புத்தர் சிறு ஒலியாகவும் இருந்திருப்பார்

ஜீவன் பென்னி

1.
தன் மடியிலிருந்து துவங்கும் ஒரு படுகொலையை
பார்த்துக்கொண்டிருக்கிறார் புத்தர்.
எல்லாம் முடிந்தவுடன்
தன் கண்களை இறுக மூடி
மீண்டும் தியானத்தைத் துவங்குகிறார்.
துண்டு நிலமொன்று காலியாகும் சிறு ஒலியில்
தன்னிருப்பிடத்திலிருந்து வெளியேறும் முதல் தட்டான் பூச்சியை
நினைத்து நினைத்து
மிகுந்த சந்தோசப்பட்டுக்கொள்கிறா ரவர்.
அவ்வளவு பற்றற்ற உடலிலிருந்து
மகிழ்ச்சி உதிர்வததென்பது மிகப்பிரளயமானது தான்.

2.
மிகப்பெரிய பாறையிலிருக்கும் ஒரு தனித்த இலை தான்
புத்தர்.
தன் வாழ்வில் எப்போதும் பார்த்துக்கொண்டிருக்கும் அப்பாறைகளிலிருந்தே
தான் துவங்கிக்கொண்டதாக
மிகத் தீவிரமாக சொல்லிக்கொண்டிருக்கிறா ரவர்.
காலம் துவங்குவற்கு முன்பிருந்தத் தன்னைத்
தேடத் துவங்கும் போது
அவ்வளவு பெரிய வெறுமையில்,
புத்தருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை!
சிறிய காகிதத் துண்டுகளை
இன்னும் மிகச்சிறியதாக வெட்டத்துவங்குகிறார்.
தன்னிலிருந்து எல்லாவற்றையும் பறக்க விடவேண்டு மவருக்கு.
சிறிய சருகுகளிடம் உங்களைக் கொண்டு சேர்க்கும் பாதைகள் தான்
புத்தம்.

3.
மிக எளிய பாதையொன்றில் துவங்கும் அவர் வாழ்வை
நீங்கள் கண்டுபிடிக்க முடியாது.
காலியான அவரின் முதல் உலகம்
தன் முதல் நாளில் கொஞ்சம் பதற்றமாகயிருந்தது
பிறகு எல்லாவற்றையும் தூக்கியெறிந்து
தன்னைத்தானே சரிசெய்தும் கொண்ட தது.
எவ்வளவு மறந்தும் அந்த உலகத்தின் வலி
ஒரு நட்சத்திரம் போல் மிகத்தூரத்திலிருந்து பிரகாசிக்கிறது.
ஒரு அலையைப் போல வந்து வந்து திரும்பிக்கொண்டிருக்கின்ற
சின்ன வெறுப்பொன்றை
கழட்டித் தூக்கியெறிந்து,
இரைச்சல் மிகுந்த இந்நகரில்
சிறு ஒலியில் உங்களை கடந்து செல்பவர் தான்
புத்தர்.

4.
சிறு கீறலின் நிம்மதியின்மையில்
ஒரு அர்த்தம் துவங்கும் போது
புத்தராதல் மிக எளிது,
ஆனால்
தான்தான் புத்தரென்பதை உணர்ந்து கொள்ளுதல்
மிகக் கடினம்.
அந்த அலை ஒரு சிப்பியை ஒதுக்கியிருக்கிறது
அந்த நேரம் அதை மிகத் தனிமையாக்கியிருக்கிறது.

5.
தான் படர்ந்திருக்கும் நிலத்திலிருந்து துவங்கும் பாடலை
பாடிக்கொண்டிருக்கிறார் புத்தர்.
எப்போதும் அவற்றிற்கு பழகியிருந்த அந்தக் கூட்டம்
தங்களது காயங்களிலிருந்து வலியைத் தனியாகப்
பிரித்துக்கொள்ள முயன்றுகொண்டிருக்கின்றனர்.
அவரோ
ஒவ்வொருவரின் அன்பும் மற்றொருவரைத் தாங்கிப் பிடித்திருக்கிறது
மேலும்
உங்களுக்கான ஒளி உங்களிடம் தானிருக்கிறது என்கிறார்.
அவர்களது மெழுகுவர்த்தியில் எரிந்து கொண்டிருக்கும்
கடினமிகுந்த இவ்வர்த்தங்களைத்
தன் கைகளில் கொண்டுவந்து காண்பிக்கும் போது
கூட்டம் பெரும்பாலும் கலைந்து விட்டிருந்தது.
சிறு அதிசயமொன்றைத் தவறவிடும் தருணம்
அங்கிருந்து தான் துவங்கிக்கொள்கிறது.

6.
தன்னிலிருந்து தவறும் சிறு பொருளொன்றை
அங்கேயே விட்டுச்செல்கிறார் புத்தர்.
உங்களிடமிருந்து வெளியேறிக்கொண்டிருப்பவையே
உங்களின் ஞாபகங்களாக மாறிக்கொள்கின்றன.
கடந்து போய்கொண்டிருப்பதுவே நித்தியத்துவம்.
குளத்தில் மிதக்கும் இலை கரையைத் தேடிக்கொண்டிருப்பதில்லை.

7.
சிறு ஒளியில் தன்னுலகை அனுபவித்துக்கொண்டிருக்கும்
அந்த மின்மினியைத் தேடிவரும் புத்தர்
தன் கைகளில் வந்தமர்ந்திடாத அப்பூச்சியின் சுதந்திரம் மீது
மிகுந்த பற்றுக்கொள்கிறார்.
மிகக் கவனமாக அவ்வனத்திலிருந்து தான் வெளியேறுவதற்கான
பாதைகளை முழுவதுமாக அடைத்து விட்டிருந்த அவர்,
தன் அற்புதங்களுக்கு முன்பு எப்போதும் ஒரு மின்மினியை பறக்க விடுகிறார்
அது தன் சிறு ஒளியில் உங்களை கூட்டிச்செல்கிறது.
அவ்வுலகம்,
சின்ன அரங்குகளில் பேசிக்கொண்டிருக்கும் வார்த்தைகளல்ல
நிச்சயமாக நீ சுமந்து கொண்டிருக்கும் பெரும் ஞானத்தின்
சிறு எடை போலானது.

2 Replies to “புத்தர் சிறு ஒலியாகவும் இருந்திருப்பார்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.