ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்

பிரபு மயிலாடுதுறை

இந்த ஆண்டு ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள்

—————————————————————-

இந்த ஆண்டு ஃபிப்ரவரிக்கு 29 நாட்கள். இன்று நான்காவது முறையாக சௌந்தர் சொன்ன போது மாயக்கண்ணன் எங்கள் இருவரையும் குழப்பமாகப் பார்த்தான். பின்னர் அனிச்சையாகக் காலண்டரை நோக்கிப் பார்வையைத் திருப்பினான். நான் பார்வையைத் திருப்பாமல் சௌந்தர் மேலேயே வைத்திருந்தேன். சௌந்தர் இந்த உலகில் இல்லை. அவன் எந்த உலகில் இருக்கிறான் என்று எங்களால் கணிக்க முடியவில்லை.

‘’அண்ணா! அது ஒரு மாலை நேரம். டிசம்பர் மாசம் 20ம் தேதி. அன்னைக்கு எங்களுக்கு செமஸ்டர் ரிசல்ட் வந்திருந்தது. பர்த் டே எப்பன்னு கேட்டேன். பிப்ரவரி 29ன்னு சொன்னா. எல்லாரும் வருஷத்தில ஒரு நாளை பர்த் டே-ன்னு  செலிப்ரேட் பண்ணுவாங்க. உனக்கு மூணு நாளான்னு கேட்டேன். பிப்ரவரியோட கடைசி நாள். 28 அல்லது 29. பிப்ரவரி 28க்கு மறுநாள் மார்ச் 1.’’

காலையில் எழுந்து உட்கார்ந்திருப்பான். நான் எப்போது எழுந்தாய் என்று கேட்காமல் குட் மார்னிங் சௌந்தர் என்பேன். அவன் மறுமுகமன் சொல்வதற்குள் எழுந்து போர்வையை மடிப்பேன். பாயைச் சுருட்டி எடுத்து வைப்பேன். அச்செயலின் விரைவுத்தன்மையால் அவனும் சுருட்டி வைப்பான். முகம் மட்டும் கழுவுவேன். 

’’வாக்கிங் போகலாமா?’’

நான் பேச்சை ஆரம்பிக்கக் கூடாது. அவனும் ஆரம்பிக்கவில்லை என்றால் உத்தமம். வேகமாக நடப்பேன். வேகத்துக்கு ஈடு கொடுத்து வருவான். ஏதாவது ஒரு நிமித்தம். சௌந்தர் துவங்கி விடுவான். ஒருமுறை தாமரைத் தடாகம் ஒன்றைப் பார்த்தோம்.

‘’அண்ணா! தில்லியில லோட்டஸ் டெம்பிள்க்கு போயிருக்கீங்களா?’’

நான் சென்றிருக்கிறேன். பதில் ஏதும் சொல்லவில்லை. வேகமாக நடக்க மட்டுமே செய்தேன். 

‘’சிவப்பிரியா போய்ட்டு வந்து சொன்னான்னா. அப்புறம் ஆறு மாசம் கழிச்சு நானும் போனேன்.’’

நான் எந்த பதிலும் பேசாமல் நடக்க மட்டுமே செய்தேன். 

‘’அண்ணா அது ஆகஸ்ட் மாசம். 23ம் தேதி. அன்னைக்கு காலைல ஃபர்ஸ்ட் ஃபுலோர்ல 34ம் நம்பர் ரூம்ல பார்த்தேன்.’’…

அவன் ஆரம்பங்கள் அனைத்துமே இப்படித்தான். நாள் நேரம் தேதி பொழுது அனைத்தும் துல்லியமாக இருக்கும். மனதில் அவை இன்னும் முழுமையான உயிர்ப்புடன் இருக்கின்றன. மறதி இன்னும் தீண்டவேயில்லை. அந்த கணங்கள் அந்த பொழுதுகள் அடர்த்தி குறைய வேண்டும். அவற்றின் இடத்தில் வேறேதாவது வந்து அமர வேண்டும். படைத்த தெய்வங்கள் கருணை வைத்தால்தான் உண்டு. கடவுள் சில விஷயங்களை ஒரு துளி மட்டுமே கொடுக்கச் செய்கிறான். 

 …’’பாத்து எட்டு நாள் ஆகியிருந்தது. எட்டு நாளும் ஒரு மாதிரி கஷ்டமா இருந்தது. பாக்கப் போற நாள் பத்தியே யோசிச்சுட்டு இருந்தேன். அதுக்கு ரெண்டு நாளைக்கு முன்ன அந்த நாளுக்கு முதல் நாள் எல்லாம் பெரிய எதிர்பார்ப்பா இருக்கு. அவகிட்ட சொல்ல முடியாது. கோச்சுப்பா. முகத்தைப் பார்த்தே அவளுக்கு எல்லாம் தெரியும். ஒரு கண நேரப் பார்வை. அதுக்குப் பின்ன இந்த உலகம் வேறொன்னா மாறிடும். அவ முன்னாடி இருக்கும் போது மனசுல எந்த அற்பத்தனமும் இருக்காதுன்னா. அவ எப்பவுமே பெருந்தன்மையோட மட்டுமே இருந்தா.’’

பேச்சை மாற்ற வேண்டும். அது வெளிப்படையாகத் தெரியாமல் இருக்க வேண்டும். இருவரும் ஏதும் பேசவில்லை. என்னுடைய நடைக்கு அவனால் ஈடு கொடுக்க முடியாது. மூச்சு திணறுவான். அவன் உடலும் மனமும் சீரற்றுப் பொருந்தியிருப்பது அவன் நடையில் தெரியும். அவனுடைய மெதுவான நடையுடன் நான் முயன்று இணைந்து கொண்டால் அதன் பின் அவனைத் தடுக்க முடியாது. பேச்சு பேச்சு பேச்சு. ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு. எளிய சம்பவங்கள். எளிய சம்பவங்கள்தான் ஆனால் அவற்றுக்கு ஓர் அபூர்வத்தன்மையை அளிக்கும் மாயம் வாழ்க்கையில் நிகழ்ந்து விடத்தானே செய்கிறது. ஏன் கொடுத்தாய் ஏன் கொடுத்தாய் என்றே பலரும் கேட்கிறார்கள். ஏன் எடுத்தாய் ஏன் எடுத்தாய் என்றே பலரும் தவிக்கிறார்கள்.

’’லோட்டஸ் டெம்பிளை நீ பாத்தப்ப என்ன நினைச்ச?’’

‘’தாமரைக்கு உள்ள இருக்கோம்னு நினைக்கறப்பவே மனசு கரைஞ்சிடுறாப் போல இருந்தது. இதயத்துக்குள்ள இருக்கற உயிர் மாதிரி மனசு ஈரமா இருக்கு. அமைதியா சில நிமிஷம் ஒக்காந்திருந்தன். மனசுல எந்த கேள்வியும் இல்ல. எந்த பதிலும் இல்ல. வெறுமனே இருப்பு. வெறுமனே சுவாசம். ஒரு கொழந்தையைப் போல சுவாசம் உள்ள போகுது வெளிய வருது. அதில ஒரு மென்மை இருக்கு. அதில ஒரு அழகு இருக்கு. வாழ்க்கை அழகானதுதான்ணா’’

இப்போதைக்கு மீண்டு விட்டான். மெல்ல நடந்தோம். நான் என்னுடைய தொழில் குறித்து சில விபரங்கள் சொன்னேன். அன்று எந்த சைட்-டில் வேலை நடக்கிறது என்றும் எவ்விதமான மேற்பார்வை தேவைப்படும் என்றும் சொன்னேன்.

‘’நானும் கூட வரேன்’’ சௌந்தர் உற்சாகமாகச் சொன்னான்.

கட்டிடத்தில் ஒரு பெயிண்டர் ஜன்னலின் இரும்புக் கம்பிகளில் உப்புத்தாளைத் தேய்த்துக் கொண்டிருந்தார். உப்புத்தாளால் சிலர் சுவரைத் தேய்த்துக் கொண்டிருந்தனர். பிரைமரை கரைத்துக் கொண்டிருந்தனர் சிலர். சவுக்கு கம்புகளைக் கொண்டு தற்காலிக ஏணி அமைத்துக் கொண்டிருந்தார் ஒருவர். கட்டிட வேலை நடைபெறும் இடத்தில் இருப்பவர்கள் மனம் பலவிதங்களில் சுழன்று ஒரு சீர்மை கொள்கிறது. அமைதிக்கு முன்னான சுழற்சியைத் தாள முடியாதவர்கள் அங்கிருந்து வெளியேறி விடுகிறார்கள். அதனைக் கடப்பவர்கள் அமைதியாக இருக்கிறார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்னால், ஒரு பெரிய கட்டிட வேலை. கடைத்தெருவுக்கு இணையாக இருக்கும் ஒரு தெருவில் ஒரு சிமெண்ட் குடோன் கட்டிக் கொண்டிருந்தோம். பணி இடத்தில் அன்று முப்பது பேர் வேலை பார்த்திருப்பார்கள். நான் வாசலில் நின்றிருந்தேன். ஒருவர் ஹீரோ ஹோண்டாவில் வந்திருந்தார். வண்டியை நிறுத்தி விட்டு நிழலாய் இருந்த பகுதியில் சம்மணமிட்டு அமர்ந்து கொண்டார். முகத்தை கையால் மூடியவாறு ஐந்து நிமிடம் அப்படியே அமர்ந்திருந்தார். நான் எதுவும் கேட்கவில்லை. நான் வைத்திருந்த வாட்ட்ர் பாட்டிலை அவருக்கு அருகில் வைத்தேன். கைகளை நீக்கி கண் திறந்து பார்த்தார். அவருக்கு எதிரில் தண்ணீர் பாட்டில். ஓவென்று அழுதார். வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை. குடியானவராக இருக்கக் கூடும். சொத்து தகராறு. சகோதரர்களுக்குள் அபிப்ராய பேதம். வாங்கிய கடனுக்கு வட்டி முடியாத நிலை. இவை அனைத்துமாகக் கூட இருக்கலாம். நான் உள்ளே சென்று விட்டேன். உள்ளே அனைவரும் பலவிதமான பணியில் மூழ்கியிருந்தனர். அவர் அங்கு இருப்பதே பணியாளர்கள் யாருக்கும் தெரியாது. சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்தேன். கட்டுமானப் பொருட்களை போட்டு வைக்கும் தற்காலிக குடோனிலிருந்து ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை எடுத்து வந்து போட்டேன். அவர் மெல்ல எழுந்து அதில் அமர்ந்தார். தண்ணீர் குடித்தார். முகம் சற்று தெளிந்தது.

‘’தம்பி! ரொம்ப நன்றிப்பா’’

முழு பாட்டில் தண்ணீரையும் குடித்து முடித்தார். 

‘’எல்லாம் சரியாயிடும்ன. எதுக்கும் கவலைப்படாதீங்க’’

நம்பிக்கையுடன் எழுந்து சென்றார். ஒரு பாட்டில் தண்ணீரும் ஒரு நற்சொல்லும் வாழ்க்கைக்கு நம்பிக்கை அளிக்கிறது என்பதுதான் நிதர்சனமா?

ஒரு மாதம் கழித்து கடைத்தெருவில் தற்செயலாக அவரைப் பார்த்தேன். டூ-வீலரில் சென்று கொண்டிருந்தவர் என்னைப் பார்த்து சந்தோஷமாகக் கையசைத்தார். மனிதன் தன் துயரை வெளிப்படுத்துகிறான். வெவ்வேறு விதங்களில். மகிழ்ச்சியையும் வெளிப்படுத்துவது போலவே.

மாயக்கண்ணன் கார் ஓட்டினான். அவன் அருகில் சௌந்தரை உட்காரவைக்கக் கூடாது. இவன் ஒன்று பேச அவன் ஒன்று பேச என்றாகி விடும். நான் சௌந்தரை பின்னால் உட்கார வைத்துக் கொண்டேன்.

ஆடைகள் தொள தொள என்று இருக்கின்றன. ஷேவ் செய்யாத முகம். தச்சர் என்னிடம் சௌந்தரின் நெருக்கமான சொந்தக்காரர்கள் யாராவது இறந்து போய் விட்டார்களா என்று கேட்டார். இல்லை என்று நான் சாதாரணமாகச் சொன்னேன். நிலை கொள்ளாமல் இருக்கிறாரே என்றார். நான் எதுவும் சொல்லவில்லை. 

தன்னிச்சையாக ஸ்பெக்ஸைக் கழட்டித் துடைத்தான். 

‘’என்னோட முதல் ஸ்பெக்ஸ் அவ வந்து வாங்கிக் கொடுத்ததண்ணா.’’

அன்று மார்ச் மாதம் ஐந்தாம் தேதி. மதியம் இரண்டு பிரிவேளை.  வகுப்பு முடிந்து ஸ்கூட்டியில் அவளும் பைக்கில் சௌந்தரும் சென்றிருக்கிறார்கள். 

‘’அவ ஒரு பொருளை ஒரு விஷயத்தைப் பாக்கற விதமும் இது நல்லாயிருக்கும்னு எடுக்கற விதமும் அற்புதமா இருக்கும்ணா. அவ செய்யற ஒவ்வொரு விஷயத்திலயும் அப்படி ஒரு நேர்த்தியும் அழகும் இருக்கும். எம்பராய்டரி ரொம்ப மெதுவா போடுவாங்க. ஆனா அதைக் கூட பூக்கட்டுற மாதிரி சர சர ன்னு செய்வான்னா. உனக்கு இந்த ஸ்பெக்ஸ் ரொம்ப ஜோரா இருக்குன்னு சொல்லி அவதான்னா மாட்டி விட்டா”

அதிசயமாக அன்று இரவு பத்து மணிக்கெல்லாம் உறங்கி விட்டான். மாயக்கண்ணன் பக்கத்து ரூமிலோ கூடத்திலோ படுத்திருப்பான். அன்று என் ரூமுக்கு வந்தான். நான் மௌன சமிங்ஞை காட்டினேன். இரவு விளக்கை போட்டேன். குழல் விளக்கை ஆஃப் செய்தேன்.

‘’என்ன சார்! இவ்வளவு எமோஷனலா இருக்கார்?’’

’’தலைவிதி. வேறென்ன சொல்றது.’’

‘’ஏன் சார் அவங்க கல்யாணம் பண்ணிக்கலை?’’

’’சௌந்தர் எனக்கு மூணு செட் ஜூனியர். நான் ஃபைனல் இயர் படிச்சப்ப இவன் காலேஜூக்கு வந்தான். ஒரு வருஷத்தில நான் கோர்ஸ் முடிச்சு வந்துட்டன். இதுக்கு முன்னாடி மைசூர் பக்கத்தில ஒரு கம்பெனில வேலை பார்த்தேன். ஒன்னரை வருஷம். அப்புறம் இங்க. இங்க முழுமையா பொருந்திப் போச்சு. ஆர்கனைஸ்டு ஒர்க். படிப்பு முடிஞ்சதும் அந்த பொண்ணுகிட்ட சொல்லியிருக்கான். அந்த பொண்ணுக்கும் சம்மதம் இருந்திருக்கு.’’

‘’அப்புறம் ஏன்னா அவங்க கல்யாணம் பண்ணிக்கலை?’’

‘’கேள்வி ஒன்னு. இதுக்கான பதில் பலவிதமா பல காலகட்டத்துல சொல்லப்பட்டுக்கிட்டேயிருக்கு.’’

‘’நாம ஏன்ணா யாராவது ஒருத்தர் மேல அவ்வளவு அன்பு வச்சுடுறோம்?’’

மாயக்கண்ணனால் மேலும் பேச முடியவில்லை. 

வீடு, வாசல், வீதி அனைத்தின் மீதும் அனைத்துக்கும் மேலிருக்கும் வெளியின் மௌனம் நிரம்பிக் கொண்டிருந்தது.

***

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.