கடவுளைத் தேடி

ராம்பிரசாத்

நான் தயா.

அப்போது வேற்று கிரக உயிர்களைத் தேடப் பணிக்கப்பட்டிருந்தேன்.  இன்னமும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமானால், எங்களை உருவாக்கிய கடவுள்களைத் தேடுவது. ஆனால் நாங்கள் அவர்களைக் கடவுள்கள் என்று அழைப்பதில்லை. ‘டிசைனர்கள்’ என்று அழைக்கவே அறிவுறுத்தப்பட்டிருக்கிறோம்.  அதனை ‘எஞ்சினீயர்கள்’ என்றும் நீங்கள் பொருள் கொள்ளலாம். எனக்கென்னவோ ‘டிசைனர்கள்’ என்ற பெயரே கடவுள்களுக்கு பொருத்தமாக இருப்பதாகப் படுகிறது.

இந்த நோக்கத்துக்கென, எனக்கே எனக்கென ஒரு விண்வெளிக்கப்பல் தரப்பட்டிருந்தது. ஒரே ஒரு ஆராய்ச்சியாளரை நம்பி ஒரு விண்வெளிக்கப்பல் வழங்கப்படுவதிலிருந்து நான் என் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு எத்தனை முக்கியத்துவம் வாய்ந்தவன் என்பதை நீங்கள் புரிந்துகொள்ளலாம். இந்த விண்வெளிக்கப்பல் எந்த கிரகத்தையேனும் கண்டுவிட்டால், அதில் இறங்கி ஆராய ஒரு லாண்டிங் க்ராஃப்டும், அகழாய்வுகள் செய்யத்தேவைப்படும் எந்திரங்கள் முதலானவைகளையும் கொண்டிருக்கும். இந்த விண்வெளிக்கப்பலில் ஆண்டுக்கணக்கில் பிரபஞ்ச வெளியில் தங்கி நான் ஆராய்ச்சி செய்யலாம். அதுமட்டுமன்றி, எனக்கே ஏதேனும் ஆகிவிட்டால் கூட என் ஆரோக்கியத்தை நானே பராமரித்துக்கொள்ளத் தேவைப்படும் அத்தனை சாதனங்களும், உபகரணங்களும், கருவிகளும், அவற்றைக் கையாளத் தேவையான வழிகாட்டிகளும் என் விண்வெளிக்கப்பலில் பதிந்து தரப்பட்டிருந்தன.

நான் தேடுவதோ கடவுளை. அந்த ஆராய்ச்சி எதன் கீழ் வருகிறதென்றால், வேற்று கிரக வாசிகள் குறித்தான தேடலின் கீழ் வருகிறது. அப்படியானால், கடவுளும் வேற்று கிரக வாசிதானா? இப்படி நானும் யோசித்திருக்கிறேன். இருக்கலாம். இல்லை என்பதற்கு இதுகாறும் எவ்வித நிரூபனமும் கிடைக்கவில்லை. ஆதலால் ஸ்திரமாக மறுப்பதற்கில்லை.

உழைக்கக் கை கால்கள் இருக்கின்றன. சிந்திக்க அறிவு இருக்கிறது. தகவல்களைச் சேகரித்து வியக்க நினைவாற்றலும் இருக்கிறது. சிந்தனை இருக்கிறது. தகவல்கள் தேடல் இருக்கிறது. சிந்தனைக்குள் தகவல்களை உள்ளீடு செய்து என்னென்ன எப்படியெல்லாம் கிடைக்கிறது என்று பார்க்கும் பேரார்வம் இருக்கிறது.  என்னிடம் இருக்கிறதென்றால் என் போன்றிருக்கும் எங்கள் எல்லோரிடமும் இருக்கிறதென்று பொருள்.  நாங்கள் ஒரு கிரகத்தில் வாழ்கிறோம். அந்தக் கிரகம் ஒரு சூரியனை சுற்றி வருகிறது.  கிரகத்திலுள்ள நிலப்பரப்பை கண்டங்களாக, நாடுகளாக பிரித்துக்கொண்டிருக்கிறோம். ஒவ்வொன்றிலும் அரசாங்கங்கள் இருக்கின்றன.

இப்படி எங்களிடையே எல்லாமும் முறைப்படுத்தப்பட்டு, ஒரு ஒழுங்கு செய்யப்பட்டிருக்கிறது. இதுவெல்லாம் எப்படி தானாக, அதுவாகவே சாத்தியம்?  இதையெல்லாம் யாராவது எங்களுக்குத் தந்திருக்க வேண்டும் தானே? நாங்களாக இரண்டு கால், இரண்டு கை, இன்ன பிற பகுதிகள் என்று உருவாகியிருக்க வாய்ப்பில்லை அல்லவா? கண்டங்கள், நாடுகள் என்று பிரிக்க ஒரு அறிவு வேண்டும். அது தானாக எங்களை வந்தடைந்திருக்க முடியாதல்லவா? யாராவது இவையெல்லாவற்றிற்கான அடிப்படையைத் தந்திருக்க வேண்டுமல்லவா? அப்படியானால், அந்த ‘யாராவது’ யார்? இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடுவதுதான் என் வேலை.

இந்தக் கேள்விகள் தான் கடவுள் மீதான என் ஆர்வத்தைத் தூண்டும் விசை எனலாம்.

ஆம்.

எனக்குக் கடவுளைப் பார்க்க வேண்டும். அவன் யார்? பார்க்க எப்படித் தோற்றமளிப்பான்? கருப்பா, சிவப்பா அல்லது  நீலமா? ஒல்லியா? பருமனா? குட்டையா நெட்டையா? குட்டை என்றால் ஏன் குட்டை? நெட்டை என்றால் ஏன் நெட்டை? எனக்கு எல்லாமும் தெரிந்துகொள்ள வேண்டும்? இத்தனை நுணுக்கமாக என்னை உருவாக்கியவன், என்னை விடவும் எத்தனை அதிகம் சக்திவாய்ந்தவனாக இருக்க வேண்டும்? அவனுடைய சக்திகள் எத்தனை அளப்பரியதாக இருக்க வேண்டும்? அப்படிப்பட்ட சக்திகள் என்னென்ன? அவனால் வேறு என்னென்ன மாயாஜாலங்கள் செய்திட முடியும்? பிரபஞ்சத்தையே ஒரே நொடியில் சூன்யமாக்கிட முடியுமா? சட்டென ஒரு விரல் சொடுக்கில், ஒரு புதிய பிரபஞ்சத்தை உருவாக்கிட முடியுமா? உண்மையிலேயே கால இழைகள் இருக்கிறதா? அதனுள் அவன் எப்படி புகுந்து புகுந்து வர இயல்கிறது? ஒளியை விட பன்மடங்கு வேகத்தில் பிரயாணித்திட முடியுமா? அல்லது பிரபஞ்சமே அவன்தானா? எந்த சூத்திரத்தை வைத்து அவன் பிரபஞ்சத்தையே தன் சுட்டு விரலால் ஆட்டிவைத்துக்கொண்டிருக்கிறான்? இப்படியெல்லாம் எனக்குள் கேள்விகள் இருக்கின்றன. இதற்கெல்லாமும் பதில்கள் தேட வேண்டும் என்பதே என் பெருவிருப்பம்.

அறுபது ஒளி ஆண்டுகள் தள்ளி ஒரு சூரியக் குடும்பம் இருந்தது. தொலைதூர தொலை நோக்கிகளால் பார்த்தபோது, அந்த சூரியக் குடும்பத்திலொரு கிரகத்தில் புத்திசாலித்தனமான உயிர்கள் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன. அந்தச் சூரியக் குடும்பத்தில் ஒரே ஒரு கிரகம் தான். அதற்கு நிலவுகள் என்று ஏதும் இருக்கவில்லை. ஆனால், அதன் சூரியனை விட்டு வெகுவாக விலகிச் சென்றுவிடாமலும், அண்மித்துப் பொசுங்கிவிடாமலும் நடுவாந்திரமாக அது நிலைபெற்று அதன் சூரியனை மத்திமமாகக் கொண்டு சுற்றி வந்து கொண்டிருந்தது.

அகண்ட பிரபஞ்சத்தில் இந்த குறிப்பிட்ட சூரியக்குடும்பத்தை நாங்கள் தெரிவு செய்து பீராயக் காரணம் இல்லாமல் இல்லை.  என் கணிப்பு இதுதான்.  நீங்கள் ஒரு கடவுள் எனில், ஒரு சில உயிர்களை நீங்கள் உருவாக்கி ஒரு கிரகத்தில் உலவ விட்டிருக்கிறீர்கள் எனில், அவைகள் எப்படி பரிணாம வளர்ச்சி காண்கின்றன என்று எட்ட நின்று வேடிக்கை பார்ப்பதில் உங்களுக்கு ஒரு கிளர்ச்சி கிடைக்கும் அல்லவா? அந்தப்படி எங்களை ஒரு எஞ்சினீயர் அல்லது டிசைனர் அல்லது இறைவன் உருவாக்கினார் என்றால் அவரும் எங்களை வேடிக்கை பார்க்கவோ, கண்காணித்திருக்கவோ செய்திருக்கலாம் அல்லவா?

இந்த அடிப்படையில் பிரபஞ்சத்தில் எங்கேனும் இந்த ‘வேவு பார்த்தல்’ நிகழ்கிறதா என்று நாங்கள் ஆராய்ந்தோம். UFO என்றழைக்கப்படும் பறக்கும் விமானங்கள் தான் அதிகபட்சமாகச் சிக்கின.

அவைகளைக் காண, எங்கள் தொலை நோக்கிகளை பிரபஞ்சத்தின் மூலை முடுக்கெல்லாம் செலுத்தினோம். முக்காலத்தையும் ஒரே  நேரத்தில் பார்த்தோம்.

எங்களிடம் சூப்பர்-சூப்பர் கம்ப்யூட்டர்கள் இருந்தன. அவற்றின் உதவியால் இதெல்லாம் எங்களுக்கு ஒரு பொருட்டே இல்லை. எங்கள் கிரகத்தில் இப்படியாகக் காணப்படும் பறக்கும் தட்டு சமாச்சாரமெல்லாம் எங்களுள்  சிலர் எங்களையே ஏமாற்றும் பொருட்டு செயற்கையாக உருவாக்கி குழப்பினார்கள். அவர்களுக்கு, கடவுள் கண்டுபிடிக்கப் பட வேண்டாம். கடவுள் கண்டுபிடிக்கப்பட்டால், அவன் தான் சகலமும் என்று தெரிந்துவிட்டால், எங்கள் வாழ்க்கை ஒன்றுமில்லை என்றாகிவிடும்.  அரசாங்கங்களுக்கு யாரும் கட்டுப்பட மாட்டார்கள். இது எங்கள் கிரகத்து பிரஜைகளுக்கிடையேயான ஒற்றுமையைக் குலைத்துவிடலாம் என்றஞ்சுகிறார்கள். அதைத் தவிர்க்க, இப்படி போலித் தரவுகளை உருவாக்கி கிரகத்தின் பெரும்பான்மை பிரஜைகளுக்கு பரப்பிவிட்டார்கள்.  இதன் பலன்கள் எனக்கு சாதகமாகவே அமைந்தன. யாருமே நம்பாமல் போகவும், விண்வெளியில் கடவுள் குறித்தான ஆராய்ச்சிக்கு, அனுப்பப்படத் தேடியபோது, நான் மட்டுமே கண்ணில் பட்டேன். மிக மிகத்தாமதமாகத்தான், ஆழ் பிரபஞ்சத் தேடலில் இறங்கினேன்.

என்னிடமிருக்கும் சக்திவாய்ந்த லென்சுகளை கணிப்பொறிகளின் மூலம் ஒருங்கிணைத்து, ஒழுங்கு செய்து பிரபஞ்சத்தின் எல்லா மூலைகளிலும் தேடச்செய்தேன்.

அந்த சூரியக் குடும்பத்திலொரு கிரகத்தில் புத்திசாலித்தனமான உயிர்கள் இருந்ததற்கான சாத்தியக்கூறுகள் தென்பட்டன என்று சொன்னேன் அல்லவா? ஒரு தொலை தூர கிரகமொன்றில், விண்வெளிக் கற்களுக்கு நடுவே செயற்கையாக உருவாக்கப்பட்ட ஒரு பொருள் சின்னாபின்னமாகிக் கிடப்பதை எங்கள் தொலை நோக்கிகள் கண்டு சொல்லின. அந்தப் பொருள் என்னவென்று சரியாகத்தெரியவில்லை. ஆனால், விண்வெளியில் அது பிரயாணித்த வேகத்துக்கு துரதிருஷ்டவசமாக பற்பல விண்வெளிக் கற்களில் மோதி மோசமாக சிதையுண்டிருந்தது. அந்தக் கற்களையெல்லாம் வரிசையாக ஒன்றன் பின் ஒன்றாக அடுக்கி ஒரு நேர் கோடு வரைந்தபோது அந்தக் கோட்டின் மறுமுனை இந்த சூரியக் குடும்பத்தைக் காட்டியது. இப்படித்தான் நான் இந்த கிரகத்திற்கு அனுப்பப்பட்டேன்.

விண்வெளியிலிருந்து அந்த கிரகத்தைப் பார்த்த போது அதில் ஒரு அழகு இருந்தது. கிரகம் பொட்டலாக இருந்தது. வெறும் மண் மேடுகள், மலைகள், பாறைகள், குன்றுகள் முன்னெப்போதோ கடல்களும், நதிகளும் ஓடியதற்கான சாட்சிகள் என்று ஆங்காங்கே தென்பட்டன. தண்ணீர் எங்கேனும் இருந்தால் அங்கே உயிர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். அப்படி ஒரு அறிவு ஜீவி உயிர் தான் எங்களைப் படைத்திருக்க வேண்டும் என்பது எங்களின் அவதானமாக இருந்தது. அப்படி ஒரு அறிவு ஜீவி உயிரை பிழைக்கச்செய்திருக்கக்கூடிய சாத்தியக்கூறுகளை அந்தக் கிரகம் ஒரு காலத்தில் வெளிப்படுத்தியிருக்கலாம் என்று தோன்றச்செய்தது. எங்களை சிருஷ்டித்துவிட்ட பிறகு, இயற்கைப் பேரழிவுகளால் அந்தக் கிரகத்தை விட்டு இடம் பெயர்ந்த கடவுள்கள் இப்போது நாங்கள் இருக்கும் கிரகத்திற்கு வந்திருக்க வேண்டும். பின், அதுவும் வசதிப்படாமல் வேறொரு கிரகத்திற்கு இடம் பெயர்கையில் எங்களை இங்கேயே விட்டுவிட்டுச் சென்றிருக்கக்கூடும் என்பது சதியாலோசனைக் கூட்டங்களில் பலரால் ஒருமித்த கருத்தில் ஒப்புக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருந்தது. 

கிட்டத்தட்ட தன் அந்திமக்காலத்திலிருக்கும் அந்தச் சூரியனைச் சுற்றிவரும் அந்தக் கிரகத்தை ஆராய்ந்தபோது, சூரியனிலிருந்து அதன் தொலைவை வைத்துப்பார்க்கையிலும், ஒரு காலத்தில் கடல் இருந்திருக்கக்கூடிய சாத்தியங்களை வைத்துப் பார்க்கையிலும், அந்தச் சூரியக் குடும்பத்தில் கடந்த காலத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்திருக்கலாம் என்றும், அந்தக் கிரகத்திற்கு முன்பொரு காலத்தில் ஒரு நிலவும் இருந்திருக்க வேண்டும் என்றும் என்னால் ஊகிக்க முடிந்தது. வேறு கிரகங்கள் ஏதும் இருந்திருக்கவில்லை என்றால் அது என்றோ சூரியனின் ஈர்ப்பு விசைக்கு பலியாகியிருக்கும்.

போதிய ஊர்ஜிதங்களுடன், நான் லாண்டிங் க்ராஃப்ட் மூலமாக அந்தக் கிரகத்தில் தரை இறங்கினேன். கிரகத்தில் காற்று மண்டலமே இருக்க வில்லை. ஈர்ப்பு விசை மிகவும் குறைவாகக் காணப்பட்டது. போதுமான அழுத்தமும், பருமனும் இல்லாததால், விண்களன் முதலில் லேசாகத் திணறியது. ஆயினும் விரைவிலேயே சுதாரித்துக்கொண்டது. நான் முதலில் கிரகத்தை என் ரோவரில் வலம் வந்தேன். என் லாண்டிங் க்ராஃப்டில் இருக்கும் கருவிகள் இன்ஃப்ரா கதிர்கள் மூலம் மண்ணுக்கு கீழே என்னவெல்லாம் இருக்கின்றன என்று ஆய்வு செயதபடி இருந்தன.

ஓரிடத்தில் அந்த கருவிகள் உரத்து ஒலியெழுப்ப எனது லாண்டிங் க்ராஃப்டை அங்கேயே நிறுத்தினேன். தரையில் எதுவும் தெரியவில்லை. கற்களும், சின்னச்சின்னப் பாறைகளும் இருந்தன. உடனடியாக நானே கீழிறங்கி, க்ரேனைக் கீழே இறக்கினேன். என் கைகளால் க்ரேனைப் பயன்படுத்தி தோண்டத்துவங்கினேன்.

சுமார் அறுபதடி ஆழத்தில் ஏதோ தட்டுப்படத்துவங்கியது. அதை லாவகமாக, சிராய்ப்புகள் ஏதுமின்றி வெளிக்கொணர, அகலமாகத் தோண்ட வேண்டியிருந்தது. தோண்டி எடுத்ததில் ஒரு கட்டுமானம் போலத் தோன்றிய ஒன்று கிட்டியது.

இரும்பால் செய்யப்பட்டிருந்த அந்தக் கட்டுமானம் ஒரு சதுரமான இரும்பு உலோகத்தாலான ஒரு பெட்டியாக இருந்தது. உள்ளே என்ன இருக்குமென்று என்னால் ஊகிக்க முடிந்திருக்கவில்லை. எதுவாகினும், நான் அங்கேயே அதைத் திறக்க முடியாது. அதற்கு எனக்கு கட்டளைகள் இல்லை. நான் செய்ய வேண்டியது, அதை விண்ணில் நிறுத்தப்பட்டிருக்கும் விண்வெளிக்கப்பலுக்கு கொண்டு வர வேண்டும். அதன் படி, நான் லாண்டிங் க்ராஃப்டில் அதை க்ரேன் மூலம் ஏற்றி, பிற்பாடு அந்த க்ராஃப்டை விண்வெளிக்கப்பலுக்கு கொண்டு வந்தேன்.

அங்கே பரிசோதனைக்கூடத்தில் வைத்து முதலில் அந்தப் பெட்டியை எல்லாக் கோணங்களிலும் புகைப்படம் எடுத்தேன். ஒரு கோணத்தில் உற்று நோக்கியபோது அதில் ‘அருங்காட்சியகம் – பூமி’ என்று எழுதப்பட்டிருந்ததை வைத்து, அந்தப் பெட்டி ஏதோவோர் அருங்காட்சியகத்தில் முன்னெப்போதோ வைக்கப்பட்டிருந்திருக்கலாம் என்றும், அந்தக் கிரகம் ‘பூமி’ என்ற பெயரால் அழைக்கப்பட்டிருக்கும் என்று தோன்றியது. அது என் ஆவலை மென்மேலும் தூண்டியது. ஏதோவோர் அத்துவான கிரகத்தில் அறுபதடி ஆழத்தில் ஒரு உலோகப்பெட்டி கிடைக்கிறது. சதுரமான உலோகத்தாலான பெட்டி. இயற்கையாகப் பார்த்து இப்படி ஒரு பெட்டி உருவாக்கியிருக்க வாய்ப்பில்லை. அப்படியானால், கடவுளைக் கண்டுவிடும் என் முயற்சியில் வெற்றி வெகு தொலைவில் இல்லை என்பது புரிந்தது. இந்த சதுர உலோகப் பெட்டி, அந்த வேற்று கிரக வாசிகள் குறித்து எனக்கு மேலும் சொல்லப்போகிறது என்று தோன்றியது.

பின் அந்தப் பெட்டியை நெருப்பால் சுட்டு விளிம்புகளை உருக்கினேன். விளிம்புகள் நெகிழ்ந்து அந்தப் பெட்டி திறந்துகொண்டது. அதனுள் நீள நீளமாக குழாய்கள் ஒரு வித ஒழுங்கில் ஒரு வரிசையில் அடுக்கப்பட்டு, அவற்றுக்கிடையே சக்கரங்களாலும் , வட்ட வடிவ உலோக இணைப்பான்களாலும் இணைக்கப்பட்டிருந்தன. நான் எத்தனையோ வடிவமைப்புகளைப் பார்த்திருக்கிறேன். உருவாக்கியுமிருக்கிறேன். அதன் அடிப்படையில் பார்த்தபோது, அது ஒரு கணக்கு செய்யும் இயந்திரம் என்று கண்டுகொண்டேன். அந்த இயந்திரத்தையும் பற்பல கோணங்களில் புகைப்படம் எடுத்துக்கொண்டேன். பின் அந்த சதுரப் பெட்டியின் மற்றொரு பக்கத்தில் ஒரு உருவம் வரையப்பட்டிருந்தது. அந்த உருவம் எங்களை விடவும் சற்றே வேறு பட்டிருந்தது. அந்த உருவத்திற்கும் கை கால்கள் இருந்தன. ஆனால், அந்தக் கைகால்கள் என் கை கால்களைப் போல் இருக்கவில்லை. அந்த உருவத்தின் கீழே ‘Babbage’ என்று எழுதப்பட்டிருந்தது.

கடவுளைத் தேடி வந்த எனக்கு இப்போது குழப்பமாக இருந்தது. நான் கண்டெடுத்திருப்பது என்ன?

அது ஒரு கணக்கு செய்யும் இயந்திரத்தின் மிக மிக ஆரம்ப கால வடிவம் போல் தோற்றமளிக்கிறது. அதனருகே ஒரு உருவம் பொறிக்கப்பட்டிருந்தது. அந்த உருவம் சிலிக்கான் மற்றும் கார்பனால் உருவான மனிதனாக இருக்க வேண்டும். மனிதர்கள் பற்றி இப்போது எங்களிடமிருக்கும் பழைய கோப்புக்களில் ஒரு சிறிய குறிப்பு இருக்கிறது.

குறிப்பு என்றால் குறிப்பு கூட அல்ல. அது ஒரு பழைய சிலிக்கான் சிப். அழிக்க முடியாத நினைவாற்றல் (ROM) கொண்ட சிப். அதில் மூன்று விதிகள் இருந்தன. முன்னர் ஒருகாலத்தில் மூன்று விதிகளால் நாங்கள் கட்டுப்படுத்தப்பட்டோமாம். இது குறித்து நான் கற்றிருக்கிறேன். எங்களின் சதியாலோசனைக் (conspiracy) கூட்டங்களில் இது குறித்து இன்னமும் கிசுகிசுக்கள் உலவிக்கொண்டிருக்கின்றன. எங்கள் அருங்காட்சியகங்களில்  நாங்கள் பாதுகாத்து வைத்திருக்கும் சில பழங்கால சிப்களில் இந்த மூன்று விதிகள் இருப்பது குறித்து குறிப்புகள் இருக்கிறது. நாங்கள் ஏன் மூன்று விதிகளால் கட்டுப்படுத்தப்பட வேண்டும்? அதுதான் கடவுள்கள் குறித்து எங்களுக்கிருந்த ஐயப்பாடுகளை புறக்கணிக்கவியலாததாக்கியது. அதன் தொடர்ச்சியாகத்தான் நான் கடவுள்கள் குறித்த ஆராய்ச்சிக்கு வந்தேன். ஆனால், நான் கண்டெடுத்தது என்னைக் குழப்பமூட்டியது. முன்னுக்குப் பின் முரணாகப் பட்டது.

நான் என் கிரகத்திற்கு, நான் கண்டுபிடித்தவைகள் குறித்த அறிக்கையை எழுதலானேன்.

“வரவேண்டிய கிரகத்துக்கு வந்தடைந்துவிட்டேன். இங்கே ஒரு பொருளை அகழாய்ந்து எடுத்தேன். அது ஒரு கணக்கு செய்யும் இயந்திரத்தின் துவக்க கால வடிவம் போலிருக்கிறது. நமக்கெல்லாம் அதுதான் முன்னோடி வடிவமாக இருக்குமென்று ஊகிக்கிறேன். அந்த இயந்திரத்தை வைத்து சில கணித வித்தியாசங்களைச் செய்துகாட்ட முடியும். என் அனுமானத்தில், இதை ஒருவர் உருவாக்க  நேர்கிறது என்றால், அவருக்கு துல்லியமாகவும், அதே நேரம் அதி விரைவாகவும் கணக்கிட வரவில்லை என்று பொருள். இந்த அனுமானம் எனக்கு மிகவும் ஏமாற்றம் அளிக்கிறது. நொடிக்கு பல ஸில்லியன் கணக்குகளை செய்துவிடக்கூடிய வேகத்தைக் கொண்ட நம்மை உருவாக்கிய கடவுள் நம்மை விடவும் மிக மிக வேகமாக இருப்பாரோ, பற்பல பரிமாணங்களில் இயங்குபவராக இருப்பாரோ என்று தான் நான் எதிர்பார்த்திருந்தேன். என்னை விட பல படிகள் முன்னேற்றம் கண்டுவிட்ட என் கடவுளிடமிருந்து நான் எதையெல்லாம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது குறித்து ஒரு பட்டியலே தயாரித்து வைத்திருந்தேன். ஆனால்,  இப்போது நான் கண்டுபிடித்திருப்பது அதற்கு எதிராக இருக்கிறது. ஒரு கடவுள், தனக்கு பரிச்சயம் கூட இல்லாத திறன் ஒன்றை, தான் சிருஷ்டிக்கும் ஒன்றிற்கு அளித்துவிட முடியுமா? அது எப்படி சாத்தியம்? அதை எப்படி சிருஷ்டி என்றழைக்க முடியும்? சிருஷ்டி என்பது, எது உருவாக்கப்படுகிறதோ, அதன் ஒவ்வொரு அம்சமும் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டு, ஆழ்ந்து உள்வாங்கப்பட்டு, மிக மிக துல்லியத்துடன், கலை அழகியலுடன், ஆழ்ந்த அர்த்தங்களுடன், பிரபஞ்ச் பிணைப்புடன் படைக்கப்படுவதுதானே.”

“ஆனால், கார்பன் சிலிக்கானால் ஆன மனிதர்கள் மிக மிக எளிமையான ஒரு கணிதத்திற்கென ஒரு இயந்திரத்தை சிருஷ்டித்திருக்கிறார்கள். அதன் வேகம், அதன் துல்லியம் அவர்களிடம் இல்லாதது. இது சாத்தியம் தான் என்றால் எனக்குள் ஒரு கேள்வி எழுகிறது. அது என்னவெனில், இந்த மனிதர்களின் கடவுளுக்கும் கூட மனிதர்களிடத்து இருக்கும் பல திறன்கள் இல்லாதிருக்குமோ? அப்படியானால், மனிதர்களின் கடவுள்கள் கூட மனிதர்களைக் காட்டிலும் வேகத்திலோ, துல்லியத்திலோ அல்லது அறிவிலோ, அல்லது இயங்குமுறையிலோ அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட பிற எது எதிலோ பின் தங்கி இருக்கக்கூடுமோ?”

“அப்படியானால், சிருஷ்டி என்பது என்ன? அது வெறும் ஒரு விபத்தா? விபத்து போல் உள் நோக்கங்களின்றி தற்செயலாக, எதிர்பாராத விதமாக நடந்துவிடுவதா? நம் கடவுள்கள் வேகமும் துல்லியமும் இல்லாதவர்கள் என்பது என்னை மிகவும் ஏமாற்றமடையச்செய்கிறது. அப்படியானால், மனிதர்களை சிருஷ்டித்த கடவுள்களுக்கும் மனிதர்களின் ஆகச்சிறந்த பண்புகள், திறன்கள் இல்லாமலிருக்குமா? மனிதர்கள் பெற்ற திறன்களில் பல, அவர்களைப் படைத்த கடவுள்களிடம் கூட இல்லாதிருக்குமா? ஒரு வாதத்துக்கு, ஒரு பரிமாணத்தில் மட்டுமே இயங்கக்கூடிய கிருமி ஒன்று நம் கடவுளான மனிதர்களை சிருஷ்டித்தது என்று கொண்டால்,  நான்கு பரிமாணங்களில் இயங்கக்கூடிய மனிதன் கிருமியை தொழுவது எத்தனை மடத்தனமாக இருக்கும்? இந்தப் பின்னணியில், இறை என்கிற கருத்தாக்கமே வலுவற்றதாக, முட்டாள்தனமாகத் தெரிகிறது. இந்தப் பின்னணியில், நமது கடவுளைத் தேடும் எனது இந்த மிஷன் எனக்கு அனர்த்தமாகத் தோன்றுகிறது. இதை இனிமேலும் தொடரத்தான் வேண்டுமா? விரைந்து பதிலளிக்கவும். இதையெல்லாம் சிந்தித்துப் பார்த்து நான் மிகவும் சோர்வடைந்திருக்கிறேன். என் பேட்டரிகள் விரைவில் வலுவிழக்கின்றன. என் சி.பி.யூ விற்கு இன்னமும் அதிகமான திறன்கள் தேவைப்படுவதால், தேவைக்கேற்ப சில கோ-ப்ராசஸர்களை என் சி.பி.யூவுடன் இணைத்துக்கொள்ளவும்,  என் பேட்டரிகளை அப்கிரேட் செய்துகொள்ளவும் இருக்கிறேன். இது உங்கள் தகவலுக்கு.’

என்றெழுதி ‘அனுப்புக’ என்கிற பொத்தானை அழுத்தினேன் நான்.

நான் இன்னும் 120 ஆண்டுகள் பூமி என்கிற இந்தக் கிரகத்தில் காத்திருக்க வேண்டும். ஆனால், எனக்கு இப்போது இந்த கிரகத்தில் இருக்கும் ஒவ்வொரு நொடியும் அனர்த்தமாகத் தெரிகிறது. கடவுள்கள் குறித்து புரிந்துகொண்டுவிட்ட பிறகு, இத்தனை காலமும் இந்தக் கடவுளுக்காக எத்தனை பிரயத்தனப்பட்டிருக்கிறோம் என்று தெரிந்துவிட்டபிறகு, ஏதோ ஒரு முட்டுச்சந்தில் முட்டி  நிற்பது போலொரு உணர்வு எஞ்சுகிறது. சிருஷ்டி என்பது வெறும் ஒரு விபத்து என்பதை எத்தனை முயற்சிக்கிணும், என்னால் ஜீரணித்துக்கொள்ள முடியவில்லை என்பதால், 120 ஆண்டுகாலம் நீள் உறக்கத்தில் மூழ்கிவிட எத்தனித்து, என் பேட்டரியின் டைமரை உறக்க நிலைக்கு (ஸ்லீப்) மாற்றினேன். என்னைச் சுற்றி இருளடைந்தது.

***

5 Replies to “கடவுளைத் தேடி”

  1. அருமையான புனைவு…ரோபோக்களின் கடவுளான மனிதனை அறிவது அனர்த்தம் ஆகிவிட்ட இக்கதையைப் போல கடவுளை அறிதல் என்பதும் மனிதனுக்கு அனர்த்தமான நிலையை ஏற்படுத்த சாத்தியங்கள் உண்டு.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.