முனைவர் ராம் பொன்னு

சங்க காலத்தில் அன்பின் ஐந்திணையில் தலையாயதாகிய குறிஞ்சி நிலத்தின் கடவுளாக- செந்நிற மேனியனாக- சேவற்கொடியோனாக- கொற்றவை மைந்தனாக-சூரியனுக்கு ஒப்பானவனாக வழிபடப் பெற்றவன் முருகன். தமிழ் கடவுளான முருகன் வேலன், சரவணன், கார்த்திகேயன், கந்தன், சுப்பிரமணியன், சுவாமிநாதன், செந்தில்நாதன், ஆறுமுகன், சண்முகன், தாரகாரி, கிரௌஞ்ச போதனன், சக்திதரன், தேவ சேனாபதி, மயில் வாகனன், சேனாளி, பிரம்ம சாஸ்தா, பால சுவாமி, சிகி வாகனன், வள்ளி மணாளன், அக்கினி ஜாதன், சாரபேயன், குகன், பிரம்மசாரி, தேசிகன், காங்கேயன் போன்ற பல பெயர்களால் தொடர்ந்து வழிபடப்பட்டு வருகிறான். தமிழகத்தில் முருகப் பெருமான் எழுந்தருளியுள்ள திருக்கோயில்கள் ஏராளமாக இருப்பினும் திருப்பரங்குன்றம், திருச்சீரலைவாய்(திருச்செந்தூர்), திருவாவினன்குடி (பழநி), திருவேரகம் (சுவாமிமலை), குன்றுதோராடல்(திருத்தணி), பழமுதிர் சோலை ஆகிய அறுபடை வீடுகள் மிகவும் சிறப்பு வாய்ந்தனவாகப் போற்றி வழிபடப்பட்டு வருகின்றன. ஆற்றுப்படை வீடுகள் என்பதுவே பின்னாளில் ஆறுபடை வீடுகள் என்றாகி அறுபடை வீடுகள் ஆயிற்று என்று கூறுவதுண்டு. முருகப் பெருமானின் அறுபடை வீடுகளுள் முதற்படை வீடாக விளங்குவது திருப்பரங்குன்றம். திருமுருகாற்றுப்படையில் ‘மாடமலிமறுகில் கூடற்குடவாய்ன்’ என்றும் கந்த புராணத்தில் ‘கூடலின் குட திசை அமர பரங்குன்று’ என்றும் திருப்பரங்குன்றம் மதுரைக்கு மேற்காக இருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது. மதுரை நகரின் கீழ்திசையிலிருந்து நோக்குவார்க்குப் பரங்குன்றம் தென்மேற்குத் திசையில் காட்சியளிக்கிறது. நகரம் இன்று மேற்காக விரிந்துள்ளமையால் பரங்குன்றம் மதுரைக்கு தெற்காக இன்று காணப்படுகிறது. அறுபடை வீட்டுக் கோயில்களில் இக்கோயில் கட்டுமான அளவில் பெரியதாகும். இத்தலத்து முருகப் பெருமானிடத்து அடியார்களை ஆற்றுப் படுத்தி நக்கீரர் அருளிச் செய்த திருமுருகாற்றுப்படை சங்க காலம் தொட்டே இக்குன்றத்தில் முருக வழிபாடு சிறப்புற்று விளங்கியதை உணர்த்துகின்றது. குன்றத்தின் இயற்கை எழில் நக்கீரரால் அழகுற சித்தரிக்கப்பட்டுள்ளது. விழாக் காலங்களில் பாண்டிய மன்னர்கள் இங்கு வந்து வழிபட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தனர். அகநானூறு திருப்பரங்குன்றத்தை முருகன் குன்றம்(59) என்றும் ‘ஒடியா விழவின் நெடியோன் குன்றம்’ (149) என்றும், மதுரைக் காஞ்சி ‘ தனிமழை பொழியும் தண் பரங்குன்றம்’ (264) என்றும் கூறுகிறது. பரிபாடல் பரங்குன்றின் முருகனைப் பற்றி விவரிக்கையில், குன்றத்தில் எழுத்து நிலை மண்டபம் ஒன்று இருந்ததாகவும், அங்குப் பல வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடுகிறது. மேற்சுட்டிய சங்கப் பாடல்கள் அனைத்தும் திருப்பரங்குன்றம் முருகனுக்குரியது என்றே சான்று பகர்கின்றன. சமஸ்கிருதமயமாக்கலுக்குப் பின் தமிழ் முருகன் சுப்பிரமணியன் ஆன பிறகு, செந்தூரில் சூரப்பதுமனை வதம் செய்ததற்குப் பரிசாக இந்திரன் தன் புதல்வியாகிய தெய்வயானையைத் திருமணம் செய்து கொடுத்ததின் நினைவாக, புதுமணக் கோலத்தில் முருகப் பெருமான் திருவருள் பாலிக்கும் திருத்தலமாயிற்று.

திருப்பரங்குன்றம் பெயர் காரணம்
திருப்பரங்குன்றம் பெயர் காரணம் குறித்துப் பல்வேறான அனுமானங்கள் உள்ளன. முருகனின் கோயில் உள்ள குன்று சிவலிங்க வடிவில் அமைந்துள்ளதால் பரங்குன்று என்றும் சிவன் “பரங்குன்றநாதர்’ என்றும் பெயர் பெற்றதாகக் கூறப்படுகிறது. பரன் என்பது சிவனைக் குறிக்கும். சிறப்பை உணர்த்தும் விதமாக ‘திரு’ அடைமொழியுடன் திருப்பரங்குன்றம் என வழங்கப் பெறுவதாயிற்று. குன்றையே சிவலிங்கமாகப் பாவித்து வழிபடும் வழக்கம் இன்றும் உள்ளது. மேலும், ஆரம்பக் காலத்தில், திருப்பரங்குன்றம் கோயிலுக்குப் பின்புறத்திலுள்ள தென்பரங்குன்றம் குடைவரைக் கோயிலே பிரதானமாக இருந்திருக்கிறது. குடைவரைக் கோயில் என்பது செயற்கையான கட்டுமானங்கள் ஏதும் இல்லாமல், மலைக்குன்றுகளின் அடிவாரப் பகுதியில் இயற்கையாக அமைந்த குகைகளை மேலும் சிற்றறையாகக் குகையாக்கம் செய்து அமைக்கப்படும் கோயிலாகும். அருணகிரிநாதர்(15ஆம் நூற்றாண்டு) தான் எழுதிய திருப்புகழில், “தேவர் பணிந்தெழு தென்பரங்குன்றுறை பெருமாளே”(9) என்று பாடியிருப்பதில் இருந்து அவரது காலத்தில் தென்பரங்குன்றம் கோயிலே நடைமுறையில் வழிபடப்பட்டதாகத் தெரிகிறது. பின்னாளில் கோயிலை மறுபக்கத்திற்கு மாற்றி முருகப்பெருமானை வடக்குத் திசை நோக்கி திருப்பி அமைத்திருக்கக் கூடும். எனவே “திருப்பிய பரங்குன்றம்’ என்றாகி, பின்னர் இத்திருத்தலம் இலக்கியங்களில் “திருப்பரங்குன்றம்’ என்று மருவியதாகவும் கூறுவதுண்டு. இத்தலம் பரங்கிரி, சுமந்த வனம், பராசல தலம், குமாரபுரி விட்டணு துருவம், கந்த மாதனம்,கந்த மலை, சத்திய கிரி, தென்பரங்குன்றம், தண்பரங்குன்றம், சுவாமிநாதபுரம், முதல்படை வீடு எனப்
பல பெயர்களில் பல்வேறு காலங்களில் அழைக்கப்பட்டு வந்துள்ளது. இம்மலையை வடதிசையிலுருந்து பார்க்கும் பொழுது கைலாய மலை போன்றும், கிழக்கிலிருந்து பார்க்கும்பொழுது பெரும்பாறையாகவும், தெற்கிலிருந்து பார்க்குங்கால் பெரிய யானை படுத்திருப்பது போன்றும், மேற்கிலிருந்து கிழக்கு பார்க்கும்போது பெரிய சிவலிங்க வடிவமாகவும் காட்சியளிப்பது குறிப்பிடத்தக்கதாகும். பராசர ஷேத்திரம்(தப்தர், அனந்தர், நந்தி, சதுர்முகர், சக்ரபாணி, மாலி ஆகிய ஆறு பராசர முனிவரின் புதல்வர்கள் தங்கள் தந்தையின் சொல் கேளாமல் முறை தவறி நடந்தனர். எனவே, அவர்களை மீனாக மாற பராசரர் சாபமிட்டார். ஒரு நாள் முருகப் பெருமான் சரவணத்தில் தனது அன்னை உமையம்மையிடம் பால் அருந்துகையில், பால் துளிகள் அந்த மீன்கள் மீது விழவே சாபம் நீங்கியது. அறுவரும் பரங்குன்றம் முருகனைத் தியானித்து தவம் இயற்றி ஞான யோகம் அடைந்தனர். எனவே இப்பெயர் பெற்றது.) என்றும் இத்தலம் அழைக்கப் பெறுகின்றது. பிற்காலத்தில் முருகன் பெயராலேயே இக்கோயில் பெயர் பெற்றுள்ளது. விழாக் காலங்களில் சிவனுக்குக் கொடியேற்றப் பட்டாலும் இங்கு முருகனே வீதி உலா செல்கிறார். முருகன் சிவனது அம்சமானவர் என்பதால் இவ்வாறு செல்வதாகக் கூறப்படுகிறது. ஆகவே, இங்கு முருகன் “சோம சுப்பிரமணியர்’ என்ற பெயரும் பெற்றுள்ளார். சோமன் என்பது சிவனைக் குறிக்கும். இத்திருக்கோயில் சன்னதி தெருவில் மயில் மண்டபம் திருக்கோயிலைப் பார்த்த வண்ணம் மயில் உருவத்துடன் அமைத்துள்ளது. அதற்கு முன் பகுதியில் பதினாறுகால் மண்டபம் உள்ளது. இந்த இரு மண்டபங்களும் நாயக்கர் காலத்தில் கட்டப்பட்டவைகளாகும். குடைவரைக்கோவிலான இத்திருக்கோவில் சிவபெருமானுக்காகவே தோற்றுவிக்கப்பட்ட போதிலும் பிற்காலத்தில் இது முருகபெருமானின் சிறப்புத்தலமாக விளங்கி வருகிறது.

கோயில் புராண வரலாறு
கைலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவிக்கு ‘ஓம்’ எனும் பிரணவ மந்திரத்தின் உட்பொருளை உபதேசம் செய்கையில், தன் தாயின் மடி மீது அமர்ந்திருந்த முருகப் பெருமானும் அவ்வுபதேசத்தைக் கேட்க நேர்ந்தது. புனிதமான மந்திரப் பொருளை குருவின் மூலம் அறிந்து கொள்ள வேண்டுமே தவிர, மறைமுகமாக அறிந்து கொள்ளுதல் பாவம் என்று சமய சாத்திரங்கள் கூறுகின்றன. இப்பாவத்திற்குப் பரிகாரம் தேடியும், சிவனே தனக்குக் குருவாக இருந்து மந்திரம் உபதேசிக்க வேண்டியும் முருகப் பெருமான் திருப்பரங்குன்றத்திற்கு வந்து தவம் செய்யத் தொடங்கியதாகவும், இதைப் பார்த்த சிவனும் பார்வதியும் தை மாத பூச விண்மீன் நாளன்று அவர் முன் தோன்றி, அவரது தவத்தைப் ஏற்று அருள் புரிந்ததாகவும் தொன்மம் கூறுகிறது. சிவன் சுப்பிரமணியர் கோயிலுக்கு எதிரே ஆதிசொக்கநாதராக அருள் பாலிக்கிறார். குன்றத்திற்குச் செல்பவர்கள் முதலில் சிவனை வணங்கிவிட்டுத்தான் முருகனை வழிபட வேண்டும் என்பது மரபு. இத்தலத்தில் தான் இந்திரனின் விருப்பத்திற்கிணங்க முருகப் பெருமான் தெய்வயானையைப் பங்குனி உத்திர நன்னாளில் திருமணம் செய்ததாக தல வரலாறு கூறுகிறது.
குன்றப் பின்னணியில் கோயில் கோபுரம்
தமிழ் கடைச் சங்கத்தின் தலைவர் நக்கீரன் சிவனாருடன் வாதம் புரிந்தமையால் சாபம் பெற்று நோய்வாய்பட்டு அவதியுற்றார். நோய் தீர தீர்த்த யாத்திரை மேற்கொண்டு வழியில் குன்றத்தில் தங்கினார். சரவணப் பொய்கை கரையில் ஆலமரத்து அடியில் பஞ்சாஷர பாறையில் அமர்ந்து சிவனைத் தியானித்து வழிபாடு செய்தார். அப்போது மரத்தில் இருந்து உதிர்ந்த ஓர் இலையின் ஒரு பாதி நீரிலும் மறு பாதி நிலத்திலும் விழுந்தது. நீரில் விழுந்த இலையின் பாகம் மீனாகவும் நிலத்தில் விழுந்த பாகம் பறவையாகவும் மாறியது. இந்த அரியக் காட்சியைக் கண்டு கீரனின் தியானம் கலைந்தது. அக்காட்சியில் அவர் மனம் லயித்தபோது கற்முகி என்ற பூதம் அவரைத் தூக்கிச் சென்று குகையில் வைத்தது. அங்கிருந்து தப்பிக்க அவர் திருமுருகாற்றுப்படை பாடினார். பாட பாட முருகனின் கைவேல் குகையைப் பிளந்து பூதத்தைக் கொன்று நக்கீரனைக் காப்பாற்றியது. ‘பழமுதிர்ச் சோலை மலை கிழவோனே’ என்று பாட்டினை நக்கீரன் முடிக்க, ‘நான் என்ன கிழவனா’ என்று முருகப் பெருமான் கேட்டு மறைய, உடனே, ‘என்றும் இளையாய்’’ என்று நக்கீரன் வெண்பா பாடினாராம். வேல் பாறையைப் பிளந்த அடையாளத்தை தென்பரங்குன்றத்தில் இன்றும் காணலாம். குகையில் இருந்து நக்கீரன் காப்பாற்றப்பட்டதின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் புரட்டாசி மாதம் நவராத்திரிக்கு முன்பாக முருகனின் வேலை மலை உச்சிக்குக் கொண்டு செல்லும் விழா நடைபெற்று வருகிறது. (திருப்பரங்குன்றத்துக்கும் திருமுருகாற்றுப்படைக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு இதுதான்!’, தினமணி, 28 மார்ச் 2018)

குன்றத்தில் சமணம்
சங்க காலத்திலேயே மதுரை பகுதியில் சமண சமயம் வேரூன்ற தொடங்கியது. கி.மு.இரண்டாம் நூற்றாண்டிலேயே குன்றத்தில் சமணத் துறவிகள் தங்கியிருந்தனர் என்பதை அவர்கள் பயன்படுத்திய கற்படுக்கைகளும், அவர்கள் விட்டுச் சென்றுள்ள தமிழ் பிராமி கல்வெட்டுகளும் உறுதி செய்கின்றன.
இம்மூன்று கல்வெட்டுகளும் குன்றத்தின் மேற்குப் பக்கத்தில் உள்ள குகையில் கற்படுக்கைகளின் மீது பொறிக்கப்பட்டுள்ளன.
‘அந்துவன் கொடுபிதவன்’
‘எருகாடுர் இழகுடும்பிகன் போலாலயன்
செய்தான்
ஆய்சயன நெடுசாதன்’
‘மாரயது கயம’
சங்க காலத்திற்குப் பின் முற்காலப் பாண்டியர் காலத்தில் இக்குன்றில் சமணர்கள் வாழ்ந்தமைக்கான எச்சங்கள் ஏராளமாகவே உள்ளன. எண்பெருங்குன்றங்களை வரிசைப் படுத்தும் சமணப் பழம்பாடல் ஒன்றும் திருப்பரங்குன்றத்தையே முதல் சமணத் தலமாகக் குறிப்பிடுகிறது. பரங்குன்றம், சமணர் மலை (திருவுருவகம்), பள்ளி (குரண்டி மலை), யானை மலை, இருங்குன்றம்(அழகர் மலை) முதலிய ஐந்து மலைகளுடன் நாகமலை (கொங்கர் புளியங்குளம் குன்று), அரிட்டாபட்டி மலை (திருப்பிணையன் மலை), கீழவளவுக் குன்று முதலிய மூன்று மலைகளையும் சேர்த்து எண்பெருங்குன்றங்கள் என்று வழங்குவது வழக்கம். (வெ.வேதாச்சலம், எண்பெருங்குன்றம். ப.7) இந்த எண்பெருங்குன்றங்களில் தான் எண்ணாயிரம் சமணர்கள் வாழ்ந்தார்கள் என பிற்கால சோழர் காலத்தில் எழுதப் பெற்ற பெரியபுராணம் குறிப்பிடுகிறது.
பக்தி இயக்க காலத்தில் திருப்பரங்குன்றம்
கி.பி.7ஆம் நூற்றாண்டில்- பல்லவர்-பாண்டியர் காலத்தில் சிவனையும் திருமாலையும் மையமாகக் கொண்டு நடைபெற்ற பக்தி இயக்கத்தில் இங்குள்ள சிவன் கோயிலையும் சிவனாரையும் முதன்மை படுத்திப் பாடப் பட்டுள்ளது. சங்க காலத்தில் தமிழ் கடவுள் முருகனுக்கு அளிக்கப்பட்ட முக்கியத்துவம் பக்தி இயக்க அடியவர்களால் சிவனுக்கு மாற்றம் செய்யப்பட்டது.
‘அங்கமோராறும் அருமறை நான்கும் அருள்செய்து
பொங்கு வெண்ணூலும் பொடியணி மார்பில் பொலிவித்துத்
திங்களும் பாம்பும் திகழ்சடை வைத்தோன் தேன்மொழி
பங்கினன்மேய நன்னகர் போலும் பரங்குன்றே’
என்று ஞான சம்பந்தர் பாடி இருப்பதில் இருந்து சிவன் முதன்மை கடவுளாகக் காட்டப்படுவதை அறியலாம். அதே போன்று,
அடிகேள் உமக்காட் செய அஞ்சுதுமென்றமரர் பெருமானை ஆருரன் ஆரசி
முடியால் உலகாண்ட மூவேந்தர் முன்னேமொழிந்தாறுமோர் நான்குமோர் ஒன்றினையும்
படியாயிவை கற்று வல்லவ் வடியார் பரங்குன்றமே யமர மன்னடிக்கே
குடியாகி வானோர்க்கும் ஓர் கோவுமாகிக்குலவேந்தராய் விண்முழுதாள்பவரே.
என்ற சுந்தரர் தேவாரம் மூவேந்தர்களுடன் சுந்தரர் இத்தலத்தில் சிவனை வழிபட்ட செய்தியை உறுதிப்படுத்துகின்றது. சுந்தரர் இக்குன்றத்தினை இரண்டாவது தலமாக வைத்துப் பாடிய போதிலும், பாடல் பெற்ற பாண்டிய நாட்டுப் பதினான்கு சிவப் பதிகளுள் மூன்றாவது தலமாக இத்தலம் போற்றப்படுகிறது.
பக்தி இயக்கக் காலத்தில் சமண சமயத்திற்குச் சற்றே பின்னடைவு ஏற்பட்டது. ஆனால் அந்தப் பின்னடைவிலிருந்து மீண்டு, கி.பி.9-10 ஆம் நூற்றாண்டுகளில் சமணம் மீண்டும் புத்துயிர்ப்புப் பெற்று, தனது பழைமையான நிலைகளில் மையம் கொண்டது. இக்காலக் கட்டத்தில் அச்சணந்தி என்னும் சமணத் துறவி நாடெங்கிலும் பயணித்து சமணம் மறுமலர்ச்சி பெற வழி வகுத்தார். மேலும், சமண சமயவாதிகளின் சிந்தனைகளிலும் மாற்றம் ஏற்பட்டது. உருவ வழிபாட்டு முறைகளை அவர்கள் ஓரளவு ஏற்றுக் கொண்டனர். தங்கள் சமயத்தில் பெண்களுக்கும் உரிய பங்கை அளிக்க முன்வந்தனர். நுண் கலைகளிலும் நாட்டம் செலுத்தினர். பல புதிய உறைவிடப் பள்ளிகளை அமைத்து தொடர்ந்து மக்கள் தொண்டாற்றினர்.
மதுரை-காரியாப்பட்டி வழியில் 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள ஆவியூருக்கு அருகிலுள்ள குறண்டி என்னும் ஊரில் திருக்காட்டாம்பள்ளி என்ற சமணப் பள்ளி பராந்தக பருவதமாயின ஸ்ரீ வல்லபப் பெரும்பள்ளி என்ற பெயருடன் சிறப்புற செயல்பட்டு வந்தது. இப்பள்ளியின் ஆசிரியர்களும், மாணாக்கர்களும் மதுரையைச் சுற்றியிருந்த ஏனைய பள்ளிகளோடு தொடர்பு கொண்டிருந்தனர். அவர்கள் பல இடங்களுக்கும் சென்று சமண திருமேனிகளைப் புடைப்புச் சிற்பங்களாகச் செதுக்கி வழிபடச் செய்தனர். திருப்பரங்குன்றம், கீழக்குயில்குடி, முத்துப்பட்டி, குப்பல் நத்தம், ஐவர் மலை போன்ற பல்வேறு இடங்களில் அவர்களது பணிகள் பற்றிய கல்வெட்டுகள் காணப்படுகின்றன. திருப்பரங்குன்றத்து கோயிலின் பின்புறம் ஓர் இயற்கையான சுனை உள்ளது. அங்குள்ள பாறையில் இரண்டு புடைப்புச் சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. ஒன்று மகா வீரர் உருவம், மற்றொன்று பார்சுவ நாதர் உருவம். இவற்றின் கீழ் இரண்டு கல்வெட்டுகள் உள்ளன. அவற்றுள் ஒன்று,
‘வெண்புநாட்டுத் திருக்குறண்டி
அனந்த வீர்யப் பணி’
அனந்த வீர்யன் என்னும் சமண அடியவரால் இங்குள்ள மகா வீரர் சிற்பம் அமைக்கப் பெற்றுள்ளது. இதன் அருகில் உள்ள பார்சுவ நாதர் சிற்பத்தைச் செதுக்கியவர் பற்றிய குறிப்பு இன்னொரு கல்வெட்டில் உள்ளது.
‘ஸ்வஸ்திஸ்ரீ சிவிகை ஏறினபடையர்
நீலனாஇன இளந்தம்மடிகள்
மாணாக்கன் வாணன் பலதேவன்
செவ்விச்ச இப்பிரதிமை’
என்பது இதன் வாசகம். இக்கல்வெட்டுகள் கி.பி.9-10 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. இதே காலத்தில் மலை மேல் உள்ள காசி விசுவநாதர் ஆலயத்தின் அருகில் உள்ள உயரமான பாறையிலும் இரண்டு சமணச் சிற்பங்கள் செதுக்கப்பெற்றுள்ளன. அதன் கீழும் கல்வெட்டுகள் உள்ளன.

கோயில் திருப்பணி
அரசர்கள், அவர்தம் தேவியர் மற்றும் அலுவலர்கள் மட்டுமன்றி இங்கு வாழ்ந்த மக்களும் திருப்பரங்குன்றம் முருகன் கோயில் வளர்ச்சியிலும், வழிபாட்டிலும் தங்கள் பங்களிப்பை செய்துள்ளனர். சிவ பெருமானுக்காக கி.பி. 773ஆம் ஆண்டு பராந்தகன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய படையின் தலைமைத் தளபதியாக இருந்த பராந்தகனால் அமிர்தலிங்க வரையன் என்ற பட்டத்தினைப் பெற்ற சாத்தன் கணபதி திருப்பரங்குன்றத்துக் கோயிலுக்கு அறப்பணி செய்து அங்குத் திருக்குளம் அமையவும் காரணமாக இருந்தான். இப்பணியினைப் பற்றி பராந்தகனின் ஆறாம் ஆண்டு கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. சாத்தன் கணபதியின் மனைவியாகிய ‘நக்கன் கொற்றி’ என்பாள் இக்கோயிலில் உள்ள துர்க்கைக்கும் சேஷ்டைக்கும் குடைவரைக் கோயில்களைத் தனித்தனியே அமைத்தாள் என இக்கோயில் கல்வெட்டு கூறுகிறது. (தென் இந்தியக் கல்வெட்டுக்கள்,தொகுதி 14, எண் 3) மதுரை ஆங்கிலேயர் ஆட்சிக்குட்பட்ட போது கி.பி. 1792 ஆம் ஆண்டில் திருப்பரங்குன்றம் கோயிலையும் தங்கள் ஆதிக்கத்துள் கொண்டுவர முயற்சித்தனர். ‘வெள்ளைக்காரர் பாளையம் வந்து இறங்கி சொக்கநாதர் கோயிலையும் இடித்து, பழனி யாண்டவர் கோவிலையும் இடித்து ஊரையும் ஒப்புக்கொண்டு, ஆஸ்தான மண்டபங் கைக்கொண்டு அட்சகோபுர வாசல் கதவையும் வெட்டி, கலியாண மண்டபத்துக்கு வருகிற பக்குவத்தில், திருவிழாவும் நின்று தலமும் ஊரும் எடுபட்டுப் போராதாயிருக்கிறது என்று… வயிராவி முத்துக்கருப்பன் மகன் குட்டியைக் கோபுரத்தில் ஏறிவிழச் சொல்லி, அவன் விழுந்து பாளையம் வாங்கிப்போனபடியினாலே, அவனுக்கு ரத்தக் காணிக்கையாகப் பட்டயம் எழுதிக் கொடுத்தோம்’ என்ற கல்வெட்டின் மூலம் கோயில் ஊழியம் செய்யும் கடை நிலைப் பணியாளர் கோயிலைக் காப்பதற்காகத் தன் இன்னுயிரை நீத்தமை அறியப் படும். குட்டியின் செயகையால் ஆங்கிலேயர் படை பின் வாங்கிச் சென்றது என்று கூறப் படுகிறது. இதுபோல் கோயில் தேவரடியார்களும் தம் பங்களிப்பைச் செய்துள்ளனர்.
கோயில் அமைப்பு
ஆஸ்தான மண்டபம்
கோயில் வாயிலை அடுத்து உள்ளே அமைந்துள்ள ஆஸ்தான மண்டபம் சுந்தர பாண்டியன் மண்டபம் என்றும் வழங்கப்படுகிறது. கோயில் முகப்பில் அழகிய கண்கவர் கலை நயம் கொண்ட
சிற்பங்களுடன் 48 தூண்களுடன் இம்மண்டபம் இராணி மங்கம்மாள் ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இப்பெரிய மண்டபத்தில் நுழைந்ததும் இடது புறமாகச் சென்றால் கருப்பணசுவாமி கோயில் உள்ளது. மண்டபத் தூண்களில் யாளிகள், குதிரை வீரர்கள், பத்திரகாளி, துர்க்கை, நர்த்தன விநாயகர், வீரபாகு, சிவனார் திரிபுரம் எரிக்கும் காட்சி, திருமால் மற்றும் மகா லட்சுமியின் சிற்பங்கள் அற்புத வேலைப்பாடுகளுடன் செதுக்கப் பெற்றுள்ளன. பிற ஆலயங்களில் வழிபடுவது போன்று வெண்ணெய் உருண்டை சாற்றி காளி தேவியை வழிபடும் வழக்கம் இங்குள்ளது. பிரம்மன் வேள்வி வளர்த்துத் திருமணச் சடங்குகள் நடத்த, இந்திரன் தேவயானையை முருகனுக்குத் தாரை வார்த்துக் கொடுக்க, தேவயானையைக் கைத்தலம் பற்றிய பெருமிதத்துடன், அதே வேளையில் நாணம் கலந்த மகிழ்ச்சியுடன் இருப்பது போன்று முருகப் பெருமானின் திருமணக் கோலம் எழிலுற வடிவமைக்கப் பெற்றுள்ளது.
ஆஸ்தான மண்டபத்தை அடுத்து கோபுர வாயில் உள்ளது. இது 150 அடி உயரமுள்ள ஏழு நிலைகள் கொண்ட இராஜ கோபுரம் ஆகும். ஐம்பொறிகள், மனம் மற்றும் புத்தி ஆகிய ஏழையும் ஏழு நிலைகள் குறிக்கும். கோபுரத்தின் நடுவே கீழ் திசை நோக்கி கோபுர விநாயகர் அருள்பாலிக்கிறார். இக்கோபுரவாயில் 1505ஆம் ஆண்டு கிருஷ்ணப்ப நாயக்கரின் மைந்தர் வரைப்ப நாயக்கரால் கட்டப்பட்டதாகும். கோபுரத்தைக் கடந்ததும் வலது பக்கத்தில் யானை கட்டும் தறி அமைந்துள்ளது.
திருவாட்சி மண்டபம்
கோபுர வாயிலை அடுத்து திருவாட்சி மண்டபம் என்னும் பெரிய கல்யாண மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் முன் புறம் ஏறும் படிகளின் இரு பக்கங்களிலும் தேர் இழுக்கும் இரு பரிகள் உள்ளன. இவை ஒரே கல்லில் செய்யப்பட்டு கலை நயத்துடன் விளங்குகின்றன. இம்மண்டபத்திற்கு ஆறுகால் மண்டபம் என்ற பெயரும் உண்டு. அகன்ற இம்மண்டபத்தில் தான் இக்கோயில் விழா நிகழ்ச்சிகள், சமயச் சொற்பொழிவுகள், இசை நிகழ்ச்சிகள் முதலியன நடைபெறுகிறன. இம்மண்டபத்தில் தான் ஆனி மாத ஊஞ்சல் திருவிழாவும், பங்குனி மாத சுவாதி நட்சத்திரத்தன்று முருகப் பெருமானின் திருக்கல்யாண உற்சவமும் நடைபெறுகின்றன. கல்யாண உற்சவம் நடைபெறும் நாளன்று காலையில் மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் எழுந்தருள்வர். இம்மண்டபத்தின் கீழ்பக்கம் இலக்குமி தீர்த்தம், வசந்த மண்டபம் மற்றும் ஒடுக்க மண்டபம் அமைந்துள்ளன. மேற்கு பக்கம் வல்லப கணபதி சந்நிதியும், மடப்பள்ளியும் உள்ளது.
பிரம்மக் கூடம்
கல்யாண மண்டபத்தின் மேற்குப் பக்கத்தில் பிரம்மக் கூடம் என்ற தீர்த்தம் உள்ளது. சந்நியாசிக் கிணறு என்றும் இத்தீர்த்தம் வழங்கப்படுகிறது. பிரம்ம தேவனால் இது உருவாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. சன்னியாசித் தீர்த்தமே இறைத் திருமேனிகளின் அபிஷேகத்திற்குப் பயன்படுத்தப்படுகிறது. பாண்டிய மன்னன் ஒருவன் இத்தீர்த்தத்தில் புனித நீராடி தன்னைப் பீடித்திருந்த வெண்குஷ்ட நோய் நீங்கப் பெற்றதாக வாய்மொழி செய்தி கூறுகிறது. இத்தீர்த்தத்தில் நீராடி, தீர்த்த நீரை உட்கொண்டால் நீரிழிவு நோய் குணமாகும் என்ற நம்பிக்கை வழிபடுவோர்களிடையே உள்ளது. சன்னியாசித் தீர்த்தத்தின் கழிவு நீர் யாவும் நந்தவனத்திற்குச் செல்லும்படியாக அமைக்கப் பெற்றுள்ளது. நந்தவனம் கோயில் நிர்வாகத்தால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
லெட்சுமி தீர்த்தம்
மருத்துவத்தால் குணப்படுத்த இயலாத நோய்வாய்பட்டோர் குறிப்பாக, தோல் வியாதிகளால் அவதியுறுபவர்கள் லெட்சுமி தீர்த்தக் கரையில் உள்ள பிள்ளையாரை வழிபட்டு உப்பு, மிளகு ஆகியவற்றைத் தீர்த்தத்தில் இட்டால் நோய்கள் குணமாகும் என்ற நம்பிக்கை உள்ளது.
கொடிமர மண்டபம்
திருவாட்சி மண்டபத்தை அடுத்து கொடிமர மண்டபம் அமைந்துள்ளது. இம்மண்டபத்தின் நடுவே கொடிமரம் அமைந்துள்ளது. மயில், நந்தி, மூஞ்சூறு ஆகிய மூன்று வாகனங்களும் ஒருசேர அமைந்துள்ளன. இவ்வரியக் காட்சி இத்தலத்தின் சிறப்பியல்புகளுள் ஒன்றாகும். சைவ ஆலயங்களில் சிவனார் முன் நந்தி, விநாயகர் முன் முஞ்சூறு, முருகன் முன் மயில் என அந்தந்த சுவாமிகளுக்குரிய வாகனங்கள் தான் சுவாமி எதிரில் இருக்கும். ஆனால், இத்தலத்தில் சிவன், விநாயகர், முருகன் ஆகிய மூவருக்குமான வாகனங்கள் கொடிமரத்திற்கு அருகில் அமைந்துள்ளன. பீடத்தின் நடுவில் நந்தியும், வலதுபுறத்தில் முஞ்சூறும், இடப்புறம் மயில் வாகனமும் அமைந்துள்ளது. இம்மூன்று வாகனங்களும் தெற்கு நோக்கி இருப்பது மற்றொரு சிறப்பு. வழக்கமாக, திருமாலின் வாகனமாக கருடாழ்வார், அவருக்கு எதிரே வணங்கியபடி இருப்பார். ஆனால், இக்கோயிலில் திருமாலுக்கு எதிரே சிவன் இருப்பதால், கருடாழ்வார் சன்னதி இல்லை. அதற்குப் பதிலாக கருடாழ்வார், சண்முகர் மண்டபத்திலுள்ள கார்த்திகை முருகனுக்கு அருகில் வடக்கு நோக்கி இருக்கிறார்.
மண்டபத்தின் தென்மேற்கில் உற்சவர் மண்டபம் உள்ளது. தென்கிழக்கில் 100 அடி நீளமுள்ள சுரங்கப் பாதை ஒன்று உள்ளது. அதன் அருகே சேஷ்டாதேவி (இலட்சுமி தேவிக்கு மூத்தவர்) சிற்பம் உள்ளது. மேலும் கலைக்கோட்டு முனிவரின்(ரிஷ்யசிருங்கர்; மக்கட்பேறு வேண்டி தசரதனுக்காக அசுவமேத யாகம் நடத்தியவர்) உருவமும் உள்ளது. இம்மண்டபத்தின் முன் பகுதியில் இத்தலத்தில் தவம் செய்து முக்தி எய்திய பராசுரர், வேத வியாசர் முனிவர்களும், அண்டராபரணர்(அண்டத்தை அணியாகக் கொண்டவர்), முதலியவர்களின் உருவங்கள் உள்ளன. உக்கிரமூர்த்தி முதலிய பூதக் கணத் தலைவர்களும் காட்சியளிக்கின்றனர். இப்பூதக்கணத் தலைவர்களே குன்றத்தின் காவல் தெய்வங்களாகக் கருதப்படுகின்றனர். எனவே பூதக் கணங்களை வழிபட்ட பிறகே மேலேறி செல்ல வேண்டும் என்ற நியதி உள்ளது. கம்பத்தடி மண்டபத்திலிருந்து மேலேறிச் செல்லும் வாயிலின் கிழக்குப் பக்கத்தில் காலக்கண்டி அம்மன் மற்றும் அதிகார நந்தி (சிவாலயங்களில் காணப்பெறும் ஐவ்வகை நந்திகளில் மூன்றாவதாக இருப்பதாகும். கைலாயத்தில் வாயிற்காவலாக நின்றிருக்கும் இவர் சிவபெருமானை தரிசிக்க வருபவர்களை அனுமதிக்கும் அதிகாரம் கொண்டவராக இருப்பதனால் அதிகார நந்தி என்று அழைக்கப்படுகிறார்.)தேவரும், மேற்குப் பக்கத்தில் இரட்டை விநாயகர் உருவங்களும் உள்ளன. கொடிமர மண்டபத்திலிருந்து ஒரு வழி மேற்கு புறமாக அடிவாரம் வரை அமைந்துள்ளது. விழாக் காலங்களில் சுவாமி வீதி உலா செல்வதற்கு இவ்வழி பயன்படுத்தப் படுகிறது.

மகா மண்டபம்
கொடிமர மண்டபத்தை அடுத்து மகா மண்டபம் உள்ளது. படிகள் மீதேறி மேலே சென்றால் மகாமண்டபம் அடையலாம். மண்டபத்தில் சோம ஸ்கந்தர், நடராஜர், சண்டிகேசர், நவ வீரர்கள், தென்முகக் கடவுள், பைரவர், சந்திரன், சாயா தேவி, சமிக்ஞா தேவி சமேதரரான சூரியன், ஆகியோரின் சந்நிதிகள் உள்ளன. இங்குள்ள தென்முகக் கடவுள், இடது கையைத் தன் காலுக்குக் கீழே உள்ள நாகத்தின் தலை மீது வைத்துள்ளபடி இருக்கிறார். ஜாதகத்தில் தோஷம் இருப்பவர்கள், நீண்ட நாட்களாகப் பிணியால் பாதிக்கப்பட்டவர்கள் இவரது சன்னதி முன்பாக ‘ருத்ராபிஷேகம்’ (சாந்தி மந்திரமாகவும், சகல பாவங்களையும் போக்கும் பிராயச்சித்த மந்திரமாகவும் கருதப்படுவது) செய்து வழிபடுகின்றனர். இதற்காக ஒரு “வெள்ளிக்குடத்தில்” ஆவாகனம் (சுவாமியை குடத்தில் எழுந்தருள வைத்து) செய்து 11 வேத விற்பன்னர்கள் சிவனுக்குரிய உயர்ந்த மந்திரங்களாகிய ருத்ரம், சமஹம் ஆகியன ஓதி வழிபடுகின்றனர். இது சிறப்பான பலன்களைத் தரக்கூடிய அபிஷேகம் ஆகும். இம்மண்டபத்தின் மேற்புறம் கோவர்த்தனாம்பிகைக்குத் தனிக் கோயில் உள்ளது. கோவர்த்தனாம்பிகை அம்மனுக்கு அமைத்துள்ள தனி சன்னதியில் நந்தி இருக்கிறார். மகா மண்டபத்தில் உற்சவ மூர்த்திகளின் திருவுருவங்கள் உள்ளன. வியாக்ரபாதர் முனிவரின் சிற்பமும் இங்குள்ளது. இம்மண்டபத்தின் கீழ் பக்கம் ஆறுமுகப் பெருமான் சன்னிதி உள்ளது. இங்கே பெருமானின் விழா மூர்த்தமும், அறுபத்து மூவர் உருவங்களும் அமைக்கப் பெற்றுள்ளன. இங்கு பஞ்சலிங்கம், ஜ்வரத்தேவர்(வெப்ப நோய் தீர வழிபடக் கூடியவர்), அருணகிரி நாதர், சனி பகவான் ஆகியோருக்குத் தனித் தனியே சந்நிதிகள் அமைந்துள்ளன. இக்கோயிலில் நவக் கிரகங்கள் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அர்த்தமண்டபம்
மகா மண்டபத்தையடுத்துத் தெற்கில் அர்த்த மண்டபம் மூன்று வாயில்களுடன் உள்ளது. இம்மண்டபத்திற்குச் செல்லும் படிகள் ஆறு ஆகும். இந்தப் படிகள் சடாட்சரப் (சரவண பவ) படிகள் அல்லது ஆறு எழுத்துப் படிகள் என்று அழைக்கப்படுகின்றன. படிகள் மேலேறிச் சென்று இம்மண்டபத்தை அடையலாம். மலையைக் குடைந்து உருவாக்கப் பெற்ற கருவறையை இம்மண்டபம் கொண்டுள்ளது. அர்த்த மண்டபத்தின் கீழ்ப்பகுதியில் உள்ள குகை கோயிலில் அன்னபூரணி தன் பரிவாரங்களுடன் அருள் பாலிக்கிறார்.

கருவறை
இக்கோவில் கருவறை மற்ற கோவில்களைப் போன்று அல்லாமல் பெரிய அளவில் ஐந்து தெய்வத் திருவுருவங்களின் இருப்பிடமாகக் காணப்படுகிறது. முருகப் பெருமானின் திருமணச் சடங்கிற்கு அனைத்துத் தெய்வங்களும் வந்திருந்து வாழ்த்தும் வகையில் கருவறை அமைக்கப்பட்டுள்ளது. மூலவரான முருகப் பெருமானுக்கு என தனியாக கருவறை இல்லை. இறைவன் பரங்கிரி நாதர் கிழக்கு நோக்கியும், கற்பக விநாயகர், துர்க்கை மற்றும் முருகப் பெருமான் வடக்கு நோக்கியும், பவளக் கனிவாய் பெருமாள் மேற்கு நோக்கியும் எழுந்தருளியிருக்கின்றனர். கருவறை சதுர வடிவில் அமைக்கப்பட்டுள்ளது.
கருவறையில் உள்ள மூர்த்திகள் சிற்ப சாஸ்திரங்களில் ஒருவகையான கடுசர்க்கரை பிரயோகம் என்கின்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளன. ஒரே கருவறையில் தனித்தனியாக 5 சன்னதிகள் வேறு எந்தக் கோயிலிலும் அமைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. சுவாமியைத் தவிர மற்ற மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்வதில்லை. முருகனின் திருவுருவம் பாறையைக் குடைந்து செதுக்கப் பெற்றுள்ளமையால் புனுகும், மற்ற மூர்த்திகளுக்குத் தைலக்காப்பும் சாத்தப்படுகிறது
இக்கோயில் இரட்டைக் கருவறை அமைப்புடையதாகும். அதாவது எதிரெதிராக இரண்டு கருவறைகள் கொண்டதாகும். ஒன்று சிவனுக்குரியது; மற்றொன்று திருமாலுக்குரியது. இத்தகைய இரட்டைக் கருவறை அமைப்பு பாண்டியர்கள் மட்டுமே உருவாக்கிய அமைப்பாகும். திருச்சி கீழ்க்குடைவரையும், சொக்கம்பட்டி குடைவரையும் இத்தகைய இரட்டைக் கருவறை அமைப்புடையவை ஆகும்.
சத்திய கிரீஸ்வரர்
மேற்குப் பகுதியில் கிழக்கு நோக்கிய சிவனது கருவறையில் மலையைக் குடைந்து சத்திய கிரீஸ்வரர் எனும் திருப்பெயர் கொண்டவராய் சிவபெருமான் லிங்கத் திருமேனியுடன் விளங்குகிறார். பின் சுவரில் சோமாஸ்கந்தர் புடைப்பு சிற்பமும் இடம் பெற்றுள்ளது. இப்புடைப்பு உருவம் பல்லவர்களால் பல இடங்களில் செதுக்கப்பெற்ற சிற்பமாகும். ஆனால் பாண்டியர்களின் குடைவரைகளில் திருப்பரங்குன்றம் குடைவரையில் மட்டுமே அச்சிற்பம் இடம்பெற்றுள்ளது. பிற குடைவரைகளில் இடம் பெறவில்லை. சிவனது கருவறை வெளிச் சுவரில் அமைந்துள்ள சிவனது சதுர தாண்டவச் சிற்பம் அரிய சிற்பமாகும். முயலகன் மீது அவர் ஆடுகின்ற நடனத்தைப் பார்வதி தேவி நந்தியின் மீது சாய்ந்து கொண்டு பார்த்து மகிழ்வது போன்றும், திருமாலும், பிரம்மாவும் சிவ நடனத்தைக் காண்பது போன்றும், சிவகணங்கள் இசைக் கருவிகளை மீட்டி இசையை எழுப்புவது போன்றும் அமைக்கப்பட்டுள்ளது.

பவளக் கனிவாய்ப் பெருமாள்
சிவனாரின் நேர் எதிராக பெருமாள் வீற்றிருப்பது இக்கோயிலின் சிறப்பாகும்.கிழக்குப் பகுதியில் பவளக் கனிவாய்ப் பெருமாளின் மேற்குத் திசை நோக்கிய அமர்ந்த கோலச் சிற்பம் இடம் பெற்றுள்ளது. அவருக்கு இருபுறமும் சீதேவி, பூதேவி, மதங்கமா முனிவர் திருவுருவங்களும் உள்ளன. சிவபெருமானுக்கு எதிரே நந்தி இருக்க வேண்டிய இடத்தில் பெருமாள் இருப்பதால் இவருக்கு மால்விடை என்னும் சிறப்புப் பெயரும் உண்டு. இத்தகைய அமைப்பு வேறு தலத்தில் இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும். திருமாலின் கருவறை வெளிச் சுவரில் நரசிம்மர், பூவராகர், வைகுண்ட நாதர் ஆகியோரின் புடைப்பு உருவங்கள் அமைந்துள்ளன.
இவ்விரு கருவறைகளுக்கு இடையே உள்ள மண்டபத்தின் பின் சுவரில் மூன்று மாடக் குழிகள் வெட்டப்பட்டு அவற்றில் மையப்பகுதியில் மகிசாசுரமர்த்தினியும் அதனையடுத்துக் கீழ்ப் பகுதியில் மூலவரான முருகப்பெருமானும் மேற்குப் பகுதியில் கற்பக விநாயகரும் காட்சி அளிக்கின்றனர்.
முருகப்பெருமான்
முருகப்பெருமானின் திருவடியின் கீழ் அண்டராபரனர், உக்கிரர் ஆகிய தேவகணத் தலைவர்களும் இடம் பெற்றுள்ளனர். முருகப் முருகப் பெருமான் கருவறைக்கு மேற்கில் இடப் பக்கம் தெய்வானையும், வலப் பக்கம் நாரதரும் இடம் பெற்று உள்ளனர். முருகப்பருமான் திருவுருவத்தின் மேற்பாதியில் சூரியன், சந்திரன், காயத்திரி, சாவித்திரியும், சித்த வித்தியாதரர், கலைமகள், நான்முகன், இந்திரன் ஆகியோர் காட்சி தருகின்றனர். கீழே யானை, மயில், ஆடு, சேவல் ஆகியவற்றுடன் அண்டராபரானார், உக்கிரமூர்த்தி ஆகியோர்களும் காட்சியளிக்கின்றனர். வடக்கு நோக்கி அமர்ந்திருக்கும் முருகப் பெருமானையே இப்போது பெரும் சிறப்பளித்துப் போற்றி வழிபடுகின்றனர். அறுபடை வீடுகளுள் மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் அருளும் முருகன், இங்கு தெய்வானையை மணம் முடித்த கோலத்தில் உயர்ந்த இடத்தில் அமர்ந்தபடி காட்சி தருகிறார்.இந்திரனின் ஐராவதம் என்னும் யானை இந்திரனின் மகளான தேவயானையை பிரிய மனமின்றி முருகனுக்கு தொண்டு செய்வதற்கு வந்து நிற்பது போன்று அமைக்கப்பட்டுள்ளது.
துர்க்கை
முருகப் பெருமான் கருவறைக்கு மேற்கில் அர்த்த மண்டபத்தின் மையப்பகுதியில் துர்க்கை (கொற்றவை) மகிசாசுரனின் தலைமீது நின்ற கோலத்தில் பெரிய உருவில் அமைக்கபட்டிருப்பதை நோக்குங்கால் இக்கோயிலைத் துர்க்கையம்மன் கோயிலாக எண்ணத் தோன்றும்.

கற்பக விநாயகர்
பூதகணங்கள் சூழ்ந்திருக்க, தேவதூதர்கள் வாத்தியங்கள் இசைக்க, தாமரை மலரில் அமர்த்த நிலையில் கற்பக விநாயகர் காட்சி தருகின்றார். இப்பிள்ளையாருக்கு பாச அங்குசம் கையில் இல்லை. மோதகமும், கரும்புமே கையில் உள்ளன.
இத்தலத்தில் தான் முருகப் பெருமானின் கையிலுள்ள வேலுக்கே எல்லாவிதமான திருமுழுக்கும் நடைபெறுகிறது. மேலும் கோயிலின் மேற்குப் பக்கங்களில் பல மண்டபங்கள் உள்ளன. கோயிலின் பரப்பளவு சுமார் 6 ஏக்கர் உள்ளது. உயர்ந்துயர்ந்து விளங்கும் மண்டபங்களின் தோற்றமும், ஒரே முறையில் பல படிகளமையாமல் பல முறைகளில் படிகள் அமைத்திருக்கும் பாங்கும், ஆண்டவனைத் துன்பப்படாமல் அடையும் நெறியை பல மார்க்கங்களில் காட்டுகிறது என்பர். கோயிலின் அமைப்பும், வனப்பும், எழிலும் போற்றத் தக்கது. வேண்டுவோர் வேண்டுவன ஈபவராகிய முருகபெருமானின் மூர்த்தம் தனிச்சிறப்பும், உயர்வும் வாய்ந்தது. நக்கீரர், அருணகிரிநாதர் முதலிய பல அடியார்களுக்கு அருள் ஞானம் தந்தருளிய பெருமை பெற்றது.
முருகப்பெருமானை வழிபட்டுவிட்டு, இடது புறம் உள்ள வாயில் வழியாக கீழே இறங்கினால் கீழ்ப் பகுதியில் குகைக் கோவில் ஒன்று அமைந்துள்ளது. அங்கே அன்னபூரணி, உலக உயிர்களுக்கு உணவு அளித்துக் காக்கும் தெய்வமாக காட்சித் தருகிறாள்.

சேட்டை வழிபாடு
இக்கோயிலில் காணப்பெறும் சிறப்பியல்புகளில் ஒன்று சேட்டை(ஜேஷ்டை) வழிபாடாகும். தவ்வை(திருக்குறள்,167),மாமுகடி (திருக்குறள் 617) என்று திருவள்ளுவர் குறிப்பிடும் சேட்டை பண்டைக் கால தமிழர் சமய வாழ்வில் தாய்த் தெய்வமாக, வளமையின் வடிவமாகக் வழிபடப் பட்டாள். தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடைந்தபோது அதில் தோன்றிய முதல் தேவதை சேட்டை என்று கூறப்படுகிறது. மங்கலங்களின் தெய்வமாகிய லட்சுமி தேவி அல்லது ஸ்ரீதேவி அதன்பின்னர் தான் அமுதுடன் வந்தனள். ஆகவே இவளுக்கு மூத்தவள் என்ற பொருளில் சேட்டை என்றபெயர் வந்தது. மூத்த தேவி என்ற பொருளில் இவளுக்கு மூதேவி என்ற பெயரும் உண்டு. பாண்டிய நாட்டு முற்கால குடை வரைகளில் விநாயகரும், சேட்டையும் இடம் பெறுவதுண்டு. பிற்காலத்தில் திருமாலின் மனைவியாக திருமகள் ஏற்கப்பட்ட பின்னர் அவளே செல்வத்திற்குரிய தெய்வமாகக் கருதப்பட்டதால், சேட்டை வழிபாடு மங்கத் தொடங்கியது. அதற்கொப்ப ஆழ்வார்களின் பிரபந்தங்களிலும் இச்செய்தி படம்பிடித்துக் காட்டப் படுகிறது.‘
‘கேட்டீரே நம்பிமீர்காள் கெருடவாகனனும் நிற்கச்
சேட்டை தன் மடியகத்துச் செல்வம் பார்த்திருக்கின்றீரே’
என்ற திவ்ய பிரபந்தம்(தொண்டரடிப்பொடியாழ்வார்,திருமாலை,10) பகர்வதிலிருந்து, வைணவத்தின் எழுச்சி காரணமாக சேட்டை வழிபாடு மறைந்தது என்பது தெரிகிறது. செய்ய கமலத் திருவுக்கு முன் பிறந்த தையல் உறவு தவிர்த்தோமே’ என்னும் நந்திக்கலம்பகமும் (பாடல் 112) கூறிச்செல்கிறது.
திருப்பரங்குன்றம் கோயிலில் கொடிமரம் அருகிலுள்ள படிகள், கம்பத்தடி மண்டபத்தையும் ஆறுமுகசாமி மண்டபத்துடன் இணைக்கின்றன. இந்த படிகளின் ஒரு ஓரத்தில் கம்பத்தடி மண்டப மூலையில் சிறிய நுழைவுவாயில் உள்ளது. உள்ளே சுமார் நூறு அடி நீளத்தில் இருட்டான சுரங்கப்பாதை உள்ளது. உள்ளே சேட்டை தேவியின் குடைவரை சிற்பம் செதுக்கப்பெற்றுள்ளது. இச்சிற்பம் கி.பி. எட்டாம் நூற்றாண்டில் சாத்தன் கணபதி மற்றும் அவருடைய மனைவியான நக்கன் கொற்றியால் அமைக்கப்பட்டதாகும். செல்வத்துக்கு அதிபதியாக வழிபடபட்ட ஜேஷ்டாதேவி தூக்க சுகத்தை அருள்பவளாக மாற்றம் பெற்றனள். இரவில் கெட்ட கனவுகளின்றி நல்ல தூக்கம் வருவதற்காக சேட்டை தேவியை வழிபடுவது வழக்கமாகும். அதுவும் பகல் நேரத்தில் தூக்கம் வராமல், இரவு நேரத்தில் மட்டும் நல்ல தூக்கம் வர பக்தர்கள் பிரர்த்தித்து பலனடைகின்றனர். தற்போது மூதேவி சன்னதி என்று அழைக்கப் படுவதுடன், வழிபாடற்ற நிலையில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. பொதுவாக கோயில்களில் சேட்டைதேவி சன்னதி மறைவான இடத்தில் அமைப்பது தான் வழக்கம். சேட்டை தேவி கால்களை தொங்கவிட்டு அமர்ந்த கோலத்தில் இருக்கையில் உள்ளார். வலக் கரம் தாமரை மலருடனும், இடக்கை தனது இடதுபுறமுள்ள தன் மகளின் வலது தொடையிலும் வைத்த நிலையில் உள்ளார். கச்சணியாத மார்பையும், குண்டலங்களை உடைய காதும், அவருக்கு வலது புறத்தில் எருமைத்தலையும், அவருடைய மகனின் வடிவம் இடது காலை மடக்கி, வலது காலைத் தொங்கவிட்டு வலது கரம் மட்டும் தண்டத்தைப்பிடித்த நிலையில் உள்ளது. சிவனது இடது புறத்தில் இவளுடைய மகள் உள்ளார். இரண்டு கரங்களில் வலது கரம் மட்டும் மலரை ஏந்தியுள்ளார். இச்சிற்பங்கள் புடைப்புச் சிற்பமாகச் செதுக்கப்பெற்றுள்ளன. பக்தி இயக்கத்திற்குப் பின் சேட்டை அமங்கலங்களின் தெய்வமாகப்பட்ட பின்னர் அவரது வழிபாடு சிறிது சிறிதாக மறையத் தொடங்கியது.

சரவணப்பொய்கை
குன்றின் அடிவாரத்தில் கிழக்குப் பகுதியில் சரவணப் பொய்கை அமைந்துள்ளது. இந்தப் பொய்கைக் கரையில் தான் முருகனை நினைத்துத் தெய்வயானை தவமிருந்ததாகக் கூறப்படுகிறது.. பிற தீர்த்தங்களைவிட இதற்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. ஏனெனில் இது முருகப்பெருமானின் வேலினால் உருவாக்கப்பட்டப் பெருமைக்கு உரியது. இத்தீர்த்தத்தில் நீராடமலேயே, இதனைக் கண்டாலோ, தொட்டாலோ தீவினைகள் யாவும் அகன்றுவிடும் எனவும் எண்ணியக் காரியங்கள் கைகூடும் எனவும் நம்பப்படுகிறது.
நக்கீரர் சிவ வழிபாட்டிலிருந்து வழுவியதால் பூதம் ஒன்று அவரைக் குகையில் கொண்டு போய் அடைத்து வைத்ததாகவும், அவர் அங்கிருந்தபடியே திருமுருகாற்றுப்படையைப் பாட, முருகன் தோன்றி மலையைப் பிளந்து அவரை விடுவித்து அருளியதாகவும் கூறப்படுகிறது. நக்கீரர் அமர்ந்து பூசை செய்த இடம் பஞ்சாட்சரப் பாறையில் உள்ளது. சரவணப்பொய்கைக் கரையில் இப்பஞ்சாட்சரப் பாறை உள்ளது. இங்கு நக்கீரருக்குக் கோயில் அமைக்கப்பட்டுள்ளது.
தலமரம்
இத்தலத்தின் தலமரம் கல்லத்தி மரம் ஆகும். இது காட்டத்தி என்றும் குறிக்கப்பெறுகிறது. இஃது கல்லால் இனத்தைச் சார்ந்த மரவகையாகும். சிறிய ஆலிலை வடிவில் கரும்பச்சையான இலைகளையும், இலைக் கோணங்களில் மெல்லிய சுணையுடைய காய்களையும் கொண்ட வெண்பச்சையான மரம். இதன் பட்டை, பால், பழம் முதலியன மருத்துவப் பயனுடையன. இந்த மரம் திருவாட்சி மண்டபத்தின் கீழ்புறம் லெட்சுமி தீர்த்தம் செல்லும் வழியில் அமைந்துள்ளது.
குண்டாய் முற்றுந் திரிவார் கூறை மெய்போர்த்து
மிண்டாய் மிண்டர் பேசிய பேச்சு மெய்யல்ல
பண்டால் நீழல் மேவிய ஈசன் பரங்குன்றைத்
தொண்டா லேத்தத் தொல்வினை நம்மேல் நில்லாவே.
என்று திருஞானசம்பந்தரும், “கல்லால் கீழற்கீழ் ஒரு நாட்கண்டது” என்று சுந்தரமூர்த்தி நாயனாரும் குறிப்பிடுகின்றனர்
வெள்ளை நிற மயில்கள்
திருப்பரங்குன்றம் கோயிலில், வெள்ளை நிற மயில்களைக் காணலாம். முருகனின் தரிசனம் காணத் தேவர்கள் மற்றும் முனிவர்கள் வெண்ணிற மயில் வடிவில் இங்கு வசிப்பதான நம்பிக்கை உள்ளது.
தென்பரங்குன்றம்
திருப்பரங்குன்றத்தின் தென்பகுதிக்குத் தென்பரங்குன்றம் என்று பெயர். இங்கு உமையாண்டவர் கோயில் என்று தற்போது வழங்கப்பெறுகின்ற ஒரு குடைவரைக் கோயில்
உள்ளது. இது கி.பி. 8-9ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டுள்ளது. கோயில் அமைப்பைப் பார்க்கையில் இக்கோயில் சமணக் கோயிலாக இருந்ததற்கான எச்சங்கள் உள்ளன. கிழக்கு நோக்கிய ஒரு கருவறையும், அதனை அடுத்த முன் மண்டபமும் கொண்ட இக்கோயில் தெற்கு நோக்கி அமைந்துள்ளது. கருவறையில் தற்போது நந்தியின் முன்புறம் நிற்கும் அர்த்தநாரி சிற்பம் உள்ளது. ஆனால் இச்சிற்பத்தின் தலைப்பகுதியில் அசோக மரத்தின் கிளைகள் உள்ளன. சைவக் கோயில்களில் இவ்வாறு காணப்படுவதில்லை. எனவே தொடக்கத்தில் அசோக மரம் கீழமர்ந்த ஓரு சமணத் துறவி அல்லது மகாவீரர் சிற்பம் இங்கு இருந்திருக்கலாம். பின்னர் இது சைவக் கோயிலாக மாற்றம் பெற்ற போது இதனை அர்த்தநாரியாக மாற்றிவிட்டனர் எனத்
தோன்றுகிறது. இதற்கு ஆதாரமாக எதிர் சுவரில் உள்ள மாறவர்மன் சுந்தர பாண்டியனின் கல்வெட்டு ஒன்று (கி.பி. 1233) இக்கோவில் பிரசன்னதேவர் என்னும் சைவ அடியாரின் வேண்டுகோளின்படி சுந்தரபாண்டிய ஈஸ்வரம் என்னும் பெயரில் சிவன் கோயிலாக மாற்றம் பெற்றச் செய்தியைத் தருகிறது. எனவே, அம்மாற்றத்தின் போது நடராசர், சிவகாமி அம்மை, முருகன், வள்ளி தேவசேனா, விநாயகர் உருவங்களும் செதுக்கப்பட்டுள்ளன. வெளிப்புறப் பாறையில் தேவார மூவர், பைரவர் சிற்பங்களும் உள்ளன. துறவியர் சிற்பங்களும் இடப்பக்கம் உள்ளன. இவர்களில் ஒருவர் பிரசன்ன தேவராக இருக்கலாம். இக்கோயிலும் பின்னாளில் சிதைக்கப்பட்டுள்ளது. குடைவரைத் தூண்கள் நான்கும் முற்றிலும் அழிக்கப்பட்டுவிட்டன. சமய சகிப்பின்மையின் காரணமாக இது நடந்திருக்கலாம். எக்காலத்தில், யாரால் இந்த அழிவு நேர்ந்தது என்று கூறுவதற்கில்லை.
காசிவிசுவநாதர் கோயில்
திருப்பரங்குன்றம் கடல் மட்டத்திற்கு மேல் சுமார் 1050 அடி உயரமுள்ளது. மலையடிவாரத்தில் தென் பகுதியில் உள்ள பழனியாண்டவர் கோவில் அருகில் மலைமேல் ஏறிச் செல்ல படிக்கட்டுகள் உள்ளன. மேலும் புதிதாக சரவணப் பொய்கைக்கருகில் படிகள் அமைக்கப்பட்டுள்ளது. மலை உச்சியில் காசி விஸ்வநாதர் திருக்கோவில் உள்ளது. இதற்கு அருகே வற்றாத அழகிய சுனை ஒன்றிருக்கிறது. இதனை காசி சுனை என்பர். முருகனின் வேலால் இச்சுனை உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. கங்கைக்கு இணையாக இச்சுனை
தீர்த்தம் புனிதமானதாகப் போற்றப்படுகிறது. பதினெண் சித்தர்களில் ஒருவரான மச்சமுனிவர் இங்கு மீனாக அவதரிப்பதாகக் கூறப்படுகிறது. இச்சுனையில் உள்ள மீன்கள் வனப்பு வாய்ந்தவை. மீன்களுக்குப் பக்தர்கள் பொரி வாங்கிப்போடுவது வழக்கம். கோயிலின் முன்பகுதியில் அழகான கல்மண்டபம் உள்ளது. சுனை அருகே உள்ள பாறையில் சிற்ப வேலைப்பாடுடனான தெய்வ உருவங்கள் செதுக்கப் பெற்றுள்ளன.
மலை மேல் முகமதியர் பள்ளிவாசல் ஒன்று இருக்கிறது. இம்மலையைச் சிக்கந்தர் மலை என்றும் முகமதியர் அழைப்பர். ஸ்கந்தர் மலை எனபது சிக்கந்தர் மலை என்று மருவியது போலும். சிக்கந்தர் மசூதிக்கு மேற்கே முந்நூறு அடிக்கப்பால் சிறு குகை ஒன்று இருக்கிறது. இக்குகையில் கிழக்கு மேற்காகக் குறுகிய ஐந்து படுக்கைகள் கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. மலையின் உச்சியில் வில்வம், இச்சி போன்ற மரங்கள் உள்ளன. மூலவராகிய முருகப் பெருமானின் திருக்கையில் இருக்கும் வேலனை ஆண்டிற்கு ஒருமுறை பல்லக்கில் எடுத்துச் சென்று விழா நடத்துகின்றனர். இவ்விழா புரட்டாசித் திங்களில் நடைபெறுகிறது. அந்நாளில் `மலை மேல் உள்ள முருகனை மக்கள் வணங்கி வருவர். பருவ மழை தவறாது பெய்வதற்காக இவ்வாறு `வேல் மலைக்குச் செல்லும் விழா` நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இந்நிகழ்ச்சியை நக்கீரரைக் குகையிலிருந்து காப்பாற்ற வேல் செல்வதாக பழைய மரபுன்படி கூறுவதும் உண்டு.
பாண்டவர் படுக்கை
குன்றின் மேற்குப் பகுதியில் மலை மீது சிறிது தொலைவில் பஞ்சபாண்டவர் படுக்கை
எனப்படும் குகை ஒன்று உள்ளது. அக்குகையில் கல்லில் செதுக்கப்பட்ட அமண் படுக்கைகள் மற்றும் சுனை ஆகியவை உள்ளன.
கிரிவலம்
இக்குன்றமானது சிவலிங்க வடிவிலேயே காணப்படுவதால் சிவபெருமானே குன்றின் உருவில் காட்சியளிப்பதாக பக்தர்களால் வணங்கப்பட்டு வருகிறது. இம்மலையின் உயரம் சுமார் 190 மீட்டராகும். இம்மலையை நாள்தோறும் வலம் வந்து வழிபட்டால் தொழுவாரின் வினைகளெல்லாம் தீர்ந்துவிடும் என்று திருஞான சம்பந்தர் பாடியுள்ளார். தற்போது நிறைமதி நாட்களில் ஆயிரக்கணக்கானோர் குன்றத்தை வலம் வருகின்றனர்.
கார்த்திகை தீப திருவிழா
ஒவ்வொரு ஆண்டும் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கப்படுகிறது. நாள்தோறும் ஒரு வாகனத்தில் சுவாமி எழுந்தருளி அருள்பாலிக்கிறார். ஆறாம் நாள் திருவிழாவாக கழுவேற்றம் லீலை நிகழ்ச்சி நடந்துவருகிறது. அன்று வெள்ளி ரிஷப வாகனத்தில் கோவர்த்தனாம்பிகை, தங்க மயில் வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை, வெள்ளி ரிஷப வாகனத்தில் சத்தியகிரீஸ்வரர், பிரியாவிடை புறப்பாட்டை தொடர்ந்து, சீவிலி நாயகர் பல்லக்கில் திருஞான சம்பந்தர் 16 கால் மண்டபம் முன்பு எழுந்தருள்கிறார். அங்கு கழுவேற்றம் லீலை நிகழ்ச்சி முடிந்ததும், கழுவேற்றம் புராண கதையை பக்தர்களுக்கு கோயில் ஓதுவார் கூறுவார். ஏழாம் நாள் திருவிழா அன்று காலை கங்காளநாதர் புறப்பாடும், இரவு காமதேனு வாகனத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை புறப்பாடும் நடக்கிறது. எட்டாம் நாள் திருவிழா அன்று, கோயில் கம்பத்தடி மண்டபத்தில் பட்டாபிஷேகமும்’, மறுநாள் காலை சிறிய தேரோட்டமும், மாலை 6.15 மணிக்கு மலைமேல் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
பங்குனி திருவிழா
பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.விழா துவங்கும் வகையில், கோயில் அனுக்ஞை விநாயகர் முன்பு யாக பூஜைகள் நடத்தப்படும். கொடியேற்றத்தை முன்னிட்டு கொடிக்கம்பம் முன்பு, சுப்பிரமணிய சுவாமி தெய்வானை எழுந்தருளுவர். கோயில் யானைமீது கொடிப்பட்டம் எடுத்துச்செல்லப்பட்டு, வீதி உலா முடிந்து கொடிக்கம்பத்தில் கட்டப்படும். யாக சாலையில் பூஜிக்கப்பட்ட புனிதநீர்மூலம் கொடிக்கம்பம் அடிப்பகுதியில் அபிஷேகம் நடக்கும். விழா நடக்கும் 15 நாட்களும் காலையில் சிம்மாசனத்திலும், மாலையில் தங்கமயில், தங்ககுதிரை, வெள்ளி ஆட்டுக்கிடாய், யானை, அன்னம், சேஷம், பச்சைக்குதிரை ஆகிய வாகனங்களிலும் தினம் ஒன்றில் சுவாமி எழுந்தருளி வீதி உலா நிகழ்ச்சியில் அருள்பாலிப்பார். முக்கிய திருவிழாவாக, ஐந்தாம் நாளில் வெள்ளி யானை வாகனத்தில் சுவாமி எழுந்தருளி, கைபாரம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பங்குனி உத்திரம், சூரசம்ஹாரம், பட்டாபிஷேகம், முருகன்- தெய்வானை திருக்கல்யாணம் போன்ற விழாக்களும் இக்கோயிலில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. பங்குனி சுவாதியன்று நடைபெறும் திருக்கல்யாண விழாவில் கலந்து கொள்ள மதுரையில் இருந்து மீனாட்சி, சொக்கநாதர் திருப்பரங்குன்றம் எழுந்தருள்வர்.
இரவு சன்னதி தெருவில் உள்ள 16 கால் மண்டபம் முன்பு, மீனாட்சி சுந்தரேஸ்வரர், பிரியாவிடையிடம், சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை விடைபெறும் நிகழ்ச்சி நடைபெறும்.. சரவணப் பொய்கையில் சுவாமி தீர்த்த உற்சவம் நடக்கிறது.
முடிவாக, அறுபடை வீட்டு கோயில்களுள் பிறவற்றிற்கு இல்லாத பெருமையும் சில தனிச் சிறப்புகளும் இக்கோயிலுக்கு உண்டு. குன்றத்து முருகன் குடைவரைக் கோயிலில் உறைவதால், முருகனின் திருவுருவத்திற்கு அபிடேகம் செய்யப்படுவதில்லை. மாறாக, எண்ணெய், புனுகு மட்டுமே சாத்தப்படுகிறது. மேலும் வேலவனின் கையில் உள்ள வேலுக்கே அபிடேகம் நடந்து வருகிறது. அறுபடை வீடுகளில் வேலுக்கு அபிஷேகம் நடக்கும் கோயில் இது மட்டுமே. சூரனை ஆட்கொண்டு வெற்றி வேலுடன் முருகன் இங்கு வந்து அமர்ந்ததால், வேலுக்கு முக்கியத்துவம் தரப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. மாறாக, அபிடேக பொருட்கள் யாவும் முருகனின் வேலுக்கேப் பயன்படுத்தப்படுகின்றன. புரட்டாசி மாதம் கடைசி வெள்ளிக் கிழமையன்று இந்த வேல், மலையிலுள்ள காசிவிஸ்வநாதர் கோயிலுக்கு கொண்டு செல்லப்படும். முருகப் பெருமானின் அறுபடை வீட்டு கோயில்களுள் முதல்படைக் கோயிலும் நக்கீரர் திருமுருகாற்றுப்படை பாடிய தலமும் இதுவே. மற்றத் திருக்கோயில்களின் கருவறை போல் அல்லாமல் இத்திருக்கோயில் கருவறை பெரியதாக ஐந்து தெய்வத் திருவுருவங்களைக் கொண்டு அமையப் பெற்றுள்ளது. சைவ, வைணவ வேறுபாடு இல்லாமல் கருவறையில் குடும்ப சமேதராய் விளங்கும் இத்திருக்கோலம் எங்கும் காணக்கிடைக்காத திருக்கோலம். திருஞானசம்பந்தரும் சுந்தரமூர்த்தி நாயனாரும் வழிபாடு செய்து பதிகங்கள் பாடிய தலம். இது ஒரு குடைவரைக்கோயில். எனவே, விமானம் கிடையாது. குன்றே விமானமாக பாவிக்கப்படுகிறது. பிறக்கோவில்களைப் போன்று திருச்சுற்றுப் பிரகாரங்கள் கிடையாது. கருவறையையோ, மூலவரையோ, உற்சவரையோ வலம் வருதல் என்பது இத்திருக்கோயிலில் இயலாது. ஒரு நேர்க்கோட்டில் சென்று வழிபட்டுச் செல்லும்படியாக இக்கோயில்அமையப் பெற்றுள்ளது. நெற்றிக் கண்ணைத் திறந்ததால், சிவனின் பார்வைபட்டு சரும நோய்க்கு ஆளான நக்கீரர் இத்தலத்து முருகப் பெருமானை வழிபட்டு நோய் நீங்கப் பெற்றதாக கூறப்படுகிறது. அறுபடை வீட்டு முருகன் கோயில்களுள் இக்கோயில் அளவில் பெரியதாகும். கொடிமரத்தின் முன்புறம் மயில், நந்தி, மூஞ்சூறு ஆகிய மூன்று வாகனங்கள் இருப்பது இத்தலத்தின் சிறப்பாகும். முருகப் பெருமான் தெய்வயானையை திருமணம் செய்து கொண்ட தலமாதலால், இத்தலத்தில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக முருக பக்தர்களால் கருதப்படுகிறது.
__________________________________
*மேனாள் முதல்வர், அரசு கலைக் கல்லூரி, சுரண்டை , தென்காசி மாவட்டம்