யூதாஸ்

னது ஜமைக்க நண்பன் ஜோர்டான், தனது முறுக்கிய இரும்பு போன்ற கையால் யூதாஸின் மூக்கை உடைத்தபோது சட்டெனச் சிரிப்புவர முகத்தைத் திருப்பிக் கொண்டேன். உள்மனதிற்குள் ‘இன்னும் ரெண்டு போடுடா…’ என்று நினைத்தவாறு இருவருக்கும் இடையில் சென்று நின்று ஒரு கொலை விழாமல் தடுத்தேன். என்னால் முடியாததை ஜோர்டான் செய்திருக்கிறான். எனக்கு வாய்ப்பு கிடைத்திருந்தால்கூட என்னால் அதைச் செய்திருக்க முடியாது. யூதாஸைக் கொன்றுவிடும் அளவிற்கு வன்மம் எனக்கும் உண்டு. எனக்கு மட்டுமன்று, எங்கள் அலுவலகத்தில் பலருக்கும் உண்டு. ஜோர்டானும் பல சூழ்நிலைகளில் பொறுமையாக இருந்து விலகிச் சென்றிருக்கிறான். ஆனால், இன்று அவன் ஒரு முடிவோடுதான் எங்களோடு குடிக்க உட்கார்ந்திருப்பான்.

வழக்கம்போல மூன்று பேருக்கும் நான்தான் அளவெடுத்ததுபோல ஊற்றினேன். முதல் இரண்டு சுற்றுகள் கேலியும், நகைச்சுவையுமாக நன்றாகத்தான் சென்றன. மூன்றாம் சுற்றின் முடிவில் யூதாஸ் கொஞ்சம் சத்தமாகப் பேச ஆரம்பித்தான். தான் சன்ட் மார்ட்டின் தீவில் வந்து அடிப்படைத் தொழிலாளியாகச் சேர்ந்தது, எல்லாத் துறைகளிலும் கடினமாக உழைத்து முதலாளியிடம் நல்ல பெயர் வாங்கியது, படிப்படியாக பதவி உயர்வும் ஊதிய உயர்வும் வந்து சேர்ந்தது, தன்னோடு இரவுகளைக் கழிக்க எத்தனை பெண்கள் வரிசையில் வந்தனர், தன்னை எதிர்க்க முயன்ற யாரும் இங்கே நிலைக்க முடியாமல் போனது, இப்போது எப்படி தன் பேச்சை மட்டுமே முதலாளி கேட்கிறார் என தன் அருமை பெருமைகளை நீண்ட பிரசங்கம்போல அடுக்கிக்கொண்டே சென்றான். நாங்களும் இடையில் பேச்சை மாற்ற முயன்று பார்த்தோம். அவன் விடுவதாக இல்லை. தனது பெருமைகளை விடுத்து, எங்களுடன் வேலை செய்யும் மற்ற நண்பர்களைப் பற்றியும் அவர்களது மனைவிகளைப் பற்றியும் அசிங்கமாகப் பேச ஆரம்பித்தான்.

“எல்லா நாய்களையும் என் அறையிலுள்ள CCTV-யில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன். பிழைக்க வழியற்ற நாய்கள். நூறு டாலருக்காக உடம்பை விற்கும் நாய்கள். இருநூறு கொடுத்தால் தங்கைகளையும் மனைவியையும் கூட்டிக் கொடுக்கும் நாய்கள்…”

ஜோர்டான் கண்கள் சிவக்க, “மேனேஜர் யூதாஸ், இப்படிப் பேசாதீர்கள். நாளைக் காலை எல்லோரும் மீண்டும் சந்திக்கத்தான் போகிறோம்…” என்று கடுமையாகக் கூறினான்.

அவனைப் பார்த்து அலட்சியமாகச் சிரித்த யூதாஸ், “ஓ, உனக்கும் கோவமெல்லாம் வருமா ப்ளாக்கி? நீ மிகவும் அமைதியானவன் என்றல்லவா நினைத்தேன்? இந்தா, இந்தச் கோழிக்காலைக் கடித்துக்கொண்டு அமைதியாக இரு..” என்று ஒரு கோழிக்காலை அவனது தட்டில் தூக்கிப் போட்டான்.

ஒரு நொடி என்னைப் பார்த்த ஜோர்டான் சட்டென எழுந்து விலகிச் சன்னலருகே சென்று ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான்.

“என்ன ப்ளாக்கி? கோவம் வந்துவிட்டதா? திருப்பிக்கொண்டு போகிறாயே? உனது பின்புறம் நல்லவொரு வடிவமாக இருக்கிறதே…சந்தையில் உனக்கு நல்ல விலை கிடைக்கும்..என்ன? ஹிஹி…” என்று தன் கையிலிருந்த சிகரெட் துண்டை எடுத்து ஜோர்டான் மீது வீசினான் யூதாஸ்.

ஜோர்டான் கண்டுகொள்ளாமல் புகைத்துக் கொண்டிருந்தான். நான் என்ன செய்யவெனத் தெரியாமல், எதுவும் விபரீதமாக நடந்துவிடக் கூடாதென யோசித்தவாறு இருவருக்கும் இடையில் இருந்தேன். ஆனால், அப்படி ஏதும் விபரீதமாக நடந்தால் எந்த நொடியிலும் நானும் அவனோடு சேர்ந்து கொள்வேன், எனக்கிருந்த கோவத்திற்கு ஒரே அடியில் அவனது மண்டையைத் தெறிக்கவிட்டிருப்பேன், ஒரு பேஸ்பால் மட்டையால் அவனது மூக்கை உடைத்து, தலைகீழாகக் கட்டித் தொங்கவிட்டு….

தொடர்ந்து பிரெஞ்சிலும், ஆங்கிலத்திலும் இருப்பதிலேயே அசிங்கமான வார்த்தைகளைப் பாட்டாகப் பாடினான் யூதாஸ். சட்டென, “எல்லா நாய்களும் என் மூத்திரத்தைக் குடித்து வாழ்கின்றன..” என்றான்.

மெதுவாகத் திரும்பிப் பார்த்த ஜோர்டான் சிகரெட்டைக் கீழே போட்டுத் தனது காலால் மிதித்துத் தேய்த்துவிட்டு தீர்க்கமாக எங்களைப் பார்த்து நடந்து வந்தான். வந்து நாற்காலியில் அமர்ந்தவன் என்னைப் பார்த்து, “கெவின், இவரை அமைதியாக இருக்கச் சொல்… இன்னும் ஒரு வார்த்தை இவர் தவறாகப் பேசினால் இந்த இடத்திலேயே இவரது மூக்கை உடைப்பேன்…” என்றான். ஒரு நொடி அந்த காட்சி என் முன் வந்துபோக, உற்சாகமும் குழப்பமுமாக, “விடு ஜோ, போதை தலைக்கேறி விட்டது… அடுத்த சுற்றில் கட்டிப்பிடித்து ஆடுவார் பார்..” என்றேன்.

இதைக் கேட்ட யூதாஸ், “என்ன இந்திய நாயே? அந்த ஜமைக்க நாயிடம் என்ன ரகசியம் பேசுகிறாய்? உனக்கும் சிக்கன் துண்டு வேண்டுமா? இந்தா பிடி..” என்று ஒரு துண்டை என் மீது வீசினான்.

அவ்வளவுதான். பாய்ந்து சென்றான் ஜோர்டான். ஒரே குத்து. யூதாஸின் மூக்கு உடைந்து முகமெங்கும் இரத்தம்.

“நாயே…என்னையே அடித்து விட்டாயா? அடிமை நாயே, நாளைக்கு உன்னை என்ன செய்கிறேன் பார்… என் ஷூவைத் துடைத்து வாழும் நாய், என் மேலேயே கையை வைத்துவிட்டாயா? இந்த நாட்டை விட்டே உன்னை விரட்டுகிறேன் பார்… கருப்பு நாயே…”

இருவருக்கும் இடையில் நின்று தடுக்கச்சென்ற என்னைத் தள்ளி விட்டுவிட்டு, ஜோர்டான் மீண்டும் மீண்டும் யூதாஸின் முகத்தில் குத்தினான். கீழே விழுந்த யூதாஸை தன் தோள்மீது தூக்கிக் கொண்டு வந்து ஒரு நாற்காலியில் போட்டான். எதையோ தேடியவனாகச் சமையலறைக்குள் சென்றவன், ஒரு கயிற்றை எடுத்து வந்தான். யூதாஸை அந்த நாற்காலியோடு சேர்த்துக் கட்டினான். யூதாஸ் வலியிலும் போதையிலும் முனகிக் கொண்டிருக்க ஜோர்டான் மூச்சிரைக்க முழு கவனத்துடன் அவனைக் கட்டிவிட்டு என்னருகே வந்து அமர்ந்தான்.

“இந்த வாய்ப்புக்காக நீண்ட நாள்களாகக் காத்திருந்தேன் கெவின். அதென்ன, அப்படியொரு ஆட்டிடியூட், தான் மட்டும்தான் பெரிய இவன், மற்றவர்கள் எல்லாம் மயிர் மாதிரி என்று? இவன் எத்தனை வாழ்க்கைகளை இல்லாமல் ஆக்கியிருக்கிறான் தெரியுமா? பிரச்சினை என்று ஒன்றும் இருக்காது, இவன் முகத்தை நேராகப் பார்த்து பதில் சொன்னதற்காக ஒரு பெண்ணை மீன் கழிவுப் பிரிவில் சுத்தம் செய்ய விட்டுவிட்டான் தெரியுமா? அதுகூடப் பரவாயில்லை, நான் அக்கவுண்ட்ஸ் வேலை தெரிந்தவன். என்னை எதற்காகச் சரக்குக் கிடங்கில் சுமை தூக்கவைத்தான் தெரியுமா? நான் இவனைவிட உயரமாக இருக்கிறேனாம்..”

“ஜோ, நீ சொல்லிவிட்டாய்.. நான் யாரிடமும் காட்டிக் கொள்ளவில்லை, அவ்வளவுதான்…”

“வாழ்க்கைக்கு வழி தேடித்தானே நாமெல்லாம் இந்த மாதிரி ஆள்களிடம் வந்து மாட்டிக் கொள்கிறோம். நமது வேலையில் குற்றம் கண்டுபிடிக்கட்டும் பார்க்கலாம். அது முடியாததால்தானே ஏதேதோ சொல்லி மேலே ஏறவிடாமல் செய்கிறான். நம் முதலாளி வேறு ஒரு தனி ரகம். இவன் எப்படித்தான் அவரைக் கைக்குள் போட்டானோ? இவன் சொல்வதை மட்டும்தானே அவரும் கேட்கிறார்?”

“சும்மா ஒன்றும் இல்லை ஜோ. இருபது வருடப் பழக்கம், இல்லையா? நாமெல்லாம் இப்போது வந்தவர்கள், நமக்கென்ன தெரியும். நீ வேறு இப்படி அவசரப்பட்டுவிட்டாய், நாளை மிகப் பெரிய பிரச்சினை செய்துவிடுவான். நம் வேலையும் காலிதான்..”

….

அடுத்த நாள் காலை நன்றாக உறங்கிக் கொண்டிருந்த போது யூதாஸ் என்னைத் தட்டி எழுப்பினார். ஜோர்டானைக் காணவில்லை.

“கெவின், என்னோடு மருத்துவமனைக்கு வர முடியுமா?” என்று எதுவும் நடக்காத மாதிரி கேட்டார்.

நான் அவரது காரிலேயே அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். யூதாஸ் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. நடந்தவற்றிற்கு வருத்தம் தெரிவிக்கலாமா? மன்னிப்புக் கேட்கலாமா, இல்லை வேண்டாமா என்று யோசித்தவாறு உடனிருந்தேன்.

சிகிச்சை முடிந்து அவரது வீட்டில் கொண்டுவிட்டேன். அவரைவிட இருபது வயது குறைந்த ஓர் இளம்பெண் ஓடி வந்து கைத்தாங்கலாக அவரை அழைத்துச் சென்றாள். பிரெஞ்சு நாட்டவளாக இருக்க வேண்டும். இவள் எப்படி இவருடன்? என்ன நடந்தது என ஒரு வார்த்தைகூட அவள் கேட்கவில்லையே?

நான் கிளம்பும்போது என்னைப் பார்த்துக் காத்திருக்குமாறு சைகை செய்துவிட்டு உள்ளே சென்றார் யூதாஸ். அவரது வீடு ஒரு நந்தவனத்தின் மையத்தில் இருந்தது. வீட்டின்முன் இரண்டு பெரிய தூண்களால் தாங்கப்பட்ட விசாலமான தொங்கும் தோட்டம் இருந்தது. முன்னிருந்த புல்வெளியைச் சுற்றிலும் நீண்ட வரிசையில் வண்ண வண்ண ரோஜாச் செடிகள். வீட்டின் இடப்புறம் நீலக் கற்கள் பதித்த ஒரு நீச்சல் குளம். அதன் அருகே இரண்டு பெரிய கூண்டுகளில் வெண்புறாக்கள். இந்தத் தீவிலேயே பெரிய பணக்காரர்களில் ஒருவரால்தான் இப்படியொரு வீடு வைத்திருக்க முடியும். எப்படி இவரிடம் இவ்வளவு வசதி?

சற்று நேரத்தில் அந்த இளம்பெண் வெளியே வந்தாள். கையில் ஓர் அழகான பை.

“இதை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.. மிக்க நன்றி உங்களுக்கு… அவர் சில நாள்கள் ஓய்விலிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன்..” என்று அந்தப் பையை என்னிடம் நீட்டினாள்.

நான் யோசனையோடு அதை வாங்கிக்கொள்ள, மிக அழகாக ஒரு புன்னகையை அளந்து வைத்துவிட்டு வீட்டிற்குள் சென்றாள். அவளது நடையும் ஏதோ இளவரசி மாதிரிதான் இருந்தது.

வீட்டிற்கு வந்து அந்தப் பையைத் திறந்து பார்த்தேன். மிக விலையுயர்ந்த இறக்குமதி செய்யப்பட்ட ஒரு மதுபானப் புட்டி இருந்தது.

அலுவலகத்தில் யூதாஸ் இல்லாததை அறிந்ததும் மொத்தக் கட்டிடமும் சிரமமின்றிச் சுவாசித்த மாதிரி இருந்தது. காலையும் மாலையும் சில நிமிடங்கள் வந்து செல்லும் முதலாளியும் வழக்கம்போல அவரது அறையிலிருந்து சில தொலைபேசி அழைப்புகளை முடித்துவிட்டுக் கிளம்பினார். ஆனால், ஒவ்வொரு முறை அலுவலகத்தில் நுழையும்போதும் கிளம்பும்போதும் என்னைக் கூர்ந்து பார்த்துவிட்டுச் சென்றார். ஒருவேளை அவருக்குத் தெரிந்திருக்குமோ? ஜோர்டான் நடந்ததைப் பற்றி யாரிடமும் சொல்லியிருக்க வாய்ப்பில்லை. யூதாஸ் சொல்லியிருந்தால் என்னவென்ன விளைவுகளைச் சந்திக்கவேண்டி வருமோ!

மூன்று நாள்கள் கழிந்தன. சரக்குகளைச் சரிபார்த்துக் கொண்டிருந்த என்னைப் பின்னிருந்து தட்டி அழைத்தான் ஜோர்டான்.

“கெவின், முதலாளி நம்மை வரச் சொன்னாராம்.”

எனக்குள் சட்டென இந்தியாவிற்கு விமானத்தில் திரும்பிச் செல்லும் காட்சி தோன்றியது. இருவரும் முதலாளியின் அறையை நோக்கி நடந்தோம். ஜோர்டான் பதற்றமடைந்ததாகத் தெரியவில்லை. எனக்கு ஊரில் அடைக்க வேண்டிய கடன்களின் பட்டியலும், கூடை முடைந்து கொண்டிருக்கும் அம்மாவின் முகமும் மாறிமாறி வந்தன.

முதலாளியின் அறையில் நுழைந்தபோது அவரது நாற்காலியின் பின்புறச் சுவரில் இருந்த கற்சிலுவைக் கோவில் ஓவியம் எனக்கு பழைய நினைவுகளை ஞாபகப்படுத்தியது. ஒரு நொடியில் எத்தனை காட்சிகள்?

“ஜோர்டான், கெவின்… நீங்கள் இருவரும் என்னுடன் இன்று இரவு உணவிற்கு வர முடியுமா?” என்று கேட்டு என் கண்களை உற்றுப் பார்த்தார் முதலாளி.

இருவரும் சரியெனத் தலையாட்டி நிற்க, “என்ன தலையாட்டுகிறீர்கள்? இளம் பெண்களோடு மட்டும்தான் வெளியே செல்வீர்களா என்ன?” என்றார்.

“கண்டிப்பாக வருகிறோம் பாஸ். மிக்க மகிழ்ச்சி..” என்று மிக இயல்பாகச் சொன்னான் ஜோர்டான். எனக்குக் குழப்பம் இன்னும் அதிகமானது.

மாலை அலுவலகம் முடிந்ததும் எங்களைத் தன் காரில் ஏறிக்கொள்ளச் சொன்னார் முதலாளி. முதல் முறையாக இப்படிப்பட்ட ஒரு காரில் ஏறுகிறேன் நான்.

“சொல்லுங்கள்..எங்கு செல்லலாம்? உங்களுக்குப் பிடித்த இடமாகப் போகலாம்..” என்றார்.

நான் கூச்சப்பட்டு இருக்க, ஜோர்டான், “பாஸ், உங்கள் விருப்பம்…” என்றான்.

“இல்லையில்லை, இன்று நான் உங்களுக்குப் பிடித்த இடத்தில் சாப்பிடப் போகிறேன்… கூடவே சிறிது இசையும் நடனமும் இருந்தால் நன்றாக இருக்கும்..”

எனக்கு உடனே லாராவின் இரவு விடுதி ஞாபகம் வர, ஜோர்டானின் கையில் இடித்துக் கண்ணடித்தேன்.

“ஓகே பாஸ்.. அப்படியென்றால் லாராவின் விடுதிதான்… எங்கள் சொர்க்கம் அது… அவளது பாடல் உங்களுக்கும் பிடிக்கும் என நம்புகிறேன்..” என்றான் ஜோர்டான்.

எங்களைப் பார்த்ததும் ஓடிவந்து கட்டிக்கொண்டு நலம் விசாரித்தாள் லாரா. முதலாளியை அறிமுகம் செய்ததும் முகம் மலர்ந்து அவரை வரவேற்றாள். நேராக விடுதியின் மையப் பகுதியின் பின்புறமாக எங்களை அழைத்துச் சென்றாள். இரண்டு பணிப்பெண்கள் பின்தொடர செஞ்சிவப்புப் பூக்கள் நிறைந்த கொடிகளால் சூழப்பட்ட ஓர் மரத்தினாலான அறைக்குள் எங்களை அழைத்துச் சென்றாள். அந்த அறை பிரபலமானவர்களுக்கானதாக இருக்க வேண்டும். அறையில் ஆங்காங்கே மெழுகுவர்த்திகள் வெளிச்சம் கொடுக்க, சுவர்களில் பிக்காசோவும் வான்காவுமாக, மையத்தில் ஒரு கண்ணாடி மேசையும் மூங்கில் நாற்காலிகளும் இருந்தன. ஓர் ஓரத்தில் இசைக் கச்சேரிக்கான சிறிய மேடை. எங்களை உட்கார வைத்துவிட்டு அந்தப் பணிப்பெண்களின் காதில் ஏதோ சொல்லிச்சென்றாள் லாரா.

எங்கள் விருப்பப்படியே மதுபானங்களை வரவழைத்தார் முதலாளி. எங்களுக்கும் அவரே ஊற்றிக்கொடுத்துத் தானும் குடித்தார்.

எங்கள் குடும்பங்கள் குறித்தும் வேலை எப்படி இருக்கிறது என்பதையும் விவரமாகக் கேட்டுத் தெரிந்துகொண்டார்.

“நான் இந்தத் தீவில் வெறும் நூறு டாலர்களோடு வந்து சேர்ந்தவன், நம்ப முடிகிறதா?” என்று கேட்டார். நாங்கள் இருவரும் அதிசயமாக அவரைப் பார்த்துத் தலையாட்டினோம். பின், அவரது தொடக்க கால வாழ்க்கை குறித்தும் செய்த பல முயற்சிகள் குறித்தும் மனிதர்கள் குறித்தும் பேசிக் கொண்டிருந்தார். நாங்கள் பிரமித்துப்போய்க் கேட்டுக்கொண்டிருந்தோம்.

இடையில் எழுந்து வெளியே சென்றுவிட்டுத் திரும்பி வந்தவர், “யூதாஸ் ஒரு அப்பாவி…” என்றவாறு உட்கார்ந்தார்.

நாங்கள் இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்து முழிக்க, “ஆமாம்.. அவன் ஒரு கோழை… அப்பாவி… பாவமும் கூட…” என்றார்.

“பதினெட்டு வயதில் ஓர் இளம் பெண்ணுடன் நாடுவிட்டு நாடு திருட்டுத்தனமாக வந்துசேர்ந்தான் யூதாஸ். இருவர் உடலிலும் இரத்தக்கட்டுகள். அந்தப் பெண்ணின் உடல் உறுப்புகள் முழுதும் தழும்புகள். அவனது பின்புறம் முழுதும் சிதைந்து புண்ணாகிப் போயிருந்தது. தற்செயலாக அப்போது எனக்கு ஆள்கள் தேவைப்பட்டதால் இவர்களைத் தரகர்கள் மூலம் கூட்டிவந்தேன். முதல் சில நாள்கள் இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசவில்லை. கொடுத்த உணவைப் பெரும்பாலும் திரும்பிப் பார்க்காமலே இருந்தார்கள். ஒருவர் கையை ஒருவர் விடாமல் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தனர்.”

ஜோர்டானும் நானும் நம்ப முடியாமல் அவர் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தோம்.

“சில நாள்களில் இருவரும் அவர்களாகவே வேலை செய்ய ஆரம்பித்தார்கள். அவர்களுக்குள்கூட பெரிதாகப் பேசிக் கொண்டதாகத் தெரியவில்லை. கொடுத்த பணத்தை வாங்கி வைத்துக் கொண்டார்கள். வெளியே எங்கும் செல்வதும் இல்லை, எந்தப் பொருட்களையும் வாங்குவதுமில்லை. நாள்கள் செல்லச்செல்ல, அந்தப் பெண் மெலிந்துகொண்டே இருந்தாள், அவளது கண்களைச் சுற்றி கரு வளையங்கள் நீண்டு படர்ந்தன. ஒருநாள் இரவு தனது அறையிலிருந்து கதறி அழுதவாறு ஓடிவந்தான் யூதாஸ். அவன் கை முழுதும் இரத்தமும் சளியும். தன் உடல்மீது அதைப் பூசியவாறு என் முன் தரையில் விழுந்து உருண்டு புரண்டான். அவளது அடக்கம் முடிந்து சில நாள்கள் தன் அறைக்குள்ளேயே முடங்கிக் கிடந்தான். பின், அவனாகவே வெளிவந்து என் முன் நின்றான். என்னவெல்லாமோ பேசினான். ஒரு கோர்வையின்றி ஏதேதோ மொழிகளில், எத்தனையோ நபர்களைப் பற்றி, எத்தனையோ இடங்களைப் பற்றி, அவன் மொழி முழுதும் ரணம், காயம், வலி, உடல் சோர்வு, பசி…. இன்றும்கூட எனக்கு அவனைப் பற்றி முழுதாகத் தெரிந்துவிடவில்லை… ஆனால், அவன் ஓர் அப்பாவி… பாவப்பட்ட பிறவி…”

ஜோர்டான் யூதாஸின் மூக்கை உடைத்தபோது என்னோடு சேர்ந்து யூதாஸும் சிரித்துக் கொண்டுதான் இருந்தானோ? அப்போது நான் அதைச் சரியாகக் கவனிக்கவில்லை, அல்லது போதையென்று விட்டிருப்பேன். ஆனால், அவன் அந்த இரத்தத்திலும் சிரித்தான். தன் முகம் முழுதும் அந்த இரத்தத்தைப் பூசிக்கொண்டான். ஜோர்டானின் உடல் பலத்திற்கு எதிராக ஒரு சிறு அசைவையும் அவன் காட்டவில்லை. வேண்டுமென்றே ஜோர்டானைச் சீண்டி மீண்டும் மீண்டும் தன் முகத்தை உடைத்துக் கொண்டான். அப்படித்தான் நடந்ததா என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை.

“பத்து வயதில் உணவிற்கு வழியில்லாமல் ஒரு பண்ணைக்கு வேலைக்குச் சென்றிருக்கிறான் யூதாஸ். முதலாளி வயதான பெரும் செல்வந்தர். மகன்களும் மகள்களும் பல்வேறு அயல் நாடுகளில் பெரும்பணக்காரர்கள். முதியவருக்குத் தேவையான தினசரி வேலைகளைச் செய்வது, உணவு, மருந்து கொடுப்பது மற்றும் பண்ணையைப் பராமரிப்பது எனக் கடும் உழைப்பு. ஒருநாள், தொடர்ந்து இருமிக் கொண்டிருந்த முதியவர் இரத்த வாந்தி எடுத்துப் படுக்கையில் விழுந்துவிட்டார். மகன்களும் மகள்களும் தகவல் தெரிந்து மருத்துவர்களையும் செவிலியர்களையும் அனுப்பி வைத்தனர். கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள், அவரது உடலைக் கழுவிச் சுத்தம் செய்து, கழிவுகளை அகற்றி, உணவூட்டி, மருந்து கொடுத்து அவரது கட்டிலின் அருகிலேயே கிடையாய்க் கிடந்திருக்கிறான் யூதாஸ். எதிர்பாரா ஒரு நண்பகலில் முதியவர் நினைவற்றுப்போக என்ன செய்யவெனத் தெரியாமல் ஒவ்வொரு மகனுக்கும் மகளுக்கும் தொலைபேசியில் அழைத்துத் தகவல் சொல்லியிருக்கிறான். ஒவ்வொருவரும் வந்து சேர குறைந்தது இரண்டு நாள்களாவது ஆகிவிடும் எனவும், அதுவரை கவனித்துக் கொள்ளுமாறும் சொல்லிவிட்டனர். விட்டுச்செல்ல மனமில்லாமல் மௌனத்தில் உறைந்த அந்த உடலுடன் விழித்திருந்தான். தொடர்ந்த அழைப்புகளுக்கு மகன்களும் மகள்களும் சரியாகப் பதில் அளிக்காமல்போக, இன்னும் சில நாள்கள் அந்த உடலைச் சுத்தம் செய்து கிடத்தியிருக்கிறான். அவ்வப்போது மூச்சு மட்டுமே வந்து போய்க்கொண்டிருந்த அந்த உடலுடன் இருந்தவனுக்கு அந்த ஆன்மா எப்பொழுது பிரிந்தது, எப்படிப் பிரிந்தது என்று ஒன்றும் புரிந்திருக்கவில்லை. மெல்ல மெல்ல அந்த உடல் நாற்றமெடுக்க, அவரது தோட்டத்தில் தானாகவே ஓர் ஆழக் குழி தோண்டி, முதியவரை இழுத்துவந்து அக்குழிக்குள் ஒரு நாற்காலியிட்டு அவரது உடலை உட்கார வைத்துப் புதைத்திருக்கிறான்…”

சொல்லி முடித்து ஒரு சிகரெட்டை எடுத்து முழுதும் புகைத்து முடித்தார் முதலாளி.

“பாஸ்… இதையெல்லாம் நம்பவே முடியவில்லை. அவருக்கு மனநிலை…?” என்று கேட்டேன் நான்.

“நாமெல்லாம்தான் மனநிலையைச் சரிபார்க்க வேண்டும் கெவின்… அவன் வாழ்வது ஒரு தனி உலகத்தில்… உங்களுக்குத் தெரியாத இன்னொரு விசயத்தைச் சொல்கிறேன்…”

நாங்கள் ஆர்வமாக முதலாளியின் முகத்தைப் பார்த்தோம். மீண்டும் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்துக் கொண்டார் முதலாளி.

“உங்கள் இருவரை மட்டுமல்லாமல் இந்த அலுவலகத்தில் இன்னும் பலரையும் வேலையில் வைத்திருப்பதற்கு முதல் காரணமே யூதாஸ்தான், தெரியுமா? அவன் சொன்னால் சரியாகத்தான் இருக்கும்…”

எனக்குக் குழப்பமாக இருந்தது. வேண்டுமென்றே கடின வேலைகளைத் திணிக்கிறான். உடன் உட்கார்ந்து குடிக்கவும் வருகிறான். அவனே சமைத்துப் பரிமாறுகிறான். பல நேரம் பொறாமையில் கோள் மூட்டிவிடுகிறான். ஒருவரையும் மதிக்காமல் உதாசீனப்படுத்திப் பேசுகிறான். ஆனால், ஊருக்குப் போகும்போது விதவிதமான பரிசுப் பொருட்களை வாங்கிவந்து நம் கையில் கொடுத்து, “ஊரில் எல்லோருக்கும் கொடு..” என்கிறான்.

“சரி… எல்லாவற்றையும் விடுங்கள்… ஒரு குறை… ஒரே ஒரு குறை… அவனுடைய வேலையில் நீங்கள் கண்டுபிடித்துவிடுங்கள், பார்க்கலாம்… முடியுமா?” என்று முதலாளி பெருமையாகச் சிரித்தார்.

முடியாதுதான். அவ்வளவு கச்சிதம். கடின உழைப்பு. நேர்த்தி. ஆனால், முகத்தில் சிரிப்பு மட்டும் இருக்காது. சில நாள்களில் சரக்குத் தூக்குவதற்குக்கூட வந்துவிடுவார். நமக்காகக் கார் ஓட்டுவார். அவருக்குத் தெரியாத ஒரு சிறு விசயம்கூட இந்த அலுவலகத்தில் இருக்கமுடியாது என்பதுதான் உண்மை.

எங்களுக்கான உணவு வந்தது. லாராவே வந்து நின்று பரிமாறினாள். ட்யூனா பார்பெக்யூவும் அரேபியன் சாலடும் அவள் விடுதியில் மிகப் பிரசித்தி பெற்றவை. கூடவே இன்று அவளது தாராள அணைப்புகளும் முத்தங்களும்.

“பை த வே…. உங்கள் வீட்டில் என்ன நடந்தது என்பது முழுதாக எனக்குத் தெரியாது… தெரியவும் வேண்டாம்… யூதாஸும் என்னிடம் எதுவும் சொல்லப்போவதில்லை… யூதாஸின் காதலிதான் என்னிடம் ஃபோனில் கூறினாள்…”

நாங்கள் இருவரும் அமைதியாக இருந்தோம்.

“ஜோ, கெவின்…. நான் இந்த விசயத்திற்காக ஒன்றும் உங்களை இரவு உணவிற்கு அழைக்கவில்லை… நீண்ட நாள்களாகவே நினைத்திருந்தேன்…”

“நன்றி பாஸ்… மிகவும் மகிழ்ச்சி…”

“சரி, நான் கிளம்புகிறேன்….” என்று எழுந்து நடந்தார். சில அடிகள் சென்றவர் திரும்பிவந்து, “இன்னொரு விசயம்… இது நமக்குள் இருக்கட்டும்… அந்த வயதான செல்வந்தர் ஒருவேளை யூதாஸின் அப்பாவாக இருப்பாரோ என்று எனக்கு அடிக்கடித் தோன்றும்… யாருக்குத் தெரியும்!” என்று சொல்லிக் கண்ணடித்துவிட்டுக் கிளம்பினார்.

அவர் உட்கார்ந்திருந்த நாற்காலியின் அருகே ஒரு சிகரெட் துண்டினால் நசுக்கப்பட்டு துடித்துக் கொண்டிருந்தது ஒரு கருத்த எறும்பு.

அடுத்த வாரத் துவக்கம். சரக்குகளை இறக்கிக் கொண்டிருக்கும்போது வேகமாக வந்து நின்றது யூதாஸின் கார். துள்ளி இறங்கியவர், படாரென கார்க் கதவை ஓங்கியறைந்துவிட்டு, வேகமாக நடந்தார். நான் அவரைப் பார்த்துக் கையசைக்க, அவரும் கையசைத்துவிட்டு, “எருமை மாடு மாதிரி நிற்பார்கள். ஒழுங்காக வேலை வாங்க வேண்டும், என்ன கெவின்? சும்மா விட்டுவிடாதே… உன் தலையிலும் பூ வைத்து விடுவார்கள்…” என்று கத்திக்கொண்டே உள்ளே சென்றார்.

சரக்கு மூடையைத் தோளில் சுமந்து சென்ற ஜோர்டான் அவரைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.