எஸ்.பி.பி. என்னும் H2O

இசையறிவும் திரையிசையின் நுணுக்கங்களும் அறிந்த எத்தனையோ திறமையான எழுத்தாளர்கள் இருக்க, எஸ்.பி.பி குறித்து சொல்வனத்திற்காக எழுத என்னை அழைத்திருக்கிறார்கள்.

என்றாலும் ஒரு பாமர ரசிகனாக சமீபத்தில் மறைந்த எஸ்.பி.பி குறித்த என் மனப்பதிவுகளை எழுத முயல்கிறேன். என்னைப் போன்ற பல பாமர ரசிகர்களின் பிரதிநிதித்துவப் பதிவாகவும் இது அமையக்கூடும் என்றும் நம்புகிறேன்.

இது தன்னடக்கம் போல் தோன்றினாலும் இதுவே உண்மை. இந்த பண்பைக் கூட நான் எஸ்.பி.பியிடமிருந்துதான் நகல் செய்ய முயல்கிறேன். ஆம். பாடகர், இசையமைப்பாளர், நடிகர் என்று பல்வேறு பரிமாணங்களைத் தாண்டி ஒரு மிகச் சிறந்த பண்பாளராக பாலு இருந்தார்.

இந்த அடிப்படையான நல்லியல்புதான் அவருக்கு மகத்தான இடத்தையும் அங்கீகாரத்தையும் தேடித் தந்தது என்று நம்புகிறேன். அதனால்தான் பாடும் திறமையையும் தாண்டி பல கோடி மக்களின் மனங்களில் அவரால் அழுத்தமாக இடம் பிடிக்க முடிந்தது. இசைத் திறமையைத் தாண்டி அவரின் நற்பண்புகள்தான் இதற்கு ஆதாரமான காரணமாக இருந்தது.

ஒரு நல்ல இசைக்கலைஞன் என்கிற அடையாளத்தைத் தாண்டி, ஒரு மிகச் சிறந்த மனிதராகவும் பாலு இருந்தார். இதுவே பல கோடி மக்களின் பிரியத்தை அவருக்கு சம்பாதித்துக் கொடுத்தது.

~oOo~

நாம் சிறுவயதிலிருந்தே திரையிசைப்பாடல்களைக் கேட்கிறோம். அல்லது அந்தப் பாடல்கள் தாமாக நம் காதில் வந்து விழுகின்றன என்றும் சொல்லலாம். வெறும் ஒலிகளின் கோர்வைகளாக கேட்கும் பாடல்கள், நம்முள் இயற்கையாக உறைந்திருக்கும் ஆதார ரசனை காரணமாக பிறகு நம் மனதில் இசையாக உருமாறத் துவங்குகிறது.

ஒரு திரையிசைப் பாடலை யார் இசையமைத்தது, யார் பாடியது என்பதையெல்லாம் இளம் பருவத்தில் நாம் கவனிப்பதில்லை. நன்றாக இருந்தால் தலையசைக்கிறோம். காலால் தாளமிடுகிறோம். ஆனால் ரசனை மெல்ல மெல்ல கூர்மையடையத் துவங்கும் போதுதான் பாடலை உருவாக்கியவர்கள் குறித்து தனித்தனியாக அறியத் துவங்குகிறோம். அதன் நுணுக்கங்கள், அவை நம்முள் ஏற்படுத்தும் அனுபவம் போன்றவற்றை ஆராயத் துவங்குகிறோம்.

அந்த வகையில் எஸ்.பி.பியை நான் எப்படி அறியத் துவங்கினேன் என்று யோசித்துப் பார்க்கிறேன். சென்னை விவிதபாரதியில் ‘உங்கள் விருப்பம்’ என்றொரு நிகழ்ச்சி காலை எட்டரை மணிக்கு ஒளிபரப்பாகும். நாங்கள் பள்ளிக்கு விரையக்கூடிய நேரமாக அது இருந்தது. அந்த நிகழ்ச்சியின் முகப்பு இசையே ‘பசங்களா.. டைம் ஆச்சு.. இன்னுமா கிளம்பலை? ஓடுங்க..’ என்று துரத்துவது போலவே ஓர் அவசரத் தொனியில் ஒலிக்கும்.

பையை தூக்கிக் கொண்டு பள்ளியை நோக்கி ஓடும் போது முதல் பாடல் ஒலிக்கத் துவங்கும். செல்லும் வழியெங்கும் வானொலியில் அது எங்களை வழிநடத்திக் கொண்டே வரும். அநேகமாக பல நாட்களில் முதலில் ஒலிப்பது இந்தப் பாடலாகத்தான் இருக்கும்.

‘ஒரே நாள்.. உனை நான்.. நிலாவில் பார்த்தது..’

ஏறத்தாழ தினமும் கேட்கும் இந்தப் பாடலில் பெண் குரலை விடவும் ஆண் குரலே அந்தச் சமயத்தில் என்னை அதிகம் கவர்ந்தது.. ‘யார் பாடியது.. இத்தனை இனிமையாக இருக்கிறதே?’ என்று உள்ளுக்குள் நினைத்துக் கொள்வேன். ஆக.. நான் இளம் பருவத்தின் அறியாமையோடு முதன் முதலில் ஓர் இசைக்கலைஞனை அடையாளம் கண்டு கொண்டது இப்படித்தான். அந்தக் குரலுக்குச் சொந்தமானவர் எஸ்.பி.பி.

~oOo~

பாலு இளம் வயதில் பாடிய துவக்க காலப்பாடல்களுக்கும் பிறகு நடுத்தர வயதில் பாடிய பாடல்களுக்கும் இடையே அவரது குரலில் ஏற்பட்டுக் கொண்டு வந்த கணிசமான வித்தியாசத்தை கவனிக்க முடியும். ஒரு கட்டத்தில் அவரின் குரலினிமை நிரந்தரம் பெற்றது. அந்த இனிமை கடைசி வரை குறையவேயில்லை.

சில புகழ்பெற்ற பாடகர்கள் இருப்பார்கள். அவர்கள் செயலாக இயங்கிய காலத்தில் பல இனிமையான பாடல்களைப் பாடியிருப்பார்கள். ஆனால் அவர்களின் அந்திமக் காலத்தில் வயோதிகம் காரணமாக குரல் அதன் சோபையை இழந்து விடும். குரல் தடுமாறும்.. ஸ்ருதி போகும். என்றாலும் மிகப் பிடிவாதமாக மேடைகளில் பாடுவார்கள். அவர்களின் மனவுறுதியை ஒரு பக்கம் பாராட்டினாலும் இன்னொரு பக்கம் அது பார்வையாளர்களுக்கு பரிதாபமான காட்சியாக இருக்கும். வயோதிகம் காரணமாக தன்னுடைய வீழ்ச்சியை உள்ளுக்குள் உணர்ந்து கொண்டு மெல்ல மெல்ல விலகி விடுவதே ஒரு கலைஞனுக்கு அழகு.

ஆனால் பாலுவிற்கு இந்த விபத்து கடைசி வரையிலும் நிகழவில்லை என்பது ஆச்சரியம். அவரில் குரலில் இருந்த இனிமையையும் உற்சாகத்தையும் புத்துணர்ச்சியையும் கடைசி வரை அவர் இழக்கவில்லை. 2020-ல் வெளிவந்த ‘டிஸ்கோ ராஜா’ என்கிற தெலுங்குத் திரைப்படத்தில் ‘Nuvvu Naatho Emannavo’ என்பதை உதாரணமாக கேட்டுப் பார்க்கலாம். எந்தவொரு இளைய தலைமுறைப் பாடகனுக்கும் சவால் விடும் வகையில் அவரது குரலில் உற்சாகமும் இளமையும் பொங்கி வழியும் வகையில் பாடியிருப்பார்.

படத்தயாரிப்பு, அதனால் உருவான கடன் பிரச்சினை உள்ளிட்ட ஏராளமான இடையூறுகளுக்கு இடையில் அவர் இறுதி வரைக்கும் தன் மனதை இளமையாக வைத்திருந்தார் என்று யூகிக்கத் தோன்றுகிறது. அது மட்டுமில்லாமல் அவருடைய நல்லியல்புகளும் நற்பண்புகளும் அவரது குரலை வயதாகாமல் காப்பாற்றியது என்றே நினைக்கத் தோன்றுகிறது. எனவே அவருடைய இறுதிக் காலத்தில் ஒலித்த குரலின் இளமையை அவருடைய மனதின் குரல் என்றே நாம் எடுத்துக் கொள்ளலாம்.

~oOo~

சில பாடகர்களின் குரல் தனித்தன்மையுடன் அமைந்திருக்கும். உதாரணத்திற்கு சீர்காழி கோவிந்தராஜன், வாணி ஜெயராம் போன்றவர்களை உதாரணமாகச் சொல்லலாம். கேட்டவுடனேயே ‘பளிச்’சென்று பாடியவர் இவர்தான் என்பது தெரிந்து போகும். இது ஒரு வரம்தான் என்றாலும் திரையிசையைப் பொறுத்தவரை ஒரு ரசிகனுக்கு இது சிறிய இடையூறை ஏற்படுத்தும் என்று நினைக்கிறேன். திரையில் ஒரு நடிகரின் குரலாக அது பொருந்தாமல் பாடகரின் குரலாக துருத்தியபடியே தெரிந்து கொண்டிருக்கும்.

ஆனால் பாலு போன்றவர்களின் குரல் இப்படிப்பட்டதல்ல. தான் நிறைகின்ற பாத்திரத்தின் கொள்ளவிற்கேற்ப தண்ணீர்  தன் வடிவத்தை மாற்றிக் கொள்வது போல, நடிகர்களுக்கு ஏற்றபடி மாறிக் கொள்ளும் மாயத்தை பாலுவின் குரல் பெற்றிருந்தது. எனவேதான் எம்.ஜி.ஆர் முதற்கொண்டு மூன்று தலைமுறையைத் தாண்டியும் முன்னணி நடிகர்களுக்கு அவரால் பாட முடிந்தது. அது கச்சிதமாகவும் பொருந்தியது. எவ்வகையிலும் துருத்தலாகத் தெரியவில்லை.

மிக குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் ரஜினி, கமல் ஆகிய இரு நடிகர்களின் பாடல்களுக்கு பாலு பாடிய விதத்தை கவனித்தால் அது சம்பந்தப்பட்ட இரு நடிகர்களின் உடல்மொழிக்கும் அவர்களின் பாணிக்கும் கச்சிதமாகப் பொருந்தி விடும். இன்னமும் குறிப்பாக கமல் தொடர்பான பாடல் என்றால் மெல்ல இருமுவது, நகர்ந்து செல்வது போன்ற வித்தியாசங்களை பாடலில் தந்திருப்பார் பாலு. காட்சி வடிவில் அதை கமல் மிக அழகாகப் பின்பற்றிக் கொள்வார்.

பாலு பாடும் முறையில் உள்ள பெரிய பலம் என்று பாவத்தை (Expression) சொல்ல முடியும். ஒரு பாடலின் ஆதாரமான தொனியைப் புரிந்து கொண்டு அதற்கேற்ப அற்புதமாக பாடி விடுவார். காதல், சோகம், வீரம், தாலாட்டு, துயரம், நிராசை போன்ற உணர்ச்சிகளை அவரால் மிக எளிதாக பாடல்களின் மூலம் கடத்த முடிந்தது.

தென்னிந்தியாவைத் தாண்டி இதர இந்திய மொழிகளிலும் ஏராளமான பாடல்களைப் பாடியவர் பாலு. இதர மொழிகளின் பாடலைப் பாடும் போது அந்த வரிகளின் உச்சரிப்பு, பொருள், தொனி, கலாசாரப் பின்னணி போன்றவற்றை அறிந்து கொண்டு பாடுவது பாலுவின் பழக்கங்களில் ஒன்று. ஒரு மொழியை சரியாக உச்சரிப்பதே அதற்கு தரும் மரியாதை என்பதை ஒரு கொள்கையாகவே பாலு பின்பற்றினார். இளம் பாடகர்களுக்கும் இந்த உபதேசத்தை தன் வாழ்நாள் பூராவும் உறுத்தாமல் தந்து கொண்டிருந்தார்.

அந்தந்த மொழியில் பாடும் போது அந்தப் பின்னணியைச் சார்ந்தவராகவே பாலுவின் குரல் மாறி விடும். இந்தி மொழியில் அவர் பாடல்கள் அடைந்த வெற்றி முதற்கொண்டு பல உதாரணங்களைச் சொல்ல முடியும்.

தண்ணீரைப் போல மிக எளிதாக வடிவம் மாறிக் கொள்வதால் இந்திய இசையின் H2O என்று பாலுவைச் சொல்லலாம். பொதுவாக கடந்த தலைமுறைப் பாடகர்களை இளைஞர்கள் அத்தனை ரசிக்க மாட்டார்கள். ஆனால் அவர்களையும் ஈர்த்த குரலாக பாலுவின் குரல் இருந்தது.

~oOo~

பாலு உடல்நலம் குன்றி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது அவர் நலம்பெற்று வீடு திரும்ப வேண்டி ஏராளமான ரசிகர்களும் இசைக்கலைஞர்களும் மனமுருக பிரார்த்தனை செய்தார்கள். அவரின் மரணச் செய்தி வெளியான போது பல ரசிகர்களால் தாங்கவே முடியவில்லை. உடைந்து அழுதார்கள்; அரற்றினார்கள்; புலம்பினார்கள்; அவரின் பாடல்களை, அவரின் நல்லியல்புகளை விதம் விதமாக நினைவுகூர்ந்து கொண்டாடினார்கள்.

சமூக வெளியில் சில கலைஞர்களுக்கே இம்மாதிரியான அங்கீகாரமும் வரவேற்பும் கிடைக்கிறது. இத்தனை கோடி ரசிகர்களின் அன்பையும் பிரியத்தையும் பாலு சம்பாதித்து வைத்திருப்பதற்கு என்ன காரணம் இருக்கும் என்று யோசித்துப் பார்க்கிறேன்.

என்னைப் போல் எழுபதுகளில் பிறந்தவர்களால் இதை துல்லியமாக உணர முடியும். இந்த தலைமுறையைச் சேர்ந்தவர்கள், பாலுவின் குரலை தினம் தினம் கேட்டு வளர்ந்தவர்கள். ‘அடுத்து ஒலிக்கவிருக்கும் பாடலைப் பாடியவர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம்’ என்கிற வானொலி அறிவிப்பை அன்றாடம் கேட்டவர்கள்.

அவர்களின் வாழ்க்கையில் பாலுவின் குரல் ஒரு அங்கமாகவே இருந்தது. அவர்களின் அன்றாட தினங்களில், அந்தரங்கமான தருணங்களில் பாலு கூடவே நின்று கொண்டிருந்தார். அவர்களின் மகிழ்ச்சியையும் துக்கத்தையும் சோகத்தையும் பகிர்ந்து கொண்டிருந்தார். அல்லது இப்படியும் சொல்லலாம். பாலுவின் பாடல்களின் வழியாக தங்களின் மகிழ்ச்சி, சோகம், காதல், துயரம் போன்ற உணர்ச்சிகளை ரசிகர்கள் எளிதில் அடைந்தார்கள். ‘உன்னை நினைச்சே பாட்டுப்படிச்சேன்’ என்று அபூர்வ சகோதரர்கள் படத்தின் பாடலில் வெளிப்படும் சோகமும் ஆறுதலும், காதல் தோல்வி அடைந்த ஓர் இளைஞனுக்கு எத்தனை பெரிய வடிகாலாக இருக்கும் என்பதை வார்த்தைகளில் விளக்க முடியாது.

பாலுவை தங்களின் சகோதரனாக, நண்பனாக, அந்தரங்க ரகசியங்களைப் பகிர்ந்து கொண்ட காதலனாக அவர்கள் நினைத்ததால் பாலுவின் மறைவை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு வெகுசன கலைஞனாக பாலு அடைந்த மகத்தான வெற்றி இதுவென்று தோன்றுகிறது.

~oOo~

இளையராஜாவிற்கும் பாலுவிற்கும் இடையுள்ள நட்பு சுவாரசியமானது. தன்னை வெளிப்படையாக அமைத்துக் கொள்வதில் பாலு விருப்பமுள்ளவர். எப்போதும் உணர்ச்சிகளின் விளிம்பில் ததும்பிக் கொண்டேயிருப்பார். ஆனால் ராஜாவோ பொதுவெளியில் தன்னை இறுக்கமாக மூடிக் கொள்பவர். நெருக்கமான நண்பர்களிடையே வெளிப்படும் ராஜா இன்னொரு விதமாக இருப்பார் என்று பழகியவர்களின் அனுபவங்களின் மூலம் தெரிய வருகிறது.

இந்த எதிரெதிர் முனைகளே அவர்களின் நட்பிற்கு ஆதாரமான ஸ்ருதியாக இருந்ததோ என்று நினைக்கத் தோன்றுகிறது.

இது மட்டுமல்ல, தமிழ் திரையிசையுலகில் பாலு வெவ்வேறு இசையமைப்பாளர்களிடம் பாடியிருந்தாலும் ராஜாவின் இசையில் பாடிய பாடல்கள் தனித்தன்மையுடனும் ஆத்மார்த்தமாகவும் அமைந்தது போல் எனக்குத் தோன்றும். “கேளடி கண்மணி.. பாடகன் சங்கதி’ என்கிற பாடலில் வெளிப்படும் பாலுவின் மெல்லிய சோகம் மிக அந்தரங்கமான ரகசியத்தை நம்மிடம் பகிர்ந்து கொள்ளும் பாணியில் இருக்கும். பாலு என்னும் விளக்கு மிகப் பிரகாசமாக ஒளிர்ந்ததற்கு ராஜா என்னும் எரிபொருள் ஆதாரமாக அமைந்தது என்று இதனைச் சொல்லலாம்.

பாலு மருத்துவனையில் இருந்த போதும் சரி, மரணத்தின் போதும் சரி, ராஜா வெளியிட்ட வீடியோ பதிவுகள் மிகச் சுருக்கமாகவும் உருக்கமாகவும் அமைந்திருந்தன. பாலுவின் மரணத்தையொட்டி ராஜா வெளியிட்ட சமீபத்திய வீடியோ பதிவில் ‘எழுந்து வந்திருடா.. ன்னு சொன்னேன். நீ வரலை.. எல்லாமே சூன்யமா இருக்கு.. என்ன சொல்றதுன்னு தெரியல.. வார்த்தைகள் வரல’ என்று மிக நிதானமான சொற்களில் நிறுத்தி. நிறுத்தி.. உருக்கமாக ராஜா பேசியதுதான் எஸ்.பி.பிக்கு கிடைத்த அஞ்சலிகளில் மிகச் சிறந்ததென்று தோன்றுகிறது.

~oOo~

ராஜாவின் இசை மேதைமையை ஒவ்வொரு மேடையிலும் உணர்ச்சிப் பெருக்குடன் புகழ பாலு எப்போதும் தவறியதேயில்லை. “ராட்சசன்.. அவன்.. என்னமா கம்போஸ் பண்ணியிருக்கான்” என்று புகழ்வதோடு, ஒரு குறிப்பிட்ட பாடலில் ராஜா என்னவெல்லாம் செய்திருக்கிறார் என்கிற நுட்பங்களை, நுணுக்கங்களை ஒரு பாமர ரசிகனும் அறிந்து கொள்ளும் வகையில் விளக்குவார்.

இதர கலைஞர்களுக்கு மரியாதை செலுத்துவதில், பாராட்டுவதில், புகழ்வதில் பாலு வஞ்சகமே செய்ததில்லை. சூப்பர் சிங்கர் போன்ற ரியாலிட்டி ஷோக்களில் ஓர் இளம் போட்டியாளர் மிகச் சிறப்பாக பாடிவிட்டால் “அருமையா பாடினே தம்பி.. என்னை விடவும் நல்லா பாடினே’ என்று அந்த இளைஞனே  கூச்சம் அடையுமளவில் பாராட்டி விடுவார். அது அந்தப் போட்டியாளன் ஆயுள் முழுக்க நினைவு வைத்திருக்கும் தருணமாக அமைந்து விடும்.

இதைப் போலவே எந்த இளம் பாடகராகவது பாடுவதில் பிழை செய்து விட்டால் அவர்களின் மனம் சிறிது கூட கோணாதவாறு அந்தப் பிழைகளைச் சுட்டிக் காட்டி விடுவார். இசைத் திறமையைத் தாண்டி இந்தப் பெருந்தன்மையும் நற்பண்புகளும் பாலு அடைந்திருக்கும் உயரத்திற்கான காரணம் என்று உறுதியாக நம்புகிறேன். பல கோடி பார்வையாளர்களின் பிரியத்தை அவர் சம்பாதித்து வைத்திருப்பதற்கு இந்த நல்லியல்புகளும் ஒரு முக்கிய காரணம். ‘இத்தனை சாதிச்ச.. மனுஷனே.. இத்தனை பணிவா.. இருக்காரு.. நீ ரொம்ப ஆடக்கூடாதுடா தம்பி” என்று என் மனச்சாட்சியே பல முறை என்னை எச்சரித்திருக்கிறது. அவர் பின்பற்றிய நற்பண்புகளின் சாயல் இதர மனிதர்களிடம் சற்று படர்வதற்கு பொதுவெளியில் பாலுவின் உடல்மொழி காரணமாக இருந்தது.

பாலுவின் மறைவு ஈடுசெய்ய முடியாத பேரிழப்புதான். அவர் மருத்துவமனையில் இருந்து குணமாகி மீண்டும் மேடைகளில், ஒலிப்பதிவுக்கூடத்தில் தோன்றுவார் என்று ஏராளமான ரசிகர்களும் சக கலைஞர்களும் நம்பிக் கொண்டிருந்தார்கள். அந்த நம்பிக்கை பொய்த்துப் போயிற்று. என்றாலும் பாலுவின் குரல் எப்போதும் நம்முடன் இருக்கும் என்கிற குறைந்த பட்ச ஆறுதல் இருக்கிறது.

அந்த மகத்தான இசைக்கலைஞனுக்கு ஒரு சராசரி ரசிகனாக என் மனமார்ந்த அஞ்சலி.

தொடர்புள்ள பதிவுகள்

One Reply to “எஸ்.பி.பி. என்னும் H2O”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.