எம்.எல் – அத்தியாயம் 20-21

அத்தியாயம் 20
ற்பகத்துக்கு அன்று தான் கல்லூரி திறந்தது. முன்தினம் மாலையே அவளை சோமுவும் மீனாட்சியும் கல்லூரியில் கொண்டு போய் விட்டார்கள். அப்பா, அம்மா, கூத்தியார் குண்டு, மதுரையில் அக்கா வீட்டை எல்லாம் விட்டுப் பிரிந்து தனியே ஹாஸ்டலில் இருந்து படிக்கப் போகிறோமே என்ற எண்ணமெல்லாம் கற்பகத்திடம் இல்லை. கல்லூரி, ஹாஸ்டல் என்று சந்தோஷமாகவே இருந்தது அவளுக்கு. அக்கா வீட்டை விட்டுப் புறப்படும் போது கூத்தியார் குண்டுவுக்கு போன் போட்டு அப்பா, அம்மாவிடம் பேசினாள். அவளுக்குத் தேவையானதையெல்லாம் முன்தினமே எடுத்துப் பெட்டியில் வைத்து விட்டாள். குளிப்பதற்கு வாளி, கோரிக் குளிக்கச் சொம்பு எல்லாம் தயாராக இருந்தது. லெட்சுமண பிள்ளை ஊருக்குப் புறப்படுவதற்கு முன்னால் சோப்பு, பவுடர், எண்ணெய் முதல், சகலத்தையும் ரெடியாக வாங்கிக் கொடுத்து விட்டுத்தான் கூத்தியார் குண்டுக்குப் போனார். சீதா பவனத்திலும் எல்லோரிடமும் சொல்லிக் கொண்டாள். சீதா பவனத்தில் எல்லோரும் அவளைச் சேலை கட்டச் சொன்னார்கள். ஆனால், அவள் எப்போதும் போல் தாவணியில் தான் அக்கவுடனும், அத்தானுடனும் காலேஜுக்குப் புறப்பட்டாள்.
அவளுடைய உற்சாகமும், சந்தோஷமும் சோமுவுக்கு ஆச்சரியமாக இருந்தது. எல்லோரையும் விட்டுவிட்டு தனியாக ஹாஸ்டலுக்குப் போகிறோமே என்ற வருத்தமே இல்லாமல் கற்பகம் இருந்தது மீனாவுக்குப் பெரிய விஷயமாகவே படவில்லை. “அவ அப்படித்தான். அவ ரொம்ப துணிச்சல்காரி” என்று மீனா கணவனிடம் சமாதானம் சொன்னாள். “பாத்தீங்களா அத்தான்? அக்கா எனக்கு சர்டிபிகேட் குடுத்திட்டா பாத்தீங்களா?…” என்றாள் கற்பகம். “ஒங் கிட்டே இருக்க தைரியம் ஒங்க அக்கா கிட்டே இல்லியே…” என்று வருத்தப்பட்டான் சோமு.
கற்பகத்தைக் காலேஜில் விட்டுவிட்டு இரண்டு பேரும் சீதா பவனத்துக்கு வந்தனர். மீனா அரைகுறையாக நிறுத்தியிருந்த எம்பிராய்டரி வேலையை ஆரம்பித்தாள். சோமு ஜார்ஜ் தாம்ஸனை எடுத்துப் படிக்க ஆரம்பித்தான். இந்த இரண்டு மூன்று நாட்களில் மாஸேதுங்கின் ஏனான் பிரசங்கம், ஸ்டாலின், லெனினின் கட்டுரைகள் என்று வெறிபிடித்தவனைப்போல் படித்தான். தினமணி டாக்கீஸ் பக்கம் நடந்த கூட்டத்துக்கும் ஒருநாள் போய் வந்தான். அன்று அவனை துரைப்பாண்டி, அரசு பற்றி வகுப்பெடுக்கச் சொன்னான். அந்தக் கூட்டத்துக்குப் பதினாறு பேர் வந்திருந்தனர். கோபால் பிள்ளை தாத்தா மாதிரி தானும் ஒரு தலைவனாகி விட்டது போல் அவனுக்குத் தோன்றியது.
சோமு வகுப்பெடுத்த கூட்டத்துக்கு அந்த அல்பேனிய ஆதரவாள பிச்சாண்டியும் வந்திருந்தார். அங்கே இருந்த எல்லோருக்குமே தாங்கள் ஏதோ பெரிய காரியத்தில் ஈடுபட்டிருக்கிற உணர்வில் மிதந்தார்கள். மதுரையை ஏதோ செயின்ட் பீட்டர்ஸபர்க்கைப் போலவும், ஷாங்காய் நகரத்தைப் போலவும் நினைத்துக் கொண்டார்கள். சோமுவின் அரசு பற்றிய வகுப்பு முடிந்ததும், பிச்சாண்டி, தானும் பேச வேண்டும் என்றார். அவர் அல்பேனிய கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றியும், அல்பேனியாவின் ஆட்சி, அன்வர் ஹோக்ஸா பற்றியெல்லாம் பேசினார். அந்த அறை முழுவதும் கம்யூனிஸம் வியாபித்துக் கிடந்தது. இண்டு இடுக்குகளிலெல்லாம் மார்க்ஸ், லெனின், மாவோவின் கருத்துக்கள் பாய்ந்து நிறைந்திருந்தன.
ஆனால், பக்கத்திலிருந்த தினமணி டாக்கீஸில் படம் ஓடிக்கொண்டிருந்தது. கடைகளில் ஜனங்கள் ஏதேதோ பொருட்களை வாங்கிக் கொண்டிருந்தனர். கோவில்களில் சாயரட்சை நடந்து கொண்டிருந்தது. பஸ்கள் கர்ம சிரத்தையோடு ஓடிக்கொண்டிருந்தன. மதுரை ரயில்வே ஸ்டேஷனில் வெளியூர்களுக்குப் போவதற்காக ஜனங்கள் காத்துக்கிடந்தார்கள். ஹோட்டல்களில் மாலை நேர வியாபாரம் மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. கோபால் பிள்ளை குனிந்து ஏதோ எழுதிக்கொண்டிருந்தார். சுப்பிரமணிய பிள்ளையின் ஜவுளிக் கடையிலும் கூட்டத்திற்கு குறைவில்லை. சீதா பவனத்தில் சீதாவுடன் இரண்டு மருமகள்களும் குத்து விளக்குக்கு முன்னால் உட்கார்ந்து தேவாரப் பதிகத்தைப் பாடிக்கொண்டிருந்தார்கள். பாலகிருஷ்ணன் காபி குடித்து விட்டு, அடுத்த நாள் வகுப்பெடுப்பதற்காக காலேஜ் செலபஸைப் புரட்டிக்கொண்டிருந்தார். வெங்கம்மாள் கோலப்பனுக்கு தோசை சுட்டுக் கொண்டிருந்தாள். பீட்டர் வார ரிப்போர்ட்டை எழுதிச் சரி பார்த்துக்கொண்டிருந்தான். அவன் மனைவி ரெபேக்காள் பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுத்துக் கொண்டிருந்தாள்… உலகமே வழக்கம் போல் புரட்சியைப் பற்றி எந்தக் கவலையுமில்லாமல் இயங்கிக் கொண்டிருந்தது.
பிச்சாண்டி கூட்டம் முடிந்த பிறகு உடனே புறப்பட்டுச் சென்று விடவில்லை. கூட்டம் நடந்த வீடு துரைப்பாண்டிக்குத் தெரிந்த வெள்ளையப்பனுடைய வீடு. வெள்ளையப்பன் துரைப்பாண்டியுடன் கல்லூரியில் படித்தவன். அவனுடைய அப்பா வைரவன் செட்டியார் கீழமாசி வீதியில் அடகுக் கடை நடத்திவந்தார். தேவகோட்டைக்காரர். ஆறு தட்டுள்ள பெரிய வீடு அது. மாடியிலும் நாலைந்து அறைகள் இருந்தன. செட்டியாரிடம் ‘நாங்கள் நண்பர்களெல்லாம் சேர்ந்து ஸ்டடி சர்க்கிள் ஆரம்பிக்கிறோம்’ என்று மட்டும் வெள்ளையப்பன் கூறியிருந்தான். என்ன ஸ்டடி சர்க்கிள் என்று அவன் கூறவில்லை. அவரும் கேட்கவில்லை. ‘ஏதோ கூட்டுச் சேர்ந்து படிக்கத்தானே’ என்று செட்டியாரும் சம்மதித்து விட்டார். பிச்சாண்டி அங்கே வந்திருந்தவர்கள் எல்லோருடைய பெயர்களையும், வீட்டுவிலாசங்களையும் ரொம்ப அக்கறையுடன் விசாரித்து தெரிந்து கொண்டார். பிச்சாண்டி அவர்களுடைய வட்டத்தில் வந்து சேர்ந்து கொண்டது சோமு, துரைப்பாண்டி, வெள்ளையப்பன் உள்பட எல்லோருக்குமே சந்தோஷமாக இருந்தது.
பிச்சாண்டி அல்பேனியக் கம்யூனிஸ்ட் கட்சியைப் பற்றி அதிகமாகப் பேசினாலும், ரஷ்ய, சீனக் கம்யூனிஸத்தைப் பற்றியும் ஏராளமாகத் தெரிந்து வைத்திருந்தார். அவர் பேசப் பேச அவர்கள் எல்லாம் வியப்புடன் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மார்க்ஸியம் அவருடைய விரல் நுனியில் இருந்தது. அன்றைய கூட்டம் முடியப் போகும் போது, ‘நாம் வெறுமனே கூடிப் பேசினால் போதாது. நம்முடைய கருத்துக்களை எல்லாம் மக்களிடம் எடுத்துச் செல்ல ஒரு பத்திரிக்கையை ஆரம்பிக்க வேண்டும்’ என்று சொன்னார். அந்த அபிப்ராயம் எல்லோருக்குமே பிடித்திருந்தது. பிச்சாண்டியையே ஆசிரியராகபோடுவந்தென்று எல்லோரும் முடிவு சொன்னார்கள். அவர் மீது அவர்களுக்கு அத்தனை நம்பிக்கை ஏற்பட்டிருந்தது. அவருடைய மார்க்சிஸிய அறிவும், அதை அவர் தெளிவாகப் பேசியவிதமும் அவர்களை அண்ணாந்து பார்க்க வைத்தது.
அவரைப் பற்றி எந்த விவரமும் அவர்களுக்குத் தெரியாது. அவரும் சொல்லவில்லை. அவர்களும் கேட்கவில்லை. அவரது அபாரமான மார்க்சிய அறிவு அவர்களை மதி மயக்கியிருந்தது. பிச்சாண்டியை மனதுக்குள் கொண்டாடினார்கள். இரண்டு வாரம் கழித்து மீண்டும் கூடுவதென்றும், அன்று பத்திரிகை பற்றி முடிவு செய்வதென்றும் முடிவு செய்தார்கள். வழக்கம் போல் கூட்டம் முடிந்த பிறகும், தெருவில் நின்று வெகு நேரம் உலகத்தையே மறந்து பேசிக் கொண்டிருந்தார்கள். பிச்சாண்டியைப் பிரிய மனமின்றிப் பிரிந்தார்கள்.
துரைப் பாண்டி சோமுவிடம், “சோமு, அடுத்த கூட்டத்துக்கு சபாபதியை எப்படியாவது கூட்டிக் கொண்டு வந்து விடு!..” என்றான்.
“நாளைக்கே அவரைப் பார்த்துப் பேசிட்டு வாரேன்..” என்றான் சோமு. எல்லாரும் போய் விட்டார்கள். சோமுவுக்கு நடக்க வேண்டும் போலிருந்தது. நடந்தே வீட்டுக்குப் போகலாம் என்று நினைத்தான்.
வீடுகளும், கடைகளும், வியாபார நிறுவனங்களும் மாறி மாறி வந்து கொண்டிருந்தன. கார்களும், மோட்டார் சைக்கிள்களும், சைக்கிள் ரிக்‌ஷாக்கலும், பஸ்ஸும் அவனைக் கடந்து போய்க் கொண்டிருந்தன. ஒளிவெள்ளம், விதவிதமான ஹாரன் ஒலிகள். இந்த ஊருக்கு என்ன வயதிருக்கும்? எத்தனை நூறு ஆண்டுகளைக் கடந்திருக்கும் இந்த ஊர். சங்க காலத்துக்கு முன்பே, இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இந்த ஊர் இருக்கிறது என்று சொல்கிறார்கள். எத்தனையோ லட்சம் மக்கள் வாழ்ந்து விட்டுச் சென்ற ஊர். கோவலனும், கண்ணகியும் இந்தத் தெருக்களில் நடந்திருப்பார்களா? புரட்சி நடந்த ரஷ்யா மாதிரி, சீனா மாதிரி இந்தியாவும் ஆகி விட்டால், இந்த வீடுகள், கட்டடங்கள் எல்லாம் அரசின் சொத்துக்களாகி விடும். அப்பாவின் கடை, சீதா பவனம் கூட அரசுக்குச் சொந்தமாகி விடும். அப்பா, குத்தாலம் அண்ணன், கடையில் வேலை பார்க்கிற கிட்டு மாமா, தட்சிணா எல்லாருக்கும் சர்க்காரே சம்பளம் கொடுக்குமா? கூத்தியார் குண்டில் மாமாவுடைய நிலபுலன்கள் எல்லாம் அரசின் வசம் போய் விடுமா? குடும்பம் தனிச்சொத்து இல்லாத உலகம் என்று கற்பனை செய்து பார்த்தான் சோமு.
“ஏன் ஐயா, … பார்த்துப் போக மாட்டியா?” என்ற குரலைக் கேட்டு பிளாட்ஃபாரத்தில் ஏறினான் சோமு. இவ்வளவு தூரம் நடந்து வந்ததில் கால் வலித்தது. ஆர்யபவன் பக்கம் வந்து விட்டான். வீடு இன்னும் கொஞ்ச தூரம்தான்.
 
பிச்சாண்டியின் அலுவலகம் சொக்கி குளத்தில் இருந்தது. மத்திய இண்டெலிஜென்ஸ் ஏஜென்ஸியின் அலுவலகம் அது. வெளியே அதைத் தெரிவிக்கும் போர்டு எதுவும் இருக்காது. அன்று அலுவலகத்திற்கு வந்ததும், முன் தினம் வெள்ளையப்பனுடைய வீட்டுக் கூட்டத்திற்கு வந்திருந்தவர்களின் பெயர்கள், அந்தக் கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்பதைப் பற்றியெல்லாம் ரிப்போர்ட் டைப் செய்தார். அந்த ரிப்போர்ட்டுக்கு மூன்று பிரதிகள் இருந்தன. ஒன்றை டெல்லி அலுவலகத்திற்கும், மற்ற இரண்டையும் உள்ளூர் மற்றும் மாநில போலீஸ் அலுவலகங்களுக்கும் அனுப்பும்படி டெஸ்பாட்ச் கிளார்க் நளினியிடம் கொடுத்தார்.
கமர்ஷியல் பிரிவைச் சேர்ந்த ராமுண்ணி உயர் அதிகாரியின் அறைக்குள் எப்போதோ போனவன், அவர் ரிப்போர்ட்டைப் படித்து முடித்து, டெஸ்பாட்ச் செய்யக் கொடுத்த பிறகும் வெளியே வரவில்லை. ராமுண்ணி ரியல் எஸ்டேட்டில் என்னென்ன தகிடுதத்தங்கள் நடக்கின்றன என்பதையெல்லாம் கதைகதையாகச் சொல்லுவான். அப்படித்தான் ஏதாவது கதையை ஆபீஸரிடம் அளந்து கொண்டிருக்கிறானோ என்னவோ? கதையளப்பதில் அவன் மன்னன், பேச ஆள் கிடைத்தால் விட மாட்டான். ஆனால், ரொம்பக் கெட்டிக்காரன்.
பிச்சாண்டிக்கு இரண்டு நாள் லீவு வேண்டும். அவரது மனைவி தாயம்மை மூத்த மகள் சொர்ணத்துக்காக சங்கரன்கோவில் கோவிலில் மா விளக்குப் போட நேர்ந்திருந்தாள். அதை நிறைவேற்ற வேண்டும். அதற்கு லீவு கேட்கத்தான் காத்திருந்தாள். ஊருக்குப் போய் விட்டு வந்து லீவு சொன்னால் கூட ஆபீஸர் ஒன்றும் சொல்ல மாட்டார். ஆனால் அவருக்குத்தான் மனசு கேட்கவில்லை. சிகரெட் குடிக்கலாம் என்று தோன்றியது. ஆஃபீஸுக்கு வெளியே வந்து, போர்டிகோவில் நின்றார். அது ஒரு நாட்டுக்கோட்டை செட்டியாருடைய வீடு. மாடி எல்லாம் இருந்தது. ஒரு கார் தாராளமாக வீட்டைச் சுற்ரி வருகிற அளவுக்கு சுற்றிலும் இடம் விட்டுக் கட்டப்பட்டிருந்தது. ரோட்டிலிருந்து காம்பவுண்டுக்குள் நுழைகிற இரும்பு கிரில் கேட்டை ஒட்டிப் பெரிய பன்னீர் மரம் நின்றது. போர்டிகோவுக்கு எதிரே ஏராளமான செவ்வரளிச் செடிகள் காம்பவுண்டுச் சுவருக்கு மேல் உயரமாக வளர்ந்து நின்றன. வலது மூலையில் ஒரு வாதுமை மரம். பங்களாவின் பின்புறத்தில் அடுக்கு மல்லிச் செடியும், கொடி முல்லையும் கூட உண்டு. அட்டெண்டர் சர்வகோபால் என்றாவது அவற்றுக்குத் தண்ணீர் ஊற்றுவான். அந்தப் போதாத தண்ணீரிலேயே அந்த மரங்கள், செடிகளெல்லாம் சந்தோஷமாக வளர்ந்து நின்றன. பிச்சாண்டி கோல்டு பிளேக் சிகரெட்டை வாயில் வைத்துப் பற்ற வைத்தார்.
விரல்களெல்லாம் மரக்கட்டை போலிருந்தன. மென்மையாகவே இல்லை. மனமும் இந்த வேலைக்கு வந்து மரக்கட்டை போலாகி விட்டதா? உண்மையிலேயே நேற்று அந்த ஸ்டடி சர்க்கிள் பையன்கள் எந்த விகற்பமும் இல்லாமல் அவருடைய மார்க்ஸிய அறிவை எவ்வளவு மதித்து நடந்து கொண்டார்கள். அவர் மீது அவர்களுக்கு இருந்த மதிப்பும், மரியாதையும் அவர்களுடைய நடவடிக்கைகளிலேயே தெரிந்தது. அப்பேர்ப்பட்ட பையன்களைக் காட்டிக் கொடுக்கிற மாதிரி, ரிப்போர்ட் எழுதி மேலதிகாரிகளுக்கு அனுப்புகிற இந்த வேலையும் ஒரு வேலையா? அவர்களை நம்ப வைத்துக் கழுத்தறுத்தது போலத்தான். ஒரு உளவாளியால் வேறென்ன செய்ய முடியும்? அன்பு, இரக்கம், மனச்சாட்சி இவையெல்லாம் இந்த வேலையில் செல்லுபடியாகாது. இதையெல்லாம் தெரிந்துதானே இந்த வேலையில் சேர்ந்தார். எந்த விஷயத்தைப் பற்றி வேண்டுமானாலும் அவரால் ஆதியோடந்தமாகப் பேச முடியும். ஆனால் அவ்வளவும் வேவு பார்ப்பதற்காக, உளவறிவதற்காக. யோசனையில் கையில் சிகரெட் இருப்பதையே மறந்து விட்டார்.
சர்வ கோபால் வந்து ‘ராமுண்ணி ஆபீஸர் அறையிலிருந்து வெளியே வந்து விட்டார்’ என்றான். நமக்கு எதற்குத் தேவையில்லாத யோசனையெல்லாம் என்று நினைத்துக் கொண்டே, சிகரெட்டைக் கீழே வீசி அணைத்து விட்டு, அலுவலகத்திற்குள் சென்றார்.
அத்தியாயம் 21
சீதா பவனத்தில் அன்று காலையில், வழக்கம்போல் சுப்பிரமணிய பிள்ளையும், செண்பகக் குற்றாலமும் கடைக்குப் போய் விட்டனர். எப்போதும் அப்பா, அண்ணன் எல்லாம் புறப்பட்டுப் போன பிறகு சாவகாசமாகக் குளித்து விட்டுச் சாப்பிடும் சோமு, அன்று அவனும் அவர்களுடன் சேர்ந்து உட்கார்ந்து சாப்பிட்டான். சுப்பிரமணிய பிள்ளைக்கே அது ஆச்சரியமாக இருந்தது. ஒரு வேளை நல்ல புத்தி வந்து, தங்களுடன் கடைக்குக் கிளம்புகிறானோ என்று கூட நினைத்தார். அவருக்கு மட்டுமல்ல, சீதா, ராஜி, மீனா, குற்றாலம் எல்லாருக்குமே ஆச்சரியமாகவும், சந்தோஷமாகவும் இருந்தது.
ஆனால், காலையில் சாப்பிட்ட பிறகு, சபாபதிக்குப் போன் செய்தான். அவரைப் பார்க்க வரலாமா என்று கேட்டான். சபாபதி வரச் சொன்னார். அவன் டெலிஃபோனில் சபாபதியிடம் பேசியதைக் கேட்ட பிறகு சுப்பிரமணிய பிள்ளைக்குச் சப்பென்றாகி விட்டது. சோமு வேறெங்கோ போவதற்காகத்தான் தங்களோடு உட்கார்ந்து சாப்பிட்டிருக்கிறான் என்று தெரிந்ததும் அவரும், குற்றாலமும் கடைக்குக் கிளம்பி விட்டார்கள். சோமு சட்டையைப் போட்டுக் கொண்டு சபாபதியைப் பார்க்க தானப்ப முதலி அக்ரஹாரத்துக்குப் புறப்பட்டான். மீனாவிடம், “பக்கத்துல சபாபதி வீட்டுக்குப் போயிட்டு வாரேன்…” என்று சொல்லிக் கொண்டே செருப்பை மாட்டினான். மீனா, “நீங்க எங்க போனா எனக்கென்ன? கொஞ்சமாவது வீடு, குடும்பங்கிற நெனைப்பு இருந்தாத்தான?…” என்றாள்.
அவளுடைய எரிச்சலைப் பற்றிக் கவலையே படாமல், கதவைத் திறந்து கொண்டு போனான். வாடகைகு விட்டிருக்கிற நாலு வீடுகளையும் தாண்டி, மெயின் கேட் கதவைத் திறந்து கொண்டு சௌராஷ்டிரா சந்தில் இறங்கினான்.
நாலு எட்டு நடந்தால் மேல மாசி வீதி. கொஞ்ச தூரம் நடந்து வலது புறம் திரும்பினால், மேலக் கோபுர வாசல் தெரு. மேல மாசி வீதியும், மேலக் கோபுர வாசல் தெருவும் சந்திக்கிற இடத்தில் நடுத்தெருவில் நின்று ஒரு வட இந்திய யாத்ரீகர் கூட்டம் ஹிந்தியிலோ, வேறு ஏதோ வட இந்திய மொழியிலோ சத்தம் போட்டுப் பேசிக் கொண்டிருந்தது. இந்தியாவில் ஆயுதப் புரட்சி நடந்தால் கோவிலெல்லாம் இருக்குமா? இந்த மாதிரி யாத்ரீகர்களெல்லாம் வந்து கூடுவார்களா? மார்க்ஸ், மதம் ஒரு அபின் என்கிறார். ரஷ்யா, சீனாவிலேல்லாம் சர்ச்சுகளோ, பௌத்த விஹாரங்களோ உண்டா? பிச்சாண்டி பாராட்டிச் சொல்கிற அல்பேனியாவில் சர்ச்சுகள் உண்டா? இதைப் பற்றிப் பிச்சாண்டியிடம் கேட்க வேண்டும். சபாபதிக்குக் கூடத் தெரிந்திருக்கலாம். யோசித்துக் கொண்டே நடந்தவன், தானாகவே தானப்ப முதலி அக்ரஹாரத்தில் திரும்பினான். ஒரு பெரிய பசு அசையாமல் தெருவோரத்தில் நின்று கொண்டிருந்தது. புரட்சிக்குப் பின் இது மாதிரி தெருவில் சகஜமாக அலைகிற பசு, நாய்கள் எல்லாம் எங்கே போகும்?  ‘கத்தரிக்காய், வெண்டைக்காய், அவரைக்காய், வாழைக்காய்’ என்று கத்திக் கொண்டே ஒரு நடுத்தர வயதுப் பெண் தலைச் சுமையாகக் காய்கறி விற்றுக் கொண்டே எதிர்ச் சாரியில் போனாள். சீனாவில் தெரு வியாபாரிகள் எல்லாம் இருக்க மாட்டார்கள். சபாபதி வீடு வந்து விட்டது.
படியேறி கதவைத் தட்டினான். சபாபதியே வந்தார். கதவைத் திறந்ததும் அவனை,  “வா சோமு…” என்று உள்ளே அழைத்தார். நுழைந்ததும் எல்லா மதுரை வீடுகளையும் போல நடைக் கூடம் இருந்தது. அதை அடுத்து பெரிய அறை. அதில் சோபாவெல்லாம் இருந்தது. அந்தக் காலத்து மர சோபா செட். நல்ல கருங்காலி மரத்தில் செய்தது. கைப்பிடிகளெல்லாம் வழுவழுவென்றிருந்தன. சோபாவைக் காட்டி உட்காரச் சொன்னார் சபாபதி. சபாபதிக்கு அவனை விட ஏழெட்டு வயதாவது அதிகமிருக்கும். வீட்டுக்குள் மனதுக்கு ரம்மியமான மெல்லிய இருட்டும், குளிர்ச்சியும் இருந்தது.
“என்ன சாப்பிடறே?…” என்று கேட்டார்  சபாபதி.
“அதெல்லாம் ஒண்ணும் வேண்டாம்… இப்பத்தான் சாப்டுட்டு வாரேன்.”
“அன்னிக்கு அப்படித்தாண்டா, ஒன்னைத் தேடி வந்தவன் காபி கூடச் சாப்பிடாமே… வாசல்லேயே நின்னுட்டுப் போயிட்டாண்டா…” என்று வீட்டினுள் சபாபதியுடைய அம்மா சொன்னது கேட்டது.
“அவன் ரொம்ப சங்கோஜி அம்மா…” என்றார் சபாபதி.
“இவனுக்கு என்ன சங்கோஜம் வேண்டியிருக்கு? .. முன்னப் பின்னத் தெரியாதவனா?” என்று உள்ளே இருந்து கொண்டே அந்த அம்மா உரிமையுடன் பேசினது சோமுவுக்குப் பிடித்திருந்தது.
“என்ன ஸ்டடி சர்க்கிள் எல்லாம் எப்படிப் போகுது?…”
“நீங்கதான் வரலை. ஒங்களைக் கூட்டிட்டுப் போகத்தான் வந்தேன்.”
“நானா? … எதுக்கு?”
“சாரு மஜும்தார் வந்துட்டுப் போனது உங்களுக்குத் தெரியாதா?”
“தெரியும்.. தெரியும்… கோபால் பிள்ளை அண்ணாச்சிய ரெண்டு நாளைக்கு முன்னால் பாத்தேன். அப்போ சொன்னார்…”
“நான் அவரைப் பாக்கல… பாலகிருஷ்ணன், துரைப்பாண்டி எல்லாம் பாத்திருக்காங்க. பாலகிருஷ்ணன் வீட்டிலேயே சாப்புட்டிருக்கார்…”
“அப்படியா?…”
“அவர் குடுத்துட்டுப் போன அறிக்கையை வச்சுத்தான் ஸ்டடி சர்க்கிள் நடந்துக்கிட்டு இருக்குது. எட்டுப் பையங்க வாராங்க. பிச்சாண்டின்னு ஒருத்தர் புதுசா வந்து சேந்திருக்கார். ரொம்பப் படிச்ச ஆளா இருக்கார். நீங்களும் வாங்க சபாபதி. வீரபாண்டி ஒங்களைக் கையோட அழைச்சுட்டு வரச் சொன்னான்…”
“நான் அங்க வந்து என்ன பண்ணப் போறேன் சோமு?… மார்க்ஸிய தத்துவ நூல்களெல்லாம் நான் ஏற்கனவே படிச்சிருக்கேன். எனக்கு அரசியலிலே எல்லாம் இண்ட்ரஸ்ட் இல்லே சோமு. நீ இதிலே ரொம்ப ஆர்வமா இருக்கிறதுதான் எனக்கு ஆச்சரியமா இருக்குப்பா…”
“நாம சுதந்திரம் வாங்கி இத்தனை வருஷமாகியும் ஏழ்மையைப் போக்க முடியலெ. சாப்பாட்டுக்கே கஷ்டப்படுகிறவங்க, வேலை இல்லாமல் கஷ்டப்படுகிறவங்க இவங்களுக்கெல்லாம் விடிவு காலமே இல்லாமல் இருக்கு. இங்க இருக்கிற கட்சிகள் எல்லாம், அவங்கவங்க கட்சியோட நலனைத்தான் கவனிக்கிறாங்களே தவிர, ஜனங்களைப் பத்தி யாரும் நெனைக்கிறதாத் தெரியலை. முதல்லே நிலவுடைமையை ஒழிக்கணும்… அப்போதான் நாடு உருப்படும்…” என்று மேடையில் பேசுவதுபோல் பேசினான். சபாபதி லேசான புன்முறுவலுடனும், ஆச்சரியத்துடனும் அவனையே பார்த்தார். சோமுவுக்கே, தான் பேசியது என்னவோ போலிருந்தது.
“ஏ அப்பா! … பெரிய பிரசங்கமே பண்ணி முடிச்சிட்டே… சரி, நீங்க மார்க்ஸீயம், அந்த சாரு மஜும்தாரோட கட்டுரை இதையெல்லாம் படிச்சிட்டு என்ன செய்யப் போறீங்க? அவர் ஒரு தீவிரவாதி மாதிரி. அரசியல்லே அவரோட ஸ்டாண்ட் எக்ஸ்ட்ரீம் ஸ்டாண்ட்….”
“அதனாலேதான் ஆயுதப் புரட்சி வரணும்னு சொல்றாரு. லேண்ட்லார்டுகளை ஒழிக்கணும்கிறார். அவரோட கட்சியை இங்கு துவக்கப் போறோம்…”
“அவர் சைனாக்காரன் பின்னாலே போகிற ஆளு. சைனாவிலே மாசேதுங் சர்வாதிகாரி மாதிரி ஆட்சி நடத்துதாரு. அந்தச் சர்வாதிகார ஆட்சி நம்ம நாட்டுக்குச் சரிப்பட்டு வருமா? அவங்க ஸ்டேட்ல, வெஸ்ட் பெங்கால்ல நிலச் சீர்திருத்தத்தைச் சரியா பண்ணலே. இங்க தமிழ்நாட்டிலே 1960-லேயே நிலச் சீர்திருத்தச் சட்டம் வந்தாச்சு. 5 பேர் கொண்ட குடும்பத்துக்கு 30 ஏக்கர் நிலம்தான் இருக்கலாம்னு சட்டம் போட்டாச்சு. பிறகு 30 ஏக்கரை 15 ஏக்காராவும் குறைச்சாச்சு. அதனாலே இங்கே லேண்ட் லார்டு யாருமில்ல….”
“சைனாவிலே மாசேதுங் சர்வாதிகார ஆட்சி நடத்துதார்ன்னா சொல்றீங்க?…” என்று ஆச்சரியத்தோடு சோமு கேட்டான்.
“ஆமா… பின்னே? அங்கேயும், ரஷ்யாவிலேயும் ஒரு கட்சியோட ஆட்சிதானே நடக்குது?… பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரம்ன்னு சொல்லி ரஷ்யாவிலேயும், சைனாவிலேயும் கம்யூனிஸ்ட்கள் ஆட்சியைப் பிடிச்சாங்க. ஆனா, ஏழை, எளிய பாட்டாளிகளா ஆட்சியை நடத்துறாங்க? அவங்க பேரைச் சொல்லி கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள்தான் ஆட்சி நடத்துறாங்க. பாட்டாளி வர்க்கச் சர்வாதிகாரனு சொல்றது ஒரு அரசியல் பித்தலாட்டம்தான்.” என்றார் சபாபதி.
சோமு, அவர் தன்னுடைய வர்க்கக் கண்ணோட்டத்துடன் பேசுகிறார் என்று நினைத்தான்.  “இங்கே ஜனநாயக ஆட்சி நடக்குது… ஆனா பணக்காரங்கதானே ஆட்சி நடத்துறாங்க?…”
“எல்லா எம்.எல்.ஏ, எம்.பி.க்களும் பணக்காரங்கன்னு ஒரேயடியாச் சொல்லிர முடியுமா?”
“எலெக்‌ஷன்லே நிக்கிறதுக்கே ஏராளமான பணம் இருந்தாத்தானே நிக்க முடியும்? இவ்வளவு பணத்தைச் செலவு பண்ணி எம்.எல்.ஏ, எம்.பி.யா ஆகிறவங்க சாதாரண ஜனங்களை எங்கே கவனிக்கப் போறாங்க?… ரஷ்யா, சைனாவிலே எல்லாம் வறுமை இல்லையே. உணவுத் தட்டுப்பாடு இல்லியே. அந்தக் கவர்ன்மெண்ட் எல்லாருக்கும் வேலை கொடுத்திருக்கே!”
“நம்ம நாட்டிலேயும் ரேஷன்லே அரிசி குறைஞ்ச வெலையிலே போடறாங்க. மண்ணெண்ணை எல்லாம் தரலையா? ஆனால் ரஷ்ய அரசு ஸைபீரியாவிலே லட்சக்கணக்கான ஆட்களை ஜெயில்லே அடைச்சு வச்சுக் கொடுமைப்படுத்துது. ரஷ்யாவிலேயோ, சைனாவிலேயோ கவர்ன்மெண்டை எதிர்த்து யாரும் பேச முடியாது. சுதந்திரத்தைப் பறிச்சு வச்சுக்கிட்டு சாப்பாடு மட்டும் போட்டா போதுமா சோமு?…”
“அங்கே ஏழை, பணக்காரன், நிலப்பிரபுன்னு வர்க்கங்கள் இல்லையே?”
“அங்கேயும் ஏற்றத் தாழ்வு எல்லாம் இருக்கு. கம்யூனிஸ்ட் கட்சிக்காரங்க, கட்சி மேலிடத்திலே உள்ளவங்க எல்லாம் அங்கே வசதியான வாழ்க்கை வாழறாங்க. சாதாரண மக்கள் தங்களோட கஷ்டத்தை வெளியே சொல்லக் கூட முடியாமல் அடிமைகள் மாதிரிதான் வாழ்ந்துக்கிட்டு இருக்கிறாங்க. அந்த நாடுகள்லே எல்லாம் மூடு மந்திரமா இருக்கு. என்ன தப்பு நடந்தாலும் வெளியே தெரியாது.”
“இங்கே சுதந்திரம் இருந்தும், மக்களுடைய அடிப்படைத் தேவைகள் கூட நிறைவேறலையே.”
“நம்ம நாட்டிலே பிரச்னைகள், கஷ்டங்கள் இல்லைன்னு சொல்லலை. ஆனா, என்ன நடந்துக்கிட்டு இருக்குன்னு அத்தனை பேருக்கும் தெரியும். தங்களுடைய பிரச்னைகளுக்காக ஜனங்கள் போராடலாம். பத்திரிகையிலே எழுதலாம். மேடை போட்டு பிரச்னைகளைப் பத்திப் பேசலாம். நமக்குப் பிடிச்ச மாதிரி வாழலாம். பிடிச்ச வேலையைச் செய்யலாம். சைனாவிலே இதெல்லாம் நடக்குமா? ரஷ்யாவிலே நடக்குமா? அந்த கவர்ன்மெண்டும் அங்க உள்ள கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களும் என்ன சொல்றாங்களோ அதுதான் வேத வாக்கு. மாற்றுக் கருத்துக்கே அங்கே இடமில்லை. இங்கே இந்தச் சாரு மஜும்தார் நிலப்பிரபுக்களை ஒழிக்கணும், ஆயுதப் புரட்சி வரணும்னு சொல்லுகிற அளவுக்கு அவருக்குச் சுதந்திரம் தரப்பட்டிருக்கு. சைனாவிலே இந்த மாதிரி மாசேதுங்கை எதிர்த்துப் பேச முடியுமா? அந்த கவர்ன்மெண்டை எதிர்த்து புரட்சி நடத்தப் போறேன்னு சொல்ல முடியுமா?”
சோமு பேசாமலிருந்தான். சபாபதி சொல்வதில் நியாயம் இருப்பது போல் தோன்றியது. அதே சமயம் அவன் நம்பிக்கையோடு படித்த மார்க்ஸிய நூல்கள் எல்லாம் தவறானவையா?
“அப்போ மார்க்ஸியம், லெனினியம், மாவோயிஸம் எல்லாம் தப்பா?” என்று கேட்டான்.
“மார்க்ஸ் ஏழைகள் கஷ்டப்படுகிறதைப் பார்த்து ஒரு கொள்கையை உருவாக்கினார். மூலதனம் எப்படி உருவாகிறதுன்னு ஆராய்ந்தார். அப்போ அவர் வாழ்ந்த ஜெர்மனி, பிரிட்டனிலே எல்லாம் தொழில்கள் எல்லாம் தனியார் கிட்டேதான் இருந்தது. தனியாரோட பங்களிப்புதான் சமூகத்திலே அதிகமாக இருந்தது. தவிர, தொழிலாளர்கல், சாதாரண மக்களோட நிலைமை ரொம்ப மோசமா இருந்தது. முதலாளிகளுக்குக் கடிவாளம் போட மார்க்ஸ் நினைத்தார். அதனால் தொழிலாளர்களின் உழைப்பிலுள்ள உபரியை வைத்து முதலாளிகள் ஆதாயம் அடைகிறார்கள் என்ற முடிவுக்கு வந்தார். அவருடைய தத்துவம் பூராவுமே மூலதனத்துக்கும், ஒரு சிலரிடமே செல்வம் குவிந்து கிடப்பதற்கும் எதிரானது. இது அவர் வாழ்ந்த 19-ஆம் நூற்றாண்டின் நிலை.
“அப்போ தொழிலாளர்களுக்காகப் போராட இப்போது இருக்கிற மாதிரி யூனியன் அமைப்பெல்லாம் இல்லை. அரசுகளால் முதலாளிகளைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதையெல்லாம் பார்த்துதான் தனது கொள்கைகளை மார்க்ஸ் அமைத்தார். பிறகு வந்த லெனின் மார்க்ஸை விரிவுபடுத்தி சோஷலிஸத்தை முன்வைத்தார். மக்களைத் திரட்டினார். ரஷ்யாவில் இருந்த மன்னராட்சியை அகற்றினார்கள். ரஷ்யாவில் கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு அங்கே உள்ள எல்லாமே அரசுடைமை ஆகிவிட்டன. தனியுடைமை ஒழிக்கப்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சிதான் உற்பத்தியைத் தீர்மானித்தது. ஆனால், ரஷ்ய மக்கள் எல்லாரும் சுதந்திரமற்றவர்கள் ஆனார்கள். ????அதிகார ஆட்சி போய், கம்யூனிஸ்ட்களின் சர்வாதிகாரம் வந்தது. சைனாவிலும் இதுதான் நடந்தது. தனியுடைமையை ஒழித்த ரஷ்ய, சீன அரசுகள் மனிதனின் சுதந்திரத்தையும், அவனது பேச்சுரிமையையும் சேர்த்தே ஒழித்து விட்டன. இதுதான் நடந்தது.”
“நீங்க சொல்லுத சுதந்திரம் முதலாளிகளோட சுதந்திரம். நிலப்பிரபுக்களோட சுதந்திரம், பணக்கார வர்க்கத்தின் சுதந்திரம். ஏழைக்கும், தொழிலாளிக்கும் எதிரான சுதந்திரம்.” என்றான் சோமு.
“இது உன்னோட மார்க்ஸீயக் கண்ணோட்டம். நீ அசல் கம்யூனிஸ்ட் ஆகவே மாறிட்டே. சுதந்திரம் என்பது உணவு, உடை, இருப்பிடம் மாதிரி மனுஷனோட அடிப்படைத் தேவைப்பா.”
“ரஷ்யா, சைனாவிலே எல்லாம் பத்திரிகைகள், பார்லிமெண்ட் இதெல்லாம் இல்லாமயா இருக்குது?…”
“பத்திரிகைகள் இருக்கு, பார்லிமெண்டும் இருக்கு. ஆனா, அது எல்லாமே கம்யூனிஸ்ட் கட்சியோட கட்டுப்பாட்டிலேதான் இருக்கு. கட்சி எந்தச் செய்தியை வெளியிடணும்னு நெனைக்குதோ அதைத்தான் வெளியிடும். அங்கே உள்ள பார்லிமெண்ட் எல்லாம் வெறும் பொம்மை பார்லிமெண்ட். கம்யூனிஸ்ட் கட்சியாலே, கம்யூனிஸ்ட்கள் மட்டுமே இருக்கிற, ஒரு கட்சிப் பார்லிமெண்ட் அவை…”
“அடிப்படைத் தேவைகளை எல்லாம் அந்த கவர்ன்மெண்டுகள் செஞ்சு குடுத்திருக்கு. பிறகென்ன சார்?…”
“உன்னோட கண்ணோட்டமே மார்க்ஸையும், லெனினையும் ஃபாலோ பண்ணுகிறதா ஒருதலைப் பட்சமானதா இருக்கு சோமு. நீ மூளைச் சலவை செய்யப்பட்டிருக்கே. மார்க்ஸிய பிடிவாதக்காரனா, மார்க்ஸிய முரண்டு பிடிக்கிறவனா ஆயிட்டே. சுதந்திரம்கிறதுலே பேச்சு, எழுத்து சுதந்திரம், பார்லிமெண்ட் மட்டும் இல்லே. கலாசார, பண்பாட்டுச் சுதந்திரமும் அடங்கியிருக்கு. நம்ம ஊர் கோவில்கள், சர்ச்சுகள், மசூதிகள்லே இருக்கிற வழிபாட்டுச் சுதந்திரம் இங்கே இருக்கிற மாதிரி அங்கே இல்லே.  ஏன்னா அந்த அரசுகள் ஜனங்களோட கலாசார, பண்பாடுகளைப் பத்திக் கவலைப்படலை. நம்ம நாட்டிலே எல்லா மதத்துக்காரங்களும் அவங்களோட கடவுளைக் கும்பிடலாம். விழாக்கள் நடத்தலாம். திருமணம், பிறப்பு, இறப்புன்னு எல்லா மதத்திலேயும் ஏராளமான சடங்குகள் இருக்கு. இதையெல்லாம் செய்யலாம். இதுதான், சுதந்திரம்ங்கிறது. வெறும் சாப்பாடு, வேலை மட்டுமே மனிதனுக்குப் போதாது. சாமி கும்பிட, சடங்குகள் செய்ய அவனுக்கு வழி இருக்கணும்.
“சைனாவிலே மாஸேதுங் தன் கட்சியோட அரசியல் விழாக்கள், அரசியல் சடங்குகளுக்கு மட்டும்தான் இடம் இருக்கணும்னு நெனைக்கிறார். அந்த ஜனங்கள் காலம் காலமாச் செஞ்சுக்கிட்டு வர்ற வழிபாட்டு, குடும்பச் சடங்குகளுக்கு அங்கே இடமில்லே. அதையெல்லாம் ஒழிக்கணும்னு கலாச்சாரப் புரட்சி நடத்திக்கிட்டு இருக்கார். இதே மாதிரி ரஷ்யாவிலே முற்போக்குன்னு சொல்லி ஃபாக்டரி சைரன் தான் ம்யூஸிக்ன்னு சொல்ற அளவுக்கு அவங்க போயிட்டாங்க. பல எழுத்தாளர்களை ரஷ்யா ஸைபீரியாவுக்கு அனுப்பிட்டுது. சோல்ஷெனிட்ஸின்னு ஒரு எழுத்தாளரை ரஷ்ய அரசு கொடுமைப்படுத்துது. ரஷ்ய, சீன அரசுகள் ஜனங்களைக் கொத்தடைமைகள் மாதிரிதான் நெனைக்கிறாங்க. இதுக்கு அவங்க நடத்தற சர்வாதிகார ஆட்சி உதவியா இருக்கு…”
“அப்போ சாருமஜும்தார் நினைக்கிறதெல்லாம் தப்பா சார்?”
“அவர் முதல்லே வலது கம்யூனிஸ்ட் கட்சியிலேதான் இருந்தார். கம்யூனிஸ்ட் கட்சி ரெண்டாப் பிரிஞ்ச அப்புறம் அவரும் கனு ஸன்யாலும் சேர்ந்து புதுக் கட்சி ஆரம்பிச்சாங்க. நக்ஸல்பாரியிலே ஏற்பட்ட பிரச்னைக்கப்புறம் ஆயுதப் புரட்சி பற்றிப் பேச ஆரம்பிச்சார். நம்ம நாட்டுக்கு ஆயுதப் புரட்சி ஒத்து வருமா, மக்கள் அதை ஏத்துக்கிடுவாங்களான்னு அவருக்குக் கவலை இல்லை. தெலுங்கானா புரட்சி எல்லாம் தோத்துப் போச்சு. ஜனங்களுக்கு கவர்ன்மெண்ட் மேலே எந்தக் கோபமும் இல்லை. சைனாவிலே இருந்த அரசு மேலே மாஸேதுங் கோபத்தை ஏற்படுத்தி ஜனங்களைத் திரட்டி லாங் மார்ச் போனார். இங்கே அந்த மாதிரி எந்த நிலையும் இல்லே. சாரு மஜும்தார் பேசறது தீவிரவாதம். அது சரியில்லை.” என்றார் சபாபதி.
“அப்போ நீங்க எங்க கூட வர மாட்டீங்களா?”
“அதுதான் சொல்லிட்டேனே சோமு. இதிலே எல்லாம் எனக்கு நம்பிக்கை இல்லே…”
“அப்போ இதெல்லாம் பிரயோஜனமில்லைங்கிறீங்களா?”
“நமக்கு எதுக்கு அரசியல், கட்சி அது, இது எல்லாம். ஏற்கனவே இங்க ஏகப்பட்ட கட்சிகள் இருக்கு. புதுசா இது வேறயா? … ஆயுதப் புரட்சியை நீ ஏத்துக்கறையா? உன்னாலே யாரையாவது சாதாரணமா காயப்படுத்தக் கூட முடியாது. ஆயுதம், வன்முறை எல்லாம் உனக்கு ஒத்து வருமா? யாரோ ஒருத்தர் வந்தாரு, ஏதோ கட்டுரைகளைக் கொடுத்தாருன்னு அவர் பொறத்தாலே எதுக்குப் போறே? கோபால் பிள்ளை அண்ணாச்சிக்குத் தெரியாத கம்யூனிஸமா?…”
“அப்போ என்ன பண்றது?…”
“கட்சிய்லே எதிலேயாவது சேர்ந்துதான் ஜனங்களுக்கெல்லாம் நல்லது செய்ய முடியும்கிறது இல்லே. உன் அளவிலே யாருக்காவது உபகாரம் செஞ்சாக் கூட அது நல்ல விஷயம்தான். அவ்வளவுதான் நம்மாலே முடியும். விபரீதமா எதையாவது கற்பனை செய்து மனசையும், உடம்பையும் கெடுத்துக் கிடாதே.”
சோமுவுக்கு மனதே நிர்மலமானது போலிருந்தது.
“நீங்க சொன்னப்புறம்தான் எல்லாம் தெளிவாப் புரியுது… நான் வீரபாண்டி கிட்டே சொல்லிடுதேன்.” என்றான் சோமு.
“நீங்க எல்லாருமே வெவரம் புரியாமே ஏதேதோ பண்ணிக்கிட்டிருக்கீங்க. எல்லாம் இளமை வேகம். என்ன செய்ய முடியும்?…”
“சரி சார்! ஒங்களைப் பாத்தது ரொம்ப நல்லதாப் போச்சு. இல்லேன்னா நான் பாட்டுக்குக் கண்ணை மூடிக்கிட்டுப் போயிருப்பேன். .. சரி வாரேன் சார்… அம்மா கிட்டேயும் சொல்லிருங்க…”
“சரி, போயிட்டு வா சோமு… எப்பன்னாலும் வா…” என்று விடை கொடுத்தார் சபாபதி.
***
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.