மண் உறும் முரசு இனம் மழையின் ஆர்ப்பு உற

வான் நின்று இழிந்து வரம்பு இகந்த மாபூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும் போல் உள்ளும் புறனும் உளன் என்ப;
கூனும் சிறிய கோத் தாயும் கொடுமை இழைப்பக் கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர் இடுக்கண் தீர்த்த கழல் வேந்தை. (1399)
உடலும் உயிரும் உணர்வும் ஒன்றுடன் ஒன்று மிக நுட்பமாக இணைந்திருப்பது போல விசும்பெங்கும் நிறைந்திருக்கிறான் முடி துறந்து காடும் கடலும் கடந்து அறத்தை வெல்லச் செய்து வானவரை மகிழச் செய்த இராமன்.
மண் உறும் முரசு இனம் மழையின் ஆர்ப்பு உற
பண் உறு படர் சினப் பரும யானையான்,
கண் உறு கவரியின் கற்றை சுற்று உற,
எண் உறு சூழ்ச்சியின் இருக்கை எய்தினான்.(1400)
முரசொலி மழையொலி போல் எங்கும் கேட்க அணி செய்யப்பட்ட சீற்றமான பட்டத்து யானையை உடைய தசரதன் கவரி வீசுபவர்களால் சூழப்பட்டு அரசுசூழ்கை மண்டபத்துக்கு வந்தான்.
சந்திரற்கு உவமைசெய் தரள வெண் குடை
அந்தரத்து அளவும் நின்று அளிக்கும் ஆணையான்
இந்திரற்கு இமையவர் குருவை ஏய்ந்த தன்
மந்திரக் கிழவரை ‘வருக‘! என்று ஏவினான். (1402)
சிலப்பதிகாரம் ‘’திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும்’’ என்று துவங்குகிறது. இங்கே திங்கள் பெண்மையின் நீதி உணர்வின் குறியீடாகிறது.
கம்பன் சந்திரனுடன் ஒப்பிடும்படியான வெண் கொற்றக் குடை என்கிறான். இரகு வம்சத்தின் நீதி உணர்வாக இதனைக் கொள்ள முடியும்.
வான் நிலவின் ஒளி போன்ற நிறமுடைய வெண் கொற்றக் குடை கொண்டு அரசாளும் தசரதன் தேவர்களுக்கு பிரகஸ்பதி போன்று விளங்கக் கூடிய தனது அமைச்சர்களை ஆலோசனைக்கு அழைத்தான்.
குலம் முதல் தொன்மையும், கலையின் குப்பையும்,
பல முதல் கேள்வியும், பயனும், எய்தினார்,
நலம் முதல் நலியினும்நடுவு நோக்குவார்,
சலம் முதல் அறுத்து, அரும் தருமம் தாங்கினார். (1404)
இப்பாடலில் கம்பர் கோசல நாட்டின் அமைச்சர்களின் சிறப்பைக் கூறுகிறார். ஒரு நாடு என்பது மன்னனால் மட்டுமே ஆனது அல்ல. ஆக்கபூர்வமாக இயங்கும் ஒரு நாட்டில் அரசு, அமைச்சு, படை, வணிகம், வேளாண்மை ஆகியவை சிறப்பாக இருக்கும். அவ்வாறான நாட்டில் ஓர் அரசின் பணி வாணிகம் செழிக்கவும் குற்றங்களை கட்டுக்குள் வைக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருக்கும். அவ்வாறான நிலையில் அமைச்சுப் பணி அதற்கென சில தன்மைகளைக் கொண்டதாக இருக்கும்.
கோசல நாட்டின் அமைச்சர்கள் தலைமுறைகளாக அப்பணியைச் செய்து வருபவர்கள். அமைச்சுப் பணியின் அடிப்படைகளை – மனநிலைகளை தந்தையிடமிருந்து பாட்டனிடமிருந்து பெற்றவர்கள். அப்பணியின் நுணுக்கங்களும் விபரங்களும் சிறு வயது முதல் கேட்டு அறிந்தவர்கள். பல்வேறு கலைகளைப் பயின்றவர்கள். அதனை நடைமுறை வாழ்வில் பயன்படுத்தத் தெரிந்தவர்கள். தன்னலத்தை காத்துக் கொள்வதற்காக நடுநிலை பிறழாதவர்கள்.
அமைச்சுப் பணி கூர்மதியை தனது இயங்குமுறையாய் கொண்டது. கூர்மதியாளர்கள் தன்மைய சிந்தனை கொள்ள வாய்ப்பு அதிகம். ஆனால் கோசல அமைச்சர்கள் அறத்தை முதன்மையாகக் கொண்டு சிந்திப்பதாலும் செயல்படுவதாலும் தன்முனைப்பைக் கடந்தவர்கள்.
கோசல அமைச்சர்கள் தலைமுறைகளாக அமைச்சுப்பணி ஆற்றுபவர்கள். கல்வி பயின்றவர்கள். நடைமுறையாளர்கள். நடுநிலை பிறழாதவர்கள். தன்முனைப்பைக் கடந்தவர்கள். அறத்தை முன் நிறுத்துபவர்கள்.
உற்றது கொண்டு மேல் வந்து உறு பொருள் உணரும் கோளார்;
மற்று அது வினையின் வந்தது ஆயினும், மாற்றல் ஆற்றும்
பெற்றியர்; பிறப்பின் மேன்மைப் பெரியவர்; அரிய நூலும்
கற்றவர்; மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார். (1405)
நிகழ்ந்தது கொண்டு நிகழ இருப்பவற்றின் சாத்தியங்களைப் பரிசீலிப்பவர்கள். எதிர்பாராதது நிகழ்ந்தாலும் தங்கள் ஆற்றலால் அந்நிகழ்வுகளை தங்களுக்கு சாதகமாக திருப்பக்கூடியவர்கள். மேலான செயல்கள் பல செய்தவர்களின் குடியில் பிறந்தவர்கள். பல நூல்கள் கற்றவர்கள். கவரிமான் போன்ற மான உணர்ச்சி கொண்டவர்கள்.

காலமும் இடனும் ஏற்ற கருவியும் தெரிந்து கற்ற
நூலுற நோக்கித் தெய்வம் நுனித்து, அறம் குறித்து, மேலோர்
சீலமும் புகழ்க்கு வேண்டும் செய்கையும் தெரிந்துகொண்டு,
பால் வரும் உறுதி யாவும் தலைவற்கு பயக்கும் நீரார். (1406)
கோசலத்தின் அமைச்சர்கள் சூழ்நிலைகளின் இடம், பொருள், ஏவல் அறிந்து பயின்ற நூல் நெறிகளின் அடிப்படையில் ஒப்பிட்டுப் பார்த்து கண்ணுக்குத் தெரியாத அம்சங்களின் சாத்தியங்களுக்கு இடமளித்து அறத்தின் படி நடந்து சான்றோர்கள் மெச்சும்படியான முடிவுகள் எடுத்து அவற்றின் புகழ் முழுதையும் மன்னனே அடையுமாறு செயல்படக்கூடியவர்கள்.
தம் உயிர்க்கு உறுதி எண்ணார், தலைமகன் வெகுண்ட போதும்
வெம்மையைத் தாங்கி நீதி விடாது நின்று உரைக்கும் வீரர்;
செம்மையில் திறம்பல் செல்லாத் தேற்றத்தார், தெரியும் காலம்
மும்மையும் உணர வல்லார், ஒருமையே மொழியும் நீரார்.(1407)
தசரதனின் அமைச்சர்கள் தம் உயிரைத் துச்சமாக எண்ணக்கூடிய தீரர்கள். அரசன் சினம் கொண்டாலும் அவனிடம் அச்சமின்றி அறம் உரைக்கும் வீரர்கள். நேர்மை தவறாதவர்கள். நடந்தன, நடப்பன, நடக்கப் போவன ஆகியவற்றை உணர்ந்தவர்கள். உண்மையை உரைக்கக் கூடியவர்கள்.
‘ஆதலால் இராமனுக்கு அரசை நல்கி இப்
பேதைமைத்து ஆய் வரும் பிறப்பை நீக்குவான்
மா தவம் தொடங்கிய வனத்தை நண்ணுவேன்;
யாது நும் கருத்து? ‘என இனைய கூறினான். (1429)
திறன் வாய்ந்த கோசலத்தின் அமைச்சர்களிடம் மன்னன் தசரதன் தான் இராமனுக்கு ஆட்சிப் பொறுப்பை அளித்து விட்டு தான் வனம் புக எண்ணுவதாக தனது எண்ணத்தைக் கூறி அவர்கள் கருத்தினைக் கேட்டான்.
திரண்ட தோளினன் இப்படிச் செப்பலும், சிந்தை
புரண்டு மீது இடப் பொங்கிய உவகையர், ஆங்கே
வெருண்டு, மன்னவன் பிரிவு எனும் விம்முறும் நிலையால்,
இரண்டு கன்றினுக்கு இரங்கும் ஓர் ஆ என இருந்தார். (1430)
இராமனுக்கு ஆட்சிப் பொறுப்பை அளிக்க விரும்புவதாக தசரதன் கூறியதைக் கேட்ட அமைச்சர்கள் பேருவகை கொண்டனர். எனினும் தசரதன் வனம் புகுதலை எண்ணி துயரும் உற்றனர். ஒரு கன்று அருகிருப்பதால் மகிழும் பசு தான் பிரிந்திருக்கும் கன்றினை நினைத்து வருந்துவது போல அமைச்சர் மனநிலை இருந்தது.
‘பொன் உயிர்த்த பூ மடந்தையும், புவி எனும் திருவும்,
இன் உயிர்த் துணை இவன் என நினைக்கின்ற இராமன்,
என் உயிர்க்கு என்கை புல்லிது;இங்கு இவற் பயந்து எடுத்த
உன் உயிர்க்கு என நல்லன், மன் உயிர்க்கு எலாம்; உரவோய்! (1436)
பொன் மலரென ஒளி வீசும் திருமகளும் நிலமகளும் தமக்கு இனியவன் என எண்ணக் கூடிய இராமன், தந்தையாகிய உமக்கு இனிமை பயப்பது போன்றே குடிகளுக்கும் இனிமையானவனாக இருப்பான்.
“மண்ணினும் நல்லள்; மலர் மகள், கலைமகள், கலையூர்
பெண்ணினும் நல்லள்;பெரும் புகழ்ச் சனகி; பேர் உலகின்
கண்ணினும் நல்லன்;கற்றவர் கற்றிலாதவரும்
உண்ணும் நீரினும், உயிரினும், அவனையே உவப்பார்.‘‘ (1438)
இராமனின் சீதை நிலத்தை விட பொறுமை மிக்கவள். அலைமகளினும் கலைமகளினும் மலைமகளினும் சிறப்பு கொண்டவள் சீதை. அவள் கணவனான இராமன் கண்ணை விட நுண்மையானவன். அறிஞர்களாலும் பாமரர்களாலும் பருகும் நீரினும் இனியவனாக தங்கள் உயிரினும் விரும்பப்படுபவனாக விளங்குபவன் இராமன்.
இராமன் அரசானகவும் சீதை அரசியாகவும் நாடாள்வது சிறந்தது என்பதை இவ்வாறு கூறுகிறார்.
மற்று அவன் சொன்ன வாசகம் கேட்டலும், மகனைப்
பெற்ற அன்றினும், பிஞ்ஞகன் பிடித்த அப் பெருவில்
இற்ற அன்றினும், எறி மழு வாளவன் இழுக்கம்
உற்ற அன்றினும் பெரியது ஓர் உவகையன் ஆனான். (1440)
வசிட்டரின் இச்சொற்களைக் கேட்ட தசரதன் இராமனை ஈன்ற பொழுதில் மகிழ்ந்ததை விட அவன் சிவவில்லை ஒடித்த பொழுது மகிழ்ந்ததை விட பரசுராமனின் தவப்பயனை தன் பாணத்தின் இலக்காய் எய்திய தினத்தை விட பேருவகை கொண்டான்.
பெண்ணின் இன் அமுது அன்னவள் தன்னொடும், பிரியா
வண்ண வெம் சிலைக் குரிசிலும் மருங்கு இனிது இருப்ப,
அண்ணல் ஆண்டு இருந்தான் அழகு அரு நறவு என்னக்
கண்ணும் உள்ளமும் வண்டு எனக் களிப்பு உறக் கண்டான். (1448)
சுமந்திரர் எப்போதும் இராமனைப் பிரியாமல் உடனிருக்கும் இலக்குவன் அருகில் நின்றிருக்க இனிமையான அமுதம் போன்றவளான சீதையுடன் இராமன் அமர்ந்திருப்பதைக் கண்டார். தேனினும் இனிய அக்காட்சியை சுமந்திரரின் கண்ணும் மனமும் வண்டுகள் தேன் பருகுவது போல் பருகின.
நீள் எழுத் தொடர் வாயினும் குழையொடும் நெகிழ்ந்த;
ஆளகத்தினொடு அரமியத் தலத்தினும் அலர்ந்த;
வாள் அரத்தம் வேல் வண்டொடு கெண்டைகள் மயங்கச்
சாளரத்தினும் பூத்தன; தாமரை மலர்கள். (1452)
வாள் போன்ற புருவமும் வேல்விழிகளும் வண்டையொத்த கருமணிகளும் கெண்டை மீன் போன்று விரையும் கண்களும் அழகிய குழைகளும் அவிழ்ந்த நீண்ட கூந்தலும் கொண்ட பெண்கள் தத்தம் மாளிகை வாயிலிலும் முற்றத்திலும் பூத்திருக்கும் தாமரைகள் போல நின்று இராமனை நோக்கினர்.
‘மைந்த! நம் குல மரபினில் மணி முடி வேந்தர்,
தம் தம் மக்களே கடைமுறை நெடு நிலம் தாங்க,
ஐந்தொடு ஆகிய முப்பகை மருங்கு அற அகற்றி,
உய்ந்து போயினர்; ஊழி நின்று எண்ணினும் உலவார். ‘ (1462)
தசரதன் இராமனிடம் இரகு வம்சத்தவர் தம் புதல்வர்களிடம் ஆட்சிப் பொறுப்பை உரிய காலத்தில் ஒப்படைத்து விட்டு வனம் புகுந்தனர் என்று கூறினார்.
நிவந்த அந்தணர், நெடுந்தகை மன்னவர், நகரத்து
உவந்த மைந்தர்கள், மடந்தையர், உழையர் பின் தொடரச்
சுமந்திரன் தடம் தேர் மிசைச் சுந்தரத் திரள் தோள்
அமைந்த மைந்தனும், தன் நெடும் கோயில் சென்று அடைந்தான். (1470)
இராமன் அரசாளப் போவதை எண்ணி மகிழ்ந்த அந்தணர்களும் மன்னர்களும் அயோத்தி இளைஞர்களும் பெண்களும் இரதத்தைச் சூழ்ந்து கொள்ள இராமன் சுமந்திரனுடன் தன் மாளிகை திரும்பினான்.
ஒத்த சிந்தையர், உவகையர், ஒருவரின் ஒருவர்,
தம் தமக்கு உற்ற அரசு எனத் தழைக்கின்ற மனத்தார்,
முத்த வெண் குடை மன்னனை முறை முறை தொழுதார்,
‘அத்த! நன்று ‘என அன்பினோடு அறிவிப்பது ஆனார். (1474)
ஒத்த சிந்தனை உடைய அரசர்கள் தசரதனிடம் அவரது முடிவை நல்ல முடிவு என பாராட்டினர்.
‘ஊருணி நிறையவும் உதவும் மாடு உயர்
பார் நுகர் பழுமரம் பழுத்தது ஆகவும்
கார் மழை பொழியவும் கழனி பாய் நதி
வார் புனல் பெருகவும் மறுக்கின்றார்கள் யார்? (1480)
ஊருணி நிறைவதையும் பயன்மரம் பழுப்பதையும் மேகம் பொழிவதையும் பெருக்கெடுக்கும் நதியையும் விரும்பாதவர் எவரும் உண்டா?
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. – திருக்குறள் (ஒப்புரவு அறிதல்)
பயன்மரம் உள்ளூர்ப் பழுத்தற்றால் செல்வம்
நயனுடை யாண்கண் படின். – திருக்குறள் (ஒப்புரவு அறிதல்)
“செம்மையில், தருமத்தில், செயலில், தீங்கின்பால்
வெம்மையில் ஒழுக்கத்தில் மெய்ம்மை மேவினீர்!
என் மகன் என்பது என்? நெறியின் ஈங்கு இவன்
நும் மகன்; கையடை நோக்கும் ஊங்கு‘‘ என்றான். (1483)
செம்மையில் அற உணர்வில் செயல் திறனில் தீமையைச் சுடும் வன்மையில் ஒழுக்கத்தில் உண்மையில் நிலைத்திருக்கும் மன்னர்களிடம் இராமன் இனி தங்கள் மகன் என்று தசரதன் கூறினார்.
‘என் வயிற்று அரு மைந்தற்கு இனி அருள்
உன் வயிற்றது ‘என்றாள் உலகு யாவையும்
மன் வயிற்றின் அடக்கிய மாயனைத்
தன் வயிற்றின் அடக்கும் தவத்தினாள். (1492)
இராமன் அரசாளப் போவதை அறிந்து திருமால் கோவிலுக்குச் சென்று திருமாலிடம் இராமனுக்கு அருள் புரிய வேண்டுகிறாள் விசும்பை தன் வயிற்றில் அடக்கிய திருமாலைத் தன் வயிற்றில் மகவாய்ப் பெற்றெடுத்த கோசலை.
‘கரிய மாலினும் கண்ணுதலானினும்
உரிய தாமரை மேல் உறைவானினும்
விரியும் பூதம் ஓர் ஐந்தினும் மெய்யினும்
பெரியர் அந்தணர்; பேணுதி உள்ளத்தால். ‘ (1502)
காக்கும் திருமாலினும் அழிக்கும் சிவனிலும் படைக்கும் பிரம்மனிலும் ஐம்பூதங்களினும் மாறா உண்மையினும் உயர்ந்தவர்கள் செந்தண்மை பூண்ட அந்தணர்கள். அவர்களை அரசன் உள்ளத்தால் பேண வேண்டும்.
‘கோளும் ஐம்பொறியும் குறையப் பொருள்
நாளும் கண்டு நடுக்குறு நோன்மையின்
ஆளும் அவ் அரசே அரசு; அன்னது
வாளின் மேல் வரும் மாதவம் மைந்தனே! (1509)
பகைவர் அஞ்சும் படைச்செருக்குடனும் நாளும் நாட்டின் வருவாயைக் கண்காணித்தும் அரசன் புலனடக்கத்துடனும் இருந்து செய்யப்படும் ஆட்சியே ஆட்சி. அது ஆட்சியாக மட்டுமல்லாது மாதவமாகவும் இருக்கும்.
‘உமைக்கு நாதற்கும் ஓங்கு புள் ஊர்திக்கும்
இமைப்பு இல் நாட்டம் ஓர் எட்டு உடையானுக்கும்
சமைத்த தோள் வலி தாங்கினர் ஆயினும்
அமைச்சர் சொல் வழி ஆற்றுதல் ஆற்றலே. (1510)
அரசன் மலைமகள் மாலையிட்ட சங்கரனைப் போன்ற வலிமை கொண்டவனாயினும் கொற்றப்புள்ளை ஊர்தியாகக் கொண்ட திருமாலின் பராக்கிரமம் கொண்டவனாயினும் படைக்கும் பிரம்மனின் ஆற்றல் கொண்டவனாயினும் அரசு தொடர்பான எம்முடிவையும் அமைச்சர்களைக் கலந்தாலோசித்து செய்வதே சிறப்பானதாகும்.
புள் – பறவை
புள் ஊர்தி- திருமால்
‘என்புதோல் உடையார்க்கும் இலார்க்கும் தம்
வன் பகைப் புலன் மாசு அற மாய்ப்பது என்?
முன்பு பின்பு இன்றி மூ உலகத்தினும்
அன்பின் அல்லது ஒர் ஆக்கம் உண்டாகுமோ? (1511)
குடிகள் மனதை அன்பால் வெல்பவனே நல்லரசன்.
‘வையம் மன் உயிராக அம் மன்னுயிர்
உய்யத் தாங்கும் உடல் அன்ன மன்னனுக்கு
ஐயம் இன்றி அறம் கடவாது அருள்
மெய்யின் நின்றபின் வேள்வியும் வேண்டுமோ? (1512)

உயிரின் நலம் நாடும் உடல் போல் மக்கள் நலம் நாடும் அரசன் இயற்ற வேண்டிய வேள்வி என மண்ணில் ஏதுமில்லை.
‘இனிய சொல்லினன் ஈகையன் எண்ணினன்
வினையன் தூயன் விழுமியன் வென்றியன்
நினையும் நீதிநெறி கடவான் எனில்
அனைய மன்னற்கு அழிவும் உண்டாம் கொலோ? (1513)
குடிகளிடம் இனிமையாகப் பேசுபவன், ஏழைகள் மீது இரக்கம் கொண்ட கொடையாளன், சிந்திக்கக் கூடியவன், செயல் வீரன், தூய்மையானவன், விழுமியங்களில் மாறாதிருப்பவன், எப்போதும் வெற்றி பெறுபவன், நீதிநெறிகளைக் காப்பவனாகிய அரசனுக்கு அழிவு என்பதே இல்லை.
‘ஓர்வின் நல் வினை ஊற்றத்தினார் உரை
பேர்வு இல் தொல் விதி பெற்று உளது என்று அரோ,
தீர்வு இல் அன்பு செலுத்தலில், செவ்வி ஓர்
ஆர்வம் மன்னவற்கு ஆயுதம் ஆவதே. (1515)
அரசாட்சி துறவிகள் மேல் கொண்டுள்ள அன்பு அரசைக் காக்கும் சிறந்த படைக்கலம் ஆகும்.
‘தூமகேது புவிக்கு எனத் தோன்றிய
வாம மேகலை மங்கையரால் வரும்
காமம் இல்லை எனில் கடும் கேடு எனும்
நாமம் இல்லை; நரகமும் இல்லையே. (1516)
அரசன் பெண்ணாசை கொண்டவன் அல்ல எனில் அவனுக்குக் கேடும் இல்லை; நரகமும் இல்லை.
ஆர்த்தனர் களித்தனர் ஆடிப் பாடினர்
வேர்த்தனர் தடித்தனர் சிலிர்த்து மெய்ம் மயிர்
போர்த்தனர் மன்னனைப் புகழ்ந்து வாழ்த்தினர்
தூர்த்தனர் நீள்நிதி சொல்லினார்க்கு எலாம். (1522)
இராமன் அரசனாவதைக் கொண்டாட மக்கள் மகிழ்ச்சி கொண்டு ஆரவாரித்தனர். ஆடிப்பாடி மகிழ்ந்தனர். வாழ்த்தொலித்தனர். கொடை அளித்தனர்.
மங்கையர் குறங்கு என வகுத்த வாழைகள்;
அங்கு அவர் கழுத்து எனக் கமுகம் ஆர்ந்தன;
தங்கு ஒளி முறுவலில் தாமம் நான்றன;
கொங்கையை நிகர்த்தன கனக கும்பமே. (1525)
பெண்களின் தொடை போன்ற வாழை மரங்கள் நகரை அணி செய்து நடப்பட்டன. பெண்களின் கழுத்து போன்ற கமுகங்கள் அலங்காரத்துக்காக உயர்ந்தன. அவர்களின் புன்னகையின் ஒளி கொண்ட முத்துத் தோரணங்கள் கட்டப்பட்டன. அவர்களின் முலையை ஒத்த கும்பங்கள் ஆங்காங்கே அமைக்கப்பட்டிருந்தன.
பூ மழை, புனல் மழை, புது மென் சுண்ணத்தின்
தூ மழை, தரளத்தின் தோம் இல் வெண் மழை,
தாம் இழை நெரிதலில் தகர்ந்த பொன் மழை,
மா மழை நிகர்த்தன, மாட வீதியே. (1531)
அயோத்தி வீதிகளில் கொண்டாட்டத்தில் பூமழை பொழிந்தது. இளைஞரும் இளம் பெண்களும் வீசிக் கொண்ட மங்கல நீர் புனல் மழையாகப் பெய்தது. வண்ணப்பொடிகள் தூறலாய் பெய்தன. பொன் அணிகள் சிந்துவது பொன்மழையாயிருந்தது.
எய்தி, அக் கேகயன் மடந்தை ஏடு அவிழ்
நொய்து அலர் தாமரைநோற்ற நோன்பினால்
செய்த பேர் உவமை சால் செம் பொன் சீறடி
கைகளில் தீண்டினாள், காலக் கோள் அனாள். (1538)
சூரியனைப் பீடிக்கும் கிரகணம் போன்றவளான கூனி செந்தாமரை போன்ற கைகேயியின் பாதத்தைத் தீண்டினாள்.
வெவ்விடம் அனையவள் விளம்ப, வேல் கணாள்,
தெவ் அடு சிலை கை என் சிறுவர் செவ்வியர்;
அவ்வவர் துறை தொறும் அறம் திறம்பலர்;
எவ் இடர் எனக்கு வந்து அடுப்பது ஈண்டு? ‘எனா. (1541)
’எனது புதல்வர்கள் மாவீரர்கள். எவ்விதமான துயர் தனக்கு வர இயலும்’ என கைகேயி கேட்டாள்.
ஆய பேர் அன்பு எனும் அளக்கர் ஆர்த்து எழத்,
தேய்வு இலா முக மதி விளங்கித் தேசு உறத்,
தூயவள் உவகை போய் மிகச், சுடர்க்கு எலாம்
நாயகம் அனையது ஓர் மாலை நல்கினாள். (1547)
களங்கமில்லாத நிலவைப் போன்ற கைகேயியின் முகம் ‘’இராமனுக்கு அரசு’’ என்ற செய்தியைக் கேட்டதும் ஆர்ப்பரிக்கும் அலைகடலென பேரன்பினால் பொங்கி அச்செய்தியைக் கூறிய கூனிக்குத் தனது ஒளிவிடும் அணி மாலை ஒன்றை வழங்கினாள்.
தெழித்தனள், உரப்பினள், சிறு கண் தீ உக
விழித்தனள், வைதனள், வெய்து உயிர்த்தனள்,
அழித்தனள், அழுதனள், அம் பொன் மாலையால்
குழித்தனள் நிலத்தை, அக் கொடிய கூனியே. (1548)
சினத்துடன் அதனை கூனி தரையில் வீசினாள்.
‘சிவந்த வாய்ச் சீதையும், கரிய செம்மலும்,
நிவந்த ஆசனத்து இனிது இருப்ப, நின் மகன்,
அவந்தனாய் வெறுநிலத்து இருக்கல் ஆனபோது,
உவந்தவாறு என் இதற்கு? உறுதி யாது? ‘என்றாள். (1550)
சீதையும் இராமனும் அரியணையில் வீற்றிருக்க பரதன் எந்த முக்கியத்துவமும் இன்றி இருக்கப்போவதற்காகவா நீ மகிழ்கிறாய் என கூனி கைகேயியிடம் கேட்டாள்.
‘எனக்கு நல்லையும் அல்லை நீ; என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லை; அத் தருமமே நோக்கின்,
உனக்கு நல்லையும் அல்லை; வந்து ஊழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை, மதி இலா மனத்தோய்! (1560)
‘’அறியாமை மிக்கவளே! நீ எனக்கு நல்லவளும் அல்ல; என் மகன் பரதனுக்கு நல்லவளும் அல்ல; அறத்தின் படி பார்த்தால் நீ உனக்கே நல்லவள் அல்ல’’ கைகேயி கூனியிடம் சொன்னாள்.
‘மூத்தவற்கு உரித்து அரசு எனும் முறைமையின், உலகம்
காத்த மன்னனில் இளையன் அன்றோ கடல் வண்ணன்?
ஏத்தும் நீள் முடி புனைவதற்கு இசைந்தனன் என்றால்,
மீத் தரும் செல்வம் பரதனை விலக்கும் ஆறு எவனோ? (1564)
’’வயதில் மூத்தவன் தான் நாடாள வேண்டும் எனில் தசரதன் இருக்க இராமன் எப்படி அரசனாகிறான்? அப்படியெனில் ஏன் இராமன் இருக்க பரதன் நாடாளக் கூடாது?’’ கூனி கைகேயியிடம் கேட்டாள்.
நன்று சொல்லினை! நம்பியை நளிர் முடி சூட்டல்,
துன்று கானத்தில் இராமனைத் துரத்தல், இவ் இரண்டும்
அன்று அது ஆம் எனில்,அரசன் முன் ஆர் உயிர் துறந்து
பொன்றி நீங்குதல் புரிவென் யான்; போதி நீ ‘என்றாள். (1579)
கைகேயி கூனியிடம் சொன்னாள்: ‘’பரதனுக்கு அரசாட்சி; இராமனுக்கு வனவாசம் என இரண்டையும் மன்னனிடம் கேட்கிறேன். இல்லையேல் அங்கே உயிர் துறக்கிறேன்’’
‘ஏய வரங்கள் இரண்டின் ஒன்றினால் என்
சேய் அரசு ஆள்வது; சீதை கேள்வன் ஒன்றால்
போய் வனம் ஆள்வது; ‘ எனப் புகன்று நின்றாள்;
தீயவை யாவையினும் சிறந்த தீயாள். (1593)
தசரதனிடம் கைகேயி இரண்டு வரங்களைக் கேட்டாள்.
நாகம் எனும் கொடியாள் தன் நாவின் ஈந்த
சோக விடம் தொடரத் துணுக்கம் எய்தா
ஆகம் அடங்கலும் வெந்து அழிந்து அராவின்
வேகம் அடங்கிய வேழம் என்ன வீழ்ந்தான். (1594)
கைகேயி கேட்ட வரங்களைக் செவியுற்ற தசரதன் நாக நச்சினால் தீண்டப்பெற்ற யானை போல வீழ்ந்தான்.
பூதலம் உற்று அதனில் புரண்ட மன்னன்
மா துயரத்தினை யாவர் சொல்ல வல்லார்?
வேதனை முற்றிட வெந்து வெந்து கொல்லன்
ஊது உலையில் கனல் என்ன வெய்து உயிர்த்தான். (1595)
தசரதன் துயரை எப்படிச் சொல்வது? கொல்லன் உலையின் அனல் போல துயரப் பெருமூச்சு விட்டான்.
மாதர்கள், கற்பின் மிக்கார், கோசலை மனத்தை ஒத்தார்;
வேதியர் வசிட்டன் ஒத்தார்; வேறு உள மகளிர் எல்லாம்
சீதையை ஒத்தார்; அன்னாள் திருவினை ஒத்தாள்; அவ் ஊர்
சாதுகை மாந்தர் எல்லாம் தயரதன் தன்னை ஒத்தார். (1649)

(தொடரும்)

ஓவியங்கள் உதவி: The Story of Rama (depicted via paintings) – khadoo – Medium

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.