நுழைவு

நாங்கள் வசிக்கும் பகுதியில் ஒரு வகையான பனைமரம் இயற்கையாக வளர்கிறது.  அழைக்கப்படாமல், தாமாக வளரும் குருத்துகள் கடினமான மண்ணிலிருந்து தலை நீட்டுகின்றன. மடல்கள் விசிறிகளைப் போல விரிகின்றன, நான் அவற்றை நேசிக்கிறேன். விமான நிலையத்துக்கு தாமதமாக வந்தேன், ரயிலைப் பிடிக்க ஒரு பஸ்ஸில் பயணம் செய்தேன். பஸ் ஓட்டியவர் சிவப்பு உதட்டுச் சாயம் பூசியிருந்தார், வரவேற்கும் புன்னகையோடிருந்தார். நாங்கள் இருண்ட தெருக்களில் உலா போனோம். மற்ற பயணிகள் ஆண்கள், தங்கள் ஷிஃப்ட் வேலையை முடித்தோ அல்லது துவக்கவோ பயணம் செய்கிறவர்கள். ஒவ்வொருவரும் அன்பாக இருந்தனர். சுரங்க ரயிலில் நான் மறைவாக இருந்த எஸ்கலேட்டர்களில் ஏறி இறங்கினேன், ரகசியமாக இருப்பது போன்ற நடைகளில் நடந்தேன். முடிவில் என் சகோதரி துரிதமாக அடங்கி விட்டாள். அவளுக்கு மூச்சு விடுவது கடினமாகி விட்டிருந்தது.

முகாமில் என்னுடன் யிட்டிஷ் மொழியில் ஒரு பெண் பேசத் துவங்கினாள், அப்போது நாங்கள் குதிரை சவாரி செய்து கொண்டிருந்தோம். மெலிவான, 13 வயதுப் பெண், மின்னும் தங்க நிற முடி கொண்டவள். குதிரை பராமரிப்புப் பையன்கள் தங்கள் முடிகளை வாத்து வால் பாணியில் அணிந்திருந்தார்கள், குதிரைகளிடம் நாவுச் சொடுக்கல்களால் சரசமாடினார்கள். அந்த என் தோழி, யிட்டிஷில் எந்தப் பையனைத் தனக்குப் பிடித்திருக்கிறது என்று சொன்னபோது, எனக்கு அவள் பேசியது புரிந்த போதும், “என்னது?” என்று கேட்டேன். அவருடையஃபோர்ஸ் க்ளாவிகெராஎனும் புத்தகத்தில் ஜான் ரஸ்கின், “கிரேட் பிரிட்டனின் தொழிலாளர்களுக்கும் உழைப்பாளிகளுக்கும்எழுதிய கடிதங்களில், நேர் வரிசையில் செல்லாத, சுதந்திரமாக அலையும் நடை ஒன்றை உருவாக்கி இருந்தார், அதற்கு டெர்ரிடா மீது தாக்கம் இருந்ததுஃபோர்ஸ்  என்றால் நம் வாழ்வைத் தீர்மானிக்கும் தற்செயல் நிகழ்வுகளும், நம் தேர்வுகளும். அதை எழுதும்போது ரஸ்கின் தன் நினைவு சக்தியை சிறிதுசிறிதாக இழக்கும் நிலையில் இருந்திருக்க வேண்டும், அல்லது தொடர் தலைவலிகளின் கடும் தாக்கத்தால் துன்பப்பட்டிருக்கக் கூடும். என் சகோதரியை இழந்தது பற்றி நான் வருந்தும்போது, நான் தொழில் யுக்திக்கு ஆதரவளிக்கும் எண்ணைக் கூப்பிட்டேன், “உங்கள் சரித்திரத்தை அழியுங்கள்,” என்று அந்த மனிதர் சொன்னார். நான் எப்போதும் வாழ்ந்து வந்த இடத்திலிருந்து தவறான திக்கில் இரண்டு மைல்கள் நடந்தேன்.

என்னோடு வாழும் மனிதர், சமையலறையில் இருந்தார், அவரது கண்களில் வினோதமான உணர்வு தோன்றியது. அவர், “என் கால் சராய் கிழிந்து விட்டது,” என்றார். ஒரு முழங்கால் பகுதி அருகே மெல்லிய கிழிசல் இருந்தது, தோலிலும் ஒரு வெட்டு தெரிந்தது. நான் அந்த உடுப்பை, கடைக்குப் போக உபயோகிக்கும் பையில் இருந்த, கிழிந்திருந்த வேறு உடுப்புகளோடு போட்டேன். அவர், “நிஜமாகவா?” என்றார். நாங்கள் ஸ்காட்ஸ்கேலில் இருந்த மேஸிஸ் கடைக்கு ஓட்டிச் சென்றோம். ஸ்காட்ஸ்டேலில் இருக்கும் மேஸிஸ் கடையில் தள்ளுபடி விற்பனை என்பது பேரண்டத்திலுமே கடைசி பட்ச தள்ளுபடி விற்பனையாக இருக்கும். எல்லாரும் உதவி செய்ய வருவார்கள். என்னோரு வாழும் மனிதர், மறக்கப்பட்டு விட்ட சட்டைகள் அடுக்கப்பட்டிருந்த அலமாரிகளிடையே நழுவினார். ஒரு ஆள் என்னிடம் வந்தார். அவர் பெண்களின் ஆடையை அணிந்திருந்தார், பெயரட்டை ஒன்றில்ஸாண்டிஎன்றிருந்தது, அவர் என்னை , ‘தேனே,’ என்றழைத்தார். நான் அவரை, “இனியவரே,” என்றழைத்தேன். ஏதோ நாங்கள் நகர மையத்தில் ஒரு கேளிக்கை விடுதியில் இருப்பது போல, கொண்டாட்ட விருந்தின் உற்சாகம் அவரிடமிருந்து தெறித்தது. கால் சராய் ஏன் கிழிந்தது என்பது பற்றி அவர் சிறிதும் அக்கறை காட்டவில்லை. அவர் என்னிடம் 114 டாலர்கள் மதிப்பு கொண்ட அன்பளிப்பு அட்டை ஒன்றைக் கொடுத்தார், அதை நான் என்னோடு வாழும் மனிதனிடம் கொடுத்தேன், அவர் இதனால் வியப்படையவில்லை.

சிறுமியாக இருந்த போது நான் வெள்ளை நிற சுட்ட கற்களால் ஆன கட்டடத்தின் முற்ற வெளியில் விளையாடினேன். பல வருடங்களுக்குப் பிறகு அங்கு திரும்பியபோது அதன் கவர்ச்சி கரைந்து போயிருந்தது. ஒரு நாள் துருப்பிடித்த ரேஸர் ப்ளேட் ஒன்றை என் கட்டை விடலில் மேலிருந்து கீழாகச் செருகினேன். குழந்தைகள் என் சிறு உலகிற்குள்ளும் வெளியேயும் ஓடினார்கள்.

என்னோடு வாழ்கிற மனிதனிடம் நான் சொன்னேன், “எனக்கு வாழ்வு இன்னும் சில வாரங்களே இருக்கிறதாக நான் கனவு கண்டேன். என்னைத் தெரிந்தவர்கள் சலிப்பால் விட்டு விட்டுப் போனார்கள். நான் எனக்குள் யோசித்தேன்: ஒரு காரை வாங்கு. நாமே கியர் மாற்றும் வகைக் காரை வாங்கு, அவர்களிடமிருந்து விலகி அந்தக் காரை ஓட்டிப் போய் விடு.” நான் இறப்பதோடு மட்டுமல்லாமல், தனிமைப்பட்டும் போயிருப்பேன் என்பதை நான் கவனித்தேன். அப்போது நான் விழித்துக் கொண்டேன். எனக்குச் சொல்லிக் கொண்டேன்: மறுபடி தூங்காதே. என்னோடு வாழ்ந்த மனிதர் சொன்னார், “அது கவலை பற்றிய கனவு.” “நான் எதைப் பற்றிக் கவலையாய் இருக்கிறேன்?” நான் கேட்டேன். அவர், “சாவதைப் பற்றி,” என்றார்.

எனக்குத் தெரிந்த ஒரு பெண் ஒரு தீவிர நம்பிக்கைக் கூட்டமொன்றில் முன்பு வாழ்ந்தவர். நான் கேட்டேன், “அது எப்படி இருந்தது?” அவர் தன் முகத்தை உள்ளங்கைகளில் தாங்கிக் கொண்டார், சொன்னார், “நான் ஒரு போதும் தனிமையாக உணரவில்லை. சிலசமயங்களில், நான் அதை இழந்ததற்கு வருந்துகிறேன்.” அவளுடைய கண்கள் பெரிதாக இருந்தன, எதையோ தேடுவதாகத் தெரிந்தன. அவள் சொன்னாள், “எனக்குப் பெற்றோர்கள் என்று யாரும் இருக்கவில்லை. என் மாதிரி நபர்கள் ஒன்று தமக்கு இல்லாத பெற்றோர் போல ஆகிறார்கள், அல்லது பெற்றோர் போன்றாரைப் போகும் இடமெல்லாம் தேடுகிறார்கள்.” அவள் தன் முன் நெற்றியில் படிந்த முடிகளை விலக்கினாள், அந்த நம்பிக்கைக் கூட்டத்தின் தலைவன் அலங்கோலமான தாடியும், காதுப் பக்கத்தில் கன்னத்தில் அடர்ந்த முடியுமாக இருந்த தடுமாற்றம் நிறைந்த மனிதனாக இருந்ததை நினைவு கூர்ந்தாள். அவனுடைய உரைகள் எதையும் அவளுக்கு நினைவில்லை. அவன் ஆபெரா பாடல்களைப் பாடிய போது அவனுடைய குரலின் அழகை அவள் நினைவில் வைத்திருந்தாள்.

சிறுமியாக இருக்கையில் இளஞ்சிவப்பு நிற நாடாக்கள் தொங்கிய ஒரு பைசைக்கிளை வெள்ளைப் பூக்கள் கொண்ட புதர்களைத் தாண்டி நான் ஓட்டிப் போயிருந்தேன். பள்ளிக் கூடம் விட்டதும், நானும் என் தோழியும் கடல் நாரைகள் சிப்பிகளை கருப்பான பாறைகள் மீது போட்டு (உடைத்து) அவற்றின் உள்ளிருந்தவற்றை உண்டதைப் பார்த்திருந்தோம். ஒவ்வொரு நாளும் நாங்கள் அலறினோம். நாங்கள் உப்பிட்ட பன்றி மாமிசம் உண்டோம். நான் முந்நாள் போதை அடிமைகளோடு நட்பு கொண்டிருந்தேன், அதே ஆடைகளையும் அணிந்திருந்தேன். .ஜே. சிம்ப்ஸன் தன் தற்கொலைக் குறிப்பில் ஒரு ஸ்மைலியோடு கையெழுத்திட்டிருந்தார். மெல் ப்ரூக்ஸ் பார்த்த முதல் ப்ராட்வே நிகழ்ச்சி எனிதிங் கோஸ். ஈதல் மெர்மான் பாடும்போது ஒலி பெருக்கி இல்லாமல் பாடினார். ப்ரூக்ஸ், “அப்போதும் அவர் குரல் ரொம்ப உரக்கக் கேட்டது,” என்றார்.

நேற்று இரவு ஒரு தங்கும் விடுதியின் மதுக் கடையில் இருக்கையில் ஒரு காஃபி கொடுக்கச் சொன்னேன் என்பதாக நான் கனவு கண்டேன். பாரைக் கவனித்தவர், காஃபியை முன்னே வைத்து விட்டு, “அதற்கு 37 டாலர் வேண்டும்,” என்றார். நான் என்னிடம் இருந்த எல்லாப் பணத்தையும் கொடுத்தேன். வெளியே நல்ல உஷ்ணம், யாராலும் சிந்திக்க முடியவில்லை.

கலைப் படைப்பு என்பது உலகத்திலிருந்து தனியாக்கப்பட்டு ஒரு சட்டகத்திலோ, பீடத்திலோ வைக்கப்பட்ட புறப்பொருளாக இருக்காது, ஆனால் அன்றாட வாழ்வில் ஓர் அம்சமாகவே இருக்கும் என நம்புகிறார் வீடோ அக்கோன்ச்சி. நான் மது அருந்த ஒரு நபரைச் சந்திப்பதுண்டு, அவருக்கு ஃப்ரான்ஸில் சொத்து இருந்தது, நியூயார்க் நகரில் ஒரு அடுக்ககம் இருந்தது. அவர் தான் ஏழை என்று சொல்வார். நான் அவருடைய கட்டணத்தைக் கொடுத்தேன். அது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது. நான் ஒவ்வொரு தடவையும் செலவழித்தேன்.

இன்று பாதியும் மீதியை இன்னொரு நாளும் சாப்பிடலாம் என்று நினைத்து, தொட்டியில் இருப்பதில் பெரிய வள்ளிக் கிழங்கைப் பொறுக்கினேன். மைக்ரோவேவ் உலையில் அதைச் சமைத்தேன், சமையலறை நம்பிக்கையின் வாசனையால் நிரம்பியது. கிழங்கை ஒரு சட்டுவத்தில் வைத்தேன். அரிஸோனா மாநிலத்துச் சூரியாஸ்தமனம் போல ஆரஞ்சு நிறத்தில் இருந்தது. சில பாகங்கள் இன்னும் சரியாக வேகவில்லை, அவற்றை ஒரு புறம் தள்ளி வைத்தேன். உப்பு, மிளகு, கிராம்பு, அதிமதுரம், வெண்ணெய் மற்றும் தேன் ஆகியவற்றைச் சேர்த்தேன், அதை உண்டேன். பிறகு வேகாத பகுதிகளையும் சாப்பிட்டேன். பிறகு எனக்கு இன்னொன்றையும் சாப்பிட வேண்டும் போல இருந்தது.

முன்பொரு தடவை நான் மனோவசியத்துக்கு ஆட்பட்டேன். ஒரு சாய்வு இருக்கையில் நான் படுத்துக் கொண்டிருந்தேன், அந்த நபர் என்னிடம் மென்மையான குரலில் பேசினார். அவர் என்னை வசியத்துக்குட்படுத்த முயற்சிக்கவில்லை, மாறாக என் கடந்த கால வாழ்க்கைக்குள் போவதற்கு என்னை ஊக்குவிக்க முயற்சித்திருந்தார். நான் பதில்களை இட்டுக் கட்டிச் சொன்னேன், என் குரல் படிப்படியாக மெதுவாக ஆயிற்று. நான் சந்தோஷமாக இருந்தேன். வேறொரு நபராக மாறினேன், மற்றுமொரு வாழ்க்கையை வாழ்ந்திருந்தேன்.

என் சகோதரி தனக்குப் புற்று நோய் என்று தெரிந்து கொண்ட போது, அது யாரோ முகம் தெரியாத நபரிடம் இருந்து ஒரு லிஃப்ட் பெற்றுக் கொண்டது போல இருந்தது. அவளுக்கு ஒரு வருத்தம்தான் இருந்தது என்று சொன்னேனோ? நான் கேட்டேன், “ஒண்ணே ஒண்ணுதானா?” அவளுக்கு வாழ இன்னும் மூன்றே மாதங்கள் இருந்த போது, அவள் சொன்னாள், “எனக்கு உன்னோட வாழ்க்கையைப் பத்தி நிஜமாகவே எதுவும் தெரியல்லை.” நான் என் வாழ்க்கையைப் பார்த்தேன், அது ஒரு நகரத்தூடாக நடை போய், ஒரு தெரு முனைக்கு வந்து, எங்கே திரும்புவது என்று தீர்மானிப்பதைப் போல இருந்தது. அவள் இறக்கு முன், நான் நிலப்பரப்புதான் நகரம் என்று நினைத்தேன், ஆனால் அது ஒரு நகரம் அல்ல.

2 Replies to “நுழைவு”

    1. மூலக் கதையே அப்படித்தான் உலர்ந்த நடையில் உள்ளது. மூன்று கதைகளில் இரண்டைத்தான் மொழி பெயர்த்தேன். இவை அமெரிக்கச் சிறுகதைகளில் தற்போது நடக்கும் பல வித சோதனை முயற்சிகளில் ஒரு வகை என்று நினைக்கிறேன். அடுத்த இதழில் மூன்றாவது கதை வரவிருக்கிறது. அதையும் படித்துப் பாருங்கள். இவர் உயர்ந்தெழும் கதாசிரியர்களில் ஒருவராக மதிக்கப்படுகிறார்.
      மூலக் கதைக்கான சுட்டி இன்னொரு கதையில் கொடுத்திருந்தோம். அதைப் போய்ப் படித்து விட்டு கூகிள் ட்ரான்ஸ்லேடரில் போட்டுப் பாருங்கள், இந்த வகை மொழி பெயர்ப்பு கிட்டுமா என்று?

Leave a Reply to மைத்ரேயன்Cancel reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.