மீனாக்ஷி பாலகணேஷ்

ஆற்றுப்படுத்தல், ஆற்றுப்படுத்துதல் என்பது தமிழில் உள்ளதொரு அழகான சொல்வழக்கு. ஆற்றுப்படை எனச் சிறப்பானதோர் இலக்கியவகையை நம் மூதாதையரான சங்கப்புலவர்கள் நமக்களித்துச் சென்றுள்ளனர். குறிப்பிட்ட ஒரு பொருளிலமைந்த சில அருமையான நூல்களைத் தன்னகத்தே கொண்டது ஆற்றுப்படை இலக்கியவகை. இவற்றுள் பத்துப்பாட்டைச் சேர்ந்த திருமுருகாற்றுப்படை, பொருநராற்றுப்படை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, மலைபடுகடாம் என்பன அடங்கும்.
புறத்திணையின் ஏழு திணைகளுள் ஒன்றான பாடாண்திணையின் துறைகளில் ஆற்றுப்படையும் ஒன்று எனத் தொல்காப்பியர் கூறுகின்றார்.
கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும்
ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப்
பெற்ற பெருவளம் பெறாஅர்க்கு அறிவுறீஇச்
சென்று பயன் எதிரச் சொன்ன பக்கம்-
(புறத்திணை இயல் 88).
ஆற்றுப்படுத்தல் என்றால் வழிப்படுத்தல், வழிப்போக்குதல், அல்லது வழிச்செலுத்தல் எனக் கழகத் தமிழ் அகராதி பொருள் கூறுகின்றது.
ஆற்றுப்படுத்தல் எனில் வழிப்படுத்தல், நெறிப்படுத்தல், வழி நடத்துதல் என வர்த்தமானன் தமிழ் அகராதி பொருள் கூறுகின்றது.
தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தமிழ் – தமிழ் அகரமுதலியும் ஆற்றுப்படுத்தல் என்பதற்கு வழிச்செலுத்துதல், போக்குதல் எனவே பொருள் கூறுகின்றது.
ஆற்றுப்படு – த்தல் என்பது தமிழ் லெக்ஸிகன்-ல் (Lexicon) To direct in the right way, esp. to direct a professional, as a bard or dancer, to a liberal patron; வழிச்செலுத்துதல் என்று விளக்கப்பட்டுள்ளது.
இன்னும் எளிமையாகக் கூறவேண்டுமாயின் (அரசனையோ, வள்ளலையோ, கடவுளையோ) எவ்வாறு சென்றடைவது என்பதற்கு உண்டான (சாலை) வழியையோ அல்லது (சமய) ஒழுக்கங்களையோ விளக்குவதே ஆற்றுப்படை ஆகும். அக்காலத்தில் விறலியர் (பாடியாடும் பாணர்பெண்), பாணன் (பாடுங்குலத்தவன்), கூத்தர் (நாடகம் நடிப்பவன், ஆடுபவன்), பொருநர் (களம் பாடுபவன்) ஆகியவர்கள் தமது வறுமையைப் போக்கிக்கொள்ள, வள்ளல்களிடமோ அரசனிடமோ சென்று தம் கலைச்சிறப்பினைக் காட்டிப் பொருள்பெற்றுவருவர். அவ்வாறு அரசனைப்பாடிப் பரிசில்பெற்றுத் திரும்பும் இவர்கள், அவ்வரசனிடம் செல்வோருக்கு சரியான வழியைக் காண்பிப்பதே ஆற்றுப்படுத்தல் எனப்படும். இம்முறையில் பாடப்படும் இலக்கியமே ஆற்றுப்படை எனப்படும். இவை அவ்வரசனின் புகழ், கொடை, கொற்றம் ஆகியவை பற்றி எடுத்தியம்பும் அகவற்பாக்களாகவே அமையும்.
இதனைப் பற்றிய கட்டுரையை எழுதுவது இந்தவகை இலக்கியத்தின் சிறப்புகளைப்பற்றி நான் அறிந்துகொண்டவற்றை, படித்து ரசித்தவற்றைப் பகிர்ந்து கொள்வதற்காகத்தான்!
சங்கப்பாடல்களின் தொகுப்பில் சிலபாடல்கள் ஆற்றுத்துறையாக அமைந்துள்ளன. வறுமையில் வாடும் பாணனையோ விறலியையோ, ஒரு புலவரோ அல்லது பரிசில் பெற்றுத் திரும்பும் பாணனோ கொடைவள்ளலான அரசனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த பாடல்கள் இவை.
இந்த அருமையான இலக்கியவகையின் சில கூறுகளைப் பார்க்கலாமே!
புறநானூற்றிலிருந்து ஒரு பாடல்: சோழன் குளமுற்றத்துத் துஞ்சிய கிள்ளிவளவனிடம் ஒரு பாணனை ஆலத்தூர் கிழார் எனும் புலவர் ஆற்றுப்படுத்துகிறார்; அதாவது எவ்வாறு அவனிடம் சென்று பரிசில் பெறுவது எனும் வழிமுறைகளை விளக்குகிறார். பாடாண்திணையிலமைந்த இப்பாடல் பாணாற்றுப்படை எனப்படும் துறையின் பாற்படும்.
புலவர் பாணனை விளிக்கும் விளியே அவனுடைய இரங்கத்தக்க வறுமையைப் புலப்படுத்துவதாக உள்ளது.
‘இடையில் நெய்த இழையின்றி அவ்வப்போது செப்பனிட்டுத் தைத்ததால் ஆகிய வேற்றுநூலின் இழையைக் கொண்டு விளங்குவதும் வியர்வையால் நனைந்ததுமான ஆடையை உடுத்துள்ள பாணனே!’ – பாணனின் வறுமைநிலை உணர வேறென்ன சொற்கள் வேண்டும்?
‘… அரையது
வேற்றிழை நுழைந்த வேர்நனை சிதாஅர்
ஓம்பி யுடுத்த வுயவற் பாண!
பின் பொருள்வேண்டி அலைந்த அவனது இலக்கற்ற அலைச்சலுக்காக வருந்துகிறார்:
“சோம்பலினால் இலக்கின்றி அலையும் மானிடரைப்போல், எங்கெங்கோ சுற்றியலைந்து வந்து பின் என் வறுமையை யார் தீர்ப்பார் என மெல்லக் கேட்கிறாயே. நான் சொல்வதனைக் கேட்டுக்கொள்வாயாக!’
‘பூட்கை யில்லோன் யாக்கை போலப்
பெரும்புல் லென்ற விரும்பே ரொக்கலை
வையக முழுதுடன் வளைஇப் பையென
என்னை வினவுதி!’
இவ்வாறு கூறிப்பின் யார் அவனுடைய வறுமையைத் தீர்ப்பவர் என்றும் கூறுகிறார். உறையூர் வேந்தனான கிள்ளிவளவன், பகைவேந்தர்களின் யானை புண்பட்டு வருந்தும் போர்க்களத்தில் பாசறையில் உள்ளவன். அவன் போர்செய்வதற்காக வேலைக் கையிலேந்திப் பகைவர் நாட்டுக்கும் செல்பவன். சுற்றப்பட்ட மாலையையும் தீபோல ஒளிவீசும் பொன்னணி பூண்டவனுமாகிய அக்கிள்ளிவளவனிடத்துச் செல்வாயானால், அவனுடைய பெரிய அரண்மனை வாயிலில் நீ நிற்கவும் வேண்டாம். பகல்பொழுதில் அவன் பரிசிலர்க்குத் தேர் வழங்கும் காட்சியினைக் காண்பாய். பின் அவனையும் நீயே நேரில் காணலாம். அப்போது உன் கையில் உள்ள இசை இலக்கணப்படி அமைந்த யாழைக் கண்டும், கொடுப்போர் இல்லாததனால் உடலில் பசி உள்ளதாலும், வண்டுகள் மொய்க்காத பொற்றாமரைப் பூவினை அவனிடமிருந்து பரிசிலாகப் பெற்று மகிழ்வாய். ஆகவே, அக்கிள்ளிவளவனிடம் செல்க, என்கிறார்.
கிள்ளி வளவற் படர்குவை யாயின்
நெடுங்கடை நிற்றலு மிலையே கடும்பகற்
றேர்வீ சிருக்கை யார நோக்கி
நீயவற் கண்ட பின்றைப் பூவின்
ஆடும்வண் டிமிராத் தாமரை
சூடா யாத லதனினு மிலையே.
அருமையான உவமைகள் செறிந்த பாடல். இக்கட்டுரை ஆற்றுப்படையின் சிறப்பையும் அமைப்பையும் விளக்குவதாதலால், தமிழ்நயங்களைச் சுட்டத்தான் இயலுமே ஒழிய விளக்க முற்படாது.
இப்பாடலில் புலவர் பொருள் கொடுக்கும் அரசனை அடையும் வழியைப் பாணனுக்கு விளக்கினார்.

இனி வேறொரு புலவர் ஒரு விறலியை ஆற்றுப்படுத்துவதனைக் காண்போம்.
விறலி ஆற்றுப்படை என்பது,
‘திறல் வேந்தன் புகழ் பாடும்
விறலியை ஆற்றுப் படுத்தன்று’ என்று புறப்பொருள் வெண்பாமாலை (9, 31) கூறும்.
இனி, பாடலைக் காண்போம்.
பாண்டிய மன்னனாகிய பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதி என்பவன் புலவர்களால் பாடப்படும் வீரமும், கொடைவள்ளன்மையும் ஒருங்கே பொருந்தியவன். வறுமைக்காலங்களில் இவனை அண்டிப் பொருள்பெற்ற புலவர்கள், வறுமையில் வாடும் மற்ற புலவர்கள், பாணன், விறலி ஆகியோருக்கும் இவனுடைய கொடைத்திறத்தை அறிவித்து, அவனிடம் சென்று பொருள்பெற்றுவரும் வழிமுறையைக்கூறி ஆற்றுப்படுத்துகின்றனர்.
வறுமையின் காரணத்தால் வயிறு நிறைய உண்ணக்கிடைக்காததனால் அலமரந்து அமர்ந்துள்ளாள் சிலவான வளைகளை அணிந்த இளமையானதொரு விறலி. தான் செல்லும் வழியினிடை இவளைக் காண்கிறார் நெடும்பல்லியத்தனார் என்றொரு புலவர். அவரும் வறுமையால் வருந்தி, பின்னர் முதுகுடுமிப் பெருவழுதியின் கொடைநலம் பற்றி கேள்விப்பட்டமையால் பொருள்பெற்றுவர அவனைத் தேடிச் செல்கிறார் போலும்! மற்றவருக்கு உதவும் நல்லெண்ணம் படைத்தவரான அவர் விறலியை நோக்கிக் கூறுகிறார்: “அம்மா! சில்வளை விறலி! (சிலவளைகளை அணிந்தவளே!) உனது நல்ல யாழையும் ஆகுளி எனப்படும் சிறுபறையையும், பதலை எனும் ஒருதலைப் பறையினொடு சேர்த்துப் பையிலிறுக்கிச் சுருக்கிக் கட்டிக்கொண்டு செல்வோமா? வருகிறாயா?” எனக் கேட்கிறார்.
ஒன்றும் புரியாமல் விழிக்கும் அச்சிறு விறலியிடம் விளக்குகிறார். தான் விரையும்போதும் அவளுக்கும் உதவுவோம் எனும் நல்லெண்ணம். சிறிது நின்று எங்குசெல்ல அழைக்கிறார் என்பதனை விளக்குகிறார்.
“யானைப்படைகளைக் கொண்டு போரிட்ட போர்க்களத்தில் பாசறையில் உள்ளான் அரசன் முதுகுடுமிப் பெருவழுதி. அங்கே ஆகாயத்தில் பறக்கும் கழுகுகளை அவ்வாறு பறக்காமல் தடுத்து நிறுத்தி, உண்ணும் விருப்பத்தை மிகுவிக்கும் வகையில் அப்போர்க்களத்தில் பசிய ஊன் நிறைந்திருக்கும். நாம் அங்கே சென்று பெரும் செல்வத்தினையுடைய அக்கோமானைக் கண்டு, பொருள்பெற்று வரலாம். நாம் மிகுதியாக நீரைப்பெய்து குடிக்கும் இந்தக் கஞ்சியைக் கைவிட்டு வரலாம், வா,” என அழைக்கிறார்.
சில சோற்றுப்பருக்கைகளை மட்டுமே இட்டு அதில் மிகுதியாக நீரைவிட்டுக் கரைத்த கஞ்சியைக் குடித்துப் பசியாறுபவர்கள் இவர்கள். பொருள் பெற்றுவந்தால் அதனை ஒழித்து நல்ல உணவாக வயிறு நிரம்ப உண்ணலாமே எனும் ஆசையே இவர்களை அரசன் இருக்குமிடம் போர்க்களப் பாசறையேயாயினும் செல்ல வைக்கிறது.
மேலும், ‘அவன் தனது கூடல்மாநகரைவிட்டு போர்த்தொழிலில் ஈடுபட்டுள்ளதனால் உடனே நம் வறுமை நீங்க வேண்டுமாயின் அங்கேதான் போர்ப்பாசறையில் சென்று காணவேண்டும். பொருள்பெற வேண்டும்,’ எனும் பொருளும் தொக்கி நிற்கின்றது. போரில் முனைப்பாக இருப்பவனைச் சென்று தொல்லை தரலாகுமா எனும் எண்ணம் நமக்கு எழலாம். ஆனால் அவன் கொடைவள்ளல்; இதனைத் தவறாகவோ ஒரு பொருட்டாகவோ கருதமாட்டான் என்ற நம்பிக்கையும், இவர்களுடைய பசிக்கொடுமையும் இதனால் புலப்படுகின்றன. இனியும் காலந்தாழ்த்தலாகாது என்று சொல்லத் துணிகின்றனர்.
எத்தனை உட்பொதிந்த கருத்துக்கள்! எத்துணை உவமைகள்!
நல்யா ழாகுளி பதலையொடு சுருக்கிச்
செல்லா மோதில் சில்வளை விறலி
களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை
விசும்பா டெருவை பசுந்தடி தடுப்பப்
பகைப்புல மரீஇய தகைப்பெருஞ் சிறப்பிற்
குடுமிக் கோமாற் கண்டு
நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே.
இதுவுமொரு புறநானூற்றுப் பாடலே!
இன்னும் சில சுவையான செய்திகளைக் காணலாமே!
அக்காலத்தில் புலவர்கள் அரசர்களையும் வள்ளல்களையும் பாராட்டுவதற்காக அமைத்துக்கொண்ட நூல்வடிவம் ஆற்றுப்படை என்பர். இயல்தமிழில் வல்ல புலவர்களும், இசைத்தமிழில் வல்ல பாணர், விறலியர், பொருநர்களும், நாடகத்தமிழில் வல்லவர்களான கூத்தர்களும் தமிழ்நாட்டில் இருந்தனர். புரவலர்களைத் தேடிப் பாடி, ஆடிக் களிப்பித்துப் பரிசில் பெற்று வாழ்ந்தனர். புலவர்கள் கவிதை புனைந்தனர்; பாணர், விறலியர், பொருநர் ஆகியோர், குழல், யாழ், பலவகைப்பட்ட பறைகள் இவற்றின் துணையோடு பாடல்களைப்பாடி அரசர்களையும் வள்ளல்களையும் மகிழ்வித்தனர். கூத்தர் இவற்றை நடித்தும் காண்பித்தனர். இவர்களால் அக்காலத்தில் கலைகள் செழித்து வளர்ந்தன எனலாம்.

ஆற்றுப்படை நூல்களாகக் காணப்புகுந்தால் திருமுருகாற்றுப்படையைக் காணாமல் மேலே செல்ல இயலாது! ஆற்றுப்படை இலக்கியவகையை அதிகமாகக் கொண்டுள்ள பத்துப்பாட்டு நூல்களில் முதலாவதாகத் திகழுவது இது. மதுரைக் கணக்காயனார் மகன் நக்கீரரரால் எழுதப்பட்ட இது 317 அடிகளைக் கொண்டது. முருகனருளைப் பெற்ற புலவரொருவர் அவனருளைப் பெற விழையும் வேறொரு புலவனை முருகனிடம் ஆற்றுப்படுத்துவதாக அமைந்த நூல். புலவராற்றுப்படை எனவும் கூறப்படும்.
முருகப்பெருமானின் சிறப்புகளை விவரிக்கும் இந்நூல் எழுந்ததற்கு ஒரு சுவையான கதை கூறப்படுகின்றது. நக்கீரர் ஆரம்பத்தில் சிவபக்தராகவே இருந்து பின்பே முருகனையும் வழிபடலானார். அவர் சிவபூசைக்குச் செல்லும் வழியில் நாள்தோறும் திருப்பரங்குன்றத்திலுள்ள சரவணப்பொய்கையில் நீராடிவிட்டுப் பின் மதுரைசென்று ஆலவாயண்ணலை வழிபட்டுச் செல்வதனை வழக்கமாகக் கொண்டிருந்தார்.
ஒருநாள் காலை வழக்கம் போல நக்கீரர் சென்று சரவணப்பொய்கையில் நீராடினார். கரையில் இருந்த ஒரு அரசமரத்தடியே அமர்ந்தார். ‘சிவாயநம,’ எனும் திரு ஐந்தெழுத்தைச் சிந்தையிலே எண்ணி மோனநிலையிலிருந்தார். அப்போது அரசமரத்திலிருந்து ஓர் இலை கீழே இருந்த பொய்கையில் விழுந்தது. விழுந்த இலை சரியாக விழலாகாதா? தெய்வ சித்தத்தினால் அது பாதி இலை நீரிலும் பாதி இலை நிலத்திலுமாக விழுந்தது! ஆகா! என்ன ஆச்சரியம்! நீரில் விழுந்த ஒரு பகுதி பாதி மீனாக மாறிவிட்டது. நிலத்தில் விழுந்த மறு பாதி ஒரு பறவையாகி விட்டது. ஆனால் இரண்டும் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டிருந்தன. ஒன்றை விட்டு ஒன்று பிரியவேண்டி, அவை ஒன்றினை ஒன்று பற்றி இழுக்கலாயின.
இதனால் எழுந்த சலசலப்பு ஓசையைக் கேட்டுக் கண்விழித்த புலவர் நக்கீரர் இந்தத் துடிப்பைக் கண்ணுற்றார். அவர் மனம் பதைத்தது. சிவபூசனையை மறந்துவிட்டு இதனைப்பற்றி என்ன செய்யலாம் எனச் சிந்தித்தார். உடனே அவ்விடத்தில் ஒரு பூதகணம் தோன்றி, “நீ சிவபூசையின் போது தவறுசெய்தாய்,” என்று அவரை நன்குபுடைத்துக் கொண்டுபோய் மலைக்குகையில் தான் ஏற்கெனவே சிறை வைத்திருந்த பூசை வழுவியவர்களான தொளாயிரத்துத் தொண்ணூற்றொன்பது பேர்களுடன் ஆயிரமாவதாக வைத்து, அந்த ஆயிரம் பேர்களையும் ஒருசேரத் தான் உண்பதற்காகச் சிறை வைத்துவிட்டது.
பூதத்தின் எண்ணத்தினை அறிந்துகொண்ட நக்கீரர் தம் குற்றத்தினை உணர்ந்தவராகி முருகப்பெருமானை நோக்கித் திருமுருகாற்றுப்படை என்னும் நூலினை இயற்றிப்பாடி, அவனருளை வேண்டினார். அவருடைய தமிழில் மனம் மகிழ்ந்த முருகன் நேரில் தோன்றி, பூதத்தினைத் துரத்தி, நக்கீரரையும், மற்றவர்களையும் விடுதலை செய்தான் என ஒரு வரலாறு உண்டு.
இந்நூல், முருகப்பெருமானின் திருவுருவச் சிறப்பு, பலவிதமான மாலைகள், கொடிபற்றிய செய்திகள், சூரர மகளிர் செயல்கள், திருப்பரங்குன்றம், பழமுதிர்சோலை ஆகிய அறுபடை வீட்டுத்தலங்களின் சிறப்புகள், முருகன் அடியாருக்கு அருளும் திறம் முதலியன பற்றி அழகுற விவரிக்கும்.
எவ்வாறு முருகப்பெருமானை வணங்குவது என இறையருள் பெற்ற ஒருவன் மற்றொருவனுக்குச் சொன்னான்: ‘இன்னிசை முழங்க வெறியாட்டயர்ந்து, அந்த வெறியாடிய களத்தில் ஆரவாரமாகப்பாடி, வாயில்வைத்துக் கொம்புகளை ஊதி முழக்கி, முருகப்பெருமானின் பிணிமுகம் எனும் யானையை வாழ்த்தி வணங்குவர். குறையுள்ளவர் அது நீங்க வந்து வேண்டி வழிபடுவர்; வழிபட்டுக் குறை நீங்கியவர், மகிழ்ந்து வாழ்த்தி வழிபடுவர். இவ்வாறு முருகப்பெருமான் அவ்விடங்களில் இருப்பவன் ஆவான். நான் இதனை அறிந்தவண்ணம் உனக்குக் கூறினேன்,’ என்று சொன்னான்.
‘ஆடு களம் சிலம்பப் பாடி பலவுடன்
கோடு வாய்வைத்து கொடுமணி இயக்கி
ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி
வேண்டுவர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட
ஆண்டாண்டு உறைதலும் அறிந்தவாறே
ஆண்டாண்டு ஆயினும் ஆக காண்தக..’
(திருமுருகாற்றுப்படை)
பின் எவ்வாறு முருகன் அடியாரை ஆட்கொள்வான் எனவும் கூறுகிறான்: ‘தெய்வத்தன்மை விளங்கும் திருவுருவையும் வானளாவிய தனது வடிவையும் கொண்ட இறைவன் உனக்குமுன்பு எழுந்தருளுவன்; தனது வானளாவிய வடிவினை உள்ளடக்கி, தெய்வத்தன்மையுடன் கூடிய தனது இளமையான வடிவைக்காட்டி அருளுவான். பின்பு, “அஞ்சாதே! நீ எதனை எண்ணி, எதனை வேண்டி என்பால் வந்தனையோ, அக்காரணத்தை நான் முன்பே அறிவேன்,” என இனியமொழிகளைக் கூறுவான். பலவிதமான அன்பான சொற்களை உன்னிடம் உரைப்பான். பின்பு எவராலும் பெறுவதற்கு அரிய வீடுபேற்றை உனக்கு அளிப்பான்,’ என்கிறான்.
‘தெய்வம் சான்ற திறல் விளங்கு உருவின்
வான் தோய் நிவப்பின் தான் வந்தெய்தி
அணங்கு சால் உயர்நிலை தழீஇப் பண்டைத்தன்
மணம் கமழ் தெய்வத்து இளநலம் காட்டி
அஞ்சல் ஓம்புமதி அறிவல் நின்வரவு என
அன்புடை நல்மொழி அளைஇ விளிவு இன்று
இருள்நிற முந்நீர் வளைஇய உலகத்து
ஒருநீ ஆகித் தோன்ற விழுமிய
பெறல் அரும் பரிசில் நல்குமதி பலவுடன்’
(திருமுருகாற்றுப்படை)
இவையே முருகனிடம் அடியாரை ஆற்றுப்படுத்தும் நூலின் சில அருமையான பகுதிகள்.
269 அடிகளில் அமைந்த மற்றொரு ஆற்றுப்படை நூலான சிறுபாணாற்றுப்படை காட்டும் நயங்கள் வேறுபலவாம். அவற்றில் சிலவற்றைக் காணலாம். இந்நூல்கள் தமிழர் பண்பாட்டின், நாகரிகத்தின் பன்முகங்களை நமக்குக் காட்டுகின்றன என்றால் மிகையாகாது.
அக்காலத்திலும் கொடையில் தாழ்ந்தவர்களும் உண்டு என அறிகிறோம். பாணனொருவன் தன் வறுமைதீரக் கொடையளிப்பவர் யாரென அறியாத நிலையில் யாழில் இனிய பண்களை மீட்டிக்கொண்டு வறுமைத்துன்பம் வருத்த அலைந்து திரிகிறான். பரிசில் பெற்றுவரும் பாணன் அவனை எதிர்ப்படுகிறான். அவனிடம், “நீ சேரரின் வஞ்சி, பாண்டியரின் மதுரை, சோழரின் உறந்தை ஆகிய இடங்களில் மிகவும் சிறிய பரிசிலையே பெறுவாய். கொடைமடமாக மயிலுக்குப் போர்வை அளித்த வள்ளல் பேகன், முல்லைக்குத் தேர் ஈந்த பாரி, இன்சொல்லுடன் கொடையளிக்கும் காரி, வள்ளல் ஆய், அவ்வைக்கு நெல்லிக்கனி ஈந்த அதியமான், மேலும் நள்ளி, வல்வில் ஓரி ஆகியோரின் கொடைத்திறமான பாரத்தை ஒருங்கே தன்னிடம் கொண்ட நல்லியக்கோடன்பால் (ஓய்மாநாட்டு நல்லியக்கோடன்) செல்லுக,”என வழிகாட்டி, “நாங்கள் அவன்பால் சென்றோம். எப்படிப்பட்ட வறுமை எங்களுடையது தெரியுமா?அந்த வறுமைதீர யானையும் தேரும் பரிசில் பெற்று அவனிடமிருந்து வருகிறோம்,” என ஆற்றுப்படுத்துகிறான்.
தான் அனுபவித்த வறுமையின் கொடுமையை பாணன் விளக்குவது கண்களில் நீரை வரவழைக்கும் கூற்று. இதனைப் பதிவும் செய்துவைத்த புலவரை (நல்லூர் நத்தத்தனார்) என்ன சொல்லிப் போற்றுவது?
பாணனின் வீட்டில் நாய் குட்டிகளை ஈன்றுள்ளது. கண்ணையே இன்னும் விழிக்காத அக்குட்டிகள் தாயின் முலையை உண்ண, பசிக்கொடுமையினால் அதனைப்பொறுக்காத தாய்நாய் குரைக்கின்றது. சிதிலமடைந்த அடுக்களை; கரையான்கள் அரித்த சுவர். காளானும் அதில் முளைத்துள்ளது. வறுமையால் இளைத்த உடலையுடைய விறலியானவள் தனது கூரிய நகத்தால் கிள்ளிக்கொண்டு வந்து உப்பின்றிச் சமைத்து வைத்துள்ள குப்பைக்கீரையை, யாரேனும் பார்த்துவிடுவார்களோ என அஞ்சி, கதவைத் தாழிட்டுக்கொண்டு உண்டனராம். அவ்வாறான பசி அறிவையே அழித்துவிடும். அந்தப் பசிவருத்தம் அடியோடு அழியுமாறு யானை, தேர் முதலானவற்றை எமக்கு நல்லியக்கோடன் பரிசிலாக ஈந்தனன் என்று கூறுகிறான்.
‘திறவாக் கண்ண சாய் செவிக்குருளை
கறவாப் பால்முலை கவர்தல் நோனாது
புனிற்று நாய் குரைக்கும் புல்லென் அட்டில்
….
பூழி பூத்த புழல் காளாம்பி
….
குப்பி வேளை உப்பு இலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடை அடைத்து
…..’
(சிறுபாணாற்றுப்படை)
யானையையும் தேரையும் வைத்துக்கொண்டு இவன், இந்த ஏழைப்பாணன் என்ன செய்யப்போகிறான் என எண்ண வேண்டாம். ஒன்று, இதன் உட்பொருளை, அவை வாங்கி வைத்துக் கொள்வதற்கு ஈடான பொருளும் பொன்னும் அளித்தான் என்னும் உயர்வு நவிற்சியாகக் கொள்ளலாம். அல்லது அவற்றைக் கொடுத்து, அவற்றை வைத்துக்கொண்டோ, விற்றோ பிழைத்துக் கொள்ளட்டும் எனும் எண்ணத்தால் கொடுக்கப்பட்டனவாக இருக்கலாம். முதலில் கூறியதே பொருத்தமாகத் தோன்றுகிறது.
பரிசிலரை நல்லியக்கோடன் உண்பிக்கும் முறையும் மிக்க நயத்துடன் கூறப்பட்டுள்ளது. இரப்பவர்தானே என்று கடைசிப்பந்தியில் அமர்த்தி, எஞ்சியதை இலையில் அளிப்பதல்ல அவனுடைய இரந்தோர்க்கீயும் வள்ளன்மை!
‘நீ அவனைப்பற்றிய புகழ்ச்சொற்களைக் கூறத் துவங்கியதுமே, நாணத்தால் அப்புகழுரைகளை மேலும் கேட்க விரும்பாது, தடுத்து, உயர்ந்த ஆடைகளைக் கொடுத்து உடுத்துக் கொள்ளக் கூறுவான்; களிப்பைத் தரும் கள்ளினைக் குடிக்கச் சொல்வான்; சுவைபடச் சமைத்த பல்வேறு வகையான உணவினை தகதகக்கும் பொன்னாலான உண்கலத்திலிட்டு உன்னை அருகிருந்து உண்ணச்செய்து மகிழ்வான்.
‘ஏரோர்க்கு நிழன்ற கோலினை எனவும்
தேரோர்க்கு அழன்ற வேலினை எனவும்
நீ சில மொழியாஅளவை மாசுஇல்
காம்பு சொலித்தன்ன அறுவை உடீஇப்
பாம்பு வெகுண்டன்ன தேறல் நல்கி
…
இளங்கதிர் ஞாயிறு எள்ளும் தோற்றத்து
விளங்கு பொற்கலத்தில் விரும்புவன பேணி
ஆனா விருப்பின் தான் நின்று ஊட்டி
…
நயவர் பாணர் புன்கண் தீர்த்தபின்
வயவர் தந்த வான் கேழ் நிதியமொடு
…
(சிறுபாணாற்றுப்படை)
என அடிகள் செல்கின்றன; செய்திகளைச் சொல்கின்றன. படித்து ரசிப்பதே நம் கடன்!
இறுதியாக, மலைபடுகடாம் எனும் கூத்தராற்றுப்படை காட்டும் சில நயங்களைக் காண்போம்.
முன்பே இந்நூல்கள் அக்கால மானிடரின் வாழ்க்கைக்கும் நாகரிகத்திற்கும் சான்றாக உள்ளன என அறிந்துகொண்டோம். அரசர்களின் வீரத்தையும், கொடைவள்ளன்மையையும் புகழ்ந்து பாட, புலவர்களுக்கு இது ஒரு புதுமையான வாய்ப்பாயிற்று.
வறுமையில் வாடிச்சென்று அரசர்களிடம் பொருள் யாசித்தவர்கள் அனைவரும் பிச்சைக்காரர்கள் என இகழப்பட வேண்டியவர்கள் அல்ல. உடல் உழைப்பின்றி, இது பொருள்பெற ஒருவழி என்று திரிந்தவர்களும் அன்று. இவர்கள் தன்மானமும் செருக்கும் மிகுந்த கலைவாணர்களும் இசைவல்லுனர்களும் ஆவர். இவர்களில் சிலரை அரசனே தனது அரசவையில் நிரந்தரமாக இருத்திப் புரந்துவந்ததும் உண்டு. பலவிதமான இசைக்கருவிகளைத் தாமே செய்தும், அவற்றில் முறையான இசையை எழுப்பிப் பாடல்களைப் பாடியும், ஆடியும் (கூத்தர்கள்) காண்போரை மகிழ்வித்தும் பொருள்பெற்றனர்.
மலைபடுகடாம் எனும் கூத்தராற்றுப்படை இரணிய முட்டத்துப் பெருங்குன்றூர்ப் பெரும்கௌசிகனார் எனும் புலவரால் நவிரமலையின் தலைவனான நன்னன் வேண்மானிடம் பாடியாடிப் பரிசில்பெறச் செல்லும் கூத்தரை ஆற்றுப்படுத்தும் விதமாகப் பாடப்பட்டதாகும்.
இதன் சிறப்பே இதன் துவக்கம்தான் எனலாம்.
திருமழையைப்போல் கருமேகங்கள் வானில் முழங்கும் ஒலியைப்போல் அதிரும் மத்தளத்துடன், ஆகுளி என்னும் வெண்கலத்தால் செய்த சிறுபறை, தகடாகச் செய்யப்பட்ட பாண்டில் எனும் கஞ்சதாளம், மயிற்பீலியால் அலங்கரிக்கப்பட்ட கொம்பு வாத்தியம், தூம்பு எனும் கருவி, குழல், கரடிகை, இன்னும் பலவிதமான இசைக்கருவிகளையும் கொண்டுசெல்லும் கூத்தன் என அத்துணை இசைக்கருவிகளையும் அவை செய்யப்படும் முறை, எழுப்பும் ஒலி இவைகளுடன் அழகாகப் பலவரிகளில் விவரிப்பதுவே.
திருமழை தலைஇய இருள்நிற விசும்பின்
விண்ணதிர் இமிழ் இசை கடுப்ப பண் அமைத்து
திண் வார் விசித்த முழவொடு ஆகுளி
நுண் உருக்கு உற்ற விளங்கு அடர்ப் பாண்டில்
மின் இரும் பீலி அணித்தழைக் கோட்டொடு
….
நொடி தரு பாணிய பதலையும் பிறவும்….
(மலைபடுகடாம்)
பின் எதிர்ப்படும் பாணனோ அல்லது கூத்தனோ ஒருவன் தாங்கள் நன்னன் வேண்மானிடத்திலிருந்து பரிசில் பெற்றுவரும் பெருமையைக் கூறுவான். நன்னனின், ஊர், நாடு, மலை, காடு இவற்றின் வளங்களைக் கூறிப் பின் விளைந்த பயிர்களின் சிறப்பைக் கூறுவான். ஓர் எடுத்துக்காட்டு:
‘நன்கு விளைந்த தினை, அவரை, வரகு ஆகியவற்றின் முற்றிய கதிர்கள் தம்மில் விளையாட்டாகப் போரிடும் யானைக்கன்றுகளின் ஒன்றுடன் ஒன்றிணைந்த கைகளைப்போன்று பிணைந்து அறுக்கும்பதத்தில் நிற்கும்,’ என்கிறான்.
‘வழிநெடுகும் காணும் ஆற்றின் சிறப்பையும், கானவர், குறமகளிரின் விருந்தோம்பலையும் கண்டு அங்கே தங்கிவிடாதீர்! மேலும் செல்லுக! வழியில் இன்னும் குரவைப்பாடல் கேட்பீர். அதன் இனிமையில் மயங்கித் தங்கி விடாதீர்கள்!’ (இவர்களும் இசைக்கலைஞர்களல்லவா? அதனால் தகுந்த நண்பர்களான மற்ற இசைவாணர்களுடன் தங்கி விடாதீர்கள்; கொடைவள்ளலான நன்னனைக் காணச் செல்வீர்களாக!) என்கிறான்.
மேலும், அந்நாட்டின் இயற்கைவளம், மக்களின் விருந்தோம்பற் சிறப்பு ஆகியவற்றை மிகவும் சுவையாக விவரிக்கின்றான் பாணன். (பாணன் வாயிலாகப் புலவர்!) அருமையானதொரு ஆற்றுப்படைநூல் இதுவாகும்.
நன்னன் இருக்குமிடத்தை அடைந்ததும் எவ்வாறு அவனிடம் நடந்துகொள்ள வேண்டும் என்பதற்கும் சொல்லிக் கொடுக்கிறான். முதலில் உங்களது வாத்தியங்களில் இசைகூட்டி, மருதப்பண்ணை எழுப்பி, இறைவனை வாழ்த்துங்கள் என்கிறான்.
‘தாது எருத் தைந்த முற்றம் முன்னி
மழை எதிர்படு கண் முழவு இகுப்ப
கழை வளர் தூம்பின் கண் இடம் இமிர
மருதம் பண்ணிய கருங் கோட்டுச் சீறியாழ்
நரம்பு மீது இறவாது …
அருந் திறற் கடவுட் பழிச்சிய பின்றை,’
(மலைபடுகடாம்)
பின்பு, பல புதிய பாடல்களைப்பாடிவிட்டு, அவனிடம் அவனுடைய குடிப்பெருமையையும், வீரத்தையும் கொடைத்தன்மையையும் புகழ்ந்து பாடுங்கள். இவ்வாறு நீங்கள் பாடும்போதே, பாடலை முடிக்கும் முன்பே, பொறாதவன் ஆகி, உங்களுக்குப் பரிசிலைத் தந்தருளுவான்.
‘ஆம். நீங்கள் இவ்வளவு வருத்தம்கொண்டு என்னைக்காண வந்ததே பெரிய செயல் அல்லவோ? அதுவே எனக்கு மகிழ்ச்சியை அளிக்கின்றது,’ என்றுகூறித் தன்னைப் புகழ்ந்து மேன்மேலும் பாட இடங்கொடாது பரிசிலை முந்தி அளிப்பான்,’ என்கிறான் பரிசில் பெற்ற பாணன்.
583 அடிகள் கொண்ட சிறப்பான ஒரு நூலைப்பற்றி இங்கு சிலவரிகளில்தான் கூற இயன்றது. முழுதும் படித்துச் சுவைப்பதே முழுமையான இன்பம் தரும்.
‘ஆற்றுப்படுத்துதல்’ எனில் என்னவென்று கூறப்புகுந்து ஆற்றுப்படைபற்றி எழுதலாயிற்று.
தற்காலத்தில் இச்சொல்லை ‘ஆறுதல் கூறுவது’ எனும் பொருளில் பயன்படுத்தும் நிலை எழுந்துள்ளது. முன்பே கூறியதுபோல் தமிழுக்கான அனைத்து அகராதிகளும் ஆற்றுப்படுத்தல் எனும் சொல்லுக்கு வழிப்படுத்தல், வழிப்போக்குதல் ஆகிய பொருளையே எடுத்தியம்புகின்றன. ஆகவே ‘ஆறுதல் கூறுவது’ எனப் பொருள்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்.
சில வரிகள் தான் என்று எழுதியிருக்கிறீர்கள்; அனைத்துமே தேன் துளிகள்.அமுதத் தமிழை அறிய ஆற்றுப்படுத்தியிருக்கிறீர்கள். நன்றி