கல்லும் மண்ணும்

ஒரு வாசிப்பு அனுபவம்

இது செங்காடன் என்பவரின் கதை. முக்கியமாகச் செங்காடன் என்கிற மனிதருக்கும், மண்ணுக்கும் ஆன உறவைப் பற்றிய கதை.

இக்கதை, இதன் ஆசிரியர் முனைவர் க. ரத்னம் சில நாட்கள் உழவரான செங்காடனுக்கே தெரியாமல் அவருடன் இருந்து அவர் வாழ்விலும், மனதிலும், உறக்கத்தில் அவர் காணும் கனவுகளிலும் நிகழ்வனவற்றை, நிகழ்ந்தவற்றைக் கூர்மையாகக் கவனித்து, துல்லியமாக நமக்குச் சொல்லியதைப்போல் இருக்கிறது.

நிகழ்ச்சிகளும், நினைவுகளும், கனவுகளும், உணர்வுகளும் செங்காடனுடையவை.(சில இடங்களில் வார்த்தைகளும், வர்ணனைகளும் கூட.) அவற்றை ஆசிரியர் மிகப் பண்பட்ட, இலக்கிய ரசனை மிக்க தனது மொழியில், நடையில் சொல்கிறார். இந்நூலின் முக்கிய அம்சம் இதன் அசல் தன்மை. மிகப் பொருத்தமான, கச்சிதமான கவிதைத் தன்மை யோடான விவரிப்புகளும், கதையின் போக்கில் விரியும் குறியீடுகளும் அந்த அசல் தன்மையை ஆழப்படுத்தி வாசகனை கதையில் நிகழ்வனவற்றை மிகச் சரியாக உணரச் செய்கின்றன. இக்கதையால், பெரு நகரங்கள் மற்றும் நகரங்களோடு மட்டுமே பரிச்சயம் உள்ள என் போன்ற நகரவாசிகளுக்கே கூட ஓர் உழவரோடு, அவர் குடிசையில், நிலத்தில், கிணற்றில், மலையில், அரசிலைகளுக்கு மத்தியில் வாழும் அனுபவத்தைத் தரமுடிகிறது.

பாசாங்கு, உயர்வு நவிற்சி, தன் குறிப்பேற்றல், உள் நோக்கம், பிரசாரம் ஏதுமற்ற நுட்பமான கவனிப்புகளால் ஆன கதை. மிகச் சாதாரணமாக மெலோ டிராமா, அல்லது உபதேசம், புரட்சி போன்ற வெற்றுத்தனங்களில் விலகி, நீர்த்துப் போகின்ற கதைக்களன் அமைந்து இருந்த போதிலும் அவற்றை அறவே தவிர்த்த காரணத்தால் இக்கதையில் உண்மைத் தன்மை பொலிந்து நிற்கிறது.

சுமார் 60 வருடங்களுக்கு முன் வெளியான இக்கதையில் செங்காடன் சுமார் 60, 65 வயது முதியவர். அவர் நினைவில் எழும் காலத்தையும் சேர்த்து ஒரு நூற்றாண்டுக்கும் அதிகமான இந்த மண்ணின், மனிதரின் வாழ்க்கையை, தன்மையை நாம் பார்க்கிறோம்.

பாரத தேசத்தின் ஆன்மிகக் கலாச்சார ஊற்றுகளில் முக்கியமான ஒன்றான தமிழ் மண்ணின் மிகச் சாதாரண, பொருளாதாரம், அந்தஸ்து, அதிகாரம் முதலியவற்றில் கடைக் கோடிப் படியில் கூட இராத சாமானிய மக்களிடம் இந்த மண்ணின் ஆன்மிக தரிசனம் தத்துவ வார்த்தைகளாக மட்டுமின்றி, உண்மையான, வாழ்வை வழி நடத்திச் செல்லும் உணர்வாகவும் இருந்த காலம் இக்கதை நிகழும் நேரம்.

செங்காடனின் பாட்டன் காலத்திலேதான் பூர்வீகச் சொத்தான நிலபுலமெல்லாம் போய்விட்டது. பிறகு அவர் தந்தை கூலிக்குப் போய், ஆலை அடித்து, பண்ணையாளாக வாழ்ந்தார். உழைத்து உழைத்துக் காசு சேர்த்து வண்டியும் எருதுகளும் வாங்கினார். முதலில் செங்காடனும் பண்ணையாளாகத்தான் இருந்தார். பிறகு அவர் வருடக் கணக்கில் வண்டி ஓட்டி, அவர் மனைவி கூலி வேலை செய்து “அலைந்த வாழ்க்கை போதும்; இருந்து வாழ வேண்டும் “ என்று ரூபாய் 300 க்கு இந்த நிலத்தை வாங்கினார்.

அவர் வாங்கும்போது அது தோட்டமாக இல்லை; நிலத்தில் கிணறு இல்லை; குடிசையோ பக்கத்தில் பசுமை போர்த்தி நின்ற மரங்களோ இல்லை. அந்த நிலம் பொட்டல் காடாக இருந்தது; காரை மரங்களே அங்கும் இங்கும் தழைத்திருந்தன.

மழையை நம்பி வாழ வேண்டிய நிலையில், ஒரு கிணற்றை வெட்ட ஆரம்பிக்கிறார், பிறரின் அவ நம்பிக்கைக்கு இடையில். ஒருநாளா? இரண்டு நாளா? பத்து வருஷம்! அப்பொழுதெல்லாம் பொழுது எழுவதும் விழுவதும் தெரியாது! கிணற்றுக்குள் குகையில் இருப்பதுபோல இருந்து.. நாள் அப்படியே ஓடிவிடும். ஒருவராகவே ஒரு கிணற்றை வெட்டுவதென்றால். சும்மாவா?

அந்த உழைப்பு வீண் போகவில்லை. இனி வானம் பார்த்து அவரோ அந்த நிலமோ வாழ வேண்டியதில்லை. எப்போதும் பெருகும் ஊற்றைக் கொண்ட நல்ல கிணறு அவருக்கு வாய்க்கிறது. இது ஓர் அதிர்ஷ்டந்தான். அது ஒரு ஜீவ ஊற்று. கோடைவந்தும் நீர் குறையவில்லை; நாளும் இறைத்தும் குறையவில்லை. கிணற்றை வெட்டிய நாளிலிருந்து குறையவில்லை.


எதையும், யாரையும் பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக, கணிப்புகளுக்கு அப்பாற்பட்டுச் செல்லும் கால வெள்ளம், அதில் பயணிக்கும் இவ்வுலகிலும், தனி மனித வாழ்க்கைகளிலும் எவ்வளவோ மாற்றங்களை நிகழ்த்தி விடுகின்றது.

செங்காடனுக்கும் வயதாகி விட்டது. இருபது வருடங்கள் பாக்குகடிக்கும் நேரத்தில் கடந்து விட்டது. அவர் பாட்டனாருக்கும், அப்பாவுக்கும், செங்காடனின் இள வயது நண்பர்களுக்கும் பிள்ளைகுட்டி இருந்தது. அவர்கள் கடைசிக் காலத்தில் பாடுபட்டுக் காப்பாற்றினார்கள். அவருக்கு? அவருக்கு இந்த நிலமிருக்கிறது. அவரைக் காப்பாற்றுகின்றது. இனியும் காப்பாற்றும். அவர் இதைத்தான் கண்ணும் கருத்துமாகப் பிள்ளையை வளர்ப்பதைப் போல வளர்த்து வருகிறார்! இந்த நிலம் இருக்கிறது என்பது அவருக்கு நிம்மதி. அதில் கோடையிலும் வற்றாத ஊற்றைக் கொண்ட அவரே வெட்டிய இந்தக் கிணறு இருக்கிறது என்பது பாதுகாப்பு. அவர் மொத்த வாழ்க்கையின் பொருள்.

எங்கோ யாரோ செய்யும் காரியங்கள் சம்பந்தமே இல்லாதவர்களின் வாழ்வில் பெரும் ஏற்றதாழ்வுகளை நிகழ்த்தி விடுகின்றன. யார் யாருடைய காலடிகளோ, அவர்கள் அறிந்தோ, அறியமலோ ஆயிரக் கணக்கானவர்களின் வாழ்க்கையை நசுக்கி விடுகின்றன.

இந்த நிலம் வாங்கிய காலத்தில் இருந்தே, அந்த ஆலைச் சங்கின் ஓசை கேட்கிறது. கோயம்புத்தூரில் அந்த மில்லைக் கட்டி முடித்ததும் அப்போதுதான். குன்றில் கல்லுடைப்பும் மிகச் சிறிய அளவில் அப்போதே ஆரம்பித்து விட்டது. மின்சாரமும் வந்து விட்டது. அவையெல்லாம் இயந்திரமயமாக்கலின் முதல் படிகளாக அந்தப் பகுதியில் தலையெடுத்தன.

செங்காடன் மின்சாரத்தைப் பயன் படுத்தவில்லை. நமக்காக இயந்திரம் வேலை செய்யும்போது நம் உடம்பு துருப்பிடித்துவிடும் என்று இருக்கிறார்.

இப்போதெல்லாம் இரவெல்லாம் கூட சங்கொலிகள் கேட்கின்றன. பீளமேட்டில் புறப்படும் விமானம் எழுப்பும் சப்தம் கர்மபறி வரை கேட்டு கல்லுடைப்பவர்களின் மதிய வேலைக்கான அழைப்புமணியாகிவிட்டது.

அவர் அங்கு கிணறு வெட்டத் தொடங்கிய காலத்தில் தூரத்தில் கல்லுடைத்துக் கொண்டிருந்தார்கள். அப்பொழுது இரண்டு மூன்று கற்குழிகளே இருந்தன. பத்துப் பன்னிரண்டு பேர் கல்லுடைத்துக் கொண்டிருப்பார்கள். கர்மகிரியிலிருந்து மலையடிவாரத்தில் ஆரம்பித்த கல்குழிகள் இப்பொழுது அவர் நிலத்தைச் சூழ்ந்து கொண்டன. அப்பொழுதெல்லாம் வண்டிகள் தாம் கல்சுமந்து போகும். இப்பொழுது லாரிகள். முன்பெல்லாம் எப்பொதாவது ஒரு வெடி வைப்பார்கள். இப்பொழுது நாளைக்கு பத்து பன்னிரண்டு என்று வெடி வைக்கின்றார்கள். கோவையின் சாலைகளுக்கும், கட்டிடங்களுக்கும் அவ்வளவு கல் கூட போதுமானதாக இல்லை.

கல்லுக்காக வைத்த வெடியில் ஒருநாள் அவரது கிணற்றின் ஊற்று கலகலத்து விடுகிறது. அத்தனை வருட உழைப்பும், அதனால் விளைந்த நியாயமான உவப்பும், எதிர்காலத்தின் காப்பும் காணாமல் போய் விடுகின்றன. மீண்டும் செங்காடன் வானம் பார்த்த பூமியின் சொந்தக்காராராக ஆகிவிடுகிறார்.


ஒரு மனிதரை உழவர், ஆசிரியை, அரசியல்வாதி, எழுத்தாளர், செவிலியர் என்றும், அவர் இனம், ஜாதி, மதம் சார்ந்தும், உறவு முறைப்படியும் இன்னும் பலவிதமாகவும் அடையாளப் படுத்துகிறோம். பெயரைப் போல் இது வெறும் அடையாளம்தான். உண்மையில் ஒருவரது வாழ்க்கை மிகப் பெரியது. ஆழமானது, பிரும்மாண்டமானது. பற்பல பரிமாணங்களும், தோற்றங்களும் கொண்டது. அரசனோ ஆண்டியோ எல்லோருக்கும் இப்படித்தான். அவரது உறவுகள் – பிற மனிதரோடு, விஷயங்களோடு, எண்ணங்களோடு, இன்னபிறவற்றோடு ஆனவை – அவரது வாழ்க்கையாகவும், அவராகவும் ஆகின்றன. இவற்றின் சாராம்சத்தை ஒரு நல்ல கதை தருகிறது.

அந்தக் காலத்தில் செங்காடனின் வீடு எத்தனை கலகலப்பாக இருக்கும். யார், யாரோ வருவார்கள், போவார்கள். அந்த உறவெல்லாம் எப்படியோ அறுந்துபோய்விட்டது. எல்லோரும் விலகிப் போய் விட்டனர்.பாட்டன் இல்லை, அப்பா இல்லை, அண்ணனா, தம்பியா? “நம் குலம் தழைக்க கன்னியம்மாளைப் பண்ணிக்கோ, அவ அதிர்ஷ்டக்காரி “ என்று சொன்ன அம்மாவும் இல்லை. இருபதுவயதில் திருமணம். இப்போது கன்னியம்மாளும் இல்லை. கன்னியம்மாள் என்ன, எந்தப் பத்திரத்திலும், பட்டியலிலும், சான்றிதழிலும் பதிவாகாத ’கன்னியம்மாள்’ என்ற அவள் பெயரும் கூட போய் விட்டது. அந்தப் பெயரை அவர் கூட மறந்துபோய் விட்டார். ’அவ’ ‘அவ’ என்ற நினைவுதான் அவர் மனதில் எழும். பெயருக்கு ஏற்ப அவள் கன்னியாகவே போய்விட்டாள். தாயாகவில்லை; ஒரு குழந்தையைப் பெற்றெடுக்கவில்லை. ஒருவாரத்துக்கு முன் ஒன்பது வருடங்களாக உடன் இருந்த நாய் கூட செத்துப் போய் விட்டது. இப்போது அவர் எல்லாமுமான நிலத்தின் ஜீவ ஊற்றும் கலகலத்து விட்டது.

கர்மபறி சின்னஞ்சிறு கிராமம். அதிலுள்ள முருகன் கோவில் குன்று கர்மகிரி. (அவ்வூர் வழியாக பொருட்களை ஏற்றிச் செல்லும் சந்தை ஞானபுரம்.) இந்தப் பெயர்களுக்கு ஏற்ற மாதிரி செங்காடனின் உழைப்பும். பண்ணையாளாக, வாடகை வண்டியோட்டியாக, மேட்டில் ராவாப் பகலாய் பாரமேற்றி, ஆடு வளர்த்து, பாறை நிலத்தில் உழுது, அங்கே ஒரு கிணறு வெட்டி, கத்திரியையும், வாழையையும், சோளம், கம்பு, ராகி என்றும் விளைவித்து….எத்தனை வேலை? என்ன உழைப்பு? எத்தனை காலமாக? இப்போதும் எதுவும் நிற்கவில்லை. அவர் உழைக்கத் தயார். கட்டுத் தரையைக் கூட்டிப் பெருக்கி, சாணி எடுத்து, சோறாக்கி….. அந்த உழைப்பும், உழைப்பால் விளைந்த உரமும், மனதின் தெளிவும், பற்றின்மையும்….இவையெல்லாம் தனித்தனியானவை அல்ல. ஒன்றில் ஒன்று மலர்ந்து, ஒன்றோடொன்று இணைந்த கர்ம யோகம். தவம்.

இந்த உழைப்பு அந்த உடலையும், மனதையும் தூயதாகவும், நுட்பமாகவும் வைத்திருக்கிறது. அவருக்கு கரையானின் மனம் சுணங்குவதும், காண்டிராக்டர் சுப்பையா பிள்ளை எப்படியாவது இவர் நிலத்தை வாங்கிவிட வேண்டும் என்பதற்காகச் செய்யும் தந்திரமும், வந்து செல்லும் தூரத்து உறவினர் நோக்கமும், ஊரார் பற்றிய கணிப்பும் தெரிகிறது. அதுவாவது ஒரு மனிதர் பற்றி இன்னொரு மனிதருக்கு தெரிவது.

எருதுகளின் பசி, களைப்பு, உற்சாகம் எல்லாம் அவருக்குத் தெரிகிறது. எருதுகள் தாழித் தண்ணீரை முழுதும் குடித்ததும், அவருக்கும் பசிக்கிறது. தண்ணீரில் மூழ்கி எழுந்த சுகம் உடம்பின் ஒவ்வோர் அணுவிலும் தேங்கி நிற்கையில் மழையில் பயிர்கள் மலர்வதன் காரணம் புரிகிறது. உழவுப்படைக் காலையே தொடர்ந்து வந்து பூச்சி, புழுக்களைப் பிடிக்கக் காத்திருக்கும் காக்கைகளின் பசியை உணர முடிகிறது..கிணற்று நீர் நோயாளிக் குழந்தை ஏக்கத்தோடு அதன் அன்னையைப் பார்ப்பது போல் அவரைப் பார்க்கிறது.. அவரோடு அரசிலைகள் தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றன. அவற்றின் மாறும் உணர்வுகள் அவரில் பிரதிபலிக்கிறது.. வானில் விளையாடிவிட்ட களைப்பில் மலைத் தொடர்களின் மடியிலே படிந்து உறங்கும் முகில்களோடு அவரும் தன் தொய்ந்த கயிற்றுக் கட்டிலில் உறங்கச் செல்கிறார்.
பஞ்ச பூதங்களால் ஆன இவ்வுலகின் ஒரு ஜீவராசி மனிதன். அவன் பிற ஜீவன்களையும், ஜடப்பொருட்களையும் புரிந்து கொள்வதில் என்ன ஆச்சர்யம் இருக்கக் கூடும்? ஆனால் தான் தனி என்ற அறியாமையில், எல்லாவற்றிலிருந்தும் பிரிந்து வாழும் மனிதக் கூட்டத்தில் நிலத்தோடும், நீரோடும், ஆகாயத்தோடும், காற்றோடும், தீயோடும் நெருங்கி வாழும் ஒருவரன்றி வேறு யார் இதை அவரினும் கூர்மையாக உணர முடியும்?

இந்த நூலில் பலவிஷயங்கள் குறிப்பாக உறக்கமும், கனவும், இயற்கையும், வாழ்க்கையிலிருந்து நேரடியாகப் பெற்ற தத்துவங்களும் வெகு விரிவாக, நுணுக்கமான கவனிப்புகளோடு எழுதப்பட்டிருக்கின்றன.

”தூக்கப் போர்வை மனக் குளிருக்கு இதமானது. நினைவு மனத்தின் குளிர்.”

”அவனளவில் உலகம் இல்லாது போய்விட்டது. எல்லாம் மனத் தூக்கத்திலேயே அடங்கி விடுகின்றது. வானமும் பூமியும் கணநேரத்திலே பொய்யாகிவிட்டன. உடலும் இல்லாது போய்விட்டது.” என்கிற ஆசிரியர் விழிப்பைப் பற்றி இப்படிக் கூறுகிறார்:

”விழிப்பு! அதுவும் விந்தையானதுதான். போனவற்றையெல்லாம் மீளக்கொண்டு வருவது விழிப்பு! பொய்யானவற்றை யெல்லாம் மெய்யாக்குவது விழிப்பு. உயிரைக் கொண்டு வருகின்றது. பின் உடலைக் கொண்டு வருகின்றது. கனவையும் நினைவையும் கொண்டு வருகின்றது.”

சில அற்புதமான கனவுகள் இக்கதையில் வருகின்றன. கனவுகள் பற்றியும் வருகிறது. :

”இருளில் திருடனைப் போல வருவது கனவு! அது பொல்லாதது, மனத்தை இரகசியமாகக் களவாடிக் கொள்கின்றது. தந்தை இல்லாத போது மகன் தந்தையின் சட்டையை ஆசையாக, ஆனால், இரகசியமாக எடுத்துப் போட்டுக்கொள்வதில்லையா? அதுபோலத் தான் இந்தக் கனவும் நம் இதயத்தைக் அபகரித்துக் கொள்கின்றது. உடலில் அடங்கிக் கிடக்கும் போது உள்ளத்தை அபகரித்துக் கொள்கின்றது.”

”ஒன்றுமில்லாதது உயிர் கொண்டு ஆடிப்பாடுவதுதானே கனவு?”

இயற்கை வர்ணனைகள் மற்றும் தத்துவ தரிசனங்கள் உள்ளீடற்ற, மனம் தோயாத வார்த்தை ஜாலங்களாக இல்லாமல், குணரூபமாகவும் (abstract) இல்லாமல் உண்மையின் மீது எழுபவையாக இருப்பதால் மகிழ்வையும், நிறைவையும் அளிக்கின்றன. நிதானமாக ருசித்து வாசிக்கும் ஒருவர் இதில் நிறைய முத்துக்களையும், ரத்னங்களையும் எடுக்கலாம்.


செங்காடன் இருக்கும் மனநிலை பற்றற்று இருக்கிறது. இளமையிலும் அவர் ஆர்ப்பாட்டக் காரராக இருந்ததில்லை. பற்றற்ற நிலை என்பது மிகவும் வறட்சியாக, அலுப்பைத் தருவதாக இருக்கும் என்கிற எண்ணம் நிலவுகிறது. அது உண்மையில் அமைதியான, எதனாலும் பாதிக்கப்படாத நிலை. விழும் கல்லினால் அந்தத் தெளிந்த நீர் நிலையில் எழும் சுழல்கள் நெடு நேரம் நீடித்து நிறபதில்லை. இடி விழுந்தாலும் குலையாத நிலை.

”செத்துப் போவதும் விளக்கு அணைவதைப் போலத்தான். காற்று வீசினால் ஏற்றியவுடனேயும் விளக்கு அணைந்து விடுகின்றது. எண்ணெய் தீர்ந்ததும் அணைந்து போகின்றது. சிலர் விளக்கை ஊதி அணைத்து விடுகின்றனர். எல்லாமே எப்படியோ அணைந்து போகும் விளக்குகள்தாம், என்றும் நின்று எரியும் விளக்கு ஏது?’” என்றுதான் இருக்கிறார்.

சுப்பையா பிள்ளை, கந்தபோயன், கரையான் ஆகிய எல்லோரும் அவருக்கு நிழற்சித்திரங்களாகவே தோன்றினர். அவர் அவர்களை வெறுக்கவும் இல்லை, விரும்பவும் இல்லை.

தன் மனைவியையே கூட நினைக்க வேண்டும் அல்லது மறக்க வேண்டும் என என்றும் முயன்றதில்லை.

அவள் எங்கே போனாள். அவர் நினைவிலும் கனவிலும் இருக்கிறாள். ஆடுகிறாள், பாடுகிறாள். அவர் ஏய் என்று அதட்டல் போட்டதும் அழுகிறாள். குழந்தை இல்லையே என்று கதறுகிறாள். கிணற்றுக்குள் குதிக்கிறாள். எதுதான் ஒரேயடியாகப் போய் விடுகிறது?

எல்லாம் சக்கரம் சுழல்வதைப் போலத் திரும்பத்திரும்ப ஒன்று போலவே வந்து போகின்றன. சுற்றிச் சுழன்று, மீண்டும் போனதே வருகின்றது. போன மேகங்களே திரும்பத் திரும்ப வருகின்றன. குப்பை மேட்டில் முளைத்த புல்லைப் பிடுங்கியவுடன், மீண்டும் அதே புல் அங்கே முளைக்கின்றது. செங்காடனும் கூட இந்த மண்ணிலேயே விழுவார். மீண்டும் இந்த மண்ணிலேயே பிறப்பார்..

எல்லாம் போய் விட்டது என்று இந்தக் கதை முடிவதில்லை.

செங்காடனுக்கு, அந்த இலைகளின் ஆரவாரம், அவள் பாட்டாகவே கேட்டது. ‘நீ இரு! அங்கேயே இரு! அங்கேயே இரு! நீர் போய்விட்டது. நிலம் இருக்கின்றது. புஞ்சையைத் தோட்டமாக்கினாய். அது மீண்டும் புஞ்சையாகிவிட்டது. அதற்காக நீ ஏன் அழ வேண்டும்? மேலே வானம் இருக்கிறது. கீழே உன் காலடியில் கரையான் இருக்கிறான்” அவள் ஓயாது பாடுவதாகவே உணர்ந்தார் அவர். அவள் சொல்வது பலித்தும் விட்டது.

கோடை மழை. செங்காடன் மெல்ல நனைந்தபடி அரச மரத்தடிக்கு வந்து சேர்ந்தான். குடிசைக்குள் சென்று மழைக்கு ஒதுங்கிக்கொள்ள வேண்டும் என விரைந்து வந்த அவன், மழையில் நனைந்தபடி தன்னை மறந்து கண்களில் நீர் துளிர்க்க நின்றான். விண்ணும் மண்ணும் நீண்டநாள் பிரிவிற்குப்பின் ஒன்றை ஒன்று கண்டு கண்களில் நீர்மல்க அணைத்துக்கொள்வது போலவே அப்போது அவன் உணர்ந்தான்.

– என்று முடியும் கதையில் அவர் கண்களில் துளிர்க்கும் நீரை ஆசிரியர் விவரிப்பது இல்லை. எவரால் அதை விவரிக்க இயலும்?


  • ஜூன் 2020 வெளியீடு
  • “கல்லும் மண்ணும்
  • பேராசிரியர் க.ரத்னம்
  • பக்கங்கள்    142                         
  • விலை ரூ 140 /

புத்தகம் வாங்க தொடர்புக்கு :

One Reply to “கல்லும் மண்ணும்”

  1. Book reviewers are like doctors for the book reader. I liked this va srinivasan’s review. The small print on my computer screen made me think of inserts in drug/tablet bottles. Lots of small print describing contents, effects, fine points of benefits, and features. However, there is nothing about dosage. Reading this review, I felt that the book may drive a person into a funk when overdosed in one sitting, because it is written well enough to have the reader feel what the protagonist does.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.