வெளி மூச்சு – 2

This entry is part 2 of 2 in the series வெளி மூச்சு

டெட் சியாங்

[இந்தக் கதையின் முதல் பாகம் சொல்வனம் 205 ஆம் இதழில் ஆகஸ்ட் 12, 2019 அன்று பிரசுரமாகியது.]

நுண்நோக்கியை நினைவுசக்தியின் உபதொகுப்புக் கருவிகளில் ஒன்றைப் பார்க்கத் திருப்பினேன், அதன் கட்டமைப்பைக் கவனித்துப் பார்த்தேன். என் நினைவுகளை என்னால் அறிந்து கொண்டு விட முடியும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, என்ன வழியில் அவை பதிவாகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியலாம் என்றுதான் நினைத்தேன். நான் முன்பு எதிர்நோக்கியிருந்தபடி, கொத்துக் கொத்தாக நுண் தகட்டுப் பக்கங்கள் ஏதும் தென்படவில்லை, ஆனால் பொறிச் சக்கரங்கள், நிலைமாற்றிகளின் வரிசைகள் ஏதும் காணவில்லை என்பது எனக்கு வியப்பளித்தது. மாறாக அந்த உபதொகுப்பு அனேகமாக முழுதுமே வரிசையான நுண்மையான காற்றுக் குழாய்களால் ஆனதாகத் தெரிந்தது. இந்த நுண்குழாய்களின் இடைவெளிகள் மூலமாக அந்த வரிசையின் உள்ளே அதிர்வலைகள் கடப்பதை நான் பார்க்க முடிந்தது.

உருவை மேலும் பெருக்குவதன் மூலமும், கவனமாகப் பரிசீலனை செய்வதனாலும், அந்த நுண்குழாய்கள் கிளை பிரிந்து மயிரிழை போன்ற காற்றுக் குழாய்களாக ஆகின்றன என்றும், அவை தங்க இலைகள் கீல்களால் இணைந்த வலைப் பின்னலான கம்பிகளோடு ஊடு பாவிப் பின்னப்பட்டிருக்கின்றன என்றும் கண்டேன். மயிர்க்குழாய்களிலிருந்து விடுபெறும் காற்றின் பாதிப்பால், அந்த இலைகள் பலவேறு நிலைகளில் நிறுத்தப்பட்டிருந்தன. இவை வழக்கமான முறையில் அமைந்த நிலைமாற்றிகள் இல்லை, ஏனெனில் காற்றுடைய ஓட்டத்தால் தாங்கப்படவில்லை என்றால் அவை தம் நிலையை நீட்டிக்கவில்லை, ஆனால் இவைதான் நான் தேடிய நிலைமாற்றிகள் என்றும், இவற்றில்தான் என் நினைவுகள் பதிக்கப்பட்டன என்றும் நான் தற்காலிகக் கருது கோள் ஒன்றை மேற் கொண்டேன். நான் பார்த்த அதிர்வலைகள் நினைவு கூரும் செயல்களாக இருக்க வேண்டும், இலைகளின் நிலைகள் படிக்கப்பட்டு அறிதலுக்கான எந்திரத்துக்கு அனுப்பப்பட்டிருக்க வேண்டும்.

 இந்தப் புதுப் புரிதலுடன், அடுத்து அறிதல் எந்திரத்தை நோக்கி என் நுண் நோக்கியைத் திருப்பினேன். இங்கும் வலைப்பின்னலான கம்பிகளையே கண்டேன், ஆனால் அவற்றில் பல நிலைகளில் தொங்க விடப்பட்ட இலைகள் ஏதும் இல்லாதிருந்தன; மாறாக இலைகள் முன்னும் பின்னும் ஆடித் துரிதமாக நிலை மாறின, பார்வைக்குச் சிக்காத அளவு வேகம். என்னவென்றால், கிட்டத்தட்ட அந்த எந்திரம் மொத்தமுமே இயங்கிக் கொண்டிருப்பதாகத் தெரிந்தது, அதில் நுண் குழாய்களை விட வலைப் பின்னல்களே அதிகமிருந்தன, இத்தனை தங்க இலைகளையும் காற்று எப்படி தெளிவான முறையில் சேர முடியும் என்று நான் வியந்தேன். அந்த இலைகளைப் பல மணி நேரம் நான் உற்றுக் கவனித்தேன், அவைகளே நுண்குழாய்களின் வேலையைச் செய்கின்றன என்பது பிறகுதான் புரிந்தது; இலைகள் தற்காலிகப் பாதைகளாகவும், அடைப்பான்களாகவும் வேலை செய்தன, அவை காற்றைப் பிற இலைகள் பால் செலுத்தும் அளவே இருந்தன, பிறகு அதன் விளைவாக மறைந்தன. இது தொடர்ந்து உருமாறிக் கொண்டிருக்கும் ஓர் எஞ்சின், தான் செயல்படும்போதே தன் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகத் தன்னை மாற்றிக் கொண்டிருந்தது. அந்த வலைப் பின்னல் எந்திரமாக இருப்பதை விட, எந்திரம் எழுதப்படும் ஒரு பக்கம் போல இருந்தது, அதில் எந்திரம் தானும் இடைவிடாமல் எழுதியது.

என் பிரக்ஞை இந்தச் சிறு இலைகளின் இடநிலைகளில் சங்கேதமாகக் குறிக்கப்பட்டது என்று நாம் சொல்லலாம், ஆனால் அதை விட மேலும் கறாராகச் சொன்னால், அந்த இலைகளைச் செலுத்திக் கொண்டபடி தொடர்ந்து மாறிக்கொண்டிருந்த காற்றின் பாணியில் அது சங்கேதமாகப் பதிக்கப்பட்டது என்பது சரியாக இருக்கும். அந்த தங்கத் தகடுகளின் அசைவுகளைக் கவனித்தபடி இருக்கையில், நாம் எப்போதும் அனுமானிக்கிற மாதிரி, நம் சிந்தனைகளை அடையும் எந்திரத்துக்கு சக்தியை அந்தக் காற்று கொடுக்கவில்லை என்று நான் அறிந்தேன். உண்மையில் காற்றுதான் நம் எண்ணங்களைக் கடத்தும் ஊடகம். நாம் எல்லாருமே காற்றின் ஓட்டத்தின் பாணிகள் மட்டுமே. மென் தகடுகளில் வரிவளையங்களாக அல்ல, நிலைமாற்றிகளின் இடங்களால் அல்ல, ஆனால் இடையறாது தொடர்ந்த ஆர்கான் வாயுவின் ஓட்டமாகத்தான் என் நினைவுகள் பதிக்கப்பட்டன.

இந்த வலைப்பின்னல் எந்திர அமைப்பை நான் புரிந்து கொண்ட பிறகு, சில கணங்களில் என் பிரக்ஞையில் அடுத்தடுத்து துரிதமாகப் புது தரிசனங்கள் பாய்ந்து வந்தன. எளிதில் மெல்லிய தகடாகவோ, நுண்ணிய கம்பியாகவோ ஆக்கப்படக் கூடிய தங்கம்,ஏன் நம் மூளைகளை உருவாக்கத் தக்கதான ஒரே பொருளாக  இருக்கிறது என்பது அவற்றில் முதலாவதும், மிகச் சாதாரணமானதுமானது. மிக மிக மெல்லிய தகட்டு இலைகள்தாம் அப்படி ஒரு எந்திரத்திற்கேற்ப வெகு வேகமாக நகரக் கூடும், மிகச் சன்னமான இழைக்கம்பிகள்தாம் அவற்றுக்கு கீல்களாக வேலை செய்யக் கூடும். ஒப்பீட்டில் இந்தச் சொற்களைப் பொறிக்க நான் பயன்படுத்தும் எழுதுகோல் கிளப்பும் செப்புப் பிசிர்கள், அவற்றை ஒவ்வோர் பக்கத்தையும் முடித்ததும் அந்தத் தகட்டிலிருந்து நான் ஒரு வீச்சில் கீழே தள்ளும்போது, சொரசொரப்பாகவும், உலோகக் கழிவுகள் போல கனமானதாகவும் இருக்கிறது. இது (தங்கம்) நிலைமாற்றிகள் அல்லது பொறிச் சக்கரங்களின் வேறெந்தத் தொகுப்பையும் விட பல மடங்கு துரிதமாக அழிப்பதும், பதிப்பதும் செய்ய ஏதுவாக உள்ள ஊடகம்.

அடுத்துத் தெளிவானது என்னவென்றால் அது, காற்று இல்லாததால் இறந்த மனிதருக்கு காற்று முழுதும் நிரம்பிய நுரையீரல்களைப் பொருத்தினாலும் அவரை மீண்டும் உயிரோடு எழுப்ப முடியாதது ஏன் என்பது. வலைப் பின்னலுக்கு உள்ளே இருக்கும் இலைகள் தொடர்ந்த காற்று தாங்குகிறதால் சமநிலையில் இருக்கின்றன. இந்த ஏற்பாடு அவை முன்னும் பின்னும் துரிதமாக அசையவும் விடுகிறது, அதே நேரம் காற்றுடைய ஓட்டம் எப்போதாவது நின்று போனால், எல்லாம் அழிந்து போகிறது; எல்லா இலைகளும் வீழ்ந்து, ஒரே பாணியில் தொங்கும் நிலைகளுக்கு வந்து விடுகின்றன, பல வகைப் பாணிகளையும், அவை தொகுப்பாகக் கொடுக்கும் பிரக்ஞையையும் அழித்து விடுகின்றன. காற்று அளிப்பதை மீட்டுக் கொடுத்தாலும், இருந்து அழிந்து போனதை மீண்டும் படைக்க முடிவதில்லை. இதுதான் வேகத்திற்கு நாம் கொடுக்கும் விலை; அணி அமைப்புகளைச் சேமிக்க மேலும் நிலைப்புள்ள  ஊடகமென்றால், நம்முடைய பிரக்ஞை இப்போதை விட மிக மெதுவாகவே இயங்கும்.

அப்போதுதான் கடிகாரத்தின் பிழைபடுதலுக்கு ஒரு விடையை நான் கண்டேன். இலைகளின் இயக்கங்களின் வேகம் அவை காற்றால் தாங்கப்படுவதை நம்பி இருக்கிறது என்று நான் கண்டேன், அப்போது கிட்டத்தட்ட உராய்வே இல்லாது இலைகள் இயங்க முடிந்தது. அவை சற்று மெதுவாக அசைந்து இயங்கினால், அவை இன்னமுமே உராய்வின்றி இயங்க முடியும். அவை முன்னை விட மெதுவாக இயங்கினால், அவற்றுக்கு உராய்வு கூடுதலாகி இருக்கிறது என்பது பொருள், இப்படி நேரக் காரணம், அவற்றுக்குக் கிட்டுகிற தாங்குதல் மெலிதாகி விட்டிருக்கிறது என்பதுதான் இருக்கும், வலைப் பின்னலூடே ஓடுகிற காற்றின் வேகம் குறைந்திருக்கிறது என்று ஆகும்.

கூண்டு கடிகாரங்கள் வேகமாக ஓடுகின்றன என்று பொருள் இல்லை. என்ன நடக்கிறதென்றால், நமது மூளைகள் மெதுவாகி விட்டிருக்கின்றன. கூண்டு கடிகாரங்கள் ஒரு ஊசலால் உந்தப்படுகின்றன, அவற்றின் ஆட்ட வேகம் ஒரு போதும் மாறுவதில்லை, அல்லது பாதரசம் ஒரு குழாயில் நகர்வதால் இயக்கப்படுகின்றன, அந்த நகர்வு மாறுவதில்லை. ஆனால் நம் மூளைகள் காற்று கடந்து போவதால் இயங்குகின்றன, காற்றோட்டம் மெதுவாகும்போது, நம் சிந்தனைகள் மெதுவாகி விடுகின்றன, கடிகாரங்கள் முன்னை விட வேகமாக ஓடுவது போல நமக்குத் தோன்ற ஆரம்பிக்கிறது.

நம் மூளைகள் மெதுவாக இயங்கத் தொடங்கி இருக்கின்றன என்று நான் அச்சப்பட்டிருந்தேன், இந்த சாத்தியப்பாடுதான் என்னை சுய-அறுவைச் சோதனைக்கு இட்டுச் சென்றது. ஆனால் என் முன் முடிவு, நம் அறிதல் எந்திரங்கள் – காற்றால் இயக்கப்படும்போது- மையத்தில் பொறிகளால் இயங்குவன என்றும், சோர்வால், மெலிவால் அந்த பொறியின் ஏதோ அம்சம் உருக்குலைந்து வருகிறது என்றும், அதுதான் வேகக் குறைவுக்குக் காரணம் என்றும் இருந்தது. அது மோசமான நிலையாக இருந்திருக்கும், ஆனால் அந்த எந்திரப் பாகத்தை நாம் பழுது பார்த்து விட முடியும் என்றும், நம் மூளைகள் முந்தைய வேகத்தை மறுபடி அடையும் என்றும் நம்ப முடிந்திருந்தது.

ஆனால் நமது சிந்தனைகள் முழுதுமே காற்றின் அமைப்புகள்தான், பல்சக்கரங்களின் இயக்கத்தை நம்பி இருக்கவில்லை என்றால், பிரச்சினை அதை விட மிகவும் மோசமானதாகத் தெரிந்தது, ஏனெனில் ஒவ்வொரு மனிதரின் மூளையூடேயும் செல்லும் காற்று முன்னை விட வேகம் குறைந்து ஓட என்ன காரணமாக இருக்க முடியும்? நம் காற்று நிரப்பும் நிலையங்களின் காற்று விநியோகக் கருவிகளில் அழுத்தம் குறைவதால் இருக்க முடியாது; நம் நுரையீரல்களில் உள்ள காற்றழுத்தமோ மிக அதிகம் என்பதால், நம் மூளையைக் காற்று சென்றடைவதற்கு முன்பு, பல கட்டுபாட்டுக் கருவிகளால் காற்றின் ஓட்டத்தைத் தடுத்து அழுத்தத்தைக் குறைத்து அனுப்பவேண்டி இருக்கிறது. எனவே இப்படி வேகம் குறைவது எதிர்ப் புறத்திலிருந்துதான் நேர்கிறது என்று நான் பார்த்தேன், நம்மைச் சூழ்ந்துள்ள வெளியின் அழுத்தம் கூட ஆரம்பித்திருக்க வேண்டும்.

இது எப்படி நடக்கும்? இந்தக் கேள்வி மனதில் உருவானதுமே, அதற்குச் சாத்தியமான ஒரே ஒரு பதில் புலப்பட்டது: நமது ஆகாயம் எல்லையற்றதாக இருக்க முடியாது. நம் பார்வையின் எல்லைகளுக்கு அப்பாற்பட்ட எங்கேயோ, நம் உலகைச் சூழ்ந்திருக்கிற க்ரோமியச் சுவர்கள் உட்புறம் கவிந்து ஒரு கும்மட்டமாக ஆகி இருக்க வேண்டும்; நம் உலகம் திறந்த கிணறல்ல, மாறாக மூடிய அறை. கீழே உள்ள சேமிப்புக் கடலின் அழுத்தத்தோடு சமன்படும் வரை, காற்று இந்த அறையில் மெள்ள மெள்ளச் சேர்ந்திருக்கிறது.

அதனால்தான், பொறிக்கப்படும் இந்தப் பதிப்பின் துவக்கத்தில், வாழ்வின் மூலாதாரம் காற்று இல்லை என்று குறித்தேன். காற்று உருவாக்கப்படவோ, அழிக்கப்படவோ முடியாதது; பேரண்டத்திலேயே காற்றின் மொத்த அளவு நிலையாக உள்ளது, நாம் வாழக் காற்று ஒன்றுதான் தேவை என்றால் நாம் ஒரு போதும் சாக மாட்டோம். ஆனால் நிஜத்தில், எங்கே காற்று அடர்த்தியாக உள்ளதோ அங்கிருந்து எங்கே காற்று மெலிவாக உள்ளதோ அங்கே காற்று ஓடுவதுதான், காற்றின் அழுத்தத்தில் உள்ள வேறுபாடுதான் வாழ்வின் ஆதாரம். நம் மூளைகளின் செயல்பாடு, நம் உடல்களின் இயக்கங்கள், நாம் இதுகாறும் கட்டி அமைத்த ஓவ்வொரு எந்திரத்தின் இயக்கம் போன்றன எல்லாமே காற்றின் ஓட்டத்தால்தான், வேறுபடும் அழுத்தங்கள் ஒன்றையொன்று சமன்படுத்தத் துவங்குவதால் ஏற்படும் சக்தியைக் கொண்டுதான் சாத்தியமாகி இருக்கிறது.  அண்டத்தில் உள்ள அழுத்தம் எல்லா இடங்களிலும் சமநிலையில் இருந்தால், காற்று அசைவற்று இருக்கும், அதனால் பயனற்றதாகி விடும்ல் ஒரு நாள் நாம் அசைவற்ற காற்றால் சூழப்படுவோம், அதிலிருந்து எந்தப் பயன்பாட்டையும் பெற இயலாதவர்களாகி விடுவோம்.

உண்மையில் நாம் காற்றை நுகர்வதே இல்லை. ஒவ்வொரு நாளும் புது ஜோடி நுரையீரல்களிலிருந்து நான் உள்ளிழுக்கும் காற்று, என் கை கால்களின் இணைப்புகள் வழியேயும், என் உடலின் மேலுறையின் விளிம்புகளின் வழியேயும் கசிகிற காற்றும் அளவில் ஒன்றேதான், என்னைச் சுற்றியுள்ள சூழலுக்கு நான் சேர்க்கிற காற்று அதே அளவுதான்; நான் செய்வதெல்லாம் உயரழுத்தம் உள்ள காற்றை தாழ்வான அழுத்தம் உள்ள காற்றாக மாற்றுவதுதான். என் உடலின் ஒவ்வொரு அசைவாலும், இந்த அண்டத்தில் காற்றழுத்தம் சமநிலைக்கு வருவதற்கு நான் உதவி செய்கிறேன். எனக்கு எழும் ஒவ்வொரு சிந்தனையாலும், அந்த பேரழிவான சமநிலை வரும் கட்டத்தை நான் துரிதப்படுத்துகிறேன்.

வேறேதாவது நிலையில் இந்த முடிவுக்கு நான் வந்திருந்தேனானால், என் நாற்காலியிலிருந்து துள்ளி எழுந்து, தெருவில் ஓடி இருப்பேன், ஆனால் என் இப்போதைய நிலை- உடல் கட்டுப்படுத்தும் தாங்குகம்பியில் பூட்டப்பட்டு, மூளை சோதனைச் சாலையில் ஆங்காங்கே தொங்கவிடப்பட்டு இருக்கையில்- அப்படிச் செய்வது இயலாத செயல். என் சிந்தனையின் களேபரத்தால் என் மூளையில் இலைகள் வேகவேகமாகத் துடிதுடிப்பதை என்னால் பார்க்க முடிந்தது, அது இப்படிக் கட்டுண்டு, அசைக்க முடியாமல் இருக்கும் என் நிலையால் எனக்கு எழும் கிளர்ச்சியை அதிகரித்தது. அந்த நிலையில் எனக்கு பேரச்சம் ஏதும் எழுந்திருந்தால், ஒரே நேரத்தில் பொறியில் சிக்கினாற் போலவும், எல்லாக் கட்டுப்பாட்டையும் இழந்து போனது போலவும், என் காற்று அத்தனையும் தீரும் வரை என் தளைகளிலிருந்து விடுபடுவதற்கு முரண்டிக் கொண்டும் இருக்கிறேன் என்ற ஒரு கொடும் கனவின் தாக்குதல் நேர்ந்திருந்தால், எனக்குச் சாவுதான் நேர்ந்திருக்கும்,  என் நோக்கத்தின் படியேயும், தற்செயலாகவும், என் கைகள் கட்டுப்பாட்டு விசைகளை மாற்றின, அது பெரிஸ்கோப் வழியே செலுத்தப்பட்ட என் பார்வையை அந்த வலைப்பின்னலிலிருந்து அகற்றியது, அப்போது என்னால் பார்க்க முடிந்ததெல்லாம் வேலைக்கான என் மேஜை மட்டும்தான். என்னுடைய அச்சத்தை உருப்பெருக்கிப் பார்ப்பதிலிருந்து விடுபட்ட நான், நிதானத்தைப் பெற முடிந்தது. போதுமான அளவு சமாதானமடைந்த பிறகு, என்னை மறுபடி முழுதாகப் பொருத்திக் கொள்ளும் நீண்ட வேலையைத் துவங்கினேன். ஒரு வழியாக என் மூளையை  அதன் இயல்பான அமைப்பில் இருந்தபடி பொருத்தி முடித்தேன், என் தலையில் தகடுகளை மறுபடி பொருத்திக் கொண்டேன், என்னைக் கட்டுப்படுத்திய தாங்குகம்பிகளிலிருந்து விடுவித்துக் கொண்டேன்.

மற்ற உடலியலாளர்களிடம், நான் கண்டுபிடித்ததை ச் சொன்னபோது அவர்கள் அதை நம்பவில்லை, ஆனால் என் சுய-பிரிப்பு சோதனைக்குப் பிறகு வந்த மாதங்களில் மேலும் பலர் நம்பத் தலைப்பட்டனர். மேலும் பல மக்களின் மூளைகள் சோதிக்கப்பட்டன, வெளிச் சூழலின் அழுத்தத்தில் மேலும் பல அளவெடுப்புகள் எடுக்கப்பட்டன, விளைவுகள் எல்லாம் நான் சொன்னதை உறுதி செய்வனவாக இருந்தன. எங்கள் அண்டத்தின் பின்புல காற்றழுத்தம் கூடிக் கொண்டுதான் இருந்தது, அதனால் எங்கள் எண்ணங்கள் மெதுவாகிக் கொண்டிருந்தன.

இந்த உண்மை வெளி வந்த முதல் சில நாட்களில், முதல் முறையாக மக்கள் சாவு என்பது தவிர்க்க முடியாதது என்ற எண்ணத்தை எதிர் கொண்டதால், பரவலான பேரதிர்ச்சி நிலவியது, வளிமண்டலத்தில் அழுத்தம் அதிகமாகுவதைக் குறைக்க எங்கள் நடவடிக்கைகளைக் கடுமையாகக் கட்டுப்படுத்த வேண்டுமென்று பலர் அறைகூவல் விடுத்தனர்; காற்று வீணாக வெளியே கசிய விடப்பட்டதற்காகப் பல ஆக்ரோஷமான சண்டைகள் நடந்தன, சில மாவட்டங்களில் இது சாவுகளுக்கு இட்டுச் சென்றது. இந்தச் சாவுகளால் உண்டான வெட்க உணர்வும், தரையடியில் உள்ள சேமிப்புக் கடலின் அழுத்தமும், வளிமண்டலத்தில் உள்ள அழுத்தமும் சமநிலைக்கு வருவதற்குப் பல நூறாண்டுகள் ஆகும் என்ற நினைவூட்டலும் அந்தப் பீதியைக் குறைத்தன. எங்களுக்கு இன்னும் சரிவரத் தெரியவில்லை, இன்னும் எத்தனை நூறாண்டுகள் பிடிக்கும் என்று; மேலும் அளவீடுகளும், மறு கணக்கிடல்களும் நடக்கின்றன, விவாதிக்கப்படுகின்றன. இடைக் காலத்தில், எங்களுக்கு மீதி இருக்கும் காலத்தை நாங்கள் எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பது குறித்து கலந்துரையாடல்கள் நடக்கின்றன.

 ஒரு பிரிவினர் அழுத்தம் சமநிலைக்கு வரும் போக்கை திருப்பி விடுவது என்பதைத் தமக்கான இலக்காக எடுத்துக் கொண்டிருக்கின்றனர், அதற்குப் பலர் சேர்ந்திருக்கின்றனர். அவர்களிடையே எந்திரவியலாளர்கள் ஒரு எந்திரத்தைக் கட்டி அமைத்திருக்கிறார்கள், அது காற்றை வளிமண்டலத்திலிருந்து எடுத்து, அவர்கள் ‘அழுத்துவது’ என்று அழைக்கும் ஒரு முறையால், சிறிய பரும அளவுள்ளதாக ஆக்குகின்றனர். அவர்களுடைய எந்திரம், சேமிப்புக் கடலில் இருந்த முந்தைய அழுத்த அளவுக்கு காற்றைக் கொண்டு வைக்கிறது, இதை இந்தத் ‘திருப்புவோம்’ கட்சியினர் மிக உற்சாகத்தோடு அறிவித்தனர், இது ஒரு புது மாதிரி காற்று நிரப்பும் நிலையத்தை உருவாக்க உதவும், அது – ஒவ்வொரு நுரையீரலும் நிரப்பப் படும்போது- தனி மனிதரை உயிர்ப்பூட்டுவதோடு நிற்காமல், அண்டத்தையே மேம்படுத்தும் என்றார்கள். ஐயகோ, அந்த எந்திரத்தை மேலும் நுணுகி ஆராய்ந்தபோது, ஒரு ஆபத்தான குறை தெரிய வந்தது. அந்த எஞ்சினுக்குச் சக்தியே சேமிப்புக் கடலிலிருந்து எடுக்கப்படும் காற்றால்தான் கிட்டியது என்றும், அது உற்பத்தி செய்த ஒவ்வொரு நுரையீரல் அளவு காற்றுக்கும், அது ஒரு நுரையீரல் அளவு அல்ல, அதற்குச் சிறிதளவு கூடுதலான காற்றை அது செலவழித்தது என்பது அந்தக் குறைபாடு. அது சமன்படுத்தும் போக்கைத் திருப்பி வைக்கவில்லை, மாறாக இந்த உலகத்தில் உள்ள எல்லாவற்றையும் போல, அதை மேலும் மோசமாக்கியது.

சிலர் இந்தத் தோல்வியால் அந்தக் கூட்டத்திலிருந்து விலகினார்கள் என்றாலும், திருப்புவாதக் கோஷ்டியினர் பின்வாங்கவில்லை, அந்த எந்திரத்தை வேறு விதமாகச் சக்தி பெறுவதாக மறு உருவாக்கத்தில் ஈடுபட்டனர், அவை சுருள்களை விடுவிப்பது அல்லது பளுவைக் கீழே இறக்குவது போன்றன. இந்த எந்திரங்களும் ஒன்றும் மேலாக இல்லை. இறுகிச் சுற்றப்பட்ட ஒவ்வொரு சுருளும் அதை இறுகச் சுருட்டும் மனிதர் வெளியிட்ட காற்றைச் செலவழித்தது, மேலிருந்து கீழே விழுந்த பளுவை மறுபடி மேலே தூக்கி வைக்க ஒரு மனிதர் காற்று செலவழிக்க வேண்டி இருந்தது. இந்த அண்டத்தில் காற்றழுத்தத்தில் உள்ள வேறுபாட்டிலிருந்து இயக்கத்தைப் பெறாத வேறு மூலாதாரத்திலிருந்து சக்தியைப் பெற வழியே இல்லை, இறுதிக் கணக்கில் அந்த வேறுபாட்டைக் குறைக்காது இயங்கக் கூடிய எந்திரமே இல்லை.

திருப்புவாதக் கோஷ்டி தங்கள் முயற்சிகளைத் தொடர்கின்றனர், என்றாவது ஒரு நாள், தான் செலவழிக்கும் அழுத்தத்தை விட அதிக அழுத்தத்தைக் கூட்டும் எந்திரத்தைக் கட்டி விடலாம் என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது. அந்த சக்தியைக் கொணரும் எந்திரம் அண்டத்திற்கு உயிர்ப்பு கொடுத்து, அது இழந்து விட்ட வீரியத்தை மறுபடி கூட்டி விடலாம் என்பது நம்பிக்கை. எனக்கு இந்த நன்னம்பிக்கை இல்லை; சமநிலைப்படுத்தும் போக்கு தடுக்கப்பட முடியாதது என்று நான் நினைக்கிறேன். இறுதியில், நம் அண்டத்தில் உள்ள எல்லாக் காற்றும் சமமாக விரிந்திருக்கும், ஓரிடத்தில் குறைவாகவும் இன்னோரிடத்தில் கூடுதலாகவும் அழுத்தத்துடனும் இராது, ஒரு பிஸ்டனை உந்தவோ, ரோடரைச் சுழற்றவோ, அல்லது மெல்லிய தங்க இலைகளை ஆட்டவோ இயலாதிருக்கும். அழுத்தத்தின் முடிவு அதுதான், உந்து சக்தியின் முடிவும், சிந்தனையின் முடிவும் அதுதான். அண்டம் முழுதும் கச்சிதமான சமநிலையை அடைந்திருக்கும்.

நம் மூளைகளைப் பற்றிய ஒரு ஆய்வு நம் கடந்த காலத்தைப் பற்றிய மர்மங்களை விளக்கவில்லை, மாறாக எதிர்காலத்தில் நமக்கு என்ன காத்திருக்கிறது என்று விளக்கியதை சிலர் ஓர் அங்கதமாகக் கருதுகிறார்கள். ஆனால் நாம் கடந்த காலத்தைப் பற்றியும் மதிப்பு மிக்கதாகச் சிலதைக் கற்றுக் கொண்டிருக்கிறோம் என்றுதான் நான் நினைக்கிறேன். இந்த அண்டம் ஒரு பிரும்மாண்டமான மூச்சுப் பிடிப்பு நிலையில் துவங்கி இருக்கிறது. அது ஏன் என்று யாருக்குத் தெரியும், ஆனால் காரணம் என்னவானாலும், அப்படி நடந்தது பற்றி எனக்கு மகிழ்ச்சிதான், ஏனெனில் என் இருப்புக்கு அதுதான் காரணம். என் விருப்புகள், யோசனைகள் எல்லாம் நம் அண்டத்தில் அந்த மூச்சு வெளிவிடப்படுதலால் ஏற்படும் சில சிறு ஓட்டச் சுழல்களை விட வேறெதுவும் இல்லை. இந்த படிப்படியான பெரும் வெளி மூச்சு நிற்கும் வரை என் சிந்தனைகள் வாழ்ந்திருக்கும்.

எத்தனை காலம் சாத்தியமோ அத்தனைக்கு எங்கள் சிந்தனைகள் தொடர்வதற்காக, உடலியலாளர்களும், பொறியாளர்களும் எங்கள் மூளையின் கட்டுப்பாட்டுக் கருவிகளுக்கு மாற்றுகளைக் கட்டமைக்கிறார்கள். அவை படிப்படியாக காற்றழுத்தத்தை எங்கள் மூளையில் அதிகரிக்கும், சூழலில் உள்ள காற்றழுத்தத்தை விடச் சிறிதே கூடுதலாக இருக்கும்படி அந்த அழுத்தம் அடையப்படும். இவை பொருத்தப்பட்டவுடன், எங்கள் சிந்தனைகள் சூழலில் காற்று அடர்த்தியாகிக் கொண்டு வருகையிலும், ஏறக் குறைய ஒரே வேகத்தில் தொடரும். ஆனால் இதற்குப் பொருள் வாழ்க்கை மாறாமல் அப்படியே தொடரும் என்பதல்ல. இறுதியில் காற்றழுத்த வேறுபாடுகள் வீழ்வது ஒரு அளவை எட்டும்போது, எங்கள் கால் கைகள் வலுவிழக்கும், எங்கள் அசைவுகள் மெதுவாகி விடும். அப்போது எங்கள் சிந்தனைகளை மெதுவாக்கிக் கொள்ள நாங்கள் முயலலாம், அப்படிச் செய்தால் எங்கள் இயக்கங்கள் மெதுவாகிப் போனது எங்களுக்கு அதிகம் தெரியாமல் இருக்கும். ஆனால் அது வெளி இயக்கங்கள் கூடுதலான வேகம் பெற்று விட்டது போலத் தோற்றுவிக்கும். கடிகாரங்களின் டிக் டிக் ஒலிகள் வேகமாக ஒலிக்கத் தொடங்கும், அவற்றின் ஊசல்கள் கட்டிழந்து ஆடுவது போலத் தெரியத் துவங்கும்; கீழே விழும் பொருட்கள் சுருள்கம்பிகளால் உந்தப்பட்டது போலத் தரையில் அடித்து விழும்; கம்பிகளின் ஆட்டங்கள் சுழற்றப்பட்ட சவுக்கு போல கீழ் நோக்கி விரையும்.

ஒரு கட்டத்தில் எங்கள் கை கால்கள் முழுதுமே அசையாமல் போய்விடும். இறுதியில் வரப்போகும் நிகழ்ச்சிகள் வரிசையாக எப்படி இருக்கும் என்பது எனக்கு உறுதியாகத் தெரியவில்லை, ஆனால் எங்கள் சிந்தனைகள் தொடர்ந்து செயல்படும், அதனால் நாங்கள் பிரக்ஞையோடு இருப்போம், உறைந்த நிலையில், சிலைகளைப் போல நகர முடியாமல் இருப்போம். ஒருக்கால் எங்களால் இன்னும் சிறிது நேரம் பேச முடியலாம், ஏனெனில் எங்கள் குரல் வளைகள் செயல்படத் தேவையான காற்றழுத்தம் கால்கைகளின் அசைவுக்குத் தேவையானதை விடக் குறைவுதான். ஆனால் காற்றை நிரப்பும் நிலையத்துக்குப் போக முடியாத போது, நாங்கள் பேசுவது ஒவ்வொன்றும் மீதமிருக்கும் காற்றைக் குறைக்கும், எங்கள் சிந்தனைகள் முற்றிலும் நின்று போகும் கட்டத்துக்கு அருகில் கொண்டு விடும். பேசாமல் இருந்து சிந்திக்க முடியும் காலத்தை நீட்டிப்பது மேலானதா இல்லை இறுதி வரை பேசுவதா? எனக்குத் தெரியவில்லை.

ஒருவேளை நாங்கள் நகர முடியாமல் போவதற்குச் சில நாட்கள் முன்பு, எங்களில் சிலர், எங்களுடைய மூளைகளின் கட்டுப்பாட்டு மானிகளை காற்று நிரப்பும் நிலையங்களில் உள்ள விநியோக எந்திரங்களோடு நேரடியாக இணைக்க முடிபவர்களாக இருக்கலாம். அது எங்கள் நுரையீரல்களுக்குப் பதிலாக உலகின் பெரும் சக்தி வாய்ந்த நுரையீரல்களை நேராகப் பொருத்துவது போலாகும். அப்படி ஆனால் அவர்கள் எல்லா அழுத்தமும் சமநிலைக்கு வரும் கடைசி கணங்கள் வரை சுய நினைவோடு இருப்பார்கள். இந்த அண்டத்தில் உள்ள கடைசித் துளி காற்றழுத்தம் ஒரு மனிதரின் பிரக்ஞை பூர்வமான சிந்தனையைச் செலுத்துவதில் செலவழிக்கப்படும்.

பிறகு நம் அண்டம் முழுச் சமநிலையில் இருக்கும். எல்லா வாழ்க்கையும், சிந்தனையும் நின்று போகும், அத்துடன், காலமே நின்று விடும்.

ஆனால் நான் சிறு நம்பிக்கை ஒன்றைக் கொண்டிருக்கிறேன்.

எங்கள் அண்டம் கவிந்து மூடப்பட்டதாக இருந்த போதும், ஒருக்கால் கெட்டியான க்ரோமியத்துள் இருக்கும் எல்லையற்ற வெளியில் இருப்பது ஒன்றுதான் காற்றுள்ள வெளி என்றிராமல் போகலாம். இன்னொரு பகுதியில் காற்று இருக்கலாம், இன்னொரு அண்டம், எங்கள் அண்டத்தின் அருகில் இருப்பதோடு அதில் காற்று இங்கிருப்பதை விட கன அளவில் கூடுதலாக இருக்கலாம். இந்த கற்பித அண்டத்தில் எங்கள் அண்டத்தின் அளவே போலவோ, அல்லது அதை விடக் கூடுதலாகவோ காற்றழுத்தம் இருக்கலாம், ஆனால் ஒருக்கால் அங்கு அழுத்தம் எங்களுடையதை விடக் குறைவாகவோ, அல்லது வெற்றிடமாகவோ இருந்தால்?

எங்கள் அண்டத்தைச் சூழ்ந்திருக்கும் க்ரோமியம், அந்த கற்பித உலகையும் எங்களுடையதையும் பிரிக்கும் உலோகச் சுவர், துளை போட முடியாத அளவு தடிமனாக இருகிறது, எனவே நாங்கள் இதைத் தாண்டி அங்கு எட்டி விட முடியாது, இங்குள்ள அதிகப்படியான வளிமண்டலக் காற்றை வெளியே விட முடியாது, அப்படிச் செய்தால் மறுபடி இயக்கத்துக்கு உதவும் சக்தியை நாங்கள் மறுபடி பெற முடியலாம். ஆனால் பக்கத்து அண்டத்தில் எங்களுடைய திறமைகளை எல்லாம் தாண்டிய திறனுள்ளவர்கள் வசிக்கிறார்கள் என்று நான் மனக்கோட்டை கட்டுகிறேன். அவர்கள் இரு அண்டங்களிடையே ஒரு பாதையை உருவாக்க முடிந்தால், எங்களுடைய அண்டத்திலிருந்து காற்றை விடுவிக்க கட்டுப்பாட்டு மானிகளை அவர்கள் நிறுவ முடிந்தால் எப்படி இருக்கும்? அவர்கள் எங்கள் அண்டத்தை ஒரு சேமிப்புக் கடல் போலப் பயன்படுத்தி, விநியோகக் கருவிகள் மூலம் தங்களுடைய நுரையீரல்களை நிரப்பிக் கொண்டு, எங்கள் காற்றைத் தங்கள் நாகரீகத்தை முன் செலுத்தப் பயன்படுத்தக் கூடும்.

என்னை ஒரு காலத்தில் இயங்க உதவிய காற்று வேறு யாராருக்கோ சக்தி கொடுப்பதாக இருக்கும் என்றும், எனக்கு இந்த வார்த்தைகளைச் செதுக்க உதவிய மூச்சுக் காற்று, ஒரு நாள் வேறொருவரின் உடல் வழியே ஓடும் என்றும் கற்பனை செய்வது எனக்கு உற்சாகம் தருகிறது.  இது நான் மறுபடி வாழ உதவும் என்று யோசித்து என்னை ஏமாற்றிக் கொள்வதில்லை நான். ஏனெனில் நான் அந்தக் காற்று இல்லை, அது தற்காலிகமாக பாவித்துக் கொண்ட ஒரு பாணிதான் நான். நானாக இருந்த அந்தப் பாணியும், நான் வாழ்ந்த மொத்த உலகான பாணிகளும் எல்லாம் போயிருக்கும்.

எனக்கு அதை விட மெலிவான ஒரு நம்பிக்கை இருக்கிறது; அந்த அண்டவாசிகள் எங்கள் அண்டத்தை வெறும் சேமிப்புக் கடலாக மட்டும் பயன்படுத்தாமல், இதன் காற்றை முழுதும் பயன்படுத்தித் தீர்த்தபின், அவர்கள் ஒருநாள் ஒரு பாதையைத் திறந்து இங்கு ஆய்வுப் பயணிகளாக வரக் கூடும். எங்கள் தெருக்களில் திரியக் கூடும், எங்களுடைய உறைந்த உடல்களைப் பார்க்கக் கூடும், எங்கள் உடைமைகளை எடுத்து நோக்கக் கூடும், நாங்கள் வாழ்ந்த வாழ்க்கையைப் பற்றி யோசிக்கக் கூடும்.

அதற்காகத்தான் இந்த விவரணையை நான் எழுதி இருக்கிறேன். நீங்கள், அப்படிப் பட்ட ஒரு பயணியாக இருப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். இந்தச் செப்புத் தகடுகளை நீங்கள் கண்டு பிடித்து, இதன் மேல்பரப்பில் செதுக்கப்பட்ட சொற்களின் அர்த்தங்களைப் புரிந்து கொண்டிருப்பீர்கள் என்று எதிர்பார்க்கிறேன். உங்கள் மூளையைச் செலுத்தும் காற்று என் மூளையைச் செலுத்திய காற்றோ இல்லையோ, என் சொற்களைப் படிப்பதன் மூலம், உங்கள் மூளையில் உருவாகும் பாணிகள், ஒருகாலத்தில் என் மூளையை உருவாக்கிய பாணிகளின் நகல்களாகும். அந்த வகையில் நான் மறுபடி வாழ்வேன், உங்கள் மூலம்.

உங்களுடைய சக ஆய்வுப் பயணிகள் நாங்கள் விட்டுச் செல்லும் வேறு புத்தகங்களைக் கண்டு பிடித்துப் படித்துமிருக்கக் கூடும், உங்கள் கூட்டு கற்பனை முயற்சிகளால், என் மொத்த நாகரீகமும் மறுபடி வாழும். எங்களின் மௌனமான ஊர்ப்பகுதிகளில் நீங்கள் நடக்கும்போது, கூண்டுக் கடிகாரங்கள் மணிகளை அடித்தபடி இருக்க, காற்று நிரப்பும் நிலையங்கள் ஊர் வம்பு பேசும் அக்கம்பக்கத்தினரால் நிரம்பி இருக்க, நகரச் சதுக்கத்தில் பொது அறிவிப்பாளர்கள் பாடல்களை ஓதிக் கொண்டிருக்க, உடற்கூறியலாளர்கள் வகுப்பறைகளில் உரைகள் நிகழ்த்திக் கொண்டிருக்க, அவை இருந்த விதம் எப்படி என்று கற்பனை செய்து பாருங்கள். உங்களைச் சுற்றி உறைந்து போயிருக்கும் உலகத்தைப் பற்றி இவற்றை எல்லாம் கற்பனை செய்கையில், உங்கள் புத்தியில் அவை மறுபடியும் உயிரூட்டப்பட்டு, துடிப்புள்ளனவாக ஆகும்.

நான் உங்களுக்கு நல்லது நடக்குமென்று வாழ்த்துகிறேன், ஆனால் யோசிக்கிறேன்: எனக்கு நேர்ந்த அதே விதி உங்களுக்கும் நடக்குமா? அப்படித்தான் நடக்கும் என்றுதான் நான் நினைக்கிறேன், ஏனெனில் சமநிலையை நோக்கிச் செல்வது என்பது எங்கள் அண்டத்துக்கு மட்டுமான தனிக் குணாதிசயம் இல்லை, மாறாக அனைத்து அண்டங்களிலும் இது பொதுக் குணம். ஒருக்கால் இது என்னுடைய சிந்தனையின் போதாமையாக இருக்கலாம், நீங்கள் ஒருவேளை என்றும் நிரந்தரமாக இருக்கும் அழுத்தத்தின் மூலாதாரத்தைக் கண்டு பிடித்திருக்கலாம். ஆனால் என் கற்பனை ஊகங்கள் ஏற்கனவே மிகையாகவே உள்ளன.  ஒரு நாள் உங்கள் சிந்தனைகளும் நின்று விடும் என்றே அனுமானிக்கிறேன், அது எத்தனை காலம் கழித்து வரும் என்பதை என்னால் கணிக்க முடியவில்லை. எங்கள் வாழ்வைப் போலவே உங்கள் வாழ்க்கையும் முடியும், எல்லார் வாழ்வுமே முடிந்துதான் ஆக வேண்டும். எத்தனை காலம் ஆனாலும் பொருட்டல்ல, முடிவில் சமநிலை வந்தே தீரும்.

இந்தத் தெளிவால் நீங்கள் மனவருத்தம் அடைய மாட்டீர்களென்று நான் நம்புகிறேன். உங்கள் ஆய்வுப் பயணம் இன்னொரு அண்டத்தை ஒரு சேமிப்புக் கடலாகப் பயன்படுத்துவதற்காக மட்டுமே மேற்கொள்ளப்படவில்லை என்றும் நான் எதிர்பார்க்கிறேன். நீங்கள் அறிவுப் பெருக்கத்துக்காக இந்த ஆய்வுப் பயணத்தை மேற்கொண்டீர்களென்றும், அண்டங்களின் வெளி மூச்சு விடுதலால் என்ன எழும் என்று தெரிந்து கொள்ளவும் உங்களுக்கு ஆர்வம் இருந்தது என்று நான் எதிர்பார்க்கிறேன். ஏனெனில், ஓர் அண்டத்தின் ஆயுட்காலத்தை நம்மால் கணக்கிட முடிந்தது என்றே வைத்துக் கொண்டாலும், அதனுள் எழக் கூடிய உயிரினத்தின் பன்மைத் தனம் கணக்கிடப் பட முடியாததுதான். நாங்கள் எழுப்பியுள்ள கட்டடங்கள், நாங்கள் படைத்துள்ள கலைப் பொருட்களும், இசையும், பாடல்களும், நாங்கள் நடத்திய இந்த வாழ்க்கைகளே கூட: இவை எதுவும் முன் கூட்டி அறிந்திருக்க முடியாதவை, ஏனெனில் இவை எதுவும் தவிர்க்க முடியாதவையாக இருக்கவில்லை. எங்கள் அண்டம் வெறும் சீறல் ஒலியை மட்டும் ஒலித்தபடி சமநிலைக்குள் நழுவி இழிந்திருக்கலாம். அது இத்தனை அதிகபட்ச விஷயங்களைப் படைத்து வெளியிட்டது என்பது ஒரு அற்புதமே, அதற்கீடானது உங்கள் அண்டம் உங்களைப் படைத்ததாகத்தான் இருக்க முடியும்.

நீங்கள் இதைப் படிக்கும்போது நான் இறந்து போய் வெகுகாலம் ஆகியிருக்கலாம், பயணியே, நான் உங்களிடமிருந்து பிரியும் முன்னர் ஒரு வாழ்த்தைத் தெரிவிக்க விரும்புகிறேன். வாழ்வு என்பது என்னவொரு அற்புதம் என்பதைச் சிறிது யோசியுங்கள், அப்படி உங்களால் யோசிக்க முடிகிறது என்பதற்கே பெரும் மகிழ்ச்சி கொள்ளுங்கள். உங்களுக்கு இதைச் சொல்ல எனக்கு உரிமை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன், ஏனெனில் இந்தச் சொற்களை பொறிக்கும் இந்தத் தருணத்தில், நானும் அதையே செய்து கொண்டிருக்கிறேன்.

(தமிழாக்கம்: மைத்ரேயன் – ஜூலை/ ஆகஸ்ட் 2019)

Series Navigation<< வெளி மூச்சு

5 Replies to “வெளி மூச்சு – 2”

  1. அசத்தும் கற்பனை.தரமான மொழி பெயர்ப்பு.இரு கேள்விகள்:(1)மூளை மெதுவாக இயங்குவதினால் கூண்டுக்கடிகாரம் சரியாக இயங்குவதைப் புரிந்து கொள்ள முடிகிறது;ஆனால், அந்த நிகழ்ச்சி தொடங்கும் போதும் அதே நேரப் பிரக்ஞை இல்லையா?அது ஒரே முறையில் மற்ற மாவட்டக் கூண்டுக் கடிகாரங்களில்(பாதரசம் உட்பட) நிகழ்வது எப்படி?(2) முதல் பாகத்தில் வான் எல்லையற்ற வெளியாக க்ரோமிய நெடுஞ்சுவர் அதை நோக்கி எழுவதாக உள்ளது.இரண்டாம் பாகத்தில் அது கும்மட்டமாகிவிடுகிறது-அதாவது எல்லைக்கு உட்பட்டுவிடுகிறது. நான் கேட்பது தவறாகவும் இருக்கலாம்.ஆனால் அருமையான கதைக்கு நன்றிகள்

    1. உங்கள் இரு கேள்விகளில் இரண்டாவதற்குப் பதில் இது. முதலில் சோதனைகளை மேற்கொள்ளாத மனிதராக உலக விளிம்பு வரை பயணங்கள் போயிருக்கிற கதை அளப்பாளர், க்ரோமியச் சுவர்கள் எல்லையற்று வானில் நீள்கின்றன என்று ஊகிக்கிறார். அறிவியல் முறை எனும் பூச்சிக் கடிக்குப் பிறகு ஜுர வேகத்தில் அவர் யோசனை, கார்ட்டீசிய முறையில் கூறு போட்டு, பகுத்து, அடைப்புகளில் அனுபவங்களைப் பொருத்தி யோசிக்கத் துவங்குகிறது.
      தன் பல புது அனுபவங்களைப் பாகுபடுத்தி யோசிக்கையில், முன் அனுமானம், சோதனை முறை, தவறென நிரூபிக்கும் முயற்சி, விளைவை பின்புலத்தில் பொருத்தித் தக்க முடிவை அடைதல் என்ற வழி முறையில் அவர் காண்பது- க்ரோமியச் சுவர் எல்லையற்று வானில் போகவில்லை, அது உள் கவிந்து கும்மட்டமாகி, தாங்கள் இருக்கும் உலகம் ஒரு மூடிய கூண்டு என்பது. மூல வரிகள் கீழே.
      As soon as the question formed, the only possible answer became apparent: Our sky must not be infinite in height. Somewhere above the limits of our vision, the chromium walls surrounding our world must curve inward to form a dome; our universe is a sealed chamber rather than an open well. And air is gradually accumulating within that chamber, until it equals the pressure in the reservoir below.
      இது உலகம் தட்டை என்று நினைத்த மனிதர் உலகம் உருண்டை என்றும், அது பெருவெளி ஒன்றில் சுழலும் ஒரு சிறு உருண்டை என்றும் அறியப் பற்பல ஆண்டுகள் ஆனதை நமக்குக் காட்டும். அந்த முடிவை யூரோப்பியர் வந்தடைதலும் சுமாராக இந்த கதையாளர் பயன்படுத்திய உடலைக் கூறுபோட்டு அறியும் முறை போன்ற ஒரு முறையில்தான்.
      இன்று இயற்பியலாளர்கள் நாம் இருக்கும் உருண்டையும் முப்பரிமாண அனுபவத்தில்தான் இப்படி, பல பரிமாண எதார்த்தம் என்று ஒன்று இருக்கிறது அதில் வேறு உலகுகள், வேறு எதார்த்தங்கள் உண்டு என்று பேசத் தலைப்பட்டிருக்கிறார்கள்.
      டெட் சியாங் பயன்படுத்திய இந்த உருவகம், இன்னொரு கூண்டில் உள்ள மனிதர்கள் தம் கூண்டில் காற்று சமநிலைக்கு வந்தால் இயக்கம் அற்றுப் போகும் நிலை வரும்போது, ஒருக்கால் தமக்கு உதவிக்கு வரக் கூடும் என்ற கருத்து, ஏற்கனவே ஐசக் ஆசிமாவால், ‘ த காட்ஸ் தெம்ஸெல்வ்ஸ்’ என்ற நாவலில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அங்கு இரண்டு வெவ்வேறு பரிமாணத்து அண்டங்கள் தம்மிடையே உள்ள சக்தி வேறுபாட்டைப் பயன்படுத்தி சக்தியை பரிமாறிக் கொள்கிறார்கள். அது இரு புறமும் நாசத்தைக் கொணரும் என்று இறுதியில் கண்டு பிடித்து நிறுத்துகிறார்கள்.
      உங்கள் முதல் கேள்விக்குப் பதில் அத்தனை பிரச்சினையானதல்ல, ஆனால் கொஞ்சம் பிரச்சினை இருக்கும்.
      எல்லாரும் அறியும் நேரம்தான் கூண்டுக் கடிகார நேரம். அது மட்டுமல்ல அந்த ‘உலகில்’ எல்லாக் கடிகாரங்களும் அதே நேரத்தைக் காட்டுவதால் கூண்டுக் கடிகாரம் வேகமாகி விட்டது என்பதை அம்மனிதர்கள் அறிவதில்லை. ஆனால் கடிகாரங்கள் (பற்சக்கரமோ, பாதரச ஓட்டமோ எதால் இயக்கப்பட்டிருந்தாலும்) பழுதில்லை, அவை எப்போதும் போலத்தான் இயங்குகின்றன. ஆனால் மனிதரின் மூளைகள் மெதுவாக இயங்கத் தொடங்கி இருக்கின்றன என்பதை கதையாளர் கண்டு பிடிக்கிறார். எல்லார் மூளைகளும் ஒரே போல மெதுவாக இருந்தால் ஒப்பீட்டில் அவர்கள் கடிகாரத்தின் மாற்றத்தைக் கண்டு பிடித்திருக்கவியலாது. அப்படியே ஒருவர் கண்டிருந்தாலும் தம் குறையால் கடிகாரத்தின் அளவு நேரத்துக்குள் ஒரு வேலையைச் செய்ய முடியவில்லை என்று ஒதுக்கி இருப்பார். எல்லாருமாகச் சேர்ந்து கருத்துப் பரிமாறிக் கொண்டால்தான் கடிகாரம் வேகமானது போல எல்லாரும் உணர்கிறார்கள் என்பது தெரிந்திருக்கும். முந்தைய செயலில் ஒரு மணி நேரமே கச்சிதமாக ஆக வேண்டிய recitation முடியுமுன் கடிகாரம் அடித்தது பல ஊர்களிலும் நடந்தது என்றறியும்போது, பிரச்சினை வெளிப்படுகிறது. அதையும் இவர் ஒருத்தர்தான் சோதித்து விடை காண்கிறார். மற்றவர்கள் எல்லாம் கடிகாரத்தில் ஏதோ குறை என்றுதான் நினைக்கிறார்கள். சிலர் ஊர் அறிவிப்பாளர்கள் சரியாக நேரத்தைக் கவனிக்கவில்லை என்று ஆங்காங்கே கருதி இருப்பார்கள்.
      ஆயினும் பற்பல ஊர்களில் பல செயல்களில் இந்தக் குறையைக் கண்டிருப்பார்கள் என்றே நான் ஊகிக்கிறேன். இதே போல எத்தனையோ செயல்கள் கச்சிதமாக ஒரு மணி/ அரை மணி/ மூன்று மணி என்று முடிய வேண்டிய வேலைகள் தொடர்ந்து இடறினால் எல்லா ஊர்களிலும் யாராவது சிலர் என்ன காரணம் என்று ஆராயத் துவங்கி இருப்பார்கள் என்றுதான் நினைக்கிறேன். அந்த விதத்தில் டெட் சியாங்கின் கற்பனை சிறிது பழுதுபட்டதாகத்தான் எனக்கும் தோன்றுகிறது.

      1. இந்தக் கதை பூமியில் நடக்கவில்லை. இதில் உள்ள பிரஜைகள் ‘மனிதர்’ அல்ல. கதை சொல்லி உலோகத்தால் ஆன ஒரு நபர். அந்த உலகம் வேறு பரிமாணம் அல்லது வேறு அண்டத்தில் உள்ள ஓர் உலகம். அங்கு காற்றழுத்தம் என்ற சொல்லில் சுட்டப்படுவது ஆர்கான் எனும் வாயு மண்டலத்தின் அழுத்தம். அந்த உலோக ‘மனிதர் ‘ ஆர்கான் வாயுவை நம் போல நுகர்வதில்லை. ஆர்கான் வாயு அவர்கள் உடலூடே பிரயாணித்து, மூளைக்கும் போய் அங்கு மெல்லிய, மிக மெல்லிய தங்கத் தகடுகளில் (இலைகளில்) அசைவுகளைக் கொணர்ந்து அவற்றின் நிலைப்பாடுகளைக் கொண்டு அந்த நபரின் நினைவுகளைப் பதித்து, அந்த நினைவுகள் மூலம் உடலை மூளை இயக்க உதவுகிறது. வெளி உலகில் பயன்படும் வாயு, தரையடியில் உள்ள வாயுவின் சேமிப்புக் கிடங்கு, அல்லது கடலிலிருந்து எடுத்து அழுத்தத்தோடு உலோக நுரையீரல்களில் அடைக்கப்பட்டு, அந்த நுரையீரல்களிலிருந்து அந்த நபர்களுக்குப் பயன்பாட்டுக்குக் கிட்டுகிறது. ‘சுவாசிப்பது’ என்பது அந்த வாயு உடலில் பிரயாணம் செய்வதுதான். உடலின் பல இடங்களிலிருந்தும் அந்த வாயு வெளியே கசிகிறது. (நாம் பிராணவாயுவை ‘எரிக்கிறோம்’ அல்லது அதன் சக்தியைப் பயன்படுத்திக் கரியமில வாயுவாக அதை மாற்றுகிறோம்.) இயல்பாக அந்த நபர்களால் வெளியிலிருந்து காற்றை, ‘வாயுவை’ சுவாசிக்க இயலாது, அழுத்தப்பட்ட வாயுவைத்தான் பயன்படுத்த முடிகிறது.

        இப்படி நம் மனித வாழ்வின் பற்பல செயல்களையும் புற நிலையிலிருந்து காண ஏதுவாய், கதைக்களனை முற்றிலும் அந்நியப்பட்ட சூழலுக்கு மாற்றி நம்மை நம் பூமியின் சூழலில் உள்ள சமன நிலைகளின் மீது கவனத்தைச் செலுத்த வைக்கிறார் டெட் சியாங்.
        இது நவீனத்துவத்தின் ஓர் உத்திதான். ‘புனிதத்தைக் கேள்விக்குள்ளாக்குவது’ (desacralisation) என்ற வழிமுறையில் நவீனத்துவம் பண்டை மேலும் மத்திய காலத்துச் சிந்தனைகளிலிருந்து தற்கால மனிதரை, நாகரீகத்தை, பொருளாதாரத்தை, ‘அறிவியல்’ என்று நாம் இன்று அறியும் துறைகளை வார்த்தெடுக்கிறது. அல்லது முயல்கிறது.
        அவற்றிலிருந்து முற்றிலும் விடுபட்டால்தான் நாம் உண்மையான ‘அறிவியல்’ சார் மனிதராவோம் என்று ‘நம்புவது’ மதியொளி யுகத்து அரசியல். நாம் அப்படி விடுபட வாய்ப்பே இல்லை என்று இப்போது அதி நவீனத்துவத்துச் சிந்தனையாளர்களில் சிலர் வாதிடத் துவங்கியுள்ளார்கள். இது கார்ட்டீசியனியத்தின் புத்தி எதிர் உடல், இரு கூறு பிரித்தல் சிந்தனையை எதிர்க்கும் வழி முறை.
        டெட் சியாங் நம் பூமியின் சூழல் மாசுபடல், சக்தி தீர்ந்த பிறகு வரும் காலத்துச் சிக்கல்கள், state of entropy, if and when it may arise, என்று பல விதமாக நம்மை யோசிக்கத் தூண்ட இந்த வகை அந்நியப்படுத்தலைப் பயன்படுத்துகிறார் என்று நினைக்கிறேன். போகிற போக்கில் துவக்க கால நவீனத்துவத்தில் ‘அறிவியல்’ எப்படி பகுத்தறிதல் என்னும் வழிமுறையை படிப்படியாகக் கண்டடைந்து அதை எழுத்தின் மூலம் நிறுவுகிறது என்பதையும் கவனிக்கிறார்.
        பாடம் நடத்தாமல், கதைக்குள் புதைத்துக் கொடுக்கும் சிந்தனை.

  2. விளக்கத்திற்கு நன்றி.நான் சில பேருடன்(உங்களுக்குத் தெரிந்தவர் இல்லை) இக்கதையைப் பற்றி பேசினேன்.உலோக மனிதர்கள், செயற்கை சுவாசம் என்று எடுத்துக்கொண்டோம். முதல் பாகத்திலியே ஆர்கான் வாயு பற்றியும் வருகிறது.ஆனால் மனித உணர்வுகள் கதையில் இடம் பெறுகின்றன- தோழமை வேண்டி காற்று நிரப்பும் இடம் செல்லுதல்,ஊருக்கான பொது அறிவிப்பு போன்றவை.ஆதார குணங்கள் இயைந்து வருவது நன்றாக இருக்கிறது.எனினும்,ஆர்வக் கோளாறினால்,இன்னமும் தெளிவதற்காகக் கேள்வி கேட்டேன். உங்கள் பொறுமையை பாராட்டுகிறேன்.எங்கள் கேள்விகளுக்கான ஏற்றுக் கொள்ளக்கூடிய பதிலைத் தந்துள்ளீர்கள்.இப்படிப்பட்ட கதைகளை தொடர்ந்து வெளியிடக் கேட்டுக் கொள்கிறேன்

Leave a Reply to மைத்ரேயன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.