
தனிமையின் வீடு
வீடெங்கும் அலைந்து கொண்டிருந்த
பூனைக்குட்டியை விரட்டியடிக்க முடியாமல்
அதன் பின்னே நடந்து கொண்டிருந்தேன்
எப்படியாவது துரத்தி விடுங்கள்
அப்போதுதான் இன்பம் வரும் என்றார்கள்
பக்கத்து வீட்டில் வசிப்பவர்கள்
இத்தனைக்கும் அது அமைதியாகவே நடந்தது
என்னை எதுவுமே செய்யவில்லை
ஆனாலும்
பார்த்துக் கொண்டே இருந்தது
பூனைக்குட்டியை மறப்பதற்காக
சமைக்க ஆரம்பித்தேன்
இடைவேளை விட்டால்
மடியில் அமர்ந்து
என் நெஞ்சைத் தடவ ஆரம்பித்தது
தூக்கி வீசிவிட்டு கைகளைக் கழுவினேன்
அழவே இல்லை
காயம் வராத உடல் கொண்டிருந்தது அது
கதவைத் திறந்து
குளியலறை ஜன்னல்களைத் திறந்து
சமையலறைப் புகை வெளியேறும்
வழியைத் திறந்து
போய்விடு பூனையே
தாங்கமுடியவில்லை என்றேன்
எனக்காக சென்றுவிட்டு
மீண்டும் இறங்கி வந்து விளையாடியது
எங்கு நின்றாலும்
என்னை
நிழல் போலத் தொடர்ந்தது
கண்காணிப்பது பொறுக்க முடியாமல்
கொன்றுவிடலாமென்று கத்தி எடுத்தேன்
தக்காளிகளுக்கு இடையே போய்
ஒளிந்து கொண்டது
ஒரு தக்காளியை வெட்டி விட்டு
இன்னொன்றை வெட்டுவதற்காக
இடைவேளை விட்டேன்
மியாவ் எனும் ஒலி
சுற்றிக் கொண்டே இருந்தது
பூனைக்குட்டியைக் காணவில்லை
உதை வாங்கும் கதவு
படாரென்று கதவைத் திறக்கிறது காற்று
தூங்குகிறாள் மகள் என்று
சொல்லவா முடியும்
இருந்தாலும் நேற்று சொன்னான்
மெதுவாக வா
சப்தமிடாமல் கதவைத் திற என்று
சொன்னதை மறந்து விடுகிறது
படாரென்றுதான் மோதுகிறது இப்போதும்
நினைவுகளற்ற காற்றிடம்
வீட்டைப் பற்றியும்
குழந்தைகளைப் பற்றியும்
சொல்லிக் கொண்டேதான் இருக்கிறான்
நிறுத்துவதே இல்லை
அது ஒரு வியாதி
சொல்லுதல்தானே வாழ்வு
போனவருடம்
கூரையைப் பறக்கவிட்ட
புயலைக் கூட அது மறந்து விட்டது
பட்டம் விடுவதற்காக
வா என்று அழைத்தபடி
ஓடிக்கொண்டே இருக்கிறான்
தெருவில் தவழும் பட்டம்
வராத காற்றைத் திட்டுகிறது
கிழிந்த பட்டத்துடன்
வீட்டுக்குள் நுழையும் போது
புழுதி பறக்கிறது வாசலில்
எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை
நினைவிலும் இருப்பதில்லை
அடி வாங்கப் போகிறாய் என்று
மிரட்டும் போது
“அப்பா ! காத்துப் பா
காத்து அடிக்குது பாருங்க !”
சொல்லியபடியே ஓடும் மகள்
படாரென்றுதான் உதைக்கிறாள்
வீட்டுக் கதவை
–இரா.கவியரசு