முதல் காலடி

Year 1910.

Kathleen Scott:

“Darling! Do you remember when we went to beach for a walk after the tide went back. I asked you “what does this Antarctica exploration mean to you?”

And you said, walking on wet sand: “the fascination of making first steps!”

“ça va bien” என்று மலையேற்ற கயிற்றின் முன் முனையிலிருந்து சத்தம் வந்தது. நானும் “ça va bien” என்று பதிலளித்தேன். சற்று நேரம் கழித்து லாம்பர்ட் மறுபடியும் இதைத்தான் கேட்பார், நானும் இப்படித்தான் பதிலளிப்பேன். எங்கள் இருவருக்குமான பொது மொழி இது மட்டும்தான்.

இன்னொரு கயிற்றில் ஆபர்ட்டும் ப்ளோரியும்.

கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட 26,000 அடிகள் உயரத்தில் உள்ள தெற்குக் கணவாயிலிருந்து (south col) இன்று காலையில் நீண்ட பனி அடர்ந்த செங்குத்தான மலைத் தொடர்ச்சியில் நாங்கள் நால்வரும் கொஞ்சம் கொஞ்சமாக மேலே ஏறிக் கொண்டிருந்தோம். கயிற்றின் முன் செல்லும் லாம்பர்ட், பனியை வெட்டி முடிந்தவரை பாதையை அமைத்துச்செல்வார். ஓர் இருபது நிமிடங்களில் களைத்து நிற்கும் போது பின் முனையிலிருந்து நான் லாம்பர்ட்டை மெல்லக் கடந்து சென்று பனியை வெட்டவோ, பாதையின் ஆபத்தை நிர்ணயம் செய்யவோ தொடங்குவேன். ஆபெர்ட்டும் ப்ளோரியும் இது போன்றுதான் ஏறிக் கொண்டிருந்தார்கள்.

மெல்லச் செங்குத்தாக ஏறி தென்கிழக்கு தொடர்ச்சியின் பாதத்தை அடைந்து பின், தொடர்ச்சியின் மேல் ஏறிச் சென்றோம்.

நாங்கள் நால்வரும் ஆளுக்கொரு ஆக்ஸிஜன் சிலிண்டரை சுமந்து கொண்டிருந்தோம். என்னுடைய இத்தனை மலையேற்ற பயணங்களில் ஆக்ஸிஜன் சிலிண்டரை சுமந்து செல்வது இதுதான் முதல் தடவை.

ஆனால், நாங்கள் நின்றால் அல்லது ஓய்வெடுக்கும் போது மட்டுமே இந்த சிலிண்டர்கள் வேலை செய்யும். மலையேறும் போது உதவாது. எங்கள் நால்வருக்கும் சேர்த்து என்னிடம் ஒரே ஒரு கூடாரத்திற்கான சாமான்கள் மட்டுமே இருந்தது. ஒரே நாளுக்கான உணவு மட்டும்தான்.
நேரம் கணக்கே இல்லாமல் நிகழ்ந்து கொண்டே இருந்தது. துல்லிய வானம். மேற்கிலிருந்து அடித்துக் கொண்டிருக்கும் காற்றை மலை தடுத்துக் கொண்டிருந்தது.

27,000 அடிகளையும் கடந்து சென்று கொண்டிருந்தோம். இதுவரையிலான என்னுடைய சொந்த சாதனையை நான் முறியடித்துவிட்டேன் என்று நினைக்கிறேன். முன்பு, மலையின் மறு பக்கத்திலிருந்து (வடக்கு, திபெத் வழி) நான் ஏறி அமைத்த முகாம் 6ஐ விட இப்போது அதிக உயரம் ஏறிவிட்டிருக்கிறேன்.

ஆனால், எங்கள் கனவு இன்னும் இரண்டாயிரம் அடிகளுக்கு மேல் இருக்கிறது…

ஏறுவதை நிறுத்திய போது 27,500 அடிகள் வந்திருந்தோம். எங்கள் பின்னாலேயே ஆபர்ட்டும் ப்ளோரியும் தொடர்ந்து கயிறேறி மேலே வந்தனர்.

சாஹிப்புகளின் நோக்கம் இன்று தெற்குக் கணவாயிலிருந்து மேலே முடிந்தவரை ஏறுவது, சாமான்களை பத்திரப்படுத்திவிட்டு கீழே தென் கணவாய் முகாமிற்குத் திரும்பிவிடவேண்டியது, ஷெர்பாக்கள் தயாரானவுடன் நாளை திரும்ப வருவது என்பதுதான்.

ஆனால், லாம்பர்டும் நானும் அவ்வளவு களைப்பாக உணரவில்லை. இதுவரை வந்தாயிற்று. நாளை கனவை நோக்கி ஒரு முயற்சி..?

அப்போது கிட்டதட்ட ஒரு கூடாரம் அமைக்க முடியும்படிக்கான ஒரு சின்ன சமவெளியை கண்டேன்.

அதைக் காட்டி, ‘சாஹிப், இன்றிரவு இங்கு தங்கிவிட வேண்டியதுதான்” என்றேன். லாம்பர்ட் என்னை நோக்கி புன்னகைத்தார். அவரும் அதையேதான் நினைத்திருப்பார்.

மூன்று சாஹிப்புகளும் கூடி விவாதித்தனர். நான் சற்று தள்ளி என் மூட்டையை இறக்கிப் பிரித்து கூடாரம் அமைக்கத் தேவையான பொருட்களை வெளியே எடுக்க ஆரம்பித்தேன்.

என் சக ஷெர்பாக்களை நினைத்தவுடன் மறுபடியும் கோபம் வந்தது. நேற்று சாஹிப்புகள் சிறப்பு பரிசுகள் தருவதாக எவ்வளவோ சொல்லியும் தார்கே, நாம்கியால், பசாங் மேற்கொண்டு முன்னேற மறுத்துவிட்டனர். பசாங்…முட்டாள் ஜாக்கி…சே…

மூன்று சாஹிப்புகளும் இப்போது என்னிடம் திரும்ப வந்து திட்டத்தை விவரித்தனர்.

ஆபர்ட்டும் ப்ளோரியும் கீழே இறங்கி தெற்கு கண்வாய்க்குத் திரும்புவது; லாம்பர்டும் நானும் இங்கேயே இன்றிரவு, இருக்கும் ஒரே கூடாரத்தில் தங்குவது, நாளை காலநிலை சரியாக இருந்தால் கனவை நோக்கி மேலே ஏறுவது.

ஆபர்ட்டும் ப்ளோரியும் மவுனமாக அவர்களுடைய மூட்டைகளிலிருந்து சில சாமான்களை எங்களுக்காக வெளியே எடுத்து வைத்தனர்.

“பத்திரம்” என்றபோது அவர்களின் விழிகள் நிறைந்திருந்தன.
அவர்களும் என்னையும் லாம்பர்ட்டையும் போல நல்ல ஆரோக்கியமாகத்தான் இருந்தனர். எங்களுக்கு பதில் அவர்கள் இன்றிரவு தங்கியிருக்க முடியும். காலையில் கனவை நோக்கி எங்களுக்குப் பதில் அவர்கள் மேலே ஏறியிருக்கலாம். ஆனால் இருப்பதோ ஒரே கூடாரம், கொஞ்சமேயான உணவு…
ஒரு சின்ன முணுமுணுப்பும் இல்லாமல் அவர்கள் கீழே இறங்க ஆரம்பித்தனர்.

அவர்கள் வந்த வழியே சிறு சிறு புள்ளிகளாக குறைந்து கொண்டே போய் ஒரு கணத்தில் மறைந்து போகும் வரை பார்த்துக்கொண்டே இருந்தேன்.

“ça va bien” என்று லாம்பர்ட் என் தோளில் கையை வைத்தார்.

நாங்கள் இருவரும் சேர்ந்து கூடாரத்தைப் பொறுத்தி வைத்து இரவு தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்ய ஆரம்பித்தோம்.
விசிறி அடிக்கும் காற்றைச் சமாளித்து எங்களது சின்ன கூடாரத்தை நிறுவ மேலும் பல மணி நேரங்கள் ஆகும் போன்று தோன்றியது.
ஒரு வழியாக முடித்தபோது சூரியன் இன்னும் சற்று இருந்தது.
உடனே கூடாரத்திற்குள் போய் எங்களைப் பொதிந்து கொள்வதற்கு முன் நானும் லாம்பர்டும் மலை முகட்டில் அணைந்து கொண்டிருக்கும் வானைக் கண்டவாறு அமர்ந்தோம்…

இரு நாள்களுக்கு முன் எங்கள் குழு தெற்குக் கணவாயை அடைந்த கணத்தை மீண்டும் வாழ்ந்து பார்த்தேன்.

முதன் முறையாகத் தெற்குக் கணவாயில், உலகின் இரு மாபெரும் உயர சிகரங்களை,எவரெஸ்ட் மற்றும் லாட்ஸை இணைக்கும் கணவாயில் முதன் முறையாக மனிதக் காலடி பட்ட தருணம் அது.

சொல்லப் போனால் இந்த 1952 வேனிற் கால ஸ்விஸ் குழுவினருடான வேனிற் பயணத்தில் பல, “முதல்” முறைகள் நடந்திருக்கின்றன.

நான் சர்தார் என்ற பொறுப்பை அடைந்தது இந்தப் பயணத்தில்தான்.

இந்தப் பயணத்தில்தான், முதன் முறையாக இதற்கு முன் டில்மன், ஹூஸ்டன், ஷிப்டன் போன்ற பெரும் முன்னோடிகள் ம்ஹூம் என்று தலையசைத்துவிட்டு முன்னேற முடியாமல் போன மாபெரும் பனிப்பாறைப் பிளவை எங்கள் பயணக் குழு தாண்டி மேலேறி, மேற்குப் பள்ளத்தாக்கில் (western cwm) முதன் முறையாக மனிதக் காலடிகள் பட்டன.

அன்று எவரஸ்ட் சிகரத்தையே அடைந்தாற் போல் மகிழ்ந்து போனோம்.

மூத்த ஷெர்பா ஆங் தார்கேயிடம் இருபது ரூபாய்கள் பந்தயம் வைத்திருந்தது நினைவிற்கு வந்தது. திரும்பக் கீழே சென்றவுடன் மறவாமல் அவரிடமிருந்து வாங்கிக்கொள்ள வேண்டும் என்று எண்ணி முறுவலித்தேன்.

மேற்குப் பள்ளத்தாக்கில் முகாம் மூன்றை நிறுவினோம்.
இரண்டாவது முகாமிலிருந்து சாமான்களை – கிட்டதட்ட இரண்டரை டன்கள் – எங்கள் ஷெர்பாக்கள் அணி கொண்டு வந்து கொண்டே இருந்தன. கிட்டதட்ட 125 தடவைகள் மேலும் கீழும் ஷெர்பாக்கள் நாளெல்லாம் மலையில் ஊர்ந்து கொண்டே இருந்தார்கள்.

கிட்டதட்ட 20,000 அடிகளில் இருக்கும் போதுதான் சாஹிப்புகளில் சிலர் காற்றின் அடர்த்தி குறைவான தன்மையை உணர ஆரம்பித்தனர்.

ஓர் மாலை, அனைவரும் குழுமிப் பேசிக்கொண்டிருக்கும் போது இதைப் பற்றிப் பேச்சு வந்தது. இத்தனை உயரத்தில் யாருக்குமே, ஷெர்பாக்கள் உட்பட, பழகும் வரை சிரமம்தான் என்று சொன்ன ஓர் சாஹிப், “இவருக்கு மட்டும் இது பொருந்தாது” என்று என்னை கை காட்டிக் கூவினார்.

“இவருக்கு மட்டும் நுரையீரல்களின் எண்ணிக்கை மூன்று!”

சிரிப்பொலி எழுந்தது. நானும் சிரித்து வைத்தாலும் ஒரு வகையில் உண்மைதான். மலை மேல் செல்லச் செல்ல எனக்கு சவுகரியமாகவே இருந்தது. இன்னமும் சொல்லப்போனால் மேலே செல்ல செல்லத்தான்…

இந்த மேற்குப் பள்ளத்தாக்கில் எப்போதாவது வரும் பறவைகளைத் தவிர வெறும் வெண் பனியும் தனிமையும்தான். அவ்வப்போது காற்று ஊளையிடும். அவ்வளவே. வேறு உயிர் இருக்கும் சமிக்ஞை கூட இல்லை…

இந்த ஸ்விஸ் பயணக் குழு இதனை நிசப்தப் பள்ளத்தாக்கு என்று அழைத்தனர்.

பயணக் குழுவில் சாஹிப்புகளைத் தவிர, என் ஷெர்பா அணியில் இருந்து ப்யு தார்கே, டா நாம்க்யால், அஜ்பா, டோர்ஜி மற்றும் நோர்பு.

மே 24 அன்று நாங்கள் ஜெனிவா முனை (Geneva Spur) எனப்படும் பனி முனையிலிருந்து லிருந்து ஏற ஆரம்பித்தாலும் வானிலை மோசமானதால் அன்று முகாம் ஐந்திற்கு திரும்ப வேண்டியதாயிற்று. அடுத்த நாள் ஏற ஆரம்பித்த முதல் மணி நேரத்தில் அதிக பிரச்சினைகள் இல்லை. அதன் பின் ஆஜ்பாவிற்குத் திடீரென ஜூரம் ஆரம்பித்து அதிகரித்துவிட்டது. அவரது மூட்டைகளை மீதமிருக்கும் ஷெர்பாக்களுக்கு பிரித்துக்கொடுத்து விட்டு, ஆஜ்பாவை கீழே கேம்பிற்கு போகச்சொல்லிவிட்டு நாங்கள் மேலே ஏற ஆரம்பித்தோம்.
அன்று மட்டும் கிட்டதட்ட எட்டு மணி நேரங்கள் ஏறியிருப்போம்.
25,680 அடிகள் உயரமான நெப்ட்ஸ்ஸின் சிகரம் (nuptse) இப்போது எங்களுக்குப் பின்னால் இருந்தது. நாங்கள் அதற்கு சரிக்கு சரியான உயரத்தில் இருந்தோம்.

சூரிய ஒளி சுருங்கிக்கொண்டே வந்தது, குளிர் மேலும் கடுமையாக எங்களை போர்த்திக்கொண்டு இறுக்கி அணைத்துக் கொண்டிருந்தது. சற்று நேரம் சிரமப்பட்டுக்கொண்டு மேலேறிக்கொண்டு வந்த நோர்பும் டோர்ஜாவும் திடீரென நின்றார்கள்.
அவர்களது மூட்டைகளை கீழே போட்டுவிட்டு நாங்கள் திரும்புகிறோம் என்றார்கள்.

அவர்களது களைப்பு நன்றாக தெரிந்தது, பனியினால் தோலுரிப்பு நோய்க்கு பயந்து போயிருந்தார்கள். எனக்கோ எரிச்சலாக வந்தது. அவர்களிடம் வாதம் செய்யத் துவங்கினேன்.

சாஹிப்புகள் இடை மறித்தார்கள். “அவர்கள் தங்களால் முடிந்தவரை செய்தார்கள். இனிமேல் முடியவில்லையெனில் பரவாயில்லை, நம்மால் ஒன்றும் செய்ய முடியாது”
என் உள் மனதிற்கு இது தெரிந்தே இருந்தது. அவர்களை வற்புறுத்துவதில் பலன் இல்லை…

அவர்களிருவரும் மெல்ல கீழ் இறங்கி மறைய ஆரம்பித்தனர். அவர்களது மூட்டைகளை மிச்சமிருக்கும் நாங்கள் பகிர்ந்து எடுத்துக்கொள்ள முடிந்தவரை எடுத்துக்கொண்டோம். மீதமானவைகளை அங்கேயே போட்டுவிட்டு ஏறுவதை தொடர ஆரம்பித்தோம்.

நன்றாக நினைவிருக்கிறது. ஓர் திடீர் கூக்குரலோடு என் முகத்தில் ஏதோ ஒன்று விசிறிக்கொண்டு பறந்து போனது. திகைத்துப் போனேன். ஆபர்ட்டின் சயனப் பை.
சாமான் மூட்டைகளை மறுபடியும் கட்டும் போது சரியாக மூடவில்லை போல.

அப்பிரமாண்ட காற்றின் சுழலில் மாபெறும் ஓர் பறவையின் விரிந்த இறகுகள் போல அந்த பை விரிந்து சுழன்று வானத்தை மூடி பறந்து போனது.

இன்னொரு மணி நேரம் கடந்து போனது. இன்னொன்று…தெற்கு கணவாய்க்கு மிக அருகில் வந்து விட்டோம். ஆனாலும் அதை இன்று அடைய முடியாது என்று தெரிந்துவிட்டது. இருள் மற்றும் பனிக்குவியலகளில்ன் மத்தியில் மிகவும் சிரமப்பட்டு இரு கூடாரங்களை நிறுவினோம்.

எங்களை நிச்சயம் தூக்கிக் கொண்டு போய்விடும் போலத்தான் காற்று வீசி அடித்து தூக்கியது.

பல்வேறு தடவைகளுக்குப் பின் ஒரு வழியாய் சூடான சூப்பைச் செய்தேன்.

இரவு கொடுங்குளிர்.

ஒரு கூடாரத்தில் மூன்று சாஹிப்புகளும் நெருக்கியடித்து தவழ்ந்து படுத்துக்கொள்ள இன்னொரு கூடாரத்தில் நாங்கள் நான்கு ஷெர்பாக்களும் கிட்டதட்ட ஒருவரின் மேல் ஒருவர் படுத்து சூடு படுத்திக்கொண்டே இரவைக் கழித்தோம்.

காலை…தெளிவான வானம். தெற்கு கணவாய் மிக அருகில் மேலிருந்தது. இன்று நிச்சயம் ஏறிவிடலாம்.

தார்கேயும் நாகேயலும் நாங்கள் முந்தின நாள் கீழே விட்டு வந்த மூட்டைகளை எடுத்து வருவதற்காக கீழே இறங்கினார்கள். பசாங் அவர்களுக்காக கூடாரத்திலேயே காத்திருந்தார்.

பின்னர் அவர்கள் மூவரும் மூட்டைகளை மேலே எடுத்து வருவதாக ஏற்பாடு.

மூன்று சாஹிப்புகளும் நானும் மேலே ஏற ஆரம்பித்தோம்.
அதிக நேரம் பிடிக்கவில்லை; காலை ஒரு பத்து மணி போல. அந்த வரலாற்று முக்கிய கணம் வாய்த்தது. கற்பாறைகளும் பனியுமாக எங்களுக்கு முன் விரிந்திருந்த சமதளத்தை, தெற்குக் கண்வாயை அடைந்தோம். சற்று நேரம் கழித்து

சாஹிப்கள் பயணத்தை மேலே தொடர, கீழிருந்து மேல் வந்து கொண்டிருக்கும் ஷெர்பாக்களிடமிருந்து சாமான்களை பகிர்ந்து கொள்வதற்காக கீழே இறங்கிச்செல்ல ஆரம்பித்தேன்.

வழியில் எந்நேரமும் அவர்களை எதிர்கொள்வேன் என்று எதிர்பார்த்துக்கொண்டே இறங்கினேன். ஆனால் அவர்கள் வரவே இல்லை. மிகவும் கவலையாக முந்தின இரவு நாங்கள் தங்கியிருந்த முகாமை அடைந்தேன். தார்கேயும் நாகேயலும் திட்டப்படி சாமான்களை முகாமிற்கு கொண்டு வந்துவிட்டனர். ஆனால், கூடாரத்தினுள் படுத்துக் கிடந்த பசாங் எழுந்திருக்கவே இல்லை.

நான் உலுக்கினேன்; “ என்னால் முடியவில்லை, சாகப் போகிறேன்” பசாங் முனகினார்.

“இல்லை, உனக்கு ஒன்றும் இல்லை, எழுந்திரு. மேலே தெற்கு கணவாயை அடையத்தான் போகிறாய்.”

பசாங் மறுபடியும் முனகும் குரலில் புலம்பினார்.

எனக்கு கடும் கோபம் வந்தது. கத்தினேன், அவரை அறைந்து உதைத்தேன். முக்கியமான நேரத்தில் இவர் இப்படி செய்கிறார்.
இந்த சாமான்கள் மேலே செல்லவில்லையெனில் இத்தனை உயரத்தில், இத்தனை குளிரில் மேலே இருக்கும் சாஹிப்புகள் இறப்பது உறுதி. இப்படியே விட்டால் பசாங் இறப்பதும் உறுதி. அவர் மிகவும் களைத்து பீதியடைந்திருப்பது என்பது நன்றாகத் தெரிந்தது. ஆனால் அவரால் எழ முடியும், நடக்க முடியும்…முடிய வேண்டும்.
“கமான் ஜாக்கி, கமான்” என்று கூவினேன்.

எப்படியோ அவரை ஒரு மாதிரி, கிளப்பி முடிந்தவரை சாமான் மூட்டைகளைக் கட்டி நாங்கள் மேலே ஏற ஆரம்பித்தோம். தவழ்ந்து, தொற்றி கடுமையான போராட்டத்திற்குப் பின் நாங்கள் நால்வரும் ஜெனீவா உச்சி முகட்டை ஏறி, பின் 500 அடிகள் கீழே இறங்கி தெற்கு கணவாயை அடைந்தோம்.

உடனே சாமான்களை போட்டுவிட்டு தார்கேயும் நாம்கேயும் அப்படியே உட்கார்ந்துவிட்டார்கள். சற்று நேரம் கழித்து தட்டுத் தடுமாறி கூடாரத்தை அமைத்துவிட்டு இருவரும் உள்ளே தவழ்ந்து படுத்துவிட்டனர். இனி இவர்கள் அசையப் போவதில்லை என்பது தெரிந்துவிட்டது.

ஆனால் எப்படியோ என்னுடைய மூன்றாவது நுரையீரல் இன்னும் நன்றாகவே வேலை செய்தது.

இன்னும் நிறைய சாமான்களும் உணவுகளும் ஐந்தாவது முகாமில் இருந்தன.

நான் ஒருவனாகக் கீழே இரு முறைகள் இறங்கி அவை அனைத்தையும் மேலே, இந்த ஆறாவது முகாமிற்குக் கொண்டு வந்தேன்.

நான் என் வாழ்க்கையில் எத்தனையோ சிகரங்களுக்கு, மிக தனிமையான இடங்களுக்குச் சென்றிருக்கிறேன். ஆனால் அவை எவையும் இந்த தெற்குக் கணவாய்க்கு, கடல் மட்டத்திலிருந்து 25,850 அடிகள் உயரத்தில் எவரெஸ்ட் மற்றும் லாட்ஸ் சிகரங்களுக்கு மத்தியிலிருக்கும் இந்தத் தெற்குக் கணவாய்க்கு இணையாக இராது.
கண நேரம்கூட இடைவெளியில்லாமல் காற்று ஓங்காரித்து அலை அலையாய், கனமான அலை அலையாய் பனியால் அறைந்து கொண்டே இருந்தது.

எங்களின் கனவு, எவெரெஸ்ட் சிகரத்தின் நீண்ட ஒடுங்கிய உச்சி, எங்களுக்கு மேலே, மேன்மேலே ஏறிக்கொண்டே போனது. இத்தனை உயர மலைக்கும் மேல் இன்னொரு பிரமாண்ட மலை அமைந்திருப்பது போல் போய்க்கொண்டே இருந்தது. இதுவரை மனிதன் அதிகபட்சம் அடைந்த உயரத்திற்கு நாங்கள் இப்போது வந்திருந்தாலும் உச்சி சிகரம், எவரெஸ்ட் இங்கிருந்து பார்க்கத் தெரியவில்லை. அது (south summit) தென் சிகரத்திற்குப் பின்னால் மறைந்திருந்தது. முதலில் தென் சிகரத்தை அடைந்த பின்புதான் கடைசி சிகரமான எவரெஸ்ட்டிற்கான வழியைத் தேர்ந்தெடுக்க முடியும்…

இரவு வந்தது. காற்றின் ஓலம் மேலும் அதிகரித்தது. நானும் லாம்பர்ட்டும் ஒரு கூடாரத்தில் நெருக்கியடித்துப் படுத்துக்கொண்டோம். முந்தின இரவு அளவிற்கு மோசமில்லை. ஒரு வழியாய் இன்னொரு காலை வந்தது.

மூன்று ஷெர்பாக்களும் நகரவில்லை. ஜாக்கி சாவைப் பற்றியே முனகிக் கொண்டிருந்தான். மற்ற இருவரும்கூட கிட்டத்தட்ட அப்படித்தான்.

நாங்கள் எவரெஸ்ட்டை அடைய வேண்டுமெனில் நிச்சயம், இன்னொரு காம்ப்பை, ஏழாவது முகாமை, மேலே ஒடுங்கிய உச்சியில் அமைக்கவேண்டும்.

சாஹிப்புகள் ஷெர்பாக்களிடம் நயமாகப் பேசிப் பார்த்தார்கள். நிச்சயம் சிறப்பு பரிசுகள் தருவதாக சொல்லிப் பார்த்தார்கள். ஆனால் அவர்களது உடல்களையும் உள்ளங்களையும் நகர்த்த முடியாது என்று புரிந்துவிட்டது.

சரி, வேறு வழியில்லை. இந்த நேரத்தில் அடுத்து என்ன செய்ய முடியுமோ, வேண்டுமோ அதைச் செய்ய ஆரம்பித்தோம்.

ஜாக்கியை ஒரு மாதிரியாய் நிற்க வைத்து, தார்கேவிற்கும் நாம்கேவிற்கும் நடுவே கயிற்றில் பிணைத்துவிட்டு மூவரையும் கீழே இறங்க பணித்தோம்.

பின்புதான் இதோ, சாஹிப்புகள் மூவரோடு நானும் மேலே ஏறி தென் சிகரத்திற்கு மிக அருகில் வந்து பின் இரு சாஹிப்புகள் கீழே இறங்கி மறைந்துவிட நானும் லாம்பர்ட்டும் மட்டும் தனியே…

உலகின் மிக உயரமான மலை முகட்டில், மனிதன் இதுவரை சாதித்த அதிக பட்ச உயரத்தில், இம்மயக்கும் மே மாத மாலையில் எங்களது கனவிற்கு அருகில், இருவருக்கும் பொதுவான ஒற்றை வாக்கியம் தவிர, வேறு எந்த பொதுவான மொழியும் இல்லாத, தேவையும் இல்லாத ஓர் ஓயா கணத்தில் அணைந்து கொண்டிருக்கும் தொடு வான விளிம்பைக் கண்டவாறு அமர்ந்திருந்தோம்…

நான் மெல்ல தலையை நிமிர்த்தி தென் சிகரமும் எவரெஸ்ட் சிகரமும் இருக்கும் திசையை நோக்கினேன். மென் இருளில் அவை பொதிந்திருந்தன. கண்களுக்குத் தெரியவில்லை ஆனாலும் அவற்றை அருகாமையில் உணர்ந்தேன்.

லாம்பர்ட் என்னிடம் தன் கட்டை விரலை உயர்த்திக் காட்டி “நாளை… ça va bien” என்றார், நானும் புன்னகைத்தேன்.

சில வருடங்களுக்கு முன், எவரெஸ்ட் சிகரத்தைக் காட்ட, டார்ஜிலிங்கின் பின்னால் இருக்கும் டைகர் ஹில்லிற்கு ஏழு அமெரிக்க சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவைக் கூட்டிக்கொண்டு ஏறிய விடியற்காலை நினைவிற்கு வந்தது.

விடியல் ஒளியில் “அதோ…ம்ஹூம், அதில்லை எவரெஸ்ட், அது லாட்ஸ்…அதனருகில்…அதுவும் இல்லை, அது மகலு. இன்னொன்று…அதோ, இன்னும் தொலைவில்… எல்லாவற்றையும் விட சிறியதாக தெரிகிற சிகரம்..உற்றுப் பாருங்கள்…அதுதான் மவுண்ட் எவெரெஸ்ட்…”

எல்லாவற்றையும் விட சிறியதாக..!

இன்று அது எங்கள் தலைக்கு மேல் பிரமாண்டமாக இருளில் பொதிந்திருக்கிறது. இதுவரை மனிதக் காலடியே படாமல், பட விடாமல் தவமிருக்கிறது…

எங்களுக்குப் பசியே இல்லை. இருந்தும் மெழுகுவர்த்தியைக் கொண்டு பனியை இளக்கி அந்த நீரில் கொஞ்சம் பாலாடைக் கட்டியை கழுவி உண்டோம்.

லாம்பர்ட் என் கால் விரல்களைக் சுட்டி “பத்திரம், பனியில் தோலுரி நோய் வந்துவிடப் போகிறது” என்ற பொருளில் கண்களை உருட்டினார்.

அவருக்கு இந்தப் பிரச்சனை இல்லை. அவருடைய இரு கால்களிலும் விரல்களே இல்லை.

நான் குனிந்து அசாதாரண உரு கொண்ட அவரது சப்பாத்துகளை நோக்கினேன். அவரது நெடிதுயர்ந்த உயரத்திற்கு சம்பந்தமே இல்லாமல் சிறிய சப்பாத்துகள் அவை.

Mount blancல் மூன்று நாள்கள் பனி புயலில் சிக்கிக்கொண்டதன் விளைவின் பலன் இது.

எங்களிடம் சயனப் பை இல்லாததால் முடிந்தவரை இருவரும் நெருக்கமாகப் படுத்துக்கொண்டோம். லாம்பர்ட் பெரும் உருவம் கொண்டவர். அவருக்குள் நான் ஒடுங்கிக்கொண்டேன். ஒருவரையொருவர் தேய்த்து சூடுபடுத்திக்கொண்டு உறங்க முயற்சி செய்தோம்.

தூக்கமே வரவில்லை.
கூடாரத்திற்கு வெளியே பனியும் காற்றும் சுழன்று அடித்த ஓங்கார சத்தங்களுக்கு இணையாக என்னுள்ளும் என்ன என்னவோ சுழற்றி அடித்துக்கொண்டிருந்தது.

இது என்னுடைய ஐந்தாவது முயற்சி…இதுவரை வந்த உயரங்களில் இதுதான் அதிகபட்சம் என்றாலும்…

என்னுடைய கனவு மட்டுமா இது? எத்தனையோ பேரின் கனவு அல்லவா?

1935ல் திபெத் வழியே முயற்சித்த என் முதல் பயணத்தில் மூன்றாவது முகாமிற்கு அருகில் வடக்கு சிகரத்திற்குச் சற்றுக் கீழே கண்டுபிடித்த ஆங்கிலேயரின் உடல் நினைவிற்கு வந்தது…அவரது பெயரை நினைவு கூற முயற்சித்தேன். வில்சன்…ஆம், மவுரிஸ் வில்சன். மூன்றே மூன்று திபெத்தியர்களை மட்டும் கூட்டிக்கொண்டு அனுமதியின்றித் திபெத் வழியாக முயற்சி செய்தவர், திரும்ப வரவே இல்லை. நார் நாராய்க் கிழிந்து போன கூடாரத்தில் எலும்புக்கூட்டிற்கு மேல் உறைந்த தோலுடன் உடல் இருந்த நிலை இப்போதும் சின்ன திடுக்கிடலைக் கொடுத்தது.

அவர் குனிந்து கால்களிலிருந்து பனிக் காலணிகளைக் கழற்றிவிடும் போது உறைந்து போனது போல், இறந்து போனது போல் இருந்தது. சொல்லப்போனால் ஒரு காலின் காலணி கழன்று கீழே இருந்தது. இன்னொரு காலின் காலணியின் வார்இழை அவரது கை எலும்புகளின் ஊடாக இருந்தது…

இதற்கு முன் 1922 பயணத்தில் பனிப்பாறைச் சரிவில் மறைந்து போன ஷெர்பாக்களின் பெயர்களை நினைவு கூற முயற்சித்தேன்…

உறங்கினேனா என்று தெரியவில்லை. ஆனால் நிச்சயம் கனவு வரவில்லை. ஒரு விதத்தில் நிம்மதியும் கூட…
சென்ற வருடம் இப்போது போன்று ஓர் இரவு, கஞ்சன்ஜங்கா பயண முகாமில் உறங்கியபோது தோன்றிய கனவு மங்கலாக, கூடாரத்திற்கு வெளியிலான இவ்விரவு மலை முகடுகள் போன்று மங்கலாகத்தான் நினைவிருக்கிறது.

நான் இதுவரை சந்தித்தே இராத பெண்மணி, எல்லாருக்கும் உணவு வழங்கிக்கொண்டிருக்கிறார். எனக்கோ கடுமையான பசி. ஆனால் அவர் என் பக்கமே திரும்பவில்லை.
காலை, பிற ஷெர்பாக்குகளிடம் கனவைக் குறித்துச் சொன்னபோது அவர்கள் முகங்களில் சற்றே கவலை கோடுகள். துர்சகுனமாக பார்த்தார்கள்.
எங்கள் குழுவே சிறிதுதான். சொல்லப்போனால் ஒரே ஒரு ஸ்விஸ் சாஹிப்தான். ஜார்ஸ் ப்ரே-இந்தியா, பாகிஸ்தான் மற்றும் பர்மா பகுதிகளுக்கான துணை வர்த்தக துணை ஆணையர் என்ற பதவி இருந்தாலும் எங்களைப் பொறுத்தவரை ப்ரே ஒரு அற்புதமான மலையேற்ற வீரர்.

என் கனவையும் எங்கள் கவலைகளையும் ஒரே சிரிப்பில் புறம் தள்ளிவிட்டார். “கிளம்பலாம்”
மற்ற ஷெர்பாக்கள் கிளம்ப மறுத்துவிட்டனர். ஒருவேளை நானும் மறுத்திருக்க வேண்டும்..


இறுதியில் ப்ரேயும் நானும் மற்றும் ஆங் டவாவும் கிளம்பி ஏற ஆரம்பித்தோம். முதலில் சற்று இலகுவாக இருந்தாலும் மேலே ஏற ஏற வழி குறுகலாகவும் செங்குத்தாகவும் சென்றது. பனியும் இறுகிபோயிருந்ததால் நான் நின்று இரும்பு கூர் முனைகள் கொண்ட வார்களை என் காலணிகளில் அணிந்து கொண்டேன். இவை இறுகியப் பனியில் காலணிகளால் உதைத்து செருகிச் செருகி சரியும் அபாயம் இல்லாமல் மேலேறிச்செல்ல உதவும். முன்னே ஏறிக்கொண்டிருந்த ப்ரேயின் காலணிகளைக் கவனித்தேன். அவரிடம் கேட்டேன்.
“எனக்கு அவை தேவையில்லை” என்று பதிலிறுத்துவிட்டு மேலே தொடர ஆரம்பித்தார். ஆல்ப்ஸ் மலைப்பகுதிகளில் ஏறிய அனுபவம் அவருக்கு அதிகம் உண்டு.
அவர் முதலிலும், தொடர்ந்து நானும் பின் ஆங் டவாவும் ஒரு சீராக மலையில் தொற்றி ஏறிக்கொண்டிருந்தோம். அப்போது கிட்டதட்ட 17,000 அடிகள் உயரத்திலிருந்தோம் என்று நினைக்கிறேன்.

என்ன நடந்தது என்று தெரியாது. திடீரென ப்ரே என்னை நோக்கி அதிவேகமாக விழுவதைக் கண்டேன். ஒரு கணம்தான். அல்லது அதற்கு குறைவான நேரம். என்னையறியாமல் நீட்டிய கைகளின் ஓர் விரலின் மீது மோதியது கடுமையான வலியின் மூலம் உறைத்தது. என்னைத் தாண்டி, ஆங் டவாவைத் தாண்டி ப்ரே கடும் வேகத்தில் கிட்டதட்ட ஆயிரம் அடிகள் கீழே தட்டென மோதியதைக் கண்டோம்.

நானும் ஆங் டவாவும் மலையோடு மலையாக பனியோடு பனியாக உறைந்து அசையாமல் இருந்திருந்தோம். இந்த மாதிரி சமயங்களில் உறைவதிலிருந்து மீண்ட அடுத்த கணத்தில் பார்ப்பவர்களும் தவறி விழ அனைத்து வாய்ப்புகளும் இருக்கும்…
தலையை உயர்த்திப் பார்த்தால் ப்ரே எனக்கு மேல் தொங்கி கொண்டிருப்பார் என்றே எண்ண தலைப்பட்டேன். ஆனால் உண்மையில் ப்ரே எங்களுக்கு ஆயிரம் அடிகள் கீழே சின்ன புள்ளியாக தெரிந்தார்…

லாம்பர்ட் உறங்கினாரா என்பது நினைவில்லை. எப்படியோ, ஒரு வழியாய், யுகங்கள் கடந்து வெளியே மெல்லிய ஒளிக் கீற்றிற்கான ஆயத்தங்கள் தெரிந்த போது இருவரும் மெல்லத் தவழ்ந்து கூடாரத்தை விட்டு வெளி வந்து வெளி உலகை நோக்கினோம்.

நிச்சயம் சரி இல்லை. பனிப்பொழிவு இல்லை. ஆனால் வானம் முழுவதையும் கடுமையான மேகம் மூடியிருக்கப் பெரும் பனிப்புயல் வரக்கூடிய அத்தனை சாத்தியங்களையும் உணர்ந்தோம். சில கணங்கள் தயங்கி யோசித்தோம். ஆனாலும் அடுத்த என்ன செய்யவேண்டும் என்பதில் இருவருக்கும் சந்தேகம் எதுவும் இல்லை. லாம்பர்ட் கட்டை விரலைக் காட்டி கண்ணடித்தார். நான் தலையை ஆட்டியபடியே முறுவலித்தேன்.

கூடாரத்தைப் பிரித்து சாமான் மூட்டைகளை மரத்துப் போயிருந்த விரல்களைக் கொண்டு கட்டி, ஆணிகள் கொண்ட மலையேறு காலடிகளைப் பொருத்திக்கொண்டு புறப்படப் பல யுகங்கள் கடந்து போனது போல் இருந்தது.

பின், மெல்ல முன்னேற ஆரம்பித்தோம். முக்கோண முகடை ஒட்டி…ஓர் அடி எடுத்து வைத்தோம். பின் இரண்டாவது அடி, மூன்றாவது அடி…பின் நிறுத்தம்… மறுபடியும் ஓர் அடி, இரண்டாவது அடி, மூன்றாவது அடி…நிறுத்தம்.. துளித் துளியாய் ஒரு ராட்சச மிருகத்தின் செங்குத்தான முதுகில் தொற்றிக்கொண்டு துளித் துளியாய் ஏறினோம். பல இடங்களில் கைகள், கால்களால் தவழ்ந்துதான் போக வேண்டியிருந்தது.

ஒரு பக்கம் செங்குத்துச் சரிவும் மறுபுறம் பனி கவிந்துள்ள மாபெரும் முகடுமான எங்கள் பாதை சில இடங்களில் நேர் செங்குத்தாகவும் குறுகிக்கொண்டும் போனது.

அப்போது பனிக் கோடாலிகளைக் கொண்டு பாதைகளைச் செதுக்குவது இன்றியமையாததாக இருந்தது. இந்த மாதிரியான தருணங்களில் லாம்பர்ட் அருமையாக வேலை செய்வார். மிக மிக சிறிய இடைவெளி இடங்களில் விரல்கள் இல்லாத கால்களால் ஆடு போன்று கவ்விக்கொண்டு நிற்பதில், பின், ஏறுவதில் லாம்பர்ட் கெட்டிக்காரர்…

ஒரு மணி நேரம் கடந்து போனது, ஒரு நாள் போல இருந்தது.. அல்லது ஒரு வாரம்…

காலநிலை மேன்மேலும் மோசமாக ஆகிக்கொண்டிருந்தது. எனது மூன்றாவது நுரையீரல் இப்போது சிரமப்பட்டது. தொண்டை வறண்டு கடுமையாக வலிக்க ஆரம்பித்தது.

முன்னால் ஊர்ந்து கொண்டிருந்த லாம்பர்ட் திடீரென நிறுத்தி, திரும்பி என்னிடம் என்னவோ சொன்னார். எனக்குப் புரியவில்லை. பின் சற்று நேரம் கழித்து திரும்பவும் என்னவோ சொன்னார்.

பனிக் கண்ணாடியின் பின் அவரது புன்னகையை பார்க்க முடிந்தது. என்ன சொன்னார் என்றும் புரிந்தது.

நானும் பதிலுக்கு “ça va bien”!

ஆனால், இது உண்மையல்ல. எங்கள் நிலைமை சரியில்லை. இதை நாங்கள் இருவருமே உணர்ந்திருந்தோம். எங்களைப் பொறுத்தவரை எல்லாம் சரியாக போய்க்கொண்டிருந்தால், “ça va bien” இல்லையெனினும் “ça va bien!”

இந்த மாதிரி சமயங்களில் பல்வேறு விஷயங்களை மனதில் நினைத்துக் கொண்டிருப்பேன். இன்றும் அது போலத்தான். டார்ஜிலிங்கை, மனைவி ஆங் லமுவை, என் பெண்களை நினைத்துக் கொண்டேன். நாங்கள் இன்று கனவை அடைவோமா? அடைந்தபின் கீழே திரும்ப முடியுமா?

திடீரென ஜார்ஜ் மலரியையும், இர்வினையும் நினைத்துக் கொண்டேன். 1924ல் சிகரத்தின் அந்தப் பக்கத்திலிருந்து, கிட்டதட்ட நாங்கள் இப்போது ஏறியிருக்கும் உயரத்தின் அளவில்தான் இருக்கும், அந்த இரு ஆங்கிலேயர்களும் காணாமல் போனபோது.

இன்று வரை அவர்களுக்கு என்னவாயிற்று என்று தெரியாது…

பிறகு… நான் எதையும் நினைப்பதை நிறுத்திவிட்டேன். குளிரில் கைகளும் கால்களும் மறத்து போய்விட்டது போல் மூளையும் மரத்துவிட்டது போல் இருந்தது. இயந்திரம் போல் நின்று நகர்ந்து பின் நின்று நகர்ந்து…

பின்… நாங்கள் இருவருமே நின்றுவிட்டோம். மேலே நகரவில்லை. லாம்பர்ட் அடித்து விசிறிக்கொண்டிருந்த பனிக்காற்றின் ஊடே அசையாமல் நின்றார். அடுத்து என்ன என்று யோசித்துக் கொண்டிருப்பது புலப்பட்டது.

எனக்கோ, யோசிப்பது என்பது மூச்சு விடுவதைவிடச் சிரமமாக இருந்தது. எவ்வளவு தூரம் வந்திருப்போம்… நான் கீழே நோக்கினேன். கிட்டதட்ட 650 செங்குத்தான அடிகள். இதை ஏறி வருவதற்கு எங்களுக்கு ஐந்து மணி நேரங்கள் பிடித்திருக்கிறது.

மேலே பார்த்தேன். தென் சிகரம் எங்களுக்கு மேலே கிட்டதட்ட 500 அடிகள் உயரத்தில் தெரிந்தது. எங்கள் கனவுச் சிகரம் அல்ல, தென் சிகரம் மட்டுமே. அதனைத் தாண்டி மேலும் போக வேண்டும் எவரெஸ்ட் கனவுச் சிகரத்திற்கு.

வாழ்க்கையின் மிக முக்கிய தருணங்களில், மிக இக்கட்டான முட்டுச் சந்துகளில் எப்படி திரும்ப வேண்டும் என்னும் முடிவுகளை எடுப்பது என்பது விளங்க முடியாத புதிர்தான்.


நாங்கள் மேலும் சிரமப்பட்டு தென் சிகரத்தை அடைந்திருக்க முடியும். ஒரு வேளை அதையும் தாண்டி எவரெஸ்ட்டையும் ஒரு வேளை அடைந்திருக்கலாம். ஆனால் நிச்சயம் திரும்ப வரமுடியாது…
நாங்கள் 28,250 அடிகள் உயரத்தில், இதுவரை மனிதனின் அடைய முடிந்த அதிகபட்ச உயரத்தில் இருந்தோம். ஆனால் இது போதாது…

நாங்கள் இருவரும் ஒன்றும் பேசிக் கொள்ளவில்லை. ஆனால் ஒரே சமயத்தில் சட்டெனத் திரும்பினோம். ஒரு வார்த்தைகூட பேசிக் கொள்ளவில்லை. வந்த வழியே, தவழ்ந்து ஏறிய தொடர்ச்சியில் இப்போது தவழ்ந்து இறங்க ஆரம்பித்தோம். மெல்ல, மெல்ல…ஒன்றும் பேசிக் கொள்ளாமல்… தவழ்ந்து…

ஒரு செங்குத்து வளைவில் திரும்பி மறைவதற்கு முன் திரும்பி மேலே, வந்த வழியைப் பார்த்தேன். நெடிதுயர்ந்து பனி அடர்ந்து 500 அடிகளுக்குப் அப்பால் தென் சிகரத்தை நோக்கிய பாதை…
மறுபடியும் வர முடியுமா..? எப்போது..?

கீழே மெல்லத் தவழ்ந்து கொண்டிருந்த லாம்பர்ட்டை நோக்கினேன். அவரும் சொல்லி வைத்தார்போல் தலையை நிமிர்த்தி, ஒரு கணம் தயங்கி கட்டை விரலை உயர்த்தி என்னவோ கூறினார். அடிக்கும் பனிக் காற்றில் எனக்கு கேட்கவில்லை. ஆனால் என்ன என்பது தெரியும். புன்னகைத்தேன்.

2 Replies to “முதல் காலடி”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.