தொழுது உயர் கையினன், துவண்ட மேனியன் (5)

வாங்கு வெம் கழை துணித்தனன், மாணையின் கொடியால்
ஓங்கு தபெ்பம் ஒன்று அமைத்து, அதின், உம்பரின் உலம்போல்
வீங்கு தோள் அண்ணல் தேவியொடு இனிது வீற்றிருப்ப,
நீங்கினன் அந்த நெடு நதி இரு கையால் நீந்தி. (2123)
இலக்குவன் மூங்கில் கழிகளை காட்டுக் கொடிகளால் இணைத்துக் கட்டிய தெப்பத்தில் இராமனும் சீதையும் அதன் மேல் அமர்ந்திருக்க இலக்குவன் அதனைத் தம் கைகளால் துடுப்பிட்டு யமுனையைக் கடக்கச் செய்தான்.
வாளும் வேலும் விட்டு, அளாயின அனைய கண் மயிலே!
தாளின் ஏலமும் தமாலமும் தழைதரு சாரல்,
நீள மாலைய துயில்வன, நீர் உண்ட கமம் சூல்
காளமேகமும் நாகமும் தரெிகில காணாய்! (2136)
அழகுக் கண் படைத்த இளமயிலே! ஏலக் கொடி படர்ந்த மலையருகே சூழ்ந்திருக்கும் மழை மேகங்களுக்கும் நிறைந்திருக்கும் யானைகளுக்கும் வேறுபாடு தெரியாமல் இருப்பதைக் காண்பாயாக.
குருதி வாள் எனச் செம் வரி பரந்த கண் குயிலே!
மருவி மால் வரை உம்பரில் குதிக்கின்ற வருடை,
சுருதி போல் தெளி மரகதக் கொழுஞ்சுடர் சுற்றப்,
பருதி வானவன் பசும் பரி புரைவன பாராய்! (2137)
குருதி வாளெனச் சிவந்த பெரிய கண் உடையவளே! பசுமை ஓளி வீசும் மலை உச்சியில் தாவிக் குதிக்கின்ற வரையாடுகள் கதிர்த்தேவன் ரதத்தின் குதிரைகளைப் போல் தோன்றுவதைப் பார்!
வடம் கொள் பூண் முலை மடம் மயிலே! மதக் கத மா
அடங்கு பேழ் வயிற்று அரவு உரி, அமை தொறும் தொடக்கித்
தடங்கள் தோறும் நின்று ஆடுவ, தண்டலை அயோத்தி
நுடங்கும் மாளிகைத் துகில் கொடி நிகர்ப்பன நோக்காய்! (2138)
முத்து மாலை போன்ற அழகு கொண்ட முலைகளை உடையவளே! ஆனைகளை விழுங்கும் மலைப்பாம்புகள் உரித்த தோல் அயோத்தி மாளிகைகளில் பறக்கும் கொடிகளைப் போல் எங்கும் பறப்பதை நோக்குவாயாக!
உவரிவாய் அன்றிப் பாற்கடல் உதவிய அமுதே!
துவரின் நீள் மணித் தடம் தொறும், இடம் தொறும், துவன்றிக்
கவரி பால் நிற வால் புடை பெயர்வன கடிதில்
பவள மால் வரை அருவியைப் பொருவிய பாராய். (2139)
விண் கடலில் உதித்த அமுதே! அங்குமிங்கும் அசையும் கலைமான்களின் வால்கள் அருவியைப் போல் தோன்றுவதைக் காண்பாயாக!
சலம் தலைக்கொண்ட சீயத்தால் தனி மதக் கதம் மா
உலந்து வீழ்தலின், சிந்தின உதிரத்தின், மடவார்
புலந்த காலை அற்று உக்கன குங்குமப் பொதியில்
கலந்த முத்து என, வேழ முத்து இமைப்பன காணாய். (2140)
சீற்றமிகு சிங்கத்தால் கொல்லப்பட்ட காமம் கொண்ட யானையின் குருதியில் தென்படும் வேழமுத்துகள் காதலர்கள் ஊடல் கொண்ட பொழுதில் அறுந்து விழுந்த குங்குமம் கலந்த முத்துக்களென காட்சி அளிப்பதைக் காண்பாய்.
சீற்றமிகு சிம்மமும் காமம் கொண்ட யானையும் என காதலர்களின் காமம் குறிப்புணர்த்தப்படுவது நுட்பமானது.
நீண்ட மால் வரை மதி உற, நெடு முடி நிவந்த
தூண்டு மா மணிச் சுடர் சடைக் கற்றையில் தோன்ற,
மாண்ட வால் நிற அருவி அம் மழ விடைப் பாகன்
காண் தகும் சடைக் கங்கையை நிகர்ப்பன காணாய்! (2141)
மலைச் சிகரத்துக்கு மேலே தூவெண் மதி உள்ளது. மலையுச்சியிலிருந்து அருவி பெருக்கெடுக்கிறது. அவை காண்பதற்கு பிறை சூடிய பெருமானின் சடாமுடியிலிருந்து கங்கை பெருகுவதைப் போல் இருக்கிறது.
தொட்ட வார் சுனை சுடர் ஒளி மணியொடும் தூவி
விட்ட சென்றன, விடா மத மழையன வேழம்,
வட்ட வேங்கையின் மலரொடும் ததைந்தன வயங்கும்
பட்டம் நெற்றியில் சுற்றிய போல்வன பாராய்! (2142)
சுனையில் நீராடிய ஆனைகளின் நெற்றியில் இருந்த நீர்த்துளிகள் முத்தென ஒளி வீசின. பின்னர் பாறையில் குவிந்திருந்த வேங்கை மலர்களை வீசி விளையாடிய போது அவை ஆனைகளின் மத்தகத்தில் ஒளி விட்டன. அது காண்பதற்கு ஆனைகள் முத்துக்கள் பதித்த பொன் படாம் அணிந்தது போல் இருந்தது.
இழைந்த நூல் இணை மணிக் குடம் சுமக்கின்றது என்னக்
குழைந்த நூண் இடைக் குவி இள வன முலைக் கொம்பே!
தழைந்த சந்தனச்சோலை தன் செலவினைத் தடுப்ப
நுழைந்து போகின்றது ஒக்கின்ற மதியினை நோக்காய். (2143)
ஒற்றை நூலானது இரண்டு மணிக் குடங்களை சுமப்பது போன்று மெல்லிடையால் இரு முலைகளை சுமப்பவளே! வானுயர்ந்த சோலைகள் தன் வழியைத் தடுப்பதால் சந்திரன் அவற்றில் நுழைந்து போகின்றதைக் காண்பாய்!
உருகு காதலில் தழை கொண்டு மழலை வண்டு ஓச்சி,
முருகு நாறு செம் தேனினை முழைநின்றும் வாங்கிப்
பெருகு சூல் இளம் பிடிக்கு ஒரு பிறை மருப்பு யானை,
பருக வாயினில் கையில் நின்று, அளிப்பது பாராய். (2144)
ஒரு களிறு தன் காதலியான பெண் யானைக்கு துதிக்கையால் தழைகளை எடுத்து வண்டுகளை விலக்கி மலைக்குகையில் எடுந்த செந்தேனை அதன் வாயில் தன் துதிக்கையால் அளிக்கும் காட்சியைக் காண்பாயாக.
இப்பாடல் தீட்டும் சித்திரம் அபாரமானது. யானை என்பது பெரியது. யானையின் காதல் எத்துணை பெரிதாக இருக்கும். களிறு தன் காதலுக்காக சிறு வண்டுகளை தழையால் விலக்கி தன் துதிக்கையில் அதனை சேகரித்து பிடியின் வாயில் இடுவது என்ற சித்திரம் மிகவும் நுட்பமானது.
தன் காதலிக்காக அவ்வளவு பெரிய யானை தழையால் வண்டோட்டுகிறது.
ஆடுகின்ற மா மயிலினும் அழகிய குயிலே
கூடுகின்றிலர் கொடிச்சியர் தம் மனம் கொதிப்ப
ஊடுகின்றனர், கொழுநரை உருகினர் நோக்கப்
பாடுகின்றன கின்னர மிதுனங்கள் பாராய். (2146)
மயிலினும் அழகான இன்மொழிக் குயிலே! ஊடலால் கணவனைப் பிரிந்திருக்கும் குற மகளிரின் உள்ளத்தை அலைக்கழிக்கும் விதமாக காட்டில் கேட்கின்ற மனம் மயக்கும் காட்டிசையைக் கேட்பாயாக!
வில்லி வாங்கிய சிலை எனப் பொலி நுதல் விளக்கே!
வல்லிது ஆம் கழை தாக்கலின் வழிந்து இழி பிரசம்,
கொல்லி வாங்கிய குன்றவர் கொடி நெடு்ங்கவலை
கல்லி வாங்கிய குழிகளை நிறைப்பன காணாய்! (2147)
ஒளிரும் நெற்றியும் வில்லினையொத்த புருவமும் உடையவளே! காற்றால் மூங்கில்கள் உரசி அதனால் வழியும் தேன் குறவர்கள் கிழங்கு எடுக்க அகழ்ந்த பள்ளங்களில் நிரம்பியிருப்பதைக் காண்பாயாக.
உலகியல் வாழ்க்கை என்பது சமூக வாழ்க்கையே. சாமானியன் தன்னை நிலை நிறுத்திக் கொண்டு தன் இடத்துக்காகப் போராடி உறவுகளுடன் கூடி இருந்து நட்பின் சுற்றத்துடன் தினசரி வாழ்வைக் கடந்து அறியும் வாழ்க்கை என்று ஒன்று உள்ளது. அதுவே கோடானுகோடி மக்களுக்குச் சாத்தியமாகிறது.
ஒரு மகாகவி காணும் வாழ்வின் இனிமை என்பது அளவற்றது. அவன் கற்பனை வாழ்வின் இன்னொரு சாத்தியத்தை சொல்கிறது. அப்பக்கம் என ஒன்று இருப்பதாலேயே இப்பக்கத்தின் எல்லைகள் உணரப்படுகின்றன.

ஒருவு இல் பெண்மை என்று உரைக்கின்ற உடலினுக்கு உயிரே!
மருவு காதலின் இனிது உடன் ஆடிய மந்தி,
அருவி நீர் கொடு வீசத் தான் அப்புறத்து ஏறிக்
கருவி மா மழை உதிர்ப்பது ஓர் கடுவனைக் காணாய்! (2148)
என் உயிரே! காதல் கொண்ட மந்தி அருவிநீர்த் துளிகளை சிறு தூரலாய் கடுவன் மேல் வீச அக்கடுவன் மேகத்தை உலுக்கி மழையென மந்தி மேல் பொழிவதைக் காண்பாய்.
வீறு பஞ்சு இன்றி அமுதம் நெய் மாட்டிய விளக்கே!
சீறு வெம் கதிர் செறிந்தன, பேர்கல, திரியா,
மாறு இல் மண்டிலம் நிரம்பிய மாணிக்க மணிக்கல்
பாறை, மற்று ஒரு பரிதியில் பொலிவன பாராய்! (2149)
அமுத நெய்யில் சுடரும் தீபமே! கதிரொளியில் பாறைகள் மாணிக்கக் கற்களென ஒளிவிடுவதைக் காண்பாயாக.
சீலம் இன்னது என்று அருந்ததிக்கு அருளிய திருவே!
நீல வண்டு இனம் படிந்து எழ, வளைந்தன நிமிர்வ
கோல வேங்கையின் கொம்பர்கள், பொன் மலர் தூவிக்
காலினில் தொழுது எழுவன நிகர்ப்பன காணாய்! (2150)
கற்பிற் சிறந்தவளே! வேங்கை மரத்தின் கிளைகளில் வண்டுகள் அமர்ந்து எழுவதால் கிளைகள் உதிர்க்கும் மலர்கள் நின் பாதம் தொழுவதைக் காண்பாயாக.
வில்கொள் வாள் நுதல் விளங்கு இழை இளம் தளிர்க் கொழுந்தே!
எல் கொள் மால் வரை உம்பரின், இரும் புனம் காக்கும்
கொல் கொள் வேல் கணார் குரீஇ இனத்து எறி குருவிந்தக்
கற்கள், வானிடை மீன் என விழுவன காணாய்! (2151)
இளம் கொழுந்தே! உச்சி மலையில் தினைப்புலம் காக்கும் குறமகளிர் குருவிகள் மேல் எறியும் மாணிக்கக் கற்கள் விண்மீன்கள் போல் ஒளி விட்டு மண்ணில் விழுவதைப் பார்ப்பாயாக!
வரிகொள் நோன் சிலை வயவர் தம் கணிச்சியின் மறிந்த
பரிய கார் அகில் சுட, நிமிர் பசும் புகைப் படலம்,
அரிய வேதியர் ஆகுதிப் புகையொடும் அளவிக்
கரிய மால்வரைக் கொழுந்து என படர்வன காணாய். (2152)
மலைக்குறவர்களின் அகிற் புகையும் முனிவர்களின் வேள்விப் புகையும் கலந்து மலை போல் எழுந்து தோற்றம் தருவதைப் பார்ப்பாயாக!
நானம் நாள் மலர் நறை அகில் நாவி தேன் நாறும்
சோனை வார் குழல் சுமை பொறாது இடுகு இடைத் தோகாய்!
வான யாறு மீன் மலர்ந்தன எனப் புனல் வறந்த
கான யாறுகள் கணம் மணி இமைப்பன காணாய். (2153)
மென்மையானவளே! வறண்ட காட்டாற்றில் வானத்தில் விண்மீன்கள் ஒளிவிடுவது போன்று வைரங்கள் ஒளிர்வதைக் காண்பாயாக!
நினைந்த போதினும் அமிர்து ஒக்கும் நேரிழை! நிறை தேன்
வனைந்த வேங்கையில், கோங்கினில், வயின்தொறும் தொடுத்துக்
குனிந்த ஊசலில் கொடிச்சியர் எடுத்த இன் குறிஞ்சிக்
கனிந்த பாடல் கேட்டு, அசுணமா வருவன காணாய். (2158)
அமுதமே! ஊஞ்சலில் ஆடும் குறமகளிரின் குறிஞ்சிப் பாடலைப் புட்களும் விரும்பிக் கேட்பதைக் காண்பாயாக!
இலவும் இந்திரகோபமும் புரை இதழ் இனியாய்!
அலவும் நுண் துளி அருவி நீர், அரம்பையர் ஆடக்
கலவை, சாந்து, செம் குங்குமம் கற்பகம் கொடுத்த
பலவும் தோய்தலின், பரிமளம் கமழ்வன பாராய்! (2159)
செவ்விதழ் கொண்டவளே! தேவமகளிர் களியாடும் அருவி நீர் சந்தனமும் சாந்தும் குங்குமமும் கலந்து நறுமணம் வீசுவதைக் காண்பாயாக.
மடந்தைமார்களில் திலதமே! மணி நிறத் திணி கல்
தொடர்ந்த பாறையில் வேய் இனம் சொரி கதிர் முத்தம்
இடம் தொறும் கிடந்து இமைப்பன, எக்கு இளம் செக்கர்
படர்ந்த வான் இடை தாரகை நிகர்ப்பன பாராய். (2161)
பெண்களிற் சிறந்தவளே! மாணிக்கங்களிடையே இருக்கும் மூங்கில் முத்துக்கள் செவ்வானில் நட்சத்திரங்களெனத் தோன்றுவதைக் காண்பாயாக!
குழுவும் நுண் தொளை வேயினும், குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும், இனிய சொல் கிளியே!
முழுவதும் மலர் விரிந்த நாள் முருக்கு இடை மிடைந்த
பழுவம், வெம் கனல் கதுவியது ஒப்பது பாராய். (2162)
குழலிசையினும் யாழிசையினும் இனிமையானவளே! அடர்ந்த மரங்களில் பூத்திருக்கும் சிவந்த முருக்க மலர்கள் காடு தீ பற்றி எரிவதைப் போல காட்சி தருவதைப் பார்.
வேய்-மூங்கில்-புல்லாங்குழல்
குழலினிது யாழினிது என்ப தம்மக்கள்
மழலைச் சொல் கேளாதவர்
என்ற திருக்குறளை நினைவூட்டியது.
வளைகள் காந்தளில் பெய்தன அனைய கை மயிலே!
தொளை கொள் தாழ் தடக் கை நெடுந் துருத்தியில் தூக்கி,
அளவு இல் மூப்பினர் அருந்தவர்க்கு, அருவி நீர் கொணர்ந்து,
களபம் மால் கரி குண்டிகைச் சொரிவன காணாய்! (2163)
மெல்லியவளே! அருந்தவத்தோருடன் ஒன்றி வாழும் வன விலங்குகளைக் கொண்ட இம்மலையைக் காண்பாயாக.
தரெிவைமார்க்கு ஒரு கட்டளை எனச் செய்த திருவே!
பெரிய மாக் கனி, பலாக் கனி, பிறங்கிய வாழை
அரிய மாக் கனி, கடுவன்கள் அன்பு கொண்டு அளிப்பக்
கரிய மா, கிழங்கு அகழ்ந்தன கொணர்வன காணாய்! (2167)
பெண்மையின் இலக்கணமே! பன்றிகள் கிழங்குகளை அகழ்ந்தும் கடுவன்கள் முக்கனிகளை மரங்களிலிருந்து பறித்தும் அருந்தவத்தோர்க்கு கொண்டு வந்து தருவதைக் காண்பாயாக.
ஐவனக் குரல், ஏனலின் கதிர், இறுங்கு, அவரை,
மெய் வணக்கு உறு வேய் இனம் ஈன்ற மெல் அரிசி,
பொய் வணக்கிய மா தவர் புரை தொறும் புகுந்து, உன்
கை வணத்த வாய்க் கிள்ளை தந்து அளிப்பன காணாய். (2168)
கிள்ளைகள் மலையில் சேகரித்த நெற்கதிர், சோளக்கதிர், அவரை, மூங்கில் அரிசி ஆகியவற்றை முனிவர்களின் குடிலில் கொண்டு வந்து தருவதைக் காண்பாயாக.
இடி கொள் வேழத்தை எயிற்றெடும் எடுத்து உடன் விழுங்கும்
கடிய மாசுணம், கற்று அறிந்தவர் என அடங்கிச்
சடை கொள் சென்னியர், தாழ்வு இலர் தாம் மிதித்து ஏறப்
படிகள் ஆம் எனத் தாழ் வரை கிடப்பன பாராய். (2169)
யானைகளை விழுங்கும் மலைப்பாம்புகள் முனிவர்களிடம் பணிவுடன் இருப்பதைக் காண்பாயாக.
பணிவை அறிஞனின் இயல்பு என்கிறார் கம்பர்.
இனைய யாவையும் ஏந்திழைக்கு இயம்பினன் காட்டி,
அனைய மால் வரை அருந்தவர் எதிர் வர, வணங்கி,
வினையின் நீங்கிய வேதியர் விருந்தினன் ஆனான்;
மனையில் மெய் எனும் மாதவம் புரிந்தவன் மைந்தன். (2171)
இனிய காட்சிகளை இல்லாளுக்கு காட்டிய இராமன் எதிர்ப்பட்ட முனிவர்களை வணங்கி அவர்களுடைய விருந்தினன் ஆனான்.
ஆனனம் மகளிருக்கு அளித்த தாமரைப்
பூ நனி முகிழ்த்தன அலரி போன பின்
மீன் என விளங்கிய வெள்ளி ஆம்பல் வீ
வான் எனும் மணித் தடம் மலர்ந்த எங்குமே. (2174)
தடாகத்தின் ஆம்பல் மலர்களென இருண்ட வானில் விண்மீன்கள் ஒளிரத் தொடங்கின.
மந்தியும் கடுவனும் மரங்கள் நோக்கின;
தந்தியும் பிடிகளும் தடங்கள் நோக்கின;
நிந்தை இல் சகுந்தங்கள் நீளம் நோக்கின;
அந்தியை நோக்கினான் அறிவை நோக்கினான். (2175)
இருளத் துவங்கியது வானரங்கள் மரங்களுக்குத் திரும்பின. ஆனைகள் தங்கள் வழக்கமான வாழிடத்துக்குத் திரும்பின. பறவைகள் கூடடைந்தன. ஸ்ரீராமன் மாலை வணக்கம் செய்தான்.
மொய் உறு நறு மலர் முகிழ்த்தவாம் சில;
மை அறு நறு மலர் மலர்ந்தவாம் சில;
ஐயனொடு இளவற்கும் அமுது அன்னாளுக்கும்
கைகளும் கண்களும் கமலம் போன்றவே. (2176)
இராமனும் சீதையும் இலக்குவனும் இறையை கரம் குவித்து கண் மூடி வணங்கினர். தாமரை கூம்பியதைப் போல அவர்கள் குவித்த கரமும் மூடிய கண்களும் இருந்தன. அந்த பொழுதில் தடாகத்தில் சில மலர்கள் குவிந்திருந்தன. சில மலர்கள் மலர்ந்திருந்தன.
நெடுங் கழை குறுந்தறி நிறுவி, மேல் நிரைத்து,
ஒடுங்கல் இல் நெடுமுகடு ஒழுக்கி, ஊழ் உற
இடுங்கல் இல் கை விசித்து ஏற்றி, எங்கணும்
முடங்கல் இல் வரிச்சு மேல் விரிச்சு மூட்டியே. (2178)
நீண்ட மூங்கில் கழிகளை வெட்டி நட்டு நீளமான கழிகளை மேலேற்றி வளையாத கம்புகளை குறுக்காய் அமைத்து இறுக்கக் கட்டினான் இலக்குவன்.
தேக்கு அடைப் படலையின் செறிவு செய்து, பின்,
பூக் கிளர் நாணலின் புல்லு வேய்ந்து, கீழ்த்
தூக்கிய வேய்களில் சுவரும் சுற்றுறப்
போக்கி, மண் எறிந்து, அவை புனலில் தீற்றியே. (2179)
தேக்கிலைகளை நெடிய பரப்பி அதன் மேல் நாணல் புல்லிட்டு மூங்கில் கழிகளால் கூறைச்சுவர் அமைத்து ஈரமண்ணை அதில் பூசினான் இலக்குவன்.
மயில் உடைப் பீலியின் விதானம் மேல் வகுத்து,
அயில் உடைச் சுரிகையால் அருகு தூக்கு அறுத்து,
எயில் இளம் கழைகளால் இயற்றி, ஆறு இடு
செயல் உடைப் புதுமலர் பொற்பச் சிந்தியே. (2181)
விதானத்தின் மேல் மயிற்பீலிகள் நிரப்பி ஆற்றில் மிதந்து வந்த புதுமலர்களை ஆங்காங்கே சிந்தி அழகுபடுத்தினான் இலக்குவன்.
என்று சிந்தித்து இளையவற் பார்த்து ‘இரு
குன்று போலக் குவவிய தோளினாய்!
என்று கற்றனை நீ! இது போல் ‘எனாத்
துன்று தாமரைக் கண் பனி சோர்கின்றான்; (2185)
சகோதரன் உழைப்பையும் பரிவையும் அவன் அமைத்த குடிலில் கண்டு தாமரைக்கண்ணனாகிய இராமன் இதனை நீ எங்கு கற்றாய் என்று கேட்டு கண்கலங்கினான்.
‘அடரும் செல்வம் அளித்தவன் ஆணையால்
படரும் நல் அறம் பாலித்து இரவியில்
சுடரும் மெய்ப் புகழ் சூடினென் என்பது என்?
இடர் உனக்கு இழைத்தேன் நெடுநாள் ‘என்றான். (2186)
அரசபதவியைத் துறந்து தந்தை சொல் சிரமேற்கொண்டு நான் வனம் புகுந்து என்ன பயன்? உனக்கு நான் நெடுநாள் நீளும் தீரா இடர் அளித்துள்ளேன்.
பின்னும் தம்பியை நோக்கி பெரியவன்
‘மன்னும் செல்வத்துக்கு உண்டு வரம்பு; இதற்கு
என்ன கேடு உண்டு? இவ் எல்லையில் இன்பத்தை
உன்னு; மேல் வரும் ஊதியத்தோடு ‘என்றான். (2189)
பொருள் வாழ்வுக்கு எல்லை உண்டு. இந்த அருள் வாழ்க்கை எல்லை கடந்த பயன் அளிப்பது.
‘மூண்டு எழு காதலான் முளரித் தாள் தொழ
வேண்டினென் எய்தினென்; உள்ளம் விம்முமால்;
ஆண்தகை நெடு முடி அரசர் கோமகன்
யாண்டையான்? பணித்திர்;‘ என்று இருகை கூப்பினான். (2233)
பரதன் விம்மிய உள்ளத்துடன் கைகேகியை இரு கைகளால் வணக்கம் செய்து தந்தை எங்கே என வினவினான்.
ஆனவன் உரைசெய அழிவு இல் சிந்தையாள்,
தானவர் வலி தவ நிமிர்ந்த தானை அத்
தேன் அமர் தரெியலான், தேவர் கைதொழ,
வானகம் எய்தினான்; வருந்தல் நீ ‘என்றாள். (2234)
தந்தை உயிர் நீத்து வானவர் உலகம் அடைந்தார் என்று கைகேயி கூறினாள்
எறிந்தன கடிய சொல் செவியுள் எய்தலும்
நெறிந்து அலர் குஞ்சியான் நெடிது வீழ்ந்தனன்;
அறிந்திலன் உயிர்த்திலன் அசனி ஏற்றினால்
மறிந்து உயர் மராமரம் மண் உற்றென்னவே. (2235)
அச்சொல் செவியில் கேட்டதும் பரதன் மயங்கி வீழ்ந்தான். பெருமழையில் இடி தாக்கிய மரம் வீழ்வதைப் போல பரதன் மண்ணில் வீழ்ந்தான்.
வாய் ஒளி மழுங்கத் தன் மலர்ந்த தாமரை
ஆய் அலர் நயனங்கள் அருவி சோர்தரத்
‘தீ எரி செவியில் வைத்து அனைய தீய சொல்
நீ அலது உரைசெய நினைப்பரோ? ‘என்றான். (2236)
யாராலும் எண்ணக்கூட முடியாத கொடுஞ்சொற்களை உன்னால் மட்டும் எப்படி கூற முடிகிறது என்று அழுத கண்களுடன் பரதன் கேட்டான்.
எழுந்தனன் ஏங்கினன் இரங்கிப் பின்னரும்
விழுந்தனன் விம்மினன் வெய்து உயிர்த்தனன்
அழிந்தனன் அரற்றினன் அரற்றி இன்னன
மொழிந்தனன் பின்னரும் முருகின் செவ்வியான். (2237)
தந்தையை இழந்த துக்கத்தால் துக்கித்து வருத்தமுற்று ஏங்கி எழ முயன்று முடியாமல் கீழே விழுந்து அனல் மூச்சிட்டு விம்மி பிதற்றினான் குமரனையொத்த அழகு கொண்ட பரதன்.
இங்கே முருகனையொத்த அழகுடையவன் என கம்பன் கூறுவதில் ஒரு குறிப்பு இருக்கிறது. முருகன் தம்பி. கணேசன் அண்ணன்.
‘எந்தையும் யாயும் எம்பிரானும் எம்முனும்
அந்தம் இல் பெருங் குணத்து இராமன் ஆதலால்
வந்தனை அவன்கழல் வைத்தபோது அலால்
சிந்தை வெம் கொடுந் துயர் தீர்கலாது ‘என்றான். (2248)
இராமன் என் தந்தை. இராமன் என் தாய். இராமன் என் அண்ணன். இராமன் என் தெய்வம். பெருங்குணத்தான் இராமன் பாதம் பணிந்தாலன்றி என் மனத்தின் கொடும் வெந்துயர் தீராது.
எந்தையும் யாயும் – கம்பன்
எந்தையும் தாயும் – பாரதி
2249. அவ் உரை கேட்டலும் அசனி ஏறு என
வெவ் உரை வல்லவள் மீட்டும் கூறுவாள்
“தவெ் அடு சிலையினாய்! தேவி தம்பி என்று
இவ் இருவோரொடும் கானத்தான் “ என்றாள். (2249)
இடி போல தாக்கும் கொடுஞ்சொற்களைக் கூறும் கைகேயி பரதனிடம் இராமன் தன் மனைவியோடும் தம்பியோடும் வனத்திற்குச் சென்றுள்ளான் என்று கூறினான்.
சூடின மலர்க்கரம் சொல்லின்முன் செவி
கூடின; புருவங்கள் குதித்துக் கூத்து நின்று
ஆடின; உயிர்ப்பினோடு அழல் கொழுந்துகள்
ஓடின; உமிழ்ந்தன உதிரம் கண்களே. (2256)
அவ்வார்த்தைகளை உள்வாங்க முடியாமல் செவியைக் கைகளால் பொத்திக் கொண்டான். புருவங்கள் சினத்தால் உயர்ந்தன. குருதி நெருப்பாய் ஓடியது. கண்கள் இரத்தக் கண்ணீர் சிந்தின.
அஞ்சினர் வானவர் அவுணர்; அச்சத்தால்
துஞ்சினர் ஏனையர்; சொரி மதத் தொளை
எஞ்சின திசை கரி; இரவி மீண்டனன்;
வெஞ்சினக் கூற்றும் தன் விழி புதைத்ததே. (2259)
பரதனின் சினத்தைக் கண்டு தேவர்களும் அசுரர்களும் அஞ்சினர். மானுடர்கள் நடுநடுங்கி மயங்கினர். திசையானைகள் நடுங்கின. சூரியனும் யமனும் பரதனைக் காண இயலாமல் தம் கண்களை மூடிக் கொண்டனர்.

‘அறம் கெட முயன்றவன், அருள் இல் நெஞ்சினன்,
பிறன் கடை நின்றவன், பிறரைச் சீறினோன்,
மறம் கொடு மன் உயிர் கொன்று வாழ்ந்தவன்,
துறந்த மாதவர்க்கு அருந் துயரம் சூழ்ந்துேளான். ‘ (2288)
அறத்துக்கு எதிரானவன், கருணை அற்றவன், பிறன் மனைவியை விரும்பியவன், பிறர் மீது எப்போதும் கோபம் கொள்பவன், பிராணிகளை வதைப்பவன், துறவிகளுக்கு இன்னல் விளைவித்தவன்
‘குரவரை மகளிரை வாளில் கொன்றுேளான்
புரவலன் உறு பொருள் புனைவில் வாரினோன்
விரவலர் வெரிந் இடை விழிக்க மீண்டுேளான்
இரவலர் அருநிதி எறிந்து வௌவினோன். (2289)
பெண்களை ஆசானைக் கொலை செய்தவன், ஏழைகள் ஈட்டியதைக் கொள்ளை அடிப்பவன், போரில் புறமுதுகு காட்டியவன்,
‘தழைத்த தண் துளவினோன் தலைவன் அல்லன் என்று
அழைத்தவன், அற நெறி அந்தணாளரில்
பிழைத்தவன், பிழைப்பு இலா மறையைப் பேணலாது,
இழைத்த வன் பொய் எனும் இழுதை நெஞ்சினோன் ‘ (2290)
இறையை இகழ்ந்தவன், அந்தணர் நெறியில் பிழன்றவன், வேதம் பழித்தவன்
‘தாய் பசி உழந்து உயிர் தளரத் தான் தனிப்
பாய் பெரும் பாழ் வயிறு அளிக்கும் பாவியும்
நாயகன் பட நடந்தவனும் நண்ணும் அத்
தீ எரி நரகத்துக் கடிது செல்க யான். (2291)
தாய் பசித்திருக்கையில் தான் மட்டும் தின்ற பாவி, மன்னனைப் படுகளத்தில் சாக விட்டு தன்னுயிர் காத்துக் கொண்டவன்
ஆகியோர் செல்லும் நரகத்துக்கு நானும் செல்வதாக.
‘தாளினில் அடைந்தவர் தம்மைத் தற்கு ஒரு
கோள் உற அஞ்சினன் கொடுத்த பேதையும்
நாளினும் அறம் மறந்தவனும் நண் உறும்
மீளரு நரகு இடைக் கடிது வீழ்க யான். (2292)
நம்பி வந்தவனைக் கைவிட்டவனும் எந்நாளும் அறம் செய்யாதவனும் செல்லும் நரகத்துக்கு செல்வேனாக
‘பொய்க் கரி கூறினோன், போருக்கு அஞ்சினோன்,
கை கொளும் அடைக்கலம் கரந்து வவ்வினோன்,
எய்த்த இடத்து இடர் செய்தோன், என்று இன்னோர் புகும்
மெய்க் கொடு நரகு இடை விரைவின் வீழ்க யான். ‘ (2293)
பொய்சாட்சி சொன்னவன், போருக்கு அஞ்சியவன், பாதுகாக்க கொடுத்த பொருளை தானே எடுத்துக் கொண்டவன், துன்பத்தில் இருப்பவர்களை மேலும் துன்பப்படுத்தியவன் ஆகியோர் செல்லும் நரகுக்கு நான் செல்லட்டும்.
அந்தணர் உறையுளை அனலி ஊட்டினோன்,
மைந்தரைக் கொன்றுேளான், வழக்கில் பொய்த்துேளான்,
நிந்தனை தேவரை நிகழ்த்தினோன், புகும்
வெந்துயர் நரகத்து வீழ்க யானுமே. (2294)
அந்தணர் குடிலுக்கு நெருப்பிட்டவன், மகனைக் கொன்றவன், பொய் வழக்கு தொடுத்தவன், தெய்வத்தை நிந்தித்தவன் ஆகியோர் செல்லும் நரகுக்கு நான் செல்லட்டும்.
‘கன்று உயிர் ஓய்ந்து உகக் கறந்து பால் உண்டோன்,
மன்று இடைப் பிறர் பொருள் மறைத்து வவ்வினோன்,
நன்றியை மறந்திடும் நயம் இல் நாவினோன்,
என்று இவர் உறும் நரகு என்னது ஆகவே. ‘ (2295)
கன்று இறந்த பசுவின் பாலைக் கறந்து குடித்தவன், திருடன், நன்றி கெட்டவன் ஆகியோரின் நரகம் எனக்கானதாகட்டும்.
என்று கூறி நின்று இடரில் மூழ்கும் அத்
துன்று தாரவற்கு இளைய தோன்றலால்
அன்று நேர் கடன் அமைவது ஆக்கினான்
நின்று நான்மறை நெறிசெய் நீர்மையான். (2325)
வசிஷ்டர் சத்ருக்கணனைக் கொண்டு தசரதனுக்கு நீர்க்கடன் ஆற்றினார்.
குரிசிலும் தம்பியைக் கூவிக் ‘கொண்டலின்
முரசு அறைந்து “இந்நகர் முறைமை வேந்தனைத்
தருதும் ஈண்டு“ என்பது சாற்றித் தானையை
விரைவினில் எழுக! என விளம்புவாய் ‘என்றான். (2352)
பரதன் சத்ருக்கணனிடம் இராமனை மீண்டும் காட்டிலிருந்து நாட்டுக்கு அழைத்து வந்து அரசனாக்கப் போகிறோம் என்ற செய்தியை யாவரும் அறியுமாறு இடியோசை போல் முரசறைவாயாக என்று கூறினான்.
நல்லவன் உரைசெய நம்பி கூறலும்
அல்லலில் அழுங்கிய அன்பின் மா நகர்
ஒல் என ஒலித்ததால்; உயிர் இல் யாக்கையைச்
சொல் எனும் அமிழ்தினால் துளித்தது என்னவே. (2353)
உயிரற்ற உடல் சஞ்சீவியால் உயிர் பெறுவது போல அம்முரசறிவிப்பைக் கேட்ட மக்கள் உயிர் பெற்றனர்.
பூ விரி பொலன் கழல் பொரு இல் தானையான்
காவிரிநாடு அன்ன கழனி நாடு ஒரீஇத்
தாவர சங்கமம் என்னும் தன்மைய
யாவையும் இரங்கிடக் கங்கை எய்தினான். (2391)
காவிரி பாய்ந்து வளமாக்கும் சோழ நாட்டையொத்த வளம் கொண்ட கோசலத்தை விட்டு அங்கிருக்கும் அனைத்து உயிர்களும் துயருற பரதன் நீங்கி இராமனைக் காண கங்கைக்குச் சென்றான்.
குகன் எனும் பெயரிய கூற்றின் ஆற்றலான்
தொகை முரண் சேனையைத் துகளின் நோக்குவான்
நகை மிகக் கண்கள் தீ நாற நாசியில்
புகை உறக் குனிப்புறும் புருவப் போர் விலான். (2397)
பரதனுடன் திரண்டு வந்த பெருஞ்சேனையை யமனின் ஆற்றல் கொண்ட குகன் ஒரு சிறு துகள் என்பது போல பார்த்தான்.
மை உறவு உயிர் எலாம் இறுதி வாங்குவான்
கை உறு கவர் அயில் பிடித்த காலன்தான்
ஐ ஐநூறாயிரம் உருவம் ஆயின
மெய் உறு தானையான் வில்லின் கல்வியான். (2398)
ஆயிரக்கணக்கான குகனின் வீரர்கள் காலனைப் போன்றவர்கள்.
கட்டிய சுரிகையன் கடித்த வாயினன்
வெட்டிய மொழியினன் விழிக்கும் தீயினன்
கொட்டிய துடியினன் குறிக்கும் கொம்பினன்
‘கிட்டியது அமர் ‘எனக் கிளரும் தோளினான். (2399)
இடையில் வாள் அணிந்தவன், சினத்தால் உதடுகளைக் கடித்துக் கொண்டிருப்பவன், ஆத்திரத்துடன் பேசுபவன், அனலெனப் பார்ப்பவன், உடுக்கையை உடையவன், கொம்பொலி எழுப்புபவன் யுத்தம் வந்தது என தோள்களை உயர்த்தினான்.
மருங்கு அடை தனெ் கரை வந்து தோன்றினான்;
ஒருங்கு அடை நெடும் படை ஒல் என் ஆர்ப்பினோடு
அருங் கடை யுகம் தனில் அசனி மா மழை
கருங்கடல் கிளர்ந்து என கலந்து சூழவே. (2401)
குகனின் படை இடி என முழங்கி மின்னல் என ஒளிர்ந்து கடலெனத் திரண்டது.
தோன்றிய புளிஞரை நோக்கிச் ‘சூழ்ச்சியின்
ஊன்றிய சேனையை உம்பர் ஏற்றுதற்கு
ஏன்றனென்; என் உயிர் துணைவற்கு ஈகுவான்
ஆன்ற பேர் அரசு; நீர் அமைதிர் ஆம் ‘என்றான். (2402)
குகன் தன் சேனையிடம் இராமனுக்காக நான் உயிர் துறந்து வீரசொர்க்கம் செல்லவும் ஆயத்தமாய் இருக்கிறேன் என்றான்.
“துடி எறி; நெறிகளும் துறையும் சுற்றுற
ஒடி எறி; அம்பிகள் யாதும் ஓட்டலிர்;
கடி எறி; கங்கையின் கரை வந்தோர்களைப்
பிடி; எறி பட “ எனப் பெயர்த்தும் கூறுவான். (2403)
போர்ப்பறை ஒலிக்கட்டும்! கங்கையைக் கடக்க வழி செய்யும் துறைகளை அழியுங்கள். ஒரு படகும் நகரக் கூடாது. நீந்தி வருபவர்களை பிடியுங்கள். தீ அம்புகள் எழட்டும்.
2404. அஞ்சன வண்ணன், என் ஆர் உயிர் நாயகன், ஆளாமே,
வஞ்சனையால் அரசு எய்திய மன்னரும் வந்தாரே!
செஞ்சரம் என்பன தீ உமிழ்கின்றன, செல்லாவோ?
உஞ்சு இவர் போய்விடின், “நாய் குகன்“ என்று எனை ஓதாரோ? (2404)
என் ஆருயிர்த் தலைவன் அஞ்சன வண்ணன் ஸ்ரீராமனுக்கு எதிரான இவர்கள் கடந்து செல்ல முடியாமல் வேட்டுவர்களின் தீச்சரங்கள் எழட்டும்.
ஆழ நெடுந்திரை ஆறு கடந்து இவர் போவாரோ?
வேழ நெடும்படை கண்டு விலங்கிடும் வில்லாேளா?
தோழமை என்று அவர் சொல்லிய சொல் ஒரு சொல் அன்றோ?
‘ஏழைமை வேடன் இறந்திலன் ‘ என்று, எனை ஏசாரோ? (2405)
ஆனைப்படை கண்டு அஞ்சிடுவேனோ? ஆழ்நதியை இவர்கள் எம் படை மீறி கடந்திட முட்டியுமோ? எம்மைத் தோழன் என இராமன் சொன்ன ஒரு சொல் ஓர் அற்புதமல்லவா? நண்பனுக்காக சமரில் சாகாமல் இருந்தானே என்ற பழி வந்திடாதோ?
முன்னவன் என்று நினைந்திலன்; மொய் புலி அன்னான், ஓர்
பின்னவன் நின்றனன் என்றிலன்; அன்னவை பேசானேல்,
என் இவன் என்னை இகழ்ந்தது? இவ் எல்லை கடந்து அன்றோ?
மன்னவர் நெஞ்சினில், வேடர் விடும் சரம் வாயாவோ? (2406)
சகோதரன் இராமனைப் பற்றியும் அவன் எண்ணவில்லை; இராமனுடனிருக்கும் வேங்கை போன்ற இலக்குவனையும் அவன் எண்ணவில்லை; என்னையும் சாதாரணமாக எண்ணுகிறான். வேட்டுவர்களின் அம்புகள் ஷத்ரிய மார்புகளைத் துளைக்காது என எண்ணுகிறானோ?
“கங்கை இருகரை உடையான், கணக்கு இறந்த நாவாயான்,
உங்கள் குலத் தனி நாதற்கு உயிர் துணைவன், உயர் தோளான்,
வெம் கரியின் ஏறு அனையான், வில் பிடித்த வேலையினான்,
கொங்கு அலரும் நறும் தண் தார்க் குகன் என்னும் குறி உடையான் ‘‘ (2415)
குகன் என்ற பேர் கொண்ட இவன் கங்கைக்கரையன். கணக்கற்ற படகுகளைக் கொண்டவன். இராமனின் உயிர்த்துணைவன். உயர்ந்த தோள்களைக் கொண்ட அவன் வலிமையில் களிற்றினை ஒத்தவன். வேட்டுவ வில்லாளிகளின் அரசன். மலர்மாலை அணிந்திருப்பவன்.
“கல் காணும் திண்மையான், கரை காணாக் காதலான்,
அல் காணில் கண்டு அனைய அழகு அமைந்த மேனியான்,
மல் காணும் திரு நெடுந்தோள் மழை காணும் மணி நிறத்தாய்!
நின் காணும் உள்ளத்தான், நெறி எதிர் நின்றனன் ‘‘ என்றான். (2416)
மாமல்லனே! எதிர்க்கரையில் இருப்பவன் பாறை போன்ற மனதிடம் கொண்டவன். இராமன் மீது வெள்ளமென அன்பு கொள்பவன். அழகிய இருள் போன்றவன்.
என்று எழுந்து தம்பியொடும் எழுகின்ற காதலொடும்
குன்று எழுந்து சென்றது எனக் குளிர் கங்கைக் கரை குறுகி
நின்றவனை நோக்கினான், திருமேனி நிலை உணர்ந்தான்,
துன்று கரு நறுங்குஞ்சி எயினர்கோன் துண் என்றான். (2418)
துயரின் உருவாயிருந்த பரதனைக் கண்டு குகன் திடுக்குற்றான்.
வற்கலையின் உடையானை மாசு அடைந்த மெய்யானை
நல் கலை இல் மதி என்ன நகை இழந்த முகத்தானைக்
கல் கனியக் கனிகின்ற துயரானைக் கண் உற்றான்,
வில் கையின் நின்று இடைவீழ, விம்முற்று நின்று ஒழிந்தான். (2419)
தன் நற்குணத்தால் கல்லையும் கனிய வைக்கும் இயல்பு கொண்ட பரதன் மரவுரி ஆடை அணிந்து புன்னகை இல்லா முகத்தோடு புழுதி படிந்த உடலோடு இருப்பதைக் கண்ட குகன் தன் வில்லை கீழே போட்டு அதிர்ச்சியுடன் அவனைப் பார்த்தான்.
கேட்டனன் கிராதர் வேந்தன்; கிளர்ந்து எழும் உயிரன் ஆகி,
மீட்டும் மண்ணதனில் வீழ்ந்தான்; விம்மினன், உவகை வீங்கத்
தீட்ட அரு மேனி மைந்தன் சேவடிக் கமலப் பூவில்
பூட்டிய கையன் பொய் இல் உள்ளத்தன் புகலல் உற்றான். (2424)
பரதன் கூறியதைக் கேட்ட கிராத மன்னன் குகன் பரதன் பாதத்தில் வீழ்ந்து தன் கைகளால் அவன் கால்களைக் கட்டிக் கொண்டான்.
தாய் உரை கொண்டு, தாதை உதவிய தரணி தன்னைத்
தீ வினை என்ன நீத்துச் சிந்தனை முகத்தில் தேக்கிப்
போயினை என்ற போழ்து, புகழினோய்! தன்மை கண்டால்
ஆயிரம் இராமர் நின் கேழ் ஆவரோ? தெரியின் அம்மா! (2425)
அன்னையும் பிதாவும் தந்த நாட்டை நீங்கி அரசபதவியைத் தீவினை என அஞ்சி கானத்தை சிந்தையில் இருத்தி வந்திருக்கும் உன் தன்மைக்கு ஆயிரம் இராமர்கள் ஈடாவார்களா?
‘அல்லை ஆண்டு அமைந்த மேனி அழகனும் அவளும் துஞ்ச,
வில்லை ஊன்றிய கையோடும் வெய்து உயிர்ப்போடும் வீரன்,
கல்லை ஆண்டு உயர்ந்த தோளாய்! கண்கள் நீர் சொரியக் கங்குல்
எல்லை காண்பு அளவும் நின்றான்; இமைப்பு இலன் நயனம் ‘என்றான். (2432)
இராமனும் சீதையும் துயில கண்ணில் நீர் நிறைய நீண்ட இரவின் எல்லையான விடியற்பொழுது வரையிலும் இமைக்காது அவர்களைக் காத்து இலக்குவன் நின்றிருந்தான்.
என்பத்தைக் கேட்ட மைந்தன், “‘இராமனுக்கு இளையார் ‘என்று
முன்பு ஒத்த தோற்றத் தேம் இல், யான் என்றும் முடிவு இலாத
துன்பத்துக்கு ஏது ஆனேன்; அவன் அது துடைக்க நின்றான்;
அன்பத்துக்கு எல்லை உண்டோ? அழகிது என் அடிமை‘‘ என்றான். (2433)
இராமபிரானுக்குத் தம்பிகள் நாங்கள். என்னால் இராமனுக்குப் பெருந்துயர் விளைந்தது. இலக்குவன் இராமனின் துயர் நீங்க தொண்டு செய்கிறான். அவன் அன்புக்கு எல்லை உண்டா?
நங்கையர் நடையின் அன்னம் நாண் உறு செலவின் நாவாய்,
கங்கையும் இடம் இலாமை, மிடைந்தன கலந்த எங்கும்;
அங்கொடு இங்கு இழித்தி ஏற்றும் அமைதியின் அமரர் வையத்து
இங்கொடு அங்கு இழித்தி ஏற்றும் இரு வினை என்னல் ஆன. (2436)
கங்கையில் இடம் இல்லை என்று சொல்லும்படியாக குகனின் படகுகள் கங்கையெங்கும் நிரம்பின.
இடி படு முழக்கம் பொங்க, இன மழை மகர நீரை
முடிவு உற முகப்ப, ஊழி இறுதியில் மொய்ப்ப போலக்
கொடியொடு வங்கம் வேலைக் கூம்பு ஒடு படர்வ போல
நெடிய கை எடுத்து நீட்டி நீந்தின நெடுங்கை வேழம். (2439)
கங்கை வெள்ளத்தை ஆனைகள் நீந்திச் சென்றன.
சங்கமும் மகர மீனும் தரளமும் மணியும் தள்ளி,
வங்கம் நீர் கடலும் வந்து தன் வழிப் படர, மானப்
பொங்கு வெம் களிறு நூக்கக் கரை ஓரீஇப் போயிற்று; அம்மா!
கங்கையும் இராமற் காணும் காதலது என்ன மாதோ. (2440)
விசையுடன் ஆனைகள் கரையேறிய போது கங்கைச் சங்குகளும் மணியும் முத்தும் கங்கையில் வாழும் மீன்களும் கங்கை வெள்ளமும் விசையுடன் கரையில் ஏறியது. கங்கைக்கு இராமனை மீண்டும் காணும் ஆசை வந்ததோ!
சுற்றத்தார் தேவரொடும் தொழ நின்ற கோசலையைத் தொழுது நோக்கிக்
‘கொற்றத் தார்க் குரிசில்! இவர் ஆர்? ‘என்று குகன் வினவக் ‘கோக்கள் வைகும்
முற்றத்தான் முதல் தேவி, மூன்று உலகும் ஈன்றானை முன் ஈன்றானைப்
பெற்றத்தால் பெறும் செல்வம் யான் பிறத்தலால் துறந்த பெரியாள் ‘என்றான். (2454)
பரதன் குகனிடம் கோசலையை ஸ்ரீராமனின் அன்னை என அறிமுகப்படுத்தினாள்.
என்றலுமே அடியின் மிசை நெடிது வீழ்ந்து அழுவானை, “இவன் யார் “ என்று
கன்று பிரி காராவின் துயர் உடைய கொடி வினவக் கழல் கால் மைந்தன்
இன் துணைவன் இராகவனுக்கு; இலக்குவற்கும் இளையவற்கும் எனக்கும் மூத்தான்;
குன்று அனைய திரு நெடுந்தோள் குகன் என்பான், இந்நின்ற குரிசில் என்றான். (2455)
கோசலை பரதனிடம் குகனைக் காட்டி இவன் யார் வினவினாள். ’’இராமனின் துணைவன், இலக்குவனுக்கும் சத்ருக்கணனுக்கும், எனக்கும் மூத்தவன். குகன் என்ற பெயர் கொண்டவன்.’’ என்று பரதன் அறிமுகப்படுத்தினான்.
நைவீர் அலீர் மைந்தீர்! இனித் துயரால் நாடு இறந்து காடு நோக்கி
மெய் வீரர் பெயர்ந்ததுவும் நலம் ஆயிற்று ஆம் அன்றே? விலங்கல் திண் தோள்
கை வீரக் களிறு அனைய காளை இவன் தன்னோடு கலந்து நீங்கள்
ஐவீரும் ஒருவீராய், அகல் இடத்தை நெடுங்காலம் அளித்திர் என்றாள். (2456)
குகனைச் சகோதரனாய்ப் பெற்றதால் வனவாசமும் நன்மை தந்தது என்றாள் கோசலை அன்னை.
அறம் தானே என்கின்ற அயல் நின்றாள் தனை நோக்கி, ‘ஐய! அன்பின்
நிறைந்தாளை உரை ‘என்ன, ‘‘நெறி திறம்பாத் தன் மெய்யை நிற்பது ஆக்கி,
இறந்தான் தன் இளந்தேவி, யாவர்க்கும் தொழுகுலம் ஆம் ‘இராமன் பின்பு
பிறந்தானும் உளன் ‘என்னப் பிரியாதான் தனைப் பயந்த பெரியாள்‘‘ என்றான். (2457)
’இராமனை நீங்காத இலக்குவனைப் பெற்றெடுத்த சுமித்ரை அன்னை’ என சுமித்ரையை பரதன் குகனுக்கு அறிமுகம் செய்து வைத்தான்.
எழுந்தனன் இளையவன், ஏறினான் நிலம்
கொழுந்து உயர்ந்து அனையது ஓர் நெடிய குன்றின்மேல்,
செழும் திரைப் பரவையைச் சிறுமை செய்த அக்
கழுந்து உடை வரி சிலைக் கடலை நோக்கினான். (2489)
இலக்குவன் ஒரு பெரிய குன்றின் மேலேறி கடலினும் பெரிய படையொன்றைக் கண்டான்.
குதித்தனன் பாரிடைக் குவடு நீறு எழ
மிதித்தனன் இராமனை விரைவின் எய்தினான்
‘மதித்திலன் பரதன் நின்மேல் வந்தான் மதில்
பதிப் பெருஞ் சேனையின் பரப்பினான் ‘எனா. (2491)
இலக்குவன் விரைந்து இராமனிடம் சென்று பரதன் நின் மீது படைகொண்டு வந்துள்ளான் என்று தெரிவித்தான்.
கட்டினன் சுரிகையும் கழலும்; பல் கணைப்
புட்டிலும் பொறுத்தனன்; கவசம் பூட்டு அமைத்து
இட்டனன்; எடுத்தனன் வரிவில்; ஏந்தலைத்
தொட்டு அடி வணங்கி நின்று, இனைய சொல்லினான். (2492)
இலக்குவன் போர்க்கோலம் பூண்டான்.
‘இலக்குவ! உலகம் ஓர் ஏழும் ஏழும் நீ
கலக்குவன் என்பது கருதினால் அது
விலக்குவது அரிது; அது விளம்ப வேண்டுமோ?
புலக்கு உரித்து ஒருபொருள் புகலக் கேட்டியால் (2505)
இலக்குவா! நீ ஒரு மாவீரன். அதை அனைவரும் அறிவர். நான் சொல்வதைக் கேள்.
‘சேண் உயர் தருமத்தின் தேவைச் செம்மையின்
ஆணியை, அன்னது நினைக்கல் ஆகுமோ?
பூண் இயல் மொய்ம்பினாய்! போந்தது ஈண்டு எனைக்
காணிய; நீ இது பின்னும் காண்டியால்! ‘ (2510)
பரதன் செம்மனம் கொண்டவன். பரதன் அருகில் வரட்டும்.
என்றனன் இளவலை நோக்கி ஏந்தலும்
நின்றனன்; பரதனும் நிமிர்ந்த சேனையைப்
‘பின் தருக ‘என்று தன் பிரிவு இல் காதலின்
தன் துணைத் தம்பியும் தானும் முந்தினான். (2511)
படையைத் தள்ளி நிறுத்தி விட்டு தானும் தம் தம்பி சத்ருக்கனனுடன் இராமனிடம் சென்றான்.
தொழுது உயர் கையினன், துவண்ட மேனியன்,
அழுது அழி கண்ணினன், ‘அவலம் ஈது ‘என
எழுதிய படிவம் ஒத்து, எய்துவான் தனை,
முழுது உணர் சிந்தையான் முடிய நோக்கினான். (2512)
கரம் உயர்த்தி கரம் கூப்பி தொழுது கண்ணீர் சிந்திக் கொண்டு துவண்ட உடலுடன் துயரமே எடுத்த உருவினைப் போல் வந்த பரதனை இராமன் முழுமையாகப் பார்த்தான்.
எல் ஒடுங்கிய முகத்து இளவல் நின்றனன்
மல் ஒடுங்கிய புயத்தவனை வைது எழும்
சொல்லொடும் சினத்தொடும் உணர்வு சோர்தர
வில்லொடும் கண்ணின் நீர் நிலத்து வீழவே. (2514)
இலக்குவன் பரதன் நிலை கண்டு கண்ணீர் சிந்தினான்.
கோது அறத் தவம் செய்து குறிப்பின் எய்திய
நாதனைப் பிரிந்தனள், நலத்து நீங்கினாள்,
வேதனைத் திருமகள் மெலிகின்றாள் விடு
தூது எனப் பரதனும் தொழுது தோன்றினான். (2515)
நிலமகளின் தூதன் போல் பரதன் தோன்றினான்.
‘அறம்தனை நினைந்திலை! அருளை நீத்தனை!
துறந்தனை முறைமையை! ‘ என்னும் சொல்லினான்,
மறந்தனன், மலர் அடி வந்து வீழ்ந்தனன்,
இறந்தனன் தாதையை எதிர்கண்டு என்னவே. (2516)
இராமன் பாதத்தில் பரதன் பணிந்தான்.
உண்டு கொல் உயிர் என ஒடுங்கினான் உருக்
கண்டனன் நின்றனன் கண்ணன் கண் எனும்
புண்டரீகம் பொழி புனல் அவன் சடா
மண்டலம் நிறைந்துபோய் வழிந்து சோரவே. (2517)
பரதனைக் கண்ட இராமன் கண்ணீர் சிந்தினான்.
மற்றும் வரற்பாலர் எல்லாரும் வந்து அடைந்து,
சுற்றும் இருந்த அமைதியினில் துன்புஉழக்கும்
கொற்றக் குரிசில் முகம் நோக்கிக் கோ மலரோன்
பெற்ற பெருமைத் தவ முனிவன் பேசுவான். (2532)
வசிட்டர் உரைத்தார்:
“‘துறத்தலும் நல் அறத் துறையும் அல்லது,
புறத்து ஒரு துணை இலை, பொருந்தும் மன்னுயிர்க்கு,
இறத்தலும் பிறத்தலும் இயற்கை ‘என்பதை
மறத்தியோ, மறைகளின் வரம்பு கண்ட நீ? ‘‘ (2533)
பிறந்து இறக்கும் வாழ்வுக்குத் துணையாவது அறமும் துறவுமே.
“விண்ணு நீர் மொக்குளின் விளியும் யாக்கையை
எண்ணி நீ அழுங்குதல் இழுதைப் பாலதால்;
கண்ணின் நீர் உகுத்தலின் கண்டது இல்லை; போய்
மண்ணு நீர் உகுத்தி, நீ, மலர்க் கையால் ‘‘ என்றான். (2542)
தசரதனுக்கு நீர்க்கடன் செய்வாயாக என இராமனிடம் வசிட்டன் உரைத்தார்.
புக்கனன் புனலினில், முழுகிப் போந்தனன்,
தக்க நல் மறையவன் சடங்கு காட்டத் தான்
முக்கையின் நீர் விதி முறையின் ஈந்தனன்,
ஒக்க நின்று உயிர் தொறும் உணர்வு நல்குவான். (2544)
இராமன் நீர்க்கடன் ஆற்றினான்.
துண்ணொனும் நெஞ்சினாள் துளங்கினாள், துணைக்
கண் எனும் கடல் நெடும் கலுழி கான்றிட,
மண் எனும் செவிலிமேல் வைத்த கையினாள்,
பண் எனும் கிளவியால் பன்னி, ஏங்கினாள். (2549)
சீதை தசரதன் மாண்டதைக் கேட்டு துயருற்று அழுதாள்.
கல் நகு திரள் புயக் கணவன் பின் செல,
நல் நகர் ஒத்தது நடந்த கானமும்;
‘மன்னவன் துஞ்சினன் ‘என்ற மாற்றத்தால்,
அன்னமும் துயர்க் கடல் அடி வைத்தாள், அரோ! (2550)
மகிழ்ச்சி அளித்த – கணவனுடன் நடந்த கானம் – தசரதன் மறைவுச் செய்தியைக் கேட்டதும் சீதைக்கு துயரக்கடலானது.
ஆயவள் தன்னை நேர்ந்து அங்கை ஏந்தினர்,
தாயரின், முனிவர் தம் தருமப் பன்னியர்,
தூய நீர் ஆட்டினர், துயரம் நீக்கினர்,
நாயகற் சேர்த்தினர், நவையுள் நீங்கினார். (2551)
துயருற்றிருந்த சீதையை முனிபத்தினிகள் மகவைப் போல் ஏந்திச் சென்று கங்கையில் நீராட்டினர்.
‘உந்தை தீமையும் உலகு உறாத நோய்
தந்த தீவினைத் தாய் செய் தீமையும்
எந்தை! நீங்க மீண்டு அரசு செய்க ‘எனாச்
சிந்தை யாவதும் தரெியக் கூறினான். (2566)
பரதன் இராமனை நாடாள அழைத்தான்.
‘முறையும் வாய்மையும் முயலும் நீதியும்
அறையும் மேன்மையோடு அறனும் ஆதியாம்
துறையுள் யாவையும் சுருதி நூல் விடா
இறைவர் ஏவலால் இயைவ காண்டியால். (2568)
பரதன் ஆள வேண்டும் என்பது தசரதனின் சொல் என்று இராமன் கூறினான்.
‘பரவு கேள்வியும் பழுது இல் ஞானமும்
விரவு சீலமும் வினையின் மேன்மையும்
உர விலோய்! தொழற்கு உரிய தேவரும்
குரவரே எனப் பெரிது கோடியால். (2569)
பெரியோர் சொல் யாதினும் பெரிது என்று இராமன் சொன்னான்.
‘சான்றவர் ஆக தன் குரவர் ஆக தாய்
போன்றவர் ஆக பொன் புதல்வர் ஆக தான்
தேன் தரு மலர் உளான் சிறுவ! செய்வென் என்று
ஏன்றபின் அவ் உரை மறுக்கும் ஈட்டதோ? (2589)
நான்முகனின் மைந்தரே! சான்றோரிடம் பெரியோரிடம் அன்னையைப் போன்றோரிடம் புதல்வரிடம் ஒரு வாக்கு அளித்த பின் அதனை மறுக்க முடியுமா?
‘ஆம் எனில் ஏழ் இரண்டு ஆண்டில் ஐய! நீ
நாம நீர் நெடு நகர் நண்ணி நானிலம்
கோ முறை புரிகிலை என்னின் கூர் எரிச்
சாம் இது சரதம்! நின் ஆணை சாற்றினேன்! (2596)
பரதன் இராமனிடம் பதிநான்கு ஆண்டுகளுக்குப் பின் நீ அயோத்தி திரும்பி நாடாள வேண்டும். அவ்வாறு இல்லையானால் நான் உயிர் துறப்பேன். இது உன் மேல் ஆணை என்று சபதம் செய்தான்.
என்பது சொல்லிய பரதன் யாதும் ஓர்
துன்பிலன் அவனது துணிவை நோக்கினான்;
அன்பினன் உருகினன் ‘அன்னது ஆக ‘என்றான்
தன்புகழ் தன்னினும் பெரிய தன்மையான். (2597)
பரதன் அன்பினால் உருகிய இராமன் பரதனுக்கு இசைவளித்தான்.
விம்மினன் பரதனும் வேறு செய்வது ஒன்று
இன்மையின் ‘அரிது ‘என எண்ணி ஏங்குவான்
‘செம்மையின் திருவடித் தலம் தந்தீக ‘என
எம்மையும் தருவன இரண்டும் நல்கினான். (2598)
பரதன் இராமனின் பாதுகைகளைத் தருமாறு கேட்டு பெற்றுக் கொண்டான்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.