மலையின் நினைவுகளில்

மலையின் நினைவுகளில்

நில்
லென்று 
என்
னுள் சப்திக்கும்
தொல்
நிசப்தம்.
துறவியரின் கற்படுகைகள் சுருட்டப்படாமல் கிடக்கின்றன குகைக்குள்.
சுருட்டப் பார்த்து முடியாமல்
களைத்துக்  கிடக்கிறது
காலம்.
எதையும் தேடாதிருக்க, தவம்
தேடி வந்த காற் தடங்கள் புதைந்திருக்கின்றன 
கற்பாறைகளுக்குள்.
அவர்கள் விட்டுப் போன மூச்சு 
விட்டுப் போகாமல் கலந்து வீசும் மென்காற்றில்
பேரமைதியின் சுகந்தம் மணக்கிறது.
காட்டு முல்லைகளும் கசக்கிய எலுமிச்சைப் புற்களும் மணக்கின்றன.
விழுந்து விடுமோ என்றிருக்கும் பாறையின் விளிம்பு ஒரு பறவையை எதிர்பார்த்திருக்கிறது.
குகை வாயிலிருந்து பார்க்க, பிடிப்பில்லாத எல்லையில்லா ஆகாயத்தின் பரிணாமம் பிடிபடுகிறது.
குகையொட்டிய மலைச் சரிவின் கீழ் கண்டளவில் 
என் மரணம் மனதில் நிகழ்ந்து ஒத்திகை முடிகிறது.
மனித ஆசாபாசங்கள் போல் திரிகின்றன மலையில் மந்திகள் அங்குமிங்கும்.
மரக்கிளைகளில் தலைகீழாய்த் தொங்கி
மலையையே கவிழ்த்துப் போட்டது போல் குதிக்கின்றன்
குட்டி மந்திகள்.
வேட்கை அவிக்கும் நிழல்குகையைக் கவனமாய்க் கடக்கிறான் 
வெக்கையில் தகிக்கும் சூரியன்.
துப்பாக்கி ஏந்தித் தனியாய் குகை காக்கும் காவலன் 
துறவியாகி விடாத குறை தான்.
யார் தவம் செய்யினும்
’தான்’  இல்லையாக
தவம் முடிவதில்லை குகையில்
யார் தவம் செய்யாதாயினும்  என்றலைகிறான் அவன்.
தனற் சூரியன்
தாழ்கிறான்.
குகைக் காவலனோடு மற்றவர்களும் சேர்ந்து  மலையிறங்கத் தொடங்குகிறார்கள்.
மந்திகள் வழியில் வேடிக்கை பார்க்கின்றன
அவர்களின் படுஅவசரத்தை.
குகைக் காவலனின் துப்பாக்கியைக் 
கூடத் தூக்கி வர ஆசைப்படுகிறான் அவனைச் சிநேகிதம் பிடித்து வைத்திருக்கும் ஒரு சின்னப் பையன்.
துப்பாக்கி ஏந்திச் செல்லும் அவன் துள்ளும் துள்ளலில்  அஞ்சிப் பின் வாங்குகின்றன குட்டி மந்திகளும்.
அடிவானில் 
ஒளியொடுங்குகிறான் சூரியன்.
ஒளி முடிந்து இருள் தொடங்கும் புள்ளியின் 
கடைசிச் சிமிட்டல் காணும் வரை இருக்குமிடம் நகர்வதில்லை போல் 
கவின் காட்சியை  மலையன்னை மடியில் 
குத்துக்காலிட்டு இரசிக்கின்றன விழிகளில் உறைந்து மந்திகள்.
கவியும் இருளை முந்தக்  கீழிறங்க முந்தும் மனிதர்களைக் கண்டு
மினுக்கும் ஒரு நட்சத்திரம்.
மூழ்கும் இருளில்,  முதலிலிருந்து நினைவுகளில் 
மூழ்கும் மலையின் நினைவுகளில்
மூழ்கிறேன் நான்.
என் மனகுகைக்குள் முன்பு எப்போது நான் பிரவேசித்தேன் என்று  மின்னலாய் யோசிக்கிறேன் நான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.