யானை பிழைத்த வேல் – பகுதி ஒன்று

ஹேவிளம்பி ஆண்டு பங்குனி மாதம் வளர்நிலவு ஒன்பதாம் நாளில் எனது நண்பர் ஒருவர் கம்பராமாயணம் பற்றி எழுதுமாறு சொன்னார். அன்று ஸ்ரீராம நவமி. ஆர்வமூட்டும் உவகை நிறைந்த அழைப்பென்றாலும் தமிழின் ஆகப் பெரிய கவியின் மாபெரும் படைப்பு குறித்து எழுதுவது என்பது என்னை திகைக்கச் செய்தது. கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது என எழுத முற்பட்டேன்.
கம்பராமாயணம் பிரும்மாண்டமானது. அது பிரும்மாண்டமானது என்ற மனப்பதிவை அதன் பாடல்கள் எண்ணிக்கை மூலமும் (10,000க்கும் மேல்) அந்நூலின் தடிமன் காரணமாகவும் அடைகிறோம். ஆகப் பெரியதாய் அது இருப்பதனாலேயே வாசகன் அதனை நெருங்கத் தயங்கி விடுகிறான். ஒருபுறம் தமிழின் ஆகப் பெரிய கவிஞன் படைப்பை படித்து விட மாட்டோமா என்ற ஏக்கம்; மறுபுறம் அவ்வளவு பெரிய ஆக்கத்தை வாசித்து விட முடியுமா என்ற மலைப்பு. இவற்றுக்கு இடையிலேயே வாசக முயற்சி நின்று விடுகிறது. வாசகனுக்கு ஏற்படும் இன்னொரு தடை, கம்பராமாயணம் மேடைப் பேச்சாக அறிமுகம் ஆகும் விதம். பேச்சாளர்கள் கம்பன் பாடல்களை மனப்பாடமாய் அடுக்கும் போது கம்பன் படைப்பு மனப்பாடம் செய்யும் திறன் கொண்டவர்களுக்குத் தான் வசப்படுமோ என்ற ஐயம் வாசகனுக்கு உருவாகி விடுகிறது. இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் தமிழ்நாட்டின் எழுத்தறிவு 15 சதவீதமாக இருந்திருக்கிறது. கலை இலக்கியம் கருத்தியல் என எவையுமே மேடைகளில் பேசப்பட்டே சமூகத்தின் கவனத்தில் நிலை நிறுத்தப்பட்டிருக்கிறது. அது தமிழ்ச் சமூகத்தின் கடந்த காலப் பழக்கம். அதன் தொடர்ச்சி இன்றும் நீடிப்பது தவிர்க்க இயலாதது. இந்த இரண்டையும் வாசகன் கடந்து வர வேண்டும்.
இன்று பல பதிப்பகங்கள் கம்பராமாயணத்தை மூலம் மற்றும் உரையுடன் வெளியிடுகின்றன. மூலப்பாடலில் சில சொற்களில் கவிஞன் உருவாக்கியிருக்கும் அற்புதத் தருணங்களை உணர்வெழுச்சிகளை உரைகள் குறைத்து விடுகின்றன என்பதே உண்மை. ஓராயிரம் ஆண்டை ஒரு படைப்பு தாண்டி வரும் போது அதில் உள்ள சில சொற்கள் அர்த்தம் புரியாமல் போகலாம். அவற்றுக்கான குறைந்தபட்ச விளக்கம் மட்டுமே தரப்பட வேண்டும். கவிஞனுக்கும் வாசகனுக்கும் இடையே உரையாசிரியன் குறுக்கிடாமல் இருப்பதே நலம். தமிழின் தொன்மையான உரையாசிரியர்கள் அவ்விதமே தங்கள் பணியை ஆற்றியுள்ளனர். குருகுல முறை நீங்கி கல்லூரிக் கல்வி துவங்கும் போது மாணவர்கள் மதிப்பெண்களுக்காக மொழிப்பாடம் கற்கும் நிலை வரும் போதே செய்யுளின் விளக்க உரையும் கருத்துரையும் கவிதையைச் சூழ்கின்றன. மர்ரே ராஜம் பதிப்பு இன்று வரை நினைவுகூரப்படுவதற்கு காரணம் கவிதை வாசிப்புக்கும் வாசகனுக்கும் அணுக்கமாக இருந்ததுதான். கம்பனை அறிமுகம் செய்து கொள்ள திரு. பி.ஜி. கருத்திருமன் அவர்கள் எழுதிய “கம்பன் – கவியும் கருத்தும்” என்ற நூல் மிகவும் உதவிகரமானது. கம்பன் படைப்பு மீது கொண்ட தீராக்காதலால் அவர் இந்நூலை ஆக்கியுள்ளார்.
எனது கட்டுரைத் தொடரில் கோவை கம்பன் அறநிலையின் கம்பராமாயண உரையில் உள்ள பாடல்கள், இலக்கங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் விதத்திலேயே பின்பற்றியுள்ளேன். இந்நூல் tamilvu.org தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.  குறிப்புகளோ விளக்கங்களோ அளிக்கத் தேவையில்லாத பாடல்களை நேரடியாக வழங்கியுள்ளேன். சில இடங்களில் குறிப்புகள் அளித்துள்ளேன். சில இடங்களில் எனது அவதானிப்புகளை வெளிப்படுத்தியுள்ளேன். மேலான வாசிப்பை சில இடங்களில் சுட்டியுள்ளேன். நவீன இலக்கிய வாசகன் விரும்பி வாசிக்கக்கூடிய சொல்லழகும் உணர்வழகும் கொண்ட கம்பன் பாடல்களை வாசகர்கள் முன் அறிமுகமாகக் கொண்டு வருவதே எனது நோக்கம்.
இராமாயணக் கதையின் சுருக்கமான வடிவத்திலிருந்து முழுக்காவியமும் பல்வேறு இந்திய மொழிகளில் உள்ளது. இன்றும் வழிபாட்டின் ஒரு பகுதியாக இராமாயணம் வாசிக்கப்படுகிறது. இராமாயணத்தின் ஒரு பகுதியான சுந்தர காண்டம் இன்றும் இந்தியாவின் பல பகுதிகளில் பாராயணம் செய்யப்படுகிறது.
கம்பன் ஒரு பெருங்கவிஞன். அவனுடைய படைப்பில் புவியியல், தொன்மம், வரலாறு, வர்ணனைகள், அரசியல், நிதி, நீதி, சமூகவியல் என பலதுறைகள் பேசப்படுகின்றன. விவாதிக்கப்படுகின்றன. ஒரு கவிதை வாசகன் அப்படைப்பிலிருந்து சிந்தித்து பலவற்றைப் புதிதாகப் பெற்று தொகுத்துக் கொண்டு வெகுதூரம் முன்நகரக் கூடிய சாத்தியம் உள்ளவன். அவன் அதனை இலக்கியப் பிரதியாக அணுகுவதே ஆகச் சிறந்த சாத்தியம்.
கம்பனுடைய தனிச்சிறப்பாக நான் எண்ணுவது அவனுடைய எளிமை. எளிய சொல் அடுக்குகளின் மூலம் மகத்தான உணர்வுத் தருணங்களை நிர்மாணித்து விடுகிறான். இராமாயணக் காப்பிய மாந்தர் குறித்த சித்திரங்களை நாம் இளவயது முதலே கதைகள் மூலம் அடைகிறோம். அவர்கள் அனைவருமே கதைகள் மூலம் நமக்கு மிகவும் நெருக்கமானவர்களாகி விடுகிறார்கள். அக்கதையின் விழுமியங்கள் இன்று வரை நாம் ஏற்கும் விழுமியங்கள் ஆகும். கம்பன் வாய்ப்பு இருக்கும் இடங்களிலெல்லாம் அக்கதாபாத்திரங்களை தன் சொல்லால் பல கோணங்களில் காட்டுகிறான்; வியக்கிறான். ஒரு கவிஞன் இத்தனை வியக்கும் ஒரு வாழ்க்கையை நாம் கம்பன் சொற்கள் மூலம் மீண்டும் மீண்டும் கண்டடைகிறோம்.
கம்பன் பாடல்கள் பத்தாயிரத்துக்கும் மேல். இக்கட்டுரைத் தொடர் மூலம் அக்கடலில் அகமகிழ்ந்து மூழ்கி நீந்தி என் உள்ளங்கைகளால் அதனை அள்ளுகிறேன். கம்பனை நான் எப்படி வாசித்தேன்; வாசிக்கிறேன் என்பதை பகிர்ந்து கொள்ளலாம் என எண்ணுகிறேன். வாசிக்க இனிமையான மொழியழகு மிக்க கம்பன் பாடல்களை நவீன வாசகர்கள் கவனத்துக்குக் கொண்டு வருவதையே எனது முதன்மை நோக்கமாகக் கொண்டிருப்பதால் எனது குறிப்புகளை மிகக் குறைவாகவே கொடுக்க முயன்றுள்ளேன். இத்தொடர் நிலவைச் சுட்டும் விரல் மட்டுமே.
கம்பனை அணுகி வாசித்தவன் என்ற முறையில் எனது அனுபவம் ஆர்வத்துடன் இராம காதைக்குள் செல்வோமாயின் அக்காப்பிய வெள்ளமே நம்மை சூழ்ந்து அழைத்துச் செல்லும். நம்முடன் உரையாடும். நம்மை மகிழ்விக்கும். உணர்வெழுச்சி கொள்ளச் செய்யும். வாழ்க்கையைக் கண்டு புன்னகைக்கச் செய்யும். மாறா அறத்தின் கருணையைக் கண்டு கண்ணீர் விடச் செய்யும்.
ஏதோ ஒரு விதத்தில் கம்பனுக்குள் நுழைந்தவர்கள் வாழ்நாள் முழுதும் கம்பனில் கட்டுண்டிருந்திருக்கிறார்கள். ஆயுள் முழுதும் மீள மீள கம்பனை வாசித்திருந்திருக்கிறார்கள்.
இக்கட்டுரைத் தொடரில் எனது நோக்கம் கம்பனின் எளிமையை – கம்பன் கவி வாசிக்க எளிமையானது என்பதை- வாசகனுக்கு முன்வைப்பதுதான். விதை போன்று கம்பன் கவி எளிதானதென்றாலும் அவ்விதை உலகை நிறைக்கும் பெருங்காடென ஆகும் திறன் கொண்டது. ஆகவேதான் ஆயிரம் ஆண்டுகளாக நாம் அந்த ஆசானிடம் மீண்டும் மீண்டும் சென்று கொண்டிருக்கிறோம்.
பத்து ஆண்டுகளுக்கும் மேலாக கம்பனை நவீன வாசகர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என ஊட்டி காவிய முகாம்களில் கம்ப ராமாயண அமர்வுகளை ஒருங்கமைக்கும் திரு. ஜெயமோகன் அவர்களுக்கும், கம்ப ராமாயண அமர்வுகளை பெருவெற்றி பெறச் செய்திருக்கும் திரு. நாஞ்சில் நாடன் அவர்களுக்கும் நவீன வாசகர்கள் என்றும் கடன்பட்டவர்கள்.


~oOo~

உலகம் யாவையும் தாம்உளவாக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகிலா விளையாட்டு உடையார்- அவர் தலைவர்
அன்னவர்க்கே சரண் நாங்களே. (1)

ஒரு மங்கலச் சொல்லிலிருந்து கம்பர் துவங்கியுள்ளார் என்பர். எண்ணிப் பார்த்தால் ‘’உலகம்’’ என்ற சொல் உலகு தழுவிய பார்வையைக் குறிக்கிறது. மனிதன் உருவாக்கியிருக்கும் சமூக, பொருளாதார, அரசியல் எல்லைக்கோடுகளுக்கு அப்பால் இருக்கும் ஒன்றை கம்பன் சுட்டுவதாக நவீன வாசகன் பொருள் கொள்ள முடியும். கம்பனின் சொல்லால் அதை மானுடம் எனக் கொள்ளவும் முடியும்.
படைப்புத் தொழில் என்பது பிரம்மனின் கற்பனையில் நிகழ்வது என இந்திய புராண மரபு கூறும். சிருஷ்டி, ஸ்திதி, சம்ஸ்காரம் என வாழ்வின் இயங்குமுறை விளக்கப்படுகிறது. அவ்வாறு நிகழும் உயிர் வாழ்க்கை இறையின் அலகிலா விளையாட்டு. அதனை நிகழ்த்துபவர் தலைவர். அவரைச் சரண் அடைகிறோம்.

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று, ஆர்கலி மேய்ந்து அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கைதன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே (13)

வெண் மேகங்கள் நீலக் கடலில் மேய்ந்து கருநிறம் கொண்டு மீண்டன. நீறு அணிந்த சிவனின் வண்ணம் கொண்ட வெண் மேகங்கள் கடலில் மேய்ந்து திருமகளை மார்பில் கொண்ட திருமாலின் கரிய நிறம் கொண்டு மீண்டன.

தலையும் ஆகமும் தாளும் தழீஇ அதன்
நிலைநிலாது இறை நின்றது போலவே
மலையின் உள்ளஎலாம் கொண்டு மண்டலால்
விலையின் மாதரை ஒத்தது அவ்வெள்ளமே (17)
மணியும் பொன்னும் மயில் தழைப் பீலியும்
அணியும் ஆனைவெண் கோடும் அகிலும்தண்
இணைஇல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான்
வணிக மாக்களை ஒத்தது அவ் வாரியே (18)
பூநிரைத்தும் மென் தாது பொருந்தியும்
தேன் அளாவியும் செம் பொன் விராவியும்
ஆனை மா மத ஆற்றொடு அளாவியும்
வான வில்லை நிகர்த்தது அவ் வாரியே (19)
மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு
இலைமுதல் பொருள் யாவையும் ஏந்தலான்
அலைகடல் தலை அன்று அணை வேண்டிய
நிலை உடைக் கவி நீத்தம் அந் நீத்தமே (20)
ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்புஇகந்து
ஊக்கமே மிகுந்து உள் தெளிவு இன்றியே
தேக்கு எறிந்து வருதலில் தீம்புனல்
வாக்கு தேன்நுகர் மாக்களை மானுமே (21)
பணை முகக் களியானை பல் மாக்கேளாடு
அணிவகுத்து என ஈர்த்து இரைத்து ஆர்த்தலின்
மணிஉடைக் கொடி தோன்ற வந்து ஊன்றலால்
புணரி மேல் பொரப் போவது போன்றதே (22)

சரயு நதியை கம்பர் வர்ணிக்கிறார். நதியின் ஓட்டத்தை பல சொற்களால் சொல்வதாக வாசகனுக்குத் தோன்றக் கூடும். வகுப்பறைகளில் மட்டுமே பாடல்களைக் கேட்டதால் வர்ணனைகள் மேல் ஏற்படும் சலிப்பு அது. எனினும் காவிய ஆசிரியன் இதில் ஒரு நுணுக்கத்தைக் கொண்டிருக்கிறான் என்று எனக்குப் பட்டது. நதியை விலைமகளிர் போல என்கிறான். பின்னர் வணிகர் குழு போல என்கிறான். அதன் பின்னர் வானவில்லுடன் ஒப்பிடுகிறான். நீதி வழுவாத அரசனுடன் ஒப்பீடு செய்கிறான். சமயங்கள் பரம்பொருளைச் சென்றடைவது போல என்கிறான். நல்வினை தீவினை என வினையின் வேகத்தில் என்கிறான். இவை அனைத்தும் இணையும் போது நதி பற்றிய நம் மனச்சித்திரமும் கூடவே வாழ்க்கை பற்றிய சித்திரமும் மிகப் பெரிதாக நமக்கு காட்சி தருகிறது. ஒன்றைக் கண்டு கண்ணுக்குத் தெரியாத பலவற்றை அதனுடன் இணைத்து பிரும்மாண்டமாக்குகிறான் கவிஞன்.
பாயும் வெள்ளப் பெருக்கு ஏந்திச் செல்பவற்றையும் அது ஆற்றும் செயல்களையும் கம்பர் கூறுகிறார்.

கொடிச்சியர் இடித்த சுண்ணம் குங்குமம் கோட்டம் ஏலம்
நடுக்கு உறுசந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம்
கடுக்கை ஆர்வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய்
அடுக்கலின் அடுத்த தீம்தேன் அகிலொடு நாறும் அன்றே (24)
முல்லையைக் குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆக்கிப்
புல்லிய நெய்தல் தன்னைப் பொரு அருமருதம் ஆக்கி
எல்லைஇல் பொருள்கள் எல்லாம் இடைதடுமாறும் நீரால்
செல்உறு கதியில் செல்லும் வினை எனச்சென்றது அன்றே (17)

நிலத்தின் உயிர் நீரின் இருப்புக்கு ஏற்ப தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. மழை பொழிந்து நீர் திரளத் துவங்கும் பகுதிகள் ஒரு விதமாகவும் திரண்ட நீர் பாய்ந்து செல்லும் பிராந்தியங்கள் வேறு விதமாகவும் நீர் தேங்கி நிற்கும் நிலம் புதிய தன்மையுடனும் கடலுடன் இணையும் போது புதிய கோலத்துடனும் திகழ்கின்றன. நீரின் – ஆற்றின்- இப்போக்கை ஒட்டியே ஐவகை நிலங்கள் அமைகின்றன.
சரயு நதி தன் கட்டற்ற பெருக்கால் தான் பாயும் இடமெல்லாம் நிறைகிறது. இலக்கணம் நிலங்களுக்கு அளித்துள்ள வரையறைகளை மாற்றி அமைக்கிறது. கர்மவினை வாழ்வை மாற்றியமைக்கிறது. சரயுநதி வினைப்பயன் போல் விரைந்து செல்கிறது.

காத்த கால்மல்லர் வெள்ளக் கலிப்பறை கறங்க கைபோய்ச்
சேர்த்த நீர்த்திவலை பொன்னும் முத்தமும் திரையின்வீசி
நீத்தம் ஆன்று அலையஆகி நிமிர்ந்து பார்கிழிய நீண்டு
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்ததன்றே (18)

கடல் போல் திரண்ட நீர் பேரலைகளென உயர்ந்து வெள்ளமெனப் பெருகி வேகத்தால் நிலத்தை கிழித்துக் கொண்டு ஒன்றிலிருந்து ஒன்றாய் பிரியும் குலம் என பிரிந்து சென்றது.
மானுடவியல் மனித இனங்களை வேட்டைச் சமூகம், மேய்ச்சல் சமூகம், வேளாண் சமூகம் எனப் பிரிக்கிறது. சமூகங்கள் ஒன்றிலிருந்து ஒன்று எனப் பிரிபவை. அவை அனைத்தும் ஒன்றாய் இருந்தவை. மானுட இனம் பல குலங்களாகப் பிரிவது போல சரயு நதி பல கால்வாய்களாய் பிரிகிறது.

கல்லிடைப் பிறந்து போந்து கடலிடை கலந்த நீத்தம்
எல்லைஇல் மறைகளாலும் இயம்பஅரும் பொருள்ஈது என்னத்
தொல்லையில் ஒன்றேஆகி துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல்பெரு சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்து அன்றே (19)

இறைமை தத்துவார்த்த தெய்வம், முழுமுதல் தெய்வம், செயல்தள தெய்வங்கள் என பிரிந்து இருப்பது போல சரயு நதி ஏரி, குளம், குட்டை என நிறைந்து நிற்கிறது.

வரம்பு எலாம் முத்தம் தத்தும் மடை எலாம் பணிலம் மாநீர்க்
குரம்பு எலாம் செம்பொன் மேதிக் குழிஎலாம் கழுநீர்க் கொள்ளை
பரம்பு எலாம் பவளம் சாலிப் பரப்பெலாம் அன்னம் பாங்கர்க்
கரம்பு எலாம் செந்தேன் சந்தக் கா எலாம் களிவண்டு ஈட்டம் (33)

காவியம் ஒன்றை செறிவூட்டி மிக உன்னதமான இடத்துக்குக் கொண்டு செல்கிறது. காற்றில் மிதக்கும் ஒற்றைச் சிறகில் ஒரு பறவையின் வாழ்வைக் காணும் கண்கள் கொண்டவனாகக் கவிஞன் இருக்கிறான்.
வரப்புகளில் முத்துக்கள். மடைகளில் சங்குகள். கரைகளில் செம்பொன். எருமைகள் ஊறும் குட்டைகளில் குவளை மலர்கள். சீராக்கப்பட்ட நிலங்களில் பவளங்கள். நெற்பயிர்ப் பரப்பில் அன்னங்கள். காடுகளில் செந்தேன். சோலைகளில் களிவண்டுகள்.
மண்ணும் நீரும் கொள்ளும் காதல் களியாட்டே மருத நிலத்தின் மலரும் வளம். நீர் நிறைந்த வயல் வரப்புகளும் மடைகளும் குட்டைகளும் நிலமும் காடும் கவிஞனுக்கு முத்தாகவும் சங்காகவும் பவளமாகவும் அன்னமாகவும் தேனாகவும் தெரிகிறது. வாசிக்கையிலேயே இப்பாடல் உருவாக்கும் மனச் சித்திரம் அபாரமானது.

நீர்இடை உறங்கும் சங்கம் நிழல்இடை உறங்கும் மேதி
தார்இடை உறங்கும் வண்டு தாமரை உறங்கும் செய்யாள்
தூர்இடை உறங்கும் ஆமை துறைஇடை உறங்கும் இப்பி
போர்இடை உறங்கும் அன்னம் பொழில்இடை உறங்கும் தோகை (37)

கோசல நாட்டில் சங்குகள் நீரிலும் எருமைகள் நிழலிலும் மாலைகளில் வண்டுகளும் தாமரையில் திருமகளும் சேற்றில் ஆமைகளும் நீர்த்துறைகளில் முத்துச்சிப்பிகளும் வைக்கோல் போரில் அன்னங்களும் சோலைகளில் மயில்களும் இனிமையாக உறங்கி ஓய்வு கொள்கின்றன.

பருவ மங்கையர் பங்கய வாள் முகத்து
உருவ உண்கணை ஒன்பெடை ஆம் என
கருதி அன்பொடு காமுற்று வைகலும்
மருத வேலியின் வைகின வண்டு அறோ (54)

கோசல நாட்டின் பருவப் பெண்களின் அலையும் அழகான கண்களை பெண் வண்டுகள் என ஆண் வண்டுகள் மயங்கிக் காமுறுகின்றன.

தினைச் சிலம்புவ தீம் சொல் இளம்கிளி
நனைச் சிலம்புவ நாகு இள வண்டு; பூம்
புனைச் சிலம்புவ புள்ளினம்; வள்ளியோர்
மனைச் சிலம்புவ மங்கல வள்ளையே (62)

இப்பாடல் எனக்கு திருப்பாவையின் புள்ளும் சிலம்பின காண்; வெள்ளை விளி சங்கின் பேரரவம் கேட்டிலயோ என்ற வரியை நினைவு படுத்தியது.

விதியினை நகுவன அயில்விழி பிடியின்
கதியினை நகுவன அவர் நடை கமலப்
பொதியினை நகுவன புணர்முலை கலைவாழ்
மதியினை நகுவன வனிதையர் வதனம் (75)

கணப் பொழுதில் மாறும் விதியைப் பார்த்து சிரிக்கின்றன அதனினும் விரையும் பெண்களின் மீன் விழிகள். அவர்களின் நடையில் பெண் யானையின் கம்பீரம் இருக்கிறது. தாமரை மொக்கை பரிகசிக்கின்றன அவர்களின் முலைகள். அவர்கள் முகங்களின் அழகு நிலவைப் பார்த்து சிரிக்கிறது.

கோதைகள் சொரிவன குளிர் இள நரவம்
பாதைகள் சொரிவன பரும் மணி கனகம்
ஊதைகள் சொரிவன உறையுறும் அமுதம்
காதைகள் சொரிவன செவி நுகர் கனிகள்

நரவம் – தேன். இள நரவம் – மென்மையான இளந்தேன். குளிர் இள நரவம் – குளிர்ந்திருக்கும் மென்மையான இளந்தேன். குளிர் இள நரவம் என்ற மூன்று சொற்களில் எத்தனை இனிமையையும் குளிர்ச்சியையும் கவிஞன் தந்து விடுகிறான்!
மாலைகள் குளிர்ந்த இளம் தேனைச் சொரிகின்றன. நாவாய்கள் பொன்னையும் மணியையும் சொரிகின்றன. காற்று அமிர்தத் துளிகளைச் சொரிகிறது. காவியங்கள் செவிக்கு ருசிக்கும் கனிகளைச் சொரிகின்றன.

நிலமகள் முகமோ திலகமோ கண்ணோ நிறைநெடு மங்கல நாணோ
இலகுபூண் முலை மேல் ஆரமோ உயிரின் இருக்கையோ திருமகட்கு இனிய
மலர்கொல்லோ மாயோன் மார்பின்நல் மணிகள் வைத்த பொன் பெட்டியோ வானோர்
உலகின்மேல் உலகோ ஊழியின் இறுதி உறையுளோ யாது என உரைப்பாம்

என்னென்று சொல்வது அயோத்தியை! பூமகள் முகமோ? அவள் நெற்றித் திலகமோ? கண்ணோ? அவள் அணியும் தாலியோ? மணியாரமோ? பூமகள் இதயமோ? திருமகள் உறையும் கமலமோ? பெருமாள் மார்பின் கௌஸ்துப மணியோ? வானவர் உலகுக்கும் மேலே உள்ள உலகோ?

மேவரும் உணர்வுமுடிவு இலாமையினால் வேதமும் ஒக்கும் விண் புகலால்
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும் திண்பொறி அடங்கிய செயலால்
காவலில் கலைஊர்கன்னியை ஒக்கும் சூலத்தால் காளியை ஒக்கும்
யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும் (101)

அயோத்தியின் கோட்டை மதிலை வர்ணிக்கிறார் கம்பர். முடிவு இல்லாமல் வளர்ந்து செல்வதால் அவருக்கு வேதம் நினைவில் வருகிறது. வான் வரை உயர்ந்துள்ளதால் தேவர்களை நினைவூட்டுகிறது. பொறிகளை தன்னுடைய முழு கட்டுப்பாட்டில் கொண்டிருப்பதால் அம்மதில் கம்பரின் நினைவில் முனிவர்களைக் கொண்டு வருகிறது. நம்பியிருப்பவர்களைக் காப்பதில் கொற்றவையையும் எதிரிகளை அழிப்பதில் காளியையும் நினைவுபடுத்துகிறது. அடைவதற்கு அரியதாய் இருப்பதால் அம்மதில் இறைவனை நினைவுபடுத்துகிறது.
மதிலை வர்ணிப்பதாய் இப்பாடலை வாசித்துச் செல்லலாம். எனினும் வேதம், தேவர், முனிவர், கொற்றவை, காளி மற்றும் இறைவனின் தன்மைகளை மதிலை நிமித்தமாகக் கொண்டு தீட்டுகிறார் கம்பர்.

பந்துகள் மடந்தையர் பயிற்றுவார் இடைச்
சிந்துவ முத்து இனம் அவைதிரட்டுவார்
அந்தம் இல் சிலதியர் ஆற்ற குப்பைகள்
சந்திரன் ஒளி கெடத் தழைப்ப தண் நிலா (137)

அயோத்தி நகரில் இளம்பெண்கள் பந்து விளையாடுகின்றனர். அப்போது அவர்கள் ஆடைகளில் இருக்கும் முத்துக்கள் சில சிதறுகின்றன. அவற்றை அவர்களின் சேடியர் குவிக்கின்றனர். அக்குவியல் நிலவைக் காட்டிலும் குளிர்ச்சியான ஒளியை அளிக்கிறது.
நிலவை விட குளிர்ச்சியான ஒளி அளிக்கும் முத்துக்களை அணியாய் பூண்டிருக்கும் இளம்பெண்களின் இயல்பின் ஒளியையும் குளிர்ச்சியையும் நம் கற்பனைக்கு விட்டு விடுகிறார் கம்பர்.

வளை ஒலி வயிர் ஒலி மகர வீணையின்
கிளை ஒலி முழவு ஒலி கின்னரத்து ஒலி
துளை ஒலி பல்லியம் துவைக்கும் செம்மையின்
விளை ஒலி கடல் ஒலி மெலிய விம்முமே (153)

அயோத்தியில் எப்போதும் இசை ஒலிக்கிறது. சங்குகளும் கொம்புகளும் ஆக்கும் இசை. மகர யாழிலிருந்து மீட்டப்படும் இசை. மத்தள இசை. குழலிசை. எப்போதும் ஒலிக்கும் அந்த இசை தரங்கங்கள் ஓயாது ஒலிக்கும் கடலின் இசையை விட மிகுதியாய்க் கேட்கின்றன.

இப்பாடலை இசை குறித்த சித்திரம் என்று சொல்லலாம். ஆயினும் இது அயோத்தி மாநகர் மக்களின் கொண்டாட்ட மனநிலையைப் பற்றிய சித்திரமே ஆகும். இசை எப்போதும் ஒலிக்கும் நகரம் வாழ்வை மகிழ்ந்து கொண்டாடும் மக்களின் நகர் அல்லவா?

ஓதம் நெடும்கடல் ஆடை உலகினில் வாழ் மனிதர் விலங்கு எனவே உன்னும்
கோது இல் குணத்து அரும் தவனைக் கொணரும் வகை யாவது எனக் குணிக்கும் வேலைச்
சோதிநுதல் கரும் நெடும் கண் துவர் இதழ் வாய்த் தரள நகை துணை மென் கொங்கை
மாதர் எழுந்து யாம் ஏகி அரும் தவனைக் கொணர்தும் என வணக்கம் செய்தார் (217)
சுடர் நெற்றி
கரிய நெடுங் கண்கள்
பவளச் செவ்வாய்
பூக்கும் புன்னகை மலர்.
ஒருபகல் உலகு எலாம் உதரத்து உள் பொதிந்து
அருமறைக்கு உணர்வு அரும் அவனை அஞ்சனக்
கருமுகில் கொழுந்து எழில் காட்டும் சோதியைத்
திருஉறப் பயந்தனள் திறம் கொள் கோசலை (284)

பிரளயத்தை தன் வயிற்றில் அடக்கியவன், மறைகளாலும் முழுமையாக அணுகப்பட முடியாதவன் வான்தளிர் என கோசலை அன்னை வயிற்றில் மகவாய்ப் பிறந்தான்.

ஆடினர் அரம்பையர் அமுத ஏழ் இசை
பாடினர் கின்னரர் துவைத்த பல் இயம்
வீடினர் அரக்கர் என்று உவக்கும் விம்மலால்
ஓடினர் உலவினர் உம்பர் முற்றுமே (288)

இராமன் பிறந்த செய்தி கேட்டு தேவமகளிர் மகிழ்ச்சியில் ஆடினர். எங்கும் இனிய இசை ஒலித்தது. தேவர்கள் ’’அழிந்தனர் அரக்கர்’’ என்ற மகிழ்வில் வானில் அங்கும் இங்கும் ஓடினர்.

சுந்தரப் பொடிகளும் செம்பொற் சுண்ணமும்
சந்தனம் நீரொடும் கலந்து தையலார்
பந்தியில் சிவிறியால் சிதறப் பார் மிசை
இந்திரவில் எனக் கிடந்தது எங்குமே (297)

இராமன் பிறந்த மகிழ்வில் பெண்கள் பல வண்ணப் பொடிகளையும் சந்தனத்தையும் நகரெங்கும் வீசி மகிழ்ந்தனர். வானத்தில் வானவில் வண்ணங்களுடன் கோலாகலமாக இருப்பது போல அயோத்தி நகரம் இருந்தது.

எதிர் வரும் அவர்களை எமை உடை இறைவன்
முதிர் தரு கருணையின் முகமலர் ஒளிரா
’எது வினை? இடர் இலை? இனிது நும் மனையும்?
மதி தரும் குமரரும் வலியர் கொல்’ எனவே (314)

வசிட்டரிடம் பாடம் பயின்று விட்டு அரண்மனை திரும்பும் போதெல்லாம் மக்களிடம் முகமலர்ச்சியுடன் இராமன், ‘’நான் தங்களுக்கு ஏதும் செய்ய வேண்டுமா? உங்களுக்கு ஏதேனும் துயரங்கள் உள்ளனவா? வீட்டில் மனைவி நலமாக இருக்கிறார்களா? மைந்தர்கள் நலம் தானே?’’ என வினவுகிறார்.
இப்பாடலில் ஓர் அவதானம் உள்ளது. அரசன் என்பவன் ஆயிரக்கணக்கான மக்களுக்குத் தலைவன். அவன் ஆயிரக்கணக்கானோருக்குத் தலைமை ஏற்பதாலேயே குறியீட்டு ரீதியில் குடை, செங்கோல் மற்றும் கிரீடம் ஆகியவற்றைச் சுமக்கிறான். எனினும் மக்களின் எல்லா பிரச்சனைகளையும் அரசனால் தீர்த்துவிட முடியாது. எந்த அரசனாலும். தன்னை அணுகுபவர்கள் கேட்பதை எல்லாம் செய்து விட முடியாது. வழங்கி விட முடியாது. இது அரசாட்சியின் எல்லை. அரசர்களின் எல்லை.
எனவே அரசனை அணுகும் எங்காவது தற்செயலாக சந்திக்க நேரும் எளிய மக்கள் அரச குழாமின் அமைப்பைக் கண்டு திகைத்திருப்பர். நியாயமாக ஏதேனும் கேட்க இருந்தால் கூட சொல்லெடுக்க முடியாமல் திணறிடுவர்.
இராமன் நல்லரசன். மக்களைக் கண்டதும் அவனே நான் ஏதும் தங்களுக்கு செய்ய வேண்டுமா என்று கேட்கிறான். அதுவே அவர்களுக்கு அவன் மேல் நம்பிக்கையூட்டும். நீங்கள் சொல்ல நினைக்கும் துயரங்கள் ஏதும் உண்டா என்கிறான். தங்கள் துயரைக் கேட்பதாலேயே அவர்கள் மனபாரம் குறையும். மக்களிடம் அவர்கள் குடும்பத்தாரைப் பற்றி விசாரிக்கிறான் இராமன். பிரஜைகளுக்கு தங்களை நினைவில் வைத்திருப்பது பெரும் மகிழ்ச்சியைத் தரும். தங்கள் குடும்பத்தினரிடம் சென்று அரசன் உங்களை விசாரித்தான் எனக் கூறும் போது குடும்பமே மகிழும். தன் குடிகளின் உளம் அறிந்தவனாகவும் அவர்கள் மேல் கருணை கொண்டவனாகவும் இருக்கிறான் இராமன்.

வந்த நம்பியைத் தம்பி தன்னொடு
முந்தை நால் மறை முனிக்குக் காட்டி நல்
தந்தை நீ தனித் தாயும் நீ இவர்க்கு
எந்தை தந்தனன் இயைந்த செய்க என்றான் (334)

(தொடரும்)

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.