தேடியபின் பறப்பது

கல்லூரிக்கு வெளியே நடைசெல்லத் தொடங்கியிருந்தேன். கல்லூரிக்குள் நடைசெல்வது அபத்தம். பின் கேட்டின் வழியாக வெளிவந்து இடது பக்கம் திரும்பியபோதுதான் கவனித்தேன், சூரியன் வலது பக்கம் இறங்கிக்கொண்டிருக்கிறது. மேற்கு நோக்கி நடந்தால் நகரத்திற்குள் சிறிய வானம் மட்டும் மிஞ்சும். கிழக்கில் இன்னும் கொஞ்சம் நகரம் மீதி இருந்தாலும் விரிந்த வானம் தெரிந்தது. வயல்கள் சிறிய மரக்கூட்டங்கள் தென்பட்டன. இருள் இறங்கும் பாதையிலே தொடர்ந்தேன்.

பழைய உடை அணிந்த இளைஞன் ஒருவன் மிகவும் மெதுவாக நடந்துக்கொண்டிருந்தான். அவன் வயதைக் கணிக்க முடியவில்லை. மண்ணில் எதையோ தேடிக்கொண்டே நடக்கிறான். வெகு நேரமாக அவன் தலையை மேலே எடுக்கவேயில்லை. வயல்வெளிகளின் ஓரத்தில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் செல்லும் சாலையின் ஓரத்தில் அவன் தேடுமளவு என்ன இருக்கப்போகிறது. சிறிது நேரம் என் வேகத்தைக் குறைத்து அவனைப் பின்தொடர்ந்தேன். பின், கவனம் சிதறி அவனை முந்தியும் விட்டேன். காத்துநின்று அவனை முன் செல்லவிட்டேன். மண்ணைக் கண்களால் துளாவிக்கொண்டே என்னைத் தாண்டிச் சென்றான். மற்றொரு மனிதன் தன்னைப் பின்தொடர்கிறான் என்ற பிரக்ஞை அவனில் எழவேயில்லை. மனம் பிறழ்ந்தவனாக இருக்கலாம்.

அன்றைய நாளில் அப்படியாக என் கவனம் ஒன்றின்மீது குவிந்து, பின் விலகி, பின் மீண்டும் குவியும் விளையாட்டைச் செய்தது. அடுத்த ஓரிரு நாள்களில் உஜ்ஜைனுக்குக் கிளம்பினோம். லாக்டவுன் காலம். என்ன காலமாக இருந்தால் என்ன… உஜ்ஜைனிலோ காசியிலோ கூட்டமில்லாமலா? நான் செய்திகள் பார்ப்பதை முற்றுமாகத் துறந்திருந்தேன். கோவில் திறந்தாகிவிட்டது என்ற செய்தி மட்டும் வந்தடைந்திருந்தது. உஜ்ஜைன் தெருக்களில் ஒரு ஆளில்லை. மாடுகள், ஆடுகள், நாய்கள், சிறு குழந்தைகள் மட்டும். போலீஸ் ஜீப்புகள் ஒன்றிரண்டு தென்பட்டன. ஒவ்வொரு நகரத்திலும் சில மக்களேனும் அற்பப் பயத்திற்கு ஆளாகவில்லை என்பது மகிழ்ச்சியளித்தது. அவர்கள் வெளியே வந்தால் போலீஸார் துன்புறுத்தலுக்கு ஆளாக நேரும், ஆனால் குழந்தைகளை ஒன்றும் செய்யமாட்டார்கள் என்று கணித்து வெளியே விட்டிருக்கவேண்டும். புனித நகரத்தில் வரலாறு உயிர்பெற்றதைப்போல் இருந்தது. ஆற்றில் நீர் செழித்து ஓட மரங்கள் பச்சை உதிர்க்கத் தெருக்களில் குழந்தைகளும் விலங்குகளும் மட்டும். குப்பைகள்கூட இல்லை. பெரியவர்களே இல்லாத குழந்தைகள் ராஜ்யம் அமைந்த கற்பனை நகரம்.

கோவில்களை ஒவ்வொன்றாகப் பார்த்தபிறகு ஷிப்ரா நதியை அடைந்தோம். நதிக்குள் இறங்க ஆங்காங்கே நகரம் முழுவதும் படித்துறைகள் இருக்கின்றன. ராம் காட்-ல் இறங்கி நின்றுப் பார்த்தோம். சிறுவர்கள் மேலிருந்து குதித்துக் குளிக்க அங்கு உற்சாகம் நிரம்பியிருந்தது. குழந்தைக் கைகளால் தண்ணீர் மேலே அள்ளித் தெளிக்கப்பட்டுக்கொண்டே இருந்தது.

சின்னப் பறவைகள் ஒன்றிரண்டு நீருக்குள்ளிருந்து படிகளினூடாக வளர்ந்திருந்த செடிகளின் ஓரம் நின்று மஞ்சள் நிறமான மிகச் சிறிய கனிகளைக் கொரித்துக்கொண்டிருந்தன. உண்டபிறகு ஒவ்வொரு கால்களாக எடுத்துவைத்துப் படிகளில் இறங்கி நதிநீர் ஆரம்பிக்கும் இடத்தில் கால்வைத்து வானில் பறந்தன. நாங்களும் நீருக்குள் இறங்கினோம். சிறுவர்கள் ஒருவரை ஒருவர் அழைத்துக்கொண்டும் சிரித்துக்கொண்டும் நீரைச் சிதறடித்தார்கள். நிறைவுடன் குளித்து முடித்தோம்.

இரவு தங்குவோம் என்று நான் சொல்ல மற்றொருவர் இன்றே திரும்ப வேண்டும் என்று சொல்ல இருவரும் இரு பக்கமும் இழுக்கும் விளையாட்டைச் செய்திருந்தோம். போபாலை நோக்கிப் பயணிக்கத் தொடங்கிய சற்று நேரத்தில் என் வண்டியில் ஒரு சிக்கல். வேகமெடுக்கும்போது முன்செல்ல மறுப்பதுபோல் தயங்கியது. அதையும் மீறி வேகத்தை முறுக்கினால் ஒருவித முனகல் சத்தத்துடன் கனத்தை இழுத்துச் செல்வதுபோல் செல்லமுயன்றது. வாகனம் வேகம் காட்ட மறுத்தது ஒரு குறியீடுபோல் அமைந்தது. ஒரு மெக்கானிக் ஷெட்டில் வண்டியை விட்டோம். பிரேக் இறுக்கமடைந்திருக்கலாமென்று தளர்வாக்கி விட்டார்கள். அது மட்டுமின்றி வேறு பிரச்சனைகள் இருக்கலாம் வண்டியைப் பிரித்துப் பார்க்கவேண்டும் என்றார்கள்.

இளம் மனிதர்களுக்கு வரும் புதிய உடல் சிக்கல்களில் அறுபது எழுபது சதவீதம் தானாகச் சரியாகக்கூடியவை. குழந்தைகளுக்கோ முதியவருக்கோ அப்படி அன்று. என் வாகனமோ முதியதாகிவிட்டது. முதியவருக்குக் காலக்கெடு சொல்லும் மருத்துவரை நம்பலாம். மற்றவரை நம்பக்கூடாது. ஒரே விதிதான். என் வாகனத்தின் போபால் நகர மருத்துவனைப் ஃபோனில் அழைத்தேன். வரும்முன் அவனிடம் கான்பித்திருந்த்தேன். அவனுக்கு அதன் கடைசிக் காலத்தைப் பற்றித் தெரியும்.

“மெதுவாக நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் போபாலை நோக்கி வா. எப்படியும் நம் நகரம் வந்துவிடும். எனக்கு நம்பிக்கை இருக்கிறது,” என்றான்.

கூடவே இன்னொன்றும் சொன்னான், “பாதியில் நின்றுவிட்டால். நான் என் வண்டியில் வந்து அழைத்து செல்கிறேன்.”

விழித்துவிட்டு நான் இருக்கும் இடத்தை அவனுக்கு நினைவுபடுத்தினேன். “நான் உஜ்ஜைன்ல இருக்கேன். போபாலிலிருந்து இருநூறு கிலோமீட்டர்.”

“சர்தான். இருநூறு!” என்றான்.

வண்டி எங்காவுது மூச்சு முட்டி இறந்துவிட்டால் சடங்கைச் செய்து ஊர்தியில் ஏற்றிப் போபாலுக்குக் கொண்டுவந்து கொள்ளலாம். இனி யோசிக்க என்ன இருக்கிறது. மறுபடி பயணம். நன்றாக இருட்டிவிட்டது. பயணத்தை மீண்டும் தடுக்க மழை வந்தது. பெருமழை. ஒதுங்கி நின்றோம். மழை ஓய்ந்தபோது மீண்டும் பயணம். நள்ளிரவாகிவிட்டது. ஒரு சிறிய உணவகத்தில் உணவு உண்டோம். அருகிலிருக்கும் கல்லூரியின் தமிழ் மாணவர்கள் அங்கு வருவார்கள் என்பதால் பரிமாறியவன் அவனுக்கு வைத்திருந்த மீன் துண்டுகளையும் தந்தான். அப்படியாக ஆங்காங்கே மழைக்கு நின்று போபால் அருகில் வரை வந்துவிட்டோம். அப்போது மழை பேருருவம் எடுத்துக் கொட்டியது. ஒரு பெரிய சாலை விபத்தை வேறு பார்த்திருந்தோம். ஓரங்கட்டி சின்னக் கடை போன்ற பகுதியில் நிறுத்தினோம்.

அரசாங்க ஆணையின் காலம். இரவு நேரம் கடை திறந்திருக்கப்படவில்லை. உள்ளே இரண்டு மர பெஞ்சுகள் கிடந்தன. ஒன்றில் முதியவர் ஒருவர் படுத்திருந்தார். பஞ்சாபி. வயது எழுபதுக்குமேல் இருக்கும். மழை நிற்கும்வரை உள்ளே இருந்துகொள்ளலாமா என்று கேட்டோம். சரி என்றார். மழையில் நனைந்திருந்ததால் குளிரில் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. கீழே கூழாங்கற்கள் கிடக்க மேலே ஷீட்களாலும் தகரங்களாலும் போடப்பட்ட கூரை. முன் பக்கமும் பின்பக்கமும் திறந்த வெளி. நாங்கள் மற்றொரு கட்டிலில் அமர்ந்தோம். பின் தூங்க ஆரம்பித்தோம். மழை விடாமல் கொட்டிக்கொண்டிருந்தது. காலை நாலு மணி அளவில் முதியவர் எழுந்தமர்ந்து கஞ்சாவோ என்னவோ மெதுவாகச் சுருட்டிப் பற்றவைத்தார். அதை முழுவதும் இழுத்தானபின்பு எழுந்தார். முண்டாசை அவிழ்த்துக் கட்டினார். வெளியில் போய்விட்டு வந்து அடுப்பை மூட்டினார். சிறிது நேரத்தில் பெரிய பாத்திரம் நிறைய போஹா தயாராகியது. டீ யும்.

ஐந்து மணிக்கு எழுந்தோம். வெளிச்சம் வந்தபோது தெரிந்தது அந்தக் கடை ஒரு கிராமத்திற்குப் பிரியும் சாலையின் நுழைவாயிலில் இருந்தது.எழுந்தமர்ந்து டீ சாப்பிட்டோம். கிராமத்திற்குள்ளிருந்து வெளியேயும் வெளியிலிருந்து உள்ளேயும் மக்கள் ஒவ்வொருவராக நடமாடத் தொடங்கினர். சிலர் கிழவருக்கு வணக்கம் வைத்தனர். அவரும் பதிலுக்கு உற்சாக வணக்கம் வைத்தார். ஒருவன் மெதுவாக நடந்துவந்தான். சாலையை மட்டுமே நோக்கும் பார்வை. அதே இளைஞன். ஆச்சரியம். டீ வைக்கப்பட்டது. மண்ணை நோக்கிக்கொண்டே பரபரத்த கண்களுடன் குடித்தான். குனிந்த தலையுடன் வந்த வழியே திரும்பிவிட்டான். காசு எதுவும் கொடுக்கவில்லை. முதியவரும் நாங்களும் அவனையே பார்த்தோம்.

அமைதியைக் கலைத்துக் கடையைப்பற்றிப் பேச்சுக் கொடுத்தோம். இருபது வருடங்களாகக் கடை வைத்திருப்பதாகச் சொன்னார். குடும்பத்தைப் பற்றிச் சொன்னார்.

“இவன் யார்? ” என்று அவனை நோக்கிக் கையை நீட்டினேன்.

“யாரென்று தெரியாது. ரொம்பப் பேச மாட்டான். நடந்து வருவான். நடந்து செல்வான்” என்றார்.

“வெகு தூரத்தில் இருந்து வருவதுபோல் தெரிகிறதே. நகரத்திற்குள் இவனை கண்டிருக்கிறேனே? “

“இருக்கலாம்… தெரியவில்லை.”

“மண்ணில் எதையோ தேடுகிறானே? “

“பறவைக்கு வானம் இருக்கிறது… மனிதனுக்கு மண்தானே இருக்கிறது…” என்று சொல்லிச் சிரித்தார்.

“அப்படியிருந்தாலும் மண்ணில் தொடர்ந்து தேட என்ன இருக்கிறது?”

அவர் அந்தக் கேள்வியால் சீண்டப்பட்டிருக்க வேண்டும்.

“தேடலாம். விலங்குகள் அனைத்தும் மண்ணில் தேடுபவைதான். சிறு காலமேனும் எதையாவது தீவிரமாகத் தேடாத மனம் பெரிதாக எதை அடைந்திருக்கும்? தேடிக்கொண்டே இருக்கும் மனநிலையைப் பற்றித்தான் என்னால் புரிந்து கொள்ளமுடியவில்லை” என்று தூரத்தில் மறையும் இளைஞனைப் பார்த்துக்கொண்டே சொன்னார்.

“என்னாலும்தான்.”

தேடிக்கொண்டே இருப்பவர் செய்வதற்கென்று செயல்கள் உண்டு. அகத்தில் விரிபவை அவை. இவனது கவனம் புறத்தில் மட்டும் பிரிக்கமுடியாத அளவிற்கு ஒட்டியபடி நிற்கிறது.

சில மனம் பிறழ்ந்தவர்களின் கவனம் புற உலகின் ஏதோ ஒன்றின்மீது மட்டும் குவிந்து நிற்கிறது. இவனைப் பொருத்தவரையில் அது மண். மற்றொருவனுக்கு அது ஆகாயம். இன்னொருவனுக்குக் கிருமி. என்றோ தொலைத்த பொருளை தினசரி சாலையில் டார்ச் அடிச்சுத் தேடும் ஆளைப் பார்த்திருக்கிறேன். புனையப்பட்ட வேற்றுக் கிரக வாசிகளை ஆகாயத்தில் தேடும் ஆளைப் பார்த்திருக்கிறேன். கிருமிகளைத் தேடும் ஆட்களுக்கும் பஞ்சமில்லை. உணவு, உடல், கார், வீடு, நோய் என்று இந்தப் பட்டியலை நீட்ட விரும்புவதையும் தடுக்க முடியவில்லை.

கிழவரிடம் விடைபெற்றுக் கிளம்பி வீட்டுக்கு வந்து படுக்கையில் படுத்துக் கண்களை மூடியபோது உஜ்ஜைன் படித்துறையில் பார்த்த பறவையின் உருவம் தெரிந்தது.

“மண்ணில் தேடிக்கொண்டே இருப்பது அர்த்தமற்றது. அவ்வப்போது மண்ணில் இறங்கித் தேடியபின் வானில் பறந்துவிட வேண்டும்,” என்று தோன்றியது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.