வார்த்தை என்பது வசவு அல்ல!

இற்றைக்குச் சற்றொப்ப 45 ஆண்டுகட்கு முன்பு, யாம் மும்பையில் வேர் பிடிக்க முயன்று கொண்டிருந்த காலை, ஒரு சனிக்கிழமை பின்மாலையில், அப்போது மும்பையில் வருமான வரித்துறை அதிகாரியாகப் பணி புரிந்த, பின்னாளில் கேரள மாநில கேடர் I.A.S. அதிகாரியான, ‘மோகமுள்’, ‘பாரதி’, ‘பெரியார்’, ‘இராமானுசன்’ ஆகிய திரைப்படங்கள் இயக்கிய, நண்பர் ஞான. ராஜசேகரன், எம்மை B.A.R.C. குடியிருப்புக்கு அழைத்துச் சென்றார். BARC என்றால் பாபா அடாமிக் ரிசர்ச் செண்டர் (Bhaba Atomic Research Centre). அதில் பணி புரிவோருக்கான குடியிருப்பு. அணுசக்தி நகர். அப்போது நான் தமிழ் எழுத்தாளனாகும் முயற்சியில் முனைந்திருந்தேன்.

BARC யில் பணி புரிந்த, தமிழ் இலக்கிய வாசிப்பில் ஆர்வமுடைய இரு பாலருமான இளைய விஞ்ஞானிகள் சிலர், மாதம் ஒரு முறை, குறிப்பாக சனிக்கிழமை முன்மாலையில் கூடி, அதிகாலை வரை நவீன இலக்கியம் பேசுவார்கள். முதலும் கடைசியுமாக, அன்று ஞான. ராஜசேகரனுடன் கலந்து கொண்டேன். நான் போயிருந்த இரவின் பாடுபொருள் பூமணியின் படைப்புகள்.

பூமணியின் கதைகளில் ஒன்றை வாசிக்க ஆரம்பித்த இளைஞர்- நானும் அந்தக் காலகட்டத்தில் 27 வயதான இளைஞன் தான் – பூமணியின் கதாபாத்திரம் ஒன்று குசு விட்ட இடத்தில் நிறுத்தினார். அங்கிருந்து தொடங்கியது, இலக்கியத் தர மதிப்பீடு உரையாடல். ‘இப்படியா அசிங்க அசிங்கமா எழுதறது? குசு, பீ, மயிருன்னு எல்லாம்?’ என்பதுவே உரையாடலின் சாராம்சம்.

அதிர்ச்சி மதிப்பீட்டுக்காக எழுத்தாளர்கள் அத்தகு சொற்களைக் கையாள்கிறார்கள் என்பதவர் தீர்மானம். பெரும்பாலும் அவர்கள் சிறு நகரங்களில் பிறந்து வளர்ந்திருக்கலாம், பெற்றோர் அரசு, தனியார் நிறுவன ஊழியராக இருக்கலாம். இல்லங்களில் சில சொற்கள் அனுமதி மறுக்கப்பட்டிருக்கலாம். அன்றாடப் பயன்பாட்டில் குசு என்பது அபான வாயு எனவும், Gas எனவும், பீ மலமாகவும், குண்டி பிருஷ்டமாகவும், முத்தம் சும்பனமாகவும், தழுவுதல் ஆலிங்கனமாகவும், எச்சி உச்சிஷ்டமாகவும் மாட்டு மூத்திரம் கோமயமாகவும் இருக்கலாம்.

எம்மொழிச் சொல் பயன்படுத்தினாலும்- அபான வாயு, Gas, குசு எதானாலும்- அந்தச் சொல் சுட்டும் பொருள் ஒன்றுதானே! குசு என்றால் நாறவும், அபான வாயு என்றால் மணக்கவுமா செய்யும்? எம்மூரில் ஒரு பெரியவர், அம்மன் கோயில் கொடைக்கு நாதசுரம் வாசிக்கும் கம்பர், வசமானதோர் சங்கதி போடும்போது ‘ஓழ்!’ என்பார். அவருக்கு ஓழ் என்பது பேஷ், சபாஷ், பலே, அப்பிடி என்பது போல் ஒரு ரசனை ஒலி மட்டுமே. இன்னும் உற்சாகமானதாக இருந்தால் ‘ஓழ்! ஓழ்!’ என்று அடுக்குத் தொடராக அல்லது இரட்டைக் கிளவியாகச் சொல்வார். ஓழ் எனும் சொல் நாகரீகமான, மேம்பட்ட சமூக தளத்தில் புழங்கு மொழியாக இல்லை. கெட்ட வார்த்தை என்று ஒதுக்கப்பட்ட சொல். ஆனால் அலுவலகங்களில், மால்களில், உயர்தரத்து உணவு விடுதிகளில், கல்லூரி வராந்தாக்களில், ‘Fuck Yaar”, “shit yaar” என்றால் அது சட்டையில் தெளித்துக் கொள்ளும் வாசனைத் திரவியம்.

கிராமத்தான் பல நூற்றாண்டுகளாக, தனது மூதாயின் மூதாயின் மூதாய் பயன்படுத்திய சொற்களை இயல்பாக இன்னும் பயன்படுத்துகிறான். அதை எழுத்து வடிவில் கையாண்டால் கெட்ட சொல், கொச்சை, slang, வட்டார வழக்கு, and what not? ஆனால் வேற்று மொழிச் சொல்லாக, அதே பொருளில் எழுதினால், அது பண்பாட்டின் செம்மணிப் பூண். ஈதென்ன ஓர வஞ்சனை? “டேய் ஊம்பி!” என்றால் அது கெட்ட வார்த்தை, “சும்பப் பயலே!” என்றால் அரிதாரம்.

வெகு சாதாரணமாக சமூகத்தில் இன்றும் வழங்கப் பெறும் சொல், ‘பொச்செரிப்பு’. பொறாமை என்ற பொருளில் பயன்படுத்துகிறோம். பேரகராதி பொச்செரிப்பு எனும் சொல்லை பொச்சு+எரிப்பு என்று பிரித்துத் தருகிறது. எரிப்பு எனில் எரிச்சல், பொச்சு என்றால் என்ன? பொச்சு எனும் சொல்லைத் தெலுங்கும் கன்னடமும் பயன்படுத்துகின்றன, நாம் கொள்ளும் பொருளிலேயே. பேரகராதி பொச்சு என்றால் பெண்குறி மயிர், பெண்குறி, மலத்துவாரம், மயிர்க்கொத்து என்கிறது. மூலத்திலே கடுப்பு, குண்டி காந்தல், குண்டி எரிச்சல் என்று அன்றாடம் சாதாரண மக்கள் பயன்படுத்துகிறார்கள். உனக்கு என்னத்துக்குப் பொறாமை என்று கேட்பதுவே பொருள். மாற்றுச் சொற்கள், அவ்வளவே! மயிர் கொத்து, பெண்குறி மயிர், பெண்குறி, மலத்துவாரம் என்பன எங்ஙனம் கெட்ட சொல் ஆகும்? பொச்செரிப்பு என்பதைப் பொச்சரிப்பு என்றும் சொல்கிறோம். பொச்சு+அரிப்பு என்றே அச்சொல் பிரியும். பொச்சு எனும் சொல்லுக்கு பலாப்பழம், மாம்பழம் போன்ற பழங்களின் சேதாரமான பகுதி என்றும் பொருள் தரப்படுகிறது.

பொச்சம் என்றும் சொல்லுண்டு நம்மிடம். பொய், குற்றம், அவா, தேங்காய் மட்டை, உணவு என்னும் பொருள்கள். பொச்சாத்தல் என்றால் மறதி. அவையறிதல் அதிகாரத்துக் குறள் பேசுகிறது.

‘புல்லவையுள் பொச்சாந்தும் சொல்லற்க நல்லவையுள்

நன்கு செலச் சொல்லுவார்’

என்று. நல்லோர் வீற்றிருக்கும் அவையில் நயம்பட உரைக்க வல்லவர்கள், மறந்தும் புல்லோர் இருக்கும் அவையில் வாய் திறக்கக் கூடாது என்பது பொருள். பொச்சாவாமை என்றோர் அதிகாரமே உண்டு குறளில். பதினெண் கீழ்க்கணக்கு நூல்களில் ஒன்றான ஆசாரக் கோவை, பொச்சாவார் என்ற சொல்லை, மறந்து போகார் எனும் பொருளில் ஆள்கிறது. மறதி உடைய மாந்தரை, பொச்சாப்பன் என்றார். பொச்சை என்றால் குற்றம் என்றும், தொப்பை, வயிறு என்றும் அகராதிகள் கூறுகின்றன.

என்றாலும் பொச்சு என்றால் கெட்ட வார்த்தை நமக்கு. பெண்குறியும், ஆசன வாயும் உறுப்புகள் தாமே! அவற்றுள் கேவலம் எங்கே வந்தது? ‘பொச்சை மூடிக்கிட்டுப் போ!’ என்றால் அது வசவு. கொங்கு நாட்டில் தாராளமாகப் புழங்கப்படும் வசவு அது. உண்மையில் பொச்செரிச்சல் என்றாலும் வசவுதான். எனினும் வசவு வேறு, வார்த்தை வேறு அல்லவா?

‘பொச்சு’ போல, பொது இடங்களில் மக்கள் புழங்கக் கூசும் மற்றொரு சொல், குண்டி. எனதாச்சரியம், குண்டி என்ற சொல் ஏன், எதனால், எப்போது கெட்ட சொல் ஆயிற்று என்பதில். ஊர்களும், சிற்றூர்களும் எவ்விதமான அறைப்பும், கூச்சமும் இன்றி சர்வ சாதாரணமாகப் புழங்கும் சொல். ‘குடிச்சுக் குண்டி வெடிச்சுச் செத்தான்’, ‘குளத்துக்கிட்டே கத்தீட்டுக் குண்டி கழுவாமல் போனான்’, ‘அண்டி உறைப்பும் இல்லே, குண்டி உறைப்பும் இல்லே’, ‘பணக்காரக் குண்டிக்குத் தடுப்புப் போடுவான்’, ‘குண்டீலே ரெண்டு மிதி மிதிச்சாத்தான் சரிப்பட்டு வருவான்’, ‘ஒழுங்காக் குண்டி கழுவத் தெரியாது, அவன் நாயம் பேச வாறான்’ என்று எத்தனை வழக்குகள்! மலையாள சினிமாவில் அடிக்கடி கேட்கும் வாசகம், “குளம் எத்தற குண்டி கண்டிற்றுண்டு, குண்டி எத்தற குளம் கண்டிற்றுண்டு?” என்பது. பசி எடுத்தால் தெரியும் என்பதற்கு, “குண்டி காஞ்சால் வருவான்!” என்பார்கள்.

இறுமாப்பைச் சொல்ல, குண்டிக் கொழுப்பு என்றோம். இந்தியில்  ‘காண்ட் மேம் ஜர்பி ஹை’ என்பார்கள். காண்ட் என்றால் குண்டி, ஜர்பி என்றால் கொழுப்பு. உடுக்கத் துணிக்குப் போக்கில்லை என்று சொல்ல, குண்டித் துணிக்கு வழியில்லை என்றோம். ஆசன எலும்பைக் குண்டி எலும்பு என்றோம். ஆசிரியர்கள், ‘குண்டித் தோலியை உரிச்சுருவேன்’ என்றார்கள் நான் பள்ளியில் வாசிக்கையில். ‘கஞ்சிக்கு வழியில்லே, குண்டிக்குப் பட்டு கேட்கிறது! என்றார்கள் பெண்கள். Buttocks என்ற சொல்லை குண்டிப் பட்டை, சூத்தாம் பட்டை என்றோம்.

என்ன விந்தை என்றால் பிருஷ்டம், புட்டம், buttocks எனும் சொற்களைப் புழங்க நமக்கு எந்த நாணமும் இல்லை. குண்டி என்று சொல்ல அவமானப்படுகிறோம். தமிழ் எழுத்தாளர்களே கூட, குண்டி எனும் சொல்லை சோப்புப் போட்டு, அலசி, காய வைத்து, மடித்து, ஆசனவாய், அடிப்பக்கம், பின் பக்கம் என்று மழுப்புகிறார்கள்.

பேரகராதி, குண்டிக்காய் என்ற சொல்லுக்கு, buttocks என்றே பொருள் சொல்கிறது. குண்டம், குண்டி எனும் சொற்களுக்குப் பன்றி என்று பொருள். குண்டலி எனும் சொல், மயிர், மான், பாம்பு இவற்றைக் குறித்தது. குண்டிகம் என்றால் துகள். குண்டிகை என்றாலோ கமண்டலம், குடுக்கை மற்றும் தேங்காய்ச் சிரட்டை. சிரட்டை என்ற சொல்லுக்கு தொட்டி, கொட்டாங்கச்சி என்று நான் பொருள் சொல்ல வேண்டும்.

திருமழிசை ஆழ்வாரின் ‘நான்முகன் திருவந்தாதி’யில் ஒரு பாடல், ‘நான்முகன் குண்டிகை நீர் பெய்து, மறை கொண்ட மந்திரத்தால் வாழ்த்தி’ என்று நீளும். குண்டிகை எனும் சொல்லை, குண்டி, கை என எவரும் பிரித்துப் பொருள் சொன்னால் நாமதற்குப் பொறுப்பில்லை. குண்டிகை என்றால் கமண்டலம் என்று பொருள். கமண்டலத்தின் தூர்ப்பகுதியின் வடிவத்தை நீங்கள் மனக்கண்ணில் கொணர்ந்தால், குண்டிகையில் இருந்தே குண்டி பிறந்திருக்குமோ என எண்ணத் தோன்றும். பேருந்தின் மூன்று பேர் அமரும் இருக்கையில், பகல் நேர பாசஞ்சர் ரயிலில், கூட்ட நெரிசல் காரணமாக, அரைக் குண்டி வைத்து உட்கார்ந்து பயணம் செய்கிற எனக்கு, குண்டியின் வருத்தம் தெரியும்.

குண்டியின் வலி உணர்ந்ததால் எனது இந்த வழக்கு. பிருஷ்டம் என்னும் சமற்கிருதம் சொல்லும், தொல்காப்பிய இலக்கண விதிகளின்படி அதனைத் தமிழாக்கிய புட்டம் எனும் சொல்லும், buttocks எனும் ஆங்கிலச் சொல்லும் எந்த அவமதிப்புக்கும் ஆளாவது இல்லை. ஆனால் குண்டி, கெட்ட வார்த்தை. ஈதென்ன சமூக நீதி, ‘இனமானத் தலைவர்களே மொழிப் பறம்பின் வேங்கைகாள்’!

குண்டியைக் குறித்த மற்றொரு சொல் சூத்து. இதுவும் இழிவென்று ஒதுக்கப்பட்ட சொல்லே! எனினும் தந்தை தந்தையும், அவன் தந்தையும் அவனது தந்தை தந்தையும் பயன்படுத்திய சொல். சூத்து என்றால் குண்டி, பிருஷ்டம், buttocks என்றே அகராதிகள் பொருள் தருகின்றன. சூத்தாம்பட்டை என்றாலும் குண்டிதான். Homo sexual எனும் ஓரினப் புணர்ச்சியில் ஈடுபடுவோர், to commit sodomy, சூத்தடித்தல் என்றொரு சொல் பயன்படுத்துகிறார்கள். அஃதோர் technical term. சூத்தழகி என்றால் அதுவோர் மாம்பழ வகை. சூத்தாட்டுக் குருவி என்றால் சூத்தாட்டி உள்ளான் அல்லது வலியன் என்றொரு பறவை இனம். மலவாயிலில் ஏற்படும் தடிப்புக்கு, சூத்தாங்கரடு என்பார்கள். தகுதி ஆராயாமல், யாவற்றுக்கும் ஆமாம் சாமி போட்டு, தன் காரியம் சாதித்துச் சம்பாதிப்பவனைக் குறிக்க ‘சூத்தாட்டி’ என்றொரு வசை உண்டு. கூத்தாட்டுவான் என்பதோர் தேவாரச் சொல். சூத்தாட்டுவான் என்றால் சமகால அரசியல் சொல். சமீப காலமாகத் தமிழக அரசியல் தலைவர்களை ‘டயர் நக்கி’ என்றொரு சிறப்பு அடைமொழியால் அடையாளப்படுத்துவார்கள். அதனினும் சிறந்த தமிழ்ச்சொல் என ‘சூத்து நக்கி’ என்பதை நாம் பரிந்துரைக்கலாம்.

பொச்சும், குண்டியும், சூத்தும் பேசிவிட்டு, பீ எனும் சொல்லைத் தாண்டிப் போவது அறம் இல்லை. பீ என்றால் மலம் என்று பன்னிரண்டு கோடித் தமிழருக்கும் தெரியும். தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தாலும், தெரியாவிட்டாலும்! ஆனால் எவரும் மனத்தடையின்றி பீ பயன்படுத்துவது இல்லை. மலம் செய்த புண்ணியம் என்ன, பீ செய்த பாவம் என்ன? பெருமாள் முருகன் ஒருவர்தான், ‘பீக் கதைகள்’ எழுதினார். மலம் என்ற சொல் புனிதமாகப் பண்டு தொட்டு இன்றுவரை ஆளப்படுகிறது. ஆணவம், கன்மம், மாயை என்று மும்மலங்களாகப் பேசுகிறார்கள். மும்மலம் எனும் சொல், சொல்ல நயமாக இருக்கிறது என்றால், முப்பீயும் ஒலிநயம் குறைந்ததல்ல. முத்தீ சொல்லத்தானே செய்கிறோம். இடது கையை இன்றும் பீக்கை, பீச்சக்கை, பீச்சாங்கை என்கிறார்கள். பீச்சாங்கால் என்றும் சொல்வதுண்டு, எனினும் இடதுசாரித் தோழர்களும் பீ என்றுரைக்கக் கூசுகிறார்கள். பயந்து நடுங்குபவரை பயந்தாங்கொள்ளி என்று சொல்வதை ஒத்து, பீச்சாங்கொள்ளி, பீச்சி என்பர் சில பிரதேசங்களில்.

வயிற்றுக் கழிச்சலைப் பீச்சல் என்பார்கள். காய்ச்சல் போலப் பீய்ச்சல். மலக் குடலைப் பீக்குடல் என்றும் சொல்லலாம்தானே! கரிய நிறமுடைய ஒரு வகைப் பறவையைப் பீக்காக்கை என்றும், பன்றிக் குருவியைப் பீக்குருவி என்றும் வழங்குகிறார்கள். ஆனால் திருக்கார்த்திகைக்கு அடுத்த நாளைப் பீக்கார்த்திகை என்று வழங்குவதாகப் பேரகராதி குறிக்கிறது. எனக்கதன் காரணம் தெரியாது. மாறைவாக நிறையப் பேர் வழக்கமாக உட்கார்ந்து மலம் கழிக்கும் இடத்தைப் பீக்காடு என்பார்கள். பீக்குழி என்றும் சொல்வதுண்டு. தீமிதித் திருவிழாவைக் குண்டம் என்பர் கொங்கு நாட்டில். பூக்குழி என்றும் சொல்லப்படுவதுண்டு. பல்லாங்குழி விளையாடும் போது பல்லாங்குழியில் இடுவதற்குக் காய் இல்லாமல் வெறுமையாக விடப்படும் குழியையும் பீக்குழி என்றே சொல்வார்களாம்.

பீ எனும் எழுத்து ஒரு சொல்லும் ஆகும். Excrement, Ordure, Faeces, மலம் என்று பொருள் தருகிறது பேரகராதி. அச்சம் என்றும் பொருள் சொல்கிறது யாழ் அகராதி. பெருமரம், Toothed-leaved Tree of Heaven என்றும் பொருள் தரப்படுகிறது. பீ நாறிச் செடி என்றும் பெருங்கள்லி என்றும் பொருள்கள் உள்ளன. பெருமலம் எனில் புன்கு எனும் மரம் என்கிறது சங்க அகராதி. அறிஞர் பெருமக்கள் கட்டுரை எழுதும்போது, பீ என்று நேரடியாகச் சொல்லி வெட்கி, பகர வீ என்றார்கள். ஒரு வேளை தீ என்பதைக் கூட தகர வீ என்பார் போலும்!

கார்த்திகை மாதம் முதல் நாள் விரதம் பிடித்து, மகர விளக்கு வரை, சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு, கூட்டம் கூட்டமாக, சாரி சாரியாக, தனியார் மகிழுந்து, சிற்றுந்து, பேருந்துகளில் செல்லும் ஐயப்பன் மார், போம் வழியில் அல்லது திரும்புகையில் கன்னியா குமரி பகவதி கோயிலில் தரிசிக்க வருவார்கள். குமரித் துறையில் நீராடுவார்கள். கடற்கரை மணலில், மணல் தேரியில் நடப்பார்கள். இயற்கை உபாதைகள் கழிக்கப் போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால், அல்லது தேடிக் கண்டு பிடிக்கப் பொறுமை இன்றி, ஐயப்ப சாமிகள் கடற்கரை மணலில் மலம் கழித்துக் கடலில் கழுவிச் செல்வார்கள். ஐயப்ப சாமிகள் கழித்த மலத்தை பூச்சாமி என்று இளக்காரம் செய்வார்கள் நாஞ்சில் நாட்டார். தினமும் நூற்றுக்கணக்கில் சிற்றுந்து, பேருந்து வருவதால், பூச்சாமிகளுக்கு அருவருத்து, கார்த்திகை-மார்கழி மாதங்களில், எம்மக்கள் கடற்கரைக்குச் செல்வதைக் கூசுவார்கள்.

பீக்கும் மலத்துக்கும் பகரமாக, நரகல் என்றொரு சொல்லைக் கேள்விப்படிருக்கலாம். எங்களூரில் நரகலைத் தவிர்த்து நரவல் என்பார்கள். ஆனால், பேரகராதி, நரகல் என்றே பதிவிடுகிறது. மாட்டுச் சாணம், நாய்ப்பீ, கோழிக்காரம், பறவை எச்சம், ஆட்டுப் புழுக்கை, குதிரை விட்டை, யானை லொத்தி என்பதைப் போல மனிதக் கழிவு நரகல் எனப்பட்டது போலும்.

எல்லாருக்கும் தெரியும், நரன் எனில் மனிதன் என்று. நரன் என்றால், மனிதப் பிறவி. நரவரி என்றால் நர+அரி. அதாவது ஆளரி, ஆள்+அரி. அதுவே நரசிங்கம், அல்லது நரசிம்மம். நரனின் பெண்பால் நாரி. அர்த்தநாரி அறிவீர்கள் தானே!

ஆனால் நாரி எனும் சொல்லுக்குப் பேரகராதி, பத்துப் பொருள் பட்டியலிடுகிறது. 1. வில்லின் நாண் 2.பன்னாடை 3.யாழ் நரம்பு 4.இடுப்பு 5. கள் 6. தேன் 7.பெண் 8.பார்வதி 9.சேனை (சேனை எனில் சேனைக் கிழங்கு அல்ல, படை) 10.வாசனை (நன்னாரி வேர், நன்னாரி சர்பத் நினைவில் கொள்க.)

இந்தப் பத்துப் பொருளும் நாரி எனும் சொல்லுக்கு வடமொழியில் உண்டா என்றெனக்குத் தெரியாது. எனது அனுமானம், நாரி எனும் சொல் தமிழிலும் சமற்கிருதத்திலும் வெவ்வேறு பொருள்களில் வழங்குகிறது என்பது.

நரகல் எனும் சொல்லுக்கு – மலம், அசுத்தம் என்று பொருள் தருகிறது பேரகராதி. நரகல் வாய் எனில் குதம், ஆசனவாய். ஆக நர மாமிசம், நரஸ்துதி, நர பலி என்றும் சொற்கள் உண்டு நம்மிடம். நரகலும் உண்டு, பீ அல்லது மலம் என்ற பொருளில். 

பலரும் தவிர்க்கும் இன்னொரு சொல், கொட்டை. கொட்டைப் பாக்கு, கொட்டைத் தேங்காய், பனங்கொட்டை, மாங்கொட்டை என்பன விலக்கு. கொட்டையும் விதைதான் என்றாலும் எல்லா விதையும் கொட்டை அல்ல. எடுத்துக் காட்டுக்கு விதை நெல், கீரை விதை, வெண்டை விதை, கத்திரி விதை. கொட்டைகளும் முளைக்கும். புளியங்கொட்டை, வேப்பங்கொட்டை, கொல்லாங்கொட்டை என்ற முந்திரிக் கொட்டை என்பன. விதையை வித்து என்றும் சொன்னோம்! ‘வித்து அட்டு உண்டனை!’ என்பார் ஔவை, புறநானூற்றில், யமனைப் பார்த்து, அதியன் இறப்புக்கு இரங்கி.

கொட்டை என்று கேட்ட உடனேயே, அதை testicles -வுடன் தொடர்பு படுத்தி, சிலர் முகம் சுழிக்கிறார்கள். பேரகராதி கொட்டை எனும் சொல்லுக்கு இருபது பொருள் சொல்கிறது. 1. விதை (பிங்கல நிகண்டு) 2. அண்டம், Testicles. 3.தாமரைக் கொட்டை 4.பலா, பூசணி முதலானவற்றின் பூம்பிஞ்சு 5. உருண்டை வடிவம், கொட்டை எழுத்து. 6. மகளிர் தலையணி 7.கொட்டை இலந்தை 8.ஆமணக்கு 9.கொட்டைக் கரந்தை 10. பாதக் குறட்டின் குமிழ் 11. ஆடைத் தும்பு முடிச்சு 12. ஆடைத் தும்பு.

ஆமணக்கு விதையை, கொட்டை முத்து என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். விதைப் பையைக் குறிக்க விதைக் கொட்டை என்பார்கள்.  குறுக்கி, வெறுமனே கொட்டை என்றும் சொல்வதுண்டு. ‘கொட்டையிலே சவுண்டீற்றான்’, ‘கொட்டை வீங்கிப் போச்சு’, ‘கொட்டையைக் கசக்கீடுவேன்’ என்பார்கள். ‘கொட்டை செத்தவன்’ என்றொரு வசவுச் சொல் உண்டு. An emasculate person, coward, nerveless man, அண்டத்தில் வீரியமற்றவன், கையாலாகாதவன் என்றெல்லாம் பொருள் சொல்கிறது Lexicon.

பருவகாலங்களில் வடசேரி கனகமூலம் சந்தையில் இருந்து, மலிவாக அப்பா மாம்பழம் வாங்கி வருவார். 7 பிள்ளைகள், அப்பா, அம்மா, அப்பாவைப் பெத்த ஆத்தா, பறக்கை நெடுந்தெரு வள்ளியம்மை, அம்மாவைப் பெற்ற நெடுமங்காடு- குற்றிச்சல்-ஆரிய நாட்டு ஆச்சி மாடிப் பிள்ளை. மாம்பழப் புளிசேரி வைத்தால் குறைந்தது பன்னிரண்டு முழு மாம்பழம் குழம்பில் போடவேண்டும். பானையின் அளவு உங்கள் கற்பனைக்கு. அவனவன் வெகுசுவாரசியமாக மாம்பழத்துக் கொட்டைகளை மூஞ்சி சுகித்திருப்பான். ஏழு பேரில் ஒருத்தனுக்கு மாங்கொட்டை மூஞ்சி என்பது பட்டப் பெயர்.

மூஞ்சிப் போட்ட மாங்கொட்டை போல, மூஞ்சிப் போட்ட பனங்கொட்டை போல என்று எண்ணெய் காணாத எங்கள் தலைமயிரைக் குற்றம் சொல்வார்கள். ஆண்களின் தலைமயிரைக் குஞ்சி என்றது தமிழ் இலக்கியம். ‘குஞ்சி அழகும் கோட்டானைத் தாரழகும்’ என்று தொடங்கி நாலடியார் பாடல் ஒன்றுண்டு. இன்று குஞ்சி, குஞ்சு, குஞ்சான், குஞ்சாமணி எல்லாம் ஆண் குறியைக் குறித்த செல்லமான சொற்கள்.குஞ்சாலாடு என்றால் நாவூறும் நமக்கு, குஞ்சாமணி என்றால் நாக்கூசும்.

மறுபடியும் கொட்டைக்கு வந்தால், புன்னைக் கொட்டை, இலுப்பைக் கொட்டை, ஈச்சங்கொட்டை போல ஆணின் விதைப்பையை விதைக் கொட்டை என்றோம். இதில் மனத் துளக்கத்துக்கு ஏதுவுண்டா? கொட்டையைப் பேசும்போது பிடுக்கு எனும் சொல் இடையூறு செய்கிறது. பிடுக்கு எனும் சுத்தமான தமிழ்ச் சொல்லை, பேச்சு வழக்கு புடுக்கு என்கிறது. புடுக்கு எனும் சொல்லுக்குப் பேரகராதி, பிடுக்கு, அண்டம், Testicles என்று பொருள் தருகிறது. பிடுக்கு என்ற சொல்லுக்கும், பீசம், Testicles என்கிறது. பிடுகு என்றால் இடி- thunder என்று பொருள். பெரும் பிடுகு என்றால் பேரிடி. கல்கியின் கதாபாத்திரம் ஒன்றின் பெயர் பெரும்பிடுகு முத்தரையர். பேரிடி என்ற பொருளில் இருக்கலாம். அல்லது பிடுக்கு இடை குறைந்து பிடுகு ஆகியிருக்கலாம். பெரிய பீஜங்களை உடையவர் என்ற பொருளில். முத்தரையரின் வம்சாவளிகள் நம்முடன் வழக்குக்கு வந்து விடப் போகிறார்கள்! மலையாளம் testicles என்பதைக் குறிக்க, பிடுக்கு என்கிறது. துளு பிட்டு என்னும்.

மாங்கொட்டையின் உள்ளிருக்கும் வெண்மையான, துவர்ப்புச் சுவை உடைய பருப்பைக் குறிக்க நாம் அண்டி என்றோம். ஐயத்துக்கு இடமில்லாமல் மாங்காய் அண்டி என்பார்கள். நாஞ்சில் நாட்டில் அண்டிப் பருப்பு, என்றால் முந்திரிப் பருப்பு. முந்திரிக் கொட்டையைப் பிளந்து பருப்பு எடுக்கும் சின்ன தொழிற்கூடங்களை அண்டி ஆபீஸ் என்போம். மலையாளத்தில் அண்டி என்றால் முந்திரிப் பருப்பு. கஷூ அண்டி என்பார்கள். உங்களுக்கு Cashew Nut நினைவுக்கு வரலாம். விதைக் கொட்டை அல்லது விதைப்பையைக் குறிக்க மலையாளம் அண்டி என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது.

 ‘எந்தாடோ? அண்டி வீங்கிப் போயோ?’ என்றும், “அண்டி உதைப்புண்டோ?” என்றும், ‘அண்டி களஞ்ச அண்ணான்’ என்றும் அன்றாடம் கேட்கலாம். அண்ணான் என்றால் அங்கு அணில். மண்ணான் என்றால் வண்ணான். உவர் மண் எடுத்துத் துணி வெளுப்பவன், எனவே மண்ணான். ‘அண்ணான் சாடி எந்து, மண்ணான் சாடியால் பற்றுவோ?’ என்பார்கள். அணில் குதித்தது என்று வண்ணான் குதித்தால் விளங்குமா என்பது பொருள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு, இரவுறக்கம் கெட்ட ஒரு நாளில், இரவு பதினொன்றரை மணிக்கு, இந்தியனின் தனிப்பெரும் சம்பத்தான தூர்தர்ஷனில், ஒரு டாக்குமெண்டரி பார்த்துக் கொண்டிருந்தேன். முப்பது நிமிடப் படம். மூவேந்தர்களின் தார் பற்றிய ஆவணப்படம். தார் எனில் மாலை. தார் வேந்தன் எனில் மாலையணிந்த மன்னன், தார் பாய்ச்சிக் கட்டியவன் என்பதல்ல. ஒருவன் வேப்பம்பூ மாலையணிந்து வந்து அமர்ந்தான். தமிழ்த் திரைப்படங்கள், நமது முடி மன்னர் எல்லாம் கர்ணன், வீர பாண்டிய கட்ட பொம்மன் போல ஆடை ஆபரணங்கள் அணிந்திருப்பார் என்று நம்ப வைத்து விட்டன. இரண்டாயிரம்  ஆண்டுகளுக்கு முன்பு மன்னரின் தோற்றம் எப்படி ருந்திருக்கும் என்பதறிய இந்தியாவின் சிறந்த நவீன ஓவியர்களில் ஒருவரான ட்ராட்ஸ்கி மருதுவின் ‘வாளோர் ஆடும் அமலை’ நூல் கிடைத்தால் பாருங்கள்.

வேப்பம்பூ மாலை அணிந்தவன் போன பின்பு, ஆர் அல்லது ஆத்தி மாலை அணிந்தவன் வந்து காட்சி கொடுத்தான். அவனும் போன பின்பு, கழுத்தில் ஒன்றரையங்குல கனமும் இரண்டரை அடி நீளமும் கொண்ட பனங்கதிர் கொத்தாக அணிந்த மன்னன் வந்தான். எனக்கு அர்த்தமாயிற்று. ஆவணப் படமெடுத்தவருக்கு பனங்கதிருக்கும், பனம் பூவுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்று. ஆண்பனையில் முதலில் பனங்கதிர் வரும் கொத்தாக. பனங்கதிரில் இருந்து சிறிய வேப்பம்பூ அளவில் ஆனாக திடமாக, வெளிறிய மஞ்சள் நிறத்தில் பனம்பூக்கள் மலரும். தென்னம் பாளை, கமுகம் பாளை, ஈச்சம் பாளை போல் பனம் பாளை வெடித்து வருவது பனங்கதிர். கதிரில் நூற்றுக் கணக்கில் முகைப்பது பனம்பூ. கதிர் வேறு, பூ வேறு என்று மானங்கெட்டவன்களுக்குத் தெரியவில்லை.

பனங்கதிர் சூடி அணிந்திருந்தவனைப் பார்க்க இரக்கமாக இருந்தது. நாள் பூரா ஒரு மன்னன் இப்படிப் பனங்கொத்து சுமக்க வேண்டுமானால்- உம் மீது ஆணை, அம்மாவனே- எனக்கு இலவசமாகக் கிடைத்தாலும் மன்னர் பதவி வேண்டாம். மாற்றாக வட்டாட்சியர் அலுவலகத்தின் எழுத்தர் பதவி போதும். நமது அரசாங்க மேன்மை தங்கிய அதிகாரிகளுக்கும், பனங்கதிர் எது, பனம்பூ எது என அறிவில்லை.

நான் சொல்ல வருவது, பனம் கதிரைக் குறிக்க, பனம்பிடுக்கு என்றனர். ஆண் பனையில் மட்டுமே பணம் பிடுக்கு வரும். ஆண்பனைக்கும் பெண் பனைக்கும் என்ன வேறுபாடு? பெண்பனையில் நுங்கு காய்க்கும், பனம்பழம் ஆக அது மாறும்.

மலையாள சினிமா அடிக்கடி பார்ப்பவர் கேட்டிருப்பார். ஒரு கதா பாத்திரம் சொல்லும், ‘அவன் அதைச் செய்வான், இதைச் செய்வான்’ என்று. மற்றொரு கதாபாத்திரம் எதிர் பேசும், ‘அவன் புளுத்தினான்’ என்று. எனக்கு இன்னும் ஐயப்பாடு உண்டு, ‘புளுத்தி’ என்று எழுதுவதா அல்லது ‘புழுத்தி’ என்று எழுதுவதா என்று. எப்படிச் சொன்னாலும், எழுதினாலும் அதன் பொருள் ஒன்றே. நம்மிடையேயும், நாட்டுப் புறங்களில் உரையாடலின் போது இன்னும் பயன்படுத்துவது உண்டு, ‘போடா, புளுத்தி!’ என்றும், ‘ஆமா! அவன் பெரிய புளுத்தி’ என்றும்.

சரி! புளுத்துவது அல்லது புழுத்துவது என்றால் என்ன? எவரிடமாவது சென்று ஒரு உதவியோ, ஐம்பது நூறு கைமாற்றோ கேட்டால் கீழுதட்டை மாலர்த்திக் காட்டுவார்கள், இல்லை என்று சொல்வதற்கு. அதைத்தான் நாஞ்சில் நாட்டாரும், மலையாளிகளும், ‘சுண்டைப் புளுத்திக் காட்டினான்’ என்பார்கள். சுண்டு என்றால் உதடு. சில குழந்தைகள், அழுவதற்கான முஸ்தீபாக, அனிச்சையாகக் கீழுதடு மலர்த்திக் காட்டி நிற்கும். பார்க்கும் முதியோர் கேட்பார்கள், “ஏன் இந்தக் குட்டி சுண்டைப் புளுத்தீட்டு நிக்கு?” என்று.

ஆண் குறியின் முன் தோலைப் பின்புறமாகத் தள்ளி, உரித்த சின்ன வெங்காயம் போல் முன்பக்க மொட்டைக் காட்டிக் கொண்டு நிற்பதைப் புளுத்துதல் என்போம். புளுத்தினவன், புளுத்திக் காட்டினான் என்பர். ஆக, அங்கு புளுத்தி என்றால் அது பெயர்ச்சொல். ஆண் குறியின் முன் தோல் புறந்தள்ளப்பட்ட மொட்டுப் போன்ற பகுதி. இன்று மக்கள் வழக்கில், ‘அவன் பெரிய புடுங்கியா?” என்பார்கள். நாங்கள் கேட்டோம், ‘அவன் என்ன பெரிய புளுத்தியா?’ என்று. நமது ஆயாசம், புடுங்கி என்றால் இயல்பு வழக்கு, புளுத்தி என்றால் கெட்ட வழக்கு என்பதில்தான்.

எவ்வாறாயினும் புளுத்தி என்ற சொல்லோ, புழுத்தி என்ற சொல்லோ, இரண்டுமே எந்த அகராதியிலும் இல்லை. அகராதிகளில் இல்லாத சொல், தமிழில் இல்லை என்றும் ஆகாது. எப்போதுமே சிலருக்கு குறியின் முன் தோல் பின் நகர்ந்து சுருங்கி, மொட்டு முந்திக் கொண்டு புளுத்தியபடியே கிடக்கும். அவருக்கு ‘புளுத்திமான்’ என்ற பட்டப் பெயரும் உண்டு, ஸ்பைடர்மான் என்பதைப் போல.

ஓதம் என்றொரு சொல் உண்டு நம்மிடம். ஈரம், வெள்ளம், கடலலை என்பன பொருள்கள். ஆண்களின் விதைக் கொட்டையில் வரும் வாதம் – அண்ட வாதம்- ஓதம் எனப்படும். Affection of the testicles, hydrocele hernia போன்ற நோய்கள். ஓதம் இறங்குதல் என்றால் அண்டம் இறங்குதல். ஓத நோய் வந்த புடுக்கு, ஓதப் புடுக்கு எனப்படும். ஓதப் புடுக்கு உடையவர் ஓதப் புடுக்கன், அதாவது ஓதப் பிடுக்கன்.

சுண்ணி எனும் சொல், அன்றாடம் பல்லாயிரக் கணக்கானோர் பயன்படுத்தும் சொல். ஆண் குறி என்று பதிவிடுகிறது பேரகராதி. ஆண் குறியைக் குறிக்க, பூள் என்றொரு சொல்லையும் பதிவிட்டுள்ளது. பூலு என்றொரு சொல்லையும் காணலாம். அது மலையாளச் சொல் என்றும் குதம் என்று பொருள் என்றும் குறிப்பு இருக்கிறது.

பூழ் எனும் சொல்லும் பேரகராதியில் காணக் கிடைக்கிறது. Hole, புழை, துவாரம் எனப் பொருள் தந்துள்ளனர். பூழியன் என்றால் பூழி நாட்டுக்குத் தலைவன் என்றும், பூழி நாடு என்பது the region where a vulgar dialect of Tamil was spoken என்றும் குறிப்பு உண்டு. இன்றைய தமிழ் நாட்டில் vulgar மொழி பேசும் பிரதேசம் எது என்பதை நீங்கள் தீர்மானித்துக் கொள்ளலாம். பூழை என்றாலும் துவாரம் என்று பொருள் தந்துள்ளனர். ஆனால் பூழியன் என்றால் விபூதி அணிந்தவன், சிவன் என்ற பொருளும் தரப்பட்டுள்ளது. ‘த்வஜ’ எனும் சமற்கிருதச் சொல்லை நாம் துவசம் என்று தமிழாக்கினோம். த்வஜ எனும் சமற்கிருதச் சொல்லுக்கு கொடி, அடையாளம், ஆண்குறி என்று பொருள். ஆண்குறியைக் குறிக்க, கம்பம், கம்பு, கோல், தண்டு போன்ற சொற்களை மக்கள் பயன்படுத்துவதையும் சேர்த்து எண்ணிப் பார்க்கலாம்.  

குய்யம் என்றொரு சொல் கிடக்கிறது பேரகராதியில். நான்கு பொருள்கள் தரப்பட்டுள்ளன. 1.That which is secret, mystical, hidden, private, மறைவானது. 2. Genetic origin, especially of women, உபஸ்தம். 3. Anus, அபான வாயில். 4. Dissimulation, deceitfulness, hypocrisy, வஞ்சகம். குய்யம் எனும் சொல் குஹ்ய எனும் வட சொற்பிறப்பு என்கிறார்கள். குஹ்ய என்றால் உட்கரத்தல், இரகசியமான, மர்மமான என்று பொருள்.

குய்யம் எனும் சொல்லை, வஞ்சனை எனும் பொருளில் திருத்தக்க தேவர், சீவக சிந்தாமணி ஆள்கிறது.  முதல் இலம்பகமான நாமகள் இலம்பகத்தின் பாடல் சொல்கிறது:

‘நட்பிடைக் குய்யம் வைத்தான்; பிறர் மனை நலத்தைச் சேர்த்தான்

கட்டழல் காமத் தீயில் கன்னியைக் கலக்கினானும்

அட்டுயிர் உடலம் தின்றான் அமைச்சனாய் அரசு கொன்றான்

குட்டநோய் நரகம் தம்முள் குளிப்பவர் இவர்கள் கண்டாய்’ என்று.

நட்பு பூண்ட இடத்து வஞ்சனை வைத்தவனும், பிறர் மனையாளைச் சேர்ந்தவனும், மிகுந்த அழல் போன்ற காமத் தீயில் கன்னியைச் சீர் குலைத்து அவளை மணம் செய்து கொள்ளாதவனும், உயிரைக் கொன்று உடலம் தனைத் தின்றவனும், அமைச்சனாக இருந்தே அரசனைக் கொன்றவனும், இம்மையில் குட்ட நோயிலும் மறுமையில் நரகத்திலும் அழுந்துவார்கள் என்பது பாடலின் பொருள். இன்றைய கணக்கெடுப்பில், பாடல் சொல்லும் பட்டியலில் இருப்போர்தான் அரசியலில், அதிகாரத்தில், சமூகத்தில் செல்வாக்கு உடையவராய் பட்டொளி வீசி நடக்கிறார்கள்.

குய்ய ரோகம் எனில் பெண்குறியில் வரும் பாலியல் நோய் என்கிறார்கள். அதாவது STD, Sexually Transmitted Disease.

பெண்குறியைச் சொல்ல கூதி என்றொரு சொல்லும் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது. மலையாளத்திலும் துளுவிலும் கூட, கூதி என்றால் பெண்குறி. நிதம்பம் என்றொரு சொல்லும் உண்டு. இடம், பொருள், ஏவல் உணர்ந்து, அதனைக் குண்டி என்ற பொருளிலும், அல்குல் அல்லது பெண்குறி என்ற பொருளிலும் கையாள்கிறார்கள்.

பேரகராதி, நிதம்பம் எனும் சொல்லுக்கு ஏழு பொருள் தருகிறது.

  1. Buttocks or hind quarters, posterior, especially of a woman; பிருஷ்டம்
  2. Pubic region. அல்குல் (பிங்கல நிகண்டு)
  3. Side or swell of a mountain, மலைப் பக்கம் (பிங்கல நிகண்டு)
  4. Bank or shore, as of a river. கரை (யாழ் அகராதி)
  5. A hand-pose. நிருத்தக் கை வகை. நாட்டிய முத்திரை வகை.
  6. A mineral poison. கற்பரி பாஷாணம். (சங்க அகராதி)
  7. Shoulder. தோள் (யாழ் அகராதி)

எனவே நிதம்பம் எனில் புட்டமும் ஆகும், பெண்குறியும் ஆகும். நிதம்ப சூலை என்றும் ஒரு சொல் காணக் கிடைக்கிறது. பிரசவத்தின் முறை கேட்டால் உண்டாகும் நோய்வகை என்கிறார்கள். பேராசிரியர் அருளி அவர்களின் ‘அயற்சொல் அகராதி’ நிதம்பம் எனும் சொல்லை சமற்கிருதம் என்றும், புட்டம், அல்குல், மலைப்பக்கம், கரை, தோள் என்பன பொருள்கள் என்றும் வரையறுக்கிறது.

பகம் என்றொரு சொல் கேள்விப்பட்டதுண்டா? பெயர்ச்சொல், பகா என்னும் வடசொற் பிறப்பு. பகம், Bhaga எனும் சொல்லுக்கு முதற் பொருள், ஆறு குணங்கள்- ஐசுவரியம், வீரியம், புகழ், திரு, ஞானம், வைராக்கியம் என்பன. இரண்டாவது பொருள், பெண்குறி. Pudendum muliebre எனும் சொல்லே பகம்.

பகம் என்ற இன்னொரு பதிவும் இருக்கிறது பேரகராதியில். Baka என்பது உச்சரிப்பில் வடமொழி. A kind of heron, கொக்கு வகை; குயில், Cuckoo, கொக்கு மந்தாரை, Taper-pointed mountain ebony, காக்கட்டான்- Mussell- shell creeper எனப் பொருள் தரப்பட்டுள்ளது.  

நாம் இங்கு பேசப்புகுவது பெண்குறி எனும் பொருளுடைய பகம், bhaga எனும் சொல் குறித்து. நான் ஏழெட்டு வயது சிறுவனாக இருந்த போது, ‘குலேபகாவலி’ என்றொரு தமிழ் சினிமா வந்தது. எம்.ஜி.ராமச்சந்திரன் நாயகன், பானுமதி நாயகி. எங்கள் பெரியப்பா நாராயண பிள்ளை மன்னர் வேடத்தில். அவர் அபிநயித்த 66 தமிழ் சினிமாக்களில் அதுவும் ஒன்று. அதுவல்ல விடயம். எந்தத் தமிழ் அகராதியிலும் ‘குலேபகாவலி’ என்ற சொல் காணக் கிடைக்காது எவருக்கும். ஏமாளித் தமிழனுக்கு எதற்கு இந்த ஆராய்ச்சி, பெயரென்றிருந்தால் போதாதா? அந்தச் சொல்லின் பொருள் என்ன என்று திரைப்பட அறிஞர்களிடம் கேளுங்கள். நான் சொன்னால் அது ஆபாசமாகக் கருதப்படக் கூடும்.

பிறப்புறுப்பைக் குறிக்க, உடம்பு எனும் சொல்லும் ஆளப்பட்டது. ஆணுடம்பு, பெண்ணுடம்பு என்று பயன்படுத்தினோம். அதையே கலாச்சாரக் காவலர்கள் மர்மப் பிரதேசம் என்றார்கள். அதில் மர்மம் என்ன இருக்கிறதென்று அறியோம். பெண்ணுறுப்பைப் பேச விண்டை என்றொரு சொல்லும் பயன்பட்டுள்ளது. ஒரு வேளை pudendum muliabre என்ற சொல்லின் சுருக்க மொழியாக்கம் புண்டை, விண்டை எனும் சொற்களோ என்னவோ. விண்டை எனும் சொல்லும் சில அகராதிகளில் காணலாம்.

யோனி என்ற சொல்லை யாவரும் அறிந்திருக்கக் கூடும். எங்களூரில் ‘திண்டுக்கு முண்டாகப்’ பேசுகிறவனைக் குறித்து, “அவனா? அவன் ஞானி மடம்னா, நோனி மடம்பானே!” என்பார்கள், சலிப்பாகவும் இளக்காரமாகவும். அதாவது ஞானி மடம் என்றால் யோனி மடம் என்று சொல்வான் என்பது குறிப்பு. யோனி என்பது திட்டவட்டமான சமற்கிருதச் சொல். பாட்டும் தொகையும் யோனி கையாளவில்லை.

திருக்குறள் கையாளவில்லை. மாணிக்க வாசகர், போற்றித் திரு அகவலில்,

’யானை முதலா எறும்பு ஈறாய்

ஊனம் இல் யோனியின் உள்வினை பிழைத்தும்’

என்று பாடுகிறார்.

யோனி எனும் சொல்லுக்கு ஐந்து பொருள் தருகிறார் பேராசிரியர் அருளி. 1. பெண்குறி 2. விண்டை 3. உருவாகும் இடம் 4.காரணம் 5. நீர்

நம்மொத்த சாமானியர் பெரும்பாலும் யோனி எனும் சொல்லைப் பெண்குறி எனும் பொருளிலேயே பயன்படுத்துகிறோம். சென்னைப் பல்கலைக் கழகத்து Lexicon, யோனி எனும் சொல்லுக்கு ஒன்பான் பொருள் உரைக்கும்.

  1. பெண்குறி 2. Place of birth, source, origin, உற்பத்தி ஸ்தானம் 3.Womb, matrix, கருப்பப் பை 4. காரணம் (சதுரகராதி) 5. Form of Life 6.Pedastal of Lingam, ஆவுடை 7.நாடக உறுப்பு 8. பூரம் நட்சத்திரம் 9. நீர் (இலக்கிய அகராதி)

யோனித் துவாரம் எனும் வட சொல்லின் பொருள் என விண்டைத் துளை மற்றும் பகத் துளை என்கின்றன அகராதிகள். எனவே யோனி, பகம், விண்டை என்பன ஒரு பொருள் குறித்த பல சொற்கள் எனக் கொள்ளலாம். முன்பே கண்டோம், குய்யம் எனும் சொல் பற்றி. பேரகராதி Vagina, Vulva, பெண் குறித்துவாரம் என்னும்.

யோனி லிங்கம் என்பதுவும் வட சொல்லே. குத்தி, கொத்தி, விண்டைய மொட்டு எனப் பொருள் தரப்பட்டுள்ளது. யோனி லிங்கத்தைக் குறிக்க எங்கள் பக்கம் கந்து என்றொரு சொல் பயன்பாட்டில் உண்டு. கந்து நக்கி, கந்து மூஞ்சி என வசைச் சொற்களும் உண்டு. கன்னியாகுமரி மாவட்டத்துப் புகழ் பெற்ற வைணவத் தலம் ஒன்றின் தாசித் தெருப் பெண்டிருக்கு கந்து நீளம் அதிகம் என்று பெரியவர்கள் பேசக் கேட்டிருக்கிரேன். அவர்களுக்கு அது பட்டறிவா அல்லது செவி வழிச் செய்தியா என்பதறியேன். அங்கனம் கந்து நீளமாக வடிக்கப்பட்ட கோயில் தூண் சிற்பங்கள் சில கண்டதுண்டு. யோனி லிங்கத்துக்கான ஆங்கிலச் சொல் Clitoris. அகராதி உரைக்கிறது, Clitoris is a small part of the female sex organ, which get enlarged when sexually aroused என்று. Cunt எனும் சொல் ஆங்கிலக் கொச்சை வழக்கு என்றும், the female sexual organ, அதாவது பெண் குறி என்றும் அகராதிகள் உரைக்கின்றன. கந்து எனும் சொல் cunt ஆகப் பிறப்பெடுத்திருக்கலாம். அல்லது அதன் மறுதலையும் ஆகலாம் என்றெனக்குத் தோன்றியதுண்டு. ஆனால் லெக்ஸிகனில் கந்து எனும் சொல் இல்லை. ஒரு வேளை பேராசிரியப் பெருந்தகையாளர்கள் வரையறைப்படுத்தும் வட்டார வழக்காகவும் இருக்கலாம்.

யோனி லிங்கத்தை, யோனி மணி என்கிறது யாழ் அகராதி. யோனி சங்கரம் என்றொரு வடமொழிச் சொல் காணக் கிடைக்கிறது. வண்ணக் கலப்பு அல்லது வண்ண சாதிக் காப்பு என்று பொருள். அதாவது நான்கு வர்ணங்களின் கலப்பு. வர்ணங்களின் உட்சாதிக் கலப்பு. யோனிக் கலப்பு என்றால் mixed origin or caste என்கிறது அகராதி. அதாவது யோனி சங்கரம் எனில் யோனிக் கலப்பு. ‘என்று நீ, அன்று நான், உன் அடிமை அல்லவா?’ என்பது சைவத் திருமுறைப் பாடல் வரி. அதுபோல் என்று யோனி தோன்றியதோ அன்றே யோனிக் கலப்பும் தோன்றி விட்டது. யோனிக் கலப்பு இன்றி அந்தச் சொல் வந்திருக்காது. இந்தச் சூழலில்தான் நாம், ‘இரு வழியும் தூய வந்த’ என்றும் ’இனக்கலப்பற்ற சுத்த ரத்த வம்சம்’ என்றும், வர்ணமும் சாதியும் ‘இனத் தூய்மை குலத் தூய்மை என்றும், கோத்திரங்கள் என்றும், பாரம்பரியம் என்றும் சாதித்துக் கொண்டிருக்கிறோம். ‘அரிசிப் புழு தின்னாதவனும் இல்லை, அவுசாரி கையில் உண்ணாதவனும் இல்லை’ என்றொரு சொலவம் ஞாபகம் வருகிறது.

யோனி சங்கரன் என்றால் person of mixed caste; offspring of mixed parentage, considered low born எனும் பொருள்கள் தரப்பட்டுள்ளன. ஒரு வேளை Bastard என்ற வசைச் சொல், யோனி சங்கரனின் சுருக்கமான நேர்ப்பொருளாக இருக்கலாம்.

யோனி சிராவம் எனில் வெள்ளை நோய் அல்லது யோனி மேகம் என்றும், யோனி ரோகம் எனில் குய்ய நோய் என்றும் யோனிப் புற்று என்றால் Venereal disease என்றும் பொருள் தரப்பட்டுள்ளது.

யோனிப்படுதல் என்றால் பிறத்தல் என்று பொருள் தரும் யாழ் அகராதி. அதாவது to be born. யோனி வாய் என்றால் யோனி என்றே யாழ் அகராதி பொருள் தருவதால், யோனிவாய்ப்படுதல் எனில் பிறத்தலே ஆகும்.

இந்துக்களின் திருமணத்துக்கு சாதகப் பொருத்தம் பார்க்கிற சோதிடர்கள், பத்துப் பொருத்தங்கள் பற்றிப் பேசுவார்கள். அவற்றுள் ஒன்று யோனிப் பொருத்தம். அஃதாவது பெண் யோனி மற்றும் ஆண் லிங்கத்தின் பொருத்தப்பாடு பற்றிய கணிப்பு. மேலதிகம் விவரம் வேண்டுவோர் சோதிடர்களை அணுகவும்.

பிறப்பு வகைகளில் 84 லட்சம் உண்டெனப் பகர்கிறது பிங்கல நிகண்டு. சம்பந்தர் தேவாரம், ‘உரை சேரும் எண்பத்து நான்கு நூறாயிரம் யோனி பேதம்’ என்கிறது. யோனி பேதம் அளவுக்கு இந்தியத் திரு நாட்டில் சாதி பேதமும் இருக்கும் போலும்.

சரி! அல்குல் என்றால் என்ன? அல்குல் என்றால், 1. Side, பக்கம் 2. Waist, அரை 3. பெண்குறி என்று பொருள் தருகிறது பேரகராதி. நாலாயிரத் திவ்யப் பிரபந்தத்தில், பெருமாள் திருமொழி, ‘பூந்துகில் சேர் அல்குல்’ என்று அரை அல்லது இடுப்பு என்ற பொருளில் பேசுகிறது. சங்க இலக்கிய நூல்கள் பாட்டும் தொகையும், அநேகமாக அனைத்துமே அல்குல் எனும் சொல் கையாள்கின்றன. கட்டுரையின் நீளம் கருதி மேற்கோள்களைத் தவிர்க்கிறேன். என்றாலும் மனது கேட்காமல் ஒரேயொரு பாடல். குறுந்தொகையில் வெள்ளி வீதி பாடியது.

‘கன்றும் உண்ணாது, கலத்திலும் படாது

நல் ஆன் தீம்பால் நிலத்துக் கா அங்கு,

எனக்கும் ஆகாது, என்னைக்கும் உதவாது,

பசலை உணீஇயர் வேண்டும்

திதலை அல்குல் என் மாமைக் கவினே.’

என்பது பாடல். நல்ல பசுவின் பால், ஒன்று கன்று குடிக்க வேண்டும், அல்லால் கறக்கும் கலத்தில் விழ வேண்டும். வீணே மண்ணில் விழுந்து போனால் யாருக்கு என்ன பயன்? அது போல எனது அல்குல் எனக்கும் பயன்படாமல், என் தலைவனுக்கும் உதவாமல் பசலை படர்ந்து வீணாய்ப் போகிறது என்பது பாடலின் பொருள்.

திருமங்கை ஆழ்வார், நாகப்பட்டினம் பிரசுரத்தில், தலைவனது உருவெளிப் பாட்டில் தலைவி தோழியிடம் கூறும் இடத்தில்,

“என்னையும் நோக்கி என் அல்குல் நோக்கி

ஏந்திளம் கொங்கையும் நோக்குகின்றார்” என்று பாடுகிறார்.

பெண்குறியைக் குறிக்க, கூதி, பூழ், பொச்சு, நிதம்பம், அல்குல் எனப் பற்பல சொற்கள் இருந்தாலும், அனைத்துத் தமிழரும் அறிந்த சொல் ஒன்றுண்டு. எல்லோரும் அதனைப் புழங்குவார்கல், ஆனால் எவரும் எழுதுவதில்லை. வாட்ஸ் அப்பில் புண்ணியம் என்று தமிழில் அடிக்க, புண் என்று தட்டச்சு செய்த உடனே அச்சொல் வந்து விழுகிறது புண்டை என்று. அதுவே போல், சுண்டல் என்று தட்டச்சு செய்ய நீங்கள் உத்தேசித்து சுண் அடித்த உடனேயே முந்தி வந்து நிற்கிறது சுண்ணி என்ற சொல். நீங்கள் என்ன செய்து விட இயலும்?

புண்டை எனும் சொல்லையும் பேரகராதி பட்டியல் இடுகிறது. பெரும்பாலும் obscene- ஆபாசம் என்று கருதி, அதைப் பயன்படுத்துவதில்லை. பெண்குறி எனும் சொல் சுட்டுவது புண்டையையே. ஆனாலும் தமிழிலக்கியம் எதுவும் அச்சொல்லைப் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.

பிறப்புறுப்பு, பெண்ணுறுப்பு, பெண்குறி என்றெல்லாம் நாகரிகமாகப் புழங்கப் பெறும் உறுப்பின் இன்னொரு சொல் புண்டை. புண் எனும் சொல்லின் விரிவு புண்டை என்கிறார்கள். ஒரு வேளை, பெண்குறியை ஒரு ஆறாத புண் என சாதாரண மக்கள் கருதி இருக்கலாம். மேலும் மாதவிடாய் நாட்களில் அதிலிருந்து குருதி வெளியேறுவது காரணமாக இருக்கலாம். அல்லாமல் இது ஒரு அதிகப் பிரசங்கித்தனமான ஆய்வாகவும் இருக்கலாம். எவ்வாறாயினும் நம் கவலை அதுவல்ல.

புண்டரம் என்றால் அது நெற்றியில் தரிக்கும் குறி. புண்டரிகம் எனில் தாமரை. அட்ட திக் கயங்களில், தென்கிழக்குத் திசையைத் தாங்கும் யானையின் பெயர் புண்டரிகம். மேலும் புண்டரிகம் எனும் சொல்லுக்கு, புலி, வண்டு எனப் பொருள் உண்டு. புண்டரிகை என்றால் செய்யாள், தாமரையாள், இலக்குமி. புண்டரீகம் எனும் சொல்லால் வெண் தாமரையைக் குறிக்கிறது மலையாளம். புண்டரீகம் எனும் சொல்லுக்கு, தாமரை நீங்கலான பொருள்கள், வெண் கொற்றக் குடை, புற்று, சிம்மாசனம். புண்டரீகாட்சன் எனும் இராமாயணக் கதா பாத்திரத்தின் பெயரைக் கம்பன் தாமரைக் கண்ணன் என்று தமிழ் செய்தார். அவருக்கும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, திருவள்ளுவர், புணர்ச்சி மகிழ்தல் அதிகாரத்துக் குறளில், ‘தாமரைக் கண்ணான் உலகு’ என்கிறார்.

தில்லைச் சிதம்பரத்துக்கு, புண்டரீகபுரம் என்றொரு பெயரும் உண்டு. புண்டாரம் என்றாலும் புண்டரம்தான். அது நெற்றியில் தரிக்கும் மதச் சின்னம். புண்டவம் எனும் சொல்லுக்கு, சாரணை என்று பொருள் தருகிறது பேரகராதி. சரி, சாரணை என்றால் என்ன? அது ஒரு வகைத்தான பூடு. (பூண்டு) அதற்குமேல் எனக்குத் தெரியாது.

புண்ட எனத் தொடங்கும் ஏகப்பட்ட சொற்கள் இருக்கும்போது, அவற்றைப் பயன்படுத்த எந்த மனத்தடையும் இல்லாதபோது, புண்டை எனும் சொல்லை இலட்சக்கணக்கான பேர் அன்றாடம் உரையாடலில் பயன்படுத்தும்போது, அந்தச் சொல்லை எழுத ம்ட்டும் ஏன் இத்தனை காழ்ப்பு, வெறுப்பு, அருவருப்பு, குறைச்சல்? பெண்குறி, பெண்ணுறுப்பு, பிறப்புறுப்பு, மர்ம உறுப்பு, அல்குல், யோனி, நிதம்பம் எல்லாம் பாராளுமன்ற உறுப்பினர்கள், புண்டை மட்டும் ஆதார் அட்டை கூட இல்லாத வெற்றுச் சீவனா? புண்டை பயன்படுத்தப்படும் வகைச் சொல் பட்டியல் ஒன்று தயாரித்தால் சுவாரசியமாக இருக்கும்.

விந்து என்ற சொல் மீது அத்தனை தயக்கம் இன்று இல்லை. விந்து வங்கிகள் வந்து விட்டன. விந்தணுக்கள் பற்றி பேசப்படுகின்றன. விந்தணு பரிசோதனை எனும் சொல் புழக்கத்தில் இருக்கிறது. எங்களூரில் ‘விந்து விட்டவன் நொந்து சாவான்’ என்றொரு பழமொழி இன்னும் வாழ்ந்திருக்கிறது. விட்டவன் என்றால் பாழாகப் பயன்படுத்தியவன் என்று பொருள். விந்துக்கு மாறாக தமிழ்ச் சமூகம் பயன்படுத்தும் சொற்கள் தண்ணி, கஞ்சி என்பன. Semen, Sperm என்பன ஆங்கிலச் சொற்கள். விந்து எனச் சொல்லக் கூசி இந்திரியம் என்று சொல்லும் மேன்மக்கள் உண்டு. இந்திரியம் என்றால் முதற்பொருள் பொறி. Organ of Sense. பஞ்சேந்திரியம் எனில் ஐம்பொறி. இரண்டாவது பொருள் Semen.

இந்திரியத்துக்கு சுக்கிலம் என்று பொருள் தருகிறது பிங்கல நிகண்டு.

மருத்துவ நூல்கள் விந்தைக் குறிக்க, சுக்கிலம் என்ற சொல் பயன்படுத்துகின்றன. சுக்கில கலிதம் என்றால் அது சுக்ல ஸ்கலிதம், இந்திரிய ஸ்கலிதம். தமிழில் விந்தொழுக்கு என்கிறோம். விந்து எனும் சொல்லுக்கு, 14 பொருள் சேகரித்துள்ளது பேரகராதி.

  1. Dot, Print, புள்ளி (உரிச் சொல் நிகண்டு)
  2. Drop, Globule, துளி
  3. Drop of water, as a liquid measure. நீர்த்துளி அளவு (இலக்கிய அகராதி)
  4. Semen, Sperm, சுக்கிலம் (நாம தீப நிகண்டு)
  5. Mercury, பாதரசம் (நாம தீப நிகண்டு)
  6. A flaw in diamond, வயிரக் குற்றங்களில் ஒன்று
  7. Mark; குறி (யாழ் அகராதி)
  8. Tilka; நெற்றிப் பொட்டு (யாழ் அகராதி)
  9. Sharp edge of grain of paddy; நெல் மூக்கு
  10. The middle portion of the fore head between the eye brows
  11. Circle; வட்டம் (நம தீப நிகண்டு)
  12. Sphere of Knowledge presided over by Siva’s Gnana Shakthi; சிவ தத்துவம்
  13. Pure Maaya. சுத்த மாயை
  14. A mystic centre in the body. சோடச கலைகளில் ஒன்று.

எனினும் உலகெங்கும் வாழும் பன்னிரண்டு கோடித் தமிழருக்கும் இன்று விந்து என்றால் சுக்கிலம், இந்திரியம், Semen, Sperm என்ற பொருள் தெளிவு. அரசியல் கட்சித் தலைவர்களுக்குச் சொந்தமான பத்துப் பன்னிரண்டு தமிழ் தொலைக் காட்சி சானல்களில், இரவு பத்து மணிக்கு மேல் நடக்கும் உடல் நலம் சார்ந்த நிகழ்ச்சிகளில், தினந்தோறும், பல முறை நீங்கள் ‘விந்து முந்துதல்’ என்றொரு சொற்றொடர் செவியுறலாம். அது என்ன என்று அறியாதவர், அறிய முனைபவர், அந்தந்த தொலைக் காட்சி சானல்களில் தரப்படும் தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும். எதற்கும் அஞ்ச வேண்டாம் அந்த சானல்களில் உரிமையாளர்கள் இரண்டு கூட்டணிகளிலும் தலைவர்கள். எனக்குத் தோன்றும், குறைந்தது ஒரு கோடி தமிழ் ஆடவருக்கு விந்து முந்தும் குறைபாடு இருக்கும் போலும் என்று.

சொப்பன ஸ்கலிதம் என்றொரு சொற்றொடரும் அறிந்திருக்கலாம். வாலிப-வயோதிக அன்பர்களுக்கு, இரவு உறக்கத்தின் போது, குறி விறைத்து, சுயபோகமின்றி, கனவுகளின் காரணமாக, விந்து வெளியேறும். இது ஒரு நோயோ, குறைபாடோ அல்ல. ஆனால் விந்து முந்துதல், குறியின் நீளம் விரும்பும் அளவுக்கு இல்லாதிருத்தல், உறக்கத்தில் விந்து வெளியேறுதலுக்கான வைத்தியம், நிவாரணம் பற்றிய சுவரொட்டிகள் அனைத்து ஆண்கள் மூத்திரப் புரைகளிலும்- நகராட்சி, மாநகராட்சி என்ற வேறுபாடின்றி- கண்டு, வாசித்து இன்புறலாம். இந்த வேலையைத் தானே சமூக நீதி, பெண் விடுதலை, கடவுள் மறுப்பு, சமத்துவம், பொதுவுடைமை, தமிழர் விடுதலை, பாரதப் பெருமை, இந்திய தேசியம் பேசும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் தொலைக் காட்சி சானல்களும் இரவு பத்து மணிக்கு மேல் செய்கின்றன என்றால் அதற்கு நாமென்ன செய்ய இயலும் சகாக்களே!

வாலிபர்களுக்கு மாதம் ஓரிரு முறை உறக்கத்தில் விந்து – சுக்கிலம்- இந்திரியம்- Sperm -Semen வெளியேறினால் அஃதோர் அபாயகரமான சம்பவம் இல்லை. நிவர்த்திக்காக, ஒரு மாத்திரை எழுநூற்றி இருபது ரூபாய் வீதம், தினத்துக்கு இரண்டு என, மண்டலம் சாப்பிடப் புகாதீர்கள். சொப்பன ஸ்கலித நிவாரணம், விந்து முந்துதல், ஆண்மை வீரியப் பெருக்கம் என்று மருந்து சாப்பிட்டு இரண்டு சிறு நீரகங்களையும் இழக்க நேரலாம். என் ஆருயிர் நண்பன் ஒருவரை சாகக் கொடுத்தவன் நான். சொப்பன ஸ்கலிதத்தின் பொருள் உடலும் மனமும் புணர்ச்சியை நாடுகிறது என்பதே.

விந்து தொடர்பான சில சொற்கள் உண்டு அகராதியில். சொப்பனக் கலிதத்துக்கான மாற்றுச் சொற்கள் சிலவுண்டு. விந்துசலை, விந்துடைவு, விந்து நஷ்டம், விந்து ஸ்கலிதம், இந்திரிய நெகிழ்ச்சி, சுக்கில சேதம் என்பன அவை. காமத்தீயைக் குறிக்க விந்துத் தீ என்றொரு சொல் தருகிறது சூடாமணி நிகண்டு. ஆண்மை வீரியத்தைக் குறிக்க விந்து நாதம் என்றொரு சொல் தருகிறது நாம தீப நிகண்டு. விந்து நீர் என்றாலும் அதுவே பொருள். விந்து அனல் என்றால் விந்துத் தீ என்கிறது திவாகர நிகண்டு. ’வித்து பலம், பத்து பலம்’ என்றொரு பழஞ்சொல்லுண்டு மலையாளத்தில். வித்து என்றால் இங்கு விந்து. திரைப்படங்களின் காமக் காட்சிகள் மூலம், அச்சு ஊடகங்கலின் காமச் செய்திகள் மற்றும் படங்கள் மூலம், இனைய தளங்களின் காமக் கதைகள் மூலம் இந்திய தேசத்து ஆடவர் தினமும் பெருக்கி வீணாக்கும் விந்து பற்றி எந்த சமூக நீதிக் காவலருக்கும், இனமானத் தலைவருக்கும், ஆன்மீக அறம் காப்போருக்கும், அரசியல் மீகாமன்களுக்கும் தகவலுண்டா, அக்கறை உண்டா, செயல் திட்டங்கள் உண்டா, தேர்தல் அறிக்கைகளில் குறிப்பிட்டதுண்டா? இரவு பத்து மனியளவில் அவர்களின் சானல்களை அவர்கள் குடும்பத்துடன் இருந்து, குதூகலித்துக் காண்பார்களா? பேரன் பேத்திகளுக்கு விளக்குவார்களா? வழி காட்டுவார்களா? நாட்டு மக்கள் கல்வியை, மருத்துவத்தை, கல்லூரிகள் நடத்தி மேம்படுத்துவதைப் போல், தமது சொந்தத் தொலைக்காட்சிகளின் மூலம் விந்தையும் வீரியத்தையும், குறி நீளத்தையும் மேம்படுத்த முனைகிறார் போலும்!

பெண்களுக்கான தனித்துவமான இயற்கை அமைப்பு மாதவிடாய் எனப்படும். அதனைக் குறிக்க சூதகம் என்றொரு சொல்லுண்டு. மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையைக் கொளுத்த வந்த சமூகநீதிப் போராளியும், சிந்தனையாளர் என்று சொல்லப்படுபவருமான ஒருவர், மாதவிடாய் ஏற்படுத்தும், குழந்தைப் பேற்றைத் தரும் கருப்பைகளை அறுத்து வீசச் சொன்னார். அஃதோர் மானுட தத்துவ தரிசனம் என்று மெய்ம்மறந்து கைதட்டுவோர் உண்டு. கருப்பையை அறுத்து எறிந்த பிறகு, விந்து முந்தினால் என்ன, பிந்தினால் என்ன, ஊற்றே வற்றிப் போனால்தான் என்ன?

சூதகம் எனும் சொல், சூதக எனும் சம்ஸ்கிருதச் சொல்லின் பிறப்பு என்றும், மாதவிடாய் விலக்கம் என்றும் பொருள் தருகிறது அறச் சொல் அகராதி. சூதகம் எனும் தமிழ்ச் சொல்லின் வேறு பொருள்கள் மாமரம், சிறு கிணறு, முலைக்கண். முலைக் கண் எனும் சொல்லுக்கு சங்கம், இல்லி எனும் சொல்லைப் பயன்படுத்துகிறது. ‘இல்லி தூர்ந்த பொல்லா வறு முலை’ என்பது புறநானூற்றுப் பாடல் வரி.

சூதகக் கட்டு என்றால் விடாய்க் கட்டு. சூதக சன்னி எனில் விடாய்க் கால குருதிப் பெருக்கினால் வரும் சன்னி. சூதகப் பெருக்கு என்றால் விடாய்ப் பெருக்கு. சூதிகை என்றால் ஈனில், அதாவது பேற்று முறி, அதாவது பிரசவ அறை. சூதிகை என்றால் மகவு ஈன்றவள், பிள்ளை பெற்றவள், பிள்ளைத் தாய்ச்சி என்று பொருள்.

இந்தியில் சூத் என்றால் பெண் குறி. சூத்தியா என்றால் பெண் குறி குறித்த வசவு. மாதர் சூத் கேள்விப்பட்டிருப்பீர்கள். தமிழிலும் அதற்கு இணையான சொல்லுண்டு. பெஹன் சூத் என்றாலும் அவ்வாறே! சூதகா- சூதகம் என்ற சொற்களின் பிறப்பா சூத் என்பதை மொழி அறிஞரிடம் கேளுங்கள். பெரும்பாலும் அவர்கள் சூத் எனும் சொல்லைக் கேள்விப்பட்டிராதது போல பாவனை புரிவார்கள்.

சூதகத்துக்கு துக்கை என்றும் மாற்றுச் சொல். துக்கை என்றால் Menstruation என்று பொருள் தருகின்றன அகராதிகல். துக்கைச்சி என்றால் சூதகமானவள், A woman in her periods என்று பொருள். வழக்கு மொழியில் விலக்கம், தீட்டு, தீண்டல், தொடப்பிடாது, சுத்தமில்லை என்று குறிப்பார்கள் பெண்டிர். நவ யுவதிகளுக்கான சொல் பீரியட்ஸ். குளிக்காமல், தலைவாராமல், அழுக்கடைந்து இருப்பவரைக் கண்டால், “ஏம்டி, துக்கை மாதிரி இருக்கே?” என்பார்கள் ஊரில். அந்தத் துக்கைதான் இந்தத் துக்கையா என்பதறியேன்!

சாண்டு என்றொரு சொல்லும் கேள்விப்பட்டிருக்கலாம். சாண்டு என்றால் பூப்பு நீர். Menstrual Discharge என்கின்றன அகராதிகள். தெலுங்கு சாடு என்றும், மலையாளம் சாண்டு என்றும் பயன்படுத்தும். ‘என் சாண்டைக் குடிச்சவனே!’ எனும் வசை வழக்கில் உண்டு. எங்கள் பக்கம் தூமை என்றொரு சொல் பயன்படுத்துவதுண்டு பண்டு. எனது பத்துப் பன்னிரண்டு வயதுப் பிராயத்தில், ஆக்ரோஷமாகப் பெண்கள் ஆண்களிடம் சண்டை போடும்போது, பெண்கள் கையில் எடுக்கும் கடைசி ஆயுதம், “என் தூமையைக் குடி லே!” என்ற வசனம். தமிழ் சினிமா, வடிவேலு எனும் நடிகர் மூலம், ’தூமையைக் குடிக்கி’ என்ற வசை பயன்படுத்தியுள்ளது. தணிக்கைக் குழுவினருக்கு, அச் சொல்லின் பொருள் புரிந்திருக்காது. அல்லது காசு கைமாறி இருக்கும்.

உண்மையில் தூமை எனில் மகளிர் சூதகம் என்கின்றன அகராதிகள். தூய் தன்மையே தூமை ஆயிற்று என்கிறார்கள். திருப்புகழ், தூமையர் என்ற சொல் ஆள்கிறது. திருவண்ணாமலையில் பிறந்த திருப்புகழ் பாடிய அருணகிரிநாதர், தாயுமானவருக்கும் மூத்தவர். காலம் உத்தேசமாக, கி.பி.1400 என்பர். அருணகிரிநாதர் சொல்லும் தூமையர்களின் பொருள் தூய்மையற்றவர்கள் என்பதாகும். அவர் கூறும் பொருளில், நம் தலைவர்கள் பலரும் தூமையர்களே! தூமையைக் குடிப்பவர்கள் என்று நீங்கள் சொன்னால் எமக்கதில் எதிர்ப்பு இல்லை.

மாதவிடாய்க் காலத்தில் பெண் உறுப்பைச் சுற்றி அணியும் துணியை தூமைச் சீலை அல்லது தூமைத் துணி என்றனர். அதையே ஒரு வசையாகவும் பயன்படுத்தினார்கள், “எந் தூமைத் துணியை மனத்தீட்டுத் திரியான்” என்று. தூமைத் துணிக்கான நவீன, சுகாதாரமான மாற்று ஏற்பாடே Sanitary Napkin.

தூய்மை எனில் பரிசுத்தம், மெய்மை, முக்தி, தன்மை, தூயம். நவீன சிறுகதையாளரில் ஒருவரான, ‘இருமுனை’ எனும் தொகுப்பு வெளியிட்ட தம்பியின் புனை பெயர், தூயன். தூய தன்மை என்பது தூய்து+அன்மை. பரிசுத்தமின்மை. இன்று பரிசுத்தம் பற்றிப் பாங்காக உரையாற்றும் பலரும் பரிசுத்தம் இல்லாதவர்களே! தூய்து என்றால் சுத்தமானது. தூயநெறி என்றால் நன்னெறி. தூமை எனில் தீட்டு. ஆச்சரியமாக, யாழ் அகராதி, தூமை எனும் சொல்லுக்கு, தூய்மை, வெண்மை என்றும் பொருள் தருகிறது. ஆக, என்ன கணக்கில் நாம் தூமை எனும் சொல்லை எடுத்து மொழியில் இருந்து புறத்தே தள்ளுவது?

இன்றும் சில குடிகளில், மாதவிடாய்க் காலத்து மூன்று நாட்களும் தீட்டு என்று கூறி, மகளிரை வீட்டின் மூலையில் ஒதுங்கச் செய்யும் பழக்கம் இருக்கிறது. தனித் தட்டு, தனித் தம்ளர், தனி ஆடை, தனிப் பாய், தனி மூலை என்ற ஒதுக்கல் இருக்கிறது. தீட்டென்று கூறி பெண்ணே பெண்ணை ஒதுக்கி வைக்கும் அவலம். ஆனால் மாதவிலக்கு நாட்களில் இருந்த பாஞ்சாலியை கௌரவர் சபைக்கு இழுத்துப் போய், துகில் உரிய நிறுத்தும் போது, அவள் சூதக நாட்களில் இருந்தாள். பாஞ்சாலி சபதத்தில், பாரதி பாடினார், ”அச்சா, கேள். மாத விலக்கு ஆதலால் ஓர் ஆடை தன்னில் இருக்கிறேன்” என்று. என்ன கொடுமை பாருங்கள்!

தீட்டு எனும் சொல்லுக்கு மாற்றாக, வாலாமை என்றொரு சொல்லைப் பயன்படுத்துகின்றன சங்க இலக்கியங்கள். அண்மையில் குழந்தை பெற்று, தீட்டாக இருக்கும் தன்மையைச் சொல்ல, புனிறு என்ற சொல்லையும் சங்கம் ஆள்கிறது. புதியதாகக் கன்று ஈன்ற பசுவினை, புனிற்றா எனும் சொல்லால் குறிப்பார் மாணிக்க வாசகர். ப்னிறு+ஆ=புன்ற்றா. ஆ எனில் பசு. எனவே தீட்டு என்ற சொல்லுடன் வாலாமை, புனிறு போன்ற சொற்களையும் தாம் சேர்த்துப் பார்க்க வேண்டும்.

அறுபது ஆண்டுகளுக்கு முன்பு, தீவிரமாக வார இதழ்கள் வாசிக்கத் தலைப்பட போது, தொடர்கதைகளில், கதைகளில் முலை எனும் சொல்லைக் காண இயலாது. குத்தீட்டி போன்ற மார்பகங்கள், தென்னை இளநீர் போன்ற மார்பகங்கள் என்று எழுதுவார்கள். ஆனால் முலை என்று எழுதினால், ஆசிரியர் முலையை வெட்டி விடுவார். சமகாலத்தில்தான் முலை எனும் சொல் தடையின்றிப் பயன்படுத்துவது சாத்தியமாயிற்று. ஆனால் காற்றும் புகாத, ஈர்க்கும் இடை புக முடியாத, வாரிய  தென்னை வரு குரும்பை வாய்த்தனபோல், படம் மட்டும் போடுவார்கள். மார்பகம், நெஞ்சு, முன்மேடு என்றெல்லாம் எழுதினார்கள். கொங்கை- No. முலை- No, No.

சங்க இலக்கியமும், திருக்குறளும், ஆண்டாளும் பயன்படுத்திய சொல். திடீரெனக் கெட்ட வார்த்தை ஆகிப் போயிற்று. எமக்குக் கல்லூரியில் தமிழ் கற்றுத் தந்த பேராசிரியர், பாடலில் முலை என்று வந்தால், கலை என்று வாசிப்பார். இளங்கோவடிகள் என்ன செய்ய இயலும்? நல்ல காலமாக, இன்று தமிழனுக்கு முலை எனும் சொல்மேல் பகை இல்லாமல் ஆயிற்று.

முலையும், கொங்கையும் தான் நெருடலே அன்றி ஸ்தனம் என்ற சொல்லுக்கு எதிர்ப்பில்லை. அயற்சொல் அகராதி, தனம் எனும் சொல், தனா- dhana- எனும் சமற்கிருதச் சொல்லின் பிறப்பு என்றும், செல்வம், பொன், முத்திரை, உத்திரம், கூட்டல் கணக்கு என்பன பொருள் எனவும் கூறுகிரது. ஆனால் தனம்- Stana எனும் சமற்கிருதச் சொல்லின் பொருள் முலை என்கிறது. சமீபகாலம் வரை ஸ்தனம் அல்லது தனம் எனும் சொல் கதை, சிறுகதைகளில் தாராளமாகப் புழங்கி வந்திருக்கிறது.

கொங்கை என்பது மிகப் பழமையானதோர் தமிழ்ச் சொல். கொங்கை எனும் சொல்லுக்குப் பேரகராதி தரும் முதற் பொருள் woman’s breast. முலை. இரண்டாவது பொருள் Protuberances or knobs of a tree. மரத்தின் முடுகு. மலையாளம் முலை என்றும், கொங்கா என்றும் பயன்படுத்துகிரது. ‘தலையும் முலையுமாப் பொண்ணு வேணும் ‘ என்பார்கள் மலையாளிகள். நீண்ட தலை முடியும், எடுப்பான முலைகளுமாகப் பெண் வேண்டும், திருமணம் செய்ய என்பது பொருள்.  பல மலையாள சினிமாக்களில், ‘முலை கொடுத்தோ?’ என்றும் ‘குட்டி முலை குடிச்சோ?’ என்றும், ‘முலை குடி இன்னும் மாறீட்டில்லா!’ என்றும் கேட்கிறோம். புகழ் பெற்ற குணச் சித்திர நடிகர், அப்பா வேடத்தில் இருந்து கொண்டு, பணிப் பெண்ணைப் பார்த்து, ‘நின்ற கொங்கா’ என்று காமத்துடன் பாடுவார்.

அத்தனைக்குப் போவானேன்? மாணிக்க வாசகர், எட்டாம் திருமுறையின் பகுதியான, திருவண்ணாமலையில் பாடிய திருவெம்பாவையில்,

எம் கொங்கை நின் அன்பர் அல்லார் தோள் சேரற்க!

எம் கை உனக்கல்லாது எப்பணியும் செய்யற்க!

கங்குல் பகல் எம் கண் மற்றொன்றும் காணற்க!

என்று பாடுகிறார். இலக்கணக் குறிப்பு, பாவினம், வெண் தளையால் வந்த இயல் தரவிணைக் கொச்சகக் கலிப்பா. அப்படி என்றால் என்ன என்று ஒன்றேகால் லட்சம் ரூபாய் மாதச் சம்பளம் வாங்கும் அரசுத் தமிழாசிரியரிடம் கேளுங்கள்.

சிலப்பதிகாரத்தில், புகார்க் காண்டத்தில், அந்தி மாலைச் சிறப்புச் செய் காதையில், இளங்கோவடிகள், கண்ணகியின் தனித்துயர் பாடுகிறார். செய்யுளின் சிறப்பை அனுபவிக்க எனச் சில அடிகளைத் தருகிறேன்.

“அஞ்செஞ் சீறடி அணி சிலம்பொழிய

மென்துகில் அல்குல் மேகலை நீங்கக்

கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்

மங்கல அணியில் பிறிதணி மகிழாள்

கொடுங்குழை துறந்து வடிந்து வீழ் காதினள்

திங்கள் வாள்முகம் சிறுவியர் பிரியச்

செங்கயல் நெடுங்கண் அஞ்சனம் மறப்பப்

பவள வாள் நுதல் திலகம் இழப்பத்

தவள வாள் நகை கோவலன் இழப்ப

மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக்

கையறு நெஞ்சத்துக் கண்ணகி”

என்று. பிரிவுத் துயர் காரணமாகக் கண்ணகி தன்னை ஒப்பனை செய்து கொள்ள மாட்டாள் என்பதுவே செய்தி. ’கொங்கை முன்றில் குங்குமம் எழுதாள்’ என்றால் முலை முகடுகளில் சந்தன- குங்குமக் குழம்புகளைப் பூசிக் கொள்ள மாட்டாள் என்பது பொருள்.

திருப்பாவையில் ஆண்டாள்,

‘கொள்ளும் பயன் ஒன்றில்லாத

            கொங்கை தன்னைக் கிழங்கோடும்

அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பில்

            எறிந்து என் அழலைத் தீர்வேனே!’

என்கிறார். இளங்கோவும், மாணிக்க வாசகரும் ஆண்டாளும் பேசிய கொங்கை நமக்குக் கெட்ட வார்த்தை ஆயிற்று.

முலை என்ற சொல்லையும் பேரகராதி பதிவிடுகிறது. பொருள் woman’s breast, ஸ்தனம். பெண் பிராணிகளின் பாலுண்டாகும் இடமும் முலைதான். சங்க இலக்கியத்தில், மிகவும் இளம் வயதினளாகிய தனது வளர்ப்பு மகள் காதல் வயப்பட்டதை நினைத்து செவிலித்தாய், ‘முலை முற்றும் போந்திலவே!’ என்று வருந்துகிறாள். பொருள், முலை கூட இன்னும் முழுதாக உருவாகவில்லையே என்பது.

ஆண்டாள் திருப்பாவையில், பசு மடியினை முலை என்றே பாடுகிறாள், மூன்றாம் பாடலில்.

‘தேங்காதே புக்கிருந்து, சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்’

என்பாள். புகுந்து புறப்பட்டால் முலை பற்றித் தனிக் கட்டுரை எழுதலாம். முலைக் கச்சு, முலைக் கட்டு எனும் சொற்கள் உண்டு பேரகராதியில். பொருள் இன்றைய bra. முலைக்கட்டி என்றால் முலையில் உண்டாகும் கட்டி. குழந்தை உறிஞ்சிக் குடிக்காமல் பால் கட்டுவதையும் முலைக் கட்டு என்றோம். முலைக் கண் என்றாலும் முலைக் காம்பு என்றாலும் Nipple. ஈழத்துக் கவிஞர் வ.ஐ.செயபாலன், அபினி மலர் மொட்டுப் போன்ற முலைக் காம்பு என்பார். முலைக் கண் என்றாலும் முலைதான். சீவக சிந்தாமணியின் இலக்கணையார் இலம்பகப் பாடல் வரி, ‘தவிர் வெய்ய காமம் தாங்கித் தட முலைக் கால்கள் சாய’ என்கிறது. முலை கொடுத்தல் என்றால் பாலூட்டுதல், முலைத்தாய் எனில் Wet Nurse. ஐவகைத் தாயரில் ஒருத்தி. முலைப்பால் எனில் தாய்ப்பால். முலைப்பால் கூலி என்று மணப்பெண்ணின் தாய்க்கு மணமகன் கொடுக்கும் பரிசப்பணம் வழங்கப் பெற்றிருக்கிறது. முலை மறத்தல் எனில் பால்குடி மறத்தல். முலை மறுத்தல் எனில் பால்குடி மறுத்தல். முலை முகம் என்றால் முலைக் காம்பு. முலையமுது என்றால் முலைப் பால், முலை விலை என்றால், முலைப்பால் கொடுத்ததற்கான கூலி.

இத்தனை உண்டு, இதற்கு மேலும் உண்டு. என்றாலும் தமிழில் முலை என்ற சொல், தமிழனை sexually provoke செய்கிறது! குட்டி ரேவதியின் கவிதைத் தொகுப்பு ஒன்றின் தலைப்பு ‘முலைகள்’. அது இங்கு ஏற்படுத்திய ஆரவாரம் அறிவோம்.

சும்பனம் என்றால் தெரியுமா? முத்தமிடுதல் என்பது முதற்பொருள். சும்பன எனும் சம்ஸ்கிருதச் சொல்லின் பிறப்பு சும்பனம். ‘ஞான் அவளைச் சும்பிச்சு’ என்று மலையாளி பேசினால் அதன் பொருள், ‘நான் அவளை முத்தமிட்டேன்’ என்பது. முத்தமிடுதல் என்பதொன்றும் பாவ காரியம் இல்லை. எங்கேயும் முத்தமிடலாம், அவரவர் விருப்பம், முத்தமிடப்படுபவர் சம்மதம் சார்ந்து. சும்பத்தனம் என்றால் மூடத்தனம் என்றும், சும்பன் என்றால் மூடன் என்றும் அயற்சொல் அகராதி பொருள் தருகிறது.

சும்பித கரணம் என்றாலும், சும்பிதம் என்றாலும், பொருள் சும்பனம்தான். சும்பனம் என்னும் சொல்லின் இரண்டாவது பொருளாக, அயற்சொல் அகராதி, சப்புதல் என்று பொருள் தருகிறது. சப்புதல் என்றால் எதைச் சப்புதல்? எதையானாலும். குழந்தைகள் விரல் சப்புதலும் உட்பட. ஆனால் சும்பனம் எனும் சொல்லுக்கு, ஆண்குறி சுவைத்தல் அல்லது பெண்குறி சுவைத்தல் என்று பொருள் கொள்ளப்படுகிறது. ‘சும்பப் பயல்’ என்று வைதால் மடப்பயல் என்றும் பொருள், குறி சூப்புபவன் என்றும் பொருள். அது ஆணாக இருக்கலாம், பெண்ணாக இருக்கலாம்.

பேரகராதியில் சும்பனம் எனும் சொல்லின் மாற்றான தமிழ்ச் சொல்லாக ஊம்புதல் என்ற சொல் பதிவில் உண்டு. To suck, சப்புதல் என்று பொருள் தருகிறார்கள். ஊம்புதல் என்றால் குறி சூப்புதல் என்று மட்டும் பொருள் இல்லை. மலையாளம், கை சூப்புதல் என்பதைக் ‘கை ஊம்புதல்’ என்கிறது. பொதுவாக ஊம்பு என்றால் நக்கு, உறிஞ்சு, மூஞ்சு என்ற பொருளில் மலையாளம் வழங்குகிறது. ஐஸ் ஃப்ரூட் மூஞ்சுவதை மலையாளிகள், ‘நல்ல ஊம்பு டா!’ என்கிறார்கள். அவர்களிடம் அது ஆபாசம், கொச்சை, அருவருப்பு இல்லை அதற்காக. மூஞ்சுதல் என்பதற்கான இன்னொரு சொல் ஊம்புதல் அவ்வளவே! நமக்கும் அதுவே பொருள். ஆனால் நாம் ஆண்குறி, பெண்குறியோடு மட்டுமே தொடர்பு படுத்தி, அந்தச் சொல்லை பகைப்படுத்தி வைத்திருக்கிறோம்.

இத்தனையும் நீளப் பேசிவிட்டு, கலவி பேசாமல் களம் நீங்கக் கருத்து இல்லை. காமம் என்ற சொல்லே இன்று தரம் தாழ்ந்த உணர்ச்சி எனப் பார்க்கப்படுகிறது. காமம் என்ற சொல்லை, பண்டைய புலவர்கள், விருப்பு, இருபாலர் விருப்பு, காதல், அன்பு என்ற பொருள்களில் ஆண்டனர். காமத்தை இடது கையால் விலக்கி விட்டு, அந்த இடத்தில் இன்று காதல் என்ற சொல் ஆள்கிறது. காதல் எனும் சொல்லும் அன்று, பேரன்பு எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. ‘காமம் செப்பாது கண்டது மொழிமோ?’ என்ற குறுந்தொகைப் பாடல் வரியின் பொருள், ‘சொந்த விருப்பத்தை உரைக்காமல், நீ கண்டதைச் சொல்வாயா?’ என்பது. ‘தீராக் காதலன் ஆகும்!’ என்று இராமன் குகனைக் குறித்துச் சொல்லும் வரியின் பொருள், ‘மாறாத அன்புடையவன் ஆகும்’ என்பதே. ‘காதலாகிக் கசிந்து கண்ணீர் மல்கி’ என்று இறைவன்பால் வைத்த அன்பு பற்றி சைவத் திருமறை பேசும். ‘மலரினும் மெல்லியது காமம்’ என்று வள்ளுவப் பேராசான் குறிப்பது ஆண்-பெண் பாலியல் உறவையே! அன்று புழங்கிய காமம், காதல் முதலாய சொற்களின் அர்த்தம் ஆழமானது.

இன்று, “டீ சாப்பிடலாமா?” என்று பேசும் விதத்தில் “I love you” பேசப்படுகிறது. சினிமாவின், ஊடகங்களின் Love எனும் சொல்லின் விலை, இரண்டு பரோட்டோ- சால்னாவின் விலைதான். உடல் இச்சை, உடல் வேட்கை, துய்த்தல் நாட்டம், lust ஆகிய உணர்ச்சிகளே இன்று காதல் எனும் பெயரால் அழைக்கப்படுகின்றன. எட்டாண்டுகள் காதலித்தவர், திருமணம் செய்த மூன்று மாதங்களில் எப்படி விவாக ரத்து கோருகிறார்கள்? காதல் மனைவி வீட்டில் காத்திருக்கும்போது, காமக் கிழத்தியை நாடுவதேன்? விரிவாக, தனியாகப் பேச வேண்டிய விடயம் இது!  

மன்மதன் எனும் சொல்லையும் குணச்சித்திரத்தையும் அறிவீர்கள். மன்மதனின் மாற்றுப் பெயர்களே காமன், மாரவேள், ஐங்கணையோன் என்பன, மன்மதம் எனும் சமற்கிருதச் சொல்லின் பொருள் காமம். மன்மத வேதனை என்றால் காமத் துயர், காமத் துன்பம், விரக தாபம். காம நோய். பெண் குறியைக் குறிக்க மன்மதன் கிரகம் என்றொரு சொல்லை வடமொழி பயன்படுத்துகிறது. மன்மத பீடம் என்றும் சொல்கிறோம்.

காமச் செயல்பாடான, ஆண்-பெண் உறவைக் குறிக்க, இன்று தமிழ் கூறு நல்லுலகு உடலுறவு எனும் சொல்லை நாகரீகமாகப் பயன்படுத்தும். அதில் கூச்சம், மன மயக்கம், குற்ற உணர்வு இல்லை எவர்க்கும் அல்லது ஆங்கிலத்தில் intercourse அல்லது copulation என்று சொல்லி விட்டுப் போய் விடலாம். தமிழில் ஐயாயிரம் ஆண்டுகட்கு முன்பிருந்தே புணர்ச்சி, கலவி எனும் சொற்கள் உண்டு.

சொன்னால் நீங்கள் நம்ப வேண்டும். உடலுறவு என்ற சொல் சென்னைப் பல்கலைக் கழகத்தின் lxicon- ல் இல்லை. எனவே 1924-க்குப் பிறகு கோர்க்கப்பட்ட சொல்லாக அது இருக்கலாம். அதையும் எவரேனும் தமிழினத் தலைவர் கண்டு பிடித்துத் தமிழுக்குக் கொடையளித்திருக்கலாம். அவர்கள் உடலுடன் மட்டுமே உறவு கொண்டார்களா என்றெனக்குத் தெரியாது. செக்ஸ் வைத்துக் கோள்வதே உடலுறவு என்று கொள்ளப்படுகிறது இன்று. வல்லுறவு அல்லது வன்புணர்ச்சி என்ற சொல்லுக்கு மாறாக கற்பழிப்பு என்றொரு சொல்லை எழுபதாண்ட்களுக்கு முன்பு செல்வாக்குள்ள மக்கள் நாளிதழ் ஒன்று பயன்படுத்தி பயன்படுத்தி மகிழ்வெய்தியது.

கற்பு என்பது என்ன என்று, ‘கற்பெனப் படுவது’ எனும் தலைப்பில் முழு நீளக் கட்டுரை உண்டு. வெளியாகிப் பத்தாண்டுகள் இருக்கும். ‘கற்பெனப்படுவது சொல் திறம்பாமை’ என்று ஔவை சொன்ன பிறகும், இரண்டாவது ஆணை, எக்காரணம் பற்றியேனும், எச்சந்தர்ப்பமானாலும், முறையாகவோ, முறையின்றியோ- பெண் புணர்ந்தால், அவள் கற்பிழந்தவள் என்று சாதிப்பது என்ன நீதி? நூற்றுக்குத் தொண்ணூறு ஆணும் கற்பை அழித்தவன் தானே! அவனும் கற்பு இழந்தவன் தானே! பாரதியார் கேட்பதுதானே நியாயம், கற்பு நெறி எனச் சொல் வந்தால், அதை இருபாலருக்கும் பொதுவில் வைக்க வேண்டாமா என்று?

உடலுறவு என்று இன்று யோக்கியமாகப் பன்னிரண்டு கோடித் தமிழரும் பயன்படுத்தும் சொல்லை, தமிழின் ஆழ்மன உலகம், மேட்டர் போடுவது, டொக்கு வைப்பது, வெச்சு செய்வது, கம்பு முறிப்பது, சாத்துவது, போடுவது என்று புழங்குகிறது. இரண்டு உடல்கள் கலப்பது மட்டுமல்ல ஆண்-பெண் உறவு. இருமனமும், ஈருடலும் கலப்பதுவே புணர்ச்சி அல்லது கலவி. எத்தனை அற்புதமான சொற்கள்? அதனை உடலுறவு என்று தட்டையானதோர் சொல்லில் அடக்க இயலாது. புணர்ச்சி அல்லது கலவி அல்லது முயக்கம் என்பதோர் ஆண் பெண் உறவின் ஆன்ம நிலை. பேரின்பம் என்று இறை அனுபவத்தைக் குறிக்கும்போது, சிற்றின்பம் என்று கலவியை மட்டும்தானே குறிக்கிறோம்! நல்ல உண்டி, நல்ல குளியல், நல்ல இசை மற்றும் கலை அனுபவங்கள், நல்ல உடை அணிவது ஏன் சிற்றின்பமாகவில்லை?

ஒருவேளை காசுக்காக, பதவிக்காக, பரிசுப் பொருட்களுக்காக, பதவி உயர்வுக்காக, மற்றும் பல அனுகூலங்களுக்காக, மனம் ஒன்றாமல் உடல் மட்டுமே ஈடு கொடுத்துக் கூடுவதை வேண்டுமானால் உடலுறவு என்று சொல்லலாம் போலும்! அல்லது பாலியல் தொழிலாளியை, பரத்தையை, வேசியைக் கூடுவது உடலுறவாகலாம். பிணம் என்ற சொல்லைத் திருக்குறள் ஒரேயொரு திருக்குறளில் மாத்திரமே பயன்படுத்துகிறது. ‘வரைவின் மகளிர்’ அதிகாரம்.

‘பொருட் பெண்டிர் பொய்மை முயக்கம் இருட்டறையில்

ஏதில் பிணம் தழீக அற்று’

என்பதந்தக் குறள். கிடைத்தற்கரிய இரண்டு சொற்கள் இங்கே. விலை மகளிருக்கான மாற்றுச் சொல் பொருட் பெண்டிர். கலவி, புணர்ச்சிக்கான இன்னொரு சொல் முயக்கம். இருட்டறையில் ஏதுமற்ற, குளிர்ந்த பிணத்தைத் தழுவுவது போன்றதான புணர்ச்சி. அந்தத் தழுவல் வேண்டுமானால் உடலுறவாக இருக்கலாம். ஒரு வேளை வல்லுறவை வேண்டுமானால், சற்று மென்மையாக்கி உடலுறவு என்று சொல்லலாம். எந்த தமிழாசான், அறிஞன் அறிமுகப்படுத்தினானோ இந்த மொழியில் உடலுறவு என்ற சொல்லை? கலவி, புணர்ச்சி, முயக்கம், உவத்தல் எனும் சொற்கள் நிலை பெற்ற மொழி இது என்பதை மறந்து விட்டனர் போலும்! அல்லது தூய் தன்மை நீக்க முயன்றனர் போலும்! 24 காரட் பொன்னைச் சுத்தப் படுத்த எண்ணினார் போலும்!

நவீன இலக்கியம் எழுதுவோர், புணர்ந்தனர் என்று எழுதக் கூசி பரவினான், படர்ந்தான், இயங்கினான் என்று பொய்க்கடி கடிக்கிறார்கள். Beating around the bush என்பர் ஆங்கிலத்தில். மகளிர் நீதி மன்றத்தில் பிரதிவாதியாக வழக்காடும் கதா நாயகன் மோகன்லால், மலையாள சினிமாவில், “எங்களு பிரேமிச்சு; புணர்ந்திற்றுமுண்டு” என்பார். தமிழ்ப் படுத்தினால், “நாங்கள் காதலித்தோம், கலவியும் செய்திருக்கிறோம்” என்று வரும். புணர்தல் எனும் சொல் மலையாளத்திலும், கலவியை, முயக்கத்தையே குறித்தது. ஆனால் அவர்களுக்கு அந்தச் சொல் மீது துவேஷம் இல்லை.

கலவி என்ற சொல் தெலுங்கில் கலயிக்கா என்று வழங்கப் பெறும். பேரகராதி தரும் கலவியின் பொருள், Union, Combination, கலத்தல், Sexual Union, புணர்ச்சி முதலானவை. கலவினார் என்றால் உற்றார் என்றும், கலவார் என்றால் பகைவர் என்றும் பொருள் தருகிறது. கலவல் என்றாலே கலத்தல், Mining, combining. கட்டடம் கட்டும் போது, சிமெண்ட், ஜல்லி, மணல், தண்ணீர் விட்டுக் கலப்பதைக் கலவை என்போம்.

முயக்கம் என்றாலும், புணர்ச்சி அல்லது கலவியே! திருக்குறளின் இறுதிக் குறள், புலவி நுணுக்கம் அதிகாரத்தில்.

‘ஊடுதல் காமத்திற்கு இன்பம் அதற்கு இன்பம்

கூடி முயங்கப் பெறின்’

என்று, ஆண் பெண் கூடி முயங்குவதைப் பேசுகிறது.

ஓழ் என்றொரு சொல் தமிழ் சமூகத்தில் புழங்குகிறது, புணர்ச்சியைக் குறித்து. அந்தச் சொல் Lexicon -ல் இல்லை. மேலும் ஓழன், ஓழி போன்ற சொற்களும் இல்லை. இன்பம் துய்த்தலைக் குறிக்க சுகபோகம் என்கிறார்கள். சுகபோகி எனில் இன்பம் துய்க்கிறவன் (ள்). சுகித்தல் எனில் துய்த்தல், மகிழ்தல், சிற்றின்பம் துய்த்தல். எனினும் சுகபோகம் என்பது கலவி உள்ளிட்ட சகலவிதமான போகங்களுமே!

ஓத்தல் என்றொரு சொல் புழக்கத்தில் உண்டு. கெட்ட சொல்லாகக் கருதப்படுவது. ஆனால் அனைவருமே பயன்படுத்துவது. ஓத்தல் எனும் சொல்லுக்குப் பேரகராதி, To copulate என்று பொருள் சொல்கிறது. To be of one mind என்றும் பொருள் தருகிறது. அகராதி நிகண்டு, ஓத்தல் என்றால் புணர்தல் என்று தெளிவாகச் சொல்கிறது.

உவத்தல் எனும் சொல் திரிந்து |சிதைந்து|மருவி|தேய்ந்து, ஓத்தல் ஆயிற்று என்பார் பேராசிரியர் அருளி. உவகை என்றால் மகிழ்ச்சி என்பதறிவோம். பேரகராதி உவகை என்றால் மகிழ்ச்சி, Love, Fondness, அன்பு, Sexual desire, amorous passion, Sentiment of Love, சிருங்கார ரசம், காமம் என்றெல்லாம் பொருள் தருகிறது.

உவத்தல் எனும் சொல்லின் பொருள்களாக, To be glad, to rejoice, to be delighted, மகிழ்தல் என்பன முதன்மையானவை. இரண்டாவது பொருளாக, To be pleasing, agreeable, பிரியமாதல் என்கிறது. மூன்றாம் பொருளாக, To be pleased with, to approve or like, விரும்புதல் என்கிறது.

ஒத்த மனமுடைய ஆணும் பெண்ணும், காம வயப்பட்டு உவப்புடன் கலவியில் ஈடுபடுவதே உவத்தல். மனதிற்குள் உவத்தல், உவத்தல், உவத்தல், உவத்தல் என்று நாலைந்து முறை சொல்லிப் பாருங்கள். நாம் வந்து சேரும் இடம் ஓத்தல் என்று இருக்கும்.

முடிவாக நான் சொல்ல வருவது, வார்த்தை அல்லது சொல் என்பது வேறு. வசவு என்பது வேறு. வசவு கெட்ட வார்த்தையாக இருக்கலாம். வார்த்தையில் நல்லது, கெட்டது இல்லை. ஆனால் சொல்லையே வசவாகப் பயன்படுத்துவது என்பதும் வேறு.

இந்தக் கணத்தில் காய்தலும், உவத்தலும் இன்றிக் கவனித்தால், இந்தக் கட்டுரையைச் சிறப்பாக எழுதியிருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. மனதிற்குள் “ஓழ்” என்று சொல்லிக் கொள்ளவா?

***  19 ஏப்ரல் 2019

[இக்கட்டுரைக்கு மறுவினை தெரிவிக்க விரும்பும் வாசகர்கள், மின்னஞ்சலாக எழுதித் தெரிவிக்கலாம். அதற்கு முகவரி: solvanam.editor@gmail.com

உங்கள் மின்னஞ்சல் முகவரிகளை சொல்வனம் வேறு யாருடனும் பகிர்வதில்லை. ]

One Reply to “வார்த்தை என்பது வசவு அல்ல!”

  1. ஆண் குறி,பெண் குறி என்பதன் பெயர்கள் வயதிற்கு ஏற்ப கூறப்பட்டன.
    பருவம் அடையாத நிலையில் குஞ்சு / சிதி என்றும், பருவத்தில் சுண்ணி/புண்டை என்றும், மூப்பில் பூல்/கூதி என்றும் கூறப் பெறும்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.