யாமறிந்த புலவரிலே

இணையம் தமிழின் மகத்தான இலக்கியங்களை வாசகனின் அலைபேசித் திரைக்கு விநாடிகளில் கொண்டு வந்து சேர்க்கிறது. ஆர்வமிக்கவர்களுக்கு இடையே மட்டுமே புழங்கிக் கொண்டிருந்த நூல்கள் இணையத்தின் ஜனநாயகப்படுத்தல் மூலமாக எவருக்கும் கிடைக்கக் கூடிய சூழல் உருவாகியுள்ளது. காலை விடிந்தது முதல் இரவு உறங்கப் போவது வரை மொழி பற்றிய பேச்சு எங்கும் கேட்கிறது. அரசு, அரசியல், சமூகம், அச்சு ஊடகம் மற்றும் சமூக ஊடகம் என அனைத்திலும் தமிழ் பற்றியே தமிழ்ச் சமூகம் பேசுகிறது . பேரூராட்சி அலுவலக வாசலில் கூட ‘’தமிழ் வாழ்க’’ என எழுதி வைத்திருக்கிறார்கள். இன்றைய தமிழ்க் கல்வியின் நிலையை அறிய ஒரு பத்தாம் வகுப்பு மாணவனின் அரையாண்டுத் தேர்வு விடைத்தாளைப் பார்த்தால் தெரியும். ’’கைப்பூணுக்கு கண்ணாடி தேவையில்லை’’. தமிழ் நாட்டின் அரசியலுக்கும் தமிழ்க் கல்விக்கும் இருக்கும் தொடர்பு நேரடியானது.

தமிழ் உரைநடை அரசியலைத் தன் பேசு பொருளாகக் கொண்ட பத்திரிகைகள் மூலமாக சமூகத்தில் வேர் விடத் துவங்குகிறது. கருத்துக்களை விவாதிப்பதற்கும் அவற்றை பரப்புரை செய்வதற்கும் தமிழ் நாளிதழ்களின் பக்கங்கள் பயன்பட்டன. உலகின் செய்திகள் ஒரு சிறு தமிழ் கிராமத்துக்கு நாளிதழ்கள் மூலமே வந்து சேர்ந்தன. அக்காலத்தில் இந்திய அரசுக்கும் இந்திய மக்களுக்குமான தொடர்பு ஊடகம் வானொலி மட்டுமே.

அந்த காலகட்டம் எப்படி இருந்திருக்கும்? எழுத்தறிவு என்பது 1940களில் பதினைந்து சதவீதமாக இருந்திருக்கிறது. நாடு சுதந்திரம் அடைந்து ஜனநாயக மதிப்பீடுகளை ஏற்று நிர்வாகம் செய்யத் துவங்கிய காலகட்டத்தில் அரசின் முதன்மையான பணியாக எழுத்தறிவு இல்லாத பெரும்பாலான மக்களுக்கு கல்வியைக் கொண்டு போய் சேர்ப்பது இருந்திருக்கிறது. மகாத்மா காந்தி காங்கிரஸின் இயங்குமுறையை வடிவமைக்கும் போது மக்களுக்கு சுகாதாரக் கல்வியும் மொழிக் கல்வியும் வழங்கப்பட வேண்டும் என்பதை அதன் ஊழியர்களுக்கு மிக முக்கியமாக வலியுறுத்துகிறார். குடிமைப் பண்பு மிக்க சமூகத்திலேயே ஜனநாயகம் நிலை பெற முடியும் என்ற புரிதல் அவருக்கு அரசியலுக்கு வந்த காலத்திலிருந்தே இருந்தது.

அரசியல் இயக்கங்கள் தமது கருத்தியலை மக்களிடம் கொண்டு செல்லும் போது எழுதப் படிக்கத் தெரியாத எண்பத்து ஐந்து சதவீத மக்களுக்கு ஒரு விஷயத்தைப் புரிய வைக்க ஏற்க வைக்க மேடைப்பேச்சே ஒரே வழியாக இருந்திருக்கக் கூடும். எழுதப் படிக்கத் தெரியாத மக்கள் திரள் மேடைப் பேச்சின் மூலம் அல்லது நாடகங்கள் மூலம் அல்லது சினிமா மூலம் மட்டுமே வெவ்வேறு கருத்தியல்களை அறிந்திருக்கவோ பரிச்சயம் கொள்ளவோ முடியும். திராவிட இயக்கம் தங்கள் கோணத்தில் தமிழின் ’’பெருமைகளை’’ மேடைகளில் முழங்கிக் கொண்டிருந்த போது தமிழ்நாட்டின் எழுத்தறிவு பதினைந்து சதவீதமாக இருந்திருக்கிறது அல்லது கல்வியறிவு இல்லாத பெரும்பான்மை ஜனத்திரள் முன் அவர்கள் தங்கள் பரப்பியத்தை முன்வைத்துக் கொண்டிருந்தனர். அந்த காலகட்டத்தில் தான், இராஜாஜியும் காமராஜரும் தமிழ்நாட்டின் பெரும்பாலான மக்களுக்கு கல்வி அளிக்கப்பட வேண்டும் என்ற நோக்கத்திற்காக தீவிரமாகப் பணியாற்றிக் கொண்டிருந்தனர் என்பதோடு சேர்த்து யோசிக்க வேண்டிய விஷயம் அது.

இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலும் இந்திய சுதந்திரத்துக்குப் பின்னான காலகட்டத்திலும் தமிழ் இலக்கியத்துக்கு பங்களிப்பாற்றிய எழுத்தாளர்களின் பட்டியலில் ஆர்வமூட்டும் ஓர் அம்சம் உண்டு. பாரதி, . . சி,  திரு.வி., ராஜாஜி, டாக்டர் ராஜன், தி.சு. அவினாசிலிங்கம், பெரியசாமி தூரன், நாமக்கல் கவிஞர், கல்கி போன்ற அறிஞர்களும் படைப்பாளிகளும் காங்கிரஸ்காரர்களே. டி. எஸ். சொக்கலிங்கம், சின்ன அண்ணாமலை போன்ற ஆக்கபூர்வமான பங்களிப்பை அளித்த பத்திரிகையாளர்களும் காங்கிரஸ்காரர்களே. இவர்கள் ஒவ்வொருவரும் மொழிக்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது. இன்றும் நினைவு கூரத் தக்கது.

இந்திய மக்கள் சுதந்திரம் பெற்ற நிமிடத்திலிருந்து பெரும் மதப்படுகொலைகளை காணத் துவங்கிய அச்சத்தில் ஆழ்ந்திருந்தனர். உலகின் பெரிய சக்திகள் இந்தியா விரைவில் துண்டு துண்டாக ஆகும் என ஆருடம் சொல்லின. விவசாய உற்பத்தி இங்கே உள்ள மக்களுக்கு உணவளிக்கப் போதுமானதாக இல்லை. மதத்தாலும் சாதியாலும் எளிதில் உணர்ச்சிகளைத் தூண்டக்கூடிய சாத்தியம் மட்டுமே அரசியலில் நிறைந்திருந்தது. இன்று யோசித்துப் பார்த்தால், திராவிட பரப்பிய இயக்கம் தனது பரப்புரைகள் மூலம் மத நம்பிக்கை எதிர்ப்பு, சாதி நம்பிக்கை எதிர்ப்பு, கடவுள் நம்பிக்கை எதிர்ப்பு ஆகிய விஷயங்களை பரப்புரை செய்ததன் மூலம் நிலப்பிரபுத்துவ மனநிலையிலிருந்து தமிழ்ச் சமூகம் வெளிவர பங்காற்றியுள்ளனர் (கம்யூனிஸ இயக்கம் போல் அவர்கள் பங்காற்றவில்லை என்பதும் மிகச் சிறு அளவே அவர்களின் பங்களிப்பு சமூகத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது என்பதும் உண்மை என்றாலும் அவர்களின் பங்களிப்பு புறக்கணிக்கத்தக்கதல்ல). இன்று தமிழ்ச் சமூகத்தில் திருக்குறள் ஓரளவு நிலைநிறுத்தப் பட்டிருப்பதற்கும் சகல விதமான மக்களுக்கும் எடுத்துச் செல்லப்பட்டிருப்பதற்கும் திராவிட பரப்பிய இயக்கமே காரணம். இந்த இரண்டு அம்சங்கள் இந்திய ஜனநாயகத்துக்கும் தமிழ் மொழிக்கும் திராவிட பரப்பிய இயக்கம் அளித்த பங்களிப்பு. அவர்கள் உருவாக்கிய விரும்பத்தகாத பலவற்றில் முதன்மையானது கம்ப ராமாயணம் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல்.

உலகில் எந்த சமூகமாவது தனது மொழியின் மகத்தான ஆக்கம் மேல் பாராமுகமாக இருக்குமா? அரசியல் காரணங்களுக்காக திராவிட பரப்பிய இயக்கம் சமஸ்கிருதத்தையும் அதன் இலக்கியங்களையும் எதிர்த்தது. இந்திய நிலமெங்கும் வாழும் மக்களால் பல ஆயிரம் ஆண்டுகளாகக் கொண்டாடப்பட்ட இராமாயணத்தை அவ்வியக்கம் தீவிரமாக எதிர்த்தது. தமிழ் இலக்கியத்தின் மகத்தான சாதனை ஆக்கம் மீது சேறு வீசப்பட்டது.

பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கம்ப ராமாயணப் பாடல்களில் தேர்ந்தெடுத்த ஆயிரத்துக்கும் உட்பட்ட பாடல்கள் மூலம் ஒரு துவக்க வாசகனுக்கு கம்பனை அறிமுகப்படுத்தும் மிக முக்கியமான பணியை ஆற்றியவர் காங்கிரஸ்காரரான திரு. பி.ஜி. கருத்திருமன் அவர்கள். அவரது ’’கம்பர்கவியும் கருத்தும்’’ என்ற நூல் கம்பனில் தோயத் துவங்க நுழைவாயில் போன்றது. நவீன இலக்கிய வாசகன் இலக்கியப் பிரதியை நேரடியாக அணுகி வாசிக்கும் இயல்பு கொண்டவன். கருத்திருமன் நூலின் தனிச்சிறப்பு அவர் கம்பன் செய்யுள்களை சீர் பிரித்து வெளியிட்டிருக்கும் விதம். உரை ஒரு பக்கத்தில் அமைய செய்யுள்கள் தனியாக இருக்கின்றன. உரை ரசனை வாசிப்புக்கு தடையாக இருக்கும் என எண்ணும் வாசகர்கள் உரையைத் தவிர்த்து சீர் பிரிக்கப்பட்ட செய்யுள்களை வாசித்துக் கொண்டு செல்லலாம். கம்பனின் பாடல்களை ஓரிரு முறை வாசித்த பின்பு ஏதேனும் ஐயம் இருந்தால் உரையைப் பார்த்துக் கொள்ளலாம்.  சுவாமி சித்பவானந்தர் தமது திருவாசக உரையில் இவ்வாறான ஒரு வாசிப்புக்கு சாத்தியம் அளித்திருப்பார்.

ஆர்வத்துடன் வாசிப்போமாயின் கம்பனைப் போல் எளிமையான மொழியைப் பயன்படுத்தியவர்களே இல்லை எனலாம். சின்ன சின்ன சொற்கள் இசைமையுடன் இணையும் போது மனதில் உண்டாகும் படிம வெளி மிகப் பெரியது. சில எடுத்துக்காட்டுகள்:

(1). கலம் சுரக்கும் நிதியம்; கணக்கிலா

   நிலம் சுரக்கும் நிறைவளம்; நன்மணி

   பிலம் சுரக்கும் பெறுதற்கு அரியதம்

   குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கெலாம்.

(2). பொற்பின் நின்றன பொலிவு; பொய்இலா

   நிற்பின் நின்றன நீதி; மாதரார்

   அற்பின் நின்றன அறங்கள் அன்னவர்

   கற்பின் நின்றன கால மாரியே

(3). தையலாள் நயன வேலும் மன்மதன் சரமும் பாய

   உய்யலாம் உறுதி நாடி, உழல்பவன் ஒருநாள் உற்ற

   மையலால் அறிவு நீங்கி, மாமுனிக்கு அற்றம் செய்து

   பொய்யிலா உள்ளத்தான் தன் உருவமே கொண்டு புக்கான்

(4). வாள்அரம் பொருத வேலும் மன்மதன் சிலையும் வண்டின்

   கேளொடும் கிடந்த நீலச் சுருளும் செங் கிடையும் கொண்டு

   நீள்இரும் களங்கம் நீக்கி நிரைமணி மாட நெற்றிச்

   சாளரம் தோறும் தோன்றும் சந்திர உதயம் கண்டார்

(5). சாற்றிய முரசொலி செவியில் சாறுமுன்

   கோல்தொடி மகளிரும் கோல மைந்தரும்

   வேல்தரு குமரரும் வென்றி வேந்தரும்

   காற்று எரி கடல் எனக் களிப்பின் ஓங்கினார்

(6). மன்னவர் வருவாரும் மறையவர் நிறைவாரும்

   இன்னிசை மணியாழின் இசைமது நுகர்வாரும்

   சென்னியர் திரிவாரும் விறலியர் செறிவாரும்

   கன்னலின் மணவேலைக் கடிகைகள் தெரிவாரும்

(7). இனிய சொல்லினன், ஈகையன், எண்ணினன்

   வினையன், தூயன், விழுமியன், வென்றியன்

   நினையும் நீதி நெறிகட வான் எனில்,

   அனைய மன்னற்கு அழிவும் உண்டாம் கொலோ?

(8). ஆழிசூழ்உலகமெல்லாம்பரதனேஆளநீபோய்த்

   தாழ்இரும் சடைகள் தாங்கித், தாங்கரும் தவம் மேற்கொண்டு

   பூழிவெம்கானம்நண்ணிப்புண்ணியத்துறைகள்ஆடி

   ஏழிரண்டு ஆண்டில் வா என்று இயம்பினள் அரசன் என்றாள்

(9). குழைக்கின்ற கவரி இன்றி கொற்ற வெண் குடையும் இன்றி

   இழைக்கின்ற விதி முன் செல்ல தருமம் பின் இரங்கி ஏக

   மழைக்குன்றம் அணையான் மௌலி கவித்தனன் வரும் என்றென்று

   தழைக்கின்ற உள்ளத்து அன்னாள் முன் ஒரு தமியன் சென்றான்

கம்பனின் பெரும்பாலான பாடல்கள் இவ்வாறானவையே. எளிய சொல் அடுக்குகளின் வழியே மொழியால் கூறுமுறையால் மறக்க இயலா சித்திரங்களைத் தீட்டியவாறு மானுட வாழ்வின் மகத்தான தருணங்களை மகத்துவம் மிக்க உணர்வுகளை சொல்லிச் செல்வது கம்பனின் பாணி. கம்பனின் இனிமையுள் தோயத் தோய கம்ப சித்திரங்களைக் காணக் காண அப்பெரும் படைப்பாளியுடன் பயணிக்கும் அனுபவம் என்பது எந்த ஒரு இலக்கிய வாசகனுக்கும் வாசிப்பின் உச்ச படிநிலையாக இருக்கக் கூடும்.

கம்பனை வாசிக்கும் போது நாம் ஒரு விஷயத்தை அவதானிக்க முடியும். இன்றும் தமிழ் அரசியல் மேடைகளில் புழங்கும் பல சொற்கள் கம்பன் தன் படைப்பில் பயன்படுத்தியவையே. கம்பனின் சொற்களை மிக அதிகமாகப் பயன்படுத்தியவர்கள்பயன்படுத்துபவர்கள் திராவிட பரப்பிய இயக்கத்தினரே என்பது நகைமுரண்.

2017 ஊட்டி காவிய முகாமில் திரு. நாஞ்சில் நாடன் அவர்களின் கம்பராமாயண வகுப்பின் மூலம் திரு. பி.ஜி. கருத்திருமன் அவர்களின் நூல் பற்றி அறிந்தேன். அந்நூலை tamilvu(dot)org தளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடிகிறது. கம்பராமாயணத்தில் எல்லா காண்டங்களிலிருந்தும் தேர்ந்தெடுக்கப்பட்ட முக்கியமான பாடல்கள் மூலம் கம்பனின் உலகத்தைப் பரிச்சயம் செய்து கொள்ள ஆர்வமுள்ள வாசகர்களுக்கு வாய்ப்பு தருகிறது இந்நூல். அவ்விதத்தில் திரு. பி.ஜி. கருத்திருமன் அவர்கள் நவீனத் தமிழ் இலக்கிய வாசகர்களால் நன்றியுடன் நினைக்கப்பட வேண்டியவர்.

எழுத்தறிவு இல்லாத மக்கள் திரள் முன் ஊருக்கு ஊர் கம்பராமாயணம் பற்றி அவதூறைப் பரப்பிக் கொண்டிருந்தவர்களின் கூச்சல் நிறைந்திருந்த சூழலில் ஓர் ஆக்கபூர்வமான பணியை முன்னெடுத்தவர் காங்கிரஸ்காரரான திரு. பி.ஜி. கருத்திருமன் அவர்கள். இணையம் அலைபேசி மூலம் பெரும்பாலான தமிழர்கள் கையில் சேர்ந்திருக்கும் இக்காலத்தில் திரு. பி.ஜி. கருத்திருமன் அவர்களின் ’’கம்பர்கவியும் கருத்தும்’’ நூல் பரவலாக வாசிக்கப்படுமாயின் அது தமிழுக்கும் தமிழ்ச் சமூகத்துக்கும் பெரும்பயன் பயக்கும்.

சமீபத்தில் ஓர் இளம் வாசகர் ஒருவருக்கு இந்நூலைப் பரிந்துரைத்தேன். சில நாட்களுக்கு முன்னால் அந்நூலை வாசித்து விட்டு எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியிருந்தார். கம்பனால் முழுமையாக அவர் ஆட்கொள்ளப்பட்டிருப்பதை அவர் கடிதம் மூலம் அறிய முடிந்தது. நூற்றாண்டுகளாக பனையோலைகளில் தங்கள் ஆயுளைக் காத்துக் கொண்டிருந்த தமிழ் இலக்கியங்கள் தமிழ் அச்சுப் பதிப்புகளின் மூலம் எழுச்சி கொண்டு எழுந்ததைப் போல இணையம் மூலம் ஒரு பேரெழுச்சி நிகழும் என்ற நம்பிக்கை எனக்கு உருவானது.

***

3 Replies to “யாமறிந்த புலவரிலே”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.