தைத் தவறவிட்டதை அவர் எப்படியோ மாயம் செய்து காயத்தை ஆற்றிக்கொண்டார். இந்த தடவையோ குணமடைய ஏதாவது அற்புதம் நடந்தால்தான் உண்டு. அவரது திறமைகளைப் பற்றிய சந்தேகக் கேள்விகளை “கீப்பர் மற்றும் பேட்ஸ்மென்” என்று சொல்லித் தப்பித்துக்கொள்ளப் பார்த்தாலும் அவரை குற்றவாளிக் கூண்டில் நிறுத்த ஏற்பாடுகள் நடந்துகொண்டு வருகின்றன.

இன்னொருவகையில் அவரும் இந்தத் தொடருக்கு ஒரு பரிணாமத்தை அளித்திருக்கிறார். முதல் டெஸ்ட்டில் டிம் பெயின் ஆட்ட நாயகன்; கடைசி டெஸ்டிலோ மிகவும் தேடப்படும் நபர்.

ஒரே வாரத்தில் கிடைத்த இரு கடைசி நாள் சந்தப்பங்களிலும் இந்தியாவை ஆல் அவுட் செய்ய முடியாத ஆஸ்திரேலியா நிறைய கேள்விகளை எதிர்நோக்கியிருக்கிறது. ஏன் கிரினுக்கு அதிக ஓவர்கள் கொடுக்கவில்லை, ஏன் லேபஸ்செங் (Labuschagne) முன்னரே பந்து வீசவில்லை – சொல்லப்போனால், இந்த மேட்சிற்கு முன்னால், இவர் இதுவரை எடுத்திருந்த டெஸ்ட் விக்கட்களின் எண்ணிக்கை, இந்த டெஸ்ட்டில் விளையாடிய அனைத்து இந்திய வீரர்கள் எடுத்திருந்த விக்கட்டுகளைவிட அதிகம், இல்லையா?

கடும் களைப்பும் சோர்வும் கொண்ட பணி திமில், நிச்சயம் ஓர் காரணம். கடந்த எட்டு நாட்களில் முன்னூறுக்கும் மேற்பட்ட ஓவர்கள் என்பது ஆஸி பந்து வீச்சாளர்களின் முதுகில் ஏற்றப்பட்ட ஓர் மாபெரும் திமில். கடைசியாக எப்போது ஆஸ்திரேலியா இப்படி தொடர்ந்து ஐந்து நாட்கள் போட்டிகளில் விளையாட நேர்ந்தது என்று நினைவில்லை.

அடுத்து வரும் (வந்தால்) தென்னாப்பிரிக்கச் சுற்றுப் பயணத்திற்கு முன் செய்ய வேண்டிய வேலைகள் இருக்கின்றன.

இந்த தொடரில் ஐந்தாவது டெஸ்ட் இருந்திருந்தால் மைக் ஸ்டார்க் விளையாடி இருப்பாரா என்பது சந்தேகமே. அவர் சிறப்பாக செயல் புரியும், அதே சமயம் அவ்வப்போது சீர் செய்துகொண்டே இருக்கவேண்டிய ஓர் அதி தொழில்நுட்ப இயந்திரம். இப்போது சீர் திருத்தப்படவேண்டி பணிமனைக்கு போயிருக்கிறார்.

நேதன் லையனிடம் 100 டெஸ்ட் மேட்சுகள் ஆடிவிட்ட ஆரவாரம் தென்பட்டாலும் இந்த முறை வழக்கமான கூர்மை பந்து வீச்சிலும் இல்லை; எனவே முடிவிலும் இல்லை. 33 வயதான லையனிற்கு வாரிசுகள் தேவை.

மட்டையாளர்களுக்கான காலியிடங்களோ ஏராளமாக இருக்கின்றன.

நம்மை கடுமையான கேள்விகளுக்கும் சுய பரிசோதனைக்கும் உட்படுத்திக்கொள்ள வேண்டிய அவசியம் இருந்தாலும் தற்சமயம் இந்தியாவிற்கு நியாயமாகச் சேர வேண்டிய மகிமையை, புகழை தவிர்க்க வேண்டாம். நம்பிக்கை ஒளிக் கீற்றைக்காட்டிய கிரீனிற்கும் புகாவ்ஸ்காஸ்கிக்கும் நன்றிகள். இப்போதைக்கு பொறுமையாக இருப்போம்.

பாட் கம்மின்ஸ்ஸிற்கு நன்றி. இவரை எப்படியாவது நகல் செய்ய இயலுமா?

வெற்று வழவழப் பாதைகளை தவிர்த்து அருமையான களங்களை தயார் செய்த மைதான பொறுப்பாளர்களுக்கு நன்றி.

இம்மாதிரியான களங்கள் எடுக்கப்படும் ஓட்டங்களை, கிரிக்கெட் எனும் அற்புத விளையாட்டை மேலும் அர்த்தமுள்ளாக்குகின்றன.

இரு அணிகளும் தவறவிட்ட காட்ச்கள் குறைவே; ஏனெனில் பெரும்பாலானவை பிடிக்கப்பட்டுவிட்டன.

இரு அணிகளும் தவறவிட்ட காட்ச்கள் நிறைய; ஏனெனில் மிக நிறைய காட்ச்கள் கொடுக்கப்பட்டன.

உங்கள் அனைவருக்கும் மிக்க நன்றிகள்.

இறுதியாக… ஐந்து நாள் டெஸ்ட் மாட்ச்சுகளுக்கு நன்றி!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.