மாயன்

காலையில் ஐந்தரை மணிக்கு வண்டியிலேறி அமரும்போது உள்ளே இருளாகவே இருக்கும். முதல் பலகையில் அமர்பவர்கள் தூங்கிக்கொண்டு வருவார்கள். அடுத்தடுத்த பலகைகளில் அமர்பவர்கள் தூக்கம் வரவில்லை என்றாலும் கண்களை மூடியபடியே வருவார்கள். திறந்திருந்தாலும் இருட்டையே நோக்க வேண்டுமென்பதால். இதெல்லாம் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பரமன் இங்கே வரும்வரைதான்.

பரமன் வந்த முதல்நாள் எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. காலையில் செல்லும்போது என்ன நடக்கிறதென்பதை கவனித்திருப்பான்போல. நாங்கள் பணிபுரிந்தது கப்பல் கட்டும் தளத்தில் சார் ஒப்பந்ததார நிறுவனத்தில். புதிதாகக் கட்டப்படும் கப்பல்களில் பைப்கள் பொருத்தும் பணி மட்டும் எங்கள் நிறுவனத்தின் பொறுப்பு. முதல் நாள் என்பதால் அன்று அவனுக்கு எந்த வேலையும் கொடுக்கவில்லை. என்ன பணி நடைபெறுகிறது என்பதை மட்டும் கவனித்தான்.

மாலையில் வண்டி வந்தவுடன் முதலில் ஏறாமல் கடைசியாக ஏறிய பரமன், பலகையில் அமராமல் பின்னால் சாத்திய கதவில் முதுகைச் சாய்த்து கால் நீட்டியபடி தளத்தில் அமர்ந்தான். பின்கதவை கையால் தட்டினான். சத்தம் கேட்டவுடன் வண்டி கிளம்பியது. எல்லோரும் ஏறியவுடன் அப்படித் தட்டுவது வழக்கம். கடைசிப் பலகையில் இருந்த நான் அதிர்ச்சியாக அவனைப் பார்த்தேன்.

“ஏன்ணே இப்படிப் பாக்குறீங்க?”

“இப்படியெல்லாம் ஒக்காரக் கூடாது. ஓனரு ஏதாவது சொல்லப் போறாரு” என்றேன்.

வண்டியை ஓட்டுவது முதலாளியின் எழுபது வயது மதிக்கத்தக்க தந்தை. கொண்டு விடுவதற்கும் கூட்டி வருவதுமான இரண்டு நடைக்கு தனியே ஓட்டுநர் தேவையில்லையென தடித்த சீன முதலாளி கருதினான்.

“வெளிய தலையவோ கையவோ நீட்டினாத்தானே பிரச்சனை. அதெல்லாம் உள்ளதானே இருக்கு”

“உள்ளே பலகையில உக்கார்ரதுல உனக்கென்ன பிரச்சனை”

“பிரச்சனை ஒன்னுமில்ல. இங்கே ஒக்காந்தா இருட்டப் பாக்காம வானத்தப் பாத்துக்கிட்டு வரலாமில்ல” என்றான்.

அப்போதுதான் கவனித்தேன், அந்த இடம் மேலே மூடப்படாமல் இருந்ததை.

“இங்க காத்தும் நல்லா வருது. காலையும் கையையும் நீட்டிக்கலாம். மேலே வானத்தையே பாத்துக்கிட்டு வந்தா லேசாப் பறக்கிற மாதிரியிருக்கு” என்றான்.

இதுவரை யாருமே இதை யோசிக்கவோ செய்யவோயில்லை என்பது ஆச்சர்யமாகத் தோன்றியது. முன்பக்கமாக அமர்ந்து தலையை மட்டும் திருப்பிப் பேசிக்கொண்டிருந்தேன்.

“திரும்பி ஒக்காருங்கண்ணே. பேசிக்கிட்டு வருவோம்” என்று அவன் கூறியதும் எழுந்து திரும்பி அவனைப் பார்த்து அமர்ந்தேன்.

என்னைப் பற்றிய எல்லா விவரங்களையும் கேட்டான். சொல்லிக்கொண்டே வந்தேன். அதோடு, தொடர்ந்து வந்த வாகனங்களையும் பின்னால் போன கட்டடங்களையும் சாலையோரங்களில் நடந்துகொண்டிருந்த வேறுபட்ட பல இன மக்களையும் பார்த்துக்கொண்டே வந்தேன். இரண்டு பக்கமும் சுற்றி ஏறியிறங்கும் வாகனங்களுடன், வண்ணத்துப் பூச்சியின் இறக்கைபோலத் தென்பட்ட மேம்பாலங்களை அன்றுதான் பார்த்தேன். தங்குமிடத்திற்கு விரைவாக வந்துவிட்டதுபோலத் தோன்றியது. இங்கு வந்து இத்தனை வருடங்களில் அலுப்பில்லாமல் வந்துசேர்ந்தது அப்போதுதான். உள்பக்கம் திரும்பி அமர்ந்திருக்கும்போது முடிவில்லா இருட்குகைக்குள் சென்றுகொண்டேயிருப்பது போலத்தோன்றும். இந்த எண்ணம், வேலை பார்த்த அலுப்பை இன்னும் அதிகமாக்கிவிட, தொய்ந்த உடலுடனும் அலுத்த மனதுடனும் இறங்குவோம். முதல் முறையாக வேலை பார்த்த அலுப்பு இல்லாமல் உற்சாகத்தோடு வண்டியிலிருந்து இறங்கினேன்.

நான்கு அறைகளில் ஒன்றுக்குமேல் ஒன்றாக பொருத்தப்பட்ட படுக்கைகளில் முப்பது பேர் தங்கியிருந்தோம். வேலையிலிருந்து வந்தவுடன் இருக்கும் இரண்டு குளியலறைகளில் காத்திருந்து, குளித்துவிட்டுத் தனித்தனியாகச் சமைத்து உண்டுவிட்டுப் படுப்பதற்குப் பத்தாகிவிடும். சில நாள்களில் சமைக்க முடியாதவாறு உடல் வலிக்கும்போது அருகிலிருக்கும் தமிழர் உணவுக் கடையில் இரண்டு பரோட்டா வாங்கிவந்து உண்பதும் உண்டு.

முதல் இரண்டு நாள்கள் பரமன், கடை உணவைத்தான் உண்டான். அவன் சமைக்கத் தேவையான பாத்திரங்களை எல்லாம், குட்டி இந்தியா என்றும் தேக்கா என்றும் அழைக்கப்படும் சிராங்கூன் பகுதியில் ஞாயிறன்றுதான் போய் வாங்கவேண்டும்.

இரண்டாம் நாள்தான் என்னிடம் கேட்டான் “ஏன்ணே, இந்தமாரி தனித்தனியா சமைக்கறதுக்குப் பதிலா நாலஞ்சு பேரா சேந்து , ஆளுக்கொரு வேலையப் பிரிச்சுப் பாத்துக்கிட்டு, மொத்தமா ஒரே செலவாப் பண்ணிட்டு வாரத்துக்கு ஒரு தடவை கணக்கு முடிக்கலாம்ல. ஒவ்வொருத்தரும் அவங்களுக்கு ஒதுக்குன வேலைய அதாவது சாப்பாடு வடிக்கிறது, குழம்பு வைக்கிறது இல்லைனா கடைக்கி போறதுன்னு ஏதோவதொரு வேலைய மட்டும் பாத்துட்டு கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கலாம். ஒருத்தருக்கு முடியலைன்னாக்கூட இன்னொருத்தர் சேத்துப் பாத்துக்கலாம். செலவுங்கூட கொறயும்” என்றான்.

அதன் பிறகு எங்களுக்கு ஓய்வு கிடைத்தது. ஒவ்வொரு அறையிலும் தங்கியவர்கள் சேர்ந்து தொலைக் காட்சியும் விசிடியும் வாங்கி, ஞாயிறுகளில் மட்டும் பார்த்துக்கொண்டிருந்த படங்களை தினமும் பார்க்க ஆரம்பித்தோம்.

பரமன் அவனுக்கான வேலையை முடித்துவிட்டு அப்போது வந்த பஞ்ச தந்திரம், வில்லன் போன்று அவனுக்குப் பிடித்த படங்கள் போட்டால் மட்டும் பார்ப்பான். இல்லையென்றால் அறையில் இருக்க மாட்டான். இரண்டு மாடி படியேற வேண்டும் என்பதால், எல்லோருமே தேவைப்படும் பொருட்களை வண்டியைவிட்டு இறங்கியவுடனேயே வாங்கிக்கொண்டுதான் மேலே ஏறுவோம். காலையில் வண்டி வந்தவுடன்தான் கீழிறங்குவோம். நடுவில் இறங்குவதில்லை.

இவன் மட்டும் எங்கே போயிருப்பான் என எதேச்சையாக யோசித்தபோதுதான் எனக்கு உறைத்தது, என்னைப் பற்றி எல்லாவற்றையும் அவனிடம் கூறியதையும் அவனைப் பற்றி எதுவுமே எனக்குத் தெரியாதென்பதும்.

நாங்கள் இருக்கும் பகுதி, சிங்கப்பூரின் அங்கீகரிக்கப்பட்ட சிவப்புவிளக்குப் பகுதி. தொடைக்கு மேலே ஒன்றரைச் சாணுக்கு இடுப்பு உடையும் கழுத்துக்கீழ் ஒரு சாணுக்கு மேலுடையும் அணிந்து சிறிய உதடுகளை வாய் மையால் துலக்கமாக்கி, அடர்நிறத் தோல்பையைத் தோளில் தொங்கவிட்டபடி மெழுகுபோல மினுக்கும் மேனியுடைய இந்தோனேசிய மற்றும் தாய்லாந்துப் பெண்கள் இரவு ஒரு மணியாயினும், விடிகாலை ஐந்து மணியாயினும் தெருவில் நடமாடியபடியே இருப்பார்கள். ஒருவேளை அப்படியிருக்குமோ என ஒருக்கணம் தோன்றிய எண்ணத்தை வேகமாகத் தள்ளிவிட்டு இரண்டு மாடி இறங்கி கீழே வந்தேன்.

பிரதான சாலையிலிருந்து எங்கள் தெரு திரும்பும் முனையில் தரைக்கு அடியிலிருக்கும் தண்ணீர் குழாய்களுக்கான இணைப்புகளை மறைக்கவென சதுரமான கட்டமைப்பு இருந்தது. பத்து பேர் அமரும் அளவிற்கான அந்த இடத்தில் தனியாக அமர்ந்து வானத்தை தோக்கிக் கொண்டிருந்தான் பரமன். எங்கள் ஆட்களில் எவருமே இதுவரை இங்கே அமர்ந்து நான் பார்த்ததில்லை. சாலையோரம் நின்றிருந்த கல்யாண முருங்கை மரத்திலிருந்து உதிர்ந்த மஞ்சள் பூக்கள் தரையெங்கும் பரவியிருந்தன.

நான் தோளைத் தொட்டவுடன் இயல்பாகத் திரும்பியவனிடம், “எப்படிப் பதறாம திரும்பின?” என்றேன்.

“இதுல பதர்றதுக்கு என்னயிருக்கு. சும்மா இருக்கறவன, யாரு என்ன செய்யப் போறாங்க?”

“இங்கன ஒக்காந்து என்ன பண்ற?”

“வானத்த பாக்கப் பாக்கத் தீராதுன்ணே.”

“ஏன் இதுமேல உனக்கு இப்படி ஆவலாதி?”

“நான் எட்டாவது படிச்சிக்கிட்டு இருந்தப்ப ஒருநாள் காலையில ஸ்கூலுக்குப் போறப்ப மழை தூறிச்சு. அப்ப “அட வானவில்லப் பாரேன்னு” ஒரு குரல் கேட்டுச்சு. நிமுந்து வானத்துல சுத்திச் சுத்திப் பாத்தேன். என் கண்ணுக்கு ஏதும் புலப்படல. குரல் வந்த பக்கமா பாத்தா ஒரு சின்னப் பையங்கிட்ட அவங்கப்பா கைய நீட்டிக் காட்டிக்கிட்டிருந்தார். அந்தக் கை நீட்ன திசையப் பாத்ததும் எனக்கும் லேசாப் பிடி கெடச்சுது. முதல்ல மெலிசான கோடு மாதிரி தெரிஞ்சது பாக்கப் பாக்க எல்லா நெறமும் துலக்கமா தெரிஞ்சிச்சு. மனசு அப்படியே பூரிச்சுப்போச்சு. இத்தனை வருசமா பாக்கவேயில்லேன்னு ஒரே ஏக்கமா வந்துச்சு.”

வானத்தைப் பற்றி பேசுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தவனாகத் தோன்றினான்.

“பறவைகளும் மேகமும் எவ்வளவு சுதந்திரமா எந்தக் கட்டுப்பாடுமில்லாம எல்லையில்லாம பறக்குதுங்க. நாமதான் பூமி மேலேயே சுத்திச் சுத்தி வர்றோம்.”

அவன் அறியாமல் பேசுவதாகப்பட்டது.

“பறவையோ மேகமோ முழுசா சுதந்திரமாயில்ல. ரெண்டுமே பூமிக்கு வந்துதான் ஆகனும்?” என்றேன்.

“அப்படி வந்தாலும் திரும்பவும் பறக்கறதுக்கான வாய்ப்பு எப்பவும் இருக்குதில்ல” என்று அவன் கூறியபோது, அவன் அறியாமல் எதையும் பேசவில்லை என்பது புரிந்தது.

“அதுங்களோட வாழ்க்கை பூமியிலதான். அவை மேலே போறப்பவே கீழே வரணும்னு முடிவு பண்ணிட்டுதான் போகுதுங்க” என்றேன்.

“இருக்கலாம். ஆனா மனுசங்க நெனச்சா தரையில நகராம பறந்துகிட்டே இருக்கலாம்”

“எதச் சொல்ற “

“மனுசங்க மனச பொறாம ஆணவம்லாம் அண்டாம கொஞ்சம் விசாலமா வச்சுக்கிட்டா பூமியில இருக்கிற அழுக்குல உழன்டு மனபாரத்தோட வாழாம, மேகம் மாதிரி லேசான மனசோட தரையில கால் பாவாம மிதக்கலாம்” என்றான்.

—- ——– ——-

வண்டி வேகமாக நின்று குலுங்கியது. முன்னால் சென்ற வண்டி சட்டென நின்றதால் இவரும் வேகமாக நிறுத்தியிருக்கிறார். லேசாக குளிர் காற்று கைகளில் பட்டது. வானம் நன்றாக கருத்திருந்தது. பார்த்துக் கொண்டிருந்தபோதே கரும்பலகையில் சிறு பிள்ளைகள் கோடிழுப்பதைப்போல இருண்ட மேகத்தின்மேல் மின்னல் தோன்றிக் கண்ணைக் கூசச்செய்தது. சட்டெனக் கைகள் தானாகவே காதுகளை நோக்கி எழுந்தபோதே, பரமன் வெல்டிங் அடித்த நினைவு மனதில் எழுந்தது.

பரமனின் பணி அனுமதியில் “வெல்டர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு தனியாக டெஸ்ட் உண்டு. மெல்லிய துளைகளை அடைக்க அடிக்கும் கேஸ் வெல்டிங் அல்ல. பெரிய பைப்களையும் ஒட்டவைக்கும் ஆர்க் வெல்டிங்கில் டெஸ்ட்.

ஒரு இஞ்ச் கனமான அரையடி அகல இரும்பு பிளேட்டின் ஓரம் சாய்வாக வெட்டப்பட்டிருக்கும். அதேபோன்று சாய்வாக வெட்டப்பட்ட இன்னொரு பிளேட் அருகில் வைக்கப்படும். ஆங்கில வி வடிவில் இருக்கும் அந்த பகுதியை சிறு துளையோ கருப்புப் புள்ளியோ இல்லாமல் வெல்டிங் செய்து இணைக்க வேண்டும்.

பரமனோடு வந்த மேலும் ஒன்பது பேருக்கும் சேர்த்துப் பயிற்சி ஆரம்பமானது. பைப்பிற்கு அடிப்பதென்றால் ஒரு சிறு பகுதியை இணைக்க வேண்டியிருக்கும். புகை குறைவாகவே வரும். இவர்கள் பத்துப் பேரும் புதியவர்கள். புதிய ஒன்றைச் செய்வதன் உற்சாகத்தில் இருந்தார்கள். என்ன நிகழ்கிறது என சுற்றிலும் நோக்காமல், ஒரே நேரத்தில் அடித்தார்கள். என்னதான் கையில் கண்ணாடி மறைப்பான் வைத்திருந்தபோதும், எப்படிக் கண்களை மூடிக்கொள்ள வேண்டுமென்ற பழக்கமில்லாததாலும், மொத்தமாக சேர்ந்து வெல்டிங் அடித்ததாலும் எழுந்து சூழ்ந்த புகையால் அவர்களின் கண்கள் நன்றாகச் சிவந்து வீங்கிவிட்டன.

கண்களில் நீர் வழிந்துகொண்டே இருந்தது. துண்டை வைத்துத் துடைத்தபடியே இருந்தவர்கள், கண்களில் உண்டான எரிச்சலால் இரவெல்லாம் உறங்கவேயில்லை. காலையிலும் அவர்களால் கண்களைத் திறக்கவே முடியவில்லை. அவர்களைக் கவனித்துக்கொள்ள என்னை அறையிலேயே விட்டுவிட்டு மற்றவர்கள் பணிக்குச் சென்றார்கள். அவர்களுக்கு உணவு வாங்கிக் கொடுத்து, கண்ணுக்கு மருந்து போட்டுவிட்டு அவர்களோடு பேசிக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு விதமான பணத்தேவைக்கான காரணங்கள் இருந்தன. அவர்கள் தங்களின் குடும்பங்களின் பணத்தேவைகளைப் பற்றியும் சிங்கப்பூர் வருவதற்காகக் கடன் கொடுத்திருப்பவனிடமே மேலும் வாங்கி வந்ததைப் பற்றியும் கூறினார்கள்.

பரமன், சற்றுத் தள்ளிக் கையிரண்டையும் கோர்த்துக்கொண்டு தலையை அதன்மேல் வைத்தபடி, தரையில் படுத்து ஜன்னலை நோக்கிக்கொண்டிருந்தான். அவன் எதைப் பார்க்கிறான் என்பதை உணர்ந்தபடி அவனருகில் சென்று அமர்ந்தேன். என்ன பரமா வானத்தைப் பாக்கிறாயா?” எனக் கேட்டேன்.

“இல்லண்ணே, நீலத்தப் பாக்கிறேன்” என்றான்.

நான் திரும்பிப் பார்த்தேன். மேற்குப் பக்க ஜன்னல் வழியே மேகங்களற்ற வானத்தின் நீல வண்ணம் பளீரென கண்களை நிறைத்தது. சட்டென்று தோன்றிய எண்ணத்தால் அவன் முகத்தைப் பார்த்தேன். கண்கள் வீங்காமல் சிவக்காமல் சாதாரணமாகவே இருந்தது. என்ன நடந்திருக்கும் என யோசித்துப் பார்த்தேன். நேற்று வெல்டிங் அடித்தபோது வாசலருகில் முதல் ஆளாக இவன் இருந்திருப்பான். வெளியிலிருந்து வந்த காற்றில் புகை உள்ளே சென்று மற்றவர்கள் கண்களை பதம் பார்க்க இவன் எந்தப் பாதிப்புமில்லாமல் தப்பியிருக்கிறான். எல்லோருக்கும் ஏற்பட்ட பாதிப்பு இவனுக்கும் ஏற்பட்டிருக்கும் என்றே நான் உள்பட அனைவரும் நினைத்திருக்கிறோம்.

இரண்டு நாள்களுக்குப் பிறகு மீண்டும் பயிற்சி தொடங்கி தொடர்ந்தது. இப்போது முன்புபோல பாதிப்பு ஏற்படாமல் இருக்க, இரு பிரிவுகளாகப் பிரித்துப் பயிற்சியளிக்கப்பட்டது. சிங்கப்பூர் அரசின் விதிகளின்படி பணிக்காக அழைத்துவரப்படுபவர்கள் ஒரு மாதத்திற்குள் நடத்தப்படும் திறன் தேர்வில் தேறவேண்டும். இவ்வாறு தேர்ச்சி பெற்றவர்களுக்கு நிறுவனம் நாளொன்றிற்கு ஒரு டாலர் வரி செலுத்தவேண்டும். தேர்ச்சி பெறாத பணியாளர்களுக்கு அவர் தேர்ச்சி பெறும்வரை ஒரு நாளைக்கு பத்து டாலர் வரி செலுத்தவேண்டும். கட்டுமான நிறுவனங்களெல்லாம் சென்னையில் இதற்கெனப் பயிற்சி நிலையங்கள் அமைத்துப் பணம் பெற்றுக்கொண்டுப் பயிற்சியளித்துத் தேர்வு நடத்தி, தேர்பவர்களை மட்டும் அழைத்துக் கொள்கிறார்கள். கப்பல் கட்டும் தளத்தில் இயங்கும் நிறுவனங்கள் பணம் பெற்றுக்கொண்டு பணியாளர்களை அழைத்துவந்தபின் பயிற்சி கொடுத்து தேர்வு வைக்கிறார்கள்.

பரமனைத் தவிர மற்றவர்களுக்கு வெல்டிங் அடிப்பதன் நுட்பம் பிடிபட்டுவிட்டது. அவனால் அதனைக் கைக்கொள்ள முடியவில்லை. இந்த வெல்டிங்கிற்கு மனமும் பார்வையும் ஒன்றாக இயைந்தாக வேண்டும். கையிலிருக்கும் ராடிற்கும் பற்றவைக்கும் இரும்புக்கும் இடையே 4 மில்லி மீட்டர் இடைவெளி இருக்கவேண்டும். அப்போதுதான் மின் ஈர்ப்பு மூலம் ராடின் முனையில் நெருப்பு பற்றும். பற்றிய ராடிலிருந்து உண்டாகும் வெப்பத்தால் இரும்புத் தகடு உருக ஆரம்பிக்கும். அப்படியே மெதுவாக ராடை நகர்த்தி அருகிலுள்ள மற்றொரு தகடையும் இதேபோல உருக வைத்து ராடிலிருந்து உருகும் இரும்புக் குழம்பால் இரண்டையும் இணைக்கவேண்டும். இரும்பு உருகுவது அதிக வெப்பநிலையில் என்பதால் அதிலிருந்து மிகை ஒளி வெளிப்படும். இதனை வெறும் கண்களால் காணமுடியாது. கருப்பு கண்ணாடி அணிவதன் வழியாக, இரும்பு மெழுகுபோல உருகுவதையும் இரும்புக் குழம்பால் நிரப்பப்பட வேண்டிய பகுதியைத் தெளிவாகப் பார்க்கவும் முடியும்.

பரமன் தவறவிடுவது ராடிற்கும் இரும்புத் தகடிற்குமான இடைவெளியை. அருகில் சென்றுவிட்டால் தகடோடு ராடும் ஒட்டிக் கொள்ளும். இடைவெளி அதிகமிருந்தால் தீ பற்றாது. “அகலாது அணுகாது தீக்காய்வார் போல” என வள்ளுவர் சொன்னதுபோல அதிகமாக விலகிடாமலும் நெருங்கிவிடாமலும் ராடைப் பிடி எனக் கூறியபோதும் அவனால் இயலவில்லை.

ஒரு மாதம் முடிந்தபோது வைத்த தேர்வில் பரமனைத் தவிர மற்றவர்கள் தேறிவிட்டார்கள். இவன் முகத்தில் பெரிதாக வருத்தம் தெரியவில்லை. ஆனால் முதலாளி முகத்தில் தெரிந்தது. அரசுக்குச் செலுத்தவேண்டிய வரியை இவன்தான் செலுத்தவேண்டுமென வேகவேகமான முகபாவனைகளுடன் கீச்சுக்குரலில் சீன மொழியில் கத்திவிட்டுச் சென்றார். இவனைக் கூட்டிவந்த ஏஜன்ட் ரவி வந்து, முதலாளியிடம் பேசி இன்னும் ஒரு வாய்ப்பில் தேறிவிடுவான் என உறுதிகூறி வரியை அவரையே கட்டச் சம்மதிக்க வைத்தார்.

மற்ற எல்லோருடனும் பணியாற்றியபடி மாலையில் ஒருமணி நேரம் மட்டும் பயிற்சி எடுக்க பரமனை அனுமதித்தனர். பணியாற்றுவதற்கு வெல்டிங் தெரியவேண்டியதில்லை. அதற்கு நான்கு நிபுணர்கள் இருந்தார்கள். மற்றவர்களெல்லாம் பைப்களைக் கழட்டுவது, அவர்களுக்கு உதவியாகப் பைப்புகளை தூக்கிச்செல்வது, சரியான இடத்தில் பொருத்த ஏதுவாகப் பிடித்துக்கொள்வது போன்ற பணிகள்தான். வரி குறைவாக கட்டுவதற்காகத்தான் வெல்டிங் பயிற்சி, தேர்வு எல்லாம்.

மறு தேர்விற்கான நாள் நெருங்கிக் கொண்டிருந்தது. பரமனின் வெல்டிங்கில் ஆங்காங்கே கண்ணுக்கு தெரியுமளவிற்கு துளைகள் இருந்தன. தேர்வின்போது அடிக்கப்படும் இரும்புத் தகடுகளை எக்ஸ்ரே மூலம் சோதிப்பார்கள். சிறு ஊசியளவு துளை இருந்தாலும் நிராகரித்து விடுவார்கள். கப்பல் நகரும்போது பைப்களில் அதிக அழுத்தத்தில் நீர் செலுத்தப்படும். அப்போது சிறு கசிவு இருந்தாலும் பைப் பிளந்து பேராபத்தை ஏற்படுத்திவிடும். அவ்வாறு நிகழக்கூடாது என்பதற்காகவே இந்தக் கடுமையான சோதனை.

பரமனிடம், ஏன் இப்படி ஆகிறது எனக் கேட்டேன். “இது மாதிரி அதிக சூட்டுல உருக்கி ஒட்ட வக்கிறத என் மனசு ஏத்துக்க மாட்டேங்குது. இது பெரிய இக்கட்டுல ஒருத்தன தள்ளி, அவனுக்கு புடிக்காத ஒன்ன ஏத்துக்க வைக்கிற மாதிரி தோணுது. அதனாலதான் பத்தவச்சுக்கிட்டு இருக்கப்பவே மனசு அதுலேந்து வெலகிடுது” என்றான். எனக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. பரமனின் ஏஜண்ட் ரவி என்னிடம் வந்து “வெல்டிங் எப்படி அடிக்கிறான். கத்துக்கிட்டானா?” என்று கேட்டார். நான் நடப்பதைச் சொன்னேன்.

“நேத்து அவம் மொதலாளி போன் பண்ணினான். இந்தத் தடவையும் பாசாகலைன்னா அவனை ஊருக்கு அனுப்பிடுவேங்குறான். கட்ன பணம் முழுசா போயிடும். ஒரு பைசா திருப்பித் தரமாட்டான்” என்றார்.

இப்பொழுது என்ன செய்வது. பரமன் இப்போது கற்றுக் கொண்டுள்ள நிலையை வைத்துப் பார்க்கும்போது நிச்சயமாகத் தேற மாட்டான். அவனுக்குப் பதிலாக வேறு ஆளையும் தேர்வில் அடிக்க விடமுடியாது. யோசித்துக் கொண்டிருக்கும் போதே ரவி கூறினார், “அந்த குமரேசன்கிட்ட பேசிப் பாரேன். பிளேட்ட மாத்தி வைக்கமுடியுமான்னு”

குமரேசன் எங்கள் கப்பல் கட்டும் தள தேர்வு மையத்தின் கண்காணிப்பாளர்களில் ஒருவன். அட இப்படியும் ஒரு வழியிருக்கே என மனதில் ஒரு நம்பிக்கை வந்தது. ஆனால், இந்த யோசனைக்கு பரமன் ஒப்புக் கொள்ளமாட்டானே. உண்மை, நேர்மை என்று பேசுகிறவர்கள், இம்மாதிரி விசயத்தில் மிகவும் பிடிவாதமானவர்களாக மாறிவிடுவதை நான் பார்த்திருக்கிறேன். இவனும் சம்மதிக்க மறுத்தால் காரியம் கெட்டுவிடும். இவனுக்கு தெரிந்தால்தானே மறுப்பான். அவனுக்குத் தெரியாமல் இந்த வேலையை செய்துவிட வேண்டுமெனத் தோன்றியது. இம்மாதிரி தோன்றியதற்கு என்ன காரணம் எனப் பின்பு பலமுறை யோசித்தபோது கள்ளம் என்பதறியாத அப்பாவித்தனமான அந்த முகம்தான் காரணம் எனத் தோன்றியது.

“சரிண்ணே, குமரேசன் கிட்ட பேசிப் பாக்குறேன். நீங்க போங்க,” என்று அவரை அனுப்பினேன்.

நான் இரண்டாண்டுகளாகப் பணியாற்றுவதால் குமரேசனோடு எனக்குப் பழக்கமுண்டு. குமரேசன் கப்பல் கட்டும் தள வளாகத்திற்குள்ளேயே உள்ள குடியிருப்பில் தங்கிக் கொள்வான். அவன், அந்தப் பெரும் கப்பல் கட்டும் நிறுவனத்தின் நேரடியான பணியாளன் என்பதால் இந்த வசதி. நாங்களெல்லாம் அந்தப் பெரு நிறுவனத்தின் சிறு பணியை மட்டும் சப் காண்ட்ராக்ட் எடுத்து முடிக்கும் நிறுவனத்தின் எளிய தொழிலாளர்கள். எங்களை அவர்களெல்லாம் சற்று இளக்காரமாகவே பார்ப்பார்கள். அல்லது எங்களுக்கு அப்படித் தோன்றும். ஏனென்றால் நாங்கள் அவர்களை மேலானவர்களாக கருதினோம். ஒருவரை உயர்ந்தவர் என்று எண்ணும்போதே இயல்பாக மனம் நம்மை தாழ்வானவர்களாக கருதத் தொடங்கிவிடுகிறது. எங்களின் சம்பளத்தைவிட இரண்டு மடங்குக்கு மேல் மாத ஊதியமாகப் பெறுவதுடன் பல இதர சலுகைகளும் அவர்களுக்கு உண்டு. நாங்கள் அன்றன்றைக்கு வேலைக்குச் சென்றால் மட்டுமே சம்பளம். அதுவும் ஏதாவது கருவிகள் உடைந்துவிட்டால் அதற்கான பணத்தையும் பிடித்துக்கொள்வார்கள்.

மறுநாள் மற்ற யாரிடமும் கூறாமல், குமரேசனைப் போய்ப் பார்த்தேன். என்னைவிட இளையவன்தான். இவனும் தமிழ்நாட்டுக்காரன்தான். சீனர்களும் மலாய்காரர்களும் அதிகமாக பணியாற்றும் இடத்தில் பணியாற்றுவதால் தமிழர்களிடம் சற்றுப் பிரியமாகவே பேசினான். நான் பரமனின் இப்போதய நிலைமையைச் சொல்லி, பிளேட்டை மாற்றும் யோசனையையும் கூறினேன். சிறிது நேரம் யோசித்தபின் சரி செய்யலாம் என்றான்.

டெஸ்ட் அடிக்கும்போது கண்காணிப்பாளர்கள் அரசு தரப்பில் இருந்து வருவார்கள். அடிப்பவரின் கடவுச் சீட்டு , புகைப்படம் போன்றவற்றை உறுதி செய்தபின் வெல்டிங் அடிப்பதைப் பார்ப்பார்கள். வெல்டிங் அடித்தபின் அந்தப் பிளேட்டுகளில் அடித்தவரின் பெயரையும் கடவுச்சீட்டு எண்ணையும் பதிப்பார்கள். அதனை எக்ஸ்ரேக்கு அனுப்புவார்கள். இந்த நடைமுறையில் எக்ஸ்ரே முடிந்தவுடன் முடிவுகளுடன் அந்தப் பிளேட்டுகளையும் திருப்பி அனுப்பிவிடுவார்கள். ஏற்கெனவே தேர்வானவர்களின் பிளேட்டுகளெல்லாம் இங்கேதான் இருக்கும். அவற்றில் நல்ல மதிப்பெண் பெற்றவரின் பிளேட்டை எடுத்து அதில் பதியப்பட்டிருந்த பெயரையும் எண்ணையும் தேய்க்கும் கருவியால் தேய்த்தழித்துவிட்டு அதில் பரமனின் பெயரையும் கடவுச்சீட்டு எண்ணையும் பதித்து எக்ஸ்ரேக்கு அனுப்புவதுதான் திட்டம்.

திட்டம் எந்தப் பிசகும் ஏற்படாமல் நடந்தேறியது. எனக்குள் மிகப்பெரிய நிறைவு தோன்றியது. தினமும் ஒரே மாதிரியான பணிகளையே திரும்பத் திரும்ப செய்வதால் உண்டாகும் சலிப்போடு வாழ்ந்துகொண்டிருந்தேன். இந்தச் செயல் ஒரு சாகசம் போலவும், பாவப்பட்ட ஒருவனுக்கு இணையில்லாத பெரிய உதவி செய்துவிட்டதாகவும் மனதில் ஒரு எக்களிப்பு தோன்றியது.

நாள்கள் வேகமாக ஓடிவிட்டன. பரமன் தன்னுடைய இரண்டாண்டுக்கான பணி அனுமதியை மேலும் நீட்டிக்க வேண்டாமென கூறிவிட்டான். இன்றிரவு அவன் கிளம்புகிறான். அவன் எங்கள் வாழ்க்கை முறையையே மாற்றினான்.

வெல்டிங்கில் தேறிய தகவல் வந்த அன்று ரவி அறைக்கு வந்தார். பரமனுடன் அரைமணி நேரம் பேசியபின் என்னிடம் வந்து நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பினார். அவர் சென்றபின் என்னிடம் வந்த பரமன் இரவு வேலைக்குச் செல்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளதாக தெரிவித்தான். இந்த நிறுவனத்தில் பணியாற்றும் யாரும் வெளி வேலைக்குச் சென்றதில்லை. வெளி வேலைக்கு சென்றால் நாற்பது டாலர் கொடுப்பார்கள் எனக் கேள்விப்பட்டிருக்கிறேன். எங்கள் முதலாளி உடல்நிலை சரியாக இருந்தும் விடுப்பு எடுத்தால் ஒரு நாளைக்கு ஐம்பது டாலர்கள் பிடித்தம் செய்வான். அவன் கொடுக்கும் சம்பளம் இருபது டாலர்தான்.

“இரவு வேலையென்பதால் கம்பெனி வேலைக்கும் இடையூறு இருக்காது” என்று சொன்னான். ஆனால் எல்லோராலும் செல்ல முடியாது. இருக்கும் முப்பது பேரில் பத்து பேர் மட்டுமே இதற்கு ஆர்வம் கொண்டார்கள். வேலை இரவு பத்து மணியிலிருந்து பதினொன்று வரை. வேலையொன்றும் கடினமானதில்லை. பர்கர், பீட்சா போன்று விற்கும் வெளிநாட்டு உணவகத்தில் விற்பனை முடிந்தபின், அங்குள்ள இயந்திரங்களையும் பாத்திரங்களையும் இடத்தையும் துடைத்துக் கழுவிப் பெருக்கி சுத்தமாக்க வேண்டும் அவ்வளவுதான். ஒருமணி நேர வேலைக்குப் பத்து டாலர் சம்பளம். இதே வேலைக்கு நிரந்தரப் பணியாளரைப் பணியமர்த்தினால் அவனுக்கு முப்பது டாலராவது கொடுக்க வேண்டியிருக்கும். எங்களுக்கு இந்தத் தொகை கிடைப்பதே மகிழ்ச்சிதான். இதில் கஷ்டம் என்னவென்றால், பதினோரு மணிக்கு பணியை முடித்தபின் தங்குமிடத்திற்கு வந்து, உறங்கி மீண்டும் காலை ஐத்தரைக்கு எழுந்து வழக்கமான பணிக்கும் செல்லவேண்டும். உடலும் மனமும் ஒத்துழைப்பவர்கள் மட்டும் பணிக்குச் செல்ல முடிவு செய்தோம். ரவி மூலமாகவே பயன்படுத்தப்பட்ட மிதிவண்டிகளை வாங்கித் தந்த பரமன் இரண்டு நாள்கள் மட்டும் பணிக்கு வந்தான். அவன் அறையிலிருந்த வேலூர்க்காரன் தானும் வேலைக்கு வருவதாகக் கூறியவுடன் அவனை வேலைக்கு அனுப்பிவிட்டு இவன் நின்றுவிட்டான். யாராவது பணிக்கு செல்லமுடியாத நிலைமையில் அவர்களுக்கு மாற்றாக இவன் பார்த்துக் கொண்டான்.

பரமன் யாரிடமும் மரியாதைக் குறைவாகவோ, அவசியமில்லாமலோ பேசமாட்டான். தேவையில்லாத விசயங்களில் தலையிடாமல் அமைதியாகவே இருப்பான். இதனால் எங்கள் அனைவருக்குமே அவன்மேல் தனி மரியாதை உண்டானது. உணவு தயார் செய்யும் வேலைகளை, நான்கு பேருடன் அவன் பகிர்ந்து கொண்டிருந்தான். அந்த நான்கு பேருமே இரவுப் பணிக்கும் வந்தார்கள். அதன் மூலம் கிடைக்கும் உபரி வருமானத்திற்குக் காரணமான பரமனுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக அவன் வேலைகளையும் சேர்த்துப் பார்த்துக் கொண்டதுடன் செலவுத் தொகையில் அவன் பங்கை அவனிடம் கேட்காமல் அவர்களே சேர்ந்து போட்டுக் கொண்டார்கள்.

நிறுவனத்தில் பார்க்கும் சிறிதளவு வேலையைத் தவிர எந்தப் பணியும் பரமனுக்கு இல்லை. அறைக்கு வந்தவுடன் புதுப் படம் ஏதும் இருந்தால் பார்ப்பான். இல்லாதபோது கீழே இறங்கிச் சென்று அந்தத் திண்டில் அமர்ந்து வேடிக்கை பார்த்தபடி தனக்குள் ஆழ்ந்திருப்பான்.

இரண்டு வருடங்கள் எவ்வளவு விரைவாக கடந்துவிட்டது. துயராக இருக்கும்போது சேற்றில் சிக்கிக்கொண்டு நகராத சக்கரம் போலிருக்கும் காலம், மகிழ்வாய் இருக்கும்போது மின்காந்த ரயில்போல சட்டென கடந்துவிடுகிறது. பேசிச் சிரித்துக் கொண்டாட்டமாய் இருப்பவனல்ல என்றபோதும் அவன் இருப்பு, பெரு மரத்தின் நிழல்போல மனதில் ஓர் அமைதியைத் தந்துகொண்டிருந்தது. இன்று பரமன் கிளம்புகிறான் என்று எண்ணும்போது ஏனென்று தெரியாத துயர் மனதை அழுத்துகிறது.

அறைக்குச் சென்றவுடன் குளித்து உடனேயே கிளம்பினேன். பரமன் ஏற்கெனவே தயாராக இருந்தான். முதலாளி தன்னிடம் இருக்கும் கடவுச் சீட்டை நேரடியாக விமான நிலையத்திற்கே கொண்டுவருவதாக சொல்லிவிட்டான். வாடகைக் காரில் இரண்டு பெரிய பெட்டிகளுடன் நானும் ரவியும் பரமனுடன் சென்றோம். ஊருக்கு செல்வதற்காக உற்சாகமோ வருத்தமோ இல்லாத முகபாவனையுடனேயே அவன் இருந்தான்.

விமான நிலையத்திற்கு வந்திருந்த முதலாளி கடவுச்சீட்டை பரமனின் கையில் கொடுத்துவிட்டு ரவியை நோக்கி அனுப்பிவிடு என்று கூறியபடி கிளம்பினான். என் பார்வையில் தெரிந்த கேள்விக்கு, “இவன் ஊருக்குப் போகாம அனுமதிச் சீட்டு இல்லாம இங்கேயே இருந்தான்னா முதலாளிதான் அபராதம் கட்டணும்” என்றார் ரவி.

அண்ணே இந்த மாதப்பணம் தரவில்லையே என்று ரவியிடம் பரமன் கேட்க, “மறந்திருவேன்னு பார்த்தேன். எமகாதகனாச்சே. நீயா மறப்ப?” என்றபடி உள் பாக்கெட்டில் இருந்த பணத்தை எடுத்து எண்ணிக் கொடுத்தார். வாங்கிக்கொண்ட பரமன் என்னிடமும் ரவியிடமும் விடைபெற்று உள்ளே சென்றான்.

காரில் திரும்பும்போது ரவியிடம் கேட்டேன், “எதுக்கு அவனுக்குப் பணம் கொடுத்தீங்க?”

“பத்து பேர வேலைக்கு அனுப்புறதுக்கு ஒரு ஆளுக்கு மூணு டாலர்னு, கமிசனத்தான்’ ஒரு வினாடியில் தலைகீழாக தொங்கவிட்டதைப்போல மொத்த ரத்தமும் தலைக்குள் பாய்வதாகத் தோன்றியது. பரமனைப் பற்றி முதலில் இருந்து யோசிக்க ஆரம்பித்தேன். மின்னலெனத் தோன்ற, “எங்க கம்பெனிக்குள்ளேயே வராத உங்களுக்கு குமரேசனப் பத்தி எப்படித் தெரியும்?”

“பரமன் சொல்லித்தான் தெரியும்” என்றார், எந்த ஈவிரக்கமும் இல்லாமல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.