வில்லியம் பர்ன்ஸ்

ரொபெர்த்தோ பொலான்யோ

(தமிழாக்கம் : ஆகாசஜன்)

கலிஃபோர்னியாவில் இருக்கிற வெண்டுராவைச் சேர்ந்த வில்லியம் பர்ன்ஸ், இந்தக் கதையை என் நண்பன் பாஞ்சொ மொங்கேவிடம் சொன்னான். சொனோராவில் சாண்டா தெரேசாவில் போலீஸ்காரனாய் இருக்கிற பாஞ்சொ மொங்கே, அதை என்னிடம் சொன்னான். அந்த வட அமெரிக்கன் எதற்கும் கோபப்படாதவன், எதற்கும் அலட்டிக் கொள்ளாதவன் என்று மொங்கே சொன்னது, நடந்த நிகழ்வு குறித்த பின்வரும் நினைவுகளுக்கு முரணாக இருக்கிறது. இப்போது பர்ன்ஸ் சொன்னது, அவனது சொற்களிலேயே:

அது ஒரு கொடுமையான காலம். என் வேலையில் கொஞ்சம் தடுமாறிக்கொண்டிருந்தேன். நான் அலுப்பு நிலையின் உச்சத்தில் இருந்தேன், இத்தனைக்கும் அதுவரை எனக்கு போரடித்ததே கிடையாது. நான், இரண்டு பெண்களுடன் ஊர் சுற்றிக் கொண்டிருந்த சமயம். அந்த நினைவு எனக்குத் தெளிவாக இருக்கிறது. ஒருத்திக்கு வயதாகிக் கொண்டிருந்தது – அவளுக்கு என் வயது இருந்திருக்கும் – மற்றொருத்தியைச் சிறுமி என்றுதான் சொல்ல வேண்டும். சில நாள்கள் அவர்கள் இருவரும் உடம்பு சரியில்லாத, திருப்தி செய்யப்பட முடியாத கிழவிகளைப்போல் நடந்துகொண்டார்கள், மற்ற சில நாள்கள் வெறுமே விளையாட்டில் மட்டும் நாட்டமிருக்கிற இரு சிறுமிகளைப் போலிருந்தார்கள். அவர்களுக்கிடையே இருந்த வயது வித்தியாசம் மிகையானது கிடையாது. நீங்கள் அவர்களைத் தாயும் மகளும் என்று தவறாக அர்த்தம் பண்ணிக்கொள்ள மாட்டீர்கள், ஆனால் ஏறத்தாழ அப்படிதான் இருந்தார்கள். இதையெல்லாம் ஒரு மனிதனால் யூகிக்கத்தான் முடியும், திட்டவட்டமாகத் தெரிந்துகொள்ள வழியில்லை. எது எப்படியோ, இந்தப் பெண்கள் பெரிதாய் ஒன்று, சிறிதாய் ஒன்று என்று இரண்டு நாய்கள் வைத்திருந்தார்கள். அதில் எந்த நாய் யாருடையது என்பதை என்னால் கடைசிவரை கண்டுபிடிக்கவே முடியவில்லை. ஊருக்கு வெளியே பலரும் கோடை விடுமுறைக்குப் போகிற மலைகள் இருந்தன, அங்கே ஒரு வீட்டில் இருவரும் ஒன்றாக இருந்தார்கள். நான் கோடைக் காலத்தைக் கழிக்க அங்கே போகிறேன் என்று யாரிடமோ சொன்னேன், நண்பனோ தெரிந்தவனோ, யாரோ ஒருவன், அவன் என்னை மீன் பிடிக்கத் தூண்டில் கொண்டுபோகச் சொன்னான். ஆனால் என்னிடம் மீன் பிடிக்கிறத் தூண்டில் இல்லை. வேறொருத்தர் கடைகள், காபின்கள் சும்மா இருப்பது, மனசைத் தெளிவாக்கிக்கொள்வது என்று ஏதோ சொன்னார். ஆனால் நான் அங்கே விடுமுறைக்குப் போகவில்லை. அந்தப் பெண்களை கவனித்துக் கொள்ளத்தானே போகிறேன். அவர்கள் ஏன் தங்களைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் தந்தார்கள்? அவர்கள் என்னிடம் சொன்னது என்னவென்றால், எவனோ ஒருவன் அவர்களுக்குக் கெடுதல் செய்யும் எண்ணத்துடன் இருக்கிறானாம். அவனைக் கில்லர் என்று அவர்கள் அழைத்தார்கள். அவனது நோக்கம் என்ன என்று நான் கேட்டதற்கு அவர்களிடம் பதிலில்லை, எனக்கு எதுவும் தெரியாமலிருப்பது நல்லது என்று அவர்கள் நினைத்திருக்கவும் கூடும். எது எப்படி என்று நானாக ஊகிக்க முயன்றேன். அவர்கள் அச்சப்பட்டார்கள், அவர்கள் தாங்கள் ஆபத்திலிருப்பதாக நம்பினார்கள், எல்லாம் பொய்யான பீதியாகக்கூட இருக்கலாம். ஆனால், என்ன நினைக்கவேண்டும் என்று நான் எதற்காகப் பிறத்தியாரிடம் சொல்ல வேண்டும், அதுவும் அவர்கள் என்னை வேலைக்கு அமர்த்தி வைத்திருக்கிறபோது? எது எப்படியோ, ஒரு வாரம் போனபின் அவர்களும் என்னைப்போல நினைக்க ஆரம்பித்து விடுவார்கள் என்று முடிவு செய்தேன். ஆக நான் அவர்களுடனும், அவர்களுடைய நாய்களுடனும் மலைகளுக்குப் போனேன், அங்கே கல்லாலும், மரத்தாலும் கட்டப்பட்ட ஒரு சிறிய வீட்டில் குடி புகுந்தோம், அந்த வீடெங்கும் ஜன்னல்கள், இதுவரை அதைவிட அதிக ஜன்னல்களை நான் எந்த ஒரு வீட்டிலும் பார்த்ததில்லை, எல்லாம் வெவ்வேறு அளவில் கன்னா பின்னாவென்று சிதறிக்கிடந்தன. வெளியிலிருந்து பார்க்கும்போது, அந்த வீட்டுக்கு மூன்று தளங்கள் இருக்கிற மாதிரித் தோன்றும், ஆனால் உண்மையில் இரண்டுதான் இருந்தன. உள்ளே, அதுவும் புழங்கும் அறையிலும், முதல் மாடியிலிருந்த படுக்கை அறைகள் சிலவற்றிலும், அந்த ஜன்னல்கள் தலையைக் கிறுகிறுக்க வைக்கிற, உயரப் பறக்கிற மாதிரியான, சித்தத்தைக் கலங்க வைக்கிற உணர்வை உண்டாக்கின. எனக்குக் கொடுக்கப்பட்டப் படுக்கையறைக்கு இரண்டே ஜன்னல்கள்தான், இரண்டும் சிறியனவாகவே இருந்தன, ஒன்றன்மேல் மற்றொன்று, மேலிருந்த ஜன்னல் ஏறத்தாழக் கூரையைத் தொட்டது, கீழிருந்த ஜன்னல் தரையிலிருந்து ஓர் அடிதான் உயர இருந்திருக்கும். அதனாலெல்லாம் ஒன்றுமில்லை, அந்த உயரத்தில் வாழ்க்கை சுகமாகத்தான் இருந்தது. அந்த வயதான பெண் தினமும் காலையில் எழுதிக் கொண்டிருப்பாள், ஆனால் எழுத்தாளர்களின் வழக்கம் என்று சொல்வார்கள் இல்லையா, அந்த மாதிரி ஒன்றும் அவள் தன்னைத் தாழ்போட்டுப் பூட்டிக் கொள்ளவில்லை, எல்லோரும் புழங்குகிற அறையில் இருந்த மேஜையில் தனது மடிக்கணினியை இணைத்துக் கொண்டாள். சிறியவள் தோட்ட வேலைகளிலோ, நாய்களுடன் விளையாடுவதிலோ அல்லது என்னோடு பேசிக்கொண்டிருப்பதிலோ தனது பொழுதைப் போக்கினாள். பெரும்பாலான சமையலை நான்தான் செய்தேன், அதில் நான் நிபுணன் அல்லன் என்றாலும், நான் சமைத்த உணவை அந்தப் பெண்கள் புகழ்ந்தார்கள். நான் காலம் முழுதும் அப்படியே வாழ்ந்திருந்திருக்கலாம். ஆனால், ஒரு நாள் அந்த நாய்கள் எங்கோ ஓடிப்போய்விட்டன, நான் அவைகளைத் தேடிக்கொண்டு வெளியே போக வேண்டியதாயிற்று. பக்கத்திலிருந்த ஒரு காட்டுப் பகுதியில் அவற்றை நான் தேடியது நினைவிருக்கிறது, கையில் ஒரு ப்ளாஷ்லைட் மட்டும்தான் இருந்தது, காலியாய்க் கிடந்த வீடுகளின் புழக்கடைகளுக்குள் உற்றுத் தேடினேன். அவற்றை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. நான் வீடு திரும்பியபோது, நாய்கள் தொலைவதற்கே நான்தான் காரணமாய் இருந்த மாதிரி அந்தப் பெண்கள் என்னைப் பார்த்தார்கள். பின்னர் அவர்கள் ஒரு பெயரைச் சொன்னார்கள், அந்தக் கொலைகாரனின் பெயரை. முதலிலிருந்தே அவர்கள்தான் அவனைக் கில்லர் என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள். எனக்கு அவர்கள் சொல்வதில் நம்பிக்கை இருந்திருக்கவில்லை, இருந்தாலும் அவர்கள் சொல்வது அனைத்தையும் நான் கவனமாகக் கேட்டுக்கொண்டேன். அவர்களது உயர்பள்ளிப் பருவக் காதல்களை, பணப் பிரச்சினைகளை, கோப தாபங்களைப் பேசினார்கள். உயர் பள்ளியில் ஒரே ஆளுடன் அவர்கள் இருவருக்கும் எப்படிப் பழக்கம் இருந்திருக்க முடியும் என்பதை என்னால் விளங்கிக்கொள்ள முடியவில்லை, அவர்களுக்கிடையே இருந்த வயது வித்தியாசம் அப்படி. ஆனால் அவர்கள் அதற்குமேல் எதுவும் சொல்வதாயில்லை. அன்றிரவு, அத்தனை கண்டித்தபின்னும், அவர்களில் ஒருத்தி என் அறைக்கு வந்தாள். நான் விளக்கைப் போடவில்லை, அரைத் தூக்கத்தில் இருந்தேன், அவர்களில் யார் அது என்பதை நான் கடைசிவரை அறியவே இல்லை. எழுகையில் விடிகாலையின் முதல் வெளிச்சக் கீற்றில் நான் தனியாகத்தான் இருந்தேன். அவர்கள் பயந்து கொண்டிருக்கிற ஆளைப் பார்த்துவிட்டு வரலாம் என்று தீர்மானித்தேன். அவர்களிடம் அவனது முகவரியை வாங்கிக் கொண்டேன், நான் திரும்பி வரும்வரை, எங்கும் போகாமல் பூட்டிக்கொண்டு வீட்டிலேயே இருக்கும்படி அவர்களிடம் சொல்லி வைத்தேன். அந்த வயதான பெண்மணியின் பிக்அப் வாகனத்தை ஓட்டிக்கொண்டு போனேன். ஊருக்குள் நுழையும் இடத்தில் அந்த நாய்களை ஒரு பழைய கான்னிங் பாக்டரியில் பார்த்தேன். அவை வெட்கப்படுகிற பாவனையில் வாலாட்டியபடி என்னிடம் வந்தன. அவற்றைப் பிக்கப்பில் போட்டுக்கொண்டு, ஊரைச் சுற்றி கொஞ்ச நேரம் ஓட்டிக் கொண்டிருந்தேன், முந்திய நாள் இரவு நான் எந்த அளவுக்கு கவலைப்பட்டுக் கொண்டிருந்திருந்தேன் என்பதை நினைத்துச் சிரித்துக்கொண்டே. அடுத்ததாக அந்தப் பெண்கள் என்னிடம் கொடுத்திருந்த முகவரிக்கு போனேன். அந்த ஆளின் பெயர் பெட்லோ என்று வைத்துக் கொள்வோம். ஊருக்கு மத்தியில் அவனுக்கு ஒரு கடை இருந்தது, விடுமுறைக்கு வந்தவர்களுக்கு மீன்பிடித் தூண்டில்கள் முதல் கட்டம்போட்ட சட்டைகள், சாக்லேட் பார்கள் என்று அத்தனையும் விற்றுக் கொண்டிருந்தான். நான் கொஞ்ச நேரம் அங்கே அடுக்கி வைக்கப்பட்டதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் திரைப்பட நடிகன்போல் இருந்தான்; அவனது வயது முப்பத்தைந்துக்கு மேல் இருக்காது. நல்ல பலமான உடலமைப்பு, கரிய முடி, கவுண்டரில் விரித்து வைத்து ஒரு செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தான். அவன் கான்வாஸ் பேண்ட்டும் டி-ஷர்ட்டும் போட்டிருந்தான். அந்தக் கடை நன்றாக வியாபாரம் செய்து கொண்டிருந்திருக்க வேண்டும்: அது ஊருக்கு மத்தியில் இருந்த தெருக்களில் ஒன்றில் இருந்தது, அதில் கார்கள் கூடவே ட்ராம்களும் ஓடின. பெட்லோ விற்ற பொருட்களின் விலை அதிகம்தான் – நான் அவற்றின் விலை விவரங்களைக் கவனித்தேன். நான் கிளம்பும்போது, எக்காரணத்தாலோ அவன் பாவம் அனாதரவாயிருக்கிறான் என்ற எண்ணம தோன்றியது. கொஞ்ச தூரம்கூடப் போயிருக்கமாட்டேன், அவனது நாய் என்னைத் தொடர்ந்து வந்து கொண்டிருந்ததை உணர்ந்தேன். நான் அதை அந்தக் கடையில் பார்த்திருக்கக்கூட இல்லை: ஒரு பெரிய கருப்பு நாய், ஜேர்மன் ஷேபர்டுக்கும் வேறெதோ ஒன்றுக்கும் பிறந்ததாய் இருக்கலாம். எனக்கென்று நான் நாய் வைத்துக் கொண்டதில்லை. சனியன் பிடித்ததுகள், ஏன் இப்படி நடந்து கொள்கின்றன என்பது எனக்குத் தெரியாது, ஆனால், எக்காரணத்தாலோ, பெட்லோவின் நாய் என்னைத் தொடர்ந்து வந்தது. அதைக் கடைக்குத் திருப்பி அனுப்ப நான் முயற்சி செய்தேன், அது நான் சொல்வதைக் கவனிப்பதாயில்லை. அதனால் நான் பாட்டுக்கு என் பிக்அப்பை நோக்கி நடந்து போனபடி இருந்தேன், அந்த நாய் என்னுடன் வந்து கொண்டிருந்தது, அப்போதுதான் நான் சீட்டி அடிக்கிற சத்தத்தைக் கேட்டேன். கடைக்காரன் தன் நாயைச் சீட்டியடித்துக் கூப்பிடுகிறான். நான் திரும்பிப் பார்க்கவில்லை, ஆனால் அவன் எங்களைத் தேடி வெளியே வந்திருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டேன். எனது அடுத்த செயல் தன்னிச்சையானது, யோசிக்காமல் செய்தது: அவன் என்னை, அல்லது எங்களைப் பார்க்காதபடிக்கு நிச்சயம் செய்து கொண்டேன். ஒரு கருஞ்சிவப்பு நிற ட்ராமின் பின்னால் ஒளிந்துகொண்டது நினைவிருக்கிறது, அதன் வண்ணம், உலர்ந்த ரத்தத்தை ஒத்தது, அந்த நாய் என் கால்களோடு ஒடுங்கி நின்றது. நான் எந்த ஆபத்துமில்லை என்று உணரத்தொடங்கிய கணத்தில், ட்ராம் நகர்ந்தது, கடைக்காரன் சாலையின் எதிர் பக்கத்திலிருந்து என்னைப் பார்த்துவிட்டான். அவன் தன் கைகளால் ஒரு செய்கை செய்தான். அதன் பொருள், “நாயைப் பிடி” என்றோ, “நாயைத் தூக்கிலிடு” என்றோ, “நான் வரும் வரை அங்கேயே இரு” என்றோ இருந்திருந்திருக்கலாம். குறிப்பாக அதைதான் நான் செய்யவில்லை. நான் எதிர்புறம் திரும்பி கூட்டத்தில் மறைந்தேன், அவன் ஏதோ கத்தினான், “நில்! என் நாய்! ஹே சகா, என் நாய்!” என்றோ என்னவோ, நான் ஏன் அப்படிச் செய்தேன்? எனக்குத் தெரியவில்லை. எப்படியிருந்தாலும், கடைக்காரனின் நாய் என்னைத் தொடர்ந்து வந்தது, நான் பிக்அப்பை நிறுத்தி வைத்திருந்த இடத்துக்குப் போகையில். நான் கார்க் கதவுகளைத் திறந்ததும், எதுவும் செய்வதற்குள் அது உள்ளே குதித்தது, நகர மறுத்தது. மூன்று நாய்களுடன் நான் திரும்பியதைப் பார்த்தபோது அந்த பெண்கள் எதுவும் சொல்லவில்லை. அவை அனைத்துடனும் விளையாட ஆரம்பித்துவிட்டனர். கடைக்காரனின் நாய்க்கு அவர்களை ரொம்ப நாள்களாகத் தெரியும் போலிருந்தது. அன்று மதியம், நாங்கள் என்னென்னவோ பேசினோம். நான் ஊரில் எனக்கு என்ன நடந்தது என்பதைச் சொல்லிப் பேச்சைத் துவங்கி வைத்தேன், அவர்கள் தங்களது கடந்த கால வாழ்வையும், தங்களது வேலையையும் பற்றிச் சொன்னார்கள்: ஒருத்தி ஆசிரியையாக இருந்திருக்கிறாள், மற்றவள் சிகையலங்காரம் செய்பவராக இருந்திருக்கிறாள். இரண்டு பேரும் வேலையை விட்டு விட்டிருந்தார்கள். இருந்தாலும் அவ்வப்போது பிரச்சினைக்குரிய குழந்தைகளைப் பார்த்துக் கொண்டனர் என்று சொல்லிக் கொண்டார்கள். ஒரு கட்டத்தில், இருபத்து நாலு மணி நேரமும் வீட்டைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை நானே பேச ஆரம்பித்துவிட்டேன். அந்தப் பெண்கள் என்னை ஒரு சிரிப்புடன் பார்த்தனர், நான் சொன்னதை ஏற்றுக்கொண்டனர். அந்த மாதிரி பேசிவிட்டதற்கு நானே வருத்தப்பட்டேன். அதன்பின் நாங்கள் சாப்பிட்டோம். அன்று இரவு நான் சமையல் செய்திருக்கவில்லை. எங்கள் பேச்சு அமைதியில் ஓய்ந்தது. அந்த அமைதியை எங்கள் தாடையும் பற்களும் வேலைசெய்கிற சப்தமும், வெளியே வீட்டைச் சுற்றி ஓடிய நாய்களின் பரபரப்பும் மட்டுமே குலைத்தன. அப்புறம் நாங்கள் குடிக்க ஆரம்பித்தோம். பெண்களில் ஒருத்தி, யார் என்று நினைவில்லை, பூமி உருண்டையாக இருப்பது பற்றியும், பாதுகாப்புப் பற்றியும், மருத்துவர்களின் குரல்கள் பற்றியும் பேச ஆரம்பித்தாள். என் மனம் வேறெங்கோ இருந்தது; நான் அவள் சொல்வதைக் கவனிக்கவில்லை. இந்த மலைச் சாரல்களில் முன்னொரு காலத்தில் வாழ்ந்திருந்த இந்தியர்களைப் பற்றி அவள் பேசினாள் என்று நினைக்கிறேன். கொஞ்ச நேரத்துக்கு அப்புறம் என்னால் அதை எல்லாம் தாங்க முடியவில்லை, எனவே, நான் எழுந்தேன், மேஜையைத் துடைத்தேன், சமையலறையுள் தாழ் போட்டுக்கொண்டு பாத்திரங்களைத் தேய்க்க ஆரம்பித்தேன், ஆனால், என்னால் அங்கிருந்தும் அவர்கள் பேசுவதைக் கேட்க முடிந்தது. நான் வாசல் அறைக்குத் திரும்பிப் போனபோது, இளையவள் சோபாவில் படுத்துக் கொண்டிருந்தாள், ஒரு போர்வையால் பாதி போர்த்திக்கொண்டு, மற்றவள் பெரிய ஒரு ஊரைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தாள். அவள் அந்தப் பெரிய ஊரைப் புகழ்வதுபோல் இருந்தது, அது வாழ்வதற்கு எவ்வளவு பெரிய ஊர் என்கிற மாதிரி, ஆனால் அவள் உண்மையில் அதை சிறுமைப்படுத்திக் கொண்டிருந்தாள். அது எனக்கு நன்றாகப் புரிந்தது, காரணம் அவ்வப்போது இருவரும் சிரிக்க ஆரம்பித்து விடுவார்கள். அது எனக்கு இவர்களிடம் பிடிபடாத ஒன்று: அவர்களது நகைச்சுவை உணர்வு. அவர்கள் வசீகரமாய் இருந்தனர், எனக்கு அவர்களைப் பிடித்திருந்தது, ஆனால் அவர்களது நகைச்சுவை உணர்வில் ஏதோ ஒன்று போலியானதாகவும் கட்டாயப்படுத்தப்பட்டதாயும் தோன்றியது. சாப்பாட்டுக்குப் பின் நான் திறந்திருந்த விஸ்கி பாட்டில் பாதி காலியாக இருந்தது. அதுவே எனக்கு யோசனையாக இருந்தது: அவர்களை குடிக்க வைக்கும் எண்ணம் எனக்கு இருந்திருக்கவில்லை, அவர்கள் குடித்துவிட்டு என்னைத் தனித்து விடுவதை நான் விரும்பவில்லை. அதனால் நான் அவர்களுடன் உட்கார்ந்து, சில விஷயங்களை நாம் முழுதாகப் பேச வேண்டியிருக்கிறது என்று சொன்னேன். “என்ன விஷயங்கள்?” என்று கேட்டார்கள், ஆச்சர்யப்படுகிற மாதிரி நடித்தார்கள், இல்லை, அவர்கள் நடிக்காமலும் இருந்திருந்திருக்கலாம். “இந்த வீட்டில் பலவீனமான இடங்கள் மிக அதிகமாக இருக்கின்றன,” என்று நான் சொன்னேன். “நாம் அது குறித்து ஏதாவது செய்ய வேண்டும்.” “எங்கெல்லாம்?” பெண்களில் ஒருத்தி கேட்டாள். “ஓகே” என்றேன், அது ஊரை விட்டு எவ்வளவு தொலைவில் இருக்கிறது என்பதை நினைவுறுத்துவதில் துவங்கினேன், எவ்வளவு பாதுகாப்பில்லாமல் இருக்கிறது, என்றெல்லாம், ஆனால் சீக்கிரமே அவர்கள் என்னைக் கவனிக்கவில்லை என்பதை நான் உணர்ந்தேன். நான் மட்டும் நாயாக இருந்திருந்தால் இந்தப் பெண்கள் என்னை இன்னும் கொஞ்சம் கூடுதலாக மதிப்பார்கள் என்று கோபம் வந்தது. பின்னர், எங்களில் யாரும் தூங்குவதாயில்லை என்பதை நான் உணர்ந்ததும், அவர்கள் குழந்தைகளைப் பற்றி பேச ஆரம்பித்தனர், அவர்களுடைய குரல் என் இதயத்தைக் குன்றச் செய்தது. நான் பயங்கரமான, கொடிய விஷயங்களைப் பார்த்திருக்கிறேன், திட மனதுடைய ஒருவனையும் கலங்க வைப்பனவற்றைப் பார்த்திருக்கிறேன், ஆனால், அந்தப் பெண்கள் பேசுவதை அந்த இரவில் கேட்கையில், எனது இதயம் அதிதீவிரமாகக் குன்றிப் போனது, அது ஏறத்தாழ மறைந்தே போனது. பேச்சினுள் நான் நுழைய முயன்றேன், அவர்கள் தங்கள் சிறு வயதுக் காட்சிகளை நினைவுகூர்கிறார்களா அலது நிகழ்காலத்தில் நிஜக் குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறார்களா என்று கண்டுபிடிக்க முயன்றேன், ஆனால் அது முடியவில்லை. பாண்டேஜ்களாலும் பஞ்சுப் பொதிகளாலும் நிரப்பிய மாதிரி இருந்தது என் தொண்டை. திடீரென்று, உரையாடலின் மத்தியில், அல்லது இரட்டை உரைகளின் மத்தியில், உள்ளுணர்வு எனக்கு ஏதோ சொன்னது, சத்தமில்லாமல் நான் வாசல் அறையில் இருந்த சன்னல்களில் ஒன்றை நோக்கி நகர்ந்தேன், ஒரு கேலித்தனமான சிறு புல்ஸ்ஐ ஜன்னல், மூலையில், பெரிய ஜன்னலுக்கு வெகு அருகில், அதனால் ஒரு பிரயோசனமும் இருந்திருக்க முடியாது – அங்கே போனேன். அப்போதுதான் அந்தப் பெண்கள் என்னைப் பார்த்தனர், என்னமோ நடக்கிறது என்பதை உணர்ந்தனர் என்பதை நானறிவேன். திரைச்சீலையை விலக்குவதற்கு முன் உதட்டில் விரல் வைக்கத்தான் எனக்கு நேரம் இருந்தது. வெளியே பேட்லோ, கில்லரின், தலை தெரிந்தது. அடுத்தது என்ன நடந்தது என்பது மங்கலாக, நினைவிலில்லை. அது மங்கலாக இருக்கக் காரணம் பயம் ஒரு தொற்று நோய்போல. கில்லர், எனக்கு உடனே புரிந்துவிட்டது, வீட்டின் வெளியே அதைச் சுற்றி ஓட ஆரம்பித்து விட்டான். பெண்களும் நானும் வீட்டினுள் சுற்றி ஓடி வந்தோம். இரண்டு வட்டங்கள் – அவன் உள்ளே வரும் வழியைத் தேடுகிறான், திறந்து வைக்கப்பட்ட ஒரு ஜன்னலை கண்டுபிடிக்க, அந்தப் பெண்களும் நானும் உள்ளே சுற்றி ஓடினோம், கதவுகளைச் சோதித்தோம், ஜன்னல்களை மூடினோம். நான் செய்திருக்க வேண்டியதைச் செய்யவில்லை என்பது எனக்குத் தெரிகிறது: எனது அறைக்குச் சென்று, துப்பாக்கியைத் தூக்கிக்கொண்டு நான் வெளியேபோய் அவனைச் சரணடையச் செய்திருக்க வேண்டும். மாறாக, நான் நாய்கள் இன்னும் வெளியே இருக்கின்றன, அவைகளுக்கு எந்தத் தீங்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று யோசனை செய்துக் கொண்டிருந்தேன்; நாய்களில் ஒன்று கர்ப்பமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன், எனக்குத் தீர்மானமாகத் தெரியவில்லை, ஆனால் அது குறித்து ஓரிரண்டு வார்த்தைகள் பேசப்பட்டிருந்தன. எப்படியிருப்பினும், அந்தக் கணமே, நான் இன்னும் சுற்றி ஓடிக்கொண்டிருக்கையில், பெண்களில் ஒருத்தி, “ஜீசஸ், அந்தப் பெண் நாய், பெண் நாய்,” என்று சொன்னாள் – நான் டெலிபதி பற்றி நினைத்தேன், மகிழ்ச்சியின் எண்ணம் தோன்றியது, பேசியவள், இருவரில் எவளாயிருந்தாலும், நாயைத் தேடி வெளியே ஓடிவிடுவாள் என்று அச்சப்பட்டேன். அதிர்ஷ்டவசமாக, இருவரில் எவரும் வெளியே போக எத்தனிக்கவில்லை. அதுவும் நல்லதுதான், அதுவும் நல்லதுதான், என்று நான் நினைத்துக் கொண்டேன். அடுத்து (இதை நான் மறக்கவே மாட்டேன்) நான் இதற்கு முன் போயிராத முதல் மாடியிலிருந்த ஓர் அறைக்குப் போனேன். அது நீண்டிருந்தது, குறுகலாக, இருட்டாக, நிலவு மற்றும் வெளி விளக்குகளால் வெளிச்சமிடப்பட்டிருந்தது. அக்கணமே நான் உணர்ந்து விட்டேன், பீதியிலிருந்து வேறான நிச்சயத் தன்மையுடன், விதி (அல்லது துரதிருஷ்டம் – இந்த விஷயத்தில் இரண்டும் ஒன்றுதான்) என்னை அந்த அறைக்குக் கொண்டு வந்திருக்கிறது என்று. தூரத்து முனையில், ஜன்னலின் வெளியே, கடைக்காரனின் உருவம் தெரிந்தது. நான் குனிந்து உட்கார்ந்தேன், எனது அதிர்வைக் கட்டுப்படுத்த முடியாமல் ( என் உடல் முழுதுமே அதிர்ந்து கொண்டிருந்தது, என்னிலிருந்து வியர்வை கொட்டியது), காத்திருந்தேன். நான் திகைக்குமளவு சுலபமாகக் கில்லர் ஜன்னலைத் திறந்து அமைதியாக அறையினுள் நுழைந்தான். அறையில் மூன்று குறுகலான மரப் படுக்கைகள் இருந்தன, ஒவ்வொன்றுக்கும் ஒரு மேஜை இருந்தது. சுவற்றில், படுக்கைகளிலிருந்து சில இஞ்சுகள் உயரே, சட்டம்போட்ட படங்கள் இருந்தன – அவற்றையும் என்னால் பார்க்க முடிந்தது. கில்லர் ஒரு கணம் தாமதித்தான். அவன் மூச்சு விடுவதை நான் உணர்ந்தேன்; காற்று அவனது நுரையீரல்களுள் நுழைகையில் ஆரோக்கியமான ஒலி எழுப்பியது. அவன் தடவித் தடவி முன்னால் வந்தான், சுவற்றுக்கும், படுக்கைகளின் முனைகளுக்கும் இடையே, நான் குனிந்து உட்கார்ந்திருந்து, அவனுக்காகக் காத்திருந்த இடத்துக்கே வந்தான். என்னாலேயே நம்ப முடியவில்லை, அவன் என்னைப் பார்க்கவில்லை, இதை நான் அப்போது தெரிந்து கொண்டேன்: எனது அதிர்ஷ்ட நட்சத்திரங்களுக்கு நன்றி சொன்னேன், அவன் போதுமான அளவு நெருங்கி வந்ததும், அவனது கால்களைப் பிடித்து இழுத்து அவனை வீழ்த்தினேன். அவன் கீழே விழுந்ததும், எவ்வளவு சேதம் ஏற்படுத்த முடியுமோ அவ்வளவு செய்யவேண்டும் என்ற நோக்கத்துடன் அவனை உதைக்க ஆரம்பித்தேன். “இங்கே இருக்கிறான், இங்கே இருக்கிறான்!” என்று உரக்கக் கத்தினேன், ஆனால் அந்தப் பெண்களுக்கு நான் கத்தியது கேட்கவில்லை (அவர்கள் சுற்றி ஓடும சத்தம் எனக்கும் கேட்கவில்லை), பழகியிராத இந்த அறை என்னுடைய மூளையின் தோற்றப் பிழைபோல் தெரிந்தது, எனக்கிருந்த ஒரே வீடு, ஒரே பாதுகாப்பிடம். விழுந்து கிடந்த உடலை உதைத்துக் கொண்டு நான் எவ்வளவு நேரம் அங்கிருந்தேன் என்பது எனக்குத் தெரியவில்லை; என் பின்புறத்தில் யாரோ கதவைத் திறந்ததுதான் நினைவிருக்கிறது, எனக்கு விளங்காத சொற்கள், எனது தோளில் ஒரு கரம். அப்புறம் நான் மீண்டும் தனியாகி விட்டேன், அவனை உதைப்பதை நிறுத்தினேன். கொஞ்ச நேரத்துக்கு எனக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை, நான் சிந்திக்க இயலாதவனாகவும், களைப்பாகவும் உணர்ந்தேன். ஒரு வழியாக அந்த உணர்விலிருந்து மீண்டு, வாசல் அறைக்கு அந்த உடலை இழுத்துச் சென்றேன். அங்கே அந்தப் பெண்கள் இருந்தனர், சோபாவில் மிக நெருக்கமாக உட்கார்ந்திருந்தனர், ஒருத்தரை ஒருத்தர் ஏறத்தாழ கட்டிப் பிடித்தபடி. அந்தக் காட்சியில் ஏதோ ஒன்று எனக்குப் பிறந்தநாள் பார்ட்டியை நினைவுபடுத்தியது. அவர்கள் கண்களில் தெரிந்த அச்சத்தை என்னால் பார்க்க முடிந்தது, நடந்த நிகழ்வால் ஏற்பட்ட அச்சமன்று. அதைவிட, நான் கொடுத்த அடியால் பெட்லோவுக்கு நேர்ந்த நிலையைக் கண்டதால் ஏற்பட்ட அச்சத்தின் எஞ்சியிருந்த பொறி தென்பட்டது. அவர்களது கண்களின் தோற்றம்தான் என் பிடியை நழுவச் செய்தது, அவனது உடலைத் தரை விரிப்பில் தளர்த்தச் செய்தது. பெட்லோவின் முகம் ரத்தம் தெறித்த முகமூடியாய் இருந்தது, வாசல் அறையின் வெளிச்சத்தில் கோரமாய்த் தெரிந்தது. அவனது மூக்கு இருந்த இடத்தில், ரத்தம் சிந்தும் குழம்புச் சக்கைதான் இருந்தது. அவனது இதயம் துடித்துக்கொண்டிருக்கிறதா என்று சோதனை செய்தேன். கொஞ்சமும் அசையாமல் அந்தப் பெண்கள் என்னை பார்த்துக் கொண்டிருந்தார்கள. “செத்துவிட்டான்,” என்றேன். நான் வெளியே போகும்முன், அவர்களில் ஒருத்தி பெருமூச்சு விடுவது கேட்டது. நகர அதிகாரிகளிடம் இதை எப்படி விளக்குவது என்ற யோசனையில் நான் நட்சத்திரங்களைப் பார்த்தபடி ஒரு சிகரெட்டைப் புகைத்தேன். நான் உள்ளே திரும்பியபோது, பெண்கள் நாலு காலில் அவனது ஆடைகளைக் கழட்டிக் கொண்டிருந்தனர், என்னால் ஒரு கேவல் எழும்புவதைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. அவர்கள் என்னைப் பார்க்கக்கூட இல்லை. நான் ஒரு கிளாஸ் விஸ்கி குடித்தேன், மறுபடியும் வெளியே போனேன், பாட்டிலை எடுத்துக்கொண்டு. எவ்வளவு நேரம் வெளியே இருந்தேன் என்பது நினைவில் இல்லை, புகைத்துக்கொண்டும் குடித்துக்கொண்டும், வேலையை முடிக்க அந்தப் பெண்களுக்கு அவகாசம் கொடுத்தேன். நடந்த நிகழ்வுகளை மீண்டும் நினைத்து பார்த்தேன், அவற்றை ஒன்றோடொன்று இணைத்து. ஜன்னல் வழியாக அவன் உள்ளே பார்த்ததை நினைத்துப் பார்த்தேன், அவனது கண்களில் தெரிந்த தோற்றத்தை நினைவுபடுத்தினேன், இப்போது நான் அவனது அச்சத்தை அடையாளம் கண்டு கொண்டேன், அவன் தனது நாயைத் தொலைத்த கணத்தை நினைவுபடுத்திக் கொண்டேன், கடைசியில் அவன் தனது கடையின் பின்பக்கத்தில் செய்தித்தாள் படித்துக் கொண்டிருந்தது ஞாபகத்துக்கு வந்தது. நான் முந்திய நாள் இரவின் வெளிச்சத்தையும் நினைவுபடுத்திப் பார்த்தேன், கடையினுள் இருந்த வெளிச்சத்தையும், நான் அவனைக் கொன்ற அறையிலிருந்து நான் கண்ட வெளிவாசல் வெளிச்சத்தையும். அதன்பின் நான் நாய்களைக் கவனித்தேன், அவைகளும் தூங்கவில்லை, வாசல் பகுதியின் ஒரு முனையிலிருந்து மறு முனைக்கு ஓடியபடி இருந்தன. மரவேலி ஆங்காங்கே உடைந்திருந்தது, யாரேனும் அதைச் சரி செய்தாக வேண்டும், ஆனால் அது நானாக இருக்கப் போவதில்லை. மலைகளின் அப்பால் பொழுது விடியத்துவங்கியது. நாய்கள் தட்டிக் கொடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பில் முன்வாசல் புல்வெளியில் என்னருகே வந்தன, இரவில் நீண்ட நேரம் விளையாடிக் களைத்திருக்க வேண்டும். வழக்கம் போல் இரண்டுதான். மற்றதை அழைப்பதற்காக விசிலடித்தேன், ஆனால் அது வரவில்லை. சில்லென்று முதல் குளிர் நடுக்கமாய் என்னைத் தாக்கியது உண்மை – இறந்தவன் கில்லர் அல்லன். உண்மையான கில்லர் எங்களை ஏமாற்றியிருக்கிறான், எங்கோ வெகு தொலைவில் ஒளிந்திருந்து. அதைவிட, விதிதான் ஏமாற்றியது என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். பெட்லோ யாரையும் கொலை செய்ய நினைத்திருக்கவில்லை – அவன் தன் நாயைத் தேடித்தான் வந்திருக்கிறான். புவர் பாஸ்டர்ட், என்று நினைத்தேன். நாய்கள் ஒன்றையொன்று விரட்டத் தொடங்கின. நான் கதவைத் திறந்து அந்த பெண்களைப் பார்த்தேன், முன்னறைக்குள் செல்ல இயலாதவனாக. பெட்லோவின் உடல் மீண்டும் ஆடை அணிவிக்கப்பட்டிருந்தது. முன்னைவிட நன்றாக. நான் ஏதோ சொல்ல வந்தேன், ஆனால் அதில் விஷயமொன்றும் இருக்கவில்லை, எனவே, நான் மீண்டும் வெளியே போனேன். பெண்களில் ஒருத்தி என்னைத் தொடர்ந்து வெளியே வந்தாள். “இப்போது இந்த உடலைத் தொலைத்துக் கட்டியாக வேண்டும்,” என்று என் பின்னிருந்து சொன்னாள். “ஆமாம்,” என்றேன். அப்புறம் பிக்அப்பின் பின்னால் அந்த உடலை இடுவதற்கு நான் உதவினேன். நாங்கள் மலைகளுக்குள் வாகனத்தை ஓட்டிச் சென்றோம். “வாழ்க்கை பொருளற்றது,” என்றாள் வயதில் மூத்தவள். நான் பதில் சொல்லவில்லை; கல்லறைக் குழியைத் தோண்டினேன். நாங்கள் திரும்பியவுடன், அவர்கள் குளித்துக் கொண்டிருக்கையில், நான் பிக்அப்பைக் கழுவிவிட்டு எனது பொருட்களை எடுத்துக் கொண்டேன். நாங்கள் மேகங்களைப் பார்த்தபடி வெளியில் அமர்ந்து காலை உணவைச் சாப்பிடுகையில், “இனி என்ன செய்யப் போகிறாய்?” என்று அவர்கள் கேட்டார்கள். “மறுபடி ஊருக்குள் போவேன்,” என்றேன், “நான் பாதை தவறிய அதே இடத்திலிருந்து எனது விசாரணையைத் தொடரப் போகிறேன்.”

பாஞ்சொ மொங்கேவின் கதை எப்படி முடிகிறதென்றால், ஆறு மாதம் கழித்து வில்லியம் பர்ன்ஸ் அடையாளம் தெரியாத நபர்களால் தாக்கிக் கொல்லப்பட்டான் என்று.

One Reply to “வில்லியம் பர்ன்ஸ்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.