வலையில் சிக்கிய வாசம்
உங்கள் பிறப்பு குறித்த ஒரு தந்தி வருகிறது
ஒரு குழந்தையின் உடலுடன்
பிஞ்சுக் கைக் கால்களை அசைத்தபடி
நீங்கள் பிறக்கிறீர்கள்
ஆயிரமாயிரம் ஜென்மாந்தர நினைவுகள்
பொதிந்த அணுக்கள்
உங்கள் மூளையெங்கும் நெய்யப்பட்டிருக்கின்றன
குறிப்புகள் ஏந்திய குழப்ப ரேகைகளை
மூடியிருக்கும்
உங்கள் ரோஜா கைகளை யாரோ முத்தமிடுகின்றனர்
உறக்கத்தில்
உங்கள் பழைய உறவுகளின் உலகங்களுக்கு
தப்பிக்கப் பார்க்கிறீர்கள்
யாதுமறியாத குழந்தை
சிரிப்பதாக
அவர்கள் பூரித்துப் போகிறார்கள்
மெல்ல உங்கள் கை கால்கள் வளர்கின்றன
உங்கள் கனவுகள் நகைக்கப்படுகின்றன
நாடகக் கொட்டகை ஒன்றை நீங்கள் அமைத்துக் கொள்கிறீர்கள்
சர்க்கஸ் கூடாரத்தின்
அடைக்கப்பட்ட கூண்டிற்குள் உங்கள்
இருசக்கர வாகனம் மேலும் கீழும் சீறுகிறது
திடீரென உங்கள் பாய்மரப் படகை
செலுத்திக் கொண்டிருக்கும்
ஒரு ஜாக் ஸ்பேரோ மீது
நீங்கள் மையல் கொள்கிறீர்கள்
அப்போது உங்கள் உடலெங்கும்
ஒரு சிலந்தியின் கால்கள் ஊர்கின்றன
உச்சத்தில் விழித்தெழும் நீங்கள்
புனர்வாச வலையில் சிக்கியதை உணரும் போது
மீண்டும் ஒரு தந்தி அச்சிடப்படுகிறது.

சலனம்
காய்ந்த பூவொன்றை
என் மடிமீது உதிர்த்துப் போகிறது
இந்தச் சாலையோர மரம்
என் நிச்சலனம் கலைத்த களிப்பில்
கிளை விரித்தாடியபடி
பேருந்து சன்னல்வழி
என்னிடமிருந்து பறித்துக் கொள்கிறது
ஒரு காயாம்பூவை

இயற்கை
அரும்பிய மலரொன்றின் மகரந்தம்
வண்ணத்துப் பூச்சியின் தேனுறிஞ்சும் நாவு
துக்கணாங்குருவிக் கூடு
மடியறிந்து பாலருந்தும் குட்டிகளென
அனைத்து அழகியலிலும்
ஒளிந்துகிடக்கிறது
டார்வினின் இயற்கைத் தேர்வுக் கோட்பாடு.
தக்கன பிழைத்தலும் தகாதன அழிதலும்
இயற்கை என்றான பிறகு
ஆகாயத்துப் பட்சிகளைப் பார்க்கிலும்
விசேஷித்தவர்களென
அன்றன்றைக்குள்ள அப்பம் அளித்து
பிழைப்பூட்டும் அந்தப் பரமபிதாவிடம்
எதைக் கேட்டு மன்றாடுவது
அசத்தல்