சங்கல்பமும் சம்பவமும் : அம்பையின் இரு நூல்களை முன்னிட்டு தமிழ்ப் பெண்ணெழுத்து – ஒரு பார்வை

கடற்கரையை ஒட்டிய ஊர் ஒன்றில் ஒரு சவுக்குத்தோப்பு இருந்தது. அவ்வப்போது மரம்வெட்டிகள் வந்து அந்த தோப்பிலிருந்து ஒரு சில மரங்களை வெட்டி எடுத்துச்சென்று கப்பல்கட்டுபவர்களிடம் விற்பார்கள். கப்பல்கட்டுபவர்கள் மரங்களை பாய்மரங்களாக செதுக்கி கப்பல்களில் பொருத்துவார்கள். அவை கப்பலுடன் சேர்ந்து கடலில் பயணிக்கும். தோப்பில் இருந்த எல்லா மரங்களும், தாங்களும் பாய்மரங்களாக செதுக்கப்பட்டு, கப்பலோடு இணைந்து தூரதூர தேசங்களை காணச்செல்வோம் என்று நினைத்தன. அந்நாளை எதிர்நோக்கி கனவுகண்டன.

கடற்கரையை ஒட்டிய ஊர் ஒன்றில் ஒரு சவுக்குத்தோப்பு இருந்தது. அவ்வப்போது மரம்வெட்டிகள் வந்து அந்த தோப்பிலிருந்து ஒரு சில மரங்களை வெட்டி எடுத்துச்சென்று கப்பல்கட்டுபவர்களிடம் விற்பார்கள். கப்பல்கட்டுபவர்கள் மரங்களை பாய்மரங்களாக செதுக்கி கப்பல்களில் பொருத்துவார்கள். அவை கப்பலுடன் சேர்ந்து கடலில் பயணிக்கும். தோப்பில் இருந்த எல்லா மரங்களும், தாங்களும் பாய்மரங்களாக செதுக்கப்பட்டு, கப்பலோடு இணைந்து தூரதூர தேசங்களை காணச்செல்வோம் என்று நினைத்தன. அந்நாளை எதிர்நோக்கி கனவுகண்டன.

ஒரு மரத்தைத் தவிர. அந்த மரத்துக்கு மட்டும் வெறும் பாய்மரமாக நிற்பதில் விருப்பமில்லை. அதற்கு மட்டும், ஏதாவது அதிஉன்னதமான செயலை செய்யவேண்டும், இப்புவியின் உச்சசாத்தியம் ஒன்றின் பொருட்டு தன்னை அர்ப்பணிக்க வேண்டும் என்ற கனவு இருந்தது. மரம் வெட்ட வருபவர்கள் தாங்கள் அன்று வெட்டத் தேர்ந்தெடுத்த மரங்களை மரத்தின் உடலில் சுண்ணத்தால் குறிப்பார்கள். இந்த மரம் மட்டும் தன் மீது குறி விழுந்தால் தன்னுடைய நண்பர்களான அணிலையும் குருவியையும் அழைத்து அவற்றின் வாலாலும் இறகாலும் அக்குறியைத் தந்திரமாக அழித்துக்கொண்டது. தன்னுடைய விதி நிறைவேறுமென்ற நம்பிக்கையில் காத்திருந்தது.

ஒரு நாள் வேறொரு குழு வந்தது. அவர்கள் மரங்களை வெட்டி ‘பேப்பர்’ தயாரிப்புக்கு விற்கப்போவதாக பேசிக்கொண்டார்கள். அந்த மரத்துக்கு ஒரே குறுகுறுப்பு. ‘பேப்பர்’ என்றால் என்ன என்று தன்னுடைய நண்பர்களிடம் விசாரித்தது.

குருவி சொன்னது. மானுடர் சிந்தனைகளையும் கற்பனைகளையும் உருவாக்குகிறார்கள். அதுவே அவர்களின் ஆற்றலின் உச்சம். அவற்றை மற்றவர்களுக்குக் கடத்த அவற்றை காகிதத்தாளில் பொறித்து வைத்துக்கொள்கிறார்கள். அந்தக்காகிதத்தை வாசிப்பவர்கள் அறிவுபெறுவார்கள். ஆகவே காகிதம் மானுட உன்னதங்களின் ஊர்த்தி, என்றது.

இச்சொற்களை கேட்டு மரம் உவகை கொண்டது. நானும் காகிகதமாகிறேன், என்னையும் வெட்டி எடுத்துக்கொள்ளுங்கள், வாருங்கள், என்று கிளை விரித்து மரம்வெட்டிகளை அழைத்தது.

அவர்களும் வந்து அந்த மரத்தை வெட்டிக் கொண்டுசென்றார்கள். அதனை துண்டுகளாக்கி அறைத்து கூழாக்கி காகிதமாக்கினார்கள். நீளமான உருளைக் கட்டாக கப்பல் வயிற்றில் அடைத்தார்கள். காகிதமான மரம் தூரதூர தேசங்களுக்குப் பயணித்தது. கப்பலின் ஆட்டத்தில் அதற்கு குமட்டி எடுத்தது. இருந்தாலும் தன் விதியை நோக்கிச் செல்கிறோம் என்ற உற்சாகம் மனதுக்குள்ளே இருந்ததால் அந்த அசௌகரியத்தைப் பொறுத்துக்கொண்டது. நீண்ட நெடிய பயணத்தை அந்த நம்பிக்கையில் மட்டுமே கடந்தது. மெலிந்து சோர்ந்து கரைசேர்ந்தது. வந்த அலுப்பில் மூர்ச்சையடைந்தது. விழித்துப்பார்த்தால் தான் தட்டையாக்கப்பட்டு தன் உடலில் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருந்ததை கண்டது. ஆகா, நான் பெரிய ஒன்றின் பங்காகிவிட்டேன் என்று மரத்துக்கு ஒரே குதூகலம்.

ஆனால் மரம் புத்தகமாகியிருக்கவில்லை. அது நாளிதழாக அச்சடிக்கப்பட்டிருந்தது. ஆடம்பர விளம்பரங்களும், மனிதர்களின் ஆணவச்செயல்பாடுகளுக்கான பரப்புரைகளும், சாரமற்ற பிரச்சாரங்களும் அதன் உடலில் எழுத்தாகக் குவிந்திருந்தன. அதனை கையிலெடுத்தவர் ஐந்து நிமிடங்களுக்கு மேல் புரட்டாமல் குப்பையென்று அப்பாலே அதனை தூரப்போட்டார். ஏதோ பலகாரத்தை அதில் சுற்றி இன்னொருவர் விற்றார். பலகாரத்தை வாங்கிச் சாப்பிட்டவர் எண்ணைக்கசிந்த காகிதத்தை கசக்கி எறிந்தார். அப்படியாக முடிந்துபோனது, மரத்தின் உன்னதத்துக்கான கனவு.

இக்கதை எழுதப்பட்டது 1913-ஆம் ஆண்டு. எழுதியவர் பெயர் அம்மணி அம்மாள். “சங்கல்பமும் சம்பவமும்” என்ற பெயரில் இச்சிறுகதை விவேகபோதினி என்ற பத்திரிக்கையில் அவ்வாண்டு வெளியானது. தமிழின் முதல் சிறுகதை என்று கருதப்படும் 1915-ல் வெளியாகிய வ.வே.சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம்’ கதைக்கு இரண்டு வருடங்களுக்கு முன்னால் வெளியான கதை இது. சிறுகதையின் வடிவமும் படைப்புக்கணங்களும் கொண்ட ஆக்கம். ஆக இதுவே தமிழின் முதல் சிறுகதையாக இருக்கலாம் என்று கருத இடமுள்ளது. இச்சிறுகதையை கண்டடைந்த எழுத்தாளர் திலீப் குமாரும் மொழிபெயர்ப்பாளர் சுபஶ்ரீ கிருஷ்ணசாமியும் இதனை ‘The Tamil Story’ என்ற நூலில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கிறார்கள். இக்கதையை பற்றிய மேற்சொன்ன குறிப்புகளும் இந்த நூல் வழியே கிடைத்தவை. அம்மணி அம்மாளைப் பற்றி மேலதிகத் தகவல்கள் கிடைக்கவில்லை என்று அவர்கள் இந்நூலில் குறிப்பிடுகிறார்கள.

இன்று இந்தக்கதையை ஒரு ஆரம்ப கட்ட இலக்கிய முயற்சியின் பிரதியாக, ஒரு நவீனத்துவப் பிரதியாக வாசிக்க முடிகிறது. அதே நேரத்தில், எனக்கு இக்கதையை வாசிக்கும்போது, அந்த யுகத்தில் வெளியுலகுக்கு முதன்முதலாக வந்து எழுதிய பெண் எழுத்தாளர் ஒருவரின் இலட்சியவாதத்தைப் பிரதிபலிக்கும் கதையாகவும் பொருள் படுகிறது.

மானுட உன்னதத்திற்கான ஊடகமாவேன் என்று கனவுகாணும் மரத்தின் கதை எந்த யுகத்திலும் எழுத்தாளரின் சங்கல்பமே ஆகும். அந்த யுகத்தில் இந்தியா முழுவதும் எழுதத்தொடங்கிய பல எழுத்தாளர்களுக்கு  இந்தக் கனவு ஏதோ ஒரு வகையில் இருந்துள்ளது. பாரதியிலும் தாகூரிலும் புதுமைப்பித்தனிலும் இக்கனவையே காண்கிறோம். பழைய அநீதிகளை, சோர்வுகளை, ஆசார இறுக்கங்களை வேரோடு களைந்து எறிந்து, புது யுகத்தை, புதிய மதிப்பீடுகளை, புதிய சமூகமொன்றை உருவாக்கும் வேகம் அவர்களின் எழுத்துகளில் இருந்தது. தனித்தன்மையான நவீன மொழியில் பற்பல கற்பனை சாத்தியங்களைக் கையாண்டு இக்கனவுகளை எழுத்தின் வழியே நிகழ்த்தினார்கள்.

இதே இலட்சியவாதம் இந்தியாவின் ஆரம்பகட்ட பெண் எழுத்தாளர்களையும் கனவாக ஆட்கொண்டது என்பதை நாம் காண்கிறோம். சுவர்ணகுமாரி தேவி, ஆஷாபூர்ணா தேவி (வங்கம்), நஸர் சஜ்ஜத் ஹைதர் (உருது), சுபத்ரா குமாரி சௌகான் (இந்தி) என்று நீளும் ஒரு பட்டியலில் அனைவருமே சமூகச் சீர்திருத்தத்தைப் பற்றியும், சமூகத்தில் பெண்களின் இடத்தைப் பற்றியும் எழுதியதை வாசிக்கலாம். இவை மாறிவந்த நவீன காலகட்டத்தின் விழுமியங்களுக்குள் பெண்களின் இடத்தை வகுக்க முயற்சித்த எழுத்தாக அமைந்தன.

நவீன காலகட்டத்தில் நிகழ்ந்த மதச் சீர்திருத்தங்களும், சாதியத் தளர்வுகளும், நகர்சார் வாழ்க்கை முறையின் எழுச்சியும், சாமானிய மனிதருக்குள்ளும் பரவலாகிக்கொண்டிருந்த படிப்பும், எழுத்தறிவும் பெண்களின் சமூக இடத்தை மீள்பரிசீலனை செய்யவேண்டிய நிர்பந்தத்தை சமூகத்துக்கு அளித்தன.  பனிப்பாறை உடைவது போல சமூகத்தில் பெண்களின் இடம் மெல்லப் பெயர்ந்து உருமாறியது. பெரும் புரட்டல்களை விட, வீட்டுக்கு வீடு நடந்த சின்னச்சின்ன புரட்சிகள் வழியாக இது நடந்தது என்று அக்காலத்து புனைவுச்சித்திரங்கள் வழியே அறிகிறோம். இக்காலகட்டத்தில் காந்தி முதல் பாரதி வரை, ஆண்கள் மீண்டும் மீண்டும் பெண்களின் இடம் தொடர்பான கேள்விகளை எதிர்கொள்கிறார்கள். முதலில் எழும் ஒவ்வாமையையும், மனத்தடையையும் மீறி அறநோக்குடனே செயல்படுகிறார்கள். பதினெட்டாம் நூற்றாண்டில் ஐரோப்பாவில் தொடங்கிய அறிவொளி இயக்கத்தின் அலை நம் கரைகளை வந்து சேர்ந்த தருணம் அது.

நவீன காலகட்டத்தில் பெண்ணின் இடம் என்ன என்ற கேள்வி எழத்தொடங்கியதுமே பெண் ‘நான் யார்’ என்று கேட்க தொடங்கிவிட்டாள். அது காலத்தின் நிர்பந்தம். ஆண்களுக்கும் இந்தக் கேள்வி இருந்தது. சமூகக்கட்டுகளில் இனக்குழுக்களில் ஊர்களிலிருந்து தேனீக்களைப்போல் பறந்து வெளியுலகம் நோக்கி வந்துகொண்டிருந்தவர்களுக்கு சாதி-இன-மத-பூகோள அடையாளங்களை மீறி தங்களுடைய அடையாளத்தை வகுத்துக் கொள்ள வேண்டிய தேவை இருந்தது.

ஆனால் பெண்களுக்கு அந்தத் தேவை இன்னும் உக்கிரமான ஒன்று, அது தன்னுடைய சமூக இடம் என்ன என்றல்லாமல், தன்னுடைய மானுட இடம் என்ன என்ற கேள்வியைச் சார்ந்தது. பெண்ணின் அடையாளம் அதுவரை அவளுடைய உறவுகளை குடும்பத்தை சார்ந்தே இருந்தது. அவளுடைய சுயவிருப்பு என்று ஒன்று கணக்கில் எடுத்துக்கொள்ளப்படவில்லை. எழுத்து எப்போதுமே தீவிரமான சுயவிருப்பின் பிரகடனம். பெண் எழுத்தாளர்கள் ஆரம்பம் முதலே தங்கள் இடம், சுயம், சுயவிருப்பு, கனவுகள் சார்ந்த தேடலை நிகழ்த்தினார்கள்.

அதே நேரத்தில் அக்கனவுகளில் எப்போதுமே சுய சமூகப் பொறுப்பும் ஒரு அங்கம் வகித்தது. அம்மணி அம்மாளின் கதையில் வரும் மரத்தைப்போலவே மானுடப் போக்கின் மையச்சாலையில் சேர்ந்து பயணிக்க விருப்பப்பட்டார்கள். படிப்பறிவு பெற, பொதுவெளியில் பங்குகொள்ள, முடிவுகளை எடுக்க, தங்களின் சுயத் தேடலை நிகழ்த்திக் கொள்ள. இலட்சிய வாழ்க்கை வாழ விருப்பப்பட்டார்கள். தமிழின் ஆரம்ப கால பெண் எழுத்தாளர்கள் பலரும் காந்தியால் தூண்டுதல் பெற்றவர்கள். இன்று, ஒரு இளம் எழுத்தாளராக, அந்த யுகத்தின் இலட்சியவாதமும் கனவும், திரும்பிப்பார்க்கையில் பெரிய உத்வேகத்தை அளிக்கிறது. (அதே நேரத்தில், இவர்கள் பலரும் அக்கால கட்டத்தின் மனிதர்களாக, மரபார்ந்தவர்களாக ஆசாரவாதிகளாக இருந்தார்கள் என்பதையும் காண்கிறோம். இரண்டு அம்சங்களுமே அக்காலகட்டத்தின் எழுத்தை பாதித்தன.).

இன்று திரும்ப நோக்குகையில், தமிழ் எழுத்து வெளியில் ‘மானுட உன்னத சாத்தியங்களின் ஊர்தியாவேன்’ என்ற எழுத்தாளரின் இலட்சிய ‘சங்கல்பத்தை’ எந்த அளவுக்கு தமிழ்ப்பெண் எழுத்தாளர்கள் கடந்த நூறாண்டுகளில் ‘சம்பவித்திருக்கிறார்கள்’ என்று கேட்கத்தோன்றுகிறது. இந்தக்கேள்வியை ‘தமிழ்ப் பெண் எழுத்தாளர்களின் இலக்கிய, சமூகப் பங்களிப்பென்ன?’ என்று கேட்பதை விட, ‘பெண்கள் தங்களுடைய அக ஆற்றலையும் படைப்புக்கான சாத்தியத்தையும் சுய கண்டடைதலையும் எந்த அளவுக்கு எழுத்து மூலம் நிறைவேற்றியிருக்கிறார்கள்? அதற்கான வெளி அமைந்ததா?’ என்று கேட்கத்தோன்றுகிறது. ஒரு இளம் எழுத்தாளராக, இது என் முன்னோடிகளுடன், அவர்களின் கனவுகள், இலட்சியங்கள், தோல்விகள், குறைபாடுகள், நிராசைகள், மேலும் அறச்சீற்றங்களுடன் உரையாடும் பயணமும் கூட.

இந்த பயணத்தில் எனக்கு வழித் துணையாக அமைந்த இரண்டு நூல்களுமே எழுத்தாளர் அம்பையுடையது. அந்த உழைப்புக்கு நான் மிகவும் கடமைப் பட்டுள்ளேன். முதல் நூல் 1984-ல் அம்பை சி.எஸ்.லட்சுமி என்ற பெயரில் வெளியிட்ட ‘The Face Behind The Mask’ என்ற ஆங்கில நூல் (விகாஸ் பதிப்பகம்). இரண்டாவது நூல் 2018-ல் வெளியான ‘உடலெனும் வெளி’ என்ற நூல் (கிழக்குப் பதிப்பகம்). இரு நூல்களுமே ஆரம்பக் கட்டம் முதல் எழுதிய பெண் எழுத்தாளர்களின் எழுத்தை அந்த நூல் எழுதப்பட்ட சமகாலம் வரை தொகுத்தளிக்கின்றன. இரண்டு நூல்களும் சற்றே வெவ்வேறு பார்வைக் கோணங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டவை.

முகமூடியும், முகமும், கிணற்றுத்தவளைகளும்

1984-ல் வெளியான ‘The Face Behind The Mask’ (முகமூடிக்கு பின்னாலுள்ள முகம்) நூலின் செல்வாக்கு இரண்டு புள்ளிகளால் ஆனது. முதலாவதாக, இந்நூலின் வழியே, அம்பை தமிழ் இலக்கிய வெளியில் அன்று வரை – 1910கள் முதல் 1984 வரை – எழுதிய பெண் எழுத்தாளர்களின் ஒரு வரிசையைத்  தொகுத்து வழங்கினார். தீவிர இலக்கியம், பரப்பிலக்கியம், வணிக இலக்கியம் என்ற பிரிவினையில்லாமல், ‘கையில் மைக்கறை படிந்த பெண்கள்’ என்ற அளவிலேயே ஒரு வரலாற்று நிரையை அந்த புத்தகத்தின் மூலம் அளிக்கிறார். இது ஒரு முன்னோடி முயற்சி என்பதால் குறிப்பிடத்தக்கது.

இரண்டாவதாக, மேலும் முக்கியமாக, அவ்வெழுத்தாளர்களில் பலருடனான சுருக்கமான, ஆனால் முக்கியமான கேள்கவிகள் அடங்கிய நேர்காணல்களை இந்நூலில் தொகுத்திருக்கிறார். இவ்வெழுத்தாளர்களை – அவர்களுடைய எழுத்தை மட்டும் அல்லாது அவர்களுடைய பின்னணியை, எழுத்துக்கான சூழலை – இந்த சுருக்கமான நேர்காணல்கள் மூலம் தெரிந்துகொள்கிறோம். தான் எழுதும் விஷயங்களை அவ்வெழுத்தாளர் எவ்வாறு தேர்வுசெய்கிறார், எழுதுவதற்கான நேரத்தை எவ்வாறு ஒதுக்கிக்கொள்கிறார், அவர்களுடைய குடும்பச்சூழல் எப்படிப்பட்டது போன்ற கேள்விகள் இடம் பெறுகின்றன.  குடும்பம், காதல், கற்பு, மதம், அரசியல் சார்ந்த இவ்வெழுத்தாளர்களின் கருத்துகளும் அறியக் கிடைக்கின்றன. வை.மு.கோதைநாயகி அம்மாள், குகப்பிரியை முதல் ஹெப்சிபா ஜேசுதாஸன், கிருத்திகா, சூடாமணி வழியாக சிவசங்கரி, வாஸந்தி வரை ஒரு பெரும் நிரையை வாசிக்கையில், மாறிவந்த சமூக மதிப்பீடுகளின் சித்திரம் இந்த நேர்காணல்கள் வழியே காணக்கிடைக்கிறது. மட்டுமல்லாது, அவர்களின் எழுத்துச் செயல்பாடுக்கு எதிராக குடும்பத்தரப்பிலிருந்து, பத்திரிக்கை ஆசிரியர்களின் தரப்பிலிருந்து, மற்றும் தங்கள் சொந்த அகத்தின் தரப்பிலிருந்து எழுந்த தடைகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இப்பார்வைகளின் வழியாக தமிழின் நூறு வருட பெண் எழுத்தை புரிந்துகொள்ள ஒரு சட்டகம் அமைகிறது.

எழுத்தாளர்களின் பதில்களை அம்பை மிகவும் சுவாரஸ்யமாகத் தொகுத்தளித்திருக்கிறார். உதாரணத்துக்கு குகப்பிரியை தன் எழுத்தை பற்றி நேர்காண வரும் அம்பையிடம் கேட்கும் முதல் கேள்வியே ‘நீ ஏன் இன்னும் கல்யாணம் செய்துகொள்ளவில்லை?’ அம்பை இதனைப் பதிவுசெய்யும் விதம் அவருக்கும் அந்த மூத்த தலைமுறை எழுத்தாளருக்குமான அணுக்கத்தையும், இடைவெளிகளையும் காட்சிப்படுத்தும்படி அமைந்துள்ளது. மாமி அப்படித்தான் கேட்பார் என்று இங்கிருந்து நாமும் அம்பையுடன் சேர்ந்து சிரிக்கிறோம். சாதியைப் பற்றி, காதலைப் பற்றி, கற்பைப் பற்றி, பெண்ணின் சுயத்தைப் பற்றி இக்காலத்துப் பெண் எழுத்தாளர்கள் பலர் சம்பிரதாய நோக்குகளையே கொண்டிருக்கிறார்கள். (இவர்களின் இந்நிலைப்பாட்டில் காந்தியின் தாக்கம் எந்த அளவுக்கு இருந்தது என்பது சுவாரஸ்யமான கேள்வி.) புத்தகத்தில் பேசும் பெரும்பாலான எழுத்தாளர்கள் பெண்ணின் சுயம் திருமணம், குடும்பத்துடன் தொடர்புடையது எனக் கருதுகிறார்கள்.

இந்நூலை வாசிக்கையில், ஒவ்வொரு எழுத்தாளரின் ஆளுமையும் எழுந்து வரும்போது, என் ஆன்மாவில், ஆழ்மனத்தில் வாழும் ஒரு பெண்ணைக் கண்டுகொண்ட பரவசம் ஏற்பட்டது. சுயத் தேடலை நிகழ்த்த எழுத வந்தவர்களோ, சமூகச் சீர்திருத்த நோக்குடன் எழுத வந்தவர்களோ, கதை சொல்லி மகிழ்விக்க எழுத வந்தவர்களோ அல்லது மைய வாழ்க்கையிலிருந்து ஒரு வடிகாலுக்காக எழுத வந்தவர்களோ – அனைவரும் எனக்குள்ளும் எங்கேயோ உறைகிறார்கள் என்ற பரவசம் உண்டானது. அதே நேரம் பல எழுத்தாளர்கள் தாங்கள் எழுத நினைத்ததை எழுத முடியாமல் போன சூழலையும் பதிவு செய்கிறார்கள். அந்த வலியும் இருந்தது. இந்த உணர்வுகளே இந்த புத்தகத்தை வாசித்ததன் பெறுமதியாக அமைந்தது. புத்தகத்தின் முன்னுரையில் “இவ்வாக்கம் எல்லா பதில்களையும் அளித்துவிடவில்லை, ஆனால் முக்கியமான கேள்விகளை எழுப்பியிருக்கிறது என்று நம்புகிறேன்,” என்கிறார் எழுத்தாளர் அம்பை. இக்கேள்விகள் மூலம் எழும் சமூக, வரலாற்று பெண் அகச் சித்திரம் தமிழில் இலக்கியம் சார்ந்து மிக முக்கியமான பங்களிப்பு என்று நினைக்கிறேன்.

எல்லாவற்றையும் விட, ‘The Face Behind The Mask’-ல் அம்பை எழுப்பும் மையக் கேள்வி, ஆண்கள் அளவுக்கு ஏன் பெண்கள் படைப்பூக்கத்துடன், இலக்கிய நயத்துடன், தனித்துவ நடையுடன், கருத்து வீச்சுடன், சுயத் தேடலுடன் எழுதவில்லை என்பது. “தமிழில் பெண் எழுத்தாளர்கள் என்றுமே இலக்கிய வெளிப்பாட்டில் புதிய பாதைகளைத் திறக்கும் இடத்தில் இருந்ததில்லை என்பது வலி மிக்க, ஆனால் அப்பட்டமான உண்மை,” என்று முன்னுரையில், முதல் பக்கத்திலேயே சொல்கிறார். இந்த புத்தகத்தின் நோக்கமே, அது ஏன் என்று கேட்டுத் தெளிவுறத்தான் என்று நினைக்கிறேன்.

அதற்கு பல காரணங்கள் புத்தகத்தின் வழியே துலங்கி வருகின்றன. குடும்பம், பதிப்பகம், சுயக்கட்டுப்பாடு என்று எளிமையாக இப்போதைக்கு வகுத்துக் கொள்ளலாம். ஆனால் இக்காரணங்களை மீறி, அம்பை இந்நூலின் இறுதியில் தொகுத்துரைக்கையில் குறிப்பிடும் முக்கியமான ஒரு அம்சம், பெரும்பாலான பெண்ணெழுத்தாளர்களுக்கு அவர்கள் எழுதிய எழுத்தும், அந்த சூழலும் வசதியாக ஒன்றாக அமைந்தன. எழுத்து பணமும், புகழும், கௌரவமும் அளித்தது. உண்மையைத் தேடிச்சென்று எழுதுவதற்கு அவர்களுடைய பாதுகாப்பான கிணறுகளை விட்டு வெளியே செல்ல வேண்டியிருந்திருக்கலாம். கலாச்சார ரீதியாக ஒத்துப் போய் வாழப் பழக்கப்பட்ட (அல்லது கட்டாயப்படுத்தப்பட்ட – “trained capacity to conform” என்கிறார்) பெண்கள் அந்த எல்லையைத் தாண்ட விரும்பாமல், அல்லது முடியாமல், தங்கள் பாதுகாப்பு வளையத்துக்குள்ளேயே இருந்துவிட்டார்கள். அதனைத் தாண்டி வரும் விருப்புறுதி உருவாவது வரை தமிழ்ப் பெண் எழுத்தாளர்கள் வட்டமிட்டுக் குறுகி அமர்ந்து ஒரு துண்டு வானத்தை ஏக்கத்துடன் நோக்க்கும் கிணற்றுத் தவளைகளாகவே வாழ வேண்டிய நிலமை நீளும் என்று அம்பை தன்னுடைய நூலை முடிக்கிறார்.

பெண்ணுடலும் பெண்மொழியும்

‘The Face Behind The Mask’ வெளிவந்து கிட்டத்தட்ட முப்பத்தைந்து ஆண்டுகள் கழித்து, 2018-ல் அம்பை இதே தளத்தில் இன்னொரு நூலை எழுதுகிறார். இந்நூலின் பெயர், ‘உடலெனும் வெளி.’ இந்த நூலிலும் ஆரம்பம் தொட்டு தமிழில் எழுதிய பெண்களின் நிரை அளிக்கப்படுகிறது; 80களுக்குப் பின் எழுதவந்த பெண் எழுத்தாளர்களின், கவிஞர்களின் வரிசையும் கூடுதலாக அளிக்கப்படுகிறது. ஆனால் இந்த நூலில், தமிழின் பெண்ணெழுத்தை அம்பை முற்றிலும் வேறு கோணத்தில் ஆராய்கிறார். பெண்ணழுத்தை பெண் உடல் ஒடுக்கப்படுவதற்கு எதிரான மொழிவெளிப்பாடாக, கலகக்குரலாக அவர் உருவகிக்கிறார். 1970-80களுக்குப்பின் தமிழில் உருவாகிவந்த பெண்ணியச் சிந்தனைகளின் அடிப்படையில் இதன் சாரத்தை நாம் புரிந்துகொள்ளலாம்.

பொதுமொழியிலும், புராணச் சித்திரிப்புகளிலும், பெண் எப்போதுமே இகழ்வான ஒரு இடத்தில் தான் வைத்துப் பார்க்கப்படுகிறாள் என்று ஆசிரியர் இந்நூலைத் தொடங்குகிறார். பெண்ணுடல் என்பது அடக்கப்படவேண்டிய ஒன்றாக, ஆளப்படவேண்டிய ஒன்றாக, பண்பாட்டைக் கட்டிக் காக்கவேண்டிய ஊடகமாக இருக்கிறது. அவ்வுடல் சார்ந்து  பெண்களை பற்றி எல்லா காலத்திலும் சமூகத்தில் பல பிம்பங்கள் நிலவுகின்றன – அன்னை, குடும்பப்பெண், விலைமகள், விதவை, புதுமைப்பெண் என்றெல்லாம். இந்தப் பொதுக் குறியீட்டுப் பிம்பங்களை உதறி, பெண் என்பவள் யார், தான் யார், என்ற சுயப் பரிசோதனை முயற்சியில் 20ஆம் நூற்றாண்டின் பெண் எழுத்தாளர்கள் ஈடுபட்டார்கள். அவர்களது தனிக்குரல் ஓங்கியதன் வழியாக அது சாத்தியமானது.

ஆரம்பக் கட்டப் பெண் எழுத்தாளர்களின் பார்வையில் பெண் கல்வி சார்ந்து, கலப்பு மணம் சார்ந்து, விதவை மணம் சார்ந்து சிந்தனைகள் பேசப்பட்டன.  அடுத்தக் கட்டத்தில் குடும்பத்தைப் பற்றிய புனிதப் பிம்பங்கள் கேள்விக்குள்ளாக்கப் பட்டன.  அதே நேரம் கல்வி கற்கும் பெண் பண்பாட்டிலிருந்து வழுவ மாட்டாள் என்ற உறுதிப்பாடும் எழுத்தில் இருக்கவேண்டிய தேவையை இக்காலகட்டத்தின் எழுத்தாளர்கள் உணர்ந்திருந்தார்கள்.

90களுக்குப் பிறகு பெண் கவிஞர்கள் உடல் சார்ந்து, உடலில் மையம் கொண்ட சுயம் சார்ந்து, தங்கள் விருப்புகளைச் சார்ந்து எழுதத்தொடங்கினார்கள். அதற்கான மொழியை உருவாக்கிக்கொண்டார்கள். இதை ஒரு பெரிய நகர்வென ஆசிரியர் கூறுகிறார். கிருஷாங்கினி, அரங்கமல்லிகா, கனிமொழி, மாலதி மைத்ரி, முபீன் சாதிகா, பெருந்தேவி என்று நீளும் இப்பட்டியல் 25க்கும் மேற்பட்ட கவிஞர்களை அவர்களது கவிதைகள், மற்றும் அவற்றின் மொழி வழியாக அணுகுகிறது (2017-ஆம் ஆண்டுக்கான சாகித்ய அகாதமியின் யுவ புரஸ்கார் விருது பெற்ற இளம் கவிஞர் மனுஷி பாரதி முக்கியமான விடுபடுதல்.) ஆதிக்க மனநிலைகளுக்கு எதிரான கலகக்குரல், தனிமொழி வெளிப்பாடு என்ற வகையில் இவ்வெழுத்துகள் முக்கியமானவை என்கிறார் அம்பை.

ஆனால் பெண் எழுத்து, அது பெண்ணால் எழுதப்பட்டது, பெண்ணுடலிலிருந்து உதித்தது என்பதாலேயே குறைத்து மதிப்பிடப்படுகிறது என்றும் சொல்கிறார். ‘பெண்ணெழுத்து’ என்ற பதமே ‘குறைவுடைய எழுத்து’ என்று மறைமுகமாகக் குறிக்கும் நிலை இன்றைய தமிழிலக்கியச் சூழலில் உள்ளது என்கிறார். இது பெண் வெறுப்பில் உதயமாவது. மொழி, அது உருவாக்கும் பிம்பங்கள், பெண் உடல் நோக்கப்படும் விதம், மொழி உடல் மீது செலுத்தும் ஆதிக்கம் இவற்றின் பின்புலத்தில்தான் பெண்கள் உருவாக்கும் மாற்று மொழிகள் புரிந்துகொள்ளப்பட்டு இவ்வெழுத்துக்கள் மதிப்பிடப்பட வேண்டும் என்கிறார்.

பெண்ணெழுத்தின் படைப்புக் குறைபாடுகளையும், கிணற்றுத் தவளைத்தன்மையும் ‘The Face Behind The Mask’- ல் சுட்டிக்காட்டிய அம்பை, முப்பத்தைந்து வருடங்களுக்கு பிறகு வெளிவந்த ‘உடலெனும் வெளி’ நூலில் அதைக் குறித்து எங்கேயும் பேசவில்லை என்பது கவனிக்கத்தக்கது. ஒரு வேளை, பெண்கள் உடல் பிரக்ஞை கொண்டு அதற்கான மொழிவெளிப்பாட்டை உருவாக்கிக் கொண்டதன் வழியாகவே இன்றைய பெண்ணெழுத்து கிணற்றை விட்டு வெளியே குதித்து விரிந்த நிலத்தில் வானம் நோக்க உலாவத் தொடங்கிவிட்டதென்று  அவர் கருதலாம். ஆனால் இந்த இடம் நூலில் விவாதிக்கப்படவில்லை.

இந்த கட்டத்தில், நான் ஆரம்பத்தில் எழுப்பிக் கொண்ட கேள்விக்குத் திரும்ப வருகிறேன். ‘தமிழ்வெளியில் பெண்கள் தங்களுடைய அக ஆற்றலையும் படைப்புக்கான சாத்தியத்தையும் சுயக் கண்டடைதலையும் எந்த அளவுக்கு எழுத்து மூலம் நிறைவேற்றியிருக்கிறார்கள்?’ இங்கு படைப்பு சாத்தியம், சுயக் கண்டடைதல் என்று கூற வருவது ஜெயகாந்தன் தன் எழுத்தின் மூலம் என்ன ஆளுமையை வெளிப்படுத்தினாரோ, சு.ரா. தன் எழுத்தின் மூலம் என்ன அறிவதிகாரத்தை நிகழ்த்தினாரோ, அல்லது அம்பை தன்னுடைய எழுத்தின் மூலம் பெண் உலகினைப் பற்றி கற்பனை மூலமும் கோட்பாட்டு ஆய்வு மூலமும் எப்படி ஒரு ஒருங்கிணைந்த சித்திரத்தை முன்வைத்தாரோ, அப்படி. தனக்கென தனி ஆளுமையை, முத்திரையை, கதைப்பிரபஞ்சங்களை, மொழியை, உலகநோக்கை உருவாக்கிக்கொள்ளுதல். அதற்கான உண்மையும் நேர்மையும் சுதந்திரத்தையும் கண்டடைதல்.

இந்த நேர்மையும் சுதந்திரமும் சுயவெளிபாட்டுணர்வும் கூடி எழுதிய பெண் எழுத்தாளர்கள் படைப்பிலக்கியவாதிகள் மற்ற இந்திய மொழிகளில் இருக்கிறார்கள். குரதுலைன் ஹைதர் போல, மகாசுவேதாதேவியைப்போல், இஸ்மத் சுக்தாயைப்போல, மாதவிகுட்டியை போல. உலக மொழிகளில் இருக்கிறார்கள். ஆகவே ஆண்மைய நோக்குடையவர்கள் சொல்வதுபோல் இது அடிப்படை வேறுபாடுகள் சார்ந்த ஒன்று என்று சொல்லிவிடமுடியாது. ஆனால் தமிழைப் பொருத்தவரை, ஒற்றைக்கை விரல்களில் எண்ணிவிடக் கூடிய அளவில், படைப்பிலக்கியத்தில் இயங்கிய பெண்ணெழுத்தாளர்களின் அதே பழைய நிரையைத் தாண்டி புதிய சாத்தியங்கள் உருவாகி வரவில்லை என்பது நிதர்சனம்.

படைப்பூக்கமும், கற்பனை வளமும் கொண்டு எழுதுவதில், ஒருங்கிணைந்த சமூகப் பார்வை, வரலாற்றுப் புரிதல், கருத்தியல்சார் அறிவதிகாரம், தனித்தன்மையான இலக்கியப் பிரக்ஞை என்று கட்டமைத்துக்கொண்டு இயங்குவதில், தமிழ் மொழியைப் பொருத்தவரை பெண் எழுத்தாளர்கள் ஏன் பெரிய பங்கு ஆற்றவில்லை? தடைகள் இருந்தனவா? அவை என்ன? இன்று என்னென்ன தடைகள் இருக்கின்றன? எழுத்து சார்ந்த இலட்சியக் கனவுக்கான இன்றைய இடம் என்ன? இவை வெறும் இலட்சியங்கள்தானா, அல்லது இவையும் அதிகாரப் படிநிலைகளுடன் நுண்மையான முறையில் உறவு கொண்டுள்ளனவா? பெண்ணிய மதிப்பீடுகளின் அளவுகோல்களின் படி இது அர்த்தமற்ற கேள்வியாகிவிட்டதா? –  அம்பையின் இவ்விரு நூல்களின் வாசிப்பு வழியாக இக்கேள்விகளை எனக்கே நான் எழுப்பிக்கொள்கிறேன். பதில் தேடுகிறேன்.

சுயமும் படைப்பும்

‘உடலெனும் வெளி’ நூலில் பல பெண்கவிஞர்களின் மொழிவெளிப்பாடாக அவர்களின் கவிதை வரிகள் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன. அவை அனைத்திலும் கண்டுகொண்ட பொது அம்சம், ‘நான்’ என்ற வார்த்தை. இன்று எழுதும் பெண்கள் அனைவருக்கும் தன்னை யார் என்று முதலில் தனக்குத்தானே நிறுவிக் கொள்ளவேண்டிய தேவை இருப்பதாக தோன்றுகிறது.

இது இன்றைய அவசியம் மட்டும் அல்ல என்று முன்னரே பார்த்தோம். பெண்கள் நவீன யுகத்தில் எழுதத்தொடங்கிய காலம் தொட்டு தான் யார் என்றும், தன் விருப்பங்கள், சுயம் இவை என்றும் வெவ்வேறு வகைகளில் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். பெண்ணின் சுயம் எப்படியெல்லாம் நிராகரிக்கப்பட்டதென்று எழுதியிருக்கிறார்கள். மலையாள முன்னோடி எழுத்தாளர் லலிதாம்பிகா அந்தர்ஜனத்தின் புகழ்பெற்ற சிறுகதை ‘பிரதிகாரதேவதா’ நினைவுக்கு வருகிறது. சமூகத்தில், குடும்பத்தில், வேலையிடத்தில், உறவுகளில் தன்னுடைய இடம் என்ன என்ற கேள்வியே இது போன்ற கதைகளில் மிகுதியாக முன்வைக்கப்பட்டது.

பெண்ணெழுத்து என்றாலே பெண் சுயம்/அகம் சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், பெண்களும் அரசியல், அறிவியல், தத்துவம் என்று புறத்தளங்களை மையமாகக்கொண்ட ஆக்கங்களை படைத்திருக்கிறார்கள் என்றும் சொல்லவேண்டியதில்லை. ஆனால் தமிழைப்பொருத்தவரை, புனைவு, கவிதை தளங்களில் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு பெரும்பாலும் தங்கள் சுயம் சார்ந்த விசாரிப்புகளிலேயே நிகழ்ந்துள்ளது. பல உலகமொழிகளிலும் இதனை காணலாம். இந்த அம்சத்தை குறையுண்ட எழுத்தாக (நைபாலின் மொழியில் சொல்லவேண்டுமென்றால் feminine tosh-ஆக) நான் பாவிக்கவில்லை. இதற்கு வலுவான சமூக – வரலாற்று, மற்றும் உளவியல் – ஆன்மீக காரணிகள் உள்ளதாக நினைக்கிறேன்.

பெண்ணின் சுயம் சார்ந்த பதற்றத்தையும், அலைக்கழிப்பையும் இரண்டு விதங்களில் அணுகலாம். ஒன்று, இதனை ஒரு வரலாற்றுத் தருணத்தின் பகுதியாக. ஆணுக்கு நவீன யுகம் அளிக்கும் அழுத்தங்களும், அன்னியமாக்கலும் பெண்ணிலும் நிகழ்கின்றன. அவளுடைய மானுட உத்வேகமும், சுயக்கண்டடைதலும் செல்லும் வேகத்துக்கு உலகம் நகர்வதில்லை. பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் இந்தியாவில் நவீன யுகத்தின் நுழைவு கிட்டத்தட்ட ஒரு காலப்பெயர்வு. அதன் அதிர்வுகளின் அலைகளே இவை. நூறாண்டுகாலமாக பெண் தன்னுடைய சுயத்தை இலட்சியவாதத்தில், குடும்ப அமைப்பில், மரபில், பிறகு நவீனத்தில், பிறகு தன்னுடைய பெண்மையில், உடலில் என்று படிப்படியாக பிணைத்துக் கண்டடைவது ஒரு இயல்பான வரலாற்று நகர்வு. அந்த முதிர்ச்சியுடனே இந்த எழுத்துக்களின் இடம் மதிப்பிடப்படவேண்டும். இது பெண்ணின் வரலாற்றுச்சுயம், சமூகச்சுயம் சார்ந்தது.

ஆனால் இன்னொரு அம்சமும் உள்ளது. இன்று என்றல்ல, பெண் குரல் (என்று இன்று நாம் நம்புவது) பதிவாகத் தொடங்கிய நாள் தொட்டு ‘நான்’ என்ற தன்னிலைக் குரலும் அதன் பகுதியாகவே ஒலிக்கிறது என்பது சுவாரஸ்யமான ஒன்று. ரிக் வேதத்தின் பத்தாம் மண்டலத்தில் உள்ள கவிதையான வாக் சூக்தம் தன்னிலையில் மட்டுமே ஒழுகிச்செல்லும் பாடலாக அமையப்பெற்றுள்ளது. மரபாக வாகாம்பிரிணி என்ற பெண் ரிஷி இதனை பாடியதாக சொல்லப்படுகிறது. இந்தப்பாடலில் அந்த ‘நான்’ என்ற குரல் தன்னை பூமியிலிருந்து வானம் வரை நீளும் பேருருவாக உருவகித்துக்கொள்வதை காணலாம். ‘மலைச்சிகரத்தில் என் தந்தையை நான் பெற்றெடுக்கிறேன். என் பிறப்பிடமோ கடலாழத்தில்,’ என்கிறது அக்குரல். நான் விரும்புபவர்களைக் கல்வியும், மேதமையும், ஞானமும் கொண்டவர்களாக ஆக்குவேன் என்கிறது. (‘நானே வானாகி, நானே காற்றாகி’ என்று அடுக்கும் சுகிர்தராணியின் ‘இயற்கையின் பேரூற்று’ என்ற கவிதை வரியை இதனுடன் இணைத்து வாசிக்க இடமுள்ளது. ஆனால் வாக் சூக்தத்தின் முழுமைப் பார்வையும், மெய்மீறல் கணமும் இந்தக் கவிதையின் சாத்தியத்தை மீறுகின்றன என்பது என் கருத்து.) இவ்வுலகுடன் தன்னைப் பிணைக்கும் உடலுக்கும், அதை மீறி எழ ஏங்கும் சித்தத்துக்கும், கனவுக்குமான ஆழ்ந்த மோதலை பெண் தன் உளவியலில் உணரலாம். சுயம் சார்ந்த அலைக்கழிப்பு இந்த புள்ளியிலிருந்து தொடங்கலாம். இந்த அடிப்படை உளவியல் மோதல், சமூக இறுக்கங்களுடன், பொய்யான எளிமைப்படுத்தப்பட்ட பிம்பங்களுடன் இணையும்போது பெரிய அழுத்தமாக உருவாகவும் வாய்ப்புள்ளது. இது பெண்ணின் ஆன்மீகச் சுயம் சார்ந்தது.

சுயத்தைக் கேள்விக்குள்ளாக்குவதில் ஒரு பொறி உள்ளது. நாம் யார் என்று நாம் எப்போது வரையறுக்கிறோமோ, அதனுடன் சேர்த்து நமக்கும்  நாம் அல்லாததுக்குமான  உறவென்ன என்றும் வரையறுத்துக்கொள்கிறோம். மரத்தின் தண்டும் வேரும் சுயமென்றால், காற்றிலாடும் கிளையும், இலையும் அது அதுவல்லாத வெளியுடன் கொள்ளும் உறவு. ஒன்று ஆன்மீகச்சுயம், இன்னொன்று சமூகச்சுயம். இவ்வுலகில் பெண்ணின் இடம் என்ன என்ற கேள்வியை இந்த இரண்டு அம்சங்களையும் ஒன்றோடொன்று தொடுத்து ஆராய்ந்தபடிதான் பதில் சொல்ல முடியும்.  இவற்றை தெளிவுபடுத்திக் கொள்ள, தான் யார் என்ற உண்மையான, நேர்மையான தேடலை நிகழ்த்திக்கொள்ள, கற்பனையும் மனவிரிவும் விளையாட்டுத்தனமும் கூடிய படைப்புவெளி தேவையாகிறது.

படைப்புவெளியில் எல்லா வகையான குத்தும், குடையும் அசௌகரியக் கேள்விகளை எழுப்பிக்கொண்டு விளையாடலாம். ஆன்மீகச் சுயத்துக்கும் சமூகச் சுயத்துக்குமான உறவுகளை, முரண்களை ஆராயலாம். விளையாட்டுத்தனமாக, சிரித்தபடியே இதை செய்யலாம். நேர்மையாக ஆழம் நோக்கி போகலாம். அரசியல்சரிகளை பற்றி, அதிகாரக் கெடுபிடிகளைப் பற்றி கருத்தியல் இறுக்கங்களைப் பற்றி கவலைப்பட வேண்டாம். இதற்காகவாவது, பெண் தன் சுயத்தைக் கண்டடைந்து தான் யார் என்று உண்மையில் அறிந்து தெளிவுறுவதற்காகவாவது, பெண்ணெழுத்தின் அடுத்த படிநிலை ஆழமான படைப்பெழுத்து நோக்கிய நகர்வாக அமையவேண்டும் என்று விருப்பப்படுகிறேன்.

எங்கும் விரியும் கற்பனையைப்போல், இலட்சிய உலகங்களைக் கனவு கண்டு உருவாக்குவதைப்போல், இன்னொரு கலக சக்தி இல்லை. படைப்பிலக்கியமே தன் கற்பனை மூலம் உலகத்தின் சிந்தனைப்போக்கின் முன்னிலையில் நின்று புதிய சாத்தியங்களைச் சுட்டுகிறது. இன்று நாம் வாழும் உலகத்தைக் கட்டமைத்த விழுமியங்கள் அனைத்துமே பதினெட்டாம் நூற்றாண்டில் வால்டேர் எழுதிய ‘காண்டீட்’டிலிருந்தும் ரூஸோவின் ‘ஹெலொயீ’ஸிலிருந்தும் உருவாகி வந்தவை. இரண்டுமே கதைப்புத்தகங்கள். அதே போல் இந்தியாவில் பங்கிம் சந்திர சட்டோபாத்யாயரின் ஆனந்த மடம் நாவலின் தாக்கத்தையும் சொல்லலாம்.

தவிர, படைப்புச் செயற்பாட்டில் ஈடுபடும்போது ஒரு சாத்தியம் – அது மானுடருக்கே உரித்தானது – நாம் நம்முடைய சிறு வட்டங்களுக்குள்ளிலிருந்து வெளிவந்து எல்லாவற்றையும் ஒட்டுமொத்தமாகப் பார்க்கலாம். ஜன்னல் துண்டு வானமும் கிணற்று வட்ட வானமும் மிகச்சிறியவை. சுயத்தை அறிய கற்பனை மூலம் சுயத்தை உதறுவதும் ஒரு வழி. அப்போது பல வாழ்க்கைகளை வாழலாம். பல கண்கள் வழியாக உலகத்தைக் காணலாம். பலர் வலிகளை அறியலாம். சுயத்தை விரித்துக்கொள்ளலாம். நாம் நம்மைப் பார்க்கும் விதமும் மாறுபடும்.

மாறாக, பெண்ணியம் உள்ளிட்ட எந்த ஒரு கருத்தியலும் இறுக்கமானது. கருத்தியலை முன்வைத்து எழுதப்படும் புனைவு அடிப்படையில் படைப்பூக்கத்துக்கு எதிரானது. ஒற்றைப்படையான பதில்களை அளிக்கக்கூடியது. ‘நான் இதுதான்’ என்று முதலிலேயே வரையறுத்து நிற்பது. பல நேரங்களில் அந்த ‘நான் யார்’ என்ற கேள்வி நம்மை இட்டுச்செல்லும் இடங்களுக்கு, நம்முள் நாம் ‘உண்மை’ என்று முன்னரே வகுத்துக்கொண்டிருக்கும் கருத்தியல் நம்மைச் செல்ல அனுமதிக்காது. 

பெண்ணியத்தின் முக்கிய பங்களிப்பு அது உருவாக்கும் சொற்கட்டுகள் (vocabulary). Gaslighting, domestic violence, mansplaining போன்ற சொற்கள். இவற்றுக்கு சமூக-அரசியல் முக்கியத்துவம் இருக்கிறது. ஓரளவுக்கு உளவியல் ரீதியான முக்கியத்துவமும் இருக்கிறது. ஆனால் அனுபவத்தளம் என்பது எப்போதுமே சிக்கலானது. இந்த அவலங்கள் உளவியல் தளத்தில் எவ்வாறு உரவாகின்றன என்று புரியாத வரை என்னதான் மேல்பூச்சு போல் அரசியல்சரி பேச்சுகள் மாறினாலும் இது தனிமனித உள்ளத்திலும் சமூக கூட்டுமனத்திலும் மாறாது.

அடுத்து, பெண்ணியம் போன்ற கருத்தியலுக்கு மீவியற்பில் தளம் (metaphysics) கிடையாது. பெண்ணின் சமூக அடையாளம் என்ன என்று அது சொல்லும். பெண் இருப்பு என்றால் என்ன என்று அதனால் சொல்லிவிட முடியாது. ஆக எளிமையான சொற்களுக்குள் கருத்துகளுக்குள் அடைத்துவிடமுடியாத இந்த அனுபவத்தளங்களை தொடவே இலக்கியம் தேவையாகிறது.      

தமிழ் எழுத்துப் பரப்பிலேயே (ஓரளவுக்கேனும்) எளிய பிம்பங்களை ஒதுக்கி, ஆழமுள்ள பெண் பாத்திரங்களைப் படைத்த தரப்பு நவீன இலக்கியத்தினுடையது என்று அம்பை தன்னுடைய இரண்டு நூல்களிலும் பதிவு செய்கிறார். வாரப் பத்திரிக்கைகளிலும் (பெண்கள் எழுதிய எழுத்தையும் சேர்த்துத்தான்!), கழகம் சார்ந்த எழுத்துகளிலும் உள்ள பெண் பாத்திர சித்திரிப்பை விட நவீன இலக்கியப் படைப்புகளில் பெண் பாத்திரங்கள் காத்திரமானவை என்பது என் வாசிப்பனுபவமாகவும் இருந்துள்ளது. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை உட்பட அம்பையின் சில சிறுகதைகளிலேயே வரும் பெண் அனுபவம் சார்ந்த நுட்பங்கள் இவ்வகையில் குறிப்பிடத்தக்கவை. உதாரணத்துக்கு ஒரு கதையில் நகர்ப்புறத்திலிருந்து ஒரு ஆராய்ச்சியாளர் திருநெல்வேலிக்கு செல்வார். அங்கு எந்த உடற்கூச்சமும் இல்லாமல் பெண்கள் சேர்ந்து குளிப்பது வழக்கமாக இருக்கும். நகர்சார் நவீனப் பெண்ணுக்கு இது முதலில் அசௌகரியத்தை உருவாக்கும். ஆனால் அந்த இயல்புணர்வே பின்பு விடுதலையுணர்வாக, மாற்று வாழ்க்கைநோக்கு கொண்ட மற்றப் பெண்கள் தனக்கு அளித்த பரிசாகக் காணத்தொடங்குவார். அனுபவ நுட்பங்கள் அளவுக்கு, உளவியல் நுட்பங்கள் அம்பையின் எழுத்தில் வருவதில்லை. நான் வாசித்த வரை என் ரசனையின் அடிப்படையில் பெண்ணின் அகத்தை சுயத்தின் இடத்தை தமிழில் ஆழமாக விசாரித்த மூன்று எழுத்தாளர்கள் கி.ராஜநாராயணன் (நாட்டார்பாணி கதைகள், யதார்த்த புனைவுகள் வழியாக), ஜெயகாந்தன் (நகர்ப்புற மக்களின் வாழ்வியல் சார்ந்த யதார்த்தவாத புனைவுகள் வழியாக), ஜெயமோகன் (தொன்ம மறுஆக்கங்கள் வழியாக). படைப்பிலக்கியத்துக்கு வெளியே இந்த ஆழம் உருவாகவில்லை. பிம்பங்களாக, அல்லது ஒற்றைப்படையான அனுபவக் குறிப்புகளாக, சுயவெளிப்பாடுகளாக, எதிரீடுகளாக நின்றுவிடுகிறது. இரண்டாம் வகை ஆக்கத்தில் ‘ஆமேன்’ சொல்வதைத் தவிர வாசகப் பங்கேற்புக்கு பெரும்பாலும் இடம் இல்லை.

பெண்ணெழுத்தும் படைப்பெழுத்தும் – முரண்கள், சவால்கள்

The Face Behind The Mask’ நூலின் முன்னுரையில், தான் பெண் எழுத்தாளர்களை பற்றி ஒரு நூல் எழுதப்போவதாக சொன்னபோது, ஒரு மூத்த எழுத்தாளர், “பெண்ணெழுத்தாளரா? அந்தப் பதமே முரணாக உள்ளதே?” என்று நக்கலாகச் சொன்னதாக அம்பை பதிவு செய்கிறார். உலக இலக்கியப் பரப்பில் பெண் எழுத்தை நோக்கிய ஏளனப் பார்வை எப்போதுமே இருந்து வந்துள்ளது. பேரிலக்கியவாதிகள் பெரும்பாலும் ஆண்களாக இருந்துள்ளார்கள், பெண்களுள் எழுதுபவர்கள் பலரும் படைப்பூக்கத்துடன் எழுதுவதில்லை என்ற தர்க்கப்புள்ளி ஒரு பக்கம் என்றால், ‘பொம்பள பிள்ளைங்க என்னாத்த எழுதீறப்போறாங்க’ என்ற உதாசீன ஆண்மைய நோக்கு அதற்கு மறு எல்லை. இன்று பெண்ணெழுத்துக்கெதிராக முன்வைக்கப்படும் விமர்சங்கள் இவ்விரு எல்லைகளுக்குள் இயங்குபவை. ஒன்று விவாதிக்கப்படலாம், மற்றொன்று வெறும் அபிப்பிராயம். இரண்டாவதை கேள்விக்குட்படுத்திக்கொள்வது அவரவர் மனச்சாட்சி சார்ந்த செயல்பாடு.

தமிழ்ப்பரப்பில் பெண்கள் ஏன் அதிக எண்ணிக்கைகளில் படைப்பிலக்கியம் எழுதவரவில்லை என்ற புறவயமான, மிக முக்கியமான ஒரு கேள்விக்கு ‘The Face Behind The Mask’ நூலில் துலங்கி வரும் சித்திரத்தில் பல வலிமிக்க விடைகள் பொதிந்துள்ளன.

50-60-களில் வார இதழ்களில் எழுதி நட்சத்திரங்களாக விளங்கிய சில பெண் எழுத்தாளர்கள் உண்மையில் தாங்கள் குடும்ப வற்புறுத்தலின் பெயரில் பணத்துக்காக எழுதியதாக இந்நூல் வழியே பதிவுசெய்கிறார்கள். அவர்கள் என்ன மாதிரி எழுத்தை எழுத வேண்டும், அக்கதையில் பெண் பாத்திரங்களின் இடம் எப்படி வார்க்கப்பட வேண்டும் என்று குடும்பத்தின் தலையீடு இருக்குமாம். எழுதிக் குவித்து நட்சத்திரங்களாகி சம்பாதித்து அடுக்கிய இவ்வெழுத்தாளர்கள் பலருக்கு எழுத்து சுயத்தேடலுக்கான வெளியாக அமையவில்லை. இக்கெடுபிடிகளை மீறி அவர்கள் சொந்த பிரக்ஞையோடு எழுதியிருக்கவேண்டுமென்றால் குடும்பத்தை முறித்துக் கொண்டு செல்லும் நிலைமை வந்திருக்கும் என்று சொல்ல வேண்டியதில்லை. வேறுவகையில் பொருளாதாரச் சுதந்திரம், அடையாளம் அமையாதவர்களுக்கு இது மிக சங்கடமான ஒரு நிலையை ஏற்படுத்தியிருக்கும்.

இதற்கு மறுபக்கமாக நின்ற பெருநிறுவன வார இதழ்கள், பல வகைகளில் பெண்ணெழுத்தாளர்களின் நேர்மையான வெளிப்பாட்டை ஒடுக்கும் ஆதிக்க நிறுவனங்களாக இருந்தன என்பதையும் வாசிக்கிறோம். அவற்றுக்கு இதழ்களை விற்று இலாபம் ஈட்டவேண்டிய நோக்கம். பெண் எழுத்தாளர்களை ஒரு குறிப்பிட்ட வகை எழுத்தை மட்டுமே  அளிக்கக் கோரின. சற்றே வித்தியாசமான, படைப்பூக்கத்துடன் கூடிய, மரபார்ந்த மதிப்பீடுகளுக்கெதிரான கதைகளை, வாடிக்கையான வாசகர்களை அன்னியப்படுத்திவிடக்கூடாது என்று கூறி நிராகரித்தன. காப்பிடலிசத்தில் முதலாளி வைப்பதுதான் சட்டம், பிடிக்கவில்லையென்றால் எழுதாதே என்று இன்று நாம் ‘நியாயம்’ பேசலாம், ஆனால் தார்மீகமாக எனக்கு அது தவறாகவே படுகிறது. எப்படியும் இது ஒரு அவலநிலை என்பதை சுட்டிக் காட்டவேண்டியுள்ளது. பெரிய நிறுவன இதழ்களின் தாக்கம் தமிழ் பெண்ணெழுத்தை போன்சாய் மர அளவுக்கே குறுக்கிவைத்தது என்றால் மிகையல்ல.

ஆனால் மாற்றுத் தரப்பில், இவ்வெழுத்தாளர்கள் விருப்பத்துடன் தான் வார இதழ்களில் எழுதினார்கள் என்பதையும் கவனிக்கிறோம். அந்த காலத்தில் எழுதிய பெண் எழுத்தாளர்களுக்கு வார இதழ் எழுத்து பொருளாதாரச் சுதந்திரத்துக்கான ஒரு வழியாக அமைந்திருக்கலாம். குடும்பப் பெண்ணின் பாதுகாப்பான, மரபார்ந்த மதிப்பீடுகளுக்கும் நின்று “நல்ல பெண்ணாக” எழுதும் வரை சமூகத்தின் கண்களுக்குள் அது கௌரவமான தொழிலாகவும் அமைந்திருக்கலாம். பெயரும் புகழும் கிடைத்தது. ஆகவே அவர்கள் இதனைப் பெரிய யோசனை இல்லாமல் தேர்ந்தெடுத்திருக்கலாம். சற்றே ஆத்மார்த்தமாக எழுதியவர்கள் கலைமகள் போன்ற இதழ்களில் எழுதினார்கள் ஆனால் அவர்களாலும் இந்த மதிப்பீடுகளை மீறி வர முடியவில்லை. எழுத்தின் வழி உண்மையான தேடல்களை நிகழ்த்திக்கொள்ள முடியவில்லை. தங்களையே ஆச்சரியப்படுத்தக்கூடிய ஒரு கதையை எழுதமுடியவில்லை.

இன்று யோசித்துப்பார்க்கையில், ஒரு வேளை அப்படியொரு சாத்தியமிருப்பதையே அவர்கள் அறிந்திருக்க வழியில்லாமல் இருந்ததோ என்று நினைக்கத் தோன்றுகிறது. ஆண்களுக்கு இளவயதில் இலக்கிய கருத்தியல் அறிமுகமெல்லாம் பெரும்பாலும் சூழல் நட்புகள் மூலமாகவே நிகழ்கிறது. விவாதங்கள் மூலமே இலக்கியம் சார்ந்து கல்வியும் கூர்தீட்டலும் நிகழ்கிறது. எல்லா இலக்கிய இயக்கங்களும், உலகம் முழுவதும், கூட்டுச் செயல்பாடாகவே நிகழ்கின்றன. பெண்களுக்கு, இன்றுவரை கூட, அவ்வளவு விரிவான வெளியுலக நட்புவட்டம் சாத்தியப்படுவதில்லை. இத்தனைக்கும் தமிழில் வார இதழ் நட்சத்திரங்களாக அமைந்த பெண் எழுத்தாளர்கள் பெரும்பாலும் உயர்சாதிகளை சேர்ந்தவர்கள். படித்தவர்கள். அவர்களுக்கே இந்த வாசல்களைக் கண்டடைய, அணுக, நுழைய தடைகள் – அகத்திலோ, புறத்திலோ – இருந்திருக்கின்றன. அப்படியிருக்க மலைச் சமூகப் பெண்களும் கடற்கரைச் சமூகப் பெண்களும் ஒடுக்கப்பட்ட சமூகப் பெண்களும், சிறுபான்மையினப் பெண்களும் என்று தங்களுடைய தேடல்களை, கண்டடைதல்களை படைப்பிலக்கியமாக எழுதப்போகிறார்கள்? அவர்களுடைய கட்டற்ற கற்பனைக்கான குரலாக எழுத்துவெளி இங்கு அமைய வேண்டாமா? இந்தக்கேள்விகளை நேரடியாக எதிர்கொண்டு விரிவான விவாதங்கள் அமைந்து விடைகொள்ளவேண்டிய தருணம் இப்போதாவது நேர்மையாக நிகழவேண்டும்.

உடல்வெளியும் பெண்மொழியும்

90-களுக்குப்பிறகு, பெண் கல்வி தமிழகத்தின் பலபகுதிகளில் பரவலான பிறகு, பெண் வாழ்க்கையில் முன்பை விட குடும்பம், கல்வி, சமூகம் சார்ந்து சுதந்திர வெளியை அடைந்துவிட்ட காலத்தில், வாய்ப்புகள் அதிகரித்தபோது, படைப்பூக்கமும் கற்பனை வளமும் கொண்ட பெண்களின் எழுத்து எழுந்து வந்திருக்கலாம். ஆனால் அது நிகழவில்லை.

இதற்கு ஒரு காரணம், 70-கள் தொடங்கி மூன்று தசாண்டுகளுக்கு நிகழ்ந்த பின்னமைப்பியல் சிந்தனையின், மற்றும் இரண்டாம், மூன்றாம் அலை பெண்ணிய சிந்தனையின் தாக்கம் என்று வகுக்கலாம். 1970-ல் வெளிவந்த அவுஸ்திரேலிய எழுத்தாளர் ஜெர்மெயின் க்ரியரின் ‘The Female Eunuch’ என்ற நூல் பெண்களுக்கான பெண்கள் தங்கள் உடலை, பாலியலை அறிந்து கொண்டாடுவதன் தேவையைப் பற்றி பேசியது. அதே ஆண்டு வெளியான கேட் மில்லெட்டின் ‘Sexual Politics’ என்ற நூல், பெண்களின் உடல், பாலியல் இரண்டுமே சமூக-அதிகார அமைப்பால் சுரண்டப்படுகின்றன, ஆகவே அது தனிமனிதப் பிரச்சனை அல்ல, அரசியல் பிரச்சனை என்றது. இந்த நூல் முதன் முதலாக மேற்கத்திய மரபின் ‘கேனன்’ எனப்படும் இலக்கிய ஆக்கங்களின் ரசனை வரிசையைப் பெண்ணிய நோக்கில் விமர்சித்தது. மைய இலக்கியப் போக்கே ஒரு ஆண்மைய ஆதிக்கசக்தி என்ற சிந்தனை பெண்ணிய வட்டங்களில் இந்தப்புள்ளியிலிருந்து உருவாகத்தொடங்கியது.

உடலெழுத்து, பெண்ணெழுத்து என்று இன்று அடையாளப்படுத்தப்படுபவை எல்லாமே இங்கிருந்து தொடங்கியவை. உலகம் முழுவதும் எழுந்த அந்த அலை தமிழுக்கு 90கள்-2000-ங்களில் வந்து சேர்ந்தது. பெண்கள் தங்கள் தனித்தன்மைக்கான தேடலை, ஒடுக்குமுறைக்கெதிரான குரலெழுச்சியை, எழுத்தில் தன் உடலை ஆராய்வதன் மூலம் நிகழ்த்திக்கொள்ளலாம் என்ற புரிதலின் அடிப்படையில் பல எழுத்தாளர்களும் கவிஞர்களும் உருவானார்கள். உடலெழுத்து என்ற இந்தப் போக்கு மைய இலக்கியப் போக்குகளுக்கு எதிர்நிலையாகக் கருதப்பட்டது. பெண்கள் ஒடுக்குமுறைக்கு எதிராக, மரபார்ந்த எதிர்பார்ப்புகளுக்கு எதிராக குரல்கொடுப்பதனாலேயே இவ்வெழுத்து கொண்டாடப்பட வேண்டுமென கூறப்பட்டது. அதே நேரத்தில், இந்த கருத்தியலின் ஜடவாத அடித்தளமும், உடலைத் தாண்டி பெண்ணின் அக முழுமைக்கு எதிரான சமூக அழுத்தங்களும், இந்த விவாதச்சூழலில் அதிகம் பேசப்படவில்லை.

‘உடலெனும் வெளி’ நூலில் அம்பை, பெண்கள் இவ்வகை எழுத்தை நிகழ்த்திக்கொள்ள தனி மொழி அமைப்புகளை கையாள்கிறார்கள் என்கிறார். தங்களுக்கென்று சொந்தமாக தன் உடல் சார்ந்த, தன் உலகம் சார்ந்த மொழியை கட்டமைத்துக்கொள்வதன் வழியாக, பெண்கள் தங்கள் உடலை ஆண்மையச் சமூகப் பார்வைகளிலிருந்து மீட்டெடுக்கிறார்கள் என்கிறார்.

‘பெண்ணெழுத்து’ அல்லது ‘பெண் மொழி’ (Ecriture feminine) என்ற பதம் உளவியலாளர் ழாக் லக்கானின் கருத்துகளிலிருந்து பின்னமைப்பியல்வாத பெண்ணிய சிந்தனையாளர்கள் ஹெலென் சிக்சூ மற்றும் ஜூலியா க்றிஸ்டேவாவால் உருவாக்கப்பட்டது. உலகத்தில் புழங்கும் மொழி ஆண்மைய, அதிகாரக் குறியீட்டுக் கட்டமைப்பின் ஒரு பகுதி என்றும், அதற்கு மாற்றாக, குழந்தைப் பருவத்தில் மொழி உருவாகத் தொடங்கிய காலத்துக்கு முந்தைய மனவெளியிலிருந்து, இன்னொரு மொழியை உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் இவர்கள் சொன்னார்கள். இந்த மொழிவெளிப்பாட்டையே அவர்கள் ஆண்மைய பொதுமொழிக்கு எதிரீடாக பெண்மொழி என்று குறிப்பிட்டார்கள். பெண்கள் எழுதும்போது ஆதிக்கசக்தியான பொதுமொழியில் எழுதாமல் இப்படியொரு மாற்றுமொழியை கையாளவேண்டும் என்ற கருத்தை முனவைத்தார்கள். மேலும், இது பெண்களுக்கான மொழி மட்டுமல்ல, ஆதிக்க சக்திகளுக்கு எதிராக எழுத விரும்புபவர்களெல்லாமே, ஆணோ பெண்ணொ, இதனை கையாளலாம் என்று கூறப்பட்டது. இந்த வகை ‘பெண்மொழி’க்கு எடுத்துக்காட்டாக அன்றைய விவாதங்களில் வைக்கப்பட்டது ஜேம்ஸ் ஜாய்ஸ் மற்றும் வர்ஜீனியா வூல்ஃபின் எழுத்துக்கள். பின்நவீனத்துவ எழுத்துமொழியின் சாத்தியங்களும் இந்த அமைப்பை தொடுவதாகக் கூறப்படுகிறது.

ஆனால் இன்று ‘பெண்ணெழுத்து’, ‘பெண்மொழி’ என்று சொல்லப்படும் பதம் உத்தேசிப்பது இந்த வரையறுக்கப்பட்ட கருத்தை அல்ல. அதன் எல்லைகள் மாறிவிட்டன. பெண்கள் தங்கள் உடல்களை, தனிஉலகத்தை எழுதக் கையாளும் மொழிவெளிப்பாடு அனைத்துமே பெண்மொழி என்று கூறப்படுகிறது. அம்பையும் இந்த அர்தத்திலேயே இப்பதத்தை தன் நூலில் கையாள்கிறார்.

தமிழில் பெண்மொழி வெளிப்பாட்டை ஆராயும் ஆசிரியர் இந்த நூல் வழியாக அளிக்கும் சில உதாரணங்கள் சுவாரஸ்யமானவை – ‘உலைபோல் மனம் கொதித்தது’ என்றும் ‘பால்போல் பொங்கியது’ என்றும் பெண்ணெழுத்தாளர்களே எழுதுவதாக குறிப்பிடுகிறார். கவிதையிலும் இவர் அளிக்கும் எடுத்துக்காட்டுகள் வழியே சில பொதுக்கூறுகள் கிடைக்கப் பெறுகின்றன. ‘நான்’ என்ற நேரடிக்கூற்று, நெளிவுகள், அழகியல் சார்ந்த வர்ணனைகள், நிறங்கள், வானத்துக்கான ஏக்கம் போன்ற கூறுகளை இவ்வாக்கங்களில் அடையாளம் கண்டேன். இக்கூறுகள் என் எழுத்துப்பயிற்சியிலும் இயல்பாகப் பயின்று வருவதை கவனித்திருக்கிறேன்.

அதே நேரம் கவிதை மொழியில் பெண்மொழியில் எழுதப்பட்டதென்ற வகையில், உடலை முன்வைத்து எழுதப்பட்டதென்ற வகையில், பெண்ணெழுத்தாளர்களின் குறிப்பிட்ட சாத்தியக் கண்டடைதல்கள் என்ன, மற்ற கவிஞர்களின் மொழியோடு எங்கு இசைகிறார்கள், எங்கு வேறுபடுகிறார்கள், மையக்கவிதைப் போக்குடன் இக்கவிதைகளின் உறவென்ன போன்ற விமர்சனங்கள் இந்நூலில் முனவைக்கப்படவில்லை. பெண் கவிஞர்களுக்கிடையேயான வேறுபாடுகள், சிறப்புகள் குறித்த விமர்சனப்பார்வையும் இந்த நூலில் இல்லை. ஆசிரியர் பல கவிஞர்களின் வரிகளை மேற்கோள் காட்டுகிறார்; பெருந்தேவியைத்தவிர என் வாசிப்பில் ஒரு கவிஞரின் குரலுக்கும் இன்னொரு கவிஞரின் குரலுக்கும் மொழிக்கும் என்னால் வேறுபாடு காணமுடியவில்லை. சட்டென்று ஒரு கவிதைவரியை எடுத்தவிழ்த்தால் இது இன்னாருடைய வரி என்று உடனே மனம் கண்டுகொண்டு குதூகலிக்கும் முத்திரை இல்லை. நான் நான் என்ற ஏக்கத்த்தை, தேடலைக்கொண்ட இக்கவிஞர்கள், பெண்மொழி என்ற பொதுபிம்பத்தைத் தரித்துக் கொண்டு, தங்கள் தனிமொழியை சுயத்தை கைவிட்டுவிட்டார்களோ என்ற அச்சம் ஏற்பட்டது.

பழைய பிம்பங்கள்; புதிய பிம்பங்கள்

‘The Face Behind The Mask’, ‘உடலெனும் வெளி’, இரண்டு நூல்களிலுமே தமிழ்ச்சமூகம் பெண்கள் மீது கற்புக்கரசி, அன்னை, ஜீன்ஸ் அணிந்த நவீனப்பெண் என்றெல்லாம் சுமத்தும் பிம்பங்களை (persona) பற்றிக் குறிப்பிட்டு அம்பை தொடங்குகிறார். அவை கட்டமைப்புகள் என்றும், பெண்களை குறிப்பிட்ட வகைகளில் ஒழுக மறைமுகமாக ஆணையிடுகின்றன என்றும், அவை பெண்களின் சுயக் கண்டடைதலையும், இயல்பான வெளிப்பாட்டையையும் தடை செய்கின்றன என்று கூறுகிறார். அவை எழுத்தின் மூலம் மொழியின் மூலம் கேள்விக்குள்ளாக்கப்பட்டு களையப்படவேண்டும் என்கிறார்.

ஆனால் இவ்விரண்டு நூல்களை வாசித்து முடித்தபோது எனக்கு தோன்றியது இதுதான். இன்று திரும்ப நோக்குகையில், எந்த பிம்பங்களை முறியடிக்க நூறாண்டுகால தமிழ்ப் பெண் எழுத்து போராடி வருவதாகச் சொல்லப்படுகிறதோ, அதே பெண் எழுத்து பிண்டங்களைப்போல் இரு பிம்பங்களுக்குள் தன்னை கொண்டு சேர்த்துக் கொண்டுள்ளதாக தோன்றுகிறது. 1990-களுக்கு முன்னால் ‘குடும்ப எழுத்தாளர்’ என்ற பிம்பம் என்றால் 1990-க்கு பின்னால் ‘பெண்ணியவாதி’ பிம்பம்.

இந்த பிம்பங்கள் யாராலும் சூட்டப்பட்டதில்லை என்பதையும் கவனிக்கலாம் ; மாறாக, தங்களுடைய எழுத்துக்களின், வெளிப்பாட்டின் வழியாக, எழுத்தாளர்கள் தங்களுக்கே சூட்டிக்கொண்ட பிம்பங்கள் இவை. விதிவிலக்குகள் உள்ளனர் என்றாலும் ஒரு மெஷீன் லர்ணிங் புரோகிராமிடம் நூறுவருட தமிழ்ப்பெண் எழுத்தாளர்களின் நிரையை அளித்தால் இந்த பகுப்பைத் தானாக நிகழ்த்திவிடும் என்று தோன்றுகிறது.

70-களுக்கு முன் பெண் எழுத்தாளர்கள் சமூகத்துடன் ஒன்றி வாழ்வதை தங்கள் எழுத்தின், அடையாளத்தின் முக்கிய அம்சமாக வைத்திருந்தார்கள். 90-களுக்கு பின் பெண் எழுத்தாளர்கள் சமூக மதிப்பீடுகளுக்கு எதிராக கலகக் குரல் எழுப்புவதை ஒரு அடையாளமாகக் கொண்டிருக்கிறார்கள். இரண்டுக்குமான வரலாற்றுத் தேவை இருந்தது என்பது நிதர்சனம். இவ்வகை எழுத்தின் வரலாற்று இடத்தை நான் குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் சுயக்கண்டடைதல் என்று வரும் போது ஏதோ குறைகிறது.  சுயம் என்பது இரண்டின் இசைவு, இரண்டையும் கடக்கும் எழுச்சி. அதற்கான சாத்தியம் எழுத்தில் உருவாக வேண்டும். 


ஏனென்றால் எழுத்து முழுமை பெற, ‘நான்’ என்ற பதத்துக்கு எல்லா சாத்தியங்களும் ஆராயப்பட வேண்டும். தனக்கும் வெளிக்குமான உறவைப் பற்றிய எல்லா சாத்தியங்களும் ஆராயப்படவேண்டும். குடும்பமும் உடலும் உறவுகளும் இவற்றில் சிறு பகுதி. இவற்றில் ஒன்றில் மட்டுமே கவனம் செலுத்துவதென்பது ஒரு சிறு துளை வழியாக உலகத்தைப் பார்ப்பது போன்றானது. 


தங்கள் வட்டத்துப் பிம்பங்களுக்கு வெளியே பெரும்பாலானவர்கள் எழுதுவதில்லை; இந்த அம்சமே பிம்பத்தை தளையென்றாக்குகிறது. முதல்வகை எழுத்தாளருக்கு சமூகம் தளையென்றால் இரண்டாம் வகை எழுத்தாளருக்கு கருத்தியல் தளை. இந்த பிம்பங்களை மீறிய ஆக்கங்கள் பெரும்பாலும் வந்ததில்லை என்பதே இவை தளைகள் என்பதற்கான சான்று.

ஆக, ‘The Face Behind The Mask’ நூலில் அம்பை குறிப்பிடும் கிணற்றுத் தவளைத்தனம் இன்றும் மறைந்துவிடவில்லை என்று தான் எண்ணத்தோன்றுகிறது. வேறு கிணறு, வேறு தவளைகள், அவ்வளவுதான். ஆனால், வானத்துக்கான ஏக்கம், எல்லா கட்டத்திலும் எல்லா எழுத்தாளர்களிடம் இருந்த ஏக்கம், அப்படியே தான் உள்ளது என்பதை இங்கு வலியுடன் நினைத்துக்கொள்கிறேன். கைகலப்பில் வெற்றி, போரில் தோல்வி என்ற நிலை உருவாகிவிடக்கூடாதே என்று அச்சப்படுகிறேன்.

*

உலகமும், தன் உள்ளமும், தன் மீது சூட்டியுள்ள பிம்பங்களை சட்டைபோல் விலக்கி தன்னுடைய சுய உண்மை என்ன என்று அச்சமறுத்து கண்டடையும் பயிற்சியே எழுத்து. அது நேர்மையுடன் நிகழும்போது இலக்கியமாகிறது. இன்று எழுத வரும் பெண் எழுத்தாளர் தன் மீது இரண்டாயிரமாண்டுகால ஆதிக்க வரலாறு மட்டுமல்லாது, கடந்த ஐம்பது வருடங்களாக உருவாகி வந்துள்ள பின்னமைப்பியலும் பெண்ணிய கருத்தியலும் உருவாக்கிய பிம்பங்களையும் உளவியல் அசைவுகளையும் உள்வாங்கியபடியே கடந்த படியே தான் தன் எழுத்தை தேடலை நிகழ்த்த வேண்டியிருக்கிறது. சமூகத் தளத்தில் பெண்ணிய கருத்தாடலின் மதிப்பு மிகமுக்கியமானது, அதை குறைத்துப் பேசவரவில்லை. ஆனால் எழுத்தில் உண்மை என்பது எல்லா பிம்பங்களுக்கும் வெளியே தான் உள்ளது, கருத்தியல் பிம்பங்களுக்கும் வெளியே தான்.

அம்மணியம்மாளின் கதையின் வரும் மரத்தின் ‘சங்கல்பம்’ பல்வேறு அழுத்தங்களால் முழுமையாக சம்பவிக்காமல் போயிருக்கலாம். ஆனால் அதன் பெறுமதி இன்றும் செல்லுபடியாகிறது. அந்தக்கனவு இன்னும் உயிர்ப்புடன் இருக்கிறது. அது சம்பவித்தாகவேண்டும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.