செக் நாட்டை சேர்ந்த மிரோஸ்லாவ் ஹோலுப்(1923-1998) ஒரு மருத்துவர். அவருடைய படைப்புகளில் அவரது மருத்துவத் தொழிலின் தாக்கம் மிகுதியாக இருக்கிறது என்றும் பெரும்பாலும் எதுகை மோனை இல்லாமல் இருப்பதால் மொழிபெயர்ப்பு எளிதாகிறது என்றும் விக்கிபீடியா தெரிவிக்கிறது. அறிவியல் கட்டுரைகள், குறிப்பாக உயிரியல், மருத்துவம் குறித்து, பல சிறு கட்டுரைகளும் எழுதியுள்ளாராம். ‘நெபோலியன்’ என்ற அவரது கவிதையின் மொழிபெயர்ப்பு கீழே.
குழந்தைகள்
குழந்தைகளே!
நெப்போலியன் போனபார்ட்
பிறந்தது எப்போது?
அதிர்ந்தது ஆசிரியரின் கேள்வி.
ஆயிரம் ஆண்டுகளா,
நூறு ஆண்டுகளா,
சென்ற வருடமா,
குழம்பினர் குழந்தைகள்.
யாருக்கும் தெரியவில்லை.
குழந்தைகளே!
நெப்போலியன் போனபார்ட்
என்ன செய்தார்?
பாய்ந்து வந்தது
அடுத்த கேள்விக்கணை.
போரில் வென்றார்
என்றனர் சிலர்.
போரில் தோற்றார்
என்றனர் சிலர்.
தெரிந்தவர் எவருமில்லை.
ஃபிரான்டிசெக் என்றொரு மாணவன்
கதையொன்று சொன்னான்.
கறிக்கடைக்காரர் வீட்டிலொரு நாய்
நெப்போலியன் என்பது அதன் பெயர்.
அடியும் உதையும் வாடிக்கை.
பசியில் வாடி செத்துப்போனதாம்.
கேட்டதும் வருந்தின
நெபோலியனுக்கென
எல்லாக் குழந்தைகளும்.

ஜாக் பிரிலட்ஸ்கி (1940) குழந்தைகளுக்கான பாடல்கள் எழுதும் அமெரிக்கக் கவிஞர். இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைத் தொகுப்புகள் வெளியிட்டுள்ளார். இரண்டு வருடம் (2006-2008) குழந்தைகள் கவியரசாக (Children’s Poet Laureate) இருந்திருக்கிறார். எழுத்தாளராவதற்கு முன் கார் ஓட்டுனர், சரக்குகள் இடம் மாற்றுபவர், பஸ் பணியாள், குயவர், தச்சர், வீடு வீடாக செல்லும் விற்பனையாளர் போன்ற பணிகளை செய்தாராம். அவருடைய கவிதைகளில் ‘Be Glad Your Nose is on Your Face’ என்பதன் மொழிபெயர்ப்பு.
இடம்
மூக்கு முகத்திலிருப்பது குறித்து
மகிழ்ச்சி கொள்.
அங்கில்லாமல் வேறெங்கும் இருந்தால்
வெறுப்பின் உச்சமாகியிருக்கும்..
அருமை மூக்கு
கால் கட்டை விரலுக்கிடையில்
திணிக்கப்பட்டிருந்தால்
உன் காலையல்லவா
நீ முகரவேண்டும்!
அது உன் தலைக்கு மேல்
தைக்கப்பட்டிருந்தால்
மயிர்களின் குடைச்சலில்
விரக்தியின் விளிம்பிற்கே சென்றிருப்பாய்!
காதுக்குள்ளே ஒட்டப்பட்டிருந்தால்
கடும் நாசமே.
தும்மியே தீர நேர்ந்தால்
அதிர்வில் துடி
துடிக்குமே உன் மூளை!
வேறேங்குமில்லாமல்
கஷ்டத்திலும் நஷ்டத்திலும்
எப்போதும்
கண்ணுக்கும் நாடிக்குமிடையே
முகத்திலேயே அது இருப்பதற்கு
மகிழ்ச்சி கொள்!
இங்கிலிஷிலிருந்து தமிழாக்கம்: இரா. இரமணன்
மிகச்சிறப்பான கவிதைகளை மொழியர்த்துள்ளீர்கள்..
குழந்தைகளின் உள்ளத்தை தெளிவாக உரைத்துள்ளது நெப்போலியன் கவிதை..
தொடர்க உமது இப்பணியை..
நன்றி நண்பரே.உங்கள் பின்னூட்டம் உற்சாகம் அளிக்கிறது.
அருமை… !!
கவிதையும் மொழிபெயர்ப்பும்.. !!