ஈர்ப்பு

கற்றதனாலாய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழார் எனின்?

1

எனக்கு எல்லாமும் தோராயமாகத்தான் நினைவிருக்கிறது. நினைவுகள் வழியாகவே மனிதர்கள் இன்பமும் துன்பமும் அடைவதாகச் சொல்கிறார்கள். அதாவது நினைவு எந்த அளவிற்கு துல்லியமாக இருக்கிறதோ அந்த அளவிற்கு இன்பமும் துன்பமும் வீரியத்துடன் வெளிப்படுகிறது. என் நினைவுகளை நான் தொலைத்துவிட்டேன் என்றுதான் நினைக்கிறேன். என் உறவுகளும் நண்பர்களும் என் நினைவில் இருக்கின்றனர். அவர்கள் வாழும் ஊர் அவர்களது தொழில் ஏன் அவர்கள் எப்படிப்பட்டவர்கள் என்பதைக்கூட என்னால் ஓரளவு அனுமானித்துவிட முடியும் என்று வைத்துக் கொள்ளுங்களேன். என்னைப் பற்றி நீங்கள் கேட்டால் கூட நான் எங்கு படித்தேன் பத்திலும் பனிரெண்டிலும் எத்தனை மதிப்பெண்கள் வாங்கினேன் என்னை யாரெல்லாம் பாராட்டினார்கள் யாரெல்லாம் திட்டினார்கள் என்பதைக்கூட சொல்லிவிடுவேன். ஆனால் நான் சொல்வதெல்லாம் உண்மைதானா என்ற சந்தேகம் தான் என்னை அலைகழிக்கிறது. கடந்து போன என்னால் இயற்றப்பட்ட அல்லது என் மீது இயற்றப்பட்ட செயல்கள் சரியானவை தானா என்று நான் அஞ்சிக் குழம்புகிறேன்.
ஒரு நேரம் நான் கடந்து வந்த நாட்கள் பாதுகாப்பானவையாக எந்த இடைஞ்சல்களும் அற்றவையாக யாருக்கும் எத்தீங்கும் செய்து விடாததாகத் தோன்றுகின்றன. மற்றொரு நேரம் எப்போதும் துயரிலும் பணிகளிலும் உழன்று கொண்டிருப்பவனாக உண்மையாக ஒரு கணம் கூட மகிழ்ச்சியாக இல்லாதவனாக என்னை உணர்கிறேன். இன்னொரு பொழுதில் என்னைச் சார்ந்தவர்கள் அடையும் துயர் அனைத்துக்கும் நானே காரணம் என்று நினைக்கிறேன். என்னைச் சார்ந்தவர்கள். நான் சரியான இடத்துக்கு வந்துவிட்டதாக நினைக்கிறேன். என்னை யார் சார்ந்திருக்கிறார்கள். சார்ந்திருத்தல் என்ற சொல்லின் வரையறுக்கப்பட்ட அர்த்தத்தைக் கொண்டு பார்க்கும் போது என்னை யாருமே சார்ந்திருக்கவில்லை தான். ஆனால் தங்களை மனதை ஏதோவொரு விதத்தில் என்னுடன் பொருத்திக் கொண்டவர்கள் இருக்கிறார்கள். அவர்களைப் பற்றிய விளக்கங்களை நான் இங்கு தரமுடியாது. ஒருவேளை பின்னர் அவர்களைப் பற்றி இக்குறிப்பில் ஏதோவொரு விதத்தில் தகவல்கள் வெளிப்படலாம்.
நினைவுகளை மீட்டுக் கொள்ளுதல் தான் எவ்வளவு அபத்தமான செயல். ஆனால் அதைச் செய்யத்தானே எல்லோரும் முயன்று கொண்டிருக்கிறோம். ஒரு மெல்லிய சுய ஏமாற்றுடன் நிகழ்வுகளை மகிழ்ச்சிகரமானவையாக துன்பம் தந்தவையாக கற்பனை செய்து கொள்கிறோம். தங்களுடைய மகிழ்ச்சி அல்லது துயரஅனுபவங்களைஎன்னிடம் பகிர்ந்து கொள்கிறவர்களை எதிர்கொள்ளும் போது எனக்கு ஆழமான பரிதாபம் தோன்றுகிறது. ஏனெனில் அவர்கள் ஒரு மத நம்பிக்கையாளனைப் போல இது எனக்கு நடந்தது இது மகிழ்ச்சிகரமானது,இது எனக்கு நடந்தது இது துன்பகரமானது என்று ஆழமாக நம்புகின்றனர். அதை ஒரு வஞ்சம் கொண்ட பெண்ணைப் போல அடிக்கடி நினைவு கூர்ந்து நினைவு கூர்ந்து தங்களது மகிழ்ச்சியையும் துயரத்தையும் தக்கவைத்துக் கொள்கிறார்கள். நான் அவர்களிடம் சென்று அழுத்தமான மாட்டெலும்பினைக் கடித்து தன் வாயை ரத்தமாக்கிக் கொண்டு அதையே சுவைத்து இன்பம் காணும் அப்பாவி நாய்க்குட்டி போல நீங்கள் ஏதோவொரு சம்பவத்தை நினைவு கூர்ந்து உங்கள் வாயில் சுரக்கும் சுவையற்ற நினைவு நீரை இன்பமானதென்றும் துயரார்ந்தது என்றும் கற்பனை செய்து கொள்கிறீர்கள் என்று சொல்ல நினைப்பேன். ஆனால் நான் அதைச் செய்ததில்லை. அப்படி நான் சொல்ல நினைத்ததாலோ என்னவோ கருங்கல்லை வைத்து அடித்தாலும் பிளக்க முடியாத கடினமான மாட்டெலும்பு நினைவுகளைக் கொண்டவர்களைத் தவிர பிறர் என்னிடம் தங்கள் நினைவுகளைப் பகிர்ந்து கொள்வதில்லை.
நானும் என் நினைவுகளைப் பிறரிடம் பகிர்ந்து கொண்டதில்லை அதாவது என்னைப் பற்றிய கற்பனைகளை நான் பகிர்ந்து கொண்டதில்லை. ஆனால் இந்த நினைவுப் பகிர்வு தான் மனிதர்கள் உறவு கொள்வதற்கு விரிசல்களை ஏற்படுத்தித் தருகிறது. மனிதர்கள் இவர் என்னைப் போன்றவர் தானா என்பதை அனுமானித்து பிறருடன் பழகுவதில்லை. இவரும் என்னைப் போன்ற கற்பனை உடையவர்தானா என்று அறிந்து கொள்ளவே உத்தேசிக்கின்றனர். நாம் சிறு வயதில் இருந்து எதெல்லாம் விலக்கப்படாதது எதெல்லாம் விலக்கப்பட்டது என்று சொல்லி வளர்க்கப்பட்டது போலவே தன் எதிரே இருப்பவரும் சொல்லி வளர்க்கப்பட்டிருக்கிறாரா என்பதை அறிந்து கொள்ள கண்காணிக்க நமக்கிருக்கும் ஒரே வழி அவர்களுக்கு அவர்களைப் பற்றி இருக்கும் கற்பனையை அறிந்து கொள்வது தான்.  அந்தக் கற்பனையில் நான் நம்பிக்கை இல்லாதவன் என்பதாலேயே நான் என்னைப் பற்றி பெரிதாக சொல்லிக் கொள்வதில்லை. ஆண்களை விட பெண்கள் பழகுவதற்காக விரிசல் தேடிக் கொண்டே இருப்பார்கள். அந்த விரிசலை சரியாக கணித்து பழகுகிறவன் பெண்களுக்குள் எளிதாக நுழைந்து விட முடியும். ஆண்கள் பெரும்பாலும் இரண்டு வகை தான். பெண்ணின் விரிசலை சரியாக உணர்ந்து அங்கு தாக்கி அவளுள் நுழைகிறவர்கள். விரிசலை கண்டுபிடிக்கும் நாசூக்கு இல்லாமல் அவளை முட்டிக் கொண்டிருப்பவர்கள்.
பெண்களின் கண்ணீர்க் கதைகளில் பெரும்பாலும் இருப்பது இவனுக்கு என் விரிசல் தெரியவதேயில்லை என்ற அங்கலாய்ப்பு தான். அல்லது தன்னை விரிசலற்ற இடத்தில் தாக்கி தனக்குள் நுழைந்தவன் மீதான பொறுமல்கள். இந்த ஆட்டங்களை நான் அறிந்து விலகியவன் என என்னைப் பற்றி கற்பனை செய்து விட வேண்டாம். நான் இந்தக் களத்தில் நுழையும் வாய்ப்பவற்றவன். பெண் என்ற உயிரினத்துக்கு அடிப்படையில் ஒரு தேர்வுணர்வு உள்ளது. ஒரு விதத்தில் பெண் என்பவள் அந்த தேர்வுணர்வு மட்டும்தான். ஆண் என்பவன் தேர்ந்தெடுக்கப்படும் ஒரு உணர்வு. இந்த உணர்வுகளின் மோதலைத்தான் நாம் காதல் காமம் என்றெல்லாம் சொல்லிக் கொள்கிறோம். இந்த உணர்வு மோதல் நடப்பதில் தேர்ந்தெடுக்கப்படும் வாய்ப்பற்றவர்களை எப்படி வைக்க முடியும். நான் அப்படிப்பட்டவன். என்னை நோக்கி பெண்களின் தேர்வுணர்வு திரும்பியதில்லை. உங்களுக்கு உடனே ஒன்று தோன்றுமே. எனக்குள் வெறுப்பும் பொறாமையும் தன்னிரக்கமும் நிறைந்திருப்பதாக. நீங்கள் அப்படி எண்ணிக் கொண்டால் அப்படியே. ஆகவே இந்தக் களத்தின் பார்வையாளன் என்பதால் தனக்குப் பிடித்தவனுக்கு தன் விரிசல்களை காட்டிக் கொடுக்க பெண் போடும் நாடகங்களும் அந்த விரிசலைக் கண்டறிய ஆண் செய்யும் எத்தனங்களும் எனக்கு நன்றாகவேத் தெரியும்.
என் அடிப்படை சிக்கல்களை நான் இவ்வாறாகத் தொகுத்துக் கொள்கிறேன். என்னால் என் நினைவுகளின் அடிப்படையில் கற்பனை செய்யப்பட்ட தன்னிலையை நம்ப முடிவதில்லை. அதனால் இதுதான் நான் என்று உறுதியாக என்னைத் தூக்கி முன்னிறுத்த முடிவதில்லை. நினைவுகளின் அடிப்படையில் கற்பனை செய்யப்பட்ட தன்னிலைகளுடன் என்னை நெருங்குகிறவர்களை அல்லது நான் காண நேர்கிறவர்களை நான் முழுமையாக வெறுக்கிறேன். இந்த தன்னிலையின்மை என்னை மீண்டும் மீண்டும் தோல்வியுறச் செய்கிறது. மேலும் மேலும் அந்நியப்படுத்தி நிறுத்துகிறது. இன்னும் இன்னும் வெறுப்பு கொள்ளச் செய்கிறது.

2

என் அடையாளங்களை மறைத்துக் கொண்டுதான் நான் பேசத் தொடங்கி இருக்கிறேன். என்னை எப்படிப்பட்டவன் என்று நீங்கள் அறிந்து கொள்ள என் சொற்களைத் தவிர உங்களுக்கு வேறு மூலங்கள் கிடையாது. நான் வேலை செய்த அலுவலகம் எது நான் பார்த்தது என்ன மாதிரியான வேலை  என்பதெல்லாம் தேவையானதல்ல. எல்லோரையும் போல சோற்றுக்காக ஏதோவொரு பயனற்ற வேலையை திரும்பத் திரும்ப செய்து கொண்டிருந்தவன் நான். ஆனால் அங்கு எனக்கு மதிப்பு இருந்தது. பொசுங்கைகளுக்கு எப்போதும் சமூகம் ஒரு மரியாதையை கொடுத்துத்தான் வைத்திருக்கும். அமைதியானவர் எந்த பிரச்சினைக்கும் செல்லாதவர் யார் விஷயங்களிலும் தலையிடாதவர் என்றெல்லாம் அந்த பொசுங்கைகளுக்கான மதிப்பு வெளிப்படும். ஆனால் இதெல்லாம் ஆண் தன்மையுடைய பேச்சுகள். பெண்களுக்கு பொசுங்கைகளை பிடிக்காது. உள்ளூர பொசுங்கைகளை ஆத்மார்த்தமாக வெறுப்பார்கள். அந்த வெறுப்பைநாகரிகமாகன இடைவெளியாகபெண்களால் காட்டிக் கொள்ள முடியும். நாகரிகத்தின் எல்லை தாண்டாமல் தன் அந்தரங்கங்களை திறந்து கொள்ளாமல் ஒரு பெண் உங்களுடன் வெகு நாட்கள் நட்பு பாராட்டுகிறாள் என்றால் அவள் உங்களை பொசுங்கை என்று முடிவு செய்து கொண்டாள் என்றுதான் அர்த்தம். இதெல்லாம் இப்போது தெளிவாக இருப்பது போல அப்போது எனக்கு இருக்கவில்லை. அப்போதெனில் சில வருடங்களுக்கு முன்பு வரை.
அப்படி ஒரேடியாக எல்லாக் குற்றங்களையும் பெண்கள் மீது சுமத்திவிட முடியாது. நானும் பெண்ணை நெருங்குவதை பெண்ணால் நெருங்கப்படுவதை அஞ்சுகிறவன் தான். அச்சம் ஒரு பக்கம் என்றாலும் அதைவிட எரிச்சல் எனக்கு அதிகம். பெண்கள் தங்கள் ஆடுகளத்துக்குள் இழுக்காமல் எந்த ஆணுடனும் பேசுவதில்லை. அவர்களது களத்தில் தான் அவர்களால் நிம்மதியாக விளையாட முடியும். அந்த ஆட்டத்தின் விதிகளைப் புரிந்து கொண்டு அதில் நீங்கள் தேர்ச்சி பெற்று வெற்றியை நெருங்கும் புள்ளியில் ஆட்ட விதிகள் மாற்றப்பட்டிருக்கும். பின்னரே அறிவீர்கள் அவளாக அளிக்காமல் அவள் தான் அந்த வெற்றியை உங்களுக்கு அளிக்கிறாள் என்பதை நீங்கள் உள்ளார்ந்து உணராமல் வெற்றி சாத்தியமே இல்லையென. அதைத்தான் என்னால் செய்ய முடியவில்லை. முட்டாள்தனமாக பெண்ணை என் களத்திற்குள் இழுக்க நான் முயன்று கொண்டிருந்திருக்கின்றேன். ஒவ்வொரு முறை நான் அப்படி முயலும் போது அடிபட்டு இறப்பிற்கு முந்தைய விக்கலில் திணறிக் கொண்டிருக்கும் பூனையைக் காணும் பரிதாபத்துடன் பெண்கள் என்னைக் கடந்து சென்றிருக்கின்றனர்.
ஆணுக்கு பெண் கொடுக்கும் மரியாதை ஒரு வகையில் மிகுந்த நாகரிகம் நிறைந்த அவமதிப்பு தான். இன்றிலிருந்து யோசித்துப் பார்க்கும் போது அப்படி நிறைய பெண்களால் நான் அவமதிக்கப்பட்டிருக்கிறேன் என்று தெரிகிறது. பெண் ஆணிடம் நிச்சமின்மையை சாகசத்தை எதிர்பார்க்கிறாள். எனக்கு வயதான பெற்றோர் இருந்தார்கள் வீடு கட்டுவதற்கு வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய கட்டாயம் இருந்தது. ஆகவே பெண் என்னை மரியாதை கொடுத்து அவமதிப்பதால் எல்லாம் சீண்டப்பட்டு நான் வெல்லப் புறப்பட முடியாது. என் கையில் நூறு ரூபாய் சேர்ந்தாற்போல் வைத்துக் கொள்ளத்தான் உழைக்க முடியும். இப்படித்தான் என்னால் இருக்க முடியும். இதைத்தான் பொசுங்கைத்தனம் என்று சொன்னேன். பெண் பொசுங்கைத்தனம் இல்லாதவர்களுக்கு சில சலுகைகளை அளிக்கிறார்கள். அதாவது பெண் ஆணிடம் எதிர்பார்க்கும் சாகசம் போன்ற முட்டாள்தனங்களால் ஒருவன் தன் வாழ்க்கையை வீணடித்துக் கொண்டிருந்தால் அவனையும் பெண்கள் விரும்புகிறார்கள். உங்களுக்கு நம்பச் சிரமமாக இருக்கும். ஆனால் உண்மை என்னவோ அப்படித்தான் இருக்கிறது. பெண் தான் உள்ளூர மிக விரும்புகிற ஒருவன் வீழ்ச்சி அடைவதை எச்சமின்றித் தோற்பதை மனதார விழைகிறாள். ஒரு பெருந்தோல்வி என்பது ஆணில் நிகழும் பெரும் விரிசல். சிரமப்படாமல் அவனுக்குள் சென்று அமர்ந்து கொள்ளலாம் அல்லவா.
மகனை போருக்கு அனுப்பும் தாய் அவன் செத்துப் போக வேண்டும் என்று தான் நினைக்கிறாள். அந்த இறப்பின் வழி அவளுக்குள் கனன்று கொண்டிருக்கும் வஞ்ச உணர்வுக்கு பற்றி எரிய ஒரு பட்டமரம் கிடைத்துவிடுகிறது. இந்த சுழல் தான் பெண். தான் விரும்புகிறவனின் தோல்வியை விழைகிறவள். அந்தத் தோல்விக்கான வஞ்சத்தை பற்றிக் கொண்டே வாழ்கிறவள்.
அப்படி ஒருவனை நான் சந்திக்க நேர்ந்தது. தோற்ற ஆண். அதாவது சாகசங்களால் தோற்ற ஆண். பிரச்சினை என்னவென்றால் அவன் தன்னை அப்படி கற்பனை செய்து கொண்டவன். அவனுக்குள் இருக்கும் தீங்குகளை மலினங்களை என்னால் அடையாளம் காணமுடியும். ஆனால் பெண்கள் ஏனோ தீங்குகளை மலினங்களை பாசங்குகளை கீழ்மைகளை விரும்புகிறவர்களாகவே எப்போதும் இருக்கின்றனர். சுயம் குறித்த சாகச கற்பனை கொண்டவன் சராசரிப் பெண்ணுக்கும் உண்மையிலேயே சாகசங்கள் உடையவன் தான் சராசரி அல்ல என்பதை விடாப்பிடியாக நம்பும் பெரும்பான்மையான சராசரிப் பெண்களுக்கும் போதுமானவனாக இருக்கிறான்.

3

இவ்வாறாக புனைந்து கொள்வது எனக்கு வசதியானதாக இருந்தது. அதாவது யாருடைய அந்தரங்கத்துக்குள்ளும் எட்டிப்பார்க்க விழையாக நாகரிகமான மனிதன். இதுவும் பெண்களுக்கு எதிரானது தான். பெண்கள் தங்களது அந்தரங்கங்களை காட்டிக்கொண்டிருக்கவே விழைகிறார்கள். விரும்பிய ஆணை பெண் மனதின் அந்தரங்கத்தின் வழியே உடலின் அந்தரங்கத்துக்குள் இழுத்துக் கொண்டே இருக்கிறாள். ஆனால் அந்தரங்கங்கள் பங்களிப்பை கோருகிறவை. எனக்காக நீ எதையாவது செய்தாக வேண்டும் என்ற கட்டாயத்தை நோக்கி ஆணை இழுத்துச் செல்கிறவை. மேலும் எஞ்சியிருக்கும் கொஞ்ச நம்பிக்கையையும் சிதைத்துப் போடுகிறவை. ஒருவேளை அந்தரங்கத்தை தெரிந்து கொள்வதில் எனக்கிருக்கும் அச்சம் தான் என்னை விலக்கி வைக்கிறதோ என்னவோ. ஆனால் அவன் எந்த தடங்கலும் இல்லாமல் பெண்களின் அந்தரங்கத்துக்குள் நுழைந்தான். முதலில் அவன் சில பெண்களை என்னிடம் புகழ்ந்த போது பெண்ணுக்கென அலைகிறவன் என்று நான் எண்ணிக் கொண்டேன். பின்னர்  அவன் பேச்சு எங்கு சுற்றினாலும் பெண்ணைப் பற்றிய ஒரு கனிவான கற்பனையில் வந்து முட்டுவதை நான் உணர்ந்து கொண்ட போது உள்ளுக்குள் ஒரு வகையான அச்சமும் விலக்கமும் தோன்றியது. அது மெய்யாகவும் தொடங்கியது.
பொதுவாக பெண்கள் ஆண்களுடன் பழகுவதை மிக விரும்புகிறவர்கள். பல நூற்றாண்டுகளாக அறையில் அடைத்து வைக்கப்பட்டு புணரப்பட்டவர்கள் அடிமைகள் போல வேலை செய்ய பழக்கப்படுத்தப்பட்டவர்கள் என்பதால் அவர்களின் இன்றின் தகுதி எங்கிருந்தாலும் மிகக்கடை நிலையில் இருக்கும் ஒரு மனிதன் தன்னை புகழ்வதைக் கூட அவர்கள் விரும்புவார்கள். அப்படி புகழப்படுவதற்கு தான் தகுதியானவளே என்று அப்பாவித்தனமாக நம்புவார்கள். பொதுவாக பெண்களுக்கு தன்னை இன்னொரு பெண் போற்றுவது பிடிக்காது. சற்று புத்திசாலிப் பெண் என்றால் ஒரு ஆணால் புகழப்படுவதை பெண் விரும்புவது அவளது உயிரியல் தேர்வு என முட்டாள்தனமாக விஞ்ஞானம் பேசுவாள். எப்படியோ பெண்களுக்கு ஆண்கள் முக்கியம். குறிப்பாக ஆணை எப்போதுமே நான் வெறுக்கிறேன் ஆண் எனக்கொரு பொருட்டல்ல என்று சொல்லும் பெண்ணின் மனதில் எப்போதுமே ஆண் இருக்கிறான். 
ஆனால் பிரச்சினை என்னவெனில் பதின்பருவத்தில் பெண் தன்னுள் ஒரு லட்சிய காதலனை வரித்துக் கொள்கிறாள். உடைகளைக் கலைந்து ஒரு ஆண் தன் குறியை அவளுடைய குறிக்குள் நுழைப்பது வரை பல மேன்மைகளை பெண் கற்பனை செய்து கொண்டிருப்பாள். பாலுறவு என்ற யதார்த்தத்தை கடந்து செல்ல தாய்மை காதல் போன்ற கற்பனைகள் அவளுக்கு உதவுகின்றன. உண்மையில் பெண் என்பவள் முதன்முறை துய்க்கப்படும் வரை மட்டுமே ஆணுக்கு பொருள்படுகிறவள். அப்படி அவளை துய்ப்பதற்காக ஒரு ஆண் எந்த எல்லைக்கும் கீழிறங்குவான்.  அந்த எல்லையை ஒரு பெண்ணால் கற்பனை செய்து பார்க்கவே முடியாது. எப்படி ஒரு பெண் தன்னுடன் ஆண் பழக வேண்டும் என்று விரும்புகிறாளோ அது போலவே எல்லா ஆண்களும் தான் விரும்பும் பெண் எல்லாம் தன்னால் புணரப்பட வேண்டும் என்று விழைகிறான்.
இது பெண்ணுக்குத் தெரியவே செய்கிறது. ஆனால் அவள் அவளை அடைய வேண்டும் என்பதற்காக ஆணில் அவளுக்கென வெளிப்படும் அக்கறைகளை உண்மையென நம்ப விழைகிறாள். புணர்வதற்கு முன் ஒரு ஆண் எப்படி அக்கறை கொண்டிருந்தானோ அது போலவே புணர்வுக்குப் பின்னும் நடந்து கொள்ள வேண்டும் என்று அப்பாவித்தனமாக எதிர்பார்க்கிறாள்.
இங்குதான் தோற்ற ஆண் என்ற சித்திரத்தை பெண் மனது உருவாக்குகிறது. ஆணின் கண்ணீர் என்பது பெண் அடையும் வெற்றிகளில் முக்கியமானது. அதன் வழியாக அவனுக்குள் எளிதாக நுழைந்து விட முடிகிறது. ஆனால் அந்த கண்ணீர் கூட அவள் உடலுக்காக ஆண் உருவாக்கும் ஒரு கழிவுப்பொருள்தான் என்பதை அவள் உணர்வதில்லை. அழுகிறவனை தோற்றவனை கவனமற்று அவள் மேல் அன்பு செலுத்துகிறவனை பெண் விரும்புகிறாள்.
பெண்ணுக்கும் ஆணைப்புணர வேண்டும் என்ற இச்சை உள்ளுக்குள் இருக்கவே செய்கிறது. ஆனால் அவளுக்கு அச்செயல் மீது எப்போதும் அச்சம் உண்டு. தன் உடல் முழுதாக ஒரு ஆணுக்குத் தெரிந்த பிறகு தான் பொருளற்றுப் போய்விடுவோமோ என்று அவள் அஞ்சுகிறாள்.
அதோடு எல்லா ஆண்களையும் புணர்வது உடலுக்கும் நல்லதில்லை தானே. ஆகவே பெண் ஒரு புத்திசாலித்தனமான முடிவினை எனக்குத் தெரிந்தவரை ஒரேயொரு புத்திசாலித்தனமான முடிவினை  எடுக்கிறாள். அது ஆண் வழியாக புணர்வை விட மயக்கம் தரும் முன் புணர்வை மயக்கத்தினை மனதுக்குள் நீடித்துக் கொள்வது. 
இந்த முன் புணர்வை மயக்கத்தை நீடிப்பது சற்று சிக்கலானது. ஆற்றலையும் தொடர்ந்த கவனத்தையும் கோரும் விஷயம். உதாரணமாக பெண் இத்தகைய மயக்கங்களை நீடித்துக் கொள்ள விழைகிற ஆணை தன்னுடைய ரத்த உறவாக அடையாளப்படுத்துவாள். அதாவது நான் முன்பே சொன்னது போல இன்னின்ன தகுதிகளெல்லாம் கொண்ட ஒரு ஆணை புணர்வுக்கான வாய்ப்பு விட்டுப்போகும் போது பெண் தன் சகோதரன் என்ற பாதுகாப்பான வட்டத்துக்குள் நிறுத்துகிறாள்.  பொதுவாக சமூகத்தில் பெண்களுக்கு உடன்பிறந்த சகோதரன் மீது பால் கவர்ச்சி தோன்றுவதில்லை. அதற்கு பல சமூக உளவியல் காரணங்கள் சொல்கிறார்கள். ஆனால் பெண்கள் ஒரு ஆணை சகோதரன் என்று சொல்லி அதைப் பிரகடனப்படுத்த முனைவதற்கு காரணம் எனக்கு இந்த ஆடவனுடன் உடலுறவு கொள்ளும் எண்ணம் இல்லை என்பதை உணர்த்தவே. அவர்களை இந்த சகோதர உணர்வெழுச்சி கொள்ளச் செய்வதே அந்த ஆணின் மீதான அகவேட்கை தான் என்பதைச் சொன்னால் கோபப்படுவார்கள். கண்ணீர் மல்குவார்கள்.

4

ஆண்களுக்கு இந்த சிக்கல் எல்லாம் இல்லை. ஏனெனில் பெண்ணைத் தக்கவைத்துக் கொள்ள ஆண் அவளுக்குள் தூண்டுவதையே ஒரு கவர்ச்சிகரமான அம்மாத்தனத்தைத் தான். உண்மையில் அம்மாக்களுக்கு மகன்களிடம் இல்லாத ஒரு செயற்கையான உணர்ச்சிநிலை இந்த அம்மாத்தனம். அம்மாத்தனத்தின் ஒரே நோக்கம் படுக்கை தான். வெடிக்கும் வரை ஊதப்படும் பலூன் போல கட்டிலுக்குச் செல்லும் வரை அல்லது கண்ணீர் வரும் வரை உணர்வுகளை ஊதிக்கொள்ள இந்த அம்மாத்தனம் பயன்படுகிறது.  ஆகவே இந்த சகோதர லேபிள்கள் ஆண்களுக்கு உணர்வு முறுக்கத்தை அளிக்குமேயன்றி எவ்விதத்திலும் தயங்கிப் பின்னடைய வைக்காது.
அம்மாத்தனத்தை உருவாக்கிக் கொள்வது ரொம்பவும் எளிதானது தான். பொதுவாக பெண்களுக்கு தான் கவனிக்கப்பட வேண்டும் புகழப்பட வேண்டும் என்ற எண்ணம் பதின்பருவத்திலும் அக்கறை செலுத்தப்பட வேண்டும் என்ற எண்ணம் மத்திய வயதிலும் இருக்கும். இந்த இரண்டு வகையான பெண்களின் தேவைகளையும் (அதாவது உடல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ளத்தக்க வயதுடைய பெண்கள்) ஒரு ஆண் ஒரே சமயம் வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கு இந்த அம்மாத்தனம் பயன்படும். ஒரு இளம் பெண்ணை கனிவுடன் கவனிக்க ஒரு  மத்திய வயதுப்பெண்ணை அக்கறையுடன் விசாரிக்க இந்த அம்மாத்தனம் ஆண்களுக்குப் பயன்படும்.
ஆண்களைப் பற்றி இன்னொன்றும் இங்கு சொல்லியாக வேண்டும். பொதுவாக ஆண்களுக்கு கொஞ்சம்அப்பாவியானபெண்ணை பிடிக்கும். அதோடு கிராமத்துப் பெண்கள் நாட்டார் வழக்குகளை அதே இழுவையுடன் பயன்படுத்தி பேசுகிற பெண்களை ஆண்கள் மிக விரும்புவார்கள். ஏனெனில் அவர்களது கல்வி நாட்டார்கள் கிராமத்தார்கள் பாவம் அப்பாவிகள் நம்மால் முன்னேற்றப்பட வேண்டியவர்கள் என்ற எண்ணத்தை அவர்களுக்குள் விதைத்திருக்கும். உண்மையில் அப்பாவித்தனமாக நடந்து கொள்கிற எதெற்கெடுத்தாலும் அதிர்ச்சி அடைந்து அழுகிற பெண்ணால் மிகச்சரியாக ஆணைப் பயன்படுத்திக் கொள்ள முடியும். இயல்புநிலையில் நீங்கள் பெண்களை கவனித்திருக்கலாம். மெத்தையில் விடிந்தவுடன் எழுந்து அமர்ந்திருக்கும் ஒரு அப்பாவிக் குழந்தை போல பாவிப்பார்கள். அந்த பாவத்திற்கு இந்த பெண் நாட்டார்தன்மை பல மடங்கு கவர்ச்சியைக் கூட்டும். ஆண்களை பயன்படுத்திக் கொள்ள இந்த அப்பாவித்தனம் மிகச்சிறந்த ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது.
இதுதான் என் அலுவலகத்திலும் நிகழ்ந்தது. தோல்விக் கதைகளை சுமந்து கொண்டு என் அலுவலகத்துக்கு அவன் வந்தான். அவனைப் பார்த்தபோதே நான் ஊகித்துவிட்டேன். இவனது முதன்மை நோக்கம் தன் கதைகளை கட்டவிழ்ப்பதாகவே இருக்குமென்று. நான் தோற்கத் தொடங்கியது இங்குதான்.
இப்போது நினைத்துப் பார்த்தால் சிரிப்பு தான் வருகிறது. பெண்களும் சமூகமும் சேர்ந்து என்னை கைவிட்டுவிட்டதாக நான் நம்பிக் கொண்டிருந்திருக்கிறேன். அந்த எண்ணம் அந்த தினங்களை கடக்கும் போது அழுத்தமானதாக இருந்தது.
என்னிடம் கண்ணியத்துடன் பேசிய பெண்கள் ஏளனத்துடன் விலகினர். நான் பேசும் ஒவ்வொரு சொல்லையும் கூர்ந்து கவனித்து உள்வாங்கியவர்கள் என்னிடம் ஏதோவொன்றை கேட்டுவிட்டு அந்த விஷயத்தை நான் சொல்லி முடிப்பதற்கு முன் இன்னொரு தோழியை நோக்கி சிரித்தபடியே என்னை பொருட்படுத்தாமல் கடந்து சென்றனர்.
நான் ஏன் துன்புறுகிறேன் என்று எனக்கு இப்போது புரிவது போல அப்போது விளங்கவில்லை. அதற்கு காரணம் பெண்களால் நிகழ்த்தப்பட்ட ஒரு திட்டமிட்ட ஒதுக்கல். இது பெண்மையின் குணங்களில் ஒன்று. தன்னை எது ஈர்க்கிறதோ அதில் நிலைப்படுத்தி கொள்வதற்காக மற்ற அனைத்தையும் வெறுத்து ஒதுக்குவார்கள். இந்த வெறுப்பினை பத்தினித்தனம் என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். ஒரு ஆண் மனைவி தோழி அம்மா சகோதரி என அனைத்துப் பெண்ணிடமும் ஒரு மனப்பத்தினித்தனத்தை எதிர்பார்க்கிறான். அதைக் கொடுக்கக்கூடியப் பெண் கொண்டாடப்படுகிறாள் என்பது நூற்றாண்டுகளாக பூட்டி வைத்துப் புணரப்பட்ட பெண்களின் குருதிக்கு எப்படியோ தெரிகிறது. அந்த மனப்பத்தினித்தனத்தை உடனடியாக செயல்படுத்தவும் தொடங்கிவிடுகின்றனர். அப்படிப்பட்ட பத்தினித்தனத்தால் பாதிக்கப்படத் தொடங்கினேன் நான்.
பெண்களுக்கு என் மீதிருக்கும் உள்ளார்ந்த வெறுப்பை நான் ஏற்கனவே தெளிவாகத் தெரிந்து வைத்திருந்தேன். அறிந்த ஒரு ஆண் பெண்ணிடம் கேட்கக்கூடிய எளிய கேள்விகளைக்கூட நான் பெண்களிடம் கேட்டதில்லை.  ஏனெனில் பெண்களின் வெறுப்பை நான் அஞ்சுகிறேன்.  அளவு கடந்த வெறுப்பை நான் ஒரு ஆணின் முகத்தில் கூட கண்டதில்லை. முதலில் ஆண் தன்னிடம் தவறாக நடந்து கொண்டுவிடுவானோ என்று எண்ணி பெண் சிடுசிடுப்பானவளாக காண்பித்துக் கொள்கிறாள் என்று எணணியிருக்கிறேன். எவ்வளவு குழந்தைத்தனம்! முழுக்க முழுக்க வெறுப்பால் நெய்யப்பட்டவள் பெண். அந்த வெறுப்பின் மேல்தளத்தில் மிதக்கும் சில துளிகளே அன்பென்றோ தாய்மையென்றோ எடுத்துக் காட்டப்படுகின்றன. உலகின் எல்லா போர்களுக்கும் பெண்களின் ஆழ்மனதில் ஊறிய வெறுப்பு தான் காரணமாக இருந்திருக்குமோ என்று எனக்கு சந்தேகம் எழுகிறது. ஏனெனில் நான் அவ்வளவு வெறுக்கப்பட்டிருக்கிறேன்.
அந்த வெறுப்பினை அனுபவிக்காதவர்கள் நான் இப்போது சொல்வதுடன் தங்களை இணைத்துப் பார்த்துக் கொள்ள முடியாது. உங்கள் அனுபவத்தளத்துக்குள் வந்திருக்க வாய்ப்பில்லாத ஒன்றை வார்த்தைகளாக மாற்ற முனைகிறேன். பெண் ஆணினை எப்போதும் முகர்ந்து திரிகிறவள் என்பதால் எந்த நரம்பைச் சுண்டினால் அவன் பரவசப்படுவான் எந்த நரம்பை இழுத்தாள் வலியால் துடிப்பான் என்பதெல்லாம் பெண்ணுக்கு நன்றாகவே தெரியும். நானும் அப்படி சுண்டி எறியப்பட்டவனே.
பெண்ணால் எவ்வளவு கூட்டத்திலும் ஆணுடன் தனித்து உரையாட முடியும். என்னுடன் ஒரு பெண் அப்படி உரையாடினாள். ஆனால் அங்கு சற்று ஆட்கள் சேர்ந்ததும் என் மனநிலையை சரியாக கணித்து அதற்கு எதிர்புள்ளியில் போய் நின்று கொண்டு என்னை ஏளனம் செய்தாள். குறிப்பாக பெண் தன் வன்மத்தைக் கொட்ட ஆணை உடல்ரீதியாகவே (அவளுடன் உடலுறவு கொள்ளாதவர்களையும்) ஏளனம் செய்கிறாள்.
இன்னும் நுண்ணுணர்வு உடைய பெண்கள் வேறு மாதிரி என்னை பழிவாங்கினார்கள். என்னிடம் ஒரு உதவி கேட்பார்கள். பெரும்பாலும் செய்து தருவேன். அவ்வுதவியைப் பெற்றுக் கொண்டு அதைச் செய்யத்தானே நீ இருக்கிறாய் என்பது போல கடந்து செல்வார்கள்.
பெண்கள் உங்களுக்கு இழைக்கும் தீங்குகளை உங்களால் வார்த்தைகளாக மாற்றிக் கொள்ள முடியாது. அதற்கான சந்தர்ப்பத்தை அந்த தீங்குகள் உங்களுக்கு வழங்குவதில்லை. அவை உங்களை மெல்ல மெல்ல வன்மம் நிறைந்தவனாக வெறுப்புற்றவனாக மாற்றுகிறது.

5

அவனைப் பற்றி சொல்லத் தொடங்கி என்னைப் பற்றியே பேசிக் கொண்டே போகிறேன்.
சுயநலத்தை நேரடியாகக் காணும் போது நாம் சற்று நடுங்கித்தான் போகிறோம். ஆனால் இங்கு எல்லாமே சுயநலத்தால் மட்டுமே இயங்கிக் கொண்டிருக்கிறது. முயன்று வாழ்வுக்கான பொருளை உருவாக்கிக் கொள்ள முடியாதவர்கள் குடும்பம் குழந்தைகள் போன்ற தொன்மங்களை நம்பி அதற்கு உழைப்பதாக நம்பிக் கொண்டுதன் வாழ்வுக்கு பொருளைஉருவாக்கும் சுயநலத்துடன் செயல்படுகின்றனர். இந்தஉன்னதமாக்கப்பட்டசுயநலன்களை நாம் அங்கீகரிக்கிறோம். சில நேரங்களில்  இத்தகைய சுயநலன்கள் தான் உண்மையிலேயே மிகச்சிறந்த லட்சிய செயல்பாடு என்ற எல்லைக்குக்கூடச் சென்று நாம் அங்கீகரிக்கிறோம். உண்மையில் குடும்பம் என்ற அமைப்பு மனிதனின் பயத்தின் வெளிப்பாடு. சுதந்திரமாக இருக்க விழைவதற்கான அச்சம் தான் குடும்ப அமைப்பு தாங்கி நிறுத்துகிறது.
சரி அதை விட்டுவிடலாம். இந்த உன்னத சுயநலன்களைத் தாண்டி ஒருவனிடம் சுயநலம் வெளிப்படுகையில் அது அப்பட்டமானதாக இருக்கையில் நாம் என்னதான் செய்வது? அப்படிப்பட்டவர்களை எப்படித்தான் எதிர்கொள்வது? நாம் பேசிக்கொண்டிருப்பவன் அத்தகைய சுயநலன்களால் அதாவது தன் மனதை நெகிழ்வாக வைத்துக் கொள்வதற்காக எவ்வளவு கீழான நிலைக்கும் இறங்கக்கூடிய அளவு கீழானவன். ஆண் மன நெகிழ்வை அடைவது காமத்தின் வழியாக மட்டுமே. ஆண் மனம் முழுக்க எப்போதுமே ஒரு பெண்ணை நினைத்துக் கொண்டிருக்கும்படி வைப்பது காமம் மட்டுமே. தாயை மகளை எந்தவொரு ஆணாலும் எப்போதும் மனதில் வைத்திருக்கமுடியாது. ஏனெனில் அவர்கள்உதவாதவர்கள்“. மனைவி என்று சொல்லப்படும் உறவு அத்தகையது அல்ல. அவ்வுறவு குறித்து பல தருணங்களில் நெகிழ்வுடன் குறிப்பிடும் ஆண்கள் உத்தேசிப்பது காமத்தைத்தான். அல்லது வழக்கம்போல பெண்களை(அதாவது மனைவிகளை)வேலை வாங்கி சுரண்டி இருப்பார்கள்.
நான் சொல்கிறவனும் அப்படித்தான். அவனுக்கு எந்தவகையான அறமும் நாகரிகமும் தெரியாது. எந்நேரமும் தன் நலனைப் பற்றி மட்டுமே சிந்திக்கிறவனாக இருப்பான். தனக்கு சிறு இடையூறு ஏற்பட்டுவிட்டால் கூட நிம்மதியிழந்து அதை அனைவரிடமும் சொல்லிப் புலம்புவான். தன் முன்புணர்வு மயக்கத்தை நீடித்துக் கொள்வதெற்கென எல்லா பெண்களுக்கும் ஓடி ஓடி உதவுவான்.
நீங்கள் அவதானித்து இருக்கலாம். சமூகத்தில் தாழ்ந்த நிலையில் இருப்பவர்களிடம் அடிப்படை நீதியுணர்ச்சி செயல்படாது. ஏனெனில் அவர்கள் இந்த நீதியமைப்பு தங்களுக்கு எந்த நல்லதையும் செய்யவில்லை என்று நம்புகிறார்கள். எவ்வளவு சொல்லியும் அமைப்பிற்குள் இருக்கும் அனுகூலங்களை நீங்கள் அவர்களுக்கு உணர்த்திவிட முடியாது. பெண்களும் தாழ்ந்த நிலையில் இருப்பவர்கள் தான். தாழ்வு என்றதும் பொருளாதாரத்தில் பின்னடைதல் என்று உங்களுக்குத் தோன்றலாம். உண்மை அதுவல்ல. இங்கிருக்கும் செல்வ அமைப்பில் பெண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. அந்த அமைப்பின் அடிவேர் ஆண் தன்மை உடையது. ஆகவே எத்தகைய செழிப்பான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் சுயமாக முயன்று முன் சென்றிருந்தாலும் பெண் என்ற காரணத்தாலேயே அவள் தாழ்ந்தவள் தான். அதை எல்லாப் பெண்களும் உள்ளூர உணரவே செய்கின்றனர். ஆகவே அவர்களிடமும் நீதியுணர்ச்சி இருக்காது.
நான் இவ்வளவு நேரம் சொல்லிக் கொண்டு வருகிறேன் அல்லவா ஒருவனைப் பற்றி. அவனை பெண்களுக்கு அதிகமாகவே பிடிக்கும். காரணம் அவனுக்குள் நீதி என்ற விஷயமே செயல்படுவதில்லை. தன் எல்லைகளை மிகத்திட்டவட்டமாக பெண்களுக்குப் பிடித்தது போல அமைத்துக் கொண்டான். அதாவது தன்னுடைய வேலையைச் செய்வதற்கு கூட எரிச்சல் படுவான். ஆண்களையும் உடல்ரீதியாக முன்புணர்வு மயக்கத்தை நீடித்துக் கொள்ள வாய்ப்பற்ற பெண்களையும் நாகரிக எல்லைக்குள் நின்றுகூட அவன் மதித்ததில்லை. ஏதோவொரு வகையில் அவர்களை அவன் ஏளனம் செய்து கொண்டே இருப்பான். மற்றொரு புறம் முன் புணர்வு மயக்கத்தை நீடித்துக் கொள்ள வாய்ப்பிருக்கும் பெண்களிடம் சகோதரனாக (?) வழிகாட்டியாக எந்நேரமும் உதவி செய்யக் காத்திருப்பவனாகத் தன்னைக் காட்டிக் கொண்டான்.
பெண்களின் ஆதார குணங்களில் இதுவும் ஒன்று. அவர்கள் தங்கள் மீது செலுத்தப்படும் அன்பை பிறர் மீது செலுத்தப்படும் அன்பின்மையைக் கொண்டே அளவிடுகிறார்கள். அதனால் தான் ஜனநாயக சிந்தனை உடையவர்களையும் ஜனநாயகவாதிகளையும் பெண்களுக்குப் பிடிப்பதில்லை. ஏனெனில் சமத்துவ சமூகத்தில் அன்பு அன்பின்மையால் நிகர் செய்யப்பட்டிருக்கிறது. இது தன் உயிர் இயல்பின் மீது செலுத்தப்படும் வன்முறை என பெண் கற்பனை செய்கிறாள். ஆகவே அடிப்படை மனித அறத்திற்கு நீதிக்கு சமத்துவத்துக்கு எதிரான அத்தகைய கோட்பாடுகள் மீது நம்பிக்கையே இல்லாத ஒருவனையே பெண்ணால் விரும்ப முடிகிறது. அவன் அத்தகையவன்.
துப்பிய எச்சிலை எறும்புகள் சூழ்வது போல பெண்கள் அவனைச் சூழ்ந்தனர். கனிவு கண்ணீர் உணர்வெழுச்சி என ஏராளமான கழிவுப் பொருட்கள் தினம் தினம் என் கண்முன்னே கொட்டப்பட்டுக் கொண்டிருந்தன.
பெண் உண்மையில் தன் சிக்கல்களை நீதியின் தளத்தில்  பொருட்படுத்துவது இல்லை. தன் அன்றாடத்துக்கு பாதிப்பு வருமா வராதா என்பதை மட்டுமே சிந்தித்துப் பார்க்கிறாள். அன்றாடத்துக்கு பாதிப்பு வராது என்று தெரிந்த பின்பு எந்த எல்லைக்கும் ஒரு பெண்ணால் இறங்க முடியும். தன் மனம் உருவாக்கிய பொய்களை அவளால் ஆழமாக நம்ப முடியும். ஆணை நெருங்குவதற்கு ஒட்டிக் கொள்வதற்கு பெண்ணுக்கு இருக்கும் மற்றொரு கொக்கி இந்த அன்றாடச் சலனங்களை ஆணுக்கு நினைவுறுத்திக் கொண்டே இருப்பது. வீட்டிலோ சாலையிலோ நிகழும் பொருட்படுத்தத் தேவையற்ற எளிதாக கையாண்டு விடக்கூடிய மிகச்சாதாரண சிக்கலை பூதாகரப்படுத்தி அதில் ஆணை இழுத்துவிட்டு அவனால் தான் அது தீர்க்கப்பட்டது என்று அவனை நம்ப வைத்து அவன் இல்லாமல் போயிருந்தால் தான் என்னவாகியிருப்பேனோ என்று ஒரு சித்திரத்தை உருவாக்கி அதற்குள் ஆணையும் இழுத்து கண்ணீர் மல்குவதும் அவனை மல்க வைப்பதும்  கூர்மையான  பெண்களுக்கு மட்டுமே வாய்க்கும் பிரத்யேக குணம்.
இந்த விஷயத்தில் ஒரேடியாக பெண்களை மட்டும் குற்றம் சொல்லி விட முடியாது. ஏனெனில் ஒரு சூழல் எப்படி இயங்குகிறது என்பதை அவதானிக்க புரிந்து கொள்ள சற்று பொறுமையும் பொறுப்புணர்வும் கவனிக்கும் திறனும் வேண்டும். அது பெண்களுக்கு இருப்பதில்லை. பெண்கள் பெரும்பாலும் சூழலுக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்வதில்லை. தங்களுக்கு ஏற்றவாறு சூழலை மாற்ற முனைகின்றனர். அதாவது அவர்கள் சமூகத்தில் உருவாக்க நினைப்பது மிகப் பிரம்மாண்டமான ஒரு அடுப்பங்கரையை. தூசியும் இருளும் புகையும் எரிச்சலும் நிறைந்த அடுப்பங்கரை.
தன் அடுப்பங்கரையை மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பினை பெண்கள் சிந்திப்பதே இல்லை. ஆகவே இந்த அடுப்பங்கரை தன்மைக்கு ஒத்து ஊதுவது அதாவது பெண்களுக்கு எதிரான இந்த சமூகத்தில் அவர்களை பாதுகாப்பதற்கென பல விஷயங்களைச் செய்வது பெண்களை உங்கள் அருகிலேயே வைத்திருக்கும். நீங்கள் அவதானித்து இருக்கலாம். மிக நேரத்தியாக உடைகளை தேர்ந்தெடுக்கும் மிகக் கவனமாக தன் வங்கிக் கையிருப்பை பாதுகாக்கும் பெண்ணுக்குக் கூட ஒரு பொது இடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற சாதாரண அறிவு இருக்காது. மிகையான தன்னம்பிக்கை குழந்தைத்தனம் அக்கறையின்மை பணிவு அமைதி போன்றவை வெளிப்படுமே தவிர எவ்விதத்திலும் ஒரு சூழலை நேரடியாக இயல்பாக கையாள பெண்களுக்குத் தெரியாது. தனக்கு தெரியவில்லை என்ற பதற்றமும் பெண்ணிடம் இருக்கும். நீங்கள் ஒரு பொது நிகழ்வில் காணும் பெண்கள் அடக்கமாக நடந்து கொண்டால் அதற்கு காரணம் இந்த பதற்றமே தவிர நாணம் அல்ல.
ஆகவே இங்கும் ஒரு ஆணால் ஆதரவுக்கரத்தை பெண்ணை நோக்கி நீட்ட முடியும். பெரும்பாலும் பொது நிகழ்வுகளில் ஆண் பேசினாலே பெண்ணின் பதற்றம் குறைந்து விடும். அதோடு ஒரு ஆணுடன் இயல்பாக உரையாடும் போது எல்லையற்ற தன்னம்பிக்கை பெண்ணில் உருவாகும்.  ஆகவே எவ்விடத்திலும் அடுப்பங்கரையில் இருப்பதைப் போல உணரச்செய்யும் ஆணை பெண் மிக விரும்புகிறாள். அவன் அப்படித்தான் இருந்தான். அவர்களை அப்படித்தான் உணரச் செய்தான்.
நான் மேலும் மேலும் விலக்கப்பட்டவன் ஆனேன். மிகப்பெரிய சிக்கலொன்றில் நான் மாட்டித் தவித்த போது கூட எனக்கு ஆறுதல் சொல்ல ஒருவரும் இல்லை. நான் அவர்களிடம் சொல்ல நினைத்தேன். நீங்கள் எப்போதும் போல நக்கிக்கொண்டே இருங்கள். எனக்கு அதில் எந்த சிக்கலும் இல்லை. ஆனால் என்னை ஏன் இவ்வளவு வெறுக்கிறீர்கள்? இப்படி புறக்கணிக்கிறீர்கள்?
என் எதிரே அமர்ந்து மௌனத்துடன் இதைக் கேட்டுக் கொண்டிருக்கும் உங்களிடமும் இக்கேள்விக்கு பதில் இருக்காது. ஏனெனில் நான் கவனமாக இவ்வளவு நேரம் தவிர்த்து வந்த ஒன்றை நீங்கள் சிந்தித்துக் கொண்டே இருந்தீர்கள். அது அந்தப் பெண்கள் எப்படிப்பட்டவர்கள் என்பது. என்னிடமிருந்து நீங்கள் தெரிந்து கொள்ள சுமந்து செல்ல ஏதுமில்லை. இருந்தும் நீங்கள் அமர்ந்து இருக்கிறீர்கள். நான் இன்னும் உடைந்து போவேன் என்ற நம்பிக்கையுடன்.

6

வெகு நேரமாக அடக்கி வைத்திருந்த இருமல் வலுவாகத் தாக்கியது. கணினியின் முன் அமர்ந்திருந்தவன் கீபோர்டில் தலை வைத்து சரிந்து விட்டான். அறை எந்த ஒழுங்கும் இல்லாமல் கிடந்தது. எல்லா பொருட்களிலும் மண் படிந்திருந்தது என்பதை உணர்ந்த போது இருமல் அதிகரிப்பது போல அவனுக்குத் தோன்றியது. ஏதோ நினைவு வந்தவனாய் அலைபேசியில் தேதியைப் பார்த்தான். பிறந்த நாள் கடந்து இரண்டு நாட்கள் ஆகியிருந்தன. ஒருவர் கூட அவனை வாழ்த்தியிருக்கவில்லை என்பது ஆசுவாசமாகவும் சற்று ஏமாற்றமாகவும் இருந்தது.
ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்று மனம் உந்தியது. குடிக்கப் பழகிக் கொண்டிருக்க வேண்டும் என்று இப்படி நிலைகொள்ளாத நாட்களில் தோன்றுவது போல அப்போதும்  தோன்றியது. தொடர்பிலிருக்கும் ஒரு சிலரில் யாரையாவது அழைத்துப் பேசலாமா என்று எண்ணினான்.
என்ன பேசுவது? எதைப் பற்றி பேசுவது? பேசுகிறவனுக்கு கல்யாணம் ஆகியிருக்கும். எத்தனை குழந்தைகள் அவை எங்கே படிக்கின்றன மனைவி என்ன செய்கிறாள்? குழந்தைகள் பெற்ற பின்னும் அழகாக இருக்கிறாளா? உன் வீட்டுக்கு வந்தால் என்னை மனம் கோணாமல் வரவேற்பாளா? உன் பெற்றோர்கள் உயிருடன் இருக்கின்றார்களா? உனக்கே முப்பத்தைந்து வயது ஆகப் போகிறது இன்னுமா சாகாமல் இருக்கிறார்கள்? வருத்தப்படாதே சீக்கிரம் செத்துவிடுவார்கள்.
மீண்டும் கணினியின் முன் நிமிர்ந்து அமர்ந்தான்.
இல்லை என்னால் இப்போது யாரிடமும் பேசிவிட முடியாது. கீறப்படாத தோல்களுடன் தான் சமூக மனிதர்கள் உரையாடுவார்கள். நான் அப்படியல்ல. நான் ஒரு கணவனோ தகப்பனோ சமூக மனிதனோ அல்ல. நோயாளி நாற்பது வயதை நெருங்குகிறவன். அப்பாவும் அம்மாவும் நண்பர்களும் இல்லாதவன். சமூகத்தின் பார்வையில் உதிரி. 
இந்த அடையாளங்களுடன் உங்கள் முன் வந்து நின்றால் நீங்கள் என்னை ஏற்கப் போகிறீர்களா என்ன? ஒரு காலத்தில் என்னை ஏற்றுதானே வைத்திருந்தீர்கள்? எனக்கு பிரகாசமான எதிர்காலம் இருப்பதாக உங்களில் எத்தனையோ பேர் சொன்னீர்கள் தானே? அதற்கெல்லாம் என்ன அர்த்தம் என்று இந்த அழுக்கும் தூசியும் நிறைந்த குளிர்ந்த அறையில் அமர்ந்து யோசித்துப் பார்க்கிறேன். இன்றிருப்பது போல இவை அப்போதே தெளிவாக இருந்திருந்தால் நான் உங்களனைவரையும் விட மிகச்சிறந்த சமூக மனிதனாக இருந்திருப்பேன் தெரியுமா. கல்லூரி முடித்தவனுக்கு பன்னிரெண்டாம் வகுப்புப் பாடங்கள் சுலபமானதாக தோன்றுவது போல என்கிறீர்களா?
நான் உங்கள் முன் தோன்றும் போது அதாவது நமக்கிடையே உறவென்று ஒன்று உருவாகி வரும் போது நீங்கள் உத்தேசிப்பது என்ன என்பதை நான் தெளிவாக உணர்கிறேன். இவனால் நமக்கு எந்தவித ஆபத்தும் ஏற்பட்டுவிடாது இவனது அதிகாரத்துக்குள் நாம் இல்லை இவன் எவ்வகையிலும் நம்முடைய மனைவிகளை மகள்களை எடுத்துக் கொண்டு விட மாட்டான் என்ற நம்பிக்கை தோன்றிய பிறகுதான் நீங்கள் அன்புடன் பழகத் தொடங்குகிறீர்கள். அவனது சொற்களை கேட்கிறீர்கள் அவனுக்கு உங்கள் சொற்களை கொடுக்கிறீர்கள். எனக்கும் கொடுத்தீர்கள். 
என்னை எப்போது நீங்கள் நீங்கத் தொடங்கினீர்கள் என்று உங்களுக்கு நினைவிருக்கிறதா? இருக்கும் ஆனால் காட்டிக் கொள்ள மாட்டீர்கள். ஏன் காட்டிக் கொள்ள மாட்டீர்கள் தெரியுமா? ஏனெனில் நீங்கள் எப்போதுமே உங்களை நல்லவர்களென்றும் அப்பாவிகளென்றும் கீழ்மைகளுக்கு எதிராக கோபம் கொள்ளக்கூடியவர்கள் என்றும் உங்களை எண்ணிக் கொண்டிருக்கிறீர்கள். உங்களைப் போலவே எண்ணிக்கொள்ளும் மற்றொருவர் என்னைப் பற்றி உங்களிடம் ஒரு மெல்லிய சந்தேகத்தை எழுப்புகிறார். உடனே உலகின் நல்லறங்கள் பாதிக்கப்பட்டுவிட்டதாக நான் அவற்றை கலங்கப்படுத்திவிட்டதாக எண்ணி என்னை ஒதுக்கத் தொடங்குகிறீர்கள்.
நான் ஏன் பெண்களைப் பற்றியே பேசிக் கொண்டிருக்கிறேன். பெண்கள் என்னிடம் நெருங்கிப் பழகுவதில்லை என்ற ஆற்றாமையால் நான் இவ்வாறெல்லாம் புலம்பிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்குத் தோன்றுகிறது அல்லவா? உங்கள் எண்ணம் சரிதான். ஆனால் புலம்பக்கூடிய அளவுக்கு நான் தெளிவடைந்து இருக்கிறேன் என்ற வெற்றியைக் கொண்டாடவே இதையெல்லாம் உங்களிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன் என்று உங்களுக்கு இன்னுமா புரியவில்லை?
ஆம்! வெற்றிதான். ஒரு வகையில் இதுவும் வெற்றிதான். நான் யாரையும் பழிவாங்கவில்லை. வதைக்கவில்லை. துன்புறுத்தவில்லை. எனினும் நான் வெற்றிதான் பெற்றிருக்கிறேன். என்னைப் பொருட்படுத்தாத பெண்களில் ஒருத்தியை நேற்று கடைத்தெருவில் பார்த்தேன். அலுவலகத்தில் பணியாற்றிய காலத்தில் மணமாவதற்கு முன்பிருந்ததை விட பல மடங்கு அழகாக இருந்தால். நான் என் அலுவலகத்தை விட்டு நீங்க வேண்டிய சூழல் ஏற்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அவளுக்கு மணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. வருங்காலக் கணவன் அப்போதே லட்சங்களில் சம்பாதிக்கிறவனாக இருந்தான். எட்டு வருடங்கள் கடந்துவிட்டன. அவனது சம்பாத்தியம் அவளது உடல் மதர்ப்பில் நான்றாகவே தெரிந்தது.
எனக்கு இதுவும் புரிவதில்லை. நான் குறிப்பிடும் அந்தப்பெண் ஒரு முட்டாள். பிள்ளை பெற வைப்பதைத் தவிர அவளை வைத்து ஒன்றுமே செய்ய முடியாது. ஆனால் அவள் வாழ்க்கை நன்றாக இருக்கிறது. அப்படியெனில் அவள் வாழ்க்கை நன்றாக அமைந்ததற்கு எது காரணம். செழிப்பான முலைகளும் தொடைகளும் தானே. அவை இருந்தால் அந்த செழிப்பான முலைகளையும் தொடைகளையும் லட்சியமாக கொண்டு செயல்படும் அல்லது செயல்பட வைக்கப்படும் ஒரு ஆண் அவளுக்கு கிடைத்து விடுவான். இறுதிவரை தன்னுடைய முலைகளின் தொடைகளின் செழிப்பை பேணிக்கொண்டு அவனுடன் படுத்துருள்வதை மட்டும் செய்து கொண்டிருந்தால் அவள் வாழ்க்கை எந்த இடையூறும் இல்லாமல் நடைபெறும் அல்லவா. ஆகவே  ஆணின் உட்சபட்ச இலக்கு  செழிப்பான முலைகளும் தொடைகளும் உடைய பெண். பெண்ணின் உட்சபட்ச இலக்கு செழிப்பை இறுதிவரை போற்றி தன்னை நக்கிக்கொண்டே இருக்கும் ஆண்.
இவ்வளவு நேரடியாக நான் பேசுவது உங்களுக்கு எரிச்சலை அருவருப்பை அல்லது என் மீது பரிதாபத்தை வரவழைக்கலாம். ஆனால் நான் கேட்பதில் இருக்கும் நியாயம் மட்டும் உங்களுக்கு விளங்காது.
நேற்று நான் பார்த்ததாக சொன்னேன் அல்லவா அந்தப்பெண் என்னைப் பார்க்கவில்லை. பார்த்திருந்தாலும் பார்க்காதது போல கடந்திருப்பாள். இன்று இவ்வளவு சாதாரணமாக நான் இதைச் சொல்லி விடுகிறேன். ஆனால் அன்று இது எவ்வளவு பெரிய வதையாக எனக்கிருந்தது. என்னை பெண்கள் பொருட்படுத்துவதில்லை என்ற எண்ணம் ஒரு உறுப்பாகவே என்னில் எப்போதும் நீடித்தது. தொடர்ந்து ஏதோ பந்தயத்தில் இருப்பதைப் போன்ற ஒவ்வொரு நாளும் ஏதோவொன்று நடந்துவிடப் போகிறது என்ற எண்ணம் என்னைத் தொடர்ந்து கொண்டே இருந்தது.
நான் எதிர்பார்க்காத உண்மையில் என்னை விடுவித்திருக்க வாய்ப்பிருக்கக்கூடிய ஒன்று நிகழத் தொடங்கியது. நான் மேலும் உறுதியாக சிக்கத் தொடங்கியது அப்போதுதான்.

7

இப்படிச் சொல்லித் தொடங்கலாம். தனக்கு பிடித்த ஆணுடன் உறவில் நீடிக்க பெண் என்ன செய்கிறாள்? அவனது கோபத்தை தன்னிரக்கத்தை பயன்படுத்திக் கொள்கிறாள். நீங்கள் இதை தாய் மகன் உறவிலேயே பார்க்க முடியும். தனக்கு நேர்ந்த ஒரு அவமானம் அல்லது அதிர்ச்சியை தாங்கிக் கொண்டிருக்கும் மகன் அம்மா அதன் காரணத்தைக் கேட்டதும் உடைந்து அழத் தொடங்கிவிடுவான்.
இந்த தன்மையை ஆணிடம் நீடிக்கச் செய்வதில் தான் அவனைத் தக்கவைத்துக் கொள்வதன் வெற்றி இருக்கிறது. பெரும்பாலும் ஆணைத் தக்கவைத்துக் கொள்வதற்காக அவனைப் பெரிதாகப் பொருட்படுத்துவதாக பெண் கற்பனை செய்கிறாள். மறைமுகமாக உலகிலேயே சிறந்த மனிதன் அவன் தான் என அவனிடம் சொல்லிக் கொண்டே இருக்கிறாள். அவனது உண்மையான தகுதி வெளிப்பட்டு அவன் தலைகுனிய நேர்கையில் தடவிக் கொடுப்பதற்கு தவறாமல் வந்து விடுகிறாள். பெண்ணிடம் ஆறுதலை தேறுதலை எதிர்பார்க்கும் ஆண்கள் சுயமற்றவர்களாக இருப்பார்கள். அதன் காரணமாகவே புதியவற்றின் எதிர்கொள்ள முடியாதவற்றின் மீது விலக்கமும் அச்சமும் கொண்டிருப்பார்கள்.
பெண்ணின் மிக ஆபத்தான குணம் இந்ததடவிக் கொடுத்தல்தான். பெரும்பாலும் தாய் மகனுக்கு இந்த தடவிக் கொடுத்தலை செய்வதில்லை. ஆனால் கற்பனையில் மிதக்கும் பெண் இதை மீண்டும் மீண்டும் செய்கிறாள். அவனை அவன் உயர்ந்தவனாக சரியானவனாக தன்னுடைய நல்லுணர்ச்சிகளால் துன்புறுகிறவனாக எண்ணிக் கொள்வதற்கான எல்லா வாய்ப்புகளையும் எடுத்துக் காட்டுகிறாள். ஆணை வீழ்த்தும் மிக முக்கியமான கண்ணி பெண்ணின் இந்த குணம் தான்.
இக்குணத்திற்கு ஒரு காரணமும் உண்டு. பெண்களால் நீண்ட கால செயல்பாடுகளை முழுமையை கற்பனை செய்ய முடியாது. பெண் எப்போதும் ஒரு தருணத்தின் சிக்கலில் இருந்து தப்பிப்பதற்கென்று தெளிவாக காய்களை நகர்த்துகிறவள். அதனால் தான் பெண்களால் எல்லா விதிகளும் சரியாக வரையறுக்கப்பட்ட களங்களில் நன்றாக செயல்பட முடிகிறது. நிச்சயமின்மை வந்து முகத்தில் அறைகையில் பெண் அஞ்சிப் பின்னடைவாள். நிச்சயமின்மையை நோக்கிச் செல்லும் ஆணையும் அவள் வெறுப்பாள்.
துயரை செறித்து மேல் செல்ல முடிந்த ஆண் காமத்தைத் தாண்டி உணர்வுத் தேவைக்கென பெண்ணை அண்டுவது கிடையாது. இந்த செறித்தலே பெண்ணை பதற்றத்துக்கு உள்ளாக்குகிறது. அதை நிகழவிடக்கூடாது என்பதே அவளுக்கு இடப்பட்ட கட்டளை. ஆணின் முழுமையையும் முழுமையை விரும்பும் ஆணையும் பெண் வெறுக்கிறாள். அதனால் தான் ஒரு ஆணை வசத்தில் வைத்திருக்க அவனைப் பற்றி மற்றவர்கள் கேட்கக்கூசும் புகழுரைகளை அவனிடம்  சொல்வாள்.
இந்தத் தடவிக்கொடுத்தல் தினம் தினம் நடந்து கொண்ட இருந்தது. அவர்கள் தடவத் தடவ நான் விலகிக் கொண்டே சென்றேன்.
இதை உங்களால் எந்த அளவிற்கு புரிந்து கொள்ள முடியும் என்று தெரியவில்லை. பெண்கள் தனியாக ஒரு ஆணை வெறுப்பதில்லை. கூட்டாகவே வெறுக்கின்றனர். அந்த வெறுப்பை மிக எளிதாக அவர்களை மனதளவில் நக்கும் ஆண்களிடம் அவர்களால் கடத்திவிட முடியும். ஒருவன் கீழானவன் என அனைவரும் சேர்ந்து நம்பத் தொடங்கும் போது அவன் தன்னை கீழானவனாக உணரத் தொடங்குகிறான். தன்னுடைய செயல்கள் சரிதானா என்ற ஒவ்வொருமுறையும் இருமுறை சரிபார்த்துக் கொள்கிறேன். அவனை கீழானவன் என்று நிறுவுவதற்கான சாட்சியங்களை அவனது சூழல் தேடிக்கொண்டே இருக்கிறது.
ஒரு சொல் ஒரு தவறான அசைவு ஒரு முறை மீறிய செயல் போதும் சூழலின் உள் ஒளிந்திருக்கும் வன்முறை அவனைத் துடிக்கத் துடிக்க வதைத்துக் கொல்ல. நான் அப்படிப்பட்டவனாக்கப்பட்டேன். ஒரு குழுவில் சிரித்துப் பேசிக் கொண்டிருபபவர்கள் நான் நெருங்கிச் செல்லும் போது அமைதியடைந்தனர். எனக்கு சற்று நெருக்கமான ஆண் நண்பர்கள் கூட என்னிடம் ரகசியம் பேணத் தொடங்கினர். நான் மேலும் மேலும் நாகரிகமானவனாக நடந்து கொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கப்பட்டது. நான் சிரிப்பது அத்துமீறல் எனக் கருதப்பட்டது. குனிந்தபடியே அலுவலகத்தில் நுழைந்து எல்லோருக்கும் பணிந்தபடியே நடந்து கொண்டு புறப்பட்டுச் செல்வதே அன்றாடமென இயல்பென வகுக்கப்பட்டது.
நான் சொல்ல வந்தது இதுவல்ல. என்னிடம் எல்லோருமே சகஜமாக நடந்து கொள்வது போலத்தான் தோற்றமளிக்கும். ஆனால் என்னுடன் யாரும் எதையும் பகிர்ந்து கொள்வதில்லை என்பதை அந்த சூழலை தொடர்ந்து கவனிக்கும் ஒருவரால் தான் உணர முடியும். தினமும் மனம் கனன்றபடியே அலுவலகம் சென்று மீண்டு வந்து உறங்கிக் கொண்டிருந்தேன். எந்த நிலையிலும் சூழலிலும் இருப்பதிலேயே மோசமானதையே கற்பனை செய்தேன். அதுவே எனக்கு நடந்தது.
துயர் கொண்டிருப்பவர்களை என்னைப் போல பொருட்படுத்தப்படாமல் திரிகிறவர்களை மீள மீள நோக்கினேன். அது ஒரு இருள்வெளி. அங்கு கண்ணீரும் புன்னகையும் கிடையாது. அங்கு எல்லாமே சந்தேகிக்கப்படும். தன்னிரக்கம் இல்லாதவனாக மேம்பட்ட எண்ணங்களை வெளிப்படுத்துகிறவனாக ஒரு நிமிடம் கூட அத்தையவர்களிடம் இருக்க முடியாது. நான் சீக்கிரமாகவே விலகிவிட்டேன்.
என்னை விலக்கி வைத்திருப்பவர்கள் மிக மிக மகிழ்ச்சியுடன் உயிர்ப்புடன் இருப்பதாக எண்ணிக் கொள்வதை என்னால் தவிர்க்கவே முடியவில்லை. குறைந்தபட்சம் என் முன்னே அவர்கள் அவ்வாறு நடந்து கொண்டனர்.
ஒரு எல்லையில் திடீரென அனைத்தும் சகஜமடைந்தது. அதாவது புது உறவுகள் தரக்கூடிய இனிப்பும் புளிப்பும் தீர்ந்து போய் அவர்கள் அனைவரும் சகஜமடைந்துவிட்டனர். முன்பு போல அவர்கள் செயல்கள் என்னை சீண்டவில்லை. புண்படுத்தவில்லை. என்னுடன் இயல்பாக உரையாடக்கூட தொடங்கினர். ஆனால் என்னால் இதைத்தான் முழுதாக ஏற்க முடியாமல் போனது. பெண்களுக்கும் அவர்களை ஒட்டிக்கொள்ள வைத்து என்னை விலக்க வைத்த அவனுக்கும் அவர்களுடன் நட்பு பாராட்டிய மற்றவர்களுக்கும் நானும் என் நிலையும் இயல்பானது என்றாயிற்று. என் முன்னே இருந்த சில விரிசல்கள் தப்பிச் செல்வதற்கான மிக மெல்லிய வழிகளைக்கூட அவர்களின் சகஜத்தன்மை உடைத்துப் போட்டது. நான் முழு முற்றாகத் தோற்கடிக்கப்பட்டிருந்தேன்.
என்னால் அத்தோல்வியை ஏற்க முடியவில்லை. அப்பெண்களின் முகத்தை மனதில் நிறுத்தி சுய மைதுனம் செய்ய முயன்றேன். நடிகைகளின் அங்கங்களும் முக பாவனைகளும் நினைவுக்கு வந்தனவே தவிர அப்பெண்களை என்னால் நினைவுமீட்ட முடியவில்லை.
நெஞ்சில் கால் வைத்து யாரோ எப்போதும் என் மேலேறி நிற்பதைப் போன்ற உணர்வு இருந்து கொண்டே இருந்தது. நான் படியத் தொடங்கினேன். அழ முயன்றேன். முடியவேயில்லை. என்னை ஓங்கி அறைந்து கொண்டேன். வெறிபிடித்தவன் போல வாசித்தேன். எழுதினேன். நண்பர்களுடன் மணிக்கணக்கில் உரையாடினேன். யார் என்ன உதவி கேட்டாலும் தட்டாமல் செய்தேன். அலுவலகத்தில் கடுமையாக உழைத்தேன். அந்த நெருப்பு ஆழ்த்தில் கனன்றபடியே இருந்ததே. அதன் பரப்பு சுருங்கச் சுருங்க அதன் அடர்த்தி கூடியது.

8

சிந்துவை முதன்முறை பார்த்தபோது அச்சம் தான் எழுந்தது. மிக அழகான பெண்கள் கூர்மையானவர்களாக இருக்கும் போது தோன்றக்கூடிய அச்சம் அது. சிந்துவின் உதடுகள் மிகச்சிறியவை. அவ்வளவு சிறிய உதடுகள் முத்தமிடுவதற்கு ஏற்றவை கிடையாது. முத்தத்தின் போது முழுமையாக முத்தமிடுகிறவனின் உதடுகளில் இத்தகைய உதடுகள் அடங்கி விடும். சீறி எழுந்து பெரிய உதடுகளை கவ்வும் வெறி அத்தகைய பெண்களுக்கு இருந்தாலன்றி அவ்வுதடுகளை தாங்கிக் கொள்ள முடியாது.
சிந்து இரக்கமற்றவள். எங்கள் அலுவலகத்தில் பணியாணையை நீட்டியபடி அவள் வந்து சேர்ந்த போது எங்களைப் போன்ற ஒரு வேலை என்றே நினைத்தோம். ஆனால் அவன் எங்களனைவருக்கும் மேலாளர் என்பது ஏற்கனவே எங்கள் அலுவலகத்தில் உருவாகி இருந்தகுடும்ப அமைப்பைஅதிர்ச்சி கொள்ளச் செய்தது.
குடும்பத் தலைவன் தன் வழக்கமான உத்திகளுடன் சிந்துவை நெருங்கினான். அவள் கண்ணாடி அறையில் அவன் முகம் மட்டுமே பலகீனமாக சிரித்துக் கொண்டிருந்தது. சிந்து முகம் கொஞ்சமும் சமநிலையை இழக்கவில்லை. அவனை அவள் அமரக்கூடச் சொல்லவில்லை. ரொம்ப நாளுக்குப் பிறகு நான் நிமிர்ந்து அமர்ந்தேன்.
சிந்துவுடன் பேசும் போது அவள் உதடுகளன்றி வேறெந்த நினைவும் எனக்கு இருந்ததில்லை. அவள் மாந்தளிர் நிறம். சுடிதார் புடவை இரண்டு உடைகளைத் தாண்டி அவள் வேறெந்த மாதிரியும் உடையணிவதில்லை. கூந்தலை ஒரு முறை கூட அவிழ்த்துவிட்டுக் கொண்டு அலுவலகம் வந்ததில்லை. சொந்த வேலைகளை எந்த கீழ்நிலை பணியாளர்களிடமும் ஏவியதில்லை. அலுவலகத்தில் தேவை இருந்தாலொழிய தாமதித்தது இல்லை. கண்களன்றி வேறு எவ்வுறுப்பையும் பார்த்து பேசுவதில்லை. தன்னை ஒரு துளி கூட வழியவிடக்கூடாது என்ற அவளது தீர்மானத்திற்கென அவளை ஆயிரம் முறை முத்தினேன். அவள் பெயர் கடந்து அவளைப் பற்றிய ஒன்றுமே யாருக்கும் தெரியாது என்பதற்கென அவளை அள்ளித்தூக்கி கொஞ்சினேன்.
எல்லோரிடமும் இயல்பாக நடந்து கொண்டாள். கண்களும் உடனிணைய சிரித்தாள். கருணையேயின்றி தண்டித்தாள்.
அவளுக்கு உடனடி உதவியாளனாக நான் நியமிக்கப்பட்டேன். தற்செயல் என்றுதான் நான் எண்ணிருந்தேன். ஆனால் சிந்து அவளாகவே என்னிடம் சொன்னாள்  அவளை என்னை அவ்விடத்திற்கு நியமிக்கச் சொன்னதாக. யாரிடமும் ஒரு வார்த்தை அதிகம் பேசிடாத என் சிந்து யார் குறித்தும் அபிப்ராயத்தை உருவாக்கிக் கொள்ளாத என் சிந்து என்னை தேர்ந்தெடுத்திருக்கிறாள். ஏன் என்று கேட்க நினைத்து கட்டுப்படுத்திக் கொண்டேன்.
எல்லோருக்கும் அவள் உதிர்க்கும் சிரிப்பிலிருந்து எனக்கான சிரிப்பு வேறுபடுவதை உணர்ந்தேன். நான் உணவருந்திவிட்டேனா என்று கேட்டுவிட்டு நீ என்னிடம் அதையெல்லாம் கேட்கமாட்டாய் என்று சிந்து கேட்ட அவ்விரவு என்னையும் மீறி உடல் குமுறி அழுகை வந்தது. தலையணையை அவளென உருவகித்து அழுத்தமாக கட்டிக்கொண்டேன்.
இவ்வளவுக்கும் பிறகு என் மனதின் மற்றொரு பகுதி சிந்துவை உடலென்றே நினைவில் வைத்திருந்தது. அவள் என்னிடம் மட்டுமே பிரியமாக இருக்க வேண்டும் என என் ஆழம் விரும்பியது. அவள் புடவை அணிந்து வரும் நாட்களில் ஆயிரம் முறை கட்டுப்படுத்திய பிறகு அவள் முலைகளின் வடிவமறிய விழிகள் திரும்பின. காற்றில் வியர்வை மணத்தில் அவள் உடல் மணமும் கலந்திருந்தது. அவள் என்னை வேண்டுமென்றே சீண்டுவதாக கற்பனை செய்தேன்.
அவளை விரும்பவதை எத்தனையோ வார்த்தைகளில் மனதில் அவளிடம் சொல்லிப் பார்த்தேன். நேரில் சொல்ல எண்ணியபோது அது இயல்பானதாகத் தோன்றியது. அவள் நான் சொல்வதற்கென்றே காத்திருக்கிறாள் என்று ஆழமாக நம்பினேன். வேலைகளை முடித்துக் கொண்டு அன்று புறப்பட எட்டு மணியானது. நானும் வெளிக்கிளம்பி என் அறைக்கு செல்வதெற்கென பேருந்திலும் ஏறிவிட்டேன். சட்டென ஒரு அதிர்ச்சியுணர்வு தாக்க அலுவலகம் நோக்கி ஓடிவந்தேன். சிந்து அறையில் தான் இருந்தாள் எனக்கென்றே காத்திருப்பது போல.
நான் அவளை காதலிப்பதைச் சொன்னேன். மிக மெல்லிய ஒரு ஏளனம் அவள் விழியில் கடந்து சென்றது சாலையை இருட்டில் கடக்கும் பாம்பு போல. உதிர்ந்து விழுந்து விடுவேனோ என்று தோன்றியது எனக்கு. நான் ஏற்பினைத் தவிர வேறெதையும் எதிர்பார்த்திருக்கவில்லை. நான் வெளியே நிறுத்தப்பட்ட சிறுவன் என திருப்பி அனுப்பப்பட்ட எல்லா சம்பவங்களும் என் நினைவில் எழுந்தன. அந்த அறை அப்படியே பெரிய குழியாக மாறி என்னை மூடிவிடாதா என்று துடித்தேன். என் உடல் கைகளுடன் கால்களுடன் ஆரோக்கியத்துடன் அத்தனை பெரிதாக இருப்பதை என்னால் ஏற்க முடியவில்லை. அது அப்படியே சுருங்கி எடைமிகுந்த ஒரு எண்ணமாக நான் மாறிவிட மாட்டேனா என்று நடுங்கினேன்.
எல்லா பெண்களும் பெய்த அதே நஞ்சினை பெய்த பிறகும் அவர்களைப் போலவே சிந்தும் படம்தூக்கி நின்று கொண்டிருந்தாள். அவளது முழுமையான உடலுடன் என் முன்னே நின்று கொண்டிருந்தாள். மென்மையான கைகள். ஒரு பிடி சதை அதிகமற்ற உடல். அள்ளி முகரத்தூண்டும் கூந்தல். இழுத்து அணைக்கச் சொல்லும் விழிகள். உறுதி சற்றும் குறையாத கச்சலான உடலில் அமைந்த முலைகள். இறுகி வலுத்த தொடைகள். இவை அத்தனையும் வந்து உதடெனும் புள்ளியில் இணைந்தன. மெல்லிய வெளிச்சமே இருந்தாலும் அவ்வறையில் அவள் வெறி மின்னும் உள்ளுதட்டுச் சிவப்பு தெரியும் உதட்டினை என்னால் காண முடிந்தது. பிளக்கப்பட்ட ஆழமான புண் போன்றிருந்தன அவ்வுதடுகள்.
அதன்பிறகு நான் யோசிக்கவில்லை. அல்லது அனைத்து சாத்தியங்களையும் முன்னரே யோசித்துவிட்டேன். கண்ணாடி அறையின் திரைச்சீலைகளை இழுத்துவிட்டு அழுத்தமான கண்ணாடியால் மூடப்பட்டிருந்த மேசையின் மீதிருந்த ஒரு சில பொருட்களை கீழே தள்ளினேன். அவள் அதிரவில்லை. ஆனால் அவள் உதடுகள் துடித்தன. எம்பிப் பறந்து மீன்கொத்திக்கு தன்னை காட்டும் மீனென அவ்வுதடுகள் துடித்தன. ரத்தம் குடிக்கும் வெறியுடன் சென்று அவளின் சிறிய உதடுகளை கவ்விவேன். நான் வெல்வதை விழையாதவளாக இருமடங்கு விசையுடன் என் உதடுகளை கவ்வினாள். முழுமையாக அவளை நிர்வாணமாக்கி மேசை மீது கிடத்தினேன்.
உடலில் மெல்லிய நடுக்கம் கடந்து செல்ல என் மேல் சட்டையை கழற்றிபடியே அவள் வலத்தொடையில் முத்தமிட்டேன். அது அவளுக்கு என்னை காட்டிக் கொடுத்திருக்கவேண்டும். முழுப்பாதமும் முகத்தில் பதிய என்னை உதைத்து தள்ளினாள். நான் மீள்வதற்குள் அவள் எழுந்துவிட்டாள். ஏமாற்றமும் எரிச்சலும் நிறைந்த முகத்துடன் அறையை விட்டு சிந்து வெளியேறினாள்.
வன்புணர்வுக்கு முயன்றதாக என் மீது பதியப்பட்ட வழக்கில் ஓராண்டு சிறை தண்டனை எனக்கு கிடைத்தது.
 

2 Replies to “ஈர்ப்பு”

  1. இந்த கதை ஒரு உளவியல் நிகழ்வை கட்டுரையாய் ..சுய கதையாய் பிறிது ஒருவரது கதையாய் படிக்கிற என்னை போன்றவனையும் ….இது ஏதோ ஒரு தளத்தில்..கதையின் ஒரு அங்கம் ஆக்கி விடுவதற்கு காரணம் பாலியல் உணர்வு ..மனித உடம்பின் தீராத பசி …உடம்பு மட்டுமே செய்து கொண்டிருந்த இன்ப விளைவை ..மற்ற மிருக இனங்கள் தாண்டி மனித சமூகம் மட்டும் …இன்னமும் காமத்தை வெகு வினோதமாக கொண்டாடி கொண்டு இருக்கிறது ….இசை நாடகம் சினிமா பேச்சு எழுத்து என பல தளங்களில் ….
    அவளது முழுமையான உடலுடன் என் முன்னே நின்று கொண்டிருந்தாள். மென்மையான கைகள். ஒரு பிடி சதை அதிகமற்ற உடல். அள்ளி முகரத்தூண்டும் கூந்தல். இழுத்து அணைக்கச் சொல்லும் விழிகள். உறுதி சற்றும் குறையாத கச்சலான உடலில் அமைந்த முலைகள். இறுகி வலுத்த தொடைகள். இவை அத்தனையும் வந்து உதடெனும் புள்ளியில் இணைந்தன. மெல்லிய வெளிச்சமே இருந்தாலும் அவ்வறையில் அவள் வெறி மின்னும் உள்ளுதட்டுச் சிவப்பு தெரியும் உதட்டினை என்னால் காண முடிந்தது
    மேலே உள்ள வரிகள் எழுதியது சுரேஷ் பிரதீப் எனினும் நான் எழுதியதாய் நம்புகிற தருணம் ..இந்த விமர்சனத்தை எழுதுகிறேன் ….சுரேஷ் பிரதீப் எழுதுங்க தொடர்ந்து …சுப்ரமணிய பாலா

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.