ஒரு மழைநாள்

நான் சிறுவனாக இருந்தபோது மதுரையில் நிறைய மழைபெய்ததாக நினைவு. ஆம், சித்திரை, ஆடி, ஐப்பசி, மார்கழி என என் நினைவுகளின் மதுரை மழை அலுக்காத ஊராகவே இருக்கிறது. என் நினைவுகளில் கண்மாய்க்கள் நிரம்பி வழிகின்றன; வைகையில் வெள்ளம் பெருகிப் புரண்டு செல்கிறது. ஊரே புதிதாய் பிறக்கிறது. 

அல்லது மழை நாட்களும் வெள்ளப்பெருக்கும் மட்டுமேயான நினைவுகளாக என் நினைவுகள் இருக்கலாம். ஏனென்றால் சிறுவயதில் மழைநாட்கள் மாயம் நிறைந்தவை. மண்ணை உசுப்பிவிட்டு புதையுண்ட வாசங்களையும் பெயரறியா ஆசைகளையும் கிளப்பிவிடுபவை. இப்போதும் ஒரு மழை அடித்தால், ஒரு மண்வாசம் கிளம்பினால், அந்தப் பழைய மழைநாட்களும் மீண்டும் கிளர்ந்தெழுந்து வருகின்றன.

மழைநாளன்று வெளியே செல்ல முடியாது. வீட்டினுள் ஒட்டி அம்மாவுடன் ஒண்டி இருக்க வேண்டியிருக்கும். மழைநாட்கள் எல்லாவற்றையும் கழுவிவிட்டுவிடுகிறது. புத்துயிர்களாக்குகிறது. மழைத்துல்லியத்தில் எல்லாவற்றையும் சரியான வடிவத்தில் பார்த்துக்கொள்ள முடிகிறது. சொல்லப்போனால் இன்று நான் உலகம் முழுவதும் தனியனாக  மழைநாட்களுக்காகத்தான் அலைந்துகொண்டிருக்கிறேன்.

இப்போது மதுரையில் அதிகம் மழை பெய்வதில்லை என்று சொல்கிறார்கள். எல்லா ஊர்களிலுமே இப்போது மழை குறைந்து வருகிறது. இன்னும் சற்று மழை பெய்தால் நன்றாகத்தான் இருக்கும். நாம் புதியவர்களாக மாறுவதற்கு நமக்கிருக்கும் ஒரே நல்வாய்ப்பு, இந்த மழைநாட்கள் தான் அல்லவா…

Shana Sood

இது நடந்த போது எனக்கு பதினோரு வயதிருக்கும். அப்போதே நானும் அம்மாவும் மட்டும் தான். அன்று நாளெல்லாம் மழை விடாது பேய்ந்தது. விளாச்சேரி கண்மாய் நிரம்பியிருந்த காட்சியை மாலையில் நானும் அம்மாவும் பின்வாசல்கட்டில் நின்றபடி பார்த்தோம். வயல்பரப்பைத் தாண்டி திருப்பரங்குன்றம் மலைக்கோட்டு முழுதாக மறைத்தபடி சாரைசாரையாக மழை. 

அன்று ஐந்து மணி முதல் மின்சாரம் இல்லை. இனி எப்போது வரும் என்று சொல்ல முடியாது. அந்தி எப்போது சாய்ந்ததென்றே தெரியவில்லை. பெரியம்மா வாசல் கதவையும் பூட்டிவிட்டார்கள். கார்த்திகை மாதத்து அகல் மட்டும் வாசல் அறையில் எரிந்துகொண்டிருந்தது, அருகே பெரியப்பா சாய்வுநாற்காலியில் வழுக்கை தலையை வருடியபடி மறுகையால் விசிறிக்கொண்டிருந்தார். நாங்கள் சாப்பிட்டுவிட்டு டார்ச் விளக்கை சொடுக்கி சொடுக்கி விளையாடிக்கொண்டிருந்தோம். காயத்ரி அக்கா கைவிரல்களை மடித்து விரித்து  அந்த ஒளியில் வெவ்வேறு மிருகங்களை வரவழைத்தபடி இருந்தாள். கிளி, மான், வரையாடு, சிம்மம்…

வாசல் அறையிலிருந்து ஓர் உறுமல். பெரியம்மா உள்ளறையிலிருந்து புடைவை மடிப்புகள் விசுவிசுக்க படபடத்தபடி வரும் சப்தம். தட்டை பெரியப்பாவிடம் கொடுத்துவிட்டு பெரியம்மா நிமிர்ந்தபோது வாசல்கதவின் ஜாலியில் விழுந்த பெரிய நிழல்களைக்கண்டு நான் திரும்பினேன்.

இப்போது கண்ணை மூடினாலும் அந்தக் காட்சியை என்னால் பார்க்க முடிகிறது. இங்கிருந்து ஒளி அடித்துப் பார்ப்பதுபோல ஒரு பிரமை. அங்கே, ஒரு சுவர் ஓவியம் போல, நித்தத்துக்கென பதிந்துவிட்டது அந்த நிழல். அதன் முன்னால் ஒரு நிக்கர் போட்ட சிறுவனாக நான்.

சித்தி வந்து நின்றார். பெரியப்பா தட்டைப்பார்த்து நிமிர்ந்து பெரியம்மாவை பார்த்தார். மெல்லிய குரலில், “பொடிதான். சாம்பார் கெட்டுப்போச்சு. சட்னி அரைக்கல. அதுக்குள்ள கரண்ட் போயிடுத்து,” என்றார்கள் பெரியம்மா. சொல்லிவிட்டு இரண்டடி பின்னால் எடுத்து வைத்தார்கள். நாங்கள் எல்லோரும் ஆவலாக பார்த்துக்கொண்டிருந்தோம். ஆனால் பெரியப்பா எதுவும் சொல்லாமல் தோசையை சாப்பிடத்தொடங்கினார். சாப்பிட்டுக்கொண்டே “சீனு ராத்திரி வர்றானா, எப்படி?” என்றார். பெரியம்மா சித்தியை பார்த்தார்கள். “இல்லண்ணா. இனிமே தான் வரணும்.” என்றார் சித்தி. பெரியப்பா  “ம்,” என்றார்.     

எல்லாம் அவ்வளவு துல்லியமாக நினைவிருக்கிறது. அன்று யார் எங்கு நின்றார்கள், என்ன சாப்பிட்டார்கள், என்ன சொன்னார்கள், எல்லாமுமே. அது அவ்வளவு கடினமும் அல்ல. அன்றைய உலகில் ஒவ்வொருவருக்கும் ஒரு செயல்வட்டம். அதை யாரும் மீறிச்செல்ல முடியாது. இடமும் உணவும் பேச்சுவார்த்தையும் அளவெடுத்தே கொடுக்கப்படும். நாடகப்பாத்திரம் போல. ஆகவே யார், எப்போது, என்ன செய்திருக்க முடியும் என்று ஊகிப்பது மிகவும் சுலபம். அவர்களுக்கு வேறு வழியே இல்லை என்று மட்டும் மனதில் நிறுத்திக்கொண்டால் போதும்.

இன்று யோசித்துப்பார்த்தால், எப்போதுமே, எல்லாமே, அப்படித்தான் என்று சொல்லத்தோன்றுகிறது. இந்த முகம், இந்த டையபிட்டிஸ், இந்த பழுத்தமூக்கு, வழுக்கைத்தலை, இந்த முன்கோபம்… எல்லாமே. ஒரு வட்டம். அதைத்தாண்டி அவ்வளவு எளிதாக யாரும் சென்றுவிட முடியாது.

பெரியப்பா சாப்பிடுவதை நாங்கள் பார்த்துக்கொண்டிருப்பதை கண்டு அவர் எச்சல்கையாலேயே இங்க வாங்கடா என்று எங்களை அழைத்தார். “டார்ச்ச அணச்சு அணச்சு என்ன விளையாட்டு? பாட்டரி போயிடுமில்ல?” என்று மரப்பட்டை குரலில் எங்களை பார்க்காமல் சொன்னார். நாங்கள் ஒன்றும் சொல்லாமல் வரிசையாக நின்றோம். 

பெரியப்பாவின் மகள் பன்னிரெண்டு வயதான காயத்ரி அக்கா எங்களில் மூத்தவள். பெரியப்பாவின் மகன் சந்துருவுக்கும் எனக்கும் ஒரே வயது, பதினொன்று. கடைசியாக  சீனு சித்தப்பாவின் மகன் குட்டி ஆதித்யா. ஏழு வயசு. “அக்கா சொவத்துல சிங்கம்புலியெல்லாம் பண்ணிக்காட்டுனா,” என்று ஆதித்து சொல்ல அக்கா என் பின்னால் கையை நுழைத்து அவனை உதைத்தாள். 

“சரி, எல்லாரும் வரிசையா உக்காருங்கோ,” பெரியப்பா அன்று நல்ல ‘மூட்’டில் இருப்பதுபோல் தெரிந்தது. நாங்கள் நிலைப்படிமீது அமர்ந்து கைகளை கட்டிக்கொண்டோம். பெரியம்மா வந்து கூஜாவிலிருந்து தண்ணியூற்ற பெரியப்பா தட்டிலேயே கை அலம்பினார். பெரியம்மா தட்டை எடுத்தவுடன் துண்டின் முனையைக்கொண்டு வாய்துடைத்து வேட்டியை நீவிவிட்டபடி பின்னால் சாய்ந்தார்.  வழுக்கைத்தலை விளக்கின் ஒளியை வாங்கி மின்னியது. 

நான் முழித்தேன். என் பக்கத்தில் சந்துரு நெளிந்தான். பெரியப்பா மதுரை கல்லூரியில் ஆங்கில பேராசிரியர். பொதுவாக எங்களை இப்படி அழைத்தார் என்றால் “ஹோம்வர்க் ஏதும் இல்லையா?” என்ற வழக்கமான கேள்வியை கேட்பார். இல்லை என்றால், உன் பள்ளியில் என்னதான் சொல்லிக்கொடுக்கிறார்கள் என்று அடுத்த வசனத்தை பேசிவிட்டு பதிலுக்கு காத்திருக்காமல் சென்றுவிடுவார். அவ்வப்போது ஏதாவது தெரியாத வார்த்தையை சொல்லி அகராதியில் அர்த்தம் பார்த்துவிட்டு வரும்படி சொல்வார். இர்ராஸ்சிபில். இண்டிக்னண்ட். இப்படி ஏதாவது. எப்போதாவது – எங்களுக்கு ஜுரம் வந்தால் – நாங்கள் படுக்கையில் படுத்து வெடவெடக்கையில், தன் உள்ளங்கையை எங்கள் நெற்றி மீது வைத்துவிட்டுச் செல்வார். சொரசொரப்பாக இருக்கும். மூச்சை அழுத்துவதுபோல் முகத்தில் கனக்கும். அப்போது மட்டும் ஏன் வந்து தொடுகிறார் என்று கோபமாக வரும்.

பெரியப்பாவும் நாங்களும் அதிகம் சந்தித்துக்கொள்ளமாட்டோம். அதிகாலையில் அவர் முகக்ஷவரம் செய்யும்போது, குளிக்கும்போது, பூஜைக்கு உட்காரும் போது, நாங்கள் வெளியேவே வரமாட்டோம். மொட்டைமாடியிலேயே பந்தலுக்கடியில் படித்துக்கொண்டோ, விளையாடிக்கொண்டோ இருப்போம். அம்மாவும் அந்த நேரத்தில் முன்னால் சென்று அபசகுனமாக நிற்கமாட்டாள். ஒவ்வொரு நாள் சீனு சித்தப்பா பின்னிரவில் வீட்டுக்கு வந்தால் மாடியில் ஓர் ஓரமாக படுப்பார். உச்சி வெயிலுக்கு முன்னால் அவர் எழுந்துகொள்வதில்லை. அந்த நாட்களில் சித்தியும் மேலே வந்துவிடுவார்கள். பூஜை முடிந்தவுடன் ஆளுக்கு ஒரு கல்கண்டு கிடைக்கும். அதையும் பெரியம்மா தான் விநியோகம் செய்வார்கள். பெரியப்பா அதற்குள் பஸ் ஏறி கல்லூரிக்கு கிளம்பியிருப்பார்.   

மற்ற நேரங்களில் பெரியப்பா அந்த சாய்வு நாற்காலியில் அமர்ந்துகொண்டு தன்னுடைய டைரியில் எழுதிக்கொண்டிருப்பார். பெரும்பாலும் கணக்கு தான். தன்னிடம் இரண்டு உயர்தர பார்க்கர் பேனாக்கள் இருந்தது. யாரோ முன்னாள் மாணவன் பரிசாக கொடுத்தது. அதற்கென பிரத்யேகமாக ஆசாரியைக்கொண்டு ஒரு குட்டிப்பெட்டியை வடிவமைத்து சாய்வு நாற்காலியின் மரக்கைப்பிடியில் பொறுத்திவைத்திருந்தார்.  ஒவ்வொரு நாளும் அதில் மையூற்றி வைக்கும் வேலை என் அம்மாவுடையது. வேறு யாரும் அதைத்தொடக்கூடாது. அம்மா மையூற்றுவதை ஓரக்கண்ணால் பெரியப்பா பார்ப்பதை நான் கவனித்திருக்கிறேன், ஒரு சொட்டு சிந்தாமல் ஊற்றுவாள். பெரியப்பா என்ன நடந்தாலும் அம்மாவை ஒரு வார்த்தை சொன்னதில்லை. அவருக்கு எப்போதுமே அம்மாவை ரொம்ப பிடிக்கும். 

எல்லாமே விளையாட்டாகத்தான் ஆரம்பித்தது. பெரியப்பா கொட்டாவி விட்டபடி, “நான் ஒரு தலைப்பு கொடுக்கறேன். அத பத்தி ஒரு பத்து நிமிஷம் எல்லாரும் யோசிக்கணும். அப்பறம் அத பத்தி ஆளுக்கொரு கதை சொல்லணும். சரியா?” என்று சொன்னார். நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டோம். “ஆமா, அப்படியாவது சத்தம் போட்டு அழிச்சாட்டியம் பண்ணாம இருக்கும் எல்லாம்,” என்று சொல்லியபடி பெரியம்மா வெளியே வந்து தோசை சாப்பிட ஆரம்பித்தார்கள். அம்மா அவர்களுக்கும் சித்திக்கும் தோசை வார்த்துப்  போட்டபடி, உள்ளே வெளியே என்று தலைக்காட்டிக்கொண்டிருந்தார்கள். சித்தி, பெரியப்பா என்ன தலைப்பு சொல்லப்போகிறார் என்று கேட்க ஆர்வமாக வந்து எங்கள் அருகே உட்கார்ந்தார்.

பெரியப்பா கொஞ்சம் யோசித்துவிட்டு ஒரு ஆங்கில பழமொழியை சொன்னார். “ஏ பிரெண்ட் இன் நீட் ஐஸ் ஏ பிரெண்ட் இண்டீட்”. ஆபத்தில் உதவுபவனே நண்பன். இந்த பழமொழியை ஒட்டி ஒரு நீதிக்கதையை எதிர்பார்த்தார். வார்த்தைகளை இழுத்து இழுத்து பழைய பாணியில் கவனமாக உச்சரித்து சொன்னார். பெரியப்பாவின் ஆங்கில உச்சரிப்பில் அவருடைய பழைய ஆக்ஸ்ஃபோர்ட் அகராதியின் மேல் படிந்த தூசுதும்பின் சாயல் இருக்கும். 

இந்த நிகழ்வை என் மனைவியிடம் சொன்னபோது – இப்போது அவள் இல்லை, பிரிந்துவிட்டாள் – ஆனால் அன்று சிரித்தாள்.  “உங்க பெரியப்பாவுக்கு அறிவே இல்லியா? பத்து வயசு குழந்தைகளுக்கு எதுக்கு இப்படி குசுவடச்ச பலூன் மாதிரி ஒரு பழமொழி? அதுக்கு மேல ஒரு கத வேற,” என்றாள். வாஸ்தவம் தான். ஆனால் பரிசு கொடுப்பதாகச் சொன்னாரே. அதுதான் எல்லாவற்றையும் மாற்றிவிட்டது.

ஆம். “நல்ல கதையா யோசிச்சு சொல்லணும். பெஸ்ட்டு கதைக்கு ஒரு பரிசு வெச்சிருக்கேன்,” என்றபடி கைப்பிடி மரப்பெட்டியைத் திறந்து இரண்டு பார்க்கர் பேனாக்களில் ஒன்றை உருவினார். சிவப்பு நிறப்பேனா. அகல் ஒளியில் மாணிக்கத்தை போல் ஜொலித்தது. நான் ஒலியெழவே மூச்சை உள்ளிழுத்தேன். “நெஜமாவே இந்தப்பேனா தான் பரிசா, பெரியப்பா?” என்று கேட்டேன். பெரியப்பா என்னைப்பார்த்து உதட்டை ஒருபக்கமாக தாடைநோக்கி கோணலாக இழுத்தார். அவர் சிரிப்பதே அவ்வளவுதான். “ம்ம்.”

நான் உடனே எழுந்து மாடிப்படியில் சென்று உடகார்ந்து யோசிக்க ஆரம்பித்தேன். சித்திக்கு ஒரே சிரிப்பு. “இந்தப்பயலுக்கு பேனா பிரைசுன்னதும் என்ன ஆச பாரு. மன்னி, நாளையிலேர்ந்து இவனுக்கும் நீங்கதான் மையூத்தி வெக்கணும் பாத்துக்கோங்கோ.” அம்மா தோசை திருப்பியும் கையுமாக வெளியே வந்து பரிமாறியப்படி என்னை பார்த்து புன்னகைத்தாள். இப்போது நினைத்தாலும் அந்த புன்னகையின் முழுமை எனக்குள் நிகழ்கிறது. மழையோசை. மாசறுக்கும் நீர்வழிகள். அம்மாவின் புன்னகை. அனைத்தையும் கரைத்து அழிக்கும் அந்தப்புன்னகை.

பத்து நிமிடத்தில் எனக்குத்தெரியும், என் கதைக்கு தான் பரிசு கிடைக்கும் என்று.

மற்ற மூவரும் கூடத்தின் நடுவே எழுந்து நின்று கதை சொல்லி முடிக்கும்வரை நான் இருப்புக்கொள்லாமல் நகத்தை கடித்தபடி காத்திருந்தேன். முதலில் காயத்ரி வந்து கதை சொன்னாள். தெரிந்த கதை தான். சுதாமா ஒரு கைப்பிடி அவல் மட்டுமே எடுத்துக்கொண்டு கிருஷ்ணனை பார்க்கச் செல்கிறான். அவனுடைய பரிதாப நிலையை புரிந்துகொண்ட கிருஷ்ணன் அவன் வீடு திரும்புவதற்குள் அவன் வீட்டையே பொன்னால் இழைத்துவிடுகிறான். ஆகவே துன்பத்தில் உதவிய நண்பனே நண்பன். நடுக்கூடத்தில் நின்று சொல்லி முடித்துவிட்டு காயத்ரி நாற்பக்கமும் திரும்பி கைத்தட்டல் எதிர்பார்த்து நின்றாள். எல்லோரும் தட்டினார்கள். பெரியப்பா, “கதை நன்னாத்தான் இருக்கு. ஆனா நீ கேட்ட கதையை சொல்லச்சொல்லல. சொயம்மா யோசிச்ச கதைய சொல்லச்சொன்னேன்,” என்றார். எல்லோரும் சிரித்தார்கள். அப்பாடி, எனக்குத்தான் பேனா என்று கட்டிவைத்திருந்த மூச்சை வெளியே விட்டேன்.

ஆதித்யா கதைசொல்ல வந்தான். தலையை ஆட்டி ஆட்டி பள்ளிக்கூடத்தில் தன்னுடைய நண்பனை பற்றி சொல்லி, “அவன் தினோம் எனக்கும் சேர்த்து திம்பண்டம் கொண்டு வருவானா, அதுனால எனக்கு அவனை ரொம்ப பிடிக்குமா,” என்று முடித்தான். சித்தி சிரித்தாள். அவனை கட்டி அணைத்து முத்தமிட்டாள். 

சந்துருவின் கதை என்னை கொஞ்சம் பதற வைத்தது. ஒரே வகுப்பில் இரு நண்பர்கள். அவர்களுக்கு ஒரு முரட்டு கணக்கு வாத்தியார். வகுப்பில் பேசினால், தவறாக கணக்கு போட்டால், வீட்டுப்பாடம் செய்யாமல் வந்தால், முழங்காலில் அடி பின்னி வாங்கிவிடுவார்.  ஒரு நாள் நண்பர்களில் ஒருவன் வீட்டுப்பாடம் செய்த நோட்டுப்புத்தகத்தை வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்திருப்பான். முந்தின நாள் கால்பந்து விளையாடிய போது மைதானத்தில் விழுந்ததில் கால், மூட்டு எல்லாம் புண்ணாகியிருக்கும். அதற்கு மேல் அடிவாங்க வேண்டுமே என்று பயம். மற்றோருவன் அதை புரிந்துகொண்டு தன்னுடைய நோட்டில் அவன் பெயரை எழுதி கொடுத்துவிட்டு, தான் அன்று அடி வாங்கிக்கொள்வான். சந்துரு சொல்லி முடித்ததும் அம்மா, பெரியம்மா எல்லோரும் கைதட்டினார்கள். பெரியப்பா கூட ‘ம்ம்’ சொன்னார்.

என் முறை வந்தது. நான் தொண்டையை கனைத்து என் கதையை சொல்லத்தொடங்கினேன். 

இரண்டு நண்பர்கள். இணைபிரியாதவர்கள். ஒருவன் பலசாலி. விளையாட்டுகளில் கில்லாடி. ஆனால் மூளையற்றவன். மற்றோருவன் புத்திசாலி. ஆனால் நோஞ்சான். ஒரு நாள் புத்திசாலி  மாடியறையில் தனியே இருக்கும்போது அறை தீப்பற்றிக்கொள்கிறது. கீழே இறங்கிவர வழி இல்லை. இவனுக்கு ஜன்னலிலிருந்து குதிக்கும் தைரியமா உடல்பலமோ இல்லை. ஒரு தோளில் தீப்பற்றிக்கொண்டுவிடுகிறது. அப்போது அவனுடைய பலசாலி நண்பன் பாய்ந்து மேலேறி வந்து அவனை மீட்டு கீழே இறக்கிக்கொண்டுவருகிறான். தன்னுடைய காயங்களை ஒரு பொருட்டென கொள்ளாமல் தோளிலேயே அவனை சுமந்துகொண்டு ஆஸ்பத்திரிக்கு ஓடுகிறான்.

நான் ஆவேசமாகச் சொல்லி நிறுத்திய இடத்தில் சுற்றி பார்த்தபோது எல்லோரும் வாய்பிளந்து என்னையே பார்த்துக்கொண்டிருப்பதை கண்டேன். பெரியப்பா, “ஆமாம்.. இவனவிட ஒரு நல்ல நண்பன் கிடைக்கமாட்டான். தன் உயிரையே பணயம் வச்சுல்ல காப்பாத்தியிருக்கிறான்,” என்றார். வயிற்றை தடவியபடி புன்னகைத்தார்.

“இல்ல பெரியப்பா. கதை இன்னும் இருக்கு. என்ன ஆகும்னா,  இதெல்லாம் நடந்து முடிஞ்சத்துக்கப்பறம், இரண்டுபேரும் ஒருத்தர ஒருத்தர் பார்த்து பேசிக்கவே மாட்டா.”

பெரியப்பா புருவங்களை சுருக்கினார். “ஏன்?”

“இல்ல பெரியப்பா, அந்த புத்திசாலி பையன் இருக்கான்ல? என்னதான் ஃபிரெண்டா இருந்தாலும் என் உயிர காப்பாத்தினவன்னு ஒரு இது இருக்குமில்ல அவனுக்குள்ள? கண்ணாடியில தன்னோட மூஞ்சிய பாக்குறப்பல்லாம் அது ஞாபகம் வந்துகிட்டே இருக்குமில்ல? ஆம்பிளையா எப்படி அவனுக்கு சமானமா நிப்பான்? காப்பாத்தினவனுக்குள்ளையும் அது இருக்குமில்ல. எப்படியானாலும் உன் உசுர நான் தான் காப்பாத்தினேன்னு. அதான் அப்படி சொல்றேன். அதுக்கப்புறம் அவாளால முன்னமாதிரி ஃபிரெண்ட்ஸா இருக்க முடியாது. நடுவுல அந்த ஹெல்ப் பண்ணது வந்துகிட்டே இருக்கும்,” என்றேன்.

வெளியே மழை ஒழுகிக்கொண்டிருந்தது. பெரியப்பா என் கண்களை நேருக்கு நேர் பார்த்தார். அகல் திரியின் கடைசிச்சுருள் தீப்பிடிக்க சுடர் கரகரத்து  எழுந்ததில் பெரியப்பாவின் கண்களில் உறைந்திருந்த குரோதத்தின் ஜுவாலை தெரிந்தது. தீயின் ஒளி முகத்தில் நீர் போல் வழிந்திறங்கியது. “பெரியப்பா” என்று ஒரு அடி பின்னால் எடுத்து வைப்பதற்குள் அவர் எழுந்து நின்றார். ஆறடி உருவத்தின் அகல்நிழல் பின்சுவற்றில் ஏறி ஏறிச்சென்று கூரையை தொட்டது. அந்த நிழல்கை ஓங்கியதைத்தான் முதலில் பார்த்தேன். காயத்ரி அலறினாள். ஒரு சிவப்பொளி சிதறி அணைந்து தெறித்தது. பெரியப்பா கையில் இருந்த பார்க்கர் பேனா சிதல் சிதலாக கீழே நொறுங்கிக்கிடக்க மை வழிந்துகொண்டிருந்தது. நான் நிமிர்ந்து பெரியப்பாவின் முகத்தை பார்த்தேன். 

முகத்தின் மேலேயே அறை விழுந்தது. நான் தரையோடு சுருண்டேன். “வலிக்கறது! பெரியப்பா, வலிக்கறது! போதும்!” என்று கெஞ்சினேன். எப்போதோ “ம்ம்..ம்ம்” என்று நாய்க்குட்டியைப்போல் முனக ஆரம்பித்தேன். 

பெரியப்பா பேசவே இல்லை. சக்தியெல்லாம் சேமித்து அடிக்கவேண்டும் என்று கங்கணம் கட்டியவர்போல் ஓசையில்லாமல் அடித்துக்கொண்டிருந்தார். பெரியப்பாவிடம் முன்பும் அடி வாங்கியிருக்கிறேன். நாங்கள் எல்லோரும் வாங்கியிருக்கிறோம். ஆனால் கன்னத்தில் ஒரு அறை. அல்லது விசிறிக்கட்டையால் ஒரு அடி. இப்படி அல்ல. பெரியம்மாவும் சித்தியும் ஒரு மூலையில் ஒடுங்கியிருந்தார்கள். அனுபவத்தில் நடுவே வரக்கூடாது என்று தெரிந்திருந்தது. ஆதித்து அழுதுகொண்டிருந்தான். மற்ற இருவரும் நடுவறைக்கு ஓடி ஒழிந்துகொண்டார்கள். அம்மா மட்டும் தூணோடு ஒட்டி உட்கார்ந்துவிட்டாள். என்ன நடக்கிறது என்றே புரியாதவள் போல். 

பெரியப்பா அப்போது அம்மாவை திரும்பிப் பார்த்து, “பண்ண உதவியெல்லாம் நடுவுல வந்துக்கிட்டே இருக்குமாம். ஆம்பிளையா சமமா நிக்கணுமாம். உசுரக் கொடுத்து ஒருத்தன் உன்ன வெச்சு காப்பாத்துவானாம், உனக்கு அது கசக்குதோ? ஜாடையா கத சொல்லி குத்திக்காமிக்கரியோ?” என்றார். அந்த வார்த்தைகளில் அம்மாவின் முகம் சிறுத்துப்போனது. ஆனால் அவள் அழவில்லை. அப்படியே கண் பிதுங்கி அமர்ந்திருந்தார்கள். அந்தக்கோபத்திலும் அவர் அம்மா பக்கம் கை ஓங்கவில்லை என்று நன்றாக நினைவிருக்கிறது. அவர் அடித்துக்கொண்டிருந்தது என்னைத்தான்.

நான் அழுதுகொண்டே பின்வாசலுக்கு ஓடுவதைக்கண்டு அம்மா எழுந்துவருவார்கள் என்று நினைத்தேன், ஆனால் யாருமே வரவில்லை. வீட்டுக்குள் பெரியப்பா இன்னும் சத்தம்போட்டுக்கொண்டிருந்தார். ஏதோ பொருள் சுவரை அடித்து நொருங்கும் சப்தம் கேட்டது. வெகுநேரத்துக்கு நான் தனியாக இருட்டுக் குளியறையில் முட்டிக்கிடையில் முகம்புதைத்து தேம்பித்தேம்பி அழுதுகொண்டிருந்தேன். என்னால் நிறுத்தவே முடியவில்லை. ஏன் அந்தக் கதையை சொன்னேன், ஏன் அந்தக் கதையை சொன்னேன், என்று என்னை நானே கேட்டுக்கொண்டே இருந்தேன்.
பின்னிரவில், எப்போதோ மழைவிட்டபிறகு இனிமேல் அழ கண்ணீர் இல்லை என்று ஆனபோது நான் வெளியே வந்தேன். அப்போது வீடு நிசப்தமாக இருந்தது. நான் நிலைப்படியைத்தாண்டி துணிக்காயும் கொடிகளைத்தாண்டி வயல்பரப்புகளின் எல்லையில் சென்று நின்றேன். கன்னத்தில் அழுத தடத்தின் உப்புக்கரை கரகரவென்றது. வாயில் உப்பு தட்டியது. காற்றில் தூரல், மண்ணில் மழைவாசம். நிலம் தலைகீழாக திறந்துபோட்டதுபோல் வீச்சடித்தது. நீர்வழிந்து காற்றும் வானமும் புத்தம்புதியதாக இருந்தன. மழைநாள் முடிவில் தூரத்தில் திருப்பரங்குன்றத்தின் இரட்டை மலைகளின் விளிம்பு இப்போது துல்லியமாகத் தெரிந்தது.

2 Replies to “ஒரு மழைநாள்”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.