கணேசன் தாத்தா

விறு விறுவென   நடந்தும்  ஒன்பது  பத்தாகி  விட்டது.இன்று சின்னவன் படுத்திவிட்டான்.எச் .எம் வேற என்ன சொல்லுமோ? வேகமாய் வந்து பிரேயரில் நிற்கிறாள் மீனா.

“உன் சீரிளமைத் திறம் வியந்து செயல்மறந்து வாழ்த்ததுமே”

எச்.எம். நிற்கவில்லை என்பதை கவனிக்கிறாள் அப்பாடா!!

உதவித் தலைமை ஆசிரியர் காந்தி சார் தான் அசெம்பிளியில் நிற்கிறார். அவர் கடினமாக எதுவும் சொல்லமாட்டார்.

       பக்கத்தில்  இருந்த சயின்ஸ் “குட்மார்னிங் “என்று சிரிக்கிறாள்.

இவள் மட்டும் எப்படித்தான் எப்பவும் பிரஷ்சா இருக்காளோ ‘நேர்த்தியான அவள் சேலையைப்  பார்த்தவாறு வியர்வை பொங்கும் முகத்தை துடைத்துக் கொள்கிறாள். வெயிலில் கண்கள் கூச அருகில் நிற்கும் குல்மெகர் மரத்தடி பக்கம் தள்ளி நிற்கிறாள். மஞ்சள் கோபி வண்ணக் கைப்பிடிச் சுவற்றின்  மீதெங்கும் சிவந்த மேபிளவர்கள் சிதறிக் கிடக்கின்றன. மரத்தின் மீதெல்லாம் பிள்ளைகள் கிறுக்கியும்,எழுதியும் வைத்திருக்கிறார்கள். கப்,அ,மா என்று கழுத்துகள் காம்பசால் குத்தி எழுதப்பட்டு அடிமரத்தில் பதியப்பட்டுள்ளன. பச்சைமரமாக இருந்தாலும் அவையெல்லாம் அழகாகத்தான் இருக்கின்றன. அருகில் நகராட்சிக்  கிணறு  மேலே இரும்புக் கம்பி வலையால் மூடப்பட்டிருக்கிறது. தண்ணீரற்ற கிணறு குப்பைகளாலும், பேப்பர்களாலும், பிளாஸ்டிக் பாட்டில்களாலும்  நிறைந்திருக்கிறது. பக்கத்தில் நீர்த்தேக்கத் தொட்டி. அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற நீலவண்ண எழுத்துகள்  பாதி தான் தெரிகி்ன்றன. கை கழுவும் குழாய்கள் எதிலும் தண்ணீர் வருவதில்லை.

              இன்று வியாழன் .நாளை ஒருநாள் தான். எப்படியோ இந்த வாரம் ஓடிவிட்டது. பள்ளிப் பிள்ளைகளைப் போலவே எப்படா லீவ் வரும் என்று எண்ணும் நிலை வந்தாச்சு.

அசெம்ப்ளி  முடிந்ததும் அட்டெண்டன்சில் கையெழுத்திடுகிறாள். பாதிச் சிரிப்புடன் வார்த்தைகளை முடிக்கும் வேடியப்பன் சாரின் குரல் சத்தமாக ஒலிக்கிறது. அவரின் சத்தம்  ஸ்கூலின் அடையாளமாகவே மாறிவிட்டிருந்தது. வகுப்பறையில் பேசிப்பேசி நிறைய ஆசிரியர்கள் சத்தமாகத்தான் எப்பொழுதும் பேசுவது. வேடியப்பன் சார் மனைவி வேலைக்குச் செல்லவில்லை. மனைவி அருமையாகச் சமைப்பார்கள்.

காலையிலேயே பேப்பர்  முழுவதும் படித்து விடுவார். இந்த ஜியோ எப்படி ஆபர் குடுக்கிறான்னா” என்று  அம்பானி குடும்பத்தையே  இழுத்து கிழித்துக் கொண்டிருந்தார்.

   யாருக்கு  எது என்றாலும் ஓடி வந்த உதவி செய்வார். ஆனால் வகுப்பில் பாடம்  மட்டும் நடத்தமாட்டார். தலைமையாசிரியர்  எதுவும் சொல்ல  முடியாது. அவர் கூட்டணியில் செயற்குழு உறுப்பினர். எல்லாவற்றிற்கும் பெடரேஷனை இழுத்து விடுவார். எந்த எச்.எம் வந்தாலும் அவரை மட்டும் ஒன்றும் செய்ய முடியாது.

         வகுப்பறைக்குச் சென்றதும் வருகைப் பதிவேட்டை எடுக்கிறாள்.வலது பக்க ஜன்னல் பாதி உடைந்து துணி வைத்து கட்டியிருக்கிறது.மங்கிய கோபி வண்ணச்சுவர்களில் மழைநீர் ஓதம் படிந்த தடங்கள் மலைத் தொடர்கள் போன்று தோற்றங்கொண்டிருக்கின்றன.ஆணியில் தொங்கும் தமிழ்  எழுத்து அட்டவணை.மகாத்மா காந்தி படம்,உபயம்:கவுன்சிலர் கரீம் கான்.வார்டு எண் :54,,    அருகில் பாரதி, திருவள்ளுவர், ஔவை, பாரதிதாசன், எல்லோரும் நெருக்கியடித்துக் கொண்டு நிற்கும் படம் பிண்ணனியில் ஜிகினா கிரீடத்துடன் தமிழன்னை. இடதுபுற மேசையில் நீலவண்ணம் ஓரங்களில்  மட்டும் இருக்கும்,பாதி நசுங்கிய  உலக உருண்டை.கட்டுரை நோட்டுகள்,காற்று  இறங்கிய கால்பந்து ஒன்று.துணி கிழிந்து தொங்கும் டஸ்டர் என அசல் அரசுப்பள்ளியாய் இருக்கிறது வகுப்பறை.

       பெயர்களைக் கூப்பிடுகிறாள் . பதினைந்து பேர் தான் வந்திருக்கிறார்கள்.பதினோரு மணிவரை மாணவர்கள் வருவார்கள்.அரசுப்பள்ளி என்றால் அப்படித்தான்.வீட்டில் வேலையெல்லாம் முடித்து  தண்ணீர் வந்தால் நிரப்பி விட்டு.ரேஷன் கடைக்குப் போய்விட்டு,குழந்தைகளை பால்வாடியில் விட்டு விட்டு நிதானமாகத்தான்  பிள்ளைகள் வருவார்கள்.எதுவும் கேட்க முடியாது.பெற்றோர் சண்டைக்கு வருவார்கள்.

       “உங்க இஸ்கூல் இல்லன்ன என்னா டீச்சர்.டிசியக் குடு ,எத்தினி இஸ்கூல்ல வேண்டி வேண்டி கூப்படறாங்க தெரியுமா?”அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அட்மிசனுக்காய் அலைவது அவர்களுக்கு நன்றாய்த் தெரியும்.ஆசிரியர்களுக்கு பெற்றோர் மரியாதை தந்த நாட்களெல்லாம் மறைந்து விட்டன.

    அறிவியல் புத்தகத்தை எடுத்து கேள்விபதில் குறித்துக் கொடுத்து “மார்ச் மாதம் ஆயிடுச்சு ,போர்ஷன் எல்லாம் முடிச்சாச்சு,,படிங்க என்கிறாள்.ஒத்தவாடைத் தெருவிலிருத்து ஆறு பிள்ளைகள் வரணும்.அதில் உமர் நல்லா படிப்பான்.அவர்கள் வந்ததும் இன்று கணக்கு போட வைக்க வேண்டும் என்று எண்ணுகிறாள்.

   “மிஸ் குரூப்ல உக்கார வைக்கட்டுமா”  மோதினும்,ரேகாவும் கேட்கிறார்கள்.

  சரி என்கிறாள்.பிள்ளைகளும் இந்த ரொடீனுக்குத் தயாராகிவிடுகிறார்கள்.அவர்களே நிறைய வாலண்டியராகச் செய்கிறார்கள். எந்த ஆசிரியர் விடுப்பு என்றாலும் அவர்களே குரூப்பில் மனப்பாடப் பகுதிகளைப் படிப்பதும்,கேள்விபதில் எழுதுவதும் அவர்களுக்குப் பழக்கமாகி இருந்தது.

         டீச்சர்… என்று சரசாம்மா  உள்ளே வருகிறாள். பெருக்கும் ஆயா.மருமகள்களைப்   பற்றி நாலு   பிலாக்கனம் வைத்து விட்டு அம்பது ரூபாய் வாங்கிச் செல்கிறாள். இதெல்லாம் திரும்ப வராத பணம்.சரசம்மாவின் கணக்கில் இரண்டு பிள்ளைகள் படிக்கிறார்கள். அவள்  கொண்டு வந்த அட்மிசன். அதனால் அவளிடம் கறாராகப் பணத்தை கேட்க முடியாது. ஆரம்பத்தில் சங்கடப்பட்டாலும் எல்லாவற்றிற்கும் பழகிக் கொண்டாள் மீனா.

   அதற்குள் இரண்டாம் வகுப்பு டீச்சர் வசந்தா வந்து இன்சென்டிவ் பார்ம் நிரப்பித்தரச் சொல்கிறாள்.வசந்தாவுக்கு இதற்கெல்லாம் எடுபிடி வேணும் யாரையாவது செய்ய  வைத்துவிடுவாள்.அவள் சொன்ன வேலையைச் செய்யாவிட்டால் எல்லோரிடமும் ஏதாவது கூறுவாள்.

       கொஞ்சங்கூட தயங்காமல்”  நேத்து மீனா டீச்சர பச்சையப்பாசில பார்த்தேன்.கூட யாரோ சிரிச்சி சிரிச்சி பேசிட்டிருந்தாங்க.அவங்க ஹஸ்பண்ட எனக்குத் தெரியும்.அது வேற யாரோ.நமக்கென்ன வந்துச்சி தெரிஞ்சவங்ளா கூட இருக்கும்”ஒன்றுமே தெரியாதது போல பேசுவாள்.அதனாலேயே அவளிடம் எல்லோருக்கும்  பயம்.அவள் வாயில் நிற்பதை விட அவள் சொல்லும்  வேலையைச் செய்துவிடுவதே பரவாயில்லை.

  மோதின் மேசைக்கு அருகில் வந்து”மிஸ் கணக்குப் போடலாம்னு  சொன்னீங்க.பின்னம் தான “என்கிறான்.

     “ஆமாம் எல்லாரும் வந்துட்டாங்களா”

   இன்னும் வரலட்சுமியும்,கவியரசியும் வரல மிஸ்.கூப்பன் வாங்க போயிருக்காங்க.”

    வளர் இளம் பெண்களுக்கு அரிசி தரும் இலவச கூப்பன் வாங்கச் சென்றால் ஒரு நாள் ஆகிவிடும்.

சரி எல்லாரும் பாத்ரூம் போயிட்டு வந்து கணக்கு நோட்டை எடுங்க என்கிறாள்.தலையை வலிக்கறது.

பிள்ளைகள் வந்ததும் கரும்பலகையில் கணக்கை எழுதத்தொடங்குகிறாள்.

  கிறிஸ்டி டீச்சரும்,ராதா கிருஷ்ணன் சாரும் வருகிறார்கள். பிள்ளைகள் பேசுகிறார்கள்.அவர்களை அதட்டி விட்டு ராதா சாரிடம்  பேசுகிறாள்.

 “டீச்சர்  வெள்ளிக்கிழமை கூட்டணி கூட்டம். ஆசிரியர் இல்லத்தில் இருக்கு ,மாலைச் சிற்றுண்டியுடன் ,கண்டிப்பா வரணும்”

      சரி சார்”என்கிறாள்.

“உங்களைப் போன்று புதிய ஆசிரியர்கள் கட்டாயம் வரவேண்டும்.புதிய ஓய்வூதியத்தை இரத்து செய்யத் தான் போராட்டம்.ஊதியக்குழு பற்றியும் பேசப் போகிறோம்.பெண் ஆசிரியைகள் அனைவரும்  வருகிறார்கள்”தூய தமிழில் தான் அவர் பேசுவார்.

இவர்கள் ஒரு குரூப் எப்பவும் கூட்டணி,பேரணி என்று அலைபவர்கள்.அதற்கே நேரம் ஒழிந்து விடும்.அவர்களில் செல்வன் சார் வட்டிக்கு  விடுபவர்.பள்ளியில் எழுதுகிறார் என்றால் அது வட்டிக் கணக்கு தான்.

   பணியில் சேர்ந்த ஆரம்பத்தில் உற்சாகமாய் இருந்த மீனா ,எப்படியாவது பள்ளியின் தோற்றத்தை மாற்றிவிட வேணும்,தன் வகுப்பறையை அனைவருக்கும் உதாரணமாய் வைக்கவேண்டும் என்றெல்லாம் எண்ணி நிறையச் செய்தாள்.

           அவள் படித்த சேவாமந்திர் பயிற்சிப்பள்ளியின் உத்வேகத்தில் மாணவர்களுக்கு அகிம்சை முறைகளையும். காந்திய வழிகளையும் பழக்கப்படுத்த முயற்சித்தாள்.ஆங்கிலம் பேசுவதற்கும்,பிள்ளைகள் டை, ஷூ அணிந்து, அடையாள அட்டை கழுத்தில் மாட்டி கான்வென்ட் போல இருக்கவும் நிறைய முயற்சிகள் செய்தாள்.சொந்தப் பணத்தை செலவழித்தாள்.

ஆனால் அவளுக்கு கிடைத்தது ஏளனங்களும்,விமர்சனங்களும் தான்.

“நீ என்ன செஞ்சாலும் கவர்மெண்ட் ஸகூலில் வேஸ்ட் தான். இதுங்கெல்லாம் இப்படித்தான் இருக்கும்.

     “உனக்கு மட்டும் என்ன கிரீடமா வைக்கப் போறாங்க.அதே சம்பளம் தான் .எங்கள மாதிரி வந்து வேல பாத்துட்டுப் போயிட்டே இருங்க டீச்சர்.”

     “நீங்க எப்படி செஞ்சாலும் யாரும் உங்களப் பாராட்டப் போறதில்ல. ரொம்ப ஸ்ட்ரெயின் பண்ணாதீங்க” வித விதமாய் பிற ஆசிரியர்கள் பேசினார்கள்.

அவளுக்கு ஆத்திரமாய் வந்தது.என்னுடைய இலக்கிய வாசிப்பும்,கனவுகளும்,இலட்சியங்களும் இவர்களுக்குத் தெரியாது  நான் முயற்சி செய்வேன் என்று மனதில் எண்ணிக் கொள்கிறாள்.

ஆனால் எத்தனை முயன்றாலும் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முடியவில்லை.பிள்ளைகள் படிப்பதும் சராசரியாகத் தான் இருந்தது.நிறைய முறை அதிகாரிகளும்,பிஆர்டியும் திட்டினார்கள்.எஸ்எஸ்ஏ விலிருந்து ஆசிரியப் பயிற்றுனர் வந்து பிள்ளைகளை வாசிக்க வைத்து ,அது சரியில்லை,இது சரியில்லை என்று எழுதி  வைத்து சென்று விட்டார்.அவர்கள் எதிர்பார்ப்பது குழந்தைகளின் ஒட்டு மொத்த செயல்பாட்டையும்,அவர்களின் திறன்களையும் அல்ல.வழக்கமான விசிட்.எப்பவும் இருக்கும் அதே முறையில் பிள்ளைகள் செயல்பட வேண்டும்.எந்த புதிய வழியையும் அவர்கள் விரும்பவில்லை..இவளின் முயற்சிகள் பற்றி கண்டு கொண்டதாய்க கூடத் தெரியவில்லை.அவள் அளித்த தியான முறைகளையும்,புதிய கைவேலைகளையும்,ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியையும் பற்றியெல்லாம் சொன்னதும் “ஆமா ,நீ தான் கல்வித்துறையை மாத்திடப்போறயா?” என்ற பாவனையில் இவளைப் பார்த்துவிட்டு,எங்களுக்குத் தேவை போர்ஷன் முடித்து,சொல்கிற ரெக்கார்ட் எல்லாம் சரியா இருக்கனும்.அவ்வளவு தான் என்ற பதிலே கிடைத்தது.

          “ நீ காந்தியையும்,டால்ஸ்டாயையும்,தாகூரையும் வாசித்திருந்தால் என்ன?எங்களுக்கு கீழே பணியாற்றுகிறாய். நாங்கள் சொல்வதைச் செய்.அது தான் உன் வேலை “என்பதாகவே அலட்சியமாய்,ஆணவமாய் நடத்தப்பட்டாள்.

   இவர்களெல்லாம் வழி வழியாய் வந்து அதிலேயே ஊறிப் போன ஒரு சிஸ்டத்தின் பிரதிநிதிகள்.கசடுகளும்,அழுக்குகளும் படிந்து,கெட்டிப்பட்டு சுரணையற்றுப்போன சமூகத்தின் ஒரு பகுதி தான் இவர்கள்.ஒரு சாதாரண ஆசிரியராய் தன் எல்லையில் இவற்றை எதுவுமே செய்ய இயலாது என்று மீனா புரிந்து கொள்ள சில ஆண்டுகள் ஆயின.குடும்பத்திலும் இவளுக்கு சுமை அதிகரித்தது.

     டெட் எக்சாம் பாஸ்பண்ணி வேலையில் சேர்ந்த பெருமிதமெல்லாம் கொஞ்சங்கொஞ்சமாய் கரைகின்றன.அவள் வாசிப்பும் ,அறிவும் மழுங்கிவிடுமோ என்று அஞ்சத் தொடங்குகிறாள் .

           பதுனொன்றரைக்கு பியூன் சிவலிங்கம்  வந்து காந்தி சார்  எல்லா டீச்சர்சையும் கூடப்பிடுவதாகச் சொல்கிறான்.கரும்பலகையில் பின்னக்கணக்கை எழுதத் தொடங்கியிருந்தாள்.லீடர் மோதினை வகுப்பை கவனிக்கச் சொல்லிவிட்டு தலைமையாசிரியர் அறைக்குச் செல்கிறாள்.அங்கே ஏற்கனவே சயின்ஸ் டீச்சர்,மலர்விழி மிஸ்,ராதா சார்,ஆரன் சார் எல்லாரும் பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

  ஏ.எச.எம்.காந்தி சார் “,டீச்சர்ஸ் இவர் ஸ்டூடன்சுக்கு பாட்டு,கதை சொல்லி ,எழுத்துகள் கத்துக் கொடுக்கிறேன்னு  வந்திருக்கார்.முடிஞ்சதக் கொடுங்க என்கிறார்.

”அப்பொழுதுதான் அவர் அருகில் நின்றிருக்கும் முதியவரைப் பார்க்கிறாள். ஒல்லியாய் முகம் வற்றிப்போய் களைத்த சிரிப்புடன் எல்லோரையும் பார்க்கிறார்.

ஆரன் சார் சொல்கிறார், ”சார் இது கவர்மெண்ட் பள்ளிக்கூடம். ஸ்டூடன்ஸ் கிட்ட பணமெல்லாம் நெறய இருக்காது.நாங்க டீச்சர்ஸ் ஆளுக்கு கொஞ்சம் தர முடியும்”

   “அது போதும் சார்.முடிஞ்சதக் குடுங்க” என்கிறார் வந்தவர்.

ஸ்டூடன்ஸ் எல்லோரும் முகங்களில் ஆர்வத்துடன் இருந்தனர். வகுப்பறையிலிருந்து இப்படி நிகழ்வுகளில் எஸ்கேப் ஆவது எப்பொழுதும் உவப்பானதே. ஆடிட்டோரியத்தில் பிள்ளைகளும். ஆசிரியர்களும் அமர்கிறார்கள்.

       நாற்காலியில் அமர்ந்திருந்த அவர் “எல்லாரும் நிமிர்ந்து உட்காருங்க என்றார்.

     அகர முதல எழுத்தெலாம்”கணீரென்ற குரலில் பாடத் தொடங்கினார். லேசாக இருந்த பேச்சுகள் சட்டென அடங்கி ஆடிட்டோரியமே நிசப்தமானது. ஹை டெசிபல் மைக்கில் ஒலிப்பது போல அவர் குரல் தனித்து கேட்டது. என்ன தாளம்,என்ன அழுத்தம். தமிழை இத்தனை திருத்தமாய் பாட இந்த உடலில் எத்தனை வலு இருக்கும்.

வானாகி மண்ணாகி,,.திருவருட்பா அவர் குரலில் கேட்ட கேட்க மீனாவிற்கு கண்கள் கலங்கி தொண்டை அடைக்கிறது.

உங்களுக்கெல்லாம் தமிழ் எழுத்துகளை பாடலாகச் சொல்லித்தரட்டுமா என்கிறார்.பிள்ளைகள் உற்சாகமாய் குரல் கொடுக்கின்றனர்.

அ.ஆனா உயிரெழுத்து,

க,கா,கி கீனா..என்று எழுத்துகளை  ராகமாய் பாடுகிறார்.அவர் திரும்ப

இரண்டுமுறை  கூறியதும் மாணவர்கள் உற்சாகமாய் எழுத்துகளைச் சொல்லத் தொடங்கினர்.

இடது கைவிரல்களை மடக்கி வலது கை விரலால் அதன்மீது தாளம் தட்டிக் கொண்டே அவர்  பாடத் தொடங்கவும் குழந்தைகள் முகங்கள் மலர்கின்றன.ஆவலுடன் அவர் கைத்தாளம் வரும் ஒலியையே நோக்குகின்றனர்

“இடையிடையே தன்னைப்பற்றி கூறுகிறார். என் பெயர் கணேசன் தாத்தா.எனக்கு ஒரே மகள். திருமணம் செய்து கொடுத்துவிட்டேன். தனியாகத்தான் இருக்கிறேன்.யாரும் இல்லை.இன்று காலையிலிருந்து சாப்பிடவில்லை .அதனால் தான் இன்னும் சத்தமாக் பாடமுடியவில்லை .என்கிறார்.உங்களைப்போன்ற ஒரு பள்ளியில் பெற்றோர் ஆசிரியக்கழக ஆசிரியராக ஆயிரம் ரூபாய் சம்பளத்தில் வேலை செய்தேன்.”

உங்களுக்கெல்லாம் இங்கிலீஷ் பேசத் தெரியுமா?

பிள்ளைகள் சிரிக்கிறா்கள்..

“அது ரொம்ப ஈசி தான்.கொஞ்சம் ஆசையிருந்தா போதும்.”

“ஆம், ஈஸ், வாஸ், ஆர், வ்ஏர், ஷால், ஷுட்…ராகமாகச் சொல்லத் தொடங்குகிறார்.ஏ,ஈ,ஐ,ஓ,யூ இதெல்லாம் வௌவல்ஸ் அதாவது உயிரெழ்த்து மாதிரி.இதை ஞாபம் வச்சு மத்த எழுத்துகளைச் சேர்த்து  வாசிச்சா போதும்.

ரென் அன்ட மார்ட்டீனைக்  கரைத்துக் குடித்த அவர் ஆங்கிலத்தையும்.அதனை எளிமையாகச் சொல்லித் தருவதையும் பார்த்து மாணவர்கள் மட்டுமல்ல ஆசிரியர்கள் யாருக்குமே மூச்சு கூட விட முடியவில்லை.

கொஞ்ச நேரத்தில் பிள்ளைகளை மாறி மாறி ஆங்கிலத்தில் பேச வைக்கிறார்.

“ஐ யம் தனுஷ். ஸ்டடியிங் இன் தேர்ட் ஸ்டான்டர்ட்”

பிள்ளைகள் வெட்கச் சிரிப்புடன்  பேசுகிறார்கள்.

மீனாவிற்கு உடலில் என்னென்னமோ செய்கிறது.எத்தனை அழகாக அந்த பிள்ளைகளுக்கு ஆங்கிலத்தை கற்றுத் தந்து விட்டார்.ஆசிரியர் என்பது இவர்   குருதியிலேயே கலந்திருக்க வேண்டும்.ஆயிரம் ரூபாயக்கு மாதம் முழுவதும் தொண்டை வறளக் கத்தி சொல்லித் தந்திருப்பார்.இங்கு  சுற்றி அமர்த்திருக்கும் ஆசிரியர்கள் எத்தனை ஆயிரங்கள் வாங்குகின்றோம்.அது தான் உலக நியதி .

கணேசன் தாத்தா குரல் தொடர்கிறது. “குழந்தைகளே உங்களுக்கு இன்னொரு நாள் வந்து சொல்லித் தரேன். எனக்கு வயிற்றில் அல்சர். அதிகம் கத்த முடியல.உங்களைப் போன்ற நல்ல  மனங்கொண்ட பள்ளிகளுக்குப்போய் இப்படித்தான் பாடி ,அவர்கள் தருவதை வாங்கிச் சாப்பிடறேன். சில பள்ளிகளில் துரத்தி விட்டுடறாங்க. இன்று காலையிலிருந்து சாப்பிடவில்லை. உங்களால் முடிந்ததை ஒரு ரூபாய், இரண்டு ரூபாய் சில்லறை என்றாலும் பரவாயில்லை இத்த கணேசன் தாத்தவுக்குத் தாங்க”அவர் கரங்கள் நீள்கின்றன. மாணவர்களும் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறார்கள். பெண் பிள்ளைகள் சிலர் கண்களைத் துடைத்துக் கொள்கின்றனர். பிள்ளைகள் தந்த நாணயங்களால் நிரம்புகிறது அவர்  ஏந்திய கரங்கள்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.