பதிலி செய்தலும் நிஜமும்

இந்த 206 ஆம் இதழில் வரைபடம், நிலப்பரப்பு ஆகியவற்றிடையே உள்ள உறவு பற்றிய தத்துவ விசாரணைகளை மேற்கொண்ட இரு நாவல்களைச் சீர்தூக்கும் கட்டுரை ஒன்று பிரசுரமாகிறது. அதை எழுதிய க்ரெய்க் எப்லினுக்கும், அவருக்கு உந்துதல் தரும் போர்ஹெஸ் என்ற ஆர்ஹெண்டினியப் படைப்பாளிக்கும், தவிர இந்த இரு நாவல்களை எழுதிய போலா ஓலாய்சராக் என்ற இன்னொரு ஆர்ஹெண்டினிய படைப்பாளிக்கும், இந்தியாவில் உள்ள நம்மிடம் இந்த ‘வரைபடம் எதிர் நிலப்பரப்பு’ கேள்விகள் ஏதும் எதிரொலியை எழுப்பும் என்ற எண்ணம் எழ வாய்ப்பு குறைவு.

அவர்கள் உளைச்சல் படுவது மேலைத் தத்துவத்தில், அரசியலியலில், பொருளாதார அமைப்புகளில், கலைகளில் வெகு நாட்களாக எழுப்பப்பட்டு, மிகச் சரியான பதில்கள் கிட்டாததால், அவ்வப்போது மறுபடி மறுபடி எழுப்பப்படும் ஒரு பிரச்சினை. அது இந்தியருக்கு ஏன் ஈடுபாட்டைக் கொணர வேண்டும்? போர்ஹெஸ்ஸோ, ஓலாய்சராக்கோ குறிப்பிட்ட நிலப்பரப்பு வாழ் மக்களைப் பற்றி மட்டும் அக்கறை கொண்டவர்கள் என்று நான் சொல்லவில்லை. அவர்கள் எழுதியதையோ, அல்லது அவர்களைப் பற்றியோ படித்தால் அவர்களுடைய அக்கறைகள் குறிப்பிட்ட சமூகக் குழுக்களை விட, உலக மொத்த மனித சமுதாயத்தைப் பற்றியே கூடுதலான அக்கறை கொண்டவை என்று நாம் சொல்லி விடலாம். இருந்தும் இந்தியர்கள் அல்லது ஆசியர்கள் பற்றி அவர்கள் கருதாமல் இருப்பதற்குக் காரணம், நம் சிந்தனை முறைகளில் இந்தக் குறிப்பிட்ட எதிர் நிலை பற்றிய விவாதம் பெரிய அளவில் நடைபெறவில்லை. இங்கு சமூகம் எதிர் தனி மனிதன், தெய்வம் எதிர் மனிதன் என்று எதையும் எதிரிடையாகவே வைத்து நோக்காமல், அண்மையனவாகவும், இழைந்த உறவு வழியேயும் பார்ப்பதை இயல்பாகக் கொண்டிருக்கிறோம் என என் நினைப்பு. இது ஒரு பிழையான கருத்தாக இருக்க இடம் உண்டு.

இந்த உளைச்சல்களோ, கேள்விகளோ இந்தியருக்கு ஏன் ஈடுபாட்டைக் கொணர வேண்டும் என்பதை பிற்பாடு பிரித்து நோக்க வேண்டிய ஒரு கேள்வியாக வைத்துக் கொள்ளலாம்.

ஆக, இந்தக் கட்டுரை அதற்குப் பதிலைத் தேடவில்லை. மாறாக இணைகோட்டில் வேறு சிலவற்றுக்குப் பதில் தேடுகிறது. ஒருவேளை இந்த மாற்று அணுகலில் வேண்டிய பதில் கிட்டுமோ என்று பார்ப்போம்.  

இந்தக் கட்டுரையில் ரெப்ரெஸெண்டேஷன் என்ற இங்கிலிஷ் சொல்லுக்கு பதிலி செய்தல் என்ற சொல்லை நான் பயன்படுத்தி இருந்தேன். அதற்கு நண்பரும் சக மொழிபெயர்ப்பாளருமான ஒருவர் அதை விட மேலான சொல்லாக பிரதிநிதித்துவம்/ பிரதிபலிப்பு என்ற சொற்கள் இல்லையா என்றார். பதிலி என்பது மாற்று என்ற அர்த்தத்தையே கூடுதலாகக் கொணர்கிறதே என்பது அவர் யோசனை.

எனக்குத் தோன்றியது இது: சில இடங்களில் இவை பொருந்தலாம், ஆனால் க்ரெய்க் எப்லின் எழுதிய ஓலாய் சராக்கின் நாவல்கள் பற்றிய கட்டுரைக்கு இவை அத்தனை பொருந்தவில்லை. காரணம், அக்கட்டுரையில் ரெப்ரஸெண்டேஷன் என்ற சொல் பயன்படுத்தப்பட்ட விதம்.

பதிலி செய்தல் = representation என்று வருவது சரிதான். பதிலி என்பது alternate என்றும் பொருள் கொள்ள முடியும். அகராதியில் பார்த்தால் பிரதி= நகல் என்றும், பிரதிநிதி= பதில் ஆள் என்றும் பொருள் இருப்பதைக் காண முடியும். ஆக பதிலி செய்தல் என்பதும் பிரதிநிதி என்பதும் நெருங்கிய சொற்களே. பதிலி செய்தல் பிரதிநிதித்துவம் என்பதற்கு அருகில் வரும், ஆனால் அதையும் விடச் சற்று பொதுமைப்பட்ட சொல்.

இங்கு ஆள் என்பது கருதப்படாத விஷயம். அஃறிணைப் பொருட்களும், உயிரிகளும் கலந்த மொத்த நிலப்பரப்பையே வரைபடத்தில் காட்டுவதைப் பற்றிய ஒரு கவனிப்பு இந்தக் கட்டுரை. அதுதான் பதிலி செய்தலை கட்டுரையின் குறிக்கோள்களுக்குப் பொருத்தமாக்குகிறது.

இதில் வினோதம் என்னவென்றால், நிலப்பரப்பு என்ற சொல்லுமே ஒரு பதிலிச் சொல்தான். இன்னும் நுணுகி நோக்கினால், எந்தச் சொல்லுமே பதிலி செய்யும் செயல்தான், இல்லையா? மொழி என்பதே பதிலி செய்யும் செயல்தான். ஒரு பதிலியை வைத்துக் கொண்டு, வேறு சில பதிலிகளை அவை நிஜத்தோடு எத்தனை பொருத்தம் கொண்டவை என்று ஆராய்வது மனித புத்தியின் வினோதச் செயல்களில் ஒன்று என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளலாம். ஏனெனில் நிஜம் என்பதை மனிதர் கைப்பற்றுவதே இயலாத செயல். புலன் வழி பெறுவது நிஜத்தைப் பற்றிய தகவல், ஸ்பரிசம், அனுபவம்தான். அனுபவத்தைத்தான் புத்தி ஏற்கிறது, பிரித்து ஆராய்ந்து அறிவாக்குகிறது. அனுபவம் என்பதோ பிரதிபலிப்பு, பதிலி செய்தல் ஆகிய வகைச் செயல்தான்.  

நேற்று நண்பர் ஒருவருக்கு ஒரு கட்டுரையிலிருந்து மேற்கொள் ஒன்றை எடுத்து அனுப்பி இருந்தேன். அது இப்போது நினைவு வந்தது. இந்த இடத்தில் பொருந்தும் என்பது இப்போதுதான் புரிந்தது. அந்த மேற்கோளை இங்கு நினைவு கூரக் காரணம் இருக்கிறது. அந்த மேற்கோள், சார்த்தர் போன்ற சில ஃப்ரெஞ்சு அறிவாளர்கள் மெஸ்கலின் மற்றும் பெயோட்டி ஆகியவற்றின் வழியே பெற்ற போதையிலிருந்து கிட்டிய அனுபவங்களை அறிவு வழி பிரித்துப் பார்க்க முயன்றதை எடுத்துப் பேசும் கட்டுரையிலிருந்து எடுக்கப்பட்டது. அதில் ஃபினாமினாலஜி என்ற தத்துவக் கோட்பாட்டை முன்வைத்த ஹூசர்ல் என்ற ஜெர்மன் தத்துவாளர் பற்றிய வரிகள் எனக்கு ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் புகழ் பெற்ற உரைகளை நினைவூட்டியன.

நண்பர், ஜே. கிருஷ்ணமூர்த்தி அல்லது ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி என்ற ஒரு சிந்தனையாளரின் கருத்துகளில் அபிமானம் கொண்டவர். ஜே.கேயின் கருத்துகளின் மீது பக்தி கொள்ள இயலாது, ஏனெனில் அவரது கருத்துகளே பக்தி, வழிபடுதல், உன்மத்தம் கொள்ளுதல் ஆகியனவற்றுக்கு எதிராக நிற்பன. அதே நேரம் அவை தமிழ் நாட்டில் வழக்கமாகப் பகுத்தறிவு என்ற பெயரில் புழங்கும் வறட்டு அணுகலுக்கும் இணங்காதவை.

ஜே. கிருஷ்ணமூர்த்தி

புலன் வழி அறிதல் என்பதையே என்ன அது என்று கேட்கச் சொல்லி அறிவுறுத்தும் கருத்துகள் அவை. புலன்களைக் கட்டுப்படுத்தச் சொல்லி மரபுச் சிந்தனைகள் நமக்குக் காலம் காலமாக வலியுறுத்தி வந்திருக்கின்றன. ஜே.கே அந்தப் பாதையெல்லாம் உயிர்ப்பற்ற பாதைகள் என்பதைச் சொல்லி, புலன்களோடு துவந்த யுத்தம் செய்வது, துறந்து நிற்றல் போன்றனவற்றைத் திரஸ்கரிக்கும் நபர். ஜப்பானிய ஜுடோ போன்ற துவந்த யுத்த முறைகளில் எதிர்த்து நிற்பதை விட, தாக்கும் நபரின் வலிமையைப் பயன்படுத்தியே அவர்களை எப்படிக் கவிழ்ப்பது என்ற உத்தி ஒரு முக்கியமான உத்தி. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் அணுகலில் இது இருக்கிறதாகவும் எனக்கு ஒரு சம்சயம். தாக்குதல், எதிரி என்றில்லை. எதார்த்தத்தைக் கூறு போட்டு, வகை பிரித்து அதைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயற்சி செய்து கொண்டு நம் சொற்ப ஆயுளை வீணடிக்காமல், அதோடு ஊறிப் பிணைந்து எப்படி அதை நமக்கு ஏற்றதாக ஆக்கிக் கொண்டு, நாமும் அதற்கு ஏற்றதாக எப்படி ஆவது என்ற எளிய அணுகல் அவருடைய உரைகளில் அடிக்கடி முன்வைக்கப்பட்டிருக்கிறது.

புலன் நமக்கு எப்படி அறிவுறுத்துகிறது என்பதைப் புலன் வழியே, புலனின் எல்லைகளை உதிர்த்து அல்லது கூறு பிரித்து எல்லாம் நோக்காமல், முழுதுமாக அனுபவித்து அதன் வழி புத்தியில் சேர்ப்பதை, ‘நோக்குதல்’ என்ற விதமாக அறிதலைக் கவனிக்கச் சொல்கிறார். அதில் mysticism அல்லது மர்ம விசாரணைகள் எல்லாம் இல்லை. தன்னிலிருந்து விடுபட்டு அண்ட பேரண்டத்தில் வியாபித்து நிற்கும் பெருஞ்சக்தியைக் காண முயலும் தன்னை மீறல் என்ற செயலை ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி முன் வைப்பதில்லை. அவர் சற்றுக் கீழிறங்கி யோசிக்கிறார். தன்னை மீறலோ, தானிலிருந்து தப்பித்தலோ, தன்னை விட்டு நீங்கலோ எதுவும் விடுதலை என்பதைக் கொடுக்காது, அவை சாத்தியமானவையும் அல்ல என்பது அவர் கருத்து. [இது என் பார்வை. உங்கள் பார்வை வேறாக இருக்கலாம் என்பதோடு, இருக்கும் என்பதே என் நிலைப்பாடு.] மரபுகளிலிருந்து வேறுபடும் ஜிட்டு கி. நாம் நம் கால்களில் நின்று, உடலில் இருந்து, நம்மைச் சூழும் தூல எதார்த்தத்தை நம் அறிவுக்குப் பழக்கமான வடிகட்டிகளை எல்லாம் அகற்றி விட்டு அனுபவிக்க முடிந்தால் அதிலிருந்தே பிரும்மாண்டமான ஓர் அனுபவம் கிட்டும் என்று யோசிப்பதாக, நமக்கு அதைப் பரிந்துரைப்பதாக என் புரிதல்.

நம்மை நாம் அறிய நாம் இருக்கும் சூழலில் ஒன்றுவதன் மூலம்தான் முடியும் என்று எளிய முறையில் நான் அதை எல்லாம் புரிந்து கொள்கிறேன். இங்கு அந்த விசாரங்களைத் தொடர்வது தேவையற்றது. மேற்கோளை மட்டும் கவனித்தால் போதும். அந்த மேற்கோள் இது: ஹூசர்லின் வலியுறுத்தல்படி, “பொருட்களைப் பார்க்க ஒரு புது வழி அவசியமாக இருக்கிறது.” நிகழ்வாய்வு என்பது எதார்த்தத்தை அது உணரப்பட்ட விதத்திலேயே, கோட்பாடுகள், வகை பிரிப்புகள், வரையறுப்புகள் ஏதுமின்றி விவரிக்க முயல்கிறது: ஹூசர்லின் புகழ் பெற்ற ஆணைப்படி “பொருட்களிடமே” கவனிப்பை முழுதும் திருப்பி விட முயல்கிறது.[1] இந்த வரிகள் எனக்கு ஜிட்டு கிருஷ்ணமூர்த்தியின் அணுகலை நினைவூட்டி, அவருக்கு அந்தக் கட்டுரையை அனுப்பினேன்.   

ரெப்ரஸெண்டேஷன் என்பது ஒன்றுக்குப் பதிலாக நிற்கும் ஒரு சுருக்க வடிவு. நாம் நம்முள் அறிதலாக இதுகாறும் பெற்றவை எல்லாமே சுருக்க வடிவுகளே, பதிலி செய்தே நாம் எதையும் புரிந்து கொள்கிறோம். பதிலி செய்தல் என்பது சித்திர வடிவாக இருக்க வேண்டுமென்பதில்லை. ஹுசர்ல் வலி போன்ற உணர்ச்சிகளிலிருந்து ‘கவனித்து அனுபவித்தலை’ப் பிரித்து நோக்குகிறார். என் கருத்தில் கவனித்து அனுபவித்தலும் ஓர் உணர்ச்சியை நம்முள் உருவாக்கும், அதுதான் நம் அனுபவித்தலை ஏற்க நம்மைத் தூண்டும்.

உடலின் மறுவினையை ஒதுக்கி அறிவதே அறிதல் என்னும் கார்ட்டீசியப் பாதையை, ஹூசர்ல் தான் விரும்புமளவு ஒதுக்க முடியவில்லை என்று என் புரிதல். மாறாக அவர் கார்ட்டீசியப் பாதையைத்தான் ஆழப்படுத்துகிறார் என்றும் நினைக்கிறேன்.

ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி ஹூசர்லைக் கடந்து செல்லும் இடம் இதுதான். அவர் உணர்ச்சி, அறிதல் ஆகியவற்றை இரட்டையாக, எதிரெதிர் நிலைகளாகப் பிரிப்பதில்லை. மாறாக உடல், வாக்கு, காயம், மனம், உணர்ச்சி, அனுபவம், அறிதல் என்று நாம் சொற்களால் கூறு பிரித்ததை எல்லாம் தாண்ட உற்று நோக்கல் என்பதைப் பயின்றால் போதும், தாண்டி விட முடியும் என்று கருதுகிறார். உற்று நோக்கல் என்பதும் ஒரு உருவகச் சொல்தான். இருவரின் நோக்கங்களும் வெவ்வேறு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இனி ரெப்ரஸெண்டேஷன் என்பதை நாம் எப்படி எல்லாம் பார்க்கலாம் என்று கருதுகிறேன். அதுவே நிஜமாகுமா, அதுவே போதுமா, அதை வைத்து நாம் எதார்த்த வாழ்வை நடத்த முடியாதா, கூடாதா? ஏன் அதை விமர்சகர்கள் சற்றே இழிவாகக் கருதுவது போன்ற பாவனை செய்கிறார்கள். அவர்களிடம் அதைத் தாண்டிய அறிதல்/ புரிதல்/ அனுபவம் இருக்கிறதா? இதை ஒரு எதார்த்த மாதிரியைக் கொண்டு நோக்கலாம்.

மக்கள் திரளே பாராளுமன்றத்தில் போய் நிற்க முடியாமல், தன் பிரதிநிதி (ரெப்ரஸெண்டேடிவ்) ஒருவரை அனுப்புகிறது. அவர் திரளின் அனைத்துக் கருத்துகளையும் பாராளுமன்றத்துக்குச் சொல்வாரா என்றால் அது மனித எத்தனத்துக்கு அப்பாற்பட்ட நடத்தை. அதற்கு திரளையே அனுமதித்து விடலாம். அத்தனை கூட்டத்தைப் பாராளுமன்றம் தாங்காது என்பது ஒரு காலத்தில் உண்மையான காரணம். இன்று அத்தனை மக்களுமே பாராளுமன்றத்தின் நடவடிக்கைகளை தத்தமது வீட்டில் இருந்தபடி கண்காணிக்கலாம். அங்கிருந்தே, போதுமான அலைவரிசை வசதி இருந்தால், நிலப்பரப்பின் தூரங்களைக் கடந்து பாராளுமன்ற நிகழ்வுகளில் பங்கெடுக்கவும் செய்யலாம்.

ஆனால் ‘நேரம்’ என்று ஒரு இறுதி இரும்பு வளையம் நம் குரல் வளையில் மாட்டி இருக்கிறது. அதை நாம் உடைக்க இன்றைய தூல உடலை வைத்துக் கொண்டிருக்கையில் எந்த வழியும் நமக்கு இல்லை. 100 கோடி இல்லை, சாதாரணமான எண்ணிக்கையாக, ஒரு லட்சம் பேரின் கருத்துகளைக் கூட பாராளுமன்றத்தில் பேசிக் கொண்டிருக்க வழியில்லை.

அத்தனை பேரும் தத்தமது வீடுகளில் இருந்து தலா ஐந்து நிமிடம், இல்லை ஒரு நிமிடம் பேசினால் கூட, ஒரு லட்சம் நிமிடங்கள் போய் விடும். 1666.67 மணி நேரம் அது. 69 1/2 நாட்கள். இந்தியாவின் ஒன்றேகால் பிலியன் மக்கள் கூட வேண்டாம், அதில் 20 வயதுக்கு மேற்பட்டார் மட்டுமே பேசுவதானால் எத்தனை வருடங்கள் ஆகும்? அதுவும் ஒரே ஒரு தலைப்பு பற்றிப் பேச அத்தனை வருடங்கள் ஆகும்.

ஆக பிரதிநிதித்துவம் என்பது தவிர்க்க இயலாதது. அங்கேயே ‘சமத்துவம்’ என்ற அபத்தக் கருத்து சுக்கு நூறாக உடைந்து விடுகிறது. சமத்துவம் ஒரு சிறு குழுவில் கூடப் பயில முடியாத கருத்து. குடும்பத்தில் கூடப் பயிலமுடியாதது. ஒரு வயது, ஐந்து வயது, பத்து, பதினைந்து வயது சிறுவருக்குக் கூட சமத்துவம் கொடுக்கவியலாது. பிறகு எந்தச் சமுதாயத்தில் எப்படிச் சமத்துவம் கோருவது, பெறுவது, அதை நடைமுறைப் படுத்துவது?

அதனால்தான் பிரதிநிதித்துவம் அல்லது பதிலி செய்தல் என்பது ஒன்றுதான் வழி. அதுதான் வரைபடம். அது ஒரு நாளும் நிலப்பரப்பாக வழியில்லை.

இன்னொரு கோணத்தில் பார்ப்போம். மதங்கள் கடவுளிடம் சரணடையச் சொல்வதன் காரணமே இந்த சமத்துவத்துக்கான பெருவிழைவுதான். அப்படிப்பட்ட பேரறிவு, பெருங்கருணை, பேருரு, பேராளுமையிடம்தான் அனைவரையும் ஏற்று, அனைவருடனும் ஒரே சமயம் பகிர்ந்து, அனைவருக்கும் குரல் கொடுக்க வாய்ப்பு கொடுத்து, அனைவரும் உண்டு, அனைவரையும் உண்டு, அனைவரும் ஜீரணித்து, அனைவரையும் ஜீரணித்து ஒன்றாக்கும் வாய்ப்பு இருக்கிறது. இத்தகைய பேராளுமைக்கு கால, இட நெருக்கடிகள் ஏதும் இல்லை. முப்பரிமாணம் கூட இல்லை, எப்பரிமாணமும் அதை அடைக்க முடியாத பேராளுமை என்று கடவுளை உருவகித்த காரணமும் அதுவே ஆக இருக்க முடியும். அங்கு நம் தேர்வின் படி செல்ல முடியாது. தேர்வு வேண்டாம், அப்படியே ஈர்த்து ஜீரணித்துக் கொள் என்று அந்தப் பரம ஆத்மனிடம் நாம் ஒப்புக் கொடுப்பதுதான் நம்மை ‘விடுவிக்கும்’. அதாவது அப்படி தன்னை விட்டு விடுவது, நம்மை நம்மிடமிருந்து, நம் கால/ இட நெருக்கடிகளில் அகப்பட்ட விலங்கிடமிருந்து விடுவித்து, தன்னளவில் அடையாளமோ, குணாதிசயங்களோ கறை/ குறைப்படுத்தாத ஆன்மாவை பேராத்மாவில் கரைய விடும்.

இதை நான் நம்புகிறேனா என்பது இங்கு கேள்வியோ, பொருட்டானதோ இல்லை. ஆனால் இதுதான் உலகெங்கும் சிறிதே வாழ்க்கை பற்றித் தீவிரமாக யோசிப்பவர்களுக்குத் தோன்றும் ஒரே விடை. இந்த விடைதான் காலம் காலமாக மனிதருக்குத் தோன்றி இருக்கிறது. ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி போன்று விலகி யோசிப்பவர்கள் சிலர் உண்டு, ஆனால் அவர்கள் மொத்தத்தில் மிகச் சிறு பங்கு.

மாறாக நிற்கிற இன்றைய, அனைத்தையும் சந்தேகிப்போம் என்ற ஓரளவு பெரும் எண்ணிக்கை கொண்ட கட்சிக்காரர்களுடைய மாற்று விடையும், இந்தப் பேரான்மாவைப் பதிலி செய்யும் ஒன்று. சில நேரம் தம்முடைய இலக்கு இன்னதென்று தெளிவு அதைத் துரத்துவோருக்கே புரியாமல் இருக்கும். இந்தக் கூட்டம் அப்படி ஒரு கூட்டம்.  

இவர்களில் இலக்கான பரிணாம வளர்ச்சி வழியே படிப்படியாக பேருருவாக வளரப் போகும் ஜீவராசிகளின் பயணம் என்பது முடிவற்றது என்றே அவர்கள் சொல்கிறார்கள். முடிவற்றதாக இருப்பதுதான் எல்லையற்ற சந்தேகத்துக்கு விடை, அதுதான் திருப்தி தரும் சாத்தியம், அது ஒற்றை இலக்கில்லாத பயணம்,

ஆனால் அதில் வண்டிக் கழுதைக்கு முன் தொங்கும் பசுந்தழை போல மேம்படுதல் என்ற ஒரு கருத்துரு இல்லாமல் இல்லை. அதன் அசாத்தியத்தை அல்லது அருகிய தன்மையை மேற்படி சந்தேகாஸ்பதிகள் வெளிப்படையாக மக்களிடம் சொல்ல விரும்ப மாட்டார்கள். ஆக, இவர்கள் படிப்படியாக மலை ஏறுபவர்கள், அந்த மலை முகடுதான் நெருங்கவியலாதபடி மேன் மேலும் உயர்ந்து கொண்டே போகும். ஆனால் தம்மைப் புரட்சிவாதிகள் என்று கருதுவோர் இந்தக் கூட்டத்தில் நிறைய. உண்மையில் மலைக் கோவில் நோக்கிப் படி ஏறும் தீர்த்த யாத்திரைதான் செய்கிறார்கள். அவர்கள் கோவிலை அடைய மாட்டார்கள் என்பதோடு, அடையாமல் இருப்பதே அந்தப் பயணத்தின் நோக்கம் என்று நினைப்பவர்கள். அதுதான் புரட்சி என்றும் கருதுகிறார்கள்.  

புரட்சி என்பது பல நேரம் இருப்பை ஏற்க முடியாதவர்கள் இருப்பதைக் கவிழ்த்தால் தமது விருப்பத்திற்கு சமுதாயத்தை மறு அமைப்பு செய்ய முடியும் என்று பகல் கனவு காண்பதன் விளைவு. அதனால்தான் தொடர்ந்த புரட்சி என்ற ஒரு மேம்படுத்தல் முனைப்பு நேர்ந்தது. அதுதான் தொடர்ந்த தீர்த்த யாத்திரை. ‘நாளை வருவார் தேவன்’ எனும் வகை மதச் சிந்தனைகளுக்கும் இதற்கும் அதிக வேறுபாடு இல்லை.

மத ஞானிகளோ விருப்பத்தில் புரட்சியாளர்கள்- ஒரே அடியாக எல்லாவற்றையும் மாற்றி விடலாம் என்று நம்புபவர்கள். அசல் வாழ்வில் தீர்த்த யாத்திரை எல்லாம் போகிறவர்கள் இவர்களின் பின்னே இருப்பவர்களாக இருக்கலாம்,

ஆனால் பரிணாமவாதிகள் கூண்டோடுதான் கைலாசம் போக விரும்புபவர்கள், அது ஒன்றுதான் சாத்தியம் என்றும் அடித்துப் பேசுபவர்கள். மதஞானிகளோ அவரவர் பாடு என்று கருதுபவர்கள். இது வழக்கமான புரட்சி எதிர் மரபுவாதி என்கிற இரட்டை நிலைகளைக் கணிசமான அளவில் மாற்றிப் போடுகிறதில்லையா? ஆனால் தன்னைத் திருத்தினால் உலகை மாற்றலாம் என்று கருதுவது இன்னொரு வகை உடோபியச் சிந்தனைதான். இரண்டும் எதிரெதிர் என்று தோன்றும், ஆனால் செயல்பாட்டில் இரண்டும் தனி மனிதரின் தொடர்ந்த பண்படுதலை, மேம்படுதலையே நம்பித் தம் இயக்கங்களை மேற்கொள்கின்றன. எனவேதான் தனி மனிதர்கள் இரண்டு இயக்கங்களையும் காலம் காலமாகத் தோற்கடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த இரு உதாரணங்களும் நமக்குக் கொடுப்பது என்ன? பதிலிகள் நிகராக இருக்கத்தான் லாயக்கு, அவை மூலமாகாதவை. ஏனெனில் மூலம் என்பது அந்தப் பெயருக்கு உரியதாக இருக்க ஒரு காரணம் இருக்கிறது. அது அவை தாமாக இருப்பதுதான். பிரதிகள் பற்றிச் சிறிது பார்ப்போம்.  

பிரதிபலித்தல் என்பது ரெப்ரஸெண்டேஷன் என்பது ஒரு அளவில் சரி. ஆனால் அது ரிஃப்லெக்‌ஷன் என்றும் ஆகும். ரிஃப்லெக்‌ஷனுக்கு யோசிப்பது என்றும் ஒரு அர்த்தம் உண்டு. ஆனால் கண்ணாடியாகக் காட்டுவது உடனடி அர்த்தம். கண்ணாடி கூட அப்படியே பிரதிபலிப்பதில்லை, இடவலம் மாற்றித்தான் காட்டும். ரிஃப்லெக்‌ஷன்= ஆழ்ந்து யோசிப்பது என்ற பொருளிலும், புத்திக்குள் நாம் அனேகமாக ஏற்கனவே கிரஹித்தவற்றை வைத்துத்தான் அலசிக் கொண்டிருப்போம். கிரஹிப்பு என்கிற சொல்லும் மொத்தத்தைக் கைக்கொள்ளாத, சாராம்சங்களைக் கையாள்கிற செயல்தான். அது பதிலி செய்யும் நடவடிக்கையே அன்றி வேறென்ன? இந்த இடத்தில் சாராம்சம் என்பதும் ஒரு வகைப் பதிலி செய்தல்தான், ஆனால் பதிலியானவற்றிலிருந்து மேலும் சுருங்கச் செய்த பதிலி செய்தல் அது. அதாவது ரிஃப்லெக்‌ஷன். சாராம்சம் என்பது பிரச்சினையான கருத்து, ஏனெனில் சாராம்சத்தை அடைவது என்பதற்கு முடிவு சுலபத்தில் கிட்டாது. அது நிஜத்தை, தூலப் பருண்மையைக் கைப்பற்றுவதே போலக் கடினமானது. மைக்ரோ/ மாக்ரோ இரண்டும் எல்லையற்றவை என்றுதான் இயற்பியலும் நம்மிடம் சொல்கிறது.   

உள்ளதை அப்படியே பெறவோ, பிறகு வெளிக் காட்டவோ மனித எத்தனத்தில் வழியில்லை, ஏனெனில் ஒவ்வொரு ரெப்ரஸெண்டேஷன், ஒவ்வொரு ரிஃப்லெக்‌ஷன், ஒவ்வொரு சிந்தனை, ஒவ்வொரு வரைபடம் எல்லாமே ஏதோ ஒரு எதார்த்தத்தின் சுருக்கம்தான். சுருக்கம் முழுதின் சாராம்சத்தைக் கொடுக்க முயலலாம், ஒரு நாளும் முழுதையே தரவியலாது. அப்படித் தந்தால் அதை நாம் ஏன் சுருக்கம் என்று சொல்லப் போகிறோம்?

இருந்தும் அப்படி ஒரு நூறு சதவீதப் பதிலி செய்தலை மனிதம் காலம் காலமாக விரும்பி இருக்கிறது. மனிதத்தில் இன்னொரு பகுதி அதைக் கருதி அச்சப்பட்டிருக்கிறது. அதுதான் கோலம் (Golem)என்றும், இணை வைத்தல் என்றும், இன்று உச்ச நவீனகாலத்தில் ஆர்டிஃபிஷியல் இண்டெலிஜென்ஸ் என்றும், க்ளோன் என்றும் பலவிதமாக வருணிக்கப்படுகிறது. இதை முயலவேண்டும், முயலக்கூடாது என்று தொடர்ந்து சர்ச்சைகள் பல ஆயிரம் ஆண்டுகளாக நடக்கின்றன. இன்று நடக்கும் சர்ச்சைகள் பழைய சர்ச்சைகளின் இன்னொரு வடிவம்தான்.

இந்த சர்ச்சைகளின் ஒரு வக்கிர வடிவம், அரசியலிலும் உண்டு. தாம் எதார்த்த வாதிகள், மற்றவர்கள் ‘இயக்க மறுப்பு வாதிகள்’ என்றெல்லாம் திமிர்த்து நிற்கும் கூட்டம் பல நாடுகளிலும் உண்டு. இதில் மற்றவர் மீது முத்திரை குத்தி விட்டால் அவர்களை ஒழித்தாகி விட்டது என்ற எண்ணம் மேலோங்கி நிற்கும். அதுவும் பழைய மிகப் பழைய அரசியல் நடவடிக்கைதான். வேற்றாளாக்குதல் (othering) என்பதைக் கடுமையாக எதிர்ப்பதாகப் பாவலா காட்டும் பல ‘புரட்சி’ இயக்கங்களும், கருத்தாக்கங்களும் நிஜத்தில் அதே வேற்றாளாக்கும் கொள்கையைத்தான் தம் அடிப்படையாகக் கொண்டவை. அல்லது அவற்றுக்கு ஆள் திரட்டுதல் கடினம்.

பெயரே நிஜம் என்று நம்பிய பண்டை யுகம் ஒன்று இருந்தது. அப்போது ஒவ்வொரு நபருக்கும், ஜீவராசிக்கும், ஏன் ஜடப் பொருட்களுக்குமே ‘உண்மையான’ பெயர் என்று ஒன்றும், அதைப் பிறருக்குச் சொல்லக் கூடாது என்றும் நம்பிக்கைகள் இருந்தன. இதை வைத்துப் பல நாவல்கள் இங்கிலிஷிலாவது வந்திருக்கின்றன.

சாராம்சவாதி என்று ஒருவருக்கு முத்திரை குத்தினால் அவரை இழிவு செய்ததாகி விட்டது, அவரை ஓரம் கட்டி விட முடியும் என்று இடது சாரிகளும், அடையாள அரசியலாளர்களும் ஆர்ப்பரிக்கின்றனர்.

பொதுவாக இப்படி ஆர்ப்பரிக்கும் கூட்டங்கள் எல்லாமே, வரைபடத்தை அது ஏன் நிலப்பிரதேசமாக இல்லை என்று கேள்வி கேட்கும் மூடர்கள். அப்படிக் கேட்பது ஒன்றே மறுக்க முடியாத குற்றச் சாட்டு என்றும் நம்பும் கூட்டம் இவை.

இத்தனை விஷயங்கள் இந்தப் பதிலி என்ற சொல்லில் உண்டு. பதிலி என்று நான் பயன்படுத்துவதில்லை. பதிலி செய்தல் என்று பயன்படுத்துகிறேன். வெறும் பதிலி என்பது மாற்று என்று கொள்ள வழி உண்டு. மாற்று என்ற சொல்லே இரட்டைப் பொருள் கொண்டதுதான். அதில் என்ன வக்கிரம் என்றால், மாற்று என்றால் எதிர் மாறான வழி என்றும், இன்னொரு வழி என்றும் இரண்டு பொருள் தொனிக்கும் சொல் அது. இரண்டும் ஒன்றல்ல. ஒன்று நிராகரிப்பது, மற்றது இணக்கமாகவும், இணைகோடாகவும், எதிரானதாகவும் இருக்க இடம் உள்ள வழி.

நாம் வர்ச்சுவல் ரியாலிடியைக் கட்டும்போது எதிரான ஒன்றை உருவகிப்பதில்லை. கிட்டத்தட்ட முழு இணக்கத்தையே நாடுகிறோம். பிரதிநிதிகளுக்கும், ஆல்டர்நேட் ரியாலிடிக்கும் வேறுபாடு உண்டு.

பிரதிநிதி ஒரு பொம்மை அல்ல, சோளக்கொல்லை பொம்மை நிச்சயம் இல்லை. தானாக மட்டுமாக இருப்பவரா என்றால் அதுவும் இல்லைதான். அதே நேரம் சுயப்பிரக்ஞையும் சுயத் தேர்வும் உள்ள ஒரு நபர். பிரதிநிதித்துவம் என்பதில் அந்த சுயத்தின் தேர்வு கசிந்து உள்ளே வர வழி உண்டு என்பதோடு அது தவிர்க்கவியலாததும் கூட.

ஏனெனில் கசிதல் என்ற சொல் வரும்போதே அந்தக் கசிதலை ஒரு அமிலக் கசிவு போல நான் உணர்ந்தேன். பிரதிநிதிகளின் சுயம் கசிதலில் என்ன அமிலம்? மக்களின் விருப்புகளை- அவற்றின் ஒட்டு மொத்தச் சுருக்கத்தை என்றே வைப்போம், அதைக் கூட பாராளுமன்றத்தில் தெரிவிக்காமல், அவற்றை வெட்டி, அவற்றில் தம் சுயவிருப்பை ஒட்டிப் பிரதிநிதியொருவர் ‘பிரதிபலிக்க’த் துவங்கும்போது சுயத்தின் அமிலம் மக்கள் விருப்பை அரிக்கிறது, நாளாவட்டத்தில் அமிலம் ஜெயிக்கும், மக்கள் விருப்பு என்பது தேவையில்லாத தொல்லை என்பதாக ஆகி விடும். நாய்க்கு எலும்பு, எறும்புக்குச் சிறு துண்டு உணவு என்பது போலத் தம் சுயம் பெரிதாகிக் கொண்டே போனால், அதிலிருந்து பொதுச் சொத்தைத் தம் காணி நிலமாகக் கொண்டு ஆள விரும்ப அதிக நாளாகாது. அப்படிப் பிடுங்கிக் கொள்வது ஒரு கொள்ளைதான். அக் கொள்ளையில் சிறு பங்கை மக்களிடம் வீசி விட்டு, பிரதிநிதிகள் பெரும் ஆகிருதியாகி, ஒளியை விழுங்கி இருண்ட பகுதியில் மக்களைத் தொங்கலில் விட்டு விட்டு, தாம் மட்டும் ஒளியில் குளிக்கும் நிலை வரும்.

***

Something amazing happened at this point. கசிதல் என்று சொல் விழுந்த உடன், எனக்கு அணையில் நீர்கசிவதைக் கண்ட சிறுவன் அந்தத் துளையில் விரலை வைத்துக் கொண்டு உதவி வரும்வரை காத்திருந்த ‘அற்புத’க் கதை நினைவு வந்தது.

சரி அந்தச் சிறுவன் எந்த நாடு என்று சரியாகத் தெரிந்து கொள்வோம், என்று கூகிள்வழித் தேடல் செய்தால், அந்தக் கதையை எழுதியவர் யூரோப்பியர் இல்லை, கதை நடந்த களம் மட்டும்தான் யூரோப்பில் உள்ள நெதர்லாந்து எனும் ஒரு நாடு. கதை ஆசிரியர் ஓர் அமெரிக்கர், அவர் கதையை எழுதும் வரை நெதர்லாந்துக்குப் போனதே இல்லை, ஆனால் டச்சுப் பையனின் வாழ்க்கையாக, அந்தக் கதையை நாவலாக எழுதினார், இந்த அணைக்கட்டுச் சிறுவனின் கதை அந்த டச்சுப் பையன் வாழ்வில் ஒரு சிறுகதையாக வரும் பகுதி என்றெல்லாம் தெரிந்து கொண்டேன்.

பிறகு அந்த அமெரிக்கரின் ‘சாதனை’யைப் பற்றிப் படிக்கையில் அட இதுதான் இந்த வரைபடம் எதிர் நிலப்பரப்புக்கு எத்தனை பொருத்தமான ஒரு கதை, எடுத்துக் காட்டு என்று தோன்றியது. அந்தப் பெண் டச்சு மக்களை அவர்களின் நிலத்தில், நிஜ வாழ்வில், நேரில் காணாமல் எப்படிக் கதை எழுதினார் என்றால், அமெரிக்காவில் டச்சுக் குடியேறிகள் அவரது அண்டை வீட்டுக் காரர்கள், அவர்களின் வாழ்வும், கதைகளும் ஒரு பக்கம். மறுபுறம் அவரை உற்சாகப்படுத்தியது டச்சு வரலாறு பற்றிய ஒரு புத்தகம். அதிலிருந்தெல்லாம், தான் கற்பனை செய்த ஒரு டச்சு நிலத்தை, அங்கு வாழும் மக்களைப் பற்றிய நாவல் அது. அதைப் பற்றிய விக்கி குறிப்பு இதை அதிகம் ஏளனம் செய்யாமல், இலேசாகச் சுட்டுகிறது, அதில் உள்ள மக்கள் டச்சு என்பதை விட அதிகம் ஜெர்மன் பண்பாட்டுக் குணங்கள் கொண்டவர்களாகத் தெரிகிறார்கள் என்று.

அந்த நாவலின் மையப் பாத்திரங்களான ஹான்ஸ் அண்ட் க்ரெடல் என்ற இருவரின் பெயர்களும் ஜெர்மன் சிறுவர் இலக்கியக் கதைகளில் புகழ் பெற்ற பெயர்களும் கூட. பார்க்க: https://en.wikipedia.org/wiki/Hans_Brinker,_or_The_Silver_Skates

ஆக பதிலி செய்தல் என்பது, நிஜத்துக்கு நிகராக நிற்க முயல்கையில் பதிலி செய்ததில் உள்ள கசிவுகள் நிஜத்தையே திரிக்கும்.சில நேரம் அந்தத் திரிப்பு விரும்பிய முடிவுக்கு எதிர்மாறாக இருக்கும், சில நேரம் இணக்கமாக இருக்கும். எப்படியும் இறுதியில் கிழிசல் துண்டுகள்தாம் எஞ்சி நிற்கும்.

இன்றைய இந்து மக்கள் கூட்டம் பயிலும் இந்து மதம் போல, இந்துப் பண்பாடு போல என்று இன்னொரு உதாரணத்தை இங்குப் பார்க்கலாம்.

நிறைய வழிமுறைகள், பலவகைச் சிந்தனைப் பாதைகள், இலக்குகள் கொண்ட ஒரு சமய வாழ்வுக்குச் சில எளிய வரைபடங்களாக, பொதுவாழ்வுக்கென கோவில், மூர்த்தி வழிபாடு, பூஜைகள், விழாக்கள் என்றும், குடும்பங்களுக்கான வழிபாடுகள், பல சடங்குகள் என்றும் பழைய பண்பாட்டுக் குழுவினர் என்றோ தயாரித்துக் கொடுத்துப் போயிருந்தனர். அவற்றைச் செய்ய விரும்புவோர் செய்யட்டும், எனக்கான வழியை நான் காண்கிறேன் என்று இவற்றை விட்டு விலகிப் போவாரையும் இந்தச் சமயம் தடை செய்வதில்லை. ஆனால் என் வழியில் நான் நிஜத்தையே கைப்பற்றுகிறேன், அப்படிக் கைப்பற்றுவது ஒன்றுதான் வாழ்வின் அர்த்தம் தரும் செயல், அதைச் செய்யாது பதிலி செய்வது மூடத்தனம் என்று மூர்க்கராக எதிர்த்து நின்று பலபாதைச் சமயத்தை இழிவு செய்யும் மடமையை இன்று நிறைய இந்துக்களே செய்கிறார்கள்.

அப்படி இழிவு செய்வது செமிதியத்தின் இயல்பான தன்னகங்கார நடவடிக்கை, ஆணவம் என்பது செமிதியத்தின் அடிப்படை தொனி. அந்த ஆணவத்தைக் கடன் வாங்குவது குருட்டுத்தனத்தை வேண்டி விரும்பித் தானும் சுமத்திக் கொள்வதுதான். இந்தக் குருட்டுத்தனம் இந்தியாவில், குறிப்பாக இந்துக்கள் நடுவே எழக் காரணம் மகாலேயியக் கல்வி முறை, இந்தியம் என்பதை அழித்த யூரோப்பியத்தைப் பிரதி எடுத்தல் முறை. அதற்கு முன்பு ஆணவத்தோடு இந்தியத்தை அழித்த இன்னொரு செமிதிய மதம் பல நூறாண்டுகள் ஆண்டு இருப்பதும் இன்னொரு காரணம். வரைபடத்தை- நாலந்தா பல்கலை போன்றவற்றை- எத்தனை முனைந்து அழித்தனர் அந்தத் தற்குறிக் கூட்டத்தினர்? குதிரை மீதேறிக் கொள்ளை அடிக்க வந்த கும்பலுக்கு பல்கலைக் கல்வி எப்படிப் புரிந்திருக்கும்? 

அதாவது வரைபடம் ஏன் நிலப்பரப்பாக இல்லை என்பது அவர்கள் கேள்வி. இவர்களின் பல நூறாண்டு ஆட்சியின் பலன், இன்று கிழிந்து நிலப்பரப்பில் இங்கும் அங்கும் மட்டும் பறந்து புதர்களில் சிக்கி வதங்குவதாக ஆகிப் போனது. வரைபடத்தின் துண்டுகளாக மட்டும் எஞ்சியிருக்கிறது இந்து சமய வாழ்வு என்பது என் கருத்து.

மைத்ரேயன்

ஆகஸ்ட், 2019

பின் குறிப்புகள்:

[1] பதிலி= ஆல்டர்நேடிவ் என்றோ, மாற்று என்றோ கொள்வது சரிதான். ஆனால் ஆல்டர்நேடிவ் என்பதன் வேர்ச்சொற்கள், மூலாதாரம் என்ன என்று பார்த்தால் இந்தப் பக்கத்தில் அவை கிட்டுகின்றன. https://www.etymonline.com/word/alternative

[2] மேற்கோளின் மூல வடிவு: Husserl’s injunction that “a new way of looking at things is necessary.” Phenomenology aimed to describe reality purely as it was perceived, stripped of all theories, categories, and definitions: turning attention exclusively, in Husserl’s famous dictum, “to the things themselves.”

மேற்கோள் பெறப்பட்ட கட்டுரை இது: https://www.theparisreview.org/blog/2019/08/21/sartres-bad-trip/

[கட்டுரை சில அறிவுத் துறைகளைத் தொட்டு விலகியிருக்கிறது என்றாலும், மைய அணுகலில் இது ஒரு பாமரத்தனமான கட்டுரைதான். குறிப்பிட்ட கல்வித் துறைகளில் இருந்து இதை எளிதே மறுக்க முடியும் என்று என் நினைப்பு. குறிப்பாக மொழியியல் துறையில் இருந்து இங்கு சொல்லப்படும் பல கருத்துகளை மறுக்க முடியலாம் என்ற ஓர் ஊகம் எனக்கு இருக்கிறது. சரி அப்படியாவது ஒரு உரையாடல் நடக்கட்டும் என்றுதான் இதை பிரசுரிக்க அனுப்புகிறேன்.]

3 Replies to “பதிலி செய்தலும் நிஜமும்”

  1. அந்த நிழலான மனிதனும், நிஜமான காலணிகளும் மிகப் பொருத்தமாக உள்ளன. கட்டுரையாளர் தன் சிந்தனைப் போக்கை அப்படியே எழுத்தில் கொண்டு வந்திருக்கிறார்.அது சிந்தனையை, மேலும் கேள்விகளை உள்ளே எழுப்பிக் கொள்ள வழி செய்கிறது.என்னைப் பொறுத்தவரை அனுபவ அறிவு என்பது ரிஃப்ளெக்க்ஷன் தான்;இதை ஒரு சபையில் சொல்லப்போய் என் ஆங்கிலம் கேலிக்குள்ளாகியது.அறிதல்,அனுபவம்,அந்த அனுபவம் தரும் நினைவுச் சேகரிப்பு(நெருப்பில் முதலில் சுட்டுக் கொண்டால் மறு நாள் கவனமாக இருப்பது போல்),முடிந்த வரை இயல்பாக அணுகுதல்,அதையும் ஒரு கட்டத்தில் சோதனைக்கு தானறியாமல் உட்படுத்தல், பின்னர் அதிலிருந்தும் விலகுதல்….இவை சொல்லாகவே இருந்து, பொருளென்று மாறி,பின்னர் இயைந்துவிடும் எனத் தோன்றுகிறது.நன்றி

    1. அன்புள்ள ஜெய்சங்கர் வெங்கட்ராமன் அவர்களுக்கு,
      அந்தப் படத்தைப் பொருத்தியவர் இன்னொரு பதிப்பாசிரியர். கவிஞர், கதாசிரியர், க்ராஃபிக் டிசைனர், தகவல் பொறியியலாளர். கடைசி நேரத்தில் அதைச் சேர்த்திருக்கிறார், நானும் அதை உங்கள் கடிதம் கண்ட பிறகுதான் கவனித்தேன். பொருத்தமான படம்தான்.

      தவிர கட்டுரையில் சொல்லப்பட்ட பல கருத்துகளில் ஹுசர்ல் எனும் தத்துவாளர் பற்றிய கருத்துகள் அதிக ஆழமில்லாதவை. அந்தத் துறையில் புலமை இல்லை என்ற காரணத்தோடு, ஹுசர்ல் பற்றி நான் இன்னும் கற்க வேண்டியவை நிறைய உண்டு என்பதும் சொல்லப்பட வேண்டியிருக்கிறது.
      அவர் பல தத்துவாளர்களைப் போலத் தன் காலத்தின் அறிவுச் சூழலால் ஓரளவு கட்டுண்டு யோசித்திருக்கிறார். கார்ட்டீசியச் சிக்கல்களிலிருந்து மீள விரும்பினாலும், அவற்றிலேயே போய்ப் புதையத்தான் அவரால் முடிந்திருக்கிறது.
      ஜிட்டு.கி வேறு புலத்திலிருந்து வருகிறார், வேறு நோக்கங்களோடு செயல்படுபவர், இவருக்கு ‘அறிவுத் துறை’யின் விஸ்திகரணமும், அதன் இயக்கத்தை ‘அறிவியலாக’ ஆக்குவதும், பொருட்டே அல்ல. அடிப்படையில் ஹூசர்ல் மனித சமுதாயத்துக்கென்று யோசிப்பதாகத் தன் செயல்களை நினைத்தாலும், யுரோப்பியத்திலிருந்துதான், அதற்குள்தான் அவர் யோசித்தார். ஜிட்டு கி, இந்தியம், யூரோப்பியம் ஆகிய இரண்டிலும் பரிச்சயம் கொண்டிருந்தவர் என்பதால் யூரோப்பியப் பாணியில் இந்தியத்தைப் பழக முயன்றிருக்கிறார் என்று நான் நினைக்கிறேன்.
      ஆக விளைவுகள் வெவ்வேறாக அமைந்திருக்கின்றன. ஹூசர்ல் சிறுபான்மை மனிதரிடையே உரையாடல்களைக் கருதித் தன் கருத்துலகைக் கட்டமைத்திருக்கையில், ஜிட்டு கி. பெரும் சமுதாயத்தினரும் பழகும், பயன்படுத்தும் வழி முறையை எண்ணித் தன் சிந்தனையை உருவாக்குகிறார்.
      இந்த இரண்டும் ஓலாய்சராக், போர்ஹெஸ் ஆகியோரின் செயல் முறைகளுக்கும், உலகமயமாதல் என்ற போர்வையில் யூரோப்பியத்தின் காலடியில் உலகை வைக்கும் முயற்சிகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளின் பதிலிகள். இவற்றில் எவை ‘நிஜம்’ எவை பதிலி என்று கேட்டால், பதில் சொல்வது கடினம். 🙂 மைத்ரேயன்

      1. விரிவான உங்கள் பதிலுக்கு நன்றி. ஜிட்டு.கி மிக ஆழமாகவும், அகலமாகவும் சிந்தித்தவர்;ஹூசர்லின் சிந்தனையைப் பற்றி எனக்கு ஒன்றும் தெரியாது.இப்போது ஓரளவிற்கு புரிந்து கொண்டேன்.’நிஜம்’, ‘பதிலி’ என்பது ‘மூலைத்தாய்ச்சி’ விளையாட்டைப் போலிருக்கிறது.நன்றிகள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.