தீநுண்மி பேராபத்தும் தாயும் மகவும்

“உண்டாக்கிப் பாலூட்டி வளர்த்த தாயை
உமையவள் என்றறியீரோ?”

எனக் கனல்கிறார் பாரதி.

இந்தப் பெருந்தொற்று உலகம் முழுதும் பரவி கர்ப்பம் தரிக்கும் பெண்களையும், மகவு ஈனும் பெண்களையும், பிறந்த குழந்தைகளையும் அபாயகரமாக, உடலளவிலும் மனதளவிலும் அச்சமூட்டியும் உரிய மருத்துவ சேவை கிடைக்காமலும் அவசியமாக உட்கொள்ள வேண்டிய சத்து மருந்துகள் கிடைக்காமலும், தடுப்பூசிகள் போட்டுக் கொள்ள இயலாத நிலையையும் கொண்டு வந்துள்ளது. குழந்தை பிறக்கையிலும், அதன் முன்னரும், பின்னரும் தாய்மார்கள் இறப்பதும், குழந்தைகள் இறப்பதும் அதிகரித்து உள்ளன. மகப்பேறு மருத்துவமனைகளிலும், சிறுவருக்கான தனிப்பட்ட மருத்துவ மனைகளிலும் மிகத் தேவையான மருந்துகளோ, உபகரணங்களோ போதுமான அளவிலில்லை என்பதும் அத்தகைய பொது இடங்களுக்கு, பரிசோதனைகளுக்கும் சத்து மருந்துகளுக்கும் தடுப்பூசிகள் போட்டுக் கொள்வதற்கும் செல்லத் தாய்மார்கள் நோய்த்தொற்று பயத்தால் தயங்குகிறார்கள் என்பதும் கவலைக்கும் கவனத்திற்கும் உரிய செய்தி.

கென்யாவின் தலைநகரான நைரோபியில் இருக்கும் கிபெரா(Kibera) எனும் ஒரு குப்பத்தில் வளர்ந்தவரான ப்ரையன் இன்கங்கா எனும் புகைப்படக்காரருக்கு, மே 29, 2020-ல், நடுநிசிக்கு முன்பாக மருத்துவச்சியிடமிருந்து, வெரோனிகா அடீயெனோ (veronica Atieno) என்னும் 23 வயதான பெண்ணிற்கு மகப்பேற்றின் அறிகுறி தென்படுகிறதென்றும் அவர் உடனடியாக வரவேண்டும் என்றும் அழைப்பு வருகிறது. ஊரடங்கு நிலை, காவலர்களின் அதிகாரம் வரம்பு மீறும் நடு நிசி, இருள், சிறிய சந்து பொந்துகள் உள்ள குப்பம், ஆயினும் அவர் போகிறார். எத்தகைய சூழல்களில் பெண்கள் பிள்ளைகள் பெறுகிறார்கள் எனப் படம் பிடிக்க, வறுமையும் சுகாதாரமின்மையும் மிக்க எளிய ஏழைப் பெண்களை, இந்தப் பெருந்தொற்றுக் காலம் எந்தக் கடுமையான நிலைக்குத் தள்ளியிருக்கிறதென்று இந்த உலகிற்கும், முக்கியமாக அரசுகளுக்கும் காட்ட அவர் செல்கிறார். சிறு சந்தில் இருக்கும் ஒரு கொட்டில் தான் அடீயெனோவின் வீடு. மருத்துவச்சி வலியைத் தூண்ட மூலிகைச் சாறு கொடுக்கிறார். மரக் கரண்டியை பல்லிடுக்கில் பற்றி தன் வலியை அந்தப் பெண் சகிக்கிறாள். புழுதியும், அழுக்கும் நிறைந்த தரை, மருத்துவர், மருந்துகள் எதுவுமில்லை- ஷானிஸ் ஜாய் ஜூமா என்ற பெண் குழந்தை பிறக்கிறது. இந்தக் கொரோனா, பெண்களுக்கு அச்சத்தையும், ஆபத்தையும் கொண்டு வந்துள்ளது. பலர் தங்கள் விருப்பத்திற்கு எதிராக, கருத்தடைகளின் வாய்ப்பு இல்லாமல், அல்லது பாலியல் வன்முறையால் கர்ப்பமுற்று, பிள்ளைகள் பெற நேரிட்டுவிட்டது.

பெருந்தொற்றுக் காலத்திற்கு முன்னரே கென்யாவில் பிரசவிக்கும் தாய்மர்களின் இறப்பு விகிதம் அதிகம். இப்போதோ, அங்கு மட்டுமில்லை, உலகம் முழுதும் இந்த முப்பெரும் பாதகம் (தொற்று அச்சம், தாயின் உடல் நலம் மற்றும் இறப்பு, சேயின் உடல் நலம் மற்றும் இறப்பு) ஏறி வருகிறது.

கணித மாதிரி அடிப்படைகளைக் கொண்டு, ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலை, 118 நாடுகளில் நடத்திய ஆய்வு, 2020-ல் இந்தப் பேரிடரால் மேலும் ஒரு மில்லியன் குழந்தைகள் இறக்கலாம் என்றும், 56,700 தாய்மார்கள் இறக்கக் கூடுமென்றும் கணித்திருக்கிறது. ‘குழந்தைகளைக் காப்போம்’ என்ற அமைப்பிலுள்ள (Rebekka Frick) ரெபெக்கா ஃப்ரிக், ‘தாய் சேய் இறப்பு விகிதம் தெரிய இன்னும் சில வருடங்கள் ஆகலாம்’ என்கிறார்.

நேபாலில் ஒன்பது மருத்துவமனையில் சர்வதேச அறிவியலாளர்கள் ஒரு ஆய்வு செய்தார்கள்- ஊரடங்கினால், மருத்துவமனையில் குழந்தை பிறப்பது 50% குறைந்த அதே சமயத்தில், சிசுக்கள் இறப்பும், இறந்து பிறக்கும் சிசுக்களும் தோராயமாக 50% அதிகரித்தன. கவலை தரும் இந்தச் சூழலைப் பற்றி மருத்துவர்கள் எச்சரிக்கை எழுப்புகின்றனர். ஹராரியில் சென்ற ஜூலையில் ஒரே இரவில் ஏழு குழந்தைகள், பிரசவிக்கப்படும் போதே இறந்தனர். தென் ஆப்பிரிக்காவின் மருத்துவர்கள் பி பி சிக்கு அளித்த பேட்டியில் எலிசபெத் துறைமுக மகப்பேறு மருத்துவ மனையில் “எங்களை ஆழ் உளைச்சலில் ஆழ்த்தும் வண்ணம் பல தாய்மார்கள், பல குழந்தைகள் இறந்தனர்” என்றார்கள்.

மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள் கோவிட்-19 பணியில் பெரும்பாலும் ஈடுபடுத்தப்பட்டனர்; அல்லது அவர்களையும் தொற்று தாக்கியது; அவர்களில் சிலர் களமிறங்கப் பயந்தார்கள்- அத்யாவசியமான முகக்கவசம், உடல் கவச ஆடைகள்  போதுமான அளவிலில்லை. முக்கியமான அறுவை சிகிச்சைகளுக்குக் கூட தாய்மார்கள் நாட்கணக்கில் காக்க வைக்கப்பட்டனர்.

‘இந்தப் பேரிடரின் பின் விளைவுகள் பெரும் அழிவையும், பெருங்கலக்கத்தையும் காட்டும்’ என்று சொல்கிறார் எம்மா இன்கைஸா . இந்தப் பேரிடருக்கு முன்னால், கென்யாவில் மருத்துவ மனைகளில் ஒவ்வொரு இரவும் 30 குழந்தைகள் பிறந்தன; ஆனால், மருத்துவர்கள்  குறைந்த காரணத்தால் அவை மூடப்பட்டன. மாலையில் பேற்று வலி எடுத்தாலும் பெண்கள் மருத்துவ மனைக்குச் செல்ல அச்சப்படுகிறார்கள்- காவல் துறையினர் கடுமையாக ஊரடங்கைச் செயல் படுத்துகிறார்கள்- வன்மையாக அடிக்கிறார்கள். இதன் விளைவாக வீட்டிலேயே பிரசவம் பார்க்க நேரிடுகிறது; மருத்துவச்சியின் உதவி தேவையாகிறது. அவருக்கும் பல இடர்கள்- ஒரு ஜோடி கையுறையைக் கொண்டு ஒரே நேரத்தில் மூன்று பிரசவத்தை அவர்கள் எப்படிப் பார்ப்பார்கள்?

பொருளிலார்க்கு இவ்வுலகு இல்லை என்று சரியாகத்தான் சொன்னார் பொய்யாமொழிப் புலவர். ஜெர்மனி போன்ற செல்வ வளமிக்க நாடுகளில் மேற்கூறிய நிலை இல்லை. சமூகத்தில் கடைபிடிக்கப்படும் விலகலும், அதிக அழுத்தமில்லாத நிலையும், பிறப்பை எதிர்பார்த்திருக்கும் பெண்களுக்கு வரமெனவே இந்தப் பேரிடர் சூழலில் அந்த நாடுகளில் அமைந்தன. அதிலும் குறிப்பாக ஜெர்மன் அரசு பல சமூகப் பொருளாதாரத் திட்டங்களை முன்னெடுத்தது- வருமானம் இல்லாமல் வீட்டு வாடகை கொடுக்க முடியவில்லையென்றால், அதை நிலமை சீரான பிறகு கொடுக்கலாம்-காலி செய்யச் சொல்ல முடியாது- அரசுக்குச் செலுத்தும் வரிகளை பின்னர் செலுத்தலாம்- சுய தொழில் செய்வோர் வட்டியில்லாமலோ, குறைந்த வட்டியிலோ கடன் பெறலாம்-இரு ஆண்டுகளுக்கு தவணை தள்ளி வைக்கப்படும் போன்றவை- உணவு, மற்றும், மருத்துவ பொருட்கள் இருப்பு, எந்த நேரமும் அணுகக்கூடிய அரசு அமைப்பு போன்றவை அந்த மக்களின் வாழ்வைக் காத்துள்ளது. திட்டத்துடன் கூடிய செயல்பாடு பயனர்களைச் சரியாகப் போய்ச் சேர்ந்தது.

முன்னர் வந்த தொற்று அபாயங்களும், அதன் பின்-நிகழ்வுகளும் நமக்கு நல்ல படிப்பினை. எபோலா கிருமியால்  கினி, சியொரா லியோலி, லைபீரியா ஆகிய பிரதேசங்களில் தாய் மற்றும் சேய் இறப்பு சதவீதம் அதிகமாகியது. அதனால், ஐக்கிய நாடுகள் மக்கள் நிதியம், கோவிட்-19 இடர்ப்பாடு குழுவை, பெண்கள் மற்றும் குழந்தைகளின் நலனை மையமாகக் கொண்டு செயல்படச் சொல்லியிருக்கிறது.

மருத்துவமனைகளில் இந்தத் தொற்று, தங்களுக்கு ஏற்படக்கூடும் என்ற பயத்தால் கர்ப்பிணிப் பெண்கள் அவற்றை நாடத் தயங்குவதாக, மெக்சிகோ நாட்டில் அப்சர்வேடொரியோ த மடெர்னா எனும் மருத்துவமனையில் (Observatorio de Materna) மருத்துவராக இருக்கும் ஹில்டா ஆர்க்வேயோ அவெண்டனோ (Hilda Arguello Avendano) சொல்கிறார்.  நான்கு புது சிசுக்களையும் சேர்த்து எட்டுக் குழந்தைகள் ஒஹாகா மாநிலத்தில் ஒரு மருத்துமனையில் இந்தத் தொற்றுக்கு ஆளாயினர். மெக்ஸிகோவில் சென்ற ஆண்டு இதே காலகட்டத்தில் இருந்ததை விட இந்த ஆண்டு கர்ப்பிணிகள், தொற்றால், மகப்பேறுக்கு முன்னரோ, பின்னரோ பாதிக்கப்பட்டு 25% அதிக அளவில் இறந்தார்கள்.

இந்தத் தொற்று சமூக ஏற்றத் தாழ்வுகளை வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. தனி நபர் மருத்துவக் காப்பீடு இல்லாதவர்களுக்கும் அல்லது அரசின் பொது நலத் திட்டங்களைச் சார்ந்துள்ளவர்களுக்கும் உரிய சிகிச்சை உரிய நேரத்தில் கிடைக்காமல் போகிறது. மேலும் தொற்றைத் தவிர நீரிழிவு, சிறு நீரகக் குறைபாடுகளும் இறப்பிற்குக் காரணமாக அமைகின்றன.

தொற்று நோய் பயத்தால், மருத்துவ உதவிகளைத் தவிர்ப்பது ஒரு கேடு; அதைவிடவும் அச்சமூட்டுவது தடுப்பூசிகளைத் தவிர்ப்பது, உடல் நலப் பரிசோதனைகள் செய்து கொள்ளாமலிருப்பது; வருங்காலத்தில் மக்கள் நலனைப் பெரிதாக பாதிக்கும் அபாயமும் இதில் இருக்கிறதே? பல நோய்களைத் தடுக்கும் விதமாகக் கட்டமைக்கப்பட்டு செயல்படுத்தப்படும் இவைகளைப் புறம் தள்ளுவதால் ஏற்படக்கூடிய பேரழிவையும் மருத்துவத் துறை வல்லுனர்கள் சுட்டிக் காட்டுகிறார்கள்.

2000த்திலிருந்து குழந்தைகள் இறப்பு 40 சதவீதம் குறைந்திருக்கிறது; அன்னையர் இறப்பு 33% மேலாகக் குறைந்துள்ளது. எனவே, தொற்றுக்கான கவனம் செலுத்தும் அதே சமயத்தில் தாய்-சேய் நலமும் இணையான கவனம் பெற வேண்டும்.

மெக்ஸிகோ நாட்டில், வீட்டில் நடக்கும் பிரசவங்களை நெறிமுறைப் படுத்தவும், மருத்துவச்சிகளுக்கான ஊதியத்தை அரசே ஏற்றுக் கொள்வதற்கும், நடமாடும் தகவல் ஊர்திகள் கர்ப்பிணிகளின் நிலையை உரிய நிலையத்தில் தெரிவித்து, உடனடி உதவிக்கும் ஏற்பாடு செய்ய வேண்டியும் கோரிக்கைகள் வைக்கப்படுள்ளன.

சுமார் பத்து ஆண்டுகள் முன்பு இந்தியாவில் சற்றேறக்குறைய 32000 பெண்கள் மகப்பேற்றின்போது ஓர் ஆண்டில் இறந்தார்கள். முதன்மை தாய் சேய் நல மருத்துவமனையும் 2018-ல் அரசாங்கம் கொண்டுவந்த 18 மாத மருத்துவச்சிப் பயிற்சியும் இந்த நிலையைச் சற்று மாற்றி இறப்பைக் குறைத்தன. இருந்தும் போக வேண்டியதென்னவோ வெகு தூரம்.

ASHA- (Accredited Social Health Activist) இது இந்தியாவில் உடல் நலத்திற்கான சமூகக் குழு. இதில் தாய் சேய் நலத்திற்கான பல திட்டங்களைப் பொது மக்களிடம் தன்னார்வலர்கள் எடுத்துச் சொல்லி மருத்துவ உதவி பெற உதவுகிறார்கள். அவர்களுக்குத் தத்தம் செயல்பாடுகளுக்கேற்ப ஊதியம் கொடுக்கப்படும். ஆனாலும், நாலைந்து மாதங்களாக அவர்களுக்குச் சேர வேண்டிய பணம் கொடுக்கப்படவில்லை. நல்ல திட்டங்கள் இப்படியாகத்தான் முழு முனைப்புடன் இந்தியாவில் செயல்படுத்தப்படுவதில்லை. ஆஷாவில் பணி புரிவோருக்கும் பணத் தேவைகள் இருக்கிறதே! ஆஷாவிலும் பெண்கள்தான் அதிகமாகப் பணி செய்கிறார்கள். பெண்மை வெல்க என்று கூத்திடுவோம், அத்துடன் கடமை முடிந்தது நமக்கு.

இக்கட்டுரை கீழேயுள்ள கட்டுரையின் செய்திகளுடன், ஜெர்மனி, இந்தியா ஆகிய நாடுகளின் நிலவரம் பற்றியும் சொல்கிறது.

https://www.spiegel.de/international/tomorrow/childbirth-in-the-pandemic-how-covid-19-is-indirectly-killing-mothers-and-babies-a-adf7c1f1-441b-4aa3-87bd-86e9f3345b0b by Anne Backhans and Sonja Peteranderl ; issue dt 14-09-2020.

பானுமதி ந.

2 Replies to “தீநுண்மி பேராபத்தும் தாயும் மகவும்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.