வெந்து தணியும் நினைவு

ம.செ.

வீட்டின் முன் ஒரே கூட்டமாக இருந்தது. அவன் வந்து ஒரு மணி நேரத்திற்கும் மேலாக ஆகிவிட்டிருந்தது. தெரிந்த முகங்கள் யாருமில்லை என்பதே அவனுக்கு ஆறுதலாய் இருந்தது. வீட்டின் முன் ஷாமியானாபோட்டு முகப்பை மறைத்திருந்தார்கள். சற்று நடந்து சில வீடுகள் தள்ளிநின்று வீட்டு முகப்பைப் பார்க்க முயன்றான். நிறைய வாகனங்கள் வரிசையில் அல்லாமல் அங்கொன்றும் இங்கொன்றுமாய் நின்றிருந்தன. சற்று தூரத்தில் கூட்டமாய்ச் சில இளைஞர்களும் பெரியவர்களும் கையில் மாலையோடு வர, பறை அடிப்பவர்கள் ஓடோடிப்போய் அவர்களை பறை இசைத்து அழைத்து வந்துகொண்டிருந்தார்கள்.

பக்கத்து வீட்டின் சுவரோரம் நிழலாக இருக்க அமர்வதற்காக அந்த இடத்தை நோக்கி நடந்தான். சில அடிகள் பின்னுக்கு நடந்து மீண்டும் வீட்டு முகப்பைப் பார்த்தான்.வீட்டின் முகப்பு மாறவில்லை என்பதை ஒருக்கணம் மனதுக்குள் உறுதி செய்துகொண்டான். அப்படியே அந்தச் சேரை இழுத்துப்போட்டு வெயில்படாமல் நிழலில் அமர்ந்துகொண்டான். அங்கே அவன் அமர்ந்திருப்பது யாருக்கும் தொந்திரவில்லாமல் பார்த்துக்கொண்டான்.

வைத்திதான் நேற்று இரவு போன் அவனுக்குப் ஃபோன் செய்து தகவல் சொன்னான்.

“பேசலாமா…..”

“சொல்லு…..”

“அம்மா இறந்துட்டாங்க…..”

“எப்போ…..”

“இப்பதான் ரெண்டு மணி நேரத்துக்கு முன்னாடி….”

“எப்படி…..”

“காலையில் ஆஸ்பிட்டலுக்கு செக்கப்புக்கு போனாங்களாம். வீட்டுக்கு வந்தப்புறம் லேசா நெஞ்ச வலிக்கிற மாதிரி இருக்குதுன்னு சொன்னாங்கன்னு திரும்பவும் ஆஸ்பிட்டலுக்கு கூட்டிட்டு போயிருக்காங்களாம். போற வழியிலயே மூச்சு நின்னுட்டதா சொன்னாங்க….”

“…………………”

“வர்றியா….”

“ம்… எங்க இருக்காங்கன்னு மட்டும் கேட்டு சொல்லு.… நா, காலையில வந்துடறேன்.… ஆமா, நீ எங்க இருக்க…..”

“நா டெல்லியில இருக்கேன்… வந்து நாலு மணி நேரமாகுது.… வர்றது கொஞ்சம் கஷ்டம்தான்… சாரி.… கோச்சுக்காத….”

“பரவால்ல.… நீ வேலய பாரு… நா போய்க்கறேன்.… எங்கன்னு மட்டும் கரெக்ட் அட்ரஸ் அனுப்பு.… வச்சிடறேன்.…”

உடனே தன் பி.ஏ.வை அழைத்து சென்னைக்கு அவசரமாக டிக்கெட் போடச்சொல்லிவிட்டு இரண்டு நாள்களுக்கு முக்கிய அலுவல்களை ஒதுக்கிவைக்கும்படி சொன்னது நினைவுக்கு வந்தது. நல்லவேளை மனைவி மணிமேகலை வேலை விஷ‌யமாகப் பாட்னாவில் இருப்பது நல்லதாகப் போய்விட்டது. அவளுக்கு அழைத்து அவசரமாகத் தான் சென்னை போவதாகச் சொன்னபோது ஏன் என்று கேட்டாள். வந்து சொல்கிறேன் என்று சொல்லிவிட்டான். அவளும் அதற்குப் பிறகு எதுவும் கேட்டுக்கொள்ளவில்லை.

அடுத்த ஒரு மணி நேரத்தில் கயா ஏர்போர்ட்டில் பிளைட் பிடித்து வாரணாசி வந்து மாறி சென்னையை அடைந்தபோது அதிகாலை ஆகிவிட்டிருந்தது. ஹோட்டலில் ரூம் போட்டுவிட்டு அப்படியே ஒரு பெரிய மாலையை வாங்கிக்கொண்டு ஆட்டோ பிடித்து வர மணி ஏழாகிவிட்டிருந்தது.

அம்மா சடலமாக இருந்தாள். அவன் வந்தது தெரியாமல் அமைதியாக உறங்கிக்கொண்டிருந்தாள்.தன்னை யாரேனும் அடையாளம் கண்டுகொள்கிறார்களோ என்னும் பதைபதைப்பு அந்த நேரத்திலும் எழுந்ததை அவனால் உணரமுடிந்தது. அப்படியே சில‌ நிமிடங்கள் அந்த ஃபிரீசர் பெட்டிக்குள் பட்டுப்புடவை போர்த்திய அம்மாவின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தான். அவனால் அம்மா என்று உரிமையாய்க் கதறி அழமுடியவில்லை.

அமர்ந்திருந்தவன் கண்கள் சொருகின. அயற்சியும் நினைவும் சூறாவளியாய்ச் சுழன்றன. ஆனாலும் தூங்காமல் இருப்பதற்கு முயன்றான். அம்மா எனும் அந்த மந்திரத்தை மீண்டும் மீண்டும் உச்சரித்துத் தனக்குள் புதைந்துபோன அந்த ரகசியத்தைத் தேடியெடுக்க எண்ணியபோது ஒருவிதத் தயக்கமும் அச்சமும் அவனை ஆட்கொண்டது.

மறுநாள் காலை அவன் அந்த வீட்டிலிருந்து புறப்பட்டாக வேண்டும். அவனும் அவன் அம்மாவும் அந்த மொட்டைமாடியில் இருந்த படியில் அமர்ந்திருந்தார்கள். நிலா மட்டும் எப்பொழுதும்போல் ஒளிர்ந்துகொண்டிருந்தது. அம்மா மடியில் தலை கவிழ்த்திருந்தான். கண்கள் நனைந்திருந்தன. அதிகாலையிலேயே அவன் புறப்பட்டுவிட வேண்டும். இந்த அந்நியோன்யம் இன்னொருமுறை இனி கிடைக்குமா என்பது இருவருக்குமே தெரியவில்லை. ஏழாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பிற்கு மாறுதலாகிவிட்டிருந்தான். மறுநாளிலிருந்து ஹாஸ்டல் வாழ்க்கை. கொஞ்சம் கொஞ்சமாய்ப் பேசி அவன் மனதைக் கரைத்துவிட்டிருந்தார்கள். அம்மாவின் கண்களும் கலங்கியிருந்தன. தொண்டையைக் கனைத்து அம்மாதான் பேசினாள்.

“கண்ணா, அம்மாவப் பிரியறமேன்னு கஷ்டப்படாத.… சமத்தா இரு.… நீ எங்க இருந்தாலும் அம்மா உன்னதான் நெனச்சிக்கிட்டிருப்பேன். நேரம் கெடைக்கிறப்ப வந்து பாக்குறேன். கவலப்படாம இரு. டெய்லி உன் நெனப்பாவே இருப்பேன். இந்தப் பிரிவு நமக்குள்ள தற்காலிகம்தான். நா சொல்லி புரிய வைக்குறேன். லீவு விட்டதும் உன்ன வந்து கூட்டிட்டு வந்துடறேன். என் விதி உன்ன இப்டிப் பிரிஞ்சிருக்கணும்னு இருக்கு. “என்ன மன்னிச்சிடுடா.…” சொன்னபோது அழுதேவிட்டாள்.

அவன் எதுவும் பேசவில்லை. இன்னும் அழுத்தமாக மடியில் முகம் புதைத்துக்கொண்டான். தொண்டைக்குழி கம்மியது. கேவிக்கேவி வரும் அழகையை அடக்க முடியாமல் அடக்க முயன்றான். ஆனாலும் குரல் தொண்டைக்குள்ளிருந்து சன்னமாய் மேலெழும்பியது. ஆதரவாய் அவன் முதுகை வருடினாள்.

“நா பண்ண பாவத்துக்கு உனக்கு தண்டனைன்னு நெனைக்கிறப்பதான் என்னால தாங்க முடியல.… இப்டியே செத்துட்டாக்கூட பரவாயில்ல….” அவள் சொல்லி முடிக்கும்முன் வேகமாய் எழுந்தான். எழுந்த வேகத்தில் பின்னந்தலை அவளின் மோவாயில் இடித்தது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் அம்மாவின் வாயில் கைவைத்துப் பேசவிடாமல் தடுத்தான்.

“அப்டிலாம் சொல்லாதம்மா.… அப்பாவும் இல்ல, நீயும் இல்லன்னா நா என்னம்மா பண்ணுவேன். நீ ரொம்ப நல்ல அம்மாம்மா.… உன்ன மாதிரி ஒரு அம்மா கெடைக்க எனக்குக் குடுத்து வச்சிருக்கு… அந்த அப்பாவுக்குதான் உன்னோட அருமை புரியல. நம்மள விட்டுட்டுப் போயிட்டாரு. எப்பவும் நீ சந்தோஷமா இருக்கணும்மா… என்ன நெனச்சி நீ அழுவாத.… நானும் எங்க இருந்தாலும் உன் நெனப்பாவே இருப்பேன். இந்த உலகமே நீ தான்மா.… நீ கவலப்படாம இரும்மா… என்னால உனக்கு எந்தக் கொறையும் வராது….”அப்படியே கட்டிக்கொண்டு அழுதான். அதுதான் அவர்கள் பேசிக்கொண்ட கடைசி இரவு.

மறுநாள் அதிகாலையிலேயே அழைத்துச்செல்ல வண்டி வந்தது. அம்மாவிடம் அவன் பேசவே இல்லை. கிளம்பும்போது அம்மா கட்டிக்கொண்டு அழுதாள். அழுகை வந்தாலும் அடக்கிக்கொண்டு முதல் முறையாகக் காலில் விழுந்து வணங்கி விடைபெற்றான்.

அம்மாவிற்குத் தப்பிப் பிறந்தவன் என்ற அடையாளத்தைத் தவிர வேறு எந்தத் தவறும் செய்யாதவன் அவன். ஆமாம், கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கையில் பஸ்ஸில் வரும்பொழுதும் போகும்பொழுதும் முகம் தெரியாத‌ யாரோ ஒருவருடன் பழக்கமாகிக் காதலாகி அவருடன் நெருங்கிப் பழகி அவள் கர்ப்பமாக இருக்கும்பொழுதே அவர் அவளை விட்டு ஓடிவிட்டார். அவர் சொன்ன பெயர்கூட உண்மைதானா என்பது நெடுநாள்வரை அம்மாவிற்குச் சந்தேகமாகவே இருந்தது. பணி நிமித்தமாகத் தங்கியிருந்துபொழுதில் அந்த நம்பிக்கையில் தான் ஏமாந்துவிட்டதாக ஒருமுறை அவன் அப்பா எங்கே என்று கேட்டபொழுது தன் சோகக் கதையைச் சொன்னாள். கருவைக் கலைக்க முடியாமல் போனதையும் எங்கெல்லாமோ தேடித்தேடி கண்டுபிடிக்க முடியாமல் தான் தோற்றுவிட்டதையும் சொன்னாள். அந்த சிறுவயதில் ஆறா ரணத்துடன் இருந்தவனுக்கு இன்னுமொரு பேரிடி வரும் எனக் கனவிலும் அவன் நினைக்கவில்லை. அதுவும் அவன் சொந்தப் பாட்டி ரூபத்தில். ஆமாம், அவன் என்றால் அவனின் பாட்டிக்குச் சுத்தமாகப் பிடிக்காது.

அவனுக்குப் பத்து வயதாகும் போதிலிருந்தே அவன் அம்மாவிடம் பாட்டி நச்சரித்துக் கொண்டேயிருந்தாள். எப்படியாவது தன் மகளுக்கு இரண்டாவது திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்பதில் குறியாக இருந்தாள். முதல் ஏமாற்றத்திலிருந்தே விடுபடாதவளுக்கு இரண்டாவது முறையும் ஏமாற விருப்பமில்லை. அதுவும் இல்லாமல் மகனை வைத்துக்கொண்டு இன்னொரு திருமணம் என்பதையே நினைத்துப் பார்க்க இயலவில்லை. கரைப்பார் கரைத்தால் கல்லும் கரையும் என்பதாக ஒரு கணத்தில் கரைந்தேபோனாள் என்பதைவிட அவர்களின் நச்சரிப்புக்கு ஒத்துக்கொண்டாள். அரசல்புரசலாக அவனுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டார்கள். அப்படி ஒருநாளில் சொந்தத்தில் ஒரு சம்பந்தம் முடிவானது.

அவர்கள் போட்ட கண்டிஷன் திருமணத்திற்குப் பின்பு பையனை ஹாஸ்டலில் சேர்த்துப் படிக்க வைக்கவேண்டும் என்பதே. அம்மா அதற்கு ஒத்துக் கொள்ளவேயில்லை. அப்படி ஒரு திருமணமே வேண்டாம் என்று முடிவெடுத்து மறுத்துவிட்டாள். ஆனாலும், விடாப்பிடியாக அவளிடம் சில சமாதானங்கள் பேசி அவனும் வளருகிறான், அவனுக்கும் பொறுப்பு வரணும், எவ்ளோ காலத்துக்குத்தான் நீயே தாங்குவ, உனக்குன்னு ஒரு வாழ்க்கையப் பாக்கவேணாமா என்று அவளை மனமாற்றம் செய்துவிட்டார்கள். கட்டிக்கப்போகும் மாப்பிள்ளை நேரிடையாகவே அவள் பேராசிரியையாகப் பணிபுரியும் கல்லூரிக்கே வந்து பேசிவிட்டுப் போனார். அவரிடமும் பேசிப்பார்த்தாள். அவர் சமாதானமாகாமல் அவள் வேண்டுகோளை நிராகரித்துவிட்டார். அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை.

ஹாஸ்டலுக்குப்போன இரண்டு மாதமும் அவனால் அம்மாவை மறக்கவே முடியவில்லை. வேரைப் பிடுங்கி எறிந்த செடியாக வாடிப்போனான். அவ்வப்பொழுது பாட்டிதான் வந்தாள். வேண்டாவெறுப்பாகப் பேசிவிட்டுப் போனாள். ஐந்து நிமிடத்திற்கு மேல் அவள் இருக்கமாட்டாள். அந்த உதாசீனமே அவனை அதிகம் காயப்படுத்தியது. அடுத்தமுறை வந்தபொழுது பார்க்க விருப்பமில்லை என நிராகரித்துவிட்டான். அவனுக்கென்று பேங்க் அக்கவுண்ட் திறந்து அதில் அவன் மேஜர் ஆகும்வரை அவனுக்கான செலவுக்கென்று பணம் போட்டுவிட்டிருந்தார்கள். அவன் சேர்ந்த பள்ளியைச் சந்நியாசிகளே நிர்வகித்து வந்தனர். ஒழுக்கத்திற்குக் குறைவில்லை. சில மாதங்களில் ஒரு சந்நியாசி அவன்மீது மிகுந்த அக்கறைகொண்டு அவனைத் தேற்றினார்.

அம்மா, அதற்குப் பிறகு இரண்டு முறை பார்க்கவந்தாள். அவளையும் பார்க்க விருப்பமில்லை என ஜன்னல் வழியாக பார்த்து அழுதான். அம்மா, அவனுக்காக நாள் முழுவதும் பார்ப்பதற்காக அங்கேயே அமர்ந்திருந்தாள். அந்தமுறை அவள் மட்டும் தனியாக வந்திருந்தாள். தன்னை இனிமேல் யாரும் பார்க்க வரவேண்டாம் எனவும் அப்படி யாரேனும் தன்னைப் பார்க்கவந்தால் தான் அங்கிருந்து எங்காவது ஓடிப்போய்விடுவேன் என எழுதி அனுப்பினான். அந்தச் சந்நியாசி அவனின் நிலையை அவளுக்குப் புரியவைத்தார். அழுதுகொண்டே போகும் அவளை அவனும் அழுதபடி பார்த்துக் கொண்டிருந்தான்.

அது கோடைக்காலம்..… தேர்வுகள் முடிந்து மாணவர்கள் அவரவர் ஊர்களுக்கு சென்றுவிட்டிருந்தார்கள். ஊருக்குப் போக விருப்பமில்லை என முன்பே எழுதிக்கொடுத்துவிட்டான். அன்று பதினோரு மணிவாக்கில் அந்தச் சந்நியாசியைக் காண ஒரு குடும்பமே வந்திருந்தது. அந்தச் சந்நியாசியின் காலில் ஒரு வயதான அம்மா விழுந்து வீட்டிற்கு வரும்படி அழுதாள். அவர் எந்தச் சலனமும் இன்றி ஒரு புன்னகையோடு நின்றுகொண்டிருந்தார். துறவுக்குத் தன்னை ஒப்புக்கொடுத்துவிட்டதாகவும் தன்னை வற்புறுத்த வேண்டாமென்று பேசிக்கொண்டிருந்தார். அந்த நேரத்தில் அவனை ஏதேச்சையாகப் பார்த்துவிட அவனை அழைத்து அவர்களுக்கு அறிமுகப்படுத்திவைத்தார்.

காலில் விழுந்து அழுதவள் தன் சொந்த அம்மா என்றபோது அவன் உள்ளுக்குள் ஒருகணம் கலங்கினான். அண்ணன், அண்ணி, தங்கை, தங்கை மகன்கள் என அனைவரையும் அறிமுகப்படுத்தி வந்தவர்களுக்கு உணவு பரிமாறி அனைவரையும் அன்போடு அனுப்பி வைத்தார். அது அவனுக்குள் ஒரு நெருடலாகவும் வாழ்வின்மீது பெரும் நம்பிக்கையையும் தந்தது. அவரோடு அப்படியே ஒன்றிப்போனான்.

அந்தச் சம்பவத்திலிருந்து அவனுக்குள் ஒரு தெளிவு உண்டானது. ஊன்றிப் படிக்க ஆரம்பித்தான். இந்தச் சமூகத்திற்குத் தானும் ஏதேனும் செய்யவேண்டும் என்கிற உத்வேகத்தை உருவாக்கிக்கொண்டான். அவன் படிப்பதற்கு ஸ்காலர்ஷிப் கிடைத்தது. அங்கேயே தங்கி டாக்டராக ஆனான். அவன் படிக்கும் காலத்தில் அந்தச் சந்நியாசி சிங்கப்பூருக்கு மாற்றலாகிப்போனாலும் அவன்மீது அக்கறை கொண்டிருந்தார். அடுத்த சில வருடங்களில் ஐஏஎஸ்ஸாகப் பீகாருக்குத் தேர்வானான்.

அப்படிப் பீகாரில் ஒரு தொழில்முனைவோர் மாநாட்டில்தான் பால்ய நண்பன் வைத்தியைப் பார்த்தான். வைத்திதான் இவனை அடையாளம் கண்டு கேட்டான். அம்மாவின் போட்டோ வேண்டுமென்றும் தான் இங்கிருப்பதை யாருக்கும் சொல்லவேண்டாமென்றும் கேட்டுக்கொண்டான். தன்னைப் போலவே அநாதையாக இருந்த தன் ஜூனியர் பெண்ணையே டாக்டருக்குப் படிக்கும்போது நட்பாகிக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டதாகச் சொன்னான். அம்மாவின் ஃபோட்டோவை வைத்தி வாட்ஸப்பில் அனுப்பியிருந்தான். அம்மா முன்பைவிட மெலிந்திருந்தாள். நரை அவளின் மூப்பை வெளிக்காட்டிக் கொண்டிருந்தது.

அம்மாவிற்கு இரண்டாவது திருமணமான சில வருடங்களில் மகன் பிறந்ததாகவும் அவர்கள் தங்கியிருந்த வீட்டை வாடகைக்கு விட்டுவிட்டு வேறு இடத்திற்குப் போய் சமீபத்தில் அம்மா மட்டும் அந்த வீட்டிற்கு வந்ததாகப் பழைய கதைகளைச் சொன்னான். இரண்டாவது மகனுக்குத் திருமணமாகிவிட்டதென்றும் அவர்கள் தனியாக இருப்பதாகத் தனக்குத் தெரிந்த தகவல்களைச் சொன்னான்.

அம்மாவின் குரலைக் கேட்பதற்காக இரண்டொருமுறை லேண்ட்லைனிலிருந்து அழைத்துப் பேசாமல் கேட்டுக்கொண்டிருந்தான். அவனுக்கு மகள் பிறந்ததைச் சொல்ல வேண்டுமென ஆவலாக இருந்தது. ஆனால், அவளின் மகிழ்ச்சியைக் கெடுக்க அவனுக்கு விருப்பமில்லை. அவளுக்குள் அவன் தொலைந்தவனாகவே இருக்கட்டும். எந்த தொடர்பும் அற்றவனாகவே இருந்துவிட்டுப் போகலாம் என முடிவு செய்துகொண்டான்.

மாலை நெருங்கிவிட்டிருந்தது. அவனிடம் நீங்க எந்த வகையில உறவு என்று ஒருவர் கேட்டார். அவன் முதல் பேட்ஜ் ஸ்டூடண்ட் என்று மட்டும் சொன்னான். அம்மாவோடு கடைசியாகக் கட்டிப்பிடித்து அழுத மாடிக்குப் போகும் வாய்ப்புக் கிட்டியது. தம்பி அம்மா மாதிரியே இருந்தான். பேசலாமா என ஒருக்கணம் யோசித்து விலகினான். அவன் அப்பா என்றழைத்தவரை அப்பொழுதுதான் முதல்முறையாக அருகில் பார்த்தான்.

அம்மாவைச் சுமந்து ஊர்வலம் புறப்பட்டது. அவன் மனதுக்குள் அழுதான். ஒருமுறை அவர்கள் வாழ்ந்த வீட்டைத் திரும்பிப்பார்த்தான். அது மௌன சாட்சியாக நின்றிருந்தது. கலங்கடிக்கும் நினைவுகளுடன் பாதை அவர்களைச் சுமந்தவண்ணம் நீண்டுகொண்டிருந்தது. அம்மாவைத் தகன மேடையில் இருத்திச் சடங்குகள் செய்துகொண்டிருந்தார்கள். உரிமையாகச் செய்யவேண்டிய எந்த சடங்கையும் செய்யமுடியாமல் அருகாமையில் நின்று அம்மாவின் முகத்தையே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தான். எரியூட்டும் பணியாளர்கள் சடங்குகள் முடிவதற்காகக் காத்திருந்தார்கள். எடுக்கப்போகும் நேரத்தில் ஒருவர் ஓடிவந்தார். “முக்கியமான சொந்தம்ங்க……. வந்துக்கிட்டிருக்காருங்க, ஒரு அஞ்சி நிமிஷம் பொறுங்க…. எடுத்துடாதீங்க” என்றார். வரப்போகிறவருக்காகக் காத்திருக்கத் தொடங்கினர். ஐந்து நிமிடத்தையும் கடக்க ஒவ்வொருவர் கண்களும் வரப்போகிறவருக்காக வாசலையே எதிர்நோக்கியிருந்தது. ஒவ்வொருவராய் மேடையைவிட்டுக் கீழிறங்கிக்கொண்டிருந்தனர். அம்மா தனித்திருந்தாள். முகத்தில் ஈ ஒன்று அமரத் துடித்தது.

அதுவரை ஒதுங்கியிருந்தவன் அருகாமைக்குச் சென்று அந்த ஈயை ஓட்டினான். அம்மா என ஈனஸ்வரத்தில் அழைத்தான். “நா வந்துட்டேம்மா… ஒருமுறை கண்ணத் தெறந்து பாரும்மா” என்றான். விம்மி அழுதான். மீண்டும் அமரப்போன அந்த ஈயை ஓட்டினான். கன்ன‌த்தில் கிடந்த பூவைத் தட்டியபோது அம்மா உடல் சில்லென்றிருந்தது. கட்டப்பட்டிருந்த கை விரல்களைத் தொட்டான். அப்படியே வெளிறிய பாதங்களையும். அம்மாவிற்குப் பிடித்த பட்டுப்புடவையைப் போர்த்தியிருந்தார்கள். அம்மா பூப்போல உறங்கிக் கொண்டிருந்தாள். அவர்களிருவருக்கும் பேசாமல் பேச அந்தத் தனிமை வாய்த்திருந்தது. அப்படியே வாசலைப் பார்த்தான். யாரும் இந்தப் பக்கம் திரும்பவில்லை என்ற கணநேரத்தில் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டான். வந்தாச்சு வந்தாச்சு என்ற குரல் கேட்டு அங்கிருந்து நகர்ந்தான்.

எரியூட்டும் அந்த வாயிலுக்குள் போகும்வரை பார்த்துக் கொண்டேயிருந்தான். இனி, அம்மா ஒருபொழுதும் திரும்பப் போவதில்லை. அவளைத் தான் எந்த வகையிலாவது காயப்படுத்தியிருந்தாள் மன்னித்துவிடும்படி வேண்டிக்கொண்டு திரும்பினான்.

தூரத்தில் ஒரு மரம் தெரிந்தது. மறைவாய் நின்று “அம்மா” என்று பெருங்குரலெடுத்து அழுதான். அம்மா அந்தப் புகைப்போக்கியின் வழியாகக் காற்றாகக் கலந்தாள். அந்த மரத்திலிருந்து பூ ஒன்று உதிர்ந்துகொண்டிருந்தது.

One Reply to “வெந்து தணியும் நினைவு”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.