முறிமருந்து

பாவண்ணன்

தோட்டத்தில் நின்றிருக்கும் தென்னை மரத்தடியிலிருந்து பின்வாசல் வழியாகக் கூடத்தைக் கடந்து முன்வாசலை ஒட்டியிருந்த அம்மாவின் ஆப்பக் கடைக்கு வந்துசேர்ந்தாள் ஆயா. புதிதாக தைத்துக் கழுவி எடுத்துவந்த மந்தாரை இலைக்கட்டையும் தேக்கு இலைக்கட்டையும் அம்மாவிடம் கொடுத்தாள். அடுப்பைவிட்டு விலகி சிறிது தூரத்தில் உட்கார்ந்தபடி நான்கு பேர் தோசை தின்றுகொண்டிருந்தார்கள்.

“என்ன சொல்லிட்டு போறான் ஒன் ஊட்டுக்காரன்? காலயிலயே இவ்ளோ சத்தம்? என்ன கவலயாம் அவனுக்கு?” ஆயா அம்மாவைப் பார்த்துக் கேட்டாள். “எல்லாம் புள்ளய பத்திய கவலைதான்” என்றபடி ஒருகணம் என்னைத் திரும்பிப் பார்த்தாள் அம்மா. “மத்த புள்ளைங்களாட்டம் ஒழுங்கா படிச்சமா, பாஸ் பண்ணமானு இல்லாம ஒரே க்ளாஸ்ல நாலு வருஷமா தேச்சிகினு ஒக்காந்திருந்தா யாருக்குத்தான் கோவம் வராது?”

“புள்ள என்னடி பண்ணும் பாவம். பரீச்ச சமயத்துல மரத்துலேந்து உழுந்து கால ஒடச்சிகினு படுத்துங்கெடந்தான். அவனால பரீச்ச எழுதமுடியாம போய்ட்டுது.”

சாப்பிட்டு முடித்தவர்கள் அடுக்கிவைத்திருந்த தட்டுகளை எடுத்துச்சென்று எச்சில் இலைகளைக் கூடையில் எடுத்துப் போட்டுவிட்டு தட்டுகளை அண்டாவில் நிரப்பியிருந்த தண்ணீரில் கழுவி எடுத்துவந்து அம்மாவின் அருகில் வைத்தாள் ஆயா.

 “அது மொத வருஷத்துக் கத. ரெண்டாம் வருஷம் கையும் காலும் நல்லாதான இருந்திச்சி?”

“ரெண்டாவது வருஷம் அவனுக்கு அம்மை வந்துட்டுது.”

“அப்ப, மூனாவது வருஷம்?”

“சரி உடுடி. பரீச்சயில தோத்துப் போவறது வாழ்க்கையில ஒரு குத்தமாடி?” 

“ஒரு குத்தமும் இல்ல. இந்த தரமும் தோத்துட்டா, நாலு மாட்ட வாங்கி அவனயும் சேத்து ஒன்கூட அனுப்பி வைப்பாரு. ரெண்டு பேரும் மேய்ச்சிட்டு வாங்க.”

அடுப்புக்கு முன்னால் தள்ளித்தள்ளி உட்கார்ந்து சாப்பிட்டுக்கொண்டிருந்த ஏழு பேரும் அந்த உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்தனர். தோசையை மென்றபடியே இரண்டு பேர் என்னைப் பார்த்துக் கேலியாகப் புன்னகைப்பதைக் கவனிக்கமுடிந்தது. இரண்டு பேர் உற்றுப் பார்த்தார்கள். எனக்கு அவமானமாக இருந்தது. படித்துக்கொண்டிருந்த புத்தகத்தைக் கோபத்துடன் கட்டில்மீது எறிந்துவிட்டு, “கொஞ்ச நேரம் நீ சும்மா இருக்கமாட்டியா ஆயா? விளக்கம் கேக்க வந்துட்டியா?” என்று சத்தம் போட்டேன்.

“வாங்கறதா இருந்தா ரெண்டு எருமமாடு வாங்கச் சொல்லும்மா. ஏற்கனவே நம்ம கிட்ட பசுமாடு இருக்குது. பசுமாட்டவிட எருமாடு நல்லா பால் கறக்கும்.”

“ஆயா” என்று வேகமாக எழுந்துபோய் அவள் தோள்களை அழுத்தி உலுக்கினேன். அவள் உடம்பு எடையற்றதாக தக்கையாக இருந்தது. நரைத்த தலைமுடிக் கொண்டை அவிழ்ந்து சரிந்தது. உடல் முழுதும் கோடு கிழித்ததுபோல சுருக்கங்கள். சிரித்ததில் அவளுக்குப் பெருமூச்சு வாங்கியது. 

நான் “என்னை பத்தி இனிமே இங்க யாரும் பேசக்கூடாது, தெரிதா?” என்றேன். “போடா, நீ இன்னா பெரிய இங்லீஷ்கார தொரயா?” என்று மறுபடியும் சிரித்தாள் ஆயா. 

 ”ஐயோ” என்றபடி புத்தகத்தை எடுத்துக்கொண்டு வீட்டுக்குள் செல்லத் திரும்பினேன் நான். 

“அந்த காலத்துல ஒரு இங்லீஷ் தொர இங்க இருந்தான். அண்டாவாயன். அவன் இப்பிடித்தான் கத்துவான். இவன் தாத்தா வேலங்காட்டுல மாடு மேச்சிட்டிருப்பாரு. அவருக்கு கூழு எடுத்தும் போவன் நானு. அப்ப அந்த தொர போடற சத்தம் அந்தக் காடுவரைக்கும் கேக்கும்.”

ஆயா பேசும் ஆசையில் கீழே உட்கார்ந்தாள். ஆனால் அம்மாவின் கவனம் திரும்பிவிட்டது. வாடிக்கையாளர்கள் நொடிக்கு ஒருதரம் அவரை அழைத்து ”அக்கா, எனக்கு இன்னும் ஒரு தோசை குடு” “இன்னும் கொஞ்சம் சாம்பார் ஊத்தும்மா.” என்று நச்சரித்துக்கொண்டே இருந்தனர். 

மணியடித்துக்கொண்டே சைக்கிளில் வந்து இறங்கிய ஒருவன் சைக்கிளுக்கு ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு அம்மாவிடம் வந்து “ரெட்டியாரு ஓட்டல்லேர்ந்து வரன். எல எடுத்தாரச் சொன்னாங்க” என்றான். அம்மா அவனை நிமிர்ந்து பார்த்தபிறகு “பெரியசாமி, ஒரு நிமிஷம் இங்க வா” என்று என்னை அழைத்தாள். பக்கத்திலேயே வைத்திருந்த இலைக்கட்டுகளை ஒவ்வொன்றாக எடுத்து கூடைக்கு அருகில் வைத்தாள் “எண்ணிக் குடுடா” என்றாள் என்னிடம்.

நூறு மந்தாரை இலை, நூறு தேக்கு இலையை எண்ணிப் பிரித்து தனித்தனியாக கட்டு போட்டு அம்மாவிடம் கொடுத்தேன். ”என்கிட்ட எதுக்குடா குடுக்கற? அவருகிட்ட குடுடா” என்றாள் அம்மா. “நூறுதான?” என்றபடி கட்டுகளை எடுத்துக்கொண்டு, “இந்தாங்க, அஞ்சி ரூபா” என்று எடுத்துக் கொடுத்தான் அவன். 

கட்டுகளை கேரியரில் சமப்படுத்தி வைக்கும்போது, ஏற்கனவே அங்கிருந்த தினத்தந்தி கீழே விழுந்தது. நான் அப்போதுதான் அதைப் பார்த்தேன். உடனே ஓடிச் சென்று அதை எடுத்தேன். அதில் வரும் கன்னித்தீவு, ஆண்டிப்பண்டாரம் பகுதிகள் எனக்கு மிகவும் பிடித்தமானவை. “ஒரு நிமிஷம் கன்னித்தீவு படிச்சிட்டு தரட்டுமாண்ணே?” என்று கேட்டேன். அவர் தலையசைப்பிலேயே எனக்கு அனுமதி கொடுத்துவிட்டு அம்மாவிடம் பேசுவதற்குச் சென்றார். 

நான் இரு பகுதிகளையும் அவசரமாகப் படித்துவிட்டு சினிமாச்செய்திகள் பக்கத்தைப் புரட்டினேன். கடைசியாக முதல்பக்கச் செய்தியைப் பார்த்தேன். எம்.ஜி.ஆர். துப்பாக்கிச்சூடு எம்.ஆர்.ராதாவிடம் விசாரணை என்று போட்டிருந்தார்கள். கழுத்தில் மாவுக்கட்டோடு இருக்கும் எம்.ஜி.ஆரின் புகைப்படம் பக்கவாட்டில் இருந்தது. ஒருகணம் பார்த்துவிட்டு செய்தித்தாளை மடித்து அவரிடம் திருப்பிக் கொடுத்தேன். 

ஆயா தோட்டத்துக்குச் சென்று மரத்தடியில் மறுபடியும் உட்கார்ந்துகொண்டாள். கூடையில் இருக்கும் மந்தாரை இலையை ஒவ்வொன்றாக எச்சில் தொட்டு எடுத்தார். அவற்றை ஒன்றை அடுத்து ஒன்றென அடுக்கி சுருக்கம் நீக்கி வட்டமாக்கினார். கம்பிபோல மெலிதாகச் சீவப்பட்ட சோளத்தட்டைக் குச்சிகள் அடங்கிய பெரிய கட்டு ஆயாவுக்கு பக்கத்திலேயே இருந்தது. ஒரு கை இலைகளை இணைத்துப் பிடித்தது. இன்னொரு கை குச்சியை எடுத்து அளவாகச் செருகியெடுத்து ஒடித்தது. ஒரு எந்திரத்தின் இரண்டு உறுப்புகள்போல அவளுடைய இருகைகளும் இடைவிடாது இயங்கின. அவள் செயல்படும் வேகம் ஆச்சரியமாக இருந்தது. அவள் வாய் தன்னிச்சையாக ஒரு கணம் ’என்ன பாவம் செய்தேனோ’ என்ற ஒரே வரியை பல ராகங்களில் இழுத்து இழுத்துப் பாடத் தொடங்கியது. ராகத்தின் போக்குக்குத் தக்கபடி அவள் தலை அசைந்தது.

பத்துமணிக்கு ரயில் போகிற சத்தத்தைக் கேட்ட பிறகுதான் அந்த இடத்திலிருந்து ஆயா எழுந்துவந்தாள். கைகால்களைக் கழுவிக்கொண்டு வரும்போது ஆப்பக்கடை வியாபாரம் முடியும் நேரம் நெருங்கிக்கொண்டிருந்தது. ஆயா வந்து கட்டிலின் அருகில் உட்கார்ந்தாள். என்னைப் பார்த்ததும்  “ஏன் பெரியசாமி, பள்ளிக்கூடம் போவலையா? ஒன் சத்தமே இல்லைன்னதும் இந்நேரத்துக்கு நீ கெளம்பிப் போயிருப்பன்னு நெனச்சிட்டன்” என்றாள்.

“ஆமா, ஞாயித்துக்கெழமையில ஒனக்கு மட்டும் தனியா பள்ளிக்கூடம் தெறந்து வச்சிருக்காங்க வா”

ஆயா பொக்கைவாயைத் திறந்து சிரித்தாள். “எனக்கென்னடா தெரியும் ராசா. நான் நாளக் கண்டனா, கெழமய கண்டனா? எனக்கு எல்லா நாளும் ஒன்னுதான்.”

ஒரு தட்டில் இரண்டு தோசைகளை வைத்து ஆயாவிடம் கொடுத்தாள் அம்மா. “வரவர ஒனக்கு வயசுல பெரியவங்கங்கற பயமே இல்லாம போச்சி பெரியசாமி. எப்ப பாரு, சரிக்கு சரியா பேசிகினு ஒக்காந்திருக்க? போ, போய்  கைகால கழுவிகினு வா. சட்டுபுட்டுனு வேலய முடிச்சா அடுப்ப அணச்சிட்டு மத்த வேலைய பாப்பன்.”

அம்மாவை முறைத்துவிட்டு தோட்டத்துக்குச் சென்று திரும்பினேன். எனக்கு யாரையுமே பார்க்கப் பிடிக்கவில்லை. அப்பா, அம்மா, ஆயா எல்லோருமே எனக்கு எதிராக இருப்பதாகத் தோன்றியது. சீக்கிரமாகப் படித்து முடித்து பட்டாளத்தில் போய் சேர்ந்து கண்காணாத இடத்தில் வேலைசெய்ய வேண்டும் என்று நினைத்தேன்.

ஒரு தட்டில் இரண்டு தோசைகளை வைத்து என்னிடம் கொடுத்தாள் அம்மா. 

“எனக்கு ஒரு முட்ட தோச வேணும்.”

“முட்ட தோச. கட்ட தோச. தின்னறதுக்கு மட்டும் வாய்க்கு வக்கணையா கேளு. படிப்புல எல்லாத்தயும் கோட்ட உட்டுடு.”

“எனக்கு ஒன்னும் வேணாம், போ” நான் தட்டை சத்தமெழ கிழே வைத்துவிட்டு எழுந்திருக்க முயற்சி செய்தேன். ஆயா என்  தோளைப் பிடித்து அழுத்தி உட்காரவைத்தாள். “அம்மா ஒனக்கு குடுக்காம யாருக்குடா குடுக்கப் போறாங்க? சும்மா ஒரு வெளயாட்டுக்கு சொல்றாங்க. அதுக்குப் போயி இவ்ளோ ரோஷமா?” 

அம்மா சிரித்துக்கொண்டே ஒரு முட்டையை எடுத்து உடைத்து கல்லில் ஊற்றியிருந்த மாவின் மீது ஊற்றிப் பரப்பினாள்.

”ரெண்டு தோசை கெடைக்குமாம்மா?” தலையைச் சுற்றியிருந்த தலைப்பாகையைக் கழற்றி அதே துணியில் முகத்தைத் துடைத்துக்கொண்டே கடைக்கு எதிரில் ஒருவர் வந்து நின்று கேட்டார். இடது கையில் ஒரு பெட்டியை வைத்திருந்தார். 

“சிறுவந்தாட்டிலேர்ந்து நடந்து வரம்மா. ஏரிக்கர மேலயே போனா பக்கம்னு சொன்னாங்க. அத நம்பி நடக்க ஆரம்பிச்சிட்டேன். காலையிலயே வெயில் இந்த கொளுத்து கொளுத்தும்ன்னு நெனைக்கல.” அவர் குனிந்து தன் மார்பின் மீது படும்படி காற்றை ஊதிக்கொண்டார். 

“அங்க தண்ணி இருக்குது பாருங்க, கைய கழுவிகினு ஒக்காருங்க.” அம்மா அவரைப் பார்த்துச் சொன்னாள். அம்மாவைப் பார்க்க அந்த நேரத்தில் பாவமாக இருந்தது. தனக்காக வைத்திருக்கும் தோசைகளை அந்தப் பெரியவரிடம் கொடுக்கப் போகிறாள் என்பதில் எனக்கு சந்தேகமே வரவில்லை.

”இந்தாங்க…”

தட்டை வாங்கி வேகமாக அவர் சாப்பிடத் தொடங்கினார். ஆயா தன் தட்டில் துண்டுதுண்டாக கிள்ளிவைத்திருந்த தோசைத்துணுக்குகளோடு எழுந்து சென்று ஒருகணம் “பா பா பா பா” என்று சத்தமெழுப்பினாள். மறுகணமே பல திசைகளிலிருந்து ஏராளமான கோழிகள் அவளைச் சுற்றி வந்து நின்றுவிட்டன. ”இருங்கடி, அவசரப் படாதிங்கடி” என்று கோழிகளோடு பேசத் தொடங்கிவிட்டாள். பிறகு ஒவ்வொரு துணுக்காக எடுத்து அவற்றின் முன் வீசினாள். கோழிகள் கொத்திக்கொத்தித் தின்றன.

அம்மா சூடு பறக்க முட்டை தோசையை எடுத்து என் தட்டில் வைத்தாள். தோசையின் மீது படிந்த மஞ்சள் கலவையைப் பார்க்கும்போதே எனக்கு நாவில் எச்சில் பெருகியது. நான் ஒவ்வொரு துண்டாகக் கிள்ளி வேகவேகமாகச் சாப்பிட்டேன். 

”புள்ளயாம்மா?”

“ஆமாங்க. சின்னவன். பெரிசு ரெண்டும் பொண்ணுங்க. கட்டி குடுத்துட்டம்.”

“நாக்குல நல்ல ருசி இருக்கும்மா, பையன்கிட்ட.”

“வக்கணையா கேட்டு வாங்கி சாப்புடறதில பெரிய கில்லாடி. படிப்புதான் மந்தமா இருக்குது.”

“ருசி தொடங்கற எடம் நாக்கு. அந்த ருசிதான் அப்பறம் மனசுல, எண்ணத்துல, கற்பனையில, திறமையிலன்னு வளந்துபோவும். ஒருநாள் பெரிய ஆளா வருவான். கவலப்படாத தாயி.”

“என்னமோ நீங்க சொல்றிங்க. பட்டிக்காட்டு ஜனங்க நாங்க என்னத்த கண்டம்?”

இலையை எடுத்துப் போட்டுவிட்டு தட்டைக் கழுவிவந்து அம்மாவிடம் கொடுக்கும்போது நான் மறுபடியும் அந்தப் பெட்டியைப் பார்த்தேன். அதைத் திறந்து பார்க்க ஆவலாக இருந்தது. மெதுவாக அவரை நெருங்கி ”அந்தப் பெட்டியில என்ன இருக்குது?” என்று கேட்டேன். 

“என்ன இருந்தா ஒனக்குப் புடிக்கும்?”

“பாம்பா?”

அவர் சிரித்துவிட்டார். புரைக்கேறிவிட்டது. தட்டை கீழே வைத்துவிட்டு பக்கத்திலிருந்த தவலையிலிருந்து தண்ணீரை எடுத்துக் குடித்தார். 

“கிளியா?”

அவர் பெட்டியை இழுத்து திறந்து காட்டினார். சின்னச்சின்ன சிமிழ்களும் புட்டிகளும் ஏராளமாக இருந்தன. “எல்லாமே மருந்துங்க. கால்வலி, மூட்டுவலி, இடுப்புவலி, சளி, காய்ச்சல் எல்லாத்துக்கும் இதுல மருந்து இருக்குது” 

“நான் இங்கதான் எளங்காடு. சிறுவந்தாட்டுல ஒருத்தருக்கு பாம்பு கடிச்சிட்டுதுனு போன வாரம் போயிருந்தன். பொழைச்சிட்டாரு. இப்ப எப்பிடி இருக்காருன்னு பாத்துட்டு வரலாம்ன்னு போய்ட்டு வரன்”

“பாம்பு விஷத்துக்குக் கூட மருந்து இருக்குதுங்களா?” அம்மா ஆச்சரியத்துடன் அவரிடம் கேட்டாள். ”எல்லாத்துக்கும் மருந்து இருக்குதும்மா” என்றார் அவர். “எல்லாமே நாம் குடுக்கற பக்குவத்துல இருக்குது”

கோழிகளுக்கெல்லாம் கொடுத்து முடித்த பிறகு தட்டைக் கழுவிக்கொண்டு ஆயா வந்து உட்கார்ந்தாள். 

”எங்க மாமனாருகூட பாம்பு கடிச்சிதான் செத்துட்டாரு. கட்டுவிரியன். மாட்டுக்குப் புல்லறுக்கப் போன எடத்துல கடிச்சிட்டுது.”

“மருந்து குடுக்கலையா?”

“இந்த பட்டிக்காட்டுல என்ன இருக்குது? கவர்மெண்டு ஆஸ்பத்திரிலதான் அதுக்கு மருந்து இருக்குதுன்னு சொன்னாங்க. இந்தப் பக்கம் பாண்டிச்சேரி. அந்தப் பக்கம் விழுப்புரம். ரெண்டுத்துக்குமே பத்து இருவது மைல் போவணும். பஸ்லதான் கூப்ட்டுகினு போனம். ஆனா வழியிலயே உயிர் அடங்கிட்டுது.”

“நான் இங்க எளங்காட்டுலதான் இருக்கன். பாம்புக்கடிக்கு நல்ல முறிமருந்து இருக்குது. எத்தனயோ பேர அந்த மருந்து காப்பாத்தியிருக்குது.”

“என்னா மருந்து குடுப்பீங்க?”

“எல்லாத்துக்குமே மூலிகை மருந்துதாம்மா. சிறியா நங்கை, பெரியா நங்கை, முள்ளாநங்கை, மலைநங்கை, வைங்கநங்கை, கருநங்கை, வெண்நங்கை, வசியாநங்கை, செந்நங்கைன்னு ஏராளமான மூலிகைச்செடிங்கள பத்தி சித்தர்ங்க நெறய சொல்லியிருக்காங்க.  எல்லாமே காட்டுல மலையில இருக்கற செடிங்க. ஆனா இங்க நமக்கு சிறியாநங்கை மட்டும்தான் கிடைக்குது. பார்க்கறதுக்கு மொளகா செடி மாதிரி இருக்கும். எல ஒன்னொன்னும் எட்டிக்காய் மாதிரி கசக்கும். ஆனா ஒடம்புல விஷம் ஊறனவங்களுக்கு அத குடுத்தா கசக்காது. அரமணி நேரத்துக்கு ஒரு தரம் அத அரச்சி அரச்சி அந்த சாந்த குடுத்துகினே இருக்கணும். எப்ப அவுங்க நாக்குக்கு அந்த கசப்பு தெரியுதோ, அப்ப வெஷம் எறங்கிடுச்சினு அர்த்தம்.”

“மறுபொறப்ப குடுத்து உயிர காப்பாத்தற மருந்துனு சொல்லுங்க.”

“உயிர காப்பாத்தற சக்தி இதுக்கு இருக்குதுங்கறது உண்மைதான். ஆனா உடம்புல விஷமில்லாம சாப்ட்டா உயிரயே பலி வாங்கிடும். அதுக்கு முறிமருந்தே கெடையாது.”

“சிறுவந்தாட்டுல பாம்புக்கடி பட்டவரு தேறிட்டாரா?”

“ஒடம்ப தேத்தறதுக்குத்தான் இப்ப மருந்து குடுத்திட்டு வந்தன். இந்த பக்கத்துலதான் அந்த மருந்துச் செடிங்க கெடைக்குதுன்னு சொன்னாங்க. அதனாலதான் ஏரிக்கரை பக்கமா நடந்தே தேடிகினு வந்தன். ஒன்னுகூட என் கண்ணுல படலை.”

வைத்தியர் சாப்பிட்டு முடித்தார். தட்டைக் கழுவி எடுத்துவந்து வைத்துவிட்டு அம்மாவிடம் பணம் கொடுத்தார். பிறகு பெட்டியைத் திறந்து ஒரு துணியை எடுத்து, அதற்குள் மடித்துவைத்திருந்த ஒரு இலையை எடுத்து அம்மாவிடம் காட்டினார்.

“இங்க பாருங்கம்மா, இதான் அந்த சிறியாநங்கை எல. இந்த அமைப்புல உள்ள செடிய நீங்க  எங்கயாவது பாத்திருக்கிங்களா?”

அம்மா அதை வாங்கி முன்னும் பின்னும் திருப்பிப் பார்த்தாள். பிறகு ஆயாவிடம் காட்டி “மாடு மேய்க்க போற எடத்துல இந்த மாதிரி செடிய ஏதாச்சிம் பாத்திருக்கியா அத்த?” என்று கேட்டாள். ஆயா அதை கையில் வாங்கி உருட்டி உருட்டிப் பார்த்துவிட்டு “தேடிப் பாக்கறன். இருந்தா சொல்றன்” என்றாள். “இது வேணுமா ஒங்களுக்கு, ரெண்டுநாள் கழிச்சி வாங்க. கெடைச்சா எடுத்தாந்து வைக்கறன்” 

“எனக்காக கொஞ்சம் முயற்சி செய்ங்கம்மா. போற உயிர பொழைக்கவைச்ச புண்ணியம் கெடைக்கும்.”

அவர் புறப்பட்டுச் சென்றதும் ஆயா கூடையையும் எடுத்துக்கொண்டு பசுவையும் கன்றையும் ஓட்டிக்கொண்டு தோப்பின் பக்கமாகச் சென்றாள்.

அம்மா அடுப்பிலிருந்து விறகை இழுத்து அணைத்தாள். “பெரியசாமி, இங்க வா. கூட, தட்டு, தம்ளர், தவளை, முட்டக்கூண்டு எல்லாத்தயும் எடுத்தும் போயி உள்ள வை. மாவுச்சட்டிங்க, கரண்டிய எல்லாம் சாமான் கழுவற எடத்துல கொண்டுபோய் வச்சிட்டு வா” 

நான் எல்லாவற்றையும் எடுத்துவிட்ட பிறகு அம்மா அந்த இடத்தை தண்ணீர் விட்டு துடைப்பத்தால் தேய்த்துக் கழுவினாள். 

நான் அம்மாவிடம் மெதுவாக வந்து “அம்மா, ஆயா எதுக்கும்மா எப்ப பார்த்தாலும் என்ன பாவம் செய்தேனோன்னு பாடிகினே இருக்காங்க?” என்றாள்.

“பாடத்த தவிர எல்லாத்தயும் கவனிக்கறதே வேலயாய்டுச்சி ஒனக்கு”

“அம்மா, சொல்லும்மான்னா” என்று கெஞ்சினேன். “ஆயா என்ன லூசா?”

“அடி விழும் அப்பிடிலாம் சொன்னா. என்ன நெனச்சிகிட்ட நீ அவுங்கள?  அவுங்க இல்லன்னா இந்த ஊடு, வாசல், மாடு, கன்னு எதுவுமில்ல, தெரியுமா?” 

“ஐயோ கோச்சிக்காதம்மா, தனியா இருக்கும்போதுலாம் அடிக்கடி அவுங்களுக்குள்ளயே அப்பிடி பாடிக்கறாங்களே, அதனால கேட்டன்மா.”

“என்னமோ, அவுங்களுக்குள்ள ஒரு மனக்கஷ்டம். ஆறுதலா எதயோ நெனச்சி பாடிக்கறாங்க.”

நான் தொடர்ந்து எதுவும் கேட்கவேண்டாம் என அமைதியாக இருந்தேன். அப்போது அம்மாவே சொல்லத் தொடங்கினாள். “ரொம்ப காலத்துக்கு முன்னால தாத்தாவும் அவுங்களும் ஏதோ ஒரு காலத்துல தைப்பூசத்துக்கு வடலூருக்கு போயிருக்காங்க. அந்த பூஜையில யாரோ ஒருத்தரு ஒரு பாட்டு பாடியிருக்காரு. அதக் கேட்டதும் தாத்தாவுக்கு அந்தப் பாட்டு புடிச்சி போய்டுச்சி. அவர் பெரிய கூத்து வாத்தியார் தெரியுமா ஒனக்கு.” 

”வேஷம் கட்டி ஆடுவாரா?”

“ஆமாம். அந்த காலத்துல காத்தமுத்து தெருக்கூத்து ஜமான்னு ஒரு கூட்டத்தயே சேத்து வச்சிருந்தாரு அவரு. அவரு போனதக்கப்புறம் அது அப்படியே மறஞ்சிடுச்சி.”

“நல்லா பாடுவாரா அவரு?”

”எந்த பாட்டா இருந்தாலும் ஒரு தடவ காதால கேட்டதுமே மனசுல வாங்கிக்கற சக்தி உண்டு அவருக்கு. அந்த வடலூர் பாட்ட அன்னைக்கு அப்பிடியே புடிச்சிகிட்டாரு. ஊருக்கு திரும்பி வந்ததும் அந்த பாட்டயே மந்தரம் மாதிரி விதம்விதமா பாட ஆரம்பிச்சிட்டாரு. நான் கூட பல தரம் கேட்டிருக்கேன். ஆனா மனசுல பதியல. திடீர்னு தாத்தா செத்துப் போனதும் ஆயாவுக்கு அந்த பாட்ட பாடிக் காட்ட யாருமில்ல. யாருக்குமே தெரியாது. என்ன பாவம் செய்தேனோங்கறது அந்த பாட்டோட கடைசி வரி. அதுமட்டும் ஆயாவுக்கு எப்பிடியோ ஞாபகத்துல தங்கிடுச்சி. அவரு செத்து பாஞ்சி பதனாறு வருஷமாய்ட்டுது. இன்னும் அவுங்க அந்த வரிய மறக்கல. அந்த ஒரு வரிய பாடறத, அந்த பாட்டயே பாடற மாதிரினு நெனச்சிக்கறாங்க. அதனால அந்த வரியயே திரும்பத்திரும்ப பாடறாங்க. நாம அத கண்டும் காணாம போயிடணும். அவுங்ககிட்ட அதப்பத்தி கேக்கற வேலைலாம் வச்சிக்க கூடாது. புரியுதா?”

 பசுவையும் கன்றையும் ஓட்டிக்கொண்டு சாயங்காலமாக ஆயா திரும்பி வந்தபோது கூடை நிறைய தேக்கு, மந்தாரை இலைகள் இருந்தன. மடியில் மூலிகை இலைகள் இருந்தன. ஆனால் அது வைத்தியர் கேட்ட சிறியாநங்கைதானா என்பது உறுதியாகத் தெரியவில்லை. அதனால் ஒன்றுபோலக் காணப்பட்ட எல்லா இலைகளையும் பறித்துவிட்டாள். எல்லாமே கிட்டத்தட்ட வைத்தியர் காட்டிவிட்டுச் சென்ற இலையைப் போலவே காணப்பட்டன. 

அம்மா அவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பரிசோதித்தாள். நானும் அம்மாவோடு சேர்ந்து இலைகளைப் பார்த்தேன். ஒரு தோற்றத்தில் எல்லாமே வைத்தியர் காட்டிய இலைபோலவே இருந்தன. இன்னொரு கோணத்தில் அவையல்ல என்றும் தோன்றின. “எதுக்கும் இருக்கட்டும், தனியா ஒரு கூடையில வாரி வை. ரெண்டு நாள் கழிச்சி வரன்னு சொல்லியிருக்காரில்ல. அப்ப தெரிஞ்சிடும்” என்றாள் அம்மா.

அப்பா இரவில் வீட்டுக்கு வந்ததும் எல்லாவற்றையும் காதுகொடுத்துக் கேட்டுவிட்டு, அந்தக் கூடைக்குள் கையைவிட்டு இலைகளை அள்ளிப் பார்த்தார். “இதப் பத்தியெல்லாம் எனக்கு என்ன தெரியும்? அவரே வந்து சொல்லட்டும்” என்று சொல்லிவிட்டார். 

மறுநாளும் ஆயா மடிநிறைய இலைகளை எடுத்துக்கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்தாள். ”இதுதான்மா” என ஒன்றை நான் சுட்டிக் காட்டும்போது, அம்மா அதை மறுத்தாள். அவள் ஒரு இலையைச் சுட்டிக்காட்டி தீர்மானமாக “இதுதான்” என்று சொன்னபோது நான் மறுத்தேன். 

அடுத்தநாள் காலையில் வழக்கம்போல ரயில் வருகிற சமயத்தில் வைத்தியர் வீட்டுக்கு வந்தார். அம்மாவிடம் இரண்டு தோசை வாங்கிச் சாப்பிட்டார். ஆயா வீட்டுக்குள்ளிருந்து இரண்டு கூடை நிறைய சேமித்து வைத்திருந்த இலைகளைக் கொண்டுவந்து காட்டினாள். 

வைத்தியர் ஒவ்வொரு இலையாக எடுத்துப் பார்த்து பொறுமையாக ஆய்வு செய்தார். “பாக்கறதுக்கு சிறியாநங்கை மாதிரி இருந்தாலும், இது சிறியாநங்கை கெடையாதும்மா. ஆனா இதையெல்லாம் பாக்கும்போது நிச்சயம் இந்தப் பக்கம் இருக்கும்ன்னுதான் நெனைக்கறேன். ஆயா, இன்னும் கொஞ்சம் உள்ள போயி தேடிப் பாருங்க. எல கெடச்சிதுன்னு வைங்க, ஒரு அம்பது நூறு பேர காப்பாத்தன புண்ணியம் ஒங்களுக்குக் கெடைக்கும்” என்றார். அம்மா அந்த கூடைகளை எடுத்துச் சென்று இலைகளையெல்லாம் குப்பையில் கொட்டிவிட்டு வந்தாள். ஆயா தலையசைத்தபடி தன் போக்கில் என்ன பாவம் செய்தேனோ என்று பாடியபடியே பசுவையும் கன்றையும் ஓட்டிக்கொண்டு சென்றாள். 

இரண்டு நாள் கழித்து வைத்தியர் மீண்டும் வந்தபோது அவரிடம் காட்டுவதற்காக இரு கூடைகள் நிறைய இலைகளைப் பறித்துவந்து சேமித்திருந்தாள். வைத்தியர் பொறுமையாக ஒவ்வொரு இலையையும் எடுத்து சோதித்துப் பார்த்தார். “நான் நெனச்ச இல இதுல எதுவும் இல்லைம்மா” என்று வருத்தத்துடன் சொன்னார். “ஒங்களுக்குலாம் நான் ரொம்ப கஷ்டம் குடுத்துட்டம்மா. மன்னிசிக்குங்க. இனிமே தேட வேணாம்மா. விட்டுடுங்க . நான் வேற எங்கனா கிடைக்குதான்னு பாக்கறன்”

அம்மா கூடைக்குள் கைவிட்டு இலைகளைக் கலைத்தபடி மெளனமாக நின்றிருந்தாள். ஆயா மெதுவான குரலில் ”நீங்க எதுக்குங்க வைத்தியரே அத கஷ்டம்னு நெனைக்கறீங்க. நீங்க சொன்னாலும் சொல்லாட்டாலும் அந்தப் பக்கமா நான் போற ஆளுதான். இதுவரைக்கும் போகாத எடத்துக்கு நாளைக்குப் போயி பாக்கறன். இன்னும் ரெண்டு நாள் விட்டு வாங்க” என்றாள். “சரிம்மா” என்று எழுந்துபோனார் வைத்தியர்.

அவர் குரலில் தொடக்கத்தில் தெரிந்த ஆர்வம் இல்லை என்பது எனக்குப் புரிந்தது. இரு நாட்களுக்குப் பிறகு அவர் வரமாட்டார் என்றே நினைத்தேன். அதனால் ஆயா இலைகளைக் கொண்டுவந்ததையும் அம்மா அவற்றை பாதுகாப்பாக கூடையில் சேமித்து வைத்ததையும் உற்சாகமில்லாமலேயே கவனித்தேன். 

மறுநாள் காலையில் சைக்கிளில் வைத்தியர் வந்து இறங்கியபோது எனக்கு நம்பிக்கையே வரவில்லை. அம்மா அடுப்புக்கு முன்னால் உட்கார்ந்தபடியே என்னிடம் “பெரியசாமி, அறையிலேருந்து அந்த கூடையை எடுத்தாந்து வை” என்றாள். துணி போட்டு மூடியிருந்த அந்தக் கூடையை நான் தூக்கிவந்து வெளியே வைத்தேன். ஆயாவும் எனக்குப் பின்னால் என் தோளைப் பற்றியபடி நின்றாள்.

வைத்தியர் முதலில் நாலைந்து இலைகளை எடுத்த வேகத்தில் பரிசோதித்துவிட்டு உதட்டைப் பிதுக்கி ஓரமாக ஒதுக்கினார். அடுத்து எடுத்த இலையைப் பார்த்ததுமே அவர் முகம் மலர்ந்தது. திருப்பித் திருப்பி இரண்டு மூன்று முறை பார்த்துவிட்டு “இதான் ஆயா. இதுவேதான். சரியா கண்டுபுடிச்சிட்டிங்க” என்று சிரித்தார். அப்புறம் அவர் கூடையிலிருந்து எடுத்ததெல்லாம் அதேபோன்ற இலைகள். திகைப்பும் மகிழ்ச்சியும் அவர் முகத்தில் மாறிமாறி எழுந்தன. 

“ஆயா, அற்புதம். கடவுள் கண்ண தெறந்துட்டாரு. ஆரம்பத்துல அலய விட்டாலும் கடைசியில சரியான எடத்துக்கு கைய புடிச்சி அழச்சி வந்துட்டாரு. ஒங்க குடும்பத்துக்கு நான் எப்பிடி நன்றி சொல்றதுன்னே புரியல” வைத்தியரின் குரல் குழறியது. அவருக்கு கண்களில் நீர் நிறைந்துவிட்டது. “எந்த விஷக் கடியா இருந்தாலும் எளங்காட்டு வைத்தியன்கிட்ட முறிமருந்து இருக்குதுன்னு இப்ப தைரியமா சொல்லிக்கலாம்” என்று சிரித்தார். அவர் எழுந்து சட்டைப்பையிலிருந்து ஒரு நூறு ரூபாய் நோட்டை எடுத்து ஆயாவின் முன்னால் நீட்டி “இது உங்க உழைப்புக்கான விலை இல்லைம்மா. என்னால முடிஞ்ச ஒரு சின்ன காணிக்கை. தயவு செஞ்சி வாங்கிக்கணும்” என்றார். 

ஆயா சிரித்துக்கொண்டே பணம் வாங்க மறுத்துவிட்டாள். ”நீங்க பல உயிர காப்பாத்தற ஆள். நீங்க இப்பிடி பேசக்கூடாது. இப்பிடி ஒரு முறிமருந்து இருக்குதுன்னு தெரிஞ்சிருந்தா, அன்னைக்கே என் புருஷன் பொழைச்சிருப்பாரு. என் புருஷனுக்கு நேர்ந்த நெலம யாருக்குமே வராம காப்பாத்துங்க. அது போதும்” என்றாள். “அம்மா, நீங்களாச்சும் வாங்கிக்குங்கம்மா” என்று அம்மாவின் பக்கம் திரும்பிச் சொன்னார் வைத்தியர். “அவுங்களே வேணாம்ன்னு சொல்ற பொருள நான் வாங்கறது தப்பு வைத்தியரே, போய்ட்டு இன்னும் ரெண்டு நாள் கழிச்சி வாங்க. இன்னும் கொஞ்சம் எலைங்க  உங்களுக்காக தயாரா இருக்கும்” என்றாள் அம்மா. வைத்தியர் இலைகளை தன்னோடு கொண்டுவந்திருந்த பைக்குள் நிரப்பி எடுத்துக்கொண்டு சென்றார். 

இரவு சாப்பாட்டு நேரத்தில் ஆயா வெற்றிகரமாக இலையைக் கண்டுபிடித்த செய்தியை அப்பாவிடம் சொன்னாள் அம்மா. “ஊருக்கு ஒரு உபகாரம்னு சொன்னா, நீங்க ரெண்டு பேருமே ஓடி போயி முன்னால நிக்கற ஆளுங்க. ஒங்க கண்ணுல அந்த எல தென்பட்டதுல எந்த ஆச்சரியமும் இல்ல, படாம இருந்தாதான் ஆச்சரியம்” என்று சிரித்தார் அப்பா. ஆனால் வைத்தியர் கொடுத்த நூறு ரூபாயை ஆயா மறுத்துவிட்ட செய்தியைச் சொன்னபோது அவர் எரிச்சலடைந்தார். “பணத்தோட அருமை என்னன்னே தெரியாத ஜென்மங்க நீங்க. நூறு ரூபாய்க்கு தோராயமா ஒரு மூட்ட நெல்லு வாங்கலாம், தெரியுமா? அந்த பணத்த முழுசா பாக்கணும்ன்னா எவ்ளோ காலம் அடுப்புல வேவணும், எவ்ளோ காலம் எல தைக்கணும்னு நீங்களே யோசிச்சி பாருங்க. சரியான முட்டாள்ங்க” என்றார்.

இரு தினங்களுக்கு ஒருமுறை வைத்தியர் வந்து இலைகளை வாங்கிச் செல்வது வாடிக்கையானது. சரியான இலைகளைத் தேர்ந்தெடுத்துப் பறித்து வருவதில் படிப்படியாக ஆயாவுக்கு ஒரு தேர்ச்சி உருவாகிவிட்டது. அவர் கொண்டுவருவதில் ஒரு இலையைக் கூட வெளியே எடுத்து வீசுவதில்லை வைத்தியர்.

ஒருநாள் இருள் கவிந்த பிறகும் ஆயா வீட்டுக்குத் திரும்பவில்லை என்றதும் அம்மா பதற்றமுற்றாள்.  “கொஞ்சம் தோப்புவரைக்கும் போய் பாத்துட்டு வா, ஓடு” என்று என்னை அனுப்பினாள் அம்மா. நான் உடனே எழுந்து தோப்பின் பக்கமாக நடந்தேன். பங்களா தோப்பு, ஐயனார் கோவில், மாந்தோப்பையெல்லாம் தாண்டிச் சென்றேன். எங்கும் ஒரு வீடு கூட இல்லாத இடம். வெளிச்சத்தில் நடக்க அச்சமாக இருந்தது.  திரும்பிவிடலாமா என்று குழம்பினேன். சுத்தமாக பாதையே தெரியவில்லை. பல இடங்களில் சாணத்தையும் நரகலையும் மிதித்தேன். அதன் பின் எழுந்த வீச்சத்தைக் கொண்டு மிதித்தது என்ன என்பதைப் புரிந்துகொண்டேன்.  ஒரு கட்டத்தில் தொடர்ந்து நடப்பதில் பயனில்லை என நினைத்தபோது ஆயாவை நினைத்து அழுகை பொங்கியது. “ஆயா” என்று சத்தமெழுப்பி அழைத்தேன். மரங்களில் மோதி என் குரல் எல்லாத் திசைகளிலும் எதிரொலித்தது. மீண்டும் மீண்டும் ”ஆயா ஆயா” என்று அழைத்தபடியே இருந்தேன். என்னையறியாமல் என் கண்களில் நீர் வழிந்தது.

தொலைவில் வெளிச்சத்தைப் பாய்ச்சியபடி ரயில் ஓடி வருவதைப் பார்த்தேன். அந்த வெளிச்சத்தில் நான் நின்றிருந்த இடத்தின் அடர்த்தியை உணர்ந்ததும் என் அச்சம் அதிகரித்தது. சிறிது நேரம் மட்டுமே நீடித்த அந்த வெளிச்சத்தில் ஒரே ஒரு கணம் பசுவும் கன்றும் நின்றிருப்பதை என் கண்கள் பார்த்துவிட்டன. ரயில் கடந்துபோய்விட்டது. எல்லாமே எனக்கு கனவுபோல இருந்தது. பசு தென்பட்ட திசையை உத்தேசமாக கணக்கில் கொண்டு “ஆயா ஆயா” என்று அழைத்தபடி ஓடினேன். செடிகளை மிதித்தேன். பாறைகளில் தடுமாறி விழுந்தேன். முட்களில் கீறிக் கிழித்துக்கொண்டேன். எதையும் பொருட்படுத்தாமல் வெறிகொண்டவன்போல அந்தத் திசையில் ஓடினேன். 

என் குரலுக்குப் பதில் சொல்வதுபோல ஒரு கணம் ம்மே என்ற குரல் எழுந்து மிதந்து வந்தது. பசுவின் குரல். அதை முதலில் எனக்குள் எழுந்த கனவு என நினைத்தேன். ஒருகணம் ஓட்டத்தை நிறுத்தி அக்குரலுக்காக காத்திருந்தேன். ம்மே ம்மே என்னும் குரல் தெளிவாகக் கேட்டது. இரண்டு குரல்கள். ஒன்று பசுவின் குரல். இன்னொன்று கன்றின் குரல். சட்டென வெடித்துவிடுவதுபோல என் இதயத்துடிப்பு அதிகரித்தது. “ஆயா ஆயா” என்ற குரலை நிறுத்தாமல் அந்தத் திசையில் ஓட்ட் தொடங்கினேன். 

பசுவைத் தொட்டதும் அதன் கழுத்தைக் கட்டிப் பிடித்துக்கொண்டேன். கன்று நகர்ந்துவந்து என் இடுப்பில் மோதியது. அதன் கழுத்தை இன்னொரு கையால் இழுத்து அணைத்தேன். பசுவும் கன்றும் மீண்டும் ம்மே ம்மே என்று குரலெழுப்பின. “அதான் வந்துட்டனே, பயப்படாதீங்க பயப்படாதீங்க” என்று சொன்னபடி முதுகைத் தட்டிக்கொடுத்தேன். சில கணங்களுக்குப் பிறகே நான் அங்கு ஆயா இல்லை என்பதை உணர்ந்தேன். உடனே மீண்டும் அச்சம் கவிய குரலெழுப்பினேன். இருளில் என் கண்களுக்கு எதுவுமே தென்படவில்லை. நீண்ட நேரம் அங்கேயே நின்றிருந்தேன். என் அழைப்புக்கு எந்தப் பதிலும் இல்லை. 

ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி வீட்டுக்குத் திரும்ப முடிவெடுத்து பசுவையும் கன்றையும் அழைத்துக்கொண்டு திரும்பினேன். குத்துமதிப்பாகவே நடந்தாலும் எங்கெங்கோ சுற்றியலைந்து அய்யனார் கோவில் பக்கம் வந்துவிட்டேன். அங்கு குதிரைவீரன் முன்னால் ஒரு சின்ன மின்விளக்கு எரிந்துகொண்டிருந்தது. அந்த வெளிச்சம் எனக்கு பெரிய ஆறுதலாக இருந்தது. அங்கிருந்த குழாயைத் திறந்து கால்களையும் கைகளையும் கழுவிக்கொண்டேன். வயிறு முட்டும்வரைக்கும் தண்ணீர் குடித்தேன். அவ்வளவு வேட்கையை எப்படித் தாங்கிக்கொண்டேன் என்பதே எனக்கு ஆச்சரியமாக இருந்தது. 

வீட்டை அடைந்தபோது வாசல் நிறைய கூட்டமிருந்தது. தெருவில் இருந்தவர்கள் எல்லோருமே அங்கு கூடியிருந்தனர். அப்பாவும் அம்மாவும் ஓடிவந்து என்னை வாரியெடுத்துக்கொண்டார்கள். அம்மா பசுவையும் கன்றையும் தொழுவத்துக்கு அழைத்துச் சென்று தண்ணீர் அருந்தச் செய்துவிட்டு வந்தாள்.

“ஆயா எங்கடா? பின்னால வராங்களா?” என்று முதலில் கேட்டார் அப்பா. பிறகு “பாக்கலையா?” என்று கேள்வியெழுப்பினார். அவர் குரல் நடுங்குவதை உணர்ந்தேன். என்னால் அந்த இருட்டில் வெகுதொலைவு தேடமுடியவில்லை என்பதையும் என் அழைப்புகளுக்கு பதில் கிடைக்கவில்லை என்பதையும் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன். எனக்கும் உடல் நடுங்கத் தொடங்கியிருந்தது. 

”அம்மா” என்று வெடித்து அழத் தொடங்கினார் அப்பா. ”பாம்பு கடிச்சி எங்க அப்பா செத்த சமயத்துலயும் என்னால காப்பாத்த முடியல. எங்க அம்மாவயும் இப்ப காப்பாத்த முடியலயே”. அப்பா திடீரென எழுந்து காட்டை நோக்கி ஓட முயற்சி செய்தார். அவரை இழுத்துத் தடுத்து நிறுத்திய சொந்தக்காரர்களும் அப்பாவின் நண்பர்களும் அவருடைய பதற்றத்தைக் குறைக்க முயற்சி செய்தார்கள்.

டார்ச்களோடும் லாந்தர் விளக்குகளோடும் ஆறேழு பேர் கொண்ட குழு காட்டைநோக்கிக் கிளம்பியது. அவர்களோடு புறப்பட முயற்சி செய்த அப்பாவை எல்லோரும் தடுத்து நிறுத்தினார்கள். ஒருவர் என்னிடம் குனிந்து “எங்க கூட வந்து பசுமாட்ட எந்த எடத்துல பாத்தன்னு ஒன்னால காட்ட முடியுமா தம்பி?” என்று கேட்டார். நான் சரியென்று தலையசைத்துவிட்டு அவர்களோடு நடந்தேன்.

வெளிச்சத்தில் அத்திசையில் நடப்பது இப்போது எளிதாக இருந்தது. நான் சென்ற பாதைச் சித்திரங்களை வகுத்துக்கொண்டு தோராயமாக நடந்தேன். நீண்ட நேரத்துக்குப் பிறகு பசு நின்றிருந்த இடத்தை வந்தடைந்துவிட்டோம். “இங்கதான் நின்னிட்டிருந்தது” என்றேன். அந்தப் புள்ளியிலிருந்து நான்கு குழுக்களாகப் பிரிந்து வெளிச்சத்தைப் பாய்ச்சி எல்லோரும் தேடத் தொடங்கினோம். நான் இடையிடையே “ஆயா ஆயா” என்று சத்தம் போட்டு அழைத்தபடி இருந்தேன்.

ஏறத்தாழ அரைமணி நேரத் தேடுதலுக்குப் பிறகு “அண்ணே இங்க வாங்க” என்று ஒரு குழு குரலெழுப்பியது. உடனே நாங்கள் அனைவரும் அங்கு ஓடினோம். எல்லா விளக்குகளும் அத்திசையில் வெளிச்சத்தைப் பாய்ச்சின. அங்கு ஒரு மரத்தடியில் படுத்து உறங்குவதுபோல ஆயா கீழே கிடந்தார். அவர் மடிநிறைய சிறியாநங்கை இலைகள். “ஆயா” என்று அலறியபடி நான் அவர் காலடியில் சென்று விழுந்தேன். அவரைத் தொட்டு உலுக்கினேன். கையைப் பற்றி இழுத்தேன். முகத்தைத் தொட்டேன். ஒரு அசைவும் இல்லை. சில கணங்களுக்குப் பிறகு ஒருவர் என் தோளைப்பற்றி எழுப்ப பலவீனமாக விழுந்துவிடுவதுபோல எழுந்து நின்றேன். நாலைந்து பேர் தம் வேட்டிகளைக் கழற்றி ஒரு தூளிபோல இணைத்து அதில் ஆயாவைக் கிடத்தித் தூக்கிக்கொண்டார்கள். நான் அழுதுகொண்டே அவர்களைப் பின்தொடர்ந்தேன். 

ஆயாவை வாசலில் உடலாக இறக்கும்போது அம்மாவும் அப்பாவும் அலறி அழுதார்கள். உறக்கம் மறந்து ஊரே அங்கு சேர்ந்துவிட்டது. ஆயா வழக்கமாக உறங்கும் கயிற்றுக்கட்டிலை எடுத்துவந்து வாசலில் போட்டு அதன் மீது ஆயாவைக் கிடத்தினார்கள். தலைமாட்டில் விளக்கு ஏற்றிவைக்கப்பட்டது. ஒருவர் கடைத்தெருவுக்குச் சென்று வாடகைக்கு நாலு பெட்ரோமாக்ஸ் விளக்குகளை கொண்டுவந்து நிறுத்தினார். வாசலில் பகல்போல வெளிச்சம் பொழிந்தது. அம்மாவை தனியே அழைத்துவந்த ஒருவர் யார்யாருக்கெல்லாம் செய்தி சொல்லவேண்டும் என்று கேட்டு தகவல் குறித்துக்கொண்டார். அந்தப் பட்டியலில் இளங்காட்டு வைத்தியரின் பெயரையும் சேர்த்துக்கொள்ளச் சொன்னாள் அம்மா. இரவோடு இரவாகவே எல்லாத் திசைகளிலும் ஆட்கள் பறந்தார்கள். அப்பா உடைந்து அழுதபடி ஆயாவின் அருகிலேயே உட்கார்ந்திருந்தார். ஒரு வாய் தண்ணீர் கூட அருந்த மறுத்துவிட்டார். ஆயாவின் மடியிலிருந்த சிறியாநங்கை இலைகளை ஒரு பையில் எடுத்துப் போட்டு காலடியிலேயே வைத்தாள் அம்மா. 

காலையிலேயே உறவினர்கள் வந்து சேரத் தொடங்கிவிட்டார்கள். தப்பட்டை அடிப்பவர்கள் செத்தையைக் குவித்து தோலைக் காய்ச்சிவிட்டு அடிக்கத் தொடங்கினார்கள். ஊர்த்தலைவர் வந்து ஆயாவுக்கு மலர்வளையம் வைத்துவிட்டு அப்பாவின் கைகளைப் பற்றி துக்கம் விசாரித்துவிட்டுச் சென்றார். அத்தைகளும் மாமாக்களும் வந்து மாலைகளை அணிவித்துவிட்டு கூடி அமர்ந்து அழத் தொடங்கினார்கள்.

சைக்கிளில் வந்து இறங்கினார் வைத்தியர். நான் அவரிடம் ஓடிச் சென்று “ஆயா…” என்று எதையோ சொல்லத் தொடங்கி சொற்கள் எழாமல் தேம்பித்தேம்பி அழுதேன். அவர் என்னைத் தன்னோடு சேர்த்து அணைத்த நிலையில் கண்ணீர் சிந்தினார். பிறகு ஆயாவின் அருகில் சென்று அவருக்கு மலர்வளையம் வைத்துவிட்டு கண்ணீர் வழியும் கோலத்தில் நெடுநேரம் நின்றிருந்தார். அம்மா அவரை நெருங்கி நடந்ததையெல்லாம் சுருக்கமாகச் சொன்னார். ஆயாவின் காலுக்கருகில் இருந்த இலைமூட்டையை எடுத்துக் கொடுத்தார். அதை நடுங்கும் கைகளில் வாங்கிக்கொண்ட வைத்தியர் சட்டென குனிந்து ஆயாவின் விரிந்த கைவிரல்களைப் பார்த்தார். பச்சை படிந்திருந்தது. அடுத்த கையையும் விரித்து விரல்களைப் பார்த்தார். தலைமாட்டின் பக்கம் சென்று கண்களைத் திறந்தும் வாயைத் திறந்தும் பார்த்தார். சற்றே நகர்ந்து கண்மூடி கைகுவித்து தலைதாழ்த்தி ஆயாவின் பாதம் தொட்டு வணங்கினார்.

அப்பா அவர் அருகில் வந்து நின்றார். “என்ன பாத்திங்க? அம்மாவுக்கு என்ன?” என்று கேட்டார். வைத்தியர் பெருமூச்சு வாங்கியபடி தயக்கத்தோடு “வாழ்க்கய முடிச்சிகிட்டாங்க. போதும்னு முடிவெடுத்துட்டாங்க” என்றார். ***

2 Replies to “முறிமருந்து”

  1. முறிமருந்து இன்னமும் நன்றாக வந்திருக்க வேண்டிய சிறுகதை. வைத்தியர் கூற்றிலிருந்து ஆயா தற்கொலை செய்துகொண்டார் என்றுதான் தெரிகிறது. திடீரென ஏன் என்றுதான் தெரியவில்லை. தாத்தாவின் பிரிவுக்குக் காரணம் தெரிந்தால்தான் ஆயாவின் மரணத்திற்கும் காரணம் தெரியுமோ? குழப்பம்தான்

  2. திரு .பாவண்ணன் அவர்களின் விஷமுறிவு கதை வாசித்தேன். சிறியாநங்கை மூலிகை பாம்புக்கடிக்கு ஒரு விஷமுறிவு என்பது நாட்டு வைத்திய நடைமுறை. ஆனால் அது விசமன்று. அதை நானே இரண்டு முறை தின்றிருக்கிறேன். அது கடுங்கசப்புதான் .தொண்டைஎல்லாம் கசக்கும் .நினைத்தாலே குமட்டும். ஆனால் விஷமல்ல.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.