இரண்டு வடையும் இளையராஜாவும்

மரணம் ஒரு சுவாரசியமான முரண். மிகச் சிலரைத் தவிர, நம் அனைவருக்கும் வாழ்க்கையில் மிகப் பெரிய பயம் மரணம்தான். ஆனால் மரணத்தில் இறப்பவருக்கு இழப்பில்லை. இறந்தவரின் சுற்றத்துக்குத்தான் இழப்பு. இருப்பினும், பரிணாமத்தின் மூல சக்தியான சுய பாதுகாப்பு உள்ளுணர்வு (self-preservation instinct) எல்லா உயிரினங்களின் ரத்தத்திலும் கலந்திருக்கிறது. அதன்பொருட்டு வரும் பயம் மட்டும் இல்லையென்றால் இரண்டு நாள் தொடர்ந்து போர் அடித்தால்கூட ஒருவேளை நாம் சிறிதும் யோசிக்காமல் பக்கத்தில் இருக்கும் பாலத்தின் மேலிருந்து கீழே விரையும் பேருந்தின் முன் குதித்துவிடக்கூடும். மரண பயம்தான் உயிரினங்களைப் பல கோடி வருடங்களாகப் பாதுகாத்து வந்துள்ளது. பெரும்பாலும் நாம் அனைவரும் நீண்ட நாள்கள் வாழவேண்டும் என்று விரும்புகிறோம். பெரியவர்கள் ஆசீர்வதிக்கும்போது முதல் சாய்ஸ் நீண்ட ஆயுள். அதற்கு அப்புறம்தான் மற்ற செல்வங்கள்.

நான் இரண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும்போது, என் வகுப்பில் நண்பன் ஒருவன் காச நோய் வந்து அவதிப்பட்டுக் குணமாகி இருந்தான். நோயின் தாக்கத்தில் அவனுடல் துவண்டிருந்தது. மார்பு சூம்பிப்போய் விலா எலும்புகள் துருத்திக்கொண்டு இருக்கும். கை விரல்கள் குச்சிக் குச்சியாய் மெலிந்திருக்க, நகங்கள் மட்டும் நார்மல் சைசில் புடைத்திருப்பதுபோல் இருக்கும். பேசும்போது மூச்சிரைப்பான். திடீரென்று சில நாள்கள் பள்ளிக்கு வரவில்லை. அவன் வீட்டருகில் இருக்கும் சேகரிடம் விசாரித்தால், “அவன் செத்துப் போய்ட்டான்டா” என்று சாதாரணமாகச் சொன்னான். தூக்கி வாரிப் போட்டவனாக என்னைப் பார்த்து, “இன்னிக்குத்தான் பாடியை எடுக்கறாங்க. வரியா, போய் பாக்கலாம்,” என்றான். எனக்கு அவன் இறந்த அதிர்ச்சி இன்னும் தெளியவில்லை. வயதானவர்கள் மட்டுமே இறப்பார்கள் என்று நம்பியிருந்த இரண்டும் கெட்டான் வயதில் இந்தச் செய்தி என்னைச் சரியாகத் தாக்கியிருந்தது. இனம் தெரியாத பயம் தொண்டையை அடைத்தது. இருந்தாலும் பார்க்க வேண்டும் என்ற அசட்டு உந்துதலால் சரி என்றேன்.

மாலை வீட்டுக்கு வந்து, பள்ளிப் பையை அப்படியே கடாசிவிட்டு “அம்மா, சேகர் வீட்டுக்குப் போய் விளையாடிட்டு வரேன்” என்று இரைந்துவிட்டு ஓடினேன். சேகரும், நானும் கிளம்பி அடுத்த தெருவில் இருந்த இழவு வீட்டுக்குச் சென்றோம். தெரு முக்கு திரும்பும்போதே அவன் வீட்டு வாசலில் வேட்டி அணிவகுப்பு தெரிந்தது. அந்தக் கூட்டத்தைக் கடந்து சேகர் என்னை வீட்டின் பின்பகுதிக்குக் கூட்டிச் சென்றான். கம்பி வேலியின் இடுக்கு ஒன்றைப் பெரிதுசெய்து முள் குத்தாமல் லாவகமாக உள்ளே நுழைந்தான். நான் தடுமாறி என் உடலை வேலி இடுக்கில் நுழைக்கும்போது கம்பி குத்த நான் கத்தினேன். சேகர் என் வாயைப் பொத்தி “உஷ்! யாராவது பார்த்தால் நாம அவ்வளவுதான்” என்றான். எப்படியோ நுழைந்து பின் வழியே வீட்டை அணுகினோம். உள்ளேயிருந்து பெரிதாக ஒப்பாரிச் சத்தம் கேட்டது. பின் ஜன்னல் அருகே வந்து யாருக்கும் தெரியாமல் குனிந்தபடி தலையை மட்டும் நீட்டி உள்ளறையை நோக்கினோம்.

நட்ட நடுவே எங்கள் நண்பனின் பிரேதம் துணியில் சுற்றப்பட்டுக் கிடத்தப்பட்டிருக்க, அவன் தலைமாட்டில் நான்கு வயதான பெண்கள் சுற்றி அமர்ந்து, கைகளால் நெஞ்சில் ஒரு தாளத்தோடு வேகமாக அறைந்துகொண்டு பெரிதாக ஒப்பாரி ஓலமிட்டனர். வயற்றைப் பிசைந்தது. ஒரு நிமிடம் மூச்சுவிடாமல் பாடி நிறுத்தியவுடன் அதுவரை அழுத தடயம் ஏதுமில்லாமல் ஒருவருக்கொருவர் அடுத்து என்ன பாடுவது என்று பேசிக்கொண்டே பக்கத்தில் இருக்கும் குவளையில் சரக் என்று எச்சிலை உமிழ்ந்துவிட்டு, அடுத்த ஒப்பாரி பாடி அழ ஆரம்பித்தது வினோதமாக இருந்தது. அந்த அறையில் இருந்த அனைவருள் அவன் பக்கத்தில் இருந்த அவன் அன்னையின் கண்ணில் மட்டும்தான் நிஜக் கண்ணீர். மற்ற அனைவரும் ஏதோ மும்முரமக்ச் சொந்தக் கதை பேசிக்கொண்டிருந்தார்கள். எனக்கு அவர்கள் அனைவரின்மேலும், அவனைத் தகாத வயதில் சாகவைத்த கடவுள்மேலும் பெரும் கோபம் வந்தது. திடீரென இனம் தெரியாத பயம் திடீரெனத் தாக்க, சேகரிடம் “வாடா” என்றவாறு திரும்பி ஓடினேன். வேலியில் நுழையும்போது இன்னொரு கீறல்.

அந்தக் காலத்தில் நாங்கள் ஒரு தேவாலயத்திற்குப் பின்புறம் குடியிருந்தோம். வீட்டுக்கும் ஆலயத் திடலுக்கும் நடுவே ஒரு முள் வேலி மட்டுமே.சில சமயங்களில் ஆலயத்தின் வெளியே நடக்கும் திருமணங்களையும், இறந்தவருக்கான இரங்கல் கூட்டங்களையும் பார்க்க முடியும். அவ்வப்போது ஆலயத்தின் சவ ஊர்தியை வேலிக்கு அருகே நிறுத்துவார்கள். அதில் “இன்று நான், நாளை நீ” என்று பயம் தரும் வகையில் பெரிதாக எழுதியிருக்கும். இந்த எதையுமே சற்றும் பொருட்படுத்தாத நான், நண்பனின் பிரேதத்தைப் பக்கத்திலிருந்து பார்த்ததுக்கப்புறம் பெரிதாகப் பயப்பட ஆரம்பித்துவிட்டேன். பின்புறம் செல்ல நேர்ந்தால் எனக்குத் துணை வேண்டும் என்று படுத்துவேன். நீண்ட நாள்களுக்கு இறந்த என் நண்பன் அடிக்கடி கனவில்வந்து “இன்று நான், நாளை நீ” என்று மூச்சிரைக்க நிறுத்தி, நிறுத்திச் சொல்லி பயத்தில் வியர்வை தெளிக்க நள்ளிரவில் எழுப்பி விட்டிருக்கிறான்!

பொதுவாக மரண ஊர்வலத்தில் மட்டுமே வாசிக்கப்படும் பறைக் கொட்டு என்கிற தமிழ்ப் பாரம்பரிய தாள வாத்தியம் என்னை கிறங்கடிக்கச் செய்யும். அது ஏதோ பண்படாத இசை, ஏழைபாழைகளின் சாவுக்கு மட்டுமே லாயக்கு என்று பெரும்பாலோர் கருதி வருவதால் அதில் நுணுக்கமான அழகில்லை என்று நினைத்திருந்தேன். பின் காலத்தில் கொஞ்சம் ஞானம் வர, அதில் அமைந்த ‘பல தாள’ (polyrhythm) அமைப்புகள் எவ்வளவு அழகானவை என்றுணர்ந்தேன். பல தாள அமைப்புள்ள இசைக் கோப்புகள் ஆரம்பிக்கும்போது ஏதோ ஒழுங்கில்லாமல் ஒலிக்க, அவற்றின் விகிதாச்சாரங்களை நம் மூளை அறிந்தவுடன் அது கோர்வையான இசையாக ஒலிக்கத் தொடங்கும் அற்புதம் ஒவ்வொருமுறை கேட்கும்போதும் கிளர்ச்சி ஏற்படுத்தும். அவ்வாறான பாரம்பரியத் தாள இசை, உலகம் முழுவதும் பல்வேறு பழங்குடி மக்களிடையே பரவலாகக் காணப்படுகிறது. அதன் அழகை ரசிக்காத இயலாமல் மட்டம் தட்டும் நம் மேல்குடி மக்களின் அஞ்ஞானத்தை மன்னிக்க முடியாது.

எங்கள் அப்பா, கடைசி காலத்தில், மரணத்துடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டு அடிக்கடி ICU விஜயம் செய்து வந்தார். அவர் எங்களுக்குத் தந்திருந்த நிரந்தர பயத்தில், மரணம் நிச்சயம் என்று ஆனபிறகு குறைந்த நாள் வாழ்க்கையை எதிர்கொண்டு வாழ்ந்த பலர் எழுதிய புத்தகங்களை நான் படித்தேன். ‘Tuesdays with Morrie’ யில் ஆரம்பித்து, Randy Pausch’ன் ‘The last lecture’, ‘When Breath Becomes Air’ என்று பலரின் கடைசி நாள் அனுபவங்களைப் படித்தேன். எல்லாவற்றிலும் வாழ்க்கைப் பாடங்கள் நிறையவே இருந்தாலும் இரண்டு வாரத்துக்கு மேல் ஏதும் நினைவில் நிற்கவில்லை. மறுபடி கூச்சல், குழப்பமாக வேண்டாததைத் துரத்திக்கொண்டு விரைவு வாழ்க்கையில் விழுந்து விடுவேன்.

ஒரு முறை மருத்துவமனையில் இருந்து திரும்பி வந்த தந்தையிடம், அவருக்கு வாழ்க்கையில் நிறைவேறாத ஆசை ஏதாவது இருக்குமோ என்று பலவிதமாகக் கேட்டுப் பார்த்தேன். அவர் ஏதும் பிடி கொடுப்பதாக இல்லை.

“அப்பா, உனக்கு மகிழ்வாக என்னால் இப்பொழுது ஏதாவது செய்ய முடியுமா?” என்றேன்.

“சுடச்சுட ரெண்டு வடை கிடைக்குமா?” என்றார்!

“என்னப்பா, எழுத்தாளர் சுஜாதா அப்பாவைப்போல ஏதாவது பிரபந்தம், அல்லது வைரமுத்து படி என்று ஏதோ சொல்லப்போகிறாய் என்று பார்த்தால் வடை கொண்டுவா என்று பாமரத்தனமாகச் சொல்கிறாயே,” என்று சிரித்தேன்.

“ஒரு வடை கடித்துக்கொண்டு இளையராஜா கேட்பதைவிட பெரிய விஷயம் என்னடா இருக்கு?” என்றார்.

அன்று மாலை உடற்பயிற்சிக்காக ஓட்டம் போட்டுக் கொண்டிருக்கும்போது திடீரென நான் ஒரு காலத்தில் படாத பாடுபட்டுப் படித்த Jean Paul Satre’யின் “Of Being and Nothingness” நினைவுக்கு வந்தது. என் அண்ணன் தான் படித்து ஒன்றும் புரியவில்லை. உனக்குப் புரிகிறதா பார் என்று சொல்லி அனுப்பியிருந்தான். எனக்கும் ஒன்றும் புரிபடவில்லை. ஆனால் அப்பா ரொம்பவும் சாதாரணமாக சொன்ன ஒரு வரி மூலமாக திடீரென்று புரிந்துவிட்டதுபோல் இருந்தது. Existentialism என்கிற ‘இருத்தலியல்’ தத்துவப்படி ஒருவர் வாழ்க்கையின் சாரம் அவர் செயல்களால் மட்டுமே நிர்ணயிக்கப்படுகிறது. அவர் பிறப்பினாலோ அல்லது மரபணுக்களாலோ, சூழ்நிலையாலோ அது நிர்ணயிக்கப்படுவதில்லை. (அவ்வாறு நம்புவது ‘சாரவியல்’ என்கிற essentialism அல்லது ‘விதிவழிக் கோட்பாடு.’) அப்பாவின் சூழ்நிலை அவரைப் படுக்கையில் தள்ளி நடமாட முடியாமல் செய்திருந்தது. எல்லோரும் சாதாரணமாகச் செய்யக்கூடியப் பல காரியங்கள் அவருக்கு எட்டாதவையாக மாறிவிட்டிருந்தன. அவர் அதை நினைத்து நாள்தோறும் புலம்பித் தன்னிரக்கத்தில் தள்ளாடிக் காலம் கடத்தியிருக்கலாம். அப்படியில்லாமல் அவர் இருந்த நிலைமையில் முடிந்தவரை வாழ்க்கையை நன்றாக அனுபவிக்க முயன்றார். நல்ல உணவு, நல்ல இசை, நல்ல நகைச்சுவை என்று அவர் சூழ்நிலையை மாற்றிக் கொண்டிருந்தார். அவர் நோயாளி என்ற சாரத்தை சற்றும் வெளிக்காட்டாமல், ஒரு ரசிகன் என்ற சாரத்தை அவர் மிகவும் சாதாரணமான சின்ன செயல்களால் மேற்கொண்டார். நான் விழுந்து, விழுந்து படித்தும் புரிபடாத இருத்தலியல் கோட்பாடை, இரண்டு வடைகளை ஆர்டர் செய்து புரியவைத்தார்!

இவ்வளவு அனுபவங்களுக்குப் பிறகும் மரணம் ஒரு முரணாகவே இருக்கிறது. அதைப் புரிந்துகொள்ள ஒரே வழிதான். அதை நேரில் தரிசிக்க வேண்டும். தரிசித்தவர் எவரும் நமக்கு விளக்க வாய்ப்பில்லை. அப்படி ஓர் அதிசயப் பேர்வழி என்னுடன் வேலை செய்த ஒருவர். அவருக்கு ஒருமுறை பெரிய மாரடைப்பு ஏற்பட்டு இதயம் நின்றுபோக மரணம் என்று நிச்சயிக்கப்பட்டது. அதன் பிறகு CPR பல நிமிடங்கள் செய்தபின் அதிசயமாக மீண்டும் உயிர் பெற்றார். அதன்பின் அவர் அந்த நாளையும் தன பிறந்தநாளாகக் கருதி, வருடம் இரண்டு முறை பிறந்தநாள் கொண்டாடுவார். நான் வாழும் ஒவ்வொரு நாளும் எனக்குக் கடவுள் போட்ட பிச்சை என்பார்.

பல தத்துவவாதிகள், “வாழும் ஒவ்வொரு நாளும் உன் கடைசி நாள் என்று கருதி வாழ். உன் வாழ்வின் பல பிரச்சினைகளும் பறந்து விடும்” என்கின்றனர். எனக்கு அந்த வாதத்தில் உடன்பாடு இல்லை. நாம் பல முடிவுகளை நீண்ட எதிர்காலத்தை அனுசரித்து எடுக்க வேண்டியிருக்கிறது. நாளை இறக்கப் போகிறவன் தன் குழந்தைகளின் எதிர்காலத்தைப் பற்றியோ, பூமியின் சுற்றுச்சூழல் பற்றியோ சற்றும் யோசிக்க வேண்டியதில்லை. அதற்கு மாறாக, நாம் அனைவரும் என்றோ இறந்திருக்க வேண்டியவர்கள், ஆனால் கடவுள் போட்ட ஆயுள் பிச்சையால் இன்னமும் உயிரோடு இருக்கிறோம் என்று எண்ணத் துவங்கினால், நம் நன்றி உணர்வு ஓங்கும். வாழ்வின் சின்னச் சின்ன சந்தோஷங்கள்கூட நம்மை வியக்க வைக்கும்.நம் முடிவுகள் நம் எதிர்காலத்துக்கும், இந்த பூமியின் எதிர்காலத்துக்கும் ஏற்றவாறு இருக்கும் என்று எனக்குத் தோன்றுகிறது. எப்பொழுதோ இறந்திருக்க வேண்டியவர்கள் என்பதால், மரணம் பற்றிய பயம் குறைந்து மனிதம் ஓங்கும் என்று கருதுகிறேன். முயன்று பாருங்களேன். இன்று இரண்டு வடையும், இளையராஜாவும் ஒரு புதுப்பரிமாணம் காட்டலாம்.

7 Replies to “இரண்டு வடையும் இளையராஜாவும்”

  1. எல்லோர் வாழ்விலும் சர்வ நிச்சயமான ஒரு நிகழ்வு மரணம். அதைப்பற்றிய குழப்பங்களும் கையாள்வதைப்பற்றிய சந்தேகங்களும் அனைவருக்கும் பொது. சுரேஷின் தந்தை அதை அழகாய், எளிதாய் சொல்லிச் சென்றிருக்கிறார்.
    அவருக்கு நன்றி. நடை ரசிக்கும்படி இருக்கிறது. தொடர்ந்து எழுதுங்கள்.

  2. ஆம், ஒவ்வொரு முறையும் செத்து செத்துப் பிழைப்பவனுக்கு வாழ்நாள் முழுவதும் கொண்டாட்டம்தான் சார். எனக்கு “ரோஜா” திரைப்படத்தில் வரும் காட்சிதான் நினைவுக்கு வருகின்றது. “ வெள்ளையாக் குழிப்பனியாரம்” செய்துக் கொண்டு வருவாயா என்று அரவிந்த்சாமியின் மேலதிகாரி கேட்பார் அவர் icu – ல் இருக்கும்போது.

Leave a Reply to SureshCancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.