பேய்

அந்த இருட்டு  நேரத்தில் வானை நோக்கிப் பார்த்திருந்த சக்திவாய்ந்த தொலை நோக்கியின் லென்சுகளை சுமந்த் ஒரு திருகாணியின் மூலம் திருகியபடி அதன் காட்சிகளை சோதித்துக்கொண்டிருந்தபோது தான் அது நடந்தது.  

சடசடவென மழை மேகங்கள் கருத்து மின்னல் வெட்ட மழை ச்சோவென்று பொழியத்துவங்கியது. சுமந்த் தன்னிடமிருந்த பெரிய குடையை அமர்ந்திருந்த காரின் மூன்ரூஃப் வழியாக செங்குத்தாக கூரை போல் விரித்து நிறுத்தி வைத்தான்.  காரில் இருந்த மூன்ரூஃப் வழியாக கரு வானத்தை ஊடுறுவிப்பார்த்துக்கொண்டிருந்தது அந்தத் தொலை நோக்கி. மழைத்துளிகள் தொலை நோக்கியின் லென்சுகளை பாதிக்காமல் குடையின் கூரையில் தடதடவென விழுந்து சரிந்தது. பளீர் பளீரென மின்னல் வெட்டியது. அந்த மின்னல்கள் பார்க்க அச்சமூட்டுவதாய் இருந்தன. தொலை நொக்கியின் மற்றொரு பகுதி தான் பார்த்துக்கொண்டிருந்த அத்தனையையும் சுமந்தின் மடிக்கணிணியில் தொடர்ந்து பதிந்து கொண்டிருந்தது. 

மின்னல்கள்! 

வானத்தின் கருநீலச்சருமத்தைக் கிழித்துக்கொண்டு பிரகாசமான ஒளிக்கீற்றுகள் பாய்ந்து பாய்ந்து இந்தியப்பெருங்கடலில் விழுந்தது. எழுந்த சுவடே தெரியாமல் விழுந்த இடத்திலேயே மீண்டும் மீண்டும் விழுந்தது. ஒரு கட்டத்துக்கு மேல் மழை வலுக்க, ஆராய்ச்சியை பிரிதொரு சமயத்திற்கு ஒத்துப்போட்டவனாய், குடைக்கூரையை மடித்துவிட்டு ஒரு பொத்தானை அழுத்த, காரின் மூன்ரூஃப் மூடிக்கொண்டது. காரின் விளக்குகளை பளீரென ஒளிர வைத்து அங்கிருந்து அகன்றான் தன்னார்வ வான் ஆராய்ச்சியாளன் சுமந்த். போகும் வழியில்,  மடிக்கணிணியில் பதிந்தவைகளைத் வான் ஆராய்ச்சியாளர்களுக்கான தன்னார்வ வாட்ஸாப் குழுமத்தில் பகிர்ந்தபடியே காரை செலுத்தினான். 

~oOo~

வேலூரைத்தாண்டி திருப்பத்தூர் செல்லும் நெடுஞ்சாலையில் ஒரு கிராமத்தை நோக்கிப் பிரியும் இடத்தில் ஒரு ஹோண்டா கார் நின்றிருந்தால் நீங்கள் ஏதும் நினைத்திருக்கமாட்டீர்கள். ஆனால், அதுவே சற்று அதிர்ந்தால்? 

நீங்கள் அப்பாவியாக இருந்தால், நில நடுக்கமோ என்று எண்ணி லேசாக குழம்பியிருப்பீர்கள். விவகாரமான, அதே நேரம் பண்பானவராக இருந்திருப்பின் மெல்லிய புன்னகையை தவழவிட்டுவிட்டு, வேறு யாரும் அந்தக் காரைப் பார்க்கிறார்களா என்று கவலையுடனும், அக்கறையுடனும் கவனித்திருப்பீர்கள். 

காதலுக்குத்தான் கண்ணில்லை என்றில்லை. அதிர்ஷ்டத்துக்கும் கண்ணில்லாமல் போகும் சூழல்கள் இந்தப் பிரபஞ்சத்தில் சாத்தியமே.   

அன்று ஊரில் ஒரு திருவிழா. ஆதலால், அந்த மாலைப்பொழுதில், அங்கே யாரும் இல்லை. கிராமம் முழுவதும் திருவிழாவில் ஆஜர். அது, காரிலிருந்த ரம்யாவுக்கும், ஹரிக்கும் வசதியாகப்போய்விட்டது. 

சருமங்கள் உரசிக் கூட்டும் உஷ்ணத்தை வென்றிடக்கூடிய குளிர்ச்சியைத் தரும் ஏசி எந்தக் காரிலும் இதுகாறும் இல்லை. இனி வரப்போவதுமில்லை. 

சற்றைக்கெல்லாம் காரின் அதிர்வு  நின்று, மீண்டும் அரைவட்டமடித்து, புழுதி பரக்க சாலையேறியது. திருப்பத்தூரைத் தாண்டி நெடுஞ்சாலையில் விரைந்தது.

“எத்தனை தடவை சொல்றது? இப்படி பண்ணாதேன்னு. இப்ப எனக்கு பசிக்குது. குளிர்ச்சியா ஏதாவது குடிக்கணும் போலிருக்கு” என்றாள் ரம்யா.

“அதுக்கென்ன? பெட்ரோல் போட நிறுத்தறேன். பக்கத்து கடைகள்ல கூல் ட்ரிங்க்ஸ் வாங்கிக்கலாம்” என்றான் ஹரி.

“இதுக்குத்தான் இந்த கம்ப்யூட்டர் மண்ணாங்கட்டில இருக்குறவன், உன்ன மாதிரி கடல் ஆராய்ச்சியில இருக்கிறவனோடல்லாம் தனியா எங்கயும் போயிரக்கூடாதுன்னு சொல்றது.”

“ஏன்?”

“எப்பயும் கம்ப்யூட்டர், கல்லு மண்ணுன்னு பாத்துட்டிருந்துட்டு அழகா, அம்சமா பொண்ணு கிடைச்சிட்டா நேரம் காலம் தெரியாம மேல பாஞ்சிடறீங்க. வீட்டுக்கு போனதும் இதெல்லாம் செஞ்சிக்கிட்டாத்தான் என்னவாம்?”

சிடுக்கென திரும்பி ரம்யாவை உருவித அசூயையுடன் பார்த்துவிட்டு, 

“அதுல என்ன த்ரில் இருக்கு?”  என்றான் குழப்பமாக. 

“போடா த்ரில்லுக்கு பொறந்தவனே” என்றாள் ரம்யா. 

ஹரி சிரித்தான்.

“நாம எல்லாருமே அதுக்கு பொறந்தவங்க தான்” என்றுவிட்டு வெடித்துச் சிரித்தான் ஹரி.

ஹோண்டா அடுத்து வந்த பெட்ரோல் பங்கிற்குள் நுழைய, அருகாமையிலிருந்த சூப்பர் மார்கெட் ஒன்றினுள் நுழைந்தாள் ரம்யா.

ஹரி காரின் பெட்ரோல் டாங்க்கை நிரப்பிக்கொண்டு திரும்புவதற்கும், ரம்யா திரும்ப வருவதற்கும் சரியாக இருந்தது. கோக் பொத்தல்களுடன், பால் பாக்கேட்டுகளுடனும், பதப்படுத்தப்பட்ட மீன் துண்டுகளை காரின் பின் சீட்டில் அலட்சியமாய் எறிந்துவிட்டு காரில் ஏறிக்கொண்டாள் ரம்யா. கார் பெட்ரோல் பங்கை விட்டு வெளியேறி நெடுஞ்சாலையில் விரைந்தது. மிக்ஸர் சாப்பிட்டபடியே காரை செலுத்தினான் ஹரி.

சரியாக இருபத்தியைந்து நிமிடத்தில் ஏலகிரி மலையின் அடிவாரத்தில் இருமருங்கிலும் தோட்டம் வைத்த வீட்டின் முன் வந்து  நின்றது.

“வாவ்! உங்க தாத்தா பாட்டி ரொம்ப ரசனையானவங்க போல” என்று கூவினான் ஹரி.

“ஆமாம்டா. சின்ன வயசுல  நான் இங்க விளையாடியிருக்கேன். போரடிச்சா கார் எடுத்துக்கிட்டு மலை உச்சிக்கு போவோம். அங்க ஒரு முருகன் கோயில் இருக்கு. அங்கிருந்து மலையை பாத்தா சூப்பரா இருக்கும்.நாளைக்கு காத்தால  மலை மேல ட்ரக்கிங் போறப்போ காட்டுறேன்” என்று ரம்யா சொல்லிக்கொண்டிருந்தபோது ஜன்னலினூடே ஒரு கருப்பு உருவம் தோன்றியது. ஹரி சற்றே பீதியடைந்தவனாய் நெருங்கிச்சென்று சற்று உற்றுப் பார்த்தபோது அது ஒரு மரம் தான் என்று உணர்ந்து சமாதானமானான். ஆனால், அந்த சமாதானம் தற்காலிகமானதுதான் என்பதை அவன் அப்போது உணரவில்லை.  

“இங்க பேய் பிசாசுன்னு ஏதாச்சும்….” என்று ரம்யாவிடம் இழுத்தான் ஹரி,

“ச்சீ.. அதெல்லாம் ஒண்ணும் இல்லை. நீயே கெளப்பி விட்டுடாதடா.. நல்ல வீடு.. அப்புறம் நமக்கே தேவைன்னாக்கூட விக்க முடியாம போயிடும்” என்றாள் ரம்யா. அதுவும் சரிதான் என்று தோன்றியது ஹரிக்கு. 

ரம்யா ஹரிக்கு அந்த வீட்டின் ஒவ்வொரு பகுதியையும் தன் பால்ய கால நினைவுகளோடு தொடர்புபடுத்திச் சுற்றிக்காட்டினாள். அந்த வீட்டின் ஒவ்வொரு மூலைக்கும் ஒரு கதை வைத்திருந்தாள். ஆனால், ஹரிக்கு என்னவோ கொல்லையில், தோட்டத்தில், மொட்டை மாடியில், பால்கனியில் என்று எங்கெல்லாம் மரம் செடி கொடிகள் தென்பட்டனவோ அங்கெல்லாம் உருவங்கள் தெரிவது போலவே இருந்தது. அவையெல்லாம் அருகே சென்றோ, அல்லது பிரிதொரு கோணத்திலோ பார்க்கின் வெறும் மரமாகவோ, செடியாகவோ, கொடியாகவோ காட்சி தந்து அவனை அலைகழிக்கவும் செய்தது.  

எல்லாம் முடிந்து அவர்கள் நிதானத்துக்கு வருகையில் பின்மாலை ஆகிவிட்டிருந்தது. 

இரவு உணவுக்கு வாங்கி வந்த மீனை சமைத்தாள் ரம்யா. ரம்யா சமைத்துக்கொண்டிருந்தபோது கூட சமையற்கட்டின் ஜன்னல் வழியே யாரோ தங்களைப் பார்ப்பது போல் தோன்றியது ஹரிக்கு. ஹரி ரம்யாவைச் சலனப்படுத்தாமல், ஜன்னலருகே சென்று பார்த்தபோது அங்கே யாருமிருக்கவில்லை. ஒரு கொடி காற்றிலாடிக்கொண்டிருந்தது. 

எதுவோ வயிற்றைப் பிரட்டுவது போலிருக்க தோட்டத்திற்கு ஓடிச்சென்று இரண்டு முறை வாந்தி எடுத்தான் ஹரி. அப்போது கூட தோட்டத்தின் ஓரத்திலிருந்து யாரோ பார்ப்பது போல் தோன்றியது. இறந்த உடலில் வாசம் லேசாக வீசுவது போல் தோன்றுவது நிஜமான உணர்வா அல்லது மனக்கிலேசமா என்பது நிச்சயமாக சொல்ல முடியாத வகைக்கு இருந்தது. கையிலிருந்த அலைபேசியில் இருந்த டார்ச்சை அடித்துப் பார்த்தபோது வெறும் மரம் தானிருந்தது. 

“ரொம்ப கார் ஓட்டிட்டேன் போல. சூடாயிடிச்சு உடம்பு” என்றான் ஹரி வயிற்றைப் பிடித்தபடி ரம்யாவிடம்.

“சூடு அதாலயா இருக்காது. நீ ஏத்திக்கிட்டியே ரோட்டோரமா ஏத்திக்கிட்டியே? அதால கூட இருக்கலாம்” என்றுவிட்டு கண்ணடித்தாள் ரம்யா.

“சரிடீ.. நான் ஒரு கிளாஸ் பால் மட்டும் எடுத்துக்குறேன்” என்றவன் ஒரு கோப்பைப் பாலை சூடாக்கி அருந்திவிட்டு படுக்கையில் சரிந்தான். வறுத்த மீனை, வேக வைத்த முட்டையுடன் உண்டுவிட்டு, பாத்திரங்களைக் கழுவி வைத்துவிட்டு தானும் உறங்கிப்போனாள் ரம்யா.

மறு நாள் இருவரும் காலையிலேயே டிரக்கிங் கிளம்பினார்கள். ஹரி பாலும், முட்டை ஆம்லெட்டும் எடுத்துக்கொள்ள பசியில்லை என்றுவிட்டு வெறும் தண்ணீர் பொத்தல்களுடன் கிளம்பினாள் ரம்யா.   

ஒரு ஒற்றையடிப்பாதை வழியாக இருவரும் அந்த மலையடிவாரத்தின் அடர்ந்த காட்டுக்குள் நடந்தார்கள். ஆங்காங்கே காகித அட்டைகள் கிடந்தன. வெள்ளைக் காகித அட்டைகள்.  காட்டுப்பகுதிக்கும், அதன் காட்டுத்தனத்துக்கும் அந்த அட்டைகள் பொருந்தாமல் இருந்தன. ஹரி புருவச்சுருக்கங்களுடன் ரம்யா சென்ற பாதையிலேயே காட்டின் எழிலை ரசித்தபடி நடந்தான். அணில்கள் துள்ளித்துள்ளி ஓடின. ஆங்காங்கே மான்கள் எட்டிப்பார்த்து மறைந்து ஒளிந்தன. காட்டெருமைகள் சுதந்திரமாகத் திரிந்தன. குட்டிக்குட்டிப் பன்றிகள் புதர்களிலும், மெல்லிய நீரோடைகளிலும் எதையெதையோ தேடிக்கொண்டிருந்தன. மிகத்தொலைவில் ஒரு சரிவில், மலை மீது ஏறும் வாகனங்கள் செல்லக்கூடிய பாதை கண்ணில் பட்டது. திடீரென ஒரு மூலையிலிருந்து ஒரு உருவம் தெரிவது போலிருந்தது. ஹரி, உற்றுப்பார்க்க அந்த உருவம் ஒரு காட்சிப்பிழை போல கண்களை ஏமாற்றி ஏதுமில்லாமல் போனது. தங்களை யாரோ பின் தொடர்ந்து வருவது போல உணர்ந்து அவ்வப்போது திரும்பிப் பார்த்துக்கொண்டான் ஹரி. இதை ஏதும் கவனியாதவளாய் உற்சாகமாய் முன்னகர்ந்தாள் ரம்யா. 

சுமார் இரண்டு மணி நேரம் மலை ஏறியதில் ஹரி இரண்டு பொத்தல் தண்ணீரை காலி செய்துவிட்டிருந்தான். ஆனால், ரம்யா காலையிலும் எதுவும் சாப்பிடவில்லை. ஏற்றமாகச் செல்லும் மலைப்பாதையினூடான நடையின் போதும் ஒரு துளி நீர் கூட அருந்தாமல் இருந்தது வினோதமாக இருந்தது. ஓரிடத்தில் ஒரு நீரோடையை ஒட்டி ஒரு சமதள இடம் வர,

“இங்க டென்ட் போட்டுக்கலாம்டா” என்றாள் ரம்யா. 

வெளியில் காட்டிக்கொள்ளவில்லையே தவிர ஹரிக்கு அந்த  நேரம் ஓய்வெடுக்கவே தோன்றியது.  ஆனால், காலையிலிருந்து பச்சைத்தண்ணீர் கூட பல்லில் படாமல் ரமயா தொடர்ந்து மிகக் கடுமையான மலையேற்றத்தை மேற்கொண்டபோது சற்றே அதிர்ந்திருந்தான் ஹரி. அவள் பலம் வாய்ந்தவளாக இருக்கிறாளா, அல்லது தான் பலகீனமாகிவிட்டோமா என்ற குழப்பம் வந்தது. அதைச்சொன்னால் இளப்பமாக எடுத்துக்கொள்வாளோ என்று தோன்றி ஏதும் சொல்லாமல் விழுங்கினான் ஹரி. 

ஆதலால் அவள் கூடாரம் போட்டுக்கொள்ள அழைத்ததுமே சரியென்றுவிட்டான்.

முதுகுப்பையிலிருந்த கூடாரத்தைப் பிரித்து, காட்டிலேயே கிடைத்த நான்கைந்து மரக்கட்டைகளை மண்ணில் ஊன்றி, அவைகளில் ஆதாரத்தில் கூடாரம் அமைத்து கால் நீட்டி படுத்துக்கொண்டான் ஹரி. அப்போது, மணி காலை பதினொன்று ஆகியிருந்தது. மரங்களினூடே இலைகளினூடே இளம் வெய்யில் சருமத்தை சூடாக்க, லேசாக கண்ணயர்ந்தான் ஹரி.

ஹரி கண் விழித்தபோது அங்கே ரம்யா இருக்கவில்லை. ஹரி சுற்றுமுற்றும் பார்த்துவிட்டு ரம்யாவின் பெயர் சொல்லி உரக்க அழைத்துப் பார்க்க அப்போதும் பதிலில்லை. ரம்யா என்றொருத்தி அதுகாறும் தன்னுடன் வந்தாள் என்பதற்கான குறைத்தபட்ச இருப்பும் கூட இல்லாமலிருப்பது வியர்க்க வைத்தது. ஆங்குமிங்கும் ஓடித் தேடிவிட்டு லேசாக நம்பிக்கை இழந்தவனாய், கூடாரத்தை வாரிச்சுருட்டி முதுகுப்பையில் அடைத்துக்கொண்டிருந்தபோது ரம்யாவின் முதுகுப்பை ஒரு மரத்தின் கிளையொன்றில் தொங்கிக்கொண்டிருந்தது. அந்த மரத்தை ஒட்டி பள்ளத்தாக்கு தென்பட்டது. ரம்யாவை எதுவோ மரத்தின் உச்சிக்கு இழுத்திருக்க வேண்டும் அல்லது ரம்யா மரத்திலேறி கவனக்குறைவால் பள்ளத்தாக்கில் விழுந்திருக்க வேண்டும் என்று ஊகிக்க அது போதுமானதாக இருந்தது. ஹரி அந்த மரக்கிளையில் தொங்கிக்கொண்டிருந்த ரம்யாவின் முதுகுப்பையைப் பார்த்தான். அந்தக் காடு, அந்தக் கிளைகள், அந்தப் புதர்கள், அவற்றினூடே அலையாடும் சூரிய வெளிச்சங்கள், நிழல்கள் என எல்லாமும் சேர்ந்து தன்னையே பார்ப்பது போல் ஒரு உணர்வு அவனுள் எஞ்சியது. உற்றுப் பார்த்தபோது அவைகள் வெறும் காடாகவும், கிளைகளாவும், புதர்களாகவும், அலையாடும் வெறும் வெளிச்சங்களாகவும், நிழல்களாகவும் தோன்றி அவனை அலைகழித்தன. 

ஹரி பள்ளத்தாக்கில் எட்டிப்பார்க்க, அங்கே வெறும் புதராக இருந்தது. ஹரி மணி பார்த்தான். மாலை ஐந்தைக் காட்டியது. இத்தனை  நேரம் எப்படி உறங்கினோம் என்று புரியாமல் வாரிச்சுருட்டிக்கொண்டு வந்த வழியே திரும்பி ஓட வழியில் அந்த வெள்ளைக் காகித அட்டைகளைப் பார்த்துவிட்டு சந்தேகமாய் அதிலொன்றை கையிலெடுத்தான். திருப்பிப்பார்த்தான். 

“காணவில்லை. ஜீவன். வயது 26. உயரம் ஐந்தரை அடி.’ இத்தியாதி இத்தியாதி இருந்தது.

இன்னுமொறு அட்டையை எடுத்துத் திருப்பிப் பார்த்தான்.

“காணவில்லை. சிதம்பரம். வயது 25. உயரம் ஆறடி….” இத்தியாதி இத்தியாதி என்று இதிலும் இருந்தது. 

அப்போதுதான் காட்டில் தெரிந்த உருவங்கள் நினைவுக்கு வந்தன. 

ஹரி தன்னைச்சுற்றிப் படர்ந்து கிடந்த காட்டை பயத்துடன் கூர்ந்து கவனித்தான். பேய் பிசாசுகள் மீது அவனுக்கு எப்போதுமே நம்பிக்கை இருந்ததில்லை. ஆனாலும், அந்தக் கணத்தை, அது தரும் உணர்வை, அவற்றின் கூட்டு பலனாக அவன் மனம் அடையும் மனக்கிலேசத்தை எவ்விதம் பகுப்பது என்று தெரியாமல் தடுமாறினான். 

அவன் பார்க்கப் பார்க்க, எதுவோ அவனைப் பார்ப்பது போலிருந்தது. சற்றைக்கெல்லாம் காடே அவனை உற்றுப்பார்ப்பது போலிருந்தது. அது வெறும் பிரஞை தானா அல்லது உண்மையிலேயே வேறெதுவுமா என்பது ஊர்ஜிதமாகத்தெரியாமல் குழப்பியது. வாழ்க்கையில் முதல் முறையாக பேய் பிசாசுகள் மீது பயம் வந்தது. அங்கேயே தொடர்ந்து நின்றிருந்தால், ரம்யா காணாமல் போனது போல் தனக்கும்  நேர்ந்துவிடுமோ என்கிற பயம் ஆட்கொள்ள, அந்தக் காகித அட்டைகளை வீசிவிட்டு மீண்டும் வந்த வழியே ஓடினான். காட்டை விட்டு வெளியே வந்து காரை அண்டினான். காரின் டயர்கள் காற்றை இழந்து சூம்பிக்கிடந்தன. அக்கம்பக்கத்தில் விசாரித்து பங்க்சர் ஒட்டும் கடைகளை அண்டினான். ஆனால் அவர்களுக்குத் தர கையில் பணமிருக்கவில்லை.

உடனே அருகாமையிலிருந்த ஏ.டி.எம்மிற்கு ஓடினான். ரம்யாவைக் காணவில்லை. பின்னாளில் அவனுக்கு மனைவியாகப்போகும் ரம்யாவைக் காணவில்லை. பணம் அதிகம் கையில் இருப்பது உதவும் என்று தோன்றி ஐம்பதாயிரம் எடுக்க முயல, வங்கிக்கணக்கில் பணமில்லை என்று அந்த இயந்திரம் அறிவித்தது.

ஹரி உடனே தன் நண்பன் வினீத்தை அழைத்தான்.

“ஹாய் ஹரி”

“வினீத், பேச நேரமில்லை. எனக்கு கொஞ்சம் பணம் வேணும். என் அக்கவுண்ட்ல அவ்ளோ பணம் இல்லை. போட்டுவிடறியா?”

“டேய்.. இப்பத்தான்டா லென்சு வாங்க செலவு பண்ணினேன்.. கொஞ்சம் முன்ன சொல்லிருக்கக்கூடாதா?”

“லென்ஸா? எதுக்கு?”

“வாட்ஸாப் குரூப்ல மெஸேஜ் வந்திருக்கு. ஒரு வாரம் முன்னாடி  நம்மாளு ஒருத்தன் டெலஸ்கோப்புல பாத்தப்போ தொடர்ச்சியா இந்தியப்பெருங்கடல்ல மின்னல் விழுந்துருக்கு. இது என்ன புதுசான்னு விட்டுட்டான். வீட்டுக்கு போனப்புறம் அதுவரை ரிக்கார்டு பண்ணினதை போட்டுப் பார்த்திருக்கான். மத்த மின்னல்களுக்கு மத்தியில ஒரே ஒரு மின்னல் சரியா 45டிகிரி சாய்கோணத்துல இந்தியப்பெருங்கடல்ல விழுந்திருக்கு. கொஞ்சம் கூட பிசிறே இல்லாம, ஒரே நேர் கோடா ஒரு மின்னல்!.  அதைப்பத்தி வாட்ஸாப் குருப்புல அவன் ஷேர் பண்னிருக்கான். அந்த திசையில பாத்தா, நாமளும் அப்படி ஒண்ணை பார்க்கலாம்ல” என்றான் வினீத் குரலில் இன்னமும் ஆர்வம் விலகாதவனாய்.

~oOo~

ஹரி தான் வேலை செய்யும் கடல் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு சொந்தமான கப்பலுக்கு உடனடியாக விரைந்தான். இந்தியப்பெருங்கடலில் நங்கூரமிட்டு நிறுத்திவைக்கப்பட்டிருந்தது அது. 

ஆழ்கடலில் ஆய்வு செய்யும் ஒரு ஆள் மட்டுமே அமரக்கூடிய ஒரு சிறிய ஆராய்ச்சிக்களனுக்குள் அமர்ந்துகொண்டு அதை கடலில் இறக்கினான். ஒரு நீளமாக வலுவான கேபிளால் பிணைக்கப்பட்டிருந்த அந்தக் களனை எப்போது வேண்டுமானாலும் அந்த கேபிளை இழுப்பதன் மூலம் மேலே இழுத்துவிடலாம். அந்த களனில் இரண்டு இயந்திரக்கரங்களும் இருந்தது. கடலினடியில் ஆராய்ச்சி செய்கையில் எதையேனும் எடுக்க வேண்டுமெனில் அந்தக் கரங்களைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

ஹரி அந்தக் களனில் சக்திவாய்ந்த விளக்குகளை ஒளிரவிட்டு ஆழ் கடலுக்குள் முங்கினான். ஆழ்கடலில் அவன் பார்த்தது அவனை ஒரே நேரத்தில் பிரம்மிக்கவும், அதிர்ச்சியடையவும் வைத்தது. தான் புரிந்துகொண்டதை ஊர்ஜிதம் செய்ய, இயந்திரக்கரங்களால் மீன் ஒன்றைக் கவ்வி அதன் உடலைக் கிழித்து சதைகளை வெளியே எடுத்து அந்தச் சதையினை நுண்ணோக்கி மூலம் ஆராய்ந்தான். அதிர்ந்தான்.

இதற்கிடையில் அவன் அமர்ந்திருந்த களன் தொடர்ந்து கீழே இழுக்கப்படுவதைப் போல் உணர்ந்தான். ஒரு கட்டத்தில் தன் களனை மேலே உள்ள கப்பல் இழுத்துக்கொள்ள சமிஞை தந்த பிறகும் களன் மேலே செல்லாமல் கீழ் நோக்கி இழுக்கப்படுவதை அவனால் உணர முடிந்தது. நிலைமையின் தீவிரம் புரிந்து ஹரி களனில் இருந்த கம்ப்யூட்டரில் அவுட்லுக்கைத் திறந்து ஒரு கடிதமொன்றை எழுதலானான்.

‘நான் ஹரி.

ஆழ்கடல் ஆராய்ச்சியாளர்களுள் ஒருவன்.

கடலின் கீழ் மட்டத்தில் சுமார் இரண்டாயிரம் அடியில் இருந்துகொண்டு இதை எழுதுகிறேன். கடலில் சுமார் பத்தாயிரம் அடிகளுக்கு கீழே காணப்படும் மீன் வகையில் ஒன்றை இன்று நான் இரண்டாயிரம் அடி ஆழத்திலேயே காண  நேர்ந்தது. அதன் சதையினை நான் ஆராய்ந்தேன். அதில் விலங்குகளின் செல்கள் தான் இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்த மீனின் சதைச் செல்களில் தாவரங்களில் காணப்படும் க்ளோரோப்ளாஸ்ட் முதலானவைகளை நான் பார்த்தேன்.  சில வாரங்களுக்கு முன் ஒரு மழை இரவில் தொடர்ந்து மின்னல்கள் வெட்டியிருக்கிறது. தொடர்ந்து மின்னல்கள் வெட்டியதால் இந்த ஒரு பிரத்தியேக மின்னலை யாரும் கவனித்திருக்க வாய்ப்பில்லை என்றே தோன்றுகிற்து. அதில் ஒரு மின்னல் சுமார் 45 டிகிரி சாய்கோணத்தில் ஒரே நேர் கோடாக வெட்டியிருக்கிறது. இயற்கையாக எழும் மின்னல் இப்படி இராது. ஏனெனில் இறைவனின் படைப்பில்  நேர்கோடுகள் இல்லை.  மீனொன்றின் தசைகளில் இருக்க வேண்டிய விலங்குச் செல்களில், தாவர அம்சங்களும் ஒன்றாக இருப்பதை வைத்துப் பார்க்கும் போது, அந்த மின்னல் ஒரு வேற்றுகிரகத்தைச் சேர்ந்த விண்கல்லாகத்தான் இருக்க வேண்டும் என்று நான் கணிக்கிறேன். இந்த ஆழ்கடல் மீன்கள் சூரிய ஒளிக்காக மேல் நோக்கி வந்திருக்கின்றன.  இந்தத் தாவரங்கள் விலங்கின வேட்டைப் பண்புகளை வெளிப்படுத்தும் முகமாக ஒரு கொடி போல் ஒன்றிணைந்து எனது களனை கீழ் நோக்கி இழுக்கின்றன. 

இதை வைத்துப்பார்க்கும் போது, ஏலகிரி மலைப்பிரதேசத்தில் காணாமல் போனவர்கள் உண்மையில் காணாமல் போகவில்லை. அவர்கள் மரங்களாகிவிட்டார்கள். அவர்கள் மரங்களின் ரூபத்தில் , தாவரங்களின் ரூபத்தில் அந்தக் காட்டிலேயே தான் இருக்கிறார்கள். அவர்கள் என் காதலி ரம்யா போல் ஏதோவொரு வகையில், இந்தக்கடலிலிருந்து ஏற்றுமதி செய்யப்பட்ட மீன்களை உட்கொண்டிருக்கிறார்கள். கடலில் இருந்து அந்த விண்கல்லால் பாதிக்கப்பட்ட மீன்கள் பிடித்து ஏற்றுமதி செய்வதை மனித இனம் உடனடியாக நிறுத்த வேண்டும். இதை நாம் உடனே செய்ய வேண்டும். வேற்று கிரகத்திலிருந்து இந்தியப்பெருங்கடலில் விழுந்த அந்தப் பொருளை நாம் முதற்கண் தனிமைப்படுத்த வேண்டும். அதை மீட்க வேண்டும். அந்தக்கல்லின் வருகை பூமிக்கும், பூமிக்கிரகத்தில் மானுட மேன்மைக்கும் உகந்ததல்ல.

பூமிக்கிரகத்தில் விலங்குகளும், தாவரங்களும் இரண்டு வெவ்வேறு ராஜாங்கங்களாக உதித்தவை. இவ்விரண்டுக்குமான பிரபஞ்சரீதியிலான இருத்தலிய காரணங்கள் வெவ்வேறானவை. உயிர்கள் இந்தப் பிரபஞ்சத்தில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மிக மிக அரிதாகவே தோன்றுகின்றன. இந்தப் பின்னணியில்,  நான் சில கேள்விகளை எழுப்ப விரும்புகிறேன்.  ஒரு கண்ணாடித்தொட்டியில் சில மீன்களுடன் சில தாவரங்கள் இருப்பதே கண்ணாடித்தொட்டிகளுக்கான அர்த்தங்களுக்கு உருவம் தருகிறது. தொட்டி முழுவதும் மீன்கள் எனில், அந்த மீன்கள் தான் தாவரங்களுமெனில் தொட்டி என்னவாகிறது?  தொட்டியின் பிரபஞ்சரீதியிலான இருத்தலிய காரணிகள் என்னாகின்றன? 

கடலில் இலைகளெல்லாம் ஒன்று கூடி மீன்களின் உருவம் கொண்டு நீந்துகின்றன. ஆனால், நிலத்தில் இவைகள் மனித திசுக்களை, நரம்புகளை, எலும்புகளை தாவரங்களாக்கிவிடுகின்றன. முன்பு இலைகள், மரங்களின் கிளைகளோடு பிணைக்கப்பட்டு இருந்தன. இப்போது எல்லா இலைகளும் ஒன்றுகூடி ஒரு பாரிய திமிங்கிலமாக இந்த ஆழ்கடலில் நீந்திக்கொண்டிருக்கின்றன. கூர்ந்து அவதானிக்கின் இவ்விரண்டிலுமே ஒர் ஒழுங்கு இருக்கிறது. 

ஆனால் இந்த ஒழுங்கு, அந்த விண்கல்லின் வருகைக்குப் பின் சற்றே மாற்றம் கண்டிருக்கிறது. இந்த ஒழுங்கு மாற்றத்தின் நோக்கம் என்ன? ஒழுங்கு என்பதே ஒரு மாறிலி நிலைப்பாடு தான் என்பதா?  நடக்கும் எல்லாவற்றையும் என்னளவில் சீர்தூக்கி யோசிக்குங்கால் எனக்கு இதுவே படுகிறது. ஒழுங்கே ஒரு மாறிலி நிலைப்பாடாக இருக்கிறது. ஒழுங்கற்றதே ஒழுங்காக இருப்பதுவும் கூட அப்படி ஒரு மாறிலி நிலைப்பாடு தானோ?.   

இப்படிக்கு,

ஹரி’

ஹரி கடிதம் எழுதிவிட்டு, கணிணித் திரையில் ‘அனுப்புக’ என்னும் பொத்தானை அழுத்த, அது சற்று நேரம் திணறிவிட்டு 

‘இணைய வசதி துண்டிக்கப்பட்டுள்ளது” என்று கொட்டை எழுத்தில் காட்டியது. ஹரி அமர்ந்திருந்த களன், கடலில் மிதந்துகொண்டிருந்த கப்பலுடனான கேபிள் தொடர்பு அறுந்து, தொடர்ந்து ஆழ்கடல் நோக்கி இழுக்கப்பட்டது. ஹரி களனின் கண்ணாடி ஜன்னலினூடே ஆழ்கடலைப் பார்த்தான். 

ஆழ்கடலில் தாவரங்கள் ஒன்று கூடி மீன்களைப் போல் உருவங்கொண்டு வளைந்து நெளிந்து நீந்திக்கொண்டிருந்தன. 

~oOo~

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.