சிந்திய ரத்தத்தில் ஒரு ஓவியம்

“டேய்.. கோபாலு செகண்ட் என்டுல ஏதும் பழைய சைக்கிள் இருந்தா சொல்லு, பய சைக்கிள் உட கத்துக்கிட்டான். நேத்திக்கு கூட அவன் அம்மாவ உட்கார வச்சிக்கிட்டு ஓட்டுனான் பாரு. அத நீயி பார்த்திருக்கனும். ரெண்டு பேரு மொகத்துலயும் அவ்ளோ சந்தோசம். அவ மொகத்துல அத்தனை சந்தோஷத்தை நான் இந்த பதினாலு வருஷத்துல பாத்ததில்லடா மாப்ள…” ரம் குடித்த போதையில் ஆறுமொம் தலையை சிலிப்பி கொண்டே சொன்னார்.

“இதெல்லாம் ஒரு மேட்டரா, மாமா செஞ்சிடலாம். விடுங்க. சரி மாமா சைக்கிளுக்கு காசை மட்டும் எடுங்க…” அவரின் நினைவுகளை மடை மாற்றினான் கோபாலு.

“ஆமா. காசு குடுக்காம இவன் கிழிச்சிருவான் மயிரான். நீ சைக்கிளை பாருடானாக்கா பேசுறான் பெரிசா. சும்மாவா கேட்டேன், காசு கொடுக்க மாட்டேனா?…”அறுமொம் ரம்முடன் எரிந்து விழுந்தார்.

“ஏ…சித்தப்பா.. ஏன் கோபப்படுற? கோபால் கிட்ட சொல்லிடல்ல, அது பாத்து சொல்லும் விடு…”தில்லைநாதன் போதை மயக்கத்தில் உளறினான்.

“நீ வாய மூடுடா..பெரிய மனுஷன் கணக்கா பேசுவான், ஒரு கட்டிங்க குடிச்சுப்புட்டு, போடா அங்க…” ஆறுமொம் மீண்டும் எரிந்து விழுந்தார்.

ஞாயிற்றுக்கிழமை மதிய மீன் குழம்புக்கு மூவரும் தயாராகிக் கொண்டிருந்தார்கள். குழம்பில் வீராயி கிழவியிடம் வாங்கிய செங்காலா மீன் கொதித்துக் கொண்டிருந்தது, கூடவே சரசும்.

தில்லைநாதனுக்கும் கோபாலுக்கும் அவர் சுபாவம் பழகி விட்டிருந்தது. ஆறுமொம் சித்தப்பா சட்டென நாகமா சீரும் அடுத்த நொடி சாந்தமா மாறி போகுமென்று தில்லைநாதன் அறிந்தே இருந்தான். அவரின் செல்ல கோபத்தை இருவரும் ஒருவரையொருவர் கள்ளத்தனமாக பார்த்துக்கொண்டும் சிரித்துக் கொண்டும் இருந்தனர்.

அவர் சீண்டபட்ட நாகமாக சீறி கொண்டிருந்தார்.

அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள்.

அடுத்த ரவுண்ட் முடிந்திருந்தது.

ஆறுமொம் போதையில் நீர் கோர்த்த கண்களுடன் தன் வலக் கால் மூட்டுடையும் கணுவையும் பார்த்தார். லேசாக மூட்டை வருடினார். காப்பு காச்சி இறுகிப்போன சொர சொரப்பான கைகளில் பால்யத்தில் உண்டான வடு தட்டுப்பட்டது. சிறுவயதில் சைக்கிள் உட கத்துகிட தவறி விழுந்து, நொறுங்கிய மூட்டும், கணுக்காலும், விலகிய வேட்டியும், அவர் நின்ற கோலமும் நினைவில் வந்து நெஞ்சை தைத்தது.

சிராய்ந்த கைகளில் தோல் வயண்டு உள் சதை வெளுப்பாக தெரிந்தது. அதன் மேலே மெல்ல மெல்ல சிவப்பு பரவிக்கொண்டிருந்தது. உடைந்த மூட்டிலிருந்து ஒழுகும் ரத்தமோ வலியோ அவருக்கு பெரிதாக தெரியவில்லை. விலகிய வேட்டியில் வெளிப்பட்ட தன் வயது மட்டுமே அவரை பெரிதும் காயபடுத்தியது. அப்போது தெருவில் இருந்தவர்களை ஒற்றை கை கொண்டு எண்ணி விடலாம் ஆனாலும் ஊரே பார்த்து விட்டார் போல தோணியது. வலியும் அவமானமும் பிய்த்து தின்றது அவரை. அப்போது விட்டது தான் சைக்கிளை. அதன் பிறகு சைக்கிள் விட வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு தோன்றியதேயில்லை.

பின்னே எப்பவோ ஒருமுறை கேரியரில் அமர்ந்து சவாரி செய்யும் போது குதிகாலை சக்கரத்தில் விட்டுக் கொண்டார். ரிம்மில் வெட்டுப்பட்ட குதிகாலோடு வீட்டுக்கு வரவே அசிங்கமா போய்விட்டது. சரி, தனக்கும் சைக்கிளுக்கும் ராசியில்லை என்று அதன் பிறகு சைக்கிளை அவர் தொட்டது கூட கிடையாது. சைக்கிள் மீது ஏதோ ஒருவித தீரா வெறுப்பும் அச்சமும் அவருக்கு இருந்தது. யாரேனும் சைக்கிளில் விடுறேன் வா வென்றாலும் மறுத்து விடுவார். எங்கே போனாலும் நடை தான். அவரின் கால்கள் நன்கு நடை பழகி இருந்தது. நடந்து நடந்து அவரின் கால் நரம்புகள் திமிறிக்கொண்டு வெளியே புடைத்து தெரிந்தன. கால் நகங்கள் கோணல்மாணலாக முரண்டு நிற்கும்.

சீத்தி சீத்தி அவர் நடக்கும் நடையில் ஒரு இசை இருக்கும். அவரின் செருப்பு காதுகள் உயர்ந்து நின்றன. செருப்பில் அவரின் உள்ளங்காலின் ரேகைகள் பதிந்து இருந்தன. மழை நீர் தேங்கி நிற்கும் அளவுக்கு சின்ன சின்ன விரல் தடங்கள். செருப்பின் குதிகால் பகுதிகள் சரிந்து தேய்ந்து போயிருந்தன. நடக்கும் நடை கொஞ்சம் நழுவினால் குதிகால் தரை தட்டும்.

நடந்து நடந்து அவரின் பாதங்கள் பாளம் பாளமாக வெடித்திருந்தது. நகம் வெட்டும்போது காய்ச்சி போன உள்ளங்கால் சதைகளையும் பிளேடால் அறுத்து வீசுவது அவர் வழக்கம்.

அவருக்கு சைக்கிள் ஓட்டத் தெரிந்த சிநேகிதர்கள் அதிகம். எங்கேனும் கோயில் குளம் சினிமா என்று வெளி செல்ல கூப்பிட்டால் கூட, நீங்க போய்க்கிட்டே இருங்க, நான் பின்னாலே வந்து சேந்துகிறேன் என்று சொல்லிக்கொண்டே நடக்க ஆரம்பித்து விடுவார். நாங்க சைக்கிளை உருட்டி வந்து சேரவும் ஆறுமொம் நடந்து வந்து சேரவும் சரியாக இருக்கும் என்று அவரின் பல நண்பர்கள் சொல்லுவார்கள்.

வயது தளர்ந்த இன்றும் கூட அவரின் நடைக்கு யாரும் ஈடு கொடுக்க முடிவதில்லை. இந்த மனுசனோட வெளியே எங்கும் போய் வர லாயக்கு கிடையாது. பின்னாடி வர்றவங்களை பத்தியெல்லாம் கவலையில்லாம வேகு வேகு ன்னு போவாரு பாருனு சரசு அடிக்கடி சொல்லி கொண்டே இருப்பாள். அப்படித்தான் ஒரு முறை மணம் ஆன புதுசுல ஒன்னாம் ஆட்டம் சினிமாவுக்கு கூட்டிட்டு போனாரு, போகும்போது எப்படியோ சமாளிச்சி தத்தக்கா பித்தக்கா னு பின்னாடியே ஓடி போய்ட்டேன். படம் முடிஞ்சி கொட்டாயிலிருந்து வெளிய வந்து பாத்தா இவரை ஆளையே காணோம். எனக்கு அப்போ பத்தம்போது இருபது வயசு இருக்கும். எனக்கு ஊரும் தெரியாது உலகமும் தெரியாது கொட்டாய் வாசலிலே பேந்த பேந்த முழிச்சிக்கிட்டு நின்னேன். வர்ற போறவங்களை பார்த்து பயமா வந்திச்சு. அழுக பொங்கி பொங்கி வருது. முந்தானையை விரலோடு சேர்த்து சுத்திக்கிட்டே நின்னேன்.

இவரு சர சரவென வீட்டிற்கே போய்ட்டாரு போல. வீட்டுக்கு வந்த பின்னாடி தான் தெரிஞ்சிருக்கு நான் இல்லாதது. பின்ன மறுபடியும் கொட்டாய்க்கு வந்து என்னை கூட்டிட்டு போனாரு. வழியெல்லாம் தெண்டம் தெண்டம் னு திட்டிக்கிட்டே வந்தாருன்னா பாரேன்னு சரசு ஒவ்வொரு முறை சினிமாவுக்கு போகும் போதெல்லாம் சொல்லி சொல்லி சிரிப்பாள். அதில் அவளுக்கு, எங்க வீட்டுக்காரருக்கு எம்மேல எவ்ளோ பிரியம் பாத்தியா னு சொல்லி கொள்வது போல ஒரு திருப்தி இருந்தது.

தோ,,,இப்போ கூட, திங்கட்கிழமை காலையில அவசரம் அவசரமாக கிளம்பி விழுப்புரம் பாசிஞ்சர் வண்டிய பிடிக்க நடப்பார் பாரு நடை. யப்பா.

அது நடையல்ல சற்றேறக்குறைய ஒரு ஓட்டம்.

சைக்கிள் விட கற்றுக் கொள்ளாததை பற்றி பெரிதும் அலட்டி கொள்ளாத மனிதர், இப்போது தன் பிள்ளை அவன் அம்மாவை வைத்து சைக்கிள் விடுவதை திண்ணையில் உட்கார்ந்து கொண்டு பதப்பதைப்போடு முந்தைய மாலையில் பார்த்தது அவரின் கண்களில் நீர் கோர்த்து திரையிட்டு கொண்டது.

ஆறுமொம் திண்டுக்கல்லிலிருந்து திர்ணாமலைக்கு இடம் மாறியதும் சொந்த ஊரான மாயவரத்துகே பிள்ளை குட்டிகளோடு குடி அமர்ந்து விட்டார். விட்டு போன சொந்தங்கள் மீண்டும் கிடைத்ததில் கொஞ்சம் மன நிறைவு தான் என்றாலும் அவர் சொந்த ஊரை முழுதும் ரசிக்கவில்லை. எங்கே யாரேனும் உதவி கேட்டு வந்து விடுவார்களோ என்ற ஒருவித பதட்டம் அவருக்கு இருந்தே வந்தது. யாருக்கும் எதையும் செய்ய கூடாது என்றெல்லாம் இல்லை, அவரிடம் கொடுத்து உதவ கையிருப்பெல்லாம் இருப்பதில்லை. அவர் சம்பாத்தியம் சாப்பாட்டிற்கும் பிள்ளைகள் படிப்புக்கு சரியா இருந்தது. இதுல ஊருக்கு எங்க செய்ய.

கவர்மெண்ட் ஆபீஸ்ல அட்டெண்டன்ட் வேலைக்கு போறது ஊருக்கும் உறவுக்கும் கலெக்டர் உத்தியோகத்துக்கு போறது மாதிரி இருந்தது. அதில் அவருக்கு கொஞ்சம் கர்வமும் இருந்தது. சொந்தக்காரங்க கிட்ட தான் கலெக்டரேட்டில் வேலை பார்ப்பதாக பெருமையாக சொல்லிக் கொள்வார்.

காசு குடுத்து ஒரு வா டீ குடிக்க கூட அவ்ளோ யோசிப்பாரு மனுஷன்.ரொம்ப யோசிச்சிவிட்டு சரி விடு கழுதய னு குடிக்காமலே வந்துடுவார். பசிச்ச வயித்துக்கு கிளப்புக்கு போயி சாப்பிட்டா தான் என்ன வந்துது. உடம்ப பாத்துக்காம, இப்பிடி காசை சேத்து என்ன பண்ண போறானு அவர் பின்னாடி பேசாதவங்க இல்ல. அவர் இதையெல்லாம் கண்டுக்கவே மாட்டார்.

சனி ஞாயிறுகளில் தவறாமல் வீட்டுக்கு வந்துவிடுவார். குண்டு அரிசி சோறும், தண்ணியாக வைத்த மீன் குழம்பும் சாப்பிட. வீட்டில் சாப்பிடுவதில் செலவு இல்லை என்பது அவரின் நம்பிக்கை. என்னவோ வீட்டில் சமைக்க தேவைப்படும் சாமான்கள் சும்மா கிடைப்பது போல!

எல்லோரையும் உறவு சகிதம் தான் அழைப்பார். எல்லோரிடமும் அன்பு செய்யும் அவருக்கு திருப்பி கிடைப்பது என்னவோ அதிருப்தி தான். அவரை சொந்தங்களில் யாருக்கும் அவ்வளவாக பிடிப்பதில்லை. காரணம் ஒன்றுதான். அவரின் அன்புக்கு ஒரு லட்சியம் இருந்தது. அது, எனக்கு உன்னிடமிருந்து அன்பை விட்டு எதுவும் வேண்டாம், நீயும் என்னிடம் எதையும் கேட்காதே!

“மாமா, ராமலிங்கம் சைக்கிள் கடையில ஒரு சைக்கிள் பாத்தேன். சின்ன சைக்கிள். சிகப்பு கலரு. அவனுக்கு சரியா இருக்கும். பள்ளிடம் போய் வர. ஓவராயில் பண்ணிருக்கு. முந்நூற்றி ஐம்பது சொல்றான், முந்நூறுனா முடிச்சிறலாமா? என்ன சொல்றீங்க? ” கோபாலு தரகு சொல்ல கைகளை பிசைந்தவாறு நின்று கொண்டிருந்தார் ஆறுமொம்.

“என்ன மாமா என்ன யோசிக்கிறீங்க. வாங்க போவோம். வண்டி நல்ல வண்டி விட்டுட்டா அப்புறம் கிடைக்கிறது கஷ்டம்…” கோபாலு.

“இல்லடா தம்பி…காசு ஜாஸ்தியாட்டம் தெரியுது. அதான் பாக்குறேன்…” ஆறுமொம்.

“பத்து இருவத பாக்காத மாமா, நல்ல வண்டி முடிச்சிக்கோ. வண்டியதான் ஒருமுறை வந்து பாரேன். பிடிச்சிருந்தா பாக்கலாம். இல்லனா வந்துடலாம். அவ்ளோ தானே” மீண்டும் கோபாலு.

மண்ணெண்ணெயால் துடைக்கப்பட்டு வெயிலில் ஒளிர்ந்து கொண்டிருந்தது அந்த சைக்கிள். முற்றிலும் வண்ணம் உதிர்ந்த அந்த சைக்கிள் ஒரு காலத்தில் சிகப்பு நிறத்தில் இருந்திருக்கும் என்பதை போல பின் சக்கர மட்கார்டில் லேசாக சிகப்பு ஒட்டி கொண்டிருந்தது. முன்பக்க மட் கார்டு சமீபத்திய மாற்றமாக இருக்கக்கூடும். சிவப்பு நிறம் நன்றாகவே தெரிந்தது. வண்டியின் நிறம் சிவப்பு என்பதை கோபாலு இதை வைத்துதான் சொன்னது போல தோன்றிற்று. எண்ணெய் பூசப்பட்ட டயர்கள் புதுசு மாதிரி கருத்து ஜொலித்தது. சைக்கிளுக்கு கொஞ்சமும் பொருந்தாத மாதிரி துருத்தி கொண்டு பளபளத்தது புதிதாக மாட்டப்பட்ட பெல். வெயில் பட்டு தெறித்த அதன் ஒளியில் ஆறுமுகமும் பிரகாசித்தது அவருக்கு.

சைக்கிள் பார்க்க கிளம்பிய அப்பாவும் கோபாலும் பேசிக்கொண்டதை ரகசியமாக கேட்டுக்கொண்டே, ஓர கண்களில் ஆசைகளை மறைத்து அலட்டிக்கொள்ளாமல் பள்ளிடம் கிளம்பிக் கொண்டிருந்தான் பாசு.

எப்போதும் போல் இல்லாமல், அன்றைக்கு சைக்கிள் பற்றிய நினைப்பிலேயே மூணு கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள பள்ளியின் தூரம் பெரிதாக தெரியவில்லை அவனுக்கு. நிச்சயமாக அவன் நடக்கவில்லை. எடையற்ற உணர்வில் காற்றில் மிதந்தான்.

வகுப்பில் எந்த பாடமும் மனதில் பதியவில்லை. மனதுக்குள் ஒரே காட்சி தான், நாளை சைக்கிளில் பள்ளிக்கூடம் வருவது மாதிரி.

மதிய நேரத்திற்கு அம்மா கொடுத்துவிட்ட பொடி தூவிய இட்லிகளை குருகுருத்தான்.
காலையில் சுட்ட இந்த காய்ந்து போன இட்லிகளை மதியமும் சாப்பிடும் தொல்லைக்கு இன்றோடு முற்றுப்புள்ளி. நாளை முதல் மதியம் சாப்பாடு வீட்ல. சுடசுட வோ அல்லது பழையதோ. எதுனாலும் சரி. யப்பா இந்த காய்ந்த இட்லி மட்டும் வேண்டா.

எதிர்ப்படும் எல்லோரிடமும் சொன்னான், எங்க அப்பா எனக்கு சைக்கிள் வாங்க போயிருக்காங்க. நாளைக்கு நான் பள்ளிடம் சைக்கிளில் தான் வருவேன்.

பள்ளி முடிந்து விரையும் மாணவர்களுக்கு வணக்கம் சொல்லிக்கொண்டிருந்தார் ‘வணக்கம் தாத்தா’. அவருக்கு அது தான் பெயர். தாத்தா ‘வணக்கம் னு ஒரு வாட்டி சொன்னா போதும் வணக்கம் வணக்கம் னு சொல்லி கொண்டே இருப்பார். அவராக நினைத்து கொண்டு நிறுத்தினால்தான் உண்டு. சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது வணக்கம் சொன்னால் கூட வாயிலிட்ட சோத்தை கைகளில் துப்பிவிட்டு வணக்கம் சொல்வார். சில மாணவர்கள் அவரிடம் சேட்டை செய்வதும் அப்பப்போ நடக்கும். வேண்டும் என்றே வணக்கம் சொல்லியே கலைத்து நிறுத்திய அவரிடம் மீண்டும் வணக்கம் சொல்லி அவரை சீண்டுவிடுவர்கள். அவருக்கு அந்த சேட்டை மாணவர்களை எல்லாம் தரம் பிரிக்க தெரியாது. அவரளவில் எல்லோரும் ஒன்று தான். வணக்கம் சொல்லும் எல்லோருக்கும் பதில் வணக்கம் சொல்ல வேண்டும். அவ்ளோதான்.

ஒட்ட வெட்டிய வெளுத்த நரை முடி, முகத்தில் அங்கங்கே குத்தி நிற்கும் வெளுத்த மீசை தாடி. சட்டை அணியாத வெற்று மார்பு உடம்பு. கணுக்கால் தெரியும் அளவுக்கு தொப்புளுக்கு கீழே சுற்றிய அழுக்கு வேட்டி. அவர்தான் வணக்கம் தாத்தா. மரத்தடியில் நிறுத்தியுள்ள மாணவர்களின் சைக்கிளை பார்த்து சுற்றி கொண்டிருப்பதும் அவைகளை எண்ணுவதும்தான் அவரின் தலையாய வேலை. அவரே தேடி கொண்ட ஊதியம் இல்லா வேலை. தினமும் அவருக்கு வணக்கம் சொல்லுவதை முக்கியமான வேலையாக வைத்திருந்தான் பாசு. அவருக்கு அவனின் பெயரோ முகமோ தெரியாது. அவரை பொறுத்தளவில் காக்கி ட்ராயர் வெள்ளை சொக்கா போட்டுள்ள பசங்க எல்லோரும் ஒன்று தான்.

பள்ளி கேட்டைச் சாத்தும் வரையில் அங்கேயே இருப்பார் வணக்கம் தாத்தா. அதன் பிறகு எங்கு போவார், எங்கே சாப்பிடுவார் என்றெல்லாம் தெரியாது. மறுநாள் காலையில் வணக்கம் சொல்ல தயாராக இருப்பார்.

சனி ஞாயிறுகளில் அவரை பார்க்க முடியாது. ஆனால் எப்போதாவது சிறப்பு வகுப்புகள் நடக்கும் விடுமுறையில் வணக்கம் தாத்தாவை பள்ளிக்கூட தெருவில் சுற்றி வருவதை பார்க்கலாம். பள்ளிக்கூட அட்டவணையின் ஒரு பிரதி அவரிடம் இருக்குமோ என்று கூட நினைக்க தோன்றும்.

வழக்கம்போல தாத்தாவுக்கு ஒரு வணக்கம் போட்டுவிட்டு பள்ளியின் சைக்கிள் ஸ்டாண்ட்க்கு போனான் பாசு. வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்ட விதவிதமான கலர் கலரான சிறிதும் பெரிதுமான சைக்கிள்களை பார்த்து பார்த்து பரவசமானான். ஒரு சின்ன நுழைவில் சைக்கிள்களை முட்டி கொண்டு வெளியே வர பசங்க போடும் கூச்சலும், கினிக் கினிங் வென்ற பெல்லின் ஓசையும் அவனை கிளர்ச்சி கொள்ள செய்தன. சைக்கிளை நாளைக்கு நிறுத்தபோகும் இடத்தை இப்போதே அவன் முடிவு செய்துவிட்டு திரும்பினான்.

“பாசு… டேய்…பாசு” சக நடையர்கள் சத்தம் போட்டனர்.

“டேய், சீக்கிரம் வாடா, இப்போ நடக்க ஆரம்பிச்சா தான் அஞ்சரை மணிக்காவது வீடு போய் சேரலாம். பசிக்கிது வாடா” னு தன் தோழர்கள் கூப்பிடுவது அவன் காதில் விழவில்லை. அவர்கள் மேல் ஒரு கர்வ பார்வை வீசி நடந்தான். யாரிடமும் எதுவும் பேசவில்லை. மனது வீட்டிற்கு வந்துவிட்டிருக்கும் சைக்கிள் பெடல்களை மிதித்துக் கொண்டிருந்தது. விறு விறுவென எட்டு வைத்து தாவி தாவி தெரு முனையை அடைந்ததும், கறை உடைத்த காவிரி போல ஒரே ஓட்டம் தான். வீட்டுள்ளே நின்றான்.

திண்ணையில் சைக்கிள் இல்லை.

முந்நூற்றி ஐம்பது தான் கடைசி ரேட்டு…. கறாராக சொன்னார் சைக்கிள் ராமலிங்கம்.

“அண்ணே! வண்டி பழைய வண்டிண்ண. முன்னூரே அதிகம். அது கண்டிஷன பாரேன். இதுக்கு போயி இவ்ளோ கேக்குற..”ஆறுமொம் பேரத்தில் இருந்தார்.

“யே… இது பழைய கம்பெனி சைக்கிள்யா. தூக்கி பாரு என்னா கணம் னு இப்போ உள்ள வண்டியெல்லாம் ஒன்னுமே இல்ல. இது தரமான வண்டி. நான் இதுக்கு நூறு ரூபா போட்டு ஓவராயில் பண்ணி டூயூப் மாத்தி , பூட்டு போட்டு, சீட்டெல்லாம் மாத்தியிருக்கேன். பாத்தில்ல புதுசு மாதிரி மின்ரத…”

ஒரே விலைதான் முந்நூற்றி அம்பது ..அங்கேயே நின்று கொண்டிருந்தார் ராமலிங்கம்.

இறுதியாக முந்நூற்றி இருபதுக்கு வந்து சேர்ந்தது ஆறுமொம் வீட்டின் முதல் அசையும் சொத்து.

ஏமாற்றத்துடன் பார்த்தான் பாசு, அது, யம்மா எனக்கு சைக்கிள் கிடையாதா என்பது போல இருந்தது.

வாசலில் மஞ்சள் பொட்டிட்டு செவ்வந்தி பூ சூடி நின்றது அந்த பழைய இரும்பு.

கனவில் மிதித்த நேர் ஹாண்டில் சிவப்பு ஸ்ட்ரீட் கட் சைக்கிள் மெல்ல மெல்ல மறைந்து புள்ளியாய் தேய்ந்து போனது பாசுவுக்கு.

கோபமாகவும் ஏமாற்றத்துடன் சைக்கிளை சுற்றி சுற்றி வந்தான். சைக்கிளுக்கு கிஞ்சித்தும் சம்பந்தமில்லாத பச்சை நிறத்தில் கவர் மாட்டப்பட்ட பெரிய சீட்டு. அது பெரிய சைஸ் சைக்கிளுக்கும் பெரிய சீட்டு. ஜிவு ஜிவு னு கண்ணை பறிக்கும் கலரில் வீல்களில் காப்பு சுத்தியிருந்தது. துருப்பிடித்த அந்த பழைய இரும்பு ஃபிரேமில் பச்சை நிறத்தில் ‘ராமலிங்கம் சைக்கிள் கடை, கொரநாடு’ என்று ஒரு துண்டு பொருத்தப்பட்டிருந்தது. ஓய்வு பெற்ற போலீஸ்காரன் போல தளர்ந்திருந்தது ஸ்டாண்ட்.

உற்று பார்த்து உச்சரித்தான் a….v…. o…. n. புதிதாக இருந்தது அதன் பெயர். அது அவன் கேள்விக்கும் அப்பால் இருந்தது. பள்ளிக்கூட ஸ்டாண்டில் நிற்கும் எல்லா சைக்கிள்களின் பெயர்களை தெரிந்திருந்தான். அவைகளில் ஒன்று கூட Avon என்ற பெயரில் படித்த நினைவில் இல்லை.

அந்த தாத்தா சைக்கிள் அவனுக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இதை எப்படி ஓட்டிக் கொண்டு பள்ளிடம் போவது. சக நண்பர்களை எப்படி எதிர்கொள்வது. அவர்கள் எல்லோரிடமும் புத்தம் புதிய சைக்கிள்கள் இருந்தன. இந்த சைக்கிளை பார்த்து அவர்கள் செய்யப்போகும் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாக போவதை நினைத்து ஒரே அவமானமாக இருந்தது. முட்டி வந்த அழுகையையும் கண்ணீரையும் கண்களுக்குள்ளே புதைத்து நின்றான் பாசு.

“கினிங்…. கினிங்” என்று புதுசாக சத்தமிட்டது பெல்.

“அப்பா நிக்குது பாரு, ஒருமுறை ஓட்டி காட்டுடா” என்று சரசு சொன்னாள்.

நம்ம தான் சைக்கிள் உட கத்துக்க முடியாம நடந்து நடந்தே காலம் முடிஞ்சிட்டுது. அதான் சும்மா புதுசு வாங்குற வரைக்கும் இதே நல்லா ஓட்டி கத்துக்கிடட்டும் னு வாங்குனேன் என்று ஆறுமொம் பக்கத்து வீட்டுக்காரரிடம் பேச்சு கொடுத்துக் கொண்டே அவன் சைக்கிள் விட போவதை ஓர கண்களில் பரவசம் பொங்க பார்த்து கொண்டிருந்தார்.

திருவேறிய ஹண்டிலை பிடித்து கொண்டு உந்தி உந்தி லாவகமாக காலை தூக்கி போட்டு மெத்தென்று அந்த பச்சை சீட்டில் உட்கார்ந்த பிள்ளையயை கண்ணீர் மின்னும் கண்களில் பார்த்து கொண்டிருந்தனர் சரசும் ஆறுமொமும்.

ஸல்லென்று சத்தமே இல்லாமல் பூபோல நகர்ந்தது அந்த தாத்தா சைக்கிள். அவனின் கோவமான விருப்பமில்லாத ஒவ்வொரு மிதியையையும் அமைதியாக ஏற்று கொண்டது.

பாசு அவன் அம்மாவை பின்னால் ஏத்தி கொண்டு இருபத்தி நாலாவது வார்டை இரண்டு முறை சுற்றி வந்தான். இரண்டாவது சுற்றில் அந்த தாத்தா சைக்கிள் முழுமையாக அவனுள் கரைந்து போயிருந்தது.

“ஏங்க நீங்க ஒரு ரவுண்டு போயிட்டு வாங்களேன், என்னா சூப்பரா ஓட்டுறான்” என்று சரசு சொன்னாள்.

ஆறுமொம் இறுக்கமாக மறுத்துவிட்டார்.

பக்கத்துவீட்டுக்காரர் சொன்னார்.

இல்லை என்பதுபோல மறுத்துவிட்டு வீட்டுள்ளே சென்றவரை தடுத்து நிறுத்தியது அந்த அழைப்பு.

“யப்பாவ் வண்டி சூப்பரா போது, செமையா போது, எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு, நீயும் வாயேன், ஒரு ரவுண்டு போவோம்”.

பின்னோக்கி நகரும் மனிதர்களை அவதானித்து கொண்டே கேரியரில் அமர்ந்திருந்தார் ஆறுமொம். காற்றை கிழித்து விரைந்தது பாசுவின் சைக்கிள். இடது கையில் கட்டியிருந்த பச்சை டயல் சிட்டிசன் வாட்சை லேசாக தட்டி தட்டி உயிர்ப்பித்தார். மூட்டை லேசாக வருடி பார்த்து கொண்டார். அவர் சைக்கிளில் அமர்ந்து செல்வதை ஊரே பார்த்து கொண்டிருந்தது.

‘கினிங்…. கினிங்’ என்று புதுசாக சத்தமிட்டது பெல்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.