தானுந்து பேட்டரி மறுசுழற்சியும் காரீய நஞ்சேற்றமும்

கோரா
KEBASEN, Indonesia – A woman sifts the ash left over from the metal smelting process to retrieve small pieces of lead and aluminum for later resale back to the smelter.

கண்ணுக்குத் தெரியாமல், உணர்வுகளும் அறியாமல் காரீயம் என்ற நச்சு நம் உடலில் கொஞ்சம் கொஞ்சமாகச் சேர்ந்து ரத்தத்தை விஷமாக்கிவரும் அதிர்ச்சித் தகவலை உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்தியா முழுதும் நடத்தப்பட்ட ஆய்வில், பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட 733 பேரில் 23 விழுக்காட்டினரின் ரத்தத்தில் காரீய நச்சு அதிகரித்து அதனால் பல உடல் உபாதைகள் ஏற்பட்டு வருவதை உலக சுகாதார அமைப்பு கண்டறிந்துள்ளது. உடலில் கலந்துள்ள காரீயம் அளவுக்குமேல் அதிகரிக்கும்போது உயிரிழப்பை ஏற்படுத்திவிடும். அதற்குமுன் மூளை, நரம்பு மண்டலம் போன்றவற்றைத் தாக்கி, கோமா நிலையில் ஆழ்த்திவிடும். பாதிப்பு ஏற்பட்டபின்தான் காரீயம் அதிகம் இருந்தது தெரிய வரும். காப்பாற்றும் காலம் கடந்துபோயிருக்கும்.

அமெரிக்காவின் yale (ஏல்) பல்கலையின் சூழல் பள்ளி பதிப்பித்துள்ள “Getting the Lead out: Why Battery Recycling Is a Global Health Hazard” என்னும் கட்டுரை, தற்போது பெருகிவரும் தானுந்து வண்டிகளின் மின்கல அடுக்குகளில் இருந்து மறுசுழற்சிக்கு காரீயம் மீட்டெடுக்கும் தொழில்பற்றிப் பேசுகிறது. முறைப்படுத்தப்படாத இந்த செயல்பாடுகள் பல உயிர்களுக்கு, அவர்களே அறியாமல் சாவுமணி அடித்துக் கொண்டிருப்பதுதான் மகத்தான சோகம்.

சுட்டி: https://e360.yale.edu/features/getting-the-lead-out-why-battery-recycling-is-a-global-health-hazard

மின்கல அடுக்கு மறுசுழற்சி ஆலையில் பணியாற்றும் ஏழைத் தாய் தன் மழலைச் செல்வத்துக்கு பாலூட்டும்போது அந்தப் பிஞ்சுக் குழந்தைக்குக் கிடைப்பது நஞ்சு கலந்த பால் என்று அறிந்திருக்கவில்லை. தன் குழந்தைக்கு மலேரியா என்று நினைத்து மருத்துவரிடம் காட்டினாள். தாய்ப்பாலில் காரீய நஞ்சேற்றம் (lead poisoning) ஆபத்தான அளவை எட்டிவிட்டதென்றும் இது தொடர்ந்தால் குழந்தையின் மூளை மற்றும் நரம்பு வளர்ச்சி குறைந்து அது அவளுக்கு வாழ்வின் சுமையாகிவிடும் என்றும் மருத்துவர் சொன்னதைக் கேட்ட தாய் வேலைக்கு முழுக்குப் போட்டுவிட்டு இதைப் போன்ற தொழில்களுக்கு எதிரான இயக்கத்தைத் தொடங்கி ஆலைக்கு மூடுவிழா நிகழ்த்திக் காட்டினாள். இது நடந்தது கென்யாவின் மொம்பாசாவில்.

ஆப்பிரிக்கா, செனிகல் நகரின் டகர் புறநகரில் இருந்த மின்கல அடுக்கு மறுசுழற்சி ஆலையின் தாக்கத்தால் மூன்று மாதங்களில் குறைந்த பட்சம் 18 குழந்தைகள் மூளை நோய் தாக்கி உயிரிழந்தார்கள். ஆலையைச் சுற்றியிருந்த காரீயம் கலந்த மண்ணை ஜலித்துக் கிடைத்த காரீயத்தை விற்றுப் பிழைத்த குடும்பங்களில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் நஞ்சேற்றம் பெற்றுவிட்டனர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகர் அருகில் ஒரு மூடப்பட்ட பேட்டரி மறுசுழற்சி ஆலையைச் சுற்றி 3.4 மைல் தூரத்துக்குள் வீடுகள், பள்ளிகள் மற்றும் பூங்கா ஆகியஅனைத்தும் பல நாள்கள் மாசுற்றுக் கிடந்தன. ஏனெனில் திவாலாகிவிட்ட ஆலையின் முதலாளி துப்புரவுத் தொகை $650 மில்லியனைச் செலுத்த மறுத்துவிட்டார்.

தற்போது அமெரிக்காவில் சுற்றுச்சூழல் விதிகள் கடுமையாக்கப்பட்டதால், கிட்டத்தட்ட ஆண்டுக்கு 5 லட்சம் டன் அமெரிக்கக் கார் பேட்டரிகள் சுமையுந்துகள் மூலம் மறுசுழற்சிக்காக மெக்ஸிகோவுக்கு அனுப்பப்படுகின்றன. மெக்ஸிகோவின் உருக்காலைகள் ஆபத்தானவை; பலவீனமான கட்டுப்பாடுகளைக் கொண்டவை.

உலகின் பல்வேறு நாடுகளில் செய்யப்படும் காரீய பேட்டரி மறுசுழற்சிகள் அனைத்தும் தீங்கு விளைவிப்பவை, குறிப்பாகக் குழந்தைகளுக்கு. ஆனால் இந்த மிகப் பெரிய லாபகரமான தொழில் உலகளாவிய அவலமாகிவிட்டதைப் பலரும் கேள்விப்பட்டதே இல்லை.

தற்போது காரீயம் கலக்காத (unleaded) பெட்ரோல் பயன்பாட்டுக்கு வந்தபின் கோடிக்கணக்கான பயனர்களின் ரத்தக் காரீய அளவு சற்று குறையத்தொடங்கியது. ஆனால் வாகனத்தைக் கிளப்பும் ஒவ்வொரு முறையும் பயன்படுகிற பாட்டரியின் காரீயம் மட்டும் யார் கவனத்தையும் ஈர்க்கவில்லை.

காரீயம் கிட்டத்தட்ட 100% மறுசுழற்சி செய்யப்படுகிறது. காரீயப் பயன்பாட்டில் 85% தானுந்து பாட்டரிக்குப் போகிறது. வலுவிழந்த பேட்டரிகளில் மீட்டெடுக்கப்படும் 99% காரீயம் புது பேட்டரிகளில் மறுசுழற்சிக்கு பயன்படுகிறது. உபயோகமற்ற பேட்டரி சேகரிப்பு, உடைப்பு, காரீய மீட்டெடுப்பு, உருக்கி எடுத்தல் ஆகியவை மிக லாபகரமான குடிசைத் தொழில்களாக உலகெங்கும் பரவியிருக்கின்றன. பல நாடுகளில் சாதாரணத் தொழில்முனைவோரின் உக்கிரமான போட்டியால் முறையான தொழில் நசித்தது.

காரீயம் எளிதில் சுவாசம் அல்லது வாய் மூலமாக உடலினுள் சென்று ரத்த ஓட்டத்தில் கலந்து உணவுப் பாதை மற்றும் மூளையில் உபாதைகளை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் அறிந்திருக்கின்றனர். சிறிய அளவு காரீயம்கூட இளம் குழந்தைகளின் மூளை வளர்ச்சி, IQ, கவனம் ஆகியவற்றின் குறைபாடுகளுக்குக் காரணமாகிவிடும். காரீயம் ஒரு வலிய நரம்பு நச்சு (neurotoxin). சில நேரங்களில் வன்முறையைத் தூண்டிவிடவும்கூடும்.

மறுசுழற்சி ஆலைகளைச் சுற்றிலும் நிலம் மாசடைந்திருப்பது உறுதிசெய்யப் பட்டுள்ளது. மாசுற்ற மண்ணில் காரீய மட்டம் ஒரு லட்சத்தில் 2,320 பங்கு. (இயற்கை மட்டத்தைவிட 1,000 மடங்கு அதிகம்) இந்தியாவில் காரீய விதிமுறைகள் வலுவிழந்தும் நடைமுறைப்படுத்துதல் மோசமாகவும் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தியாவில் 90% காரீய பேட்டரிகள் முறைப்படுத்தப்படாத சிறுதொழில் பட்டறைகளில் மறுசுழற்சி செய்யப்படுகின்றன.

யுனிசெப் (UNICEF)-ன் அறிக்கை, உலகின் குழந்தைகளில் மூன்றில் ஒரு பங்கு காரீய நஞ்சேற்றம் பெற்றிருக்கிறார்கள் என்கிறது. இது சற்று மிகைப்படுத்தப்பட்டதாக இருந்தாலும் காரீய நஞ்சேற்றத்தின் கொடிய விளைவுகளைப் பெரும்பாலான நாடுகள் புரிந்துகொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. ஆயினும் இது மிகப் பெரிய பிரச்னை.

“கொள்கை வகுப்பாளர் மூலம் தீர்க்க முயற்சிப்பது மந்தமான நடைமுறை; உலகளாவிய நிதி திரட்டி அரசாங்கங்களிடம் கொடுத்து, பயன்படுத்தப்பட்ட பேட்டரி வாங்குவதற்கு ஊக்கத் தொகையாக முறைசார்ந்த துறைக்கு அளிக்கச் செய்தால் முறைசாரா மறுசுழற்சி குறைந்துவிடும். பிரேசில் இந்த வழியைப் பின்பற்றியதால், அங்கு 80% முறைசாரா அமைப்புகள் மூடப்பட்டன” என்கிறார் ப்யூர் எர்த் அமைப்பைச் சேர்ந்த ஃபுல்லெர்.

Series Navigation<< புலம்பெயரும் பவளப்பாறைகள்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.