வான்பார்த்தல்

-1-

பொழுது சாய்ந்துவிட்டால் லஷ்மி மொட்டைமாடிக்கு வந்துவிடுவாள். பின்னர் இரவு ஒன்பது மணிவரை அவள் அங்குதான் இருப்பாள். அதன் பின்னர் கீழே செல்வாள். மீண்டும் அதிகாலை நான்கு மணிக்கு மொட்டைமாடிக்கு வந்துவிடுவாள். சூரிய உதயத்துக்கு முன்னால் கீழே சென்றுவிடுவாள். 

பொழுது விடிந்தது முதல் பொழுது சாயும்வரை வீட்டுக்குள்தான் இருப்பாள். சன்னல்வழியாகக் கூட வெய்யிலைப் பார்க்க மாட்டாள். வீட்டுக்குள் துப்புரவு செய்வாள். ஆனால், வாசலையும் கொல்லைப்புறத்தையும் கூட்டும் பொறுப்பைத் தன் தாயிடம் கொடுத்துவிடுவாள். 

துணிகளைத் துவைப்பாள். அவற்றை வெளியே கொண்டுவந்து கொடிகளில் காயப்போடும் வேலையைத தன் தாயிடம் தந்துவிடுவாள். காலையிலும் மதியமும் சமைப்பாள். இரவு சமைக்கும் பொறுப்பினைத் தன் தாயிடம் ஒப்படைத்துவிடுவாள். 

டி.வி. பார்க்க மாட்டாள். கைப்பேசியைப் பயன்படுத்த மாட்டாள். காலையிலும் மதியமும் இரவிலும் தலைக்குக் குளிப்பாள். தன் அண்ணனிடமும் அப்பாவிடமும் முகங்கொடுத்தும் பேச மாட்டாள். அண்ணிக்கும் அவளுக்கும் ஒரே வயதுதான். அண்ணியிடமும் பேச மாட்டாள். அண்ணனின் மகள் ஏதாவது பேசினால் மட்டும் ஓரிரு சொற்களில் பதில் கூறுவாள். 

தன் தாயிடம் மட்டும் பேசிக்கொண்டே இருப்பாள் லஷ்மி. ஆனால், தாய் அவளிடம் மிகுதியாகப் பேசமாட்டார். பலநேரங்களில் அவள் பேசுவதைக் கூடத் தாய் கவனிப்பதில்லைதான். அதுவும் லஷ்மிக்குத் தெரியும். ஆனாலும், அவள் தான் பேசுவதை நிறுத்துவதேயில்லை. அவளுக்குப் பேசப் பிடிக்கும். ‘அதைப் பிறர் கேட்க வேண்டும்’ என்றோ, ‘அதற்கு அவர்கள் பதில் கூறவேண்டும்’ என்றோ அவள் எதிர்பார்க்க மாட்டாள். 

லஷ்மிக்குப் பேசப் பிடிக்கும். பேச மட்டுமே பிடிக்கும். சுவரைப் பார்த்துப் பேசுவாள். பாத்திரங்களைப் பார்த்துப் பேசுவாள். துணிகளைப் பார்த்துப் பேசுவாள். இரவில் வானத்தைப் பார்த்துப் பேசுவாள். சரி, அப்படி என்னதான் பேசுவாளோ?

-2-

லஷ்மியின் வீட்டுக்குப் பின்புறம் உள்ள வீட்டுக்கு நாங்கள் புதிதாகக் குடிவந்தோம். இது புதிய தெரு என்பதால், உடனடியாக இங்கு யாரும் எனக்கு நண்பர்களாகக் கிடைக்கவில்லை. மாலையில் மொட்டை மாடிக்குச் சென்று தனியாகப் பந்து விளையாடுவேன். தனியாக ஓடுவேன், நடப்பேன். தனியாக உட்கார்ந்திருப்பேன். 

இருளத் தொடங்கியதும் பின்வீட்டு மொட்டைமாடிக்கு ஒரு பெண் வருவார். அவர் மொட்டைமாடியின் தரையில், குத்தவைத்து அமர்ந்து, வானத்தைப் பார்த்து அழுதுகொண்டே, ஏதேதோ பேசிக் கொண்டிருப்பார். 

சில வேளைகளில் அவர் சப்தமின்றியும் சப்தமாகவும் அழுவார். கைகளை அசைத்து வானத்தைப் பார்த்துத் திட்டுவார். கைகளால் தம் தலையில் அடித்துக்கொள்வார். தன் நெஞ்சில் அறைந்துகொள்வார். அவரைப் ‘பைத்தியம்’ என்றுதான் நான் நினைத்தேன். அதனால், நான் அவரைப் பார்ப்பதைத் தவிர்த்தேன். ஆனால், அவரின் அழுகையொலி என் காதில் விழுவதை என்னால் தவிர்க்க முடியாததாகவே இருந்துவந்தது.

எனக்கு இந்தத் தெருவில் தோழர்கள் கிடைக்கவில்லை. இரண்டு வாரங்களுக்குப் பின்னர் ஒரு தோழிதான் கிடைத்தாள். அவள் பெயர் அஞ்சனா. நான் என்ன சொன்னாலும் உடனே அவள் செய்தாள். ‘ஏன், எதற்கு?’ என்றெல்லாம் அவள் கேட்பதே இல்லை. நாம் சொல்வதை அப்படியே ஏற்று, அதை அப்படியே செய்பவர்களைக் ‘கீழ்ப்படிபவர்கள்’ என்றுதானே பெரியவர்கள் கூறுவார்கள். அப்படிப் பார்த்தால் அஞ்சனா கீழ்ப்படிதலுள்ள சிறுமிதான்.

எனக்கு என்னவோ அவளைப் பார்த்தால் ‘அரைப்பைத்தியம்’ என்றுதான் நினைக்கத் தோன்றுகிறது. அவள் உடையும் முடியும் முழியும் முக அமைப்பும் அப்படித்தான் எனக்கு அவளைக் காட்டின. 

எனக்கும் அவளுக்கும் ஒரு வயதுதான் வித்தியாசம். அவள் ஐந்தாம் வகுப்பு படித்தாள். ‘அவளைவிட எனக்கு அறிவு மிகுதி’ என்று உணர்ந்திருந்தேன். ‘அவளைவிட எனக்கு அழகு மிகுதி’ என்று நினைத்திருந்தேன். ‘அவளைவிட எனக்கு வலிமை மிகுதி’ என்று உறுதியாக நம்பியிருந்தேன். 

ஆனால், அஞ்சனா தன்னுடைய அறிவையும் அழகையும் வலிமையையும் மறைத்து வைத்திருந்தாள். இந்த விஷயம் எனக்கு அவளுடன் பழக பழகத்தான் சிறுக சிறுகத் தெரிய வந்தது. ‘பெரும்பான்மையான பெண்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்’ என்பது, எனக்குப் பல ஆண்டுகளுக்குப் பின்னர்தான் புரிந்தது.

அன்று மாலையில் என் வீட்டுக்கு அஞ்சனா வந்தாள். வெளிர்ப் பச்சை நிறத்தில் பாவாடை சட்டை அணிந்திருந்தாள். தலைக்கு எண்ணெய் வைக்காததால் அவள் தலைமுடி பரட்டையாகவே இருந்தது. அவள் தலைமுடிகளின் மீது மெல்லிய மினுங்கலாக செம்பட்டையின் நிறம் இருந்தது. அவள் முகத்தில் அவ்வப்போது சிரிப்பு பொங்கி பொங்கி வரும். அதனால், அவள் முகமே மனநிலை பாதிக்கப்பட்ட சிறுமிக்குரியதாக இருந்தது. 

அவளை அழைத்துக்கொண்டு, என் வீட்டு மொட்டைமாடிக்குச் சென்றேன். நாங்கள் பந்து விளையாடத் தொடங்கினோம். வழக்கமாக நாங்கள் பந்து விளையாட்டைத்தான் விரும்பி விளையாடுவோம். அவள் பந்தினை எறிவாள். நான் அதைப் பிடிப்பேன். என்னால் பிடிக்க முடியாமல் பந்து நழுவிவிட்டால், ‘உனக்கு ஒழுங்காகவே எறியத் தெரியாதா?’ என்று எரிச்சலுடன் கேட்டு, நான்  அவளைத் திட்டுவேன். 

நான் பந்தினை எறியும்போது பெரும்பாலும் அவளால் அதைப் பிடிக்கவே முடியாது. அவளுக்கு அதைப் பிடிக்கும் திறமை உண்டுதான்; நான் அவளை நோக்கிப் பந்தினை ஒழுங்காக எறியாததால்தான் அவளால் பிடிக்க முடியாமல் போய்விடும். ஆனால், அதற்காக அவள் என் மீது ஒருமுறைகூடச் சினந்ததே இல்லை. ஒரு சின்ன சிரிப்பை உதிர்த்து, தன்னுள் பொங்கும் சினத்தைத் தணித்துக் கொள்வாள். 

நான் எப்படித் திட்டினாலும் அவள் மௌனமாகவே இருப்பாள். காரண, காரியம் இல்லாமல் நான் திட்டினாலும்கூட அவள் அவள் அதைப் பொறுத்துக்கொள்வாள். பதிலுக்கு அவளிடமிருந்து ஒரு பெரிய சிரிப்பு மட்டுமே வெளிப்படும். தனது பெருஞ்சினத்தையும் தன்னுடைய பெருஞ்சிரிப்பால் தாண்டிக் கடந்துவிடுவாள்.  

அஞ்சனா நாள்தோறும் என்னுடன் விளையாட வரமாட்டாள். அவளுக்கு எப்போது விளையாடத் தோன்றுகிறதோ அப்போதுதான் வருவாள். அவள் வந்துவிட்டாள் எனக்கு மகிழ்ச்சி பொங்கிவிடும். அந்த மகிழ்ச்சியை நான் அவள்மீது சினமாகத்தான் வெளிப்படுத்துவேன். என்னிடம் திட்டு வாங்குவதற்கே பிறந்தவள் போல அவள் அமைதியாக நான் திட்டுவதைக் கேட்டுக் கொண்டிருப்பாள். அதுதான் எனக்கு அவளிடம் மிகவும் பிடித்த குணமாக இருந்தது. என்னை அவள் மரியாதையுடன்தான் பேசுவாள். என்னிடம் உரத்த குரலில்கூடப் பேசமாட்டாள். அவ்வளவு சிறந்த சிறுமி அவள்.

அவள் அழுது நான் பார்த்ததே இல்லை. அழுபவர்களை நான் ‘பைத்தியம்’ என்றுதான் நினைத்தேன். பின்வீட்டு மொட்டைமாடியில் சாய்ந்திரத்துக்கு மேல் வந்து குத்தவைத்து அமர்ந்து, அழும் அந்தப் பைத்தியத்தைப் போலவே நினைத்துக் கொள்வேன். அழுபவர்களை நான் பொருட்படுத்துவதே இல்லை. அஞ்சனா அழுதாலும் நான் அவளுக்கு ஆறுதல் கூறித் தேற்றமாட்டேன். அவள் அழுதால்கூட அவளிடம், ‘இப்ப எதுக்கு அழறே? அப்படியென்ன உனக்கு கஷ்டம் வந்துடுச்சு?’ என்றுதான் நான் கேட்பேன்.    

அவள் என்னுடன் விளையாட வந்துவிட்டாள், என் அம்மா எங்களிருவருக்கும் சாப்பிடுவதற்கு ஏதாவது தின்பண்டங்களைக் கொடுத்துக் கொண்டே இருப்பார். 

-3-

ஆடி மாதம் தொடங்கியதும் ஒரு ஞாயிற்றுக்கிழமையின் காலையில் அஞ்சனா என் வீட்டுக்கு வந்தாள். வெளிர் மஞ்சள் நிறத்தில் பாவாடை சட்டை அணிந்திருந்தாள். தலையைச் சீவி, ஒற்றை ஒரு ஜான் நீளத்துக்கு ஒற்றை சடையைப் பின்னி, அதில் சிவப்பு நிறத்தில் ரிப்பனைக் கட்டியிருந்தாள். 

நானும் அஞ்சனாவும் சேர்ந்து பட்டம் செய்யத் தொடங்கினோம். பட்டம் செய்யத் தேவையான பொருட்களை நான் வரிசையாகக் கூறினேன். உடனே, அவள் மிகுந்த பொறுப்புடன் அவற்றைக் கொண்டுவந்தாள். ஆனால், எல்லாப் பொருட்களிலும் இரண்டு இரண்டு கொண்டுவந்தாள். 

“நீ என்ன லூசா? எதுக்கு எல்லாத்துலையும் ரெண்டு ரெண்டு கொண்டு வந்தே?” என்று கேட்டேன்.

“நாம ரெண்டுபேரு இருக்கோமே!” என்றாள் சிரித்துக்கொண்டே.

“தேவையே இல்லை. நான் பட்டம் செய்வேன். நீ சும்மா பார்த்துக்கிட்டு இருந்தா மட்டும் போதும்” என்றேன்.

“நானும் பட்டம் செய்யக் கூடாதா?” என்று கேட்டாள். 

“கூடாது” என்றேன்.

அவள் அமைதியாக இருந்தாள். அவள் கண்கள் கலங்கின. 

“பட்டம் செய்யுறது மட்டுமில்லை, நான்தான் பட்டத்தப் பறக்கவும் விடுவேன். பறக்குற பட்டத்த நீ சும்மா பார்த்துக்கிட்டு இருந்தாலே போதும்” என்றேன்.

அவள் அமைதியாக இருந்தாள். அவள் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் வழிந்தன. என் முன்னால் அஞ்சனா முதல்முறையாக அழுதாள். அவளை ஆறுதல்படுத்த நான் நினைக்கவில்லை. ‘இப்ப எதுக்கு அழறே? அப்படியென்ன உனக்கு கஷ்டம் வந்துடுச்சு?’ என்று கேட்கவும் நான் விரும்பவில்லை. நான் அவளின் அழுகையைப் பொருட்படுத்தவேயில்லை. 

“என்னோட பட்டம் வானத்துல பறக்கும்போது, நீ ரொம்ப நேரம் அதை அண்ணாந்து பார்க்காதே! ஏன்னா, உனக்குக் கழுத்து வலிக்கும். என்னோட பட்டம் அவ்வளவு உயரத்துக்குப் பறக்கும் தெரியுமா?” என்றேன்.

அவள் தன் கண்ணீரைத் தானே துடைத்துக்கொண்டு, “உங்க பட்டம் ரொம்ப உயரத்துல பறக்குமா?” என்று கேட்டாள்.

“ஆமா. ரொம்ப உயரத்துக்குப் போகும். அந்த ஏரோப்பிளைன் உயரத்துக்குப் பறக்கும்” என்றேன்.  

அவள் மெல்லச் சிரித்தாள். ‘அந்தச் சிரிப்புக்கு என்ன பொருள்?’ என்று எனக்குத் தெரியவில்லை. நான் பட்டத்தைச் செய்யத் தொடங்கினேன். அதில் நூலினை இணைத்தேன். அதைப் பிடித்துக்கொண்டு தெருவில் ஓடினேன். பட்டம் பாம்புபோல நிலத்தில் ஊர்ந்தது. ஓர் அடி உயரத்துக்குக் கூட அது எழவேயில்லை. 

என்னுடைய பறக்காத பட்டத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தாள் அஞ்சனா. நான் அவளைப் பார்த்தேன். உடனே, அவள் வானத்தைப் பார்த்தாள். 

‘அவள் ஏன் வானத்தைப் பார்க்கிறாள்?’ என்று புரிந்துகொள்ளாமல், “ஏய்! பட்டம் கீழேதான் இருக்கு” என்றேன். 

உடனே அவள், “உங்க பட்டம் ஏரோப்பிளைன் உயரத்துக்குப் பறக்கும்ணு நினைச்சுத்தான் வானத்தைப் பார்க்குறேன்” என்றாள்.

எனக்குச் சினம் வந்தது. ஆனால், அவளிடம் அதைக்காட்டாமல் ஓடிச் சென்று தரையில் கிடந்த என் பட்டத்தை மிதித்தேன். அது கிழிந்துவிட்டது. நான் அவளைப் பார்த்தேன். அவள் என் அருகில் மெல்ல வந்தாள். தயக்கமான குரலில், “நான் பட்டம் செஞ்சுகொடுக்கட்டுமா?” என்று கேட்டாள். 

“நீ செய்யுற பட்டம் பறக்குமா?” என்று கேட்டேன்.

“பறக்கும். ஆனா, ஏரோப்பிளைன் உயரத்துக்கெல்லாம் பறக்காது” என்றாள் மெல்லச் சிரித்துக்கொண்டே.  

“எனக்குப் பசிக்குது. மதியத்துக்கு மேல வந்து செஞ்சுகொடு” என்றேன். 

மதியம் நான்கு மணிக்கு மேல் வந்தாள். பட்டத்தைச் செய்யத் தொடங்கினாள். ஒரு பட்டத்தை எப்படி முறையாகவும் மிகவும் நேர்த்தியாகச் செய்ய வேண்டுமோ அப்படிச் செய்தாள் அஞ்சனா. நூலினை இணைத்தாள். மணி ஐந்து. அப்போது அம்மா எங்களிருவருக்கும் காபி கொண்டு வந்தார். 

“அஞ்சனா! இப்ப நாம காபி சாப்பிடலாமா. பட்டத்தை அப்புறமா பறக்க விடுவோம்” என்றேன். இருவரும் காபியை அருந்தினோம். அவள் என்னுடைய அனுமதிக்காகக் காத்திருந்தாள். சற்று நேரம் நான் ஓய்வெடுத்தேன். அவள் என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள். மணி ஐந்தரையாகியது. 

நான் கடிகாரத்தைப் பார்த்துவிட்டு, “சரி, வா! இப்ப போயி பட்டத்தைப் பறக்க விடுவோம்” என்றேன்.

உடனே, அவள் பட்டத்தை எடுத்துக்கொண்டு, தெருவுக்குச் சென்றாள். நான் அவள் பின்னாலேயே சென்றேன். 

அவள் பட்டத்தின் நூலை இழுத்துக்கொண்டு தெருவில் ஓடினாள். நான் நின்றேன். பழக்கப்பட்ட பறவைபோல அது அவள் பின்னாலேயே பறந்து மெல்ல மெல்ல உயரத் தொடங்கியது. அவள் தெருமுனைவரை சென்று, திரும்பி ஓடி வந்தாள். 

பட்டம் பல அடிகள் உயரத்துக்கு எழுந்தது. அவள் என்னைக் கடந்து தெருவின் மறுமுனை வரை ஓடினாள். திரும்பி ஓடி வந்தாள். பட்டம் வளைந்து வளைந்து எதிர்வீட்டு மின்சாரக் கம்பிகளில் தட்டி, நெளிந்து தரையிறங்கியது.

“ஏய்! நாம தெருவில பட்டம்விட வேண்டாம். எங்க வீட்டு மொட்டை மாடிக்குப் போவோம். அங்க இருந்து பட்டம் விட்டா பட்டம் எதுலையும் தட்டி விழாது” என்றேன். 

அவள் பட்டத்தை எடுத்துக்கொண்டு வந்தாள். அம்மா எங்களிருவருக்கும் வாழைப்பழங்களைக் கொண்டுவந்தார். 

“அஞ்சனா! பழம் சாப்பிடுவோம். பட்டத்தை அப்புறமா விடுவோம்” என்றேன். இருவரும் ஆளுக்கொரு வாழைப்பழம் சாப்பிட்டோம். மணி ஆறாகியது. 

நானும் அவளும் என் வீட்டு மொட்டைமாடிக்குச் சென்றோம். அவள் பட்டத்தின் நூலைப் பிடித்துக்கொண்டே மொட்டை மாடியை ஒரு முறை சுற்றி வந்தாள். பட்டம் வானில் எழுந்தது. அப்போது வீசிய காற்று அதற்குப் பேருதவி புரிந்தது. பட்டம் வானில் உயர உயர எழுந்து, நெளிந்து, பறக்கத் தொடங்கியது. நான் வானத்தையே நிமிர்ந்து பார்த்துக் கொண்டிருந்தேன். 

பட்டம் உயர உயர அஞ்சனாவின் கையில் இருந்து நூல் குறையத் தொடங்கியது. இறுதியில் அஞ்சனாவின் விரல்களில் பட்டத்தை இணைத்த நூலின் மறுநுனி மட்டுமே இருந்தது. 

அவள் வானத்தைப் பார்த்துக்கொண்டே என்னிடம், “அவ்வளவுதான். இனிமேல் பட்டம் உயராது. நூல் தீர்ந்துடுச்சு. அவ்வளவுதான்” என்றாள் அஞ்சனா. 

‘அவள் பட்டம் செய்வதற்காகக் கொண்டு வந்திருந்த பொருட்களுள் நூற்கண்டுகளும் இரண்டு இருந்தன’ என்பது, எனக்கு இப்போது நினைவுக்கு வந்தது. உடனே, நான் படிகளில் இறங்கி, வீட்டுக்குள் ஓடினேன். அம்மா அந்த நூற்கண்டை வைத்துப் பூக்களைக் கட்டிக் கொண்டிருந்தார். ‘இப்போது அதைக் கேட்டால் அவர் தரமாட்டார்’ என்பதைப் புரிந்துகொண்டேன். 

மீண்டும் மாடிக்கு ஓடினேன். இருளத் தொடங்கியது. அப்போது பின்வீட்டின் மொட்டைமாடிக்கு அந்தப் பெண் வந்தார். அஞ்சனா வானத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். இரவுப் பறவை போலப் பட்டம் சுறுசுறுப்பாகப் பறந்து கொண்டிருந்தது. 

அந்தப் பெண் மொட்டைமாடியின் தரையில் குத்தவைத்து அமர்ந்து, வானத்தைப் பார்த்து, ஏதோ கைகளை ஆட்டி ஆட்டிப் பேசிக் கொண்டிருந்தார். இருள் கூடியதால் எனக்கு அவரைச் சரிவரத் தெரியவில்லை. மீண்டும் நான் பட்டத்தைப் பார்த்தேன். 

சற்று நேரத்துக்குப் பின்னர் அந்தப் பெண்ணின் அழுகையொலி எங்களுக்குக் கேட்டது. நான் பட்டத்தைப் பார்க்காமல் அந்தப் பெண்ணைப் பார்த்தேன். பட்டம் தன் திசையை மாற்றிக்கொண்டு வளைந்து, பின்வீட்டு மொட்டைமாடிக்கு மேல் பறக்கத் தொடங்கியது.  

நான் இருளுக்குள் உருவம் அழிந்து தெரிந்த அந்தப் பெண்ணையே பார்த்துக் கொண்டிருந்தேன். அஞ்சனா பட்டத்தின் நூலைப் பிடித்துக்கொண்டே, என்னருகில் வந்தாள். 

அந்தப் பெண் வானத்தைப் பார்த்தபடியே இருக்கும் தன் முகத்தைச் சற்றுத் திருப்பி, வானில் பறந்துகொண்டிருந்த பட்டத்தைப் பார்த்தார். நானும் அஞ்சனாவும் அந்தப் பெண்ணையே பார்த்தோம். அந்தப் பெண்ணின் அழுகையொலி நின்றது. அவர் அந்தப் பட்டத்தையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தார்.

 நான் அஞ்சனாவிடம் மெல்லிய குரலில், “இவுங்க யாரு?” என்று கேட்டேன். 

“இவுங்க லஷ்மி அக்கா” என்றாள் மெதுவான குரலில்.

“ஏன் அழுவுறாங்க?” என்று கேட்டேன் மிகவும் மெதுவாக.

அஞ்சனா அமைதியாக இருந்தாள்.

“எதுக்கு எல்லா நாளும் இப்படியே லூசுமாதிரி அழுதுக்கிட்டே இருக்காங்க?” என்று கேட்டேன். 

அஞ்சனா நிமிர்ந்து என் முகத்தைப் பார்த்தாள். அவள் என்னை முறைத்துப் பார்ப்பதுபோல இருந்தது. நான் அதைப் பொருட்படுத்தாமல், “உனக்குத் தெரியாதா? நீ இந்த ஏரியாக்காரிதானே? இதெல்லாம் கேட்டுத் தெரிஞ்சு வச்சிக்க மாட்டியா?” என்று கேட்டேன்.

அஞ்சனாவின் கண்களில் கண்ணீர்த்துளிகள் திரண்டன. நான் அவள் முகத்தை உற்றுப் பார்த்தேன். அவளின் கண்ணீர்த்துளிகள் இருளில் மின்னின. எனக்கு எரிச்சல் வந்தது. ஓங்கி அவளை அறைந்துவிடலாம் போலத்தான் எனக்குத் தோன்றியது. இருந்தாலும் என் சினத்தை அடக்கிக்கொண்டு, “இப்ப எதுக்கு அழறே? நான் கேட்டதுல அப்படியென்ன உனக்கு கஷ்டம் வந்துடுச்சு?” என்று பற்களைக் கடித்துக்கொண்டு, தணிந்த குரலில் கேட்டேன்.

அவள் தன் கையிலிருந்த பட்டத்து நூலைக் கைநழுவவிட்டாள். பட்டம் சுதந்திரமாக, இலக்கற்று வானில் பறக்கத் தொடங்கியது. அவள் வேகமாக மாடிப் படிகளை நோக்கிச் சென்றாள். 

“ஏய்! பதில் சொல்லிட்டுப் போ” என்று நான் கத்தினேன். 

அவள் முதற்படியில் நின்றாள். திரும்பி என்னைப் பார்த்து, கண்ணீருடன் உரத்த குரலில், “லூசுப் பயலே! புருஷன் செத்துட்டா அழத்தானடா செய்வாங்க?” என்று கேட்டாள்.  

– – –

One Reply to “வான்பார்த்தல்”

  1. வணக்கம் .மனிதர்களின் மனங்கள் அவ்வப்போது பிறழ்ந்து விடும் .அவ்வாறு பிறழும் போது பிறரைப் பார்க்கும் பொழுது வெறுப்பு தோன்றும். பேசத் தோன்றாது. லஷ்மி என்ற கதாப்பாத்திரம் இத்தகைய மனநிலையுடன்தான் காணப்படுகிறது. அன்பிற்குரியவர்களை இழத்தல் , பிரிதல் என்பது வருத்தத்திற்குரியது. அன்பினைச் சுமந்த மனமானது அன்பினை இழக்கும்போது பிறழ்தல் மனநிலை ஏற்படுவது இயற்கையே. ஆகவேதான் லஷ்மி தான் பார்க்கும் உயிரற்ற பொருட்களுடன் பேசி தன் ஆற்றாமையைப் போக்கிக் கொள்கிறார். அதை ஒவ்வொரு வரிகளின் வழியாக எங்கள் கண் முன் கொண்டு வந்து விட்டீர்கள். அதுமட்டும் இல்லை சிறுவன் சிறுமி கதாப்பாத்திரங்கள் என் மனத்தில் நீங்கா இடம் பிடித்து விட்டார்கள். அவ்விருவரின் நட்பு அழகானது. இந்தக் கதையை வாசிக்கும் பொழுது சிறுவன் சிறுமி கதாப்பாத்திரங்களாக என்னை நினைக்கவில்லை .ஆனால் அவர்கள் தங்கள் உரையாடல்கள் வழியாகஅந்தக் கதாப்பாத்திரமாக என்னை நினைக்க வைத்துவிட்டார்கள் அவ்விருவர்கள். நமக்குப் பிடித்தமானவருக்காக நமக்குப் பிடித்தமானதை விட்டுக் கொடுப்போம் .அது போல் இந்தச் சிறுமியும் உள்ளாள் .சிறுவனுக்கும் அன்பினைக் கூட கோபமாகத்தான் வெளிக்காட்ட இயல்கிறது. இதுவும் அன்புதான். பேரன்புதான். ஒவ்வொரு கதாப்பாத்திரமும் என் மனத்தில் பசை போல் ஒட்டிக் கொண்டது. தாங்கள் எழுதும் ஒவ்வொரு கதையும் பாராட்டுதலுக்குரியது. நன்றி.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.