சௌவாலிகா

சுஷில் குமார்

அவர்கள் என்னிடம் சொல்கிறார்கள்: ஓர் அடிமை உறங்குவதை நீ பார்த்தால் அவனை எழுப்பிவிடாதே, அவனது சுதந்திரக் கனவை நிறுத்திவிடாதே.

நான் அவர்களிடம் சொல்கிறேன்: ஓர் அடிமை உறங்குவதை நீங்கள் பார்த்தால் அவனை எழுப்பி அவனுக்கு சுதந்திரத்தைப் பற்றி விளக்கமாகக் கூறுங்கள்.”

கலீல் ஜிப்ரான்.

கூரையை வெறித்துப் பார்த்தபடி படுத்துக்கிடந்த வான்-டி-நிவர் தன் அருகே கால்களைக் குறுக்கி அமர்ந்திருந்த இளம்பெண்ணின் தலைமுடியைத் தன்னிச்சையாகக் கோதிக்கொண்டிருந்தான். அவள் ஒரு பெரிய மண்கலத்தின்மீது சாய்ந்து உட்கார்ந்திருந்தாள். நிவரின் பெரிய நார்த்தொப்பி அக்கலத்தை மூடியிருக்க, அசைவற்ற ஒரு மூதாட்டி அவர்களது தனிமையை நெடிது நோக்கியிருந்ததைப்போல இருந்தது. மெல்ல ஆரம்பித்த ஊளைக் காற்றும் சாரலும் தற்போது கொடூர இரைச்சலோடு ஆர்ப்பரித்துச் சுழற்றியடிக்க, அந்தச் சிறு குடிசையின் வைக்கோல் கூரை ஆங்காங்கே எழுந்து அமர்ந்தது. வான்-டி-நிவருக்கு அதைப் பார்க்க நீண்ட பசியின்போது தொலைதூர இரையைக்கண்டு, தன் அலகைத் திறந்து மூடும் மிகப்பெரிய கழுகெனத் தோன்றியது. இனிய கலவிக்குப் பிறகு தணிந்து கிடந்தபோதும் அவனது மனதில் சொல்லமுடியாத துயரம் அழுத்தியதைப்போல எதையோ யோசித்துக் கிடந்தான்.

திடீரெனக் கத்தியவாறு எழுந்தவன் தன்னருகே இருந்த ஜெனிவர் குப்பியை எடுத்துத் தரையில் ஓங்கி எறிந்தான். அது சில்லுகளாகத் தெறித்து அந்த இளம் பெண்ணின்மீது தெறிக்க அவள் நடுங்கியவாறு எழுந்து, “என்ன ஆயிற்று? நான் ஏதும் தவறு செய்துவிட்டேனா?” என்று கேட்டாள்.

தனக்குள்ளாக முனகிக்கொண்டிருந்தவன், “இல்லை, இல்லை. நான் ஒரு அடிமுட்டாள். மன்னிக்க முடியாத தவறைச் செய்துவிட்டேன். முட்டாள், முட்டாள்!” என்று சொல்லித் தன் முகத்திலேயே ஓங்கி அறைந்தான்.

“அய்யோ, நிறுத்துங்கள், வேண்டாம். என்னவென்று என்னிடம் சொல்லுங்கள். நீங்கள் ஏதும் தவறு செய்திருக்கக்கூடியவராக இருக்க முடியாது. தயவுசெய்து உங்களை காயப்படுத்திக்கொள்ளாதீர்கள்.”

“இப்போது என் மக்களை நான் எப்படிச் சந்திப்பேன்? அவர்கள் முகத்தில் எப்படி என்னால் முழிக்கமுடியும்? இந்தப் போதையும் காமமும் என் இனத்தையே அழித்துவிடப் போகிறதே! எவ்வளவு பெரிய தவறிழைத்துவிட்டேன். முட்டாள்!” என்றவன், மண்கலத்தின் அருகே சாய்த்து வைத்திருந்த தன் உடைவாளை எடுத்து உருவினான். அவ்விளம்பெண் அவனருகே ஓடிவந்து நடுங்கியவாறு, “என்ன செய்கிறீர்கள்? நீங்கள் யார்? எனக்கு ஒன்றும் புரியவில்லையே! நான் என்ன செய்வது?” என்று அழஆரம்பித்தாள்.

சற்று நேரம் தன் வாளை உற்று நோக்கிக்கொண்டிருந்தான் வான்-டி-நிவர். தொடர்ந்து தனக்குள்ளாக முனகிக் கொண்டிருந்தான். திடீரென வாளைத் தன் கழுத்தின் அருகே வைத்து கண்களை இறுக மூடி நின்றான். அவள் சட்டெனப் பாய்ந்து அந்த வாளின் கூர்முனையைப் பிடித்து வளைத்து இழுத்தாள். அவளது உள்ளங்கையின் செஞ்சிவப்பு இரத்தம் அவனது முகத்தில் பீறிட்டு அடித்தது.

….

சௌவாலிகா தீவின் கிழக்குக் கடற்கரையோரம் ஆய்ஸ்டர்பாண்ட் எனும் அழகிய கிராமத்தின் அதிகாலைப்பொழுது. ஆளுநரின் கூடாரத் திரையை விலக்கிக்கொண்டு உள்நுழைந்த வீரன் தலைவணங்கி நின்றான்.

“ம்ம். என்ன?” என்று கம்பீரமாகக் கேட்டுக்கொண்டே அரசாங்க ஆடையணிவதைத் தொடர்ந்தார் ஆளுநர் ராபர்ட் வில்லியர். மிகவும் நிதானமாக உடலோடு இறுக்கமாக ஆடையின் ஒவ்வொரு கயிற்றையும் கட்டிக்கொண்டிருந்தார்.

“டச்சு ஆளுநர் தாமஸ் அவரது சிறு படையோடு கரை சேர்ந்துவிட்டார் கவர்னர் அவர்களே.”

“ம்ம். முட்டாள்கள். வரட்டும். காலை உணவிற்குப்பின் கடற்கரையிலேயே சந்திக்கலாம். நமது உளவாளி லூயி நிக்கோலஸ் வந்துவிட்டானா? அவன் குடிக்காமல் பார்த்துக்கொள். அவன் குடித்துவிட்டு வந்தானென்றால் உன் தலை இருக்காது, என்ன?”

“அப்படியே கவர்னர் அவர்களே.”

“நான் சொன்னபடி எல்லாம் தயாராக உள்ளனவா? டச்சு ஜெனிவர் ஜின் சொன்னபடி வந்துவிட்டதா?”

“ஆம், கவர்னர் அவர்களே. தங்கள் கட்டளைப்படியே!”

….

கடற்கரையை ஒட்டிய சிறு மலைக் குன்றின் அடிவாரத்தில் பெரும் மக்கள் திரள். கழிகளாலும் கயிற்றாலும் எல்லையிடப்பட்ட மைதானத்தின் மையத்தில் இரு பெரும் காலி ஆசனங்கள். பக்கத்தில் சில ஆசனங்களில் உட்கார்ந்து பழச்சாறு அருந்திக்கொண்டிருந்த செல்வந்தர்கள். அவர்களைச் சுற்றிச் சில அடிகள் தொலைவில் வட்டமாகப் ஃபிரெஞ்சு காவல் வீரர்கள். அவ்வட்டத்தைச் சுற்றி அரசாங்க அதிகாரிகள் திரள். பின், இன்னொரு காவல் வட்டம். கயிற்று எல்லைக்கு அப்பால் கடலலைபோல எழுந்து அமர்ந்து இருந்த அடிமைகள் கூட்டம். அவர்களோடு கண்ணுக்குத் தெரியாத எல்லையால் பிரிக்கப்பட்டு உட்கார்ந்திருந்த அந்நிலத்தின் பூர்வீகக் குடிமக்கள்.

உப்பு வெட்டி உலர்ந்த சருமத்தில் வெடிப்புகளும் சீழ்வடிந்த புண்களும் நிறைந்திருக்க, வலியைப் பொருட்படுத்தாமல் குத்தவைத்து உட்கார்ந்திருந்தனர் அடிமைகள். அவர்களைச் சுற்றிலும் ஈக்களின் கூட்டம். அவர்களைத் தொட்டுவிடாது தங்கள் குடும்பங்களோடு ஒடுங்கியிருந்தனர் பூர்வக் குடியினர்.

திடீரென முழங்கிய கொட்டு சத்தத்தைக் கேட்டதும் மொத்தக் கூட்டமும் எழுந்து நிற்கக் கூட்டத்தின் இரு புறங்களிலிருந்து இரு குதிரைகள் மெல்ல உள்நுழைந்தன. கூட்டத்தில் மெல்லிய சலசலப்பு. தன் வெண் குதிரையிலிருந்து துள்ளிக் குதித்துத் தன் உடைவாளை உருவித் தூக்கிக்காட்டினார் ராபர்ட் வில்லியர். மக்கள் திரள் ஓவென ஆர்ப்பரித்தது. தன் கருப்புக் குதிரையின் மேலிருந்து புன்னகைத்தவாறு தன் இரு கைகளையும் வான்நோக்கிக் காட்டிப்பின் மக்கள் திரளைப் பார்த்துக் கையசைத்தார் டச்சு ஆளுநர் மார்ட்டின் தாமஸ். மக்கள் கூட்டம் மீண்டும் ஆர்ப்பரித்தது.

இருவரும் மைதானத்தின் மையத்தில் வந்துநின்று ஒருவரையொருவர் கட்டியணைத்துக் கொண்டனர். பின் ரகசியமாக ஏதோ முணுமுணுத்தவாறு கைகளைக் குலுக்கிக்கொண்டனர். இருவரும் அவ்விரு பெரும் ஆசனங்களில் சென்று அமர, மொத்தக் கூட்டமும் அமைதியடைந்தது.

“தங்கள் பயணமும் எமது விருந்தும் சிறப்பாக இருந்திருக்கும் என நம்புகிறேன் கவர்னர் தாமஸ்.”

“அற்புதம் என்பதைத் தவிர வேறு என்ன சொல்லிவிடமுடியும் கவர்னர் ராபர்ட் அவர்களே!”

“தாங்கள் கரைசேரும்முன் எமது ஃபிரெஞ்சுக் கப்பல்களின் பிரம்மாண்டத்தைப் பார்த்து வியந்துவிட்டதாகக் கேள்விப்பட்டேனே?”

“ஆம்! எமது படைக் கப்பல்கள் உலகம் முழுதும் சுற்றித் திரிந்துகொண்டிருக்கும்போது உங்கள் ஆட்சியில் ஃபிரெஞ்சுக் கப்பல்களுக்குக் கொஞ்சம் ஒய்வு கிடைத்திருக்கிறது என்பது மகிழ்ச்சியான விசயம்தானே!”

“ஆஹா.. ஆஹா.. உமது தந்திரத்தைப்பற்றி அறிந்திருந்தேன். நிரூபித்து விட்டீரே! பிரமாதம். சரி, விசயத்திற்கு வருவோம். டச்சு அரசின் நிலைப்பாடு என்ன? சௌவாலிகா தீவில் எங்கள் அரசு கைப்பற்றிய இடங்கள்தான் அதிகம் என்பது அனைவருக்கும் தெரிந்த விசயம்தான்!”

“ஆனால், மக்களின் விருப்பம் மிக முக்கியம் இல்லையா கவர்னர் ராபர்ட்? எங்கள் ஆட்சிப் பகுதிகளில் மக்கள் நிம்மதியாக உறங்கமுடிகிறது. எங்கள் அடிமைகள்போல உப்பு விளைவிக்க இந்த உலகில் யாராலும் முடியாது அல்லவா? நிம்மதியும் அதிகபட்ச விளைச்சலும் சாத்தியம் எனில் அதென்ன சாதாரணமான விசயமா என்ன?”

“நீர் பேச்சிலும் வல்லவர்தான்! எனக்கு இப்படி நீட்டிக்கொண்டு செல்வதில் விருப்பமில்லை. வரலாற்றில் நம் இருவரின் சந்திப்பு நல்லபடியாக எழுதப்படவேண்டும். போரிட்டு வென்று பெறுவதில் எங்களுக்குப் பெரிய சிக்கல் ஒன்றும் இருக்கப்போவதில்லை என்றாலும் இந்த மக்களின் நிலையைப் பார்த்து போர் இனி வேண்டாம் என எம் ஃபிரெஞ்சு அரசு முடிவுசெய்திருக்கிறது. தங்கள் அரசிற்கும் இது மகிழ்ச்சியான செய்தியாகத்தான் இருக்குமென நம்புகிறேன். டச்சு விதவைகளின் எண்ணிக்கையாவது குறையட்டுமே!” என்று சொல்லிச் சத்தமாகச் சிரித்தார்.

ஒரு நொடி கடுமையாக மாறிய முகத்தைத் திருப்பிச் சுற்றியுள்ள செல்வந்தர்களையும் காவல் வீரர்களையும் பார்த்தார் ஆளுநர் தாமஸ். பெருமூச்செறிந்து, “ஃபிரெஞ்சு விதவைகள் தொடர்ந்து விதவைகளாக இருப்பதில்லை, இல்லையா? சரி, அதை விடுவோம். எமக்கும் போரில் விருப்பமில்லை. வாழ்வைவிடப் போர் அவ்வளவு உன்னதமானதா என்ன? என் உடலின் தழும்புகளைப் பார்த்து என் மகள் அழுதுகொண்டே கேட்ட கேள்விகளுக்கு என்னால் இன்னும் பதில் கண்டுபிடிக்க முடியவில்லை. சரி, நீங்கள் ஒரு திட்டத்தோடுதான் இருக்கிறீர்கள். சொல்லுங்கள், கேட்போம்!” என்று புன்னகைத்தார்.

“பிரமாதம். இப்படிச் செய்யலாம். எங்கள் படையிலிருந்து பெரும் வீரன் ஒருவனை நான் அழைக்கிறேன். தங்கள் படையில் இருந்து ஒருவனை தாங்கள் முன்னிறுத்துங்கள். அவர்கள் இருவரும் முடிவு செய்யட்டும் சௌவாலிகா யாருக்கு எவ்வளவு என்று!” என்றவாறு தன் உதவியாளரைப் பார்த்துக் கையசைத்தார் ஃபிரெஞ்சு ஆளுநர்.

“ம்ம். இருவரும் இன்று இறக்கக் கூடாது என்ற கோரிக்கையை நீங்கள் ஏற்றுக்கொண்டால் சரி!” என்று டச்சு ஆளுநர் கேட்க, சரியெனத் தலையாட்டினார் ஃபிரஞ்சு ஆளுநர்.

ஃபிரெஞ்சுப் படையின் சார்பில் லூயி நிக்கோலஸ் வந்து மைதானத்தின் மத்தியில் நின்றான். அவன்முன் ஒரு மேடையில் பல பாட்டில்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. மேடையின் மறுமுனையில் தலையைத் தொங்கப் போட்டுக்கொண்டு நின்றிருந்தான் வான்-டி-நிவர். அவன் மைதானத்திற்குள் நுழைந்தபோது அடிமைகளின் மொத்தக் கூட்டமும் ஆரம்பித்த முழக்கம் இன்னும் ஓய்ந்திருக்கவில்லை. லூயி தன் கைகளை உயர்த்தி அனைவரையும் அமைதியாக இருக்கச் சைகை செய்தான். நிவரின் உடலில் எவ்வித அசைவுமில்லை.

கொட்டு மேளமிசைக்க ஓர் அதிகாரி வந்து கொடியசைக்க, இருவரும் மேடையின் இரு புறமும் இடப்பட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்தனர். லூயியின்முன் பிரெஞ்சு ஒயின் பாட்டில்கள் இருக்க, நிவரின்முன் டச்சு ஜெனிவர் ஜின் பாட்டில்கள் இருந்தன. இருவரும் குடிக்க ஆரம்பித்தனர். லூயி ஆரவாரத்தில் உற்சாகக் குரலெழுப்பிக்கொண்டே குடிக்க நிவர் அமைதியாக ஏதோ சிந்தனையில் ஆழ்ந்தவாறு குடித்தான். இருவரும் ஒவ்வொரு பாட்டிலையும் முடிக்க முடிக்கக் கூட்டம் ஆர்ப்பரித்தது. இரு ஆளுநர்களும் செல்வந்தர்களுடன் சேர்ந்து குடிக்க இசையும் அழகிகளின் நடனமுமென ஒரு திருவிழாபோல உருக்கொண்டது அக்கடற்கரை.

அடுத்த மேளம் கேட்கும்வரையில் இருவரும் விடாமல் குடிக்கவேண்டும். அதன் பிறகுதான் ஒப்பந்தத்தின் மையப் போட்டி அறிவிக்கப்படும். என்ன போட்டி, சௌவாலிகாவை எப்படிப் பங்குபோடப் போகிறார்கள் என்பது புரியாமல் ஒவ்வொருவரும் குழம்பியிருக்க ராபர்ட் வில்லியர் மகிழ்ச்சியின் உச்சத்தில் களித்திருந்தார். மார்ட்டின் தாமஸ் தன் பிரதிநிதி குடிப்பதையே பார்த்துக்கொண்டிருந்தார்.

லூயி தொடர்ந்து குடித்துக்கொண்டிருந்தான். அவன் நிறுத்தும்வரை தானும் நிறுத்த முடியாது என்கிற நிலையில் ஜின்னுடன் போராடிக் கொண்டிருந்தான் நிவர்.

திடீரென கொட்டு மேளம் மறுபடியும் முழங்கத் தள்ளாடியபடி எழுந்து நின்றான் லூயி. அவனைத் தொடர்ந்து மேடையைப் பிடித்தவாறு எழுந்து நின்றான் நிவர்.

சௌவாலிகாவின் மொத்த எல்லை நூறு சதுர கிலோ மீட்டருக்குள்தான் இருக்கும். உப்பு, விவசாயம் மற்றும் மீன்பிடித் தொழில் சார்ந்து செழித்திருந்த அழகிய தீவு. மேற்கிந்தியத் தீவு நோக்கிய தன் பயணத்தின் களைத்த ஒரு பின்மதிய நேரத்தில் சௌவாலிகாவின் கடற்கரையைப் பார்த்து வியந்து நின்றான் கிறிஸ்டோபர் கொலம்பஸ். அன்று புனிதர் மார்ட்டினுக்கான தினம். அங்கு உருவாகப்போகும் ஒரு ஸ்பெயின் சுற்றுலாத் தலத்தைக் கனவு கண்டவனாகத் தன் புனிதரின் பெயரை அத்தீவிற்குச் சூட்டினான். ஆனால், ஏனோ அவனுக்கு அத்தீவில் இறங்கவோ, ஓய்வெடுத்துச் செல்லவோ மனம் வரவில்லை. கடற்கரையெங்கும் சூழ்ந்திருந்த, கொடும் கொலைகளில் பிழைத்திருந்த அராக்கு இனத்தவரையும் கரீப் இனத்தவரையும் கண்டு கையசைத்துவிட்டுத் திரும்பிச் சென்றுவிட்டான். அடுத்த சில வருடங்களுக்கு ஸ்பெயின் அரசாங்கத்தின் ஆட்சியில் பல்வேறு நாட்டு அடிமைகள் இறக்குமதி செய்யப்பட்டு உப்பளங்களின் எண்ணிக்கை அதிகரிக்க அத்தீவின்மேல் பல அரசுகளின் பார்வை திரும்பியது.

ஒப்பந்தம்:

ஆய்ஸ்டர்பாண்ட் மைதானத்திலிருந்து குறிப்பிட்ட நேரத்தில் லூயியும் நிவரும் எதிரெதிர் திசைகளில் புறப்படவேண்டும். லூயி ஃபிரெஞ்சு மக்கள் நிறைந்திருந்த வடக்குக் கடற்கரை ஓரமாகவும், நிவர் டச்சு மக்கள் வாழ்ந்த தெற்குக் கடற்கரை ஓரமாகவும் செல்லவேண்டும். வெறும் கால்களில் ஒரு நடைப் பயணம். தீவைச் சுற்றி நடந்து வரும் இருவரும் எந்த இடத்தில் சந்திக்கிறார்களோ அந்தவிடம்தான் சௌவாலிகாவின் பாகப் பிரிவினையின் தொடக்கப் புள்ளியாக அமையும். மேற்குக் கடற்கரையின் அப்புள்ளியிலிருந்து கிழக்குக் கடற்கரையின் ஆய்ஸ்டர்பாண்டிற்கு வரையப்படும் புது எல்லையின் வடக்குப் பகுதி ஃபிரெஞ்சு அரசின்கீழும் தெற்குப் பகுதி டச்சு அரசின்கீழும் நிர்வகிக்கப்படும்.

போதையின் தள்ளாட்டத்தோடு மெல்ல நடந்து கொண்டிருந்தான் லூயி. முடிவில்லாமல் நீண்டுசெல்லும் கடற்கரையின் மணல் முட்களாகக் குத்திக்கிழிக்க அதற்குமேல் ஒரு அடிகூட எடுத்து வைக்கமுடியாதென எண்ணி விழுந்தான். கண்கள் கனத்து உறக்கத்தில் ஆழ்ந்த நொடியில் ஆளுநரின் அக்கடும் சொற்கள் நினைவில் வந்தன.

“அந்த டச்சு முட்டாளைவிட நீ ஒரு அடி குறைவாக நடந்திருந்தாயென ஒரு செய்தி என் காதுகளை எட்டும் அதே நேரத்தில் உன் தலையும் உன் மனைவி, குழந்தைகள், உன் பெற்றோர் மற்றும் உன் வம்சாவழியின் ஒவ்வொருத்தரின் தலையும் இந்தப் ஃபிரெஞ்சு நிலத்தில் இரத்தத்தைத் தெளித்துவிழும். இதற்குமேல் உன்னிடம் நான் எதுவும் சொல்வதற்கில்லை!”

கண்களைத் தேய்த்து விழித்தெழுந்த லூயி, தள்ளாடித் தள்ளாடி தன் நடையைத் தொடர்ந்தான். தொலைவில் கடற்கரையின் குறுக்காக நிலத்தில் பாதியும் நீரில் பாதியுமாக நின்ற ஒரு மலைக் குன்றைப் பார்த்ததும் மீண்டும் மலைத்து நின்று விட்டான். தன் காலடியில் சுருண்டுகிடந்த தன் நிழலை வெறித்துப்பார்த்தவன் அதன்மேல் காறி உமிழ்ந்தான். தன் எச்சிலை வெறித்துப் பார்த்தவன் முகத்தில் சட்டென ஒரு வெளிச்சம். தன்னைச் சுற்றிலும் யாரும் இருக்கிறார்களா எனப் பார்த்தான். யாருமில்லை என உறுதி செய்துகொண்டு அக்குன்றை நோக்கி விரைந்து சென்றான்.

“என்ன இது? நீ ஏன் இப்படிச் செய்தாய்? என் தவறுக்கு, என் மக்களுக்குக் கிடைக்கவிருந்த வாழ்க்கையை அழித்துவிட்ட எனக்கு மரணம் மட்டுமே சரியான முடிவாக இருக்கும். நீ ஏன் இடையில் வந்து இப்படி என்னை வதைக்கிறாய்?” என்று இரத்தம் கசிந்து கொண்டிருந்த அந்த இளம் பெண்ணின் கட்டுப்போட்ட உள்ளங்கையில் தன் முகத்தைத் தோய்த்து முத்தமிட்டான் வான்-டி-நிவர்.

“இல்லை, இல்லை. நீங்கள் ஒரு விநாடிகூட இப்படி யோசிக்கக்கூடாது. நீங்கள் இழக்கும் ஒவ்வொரு நொடியும், நீங்கள் கடக்கவேண்டிய ஒவ்வொரு அடி என்பதை மனதில் வையுங்கள். உடனே புறப்படுங்கள். நமது மக்களுக்காக மிகப்பெரும் வெற்றியை நீங்கள் உருவாக்கித் தரப்போகிறீர்கள். கிளம்புங்கள்,” என்று அவன் கைகளைப் பிடித்தவாறு எழுந்து நின்றாள்.

அவளது முகத்தை உற்றுப் பார்த்தவன் அவளை இறுக்கமாக அணைத்து முத்தமிட்டான்.

“உன்னைப் பார்த்த அந்த நொடியில் என் நீண்ட நடையின் வலி மறைந்துபோனது. என் ஒட்டு மொத்த இனத்திற்கான சுதந்திரத்தின் புன்னகையை உன்னில் ஒரு நொடி நான் பார்த்தேன். எத்தனை ஜின் பாட்டில்களாலும் ஒன்றும் செய்யமுடியாத என்னை உன் ஒற்றைப் பார்வை அடித்து வீழ்த்திவிட்டது. இப்போதுகூட நீ நிஜமான ஒரு பெண்தானா? இல்லை, இதெல்லாம் என் கனவில் நடக்கிறதா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை. ஒருவேளை, சோர்ந்து விழுந்த என் உடல் தெற்குக் கடற்கரை முனையில் இப்போது சடலமாக ஒதுங்கிக் கிடக்கிறதோ என்னவோ?”

“போதும். மேலும் மேலும் குழப்பத்தில் வீழ்ந்து போகாதீர்கள். நீங்கள் வென்று நிற்கும்போது உங்களைத் தேடி நான் வருவேன். என் நிஜக் கரங்களால் உங்கள் தோள்களைக் கட்டி அணைத்து முத்தமிடுவேன். இப்போது புறப்படுங்கள்.”

நள்ளிரவு. ராபர்ட் வில்லியர், மார்ட்டின் தாமஸ், ஃபிரெஞ்சுப் பேரழகிகள், டச்சு தேவதைகள், இரு நாட்டுச் செல்வந்தர்கள், அவர்களுக்கு ஊற்றிக்கொடுத்த சேவகர்கள் மற்றும் காலியான மது பாட்டில்கள் என எல்லோரும் எல்லாமும் ஆழ்ந்த உறக்கத்தில் கிடக்க, அடிமைக் கர்ப்பிணிப் பெண்கள் பசி மயக்கத்தில் உறக்கமின்றிக் கிடக்க, மற்ற அடிமைகள் எரிந்தணையும் தீப்பந்தங்களின் வெளிச்சத்தில் உப்பு வெட்டிக் குவித்துக் கொண்டிருந்தனர்.

தன் மூச்சுக் காற்றின் அனல் வெளிச்சத்தில் நடப்பது மறந்து தன்னிச்சையாக ஓடிக் கொண்டிருந்தான் வான்-டி-நிவர். அவன் கடக்கும் ஒவ்வொரு அடியிலும் தன் இனக் குழந்தைகள் ஒவ்வொருவரின் முகமாக வந்துசென்றது.

மலைக் குன்றின் உச்சியில் நின்றான் லூயி. அந்த தடையற்ற உயரமும் மேகங்களின் அருகாமையும் அவனை விட்டுவிடுதலையாகி நிற்கச்செய்தன. உளவுகளின்போது செய்த திருட்டுகளும் கொலைகளும் தப்பியோடிய கணங்களும் நினைவில் வந்துபோயின.

“நான் ஒரு கவிஞனாகவோ இசைக் கலைஞனாகவோ இருந்திருக்கலாம். ஒயினும் பெண்களும் அரட்டையுமாக எவ்வளவு மகிழ்ச்சியாக இருந்திருக்கலாம்! வீரம், நாட்டுக்கான சேவை என்றெல்லாம் என்னை நானே ஏமாற்றிக் கொண்டிருந்திருக்கிறேன். என்னைப் போலவே இருக்கும் இன்னொரு மனிதன் எப்படி என் எதிரியாகிறான்? அவனது மனைவியைத் தொட எப்படி என்னால் முடிந்தது? அவனது குழந்தைகளின் தலைமுடியை சிரித்துக்கொண்டே மழித்துவிட்டேனே! என்ன கொடூரம்! இத்தனை உளவு வெற்றிகளுக்குப் பிறகும் என்னால் நிம்மதியாக உறங்க முடியவில்லையே! என்னை இந்த விளையாட்டில் எப்போதும் உறங்காமல் வைத்திருப்பதுதான் என் அரசின் திறமை, என் ஆளுநரின் தந்திரம்.. நானே வலிந்து வாங்கிக்கொண்ட சாபம். நேரம் வேறு ஓடிக்கொண்டேயிருக்கிறது. சட்டென எல்லாமே நின்றுவிடாதா?”

11, நவம்பர், 2017. நண்பகல் 12 மணி. இடம்: சின்ட் மார்ட்டின் கடற்கரை.

சுற்றியிருந்த கட்டிடங்கள் அனைத்தும் தவிடுபொடியாகித் தரை மட்டமாகக் கிடந்தன. கடற்கரை மறைந்து எங்கும் நீர்வெளி. மரங்கள் அனைத்தும் முறிந்தொடிந்து சோகம் பரப்பிக் கிடந்தன. மிச்சம் மீதியிருந்த பொருட்களைச் சேகரித்துத் தங்கள் வாழ்வாதாரத்தை யோசித்து நின்றனர் டச்சு, பிரெஞ்சு, கயானா, ஸ்பெயின் மற்றும் பல நாடுகளிலிருந்து இங்கு வந்து குடியேறிய மக்கள். ஹெலிகாப்டர்களில் இருந்து தூக்கி எறியப்படும் உணவுப் பொட்டலங்களைச் சரியாகப் பிடித்துவிட்ட மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தனர் இரு ஜமைக்கச் சிறுவர்கள்.

இர்மா புயலின் கோர தாண்டவத்தைக் கண்டுகொள்ளாமல் நிமிர்ந்து நிலையாக நின்றது நான்கு நூற்றாண்டுகள் பழமையான கன்கார்டியா ஒப்பந்தக் கற்தூண். அதன் இரு புறங்களிலும் உடைந்து கிடந்தன இரு பெரும் வீரர்களின் சிலைகள். அதனடியில் நின்று புனிதர் மார்ட்டினை நினைத்து வேண்டி ஒரு மெழுகுவர்த்தியைக் கொளுத்தி வைத்தாள் ஒரு செவ்விளம்பெண்.

அடுத்த நாள் அதிகாலை. மேற்குக் கடற்கரையின் கன்கார்டியா கிராமத்தில் கருமணல் நிறைந்த அந்தக் கடற்கரையில் ஒருவர்முன் ஒருவர் மண்டியிட்டு நின்றனர் லூயி நிக்கோலஸ் மற்றும் வான்-டி-நிவர். நீண்ட மூச்சுகளின் முடிவில், ஓடிவந்து அவர்களைச் சூழ்ந்துகொண்ட அடிமைகளின் ஆரவாரத்தில் ஒருவரை ஒருவர் பார்த்துப் புன்னகைத்து கைகுலுக்கிக் கொண்டனர்.

“நாம் எங்கிருக்கிறோம் தெரிகிறதா?” என்று கேட்டான் நிவர்.

“சரியாகத் தெரியவில்லை. எனக்கும் இது புது இடம்தான். ஆனால், ஒன்று மட்டும் நிச்சயமாகத் தெரியும்,” என்றான் லூயி.

“என்ன?”

“உன்னைவிட நான் அதிகமான தூரம் கடந்துவிட்டேன். வெற்றி எங்கள் ஃபிரெஞ்சு அரசுக்கே!”

“ஓஹோ! பார்க்கலாம். அப்படியே நீங்கள் வென்றிருந்தாலும் உன் இடம் எப்போதும் மாறப் போவதில்லை நண்பா,” என்று சொல்லிவிட்டுத் திரும்பி நடந்தான் நிவர். தான் விட்டுவந்த அந்தச் செவ்விளம்பெண் வந்திருக்கிறாளா என்று சுற்றிலும் தேட ஆரம்பித்தான்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு அக்கடற்கரை விழாக்கோலம் பூண்டது. ஆளுநர்கள் ராபர்ட் வில்லியர் மற்றும் மார்ட்டின் தாமஸ் இருவரும் அடிமைகள், ஃபிரெஞ்சு மக்கள், டச்சு மக்கள், செல்வந்தர்கள், நடன அழகிகள் முன்னிலையில் கன்கார்டியா ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

‘சௌவாலிகா தீவின் மொத்த நிலப்பரப்பில் மூன்றில் இரண்டு பங்கு ஃபிரஞ்சு அரசின்கீழும் மூன்றில் ஒரு பங்கு டச்சு அரசின்கீழும் வருவதாக. ஆய்ஸ்டர்பாண்டிலிருந்து கன்கார்டியா வரையிலான குறுக்கு எல்லையின் வடபகுதி ஃபிரெஞ்சுப் பகுதியாகவும் தென்பகுதி டச்சுப் பகுதியாகவும் வரையறுக்கப்படுகிறது. மேற்குக் கடற்கரையின் கன்கார்டியா முனைப் பகுதியில் இரு நாட்டு ஆளுநர்கள் ராபர்ட் வில்லியர் மற்றும் மார்ட்டின் தாமஸ் ஆகியோரின் பெருமை சொல்லும்விதமாக இருபது அடி உயரமான கற்தூண் நிறுவப்படும்.’

ஒப்பந்தம் கையெழுத்தான பிறகான விருந்தில் லூயியும் நிவரும் ஒரு மேசையில் அமர்ந்திருந்தனர். லூயி ஒரு ஃபிரெஞ்சு ஒயின் பாட்டிலை நிவருக்குக் கொடுக்க, அவன் ஒரு ஜெனிவர் ஜின் பாட்டிலை லூயிக்குக் கொடுத்தான். இருவரும் ‘மகிழ்ச்சி உண்டாகட்டும்’ என்று சொல்லிக் குடிக்க ஆரம்பித்தனர். இசையும் நடனமும் அழகிகளும் சூழ நீண்ட ஒரு விருந்து.

விருந்தின் முடிவில் இருவரும் விடைபெற எழுந்து கைகளைக் குலுக்கிக்கொண்டனர். அப்போது நிவர், லூயியைப் பார்த்து, “சரி, கேட்டுவிடுகிறேன். இப்போது சொல் நண்பா! எப்படி நீ அவ்வளவு தூரம் கடந்து வந்தாய்? சாத்தியமே இல்லையே!” என்று கேட்டான்.

லூயி நிவரின் காதுகளுக்கருகே சென்று இரகசியமாகச் சொன்னான், “அதிர்ச்சி அடையாதே! நான் கடற்கரை வழியாகத்தான் நடந்து வந்திருக்க வேண்டுமா என்ன? வெற்றி எப்படிக் கிடைத்தால் என்ன நண்பா? என்னால் என் குடும்பத்தின் இருபது தலைகள் தப்பித்துவிட்டன, தெரியுமா?”

நிவர் லூயியின் கண்களைக் கூர்ந்து பார்த்தான். சற்று நேரம் அமைதியாக நின்றவன் லூயியின் கைகளைப் பிடித்து குலுக்கிவிட்டுத் திரும்பி நடந்தான். சில அடிகள் சென்றவன் திரும்பிப்பார்த்து, “உங்கள் ஃபிரெஞ்சு ஒயினைவிட எங்கள் டச்சு ஜெனிவர் ஜின் பத்து மடங்கு போதை, தெரியுமா நண்பா?” என்று சிரித்தான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.