யாருக்கு இந்த துணிச்சல் வரும்?

பதினாறிலிருந்து பத்தொன்பது வயதிற்குள் மெக்ஸிகோ நகரத்தில் திருடியவையும்  எனக்கு இருபது வயது இருக்கும்போது ராணுவப் புரட்சி தொடங்கிய முதல் சில மாதங்களில் சீலேவில் வாங்கியவையுமே  என் நினைவை நீங்காத புத்தகங்கள்,. மெக்ஸிகோவில் ஒரு அபாரமான புத்தகக்கடை உள்ளது. அதன் பெயர் “கண்ணாடி புத்தகக் கடை”. அது அலமேதாவில் இருந்தது. அதன் சுவர்களும் கூரையும் கண்ணாடியாலானது, கண்ணாடி மற்றும் இரும்பு உத்திரங்கள். அந்தக் கடையின் வெளியே இருந்து பார்த்தால் அங்கு திருட வாய்ப்பே இல்லையென்று தான் தோன்றும். இருப்பினும் எச்சரிக்கையுணர்வை  முயற்சி செய்து பார்க்கும் உந்துதல் வென்றது. சிறிது காலத்துக்குப் பின் அங்கு திருட முடிவெடுத்தேன். 

நான் திருடிய முதல் புத்தகம் பத்தொன்பதாம் நூற்றாண்டு காமக் கவிஞர்  பியர் லூயிஸ் (Pierre Louÿs) எழுதிய மிகச் சிறிய புத்தகம். அதன் பக்கங்கள் பைபிள் பக்கங்களை போல மிக மெல்லியதாக இருந்தன. எனக்கு அந்த புத்தகத்தின் பெயர் சரியாக நினைவில் இல்லை. அது “Aphrodite” ஆகவோ அல்லது “Songs of Bilitis” ஆகவோ இருக்கலாம். அதன் பின்னர் சிறிது காலம் அந்த பதினாறு வயது பையனுக்கு லூயி மேய்ப்பராக ஆனார். பின்னர் மேக்ஸ் பீர்பாம் (Max Beerbohm), சாஃலூரி (Champfleury), சாமுவேல் பீப்ஸ் (Samuel Pepys), கோன்கூர் சகோதரர்கள் (Goncourt Brothers), அல்போன்ஸ் டாடே (Alphonse Daudet), ரூல்ஃபோ (Rulfo), மற்றும் அரியோலா (Areola) முதலானவர்கள், அப்போது எழுத முயன்று கொண்டிருந்த பல மெக்ஸிகன் எழுத்தாளர்களின் புத்தகங்களை திருடியிருக்கிறேன். அவர்களை அவெனிதா நினோ பெர்திதோ (Avenida Nino Perdido) தெருவில் ஏதோ ஒரு காலை வேளையில் சந்தித்திருக்கலாம், ஆனால் அப்படியான நெருக்கடி மிகுந்த தெருவை இப்போது மெக்ஸிகோ நகர வரைபடம் கூட என்னிடமிருந்து மறைக்கிறது, ஏதோ என்னுடைய கற்பனையில் மட்டுமே அந்த தெரு இருந்தது போலவோ பதினாறு வயதில் நான் தொலைந்தது போல, பல சுரங்கக் கடைகளும் தெருக் கலைஞர்களும் கொண்ட அந்த தெருவே தொலைந்து போய் விட்டது போலவோ தோன்றுகிறது. 

அச்சகாப்தத்தின் பனிமூட்டத்தில், அதாவது திருட்டு சாகசங்கள் நிறைந்த காலகட்டத்தில், நான் திருடிய பல கவிதை புத்தகங்கள் என் நினைவில் இன்னும் உள்ளன– அமதா நெர்வோ (Amado Nervo), அல்போன்ஸோ ரெய்யெஸ் (Alfonso Reyes), றெனதோ லேதக் (Renato Leduc),  கில்பர்ட்டோ ஓவன் (Gilberto Owen), ஊவர்த்தா (Heurta) மற்றும் தப்ளாதா (Tablada) , மேலும் சில அமெரிக்க கவிஞர்கள் – வாச்சல் லிண்ட்ஸி (Vachel Lindsay – General William Booth Enters Into Heaven எழுதியவர்) போன்றோர். ஆனால் என்னை நரகத்திலிருந்து காப்பாற்றி மீண்டும் அதல பாதாளத்தில் தள்ளியது ஒரு நாவல் தான். அந்த நாவல் காம்யு எழுதிய “The Fall”. அந்த நாவலைப் பற்றிய நினைவுகள் எல்லாம் என் மனதில் ஒரு அமானுஷ்ய ஒளியைப் போல, மாலை நேர சலனமற்ற கதிரொளியைப் போல உறைந்திருக்கிறது.  சிகப்பும் பச்சையும் மின்னும், இரைச்சல் மிகுந்த அசாதாரண காலை வேளையில் ஒளிரும் (ஒளிர்ந்த) மெக்ஸிகோ நகரத்தில், அலமேதா பூங்காவின் ஒரு பெஞ்சில், நான் அந்தப் புத்தகத்தை வாசித்தேன், விழுங்கினேன் என்றாலும் அந்த நாள் முழுவதும், சொல்லப்போனால் என் வாழ்க்கை முழுவதும் என் முன்னே விரிந்து கிடந்தது. காம்யுவினைப் படித்த பிறகு எல்லாமே மாறியது. 

எனக்கு அந்த புத்தகம் என்ன பதிப்பு என்பது கூட நினைவிலிருக்கிறது – அந்த பதிப்பு பெரிய எழுத்துகள் கொண்டு அச்சிடப்பட்டது, மழலையர் பள்ளி பாடப்புத்தகம் போல மெல்லியதாக, கெட்டி அட்டையுடன், மிகவும் கோரமான அட்டைப்படம் கொண்டது. அந்த புத்தகத்தை திருடுவது அவ்வளவு சுலபமல்ல. அதை திருடிய பிறகு எங்கே ஒளித்து வைப்பது என்பதும்  தெரியவில்லை. என்னுடைய அக்குளுக்கு அடியில் பதுக்கி வைப்பதா, பெல்ட்டின் மேல் சட்டையில் ஒளித்து வைப்பதா என தெரியவில்லை. ஏனென்றால் எப்படி மறைத்து வைத்தாலும் என்னுடைய பழைய பள்ளி சீருடை கோட்டில் வெளியே நன்றாக தெரியும். இறுதியில், கடையில் இருக்கும் சிப்பந்திகள் அனைவரும் பார்க்கும் வண்ணம் வெளிப்படையாக கைகளில் எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன். திருடுவதற்கு இதுவே சிறந்த வழி என எட்கர் ஆலன் போ-வின் (Edgar Allan Poe) ஒரு சிறுகதை மூலம் எனக்கு தெரிந்திருந்தது. 

அதன் பிறகு, அதாவது அந்த புத்தகத்தை திருடி படித்த பிறகு, ஒரு சாதாரண புத்தக வாசிப்பாளனாக இருந்த நான், தீவிர வாசிப்பாளனாக மாறினேன். கூடவே, சாதாரண புத்தக திருடனாக இருந்த நான், புத்தகங்களை கடத்துபவனாக மாறினேன். அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்கிற வெறி எழுந்தது. காம்யுவின் கதாபாத்திரமொன்று தனக்கு விதிக்கப்பட்ட துயரமான வாழ்க்கையை அப்படியே ஏற்றுக் காரணமாக இருந்த மறைந்திருந்து இயங்கும் தன்னிகழ்வின் இயல்பை அறிய, அல்லது அறிய முயற்சிப்பதும்  இது போல் வாசிப்பதும் ஒன்றுதான் என்று நான் அப்பாவித்தனமாய் நம்பினேன்.  நீங்கள் நினைப்பது போலல்லாமல் நீண்ட காலம் நற்பயனளிக்கும் வகையிலேயே புத்தகங்களை வெற்றிகரமாக கடத்திக் கொண்டிருந்தேன். ஆனால் ஒரு நாள் மாட்டிக் கொண்டேன். அதிர்ஷ்டவசமாக நான் மாட்டிய கடை கண்ணாடி புத்தகக் கடையல்ல. நான் மாட்டியது, அலமேதா பூங்காவின் எதிரே அவெனிதா ஹுவாரேஸ் (Avenida Juarez) தெருவில் அடித் தளத்தில் அமைந்திருந்த ஒரு புத்தகக் கடையில். அங்கு ப்யூனோஸ் ஐரிஸ் (Buenos Aires) மற்றும் பார்சிலோனா (Barcelona)-வில் வெளியாகும் புதிய புத்தகங்கள் மின்னும் அடுக்குகளில் உட்கார்ந்து கொண்டிருந்தன. அன்று என்னுடைய கைது அவ்வளவு கௌரவமாக நிகழவில்லை. என்னவோ அந்த கடையின் சாமுராய்கள்  என்னுடைய தலையை கொண்டு வருபவருக்கு பணமுடிப்பு கொடுக்கப் போவதாக அறிவிப்பு செய்தது போல இருந்தது. என்னை நாட்டை விட்டே வெளியே துரத்தப் போவதாக மிரட்டினர், அந்த அடித்தள புத்தகக் கடையின் பாதாள அறையில் கொண்டு சென்று அடிக்கப் போவதாக கூறினார்கள். எனக்கு அவர்கள் சொன்னது நியோ-தத்துவவாதிகள் அழிவின் அழிவைப் பற்றி பேசுவது போல இருந்தது. கடைசியாக, பல ஆலோசனைகளுக்குப் பிறகு என்னை விட்டுவிட முடிவு செய்தனர், அதற்கு முன், என்னிடமிருந்த அனைத்து புத்தகங்களையும், காம்யுவின் “The Fall”  உட்பட பிடுங்கிக் கொண்டனர். அதில் ஒன்று கூட அவர்கள் கடையில் திருடப்பட்டதில்லை. 

அதன் பிறகு சில காலத்திலேயே சீலே சென்றுவிட்டேன். நான் மெக்ஸிகோவிலேயே இருந்திருந்தால் ரூல்ஃபோ (Rulfo) மற்றும் அரியோலா (Areola) -வை எங்கேனும் பார்த்திருக்கலாம். அதே போல சீலேவில் நிக்கானோர் பார்ரா (Nicanor Parra) மற்றும் என்ரிக் லின்-ஐ (Enrique Lihn) பார்த்திருக்கலாம். ஆனால் கண்ணீர் புகை குண்டுகளின் வாசம் வீசும்  இரவொன்றில், நான் பார்த்த ஒரே எழுத்தாளர் ரொட்ரிகோ லிரா (Rodrigo Lira) ஒருவர்தான் என்று நினைக்கிறேன். அன்று அவர் வேகமாக நடந்து சென்று கொண்டிருந்தார். ராணுவப் புரட்சிக்கு பிறகு, என்னுடைய நாட்களை ஸந்த்தியாகோவின் (Santiago) புத்தகக் கடைகளில் அதிகம் கழித்தேன். என்னுடைய சலிப்பையும் பைத்தியக்காரத்தனத்தையும் போக்க அதுவே மிக எளிமையான வழி.  மெக்ஸிகோ புத்தகக் கடைகளில் பல கடைச்சிப்பந்திகள் இருந்தது  போல சீலேவில் இல்லை. மொத்த கடைக்கும் சேர்த்து ஒரே ஒரு ஆள் தான் இருப்பார். அவர் பல நேரம் கடையின் முதலாளியாக இருப்பார். அங்கு தான் நிக்கானோர் பார்ராவின் “Obra gruesa [Complete Works]” மற்றும் Artefactos, என்ரிக் லின் (Enrique Lihn) எழுதிய புத்தகங்கள் மேலும் ஹோர்ஹே  தெய்லியரின் (Jorge Teillier) புத்தகங்களை (இதனை சீக்கிரமே தொலைத்து விட்டேன்) வாங்கினேன். இந்த புத்தகங்கள் தான் என்னுடைய தினசரி அத்தியாவசிய வாசிப்பு பட்டியல், இல்லை “வாசிப்பு பட்டியல்” என்பது சரியான வார்த்தையல்ல, இந்த புத்தகங்கள் தான் என்னை அனுதினமும் சுவாசிக்க வைத்தன. “சுவாசம்” என்பது கூட சரியான வார்த்தை இல்லை தான். 

என்னுடைய புத்தகக் கடை அனுபவங்களில் எனக்கு இன்னமும் ஞாபகம் இருப்பது, கடைக்காரர்களின் கண்கள் தான். அவை சில சமயம் தூக்கிலிடப்பட்டவன் கண்களை போன்றோ, சில சமயம் மெல்லிய தூக்கம் ஒரு திரை போல படர்ந்திருப்பதைப் போன்றோ தோன்றும். ஆனால் உண்மையான காரணம் அவை இரண்டுமில்லை என்பது எனக்கு நன்றாக தெரியும். நான் ஸந்த்தியாகோவில் (Santiago) பார்த்தது போல் தனிமை நிறைந்த புத்தகக் கடைகளை எங்கும் கண்டதே இல்லை. அங்கே புத்தகங்கள் மலிவாக இருந்தமையால் நான் அவற்றை திருடவில்லை. காசு கொடுத்தே வாங்கினேன். நான் கடைசியாக சென்ற புத்தகக் கடையில், பிரெஞ்ச் நாவல்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இடத்தை மேய்ந்து கொண்டிருந்தேன். அப்போது மெலிந்த உடல்வாகுடன், நாற்பது வயது மதிக்கத்தக்க அந்த புத்தகக் கடைக்காரர் என்னிடம், ஒரு எழுத்தாளர் தன்னுடைய புத்தகத்தினை மரண தண்டனை அனுபவிக்கும் ஒருவனுக்கு பரிந்துரைப்பது முறையா என கேட்டார். 

அந்த கடைக்காரர் முழங்கை வரை மடித்துவிடப்பட்ட வெண்ணிற சட்டை அணிந்து கொண்டு ஒரு ஓரமாக நின்றார். அவர் பேசும் போது அவருடைய தொண்டையில் குரல்வளை நடுங்குவது தெரிந்தது. அவருடைய கேள்விக்கு, அப்படிச் செய்வது சரியாக தெரியவில்லை என்று கூறினேன். மரண தண்டனை விதிக்கப்பட்ட யாரைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என அவரிடமே கேட்டேன். அந்த புத்தகக் கடைக்காரர் என்னைப் பார்த்து, மரணிக்கும் தருவாயில் இருப்பவனிடம் தன்னுடைய புத்தகத்தினை படிக்கச் சொல்லக்கூடிய ஒன்றுக்கும் மேற்பட்ட எழுத்தாளர்களைத் தனக்குத் தெரியும் என்று கூறினார். மேலும் அவர், நாம் பேசுவது தாளவொண்ணாத விழைவு கொண்ட வாசகர்களைப் பற்றி என்றார். இந்த விஷயத்தில் நியாய அநியாயத்தைப் பேசும் தகுதி எனக்கில்லை என்றார். பின்னர் அவர், நான் செய்யாவிட்டால் யார் செய்வார்கள், என்று தொடர்ந்தார். 

சாகப் போகும் மனிதனுக்கு நீ என்ன புத்தகத்தினை வழங்குவாய் என என்னிடம் கேட்டார். எனக்கு தெரியாது என்று பதிலளித்தேன். எனக்கும் தெரியவில்லை என்று கூறிய அவர், இது மிகவும் வருந்தத்தக்க விஷயம் என்றார். சாகப் போகும் மனிதர்கள் எந்த புத்தகங்களை படிப்பார்கள்? அவர்களுக்கு எந்த புத்தகங்கள் பிடிக்கும்? அவர்களின் புத்தக அறை எப்படி இருக்கும் என யோசித்திருக்கிறாயா? என கேட்டார். எனக்கு தெரியவில்லை என கூறினேன். நீ வயதில் இளையவன், ஆதலால் உன்னுடைய பதில் எனக்கு ஆச்சரியமளிக்கவில்லை என்று கூறினார். அவர்களின் புத்தக அறை அண்டார்டிகா போல. அது வட துருவத்தை போன்றதல்ல, அண்டார்டிகா போன்றது என்று கூறினார். எனக்கு ஆர்த்தர் கோர்டான் பிம் (Athur Gordon Pym)-ன் கடைசி நாட்கள் ஞாபகத்துக்கு வந்தன. ஆனால் அவரிடம் சொல்ல வேண்டாமென முடிவெடுத்தேன். அப்போது அந்த புத்தகக் கடைக்காரர், ஒரு பிரபலமான புத்தகத்தினை எடுத்து, சாகக் கிடப்பவன் மடியில் இந்த புத்தகத்தினை போட எவனுக்கு மனம் வரும், என கூறிக்கொண்டே பக்கத்தில் இருந்த குப்பையில் அதைத் தூக்கிப் போட்டார்.  நான் எடுத்த புத்தகங்களுக்கு அவரிடம் காசு கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன். செல்லத் திரும்பியபோது, அந்த புத்தகக் கடைக்காரர் சிரித்தது போலவோ அல்லது தேம்பி அழுதது போலவோ இருந்தது. நான் கடையை விட்டு வெளியேறும் வேளையில் அவருடைய குரல் கேட்டது: எந்த வேசி மகனுக்கு அந்த மாதிரியான காரியத்தை செய்யும் துணிச்சல் இருக்கும்? பின்னர் வேறு என்னவோ கூறினார். அது என் காதுகளில் சரியாக விழவில்லை.

This essay is drawn from Between Parentheses: Essays, Articles and Speeches (1998–2003) by Roberto Bolaño, translated by Natasha Wimmer, forthcoming from New Directions on May 30.

March 22, 2011, 12:15 pm

மூலம்: Who Would Dare? | by Roberto Bolaño | The New York Review of Books

One Reply to “யாருக்கு இந்த துணிச்சல் வரும்?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.